தெம்மாங்கு பூந்தமிழே 16

16

“கல்யாணத்துக்கு இப்ப என்ன அகிலா, அவசரம்? இப்ப தானே ஹோட்டல் ஆரம்பிச்சுருக்கான். கொஞ்சம் ஆசுவாசமாகட்டுமே.”

“நல்ல விஷயம் பேசவரும் போதே முட்டுக்கட்டை போடாதீங்க. அமராவுக்கு வயசாகுதுல்ல. நம்மதுல இத்தனை வயசு வரைக்கும் கல்யாணமாகாம யாரு இருந்துருக்கா. இவ வயசுக்காரிக எல்லாம் பிள்ளையோட இருக்காளுக.” என தன் குரலை வழக்கம்போல் அண்ணன் வீட்டில் உயர்த்தினார் அகிலாண்டம். 

அன்று ஹோட்டல் திறப்பு விழாவில் இருவரையும் சேர்த்து பார்த்துவிட்டு கண்கலங்கிய மகளை, அணைத்துக் கொண்டவர், “கூடிய சீக்கிரம் உனக்கும் அவனுக்கும் கல்யாணம்.” என்று மட்டும் தான் கூறினார்.‌

அடுத்த ஒரு வாரத்திலேயே முகூர்த்தத்திற்கு நாள் பார்க்கும் ஏற்பாட்டோடு அண்ணன் வீடு வந்து நின்றார். அவருக்கு காலம் கடத்தும் எண்ணம் துளியும் இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக கல்யாணத்தை முடிக்க வேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது எனப்பட்டது. 

அதற்கு முக்கியக் காரணம், அமிர்தவல்லி யாரென அறிந்து கொண்ட விவரம் தான். விசேஷம் முடிந்தவுடன், தேன்மொழியிடம் கேட்ட முதல் கேள்வியே  அமிர்தா யாரென்பது தான். ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருக்கும் மனோகரன் மகள் என்பது மட்டும் தான் எனக்குத் தெரியும் எனக் கூற, அது போதுமே அகிலாண்டத்திற்கு. அவளது சாதகத்தையே தோண்டி துளாவிவிட்டார். அவள் யாரெனத் தெரிய, அவருக்குமே முதலில் அதிர்ச்சிதான். அதன்பின் அவருக்கு சிறிதும் காரியத்தை ஆறப்போடும் எண்ணமில்லை. ஆனால் இவள் தங்களது உறவு என்பது இவர்களுக்குக் தெரியுமா என்ற சந்தேகம் வர, அதை ஒருபக்கம் கிடப்பில் போட்டார். அவள் யாராக இருந்தால் என்ன. இந்த அகிலாண்டம் மகள் தான் அண்ணன் வீட்டு மருமகள் என்பது அவரது முடிவு.

ஒரு நல்லநாள் பார்த்து அமராவதியின் சாதகத்தை எடுத்துக்கொண்டு அண்ணன் வீட்டிற்கு கணவரை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார், நாள் பார்க்க.

தேன்மொழி கல்லூரி சென்றிருக்க, ருத்ரன் வீட்டில் இல்லை. ஹோட்டல் ஆரம்பித்ததில் இருந்து அவன் வீடு வரவே இரவு மணி பத்தை நெருங்கியது. 

கணவரோடு அண்ணன் வீடுவந்த அகிலாண்டம் சிரமப்பரிகாரங்களை முடித்துக் கொண்டு, உதவிக்கு இருந்தவனிடம், படுக்கையில் இருந்த  அண்ணனை வெளியே அழைத்து வரச் சொன்னார். 

“எதுக்கு அகிலா அவர சிரமப்படுத்துற. இப்பதான் மருந்து சாப்பிட்டு படுத்தாரு.” என கணவருக்காகப் பார்க்க, 

“நம்ம ஜோசியர வரச்சொல்லி இருக்கேன் அண்ணி.” என்றார் எந்த முகாந்திரமும் இன்றி.

“எதுக்கு அகிலா?” என்றார் யோசனையோடு‌.

