தெம்மாங்கு பூந்தமிழே 14

14

“ஹோட்டல் திறப்புவிழான்னு சொல்றேன். வாழ்த்துக்கள் சொல்லாம என்னென்ன ஸ்பெஷல் ஐட்டம்னு கேட்ட பாத்தியா? அங்க நிக்கிற.” எனக் கேட்க, 

“ஷ்ஷ்ஷ்…” என சட்டென இடக்கண்ணை சுருக்கி நுனி நாக்கைக் கடித்துக் கொண்டவள்,

“ஆமா… ஒரு ஜவுளிக்கடை, நகைக்கடைனா டிசைன்ஸ் பாக்க வரலாம். ஹோட்டல்னா என்ன சாப்பாடுனு தானே கேக்க முடியும்.” என கெத்தை விடாமல் கேட்டு அசட்டு சிரிப்பு சிரித்து வைக்க,

“சகிக்கல…” என்றவனுக்கும் அவள் சிரிப்பு தொற்றிக் கொண்டது. 

கலங்கிச்சிவந்த கண்களும், முகம் கொள்ளா சிரிப்புமாகத் தன் முன் அமர்ந்திருந்தவளை ஆசையாகப் பார்த்திருந்தவன் கண்களில் கலர்க்கலராய் கனவுகள். வாய் பேசாத வார்த்தைகளெல்லாம் இருவர் கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன.

ஹோட்டல் வேலை முடியும் தருவாயில் இருக்க, திறப்பு விழாவிற்கான ஆயத்தப் பணிகளில் இருந்தான் ருத்ரன். இறுதிக் கட்ட வேலைகள் அவனை இழுத்துக் கொள்ள, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பக்கம் ஆயிற்று காலேஜ் கேன்டீன் பக்கம் வந்து. அன்று வந்திருந்தான். 

“வாடா பங்கு… என்னடா காத்து இந்தப் பக்கமா வீசுது?” என ருத்ரனை வரவேற்றவன், வேலைக்கு இருந்தவனிடம் நண்பனுக்கு ஒரு ஜுஸ் போடச்சொன்னான். நண்பனின் அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான் ருத்ரன்.

“உன்னப் பாக்கதான்டா. எப்படி இருக்க?” என நண்பனைப் பார்க்க வந்ததாகக் கூறி, நலம் விசாரிக்க,

“எனக்கு ஏற்கனவே ரெண்டு தடவ காது குத்திட்டாய்ங்கடா பங்கு. சின்னப் பிள்ளையிலயே தாய்மாமன் சீர் வாங்க ஒரு தடவ. சமீபத்துல மொய் சீர் வாங்க ஒரு தடவைனு ரெண்டு தடவ குத்தியாச்சு. அதுல வந்த மொய்க்காசுல தான் இந்தக் கேன்டீனே டென்டர் எடுத்துருக்கு. நீயும் இன்னொரு தடவ குத்தாதடா.”

“ஆமான்டா… கல்யாணம் வைக்க வேண்டிய வயசுல உனக்கு உங்க அப்பா காதுகுத்துல்ல வச்சாரு. நீயும் வெக்கமே இல்லாம மாலையப் போட்டுட்டு வந்து நின்னயே?” எனக் கேட்டு சிரிக்க,

“என்னடா பண்றது. எங்க அப்பா மொய்க்காசு வாங்கித்தான் கான்ட்ராக்ட் எடுத்துத்தருவேனு சொல்லிட்டாரு. வேற வழி. காதக் கொடுத்துட்டு கம்முனு பல்லக் கடிச்சுட்டு உக்காந்துக்கிட்டே. இந்த வயசுல அழுதா நல்லாவா இருக்கும்? அதுலயும் இந்த மாமன் மகனுக வேற, எப்படா வாயத் தொறப்பே… வாழப்பழத்த தினிக்கலாம்னு ரெடியா உரிச்சு வச்சுக்கிட்டு நிக்கிறானுக. வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தம் கட்டுறது?” என அவன் சொன்ன தொனியில் ஜுஸ் குடித்துக் கொண்டிருந்த ருத்ரனுக்கு புரையேறியது. அன்றைய வலியை நினைத்து இன்று அழுதுவிடுவான் போல. 

“நல்லவேளடா. உங்க மாமா மடியில உன்ன உக்கார வைக்கல. பாவம் அவரு.‌ அந்தளவுக்கு சந்தோஷம்.”

