மதன் கைலாஷ் ஹாலில் அமர்ந்திருந்த வாசுகியைப் பார்த்துக் கொண்டே தான் சென்றான். அவன் வந்தது தெரிந்தும், அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. இவன்தான் தயங்கி ஒரு கணம் நின்றான். வாசுகி அப்பொழுதும் நிமிரவில்லை. அவர் கண்டுகொள்ளாமல் இருக்க,
“நீ வா கண்ணு!” கைபிடித்து இழுத்தார் சீதாலட்சுமி.
அதன் பிறகு அவனும் வாசுகியை சட்டை செய்யவில்லை. சீதாலட்சுமியோடு அப்பத்தா அறைக்குள் சென்றுவிட்டான்.
அவர்கள் பின்னாலே வந்த பவித்ராதான், “பெரியம்மா… கிளம்புங்க நேரமாச்சு!” என்றாள்.
“நான் வரல!” முகத்தைத் திருப்பினார் வாசுகி.
ஜெகனும், பவித்ராவும் உள்ளே வர, ஹாலில் கன்னத்திற்கு கையை முட்டுக் கொடுத்து, அழுது வீங்கிய முகத்தோடு அமர்ந்திருந்தார் வாசுகி. ஆசை ஆசையாக ஊரைக்கூட்டி இத்தனை செலவு செய்து, ஆடம்பரமாக ஏற்பாடு செய்த திருமணம் யாருக்கோவா என்ற எண்ணம் அவரை வாட்டி வதைத்தது.
இதற்கு தான் எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கணும் என்பது போல. மகனின் திருமணத்தை நினைத்து எத்தனை ஆசை, கனவு, கற்பனை. எல்லாம் வீண் என ஆயிற்று மகன் செய்த காரியத்தால்.
அதைவிட மேலும் அவரை வெறுப்பேற்றியது இது அத்தனையும் இவனுக்கா என்ற எண்ணம். நினைக்க நினைக்க திகுதிகுவென எரிந்தது. ஆனால் என்ன செய்யமுடியும்? எல்லாம் அவர் கைமீறிப் போய்விட்டது.
மகனின் காலில் விழாத குறையாக கெஞ்சிப் பார்த்தாயிற்று. என் விருப்பம்தான் முக்கியம் என சொல்லிவிட்டானே. அதையும் நேரில்வந்து கூட சொல்லவில்லை. எல்லாமே காணொளிக்காட்சி மூலமே. பெற்றவள் கண்ணீர் கூட கரைக்கவில்லை அவனை.
“அவ வருவா! நீங்க போயி கெளம்புங்கம்மா! இன்னும் குழந்தை தூங்குறாளா?” என்றவாரே பக்கத்து அறையில் இருந்து வெளியே வந்தார் தனசேகரன். அவர் தயாராகி வெளிவந்ததைப் பார்த்தவர்க்கு இன்னும் கொஞ்சம் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது.
“ஆமா… பெரியப்பா. எல்லாரும் கிளம்பிட்டு அவள எழுப்பலாம்னு விட்டுட்டேன். அவ எந்திரிச்சா என்னால ஒரு வேலையும் செய்யமுடியாது.”
“சரிம்மா… நீங்க கெளம்புங்க!” பெரியப்பா சொன்ன பிறகு வாசுகியை அவள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்கள் கிளம்ப சென்றுவிட்டனர்.
“உன் மகன் பண்ணது பத்தாதா. நீயும் மானத்தை வாங்கப்போறீயா?” என்றார் அதட்டலாக.
“யாரும் பண்ணாததையா எம்மகன் பண்ணிட்டான். என்னமோ உங்க குடும்பத்துக்கு இது புதுசுங்கற மாதிரியே பேசுறீங்க. இப்ப மட்டும் எம்மகனாம்ல!” முகத்தை தூக்கியவருடன் வாதம் செய்ய இது சரியான சமயமில்லை எனத் தெரிந்தது தனசேகருக்கு.
“பெத்தவங்க இல்லாதவனுக்கு நாம தானே முன்னுக்கு நிக்கணும்.”
“நான் ஏன் நிக்கணும். நீங்கதான் ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்னு கெளம்பிட்டீங்க?”
“ஊர்ல கல்யாணமா? வாசுகி… இது நம்ம வீட்டுக் கல்யாணம்” அழுத்திச் சொன்னவர்,
“மதன் யாரு? அவன் நம்ம வீட்டுப் பிள்ளையில்லையா?” எனக்கேட்க,
“உங்க வீட்டுப் பிள்ளை” என திருத்தினார்.
