தெம்மாங்கு பூந்தமிழே 22

22

“தம்பி தொம்பினுட்டு யாராவது பொண்ணுகிண்ணு கேட்டு வந்தாங்க. நான் மனுஷியா இருக்க மாட்டேன். அப்படியே வளத்தவரு புத்திமா உங்க தம்பிக்கு “

“யாரடி சொல்ற. பாண்டியனயா?”

“அந்த நோண்டியனத்தான் சொல்லுது. சேந்த இடம் அப்படி.” 

“என்னடி இது கொஞ்சங்கூட மாமன்னு மரியாதை இல்லாம”

“எனக்கு நல்லா வாயில வந்துரும் சொல்லிட்டே” என அம்மாவிடம் பட்டாசாய் வெடித்தாள் மகள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், கைப்பையையும், கைபேசியையும் சோஃபாவில் மூளைக்கொன்றாக விசிறியடித்தவள், உடுக்கையடிக்காத குறையாக ஆடித்தீர்க்க, 

“என்னடி சொன்னான். ஏன் இப்படி சாமிவந்தவளாட்டம் குதிக்கிற?” என கோபமாகக் கேட்க,

“பேய்புடிச்சவளாட்டம் ஆடலியேனு சந்தோஷப்பட்டுக்கோங்க. இப்ப சொல்றே. எந்த மாப்பிள்ளைய வேணாலும் பாருங்க. நான் சம்மதிக்கிற. ஆனா உங்க தொம்பிமட்டும் வேணாம்.” 

“என்னடி திடீர்னு இப்படி சொல்ற.” எனக்கேட்ட அம்மாவிடம்,

 சட்டென அந்நியனாய் மாறி ஆத்திரம் குறைந்து, “ஆதினி என் பிள்ளை இல்லையாம்மா?” என கண்கலங்க, மகளின் கண்ணீரைப் பார்த்தவருக்கும் மனம் அடித்துக் கொண்டது.

“யாருடி சொன்னது. முதல்ல கையில வாங்கினதே நீதானம்மா” அருகில் அமர்ந்து மகளின் தலையை வருடிக் கொடுக்க, அன்றைய நாள் மீண்டும் கண்முன் வர கண்கள் கலங்கியது இருவருக்கும். 

அகிலாண்டத்தின் பேச்சைக் கேட்டபிறகு அந்த வீட்டிற்கு அவர்கள் செல்லவில்லையே ஒழிய, ஈரம் காயும் முன் கையேந்திய பிள்ளையை மறக்க முடியவில்லை அவளுக்கு. பத்துப்பதினைந்து நாட்களாக கூடவே இருந்து கவனித்துக் கொண்டது வேறு, கைகளில் வாளைமீனாய் குழந்தை நெளிவதும், தூக்கத்தில் கனவு கண்டு சிரிப்பதும், முகம் சிவக்க வீரிட்டு அழுவதும், பால் குடிக்கும் நினைவில் தூக்கத்தில் கை சப்புவதும் என பிள்ளை முகம் கண்ணுக்குள்ளேயே நிழலாடியது. தேன்மொழியிடம் அடிக்கடி ஃபோனில் விசாரிக்க, இவள் பிள்ளையின் நினைவாகவே இருப்பதையறிந்தவள், வீட்டிற்கோ, கோவிலுக்கோ குழந்தையை எடுத்து வந்து காண்பித்துச் செல்வாள். 

முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க குழந்தையும் அமிர்தாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. வீட்டிற்கு அடிக்கடி வந்து போக கௌரியும் தம்பிக்குப் பதிலாக தம்பிமகளை சீராட்டினார். 

அப்படியிருக்க இன்று ருத்ரன் இவளிடம் கூறிய விளக்கம் கோபத்தை உண்டுபண்ண வீட்டில் வந்து அம்மாவிடம் பொங்கிவிட்டாள்.

காயத்ரிக்கு திருமண ஏற்பாடு நடக்கும் தகவல் வந்தது. வெங்கடேசன்தான் அக்கா கௌரியிடம் நடந்த விஷயத்தை மேலோட்டமாக கூறியிருந்தான். முதலில் கௌரிக்கும் காயத்ரியின் துணிச்சல் கண்டு அதிர்ச்சிதான். கூடவே தேன்மொழி நிச்சயதார்த்த தகவலும் வர, எல்லாருக்கும் திருமண ஏற்பாடு நடக்க, தன் மகளை நினைத்தும் ஏக்கம் பிறந்தது.

அமிர்தாவும் எந்த மாப்பிள்ளைக்கும் சரிக்கொடுக்காமல் இருக்க, தம்பியிடம் அதனை நினைத்துப் புலம்பினார். சித்தியிடம் பேசுவதாக வெங்கடேசன் கூறினான். 

“அவனும் வேற யாரையும் கட்டமாட்டான்க்கா. சித்திகிட்ட பேசிட்டு இதுக்கு ஒரு முடிவெடுப்போம். இப்படியே எத்தனை நாளைக்கு வயசுப்புள்ளய வீட்ல வச்சுருக்கமுடியும்? அவனும் எத்தனை நாளைக்கி, கைப்பிள்ளையோட ஒண்டிக்கட்டையா இருப்பான். காயத்ரி கல்யாணம் முடியட்டும் பேசலாம்” என கூறிச்சென்றான்.

