6
தங்கக்குதிரை ஏறி, தல்லாகுளமே தத்தளிக்க, பதினெட்டாம்படி கருப்பு காவலோடு, கள்ளழகர் எதிர்சேவை செய்யும் அழகைக் கானக்கண்கோடி வேண்டும். ஆங்காங்கே பக்தர்களின் மண்டகப்படியில் மயங்கி, மாதரசியின் திருமணத்தையே மறந்து நின்றவராயிற்றே நம் கோபியர் கொஞ்சும் கோபாலன்.
கோவிலைவிட்டு வெளியேறி பக்தர்கள் இருக்கும் இடம் தேடி வரும் தெய்வம் நம் கள்ளழகர் ஒருவர் மட்டுமே. அதே போல், அபிஷேகப்பிரியரும் அலங்காரப்பிரியரும் மதுரையில் கோலோச்சினாலும், மங்கையர்க்கரசிக்கு பட்டாபிஷேகம் நடத்தும் ஒரே ஷேத்திரமும் நம் மதுரை ஷேத்திரம் மட்டுமே.
தாமதமாகி வர்றதுக்குள்ள, தங்கை திருமணம் அபிஷேகப்பிரியருடன் முடிந்துவிட, மொய் கூட வைக்காம வந்தவழியே திரும்பிவிட்டாரய்யா நம்ம அலங்காரப்பிரியர். அதனால தான்… இந்த மாமன், மச்சான் வீம்பு இன்றைய வரைக்குமே நம்ம ரெத்தத்துல ஊறிப்போச்சு போல. வேறொன்னும் இல்லைங்க… மண்வாசனை. அம்புட்டுதே.
காலையில் வழக்கம் போல் மகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த மகனைப் பார்க்க ஒரே நாளில் மூப்பு வந்தது போல் முகம் சோர்வாகத் தெரிந்தது மஞ்சுளாவிற்கு. இரவு முழுக்க தூங்கவில்லை என்பதை கண்கள் சிறுத்து, வீங்கிய கண் இரப்பைகள் காட்டிக் கொடுத்தன.
உற்றுப்பார்க்கும் அன்னையின் பார்வையைத் தவிர்த்துவிட்டு அப்பாவின் அறைக்குச் சென்றான். தனது வழமையை முடித்துவிட்டு வெளிவந்த மகனை எதிர்பார்த்து இருந்தார். மகனிடம் பேச முற்பட, காணாதது போல் வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டான். ஏன் இப்படி செய்தோம் என அவனே நொந்தும் கொண்டான். சட்டென அன்னையின் முகம் வாடியது தெரிந்தது.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அறிந்ததே. அதற்காக மூஞ்சியில் அடித்த மாதிரி சட்டென விலகி வந்திருக்க வேண்டாம் என மனம் குறைபட்டுக் கொண்டது. ஆழ்ந்த மூச்செடுத்து ஆசுவாசப் பட்டவன், குளிக்கச் சென்றான்.
குளித்துக்கிளம்பி அறையை விட்டு வெளிவர, கேசவமூர்த்தியும் அவனுக்காகக் காத்திருப்பதாய்ப் பட்டது.
மஞ்சுளாவிற்கு மகனிடம் கேட்பதற்கும் தயக்கத்துடன் கூடிய பயம். சட்டென்று ஏதாவது பேசிவிடுவானோ எனும் எண்ணம். தனது தோளைப் பிடித்தே சுற்றிக் கொண்டு இருந்த மகனிடம் பேச, இப்படித் தயங்கி நிற்கும் காலம் வரும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.
அவனுக்கு இன்று என்ன நாள் என்று நன்றாகவே தெரியும். அவனது கடமை என்னவென்றும் புரியும். இதே மகன் நாலைந்து வருடங்களுக்கு முன்பு என்றால், இதே நாளில் குதூகலமாக வீட்டையே ரெண்டாக்கிக் கொண்டு இருப்பான்.
புத்தாடை உடுத்தி அப்பாவிற்கு இணையாக ராஜகுமாரனாட்டம் ஆளுக்கு முதலாய் கிளம்பி வருவான். அம்மாவையும், தங்கையையும் அவசரப் படுத்திக் கொண்டு நிற்பான். அன்னையின் கையால் நெட்டிமுறித்து திருஷ்டியும், தங்கையிடம் வம்பிழுத்துக் கொண்டும் கொண்டாட்டமாகக் கிளம்பி கோவில் செல்வான்.
இந்த நாள் மட்டுமல்ல, திருவிழாவின் பத்து நாளும் வீட்டிலேயே பார்க்க முடியாது. நண்பர்களுடன் கோவிலில் தான் சுற்றிக் கொண்டு இருப்பான். உடன் அத்தை மகன் அழகரும் சேர்ந்து கொள்ள, கள்ளழகரை ஆற்றில் இறக்கி வழியனுப்பிய பிறகு தான் வீடு தங்குவான்.
ஆனால் அதே மகன் தான் இன்று என்ன சொல்ல வருகிறார் எனத் தெரிந்தும் பிடிகொடுக்காமல் செல்கிறான்.
“ருத்ரா…” என மஞ்சுளா அழைக்க, என்ன என்பது போல் நடை நிதானித்ததே ஒழிய நிற்கவில்லை.
“ருத்…ரபாண்…டியா.” இம்முறை கம்பீரமாக அழைத்தது கேசவமூர்த்தியின் குரல். நடை நின்றது.
