மல்லி 29

நெடுஞ்சாலையில் சீராகப் பயணித்தது அல்ட்ரா டீலக்ஸ் ஸ்லீப்பர் கோச் விநாயகம் ஆம்னி பஸ். மங்கையின் நினைவோடே உல்லாசமாக மனதில் விசிலடித்துக் கொண்டு பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்தான். 

மணப்பாறை தாண்ட பஸ்ஸிற்குள் சலசலப்பு. க்ளீனர் பையன் உள்ளே எழுந்து சென்றான்.‌ ஏசி போதவில்லை என புகார். அவன் எவ்வளவோ பொறுமையாக எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. அதற்கும் சேர்த்துதானே காசு வாங்கறீங்க. சர்வீஸ் சரியில்லைன்னு கம்ப்ளைன்டு பண்ணுவேன் என அவன் குரலை உயர்த்த, சலசலப்பு அதிகமாக வேந்தன் பஸ்ஸை ஓரம்கட்டினான்.

உள்ளே சென்று விசாரிக்க இவனிடமும் அதே புகார். ஏசி முற்றிலும் இல்லையென சொல்லமுடியாது. மெலிதாக குளுமை இருந்தது. 

“என்னடா?” க்ளீனரிடம் கேட்க,

“கொடைக்கானல்லருந்தே இவங்க ஏசி பத்தலைனு பிரச்சினை பண்றாங்கண்ணே. அந்த பெர்த்ல இருக்க வயசானவங்க ரொம்ப குளுருதுன்னு ஏசிய ஆஃப்  பண்ண சொன்னாங்க. அப்பவும் இவங்க பிரச்சினை பண்ணாங்க. டெம்பரேச்சர் அளவு மாத்தி மாத்தி வச்சதால ஏசி ஏதோ ரிப்பேராயிருச்சு. ஒருபக்கம் மட்டும் ஏசி ஒர்க்காகலண்ணே.” தயங்கித்தயங்கி தலையைச் சொரிந்தான். 

“அங்கேயே சொல்ல வேண்டியதுதானடா?” கோபத்தை அவனிடம் காட்ட, 

“வத்தலக்குண்டுல இறங்கி பாக்கலாம்னுதான் வந்தோம்ண்ணே. அவங்க அம்மா இறந்ததால உங்ககிட்ட சொல்ல மறந்துட்டாருண்ணே” என்றான்.‌

இப்போதைக்கு எதுவும் செய்யமுடியாது. சென்னை சென்றுதான் பார்க்க முடியும். வெளியே மழை தூறிக்கொண்டிருக்க, உள்ளே குளுமையாகத்தான் இருந்தது. ஆனால் ஏசி பஸ் என்று சொல்லிவிட்டு ஏசி வேலை செய்யவில்லை, அட்ஜஸ் செய்துகொள்ளுங்கள் என காரணம் சொல்ல முடியாது. இரண்டு பேர் புகார் செய்தாலும் ஸ்டார் ரேட்டிங் குறையும். ஒரு பக்க குளுமையே போதுமானதாக இருந்தும் அவன் எகிறிக் கொண்டு அந்நியன் அம்பியாக ரூல்ஸ் பேசினான்.

க்ளீனர், வேந்தனிடம் குனிந்து ரகசியமாக ஏதோ சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டவன் புருவம் நெறித்து அவனைப் பார்த்தான். அந்தப்பார்வை எதிரே இருந்தவனை பொசுக்கியது.

புகார்வாசித்தவனுக்கு இருபத்தைந்திற்குள் தான் வயதிருக்கும். அவனுடன் ஒரு யுவதி. இவன் இவ்வளவு சத்தம் போட்டும் அவள் திரையை விலக்கி எட்டிக்கூட பார்க்கவில்லை. மேல் படுக்கையில் கடைசி படுக்கையை புக் செய்திருந்தான். அவனும் விடாமல் ரூல்ஸ் பேச, 

பொறுத்துப் பார்த்தவன், “பேசன்ஜர்‌ சார்ட் லிஸ்ட்ட கொண்டாடா!” என்றான். 

