“ம்ம்மாஆஆ… என்னம்மா இது?”
“ஏன்டி இப்படிக் கத்துற?” பட்டுப் புடவையின் மடிப்பை நீவியவாறே கேட்டுக்கொண்டு சரஸ்வதி வர,
“ஏம்மா… வெறும் சாம்பார மட்டும் வச்சுட்டுப் போனா எப்படிம்மா சாப்டறது? பொட்டோட்டோ ஃப்ரை எங்கம்மா?”
“அடத் தீனிப் பண்டாரமே… இதுக்கா இப்படிக் கத்துன? ஏற்கனவே அந்த சைஸ்ல தான இருக்க? இதுல எப்பப்பாரு உருளைக்கிழங்கு ஃப்ரை கேக்குது.”
“வெறும் சாம்பார் சோத்த எப்படிம்மா சாப்டறது, தொட்டுக்க ஒன்னுமில்லாம?”
“சாப்பிடும் போது அப்பளம் போட்டுக்க… ஃப்ரிட்ஜ்ல தயிர் இருக்கு… ஊறுகா எடுத்துக்க… ஏழுகளுத வயசாகுது இன்னும் வெளிய கிளம்பினா எல்லாம் செஞ்சு வச்சுட்டுப் போகவேண்டியதா இருக்கு.”
“அப்பா… இங்க பாருங்கப்பா… குழம்ப மட்டும் வச்சுட்டுப் போறாங்க, கேட்டா நீயே செஞ்சுக்கனு சொல்றாங்கப்பா.” என்று கிளம்பித் தயாராகி வந்த தந்தையிடம் புகார் சொல்ல,
“ஏன் சரசு? புள்ள என்ன கேக்குதோ செஞ்சு வச்சுட்டு கிளம்பலாம்ல.”
“ஏங்க… ஏற்கனவே லேட்டாயிருச்சுனு அவசரமாக் கிளம்பிட்டு இருக்கோம். கல்யாணம் வேற உங்க வழி சொந்தத்துல. எதுடா குறைனு தேடுவாங்க. இப்பப்போயி உருளைக்கிழங்கு ஃபிரை கேக்குறா.”
“ஒரு உருளக்கிழங்கு ஃப்ரைக்கு இத்தனை அக்கப்போரா? அதுக்கு ஏம்மா அப்பா வழி சொந்தத்தையெல்லாம் இழுக்கற?” என்று தந்தைக்கு கோடி காட்ட,
“அவ அப்படிதாம்மா… என்னமோ இவங்க வீட்டாளுக எல்லாம் லேட்டா போனா எதுவுமே சொல்லாத மாதிரி.”
“ம்ம்… அவங்கள எல்லாம் எனக்கு சமாளிக்கத் தெரியும். உங்க வீட்டு ஆளுங்ககிட்டதான் வாயே தொறக்க முடியாதே?”
“பாரு ஆதிம்மா, உங்கம்மா வாய்க்கும் பூட்டு போட ஆளிருக்காங்க.”
“என்ன பண்றது? எத்தன வயசானாலும், பொறந்த வீட்டுல காட்டுற சலுகைய, புகுந்த வீட்டுல காட்ட முடியறது இல்லைல்ல…” என்று சரஸ்வதி அங்கலாய்க்க,
“அதுக்குதாம்மா நான் இன்னும் கொஞ்சநாள் பொறந்த வீட்லயே இருக்கறேனு சொன்னா யாரு கேக்குறாங்க?” என்றாள் ஆதியா.
“இவ வேற… நானே நம்ம வீட்ல இன்னும் கல்யாண சாப்பாடு போட நேரம் வரலியேனு கவலைப்பட்டுட்டு இருக்கே…”
“ம்மா… நானே அந்த ஜோஸியருக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு இருக்கே. இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணத்தைத் தள்ளிப் போட்டதுக்கு.”
ஆதியா கல்லூரியின் இறுதி ஆண்டில் இருக்கும் பொழுதே சரஸ்வதி ஜாதகக் கட்டைத்தூக்க, பார்த்த ஜோஸியர்கள் எல்லாம் இப்பக் கல்யாணயோகம் கூடி வரவில்லை எனக்கூறி விட்டனர். இன்னும் இரண்டு வருடம் கழித்து செய்தால் நன்றாக இருக்கும். அதற்கு முன்பே செய்தாலும் பிரிந்துதான் இருக்க வேண்டி வரும் எனக்கூறிவிட, சரஸ்வதி ஜாதகக் கட்டை கீழே வைத்துவிட்டார். ஆதியா அடுத்த டிகிரிக்குப் புத்தகக் கட்டைத் தூக்கி விட்டாள்.