“என்ன எதுக்குன்னு கேக்குறீங்க. கல்யாணத்துக்கு நாள் பார்க்க தான்.” என்ற பதில் மஞ்சுளாதேவியை வாயடைக்க வைத்தது.

ஒரு வார்த்தை மரியாதைக்காகவேனும் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். அப்படியென்ன அவசரம் வந்தது. திடுதிப்பென வந்து நின்று நாள் பார்க்க என்று சொல்பவரிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் மலைத்து நின்றார். எல்லாம் அகிலாண்டம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுப்பட வேண்டும் என்பது, இன்று அல்ல ருத்ரன் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்தே அகிலாண்டம் இப்படித்தான். 

“அதுக்கில்ல அகிலா. இப்ப தானே தொழில் ஆரம்பிச்சுருக்கான். உங்க அண்ணனும் இப்படி இருக்காரு. வந்தவுடனே சுடுது மடியப்புடிங்கனு  நிக்கிற. ருத்ரனுக்குத் தெரியாம எப்படி அகிலா?” என்றார் பொங்கிய கோபத்தை முடிந்தளவுக்கு கட்டுக்குள் வைத்து. இன்னும் கணவரது உடல்நிலையும் சற்று தேறட்டுமே என்றது அவரது மனம்‌. 

“என்னமோ இப்ப ஆரம்பிச்ச ஹோட்டல வச்சுதான் குடும்பத்த ஓட்டணும்ங்கற மாதிரி பேசுறீங்க? மாப்பிள்ளைக்கு பேருக்கு ஒரு தொழில் இருக்கட்டுமேனு தான் இவ்வளவு நாள் பொறுத்தது.” என்றார் தெனாவெட்டாக.

“அதுக்குனு திடுதிப்புனு வந்து நாள் குறிக்கணும்னா எப்படி?” என அவரும் விட்டுக்கொடுக்காமல் பேச,

 “நான் என்னமோ இன்னைக்கி தான் கல்யாணத்த முடிவு பண்ணிட்டு வந்த மாதிரி சொல்றீங்க. இது அவன் பொறக்கும் போதே முடிவு பண்ணியது தானே. சொல்லப்போனா பொறக்குறதுக்கு முன்னாடியே முடிவு பண்ணியது. நாள் குறிக்க வேண்டியது தான் பாக்கி.” என்றவர் பேச்சு, இனி இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றது. மஞ்சுளாதேவியால் பதில் பேசமுடியவில்லை. இருந்தாலும் இது என்ன சின்னப்பிள்ளைக விளையாட்டா. எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்ய. அவனிடமும் இதைப்பற்றி ஒருவார்த்தை கேட்க வேண்டாமா என மனம் மகனுக்காக அங்கலாய்த்தது. மாப்பிள்ளைனு சொல்லத் தெரியுது. ஆனால் இன்னும் மரியாதை கொடுக்கணும்னு தோணல. ஒருமையில்  அழைத்ததும் பிடிக்கவில்லை. மாவைப்பிடித்து  மாப்பிள்ளைனு வைத்தாலும் அதற்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பது உலக வழக்கு. 

“எல்லாம் தெரியும் அகிலா. இருந்தாலும் அவனையும் ஒருவார்த்தை கேக்க வேண்டாமா?” என மஞ்சுளாதேவி மகன் இல்லாமல் நாள் பார்க்கத் தயங்க,

“அப்ப… உங்க மகன் வந்து இந்தக் கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லைனு சொல்லிட்டா ஏத்துக்குவீங்களா? ஒரு வேள, எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு தான் நடக்குதோ என்னமோ?”

“எது எனக்குத் தெரிஞ்சு நடக்குதாங்குற? என்ன அகிலா பொடிவச்சுப் பேசுற?” என அகிலாண்டத்தின் மறைமுகப்பேச்சு புரியாமல் கேட்க,

“நான் பொடி வச்சுப்பேசல. நீங்க தான் பிடி கொடுக்காம பேசுறீங்க. யாரு கண்டா. எந்தப் புத்துல எந்தப் பாம்போ.” என சாடை பேச, மஞ்சுளாதேவிக்கு அகிலாண்டத்தின் உள்குத்து சுத்தமாகப் புரியவில்லை.