கோபமாக வந்த மகளிடம் அவளை சமாதினப்படுத்துவதாக எண்ணிக்கொண்டுக்கொண்டு, “பெரிய மாமன் பேசறதா சொல்லியிருக்கான் அமிர்தா” எனக்கூற,

“யாரக்கேட்டு பேசச் சொன்னீங்க. எனக்கு சின்னமாமன், பெரிய மாமான்னு எல்லாம் இல்ல. ஒரே மாமன்தான்” என மறுபடியும் எகிற,

“யாரடி கேக்கணும். அசோகவன சீதையாட்டம் மாமன் நெனப்புலயே எந்த மாப்பிள்ளை வந்தாலும் நீதான வேண்டாம்ன” கௌரியும் குரல் உயர்த்த,

“நான் அசோகவன சீதையாட்டம் இருந்ததுனாலதான் உன் தொம்பி ராமனாட்டம் சந்தேகப்படுறாரு.”

“சுட்டுப் போட்டாலும் எங்க வம்சத்துக்கு அந்தப்புத்தி வராது அமிர்தா.”

“ஆனா வளத்தவரு வம்சத்துக்கு வரும்ல. என்னையக் கட்டிக்கிட்டா என்னால பிள்ளைய நல்லா பாத்துக்க முடியுமான்னு சந்தேகம்.”

 “அவன் என்னத்த நெனச்சுக்கிட்டு என்ன சொன்னானோ. நீதான் தப்பா புரிஞ்சுருப்ப” என தம்பியையும், மகளையும் சரியாகக் கணித்தார் கௌரி. 

“இப்பவும் தம்பிய விட்டுக் கொடுக்க மாட்டீங்கறீங்க பாத்தீங்களா?”

“ஒரு தடவ விட்டுக்கொடுத்துட்டுதான் அவன் ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டான்டி. பணங்காசுக்கு பஞ்சமில்லதான். மஞ்சுளா சித்தி அவன ராஜாவாட்டம்தான் வளத்தாங்க. ஆனா அவன் வாழ்க்கையில இப்ப நிம்மதியில்ல. அவன் எங்க மூனுபேத்துக்கும் தகப்பன் அமிர்தா. பெத்த பிள்ளைகள கரையேத்துறதுதான் தகப்பனோட கடமைன்னா, அத அவன் பிறந்தவுடனே எங்களுக்கு செஞ்சான். எங்கள வாழவச்சவன் வாழ்க்கை இப்ப அரைகுறையா நிக்குது” என கௌரி தம்பி நினைவில் கண்கலங்கினார்.  

ருத்ரனும், அழகரும் கல்யாண ஏற்பாட்டில் இருக்க, இந்த ஒருவார காலமாக ஹோட்டலை அமிர்தாதான் கவனித்துக் கொள்கிறாள். இரண்டு விசேஷங்கள் ஆயிற்றே.‌ 

பத்திரிக்கை, ஜவுளி, அழைப்பு என நேரடியாக நாமே பார்க்க வேண்டிய வேலைகள் முன் நிற்க அதனால் சற்று அலைச்சலும் அதிகம்தான். 

தனது ஆர்கனைசிங் குழுவிடம் பொறுப்புகளைத் திட்டமிட்டுக் கொடுத்துவிட்டு, அமிர்தாவை மேற்பார்வை பார்க்கச் சொன்னான்.

அமிர்தாவிடம் பேசுவதாக அழகரிடம் சொல்லிவிட்டானே ஒழிய, இன்னும் எப்படிப் பேசுவது என ஆயிரத்தியெட்டாவது முறையாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் சொல்ல வருவதை சரியானவிதத்தில் புரிந்து கொள்வாளா என்ற சந்தேகம் அவனை அலைக்கழித்தது. இது அவளுக்காகவும், மகளுக்காகவும் முதலிலேயே சில விஷயங்களை பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தான். அவன் பெற்ற அனுபவங்கள் அப்படி. 

அவனைப் பொறுத்தவரை ஒன்று வளரும் குழந்தை. மற்றொன்று வளர்ந்த குழந்தை. 

அன்று மதிய உணவு வேளைக்குப் பிறகு ஹோட்டலில் சற்று கூட்டம் ஓய்ந்திருந்தது. மண்டபம் பார்த்து முன்தொகை கொடுத்துவிட்டு வந்தான். எல்லா மண்டபத்தினரோடும் தொடர்பில் இருப்பவன் என்றாலும் அவசரத்திற்கு பெரிய மண்டபம் கிடைப்பது சிரமமாக, சற்று அலைச்சலை உண்டு பண்ணியது. இரண்டு விசேஷங்கள் வேறு. முதல்நாள் மாலையில் நிச்சயதார்த்தம், மறுநாள் காலையில் திருமணம் என முடிவு செய்தனர். 

பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என தனித்தனியாக இல்லாமல் இரண்டு விஷேசத்திற்கும் பொதுவான சொந்தங்கள்தான் என்றாலும் கூட்டம் அதிகம். எனவே பெரிய மண்டபம் அமைவது சற்று கடினமாகிப் போக, மதுரையை விட்டு சற்று தள்ளிதான் கிடைத்தது.‌ போக்குவரத்துக்கு வண்டி வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

வந்தவன், மேலே ஆஃபிஸ் ரூமிற்கு உணவை அனுப்பச் சொல்லிவிட்டு படியேறினான். அறையைத் திறந்து ஏசியை ஆன் செய்தவன், சட்டை மேல் பட்டன் இரண்டை கழற்றிவிட்டு  விசிராந்தையாக அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்தான். பத்து நிமிடங்கழித்து அறைக்கதவை திறந்து கொண்டு அமிர்தாவே உணவை எடுத்துவந்தாள். 

