தெம்மாங்கு பூந்தமிழே 7

7

அதிகாலையிலேயே தீப்பந்தம் போல் சூரியன் தன் வேலையைத் துரிதமாகத் துவக்கி இருக்க, இரவு முழுதும் கண்விழித்தும் சற்றும் உற்சாகம் குறையாமல் சுற்றிக் கொண்டு இருந்தனர் தூங்காநகரத்து மக்கள்.

“ஏய்… தேனு எங்க போற?” என அதட்டியவாறே  தேன்மொழியின் கையைப் பிடித்து இழுத்தாள் அமிர்தா. 

“நானும் அப்பல இருந்து பாக்குறே… அந்தப் பொறுக்கிப்பயலுக நம்ம பின்னாலயே வர்றானுக. நம்மளப் பத்தி சரியாத் தெரியல.” என திமிறிக் கொண்டு நிற்க,

“எப்ப இருந்து ப்பா புள்ளப்பூச்சிக்கெல்லாம் மீச மொளச்சுது.” எனக் கேட்டு சிரித்தவள்,

 “இந்த திருவிழா கூட்டத்துல இதெல்லாம் சகஜம் தேனு. பேசாம வா! எளந்தாரிப் பயலுகன்னா அப்படித்தான் இருப்பானுக.” 

“எளந்தாரிப் பயலுகளா அவிங்க? சரியான குடிகாரப் பயலுக.”

“அதனால தான் சொல்றேன் தேனு. பேசாம வாப்பா! வம்பு வேண்டாம்.” என கைபிடித்து இழுத்தவளை, ஆச்சர்யமாகப் பார்த்து தாவாயில் கைவைத்து அபிநயம் பிடித்தாள் தேன்மொழி.

அவளது பார்வையைப் பார்த்து என்னவென்று புருவம் சுருக்கி, முகம் தூக்கி கேட்க, 

“அம்புட்டு நல்லவளாப்பா நீ?” என்றாள்.

“ஏன்… நானென்ன அவ்வளவு மோசமா?”

“ஒரண்டை இழுக்குறவன குப்புறத்தள்ளி குதிரையேறி கும்முறவளாச்சே?” என கேட்க, பட்டென்று சிரித்து விட்டாள் அமிர்தா.

“அதெல்லாம் அப்போ… இப்ப, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க.” என்றாள் அப்பாவி போல்.

“அம்மா பேச்சை எல்லாம் கேக்குறவளா நீ?”

“என்ன நீ… நல்லவளானு கேக்குற… அம்மா பேச்ச கேக்குறவளானு வேற கேக்குற? இதெல்லாம் இந்த திருவிழாக் கூட்டத்துக்குள்ள நாலு பேரு காதுல விழுந்தா, யாரு என்னைய பொண்ணு கேட்டு வருவாங்க தேனு?” என இடுப்பில் கைவைத்து போலியாக குரல் உயர்த்த,

“ஓ… இதெல்லாம் தெரிஞ்சு தான் யாரும் உன்னைய இன்னும் பொண்ணு கேட்டு வரலியா அமிர்தா? நானென்னமோ வர்றவங்கள எல்லாம் நீ வெரட்டி அடிக்கறதால்ல கேள்விப்பட்டேன்.” என காயத்ரியும் சேர்ந்து கொள்ள, 

“நம்ம புகழ் ஏற்கனவே பரவிருச்சு போலயே. நல்லதுக்கே காலம் இல்லப்பா.” என்க,

மூவரின் சிரிப்பு மட்டுமே அந்தக் கூட்டத்தில் எதிர் ஒலித்தது. 

அதிகாலை நேரம். பருவச் சிட்டாய்ப் பெண்கள். திருவிழாவின் நேர்மறைத் தாக்கம் அவர்களுக்குள்ளும் ஊடுறுவ. அந்த வயதிற்கே உரிய துள்ளல் மூவரிடமும். 

அதுவும் இப்பொழுதுதான் தனது காதலனை சந்தித்து விட்டு வந்த பூரிப்பில் காயத்ரி இருக்க,

தேன்மொழிக்கு அத்தை மகனோடு வெளியே வந்திருக்கும் சந்தோஷம். அவனுக்கு இவள், இவளுக்கு அவன் என முடிவானது தான் என்றாலும் தனியே அனுப்பியதில்லை மஞ்சுளாதேவி. வந்ததிலிருந்து அத்தை மகனும் அவளைப் பார்வையாலேயே வருடி சிவக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறான். அழகரின் மேய்ச்சல் பார்வையைக் கண்டும் காணாமல் ரசித்துக் கொண்டு தானே இருக்கிறாள். 

