தெம்மாங்கு பூந்தமிழே 17

17 

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே… இது பட்டினத்தார் வாக்கு. 

வாஸ்த்தவமான பேச்சு தான். இல்லைங்கல. அவருக்கு என்னப்பா, சந்நியாசி. சொல்லிட்டுப் போயிட்டாரு. சம்சாரிக்கு தானே தெரியும் காசோட அருமை. போகும்போது யாரும் எதையும் கொண்டு போகப்போவதில்லை தான். எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு செல்ல. வேதாந்தம் நல்லாத்தானிருக்கு. ஆனால் இருக்கும் வரை நம்மை நாலுபேர் மதிக்க வேண்டுமானால் நம்ம கையில நாலு காசு இருந்தால் தானே உண்டு. அவன் என்ன என்னை மதிக்கறது… நான் யாரையும் மதிக்கமாட்டேன் என தெனாவெட்டாக சொல்வதற்கும் நம்ம கையில அதே நாலு காசு வேணும். இல்லைனா வெறுங்கழுதைக்கு வீராப்ப பாருன்னு கழுதைக்குச் சமமாக உயர்த்தப்படுவோம். பொருளற்றவரையும் பொருளாகச் செய்வதாயிற்றே. இந்த நிலையற்ற செல்வம் நம்மைப் படுத்தும்பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. 

மனிதன் படைப்பது தான் மனிதனை ஆட்டுவிக்கிறது. அது காசாக இருந்தாலும் சரி. கடவுளாக இருந்தாலும் சரி. 

ஒரு பிரச்சினைக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதைவிட பெரிய பிரச்சினை தான் தீர்வு என்பது போல் இரு கோட்டுத் தத்துவம் கற்றுக் கொண்டிருந்தான் ருத்ரன். 

இந்த கல்யாண ஏற்பாட்டிலிருந்து தனது காதலை எப்படித் தக்கவைத்துக் கொள்வதென யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இதெல்லாம் பிரச்சினையே இல்லை என அடித்துச் சொல்லியது அத்தையின் வாக்குமூலம்.

இது என்ன புதுவித ஒப்பந்தம்‌. பிறக்கும் போதே போடப்பட்ட ஒப்பந்தம் என்றால், யாரவது திருமணத்தை ஒப்பந்தம் செய்வார்களா? இது என்ன வியாபாரமா? நீ புளி கொடு, நான் உப்பு தர்றேன் என்கிற பண்டமாற்றா? 

அத்தையின் பேச்சுக்களை கோர்த்தெடுத்துப் பார்த்தவனுக்கு குழப்பமே மிஞ்சியது.

“இதுவே எங்க குடும்ப ரெத்தமா இருந்தா என்னைய இந்தளவுக்கு பேசவிட்டு வேடிக்கை பாக்குமா? அத்தைக்கு ஒன்னுனாலோ, அத்த மகளுக்கு ஒன்னுனாலோ துடிச்சுப்போயிறாது.” என ஒப்பாரி வைக்காத குறையாக அகிலாண்டம் நீட்டி முழக்க, அதன் சாராம்சம் புரியாமல் குழம்பி நின்றான். 

“நீங்க என்ன அத்தை சொல்றீங்க?” என புருவங்கள் கேள்வி முடிச்சால் கட்டப்பட, 

“அகிலா, என்ன பேசுற?” என மஞ்சுளாதேவி படபடக்க,

“இவங்க என்னம்மா சொல்றாங்க? எங்க ரெத்தமா இருந்தானு கேட்டாங்களே… அதுக்கு என்னம்மா அர்த்தம். அப்ப நான் யாரும்மா?” என்றவனது வார்த்தைகள் நைந்து வந்தன. எவராலும் விளக்க முடியாத உணர்வு மட்டுமல்ல, அவனாலும் விளங்கிக் கொள்ள முடியாத உணர்வது.

இவ்வளவு‌ நேரமாக அமைதி காத்த மஞ்சுளாதேவி, “அகிலாண்டம், இப்ப என்ன? உனக்கு இவங்க கல்யாணத்த முடிக்கணும். அவ்வளவு தான. அந்த ஏற்பாட்டப்பாரு. வேறெதுவும் பேசாத.” என படபடப்பாய் குரல் உயர்த்தி, சட்டென சம்மதம் கூறிய அம்மாவை சந்தேகமாகப் பார்த்தான் மகன். 

