Hi friends ❣️
இதோ கதையின் முதல் பதிவு மக்களே! தங்கள் அன்பான ஆதரவை எதிர்பார்த்து
என்றென்றும் அன்புடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
SM ஈஸ்வரி 🥰🥰🥰🥰🥰
Allways welcome dears 🍫🍫🍫🍫🍫
வேலுண்டு! வினையில்லை!
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ…
என்ற அழைப்போசையோடு கதறாத குறையாக அடித்து ஓய்ந்தது கேட்பாரற்று அலமாரியில் கிடந்த அலைபேசி.
அவனது அப்பத்தா அழைப்பிற்கென்றே பிரத்யேகமாக வைத்திருக்கும் அழைப்போசை. தான் எப்பொழுது அழைத்தாலும் தவறாமல் எடுக்கவேண்டும் என்பதற்காகவே, அந்த காலர் ட்யூனை அவன் கைபேசியில் செட் செய்ததே அவனது அப்பத்தா தான்.
“அப்பத்தான்னா நாலு பாட்டி வைத்தியம் சொல்லிட்டு, நாங்க எல்லாம் அந்தக்காலத்துலன்னு… பேரம்பேத்திககிட்ட வியாக்யானம் பேசிட்டு இருக்கணும். நீங்க என்னடான்னா ஆன்ட்ராய்டும் கையுமா ரீல்ஸ் பாத்திட்டு இருக்கீங்க.” எப்பொழுதும் இவன் அப்பத்தாவை செய்யும் நக்கல் பேச்சு இது. “நானெல்லாம் அந்தக் காலத்து பியூசியாக்கும். இந்தக் காலத்து டிகிரியெல்லாம் எங்கிட்டக்கூட நிக்க முடியாது!” ஜம்பமாக பதில் கொடுப்பார் பேரனுக்கு. அடுத்தடுத்து பேரனை அழைத்துப் பார்த்து ஓய்ந்து போனார்.
எதுக்கு பொண்டாட்டி
என்னச் சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கமாகிப் போச்சு கணக்கு
பள்ளிக்கூடம் போகையில
பள்ளபட்டி ஓடையில
கோக்குமாக்கு ஆகிப்போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு…
“இத குத்தமின்னு சொன்னா அவன் கிறுக்கு…”
பாடல் வரிகளோடு சேர்ந்து அவனும் பாட, இல்லையில்லை ஜனங்களே… போதையில் நிதானமில்லாமல் தொண்டை கிழியக் கத்த, அந்த அர்த்த ராத்திரியில், அந்தகார அமைதியில் வேப்பமரத்தில் அண்டியிருந்த பறவைகளெல்லாம், “குடிகாரப்பய நம்ம தூக்கத்தையும் சேத்துக் கெடுக்குறான்” என வசைமாரி பொழிந்துவிட்டு, படபடவென சிறகடித்து அடுத்த மரம் தேடிப் போயின. பறவைகளின் படபடப்பில் தூரத்தில் நாய், நரியெல்லாம் கூட தூக்கம் களைந்து ஊளையிட்டன.
“நம்மலச் சுத்திலும் வச்சுக்கிட்டு இவனுக்கு பாட்டப்பாத்தீங்களாடா? அவனச்சுத்தி வப்பாட்டியாம்ல… நம்மலப் பாத்தா இவனுக்கு எப்படித்தெரியுதுனு தெரியல? எனக் கேட்ட நால்வரும் அவனது ஜிகிரி தோஸ்த்துகள். அவனது அப்பத்தா பெரியநாயகி பாஷையில் செல்லமாகச் சொல்வதானால் தடித்தாண்டவராயன்கள்.
மூன்றாம் சாமம். அமாவாசை முடிந்த மூன்றாம் பிறை என்பதால், தென்னைமரங்களின் அடர்த்தியில் கும்மிருட்டு எனினும், தோப்பின் மத்தியில் இருந்த, அந்தப் பழைய மச்சு வீட்டின் மேலிருந்து எரிந்த மின்விளக்கின் ஒளி, களம்முழுதும் பரவியிருக்க, அதன் அடியில்தான் போர்வை விரித்து சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.
மொடாக்குடி குடித்த மற்ற நால்வரும் குத்துக்கல்லாட்டம் ஸ்டெடியாக இருக்க, மோந்து பார்த்தவன் குடை சாய்ந்து மல்லாந்து கிடந்தான்.
