தெம்மாங்கு பூந்தமிழே 15

15

குழைதள்ளிய, அடிபெருத்த வாழைமரங்கள் இரண்டு நுழைவாயிலின் முகப்பின் இருமருங்கிலும் கட்டியிருக்க,‌ யானைக்கால் தடிமனில் கனத்த நிலைமாலை ஹோட்டலின் வாசல்நிலையில் இருபுறமும். தொங்கவிடப்பட்டு இருந்தது. தலைக்கு மேல் பூக்களின் தோரணமும், மாவிலைத் தோரணமும் அலங்கரிக்க, நெய்கலந்த ஹோமப்புகை வாசம் எங்கும் வியாபித்திருந்தது.

வாசலில் வெண்மை மற்றும் ஊதா வண்ண பலூன்களைக் கொண்டு வளைவு அலங்காரமும், பரபரப்பான கடைவீதி என்பதால் தற்காலிக சாமியானா பந்தல் மட்டுமே வாசலின் முன்புறம். வணிகரீதியாக ஹோட்டல் வைப்பதற்கான அத்தனை அம்சங்களும் அங்கு பொருந்தி இருந்தது. கடைவீதியும் ஜனநடமாட்டமும் நிறைந்த பிரதான சாலை. அரசியல்வாதி வருகையையை ஒட்டி அவரது ஆளுயரக் கட்அவுட் வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருந்தது.

அதிகாலைலையிலேயே குடும்ப உறுப்பினர்களை மட்டும் கொண்டு  பிரம்மமுகூர்த்தத்தில் கணபதிபூஜை, லஷ்மிபூஜை மற்றும் குபேரபூஜையும் நடந்தேறியது. கீழே அமரமுடியாது என்பதற்காக பூஜைக்கு கேசவமூர்த்தி சக்கரநாற்காலியிலும், அவர் அருகில் சேரில் மஞ்சுளாதேவியும் அமர்ந்து கொள்ள, அவர்களை அடுத்து ருத்ரனும், தேன்மொழியும் கீழே அமர்ந்து கொண்டனர். 

அகிலாண்டம் இங்கு சகலமும் நான் தான் என்பது போல் எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். பூஜையின் போது ருத்ரனின் அருகில் அமராவதியை முன்னிருத்தினார். 

ஆகாய நீலக்கலர் பார்டருடன் கூடிய பொன்மஞ்சள் வண்ணத்தில் விலையுயர்ந்த சரிகை பட்டுப்புடவையில், கொஞ்சம் அதிகப்படியான நகை அலங்காரங்களுடன் , தலை நிறைய குண்டுமல்லிச்சரம் என இருந்த அமராவதியின் தோற்றம் அழகுக்கு அழகு சேர்த்தது. சற்று அதிகமாகவே மெனக்கெட்டிருந்தாள், ருத்ரனுக்காக. 

தேன்மொழியும், காயத்ரியும் பட்டுப்பாவாடை தாவணியில் வலம்வர, அழகரின் கண்கள் மாமன் மகளை வளையவந்தது. இளசுகளின் கூட்டணியில் அந்த இடம் கலகலப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் இருந்தது. 

பெரிய ஆட்கள் வருகையை முன்னிட்டு, ருத்ரன் உதவிக்கு ஆட்களை வைத்துக் கொண்டு பரபரப்பின்றி நிதானமாக விசேஷத்தை கவனமாகக் கொண்டு சென்றான். அரசியல்வாதி வருகையை முன்னிட்டு காவல்துறை உதவியையும் நாடி இருந்தான். முக்கியஸ்தர்கள் வரவேற்பில் கவனமாக இருந்தாலும், மனம் ஒருபுறம் தன்னவளுக்காகவும் எதிர்பார்க்க ஆரம்பித்தது.

தேன்மொழியிடம் அவளது நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கச் சொல்லியிருந்தான். முன்பு அந்த யோசனை இல்லை. அமிர்தாவிற்காக இந்த யோசனை தோன்ற, தங்கையிடம் கூற, அவளோ தற்போதைய கல்லூரி நண்பர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டாள்.

இவனது யோசனை தங்கையிடம் சொதப்பிவிட, தானே களத்தில் இறங்க முடிவு செய்தான்.