“ஏன் சொல்ல மாட்ட? இப்பவே ஒரு சைஸாப் போய்க்கிட்டு இருக்க. இதுல வாயக்கட்டுறது இல்ல. பேசுறதுக்குனாலும் சரி, திங்கறதுக்குனாலும் சரி வாய் காது வரை நீளுது.” என மகளை கண்டிக்க,
“புள்ளய கண்ணு வைக்காத சரசு. ஜாடை உன்னை மாதிரிதானாலும் உடல்வாகு எங்க அம்மா மாதிரி கொஞ்சம் பூசுன உடம்பாப்போச்சு…”
அவளும் என்ன தான் செய்வாள். எவ்வளவு தான் வாயைக் கட்டுப்படுத்தினாலும் பசி வந்தால் பறக்கும் பத்தில், உணவுக்கட்டுப்பாடு முதலிடம் பிடித்து விடுகிறது.
“அதுக்குத்தான் கொஞ்சம் வாயக் கட்டு, குனிஞ்சு நிமிர்ந்து வேலையப் பாருன்னு சொல்றது. இவ என்னடான்னா, அப்பளம் போட்டுக்க சொன்னதுக்கே உங்ககிட்ட புகார் வாசிக்கறா. நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க.”
“அம்மா, நான் என்ன உடம்பை ஃபிட்டாக்கி மாடலிங்கா பண்ண போறேன்.”
“அதானே, குடும்பப் பொண்ணுக்கு எதுக்கு ஃபிட்னஸ். எம்பொண்ணு இப்படி இருந்தாதான் அழகு. அமுல்பேபி மாதிரி. அதொன்னுமில்ல ஆதிமா… என்னதான் நீ அவ ஜாடையில இருந்தாலும், உன்னளவுக்கு இல்லாம வத்தலும் தொத்தலுமா இருக்காள்ல. அதுதான் அவளுக்கும் கொஞ்சம் பொறாமை.”
“என்னது… நானா… வத்தலும் தொத்தலுமாவா? என்று பொங்கியவர்,
“ஆதி… தண்ணி கொண்டு வா!” என மகளை உள்ளே அனுப்பியவர்,
கணவனின் அருகில் நெருங்கி, “எம்பொண்ணுக்கு அம்மா மாதிரி இல்லடி, அக்கா மாதிரி ஃபிட்டா இருக்கேனு சொல்லுவீங்கள்ல, அப்ப வச்சுக்கறேன் உங்கள.” என்று மகளுக்குக் கேளாமல் கிசுகிசுத்தார் சரஸ்வதி.
பள்ளி செல்லும் நாட்கள்தவிர வேறுஎங்கு சென்றாலும், கிளம்புமுன் மகளோ அல்லது மனைவியோ அவருக்குத் தண்ணீர் தருவது வழக்கம். அதைக் காரணம்காட்டி மகளை உள்ளே அனுப்பினார்.
“ஏன்டி… அதெல்லாம் ஒருமூடுல சொல்றது. அதெல்லாமா சொல்லிக்காட்டுவ?” என்று தன்னைச்சீண்டிய கணவரை முறைத்துக் கொண்டிருந்தார்.
“என்னப்பா பார்வையே சரியில்ல… அனல்பறக்குது.” என்று சொம்பில் தண்ணியோடு வந்தவள் கேட்க,
“என்னம்மா பண்றது? தமிழ் டீச்சரா இருந்தா காதல், கவிதைனு இருக்கும். நமக்கு வாச்சதுதான் பயாலஜி ஆச்சே. அதுதாம்மா அனல் பறக்குது.”
“அப்பா தமிழ் எப்பவும் கற்பனைக்கு அழகு. பாயோலஜிதான் ப்ராக்டிகலுக்கு உதவும்.” என்று தந்தையிடம் கூறிவிட்டு, சிரிப்போடு தாயைப் பார்த்து கண் சிமிட்ட,
“கர்மம்…கர்மம்.” என்று தலையிலடித்துக் கொண்டவர், “கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா, வயசு வித்யாசமில்லாம, யாருகிட்ட எதைப்பேசணுங்கற விவரமிருக்கா… உனக்கு வாய்க்கொழுப்பு கூடிப் போச்சு. எல்லாம் இவர் கொடுக்குற இடம்.” என்று சரஸ்வதி தன் அர்ச்சனையை ஆரம்பிக்க…
“எதுவாயிருந்தாலும் அம்மா அப்பாகிட்ட ஃப்ரியா பேசுனு சொல்ல வேண்டியது. ஏதாவது சொன்னா விவஸ்தையில்லைனு திட்ட வேண்டியது.” என்று ஆதியா தனக்குள் முனங்க,
“என்னடி அங்க முனங்கற?”