“ஆனா, நான் கேன்டீன் கான்ட்ராக்ட் எடுத்தது எனக்கு நல்லதோ இல்லையோ, உனக்கு நல்லா வசதியாப் போச்சுடா.” என கேலி பேச, அவன் எதைக் குறிப்பிடுகிறான் என அறிந்தவனும்,

“இதுல எனக்கென்ன டா வசதி?” என்றான் எதுவும் தெரியாதது போல். 

“ஏஞ் சொல்ல மாட்ட? எங்க… அத எம் மூஞ்சியப் பாத்து சொல்லு?”

“உம் மூஞ்சியப் பாத்துப் பேசவா இம்புட்டுத் தூரம் வந்திருக்கு.” என தனக்குத் தானே கூறிக் கொள்ள,

“அது சரி… நீ பாக்க வந்த ஆளே வேறயாச்சே?” என மணிகண்டனும் அலுத்துக் கொள்ள,

“ஆமா… எப்படா ப்ரேக் விடுவாங்க.” என்றான்.

“ஏன், உனக்குத் தெரியாதா? இன்னைக்கி தான் மொதமொதன்னு வர்றியா?

வரவர காலேஜ் கேன்டீன் மாதிரியே தெரியலடா. வந்து உக்காந்துகிட்டு, போறவர்ற பிள்ளைகள சைட் அடிக்கிற ரோட்டோர டீக்கடை மாதிரி ஆகிப்போச்சு.‌”

“சலுச்சுக்காதடா. நண்பன்னா இந்த மாதிரி காரியத்துக்கு உதவுறதுக்குதானடா?”

“ஏன்டா! சசிக்குமார் படம் ஏதும் பாத்துட்டு வந்தியா? இங்க என்ன நட்புக்கு தோள் கொடுப்போம்னு போர்டா மாட்டியிருக்கு? அந்த சென்டிமென்ட் வெங்காயமெல்லாம் நமக்கு இல்லடா பங்கு. வெல்லம் திங்கறது நீங்க விரல் சூப்புறது நாங்கனு கடைசில எல்லாம் நக்கிக்கிட்டுப் போயிறும்டா.” என எரிச்சல் மேலிட நண்பனைக் குத்திக்குதறிக் கொண்டு இருந்தான்.

பின்ன… அவனும் மனுஷன் தானே. காலேஜ் ப்ரேக் விடும் நேரம் தெரியாதா? வந்ததில் இருந்து நூறாவது முறையாகக் கேட்கிறான். மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், என்னவோ நமது கட்டுப்பாட்டில் தான் மின்சாரவாரியம் இயங்குவது போல, எப்பொழுது கரண்ட் வரும் எனக் கேட்டே நச்சரிக்கும் சிறுபிள்ளையாய், இவனும்   என்னவோ இன்று தான்‌ கேன்டீன் வந்தவன் மாதிரி நேரம் கேட்டே நண்பனைத் துளைத்து எடுத்துவிட்டான். இதில் நொடிக்கொரு தடவை கைக்கடிகாரத்தையும் திருப்பிப் பார்த்து வேறு அலுத்துக் கொண்டான். அவன் அவசரத்திற்கா கடிகார முள் சுற்றும். 

நண்பனும் பொறுமையைப் பறக்க விட்டவன் ருத்ரனைக் கடிக்காத குறையாக குதற ஆரம்பித்து விட்டான். இருவரும் பேசிக் கொண்டு இருந்தாலும் இல்லையில்லை ஒருவரை ஒருவர் கழுவி ஊற்றிக் கொண்டு இருந்தாலும், அவனது கண் பார்வை மட்டும் அவள் வருவாளா என கேன்டீன் வாயிலையே பார்த்து நின்றது. 

“என்னடா இன்னும் காணோம்?” என மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க,

“உன் அவசரத்துக்கெல்லாம் ப்ரேக் விட‌மாட்டாங்கடா பங்கு. காலேஜ்க்குனு ஒரு நேரம் இருக்கு.” என அலுக்காத குறையாகக் கூற, அவனை முறைத்து விட்டு மீண்டும் விட்ட வேலையைத் தொடர்ந்தான். 

“லவ் பண்றாய்ங்கனு தெரிஞ்சா, அவிங்ககூட சகவாசமே வச்சுக்கக் கூடாதுடா. இவிங்க இம்சை தாங்கல?”