இவனிடம் அமிர்தாவின் கைபேசி எண் இருக்கிறது. ஆனால் அதை எப்படி தங்கையிடம் கொடுத்து அழைக்கச் சொல்லமுடியும். உனக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்டால் என்ன சொல்வது. தனது விருப்பத்தை வீட்டில் சொல்ல அவனுக்குத் தயக்கம் இல்லை தான். தன் ஆசைக்கு யாரும் முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கை மலையளவு உண்டு. குறிப்பாக அன்னை மஞ்சுளாதேவி மீது. ஆனால் அதற்கு முன் அவன் தனது சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதன்‌பிறகு தான் பந்தக்கால் பற்றி யோசிக்க முடியும். பெரிய படிப்பு படிக்கவில்லை என்ற தந்தையின் ஆதங்கத்தைப் போக்க வேண்டும். இன்றைய நிலமைக்கு ஹோட்டல் மட்டும் காணாது. இன்னும் சில திட்டங்கள் மனதில் உண்டு. அதையும் செயல்படுத்த வேண்டும். அதற்கு முன் தங்கை இருக்கிறாள். அவள் படிப்பை முடிக்க வேண்டும். இப்படி பலவித யோசனைகள் உள்ளுக்குள் ஓடியது. 

என்ன செய்யலாம் என்ற யோசனை ஓட, தேன்மொழியின் கைபேசி எண்ணை அமிர்தாவிற்கு கொடுத்து தங்கையிடம் பேசுமாறு கூறினான்.

தோழியை ஃபோனில் அழைத்த அமிர்தா, தன்னை மறந்து விட்டதாகக் கூறி ஃபோனிலேயே  தாளித்து எடுத்து விட்டாள்.

“ஹேய்ய்… இல்லப்பா. உன்னோட நம்பர் எங்கிட்ட இல்ல. யாருகிட்ட வாங்குறதுன்னு தெரியல.” என்று கூறி சமாளிக்க,

“ஃப்ரென்ஷிப் வேணும்னு நெனச்சிருந்தா எப்படியாவது என் நம்பரத்தேடி வாங்கியிருப்ப. இப்ப உன்னோட நம்பர நான் வாங்கல. அந்த மாதிரி.” என, எங்கே இத்தனை நாட்களில் வராத என் ஞாபகம் திடீரென இப்பொழுது எப்படி வந்தது எனக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என, முந்திக்கொண்டு அவள் மீதே குற்றப்பத்திரிக்கை வாசிக்க, 

“அப்படி இல்ல அமிர்தா. ஆமா, என் நம்பர் உனக்கு எப்படி கெடச்சுது.” என தேன்மொழி தான் நயந்து வர வேண்டியிருந்தது.

“அதெல்லாம் மனசு இருந்தா மார்க்க பந்து. நீதான் மனசே வைக்கலியே?” எனக் கேட்டு அவளைக் கேள்வியே கேட்கவிடாமல் நட்பை புதுப்பித்துக் கொண்டு, இவள் ஓட்டியெடுக்க, அவள் மன்னிப்பு கேட்டபிறகே போனால் போகுதென்று விட்டுவைத்தாள். 

“உங்க அண்ணா, இங்க காலேஜ் கேன்டீன்ல தானே வேல பாத்தாங்க. அவங்ககிட்ட தான் உன்னோட நம்பர் வேணும்னு வாங்கினேன்‌. என்னமோ எனக்கு நம்பர் கொடுக்கவே அவ்ளோ யோசிக்கிறாங்க?” என சடைத்துக் கொண்டவளை, என்னா உலகமகா நடிப்புடா சாமி என மனசாட்சி மானவாரியாகத்  தூற்றியது.

“ஆமாப்பா… அண்ணா என்னோட விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால தந்துருக்கு மாட்டாங்க.”

“ஆமாமா… பாத்தாலே தெரிஞ்சுது.” என நொடித்தவள், பள்ளி நாட்களை இருவரும் பேசிக்கொண்டே, நடப்பிற்கு வந்தனர். 

“அப்புறம்… வேறென்ன விசேஷம்?” என இயல்பாகக் கேட்பது போல் கேட்க,

“சொல்ல மறந்துட்டேன் அமிர்து. புதுசா ஹோட்டல் ஓபன் பண்றோம். நீயும் கண்டிப்பா வரணும்.”