“ம்ம்… ஒன்னுமில்லம்மா… யாரோ இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லேட்டாச்சுன்னாங்க, ஆனா என்னைத் திட்டறதுனா மட்டும் நேரம் போறது கூடத்தெரியாதே.”
“இவகூடப் பேசுனா, முகூர்த்தத்துக்குப் போகமுடியாது. பந்திக்குத்தான் போகணும்.” என்று கூறியவர் மகளுக்கு ஆயிரம் முன்னெச்சரிக்கைகள் செய்துவிட்டு கிளம்பினர்.
கதவை நல்லாப் பூட்டிக்கோ. ஃபோனப் பக்கத்துலயே வச்சுக்கோ. எந்தசத்தம் கேட்டாலும் தேவையில்லாமல் கதவைத்திறக்காத. முடிஞ்சளவுக்கு இருட்டறதுக்குள்ள வந்துருவோம். இப்படி பல பத்திரங்கள் சொல்லிவிட்டுக் கிளம்பினர்.
சென்றவர்கள் அறியவில்லை. இதுதான் தங்கள் மகள் தங்களிடம் நடத்தும் கடைசி வாயாடல் என்பதை.
பேதையும் உணரவில்லை. இதுதான் தன் அம்மாவிடம் நடத்தும் கடைசி வாய்ச்சண்டை என்பதை.
அலுவலகத்தில், தன் மனதில் நிறைந்திருந்தவனைக் கண்ணில் நிறைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவளுக்கு, அதுவரை அழுத்திய மனபாரம், கண்களில் கண்ணீராக வெளியேறியது.
தன் பெற்றோரின் புகைப்படம் கண்டவளது மனம், அவர்களின் இறுதிநாள் ஞாபகம்வர அனாதரவாய் உணர்ந்தாள். மீண்டும் மழலையாய் அன்னை மடிசேர மனம் ஏங்கியது.
விதி தன்னவனைக் கொண்டுவந்து சேர்க்க அந்தநாளைத் தேர்ந்தெடுத்ததா? இல்லை, பெற்றோர் இடத்தில் இவன்தான் இனி உனக்கு என்று அவனைக் கொண்டுவந்து சேர்ந்ததா?”
விதியாடும் விளையாட்டிற்கு விடை யார் சொல்வது.
மடி ஏந்தியவர்களோ மறைந்த நிலையில். மடி தாங்கியவனோ மறந்த நிலையில். மங்கையவளோ மனம் வெதும்பிய நிலையில்.
சண்முகம், லஷ்மி தம்பதியர் எவ்வளவுதான் அவளுக்கு ஆதரவாக இருந்தாலும், வெறுமையை மனம் உணரும் நேரங்களில் மனம் விரும்புவது என்னமோ தன் மணாளனின் தோள்களைத்தான்.
அவன் தோள்சேரவும், அவனை மடிதாங்கவும் மனம் ஏங்கியது.
அந்த நாள்… மகளிடம் வாயாடி விட்டு பட்டுச்சேலை சரசரக்க, இருவரும் சரசமாக பேசியபடி சென்ற பெற்றோரை, மீண்டும் அவள் கண்டது என்னமோ, வெள்ளைத் துணியில் சுருட்டப்பட்ட பொட்டலமாகத்தான்.
திருமணத்திற்கு சென்றவர்கள், திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. மண்டபத்தோடு திரும்ப முடியாமல், கொஞ்சம் நெருங்கிய சொந்தம் என்பதால், மணமக்களோடு வீடுவரை செல்ல வேண்டியதாகிவிட்டது.
“ஏங்க! நம்ம ஆதியா கல்யாணத்தையும் இதே மாதிரி பெருசா பண்ணனுங்க.” மகளைக் கல்யாணக் கோலத்தில் தன் மணக்கண்ணில் கண்டவாறே சரஸ்வதி தன் கணவனிடம் கூற,
“முதல்ல நல்ல மாப்பிள்ளை அமையட்டும். ஜமாய்ச்சுடலாம். புள்ளயும் படிப்ப முடிக்கணும்.”