இவர் தான் சற்று முன்புவரை மகனையும் ஒருவார்த்தை கேட்டே ஆகவேண்டும் என நாத்தனாரிடம் வாதிட்டவர். அகிலாண்டம் எங்கே உண்மையைப் போட்டு உடைத்துவிடுவாரோ என்ற பயம் மஞ்சுளாவிற்கு. 

அவனுக்கு விபரம் தெரிய ஆரம்பித்த நாட்களாக, உண்மையைப் பக்குவமாக கூறிவிடலாம் என கேசவமுர்த்தி முனைந்த பொழுதெல்லாம், உண்மை தெரியும் பொழுது தெரியட்டும், இப்பொழுதே சொல்லி அவன் நம்மைவிட்டு ஒதுங்கிச் சென்றுவிட்டால் என்ன செய்வது என பயந்து விட்டுவைத்தது, அந்தச் சூழல் வரும்பொழுது அதை எதிர்கொள்ளும் திராணி பிள்ளை மீது பித்து கொண்ட  மனதிற்கு இல்லாமல் போய் விட்டது. தெரிந்தால் எங்கே தன்மீது பாசம் குறைந்து விடுமோ, பெற்றவள் பக்கம் போய்விடுவானோ, தன்னை வெறுத்து விடுவானோ என பதைபதைத்தது தாய்மனது.

அத்தையின் பேச்சும், கல்யாணத்திற்கு தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் சட்டென அம்மா சம்மதித்ததும் அவனை மேலும் குழப்பியது. அவன் மலைபோல் நம்பியிருந்தது அம்மாவைத்தானே. ஆனால் அவரது அவசரமுடிவு யோசிக்க வைக்க,

“ம்மா… அவங்க ஏதோ சொல்ல வர்றாங்க. சொல்ல விடுங்க.” என்றவன், 

அத்தையிடம், “எதுவா இருந்தாலும் உடச்சுப் பேசுங்கத்தை. பூசி மொழுக வேணாம். ஆனா, என்னால இஷ்ட்டமே இல்லாம நீங்க சொல்றதுக்காக கல்யாணமெல்லாம் பண்ண முடியாது.” என்றான் உறுதியாக.

“கேட்டுக்கோங்க ண்ணே. எனக்காக எல்லாம் கல்யாணம் பண்ண முடியாதாம். இதைத்தான நானும் சொன்னேன். இதுவே நம்ம வீட்டு ரெத்தமாயிருந்தா என்னால அதிகாரமா, உரிமையோட, சட்டையப் புடுச்சுக் கேக்கமுடியும். அதுக்கும் ரெத்தம் துடிக்கும். என்ன இருந்தாலும் ஒட்டிக்கிட்டதுக்கு எங்கேயிருந்து பாசம் வரும்.” என அண்ணனிடம் வியாக்யானம் பேச, 

“ம்மா… இவங்க பேசுறது சுத்தமாப் புரியல. என்ன பேசுறாங்க? விளக்கமா யாராவது சொல்லப்போறீங்களா இல்லியா?” என குரலை உயர்த்தினான். அவனுக்கு இவர்கள் பேச்சு ஏதோ கனவில் நடப்பது போல் நிஜத்தில் ஒட்டவில்லை. 

“அகிலா… வந்த விஷயத்த மட்டும் பேசு. தேவையில்லாத பேச்சு எதுக்கு?” என ரகுராமனும் மனைவியை அடக்க, 

“என்னைய ஏன் அதட்டுறீங்க. அப்பவே சொன்னேன் இவங்க கிட்ட. உண்மையைச் சொல்லி வளங்க. வளத்த கெடா மாறுல பாஞ்சுறும்னு. எம்பேச்ச யாரு கேட்டா? இந்தா பாஞ்சுறுச்சுல. வாசல்ல கட்டியிருக்கது கூட நாலு ரொட்டியப் போட்டா காலத்துக்கும் வாலாட்டும்.” என்ற அகிலாண்டத்தின் ஒவ்வொரு வார்த்தையும் திராவகம் வீசியது. ஒவ்வொரு அர்த்தம் கொடுத்தது ருத்ரனுக்கு. அவமானத்தில் முகம் கருத்துச் சிவந்தது.