“நானா கேட்ட பின்னாடி சொல்ற.” என பொய்யாக வீம்பு காட்டியவள்,  

“அதெல்லாம் பெரிய மனுஷங்க வர்ற விசேஷம். நாங்கெல்லாம் எப்படி வரமுடியும்?” எனத் தயங்குவது போல் நடிக்க,

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நீ என்னோட ஃப்ரென்டா விசேஷத்துக்கு வர்ற. வீட்ல நான் சொல்லிக்கிறேன். இல்லைனா நேர்ல வந்து பத்திரிகை வச்சாத்தான் வருவீங்களோ?” எனக் கேட்க, 

“உனக்காக வர்றேன்.” என என்னவோ தோழிக்காக வருவது போல் பெரிய மனதுபண்ணி ஒத்துக் கொண்டாள்.

*********

காலையில் எழுந்து வந்த மகனிடம், “ருத்ரா, பாண்டிமுனி கோயிலுக்குப் போயி பத்திரிக்கைவச்சு கும்பிட்டு வந்துருப்பா.’’ என மஞ்சுளாதேவி கூற,

“அதான் நம்ம வீரபத்திரன் கோயிலுக்கு போய்ட்டு வந்தாச்சுல ம்மா. இன்னும் திறப்புவிழாக்கு ஒருவாரம் கூட இல்ல. வேல கெடக்குமா’’ என்றான் அலுப்பாய் மகன்.

”ஏன்டா, எக்ஸ்ட்ரா ஒரு கோயிலுக்கு போறதுலதான் வேல கெட்டுப்போகுமா? உம்பேரே அந்தச் சாமி பேர்தான்டா. போய்ட்டு வாப்பா? அதுவும் நமக்கு குலசாமி மாதிரிதான்.” என மஞ்சுளாதேவி அதட்டல் பாதி அன்பு மீதி எனக் கூற, அவனும் கோவிலுக்கு சென்றான். மகன் அந்தக் கோவிலுக்கும் செல்ல வேண்டுமென்பது அன்னையின் எண்ணம்.

மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில், மீனாட்சி சொக்கநாதர், கள்ளழகர் போன்ற பெருந்தெய்வங்களுக்கு இணையாக பிரசித்தி பெற்ற காவல்தெய்வம் பாண்டி முனீஸ்வரன் கோவில். 

ருத்ரபாண்டியன் கோவில் செல்ல, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மனோகரனும் குடும்பத்தோடு அங்கு வந்திருந்தார். எதிர்பாராமல் எதிர்ப்பட்டுக் கொண்டவர்கள் முகத்தில் சந்தோஷமும் அதிர்ச்சியும். அதிர்ச்சி அம்மாவிற்கு. சந்தோஷம் மகளுக்கு. கூட்டத்தில் தம்பியை அடையாளம் கண்டு கொண்ட கௌரிக்கு தலைகால் புரியவில்லை. சாமிகும்பிட வரிசையில் நின்றாலும் கண்கள் மட்டும் ருத்ரன் மீதே.

அர்ச்சனை முடித்து வெளி வர, அவர்களுக்காக காத்திருந்தான் ருத்ரன். மனோகரனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அங்கேயே அழைப்பிதழ் கொடுக்க வாங்கிக் கொண்டனர். அவர்களிடம் சொல்லிக்கொண்டு, கண்ணால் காரிகையிடம் விடை பெற்றான். என்றோ ஒருநாள், மருத்துவமனையில் சில கணங்கள் பார்த்த அக்கா முகம் நினைவில் இல்லை. கௌரிக்கு கண்கள் பனித்தது. பிள்ளைகள் பார்க்கும் முன் மறைத்துக் கொண்டார்.

பத்திரிக்கையை அப்பாவின் கையிலிருந்து வாங்கியவள், இந்த விசேஷத்திற்கு தன்னை ஃப்ரென்டும் அழைத்தாகக் கூறி, “விசேஷத்திற்கு போகவாம்மா?” என சம்மதம் கேட்க, கௌரி மறுப்பே சொல்லாதது மகளுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. பெரிய இடத்தில் எல்லாம் அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொன்ன அம்மாவா என ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

தங்களால் போக முடியாது. போனால் அந்த அகிலாண்டம் வாயில் தேவையில்லாமல் அரைபட நேரிடும். இவளாவது போகட்டும் என்ற எண்ணத்தோடு, தம்பியை அழைத்துக்கொண்டு போகச்சொல்லி அனுமதி தர, வெகுவாக மெனக்கெட வேண்டியிருக்கும் என நினைத்த  மகளுக்கோ சப்பென ஆனது. அதெப்படி இவ்வளவு எளிதாக சம்மதித்தார்கள் என்ற யோசனை உள்ளுக்குள் ஓடியது. 