“யார்றா அது… உனக்கு இம்சையக் கூட்டுறது?”

“பூன கண்ணமூடிக்கிட்டா உலகம் இருண்டுறாதுடா. நீயும் இல்லைனு எத்தனை நாளைக்கு தான் மலுப்புறேன்னு பாக்குறே?”

“டேய்… அதெல்லாம் ஒன்னும் இல்லடா பங்கு.” என்றவன் முகத்தில் மந்தகாசமாய் ஒரு புன்னகை. என்றுமில்லாத ஜொலிப்பை நண்பன் முகத்தில் கண்டவன்,

“கைப்புண்ணுக்கு எதுக்குடா கண்ணாடி. அது தான் உன் மொகரையிலயே எழுதி ஒட்டியிருக்கே. ஒன்னும் இல்லாமத்தான் பாக்க வேண்டிய வேலைய விட்டுட்டு இன்னும் இங்க நிக்கிறியா? என்னைக்குடா ஹோட்டல் ஓபனிங்?” என்றான். முக்கிய வேலைகளை விட்டுவிட்டு நண்பன் வந்ததிலேயே அவன் லட்சணம் தான் தெரிகிறதே. 

“அடுத்த வாரம்டா. அதுக்கு தான்டா அழைப்பு சொல்ல வந்திருக்கேன்.” என்றான்.

ஹோட்டல் இன்டீரியர் எல்லாம் முடிந்து திறப்புவிழாவிற்கான ஏற்பாடுகள் போய்க்கொண்டு இருக்கிறது. முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரை திறந்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கியஸ்த்தர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறான். தலைக்கு மேல் வேலை இருக்க, இன்று விடுப்பு முடிந்து கல்லூரி ரீ ஓபனிங் எனத் தெரிந்து இங்கு வந்து காத்துக் கொண்டிருக்கிறான். 

ருத்ரனும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய தன் மனதை அறிந்து கொள்ள உதவியது இந்த இடைப்பட்ட காலகட்டம் தான். தினமும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட பரவசம், பார்க்காத நாட்களில் இம்சை கூட்டியது. வேலை அதுபாட்டிற்கு நடந்து கொண்டிருந்தாலும், மனதில் ஏதோ ஒரு ஏக்கம் எப்பொழுதும் நீக்கமற வியாபித்திருந்தது. ஆற்று நீரில் காலைக்கடிக்கும் மீன்குஞ்சின் குறுகுறுப்பாய், மனதிற்குள் முனுமுனுவென இனம்புரியாதொரு உணர்வு… அந்த உணர்வு தந்த இனிமையான இம்சை என எதிலும் முழுமனதாக ஈடுபாடு காட்ட முடியாமல் தவித்துப் போனான்.

பசிக்குது சாப்பிடமுடியல. படுத்தா தூக்கம் வந்தபாட்டைக் காணோம். கண்ணை மூடினால் கனவிலும் அவள் தானே என காதல் நோய்க்கான அறிகுறி அத்தனையும் அப்பட்டமாகத் தெரிந்தது. அஹிம்சையின் ஹிம்சையை உணர்ந்து அனுபவித்தான். 

வீட்டின் பின்புறத்தில், தோட்டத்து கல் பென்ஞ்சில், நிலா வெளிச்சத்தில், கையை தலையணையாக்கி வானம் பார்த்துப் படுத்திருந்தவன் ‘என்னடா இது பாண்டியனுக்கு வந்த சோதனை!’ என நொந்து கொண்டான். 

அணுஅணுவாய்

சாவதற்கு

முடிவெடுத்துவிட்ட பிறகு

காதல்

சரியான வழிதான்.

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்…

உலகம் அர்த்தப்படும்…

ராத்திரியின் நீளம்

விளங்கும்…

எப்பொழுதோ கண்ணில் பட்ட கவிதை வரிகளெல்லாம் இப்பொழுது கருத்தில் வந்து இம்சித்தது.

காதல் வந்தால் ஒன்று கவிதை எழுத வேண்டும். இல்லை கவிதை படிக்க வேண்டும் போல.‌ 

தனக்குத் தானே சிரித்துக்கொண்டு மீசை நீவிக் கொண்டான். காதல் வானில் சிறகடிக்க அவனுக்கும் சிறகுகள் முளைத்தன. காதல் தீ அவனையும் பற்றிக் கொள்ள, ஏகாந்தமாய் எரிந்தான். தனக்குள் எரியும் நெருப்பை அணைக்கும் வழி தெரியாமல் தவித்தான். அதிகாலைப்பனியாய் உள்ளம் குளிர்ந்து கிடக்க, உச்சிப் பொழுதாய் உடல் வெந்து தணிந்தது.

