6
தரிசனம் முடித்து மலையிறங்கியவர்கள் மண்டபம் வந்தனர். விருந்து ஏற்பாடெல்லாம் அங்குதான் என்பதால் இன்னும் சமையல் நடந்து கொண்டிருந்தது.
சீனி, பழனி திருமணத்தை தான் வீட்டளவில் முடித்துக் கொண்டனர். ஆனால் அமிர்தா காது குத்து விழாவிற்கு விற்குஅனைவரையும் அழைத்திருந்தனர்அழைத்திருந்தனர். இது பழனியும், சீனியும் வாழ்க்கையில் இணைந்துவிட்டனர் என்பதை அறிவிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் பழனி இப்படியே இருப்பாளா என கேட்பவர்கள் வாயடைக்கவும் தான் இந்த ஏற்பாடு.
மலையேறி இறங்கிய அலுப்பில் அனைவரும் மண்டபம் வந்து சற்று ஆசவாசப்பட,
“அண்ணா எங்களுக்கு ஜிபே பண்ணிவிடுங்க!” பாசமலர்களில் ஒன்று தண்டபாணியிடம் வந்து அதிகாரமாகக் கேட்க,
“என்னமோ கொடுத்து வச்ச மாதிரி கேக்குறீங்க?” என்றான்.
“ஆமா… எங்களுக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கபோறிங்க? கோவிலுக்கு வந்துட்டு ஏதாவது வாங்க வேண்டாமா?”
“வாராவாரம் வர்ற கோவில்ல புதுசா என்னம்மா வாங்க பேறீங்க!”
“என்னமோ வாங்குறோம். எதுக்கு இத்தனை கேள்வி கேக்குறீங்க. இதே மாதிரி நாளைக்கு வரப்போற அண்ணிகிட்டயும் இப்படித்தான் கேப்பீங்களா?”
“நான் எதுக்கு கேள்வி கேக்கபோறேன். என் கார்டையே அவகிட்ட கொடுத்துட்டு எனக்கு தேவையானதை கேட்டு வாங்கிப்பேன்.”
“அடப்பாவி அண்ணா… எல்லாரும் பழனிக்கு காவடி எடுத்தா, நீ அண்ணிக்கு காவடி தூக்குவ போலயே!” கோபமாய் இடுப்பில் கை வைத்து முறைத்து நிற்க,
“மொதல்ல அதுக்கு ஒரு அண்ணி வரணும் உங்களுக்கு. அதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க உங்க அண்ணன! இல்லாத அண்ணன் பொண்டாட்டிகூட இப்பவே எசலி போடுறாளுக” அய்யம்மா நொடிப்பாய் இவர்கள் பேச்சை இடைவெட்டினார்.
“ஏன் சின்னம்மா, இனிமேலா ஒருத்தி பொறக்கப்போறா. சூட்டோட சூடா தண்டபாணிக்கும் ஒரு பொண்ண பாக்க வேண்டியதுதானே. போன வாரம் கூட கலை அக்காட்ட ஒரு சம்பந்தம் சொன்னேன். சரியாவே பதில் கொடுக்கல” என்று அய்யம்மா சொந்தத்தில் ஒருவர் தகவல் சொல்ல, அவனையும் அறியாமல் தண்டபாணி பார்வை இலக்கியாவை தொட்டு மீண்டது.
தண்டபாணியோடு வளவளத்து, வம்பிழுத்து, ஒரு போராட்டமே நடத்தி விடாப்பிடியாக அவனிடமிருந்து குறிப்பிட்ட அமௌன்ட்டை தங்கள் கைபேசிக்கு மாற்றிக் கொண்டனர் அன்புத் (தொல்லை)தங்கைகள்.
போகும் பொழுது இலக்கியாவையும் அழைத்தனர்.
“வாங்கக்கா… கடைவீதிக்கு போய்ட்டு வரலாம். எப்படியும் பந்தி போட இன்னும் நேரமிருக்கு. இப்ப தான் அரிசி உலையில போடுறாங்க” என்று அழைக்க, இலக்கியா அம்மாவைப் பார்த்தாள்.