நரி வடக்க போனா என்ன, தெக்க போனா நமக்கென்ன. நம்ம ரூட்டு கிளியரானா சரி என சந்தோஷமாகக் கிளம்பிவிட்டாள்.

ஆனால் மகள் கிளம்பிய தோற்றம், புலி வரும் பயம் கொடுத்தது கௌரிக்கு. லேசாக பயபந்தை மனதில் உருளச்செய்தது.

       ***********

ருத்ரன் பட்டுவேட்டி சட்டையில், புலிநகம் வைத்த பரம்பரைச் சங்கிலி, கையில் தங்கக்காப்பு என அந்த வயதிற்கே உரிய இளவட்டத் தோரணையில் கம்பீரமாக காட்சி அளித்தான். பூஜையின் போது நெற்றியில் இட்ட சந்தனமும் குங்குமமும் தனி அழகு கூட்டியது. பரபரப்பின்றி நிதானமாக விழாவை கையாண்டு கொண்டிருந்தான். 

அப்பாவைக் கொண்டு பெரும்புள்ளிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்க, ஒவ்வொருவராக வருகைதர ஆரம்பித்தனர். அனைவரையும் அவரவருக்குத் தகுந்த மரியாதையோடு வரவேற்று இருக்கைக்கு அழைத்துச் சென்றான். பார்க்கிங் ஏரியா பகுதியில் சாமியானா பந்தல்  போட்டு சேர்கள் போடப்பட்டிருந்தது.

முக்கிய விருந்தாளி வரும் அரவம் கேட்டது. வரவேற்பிற்கு கேரள செண்டைமேளம் ஏற்பாடு செய்திருந்தான். சரவெடி வெடிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ வர, அவருக்கு பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு கொடுத்து வரவேற்றான். 

நல்லநேரம் முடிவதற்குள், கத்திரியை அவரிடம் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட, ரிப்பனை வெட்டி விழாவை சிறப்பித்தார். விசேஷம் என்றாலே ஏதாவதொன்றை வெட்டியே ஆகவேண்டும் நமக்கு.

சரியாக அந்த நேரத்தில் அமிர்தாவும் தம்பியோடு வந்து சேர்ந்தாள். கூட்டத்தின் பின் நின்றவளை ஓடிச்சென்று தேன்மொழி கைபிடித்து அழைத்து வந்து அருகில் நிறுத்திக் கொண்டாள்.‌ அரசியல்வாதியோடு கவனமாக இருந்தவன், ஏதேச்சையாக தங்கையோடு இருந்தவளை திரும்பிப்பார்க்க, ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது. அவனது எதிர்காலம் வசந்தகாலமாய் வந்திருந்தாள். 

அவளை பாவாடை சட்டை அணிந்த பருவத்திலிருந்து, சுடிதார் மற்றும் தாவணியிலும் பார்த்திருக்கிறான். ஆனால் முதன் முறையாக இன்று சேலையில் அவளைப் பார்த்தபின், பிரம்மனின் கலை நேர்த்தியை எண்ணி மெச்சிக் கொண்டான். சற்று அதிகப்படியாக அந்த மனுஷன் தனக்காக மெனக்கெட்டிருப்பார் போல என்றெண்ணி அவருக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்தான். 

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட

உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட…

பெண்ணிலவு…            நிலவுப் பெண்.

இப்படி நிலவையும் பெண்ணையும் ஒப்புமை கூறி கவி வடிக்காத கவிஞர்களே உலகத்தில் இல்லை. அப்படி ஒரு கவி இருந்தால் அவன் கவிஞன் எனும் தகுதியையே இழக்கிறான். கம்பன் தொட்டு கண்ணதாசன் தொடர்ந்து எந்த கன்னிதாசனும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

நிலவைப் பார்த்ததும் பெண் நினைவிற்கு வருகிறாளா, பெண்ணைப் பார்த்ததும் நிலவு  நினைவிற்கு வருகிறதா என்பது காற்று வந்ததும் கொடி அசைந்ததா கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற கேள்வி மாதிரி தான், விடை தெரியாது. 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நிலவும் பெண் தான். பெண்ணும் நிலவு தான். 