“அவன் எங்க வீட்டுப் பிள்ளையாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா, எம்பிள்ளைனு தலையில தூக்கி வச்சு கொண்டாடின உம்பிள்ளை என்ன பண்ணினான். அவன் எது பண்ணினாலும் நீதானே முட்டுக் கொடுப்ப. அதான் நல்லா மூஞ்சியில கரியப் பூசிட்டான். இன்னும் பொண்ணு வீட்டுக்காரவங்களுக்கு விஷயம் தெரியாது. இனிமே தான் சொல்லி சமாளிக்கணும். எந்திரிச்சு கிளம்பு!”
“இவனக் கூட்டிப் போயி, இவன் தான் மாப்பிள்ளைனு சொல்லி முகரடி படப்போறீங்க. அவங்க ஒன்னும் இவனுக்கு பொண்ணுத்தர சம்மதிக்கல. எம்மகனுக்கு தான் சம்மதிச்சாங்க.”
“அந்தப்பிள்ளைக்கி நல்ல வாழ்க்கை அமையணும்னு இருந்திருக்கு. அதான் உம்மகன் வரல. எந்திரிச்சுப் போயி ரெடியாகுடீ.”
அதிகாரமாக அதட்டிச் சொல்ல, மறுக்க மாட்டாமல் வேண்டா வெறுப்பாக, எழுந்து நின்றவர் தடுமாற, வேகமாக கைபிடிக்க வந்தவரின் கையை, கோபமாக உதறிவிட்டு, மெதுவாக எட்டு வைத்து நடந்து சென்ற மனைவியை வருத்தத்தோடு பார்த்து நின்றார் தனசேகரன்.
குளிர் காலம் வந்தாலே வாசுகிக்கு கைகால் மூட்டுகளில் வீக்கம் வந்து வலி வாட்டி வளவெடுக்கும். நடக்கவே சிரமப்படுவார். அதற்காக ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது. மூட்டுகளுக்கு அசைவு கொடுத்துக் கொண்டே இருக்கவும் வேண்டும்.
பெற்ற இரண்டு மகன்களில் ஒன்றை அல்பாயுசில் பறிகொடுத்துவிட்டு, ஆசை ஆசையாக வளர்த்த மகனும் நெஞ்சில் நெருப்பள்ளி போட்டுவிட, அது வாசுகியின் உடல் நிலையை மேலும் பாதித்தது. காலையிலிருந்து சாப்பிடக்கூட இல்லாமல் தட்டுத்தடுமாறி சென்றவரையே வேதனை சுமந்து பார்த்தார் தனசேகர்.
“நான் சாதாரண ட்ரெஸ்லயே வர்றேன். எனக்கு இந்த வேட்டி சட்டை வேண்டாம்!” அறைக்குள் அவன் அப்பத்தாவோடு மல்லுக்கட்டுவது வெளியே கேட்டது.
“அப்பு… இது புதுசுதான சாமி!” என்றார் பெரியநாயகியும் இறைஞ்சுதலாக.
“ஆனா… அவனுக்குன்னு எடுத்தது தானே. எனக்கு வேண்டாம். பழசுனாலும் என்னோட பேன்ட் சட்டையைக் கொடு அப்பத்தா!” என்றான் கண்டிப்பான குரலில்.
“விடுங்கத்தை… அவனுக்குப் புடிச்சத போட்டுக்கட்டும்.” சீதாலட்சுமியும் அவனைத் தாங்கிப்பேச,
‘இவளுக்கெல்லாம் கொஞ்சங்கூட சூடு சொரணையே இல்ல’ என்று வாய் விட்டே தங்கையை அர்ச்சித்த வாசுகியின் கண்கள் வெறுப்பைக் கக்கின.
*****
“நான் இப்பவே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன். பித்தலாட்டமா பண்றீங்க? கடைசி நேரத்துல வந்து மாப்பிள்ளை வரல. இவன் தான் மாப்பிள்ளைனு யாரையோ சொல்றீங்க. இதென்ன சின்னப்பிள்ளைக விளையாட்டா? நல்ல குடும்பம்னு நெனச்சதுக்கு நல்லா சபையில வச்சு மூக்கறுத்துட்டீங்களே?”
பூட்டிய அறைக்குள் பெண் வீட்டார் சார்பில் பெரியமனிதராக இருந்தவர்தான் வானத்திற்கும், பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார். அவர் தான் நல்ல சம்பந்தம் என தனசேகரன் குடும்பத்தை வாசுதேவன் குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தியவர்.
தனசேகரன் பதில் சொல்ல முடியாமல், வாயடைத்து நிற்க, பெரியநாயகி தான் பெரிய மனுஷியாக பேச்சை முன்னெடுத்தார்.