குன்றுபோல் குவிந்து கிடந்த உரித்த தேங்காய் மட்டைகள் மீது கால்கள் இரண்டையும் தூக்கி வைத்து, கைகளிரண்டும் பரப்பி, உடம்பு தலைகீழாக கட்டாந்தரையில் கிடந்தது. “வாரத்துல ஏழு நாளு… வந்தவளோ நாலுபேரு…” இன்னும் பாட்டு படாதபாடு பட்டது அவன் வாயில்.
கும்மிருட்டில் தென்னைமரங்களுக்கிடையில் ஒற்றைக் கீற்றாக வெளிச்சம் பாய்ந்துவர, அதைத் தொடர்ந்து புல்லட் சத்தமும் கேட்க, கையிலிருந்த சீட்டில் கவனம் வைத்திருந்தவர்கள் பார்வை அப்பக்கமாகத் திரும்பியது.
வண்டியை ஸ்டாண்டிட்டு நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கி வந்தான் ஜெகன். கோபமாகவும் என்று கூட சொல்லலாம், இறங்கி வரும் பொழுதே… மாமன் மகனின் கிடந்த கோலம் பார்த்தவனுக்கு மேலும் கோபம் கண்ணைக் கட்டியது.
“ஏலேய்… அவனத்தூக்குங்கடா. குடல் ஏறிக்கப்போகுது!” என நடையின் வேகத்தை அதிகப்படுத்த,
“பச்சப்புள்ள பாரு. உங்க மாமன் மகனுக்கு குடலேற… இம்புட்டு நேரம் அவன் பண்ணின அலும்ப நீங்க பாக்கல. அவனும் உறங்காம எங்களையும் செத்த கண்ண மூடவிடல. தூக்கப்போனா வாயில வண்டை வண்டையாவரும். எங்க வீக் என்டவே ஸ்பாயில் பண்ணிட்டான்.”
“துரையெல்லாம் ஐ.டி.துறையில ப்ராஜக்ட் முடிச்சு வீக் என்ட் செலப்ரேட் பண்றீங்களாக்கும். விளக்கெண்ணெய்களுக்கு வெட்டிப் பேச்சுக்கு ஒன்னும் கொறச்சலில்ல.”
“ஏன்… எங்களுக்கெல்லாம் வீக் என்ட் வரக்கூடாதா? நாங்களும் தான் கஷ்ட்டப்பட்டு வாரம் முச்சூடும் மாடா உழைக்கிறோமாக்கும்.” அஜய் ஜம்பமாக அங்கலாய்க்க,
“விடிஞ்சா கல்யாணம். பங்காளி அடிக்கிற கூத்தப்பாத்தா தாலிகட்டுவானானே சந்தேகமா இருக்குடா மச்சான்.” நரேன் வார்த்தை விட, ஜெகனுக்கு வந்ததே கோபம்.
“உன் வாயில வசம்ப வச்சுத்தேய்க்க. ஏதாவது அசிங்கமா சொல்லிறப்போறே. ஏற்கனவே நடந்தது பத்தாதாடா? நல்லதா சொல்றியா பாரு?” என ஆத்திரமாக அதட்டியவன், உரித்த தேங்காய் மட்டைகள் மீது காலைத்தூக்கி வைத்து தலைகீழாகக் கிடந்தவனை தூக்க முயல, ஒருத்தனால் ஆகுற காரியமா என்ன? இம்மிகூட அசைக்கக் முடியவில்லை.
படிக்கட்டு தேகமெல்லாம் இல்லீங்கோ. எனினும் பாறை போல் இறுகி, உருண்டு திரண்டு உரமேறிய உடம்பு. ஜிம் பாடியும் இல்லீங்கோ. அவன் செய்யும் வேலைக்கு ஜிம்மெல்லாம் எம்மாத்திரம். தேங்காய் உரித்தே இறுகிப்போன தோள்களும், குருகிப்போன இடுப்பும், முறுக்கேறிய கை புஜமும் அவன் வயதிற்கு சற்று அதிகப்படிதான். இந்த தையோட இருபத்தி ரெண்டு முடிஞ்சு இருபத்தி மூனு தொடங்கிறுச்சுங்கோ.
ஊசியாய் தைக்கும் தைமாதக் குளிருக்கு மேல் சட்டை கூட இல்லாமல், உள் பனியனோடும், கைலியோடும் மட்டமல்லாக்கக் கிடந்தான்.
ஜெகன் அவனை மீண்டும் தோளுக்கடியில் கைகொடுத்து தம்கட்டி தூக்க முயல, நிதானத்தில் இருந்தால் தானே கை கொடுத்ததும் எம்பி வருவான்.