அமிர்தாவுக்கு கேட்கவே வேண்டாம்.‌ பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவள். ருத்ரன் பின் தொடர, முன்னால் நடந்து செல்வதே அவளுக்குப் போதும் என்றிருக்க, அவள் முன் செல்ல, மனம் அவனை நோக்கிப் பின் செல்ல என சூரியன் எழும்  திசை நோக்கி முன்னேறும் சூரியகாந்தியாய், உள்ளுக்குள் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

எனவே மூன்று பெண்களின் மனநிலையும் மகிழ்ச்சி ததும்பியே இருக்க, பேச்சும் சிரிப்புமாக இவர்கள் வாயாடிக் கொண்டே செல்ல,

சில இடிமாடுகள் கூட்டத்துள் பெண்களை உரசிக் கொண்டும் இடித்துக் கொண்டும் சென்றது.

இதையெல்லாம் கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்க, அந்தக் கும்பல் இவர்களையும் சமீபித்தது. மூவரும் வரிசையாகச் செல்ல, அதில் அமிர்தா ஓரமாக நடக்க, அவர்களுக்கு அது சௌகர்யமாகப் போயிற்று. அமிர்தாவின் பொறுமையும் எல்லை மீற எத்தனித்த தருணம், ஒருவன் அவளை தோளோடு இடித்து விட்டு முன்னே செல்ல, கையில் இருந்த சேமியா குச்சி ஐஸ் விழுந்ததில் அவளது கோபம் கட்டவிழ்க்கப்பட, வேகமாகத் திரும்பி அவள் கை ஓங்குவதற்குள், அவனது சட்டைக் காலரைப் பின்னாலிருந்து பிடித்து, கூட்டத்தை விட்டு விலக்கி தனியே சிறு சந்துக்குள் இழுத்துச் சென்றது ஒரு கரம்.

அதிகாலையில் தான் அமிர்தாவும், கௌதமும் திருவிழாவிற்கு வந்தனர்.‌ கௌரியும், மனோகரும் ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டி வந்ததால், இரவு வரமுடியாமல் அதிகாலையில் தான் மகளையும், மகனையும் கள்ளழகரைக் காண அனுப்பி வைத்தனர். 

கூட்டத்திற்குள் தேன்மொழி இருக்கும் இடம் கேட்டறிந்து அவர்களோடு இணைந்து கொண்டனர் இருவரும். பெண்கள் மூவரையும் முன்னே விட்டு ஆண்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

தேன்மொழியை உறவுமுறை தெரியும் முன்னரே, அக்காவின் தோழியாக பள்ளிப் பருவத்தில் இருந்தே தெரியும் என்பதால் கௌதமும் அவளை கேலி பேசி, அழகரின் வயிற்றில் நெருப்பைப் பற்றவைத்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு இருந்தான். சிறியவன் ஆனாலும் கௌதமிற்கும் தேன்மொழி முறைப்பெண் ஆயிற்றே. அந்த உரிமை தான். 

கள்ளழகர் ஆற்றில் இறங்கி கரையேற, இவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டே கூட்டத்தில் கலந்து கார் நிறுத்தி இருக்கும் இடம் நோக்கிச் செல்ல,

இவர்கள் பின்னாலேயே இவர்கள் சங்கதி தெரியாமல் மீசை முறுக்கிய இளவட்டக் கும்பல் ஒன்று லந்து பண்ணிக் கொண்டு வர… ஏனோ அமிர்தா அமைதியாக வந்தது தேன்மொழிக்கு ஆச்சர்யமாக இருக்கவே, அவளை கேலி பேசியபடி வந்தாள்.

ஒரு கட்டத்தில் அவள் பொறுமை இழக்க, கூட்டத்தில் பின்னாலிருந்து அவர்களது சட்டைக்காலரைப் பிடித்து இழுத்து ஓரங்கட்டியவன், “திருவிழாவுக்கு வந்தா வந்த வேலைய மட்டும் பாக்கணும். அது என்ன பொம்பளப்பிள்ளைகள உரசுறது. கண்ட எடத்துல கைவைக்கிறது.” எனக்‌ கேட்டு கோபமாக அவனை கன்னத்தில் ஓங்கி அறைய, போதையில் இருந்தவனுக்கு கண்ணில் பூச்சி பறந்தது. சட்டென போதை பாதி தெளிய,

“கூட்டத்துக்குள்ள கைகால் படாம எப்படி இருக்கும். வந்துட்டாருய்யா நம்ம ஹீரோ.” என எகத்தாளம் பேசியவன் மீது குப்பென மதுவாடை.