ஒன்பது மணி முகூர்த்தம் என்பதால் இன்னும் அவ்வளவாக கூட்டம் வந்து சேரவில்லை. வரவேற்பும் கூட பெண் வீட்டார் சார்பில் தனது ஊரில் இரண்டு நாள் கழித்து வைத்துக் கொள்வதாக வாசுதேவன் முடிவு செய்திருந்ததால் அனைவரும் விடிந்த பிறகே மண்டபம் வரத்தொடங்கினர்.
இரு வீட்டார் பக்கமும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இதுவரை அங்கிருந்தனர். பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டாரைச் சேர்ந்தவர்களே.
இரண்டு குடும்பம் மட்டும் அறைக்குள் விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர்.
மண்டபத்திற்கு வந்தவர்களை கவனிக்க ஜெகனின் பெற்றோர் இடும்பனும், பரிமளாவும் இரவே மண்டபம் வந்துவிட்டனர். ஏன் இன்னும் உன் அண்ணன் குடும்பம் மண்டபம் வரவில்லை என கேள்வி கேட்பவர்களுக்கும் ஏதோ ஒரு பதிலை அவர்களே சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தனர்.
பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரைக் காணவில்லை என அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் கேட்கத்தான் செய்தனர்.
மண்டபம் வரும் வரைக்குமே மதன்கைலாஷ் தான் மாப்பிள்ளை என்பது யாருக்கும் தெரியாது. தெரியப்படுத்தவும் இல்லை.
சிவகைலாசம், பெரியநாயகி தம்பதிகளுக்கு தனசேகரன், குணசேகரன் மற்றும் பரிமளம் என இரண்டு மகன்களும் ஒரு மகளும். ஈரோட்டைச் சேர்ந்த பவானியில் பெரும் விவசாயப் பண்ணையம் சிவகைலாசத்துடையது. அதே ஈரோட்டில் போர்வை, ஜமுக்காளம், கொசுவலை என கைத்தறி நெசவாளர்களிடம் நேரிடையாக கொள்முதல் செய்து, ஏற்றுமதி செய்யும் வணிக குடும்பம் பெரியநாயகியின் பிறந்தவீடு.
பெரிய மகன் தனசேகரனுக்குத் தன் தம்பி மகள் வாசுகியை திருமணம் செய்து கொண்டு, மகள் பரிமளாவை நாத்தனார் மகன் இடும்பனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அதாவது தன் பிறந்த வீட்டிலிருந்து பெண்ணெடுத்துக் கொண்டு, கணவனின் (சிவகைலாசத்தின்) தங்கை மகனுக்கு பெண்ணைக் கொடுத்திருக்கிறார்.
தனசேகரன், குணசேகரன் இருவருக்கும் ஆண் வாரிசில்லாத தம்பி மகள்களான வாசுகியையும், சீதாலட்சுமியையும் பெண் எடுப்பதாகத் தான் பேச்சு. சிறுவயதிலேயே பேசி முடித்தது. தனசேகரனுக்கு வாசுகி, குணசேகரனுக்கு சீதாலட்சுமி என்பது ஊரறிய பேசி வைக்கப்பட்ட ஒன்று.
அப்பொழுதே அதற்கும் வம்பு வந்தது. இரண்டு பெண்களையும் நீங்களே எடுத்தால் எப்படியென வாசுகி, சீதாலட்சுமியின் தாய்வழி மாமன்கள் மல்லுக்கு நின்றனர். ஆனால் பெண்கள் இருவருக்குமே அத்தை மகன்கள் மீதுதான் நாட்டம். மாமன்வழி (தாய்மாமன் மகன்கள்) மாப்பிள்ளைகள் மீது விருப்பமில்லை.
அவர்களைப் பெற்றவரும் “என் அக்கா மகன்களுக்கு தான் பெண்கள் இருவரும். ஒரே வீட்டில் கொடுத்தால் தான் அண்ணன், தம்பி இல்லாத பிள்ளைகள் ஒருத்தொருக்கொருத்தர் ஒத்தாசையாக இருந்து கொள்வார்கள்” என்பது பெற்றவரின் கணிப்பு.
சொத்தும், தொழிலும் பிரியாமல் அண்ணன், தம்பி இருவரும் ஒற்றுமையாகப் பார்த்துக் கொள்வார்கள் என்பதும் அதற்கு அதிமுக்கிய காரணம். ஆனால் விதி யாரை விட்டது. இறுதியில் தாய்மாமன் வழியில் தான் சீதாலட்சுமியை வலிய கொடுக்க வேண்டிய நிலமை வந்தது.