சுகந்தியும், “போய்ட்டு வா இலக்கியா. எப்படியும் ஊருக்குப் போனதும் பழனி போய்ட்டு வந்தது தெரிஞ்சா அக்கம்பக்கம் பஞ்சாமிர்தம் கேப்பாங்க. இவங்களோட போய் வாங்கிட்டு வா!” என்று சொல்ல, இலக்கியாவும் அவர்களோடு கிளம்பினாள்.
“வாங்கக்கா நம்ம கடையிலயே வாங்கிக்கலாம்!” என்றனர்.
இவ்வளவு நேரமாக தண்டபாணி தங்கைகள் அவனிடம் பணம் கேட்டு நடத்திய போராட்டத்தைப் பார்த்தவன், தனது வாலட்டிலிருந்து கார்டை எடுத்து ஜம்பமாக அக்காவிடம் ராகவன் நீட்டினான்.
சீனி “டேய்! வேண்டாம்” என எச்சரிக்கும் முன்…
“அக்கா, என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ. கணக்கெல்லாம் பாக்க வேண்டாம்! அவங்களுக்கும் கேட்டத வாங்கிக் கொடு!” நாங்களும் பாசமலர் சிவாஜிதான் என்றபடி தண்டபாணியை மெப்பனைப் பார்வை பார்த்தான்.
இலக்கியா வாங்குவதற்கு முன் அவன் நீட்டிய கார்ட் அவன் கையிலிருந்து பட்டென பறிக்கப்பட்டது. அவன் அதிர்ந்து பார்க்க, உனக்கு வேண்டும் என்பது போல் சீனியும் பார்த்தான்.
“உனக்கு இவங்களைப் பத்தி தெரியாது. வழிச்சு எடுத்துட்டுதான் கார்ட் உங்கிட்ட வரும்?”
“பாஸ்.. மொதல்லயே சொல்லக் கூடாதா?” என்றான் அப்பாவியாய்.
“எங்கடா சொல்லவிட்ட… அவங்க அண்ணனே கொடுக்க யோசிக்கும் போதே தெரியலையா? கர்ண மகாபிரபுவே இவங்ககிட்ட கார்ட் கொடுக்க யோசிக்கணும். இவங்களை எல்லாம் ரெண்டு நாள் கொடைக்கானல்ல வச்சுப் பாத்த எனக்கு தானே தெரியும். எல்லாம் எப்படிப்பட்ட வாணரம்னு!” சீனி அவர்களை கிண்டல் செய்ய,
“அக்கா… சொல்லி வைங்க. நாம எல்லாம் வாணரம்னா அப்போ மாமா யாராம்?” பழனியிடம் வக்காலத்து வைக்க,
“அவருதான்டி வாணரக் கூட்டத்தோட தலைவர்!” என்றாள் பழனியும்.
“மிஸ்ட்டர் வெள்ளப்பனியாரம்” என்று ராகவனை ஜானு அழைக்க,
“எதே! வெள்ளப் பனியாரமா!” என்றான் அதிர்ந்து.
“கார்ட் கொடுத்தீங்க சரி. பின் நம்பர் யார் சொல்வா?”
“அதெல்லாம் அக்காவுக்கு தெரியும்” முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு சொல்ல,
“அப்ப சரி!” என்று ஒரு மார்க்கமாய் இழுக்க,
“போச்சே… போச்சே!” தருமியின் மைன்ட் வாய்ஸ் தான் ராகவனுக்குள்.
அவர்களோடு செல்லும் முன் தங்கைகளிடம், “புது இடம். எங்கேயாவது வழி மாறிப் போயிறப்போறாங்க” என்று இவளை பத்திரமாக அழைத்துப் போய்வரச் சொல்ல, சட்டென கோபம் துளிர்த்தது இலக்கியாவிற்கு. அதுவும் தன்னைவிட சிறு பிள்ளைகளிடம் இவளது பொறுப்பை ஒப்படைத்தது அவளை சீண்டிவிட்டது.