எடுத்து வந்து கொடுக்க, அதை பரிசோதித்தவன், “இந்த பெர்த்ல ரெண்டு லேடிஸ்தானே புக் பண்ணிருக்காங்க. ஆப்போசிட்ல இருக்குற‌ சிங்கிள் பெர்த் தானே உனக்கு. இங்க உனக்கென்ன வேலை?” அவன் கேட்ட தோரணையும், வேந்தன் குரலில் கொடுத்த அழுத்தத்திலும் அவன் முகம் சட்டென கருத்துவிட்டது. பஸ் திண்டுக்கல்லை தாண்டவுமே, இந்த படுக்கையில் இருந்த ஒருத்தி எதிர்ப்புறம் செல்ல சீட் எக்சேன்ஜ் நடந்துவிட்டது. 

“நீ எங்க கம்ப்ளைன்ட் பண்ணுவியோ பண்ணிக்கோ. ஆனா, அதுக்கு முன்னால பஸ் போலீஸ் ஸ்டேஷன் போகும்.” வேந்தனின் மிரட்டலில் அள்ளுவிட்டது அவனுக்கு. ஏதோ டிரைவர்தானே. சமாதானம் பண்ணுவான் என்றுதான் நினைத்தான். 

“நீ எங்க ஏறின, அந்தப் பொண்ணுங்க எங்க ஏறினாங்க? நீ எப்படி இந்த பெர்த்துக்கு வந்த?” அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுக்க,

“எ…எங்க ஏறினா உங்களுக்கென்னங்க?” பேச்சு தடுமாறியது அவன் உறுத்துப் பார்த்ததில். 

“எங்களப்பாத்தா எப்படி தெரியுது. மூடிட்டு வர்றதா இருந்தா வா. கம்ப்ளைன்ட் பண்றதுனா பண்ணிக்கோ. உன்னால ஆகறத பாத்துக்கோ.” 

வேந்தன் குரலை உயர்த்த, அப்பொழுதுதான் உள்ளே இருந்தவள் தலை வெளியே நீண்டது. கல்லூரிப் பெண் தோற்றம். 

அவனை அதட்டி மேலே அழைத்தாள். போலீஸ் ஸ்டேஷன் என வேந்தன் மிரட்டியதிலேயே அவள் மிரண்டுவிட, மேலே ஏறப் போனவனை நிறுத்தி, 

“அங்க எங்க ஏறுற. எங்களப்பாத்தா மொபைல் லாட்ஜ் நடத்துற மாதிரியா இருக்கு.? பேசாம‌ பொத்திக்கிட்டு எங்கூட வா!” என அழைக்க முகம் இருண்டுவிட்டது அவனுக்கு.‌ சில தலைகள் வெளியே எட்டிப் பார்க்க, தலையை தொங்கப் போட்டுக்கொண்டு பேசாமல் அவனுடன் சென்றான். 

முன்னாலிருந்த ஒற்றை இருக்கையில் அவனை அமரச்சொன்னான். அடுத்து திருச்சி வர, மூவரும் அவசரமாக இறங்கிக் கொண்டனர். 

“கெரகக்கோளாறு” தலையிலடித்துக் கொண்டு பஸ்ஸை எடுத்தான். 

“பஸ்ஸ க்ளீன் பண்ணயிலதான் தெரியும். எந்தெந்த கருமாந்திரமெல்லாம் கெடக்கப் போகுதோ?” நொந்து கொண்டான் க்ளீனர். 

இதற்காக பஸ்ஸில் கேமரா வைத்தா பார்க்கமுடியும்? 

திருச்சியைத் தான்ட, தேசிய நெடுஞ்சாலையில் வேகமெடுத்தது பேருந்து. பின்னால்வந்த பேருந்து ஒலியெழுப்பி வழி கேட்க, வேந்தனும் விலகி வழிவிட, அந்த பேருந்து முந்திச் சென்றது. 

பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே பரிபாஷை ஒன்று உண்டு. முந்திச்செல்ல வழி கேட்பதாகட்டும், அவர்கள் நான் வழிவிட்டாலும், உன்னால் முந்திச் செல்ல முடியாதென எச்சரிக்கை செய்வதாகட்டும், விலகி வழிவிடுவதாகட்டும், வழி விட்டபிறகு நன்றி சொல்வதாகட்டும் இது எல்லாம் ஹார்ன் ஒலியிலேயே நடக்கும். ஓட்டுனர்களுக்கு மட்டுமே அது புரியும். 

இவன் வழிவிட, முந்திய பேருந்து அடுத்த நொடி இவனுக்கு அவசரமாக எச்சரிக்கை ஒலி எழுப்பியது. சாலையில் நின்றிருந்த லாரிக்கு பின்னாலிருந்து ஒலி கூட எழுப்பாமல், திடீரென ஒரு கார் வெளிப்பட்டு சாலையில் ஏற, முன்னால் சென்ற பேருந்து சட்டென்று ப்ரேக் பிடிக்க, அதற்கு பின்னால் வந்தவன் அந்தப் பேருந்தை முத்தமிட்டு மோதி நிற்கும் முன் சுதாரித்து சட்டென்று இடப்புறம் நொடித்து சாலையை விட்டு இறக்கினான். 

வந்த வேகத்திற்கு டயர் தேய க்ரீச்சிடும் சப்தத்துடன் பேருந்து வெகுதூரம் இழுத்துச் சென்றது. கனரக வாகனமல்லவா? முன்பு போல் முட்டி நிறுத்த ஒரு புளியமரம் கூட சாலையில் இல்லை. கரணம் தப்பினால் மரணம் எனும் நிலையில் தான் பஸ்ஸை நிறுத்தியிருந்தான். 

ஒரு கணமே ஆனாலும் மரணம் கை காட்டி, “ஹாய்!” சொல்லிச் செல்ல, மலர்ந்த மங்கை முகம் கண்முன் வந்து செல்ல மனம் பதைபதைத்தது. பஸ் நிலைதடுமாறி அலுங்கி உலுக்கியதில், நல்ல தூக்கத்தில் பெர்த்தில் இருந்தவர்கள் சிலர் கீழே உருண்டிருந்தனர். 

உள்ளே களேபரமாகியது. மெலிதாத புகையும் வாடை வந்தது. கீழே வேகமாக இறங்கியவன், என்னவென்று ஆராய, பஸ்ஸிற்கு அடியிலிருந்துதான் புகை வந்தது. வேகமாக எல்லாரையும் இறங்க சொன்னான்.‌ ஏற்கனவே பழுதடைந்த ஏசியோ, டயரின் உராய்வோ ஏதோ ஒன்று பஸ்ஸில் தீ பரவியது. வயதுப் பெண்களின் அம்மாவிற்கிணையாக வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு சுற்றுவது என்னவோ பெட்ரோலை சுமந்து திரியும் வாகனங்கள்தான்.

பதட்டத்தை மறைத்துக் கொண்டு சடுதியில் செயலில் இறங்கினான். அதற்குள் வழியில் சென்ற ஆம்னி பேருந்துகளும் நின்று உதவிக்கு வர, எமர்ஜென்சி வழியும், கண்ணாடிகளும்  உடைக்கப்பெற்று அனைவரையும் பரபரப்பாக இறக்கிவிட, அதற்குள்‌ தீ முற்றிலும் பரவிவிட்டது. 

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு எனும்பொருட்டு பொருட்சேதம் மட்டுமே. உயிர்ச்சேதமின்றி அனைவரையும் காப்பாற்றியாகிவிட்டது. ஆனாலும் கீழே விழுந்ததில் சிலருக்கு எலும்பு முறிவும். ஆங்காங்கே சிலருக்கு இரத்த காயங்களும், சுளுக்கும்.‌ உடனடியாக ஆம்புலன்ஸும் வந்துவிட்டது. உடன் மீடியாவும். 