அந்தக் கதைக்கு அப்புறம் வருவோம் மக்களே! இப்போதைக்கு கொஞ்சம் அறிமுகப் படலம் மட்டுமே!
“என்னடீ… உம்மகன் எப்பதான் வருவானாம்?” தனசேகரன் வாசுகியை ஒரு வாரமாகக் கேட்ட கேள்வியை, விடிந்ததில் இருந்தும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கேள்வியை கோபமாகவே கேட்டார். கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிடுவேன் என்ற மகன், ஒரு வாரம் என்றது மூன்று நாள், இரண்டு நாள் என்றாகி இதோ மறு நாள் கல்யாணம் என்ற நிலையில் இன்னும் வந்து சேரவில்லை.
பெரிய பேரன் இன்னும் வந்து சேராததில், பெரியநாயகிக்கும் சற்று பதட்டமாகத்தான் இருந்தது. ஏற்கனவே இதே மாதிரி ஒரு சூழ்நிலையை அனுபவித்த அனுபவம் அவருக்கு உள்ளுக்குள் சஞ்சலத்தை உண்டு பண்ணியது. படபடவென உள்ளம் அடித்துக் கொள்ள, வேகமாக பூஜையறை சென்று பன்னாரியம்மனுக்கு காணிக்கை முடிந்து வைத்து வந்தார்.
தற்சமயம் தனசேகரன் தன் குடும்பத்தோடு வசிப்பது ஈரோட்டில் இருக்கும் வாசுகியின் பிறந்த வீடு. பெரியநாயகிக்கும் அதுதானே பிறந்தவீடு. ஆண்வாரிசில்லாத சொத்திற்கு வாசுகி, சீதாலட்சுமி மட்டுமே அதற்கு சொந்தம் என்பதால் மாமாவின் மறைவிற்குப் பிறகு தொழிலை கவனிக்கத் தோதுவாக, தனசேகரன் குடும்பம் பவானியிலிருந்து ஈரோட்டிற்கு குடிபெயர்ந்தனர். கணவனை இழந்த சீதாலட்சுமியும் அதே வீட்டில்தான் இருந்தார்.
தனசேகரின் தங்கை பரிமளாவின் மகன் தான் ஜெகன். அதாவது பெரியநாயகியின் மகள்வழிப் பேரன். அவனுக்குத்தான் சீதாலட்சுமியின் ஒரேமகள் பவித்ராவை பெண்ணெடுத்திருக்கிறார்.
ஜெகன், பவித்ராவிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை. பெயர் சஷ்டிகா. சீதாலட்சுமி சார்பாக தொழிலை, பெரிய மாமனோடு சேர்ந்து, மருமகனான ஜெகன்தான் கவனித்துக் கொள்கிறான்.
தனசேகரன், வாசுகி தம்பதிகளின் ஒரே மகன் கிரிதரனுக்குதான் இந்த ஆடம்பரத் திருமண ஏற்பாடு. பெங்களூரில் பிரபல ஐ.டி நிறுவனத்தில் ஆறு லகர சம்பளத்தில் வேலை பார்ப்பவன்.
அப்ப வருவான், இப்ப வருவான் என எதிர்பார்த்து காத்திருக்க, வாட்சப்பில் வந்தது என்னவோ அவனது அவசரத் திருமண செய்தியும், ஃபேட்டோவும் தான்.
அதுவும் நேற்று மதியம் வரை அனுப்பாமல் இறுதி நேரத்தில் அனுப்பி இருந்தான். இடி விழுந்தது போல் குடும்பமே கதி கலங்கிப் போயிற்று. இன்று மாலை மாப்பிள்ளையோடு மண்டபத்திற்கு கிளம்பியாக வேண்டும். பெண் வீட்டார் திருமணம். இவர்கள் வசதிக்காக ஈரோட்டிலேயே மண்டபம் ஏற்பாடு செய்திருந்தனர்.
அவன் சம்மதத்தோடுதான் அத்தனை ஏற்பாடும் நடந்தது. பெண் பார்க்கப் பேவதாகச் சொன்ன பொழுதே, இப்ப தானே ஆரம்பிக்கிறார்கள். தன் அம்மா சல்லடை போட்டு அலசி தனக்கு பெண் தேர்ந்தெடுப்பதற்கு எப்படியும் வருஷக்கணக்காகும் என நினைத்திருக்க, சட்டென பெண் அமைந்து நிச்சயம், அடுத்து ஒரு மாதத்தில் திருமணம் என்று வந்து நின்றது.