‘வளர்த்த கெடா என்றால், அதன் அர்த்தம் என்ன? பெற்ற பிள்ளையை யாராவது இப்படிச் சொல்வார்களா? அதற்கு மேலும் கீழ்த்தரமாக ஒரு வார்த்தை சொன்னாரே? அதுவும் அண்ணன் மகனை…’ சிந்தனைகள் சிலந்தி வலைபின்ன,

 அதற்குள், அவ்வார்த்தைகளின் வீரியத்தில், “அகிலாஆஆ…” என ஓங்கி அரற்றினார் மஞ்சுளாதேவி. கோபத்திலும், ஆத்திரத்திலும் உடல் நடுங்கியது அவருக்கு. அந்த வார்த்தைகள் தீயாய்ச் சுட்டது. வடிய பிள்ளைமுகம் பார்த்து மனம் கூப்பாடு போட்டது.

“இப்ப எதுக்கு கத்துறீங்க. அவங்கவங்க தகுதியை சொல்லி வளத்திருக்கணும்.” என்றார் அசட்டையாக.

“எது அத்தை என்னோட தகுதி?” என்றான். இறுகிப்போன குரலில். அவன் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாதே. இவர்கள் பேச்சிற்கு எல்லாம் அர்த்தம் புரியாமல் போக. அம்மாவின் மௌனம், பரிதவிப்பு, கண்களில் தெரியும் பயம், எதற்கும் குரல் உயர்த்திப் பார்க்காத அன்னையின் குரலில் இன்றைய ஆவேசம், சிறு வயதிலிருந்தே அப்பாவின் ஒட்டாத் தன்மை, வீட்டிற்கு வரும் அத்தையின் குத்தல் பேச்சுக்கள் எல்லாவற்றையும் கோர்த்து,  கூட்டிக் கழித்துப் பார்த்தான். விடை தவறாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு. ஆனால் கடவுளின் கணக்கு எப்பொழுது தவறாகியிருக்கிறது.

தொண்டை அடைக்க, “ருத்ரா, அவங்க ஏதோ பேசத்தெரியாம பேசுறாங்கப்பா.” என்றவரின் வார்த்தைகள் தழுதழுக்க,

“இல்ல ம்மா… எனக்கு ஏதோ தெரியணும்னு பேசுறாங்க.” என்றவன் குரலில் நிராசை நிரம்பி வழிந்தது. 

“சொல்லுங்க… எது என் தகுதி?” என்றான் அழுத்தமாக.

இனியும் எதற்கு பூசி மொழுகிக்கிட்டு, நாத்தனார் எப்படியும் மகனிடம் வாயைத்திறக்கப் போவதில்லை. நாம் வாயைத்திறந்தால் தான் காரியம் நடக்கும் என எண்ணியவர், 

“என்னமோ பெருசா, பெரியமனுஷங்க, அரசியல்வாதின்னு அழச்சு அம்பூட்டு ஆடம்பரமா ஹோட்டல் திறந்தியே. கடைவீதில அதுவும் மெயின்பஜார்ல ஹோட்டல், மாலை மரியாதை. இந்த வசதி, ஆடம்பரம், பகட்டெல்லாம்  யாரவச்சு கெடச்சுது. எங்க குடும்பத்த வச்சு வந்தது. எங்க அண்ணன வச்சு வந்தது? உனக்காகவா வந்தாங்க?” என எகத்தாளமாக கேட்க,

இதென்ன கேள்வி… அப்பாவைக் கொண்டு மகனுக்கு இதெல்லாம் கிடைக்கக் கூடாதா? சபையில் மகனை முன்னிருத்தும் கடமை அப்பாவிற்கு தானே உண்டு‌. தந்தை மகனுக்கு ஆற்றும் கடமை அல்லவா? அதைக் கட்டிக்காக்கும் கடமையும் உரிமையும் மகனுக்கும் உண்டல்லவா?

“உங்களுக்கு அண்ணேன்னா, அவர் எனக்கு அப்பா இல்லியா?” என்றவன் வார்த்தைகள் தடுமாறியது. அவன் உள்ளுணர்வு தான் அவனுக்கு வேறொன்றை உணர்த்திக் கொண்டிருக்கிறதே. அவனது அனுமானம் சரியாக இருந்தால் அப்பா எனும் பதம் அர்த்தமற்றதாகி விடுமே. 

கேசவமூர்த்தியைப் பார்க்க, அவரும் பேசும் நிலையிலும் இல்லை. தங்கையை அதட்டும் நிலையிலும் இல்லை. கண்களில் ஆதங்கம் மட்டுமே.

விரும்பத்தகாத ஒரு இருக்கம் அனைவரிடமும். சுற்றிலும் புழுக்கம் பரவியது போலிருக்க, மனதிற்குள் உப்புசக்காற்று.