அந்நேரத்திற்கு ஜெகனின் கைபேசி அழைக்க, எரிச்சலோடு எடுத்துப் பார்த்தவன், இவனிருந்த நிலைமையில், “இவ வேற…” என அலுத்துக் கொண்டே, மீண்டும் பாக்கெட்டில் போட்டுவிட்டு அவனை அசைக்க முடியாத கோபத்தில்,
“டேய்… வாங்களேன்டா! பாத்துட்டே இருக்கீங்க” என காண்டெடுத்து கத்தினான். கையிலிருந்த சீட்டுகளைப் போட்டுவிட்டு சலிப்போடு எழுந்து வந்தனர் நால்வரும். ஜெகனுடன் சேர்ந்து அலேக்காகத் தூக்கிச் சென்று தண்ணீர் தொட்டிக்குள் போட்டனர். கழுத்தோடு கட்டிக் கொண்டு ஜெகனையும் சேர்த்து இழுத்துக் கொண்டே உள்ளே விழுந்திருந்தான்.
“டேய்…” என கத்திக் கொண்டே உள்ளே விழுந்தவன், கழுத்தோடு இறுக்கிப் பிடித்த கையை வலிய பிரித்துவிட்டு மேலே வந்து மூச்சு வாங்கினான்.
“அத்தை மகனும், மாமன் மகனும் ஜலக்கிரீடை பண்றதப் பாக்கவாடா நாம இங்க இருக்கோம்.” நக்கலாக அலுத்துக் கொண்டவனைப் பார்த்து,
“பன்னாடை… அவனத் தூக்குங்கடா! அப்படியே உள்ள போயிறப் போறான்!” ஏற்கனவே மூக்கில் தண்ணீர் ஏறிய எரிச்சலில் கண்ணும், மூக்கும் எரிய, முகத்தில் வழிந்த தண்ணீரை வழித்துக் கொண்டே உள்ளே கிடந்தவனை தூக்கச் சொல்லி அதட்டினான். தை மாதக்குளிரில் அந்நேரத்தில் தண்ணீர் தொட்டியில் உள்ளே விழுந்தவனுக்கு குளிர் ஆட்டியது. மாமன் மகனைத் தெளிய வைக்க முயல, ஜெகன் குளிரெடுத்து நின்றான். தொட்டியை விட்டு மேலேறி வெளியே வந்தான்.
சங்கர் குளிருக்கு தன் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து அவனிடம் நீட்ட, தலையைத் துவட்டிக் கொண்டே, “இவனுக்குதான் பித்த உடம்புனு தெரியும்லடா? எவன்டா ஊத்திக் கொடுத்தது?” என கோபமாகக் கேட்க,
“இதெல்லாம் ஓவர் மாமா. நம்ம பங்காளி திடீர் மாப்பிள்ளை ஆகிட்டானே, நாளப்பின்ன வந்து என் கல்யாணத்த கொண்டாடாமப் போயிட்டேனேன்னு, பங்காளி ஃபீல் பண்ணுவானேன்னு, கஞ்சப்பய ஒரு தண்ணிபாட்டில் கூட வாங்கி கொடுக்க மாட்டானேனு, உன் மாமன் மகன் கல்யாணத்த செலப்ரேட் பண்ணுவோமேனு, நாங்களே செலவு பண்ணி வாங்கி, செல்ஃப் செலப்ரேட் பண்றோமாக்கும். அதுல ஊடாலவந்து எனக்கும் வேணும்னு, வேண்டாம்டான்னு சொல்லச்சொல்ல கேக்காம, அவனா எடுத்துக் குடிச்சுப்போட்டு மட்டையாகிட்டான் மாமா. அதுவும் இத்துணூன்டு டானிக் அளவுதான் மாமா குடிச்சான்.” தம்கட்டி பேசி முடித்த நரேன் இழுத்து மூச்சுவிட்டான்.
“மொதமொதன்னு இவன் குடிச்சுட்டு பண்ணின அலும்பப் பாத்தே வேண்டாம்னு தான் மாமா சொன்னோம்” என்றான் விக்னேஷ்.
“எல்லாம் என்னைச் சொல்லணும். இவனை உங்க பொறுப்புல விட்டுருக்கக் கூடாது. அங்க என்னடான்னா ஆத்தா என்னைக் காச்சு காச்சுனு காச்சுறாங்க. இதுல இவனோட பாசமலர் வேற” என தலையிலடித்து நொந்துகொண்டான்.
இவன் மட்டும் நிதானத்திலிருந்தால் இப்படியெல்லாம் பேசக் கூட முடியாது.