“அதுக்குள்ள எப்படீம்மா?” என்றான் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு கைபேசியில்.
“நேரமும் காலமும் கூடி வந்தா எல்லாம் உடனே அமையும்டா. உனக்கு மாலை பூ பூத்திருச்சு” என்றார் சந்தோஷமும், பூரிப்புமாக. ஆனால் பூத்த பூ யாருக்கு என்பதை நாம் எப்படி முடிவு பண்ணமுடியும்.
எதுனாலும் நீங்க பார்த்து செய்தால் சரியென பெண்ணைப் பார்க்க கூட வரவில்லை. பெண்ணின் ஃபேட்டோ அனுப்பினால் போதும் என்றுவிட்டான்.
தனசேகரன், மகனை வந்தே ஆகவேண்டும் என கண்டிப்போடு கூற, எம்மகன் பெற்றவர்கள் பேச்சை தட்டமாட்டான் என அப்பொழுதும் மகன் முடிவிற்கே முட்டுக் கொடுத்தார் வாசுகி.
அப்பொழுது மட்டுமில்லை. அவன் வேலைக்கு பெங்களூர் செல்வதிலேயே தனசேகரனுக்கு விருப்பமில்லை. பக்கத்தில் கோவையில் பார்க்கட்டும். சிறிது நாள் அவன் ஆசைக்கு வேலை பார்த்தபிறகு தொழிலையும் கவனிக்க வேண்டும் என்றார்.
கிரிதரன் ஒத்துக் கொள்ளவில்லை. மாதம் பிறந்தால் சம்பளமென நிம்மதியாக இருக்க வேண்டும் என கூறிவிட்டான். ஒற்றைக்காலில் நின்று பெங்களூர் சென்றான். படிப்பு, வேலை என எல்லாம் கிரிதரன் விருப்பம் தான்.
கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமாக ஒரு மாதம் வெளிநாடு செல்ல வேண்டும் என சொல்லிவிட, பெரியவர்களாகக் கூடித்தான் நிச்சயமும் நடந்தது. நிச்சயத்திற்கு வழக்கமாக மாப்பிள்ளை வருவதில்லை என்பதால் யாரும் அதை பெரிது படுத்தவும் இல்லை.
பத்திரிக்கை அடித்து ஊர் முழுக்க கொடுக்கவும் ஆரம்பித்தாயிற்று. உனக்கு அழைப்பிதழ் வேண்டாமா என்றதற்கும், திருமணம் முடிந்து பெங்களூர் வந்தபிறகு நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துக் கொள்வதாக கூறிவிட்டான்.
யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஒரு வாரம் முன்னமே வந்துவிடுவேன் என்றவன் நேற்று வரை வரவில்லை. வந்தது கல்யாண ஃபோட்டோ மட்டும் தான்.
அதற்குள் மாலையில் நேரம் சரியில்லையென மதியமே மணப்பெண் வீட்டார், மண்டபம் வந்து சேர்ந்து விட்டனர்.
இதை எப்படி பெண் வீட்டாரிடம் தெரிவிப்பது என ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றனர். வாசுகி அழுதே ஓய்ந்து போனார்.
சொந்தபந்தங்கள் முன் மீண்டும் ஒரு தலை குனிவு. அதைவிட ஒரு பெண்ணின் வாழ்க்கை. இன்னும் எந்தக் காலத்துல இருக்கீங்க. இந்தக் காலத்துல இதெல்லாம் சாதாரணமப்பா என்றாலும், சகஜமாக கடந்து செல்ல முடியாதே. இரு வீட்டாரும் கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டும்.
அடுத்து என்ன செய்வதென்ற சிந்தனையற்று குடும்பமே, குழப்பத்தில் இருக்க,
“நல்ல வேளை ஜெகன். நான் கொண்டு வந்த சம்பந்தம் எதுவும் உங்க பெரிய அத்தைக்கிப் புடிக்காமப் போச்சு. இல்லைனா உங்க அப்பா வீட்டாளுக முன்னாடி நாம தான் தல குனிஞ்சு நிக்கோணும்.” இது பரிமளாவின் அங்கலாய்ப்பு.
பெரிய அண்ணன் மகனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்க, தனக்குத் தெரிந்த வகையில் பரிமளாவும் பெண் சாதகம் கொண்டு வந்து கொடுத்தார். எதுவும் என் மகன் தகுதிக்கு சரிப்படாது என வாசுகி தட்டிக் கழித்துவிட்டார். அப்படியென்ன என் அண்ணன் மகனுக்கு சாதாரண சம்பந்தமா கொண்டு வந்துவிடுவேன் என்ற ஆதங்கம் பரிமளாவிற்கு உள்ளுக்குள்.