மஞ்சுளாதேவியே மகனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு “உடம்பு சரியில்லையா ருத்ரா. ரொம்ப அலைச்சல் வச்சுக்காதப்பா. உதவிக்கு ஆளுகள வச்சுக்க.” என விசாரிக்கும் நிலைக்கு வந்து நின்றான்.

 நேரில் போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்றாலும், தினமும் இன்டீரியர் வேலைகளை தானே முன்னிருந்து மேற்பார்வை பார்க்க வேண்டியிருந்தது. அதற்கே பொழுது சரியாகிப் போக, அதற்கு மேல் கல்லூரி செல்ல முடியாது. அழைப்பிதழ் அடிக்க, விழாவிற்கு அரசியல்வாதியை அழைக்கவேண்டி அவரை சந்திக்க, முக்கியஸ்த்தர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க என வேலைகள் வரிசைகட்டி நின்றன.

இது சரிப்படாது என ஒருநாள் காலையிலேயே வண்டியை எடுத்துக்கொண்டு நேரே கல்லூரி வர… இவனை சந்தேகமாகப் பார்த்த செக்யூரிட்டி, அடையாளம் தெரிந்ததால் ஒன்றும் கேட்கவில்லை. ‘ஏன் இப்படி பார்க்கிறார்?’ என்ற எண்ணத்தோடு கல்லூரியின் உள்ளே கேன்டீன் பகுதிக்கு வந்தான். கேன்டீன் இன்னும் திறக்காமல் இருக்க, கோபமாக நண்பனை ஃபோனில் அழைத்தான்.

அழைப்பு ஏற்கப்பட,

“ஏன்டா வெண்று… கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? இன்னும் வந்து கேண்டீனத் திறக்காம என்னடா பண்ற. காலேஜ்க்கு புள்ளைக எல்லாம் வர ஆரம்பிச்சுருவாங்க” எனக் கத்த,

“நீ எங்கடா இருக்க?” என்றான் எதிர்முனையில் அரைகுறை தூக்கத்தில் இருந்தவன் உளறலாக.

“காலேஜ் கேண்டீன் முன்னால தான்டா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்க வர்ற!” என ஆணையிட,

“அஞ்சு மணி நேரமே ஆனாலும் வரமுடியாதுடா.” என்றான். 

“உனக்கெல்லாம் கேன்டீன் டென்டர் எடுத்துக் கொடுத்தாரு பாரு… அவரச் சொல்லணும்.” என அவனைப் பெற்றவரையும் காய,

“டேய்… யாருமே இல்லாத கடைக்கு வந்து யாருக்குடா டீ ஆத்தச் சொல்ற?” என சலித்துக் கொள்ள,

“ஏன்டா.” என்றான் உச்சகட்ட கடுப்பில்.

“காலேஜ் செமஸ்ட்டர் லீவுடா பங்கு. என்னைய தூங்க விர்றா. உசுர வாங்காதடா. அதுவுமில்லாம இன்னைக்கி சன்டே டா.” என அவன் அழுகாத குறையாக அழைப்பைத் துண்டித்தான். 

அப்பொழுதுதான் அவனுக்கே சுற்றம் உரைத்தது. ஆங்காங்கே ஒருசிலர் மட்டுமே கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனரே ஒழிய, ஒரு ஈ காக்கா இல்லை. செக்யூரிட்டியின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது. தன் நிலையை எண்ணித் தானே நொந்து கொண்டான். 

இத்தனை நாள் பழகியிருக்கோம். அவ ஃபோன் நம்பர் வாங்கணும்னு கூடத் தோணல. தேன்மொழியிடம் கேட்டுப் பாரக்கலாமா என ஒரு பக்கம் மனம் எண்ணியது. தங்கைக்கே கல்லூரி சென்ற பிறகுதானே ஃபோன் வாங்கிக் கொடுத்தோம்.‌ அவளிடம் எப்படி இருக்கும் என யோசனையும் ஓடியது. அப்படியே தேன்மொழியிடம் நம்பர் இருந்தாலும் என்னவென்று கேட்பது எனவும் தோன்ற அந்த யோசனையைக் கைவிட்டான். கல்லூரி திறக்க ஒருவாரம் இருக்க பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தவன், இதோ… முதல் நாளே வந்து அவளுக்காக தேவுடு காத்துக்கொண்டு இருக்கிறான். 