அதற்குள் அவனது கும்பலும் வந்து சேர, அதில் ஒருவன் ருத்ரனின் சட்டையைப் பிடித்து, முகத்தில் குத்த கை ஓங்க, பிடித்த கையை முறுக்கிப் பிடித்து தாவாயில் குத்துவிட, அவனுக்கு வாய் வெத்தலைபாக்கு போட்டது. அதற்குள் நால்வரும் ருத்ரனை சுற்றி வளைக்க, அங்கு வந்துசேர்நத அழகரும், கௌதமும்‌ ருத்ரனோடு சேர்ந்து கொண்டு அவர்களை புரட்டி எடுத்தனர். 

“போதும் மாமா… அவிங்க போதையில இருக்கானுக. படாத எடத்துல பட்டு, பொட்டுனு போய்ச் சேந்துறப் போறானுக. விடுங்க.” என அழகர் தான் ருத்ரனை பிடித்து இழுக்க வேண்டியதாய்ப் போயிற்று.

“இவிங்கள எல்லாம் மாட்டுக்கு அடிக்கிற மாதிரி காயடிச்சு விட்றனும்டா மாப்ள. ஒரசுறது என்ன ஒன்னுக்குக் கூட போக முடியாம கெடக்கணும். அப்ப தான் புத்தி வரும்.” என்றவனது கோபம் பார்த்து அழகர் வாய்விட்டு சிரித்தவன்,

“ஏன் மாமா… திருவிழாவுல நாம பண்ணாததா?” எனக் கேட்க,

“அதெல்லாம் ஜாலிக்குடா. ரசனையா லந்து பண்றது. அதுவும் இல்லைனா பிள்ளைக அம்புட்டு அலங்காரம் பண்ணிட்டு வர்றது எதுக்கு. ரசிக்கத்தானே. நாமெல்லாம் அந்த லிமிட்டொட நின்னுட்டோம். இவிங்க என்னடான்னா இடிமாடாட்டம் எங்க பாத்தாலும் இடிக்குறானுக. கை வேற கண்ட எடத்துல அத்து மீறுது.” என கூறியவனுக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை.

“மாமா! அப்ப நீங்களும் இதெல்லாம் பண்ணியிருக்கீங்களா?” என கௌதம் ஆச்சர்யம் காட்டினான். 

“டேய்… நாங்க எல்லாம் பாடிகார்ட் மாதிரி. பத்திரமா அவங்கள வழியனுப்பி வைப்போம். இவிங்கள மாதிரி வரம்பு மீற மாட்டோம்.” என்றவன் முகத்திலும் பழைய நினைவில் சிரிப்பு அப்பியது. அந்தச் சிரிப்பு பள்ளிப்பருவ ருத்ரனை நினைவூட்டியது கௌதமிற்கு. அவர்களுக்குள்ளும் சிரிப்பலை பரவியது.

ருத்ரனும், அழகரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருவிழா வந்தால் அந்த வயதிற்கே உரிய குறுகுறுப்பில் கண்கள் பெண்கள் பக்கம் தான் போகும். கேலியும் சிரிப்புமாக அவர்கள் பெண்களை பின் தொடர்ந்தால், முன்னே செல்லும் பெண்களின் கன்னம் சிவக்கும் அளவிற்கு கிண்டல் செய்து, அவர்களின் மெனக்கெடலுக்கான பிரதிபலனை வழங்கியே அனுப்பி வைப்பர். இவர்கள் ரசிக்க, பெண்கள் போலியாக முறைக்க என ஒரே குதூகலம் தான் திருவிழா எனில்.  

இன்றைக்கும் திருவிழா வந்தவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை முன்னே அனுப்பி விட்டு ருத்ரன், அழகர், கௌதம் மூவரும் பின்னே வந்து கொண்டு தான் இருந்தனர். 