‘நானென்ன சின்ன பிள்ளையா… திருவிழாவுல தொலஞ்சு போக’ என்று எண்ணிக் கொண்டே அவனை முறைத்து சென்றாள்.
இனியென்ன… முறைக்க ஆரம்பிச்சாலே லவ் சிக்னல் போட்ட மாதிரி தானே. ஆனால் எங்கே எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது என்று தான் இவளுக்கும் தெரியவில்லை.
காலையில் அடிவார கோவிலில் இருந்து மலையேறிய பிறகும் அவனது பார்வை தொடர்வதை பெண்மையின் உள்ளுணர்வு அவளுக்கு உணர்த்தாமல் இல்லை. அக்கறை என்று எடுத்துக் கொண்டாலும் பார்வையின் அர்த்தம் வேறென்று புரிந்தது. இவளுக்கு தான் மனம் முரண்டியது. ஒரு பக்கம் ஆசையாகவும் இருந்தது. மறுபக்கம் தகுதிக்கு மீறிய ஆசை எனவும் இடித்துரைத்தது. ஒருவர் தொடர்ந்து நம்மைப் பார்ப்பதால் வந்த கவன ஈர்ப்பு எனவும் சப்பைக்கட்டு கட்டியது.
ஏன் இதற்கு முன் யாரும் உன்னை இப்படி பார்த்ததில்லையா என மனசாட்சி கேள்வி கேட்க, ஏன் இல்லை. குச்சிக்கு சேலையை சுத்திவிட்டாலே நாலு பேரு கண் பின் தொடரத்தான் செய்யும். அதேபோல் பருவம் வந்த நாளிலிருந்து பள்ளி செல்லும் பொழுதும், பள்ளிக்கு என வேலைக்கு செல்லும் பொழுதும் பல கண்கள் பின் தொடர்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அந்தப் பார்வை எரிச்சல் மூட்டும். பார்ப்பவன் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவ வேண்டும் போல் ஆத்திரம் எழும். நெருங்க நினைப்பவர்களை பார்வையாலேயே எட்டி நிறுத்துவாள்.
ஆனால் இவன் பார்வை ஆத்திரமூட்டுவதற்குப் பதிலாக உள்ளுக்குள் அனல் மூட்டியது. முறைத்துப் பார்த்தாலும் அந்தப் பார்வை ஏதோ வசியம் செய்தது. இப்படி யார் மீதும் ஈடுபாடு வந்ததில்லை. இதற்கு என்ன அர்த்தம் என்று யோசித்தவளுக்கு குழப்பமே மிஞ்சியது. எதற்கு வீண் மனக்கோட்டையென அதற்கு மேல் யோசித்து குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. ஒரு வேளை, நம்ம வீட்டுக்கு வந்தவர்கள் என்ற அக்கறையில் அவன் சாதாரணமாகப் பார்க்க நமக்குதான் வேறு மாதிரி தோன்றுகிறதோ என்னவோ எனவும் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.
கடைவீதி சென்றவர்கள் அங்கு கோவில் அடிவாரத்தில் இருந்த தங்களது பஞ்சாமிர்தக் கடையை இலக்கியாவிற்கு காட்டினர். பெரிய அளவிலான பிரசாத கடை. கூட்டம் வரிசைகட்டி நின்றது. மிகவும் பாரம்பரியக் கடை என்பதை அங்கேயிருந்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் உணர்த்தியது. அவளை அங்கே அழைத்துச் செல்ல, அக்கம்பக்கத்தினருக்கு கொடுக்கும் வகையில் சிறிய அளவு பஞ்சாமிர்த டப்பாக்கள் வாங்கிக் கொண்டாள். கூடவே கையில் கட்டும் சாமி கயிறுகளும் விபூதி பாக்கெட்களும்.