இருவருக்குமே சுழற்சி முப்பது நாட்கள். நிலவுக்கும் வளர்பிறை பதினான்கு நாட்கள். பதினைந்தாவது நாள் பூரணத்துவம். பெண்ணுக்குள்ளும் வளர்பிறை பதினான்கு நாட்கள். பதினைந்தாவது நாள் பூரணத்துவம்.

நிலவுக்கும் தேய்பிறை பதினான்கு நாட்கள். பெண்ணுக்குள்ளும் தேய்பிறை பதினான்கு நாட்கள். பதினைந்தாவது நாள் தனக்குள்ளே வெடித்துச் சிதறி, தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு, மறுசுழற்சி செய்து மீண்டும் மூன்றாம் நாளிலிருந்து மூன்றாம் பிறையாய் வளர்பிறை.

அதனால் தான் நிலவை சாட்சியாகக் கொண்ட பெண்ணுடனான கூடல்… தேனிலவு எனப்பட்டதோ.  

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு பூரணத்துவம் கண்ட நிலவு, தன் ஒளிக்கிரணங்களால் ஆழிசூழ் கடல் அரசனையே தன்பால் இழுத்து, ஆனந்தகளிப்பில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள் என்றால் பூரணத்துவம் அடைந்த பெண்ணிலவைக் கண்ட மானிடன் எம்மாத்திரம். சாட்டை கொண்டு சுழற்றிய பம்பரமாய் சுழல மாட்டானா? அவனுக்குள்ளும் உணர்வுகள் கொந்தளிக்காதா? அலைகடலென ஆர்ப்பரிக்காதா? பித்தாகிப் பேதையாகி பிதற்றமாட்டானா? 

அப்படிப் பித்தாகி, பேதையைப் பார்த்தவன், வலிந்து பார்வையை விருந்தினர் பக்கம் திருப்பினான்.

தாவணி போடச்சொன்னாலே அம்மாவிடம் மல்லுக்கு நிற்பவள், தங்கக்கலர் பார்டர் கொண்ட, மயில்கழுத்துப் பச்சையும் ஊதாவும் கலந்த டபுள் ஷேடட் கொண்ட சாஃப்ட் சில்க் சேரியில், காதில் குடைஜிமிக்கி ஆட, கழுத்தில் பச்சைகல் அட்டிகையோடு டாலர் வைத்த ஒரு லாங் செயின் என வந்தவளைப் பார்த்தவன்,

“குந்தானி, இன்னைக்கி நம்மல ஒருவழி பண்ணனும்ங்கற முடிவோட தான் வந்திருப்பா போல.” என வஞ்சப்புகழ்ச்சி செய்தான்.

இவளது இந்த மெனக்கெடல் தான் கௌரிக்கும் கலவரத்தை உண்டு பண்ணியது. அனுமதி கொடுத்ததில் இருந்து பீரோவையே தலைகீழாக புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சேலையைத் தேர்ந்தெடுக்க. தன்‌மகள் எங்கே தவறாக ஆசைவைத்து விடுவாளோ என சரியாகக் கணித்தது தாய் மனது. பெற்றவள் அறியாத சூல் உலகத்தில் ஏது.

அதீத சந்தோஷம், அதீத துக்கம், அதீத கோபம் மட்டுமல்ல அதீத மயக்கமும் நம்மை நிதானம் இழக்கச் செய்பவை. ருத்ரனுக்குள்ளும் அதுதான் நடந்து கொண்டிருந்தது. 

காதலுக்கு கண் இல்லை என்பதைவிட, காதலிப்பவர்களுக்கும் கண் இல்லை எனச் சொல்லலாம். சுற்றம் பார்க்காது.

ரிப்பன் வெட்டி முடிக்க, வீட்டுப் பெண்களைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றச் செய்தான். 

முதலில் அம்மாவும், அத்தையும் ஆளுக்கொரு திரியை ஏற்ற, அடுத்து அமராவதியை ஏற்றச்செய்தார் அகிலாண்டம். அடுத்து தேன்மொழி ஏற்ற, மீதி இருந்த ஒரு‌ திரியை ஏற்ற காயத்ரி வரமுடியாததால்,  

“ஏன் தேனு, உன் ஃப்ரெண்ட ஏத்தச் சொல்ல வேண்டியது தானே.” என இவனே எடுத்துக் கொடுக்க, அமிர்தாவோ கூட்டத்திற்குள் சங்கோஜமாக மறுப்பாக‌த் தலையசைத்தாள். இவர்கள் உறவு வகையிலேயே எத்தனையோ மூத்த பெண்மணிகள் விசேஷத்திற்கு வந்திருக்க, அமிர்தாவை அவன் அழைத்தது அகிலாண்டத்திற்கு ஏற்கவில்லை. இவன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு இவள் யார் எனக்‌ கூர்ந்து கவனித்தார். 

