தெம்மாங்கு பூந்தமிழே 11

11

“உனக்கெல்லாம் ஹோட்டல்காரன் தான்டி புருஷனா வரணும். அவன் தான் உனக்கு விதவிதமா சமச்சுப் போடுவான். மூனு வேளையும் மூனுவிதமாக் கேக்குற. நாக்க நல்லா நாலு மொழத்துக்கு வளத்து வச்சுருக்க.” என காலையிலேயே இன்னைக்கும் இட்லியா என அலுத்துக் கொண்ட மகளைப் பூரியாய் பொறித்தெடுக்க,

“ஏம்மா… தெனமும் இட்லி தானான்னு கேட்டது ஒரு குத்தமா? அதுக்குனு ஒரு ஹோட்டல்காரனுக்கு கட்டி வைப்பீங்களா?” என மகள் எகிறிக் கொண்டு வந்தாள்.

“ஆமா… நீ தான் விதவிதமா கேக்குறியே. அப்ப ஹோட்டல் வச்சிருக்கிறவன் தான சரிப்பட்டு வருவான்.”

“நேத்து ஒரு விளம்பரத்துல தோடு நல்லா இருக்குனு சொன்னதுக்கு நகைக்கடைக்காரனுக்கு தான் கட்டிக் கொடுக்கணும்னு சொன்னீங்க. ஒரு ட்ரெஸ்ஸு நல்லா இருக்குனு சொன்னா ஜவுளிக்கடக்காரனுக்கு தான் கட்டிக் கொடுக்கணும்னு சொல்றீங்க. பாஞ்சாலி தான் அஞ்சுவிதமா வேண்டினான்னு அஞ்சு புருஷன் கெடச்சாங்க. நானும் என்ன பாஞ்சாலியா?” என கேட்க, சட்னி தாளிப்பதை விட்டுவிட்டு தோசைக் கரண்டியோடு வெளியே வந்தவர்,

“எரும… எரும… பேச்சப்பாரு… இதாலயே வாயிலய போட்டேன்னா தெரியும். காலையிலேயே கடுப்பக் கெளப்பாம சீக்கிரம் சாப்பிட்டு காலேஜ் கெளம்புற வழியப் பாரு. பஸ் போயிரும். உங்க அப்பாவே ஒன்னும் சொல்லாம சாப்பிட்டுப் போறாரு. நீ மட்டும் தான்டி தெனமும் ஒரு நொட்ட சொல்ற.”

“அதானே… அப்பாவே சாப்பிடுறாரு. உனக்கு மட்டும் என்னக்கா?” என அருகில் இருந்த கௌதம் அன்னைக்கு பக்கவாத்தியம் வாசிக்க,

“டேய்… நீயும் தானடா இன்னைக்கும் இட்லியான்னு கேட்ட.” 

“நான் மட்டுமில்ல. அப்பாவும் இதையே தான் கேப்பாரு. ஆனா அம்மாகிட்ட கேக்க மாட்டாரே.” என அக்காவின் அருகே குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூற,

“அடப்பாவி…” என விழி விரித்தவளை,

“இன்னும் என்னடி பண்ற. பஸ் போயிறப்போகுது.” என மீண்டும் அடுப்படி சென்று, விட்ட வேலையைத் தொடர்ந்தவர், உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

“அதுக்கு தான் வண்டி வாங்கித் தாங்கனு கேட்டேன்ல. நம்ம சௌகர்யத்துக்குப் போலாம். இப்ப பாருங்க பஸ் டயத்துக்கு நாம ஓட வேண்டியிருக்கு.” என டைனிங் டேபிளில் இருந்து கொண்டு கத்திச் சொல்ல,

“அப்படியாவது ஓடு. அம்மா அடுப்படியில ஒத்தையில அல்லாடுறாளே. வெள்ளனா எந்திரிச்சு ஊடமாட ஒத்தாச பண்ணுவோம்னு இல்ல. ஆனா வாய்க்கு மட்டும் வக்கனை கேக்குது.” என மகளை அடிக்காத குறையாக விரட்டிக் கொண்டிருந்தவர் திருமதி கௌரிமனோகரன்.

அடுப்படியில் நின்றவரை அனலாய்க் கொதிக்க வைத்தவள் ஆசை மகள் அமிர்தவல்லி.

இந்த வருடம் தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.