அடுத்து ஃபோட்டோ கடைக்கு சென்று ராஜ அலங்காரத்தில் இருக்கும் தண்டாயுதபாணி படம் ஒன்றை எடுத்தாள். வள்ளி, தெய்வானையோடு வாங்கிக்கம்மா என்று கடைக்காரர் சொல்ல வேண்டாம்… எனக்கு இது போதும் என எடுத்துக் கொண்டாள்.
அடுத்து கடை வீதியவே ஒரு அலசு அலசி தலைக்கு வைக்கும் க்ளிப் முதற்கொண்டு காலில் போடும் செருப்பு வரை எதையும் விட்டு வைக்கவில்லை பாசமலர்கள்.
உப்பு பொறி முதற்கொண்டு சர்பத், ஐஸ் க்ரீம் வரை எல்லா கடைகளிலும் ராகவனது கார்ட் தான் தீட்டப்பட்டது.
ஒவ்வொரு முறை கார்ட் உரசப்படும் பொழுதும் ராகவனது கைபேசிக்கு வந்து விழும் டெபிடட் மெசேஜ் டோனில் அவனது பிபி எகிறியது.
“பாஸ்… சென்னைக்கு நடந்துதான் போகணும் போல” பாவமாய் அலுத்துக் கொண்டான்.
அவனது விளையாட்டுதனம் பார்த்து முதன் முறையாக தண்டபாணி சிரித்து வைத்தான்.
*****
“உள்ள வாம்மா!” அய்யம்மா அழைக்க,
“பரவாயில்ல ஆச்சி” என்றவள் தயங்கியே நின்றாள். அய்யம்மாவும், கலையரசியும் ஏதோ முக்கிய வேலையாக இருப்பதாகப் பட்டது வெளியேயிருந்து பார்த்தவளுக்கு.
சற்று முன் தான் மண்டபத்திலிருந்து வீடு திரும்பினர். வீடு வந்தததும் மிகவும் களைத்து தெரிந்த சுகந்தியை படுத்து ஓய்வெடுக்கச் சொல்லி விட்டாள். இரவு சென்னை கிளம்ப வேண்டும். புடவையை மாற்றியவள் அதை கலையரசியிடம் கொடுப்பதற்காக வந்தாள்.
தயக்கத்தோடு அறைக்கு வெளியவே நின்றவளை, “அட, வா இலக்கியா! இங்க என்ன சிதம்பர ரகசியமா பேசுறோம். அம்மா என்ன பண்றாங்க?” – கலையரசி விசாரிக்க,
“படுத்திருக்காங்க ஆன்ட்டி!”
“மலையேறுனது அலுப்பா இருக்கும். செத்த கண்ணசரட்டும்!” என்றவரிடம்,
“இந்தாங்க ஆன்ட்டி. இதைக் கொடுக்க தான் வந்தேன்.” கையில் மடித்து எடுத்து வந்திருந்த சேலையைக் கொடுக்க,
“இது உனக்குதான் இலக்கியா. எப்படியும் போகும் போது புடவை வச்சுக் கொடுக்கணும்னு நெனச்சேன். விசேஷத்துக்கே கொடுத்தாச்சு. நீயே எடுத்துக்கோம்மா!” என்று சொல்ல எப்படி மறுப்பது எனத் தெரியவில்லை.
“இப்படி உக்காரும்மா!” அய்யம்மா கட்டிலில் நகர்ந்து அமர்ந்து அவளுக்கும் இடம் கொடுக்க தயங்கியே நின்றாள். அவள் தயக்கத்திற்கு காரணம் கட்டிலில் கடை பரப்பிக் கிடந்தவைகள் தான்.
ஏதோ நகைக்கடைக்குள் தான் வந்துவிட்டோமோ என்ற எண்ணுமளவிற்கு மினி ஜ்வெல்லரியே கட்டிலில் வீற்றிருந்தது.