அவளது மறுப்பைக் கண்டவன் கண்ணாலே கண்டிப்பு காட்டி, அலுங்காமல் தலையசைத்து அழைக்க, அந்த பார்வைக்குக் கட்டுப்பட்டவள் நல்ல காரியத்திற்கு மறுப்பு சொல்லக் கூடாதென அவளும் தீப்பெட்டியை வாங்கியவள் குத்துவிளக்கை ஏற்றி‌வைத்தாள் பொங்கும் சந்தோஷத்தோடு.

இது தவறாமல் அகிலாண்டம் பார்வையில் பட்டது. அமிர்தா வந்ததிலிருந்து அகிலாண்டத்திற்கு அவள்‌மீது ஒரு கண். அவளது அழகு, இவள் யாரென ஊன்றிக் கவனிக்க வைத்தது. தேன்மொழியிடம் விசாரிக்க பள்ளித்தோழி என்று கூற, அசால்ட்டாக இருந்த அகிலாண்டம், ருத்ரனின் கண்ஜாடையில் தன்‌ பார்வையை சந்தேகமாக அவள் மீது பதித்தார். அவளைப் பார்க்கையில் ருத்ரனின் கண்களில் இருந்த மயக்கமும், அமிர்தாவின் பார்வையில் தெரிந்த நாணமும் அவரது கணிப்பு சரியெனச் சொன்னது. 

முக்கியவிருந்தினர்கள் வந்த சில நிமிடங்களில் சம்பிரதாயமாக சாப்பிட்டுவிட்டு, மரியாதை நிமித்தம் கேசவமூர்த்தியிடம் பேசிவிட்டு, முதன்முதலில் தங்கள் கையால் பில் கொடுத்துவிட்டு கிளம்பி விட, 

அதிகநேரம் கேசவமுர்த்தியால் உட்கார்ந்திருக்க முடியாது என்பதால் அவருக்கு முதலில் சாப்பாடு கொடுத்து அப்பாவையும், அவருக்குத் துணையாக அம்மாவையும் அழகரோடு காரில் வீட்டிற்கு அனுப்பி‌ வைத்தான். 

இப்பொழுது உறவுகளும் நண்பர்கள் மட்டுமே. அவர்களும் கிளம்ப ஆரம்பிக்க, ஹோட்டல் பெயரிட்ட தாம்பூலப்பை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

 தங்கை மற்றும் அத்தை பிள்ளைகளோடு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். உடன் அமிர்தாவும், கௌதமும் இணைந்து கொள்ள அகிலாண்டத்திற்கு சகலமும் எரிந்தது. தன் மகளோடு அமிர்தாவை ஒப்பிட்டது மனது. அமராவதியும் அழகுதான் என்றாலும் அவள் முன் சற்று மட்டுப்பட்டது போல் தோன்றியது. போதாக்குறைக்கு உடல் குறை வேறு.‌ அவனுக்கும் மூத்தவள். இவளோ இன்னும் சிறுபிள்ளைத் தோற்றத்தில் இருந்தாள். 

அகிலாண்டத்தின் மனம் காலம் கடத்தினால் முதலுக்கே மோசமாகிவிடும் எனத்தோன்ற, வேகமாகக் கணக்குப் போட்டது. 

சாப்பிட்டு முடித்து, கைகழுவி வந்து சேரில் அமர்ந்து கொண்டனர்.‌ அனைவருக்கும் குலோப்ஜாமூனை பேப்பர் கப்பில் ஜீராவோடு போட்டு தட்டில் வைத்து தேன்மொழி எடுத்து வந்தாள். அமர்ந்திருந்தவர்கள் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொள்ள,

அமிர்தாவும் எடுத்துக்கொண்டவள், ஜீராவோடு ஸ்பூனில் எடுத்து ஒரு வாய் வைத்தாள். அடுத்த ஸ்பூன் எடுத்து வாயில் வைக்கப்போக, ஏதோ குறுகுறுப்பில், நிமிர்ந்து பார்த்தாள். சற்று தள்ளிநின்று வந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தவன் பார்வை எறும்பாய் மொய்க்க, அவளைத் தின்று கொண்டிருந்தான் கண்களால். 