தகவல் உடனே செழியனுக்கும், கணபதிக்கும் பறந்தது. 

படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள், நேரங்கெட்ட நேரத்தில் அடுத்தடுத்து விடாமல் அலறிய கணபதி, அம்மையப்பன் கைபேசி சப்தத்தில், உள்ளுணர்வு ஏதோ உணர்த்த படபடப்பாக வெளியே வந்தாள்.‌ கணபதி டீவியைப் போட, வெளிவந்தவள் கண்ணில் பட்டது, தீப்பற்றி எலும்புக்கூடாய் எரிந்துகொண்டிருந்த பஸ்ஸையும், அடிப்பகுதியில் ஃப்ளாஷ் நியூஸாக ஸ்க்ரோல் ஆன செய்தியும் தான்.‌ 

அதிகாலை மணி மூன்று. பார்த்தவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தொண்டை வரண்டு, நெஞ்சாங்கூடு வெறுமையாகிப் போக, காலுக்கடியில் தரை நழுவ, தன் உடல் எடை மொத்தமும் இழந்து லேசாகி காற்றில் மிதப்பது போல் இருக்க, தடாலென்ற சப்தத்தில் தான் கணபதி திரும்பிப் பார்த்தார். எரியும் பஸ்ஸிற்குள்தான் தன் உயிர் இருந்தது என யோசித்தவளுக்கு, அதற்கு மேல் அந்த செய்தியை மூளை கிரகிக்க முடியாமல் மயங்கி விழுந்திருந்தாள் மங்கை. 

“குட்டிம்மா!” என பதற, வெளிவந்த தாமரையும் செய்தியறிந்து ஒருபக்கம் அழ ஆரம்பிக்க, அக்காவா, மகளா,‌ அங்கே மருமகனா? யாரை பாரப்பதென தெரியாமல் ஸ்தம்பித்து நின்றார்.‌ அதற்குள் செழியனும் வந்துவிட்டான்.

அவசரமாக தண்ணீர் தெளித்து மகளை தெளிய வைக்க, அப்பாவைக் கட்டிக் கொண்டு அப்படியொரு அழுகை. இப்பொழுதே அங்கே போக வேண்டுமென பிடிவாதம் பிடித்தாள். கூடுதான் இங்கிருந்தது. உயிர் எப்பொழுதோ அதன் இணையைத்தேடி பறந்துவிட்டது. 

செழியன் மீண்டும் மீண்டும் அழைத்தும் வேந்தன் அழைப்பை ஏற்கவில்லை. அவனது கைபேசியும் தற்கொலை செய்திருந்தது. எல்லாரையும் ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனை அனுப்புவதில் மும்மரமாக இருக்க அதை கண்டுகொள்ளவில்லை. உடனிருந்த இன்னொரு டிரைவருக்கு அழைக்க, அவர் உயிர்ச்சேதம் எதுவுமில்லை என சொல்லியும், மனம் கேட்கவில்லை. செய்தியிலும் அப்படித்தான் ஒளிபரப்பாகியது. ஆனால் அது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியாது. 

தகவலறிந்து உடனே கிளம்பி வந்தான் மதியழகன். அழுகையோடு தானும் வருவதாகச் சொன்ன திவ்யாவை சரிக்கட்டி வருவதற்கே அவனுக்கு போதும் போதுமென ஆயிற்று.

இங்கு வந்தால் மங்கை நிலமை அதற்கு மேல் இருக்க, வெகு நேரம் முயற்சித்து ஃபேனில் வேந்தனிடம் பேச வைத்தான்.