அந்தக் கும்பல் கூட்டத்துள் ஆங்காங்கே தெரியாமல் இடிப்பது போலவும், கை படுவதும் போலவும் என பெண்கள் போகும் பக்கமெல்லாம் உரசிக் கொண்டே சென்றது.‌ அதில் ஒருவன் போகும் வழியோரமாகவே பெண்களும் செல்கிறார்கள் எனக் கூடப் பாராமல் சிறுநீர் கழிக்க, பெண்கள்‌ எல்லாம் முகம் சுழித்தனர். அப்பொழுதே ருத்ரனுக்கு கோபம் கண்ணைக் கட்டியது. அமிர்தாவிடமும் அவர்கள் வேலையைக் காண்பிக்க, அவள் பதிலடி கொடுப்பாள், தான் அடுத்த அடி எடுத்து வைக்கலாம் என நினைத்து சென்று கொண்டிருக்க, அவள் கண்டும் காணாதது போல் சென்றது இன்னும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆயிற்று அவளது செய்கை.

இந்தப் பெண்கள் மூவரும் வரிசைகட்டிச் சென்றது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போயிற்று. வழி இல்லாதது போல் இவர்களிடமும் தங்கள் கைவரிசையைக் காண்பிக்க, இவர்கள் பின்னால் வந்த ருத்ரன் தனியே இழுத்துச் சென்று கவனித்து அனுப்பினான். 

வந்தவன் பார்வை அமிர்தாவைத் தீயாய்ச் சுட்டது. 

“இடிக்கிறாய்ங்கன்னு தெரியுதுல்ல. எருமமாட்டு மேல மழபேஞ்ச மாதிரி நீ பாட்டுக்குப் போற.” என வெகுண்டு எழ, அவள் அமைதியாகவே இருந்தாள். 

இந்த இடத்தில் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுகிறேன் தோழர்களே. பெண்களிடம் வார்த்தையை விடும் பொழுது யோசித்துப் பேசவும். பிரதி பலன் உடனே கிடைக்காவிடினும் எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் அதற்குரிய பலனை அனுபவிக்க நேரிடும். தப்பவே முடியாது. கல்யாணம் முடிந்த புதிதில் ஏதோ ஒரு வேகத்தில் உண்மை விளம்பிகளாக பலதையும் பேசிவிட்டு அதன் பலனை பலவருடம் கழித்தேனும் தாராளமாக அனுபவிக்கும் கணவன்மார்கள் ஏராளம். 

“என்னமோ ஐஸே பாக்காதவ மாதிரி அதத் தட்டிவிட்டதுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது.” என்றவனது கோபம் கரை கடந்தது. ‘வாயத் தொறக்குறாளா பாரு. திங்க மட்டும் தான் வாய் தொறக்கும் போல?’ என மனதிற்குள் மேலும் பொருமித் தள்ளினான்.

அவனும் கவனித்துக் கொண்டே தானே வந்தான். அவர்கள் அத்து மீறும் போது இவள் பதிலடி கொடுப்பாள் என அவன் எதிர்பார்த்திருக்க, அவளோ ஐஸ் விழுந்ததில் தான் ஆத்திரமாகத் திரும்பினாள்.

அமிர்தா அமைதியாகவே நிற்க, “வாயத்தொறக்குறாளா பாரு. திங்க மட்டும் தான் வாய் தொறக்குமா?” என மனதில் நினைத்ததை கூட்டம் என்றும் பாராமல் கத்த, சென்றவர்கள் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்ல,

“மாமா… எல்லாரும் பாக்குறாங்க.‌ வாங்க அங்குட்டுப் போயி பேசிக்கலாம்.” என அழகர் கைபிடித்து இழுக்க,

“சண்டிராணியாட்டம் எதுக்கெடுத்தாலும் துள்ளுவா மாப்ள! இன்னைக்கி எதுக்கு கம்முனு போனான்னு கேளு?” எனக் கேட்க, அவளது பொறுமை பறந்தது. கிட்டிப் புள்ளாட்டம் எகிறியவள்,

“அவிங்க என்னையத் தானே இடிச்சானுக. அதுல இவருக்கு ஏன் ண்ணா கோபம் பொத்துக்குட்டு வருது. என்னைய மட்டுமா இடுச்சானுக. கூட்டத்துல எத்தனபேர இடுச்சானுக? இல்ல… அவிங்க இடிக்கிறாய்ங்கனு எனக்குத் தெரியாதா? இருந்து இருந்து இப்ப தான் உங்க கூட எல்லாம் இந்த மாதிரி வெளியே வர சந்தர்ப்பம் கெடச்சிருக்கு. அந்த வெளங்காத பயலுகள அடிச்சு இந்த சந்தோஷத்தை கெடுத்துக்கச் சொல்றீங்களா?” என ஆத்திரமாக ஆரம்பித்தவள் அழுகையோடு முடிக்க, தேன்மொழி ஆதரவாகத் தோழியின் கையைப் பிடித்துக் கொண்டாள். என்னதான் கட்டுப் படுத்தியும் அவன் திட்டியதில் அழுகை தன்னால் வந்தது.