விடிந்தால் முகூர்த்தம். இந்நேரம் மண்டபம் சென்றிருக்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் சார்பில் வந்தவர்களை கவனிக்க ஜெகனின் பெற்றோர் தவிர குடும்பத்தார் ஒருத்தரும் இன்னும் மண்டபம் போகவில்லை. இவனுக்கோ இங்கே சுத்தமாக நிதானமில்லை. தண்ணீர்த் தொட்டியில் போட்டு, முக்கியெடுக்க சற்றே நிதானத்திற்கு வந்திருந்தான். ஈரம் சொட்டச் சொட்ட வெளியே இழுத்துப்போட்டனர்.
கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தான். கண்கள் கோவைப்பழமாய் சிவந்திருக்க, ஈரத்தோடு கண் முன் கோபமாக முறைத்து நின்றவனைப் பார்த்து, “மாமா… குளிச்சியா மாமா… சாப்டியா மாமா!” என்றான் பல் எல்லாம் காட்டி இளிப்பாய். இப்பொழுதுதான் மாமனை அடையாளம் தெரிகிறது.
“சாப்பாடு தானே… பேய் தான்டா இந்நேரத்துக்கு சாப்பிடும்!” என்றான் நொந்தபடி.
“அப்ப நீயும் சாப்பிடு மாமா!”
“ஏஞ்சொல்ல மாட்ட? பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரம் ஏறத்தான்டா செய்யணும். நல்லா வாக்கப்பட்டு வந்தேன்டா உங்க குடும்பத்துக்கு!”
“பேயின்னு யார மாமா சொல்ற? பவித்ராவத்தானே?”
“அடேய்! படுபாவி! சண்டாளா! உன்ன குடும்பஸ்த்தனாக்கறதுக்குள்ள, நீ எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துருவ போலயே?” என பதறியவன்,
“டேய்… சட்டுனு போதை தெளிய ஏதாவது இருக்காடா?” என்றான் மற்றவர்களைப் பார்த்து.
“போதை குறையாம இருக்கறது எப்படின்னு தான் தெரியும். அதுக்கு தான் வேர்க்கடலை, கடலைமிட்டாய், வாழைப்பழமெல்லாம் வாங்கி வச்சுருக்கோம் மாமா” என எடுத்துக் காட்டியவர்களைப் பார்த்து,
“உங்கள…” என பல்லைக் கடித்தவன்,
“எலுமிச்சம்பழம் இருக்காடா?” என்றான் எரிச்சல் தொனி மாறாமல்.
இரண்டு கைகளையும் பின்னால் ஊன்றி, கால்களை பரப்பி அமர்ந்திருந்தவன் ஜெகனை அண்ணார்ந்து பார்த்து, “எதுக்கு மாமா?” என்றான் குழறலாக அதே சிரிப்போடு.
“தலைக்கு தேய்ச்சு குளிச்சாலாவது பைத்தியம் தெளியுதானு பாப்போம்டா?”
“யாருக்கு மாமா?” மீண்டும் அதே சிரிப்போடு கேட்க,
“எனக்குத் தான்டா!” என்றான் நெஞ்சில் பட்டென அடித்துக் கொண்டு.
“அப்ப குளி மாமா” என்றான் விடாமல். பக்கத்தில் நின்றவர்கள் வாய் மூடி சிரித்தனர்.
இன்னும் தலையிலிருந்த ஈரம் சொட்டி முகத்தில் வளிந்தது. கண்கள் கோவைப்பழமாய் சிவந்திருந்தது போதையிலும், விடிய விடிய தூங்காததிலும்.
“எந்திரிடா!” என ஜெகன் அவனை அதட்ட,
இரண்டு கைகளையும் சிறுபிள்ளை போல் விரித்து நீட்டி, “தூக்கு மாமா!” என்றவனைப் பார்த்து இப்போது வாய்விட்டே சிரித்தனர்.
“அப்படியே தூக்கி இடுப்புல வச்சுக்கிட்டு, உங்க மாமன் மகனுக்கு நிலாச்சோறு ஊட்டுங்க மாமா!” நரேன் நையாண்டி பேச, கண்களால் அவனை பஸ்ப்பமாக்கி விட்டு,
“ஏன்டா… அவன் மனசு புரியாம நக்கல் பண்ணிட்டு இருக்கீங்களா? நீங்க எல்லாம் என்னடா ஃப்ரெண்ட்ஸ்?” கோபத்தை விடுத்து வருத்தம் தோய்ந்த குரலில் ஆதங்கமாகக் கேட்டவனிடம்,
இவ்வளவு நேரமாக விளையாட்டாகப் பேசியவர்கள் முகம் சட்டென சுருங்கியது. அவர்களுக்கு மட்டும் இவனோடு வம்பளக்க வேண்டுமென்ற ஆசையா என்ன? இதே திருமணம் எல்லாரையும் போல் இவனுக்கும் முடிவாகி இருந்தால் இந்நேரம் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். யாருக்கோ ரிசர்வ் பண்ணின டிக்கெட், அவன் பயணத்தை ரத்து செய்ததால், இருக்கை காலியாக இருக்கே என இவனை ஏறச்சொன்னால் எப்படி?