அவனுக்கு எதையோ தெரிந்து கொள்ள மனம் துடிக்கிறது. ஆனால் அதை ஏற்கும் துணிச்சல் இல்லாமல் வலைக்குள் செல்லும் நண்டாய் மனம் பின்னோக்கி  நகர்கிறது. இதுவரை கஷ்ட்டநஷ்ட்டம் என எதிலும் அடிபடாத,‌ ஏற்ற இறக்கங்களை‌ சந்தித்திராத நீரோடை வாழ்க்கையில், எதிர்பாரா திருப்பமாக அதளபாதாள வீழ்ச்சி என்றால்,‌ இறுக்கிப் பிடிக்கும் பற்றுக்கோல் இல்லாமல் மனம் நிலை தடுமாறியது. 

அப்பொழுதுதான் கல்லூரி விட்டு வீடு திரும்பினாள் தேன்மொழி. 

“என்னம்மா உங்க சத்தம் வாசல்வரை கேக்குது?” என அம்மாவைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவள், அண்ணனை அந்நேரம் வீட்டில் பார்த்துவிட்டு,

“என்ன ண்ணே… உன் ஹோட்டல் சாப்பாடு உனக்கே புடிக்காம, வீட்டுக்கு வந்துட்டியா சாப்பிட” என அண்ணனையும் வம்பிழுத்தாள். அப்பொழுதுதான் சாப்பாட்டு நேரம் தாண்டிச் சென்றது உரைத்தது அனைவருக்கும். ஆனால் பசி மறத்து விட்டது.

சாதாரண நேரமாக இருந்திருந்தால் இந்நேரம் தங்கைக்கு தக்க பதில் கொடுத்திருப்பான். அசாதாரணச் சூழலில் அவனோ இறுகிப் போய் அமர்ந்திருக்க, 

அனைவரையும் ஒருமுறை பார்த்தவளுக்கு வீட்டின் சூழ்நிலை சரியில்லை என மூளைக்குள் மணியடித்தது. முடியாத நிலையிலும் தந்தை ஹாலில் இருக்க, கலங்கியிருந்த அம்மாவின் முகம் பார்த்தவளுக்கு,

“என்னம்மா… அப்பாவுக்கு ரொம்ப முடியலியா?” என்றாள் பதட்டமாக. அப்பாவிற்கு முடியாததால் தான் அண்ணனும், அத்தையும் இந்நேரம் வந்திருப்பதாக எண்ணிக்கொண்டவள் தந்தையை ஆராய்ந்தாள். அச்சம் கொள்ளும்படியாக அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. மனம் நிம்மதியாக ஆசுவாசமாக அண்ணன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“வாடீம்மா… நீயாவது என்னைய மாதிரி ஏமாளிப் பொழப்பு பொழைக்காம சுதாரிப்பா வாழப்பாரு.” என்ற அத்தையின் நக்கல் தொனியில், இது அத்தை கொண்டுவந்த பிரச்சினை எனப் புரிய,

அண்ணனின் அருகில் சாய்ந்தவள்,

“என்ன ண்ணே, அகிலாண்டம் ஏதும் புதுசா பிரச்சினையக் கெளப்புதா?” என ரகசியமாகக் கேட்க, தங்கையைப் திரும்பிப் பாரத்தவன் கண்களில் விரக்தி மிதமிஞ்சி இருந்தது. தங்கையைப் பார்க்க மனம் விம்மியது. தனது அனுமானம் பொய்க்க வேண்டுமென ஆசைப்பட்டது. 

மேஜை மீதிருந்த சாதகங்கள், சுரத்தையில்லாத வீட்டினரின் முகம், அத்தையின் நக்கல் பேச்சு எல்லாம் சேர்த்து, ஒருவேள சாதகத்துல யாருக்காவது நேரங்காலம் சரியில்லைன்னு சொல்லிட்டாங்களா. அதுக்கா எல்லாரும் இப்படி கப்பல் கவுந்த மாதிரி உக்காந்திருக்காங்க.’ என யோசிக்க, 

“என்ன அகிலா பேசுற. வந்ததுல இருந்து பாக்குறே. நீயும் இக்கனா வச்சே பேசுற. இப்ப என்னத்த நீ ஏமாளிப்பொழப்பு பொழச்சுட்ட. உனக்கு எத செய்யாம விட்டாங்க.” என என்றுமில்லா திருநாளாக மஞ்சுளாதேவி குரலை உயர்த்த, 

“என்னமோ நீங்க கொண்டுவந்து செஞ்ச மாதிரி பேசுறீங்க. எனக்குரியதத் தான எனக்கு கொடுத்தீங்க. கடத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடச்ச கதையா எங்க சொத்த தான் எல்லாருக்கும் வாரி எறச்சீங்க. அது பத்தாதுன்னு இப்ப பொண்ண வச்சு மொத்த சொத்தையும் வளைக்க திட்டம் போட்டாச்சு.” 