தட்டச்சிட்டாய் சிறகு விரிக்கும் தேன்சிட்டு. விழித்துக் கொண்டே கனவு காணும் கன்னிப்பருவம். குழந்தைத்தனம் மெருகேறி குமரித்தனம் குடியேறியிருக்கிறது உடம்பளவில் மட்டும். அன்னையின் ப்ளட் ப்ரசரை எகிறவைத்ததன் பிரதிபலனாக லட்சார்ச்சனை வாங்கிக்கொண்டு, பள்ளி செல்லும் தம்பியை வம்பிழுத்து அவனை வெறுப்பேற்றி, தந்தையின் தலை கண்டதும், இந்த பூனையும் பால் குடிக்குமா என நல்ல குடி நாயகமாக கல்லூரி கிளம்பி வந்தாள். 

பள்ளி எனும் கூட்டைக் கிழித்து வெளிவந்த பட்டாம் பூச்சிகளாய் நட்பு வட்டம். பயமறியா இளங்கன்றுகள். 

பயம், தயக்கம், சீனியர்களின் மெல்லோட்டமான ராகிங் என அனைத்தையும் தாண்டி இயல்பு நிலைக்கு வந்திருந்தது கல்லூரி. 

அமிர்தாவிற்கும் தனக்கென ஒரு கூட்டணி சேர, அதில் ஆண், பெண் என இருபாலரும் உண்டு.‌ இன்று ஆண், பெண் என எல்லை வகுத்துப் பழக முடியாது. ஆனால் எல்லையறிந்து பழகத் தெரிந்திருக்க வேண்டும். 

அமிர்தாவும் அவளது நட்பு வட்டமும் கல்லூரிக் கல்லூரிக் கேண்டினில் முகாமிட்டிருந்தனர். பாரம்பரியமிக்க பேரு பெற்ற  காலேஜ்… எனினும் மெரிட்டில் வந்தவர்களும் உண்டு. சிபாரிசில் சேர்ந்தவர்களும் உண்டு. 

“எல்லாரும் சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்கப்பா. சீனியர்ஸ் யாராவது வந்துட்டா அவங்க பில்லும் நம்ப தலையில தான் விழும்.” என தீபக் குறைபட்டுக் கொள்ள,

“நீ சொல்லாமலே இருந்துருக்கலாம். அங்க பாரு, ஒரு கேங் வருது!” என சரண்ரண் கண்காமிக்க, சீனியர் குழு ஒன்று இவர்கள் இருக்கும் டேபிளை நோக்கி தான் வந்தது.‌

“போச்சா…” என இவர்கள் அலுத்துக் கொள்ள, வந்தவர்களும், “ஹாய் கைஸ்.” என்றவாரு அருகில் இருந்த சேர்களை எடுத்துப் போட்டு, இவர்களோடே டேபிளில் அமர்ந்து கொண்டனர்.

இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

“என்ன ஜூனியர்ஸ் நாங்க வந்தது பிடிக்கல போல?” 

“அய்யோ… அப்படி எல்லாம் இல்லங்கண்ணா.” சரண் முந்திக் கொண்டு பதில் கூற,

“அப்பறம் ஏன் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்காட்டம் போகுது?”

“அது எம்மூஞ்சியே அப்படித்தாங்கண்ணா.” என நெளிந்தான்.

“சரி… சரி… என்ன ஆர்டர் பண்ணியிருக்கீங்க?” 

“இன்னும் இல்லைங்கண்ணா. நீங்க என்ன சொல்றீங்களோ அதுவே ஆர்டர் பண்ணிறலாம்ங்கண்ணா.” என வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என அழைத்து சரண் குழைய, வலிய வந்து ஆடு தலையைக் கொடுக்க, வெட்டி பிரியாணி போடத் தயாராகினர். சீனியர்ஸுக்கும் இவர்களைப் பார்த்து சிரிப்பு வந்தது. 

“டேய்… ஓவரா குழையாதீங்கடா. எங்களுக்கே டான் ஃபீலிங் கொடுக்கறீங்க.” எனக் கேலி செய்ய,

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சீனியர்ஸ்… இதே மாதிரி நாங்க அடுத்த வருஷம் வர்ற ஜுனியர்ஸ் கிட்ட வசூல் பண்ணிப்போம்.” என அமிர்தா துடுக்காகச் சொல்ல, 

“ரொம்ப தைரியம் தான் உனக்கு.” என்றனர்.