“நாங்களும் அதைத்தான் மாமா கேக்குறோம். இது பங்காளியோட வாழ்க்கை. இது ஏன் உங்க குடும்பத்து ஆட்களுக்கு புரிய மாட்டேங்குது. மானம், மரியாதை, மத்தாங்காய்னு நீங்க எல்லாம் சேந்து அவன இக்கட்டுல மாட்டிவிட்டுட்டு, நாங்க புரியாம பேசுறோமோ?” என தீவிரமாகக் கேட்டவர்கள் கேள்வியில் கோபமும் மிதமிஞ்சியிருந்தது.
“அந்த ஈன வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஒரு கை புடிங்கடா!” என அவர்கள் உதவியோடு, பக்கத்திலிருந்த வீட்டிற்குள் இழுத்துச் சென்று, அங்கிருந்த கட்டிலில் தள்ளாத குறையாக உட்கார வைக்க, உட்கார்ந்த வேகத்தில் பந்து போல எழுந்து நின்றான். மீண்டும் அழுத்தி உட்கார வைக்க, மீண்டும் எழ, இது ஆகாத காரியம் எனத் தெரிந்தவன், அப்படியே துண்டை எடுத்து தலையைத் துவட்டி விட்டான். அவன் உயரத்திற்கு தலையை நிமிர்த்தி, எக்கி துவட்டுவதற்குள் இவன் ஒரு வழியாகி விட்டான்.
“கொஞ்சம் கம்மியா வளந்தா யாரும் அடிச்சாங்களாடா? தென்னை மரத்துல பாதி இருக்க.” எட்டித் துவட்ட முடியாத சலிப்போடு உடையை மாற்றச் சொல்லி, அங்கு அலமாரியில் இருந்து சார்ட்ஷும், டிசர்ட்டும் எடுத்து அவன்மீது போட்டான்.
சற்றே போதை தெளிந்திருக்க,
அவனை முறைத்து நின்றானே ஒழிய, உடைமாற்றும் முகாந்திரம் இம்மியளவும் அவனிடமில்லை. நீ செய்வது சரியா என்பது போல் அவனையே வெறித்து நின்றான்.
“கண்ணால லவ் பண்ணது போதும். ட்ரெஸ் மாத்துறியா? அங்க மாப்பிள்ளைய காணோம்னு எல்லாரும் பதட்டத்துல இருக்காங்க. நீ என்னடான்னா இங்க தண்ணியடிச்சுட்டு கவுந்து கிடக்குற?” என அதட்டியவன், அங்கிருந்த இன்னொரு சட்டையும், கைலியும் எடுத்தவன், அவனுடைய ஈர உடையையும் மாற்றிக் கொண்டான். சட்டை நுனியை வாயில் கடித்துக் கொண்டு, இடுப்பில் கைலியை இருக்கிக் கட்டிகொண்டே,
“என்னடாயிது என்னைக்குமில்லாத புதுப் பழக்கம்? மாமாக்கு ஃபோன் போடவாடா?” ஃபோனை கையிலெடுக்கப் போக, வேண்டாமென கையமர்த்தியவன்,
“கையக் காலக்கட்டிவச்சு தாலிகட்டச் சொல்றீங்க மாமா.” அத்தனை போதையிலும் அவன் கண்ககளில் தெரிந்த வலி ஜெகனையும் அசைத்துப் பார்த்தது.
குடும்ப மானம், மரியாதை என இவனை பலி கடாவாக்கினால் அவனும் தான் என்ன செய்வான்.
தன் மனக்குமுறலையும் மறைத்துக்கொண்டு, “கையைக் கட்டினா தாலி எப்படிடா கட்டுவ?” நக்கலாகப்பேசி சிரிக்க முயன்றவன் முன்னே ஈரக் கைலியை அவிழ்க்கப் போக,
“டேய்! சண்டாளா! எங்கண்ணு போயிரும்டா! நான் வெளியே போறேன். அஞ்சு நிமிஷத்துல வெளிய வர்ற!” சொல்லிவிட்டுத் திரும்ப,
“எவ்வளவு காசு கொடுத்து வேணும்னாலும் குதிரைய வாங்கி தொழுவத்துல கட்டிறலாம் மாமா! ஆனா, குதிரையை தண்ணி குடிக்க வைக்கிறது ஒன்னும் அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்ல.” அந்த சூழ்நிலையிலும் நொந்தபடி வேதாந்தம் பேச, அவனைத் திரும்பிப் பார்த்தான்.