திருமணம் முடிந்ததும் மகளுக்கென கொடுக்க வேண்டிய நகைகளை கொடுப்பதற்காக எல்லாவற்றையும் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
“இதெல்லாம் பழனிக்கு கொடுக்க வேண்டியதும்மா” என்றதும்,
“இவ்வளவுமா?” ஆர்வத்திலும் ஆச்சர்யத்திலும் கண்கள் விரிய தன்னை மறந்து கேட்டுவிட்டாள். அவளுக்குத் புரிந்த வரை அங்கு இருந்ததே நூறு பவுனைத் தாண்டும். அவளுக்கு சரியாக கணிக்கத் தெரியவில்லை. ஆனால் அங்கு எடுத்து வைத்திருந்தது இருநூறு பவுனுக்கும் மேல்.
“நம்மதுல இதெல்லாம் சாதாரணமா போடறதுதாம்மா!” என்றதும் ஆச்சர்யத்தில் விழி விரித்தாள்.
சுகந்தியும் இவளுக்கென சேர்த்து வைத்துள்ளார் தான். என்னதான் கஷ்ட்டம் வந்த போதும் நகைகளை மட்டும் அழிக்கவில்லை சுகந்தி. அதோடு சிறுகச் சிறுக மேற்கொண்டும் இவளுக்கென சேர்த்து வைத்திருக்கிறார். அதெல்லாம் ஒரு அம்பது பவுன் தேறும். அவ்வளவே.
இங்கே நூற்றுக் கணக்கில் பார்த்தவளுக்கு மனதில் ஏதோ ஒரு மூலையில் வெறுமை படர்ந்தது. காரணம் தான் புரியவில்லை. சட்டென முகம் கூம்பிவிட்டது. மனதில் ஏதோ ஒரு ஏக்கம் படர்ந்து தொண்டையை அழுத்தியது.
“வர்றேன் ஆச்சி. எல்லாம் பேக்பண்ணனும்” வதங்கிய முகத்தேடு உள்ளிறங்கிய குரலில் சொல்லிவிட்டு வெளியேறத் திரும்பியவள் பார்வையில் பட்டது, அழகாய் சிரித்தபடி சுவற்றில் மாட்டியிருந்த தண்டபாணியின் முழு உருவ புகைப்படம். சட்டனெ கண்கள் சிவந்து விட்டது. மனதின் வெறுமைக்கான காரணம் புரிந்தது. ஆகாயக் கோட்டை அர்த்தமில்லாதது என தலையில் தட்டி சொல்லியது.
“அம்மாதான் தூங்குறாங்கல்ல. தனியா என்ன பண்ணுவ. இந்தா இந்த ஃபோட்டோ எல்லாம் பாரு!” மடியில் இருந்த ஆல்பம் ஒன்றை இலக்கியாவிடம் கொடுக்க, வாங்கியவள் அய்யம்மா பக்கத்திலேயே அமர்ந்தாள்.
நகைகளை எடுக்க பீரோவைத் திறந்த கலையரசி அப்படியே பிள்ளைகளது சிறுவயது ஆல்பங்களையும் வெளியே எடுத்திருந்தார்.
ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப எந்த எந்த படம் எப்பொழுது எடுத்தது, யார் எவரென விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் அய்யம்மா.
யாருமே அவள் கருத்தில் பதியவில்லை ஒருவனைத் தவிர.
எல்லாமே தண்டபாணி மற்றும் பழனியுடைய சிறுவயது ஃபோட்டோக்கள். தவழ்ந்தது முதல் பள்ளிச்சீருடையில் பரிசு வாங்கிய படங்கள், பிறந்த நாள் கொண்டாட்ட படங்கள் என அத்தனையும் இருந்தது. அவளையும் மீறி விரல்கள் அவனது முகத்தை மட்டும் வருடியது.
எதையும் முகத்தில் காட்டாமல் அடுத்த பக்கத்தை திருப்பியவள் யாரோ வருவது போல் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். தண்டபாணி தான் வந்து நின்றான். அவனும் இவளை இங்கு எதிர்பார்க்கவில்லை போல.