“நீங்க என்ன சிங்கமா, புலியா பயப்பட… காலேஜ் லைஃப்ல இதெல்லாம் ஒரு ஸ்வீட் மெமரிஸ் தானே? இது கூட இல்லைனா போரடிக்குமே.” என கூற,

“பரவாயில்ல… பொழச்சுப்ப. நாங்களும் இதையே தான் சொன்னோம்.” என சீனியர்கள் சகஜமாகப் பேச, ஜூனியர்கள் சங்கோஜமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.‌ 

இவர்கள் வளவளத்துக் கொண்டிருக்க அமிர்தாவிற்கு ஏதோ நெருட நேராக நிமிர்ந்து பார்த்தாள். கேன்டீனில் இருந்தவன் பார்வை இவள் மீதே இருக்க பட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

தீபக்கை அனுப்பி ப்ரெட் ஆம்லெட்டும் அதோடு டீயும் வாங்கி வரச்சொல்ல, அவனோடு சேர்ந்து அமிர்தாவும் எழுந்து சென்றாள். ஒருவனே அனைத்தையும் எடுத்து வர முடியாதென்று. 

அங்கே சென்று ஆர்டர் கொடுத்து விட்டு காத்துக் கொண்டு நின்றனர். 

ப்ரெட் ஆம்லெட்டிற்குத் தேவையான முட்டை, ப்ரெட், புதினா சட்னி, மயோனிஸ் என எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன் பார்வை அமிர்தா மீதே இருக்க, அவனது குறுகுறு பார்வையில் சங்கோஜமாக வேறுபுறம் திரும்பி நின்று கொண்டாள். 

“நீ போய் சரணரண அனுப்பு.” என உடனிருந்தவன் கூற, அவளும் நகரப்பார்க்க, அதற்குள் இரண்டு ப்ரெட் ஆம்லட்டை தயார் செய்திருந்தவன்,

“இந்தா… இதை எடுத்துட்டுப் போயிறு.” என முதலில் போட்ட இரண்டு ப்ரெட் ஆம்லெட்டை தட்டில் வைத்துக்  கொடுத்தான். சிறியவள் தான் ஆனாலும் முன்னபின்ன தெரியாதவளை, கேன்டீனில் வேலை பார்க்கும் ஒருவன், ஒருமையில் அழைக்க… முகத்தைச் சுழித்துக் கொண்டே அவளும் எடுக்க கை நீட்ட, அப்பொழுதும் அவனது பார்வை பாவையின் வதனம் மீதே பதிய, அவனை முறைத்து விட்டே எடுத்துச் சென்றாள். உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான். 

அடுத்து எடுத்துச் செல்ல சரண் வந்தான். இவர்கள் ஐந்து பேர், வந்தவர்கள் ஆறு பேர் என அனைவருக்கும் போட்டுக் கொடுத்து, கூடவே டீயும் பேப்பர் கப்களில் பிடித்து வைக்க, நண்பர்கள் வந்து எடுத்துச் சென்றனர். 

கேன்டீன் உரிமையாளனிடம் கணக்கைச் சொல்ல, அவன் பில் போட்டுக் கொடுத்தான். 

பில்லை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு சென்றான் தீபக்.

அவன் நகர்ந்ததும்,

“டேய்… யப்பா!!! பல லட்சம் போட்டு எங்க அப்பா இந்த கேன்டீன் கான்ட்ராக்ட் புடிச்சுக் கொடுத்துருக்கார்டா. ட்ரெய்னினு வந்து எம்பொழப்புல மண்ணப் போட்டுறாதடா ராசா.” எனப் பதறினான்.

“ஏன்டா… இப்ப என்னாச்சு?”

“சம்பளமில்லாம வேலைக்கு ஆள் கெடைக்குதேனு நெனச்சா, உம்பார்வையே சரியில்லயே.” 

“ச்சே… ச்சே… அதெல்லாம் இல்லடா பங்கு. தெரிஞ்ச பொண்ணுடா.” என்றான் சிரித்துக் கொண்டே.

“ஆனா, அது தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலியே?” என நண்பனை சந்தேகமாய்ப் பார்த்தான். 

“பாத்து நாலு வருஷம் இருக்கும்டா. அதான் மறந்துருச்சு போல.” 

“எதுனாலும் அடக்கி வாசிடாப்பா. பொம்பளப்புள்ளைக வந்து போற எடம்.” என நண்பனின் பார்வையை இவ்வளவு நேரமாக கண்ணுற்றவன், கையை தலைக்கு மேல் குவித்துக் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான்.  

முதலில் அவனுக்கும் அவளை அடையாளம் தெரியவில்லை தான். ஆனால் எங்கேயோ பார்த்த ஞாபகம் வர, சற்று உற்றுக் கவனிக்க சட்டென அவள் யாரென்று பிடிபட்டது.