“பாக்கலாம்டா மாப்ள… இந்தக் குதிரை தண்ணி குடிக்க மாட்டேன்னு மொரண்டு பண்ணுதா. இல்ல… புல்லும், கொள்ளும் சேத்து கேக்குதான்னு. பொண்ணப் பாத்தா இப்படியெல்லாம் பேச மாட்டடா” என்றான் உள்ளார்ந்து.
அதைக் கேட்டவனுக்கு, அவனையும் மீறி ஏனோ அந்த முட்டைக்கண் முழியழகி ஒரு கணம் மின்னலென வந்து போனாள் மனக்கண் முன். ஒரு நாள்தான் அவளைப் பார்த்தது. ஆனால் இன்றும் பெண் என சொன்னதும் தாவணி, பாவாடையில் அவள் முகம்தான் நினைவில் ஆடுகிறது. அன்று கழுத்தில் மாலையோடு அதிர்ச்சியில், இவனைப் பார்த்து அரண்டு விழித்தது பச்செக்கென ஒட்டிக் கொண்டது அவனது நெஞ்சாங்கூட்டில். தான் செய்த காரியத்தில், இவனுமே அந்தக் கணம் செய்வதறியாது அரண்டு நின்றுவிட்டான். அத்தனை கூட்டத்திலும் திரும்பிப் பார்த்து முறைத்துச் சென்றவள் முகம் நினைவிலாடியது.
யாரோ? எவரோ? யார் பெத்த பிள்ளையோ? எங்க இருக்காளோ… இப்ப எதுக்கு அந்தச் சீமை சித்திராங்கி நெனப்பு என தலையை உலுக்கிக் கொண்டான்.
இதோ… தனக்கென ஒருத்தி மண்டபம் வரை வந்தாயிற்று. யாருக்கோ என எடுத்து வைத்தது. அதுதான் அவனை வாட்டி வளவெடுக்கிறது. இந்த நிமிடம் வரை வேறு ஒருவனை வருங்காலக் கணவராக மனதில் வரித்து வைத்திருக்கும் ஒருத்தி, தனக்கு வாழ்க்கைத்துணை என்பதை எத்தனை சமாதானம் செய்தாலும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
மறுபுறம், இது ஒன்னும் காதல் திருமணம் இல்லையே? பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தானே? பொண்ண எத்தனையோ பேர் பாக்குறாங்க. பாக்குறவங்களை எல்லாம் கணவனாக நினைக்க முடியுமா என ஒருபக்கம் மனம் ஆயிரம் சமாதானம் படித்தாலும்,
இந்த விஷயத்தில் அவன்தான் மாப்பிள்ளை என முடிவாகி மண்டபம் வரை வந்தாயிற்றே. அப்ப அவன்தானே அவள் மனதில் வருங்காலக் கணவனாக பதிந்திருப்பான் என்ற நினைப்பே கசந்து வந்தது.
ஜெகனை ஒரு கணம் ஊன்றி கவனித்தவன், வரண்ட சிரிப்போடு, “எப்பவும் அவன் வேண்டாம்னு ஒதுக்கறதுதான் எனக்கா மாமா?” என்றான் ஆழ்ந்த குரலில் விரக்தி சுமந்து.
“நீ ஏன்டா மாப்ள அப்படி நினைக்கிற? அவனுக்கு கொடுப்பினை இல்ல. யார் யாருக்கு எதெது கிடைக்கணும்னு இருக்கோ அது கிடைச்சே தீரும். உங்க அப்பா வேண்டாம்னு கையெழுத்துப் போட்ட, இத்தனை ஏக்கர் தோப்பும், இந்த வீடும் உனக்கே வரும்னு நீ நெனச்சாவது பாத்தியா? ஆனா உனக்குனு வந்துச்சா இல்லையா? இந்த வாழ்க்கையும் அப்படித்தான்டா. அடிச்சு சொல்றேன்டா. உன் மனசுக்கு கண்டிப்பா சந்தோஷமா இருப்படா மாப்ள. மனசப் போட்டு ஒழப்பாம வாடா” என்றவன் குரல் இப்பொழுது இளகி ஒலித்தது மாமன் மகனுக்காக.