”சப்ளையர்கிட்ட கொடுத்துவிட வேண்டியதுதானே” என்றவன் நிமிர்ந்து அமர்ந்தான்.

“அவங்க எல்லாம் இப்பதான் சாப்பிட உக்காந்தாங்க‌. அவங்கள எழுப்பாட்டி என்னானுதான் எடுத்துட்டு வந்தேன்” என்றாள். 

எழுந்தவன் அங்கே இருந்த வாஷ்ரூம் சென்று ஃப்ரெஷ்ஷாகி வந்தான். அதற்குள் அங்கிருந்த டீபாயில் தட்டை எடுத்துவைத்து சாப்பாட்டை  பரிமாறியிருந்தாள். 

“நீ சாப்பிட்டயா?” என கேட்டுக்கொண்டே அமர்ந்தான்.

“ம்ம்ம்” என்றாள்

“சீக்கிரம் சாப்பிட்டுருப்ப. மணி மூனாகப்போகுது. இந்த ஸ்வீட்ட எடுத்துக்க. எனக்கும் கம்பெனி கொடுத்த மாதிரி இருக்கும்” என கிண்ணத்தில் இருந்த ரசமலாயை அவள் பக்கம் தள்ளி வைத்தான். 

கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அவனுக்கு எதிரில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். ஸ்பூனில் ரசமலாயை சாப்பிட்டுக் கொண்டே கண்கள் எதிரில் இருந்தவனையும் நோட்டம்விட்டது. 

ஒருவரது சுத்தம் கைவிரல் நகத்தில் தெரியும் என்பதுபோல சீராக நகம் வெட்டப்பட்ட நீண்ட கைவிரல்கள், கைகழுவ என சட்டையை அசால்ட்டாக  முழங்கை வரை ஏற்றிவிடப்பட்ட வாளிப்பான கைகள், தொடையில் இடக்கையூன்றி உணவை நாசுக்காக அவன் சாப்பிட்டவிதம், சட்டை இடைவெளியில் தெரிந்த திண்ணிய மார்பில் சுருட்டிய முடிகள், அதன் மத்தியில் தொங்கிய தங்கச்சங்கிலி, இறுகியதாடைக்கு மத்தியில் தாவாயில் மெல்லியதாய் சிறுபள்ளம், அழுத்தமான உதட்டிற்குமேல் சிகரமாய் அடர்த்தியாய் மீசை, முகம் கழுவும் பொழுது தண்ணீர் தொட்டு மேலேற்றிவிடப்பட்ட அடர் கேசம் என ஆண்மைமிளிற சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் முகத்தை விட்டு கண்களை எடுக்க முடியாமல் கன்னியின் பார்வை கையிலிருந்த கிண்ணத்திற்கும், அவனது முகத்திற்குமாக ஊசல் குண்டாய் அலைபாய்ந்தது. 

சாப்பிட்டுக் கொண்டே, தலையை நிமிர்த்தாமல், “மெனுவெல்லாம் மாத்தியிருக்க போல” என்றான் தன்னை கண்ணால் சாப்பிட்டவளையும், உணவோடு ரசித்துக் கொண்டே.

அவன் கேட்டதில் கவனமின்றி கன்னியிருக்க, இளநகை ஒன்று இயல்பாய் பூத்தது அவன் இதழ்கடையில். 

குறு குறு கண்ணாலே காதலை சொன்னாளே 

சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாளே 

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சிரிக்கத் தோணுதே 

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே 

சற்று முன்பு கேட்ட பாடல் பாடத் தோணுதே 

வெட்கமின்றி ஆடத் தோணுதே

“அமிர்தா” என்றான் சற்று குரல் அழுத்தி.

“ம்ம்ம், எ…என்ன கேட்டீங்க” என்றவள் குரல் ஸ்வரம் தப்பி பிசிறடிக்க. அவளது தடுமாற்றம் உணர்ந்தவன், இயல்பாக மேல்பட்டனை இடக்கையால் போட்டுக் கொண்டே.  

“மெனுவெல்லாம் மாத்தியிருக்க போல?” என்றான் மீண்டும். 

தன்னைக் கண்டுகொண்டானோ என சஞ்சலத்தில் அவன் முகத்தை ஆராய, ’குந்தானி, பார்வைய மாத்துடி. ஸ்வீட்ட மட்டும் சாப்பிடு. இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ணமுடியாது’ என மனதிற்குள் கொஞ்சிக்கொண்டு அவன் முயன்று தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டான்.

“மெனுவெல்லாம் மாத்தல. இந்த வாரத்துக்கு ஒரேஒரு அயிட்டம் மட்டும் சேத்தேன். கேப்பக்கழி உருண்டையும் நாட்டுக் கோழி குழம்பும். செமயா போச்சு.‌ வந்தவங்க எல்லாம் அதைத்தான் முதல்ல கேட்டாங்க” என பூரித்த முகமாகக் கூறினாள் அதற்குள் அவளும் தன்னை மீட்டுக்கொண்டு.