அதைக்கேட்ட மஞ்சுளாதேவி பொருமையிழந்து, “யாரு பொண்ணு. யாரு திட்டம் போடுறாங்க?” என சிடுசிடுக்க,

“உங்களுக்கு தான் ஒன்னுமே தெரியாதே. அதான் அன்னைக்கி வந்தாளே மேனாமினிக்கி. நம்ம உறவுக்காரப் பொம்பளைக அத்தன பேரு இருக்க, உங்க மகன் கூட அக்கறையா கூப்புட்டு விளக்கேத்த சொன்னாப்டியே. ஒன்றையனா புடவையக் கட்டிக்கிட்டு ஆளமயக்க, எங்க பசையிருக்கும் ஒட்டலாம்னு அலைவாளுக போல.” என்ற பேச்சு இதுவரை அமைதி காத்தவனை கொந்தளிக்க வைத்தது. தன்னை இதைவிட மட்டமாகச் சாடிய பொழுது பொருமை காத்தவன், தன்னவளைப்பற்றி தரக்குறைவாகப் பேச,

 “அத்தை! என்னை‌ என்ன வேணாலும் பேசுங்க. அடுத்தவீட்டு பொண்ணப்பத்தி பேச உங்களுக்கு உரிமையில்ல.” என்றவன் கண்கள் அனலைக் கக்கியது.  

பட்டும் நகையுமாக இருந்த தன் மகள் மீது அவன் கண் படாமல், அமிர்தாவின் மீது ருத்ரனின் பார்வை பட்டதில் வந்த கோபம் இது.‌ இவர் இன்று வந்து அடிபுடியாக திருமணத்திற்கு நாள் பார்ப்பதற்கான காரணம் விளங்கியது ருத்ரனுக்கு. 

“என்ன வார்த்தை அத்தை அது. ஆளை மயக்க அப்படினா, அன்னைக்கி அமராவும் தானே பட்டும் நகையுமா அலங்காரபொம்மை மாதிரி இருந்தா. அப்ப அத என்னானு சொல்றது.” எனக் கேட்க,

“தங்கமும் தகரமும் ஒன்னாகிருமா? யாரு யாருக்கு இணை.” என மகளைப் பற்றி ருத்ரன் கேட்க, பொங்கி விட்டார் அகிலாண்டம். 

“யாரு… அமிர்தாவையா சொல்றீங்கத்தே. அவ என்னோட ஃப்ரென்ட் அத்தை. நான் கூப்பிட்டதால தான் அவ ஃபங்ஷனுக்கே வந்தா. அவளப்பத்தி எப்படி தப்பா பேசுறீங்க?” என தோழிக்காக தேன்மொழி அத்தையிடம் பரிந்து பேச,

“உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அதனால தான் சொன்னேன். எங்க அண்ணே மகளும் என்னைய மாதிரி ஏமாளிப் பொழப்பு பொழச்சுறாம  சுதாரிப்பா பொழச்சுக்கோனு.” எனக் கூற,

மஞ்சுளாவிற்கு இவர்கள் பேசுவது யாரைப் பற்றி எனத் தெரியவில்லை. அவரும் அன்று கணவன் மீது கவனம் வைத்திருந்ததால் யார் வந்தார்கள் போனார்கள் என்றெல்லாம் கவனிக்கவில்லை. விசேஷம் முடியும் முன் வீடு திரும்பிவிட்டதால் இவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்கள் எனத் தெரியாமல்,

“யாரு தேனு?” என்றார் மகளிடம்.

“ஸ்கூல்ல இருந்து அவ என்னோட ஃப்ரென்ட் மா. நான் தான் வரச்சொன்னேன். அவங்க அப்பா கூட ஹெல்த் இன்ஸ்பெக்டர்.” எனக் கூற, யாரென மஞ்சுளா யோசிக்க,

பட்டென, “மனோகரன் பொண்ணு.” என்றார் அகிலாண்டம்.