வழிமேல் விழி வைத்திருந்தவன் கண்கள் திடீரென ஒளி கொள்ள‌, ருத்ரன் முகத்தில் பிரகாசத்தைப் பார்த்த மணிகண்டன், கேன்டீன் வாயிலை நோக்கினான். நண்பர்களோடு அமிர்தா வருவது தெரிந்தது. 

இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பூரணச்சந்திரனாக மிதந்து வந்தாள்.

சட்டென எழுந்து உள்ளே சென்று மறைந்து கொண்டான் ருத்ரன். 

“இவ்வளவு நேரமா உசுர வாங்கிட்டு, இப்ப எங்கடா போற.” எனக் கேட்க,

“உஷ்ஷ்ஷ்…” என வாயில் விரல் வைத்து சைகை செய்துவிட்டு ஓரமாக அவள் கண்ணில் படாதவாறு மறைந்து நின்று கொண்டான். 

நாம் மட்டும் தான் இவள் நினைப்பில் நொந்து நூடுல்ஸ் ஆனோமா… இவளுக்கும் நம் நினைப்பு இருக்குமா எனப் பார்க்க ஆசை.

நண்பர்களோடு வந்தவளது பார்வை கேன்டீனில் யார் இருக்கிறார்கள் என்று தான் முதலில் ஆராய்ந்தது. லீவு முடிந்து இன்று கல்லூரி திறந்திருப்பதால் அவனும் வந்திருப்பான் என எதிர்பார்ப்போடு கண்கள் தேட, ருத்ரன் அங்கு இல்லாமல் புது வேலையாள் இருக்க, வாடிய வெற்றிலையாய் முகம் சுருங்கியது. அவள் பார்வையின் பரிதவிப்பைக் கண்ணுற்றவன் இதழ்கள் மெலிதாக விரிந்தது.

முகத்தில் சுரத்தையின்றி நண்பர்களுடன் அமர்ந்து கொண்டாள்.

நண்பர்களே வந்து தேவையானதை வாங்கிச் செல்ல, இவள் பெயருக்கு கொறித்துக் கொண்டிருக்க, நண்பர்களுடனான பேச்சில் அவளுக்கு கவனம் போகவில்லை. அடிக்கடி கேன்டீன் பக்கமே கண்கள் அலைபாய்ந்தது. அவள் முகத்தில் தெரிந்த வேட்கை அனைத்தும் மன்னவனுக்கான மங்கையின் தேடலைச் சொல்லாமல் சொல்லியது. 

சாப்பிட்டு முடித்து நண்பர்கள் கிளம்ப, தான் பின்னால் வருவதாக நண்பர்களை வகுப்பிற்கு அனுப்பி வைத்தவள், நேராக மணிகண்டனிடம் வந்தாள். 

அவன் என்னவென்று பார்க்க, எப்படிக் கேட்பது, என்ன கேட்பது என்ற தயக்கம் அவளை ஆட்கொண்டது. தன்னை ஏதாவது தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்பும் உடனிருக்க, காதல் வந்தால் கள்ளத்தனமும், குருட்டுத் தைரியமும் கூடவே வரும் தானே. 

“தேன்மொழி அண்ணே எப்ப வருவாங்க?” என மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க, 

“அது யாரும்மா, தேன்மொழியோட அண்ணே. எனக்கு அப்படி யாரையும் தெரியாதே.” என அவளைப் போட்டுவாங்க, மறைந்திருந்தவன்‌ பற்கள் நெறிபட்டது. 

“அது தாண்ணா… கொஞ்ச நாள் முன்னாடி இங்க இருந்தாங்களே. உங்க ஃப்ரென்டும் கூட.” என அவள் திக்கித் திணறி சுற்றி வளைக்க,

“ருத்ரனா ம்மா?” என அவன் ஆசுவாசமாகக் கேட்க,

“ஆமா ண்ணா.” என வேகமாகத் தலையாட்ட, அவளது தயக்கமும், ஆர்வமும் மறைந்திருந்து பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. 

ஒரு பெண்ணின் கண்களும், மனதும் அவனைத் தேட உள்ளுக்குள் கர்வம் தலை தூக்கியது. 