பள்ளிச் சீருடையில், பாவாடை சட்டையில் அவளை மூன்றாம்பிறையாய்ப் பார்த்தது. இன்று வளர்பிறை கண்ட பௌர்ணமி நிலவாய் முழுப்பரிமாணம் காட்டி நின்றாள் பாவை. சீனியர்களிடம் அவள் துடுக்காகப் பேச அவள் தான் என உறுதி செய்து கொண்டான். 

அவளும், நண்பனோடு ஆர்டர் கொடுக்க வர, அவளுக்கும் நம்மைத் தெரிகிறதா என அவள் முகத்தையே பார்க்க, அவளோ சட்டென தன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,‌ இதில் உடனிருந்த நண்பன் வேறு, ஆபத்பாந்தவனாக அவளை அனுப்பி வைக்க இவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தான் வந்தது. தெரிந்தவள் என்ற நினைப்பில் தான் பார்த்து வைத்தான்.

ஆனால் எழுந்து செல்லும் முன் திரும்பி இவனை ஒரு பார்வை சந்தேகமாய்ப் பார்த்துவிட்டே சென்றாள். ஏனோ அந்தப் பார்வை மூளைக்குள் குறுகுறுத்தது இளவலுக்கு.

வகுப்பிற்கு சென்றவளுக்கும் இவன் நினைவு தான். அதெப்படி தைரியமாக நேருக்கு நேர் பார்த்து நின்றான். அந்தப் பார்வையில் கள்ளத்தனமோ, விரசமோ இல்லை. கழுத்துக்கு கீழும் பார்வை செல்லவில்லை. கல்லூரியில் கேன்டீனில் வேலை பார்ப்பவனுக்கு அவ்ளோ தைரியம் வராது. ஒரு வேளை ஏதேச்சையாகத் தான் பார்த்திருப்பானோ. நமக்கு தான் தப்பா தெரிஞ்சுதோ?’ என உள்ளுக்குள் யோசனை ஓடியது. அடுத்து வகுப்புகள் தொடர அவனைப் பற்றிய சிந்தனையோட்டம் தடைபட்டது. 

கல்லூரிவிட்டு வீடு வந்தவளை அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகளை கோவிலுக்குக் கிளப்பிக் கொண்டிருந்தார் கௌரி. கிளம்புவதற்கு சுணங்கிக் கொண்டு இருந்தாள் மகள்.

“வேண்டுதல் உனக்கு தான் அமிர்து. ஆறு வெள்ளிக்கிழமை விளக்கு போட்டாச்சு. இந்த ஒரு வாரம் தானம்மா. என்னால வரமுடியாது. தம்பியக் கூட்டிக்கிட்டு ஆட்டோல போயிட்டு வந்துரு அமிர்து.” என மகளை ஆயத்தப்படுத்த, 

“அப்ப, தாவணி போடச் சொல்லக் கூடாது.‌ சரியா? சுடிதார்ல தான் போவேன்.” என மகள் கண்டிஷன் போட்டாள்.

“என்னடி… கோயிலுக்குப் போனாத்தான அதெல்லாம் கட்டுற. அப்படியே வச்சா துணி, பொட்டி வாசன வந்திரும் அமிர்தா. அப்பப்ப எடுத்துக் கட்டணும். ஆட்டோல தான போற. தாவணியே போடும்மா.” என பொறுமையாக எடுத்துக் கூற, மறுக்க முடியாமல் தாவணியிலேயே கிளம்பினாள். அதட்டிச் சொன்னால் மகள் எகிறுவாள் எனத் தெரியும். எனவே பொறுமையாக எடுத்துக் கூறி சம்மதிக்க வைத்தார்.

காலேஜ் சென்று வந்ததால் மீண்டும் ஒருமுறை தலைக்கு ஊற்றி, மரகதப் பச்சைக் கலர் பாவாடை ஜாக்கெட், அரக்கு சிவப்பில் தாவணி போட்டு, ஈரக்கூந்தலை தளரப் பிண்ணி, அதில் மகளுக்குப் பிடிக்கும் என வாங்கி வைத்திருந்த மல்லி, மரிக்கொழுந்து, கனகாம்பரம் கலந்து கட்டிய கதம்பத்தை சரமாக வைத்துப் பின் குத்தி விட்டார். மிதமாக ஒப்பனை செய்து, சிறு பொட்டிட்டு, கண்களுக்கு மை எழுதி வந்த மகளைப் பார்க்க கௌரிக்கே பூரிப்பாய் இருந்தது. பருவப் பெண்ணின் அன்னையாய் சற்று பயமும் வந்து போனது. அது இயற்கை மாற்ற முடியாது. 

ஆட்டோவிலேயே தம்பி கௌதமுடன் கோவில் வந்தாள். 