“என்ன அகிலா பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு?”என்றார் சற்று கோபமாகவே. 

“நான் எந்த மாதிரியும் பேசல அண்ணி. அமரா சாதகத்துல இந்த வருஷமே முடிக்கணும்னு இருக்கு. இப்பவிட்டா இன்னும் மூனு வருஷம் ஆகுமாம். அதான், கையில மாப்பிள்ளை இருக்கும் போது எதுக்கு நல்லகாரியத்த தள்ளிப் போட்டுக்கிட்டு. காலாகாலத்துல முடிச்சுவிட்டா, நான் அடுத்தவளுக்குப் பாக்கணும்ல. பொம்பளப் பிள்ளைகளுக்கு முடிச்சுவிட்டா, அடுத்து அழகர் இருக்கான்ல.” 

என காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டு நின்றார் அகிலாண்டம்.

இதையே தானே அவனும் கூறினான். தங்கை இருக்கிறாள் என்று. இவர்களுக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா? என மனம் கேள்வி கேட்க,

மஞ்சுளாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் அகிலாண்டம் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்க, அவரால் பேசமுடியாமல் கணவரின் முகத்தைப் பார்க்க அவரும் தங்கையுடன் விவாதம் செய்யும் நிலையில் இப்பொழுது இல்லை. 

“உங்க மகனும் இருக்கணும்னா ஃபோன் போட்டு வரச்சொல்லுங்க. இந்த ஜோசியர இப்ப விட்டா புடிக்க முடியாது. நம்ம எப்பக் கூப்புட்டு விட்டாலும் உடனே வர்றவரு, ரெண்டு டி.வி. சேனல்ல தலையக் காட்டுனதும்,‌ அவரும் ரொம்ப பவுசு காட்டுறாரு.” என ஜோசியரையும் விட்டு வைக்கவில்லை அகிலாண்டம். 

வேறு வழியின்றி, நாத்தியை கையாளும் வழிதெரியாமல் 

மகனுக்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்பை ஏற்றவன், 

“என்னங்கம்மா.” என்றான்.‌ குரலில் பதட்டம். அப்பாவிற்கு என்னவோ என மனம் எண்ணியது.

“ஒன்னுமில்ல ப்பா… ஏன் இப்படிப் பதர்ற.” என தன்மையாகக் கேட்க, அதில் ஆசுவாசப்பட்டவன்,

“இல்லம்மா… தேவையில்லாம இடையில கூப்புட மாட்டீங்க. அதான் அப்பா உடம்புக்கு ஏதும் பிரச்சினையோனு கேட்டேன்.” என கேட்க, தங்களுக்கு ஒன்று என்றால் பதறும் மகனை நினைத்து உள்ளம் குழைந்தது மஞ்சுளாவிற்கு. 

திடீரென கேசவமூர்த்தி படுத்ததில் இருந்து குடும்பப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டவன் அம்மாவிற்கு தோள்கொடுத்து, தங்கைய தோளணைத்துச் செல்கிறான். தந்தைக்கு ஊன்றுகோலாக தாங்கிப்பிடிக்கிறான். அப்படிப்பட்ட மகனுக்கு தான் நினைத்தமாதிரி நல்லது செய்து பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என மனம் துவண்டது. இதில் அவன் நினைத்ததே நடக்காது எனத்தெரிந்தால் தாய் மனம் என்ன பாடுபடுமோ?

‘நீ ஏன்டா என் வயித்துல வந்து பொறக்கல.’ தனது உள்ளக்குமுறலை வெளிக்காட்ட முடியாமல் ஆங்காரமாய் மனம் வெடித்து விம்மியது உள்ளுக்குள்.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவர்,

“அத்தை வந்திருக்காங்க ப்பா. முக்கியமான விஷயம் பேசணுமாம்.‌ ஃப்ரீயா இருந்தா வந்துட்டுப் போகமுடியுமானு கேக்க தான் கூப்பிட்டேன்.”