“ஜோசியர் சொன்ன ரெண்டு வருஷத்துல, ஒருவருஷம் ஓடிருச்சு. இப்பவே பாக்க ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்.”
“ஒத்தப்புள்ளயா போச்சு. எப்படி விட்டுட்டு இருக்கப்போறோமோ தெரியல சரசு.”
“எனக்கும் அத நினைச்சாதாங்க கவலையா இருக்கு. இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கா.”
கேசவன் காரோட்ட, மகளின் கல்யாணக்கனவோடு, அவளின் பிரிவைப்பற்றியும் பேசிக் கொண்டே வந்தார்கள்.
************
அதே வேளையில், கோவை நெடுஞ்சாலை…
“ஏய்! காரை நிப்பாட்டு. குடிச்சிருக்கியா? குடிச்சுட்டு எப்படி நீ டாக்ஸி ஓட்டுற. நானும் இது தெரியாம கார்ல ஏரித்தொலைச்சுட்டே.” என அதட்டியவன்,
‘சற்றுமுன் தான் குடித்திருக்க வேண்டும். இப்பொழுதுதான் வித்யாசம் தெரிகிறது.’ என்று நினைத்துக் கொண்டே டாக்ஸி ட்ரைவரிடம் கூற,
“சார் கவலைப்படாதீங்க. எவ்ளோ குடிச்சாலும் நம்ம வண்டி ஸ்டெடியாப்போகுங் சர்.” என்று வாய்தான் கூறியதேதவிர கார் கொஞ்சம் தடுமாறியது.
“உன் ஸ்டெடியப் பாத்தாலே தெரியுது. முதல்ல நிப்பாட்டு.” என்று கூறியவன் தனது பேக்பேக்கை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானான்.
“சார், இந்த எடத்துல எறங்கி எப்படிப் போவீங்க. இருட்டுல எவனும் லிஃப்ட்டு கூடத்தரமாட்டான்.”
“நான் நடந்தேகூட கோயம்புத்தூர் போயிக்கிறே. நீ காரை நிப்பாட்டு.”
“இப்ப பாருங்க சர் நம்ம கன்ட்ரோல.” என்று கூறிய கார்டிரைவர், போதையில் வாகனத்தின் வேகத்தைக் கூட்ட,
“ஏய்ய்ய்…! சைடுல இருந்து ஒரு கார் மெயின் ரோட்டுல ஏறுதுபாரு!” என்று உள்ளிருந்து கத்த, அதற்குள், போதையில் இருந்ததினால், டிரைவரும் தன் கட்டுப்பாட்டை இழக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.
கிளைச்சாலையில் இருந்து, இடதுபுறமாகத் திரும்பி, கோயம்புத்தூர் சாலையில் கேசவன் கார் மேலேற, வலதுபுறமாக முழு வேகத்தோடு டாக்ஸி வந்து மோதியதால் கேசவனால் சுதாரிக்க முடியாமல் போய்விட்டது. மோதிய வேகத்தில் இவர்களது கார் தூக்கி எரியப்பட, காரின் முன்புறம் நசுங்கி இருவரையும் அழுத்த, மகளின் தற்காலிகப் பிரிவையே, ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள், நிரந்தரப் பிரிவை ஏற்றுக் கொண்டது எங்ஙனமோ?
டாக்ஸியும் தடுப்புச் சுவரில் பலமாக மோத முன்புறம் முழுதும் சேதமடைந்த நிலையில், டிரைவரும் பலமாகக் காயப்பட, உடம்பின் இரத்தத்தில் கலந்திருந்த ஆல்கஹால் அவனுக்கு இறுதி முடிவை எளிதாக்கியது.
டாக்ஸி கேசவன் காரோடு மோதிய வேகத்திலேயே, டாக்ஸியில் கதவு சரியாக லாக் செய்யப்படாத காரணத்தால், பட்டென்று திறந்து கொள்ள, உள்ளிருந்தவன் வெளியே தூக்கி வீசப்பட, லாவகம் புரிந்தவன் சட்டென்று உருண்டு ஒதுங்கினான்.
இருந்தும், இடது கால்வலி அவனுக்கு எலும்பு முறிவை உணர்த்திக் கொண்டிருக்க, சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட அரையடி உயர நடைபாதையில் பின்மண்டை அடிபட மயங்கினான்.