அர்ச்சனைக்கு தேங்காய் பழத்தட்டு வாங்கிக் கொண்டு ஐநூறு ரூபாயை நீட்ட கடைக்காரர் சில்லரை இல்லை என கைவிரிக்க, 

“என்ன ண்ணா. வெள்ளிக்கிழமை கூட சில்லறை இல்லைங்கறீங்க?” என அலுத்துக் கொண்டாள். 

“போயிட்டு வாங்கப்பா. அதுக்குள்ள சில்லரை வந்தா எடுத்து வைக்கிறே. இல்லைனா மாலை வாங்கிக்கறீங்களா?” எனக் கேட்க,

“மாலை வாங்கிக்கிட்டா மட்டும் சில்லறை எங்கிருந்து வரும்.” என கேட்டுக் கொண்டிருக்க, 

“ஹேய்ய்… அமிர்தா!” என துள்ளலாக, தனக்குப் பின் ஒலித்த குரலில் யாரென்று திரும்பாமலே கண்டு கொண்டவள், அதே துள்ளலோடு திரும்பியவள் பார்வை தெறித்து விழும் அளவிற்கு தோழியை விடுத்து அவளோடு நின்றவன் மீதே நங்கூரம் போட்டது. 

ஆலிவ் க்ரீன் ஷர்ட் மற்றும் ப்ளாக் கலர் பேன்ட்டில் பார்த்தவுடன், “செம…” என சொல்ல வைக்கும் தோரணையோடு இருந்தவன் பார்வையும் கன்னி மீதே. பாவாடை தாவணியில் அவளைப் பார்த்தவன், வலிந்து பார்வையைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

அப்பொழுதுதான் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தது. ‘இப்பையாவது தெரியுதா?’ எனும் படி பார்த்து நிற்க,

“ருத்ரா ண்…” என ஆச்சர்யத்தில் வாய் பிறந்தவள், அண்ணா என்ற சொல்லை மட்டும் சற்றும் யோசிக்காமல் சடுதியில் சிரச்சேதம் செய்தாள். 

“என்னப்பா… கோயிலுக்கு வந்துட்டு பேயறைஞ்ச மாதிரி நிக்கிற?” என தேன்மொழி உலுக்கிய பின்பே நினைவுக்கு வந்தாள்.

“கடைய மறிச்சு நின்னு, அவங்க ஏவாரத்தக் கெடுக்காம அங்கிட்டுப் போயி பேசுவோமா?” என ருத்ரன் அழைக்க,

“சில்லறை இல்ல. இன்னும் காசு கொடுக்கல.” எனக் கூற,

“சரி… ரெண்டுக்கும் சேத்து நானே கொடுத்துட்டு வர்றேன்.” என்றான். 

“இல்லையில்ல… இது வேண்டுதல். அவங்கவங்க தான் கொடுக்கணும்.” என வாங்க மறுக்க,

“சரிஇஇஇ… கடனா தர்றேன். நாளைக்கு காலேஜ்ல வந்து கொடு.” எனக் கூற, அதற்கு மேல் கடைமுன்பு நின்று வாதிடாமல் நகர்ந்தனர். அவர்களுக்கு அர்ச்சனைத் தட்டை வாங்கியவன், இவர்களுக்கும் சேர்த்தே காசு கொடுத்து வந்தான். 

கோவில் உள்ளே சென்றனர். உள்ளே வந்ததும் தான் விளக்கு வாங்கவில்லை என நினைப்பு வந்தது.‌ தம்பியிடம் கூற, அவர்களை அங்கேயே நிற்கச் சொல்லி விட்டு தான் போய் வாங்கி வருவதாக ருத்ரனே வெளியே சென்றான்.

இவர்கள் ஒன்பதாவது படிக்கும் பொழுதே ருத்ரன்‌ பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறிவிட்டான். பெண்கள் இருவரும் சென்ற வருடம் பள்ளிக்கல்வியை முடித்தனர்.

“எப்படி இருக்க தேனு? ஸ்கூலோட டச் விட்டுப் போச்சுல்ல. எந்தக் காலேஜ்?” என விசாரித்துக் கொண்டனர் பெண்கள் இருவரும். ஆண்கள் நட்பு போல பெண்கள் நட்பு‌ தொட்டுத் தொடர்வதில்லை. பள்ளி வரை பள்ளி நட்பு. கல்லூரி வரை கல்லூரி நட்பு. அதுவும் திருமணம் முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு விட்டுப் போகும்.