“ஏம்மா நீங்க வேற. இப்ப இங்க என்ன நடக்குது? நீங்க கொண்டு வந்த பொண்ணுக்கு சரிக்கொடுங்கலைங்கறது தான் இப்ப உங்களுக்கு பெருசாப்போச்சா?” சப்தமில்லாமல் ஜெகன் அம்மாவை கடிந்து கொள்ள,
“ஆமாடா… அன்னைக்கி அக்கா, அக்கா வீட்டுக்காரர்னு கூடப் பாக்காம எங்கம்மாவையும், அப்பாவையும் எங்க மாமன் என்ன பேச்சு பேசுனாங்க தெரியுமா? உங்க பெரிய அத்தையும் சேந்துக்கிட்டுதான். மாமனார், மாமியார்னு கூட நெனச்சுப் பாக்கல. இப்ப இவங்க மகன் மட்டும் என்ன பண்ணிருக்கான்?”
“ஏம்மா… அதைச் சொல்லிக்காட்டுற நேரமா இது? உனக்கும் மாமன் பொண்ணுங்கதானம்மா?”
“ஆனா… அன்னைக்கி எங்கப்பா வயசுக்கு கூட மரியாதை கொடுக்கலையேடா!”
“அப்ப, உங்க சின்ன அண்ணன் பண்ணது மட்டும் சரியா? அதனால சீதா அத்தையோட வாழ்க்கை தானே போச்சு. அது உன் கண்ணுக்குத் தெரியல! அவங்களும் உனக்கு மாமன் மக தானம்மா”
“என்னடா இப்படிப் பேசுற? அதனால தானே அவ பொண்ணையே உனக்கு எடுத்து, உன்னையும் வீட்டோட மாப்பிள்ளையா தாரை வார்த்திருக்கேன். இதுக்கே ஊர் சனமெல்லாம் அண்ணன மாதிரியே மகனையும் அந்த வீட்டுக்கே எழுதிக் கொடுத்திட்டான்னு பேசுது!”
“ம்மா… நானொன்னும் பவித்ராவுக்கு வாழ்க்கை கொடுக்கல. இது அவ காதுல விழுந்தா என்னாகும்னு நெனச்சுப் பாத்தீங்களா? அவளப் பிடிச்சு கல்யாணம் பண்ணிருக்கேன்” என்றவன் எங்கே அம்மாவின் பேச்சு பவித்ரா காதில் விழுந்திருக்குமோ என அவசரமாகக் திரும்பிப் பார்த்தான்.
பவித்ரா அழுது கொண்டிருக்கும் தன் பெரியம்மாவை சாமாதானப்படுத்துவதில் மும்முரமாக இருந்தாள். வாசுகிக்கு பிபி மாத்திரை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா… அவங்களுக்கு மகனில்லாத குறைக்கு நான் தொழிலைப் பாக்குறேன். அவ்வளவுதான். இதுல என்ன உங்களுக்கு கௌரவக் குறைச்சல் வந்துருச்சு?” எங்கோ ஆரம்பித்த பேச்சு அம்மாவிற்கும் மகனுக்கும் இடையில் எதிலோ கொண்டு போய் விட்டது.
மாமன் மகள்கள் தான், எல்லாரும் ஒன்னுக்குள் ஒன்னாக வளர்ந்தவர்கள் தான். மகனுக்கு பெண்ணெடுத்திருக்கிறார் தான். ஆனால் வளர்ந்து தனக்கெனத் தனித்தனியாக குடும்பம், குழந்தைகள் என வந்தபிறகு கௌரவம் என்ற ஒன்று இடைபுகுந்து ஒரு ஒதுக்கம் வந்து விட்டது பெரியவர்களுக்குள்.
“முடிஞ்சதப் பேசாதீங்கம்மா. இப்ப ஆக வேண்டியதை மட்டும் பாருங்க.” அம்மாவை வாய்க்குள் அதட்டியவன் மாமன் முகம் பார்த்தான்.
தனசேகரன் பெண் வீட்டாரிடம் உண்மையைச் சொல்லிவிடலாம், அவர்கள் பார்த்து எந்த முடிவும் செய்து கொள்ளட்டும் என்றதற்கும் பெரியநாயகி தடைபோட்டார்.
“மண்டபம் வரைக்கும் பொண்ணு வந்துருச்சு சேகரா. இனிமே கல்யாணம் தடைபட்டுச்சுனா அந்தப் பொண்ணோட வாழ்க்கைய நெனச்சுப் பாத்தியா?”