வீடியோ காலில் வரச்சொன்னாள். அடுத்த நொடி அழைப்பில் வந்தான். பாதாதிகேசம் ஆராய்ந்தாள். அங்குலம் அங்குலமாக அவனை அளவிட்டது மங்கையின் பார்வை. வெள்ளை ட்ரெஸ் முழுவதும் கரியும், புகையுமாக, ஆங்காங்கே சிறு கீறல்கள் கை, முகமெல்லாம். இரத்தம் கசிந்ததைப் பார்த்தவளுக்கு வெள்ளை உடையில் அதுவும் பளிச்செனத் தெரிய, இதயத்தை கசக்கிப் பிழிந்தது. கட்டுக்கடங்காமல் அழுகை பொங்கியது. அவள் அழுவதை பொறுக்க மாட்டாமல், 

“அரசி, ஒன்னுமில்லடி. யாருக்கும் எதுவும் ஆகல.” சொல்லியும் கேட்கவில்லை. தானும் இவர்களுடன் வருவதாக முரண்டு பிடிக்க, சின்னப்பிள்ளைக்கு சொல்வது போல் எவ்வளவோ பொறுமையாக சொல்லிப் பார்த்தான். கேட்பது போல் தெரியவில்லை. 

“இங்க நடக்க வேண்டியதப் பாக்குறதா? நீ வந்தேன்னா உன்னப் பாக்கதான்‌டி சரியாயிருக்கும்.” இவளிடம் என்றைக்குமே சாம, பேதம், தானம் வேலைக்கு ஆனதில்லை. குரலை உயர்த்தினான். அவன் அதட்டியதில்,

“எப்ப வருவீங்க?” அழுகையை அடக்கிக் கொண்டு உதடு துடிக்க சிறுபிள்ளை போல் தொண்டையடைக்க கேட்டவளை இழுத்து அணைத்துக் கொள்ள தோன்றியது.

 இயலாமையோடு, “இப்படியே பேசிட்டிருந்தா நான் ஆகவேண்டியதப் பாக்க வேண்டாமா? ஃபோன வச்சா பாக்கவேண்டியதப் பாத்துட்டு சீக்கிரம் வந்துறுவேன்.” கோபமாகப் பேச, 

மனசே இல்லாமல் அழைப்பை துண்டித்தாள். அதிகாலை கிளம்பியவர்கள், 

அங்கு சென்று முடிக்க வேண்டியவைகளை முடித்து அவனை அழைத்துவர மாலையாகிவிட்டது.‌ வீடு வந்தவனை இருக்கிக் கொண்டு, விடமாட்டேன் என்பது போல் அப்படியொரு அழுகை. ஏற்கனவே நாள்முழுக்க அழுதழுது முகம் வீங்கிப் போயிருந்தாள். மூச்சடைக்க அழுத அழுகை தேம்பலாக மாற, நேற்றிலிருந்து அவன் விட்டுச் சென்ற கோபத்தில் இரவு சாப்பாடு என பேருக்கு கொறித்தது, இன்று முழுதும் சாப்பிடாதது என கால்கள் துவள அவன் கைகளில் தொய்ந்திருந்தாள்.

“அரசி!” வேகமாக கன்னத்தை தட்டியவன் அருகில் சோஃபாவில் அமரவைத்தான். செழியன் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதை மெதுவாக புகட்ட சற்றே தெளிச்சல் கண்டது முகம். அவன் கைவளைக்குள் தான் இருந்தாள். 

அப்பொழுதுதான் சுற்றம் உரைத்தது அவளுக்கு. சட்டென விட்டு விலகியவள், யாரையும் ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் வேகமாக எழுந்தவள், தாமரையின் பின்னால் சென்று நின்று கொண்டாள். செழியனும், மதியழகனும் சிரித்துக் கொண்டனர். 

தங்கைக்கு அழைத்து பேசினான். அவள் வரமுடியாது என்பதால் தான் வந்து பார்ப்பதாகச் சொன்னான். 

அடுத்தடுத்து துக்கம் விசாரிப்பது போல் மாற்றி மாற்றி எல்லாருக்கும் ஃபோன் வந்து கொண்டிருந்தது. 