“*** இன்ஜினியரிங் காலேஜ் அமிர்தா.” என பிரபலமான கல்லுரியின் பெயரைக் கூறியவள், “நீ…?” எனக் கேட்க,

“*** காலேஜ். ஹோம் சயின்ஸ்.” என்றவள், கூடவே “உங்க அண்ணனுக்கு தெரியும்.” எனக் கூறினாள்.

“பரவாயில்லையே… அல்லிராணிக்கு அடையாளம் தெரிஞ்சுருச்சு போல.” என விளக்கை அவள் கையில் கொடுத்தவன், கேலி போல் கேட்க, 

“கொள்ளைக்கூட்டத் தலைவன் மாதிரி மொகத்த புதருக்குள்ள மறைச்சு வச்சுருந்தா யாருக்குத் தெரியும்? மச்சம் ஒன்னுதான் மிஸ்ஸிங்.” என அவளும் நக்கலாகவே பதில் கொடுத்தாள். 

அவள் பார்த்த ருத்ரனோ மீசை கூட சரியாக முளைக்காத பால்வடியும் முகம். இன்று பார்ப்பவனோ கண்ணும், மூக்கும் தேடிக் கண்டு பிடிக்கும் அளவிற்கு மீசையும், தாடியும் என முழு ஆண்மகனாக அசத்தலாக ஆறடிக்கு நிமிர்ந்து நின்றான். 

தேன்மொழியும், கௌதமும் இவர்கள் பேசுவது புரியாமல் நிற்க, ருத்ரனே நடந்ததைக் கூறினான். அவனுக்கு தெரிந்திருக்கிறது. நமக்கு தான் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை என அவளும் சங்கடமாக உணர்ந்தாள். 

“அடிப்பாவி… அண்ணனையே மறந்துட்டியா?” எனக் கேட்க,

“அதுமட்டும் இல்ல தேனு. அல்லிராணிக்கு நம்மல அடையாளம் தெரியுதான்னு உத்துப் பாத்தா, ஏதோ பொறுக்கியப் பாக்குற மாதிரி ஒரு லுக்கு விட்டுச்சு பாரு…” என இழுக்க,

“அப்படி எல்லாம் இல்லப்பா. பாத்து ஒரு நாலு வருஷம் இருக்குமா? அதான் சட்டுனு யார்னு அடையாளம் தெரியல. அதுவும் இல்லாம கேன்டீன்ல அப்படி எதிர்பாக்கல.” என அசடு வழிய உண்மையை ஒத்துக் கொண்டாள். 

ராஜாவீட்டு கன்றுக்குட்டி எனத் தெரியும். அதனாலேயே கேன்டீனில் வேலை செய்பவனாக அவனை, அவள் எதிர்பார்க்கவில்லை. 

“அப்ப… நைட்டு ரோட்டுக் கடையில பாத்திருந்தா என்ன நெனச்சுருப்ப? பொறுக்கினே முடிவு பண்ணியிருப்ப இல்ல?” என்றவன் புருவத்தை உயர்த்த, அப்படியெல்லாம் இல்லை என அவள் பார்வை இறைஞ்சியது.

“ஐயோ… அப்படியெல்லாம் இல்ல. தேனு, உங்க அண்ணா ரொம்ப ஓட்டுறாங்க. நான் ஏன் இப்படிப் பாக்குறாங்கனு சந்தேகமாத்தான் பாத்தேன்.” என சங்கோஜப்பட்டாள். உங்க அண்ணன் என்றாலே ஒழிய ருத்ராண்ணா எனும் பதம் மறந்தும் பாவை வாயிலிருந்து வரவில்லை.

பள்ளியில் குடும்ப விவகாரங்களை தோழிகள் இருவரும் அதிகம் பேசிக் கொண்டது இல்லை எனினும் மேலோட்டமான விபரங்கள் இருவருக்கும் தெரியும். இவன் கல்நெரி படிக்கிறான் எனத் தெரியும்‌. பேச்சுவாக்கில் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயம் தான். 

படிப்பை முடித்தவன் அனுபவத்திற்காக ஸ்டார் ஹோட்டலில் இருந்து சாலையோரக் கடைகள் வரை அனைத்திலும் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். 

மேல்தட்டிலிருந்து, கீழ்தட்டு வரையிலான அனைத்து ருசியும் தெரிந்திருக்க வேண்டும் என விரும்பினான்‌.

ஹோட்டல் தொடங்குவதற்காக வங்கியில் லோன் அப்ளை செய்திருக்கிறான். 