இரவு நேரமாதலால் அங்கு நடந்த விபத்து அறியப்பட சற்று தாமதமானது. அதற்குள் அவ்வழி சென்ற நம்நாட்டு இரு குடிமகன்கள், கீழே கிடந்தவனை, உயிர் சோதனை செய்வது போல் சென்று, யாரும் அறியாவண்ணம், அவனது செயின், பர்ஸ் முதலியவைகளை கைப்பற்றிக் கொண்டனர். மோதிரம் சற்று இறுக்கமாக இருந்ததால், கழற்றுவதற்குள் கூட்டம் சேர ஆரம்பிக்க, நல்லவர்களாக நூற்றியெட்டுக்கு அழைப்பை விடுத்துவிட்டு, சற்றுத் தொலைவில் கிடந்த அவனுடைய பேக்கையும் எடுத்துக் கொண்டு நழுவினர்.
‘இருட்டறதுக்குள்ள வந்துடறதா சொன்னாங்க… இன்னும் காணோம். வீட்ல புள்ள தனியா பயந்துகிட்டு இருப்பாளே, சீக்கிரம் வரணும்னு எண்ணம் இருக்கா? நம்மகிட்ட மட்டும் இப்படியிரு அப்படியிருனு ஆயிரத்தெட்ட சொல்ல வேண்டியது.’
பெற்றோர் வரத்தாமதமானதால் வந்த படபடப்போ? இல்லை அவர்களுக்கு நேர்ந்த முடிவை உள்ளுணர்வு உணர்த்தியதோ? ஏதோ ஒன்று அவளை அலைக்கழித்தது
ஃபோனில் அழைப்பு மணி ஒழிக்க, அழைப்பை ஏற்றவள், கேட்டசெய்தி தந்த அதிர்ச்சியில் வேரறுந்த மரமாக விழுந்தவளை, சண்முகம் வந்துதான் கதவை உடைத்து மயக்கம் தெளிவித்தார்.
சித்தம் கலங்கிய நிலையில் இருந்தவளை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரவு நேரமாதலால், மறுநாள் தான் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு, அவளது பெற்றோரை, அவர்களாக இருந்தவர்களை அதுவாக ஒப்படைத்தனர்.
சண்முகமும், லஷ்மியும் ஆதியாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வரைக்கும் கூட அவளுக்கு, அது தனக்கு வந்த தவறான தகவலாகத்தான் இருக்கும், எப்படியும் இது என்னோட அம்மா அப்பா இல்லை என்றுதான் சொல்லப் போகிறோம் என எண்ணிக்கொண்டு தான் வந்தாள். இன்னும் அவள் மூளை அந்தச் செய்தியை கிரகிக்கவில்லை.
“யாருங்க இங்க ஆக்ஸிடென்ட் கேஸோட சொந்தக்காரங்க?” என்ற குரலுக்கு, விபரம் தெரிந்து வந்திருந்தவர்கள் ஆதியாவை கைகாட்ட,
அவளிடம் கொடுக்கப்பெற்ற பொட்டலத்தைப் பிரித்தவள் மூளை நிதர்சனம் உணர, “அம்மாஆஆஆ…” என்று அலறியவளின் அலரலைக் கேட்ட கல்லும் கரைந்து அழுதிருக்கும் உயிர் இருந்திருந்தால்.
இரத்தக்கறை படிந்திருந்த அம்மாவின் நகைகளைப் பார்த்தவளுக்கு, இந்த நகைகளை அணிந்துகொண்டு அலங்காரத்தேராக தந்தையோடு கிளம்பிய அன்னையின் முகம் மட்டுமே அவள் நினைவில்.
“ஏம்ப்பா? ஏற்கனவே ஆக்ஸிடென்ட் கேசு. அவங்க பாடியக் கொடுக்கவும் இவ்ளோ நேரமாகிப் போச்சு. இனி வீட்டுக்கு எடுத்துகிட்டு போய் ஏன் அங்கிட்டு இங்கிட்டும் அலைக்கழிக்கணும். நேரடியா மின்சார மயானத்துக்கு கொண்டு போயிறலாம். அங்கேயே சாங்கியம் பண்ணிட்டு எல்லாம் முடிச்சறலாம்.” என்று வந்த சொந்தங்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுக்க,
எதையும் சிந்திக்கும் நிலையில் ஆதியா இல்லாததால் அதன்படியே செயல்படுத்தப்பட்டது.
சில நெருங்கிய சொந்தங்களோடு வீட்டிற்கு வந்தவள், வீட்டின் வெறுமையில் கதறியழ, தேற்றுவார் யாருமில்லை.