என கேட்க, அம்மா இவ்வளவு தயங்கி அவன் பார்த்ததில்லை. அப்படி என்ன தலைபோற காரியம் எனத் தோன்றியது. 

“என்னவாம் மா.” எனக் கேட்க,

“நீ நேர்ல வந்தா நல்லா இருக்கும்.” எனக் கூற, மறுக்கமுடியாமல், வேலைக்கு இருந்தவர்கள் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்பினான்.

இவன் வீடு வருவதற்குள் ஜோசியரும் வந்திருந்தார். இவன் உள்ளே நுழைய, இவன் சாதகத்தையும் அமராவதியின் சாதகத்தையும் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

பிள்ளைகள் சாதகம் எல்லாம் அவர் முன் இருந்தது. இவரை இப்பொழுது விட்டால் பிடிக்க முடியாதென எல்லார் சாதகத்தையும் ஒருதரம் பாரத்துவிடலாமென எடுத்து வைத்தனர். இவர்கள் குடும்பத்து ஆஸ்த்தான சோதிடர் அவர்.

வெளியிலிருந்து வந்தவன்,

“வாங்க மாமா, வாங்க அத்தை.” என இருவரையும். அழைத்தான்‌. பதிலுக்கு “வாப்பா.” என்றார் ரகுராமன். 

மகனைப் பார்த்து விட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றார் மஞ்சுளா.

“ஏம்மா, இதுக்கா என்னைய வரச்சொன்னீங்க. இதெல்லாம் நீங்களே பாக்க வேண்டியது தானே.” என்றான் சாதகம் பார்க்க வரச்சொன்னதாக எண்ணிக்கொண்டு. 

“நானும் அதத்தான் ருத்ரா சொன்னேன். உங்க அம்மா தான் நீயும் வரணும்னு சொன்னாங்க‌.” என அகிலாண்டம் பதில் கூற,

“அத்தை கரெக்டா தான் சொல்லியிருக்காங்க.” என்றான் மஞ்சுளாதேவி எடுத்து வந்த தண்ணீரை வாங்கிக் குடித்துக் கொண்டே. செம்பை அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு அவர்களுக்கு எதிர் சோஃபாவில் அமர்ந்து கொண்டான். 

மஞ்சுளாதேவிக்கு உள்ளுக்குள் பிரளயமே நடந்து கொண்டிருந்தது. ‘இனி என்னென்ன வெடிக்க காத்திருக்கோ. மூடி வைத்ததெல்லாம் இனி வெளிவருமோ. புலி வருது புலிவருது என போக்குக்காட்டிய கதையில் இதோ புலி வந்தேவிட்டது.’ என மனம் வெதும்பியது.

“அத்தை கல்யாணத்துக்கு நாள் குறிக்கணும்னு சொல்றாங்க ருத்ரா.” என்றார் தயக்கத்துடன்.

“யாருக்குமா?” என்றான்.

“அமராவதிக்கும்…” என ஆரம்பித்தவுடனே அவர் முடிக்கவில்லை.

“மாப்பிள்ளை யாரும்மா? எந்த பேச்சும் அடிபடலியே. எப்ப மாப்பிள்ளை பாத்தாங்க?” என ஆச்சர்யம் காட்டினான் ருத்ரன். அமராவதிக்கு மாப்பிள்ளை தகைந்ததால் அது குறித்து, தாய்மாமன்‌ முறைக்கு  அண்ணன் வீட்டில் பேச வந்திருப்பதாக எண்ணிக் கொண்டான்.‌

என்ன சொல்வதென்று தெரியாமல் மஞ்சுளாதேவி மௌனியாகிவிட, அதற்கு அகிலாண்டம் சொன்ன பதில் தான் அவனை இடியெனத் தாக்கியது. இப்பொழுதுதானே இடி இடிக்க ஆரம்பித்திருக்கிறது. புயலே இனிமேல்தான் என்றது அவரது வார்த்தைகள். 