“யாரு, மனோகரன் பொண்ணா வந்துருந்தா? நான் கவனிக்கலியே?” என அதிர்ச்சியடைந்தவர், அகிலாண்டத்தை திரும்பிப் பார்த்தார். நாத்தனாரின் அவசரகால பிரகடனத்திற்கும், பேச்சுக்கும் இப்பொழுதுதான் அர்த்தம் புரிந்தது மஞ்சுளாவிற்கு.

“அவங்களத் தெரியுமா உங்களுக்கு. கோயில்ல பாத்து நானும் தான் அவங்க அப்பாவுக்கு பத்திரிக்கை வச்சேன்ம்மா. அதனால தான் வந்தா.” என ருத்ரனும் கூற,

“அப்ப குடும்பமே ஒன்னு சேந்துட்டீங்கனு சொல்லுங்க. அதான் என் மகள ஓரங்கட்டப் பாக்குறீங்களா?” என கேட்க,

ஏற்கனவே போட்ட‌ விடுகதைக்கே இன்னும் விடை தெரியாமலிருக்க இது என்ன புதுக்கதை என யோசித்தான். 

“கோயில்ல கௌரியப் பாத்தியா?” எனக்கேட்ட மஞ்சுளாவின் குரலில் பதற்றம். 

“அது யாரும்மா கௌரி?” என ருத்ரன் கேட்டுக் கொண்டிருக்க,

அந்நேரத்திற்கு அரைக்குள்ளிருந்த மஞ்சுளாவின் கைபேசி அழைக்க, அதை எடுக்கும் மனநிலையில் அவர் இல்லை. கோவிலில் அக்காவைப் பார்த்திருக்கிறான். பேசியிருக்கிறான் அதைப்பற்றி தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்பதே மண்டைக்குள் ஓடியது. அவனுக்கு அக்கா எனத் தெரிந்திருந்தால் தானே சொல்வதற்கு. அவன் அழைத்தது ஹெல்த் இன்ஸ்பெக்டர் மனோகரைத்தானே. 

ஃபோன் ஒரு முறை அடித்து ஓய்ந்திருந்தது. மறுமுறை அடிக்க தேன்மொழி தான் எழுந்து சென்று எடுத்து வந்தாள்.

மிஸ்டு கால் லிஸ்ட்டைப் பார்த்தவள், “வெங்கடேஷ்னு இருக்கும்மா.” என்றாள் மகள்.‌ 

வேகமாக கைபேசியை வாங்க, மீண்டும் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்க பயம். ஓராயிரம் சிந்தனை ஒரு நொடிக்குள் ஓடியது. எதுவும் துக்க செய்தியோவென மனம் படபடவென அடித்துக் கொண்டது. சென்ற வாரம் தானே அக்காவை சென்று பார்த்து வந்தார். நிலைமை மோசமாகத் தானே இருந்தது. அங்கிருந்தவர்கள் ஒரு‌முறை மகனை அழைத்து வந்து காட்டச் சொன்னார்களே. ஆனால் இவருக்கு தான் அழைத்துச் செல்ல தைரியம் வரவில்லை.

மீண்டும் அழைப்பு வர, அம்மாவின் நடவடிக்கைகள் புதிர் போட, அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.‌

மகன் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என மனம் தவிக்க, தன்னால் ஒருபோதும் மகனிடம் உண்மையைக் கூற முடியாது என உள்ளுக்குள் மருக, தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது, இனி கடவுள் விட்ட வழி என அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நடப்பது நடக்கட்டுமென அழைப்பை ஏற்று, ஸ்பீக்கரை ஆன் செய்தார். 

“சித்தி.” என எதிர்முனையில் அழைப்பு. நிமிர்ந்து ஒரு கணம் கலக்கத்தோடு மகனை தொட்டு மீண்டது மஞ்சுளாவின் கண்கள். அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னப்பா?” என்றவர் குரல் நடுங்க,

“என்ன சித்தி உங்களுக்கும் உடம்பு சரியில்லையா? குரலே ஒரு மாதிரி இருக்கு? சித்தப்பாவுக்கு ஒன்னுமில்லையே?” என குரல் வேறுபாட்டைக் கொண்டே நலம் விசாரிக்க, மஞ்சுளாவிற்கு கண்கள் குளம் கட்டியது. தொண்டையைச் செறுமிக் கொண்டவர்,

“இல்லப்பா… நாங்க நல்லா இருக்கோம். அம்மா எப்படி இருக்கு?” என்றவர் மகனின் முகம் பார்த்தார். அவனும் அம்மாவைத்தான் கவனித்துக் கொண்டிருந்தான். 