பட்டு வேட்டிசட்டையில் அவனைப் பார்த்தவளுக்கும் மாப்பிள்ளை கோலம் நினைவு வர, மைவிழிகளில் மயக்கம் ததும்பியது. தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை, சட்டென புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, கைதடுமாறி சேலையில் ஜீரா சிந்தியது. கவனம் சிதறியவள் கையிலிருந்த பேப்பர் கப்பும் சிதறியது. 

“அச்சச்சோ… பட்டுச்சேல வீணாயிருச்சு பாரு. உடனே தண்ணி வச்சு க்ளீன் பண்ணு அமிர்தா.” என தேன்மொழி கூற, கைகழுவும் இடத்திற்கு எழுந்து சென்றாள். கீழே இருந்த ரெஸ்ட் ரூமில் ஆள் இருக்க, மேலே செல்ல முற்பட, உடன் சென்ற தேன்மொழியை ருத்ரன் அழைத்தான். 

“உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கெளம்புறாங்க பாரு. அவங்களுக்கு பை கொடுத்து அனுப்பு.” எனக் கூற, அவள் நண்பர்களை வழியனுப்ப சென்றுவிட்டாள். 

மேல்தளம் முழுவதும் தனித்தனி தடுப்புகள் கொண்ட கேபின் போன்ற அமைப்பு. சுவர் முழுதும் மரப்பலகைகளால் ஒரே மாதிரி அடைக்கபெற்றிருக்க, மேலே வந்தவள், இடம் தெரியாமல் நிற்க, 

“அங்கே.” என குரல் பின்னால் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவள்,

“இப்படியா ஒரே மாதிரி வைப்பீங்க. எங்கேனு தேடுறது?” என்றாள்.

“இன்னைக்கி போர்டு மாட்டிருவாங்க.” என்றான்.

அவன் கைகாட்டிய இடத்தில் கைவைத்து தள்ள,‌ கதவு திறந்தது.‌ அங்கு வரிசையாக குழாயோடு வாஷ் பேசின் இருந்தது. கர்சீஃபை தண்ணீரில் நனைத்துப் பிழிந்தவள், அந்த ஈரத்தைக் கொண்டு சேலையில் சிதறிய ஜீராவை துடைத்து எடுத்தாள். முடிந்த அளவிற்கு துடைத்துவிட்டு வெளியே வந்தாள். 

அவள் முகத்தைப் பார்த்தவன் அவள் கையிலிருந்த கைக்குட்டையைக் கேட்டு கைநீட்ட, 

“எதுக்கு?” என்றாள்.

“கொடுத்தா அதால தொடச்சு விடுவேன். இல்லைனா வேற மாதிரி துடைக்க வேண்டியிருக்கும். எப்படி வசதி?” எனக்கேட்டு புருவம் உயர்த்த,

ஏதோ விவகாரமாத்தான் இருக்கும் என்றது அவனது பார்வை. வம்பு செய்யாமல் கைக்குட்டையைக் கொடுக்க, வாங்கியவன் கைகள் அவள் முகத்திற்கு நீண்டது. சட்டென அவள் பின் வாங்க, பின்னங்கழுத்தில் கை கொடுத்து அருகே இழுத்தவன், இதழோரம் பிசுபிசுத்த ஜீராவைத் துடைத்தவன் கை கழுத்துக்கு இறங்க, “கொடுங்க.” என வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள். தொட்டுக்கொள்ளும் தூரத்தில் பட்டுக்கொள்ளாமல் நின்றதற்கே அவளுக்கு வியர்த்துவிட்டது. பின்கழுத்தில் அவனது உள்ளங்கைச் சூட்டில், அவளுக்குள் குளிர்பரவ, காற்றே இல்லாத அறைக்குள் வைத்துப் பூட்டியது போல் மூச்சடைத்தது.