ஒரு கணம் கண்களில் மின்னல் வெட்டிச் சென்றது. இன்னும் வேட்டி சட்டையை மாற்றியிருக்கவில்லை. அலைச்சலில் வியர்த்து உடை நலுங்கித் தெரிந்தான். நெற்றியில் பூசியிருந்த விபூதி, சந்தனம், குங்குமம் எல்லாம் நெற்றி வியர்வையில் சங்கமமாகியிருந்தன.
அவனும் அவள் மடியிலிருந்த ஆல்பத்தை தான் பார்த்தான். பார்த்தவன் முகம் சட்டென சிவந்து விட்டது. அய்யோ என உள்ளுக்குள் அலராத குறை.
‘அம்மாச்சிக்கு வேற வேலையே இல்ல. எதை எடுத்து இவகிட்ட கொடுத்திருக்காங்க. மானம் கப்பலேறப் போகுது’ என்றவனுக்கு நிலை கொள்ளவில்லை. தவிப்பாய் அம்மாச்சியிடம் சாடையாக கண் காண்பித்தான். இன்னும் அவள் அந்த போட்டோவை பார்க்கவில்லை. திருப்பியவாக்கிலேயே இருந்தது.
“இதெல்லாம் இப்ப எதுக்கும்மா வெளியே எடுத்தீங்க?” என்று இயல்பாய் கேட்பது போல் அவளைத் தாண்டி கை நீள, சட்டென பின்வாங்கினாள்.
“அந்தப்பிள்ளை பாத்துட்டு இருக்குது. சும்மா எவ்வளவு நேரம் இருக்கும். அதான் கொடுத்தேன்!” அய்யம்மா பேரனுக்கு பதில் சொல்ல,
‘நல்லா கொடுத்தீங்க போங்க… இப்ப எப்படி இத எடுக்கறது. இவ கண்ணுல பட்டுட்டா மானம் காத்துல பறக்குமே!’ அவஸ்த்தையாய் அவன் உள்ளுக்குள் தவிக்க ஆரம்பித்தான். பின் கழுத்தை நீவி தவிப்பாய் அவன் நிற்க,
“என்னடா?” என கலையரசி வினவ, அப்பொழுதுதான் எதற்காக வந்தோம் என்பதே அவனுக்கு உரைத்தது.
இலக்கியாவைப் பார்த்ததும் முதலில் தன்னை மறந்தவன், அடுத்து அவளருகில் இருந்த புகைப்படம் பார்த்து மொத்தமும் மறந்துவிட்டான்.
“மண்டபத்துல மீந்ததெல்லாம் எடுத்து வந்தாச்சும்மா. அக்கம்பக்கம் கொடுக்கறவங்களுக்கு கொடுங்க. மீதியை சூடு பண்ணி வைங்க. கெட்டுப் போயிறும்” என்று சொல்ல,
“சரி போ… இதெல்லாம் எடுத்து வச்சுட்டு வர்றேன்”
அவன் நகராமல் இருக்க, இன்னும் என்ன என்பது போல் கலையரசி அவனைப் பார்க்க, ஒன்றும் சொல்ல முடியாமல் வெளியேறினான்.
அவள் திருப்பிய பக்கத்தில் அழகான குண்டு கன்னங்களோடு, கோலிக்குண்டு கண்களை உருட்டியபடி, குட்டியூண்டு பட்டுப்பாவாடை சட்டையில், தலையில் இரட்டைக் குடுமி போட்டு பூ வைத்திருக்க,
“யாரு ஆச்சி இந்த பாப்பா. அழகா இருக்கு!” என்றாள்.
“அதுவா… நம்ம தண்டபாணிதாம்மா. பிறந்த முடி எடுக்குறதுக்கு முன்ன அவங்க பெரியப்பா பிள்ளைக பாவாடை சட்டையப் போட்டு படம் புடிச்சது!” என்றார் சிரிப்போடு.