“அதுக்கு தான் சித்தி ஃபோன் பண்ணினேன். ரெண்டு நாளா ரொம்ப சிரமப்படுது. ஒரு தடவ அவனக் கூட்டியாந்து கண்ணுல காமிங்க சித்தி. போற உசுரு நிம்மதியாப் போகும்.” எதிர் முனையில் குரல் இறைஞ்சியது. கேட்டவனுக்கும் குரல் கரகரத்தது. பேசமுடியாமல் திணற, சட்டென பெண் குரல் கேட்டது.‌ கைபேசி கைமாறியிருந்தது.

“சித்தி… கௌரி பேசுறேன் சித்தி.” என்றது எதிர்முனை. 

“……..”

“சித்தி கேக்குதா?”

“ம்ம்ம்.” கொட்ட மட்டுமே முடிந்தது மஞ்சுளாவிற்கு. தொண்டையில் அழுத்தத்தோடு வலி. 

“நீங்க எங்களுக்கு எவ்வளவோ பண்ணியிருக்கீங்க. கடைசியா இந்த உதவி மட்டும் பண்ணுங்க சித்தி. ஒரு தடவை மட்டும் தம்பி அம்மாவ வந்து பாக்கட்டும் சித்தி. தொண்டைக்கும் நெஞ்சுக்குமா ரொம்ப அவஸ்த்தைப் படுது. எங்களால கண்கொண்டு பாக்க முடியல சித்தி.” என்றவள் குரல் உடைந்து கதறி அழ, கேட்டுக் கொண்டிருந்தவன் கண்களில் இருந்து சரசரவென கண்ணீர் பெருக்கெடுத்தது. அவனையும் அறியாமல், அவன் அறிந்து கொண்ட உண்மையில். அடுத்து வேறொரு குரல் கேட்டது. இது சற்று ஓங்கி ஒலித்தது.

“சித்தி, நான் சித்ரா பேசுறே. அவன் எப்பவும் உங்க மகன் தான். நாங்க அவன்கிட்ட சொந்தம் கொண்டாடல. இந்த ஒரு தடவ மட்டும் அவனோட வந்துட்டுப் போங்க சித்தி.” என அதிகாரமாக ஆரம்பித்து ஆதங்கமாக முடித்திருந்தாள் சின்னமகள் சித்ரா.

மஞ்சுளாதேவிக்கு நெஞ்சுக்குழி அடைத்து நிற்க, மகனையே பார்த்து இருந்தார். இதோ நீ கேட்ட கேள்விக்கான பதில் என்பதாய் இருந்தது அப்பார்வை.

குழப்ப முடிச்சுகள் கட்டவிழ, பொங்கும் கண்களோடு அம்மாவைப் பார்க்க, அந்தத் பார்வையின் தாக்கம் தாங்கமுடியாமல் மஞ்சுளாதேவி உடைந்துவிட்டார். ஏதோ மகன் கைவிட்டு போனதாக உணர்வு. அப்படியே தரையில் அமர்ந்துவிட,‌ வெறுமையாக அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 அவனது உள்ளம் எரிமலையாய் கொந்தளித்தது என வழக்கம்போல் சொல்லிவிடலாம். ஆனால் அவனது உணர்ச்சிகளை விளக்க புதியதோர் வார்த்தையை அகராதியில் உருவாக்கினால் தான் உண்டு. 

பெண்கள் மட்டுமே உணரும் பிரத்யேக பிரசவ வலிபோல, இன்று அவன் மட்டுமே அனுபவிக்கும் வலிக்கு வார்த்தைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இடியாய் இறங்கியது, ஈட்டியாய்க் குத்தியது, வாள்கொண்டு கீறியது, நெருப்பாய் தகித்தது இதெல்லாம் வழமையான வார்த்தைகள். அவனுக்குள் கொந்தளித்த உணர்வுகளுக்கு இவை எதுவுமே உவமையாக முடியாது. எளிதாகச் சொல்வதென்றால் அன்னையின் காலைக்கட்டிக்கொண்டு, அன்னாந்து முகம் பார்த்து தூக்கச் செல்லி ஏங்கும் சிறுபிள்ளையாய் இருந்தது அவனது பார்வை. 