“ம்ம்ம், நேத்து நானும் சாப்ட்டேனே.‌ நல்லா இருந்துச்சு”

“நீங்க அம்மாச்சி செஞ்சத சாப்ட்டிருக்க மாட்டீங்க. என்ன இருந்தாலும் அவங்க கைப்பக்குவம் வரல. அம்மாவுக்கே அது வராது. லீவுக்கு போகும் போதெல்லாம் கழி கிண்டுவாங்க. அதுவும் மழைக்காலத்துல சூடா கேப்பக்கழியும், காரசாரமா நாட்டுக்கோழிக் குழம்பும் அந்த தாவாரத்துல உக்காந்து சாப்புடும் போது, சுடச்சுட தொண்டையில இறங்கும் பாருங்க, அத அடிச்சுக்க வேற டிஷ்ஷே இல்ல” என தனைமறந்து சிலாகித்தவள், மாமன் முகத்தில் தெரிந்த மாற்றத்தில் சட்டென பேச்சை நிறுத்தியவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள் தன் மடத்தனத்தை உணர்ந்து. சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கை தட்டிலேயே நின்றது. 

‘அமிர்தா உனக்கு அறிவே இல்ல’ என தனக்குத்தானே மனதிற்குள் குட்டிக் கொண்டவள் கண்களைச் சுருக்கி மாமனிடம் மன்னிப்பை யாசிக்க, சுதாரித்தவன்,

“சாப்ட்டுப் பாக்கணும்னு அவசியமே இல்ல, நீ சொன்னதே சாப்பிட்ட மாதிரிதான் இருந்துச்சு. இதுக்கு கருவாட்டுக் குழம்பு காம்பினேஷன விட்டுட்ட” என்றான் அவனும் சிரித்துக்கொண்டே இலகுவாக.

“நான் முதல்ல அதத்தான் சொன்னேன். மாஸ்ட்டர்தான் கருவாட்டுக் குழம்புனா உங்களக் கேக்கணும்னு சொல்லிட்டாரு. அதனாலதான் நாட்டுக் கோழிக் குழம்பு.”

“அதானே பாத்தேன். எதையும்விட்டு வைக்க மாட்ட போலயே. கல்யாணம் பண்ணினா ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பாட்டு பாடுவேன்னு நல்லா தெரிஞ்சு போச்சு.” என்றான் மென்னகை ஒன்றை முகத்தில் ஏந்தி.

“என்ன பாட்டு?

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன்குழம்பு என்ன இழுக்குதய்யானு பாடிட்டு தூங்கப் போற” என கூறிவிட்டு வாய்விட்டு சிரிக்க புரையேறியது. 

“இதுக்குதான் மத்தவங்க சாப்டறத கிண்டல் பண்ணக் கூடாதுங்கறது” என வேகமாக எழுந்தவள் தலையில் தட்டி தண்ணீர் டம்ளரை எடித்து நீட்டினாள். வங்கியவன் தண்ணீரைக் குடித்துக்கொண்டே கண்களை மட்டும் உயர்த்தி அவள் முகம் பார்க்க, 

”என்ன” என புருவம் உயர்த்தி, ஒற்றைச் சுழிப்பில் கொக்கி போட்டாள் கோதை.

“எத்தனை நாள் வஞ்சம் இது. தட்டின தட்டுல கபாலம் கழுத்துக்கு வந்துருச்சு” என சிரித்தான்.

”நாங்க எல்லாம் வஞ்சம் வச்சுத்தட்டுனா நேரடியா கபால மோட்ஷம்தான்” என அவளும் மாமனோடு சேர்ந்து சிரித்தாள்.

நல்லா கேட்டுக்கோங்க மக்களே! லவ் பண்ணும் போதும் எங்களுக்கிடையில ஒன்னுமே இல்லைனுட்டுதான் எல்லாமே பண்ணுனாய்ங்க. இப்பவும் இன்னும் செத்த நேரத்துல, நீ யாரோ நான் யாரோன்னு போகப்போறவிங்கதான் ஃபர்ஸ்ட் நைட் வரைக்கும் பேசுறாய்ங்க. இதுக்கு நான் பொறுப்பு இல்ல மக்களே என சொல்லி புலம்பக்கூட ஆளில்லாமல் தனியே புலம்பி நின்றார் நமது மனசாட்சியார். 

“மண்டபம் எல்லாம் முடிவாகிருச்சா?” என நடப்புக்கு வந்தாள் அமிர்தா.  

“ம்ம்ம்… கொஞ்சம் அவுட்டர்லதான் கெடச்சுருக்கு. பரவாயில்ல வர்றவங்களுக்கு வண்டி ஏற்பாடு பண்ணிக்கலாம். நாளைக்கு நல்ல நாளுன்னு முகூர்த்த புடவையும், மாங்கல்யமும் எடுக்கப் போறோம். நீயும் வா. அக்காவுக்கும் கால் பண்றேன். ரெண்டு பேரும் வாங்க” என்றான். 

“அப்ப இங்க யாரு பாக்குறது?”

“ஒரு நாள்தானே. அதெல்லாம் பாத்துப்பாங்க.” மற்ற விஷயங்களையும் பேசிக்கொண்டே அவள் பரிமாற சாப்பிட்டு முடித்தான். 

எழுந்து கைகழுவி வர, அதற்குள் ஒதுங்க வைத்திருந்தாள். 

“ஓரமா எடுத்து வை. வந்த எடுத்துப்பாங்க. உன்கிட்ட பேசணும்” என்றான் கைகளைத் துடைத்துக் கொண்டு. இன்று சகஜமாகப் பேசியதில் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுதே பேசி விடுவோம் என முடிவெடுத்தான்.