“இதென்ன கேள்விப்பா, உனக்கு அமராவதி, அமராவதிக்கு நீயிங்கறதுதான் சின்ன வயசுலயே முடிவானதே? கையில வெண்ணெய வச்சுக்கிட்டு நெய்யிக்கு ஏன் நான் அலையணும்?” என்றார் அகிலாண்டம்.

அப்பொழுதும் அவன் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்தை கேலி செய்வதாக எண்ணிக் கொண்டான். சிறுபிள்ளையில் இதுமாதிரி அத்தைமகன், மாமன் மக்களுக்கிடையில் கேலி பண்ணுவது தானே.

“விளையாடாதீங்க த்தை.” என்றான் அப்பொழுதும் சிரித்துக் கொண்டே. 

அதற்கு பதில் பேச அகிலாண்டம் வாயைத் திறக்கும் முன்,

“ரெண்டு சாதகத்தையும் நல்லா பாத்தாச்சு. இன்னும் மூனு மாசத்துல கல்யாணத்த வச்சுக்கலாம்.” எனக் கூற,

“அதுக்கு முன்னாடி முகூர்த்தம் இல்லியா?” என்றார் அகிலாண்டம்.

“முகூர்த்தம் இருக்கு. ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் நேரங்காலம் ஒத்து வரணும்ல. ருத்ரபாண்டி சாதகம் ராஜயோக சாதகம். ஆனா…” என இழுக்க, ருத்ரன் நெற்றி சுருங்கியது. அம்மாவின் தயக்கமான பேச்சும், சுரத்தையில்லாத முகமும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது.  

“அதுதான் தெரியுமே. ராஜ்யமே இல்லைனாலும் ராஜா தான்.” என்ற அத்தையின் வார்த்தைக்கு முதன் முறையாக அர்த்தம் தேடினான் ருத்ரன்.‌ இந்த மாதிரி அவர் சாடை பேசுபவர் தான். ஆனால் இன்று ஏனோ அதை அவன் எளிதாக எடுக்கவில்லை. ஏனெனில் சாதகத்தில் அடிப்பட்டது அவனது பெயராயிற்றே. உண்மையில் தனக்கும் அமராவிற்கும் தான் சாதகம் பார்க்கிறார்களா என ஊன்றி கவனிக்க, ஜோஷியர் கையில் இருந்தது இவர்கள் இருவர் சாதகமே.  

“ஆனா… ரெண்டு தார சாதகம்.” என ஜோஸியர் இழுக்க, இடைமறித்த அகிலாண்டம்,

“ஜோஸியரே, உங்கள சாதகம் பாக்க கூப்பிடல. நாள் பாக்கதான் கூப்பிட்டது. அதுக்கு தான் வாழமரம் பரிகாரம் இருக்குல்ல. கல்யாணத்துக்கு முன்னால வாழமரத்துக்கு தாலி கட்டி, அது வெட்டிட்டாப் போச்சு.”  என அவரது பேச்சை வளர்க்கவிடாமல் துண்டித்தார் அகிலாண்டம். 

‘சாதகத்துல நம்பிக்கை இருந்தால் அதை முழுதுமாக நம்ப வேண்டும். இல்லை என்றால் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என தன்னம்பிக்கையில் மட்டுமே நம்பிக்கை வைத்து இதைத் புறந்தள்ளி வைக்கவேண்டும். நமக்கு சாதமான விஷயத்திற்கு மட்டும் சாதகம் பார்க்கக் கூடாது. இவரே பரிகாரம் முடிவு செய்து கொண்டால் பிறகு நான் எதற்கு.’ என மனதில் எண்ணிக் கொண்டார் ஜோஷியர். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“உங்களுக்கும் கல்யாண ஏற்பாடெல்லாம் பாக்கணும்ல. பெரிய வீட்டுக் கல்யாணம். ஏற்பாடெல்லாம் பண்ண நாள் வேண்டாமா?’ என ஜோசியர் கேட்க,

“கூற மேல சோத்தப்போட்டா ஆயிரம் காக்கா ஜோசியரே. காசு கொடுத்தா வேலைக்கு ஆயிரம் பேரு வருவாங்க. ஒரே மாசத்துல ஏற்பாடு பண்ண முடியும். நீங்க அனுசுல ஏதாவது முகூர்த்தம் இருக்கானு பாருங்க.” எனக் கூற, அவரும் அதோடு கப்சிப் என வாயை மூடிக்கொண்டார். 