அகிலாண்டம் கூட ஒருகணம் அமைதியாகி விட்டார். அடுத்து என்னவென்று யாருக்கும் எதுவும் புரியவில்லை. தேன்மொழி திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள். தேன்மொழிக்குமே புரிந்த உண்மைகள் பேரிடி தான். இதுவரை அண்ணன் என நினைத்த சொந்தம், சொந்த அண்ணன் இல்லையா எனத் தவிக்க, அண்ணன் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். 

ரகுராமன் தான் சூழ்நிலை உணர்ந்து செயல்பட்டார்.

“இப்ப என்னம்மா பண்ணலாம். ஒரு உசுரோட கடைசி ஆசை. அவங்களும் யாரோ எவரோ இல்ல. கூடப்பொறந்த அக்கா. உனக்காக பெத்த பிள்ளையவே தூக்கிக் கொடுத்தவுங்க. நீ சொல்றதுல தான் இருக்கு.” என கேட்க,

அதைக் கேட்ட அகிலாண்டம், “என்னங்க நீங்க, அவுங்க பக்கம் போய்ட்டா, அப்ப நம்ம பொண்ணோட வாழ்க்கை. சட்டப்படி மகன்னு தானே தத்து எடுத்துருக்கு. நம்ம பொண்ண கட்டணும்னா எழுதி வாங்கியிருக்கு. வாக்கு கொடுத்தது தானே.” என்றார் அந்த நிலையிலும் தன்னிலை மாறாமல்.

“அதெல்லாம் எழுதி வாங்க முடியாது அகிலா. உனக்குப் பிரச்சினை சொத்து தானே தவிர, சொந்தம் இல்ல. அதனால அவங்க கொடுத்த வாக்க மீற மாட்டாங்க. கெட்டாலும் மேன்மக்கள் அவங்க. பிள்ளயக் கொடுத்துட்டு வேற கிரகத்துலயா இருந்தாங்க. இங்கன இருக்குற ஐராவதநல்லூர்ல தானே இருந்தாங்க. ஒரு நாளாவது வந்துருப்பாங்களா?” என மனவியை அடக்கியவர், 

மஞ்சுளாவைப் பார்க்க, இது உனக்குமான பதில் தான், உன்னிடமிருந்து பிள்ளையை யாரும் பிரிக்கமாட்டார்கள் என்றது அவரது பார்வை. முந்தானை கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தவர், மகளிடம்…

“அப்பாவுக்கு சாப்பாடும், மருந்தும் கொடுத்து படுக்க வை தேனு. நாங்க போய்ட்டு வந்துர்றோம்.” என்றவர் வார்த்தைகளில் உணர்ச்சி துடைக்கப்பட்டு இருந்தது.

“ம்ம்கூம், நானும் வர்றேன். இங்க நடக்குறதெல்லாம் பாத்தா எனக்குப் பயமாயிருக்கு, நீங்க வேணா போங்க. ஆனா அண்ணன விட்டுட்டுப் போங்க.” என சிறுபிள்ளையாக அழ ஆரம்பிக்க, ஆயாசமாக வந்தது அண்ணன்காரனுக்கு. 

ஒரே நாளில் தன் வாழ்க்கையே தடம்புரட்டு விட்டதாக தோன்றியது ருத்ரனுக்கு. எல்லா நாளும் போல் இந்த நாளும் இனிய நாளாகத்தானே விடிந்தது அவனுக்கும்.  

கார் ஐராவதனல்லூர் நோக்கி முன்னோக்கிச் செல்ல, மஞ்சுளாதேவியின் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றது.

பூவாகி காயாகி

கனிந்த மரம் ஒன்று

பூவாமல் காய்க்காமல்

கிடந்த மரம் ஒன்று

கிடந்த மரம் ஒன்று

காய்க்காத மரத்தடியில்

தேனாறு பாயுதடா.

கனிந்துவிட்ட சின்ன மரம்

கண்ணீரில் வாடுதடா

கண்ணீரில் வாடுதடா

3 thoughts on “தெம்மாங்கு பூந்தமிழே 17”

  1. [6907]paradewa89: Login Resmi Link Alternatif Slot Gacor Terpercaya,paradewa89 menyediakan akses link alternatif terbaru untuk judi casino online terpercaya. Nikmati kemudahan cara deposit dana dan mainkan slot gacor sekarang juga. visit: paradewa89

  2. [7706]azura77 | Login Resmi Link Alternatif Slot Gacor Deposit Pulsa,azura77 menyediakan akses link alternatif terbaru untuk daftar casino deposit pulsa dan panduan cara main baccarat online dengan mudah. Gabung sekarang juga. visit: azura77

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top