அவளும் எதிரில் உட்காரப் போக, 

“இங்க வா!” என சோஃபாவிற்கு அழைத்தான். மறுக்காமல் சென்று சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். எப்படி ஆரம்பிப்பது என்று உள்ளுக்குள் யோசனை ஓடியது. தொண்டையைச் செறுமிக் கொண்டவன், ஒருகாலை மடக்கி அவளைப் பார்த்து திரும்பி அமர்ந்தான்.

“அமிர்தா, இன்னும் ஒருவாரத்துல காயத்ரிக்கு கல்யாணம்” என கல்யாணத்திலிருந்து பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தான்.

“அதுதான் தெரியுமே?” என்றாள்.

“தேன்மொழிக்கும் அழகருக்கும் அதுக்கு முதல் நாளே நிச்சயம்” என்றான் அடுத்து.

“அது தான் தெரியுமே?” என்றாள் மீண்டும். 

“ஆனா அவங்க கல்யாணதேதி இன்னும் முடிவாகல.”

“அதுவும் தெரியுமே?” எனக்கூற அவனுக்கு சிரிப்பு வந்தது. 

“இந்த ரெண்டு விசேஷம் முடிஞ்சதும் பொண்ணு கேட்டு வரலாம்னு இருக்கேன்” என்றவன் அவளை உற்றுப்பார்க்க, 

“யார?” என்றாள் விட்டேத்தியாக.

“உன்னைத்தான்”

“யாருக்கு?”

“எனக்குத்தான்.”

“ஹோஓ… இது தெரியாதே.” என்றாள் அசட்டையாக.

“தேன்மொழி கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம கல்யாணம்.” என்றவனை கணநேரம் உற்றுப்பார்த்தவள், தேன்மொழிதான் அண்ணன்  கல்யாணம் முடித்தால்தான் நான் முடிப்பேன் என வீம்பில் இருக்கிறாளே என்பதை அறிந்தவள்,

“அப்ப உங்க தங்கச்சிக்காகத்தான் இந்தக் கல்யாணமா?” என பதில் கேள்வி கேட்க,

“அமிர்தா, நான் சொல்ல வர்றத, இப்படி ஊட ஊட பேசாம முழுசா பொறுமையக் கேளு” என்றவன், மெதுவாக அவளது வலக்கையை எடுத்து தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டவன் பார்வை கைமீதே இருக்க,

“இன்னும் நீங்க விஷயத்துக்கே வரல.” என்றவளை நிமிர்ந்து பார்த்தான்.

“என்னைய மஞ்சுளாம்மா கண்டிச்சதோ, அடிச்சதோ, திட்டினதோ இல்ல அமிர்தா” எனக் கூற, இதென்ன சம்பந்தமில்லாத பேச்சு என நினைத்தவள்,

“அந்த அளவுக்கு உங்க மேல பாசம்” என்றாள்.

“அப்ப உங்க அம்மாவுக்கு உன்மேல பாசம் இல்லைங்கறியா?” எனக் கேட்டவனைப் புரியாமல் பார்த்தாள்.

“தேன்மொழிய கண்டிச்ச அளவுக்கு என்னைய அவங்க கண்டிச்சது இல்ல. என்மேல பாசம் காமிச்ச அளவுக்கு தேன்மொழி மேலகூட பாசம் காமிச்சது இல்ல. அவங்களுக்கு தேன்மொழியவிட நான்னா ஒருபடி ஒசத்திதான். இதச்சொல்லியே சின்ன வயசுல தேன்மொழியக்கூட வெறுப்பேத்தியிருக்கேன். இப்ப யோசிச்சுப் பாக்கும் போது பிள்ளைய கண்டிக்கணும்னாக்கூட உரிமையிருக்கணுமோனு தோணுது அமிர்தா. இது என்னோட ஊகமாக்கூட இருக்கலாம்” சற்று நிறுத்திவிட்டு அவளை ஊன்றிக் கவனிக்க, அவளும் சலனமின்றி அவனைப் பார்த்தாள்.

“இது வளக்குறவங்களுக்கும் தத்துப் பிள்ளைக்கும் இடையில இருக்குற ரொம்ப சென்சிடிவ் ஃபீலிங். அவங்களுக்கு எங்க என்னைய அடிச்சாலோ திட்டினாலோ யாராவது ஏதாவது சொல்லிருவாங்களோங்கற பயம். நீ பெத்த பிள்ளையாயிருந்தா இப்படிதான் நடத்துவியான்னு கேட்டுருவாங்களோங்கற நெருடல் அவங்களுக்குள்ள இருந்துருக்கோனு தோனுது. தத்தெடுத்து வளக்குறதுலயும், மூத்தகுடியா பிள்ளைய வழக்குறதுலயும் இந்த சங்கட்டமெல்லம் இருக்கு. அவங்க தப்பே பண்ணினாலும் சட்டுனு அதட்ட முடியாது. நம்ம பெத்த பிள்ளைய அடி வெளுத்து வாங்குவோம். அது வேற விஷயம். பெத்தவ அடிக்கிறான்னுட்டு போயிருவாங்க. சின்ன வயசுல நானும் தேன்மொழியும் சண்டை போடும்போது எம்மேல தப்பு இருந்தாலும் அம்மா தேன்மொழியத்தான் கண்டிப்பாங்க. என்னைய இதுவரைக்கும் ஒரு வார்த்தை சொன்னதில்ல. ஒருவேள எனக்கே கூட இப்படித் தோணியிருக்கலாம். இது நாளைக்கி ஆதினிக்கும் தோணும். நீ கண்டிச்சாலோ, அதட்டினாலோ நீங்க பெத்த பிள்ளைனா இப்படிப் பண்ணுவீங்களானு அவளே கேட்க வாய்ப்பிருக்கு. இதுல அகிலாண்டம் அத்தைவேற அவளத் தூண்டிவிடவும் வாய்ப்பிருக்கு. நாய்வால் மாதிரி சிலர நிமித்த முடியாது. திருத்த நினைக்கிறது நம்மோட முட்டாள்தனம்” என்றவன் அவள்‌ முகத்தை நிமிர்ந்து பார்க்க, இப்பொழுது அவள் முகம் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது மெல்ல புரிய ஆரம்பித்தது. 