“அவன் இனிமே இங்க வரமாட்டான்மா. புதுசா ஹோட்டல் ஆரம்பிக்கப் போறான். அந்த வேலையா பிஸியா இருக்கான்.” எனக்கூற, இத்தனை நாட்களின் ஏக்கத்தில் இன்றாவது அவனைப் பார்த்து விடலாம் என நினைத்துக் கொண்டு வந்தவளுக்கு, அவன் இனி வரவேமாட்டான் என்ற பதிலில், அவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. 

அவனைக் காணாத இத்தனை நாட்களில் அவனது தவிப்பிற்கும் குறைவில்லாமல் தவித்து தத்தளித்தது கன்னி மனது. உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த முடியாமல் தவித்தவளுக்கு,

அவனே இனி இங்கு வரமாட்டான் எனத் தெரிய, எங்கே பார்ப்பது, எப்படிப் பார்ப்பது என்ற கவலை வேறு. 

இவனிடம் ஃபோன் நம்பர் கேட்போமா எனத் தோன்றினாலும், என்னவென்று கேட்பதென்று ஒரு தயக்கம். 

“ஏம்மா… பாக்கி எதுவும் தரணுமா?” என அவள் முகம் பாரத்தவன் அவனே எடுத்துக் கொடுக்க,

“ஆமா ண்ணா… நான் தான் அவுங்களுக்கு பாக்கி தரணும். அதுதான் கேட்டேன். ஃபோன் நம்பர் இருக்குமா?” என்றாள் படபடப்பாக. 

“அவ்ளோ பெரிய தொகையா தரணும். எங்கிட்ட கொடும்மா. நான் பாக்கும் போது கொடுத்துர்றே.” எனக் கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு மேல் அவளது தவிப்பைக் காண இயலாதவன், உள்ளே இருந்து வெளியேவந்தான். 

திடீரெனத் தன்முன் தோன்றியவனைக் கண்டவள் முகத்தில் திருவிழாவில் தொலைந்த குழந்தை தாயைக் கண்டதும், ஓடிச்சென்று காலைக் கட்டிக் கொள்ளும் பரிதவிப்பு அவளிடம். அகமும் முகமும் ஒருசேர மலர அவனைப் பார்த்தவள், அவன் உள்ளே இருந்து வர, இவ்வளவு நேரமும் இங்கே தான் இருந்திருக்கிறான் எனத் தெரிய, வேகமாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். 

“உன்னைய வந்து பேசிக்கிறேன்டா.” என நண்பனை எச்சரித்தவன், அவள் பின்னாலே ஓடிச்சென்றான்.

அவனைப் பார்க்க முடியாமல் தான் மட்டும் தவித்துக் கொண்டிருக்க, அவன் ஒழிந்து நின்று அவளது தவிப்பைக் கண்டு ரசித்ததில் கட்டுக்கடங்கா கோபம் குமரியிடம்‌. 

விறுவிறுவென நடையை எட்டிப் போட்டவள் டேபிள் மீதிருந்த பேக்கை எடுத்துக் கொண்டு திரும்ப, குறுக்கே வந்து வழி மறித்து நின்றான். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவனை வெறித்துப் பார்த்தாள். முறைத்துப்பார்த்த கண்களில், அப்படியே கன்னத்தோடு கைகளில் ஏந்தி முத்தமிட ஆசை எழ, தன் எண்ணம் போகும் போக்கை உணர்ந்து அவனுக்கே ஆச்சர்யமாக, 

“யாரோ தேன்மொழி அண்ணனத் தேடின மாதிரி இருந்துச்சு.” என சிரித்துக் கொண்டே கேட்க, கோபம் சுர்ரென உச்சி தொட்டது. 

எதுவும் பேசாமல் தனது பேக்கை திறந்தவள், அதிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து அவன் முன் நீட்டினாள். அவன் வாங்காமல் அவளையே பார்த்து நிற்க, அவனது வலது கையை இழுத்து காசைத் திணித்தாள்.  

“இதுக்கு தான் தேடினேன். கடன் பாக்கி வைக்கக் கூடாதுல்ல.” என்றவள் வேகமாக அவனைவிட்டு விலகி நடக்க எத்தனிக்க, அவனும் அமைதியாக காசோடு சேர்த்து கையைப் பிடித்துக் கொண்டான். 