பெரியவர்கள் பேச்சை தட்டமுடியாமலும், திடீரென எடுத்த முடிவை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு நிலையாக நிற்கமுடியாமல் தவிப்பதும் புரிந்தது. அவனையே கனிவாகப் பார்த்து நின்றான் ஜெகன்.
“இப்ப நீங்க கண்ணால லவ் பண்ணது போதும். ஏற்கனவே பவி, நீ எனக்கு அண்ணனா, சக்களாத்தியான்னே தெரியலைனு அலுத்துக்குது” என்றவனைப் பார்த்து ஜெகன் வாய்விட்டு சிரித்தான்.
“கொளுந்தியா இல்லாத கொறைய நீதான்டா மாப்ள தீத்துவைக்கிற” என்றவனைப் பார்த்து அவனையும் மீறி சிரிப்பு வர, தாராளமாக வாய்விட்டே சிரித்தான் மதன்கைலாஷ்.
அவனையே பார்த்தவன், “இப்படியே சிரிச்ச முகமா ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாடா மாப்ள!” உள்ளார்ந்து சொல்லிவிட்டு வெளியேறினான்.
சில கணங்கள் அப்படியே நின்றவன், ஜெகன் திரும்பிப் பார்க்க, “போங்க மாமா! வர்றேன்” என்றான் சிறு புன்னகையோடு. பதிலுக்கு அவனும் புன்னகைத்து விட்டு வெளியேறிச் செல்ல, ஒரு கணம் கண்களை மூடி, புருவமத்தியில் நடுவிரல் வைத்து அழுத்திக்கொண்டவன், இழுத்து மூச்சுவாங்கி உடையை கையில் எடுத்தான்.
அதற்குள் அவன் கைபேசிக்கு, “மருதமலை மாமணியே” என ரிங்டோனோடு அழைப்பு வர, அங்கே அலமாரியில் கிடந்த அவனது ஃபோனை எடுத்துப் பார்த்தான். பல தவறிய அழைப்புகள் அவன் அப்பத்தா பெரியநாயகியிடமிருந்து இரவு முழுவதும். “பெரியநாயகிஈஈ… எல்லாம் உங்களாலதான். இதோ வர்றேன்.” வாய்விட்டு அலுத்துக் கொண்டே, பெருமூச்சொன்றை விடுதலை செய்தவன், எல்லாம் அவன் செயல் என உடையை மாற்றிவிட்டு வெளியே வந்தான்.
ஜெகன் வண்டியை ஸ்டார்ட் பண்ண, இவன் வண்டியில் பின்னால் உட்கார, “மாமா இடுப்ப வளச்சு, இறுக்கிப் புடுச்சுக்கோடா பங்காளி!” என நண்பர்கள் கேலி போல் சொல்ல, அவர்களைத் திரும்பிப் பார்த்தவன், வாயில் கைவைத்து சைகை செய்தான் மதன்கைலாஷ்.
“அப்பாடா! பங்காளி ஃபார்ம்க்கு வாந்துட்டான்டா! இனிமே நீங்க பாத்துப் போங்க மாமா! மண்டபத்துல பாக்கலாம்! வாழ்த்துக்கள்டா!” என வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் அவனது தோஸ்த்துகள். அவர்களுக்கும் உள்ளூர வருத்தம் தான். அவன் முன் காட்டாமல் அவனை இலகுவாக்கவெனவே இத்தனை பேச்சும், கேலியும், கூத்தும். அது புரிந்ததால் தான் ஜெகனும் அவர்களை எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டிச் சென்றான். நான்கு வழிச்சாலையில் வண்டி நிதானமாக பயணித்தது. மைபூசிய இருட்டு சாலையில் வாகனங்கள் ஒளி பாய்ச்சி சென்றன. பேச்சற்ற அமைதி இருவருக்குள்ளும். அடுத்த அரை மணி நேரத்தில் வீடுவந்தது.
வாழைமரம் கட்டி, பந்தல் போட்டு, நல்வரவு என்ற மின் விளக்கு அலங்காரங்களுடன் கல்யாண வீட்டிற்குரிய அத்தனை லட்சணங்களையும் தாங்கி நின்றது பல தலைமுறைகளைக்கண்ட அந்த பூர்வீக வீடு. மூன்று நாட்களுக்கு முன் ஊன்றப்பட்ட பந்தக்கால் கூட அவன் பெயர் சொல்லித்தான் ஊன்றப்பட்டது. அதைப் பார்த்தவன் முகம் சுண்டியது.