அதற்குதான் இப்படி தவித்தானா என்றது மனம். அவன் அய்யம்மாவிற்கு கண்ணால் சாடை காட்டியதை அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இவளுக்குதான் அப்பட்டமாகத் தெரிந்ததே. எதற்கு என்று தான் புரியவில்லை. ஒரு வேளை இந்தப் படத்தைப் பார்த்து சிரிக்கப் போகிறேன் என்று நினைத்திருப்பான் போல என்று எண்ணிக் கொண்டாள்.
“அம்மா… நான் போய் எடுத்து வந்ததெல்லாம் கொடுக்கறவங்களுக்கு கொடுக்கறேன். மத்ததெல்லாம் எடுத்து வைங்க!” நகைகளை எடுத்து உள்ளே வைத்துவிட்டு, ஃபோட்டோக்களை இவள் பார்க்கட்டும் என விட்டுச் சென்றார்.
ஆல்பம் முழுவதும் பார்த்து முடித்தவள் கீழே வைத்தாள். பக்கத்தில் ஃப்ரேம் போடப்பட்ட ஃபேட்டோக்கள் சில இருக்க, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். ஆல்பத்தில் இருந்த அதே தண்டபாணி, பழனியுடைய தவழும் குழந்தை படங்கள் ஃப்ரேம் போடப்பட்டிருந்தது.
அடுத்த ஃபோட்டோவை எடுத்தவள் முகம் சட்டென புன்னகை பூத்தது. யாரோ தன்னை போட்டோ எடுக்க முற்பட அதற்கு பயந்து சற்றே குனிந்தவாக்கில் இடுப்பிற்கு கீழே கை வைத்து மூடியபடி சிறுவனது புகைப்படம். மூன்று வயதுகூட இருக்காது. இடுப்பில் வெள்ளி அரணாக்கொடி மட்டுமே.
அவள் கையிலிருந்த படத்தைப் பார்த்த அய்யம்மா இதுவும் நம்ம தண்டபாணிதாம்மா என்றார் முகம் கொள்ளா சிரிப்போடு.
ஏதோ சிறுவன் என பார்த்தவளுக்கு அவன் தண்டபாணி எனத் தெரிந்ததும் பட்டென கீழே வைத்துவிட்டாள்.
“சின்னபிள்ளைல டவுசர் போட அடம்புடிப்பான். அதனாலே அவங்க மாமன்காரன் தான் அவனை மிரட்ட இந்த ஃபேட்டோ எடுத்தான். வாடீ மாப்ளே உன்னை ஃபோட்டோ புடிச்சு ஹால்ல மாட்டுறேன்னு சொல்லிட்டேதான் எடுத்தான். ரொம்ப நாளா ஹால்லதான் மாட்டியிருந்துச்சு. அவன் வளந்த பின்னாடிதான் எடுத்து பீரோல வச்சுட்டான். யாராவது பாத்துட்டா கோபமாயிருவான்” என்று அய்யம்மா பேரன் புராணம் படிக்க இலக்கியா முகமெங்கும் புன்னகை.
அந்தச் சிறுவனையே கண்கள் சிரிக்க பாத்திருந்தாள். சிறுவன் முகத்தில் கூச்சமும் வெட்கமும் சிரிப்போடு போட்டி போட்டது. இப்பொழுது தங்கைகளிடம் மிலிட்டரி என பெயர் வாங்கியிருப்பவனோடு ஒப்பிட்டு பார்த்தவளுக்கு, சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளுக்கே கூச்சமாகப் போயிற்று.
அவன் தவித்த தவிப்பிற்கான காரணம் இப்பொழுது தெள்ளத்தெளிவாக புரிந்தது. தன்னைத் தாண்டி கை நீண்டதும் இந்த புகைப்படத்தை எடுத்து மறைக்கத்தான் போல. மனம் முழுவதும் நிரம்பிய சந்தோஷத்தோடு மற்ற படங்களையும் பார்க்க, கலையரசி உள்ளே வந்தார்.