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள்ளேயே, இளைய பிள்ளை பிறந்த பிறகு‌, மூத்த பிள்ளைக்கு பொறாமை எழுவதுண்டு. இளைய பிள்ளைக்கு பால் கொடுக்கும் பொழுதே மூத்தபிள்ளை ஏங்கிப் போகும் என மறைத்துக் கொடுக்கவேண்டி வரும். தூங்கும் பொழுது கிள்ளி விடுவதும், யாருக்கும் தெரியாமல் அடிப்பது எல்லாம் நிகழும். இது என்னோட உடன் பிறப்பு என உணர்வு வர நாளெடுக்கும். அதுவும் அடுத்த பிள்ளைகள் தனது தம்பியையோ தங்கையையோ அடிக்கும் பொழுதுதான் அந்த உணர்வு மேலெழும். 

தொப்புள் கொடி பந்தம்போல் இல்லை, மாற்றான் தாய் பிள்ளைகளின் பந்தம். இது உணர்வுகளால் கட்டப்படுவது. நூலிழை அளவேனும் உணர்வுப்போராட்டம் இருக்கத்தான் செய்யும். 

இது பெற்ற பிள்ளையும், வளர்ப்பு பிள்ளையும் ஒரே‌வீட்டில் வளர்க்கும் பெற்றோருக்கும் வருவதுண்டு. ருத்ரனுக்கும் உண்மை சிறுவயதிலேயே தெரிந்திருந்தால் அவனுக்குள்ளும் இத்தகைய போராட்டங்களும், தங்கைக்கும் அவனுக்குமான ஒப்பீடும் அவனுக்குள்ளும் நிகழ்ந்திருக்கலாம். அதை நினைத்தே மஞ்சுளாதேவியும் உண்மையை மறைத்தது. தேன்மொழி பிறக்காமல் இருந்திருந்தால் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

’என்னைத் திருமணம் செய்தால் என் குழந்தையிடம் உன்னால் அதிக உரிமை எடுத்துக்கொள்ள முடியாது என்கிறானா. பாசம் காண்பிக்கும் அளவிற்கு உன்னால் உரிமை எடுத்து கோபம் காமிக்க முடியாது என சொல்ல வருகிறானா’ என யோசனை மனதிற்குள் ஓட, 

“இன்னொரு முக்கியமான விஷயம். இப்ப நான், நீ விரும்பின தேன்மொழியோட அண்ணன் இல்ல. ஒரு பொண்ணோட வாழ்ந்தவன். ஒரு குழந்தைக்கு தகப்பன். நமக்குள்ள எது ஒன்னுனாலும் குழந்தையை முன்னிட்டே முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும்” என அவன் சொல்லிக்கொண்டே போக,

இவனுக்கு என்மீது ஆசை இல்லையா என மனம் முரண்டியது. “நான் மட்டும்தான் ஆசப்பட்டேனா” என்றாள் நைந்த குரலில். அவளது எண்ணவோட்டம் புரிந்தது. கன்னியின் கைகளை எடுத்து கன்னத்தோடு வைத்துக் கொண்டவன் கனிந்த குரலில்,

“என் மனசுக்குள்ள சிம்மாசனம் போட்டு உக்காந்த இந்த அல்லிராணி இப்ப என்னோட அக்கா மகளும் கூட. ஒரு தாய்மாமனா அவளோட எதிர்கால வாழ்க்கையிலும், சந்தோஷத்துலயும் எனக்கும் அக்கறையிருக்கு. ஆதினி அமரா மாதிரியே வேற இருக்கா.”

“அதுக்கு, பிள்ள பெத்தவ மாதிரி இல்லாம வேற யார மாதிரி இருக்கும்?” என்றவள் பேச்சு சிடுசிடுத்தது. 