மேலும், “அது நீங்க வாங்கிக் கொடுத்த ஐஸ்.” என வாய்க்குள்ளேயே முனங்க, சொன்னவளின் வார்த்தைகள் அவனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சுட்டியது, அது அவள் ஐஸூக்குக் கொடுத்த முக்கியத்துவம் இல்லை. வாங்கிக் கொடுத்தவனுக்குக் கொடுத்த முக்கியத்துவம் என்று. 

ஐஸ் வண்டியைப் பார்த்த பெண்கள் மூவருக்கும் ஆசை எழ… அவர்கள் பார்வையைப் பார்த்து விட்டு ருத்ரன் தான் வாங்கிக் கொடுத்து இருந்தான். 

“உங்க கூட நடந்து வர்ற இந்த அஞ்சுநிமிஷ சந்தோஷத்தக் கெடுத்துக்க விரும்பல. அதுக்காக நான் எதை வேணாலும் பொறுத்துப் போவேன்.” என்றவள், தன் தோழியை மட்டும் ஒரு பார்வை பார்த்து தலையசைத்து விட்டு, வேகமாக நடையைக் கட்ட, கௌதமும் வேகமாக அக்காவைப் பின் தொடர்ந்தான். 

அக்காவும் தம்பியும் வண்டியில் தான் வந்திருந்தனர். 

பத்து ரூபா ஐஸையும், தன்னோடு வரும் பத்து நிமிட நேரத்தையுமே இழக்க விரும்பாதவளை எப்படி விலக்கி வைப்பது என உள்ளுக்குள் குமைந்து தவித்துப் போனான் அவன். பெரும் பாரம் மனதில் ஏறிய உணர்வு. 

எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை அவனை இழக்க அவள் தயாராக இல்லை என பட்டவர்த்தனம் செய்து விட்டுப் போனாள் பெண். அதற்குப் பின் அனைவரிடமும் அமைதியே. 

கூட்டத்தை விட்டு விலகி தனியே இவர்கள் நின்று கொள்ள, ருத்ரன் மட்டும் நடந்து சென்று காரை நிறுத்திய இடத்திலிருந்து எடுத்து வந்தான்.

முதலில் அத்தை வீடு சென்று அவர்களை இறக்கி விட்டான். அழகர் வீட்டிற்குள் அழைக்க, இன்னொரு நாள் வருவதாகக் கூற… கண்ணாலே மாமன் மகளுக்கு விடை கொடுத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றனர். 

வீட்டிற்குத் திரும்பிய அப்பனையும், அத்தையையும் ஒரு சேரப் பார்த்துவிட்டு யாரிடம் போவது என ஒரு கணம் குழம்பி, அப்பனிடமே தாவியது அவனது பூஞ்சிட்டு. 

குழந்தையை வாங்கி அணைத்து முத்தம் வைத்து தனது இறுக்கத்தை தளர்த்தினான். பதிலுக்கு தனது கன்னத்தையும் காட்ட எச்சில் ஒழுக அப்பனின் கன்னத்தை ஈரப்படுத்தி அவனை குளிர்வித்தது. பாரம் சற்றே இறங்கிய உணர்வு. மழலைகள் எப்பொழுதுமே மனக்கவலை தீர்க்கும் மாயதேவதைகள். 

வீட்டிற்கு வந்த மகனையும், மகளையும் மஞ்சுளாதேவி சாப்பிட அழைக்க, பசியில்லை என மகளை தூக்கிக் கொண்டு படுக்கையறை புகுந்து கொண்டான். 

       *******************

 “என்னக்கா… மாம்ஸ் என்ன தான் சொல்றாரு.” என கௌதம் கேட்க,

“அவரு என்னத்தடா சொல்றாரு. நீயும் கூடத்தானடா இருந்த?”  என அலுத்துக் கொண்டே ஆயாசமாக ஷோபாவில் சாய்ந்தாள்.

“பேசாம மாம்ஸ தூக்கிருவோமா க்கா.”

“போற போக்கப் பாத்தா அப்படித்தான் பண்ணனும் போலடா. அந்த அளவுக்கு எல்லாம் போக வேண்டாமேனு பாக்குறேன்டா.”