வீட்டின் ஆளுயர மதில்சுவர் தாண்டி வண்டி உள்ளே செல்ல, வாசலையே பார்த்துக் கொண்டு தவிப்போடு நின்றிருந்தன மூன்று ஜீவன்கள்.
“என்ன கண்ணு இப்படிப் பண்ணிட்ட?”
“என்னசாமி இப்படிப் பண்ணிட்ட?”
“என்னண்ணே… இப்படிப் பண்ணிட்டே?” மூவரும் ஒரே கேள்வியை வெவ்வேறு தினுசில் கேட்க,
“இப்ப என்ன பண்ணாங்க? வெளியிலேயே நிக்க வச்சு பேசணுமா? உள்ள கூட்டிப் போங்க.” என்றான் ஜெகன்.
“வா கண்ணு?” என கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றார் சீதாலட்சுமி. கூடவே பெரியநாயகியும் செல்ல, அவர்கள் உள்ளே சென்றதும்,
“ஏன் கால் அட்டென்ட் பண்ணல? இந்நேரத்துக்கு எதுக்கு குளிச்சிருக்கீங்க? அதுவும் இத்தனை பனியில?” உடைமாற்றி, ஈரத்தலையோடு வந்தவனைப் பார்த்து, குளித்து வந்ததாக நினைத்து பவித்ரா கேள்வி மேல் கேள்வி கேட்க,
“மாமன் மகன் கல்யாணம் நல்லபடியா முடியணும்னு வேண்டுதல்டீ. உன் பாசமலர் இருந்த நிலையில போன எங்கடீ எடுத்துப் பேசறது?” எரிச்சலாக பதில் சொல்லியவன், அப்பொழுதுதான் பாக்கெட்டில் போட்ட கைபேசி நினைவு வர, அவசரமாக எடுத்துப் பார்த்தான். அதுவும் குளித்ததில், குளிருக்கு மூர்ச்சையாகிக் கிடந்தது.
“போச்சா!” என அலுத்துக் கொண்டான்.
“எங்களுக்கெல்லாம் எவ்வளவு பயமா போச்சு தெரியுமா? எங்க, பெரியண்ணே மாதிரி சின்ன அண்ணனும் சொல்லாமப் போயிருச்சோன்னு நெனச்சேன்.”
“அவன மாதிரி ஊமையா இருந்து, யார் கழுத்தையும் இவன் அறுக்க மாட்டான். சொன்னா சொன்ன சொல்ல காப்பாத்துவான். எங்க உங்க பெரியம்மா?”
“பெரியம்மா, பெரியப்பா ரெண்டு பேரும் உள்ள தான் இருக்காங்க. சீக்கிரம் வாங்க மண்டபத்துக்கு கிளம்பணும். இன்னும் அங்க என்ன கூத்து நடக்கப்போகுதோ?” அவள் கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“சமாளிப்போம் வா!” என பவித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான் ஜெகன்.
*****
“அக்காஆஆஆ…” ஓடிவந்த வேகத்திற்கு சட்டென நிற்க முடியாமல், தடுமாறி சேரைப் பற்றிக் கொண்டாள் ராகினி.
கண்களை மூடி இருக்கையில் தலைசாய்த்து அமர்ந்திருந்தவள், “என்னடீ?” என்றாள் சலிப்போடு.
அலங்காரப் பெண்களில் ஒருத்தி, ஈரக்கூந்தலை உலர்த்த, தலைக்கு ட்ரையர் போட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி அவள் கண்களுக்கு லைனர் வரைந்து கொண்டிருந்தாள்.
“நீ ஆசப்பட்ட மாதிரியே கல்யாணம் நிக்கப் போகுது போலக்கா. மாப்பிள்ள வரலியாம். வேற மாப்பிள்ளை அழச்சுட்டு வந்திருக்காங்க. நம்ம அப்பாகிட்ட நடக்குற காரியமா? பக்கத்து ரூம்ல ஒரு யுத்தகளமே தயாராகிட்டிருக்கு!”
அலங்காரப் பெண்கள் தங்களது வேலையை நிறுத்திவிட்டு அதிர்ச்சியோடு பார்க்க, அதிர்ச்சி அடைய வேண்டியவளோ முகம் கொள்ளா சிரிப்போடு மூடியிருந்த கண்களை திறக்கப்போக,
“அச்சோ, கண்ணத் திறக்காதீங்க. இன்னும் லைனர் காயல” என்றாள் அவசரமாக. அதெல்லாம் கண்டு கொள்ளவில்லை. தன் மேல் கிடந்த டவலை எடுத்து வேகமாக எரிந்துவிட்டு, அவசரமாக வெளியே ஓடிவந்தாள் மாதங்கி.