ருத்ரன் தான் நடப்பது எதுவும் புரியாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். மகனின் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து நின்றார் மஞ்சுளாதேவி. 

அம்மாவின் மௌனம் அவனுக்கும் சரியாகப் படவில்லை. 

ஒருகணமும் அவன் அமராவதியை, அத்தை மகள் என்ற எண்ணம் தவிர, வேறு கோணத்தில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இனிமேலும் அவனால் நினைத்துப் பார்க்க முடியாது. இப்பொழுது இன்னொருத்தி வேறு அவன் மனதில் கொலு வீற்றிருக்கிறாள். இவர்கள் பேச்சு ஒன்றும் கேலி மாதிரித் தெரியவில்லை.

ஏன் இப்படி? ஒருவேளை வேறெங்கும் மாப்பிள்ளை அமையவில்லையா? அவளது குறையைச் சுட்டிக்காட்டி தட்டிக் கழிக்கப்பட்டதா. அதனால் தான் வயது வித்யாசம் இருந்தாலும் பரவாயில்லை என தனக்கும் அமராவிற்கும் திருமணம் பேச முடிவு எடுக்குப்பட்டதா? அப்படி பார்த்தால் இத்தனை நாட்களாக அவளுக்கும் மாப்பிள்ளைப் பேச்சு எடுத்ததாகக் கூட அவனுக்கு நினைவில்லை. தன்னை மனதில் நிறுத்தி தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கவில்லையா? மனதில் பல கேள்விகள் ஓட, விடைதேடி அம்மாவைப் பார்க்க, அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பரிதவித்துப் போனார். 

“என்னம்மா இதெல்லாம்?” என்றான். அவன் வார்த்தை அவனுக்கே அந்நியமாகப் பட்டது.

“அது… ஏற்கனவே உங்க ரெண்டு பேத்துக்கும் சின்னவயசுலயே முடிவானதுதாம்ப்பா.” என்றவர் வார்த்தைகள் பிசிறடித்தது. 

“எப்பம்மா… எனக்கே தெரியாம எங்கல்யாணத்த முடிவு பண்ணுனீங்க?” என்றவனுக்கும் லேசாக உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. 

“ம்மா… நான் அமராவ அந்த மாதிரி நினச்சுக்கூடப் பாக்கலாம்மா. தேனு மாதிரி தான் எனக்கு அவளும்.” என்றவன் வார்த்தை தவித்து வந்தது. 

அவனுக்கு மேல் இருந்தது அன்னையின் தவிப்பு. எங்கே உண்மை வெளிப்பட்டு விடுமோ என்கிற பயம் அவருக்கு. மகன் தன்னை வெறுத்து விடுவானா? தன் மீது கொண்ட பாசம் மாறிவிடுமா என ஒரு தாயாக உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தார்‌. எதைச் சொல்லி இவனுக்குப் புரியவைப்பது என அம்மாவும், தன் மனதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது என மகனும் தவிக்க, ஜோஸியரோ அகிலாண்டம் கேட்டது போல் அருகில் இருந்த முகூர்த்தத்தில் மூன்றை குறித்துக் கொடுத்து விட்டு தங்களுக்கு வசதிப்படுவதில் வைத்துக் கொள்ளுங்கள் என தட்சணை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார். 

இவ்வளவு தூரம் வந்த பிறகு அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என முடிவு செய்தவன், 

“ம்மா… உங்ககிட்ட தனியாப் பேசணும்.” என்றான்.‌ எப்படியாவது அம்மாவிடம் தன் மனதை வெளிப்படுத்தி, இந்தக் கல்யாணத்தை நிறுத்த வழி தேடினான். 

“எதுவா இருந்தாலும் எங்க முன்னாடியே பேசுங்க.” என்றார் அகிலாண்டாம்.