“எங்கேனு மட்டும் சொல்லுங்க. நானே தொடச்சுக்குறே.” என்றவள் குரல் படபடத்து நடுங்க, 

“வட போச்சே.” என்று உதடு பிதுக்கியவனை… அவள் முறைத்துப் பார்க்க,

“அங்கே.” என் விரல் கழுத்துக்குக் கீழே சுட்ட வர, 

“வேண்டாம்.” என ஓரடி விலகியவள், ஈர கர்ச்சீஃப் கொண்டு அவன் விரல் சுட்டாத இடம் எல்லாம் கூட துடைத்துக் கொண்டாள். கைகள் மெலிதாக நடுங்குவது அப்பட்டமாகத் தெரிய, அவள் படபடப்பை ரசித்தவன்,

“அல்லிராணி, இன்னைக்கி ரொம்ப அழகா இருக்க.” என்றவன் குரல் குழைந்து வந்தது. கைகளைக் கட்டிக் கொண்டு அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் குரலில் மட்டுமல்ல கண்களிலும் கிரக்கம். அவள் நிமிர்ந்து பார்க்க, 

“இந்தப் புடவையில கொஞ்சம் பெரிய பொண்ணா, புசுபுசுன்னு பால்பன்னுமாதிரி இருக்க.” என கண்கள் மயங்க, கைகளைக்கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து நின்றான். அந்தப் பார்வை மங்கையை உயிர்வரை ஊடுறுவ, மஞ்சள் இழைத்த கன்னம் சடுதியில் செந்தூரம் பூக்க, பூத்த அழகை கைகளில் அள்ள முடியாமல், கண்களால் அள்ளிக் கொண்டான்.

“ஹோட்டல்காரர் பேச்சப்பாரு. பன்னு கின்னுனு.” என்றாள் நொடிப்பாக. அதைக் கேட்டவன் வாய்விட்டு சிரிக்க, 

“இப்ப என்ன சொன்னேனு இப்படி சிரிக்கிறீங்க.” என்றாள்.

“ஒன்னுமில்ல வா!” என்றான். 

“ஒன்னுமில்லாததுக்கா இப்படி சிரிச்சீங்க?” 

“ஆமா… வா!” என்று முன்னே செல்ல,

“ஏதோ இருக்கு. இப்ப சொல்லப்போறீங்களா இல்லியா?” 

“இல்ல… இதையே நான் சொல்லியிருந்தா டபுள் மீனிங்னு கழுவி ஊத்தியிருப்ப.” என்றான் கள்ளச்சிரிப்போடு.

அப்படி என்னத்த சொல்லிட்டோம் என யோசித்துக் கொண்டே நடந்தவள், “அடியாத்தீ!” என இரண்டு கைகளையும் கொண்டு கப்பென வாயைப் பொத்திக் கொண்டு நின்றுவிட்டாள். திரும்பிப் பார்த்தவன்,

“கீழே வா!” என சிரித்துக்கொண்டே அழைத்துவிட்டு அவன் முன் செல்ல, முறைத்துக் கொண்டே பின் தொடர்ந்தாள். 

இவர்கள் கீழிறங்க பக்கத்து தடுப்பில் அமர்ந்திருந்த அமராவதி மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். அவளது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது. கலங்கிய மகளை அணைத்துப் பிடித்திருந்த  அகிலாண்டத்தின் கண்களில் ஆலகாலம். 

அதிகநேரம் நின்று கொண்டேயிருந்ததால் கால் வலிக்க, இங்கே குஷன் அமைப்போடு இருக்கைகள் இருக்க, ஓய்வெடுக்க அம்மாவும் மகளும் மேலே வந்தனர்.‌ சிறிது நேரத்தில் பெண் குரல் கேட்க யாரென்று பார்க்க எழுந்தவள், கூடவே ஒலித்த ருத்ரனின் குரலில் அப்படியே அமர்ந்து விட்டாள். அடுத்து அவள் காதில் விழுந்த எதுவும் அவ்வளவு உவப்பானதாக இல்லை. 

ஒரு கூட்டத்தில் ஒரு பெண் கண்ணுக்கு பளிச்சென இருந்தால், அவள் மீது ஆண்கள் கண்கள் மட்டுமல்ல, பெண்கள் கண்ணும் படும் என்பது உலக நிதர்சனம். அமிர்தவல்லி வந்தவுடனே அமராவதியின் கண்களும் அவளை அளவெடுத்தது. தன்னவன் என அவள் எண்ணியிருந்தவன், அவளுக்குக் கொடுத்த முக்கியத்துவமும், அடுத்து அவள் விளக்கையும் ஏற்றி வைக்க, அப்பொழுதே புகைச்சல் ஆரம்பித்தது. இப்பொழுது அதில் எண்ணெய் வார்த்துச் செல்கின்றனர் இருவருமே. 

1 thought on “தெம்மாங்கு பூந்தமிழே 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top