“அதுக்கு இல்லாத மாப்பிள்ளைக்கு எங்கம்மா போறது?” தனசேகரன் ஆதங்கப்பட,
“இன்னும் யாரும் மாப்பிள்ளைய நேர்ல பாக்கல தானே?” என்றார் பெரியநாயகி.
“ஃபோட்டோ அனுப்பி பொண்ணு வீட்ல எல்லாரும் பாத்திருக்காங்கம்மா!”
“ஆமாப்பு… ஆனா சபையில வச்சு யாரும் பாக்கலயில்ல?” பெரியநாயகி கேட்க,
“அதுக்கு?” என்றார் யோசனையாக.
*****
வேகமாக வெளியே ஓடி வந்தவள் பார்வை மண்டபத்தை அலசியது. ஆங்காங்கே இருக்கைகள் நிரம்ப ஆரம்பித்திருந்து. மேடையில் ஐயர் ஹோமம் வளர்க்க ஏற்பாட்டை துவங்கிவிட்டார்.
“அக்கா அவர் தான் மாப்பிள்ளையாம்” என அக்காவிடம் ரகசியமாக சொன்னாள் ராகிணி.
அங்கே யாருக்கு வந்த விருந்தோவென, எதையும் கண்டு கொள்ளாமல், வரிசையாகப் போடப்பட்டிருந்த சேர் ஒன்றில் முதுகு காட்டி உட்கார்ந்து ஃபோன் பார்த்துக் கொண்டிருந்தான். சாதாரண பேன்ட், சர்ட்டில் தான் இருந்தான். பட்டு வேட்டி, சட்டை கட்டவில்லை.
“தாலி கட்டுற வரைக்கும் நாம மாப்பிள்ள முகத்தைப் பாக்கப் போறதில்ல” என அலுத்துக் கொண்டாள் ராகினி. மாப்பிள்ளையைத்தான் இவர்கள் பார்க்கவே இல்லையே. ஃபோட்டோ கூட காண்பிக்கப்படவில்லை.
“இந்தாடா பங்கு! தூங்குனவன எழுப்பி கடையத் திறக்க வச்சு வாங்கிட்டு வர்றோமாக்கும். போய் மாத்திட்டு வாடா!” என்று புது பட்டு வேட்டி சட்டை அடங்கிய பையை அவனிடம் நீட்ட,
“மொதல்ல அவங்க பஞ்சாயத்து முடிக்கட்டும்டா!” என்றான் ஃபோனை விட்டு கண்ணெடுக்காமலே.
“அதெல்லாம் அப்பத்தாவும், ஜெகன் மாமாவும் பாத்துக்குவாங்கடா. எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. அப்பத்தா எப்படி சென்டிமென்டா பேச்சுல அடிக்குறாங்க பாரு. நீ போய் மாத்துடா” என கைபிடித்து தூக்க முயல,
“விடுங்கடா நானே போறேன். மீதிக் காசெங்கடா?”
“ஏன்டா இப்பக்கூட காசுதான் முக்கியமா?” என்றவன் பாக்கெட்டிலிருந்து மீதிக்காசை எடுத்துக் கொடுக்க, வாங்கியவன் பைக்குள் இருந்த பில்லையும், மீதிக் காசையும் ஒரு முறைக்கு இருமுறை எண்ணி சரிபார்த்தான்.
“மெஷின் வேணுமாடா எண்ணிப்பார்க்க?” நரேன் கேலியாக கேட்க,
“ஒரு ரூபா கொறையுது!” என்றான்.
“இந்தாடாப்பா…” என்றவன் சலித்துக்கொண்டே பாக்கெட்டிலிருந்து சாக்லேட்டை எடுத்தவன்,
“இந்தா… ஒரு ரூபா இல்லைனு சாக்லேட் கொடுத்தான்!” என நீட்டினான்.
“எனக்கு ஒரு ரூபா தான் வேணும். நீ ஏமாந்தா நானும் ஏமாற முடியுமா?”
“சில்லறை இல்லடா!” என அலுத்துக் கொண்டான்.
“அதுக்கு என்னைய என்ன பண்ணச் சொன்ன? வியாபாரம் பண்றவன் சில்லரை ரெடி பண்ணி வைக்கணும். நைன் ஹன்ரட் நைட்டி நைன் ஒன்லின்னு பில்லு போடும் போதே ஒத்த ரூவா மீதி கொடுக்கணும்னு தெரியுமா தெரியாதா? அவன் டாக்ஸ் மிச்சம் பண்றதுக்காக நான் ஒரு ரூபா நஷ்ட்டமாக முடியுமா?”