இதோடு போகட்டுமென மகனை எண்ணெய் வைத்து குளிக்கச் சொன்னார் தாமரை. 

“ரெண்டு பேரும் குளிச்சுட்டு கோவிலுக்கு போய்ட்டுவாங்க மங்கா.” இன்று முழுவதும் எல்லாருக்கும் சாப்பாடு, தண்ணீர், குளியல் எல்லாம் மறந்து போயிருந்தது. 

இருவரும் அறைக்குள் வர, மங்கையை வேகமாக இழுத்து ஆதுரமாகக் கட்டிக்கொண்டான். இறுக்கிய அணைப்பு. அவனுக்கும் ஆசுவாசம் தேவைப்பட்டது

“கொஞ்ச நேரம் இப்படியே இருடி! சேலையை மாத்தவே இல்லையா?” குரலில் அத்தனை அயர்ச்சி. 

“நீங்கதானே மாத்தாத, சீக்கிரம் வந்துருவேன்னு சொன்னீங்க?” மீண்டும் கண்கள் கசிய, மார்பில் சாய்ந்திருந்தவள் தலை நிமிர்த்திப் பார்த்தாள்.

“மொசக்குட்டி! ரொம்ப பயந்துட்டியாடி?” தலையில் முட்டி கேட்க,

“செத்தே போயிட்டேன் தெரியுமா?” சட்டென பயம் கவ்வ, கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தது. 

“நானும் தான். ஒரு நிமிஷம் நம்ம இல்லாம நம்ம மொசக்குட்டி என்னாவாளோனு படபடன்னு வந்துருச்சுடி. கன்னிகழியாம வேற சாகப்போறோமே, சொர்க்கத்துல நமக்கு இடமிருக்காதேன்னு தோணுச்சு.” அந்த நிலையிலும் நையாண்டி பேசி சிரித்தவனை, 

சட்டென நிமிர்ந்தவள், “இப்படி பேசுவியா… இப்படி பேசுவியா…” என கேட்டு வாயிலேயே அடித்தாள். 

“ஏய்! வலிக்குதுடி!” கைகளை பற்றிக் கொண்டவன், கழுத்தோடு சேர்த்தணைத்து மார்போடு இறுக்கிக் கட்டிக்கொண்டான். பாரம் நெஞ்சையழுத்த, அவனுக்கும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“இன்னொரு தடவ இப்படி பேசிப்பாருங்க தெரியும்.”

“என்னடி பண்ணுவ?” அண்ணார்ந்து பார்த்தவளை வேந்தன் பார்வை ஊடுறுவ, உயிர் வரை தீண்டிச் சென்றது. 

“பேசுற வாய” என்றவளை பின் கழுத்தில் கைகொடுத்து அருகே இழுத்தவன், பூ பறிக்கும் மென்மையோடு இதழ் கொய்தவன் அதனினும் மென்மையாக தேனெடுத்தான். 

அலைப்புற்று வந்த மனதிற்கு ஆற்றுப்படுத்துதல் தேவைப்பட்டது. தேடல்களற்ற தேவைக்கான இதழணைப்பு. பாலபாடம் தெரியாமல் ஆரம்பித்தவன், தட்டுத்தடுமாறி லயம் பிடிபட, கணங்கள் கணிசமாக கரைந்து கொண்டிருந்தது. 

திடீர் இதழ் முற்றுகையில் பெண்ணவள் திண்டாடிப் போனாலும், கூட்ட நெரிசல், வியர்வை நாற்றமென்றாலே முகம் சுழிப்பவள் அழுக்குப் படிந்த, வியர்வை சுமந்து அலைக்கழிந்து வந்தவனுக்கு சிறிதும் முகம் சுளிக்காமல் தன்னை ஒப்புக் கொடுத்து உறுகி நின்றாள் மங்கை. மென்மையாக ஆரம்பித்தவன்‌ உணர்ச்சி மிகுதியில் வன்மையை தத்தெடுக்க, அவனது உளப்போராட்டம் புரிந்தவள், அவனை இறுக்கியணைத்து ஆற்றுப்படுத்தினாள். 