அவனைக் காணாத ஏக்கம், இனி எங்கே பார்ப்பது,‌ எப்படி பார்ப்பது என்ற தவிப்போடு, அவன் மறைந்து கொண்டு இவ்வளவு நேரமாக தன்னைத் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்த கோபம், அவனைப் பார்த்த சந்தோஷம் என எல்லாமும் சேர்ந்து அழுகையாக உருமாறி மூக்கின் நுனி விடைத்து ரோஜாநிறம் கொண்டது. கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

அன்பிற்கும்(காதலுக்கும்) உண்டோ அடைக்குந் தாழ்… பொய்யாமொழிப் புலவர் வாக்கு என்று பொய்யாகி உள்ளது. 

அவன் எதிர்ப்பார்த்த கேள்விக்கான பதிலை ஆயிரம் வார்த்தைகள் இட்டு நிரப்பி இருந்தாலும் இந்த ஒரு சொட்டு கண்ணீரின் பதிலுக்கு ஈடாகுமா?

அவளது ஒருதுளிக் கண்ணீரில் அவனது நெஞ்சக்குளம் நிறைந்து தளும்பியது.

வழக்கம் போல் அழுகையை அடக்க எப்பொழுதும் அவளிடம் சிக்கும் கீழுதடு இம்முறையும் உள்ளுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டது. படபடப்புடன் நெஞ்சம் விம்மித் தணிய, 

பிடித்த கையை விடாமலே மறுகைகொண்டு ஒரு சேரை இழுத்தவன், அதில் அவளை அமரச்சொல்லி சமிக்ஞை காட்ட, தலையை மட்டும் மறுப்பாக அசைத்தாளே ஒழிய  நிமிரவில்லை.

டேபிளில் இருந்த டம்ளரில் தண்ணீர் ஊற்றி அவளிடம் நீட்ட, எவ்வித எதிர்வினையும் இல்லை. அசையாமல் நின்றவளிடம்,

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அமிர்தா. அதுக்கு தான் காலையில இருந்து சாப்பிடாமக்கூட காத்துக்கிட்டு இருக்கேன்… இந்த அல்லிராணிக்காக.” எனக் குனிந்து மெதுவாகக் கூற, தனக்காக காலையிலிருந்து காத்திருப்பதை அறிந்தவள், அவனை ஏறெடுத்துப் பார்க்க, அவன் கண்கள் பேசிய பரிபாஷைக்கு கட்டுப்பட்டவள் மறுபேச்சின்றி சேரில் அமர்ந்து கொண்டாள். அப்பொழுதும் அவன் கன்னியின் கரத்தை விடவில்லை. அவளும் விலக்கவில்லை. இருவரின் உள்ளங்கைச் சூடும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. 

நண்பனிடம், இருந்த இடத்திலிருந்தே ஜுஸும், கேக்கும் ஆர்டர் செய்தான். 

ஆர்டர் வரும்வரை இருவரும் எதுவும் பேசிக் கோள்ளவில்லை. 

அவளது முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, குடை தாழ்ந்த சிப்பி இமைகள் ஈரமாகி இருந்ததைப் பார்த்தவனுக்கு, அள்ளி அணைத்துக் கொள்ளத் தோன்றியது. அவளும் தன்னை தேடியிருக்கிறாள் எனத் தெரிந்தது. இனி எதற்கு அர்த்தமற்ற வார்த்தைப் பரிமாற்றங்கள். இது போதும் என்றிருந்தது அவனுக்கு. 

மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ

சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ

கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே…

இனிப்பும், பழச்சாறும் வர இதுவரை பற்றியிருந்த கையை விருப்பமின்றி விடுவித்தான். இனிப்பை எடுத்தவன் அவளிடம் நீட்டினான். 

மகிழ்ச்சியான விஷயம்போலும் என உள்ளம் சொல்ல, வீம்பை விலக்கிவைத்து மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

“அடுத்த வாரம் ஹோட்டல் திறப்புவிழா. அந்த பிஸிலதான் இங்க வரமுடியல. நீயும் கண்டிப்பா வரணும்.” என அவளுக்கு அழைப்பு விடுக்க, 

அவனது வாழ்க்கையின் அடுத்தகட்டத்தின் தொடக்கம். அதற்கு தன்னையும் அழைப்பதில் உள்ளம் உவகை கொள்ள, அதே சந்தோஷத்தோடு,

“ஹோட்டல் திறப்பு விழான்னா நெறைய ஸ்பெஷல் அயிட்டமெல்லாம் இருக்கும் தானே.” என இதுவரை, அவனை எதற்கு தேடினோம், எதற்காக அவனைப் பார்த்ததும் அழுகை வந்தது, அவனிடம் எதற்கு கோபித்தோம் என அனைத்தையும் சடுதியில் மறந்து ஆவலாய் கேட்க…  

அவள் கேட்ட தொனியில் வாய்விட்டு சிரித்தான் ருத்ரன். 