“என் மேல அப்பாவுக்கு பாசம் வராமப் போனதுக்கு காரணமே நான் எங்க அப்பா மாதிரியே இருந்ததுதான். பாக்குறவங்க எல்லாம் அப்படியே அப்பா மாதிரின்னு சொல்லும் போது பெருமையா அவரப் பாப்பேன். ஆனா அவரு முகத்தத்திருப்பிட்டு போயிருவாரு. அந்த வயசுல அப்பாவுக்கு என் மேல பாசமே இல்லைனு அம்மாகிட்ட சொல்லி அழுதிருக்கேன். நான் விளையாண்ட கபடிகூட அவருக்கு எங்க அப்பாவ ஞாபகப்படுத்தியிருக்கு. அதனாலேயே என்கிட்ட அவரால ஒட்ட முடியல. ஆதினியையும் பாக்குறவங்க எல்லாம் இதே வார்த்தை சொல்லுவாங்க. அப்ப உனக்கும் உருத்தலாம். நமக்குப் பிறந்திருக்க வேண்டிய குழந்தைனு தோணலாம்” என அவன் பேச்சை நிறுத்த,

அவளுக்கும் முதன் முதலில் குழந்தையை கையில் ஏந்தியபோது, அவளையும் அறியாமல் அந்த ஏக்கம் பிறந்ததுதானே. இந்தக் குழந்தை என்னுடையதாக இருந்திருக்க வேண்டியது என மனம் அந்தக் கணம் காற்றிலாடும் தீபச் சுடராய் படபடத்ததுதானே.

“அப்ப நம்ம கல்யாணம் பண்ணுனா, அமராவோட நெனப்புல ஆதினிய சரியா கவனிக்க மாட்டேன்னு சொல்ல வர்றீங்களா? என கையை வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டவள் பட்டென எழுந்து கொண்டாள். 

“இதுக்குதான் மொதல்லயே சொன்னேன். சொல்ல வர்றத சரியா புரிஞ்சுக்கோனு. நான் அந்த அர்த்தத்துல சொல்லல. பின்னாடி வரப்போற பிரச்சினைகளைப் பத்தி பேசுறேன். எனக்கும் நம்ம விஷயம் தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டாளேங்குற கோபம் அமராமேல இருந்துச்சு. அதனாலதான் அவள சரியா கவனிக்கலைங்கிற, குற்ற உணர்ச்சி இப்பவும் இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, உயிரோட இருந்தப்பவிட, செத்த பின்னாலதான் அவ நெனப்பு அதிகம்.” என அவன் பேச்சை நிறுத்த, 

“யாரு சொன்னது ஆதினி அமராவோட பிள்ளைனு. சுமந்தது மட்டும்தான் அவ. எங்கே அந்த நேரத்துல என் நெனப்பு உங்களுக்கு வரலைன்னு என் தலைமேல கைவச்சு சொல்லுங்க. இப்படியே நான் ஒதுங்கிக்கிறேன்” என கண்களில் கண்ணீர் பொங்க கோபமாகக் கேட்க உள்ளுக்குள் நொறுங்கிப் போனான். 

மற்றவளை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணோடு வாழ்வது அவளுக்கு செய்யும் துரோகம் என்றெண்ணி இவன் என்னதான் மறக்க முயற்சி செய்தாலும் அவள்தான் மறக்கவிடவில்லையே. அணைத்தாலும் அவள் நினைப்பா என்ற கேள்வி, விலகினாலும் அவள் நினைப்பா என்ற கேள்விதானே அமராவதியை இவனிடமிருந்து தள்ளி வைத்தது.

“நாம ஒன்னும் ரிஷிகிட்ட சாபம் வாங்கினவங்க இல்ல அமிர்தா. சட்டுனு தொடச்சுப்போட்ட மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு வாழ. விதிகிட்ட சாபம் வாங்கினவங்க. கடைசி மூச்சு நிக்கிறவரைக்கும் நெனப்பு மனசுக்குள்ள ஒரு மூலையில இருந்துட்டுதான் இருக்கும்.” வலித்துவந்த வார்த்தைகள் அவள் மனதை ரணமாக்கியது.

”நமக்கு மட்டும் ஏன் மாமா வரமெல்லாம் சாபமாப்போச்சு. அந்த சாபம்தான் உங்கள மறக்கவிடாமப் பண்ணுது” என தொண்டையடைக்க கேட்டவள் அதற்கு மேல் அங்கு இருப்புக் கொள்ளாமல் வெளியேறிவிட, அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்து விட்டான். 

“தவள… தவள… முடிஞ்ச கதைக்கு முற்றும் போட்டுட்டு, புதுக்கதைக்கு பிள்ளையார் சுழி போடாம உன்னைய யாரு பழசெல்லாம் பேசச்சொன்னது. உன் அல்லிராணி சொல்ல வந்தத சரியாப் புரிஞ்சுக்காம சொதப்பிட்டுப் போறா. பிள்ளையார் பிடிக்கபோய் குரங்கு ஆன கதையாப் போச்சு” என கைகட்டி வேடிக்கை பார்த்த மனசாட்சி தலையில் அடித்துக்கொண்டது.

வீட்டிற்கு வந்தவள் அம்மாவிடம் பொறிந்து தள்ளிவிட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். 

சிறிது நேரத்தில் அக்காவிற்கு அழைத்தான். 

“சொல்லு பாண்டியா.”

“என்னக்கா பண்றா?”

“உள்ள போய் கதவச் சாத்திக்கிட்டாப்பா. என்ன சொன்ன. அவ உன் புள்ள மேல உசுரையே வச்சுருக்கா பாண்டியா. அவகிட்ட அப்படி என்னத்தக் கேட்ட. ஆதினி என் பிள்ள இல்லையாம்மான்னு கேட்டு ஒரே அழுகை. அவ அதிகமா அழுதது, முதன்முதலா உன் பிள்ளைய கையில வாங்குனப்பதாம்ப்பா. அந்தளவுக்கு நான் என்பிள்ள அழுது பாக்கலடா”  என மகளிடம் தம்பியை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும், மகளை அழவிட்ட தம்பியையும் இடைக்குத்தலாக சாடினார். 