அதுவரை நண்பன் கல்லூரிக் கேன்டீனை காண்ட்ராக்ட் எடுத்திருக்க, இதுவும் இருக்கட்டுமே என அனுபவத்திற்கு வேலைக்கு சேர்ந்தான். இன்று தான் அங்கு அமிர்தாவைக் கவனித்தான். 

பேசிக் கொண்டே கோவிலுக்குள் சென்றனர். பிள்ளையார் முன் விளக்கை ஏற்றி வணங்கிவிட்டு சந்நிதானம் உள்ளே செல்ல, கூட்டத்தோடு வரிசையில் நிற்கவில்லை. ருத்ரன்,‌ தேன்மொழியோடு சேர்ந்து அமிர்தாவும், கௌதமுமே நேரடியாக தரிசனத்திற்கு சென்றனர். 

இன்று கேசவமூர்த்திக்கு பிறந்த நாள். அவரால் வரமுடியாததால், கணவரைக் கவனித்துக் கொண்டு  மகனையும், மகளையும் அனுப்பி வைத்தார் மஞ்சுளாதேவி. இவர்களைப் பார்த்த அர்ச்சகர், தந்தையின் நலம் விசாரித்தார். அவரது பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வழக்கம் போல மாலை ஒன்றை வழங்க, பிரசாதத்தோடு வாங்கிக் கொண்டு வெளிப்பிரகாரம் வந்தனர். 

சிறிது நேரம் கோவிலில் அமர்ந்தனர். அவன் பார்க்கும் பொழுதெல்லாம் அசடு வழிய சிரித்து வைத்தாள். கோவில் விட்டு வெளியே வர, ருத்ரனும் தேன்மொழியும் காரில் வந்திருக்க, ஒரு ஆட்டோவைப் பிடித்து அக்காவையும் தம்பியையும் அனுப்பி வைத்தான். 

ஆட்டோவில் அமர்ந்தவள் பார்வை கண்களைச் சுருக்கி “சாரி…” என சத்தம் வராமல் வாயசைத்து மன்னிப்பை யாசிக்க, எல்லோருக்கும் இசை மீட்டும் இளையராஜா இவனுக்கு மட்டும் மீட்டாமல் போவாரா என்ன… 

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை போடுதம்மா

பெண்போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா ஆனந்தம்…

உதட்டில் ஒட்ட வைத்த புன்சிரிப்போட மதுரை வீதியில் காரை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

தேன்மொழியும் ருத்ரனும் வீடு திரும்ப, கேசவமுர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அகிலாண்டம் குடும்பம் அங்கே வருகை தந்திருந்தது. 

மஞ்சுளாதேவி  வேலைக்காரப் பெண்ணோடு சமையலில் ஈடுபட்டிருந்தார். 

அத்தை மாமாவை வரவேற்று, நலம் விசாரித்து விட்டு தந்தையின் அறைக்கு சென்றனர். குங்குமத்தை படுக்கையில் இருந்த கேசவமூர்த்திக்கு தேன்மொழி வைத்துவிட்டாள். 

வெளியே வந்தவன்,‌ அழகரோடு சோபாவில் அமர்ந்து கொண்டான். 

தேன்மொழி, அமராவதி, காயத்ரி என பெண்கள் மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேச்சில் ஆழ்ந்தனர். 

“ஹோட்டல் எப்ப ருத்ரா ஆரம்பிக்கப் போற?” என அகிலாண்டத்தின் கணவர் ரகுராமன் பேச்சை எடுத்தார். 

“லோன் சாங்ஷன் ஆனதும் ஆரம்பிச்சுற வேண்டியது தான் மாமா.” என்றான்.

“நம்மகிட்ட இல்லாத காசா? எதுக்கு கடன் வாங்கணும்.” என அகிலாண்டம் அங்கலாய்க்க,

“அப்படி இல்லத்தை. அப்ப தான் எனக்கும் கொஞ்சம் பயம் வரும். கடனக் கட்டணுமேனு பொறுப்பு வரும்.” 

“அதுக்குனு கண்ட கண்ட எடத்துல வேல பாக்கறது நல்லா இல்ல ப்பா. நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு.” என்றார். 

“கட்டிக் கொடுத்த சோறும், கத்துக் கொடுத்த வித்தையும் ரொம்ப நாள் கூட வராது அத்தை. அனுபவம் தான் கைகொடுக்கும்.” என்றவன் பதிலைக் கேட்டு,

“கேட்டுக்கடா…” என அழகரிடம் ரகுராமன் கூற, 

“மாமா… புதுத் தொழில் ஆரம்பிக்கிறாப்ல. நான் நம்ப வட்டி தொழிலத்தானே கவனிச்சுக்கப்போறேன்.” என்றான். 