கதவு தட்டப்படும் சப்தத்தில் சட்டென தங்களை மீட்டுக் கொண்டனர். அந்திவானமாய் சிவந்திருந்தாள் பெண். மங்கை கதவை திறக்கப்போக, அவளை கைபிடித்து பின்னால்  நிறுத்தி, அவனே கதவைத் திறந்தான். தாமரை எண்ணெய் கிண்ணத்தை கொடுத்து உச்சியில் வைத்து குளிக்கச்சொன்னார். 

எண்ணெயை வைத்துவிட்டு குளிக்க உடையை எடுத்தவள், கண்ணாடியில் தன்னை பார்க்க, 

“ஐயோ!” என பதறினாள்.

“என்னடி!”

“இப்படி பண்ணி வச்சுருக்கீங்க. எப்படி வெளியே போறது.” தடித்து சிவந்த உதட்டைப் பார்த்து கேட்க,

“எல்லார் முன்னாடியும் கட்டிக்கிட்டு நிக்கும்போது அது தெரியலையா?” 

“ஹைய்யோ! அதவேற ஞாபகப் படுத்தாதீங்க. எல்லார் மூஞ்சிலயும் எப்படி முழிக்கிறதுனு இருக்கு? மாமா எல்லாம் இருந்தாங்க.” சங்கோஜத்தில் முகத்தை மூடிக்கொண்டு கவலைப்பட,

“அது அப்பவே யோசிச்சுருக்கணும். மச்சான் வேற இருந்தாப்ல. எனக்கே ஒரு மாதிரி ஆயிருச்சுடி.”

சட்டென நிமிர்ந்தவள், “இப்ப என்ன, எம்‌ புருஷனத்தானே கட்டிக்கிட்டு நின்னே?” என்றாள்‌ நெஞ்சை நிமிர்த்தி ஜம்பமாக.‌ 

“ஆமாமா! மீசையில மண் ஒட்டல. சரி வா குளிக்கலாம்.”

“எதே!”

“உம் புருஷன் கூடத்தான்டி!” 

“இந்த வம்பே வேண்டாம். சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. கோவிலுக்கு போகணும், டைமாச்சு.”

“நானும் அதைத்தான் சொல்றேன். தனித்தனியா குளிச்சா நேரமாகும்டி.” 

வம்பளந்தவனை உடையை எடுத்துக் கொடுத்து தள்ளாத குறையாக குளியலறைக்குள் தள்ளி கதவைச் சாத்தினாள். 

“கன்னிப் பையன் ஆசைடி! சாபம் சும்மா விடாது.” உள்ளே இருந்தே குரல் கொடுக்க, அவன் உள்ளே இருக்கும் தைரியத்தில். 

“இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டிறலாம்” என வாய்விட,

“அத இப்பவே கட்டினா என்ன?” பட்டென கதவைத் திறந்து கேட்க,

“ஐயோ! மாமாஆஆ!” வேகமாக கண்களை மூடிக் கொண்டாள். 

“அடச்சே! நீ நெனக்கிற மாதிரி இல்ல. கண்ணைத் திற” என அதட்ட, ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள். 

“வெளியே எல்லாரும் இருக்காங்க. அலும்பு பண்ணாம குளிச்சுட்டு வாங்களேன்.‌ ப்ளீஸ், மாமா!” பார்வை இறைஞ்ச,

மாமா என கிள்ளையாய் கொஞ்சியததிலேயே பௌலிங் போடாமல், பேட்டிங் பண்ணாமல் க்ளீன் போல்ட் நம்ம அரசியின் வேந்த மகாராசா. 

1 thought on “மல்லி 29”

  1. [7878]boss96 Official Login | Best Online Slots & Fast Payouts Malaysia,boss96 provides a seamless app download for mobile gaming. Enjoy a wide variety of baccarat tables and secure payment methods. Join now for a premium experience. visit: boss96

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top