அசட்டுத்தனமாகக் கேட்டுவிட்டு அவளும் சிரிக்க,

“முதல்ல ஸ்வீட் சாப்பிடு.” எனக்கூற, ஒரு கடி கடித்தவள்,

“நான் எப்படி வரமுடியும்? அம்மா விடமாட்டாங்க. அதுவும் இல்லாம நான் யாருன்னு உங்க வீட்டு விசேஷத்துக்கு வர்றது?” என கேட்டவள் முகம் சுணங்கியது. அவள் கேட்ட தொனியே, அவளுக்கும் வரவேண்டும் என்ற ஆசை இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. எனினும் வரமுடியாதே என்ற ஏக்கமும் விரவி இருந்தது. உண்மை தானே. ஒரு வயசுப் பிள்ளையை தனியாக யாரென்று தெரியாதவர்கள் விசேஷத்திற்கு எப்படி அனுப்பி வைப்பார்கள். 

அவள் கையிலிருந்த இனிப்பை வாங்கியவன் அவள் கடித்த பகுதியில், இயல்பாய் அவனும் ஒரு வாய் கடிக்க, பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளங்கையில் சுழலும் பம்பரமாய் அடிவயிற்றில் ஒரு கூச்சம் பரவ… மூச்சடைப்பது போல் இருக்க, அருகில் இருந்த ஜூஸை எடுத்து வேகமாக குடித்தாள். மெலிதாக சிரித்துக் கொண்டவன்,

“தேன்மொழி ஃப்ரென்டா வா!” எனக் கூற,

“அதுக்கு அவ இல்ல கூப்பிடணும்.” என்றவள் கையிலிருந்த மீதி ஜுஸ் டம்ளரில் அவன் கண் பதிய, கீழே வைக்காமல் மடமடவென டம்ளரைக் காலி செய்தே கீழே வைத்தாள். இப்பொழுது வாய்விட்டே மலர்ந்து சிரித்தான்.

“நடத்துங்கடா… பப்ளிக்கா உக்காந்துகிட்டு பாலும் பழமும் சாப்புடராய்ங்க. நம்ம கேட்டா எங்களுக்குள்ள ஒன்னுமே‌ இல்லைம்பாய்ங்க.” என கல்லாவில் இருந்தவன் கருவிக்கொண்டிருந்தான். 

அவளது சந்தேகத்தில், “அப்படி ஒன்னு இருக்கோ.” என மேஜையில் விரல்களால் தட்டிக் கொண்டே யோசித்தவன்,

“உங்க அப்பா. எச்.ஐ. தானே. அவருக்கு எப்படியும் பத்திரிகை கொடுப்பேன். அவரோட வா. இல்லைனா அவர் சார்பா வா!” என அழைக்க,

“அப்ப… எங்க வீட்டுக்கு வந்து பத்திரிகை வக்கிறீங்களா? அப்ப தான் நானும் வரமுடியும்.” என குரலில் துள்ளலோடு கேட்டவள்,

“அப்படி என்ன, முக்கியமா நான் வந்தே ஆகணுமா?” என ஆவலாய் அவன் பதிலையும் எதிர்பார்த்து நோட்டம் விட்டாள்.

“நீ கண்டிப்பா வரணும்னு எனக்கு தோனுது. உனக்கும் கண்டிப்பா வரணும்னு தோனுச்சுனா வா.” சுள்ளென வந்தது பதில். அதில் இருந்த அதிகாரமே அவளை அவன் எதிர்பார்ப்பது தெரிந்தது. எனக்கு நீ முக்கியம், உனக்கு நான் எப்படி என்ற கேள்வி உள்ளுரைந்து நிற்க, மனதிற்குள் வேர்பிடித்த செடியில் இன்று வாசனையாய் பல பூக்கள் பூத்தது. மாலையில் சேராமலே வாடிவிடும் எனத் தெரியாமல். 

1 thought on “தெம்மாங்கு பூந்தமிழே 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top