“டேய்… யப்பா… நல்லா விடியட்டும்டா… யாருகிட்டயாவது பிச்சை எடுத்தாவது உன்னோட ஒத்த ரூபாய வாங்கித் தர்றோம். இப்ப எந்திரிச்சுப் போடா சாமி!” அழாத குறையாக அவனை அஜய் அனுப்பி வைக்க,
“கஞ்சத்தனம் தெரியாது… கஞ்சாவே கிடையாது“ என மதனின் கைபேசியில் ரிங்டோன் ஒலிக்க…
“மொதல்ல இந்த ரிங்டோனா மாத்துடா” என்றான் வெறுப்பின் உச்சத்தில் நரேன். அது நண்பர்கள் அழைப்பிற்கென்று வைத்துள்ள அழைப்போசை. ஒரு ரூபாய் கூட விடாமல் நண்பர்களிடம் கணக்கு கேட்பவனின் ரிங்டோன் இதுவாக இருந்தால் கோபம் வரத்தானே செய்யும்.
ராகினி, “என்னக்கா… வடிகட்டின கஞ்சன் கேள்விப்பட்டிருக்கேன். இப்பதான் நேர்லயே பாக்குறேன்க்கா!” என்றாள் கண்கள் விரிய.
வாங்கிய மீதிக் காசை பையில் போட்டுக்கொண்டே திரும்பினான்.
அவனைப் பார்த்தவள் கண்கள் அதிர்ந்து விழிக்க, அவனும் எதேச்சையாக மேலே பார்த்தான். ஆணி அடித்தாற் போல் சட்டென அசையாமல் அப்படியே நின்றுவிட்டான்.
பட்டுச்சேலையில் இன்னும் முழு அலங்காரம் முடிக்காமல், முழுதாக வர்ணம் பூசப்படாத கோயில் சிற்பம் போல் நின்று கொண்டிருந்தாள் மாதங்கி.
“இவளா?” எனும் அதிர்ச்சி, ஆச்சர்யம், ஆராய்ச்சி இவற்றோடு சற்றே சுவாரஸ்யம் கலந்து அவன் பார்க்க,
“நீயா?” கோபம், ஆத்திரம், வெறுப்பு இவற்றோடு சற்றே அலட்சியம் கலந்து மாதங்கி பார்த்து நின்றாள். இருவரும் ஒருவரையொருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்து நிற்க,
“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” என ஒருவன் சொல்ல,
“மாடத்திலே கன்னி மாடத்திலே” என ஒருவன் பாட்டுப்பாட,
மதன் மனதிற்குள் மட்டும், “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது” என்ற பாடல் மண்டைக்குள் ஓடியது.
“அப்ப… இவன தான் மாப்பிள்ளையா?” வெறுப்போடு கேட்டாள் மாதங்கி. அவனைப் பார்க்கப்பார்க்க மனம் திகுதிகுவென காந்தியது
“அப்ப இல்ல… ஆனா, இப்ப இவங்கதான் மாப்பிள்ளை.” பதில் கொடுத்தவள், அக்காவின் கேள்வியிலும், அவள் கேட்ட தோரணையிலும்,
“இவங்கள உனக்கு முன்னாடியே தெரியுமாக்கா?” ராகினி ஆச்சர்யமாகக் கேட்க,
“இப்படி அவசர அவசரமா, படிப்பக்கூட முடிக்கவிடாம கல்யாணம் பண்ணி என்னை வீட்டைவிட்டு துரத்துறதுக்கு, முழுமுதற் காரணகர்த்தா துரைதான்!” என்றாள் கண்களில் வெறுப்பை உமிழ்ந்து.
“யூ மீன்… தேட் மாலையிட்ட மன்னவன் இவனா! சாரி… இவங்களாக்கா?” என்றாள் கண்களில் மிதமிஞ்சிய ஆச்சர்யத்தோடு ராகினி.
அந்த நாளை நினைத்தவளுக்கு, அப்பா வாசுதேவனின் கோபத்தில் இன்றும் உள்ளுக்குள் குளிரெடுத்தது. அதனால் இவளுக்கு எத்தனை அவமானம், அசிங்கம், இவளது அம்மாவிற்கு எத்தனை அடி, உதை என நினைவிற்கு வர கண்கள் கலங்க அவனையே பார்த்து நின்றாள்.
அவள் கண்கள் கலங்குவது தெரிய, மாப்பிள்ளை மாறியதால் தான் இந்த கண்ணீர் போல என்று நினைத்தவனுக்கு உள்ளம் கசந்து வந்தது.