“அத்தை இது அம்மா மகனுக்கு இடைப்பட்ட விஷயம். இங்கேயே சொல்லணும்னாலும் எனக்கும் பிரச்சினையில்ல. எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்ட்டம் இல்ல.” என்றான் அழுத்தம் கலந்த குரலில். இவ்வளவு தூரம் வந்தபிறகு இனி மௌனம் காத்தால் நன்றாக இருக்காது. தும்பை விட்டு வாலைப்பிடித்து பிரயோஜனம் இல்லை என. 

“ஏன் இல்ல, அமராவுக்கு ஊனம்னு பாக்குறியா?” என அடுத்த அம்பை வீச,

“ஐயோ அத்தை. நீங்க தான் அடிக்கடி அவளுக்கு அத ஞாபகப்படுத்துற மாதிரி நடந்துக்கறீங்க. எனக்கு அந்த எண்ணம் கொஞ்சமும் இல்ல. ஆனா இது வேற‌. கல்யாணம்ங்கறது பெரிய விஷயம். அதுக்கு நான் மொதல்ல தயாராகணும். இப்ப தான் ஹோட்டல் ஆரம்பிச்சுருக்கேன். இன்னும் வேற ஐடியாஸ் எல்லாம் இருக்கு.” என்றான் தன் எதிர்காலத் திட்டம் குறித்து. அதில் கல்யாணம் பற்றிய எண்ணம் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த எண்ணத்தில் அமராவதிக்கு இடமில்லை என்பதுதான் உண்மை.

“அதெல்லாம் கல்யாணம் முடிச்சுட்டும் பாக்கலாம்.” என்றார்.

“எனக்கு இப்ப தான் இருபத்தி மூனே ஆகுது.‌ தேன்மொழி வேற இருக்கு.”

“ஆனா… அமராவுக்கு இருபத்தி மூனு முடியப் போகுது ருத்ரா.”

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அத்தை. வேணும்னா நானும் மாப்பிள்ளை பாக்குறே. நாலு எடத்துல சொல்லி வைப்போம். அவளுக்கு வேற நல்ல எடமாப் பாக்கலாம். நான் அவள விட சின்னவன் அத்தை.”

“நாலஞ்சு மாசமெல்லாம் ஒரு கணக்கா? அதெல்லாம் சொந்தபந்தங்களுக்குள்ள ரொம்ப பாக்குறதில்ல.” என்றவர் பேச்சில் தாட்சண்யம் என்பது தம்படிக்கும் இல்லை. காரியம் சாதிக்கும் வீரியம் மட்டுமே.

“அப்படி என்ன நானே முடிக்கணுமா? அமராவ கேட்டீங்ளா? அவளவிட சின்னவனக் கட்ட சம்மதிச்சாளா?” என்றவன் குரல் ஆதங்கமாக ஒலித்தது. இவர்கள் கட்டாயத்தில் சம்மதித்தாளோ என்ற சந்தேகம் ஒருபுறம், அவளுக்குப் பிடிக்காமல் போனால் தன் காதல் பிழைக்குமே என்கிற நப்பாசை மறுபுறம். 

“அதெல்லாம் அவ உம்மேல உசுரயே வச்சுருக்கா.” எனக் கூற, கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் திக்குத் தெரியாமல் தவித்தான்‌. இவ்வளவு பேச்சிற்கும் மஞ்சுளாதேவி இவனுக்கு சாதகமாக பேசாதது வேறு அவனுக்கு உறுத்திற்று. அப்பாவால் தான் பேசமுடியாது. அம்மாவிற்கு என்னாயிற்று என யோசனை ஓடியது. 

அகிலாண்டமும் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவே அவனுடன் பேசிக்கொண்டு இருந்தார். இன்னும் அவர் முக்கிய அஸ்த்திரத்தைக் கையில் எடுக்கவில்லை. 

இறுதியில் எய்யப் படுவது தானே பிரம்மாஸ்த்திரம். எய்துவிட்டால் உயிரை எடுக்காமல் திரும்பாது. 

1 thought on “தெம்மாங்கு பூந்தமிழே 16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top