“அவ இனியும் அழக்கூடாதுங்கறதுதான் க்கா என்னோட ஆசையும்” என்றவன் வார்த்தைகள் தவித்து வந்தது. 

“நான் பாத்துக்கிறேன். நாளைக்கி புடவையும் மாங்கல்யமும் எடுக்கப்போறோம். அவளக் கூட்டிட்டு வாக்கா.”

“இப்ப இருக்குற நெலமைக்கு வருவாளான்னு தெரியல. வந்தா கூட்டிட்டு வர்றே.” எனக்கூற சரியென அழைப்பைத் துண்டித்தான். 

இரவு வீட்டிற்கு வர, மஞ்சுளா மகனுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

தனதறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தவன், அப்பாவின் அறைக்கு சென்று பார்த்துவிட்டு வந்தான். மருந்து சாப்பிட்டு நல்ல உறக்கத்தில் இருந்தார். 

“எப்படித்தான் சத்தம் கேக்குமோ தெரியல. தூங்கிட்டு இருந்தாலும் எந்திரிச்சுர்றா” அப்பனின் வண்டிச் சத்தத்தில் கண்விழித்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வர, அப்பனிடம் தாவியது பிள்ளை. இருவரும் கொஞ்சிக்கொள்ள, அலுத்து வந்த உடலும் மனமும் மாந்தளிர் கரம்பட்டு அலுப்பு மாயமானது அப்பனுக்கு. 

“அண்ணா, இன்னைக்கி சோஃபாவப் பிடிச்சு எந்துரிச்சு நின்னா”  இன்னும் சகஜமாக அண்ணனிடம் பேசவில்லை என்றாலும் அண்ணன் மகள் எழுந்து நின்ற சந்தோஷத்தை, அண்ணனிடம் பகிராமல் இருக்க முடியவில்லை. மனம் துறுதுறுத்தது. சந்தோஷத்தை அடக்க முடியாமல் கூறிவிட,

“நிஜமாவா!” என பொங்கும் பாலாய் குப்பென மலர்ந்தவன், மகளை கீழே இறக்கிவிட்டு சற்று நகர்ந்துகொள்ள, தவழ்ந்துவந்த பூப்பந்து தாவி அப்பனின் காலைப் பிடித்து தள்ளாடி எழுந்து நின்றது. அடுத்த சில கணங்களில் நிற்க முடியாமல் தொப்பென விழ, 

“அச்சச்சோ… ஆதி குட்டி விழுந்துட்டாங்களா” என வேகமாக தேன்மொழி தூக்கவர, அதற்குள் பதறித் தூக்கியவன் கண்கள் கலக்கமாக கால்களை வேகமாக ஆராய்ந்தது. மேஜை மீது நிற்க வைத்துப் பார்த்தது. இரண்டு கால்களும் நன்றாக ஊன்றி நிற்பதைப் பார்த்தாலும் மனம் சமாதானம் ஆகாமல் அடித்துக் கொண்டது. கால்களை நீவிவிட்டு ஆராய்ந்தது. 

‘ண்ணா, நீ பயப்படுற மாதிரியெல்லம் ஒன்னும் இல்லண்ணா. அவ நல்லா நடப்பா. இப்பதானே பத்து மாசமாகுது. உன்னைய மாதிரியே கபடி ப்ளேயர் ஆவா பாரு” என அண்ணனின் பயம் அறிந்து ஆறுதல் கூற, அவனுக்கு தான் சமாதானம் ஆகவில்லை.

“ருத்ரா, அவ ஜாடை தான் அமரா மாதிரி. சுறுசுறுப்பு, நடவடிக்கையெல்லாம் அப்படியே உன்ன மாதிரி தாம்ப்பா. உன்னைய வளத்த எனக்குத் தெரியாதா. தவக்க ஆரம்பிச்சதுல இருந்து ஒரு இடம் தங்குறதில்ல. வீடே சுத்தி வர்றா. அப்படியே துறுதுறுன்னு உன்னைய மாதிரிதான் என் பேத்தி இருக்கா பயப்படாதே. இன்னைக்கி தானே மொதமொதன்னு எழுந்து நிக்கிறா. கால் நடுங்கத்தான் செய்யும்” என மஞ்சுளாவும் மகனைத் தேற்றினாலும்,

அவன் பிள்ளையை மேஜை மீது நிற்க வைத்திருக்க, கால்கொலுசு சலசலக்க பிஞ்சுபாதங்களை மாற்றி மாற்றி உதைத்து குதிக்க, அப்பொழுதுதான் மனம் சற்று மேவியது அப்பனுக்கு. அணைத்து ஆறுதல் பட்டுக்கொண்டவனுக்கு கண்கள் நீர்ப்படலம் பூத்தது. 

கண்ணான கண்ணே…

கண்ணான கண்ணே…

என் மீது சாய வா…

புண்ணான நெஞ்சை…

பொன்னான கையால்…

பூ போல நீவ வா…

 நான் காத்து நின்றேன்…

காலங்கள் தோறும்…

என் ஏக்கம் தீருமா…நான் பார்த்து நின்றேன்…

பொன் வானம் எங்கும்…

என் மின்னல் தோன்றுமா…

தண்ணீராய் மேகம் தூறும்…

கண்ணீர் சேரும்…

கற்கண்டாய் மாறுமா…

ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

இது அவனது வளர்ந்த குழந்தைக்காகவும்தான். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top