“யக்கோவ்! நான் ஏதோ வெளையாட்டா கேட்டா, நீ உண்மையிலேயே கடத்தி, கட்டாயத் தாலி கட்ட வச்சுருவ போலயே. அவர் சொல்ற மாதிரி அல்லிராணி தான் போ.” என அக்காவை கலாய்த்து, அக்காவின் மனதை மாற்ற முயற்சி செய்து கேலி பேசிக் கொண்டு இருந்தான் தம்பி.

அங்கு ஹாலில் தான் அமர்ந்து இருந்தனர் மனோகரும், கௌரியும் ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு.

“அமிர்து… இதெல்லாம் அந்த அகிலாண்டம் இருக்குற வரைக்கும் நடக்காது.” என கௌரி கூற,

“அப்ப மொதல்ல தூக்க வேண்டிய ஆளு அகிலாண்டம் தான்.” என கூறிவிட்டு தம்பிக்கு ஹை ஃபை கொடுக்க… அக்காவுக்கும், தம்பிக்கும் சிரிப்பு அடங்கவில்லை.

“வெளையாடாத அமிர்தா. இது உன் வாழ்க்கை.‌ உனக்கும் வயசாகிட்டே போகுது. இலவு காத்த கிளி மாதிரி ஆகிறக்கூடாது.” என மனோகர் தந்தையாகக் கண்டிக்க, 

“அப்பா சொல்றதும் சரி தான் அமிர்தா. எங்களுக்கும் ஆச தான். ஆனா நீ ரெண்டாம் தாரமா போகணுமான்னு அப்பா யோசிக்கிறாரு. அப்படி என்னடி உனக்கு குறைச்சல். எல்லாம் நம்ம கையில இல்லேன்னு ஏற்கனவே ஒரு தடவ ஊர்ஜிதமாயிருச்சு. தேவையில்லாம ஆசைய வளத்துக்காதம்மா.” என கௌரி மகளுக்கு பொறுமையாக எடுத்துக் கூற,

“யாரு ம்மா ரெண்டாந்தாரம். நானா அமராவதியா? கல்யாணம் பண்ணினதால மட்டும் அவ முதல் இடத்துக்கு வந்துருவாளா ம்மா?” என வெகுண்டு எழுந்தாள் மகள்.

“என்ன சொன்னாலும் நீ தான் ரெண்டாந்தாரம் அமிர்து. அமராவதிக்கு ருத்ரன் தான்ங்கறது ஏற்கனவே முடிவானது. இப்ப அமராவதி உயிரோட இருந்திருந்தா என்ன பண்ணி இருப்போம். இந்நேரம் உனக்கும் வேற இடம் பாத்து கல்யாணத்த முடிச்சுருப்போம்ல அமிர்தா. அப்படி நெனச்சு மனசத் தேத்திக்க ம்மா.” என நிதர்சனத்தை எடுத்துச் சொல்ல, மகள் உள்ளுக்குள் குமைந்து போனாள். 

ஆசை கொண்ட இரண்டு மனங்களை உரிமை, கடமை என்ற பெயரில் பிரித்து வைத்துவிட்டு வியாக்யானம் பேசுபவர்களை நினைக்கையில் கோபம் தலைக்கேறியது.

“அப்ப உனக்கு கூட எந்த உரிமையும் இல்லையா ம்மா?” என மகள் ஆதங்கமாகக் கேட்க, ஒரு பெருமூச்சு மட்டுமே கௌரியிடமிருந்து வந்தது.

மகளுக்கு அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியாத இயலாமை பெற்றோர்களின் பேச்சில் வெளிப்பட்டது. 

இருவரையும் சாப்பிட அழைக்க, அதிசயமாக பசியில்லை என அமிர்தா எழுந்து சென்றுவிட, மகனை கேள்வியாகப் பார்த்தனர் இருவரும். 

கோவிலில் நடந்ததை கௌதம் கூற, மகளின் மனம் தெள்ளென விளங்க,  அவர்களுக்கும் உள்ளுக்குள் கலக்கமே. விரைவில் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும் என முடிவு செய்தனர். 

அதற்கு தான் அங்கே ஒருத்தி தானே முடிவெடுத்து இவர்களுக்கு வழிவிடத் தயாராகி விட்டாளே. 

3 thoughts on “தெம்மாங்கு பூந்தமிழே 7”

  1. [7280]Josbet: Login Resmi Link Alternatif Situs Slot Gacor Terpercaya,Josbet menyediakan akses login resmi dan link alternatif terbaru. Nikmati judi casino online terpercaya dengan cara deposit via dana yang mudah. Daftar sekarang! visit: josbet

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top