“மூனாநாளே காரியம் வச்சுறலாம். பையனா இருக்கான்… மத்த சாங்கியமெல்லாம் பண்ணுறதுக்கு?” என்று முடிவெடுத்து, காரியம் வரை உடனிருந்தவர்களும், நம்ம பையனக்கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா, நம்ம கூட வச்சுக்கலாம் என்று தந்தைவழி சொந்தமும்,
நம்ம வீட்ல என்ன மாப்பிள்ளையா இருக்கு? இவளக் கூட்டிட்டுப்போயி எவனுக்கோ இந்த சொத்துக்களோட தாரவாக்கறதுக்கு நாம ஏன் காவக்காக்கணும் என்று தாய்வழி சொந்தமும் பேசிக்கொண்டனர்.
இந்த வீடும், காலிமனையும், நகைகளும், பெற்றோரின் சர்வீஸ் பணமுமே அவர்கள் கவனத்தை ஈர்த்தது.
ஆதியாவுடன் ஆதரவாக இருந்த சண்முகம் மற்றும் லஷ்மியின் காதுகளில் இவர்கள் பேச்சுவிழ, “என்ன மனுசங்க?” என்ற வெறுப்பு இருவருக்கும்.
“எதுவா இருந்தாலும் முப்பது நாள் முடியப் பேசிக்கலாம். இப்ப நீங்க கிளம்புங்க.” என்று அனைவரையும் நாசுக்காக வெளியேற்றினர்.
லஷ்மி ஒருவாரம் வரை உடனிருந்தார். சண்முகமும் அவர் வீட்டிற்குச் சென்று, பிள்ளைகளுக்குத் தேவையானதை செய்து விட்டு, செல்லாத்தா மற்றும் பாப்பாத்தி பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வருவார். கடையில் வேலை செய்வோரும் அவருக்கு உதவியாக இருந்தனர்.
ஆதியா சற்று தெளிய ஆரம்பித்தாள்.
இனி நமக்கென்று யாருமில்லை என்ற எண்ணமே அவளின் உணர்ச்சிகளை இறுக வைத்தது. கண்களும் இனி கண்ணீர் இல்லை என, சற்று ஓய்வு கேட்டது.
“ஆதியா! புள்ளைக தேடுறாங்களாம்மா. நான் கிளம்பட்டுமா?” என்ற லஷ்மியை நிமிர்ந்து பார்த்தவள், ‘இவருக்கும் நமக்கும் என்ன உறவு? ஆனால் இவர் கொடுத்த ஆதரவு கூட சொந்தங்கள் கொடுக்காதது ஏன்?’ என நினைத்துக் கொண்டாள்.
தன்னால் இனி இவர்களுக்கு சிரமம் வேண்டாம் என எண்ணிக் கொண்டாள்.
“நீங்க கிளம்புங்க ஆன்ட்டி. நான் பாத்துக்கிறேன். வெளிய போன அம்மா அப்பா இன்னும் வீடு வரலைனு நினச்சுக்கிறேன்.” என்று கூறியவளைக் கட்டிப்பிடித்து லஷ்மி கதறிவிட்டார்.
அவளும் கலங்கினாள்தான். ஆனால் பிரயோஜனம் என்ன. துடைக்கும் கைகளில்லையே. அந்த எண்ணமே அவளை இறுக வைத்து உறுதியாக்கியது.
“நைட்டுக்கு செல்லாத்தா ஆன்ட்டியோ இல்லைனா பாப்பாத்தி ஆன்ட்டியோ துணைக்கு அனுப்பி வைக்கிறேம்மா. முப்பது நாளைக்கு அப்புறமா என்ன பண்றதுனு பாக்கலாம்னு அங்கிள் சொல்லி இருக்காங்க ஆதியா.” என்று கூறியவரை அனுப்பி வைத்துவிட்டு, கதவைப் பூட்டியவளுக்கோ, எந்த உணர்ச்சியுமற்ற ஏகாந்த நிலை.
தனிமையையே துணையாகக் கொள்ளத் தயாரானாள்.
அன்பு காட்ட யாருமில்லை எனத் தனக்குள் இறுகியவளை, காதல் கொண்டு இளகவைத்தான் ஒருவன். அவனும் அவளுக்கு பாலைத்தினையைக் கற்பித்துக் கொண்டிருக்கிறான்.
காத்தோடு காத்தானேன்
கண்ணே உன்மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன் கூட மீனானேன்.
இலை மறைவில்
மலர்ந்திருந்தோம்.
மழைத் துளியில்
கலந்திருந்தோம்…
***

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