“எல்லாருக்கும் கொடுத்துட்டியா கலை” மகளை கேட்க,
“ம்ஹ்ஹ்… மா! மிச்சத்த அடுப்புல போட்டிருக்கேன்” என்றவரிடம்,
“இனிமேலாவது தண்டபாணிக்கு பொண்ணு பாக்க ஆரம்பி கலை. அவனுக்கு வயசு போகுது!” மகளிடம் அய்யம்மா சொல்ல இலக்கியா விழி உயர்த்தி பார்த்தாள்.
“நானாம்மா மாட்டேங்கிறே. இம்புட்டு நாளும் தங்கச்சிய காரணம் காட்டினான். அவளுக்குனு ஒருத்தி இனிமேலா பொறக்கப்போறா?” என்று கேட்க, தண்டபாணி திருமணமும் மண்டபம் வரை வந்து நின்றது நினைவிற்கு வந்தது இவளுக்கு. பெண் பார்ப்பது நின்றதற்கே சுகந்தி எந்தளவிற்கு புலம்பி தீர்த்தார் எனத் தெரியும். இங்கு மண்டபம் வரை வந்து நின்றிருக்கிறது. பெற்றவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். தண்டபாணியை நினைத்தும் மனம் வெதும்பியது.
“போன வாரம் கூட உங்க சித்தப்பா மக ஒரு சம்பந்தம் சொன்னாலாம்ல” மண்டபத்தில் பேசியதை வைத்து அய்யம்மா கேட்க,
“அவளப் பத்தி பேசாதீங்கம்மா!” என்றார் பட்டென.
“ஒரு சம்பந்தம் சொன்னாளேன்னு யாரு எவருன்னு விசாரிச்சேன். குடும்பம் எப்படின்னு கேட்டதுக்கு, குடும்பம் எப்படியிருந்தா என்ன… ஏற்கனவே கல்யாணம் வரைக்கும் வந்து தட்டிப்போச்சுல்ல. நம்ம பழனியும் இப்படி. நீ எதுக்கு குடும்பத்தைப் பத்தி விசாரிக்கறேங்குறா. நம்ம குடும்பத்தை பத்தி விசாரிச்சா யாராவது பொண்ணு கொடுப்பாங்களா… நகைநட்டுனு ரொம்ப எதிர்பாக்காம சட்டுபுட்டுனு ஏதாவது ஒரு பொண்ண பாத்து முடிக்க சொல்றா. அப்படி ஒன்னுமில்லாத வீட்ல முடிக்க என் மகனென்ன கூனா, குருடான்னு கேட்டுட்டு வந்தேன்!” என்று சொல்ல இவளுக்கு தான் மளுக்கென ஏதோ ஒன்று உள்ளுக்குள் முறிந்த உணர்வு. அழுகைக்கு தயாரான கண்களை சிமிட்டி மறைக்க வெகுபாடு பட்டாள். அதற்குமேல் அவளால் அங்கு ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.
ஆல்பம் எல்லாம் அடுக்கி வைத்தவள், “வர்றேன் ஆச்சி! போய் எல்லாம் பேக் பண்ணனும்” தொண்டை வரை வந்துவிட்ட அழுகையை விழுங்கியவாறு சொல்லிவிட்டு வெளியே வந்தவளுக்கு மனதில் கனமாய் ஏதோ ஒன்று அழுத்திய உணர்வு.
நேராக பாத்ரூம் சென்றவள் கரை உடைத்த கண்ணீரை, தண்ணீரை முகத்தில் அடித்து மொத்தமாகக் கழுவி வெளியே வந்தாள். துப்பட்டாவை எடுத்து முகத்தை துடைத்தவள் புதிதாக துளிர்விட்ட ஆசையையும் துடைத்து எரிந்தாள்.

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
இலக்கியா ஆசையும்,தவிப்பும்,தவிர்ப்பதும் யதார்த்தம். தண்டபானி நீதான் விஷயத்தை முன்னெடுக்கணும் போல
பாக்கலாம் தண்டபாணிக்கு யாரு தூது போறாங்கனு
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Super super super
🥰🥰🥰🥰🥰🥰
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
yes right decision only.why unnecessary liking
அதானே🤔
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