“என்னமோ போப்பா. காலாகாலத்துல ஹோட்டல ஆரம்பிச்சோமா கல்யாணத்த முடிச்சோமான்னு இல்லாம, வேல பாக்குறேனு சுத்திட்டுத் திரியற.” என அகிலாண்டம் அலுத்துக் கொண்டார். 

ஏனோ இப்பொழுதெல்லாம் அத்தையின் போக்கில் சற்று மாற்றம் தெரிந்தது ருத்ரனுக்கு. அடிக்கடி இவனது திருமணப்பேச்சை எடுக்கிறார். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதாலா என எண்ணத் தோன்றியது. ஹோட்டல் ஆரம்பிக்க இவர்கள் இடமே இருக்கிறது. ஏற்கனவே வாடகைக்கு இருப்பவர்களை காலி பண்ணச் சொல்லியாகிவிட்டது. அதற்கு பின் மேலே ஒரு தளம் எழுப்ப வேண்டும். அதற்கான ஆயத்தமும் தொடங்கிவிட்டது. அதற்குள் சும்மா இருப்பானென்று அனுபவத்திற்காக சென்று கொண்டிருக்கிறான். இது அகிலாண்டத்திற்கு கௌரவக் குறைச்சலாகப் பட்டது. 

“எனக்கு என்னத்தே அவசரம். வீட்ல பொம்பளப்புள்ள இருக்கும் போது நான் எப்படி முடிக்க முடியும். மொதல்ல தேன்மொழி படிப்ப முடிக்கட்டும்.”

“அவளுக்குனு தான் மாப்பிள்ளை ரெடியா இருக்கானே. கல்யாணத்த முடிச்சுட்டுக்கூட படிக்கட்டும்.” எனப் பேச, ஏனோ ருத்ரனுக்கு அப்பேச்சில் ஈடுபாடு இல்லை. அவளே இப்பொழுதுதான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி செல்கிறாள். அழகரும் கல்லூரி இறுதியாண்டு சென்று கொண்டிருக்கிறான். அவனது அப்பாவின் வட்டித் தொழிலைத்தான் பார்த்துக் கொள்ளப் போகிறான் என்றாலும் படிப்பு முடிய வேண்டும். 

ருத்ரனுக்கும் இப்பொழுது தான் இருபத்தி இரண்டு வயதாகிறது‌. ஹோட்டல் தொடங்க வேண்டும். அதில் காலூன்ற வேண்டும். அதன் பிறகு தான் எதையும் யோசிக்க முடியும். இப்பொழுது எதற்கு இவர்கள் அவசரப்பட வேண்டும். எல்லாருக்கும் மூத்தவள் அமராவதி இருக்கும் பொழுது என் கல்யாணத்தைப் பற்றி இவர்களுக்கென்ன அவசரமும், அக்கறையும் என எண்ணம் ஓடியது‌. கல்யாண யோசனை மனதில் ஓட இன்று கோவிலில் பார்த்த தாவணிப் பெண் கண்முன், கண்களைச் சுருக்கி ஒருகணம் வந்து சென்றாள். அவனே அறியாமல் இதழ்கள் விரிந்தது.

இவர்கள் ஷோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, டைனிங் டேபிளில் அமர்ந்து மூன்று பெண்களும் பேசிக் கொண்டு இருந்தாலும் அமராவதியின் பார்வை ருத்ரன் மீதே. 

உணவு வேளை வர, மஞ்சுளாதேவி உணவுப் பாத்திரங்களை டேபிளில் எடுத்து வைக்கச் சொல்ல, தேன்மொழியோடு சேர்ந்து அமராவதியும் எழுந்தாள். 

“நீ உக்காரு அமரா. தேனே எடுத்து வைப்பா. வேணும்னா காயத்ரி எடுத்து வைக்கட்டும்.” என சொல்ல, சட்டென அமராவதியின் முகம் கூம்பிப் போனது. 

அதைக் கவனித்த ருத்ரன் “ஏம்மா… அமராவும் எடுத்து வைக்கட்டும்.” எனக்கூற,‌

“எதுக்கு சிரமம்னு தான் ருத்ரா.” என இழுக்க,

“அதெல்லாம் அமராவுக்கு சிரமம் இருக்காது ம்மா.” இருவருமே பேசிக் கொள்ள, 

“இதுக்கு தான் நான் எங்கேயுமே வர்றது இல்ல.” என்றவள் கண்களில் கண்ணீர்.

1 thought on “தெம்மாங்கு பூந்தமிழே 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top