“இன்னை…க்கி நம்ம வகைய…றா மண்டக…ப்படி.” என்றார்.
தெரிந்து தானே பேச்சுக் கொடுக்காமல் விலகிச் செல்கிறான்.
“நம்ம வகையறான்னா எந்த வகையறா.” என்றான் நிதானமாக. உள்ளுக்குள் கொந்தளித்த உணர்வுகளை அடக்கியபடி.
“என்ன ருத்ரா இது கேள்வி?” என மஞ்சுளா பதற,
“பொண்ணுகளுக்கு தான், பிறந்து வீட்டு வகையறா, புகுந்த வீட்டு வகையறான்னு ரெண்டு இருக்கும். இங்க எனக்கும் அப்படித்தானே. அதான் எந்த வகையறான்னு கேட்டே ம்மா. இதுல என்ன தப்பு?” என விட்டேத்தியாகக் கேட்கும் மகனுக்கு விடை சொல்ல முடியாமல் பார்த்து நின்றார் மஞ்சுளாதேவி.
இதே மகன் தான், இவர்களது பூர்வீகக் கோவிலில், பரம்பரை அறங்காவலரான தந்தைக்கு பரிவாரம்கட்டி, மாலை மரியாதை செய்யும் பொழுதெல்லாம், “எனக்கு எப்பம்மா இது மாதிரி செய்வாங்க?” என சிறுவயதில் ஆர்வமாகக் கேட்டவன்.
“உனக்கும் கல்யாணம் ஆனதும் செய்வாங்கடா.” எனக் கூறியபொழுது உடனே கல்யாணம் எப்பொழுது எனக் குஷியாகக் கேட்டவன். கல்யாணமும் முடிந்து, இன்று பரிவட்டத்திற்கும் ஏற்பாடு செய்ய இருக்கையில் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.
இந்த முறை கேசவமூர்த்தியே மகனை முன்னிருத்த விழைகிறார். மகன் தவிர்க்க விரும்புகிறான்.
“நீ தான்….டா வாரிசு. நீ என் மகன் தான் ருத்…ரா.” இதற்கு மேல அவரால் பேச முடியவில்லை. கேசவமுர்த்தியின் கம்பீரக் குரல் கூட லேசாகக் கரகரத்தது.
“எப்ப இருந்து?” என்றான் எங்கேயோ பார்த்துக்கொண்டு.
“ருத்ரா…” என மஞ்சுளா தளுதளுக்க, அவனுக்கும் மனம் பிசைந்தது.
“நீங்க முடியாம படுக்கவும், உங்களுக்காக பணிவிடை செய்ய ஆரம்பிச்சதுல இருந்தா. இல்ல… இவனோட வாழ்க்கை இப்படி அரைகுறையாப் போச்சேனு அனுதாபத்துல வந்த பாசமா? ஆனா, நான் இதை எல்லாம் எதிர்பாத்து உங்களுக்கு பணிவிடை செய்யல. என்னோட கடமையைத் தான் செஞ்சே. ஏன்னா… என்னப் பொருத்தவரைக்கும் அப்பான்னா கண் முன்னாடி வர்ற பிம்பம் நீங்க மட்டும்தான்.” என்றவனது குரல் கணத்து வந்தது.
அது உண்மைதானே. எப்பொழுதும் மகன் என்ற வாஞ்சையோடு கேசவமூர்த்தி பார்த்ததில்லை தான். ஆனால் எதிலும் விலக்கி வைத்ததில்லை.
“என்னப்பா… இப்படி எல்லாம் பேசுற?” என மஞ்சுளாதேவி ஆதங்கத்தில் கண்கலங்க,
“ஆமா ம்மா. அம்மான்னு நெனச்சாக்கூட அவங்க முகம் நிழல் மாதிரி வந்து போகுது. ஆனா அப்பான்னா இவர் மட்டும் தான் கண்ணு முன்னாடி வர்றாரு. ஏன்னா… பெத்தவரத்தான் நான் பாத்தது கூட இல்லையே?” எனக் கூற, மஞ்சுளாவின் அடிவயிறு பதறியது. சொன்னவனின் வார்த்தைகளில் இருந்த ஆழம் இருவரையும் தாக்கியது.
ஆண்பிள்ளைகளின் ரியல் ஹீரோ எப்பொழுதும் அப்பா தானே. என்னதான் கண்டிப்பு காட்டி இவனிடம் நெருங்கிப் பழகவில்லை என்றாலும் அப்பாவின் கடமையை ஒழுங்காகத் தானே செய்தார். அவனிடம் பிடிக்காத ஒன்று இவனது கபடி விளையாட்டு. அதற்கும் காரணம் அது அவரது பிம்பத்தை மகனுக்குக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் தான். கேசவமுர்த்தியின் மகனாக அவனை அடையாளப் படுத்தவில்லை. அதற்கு அவன் என்ன செய்ய முடியும். இரத்தத்தில் ஊறியதாயிற்றே.
கேசவமூர்த்தியின் கம்பீர தோற்றமும், ஊருக்கு முன்னிலையில் அவருக்கு இருக்கும் அந்தஸ்த்தும், கோவில் கணக்கு வழக்கு, ஏலம் போன்ற விவகாரம் என்றால் அறங்காவலரான தந்தையை நான்கு பேர் தேடி வருவதும், திருவிழாவில் இவர்கள் வகையறா சார்பில் மண்டகப்படி கொடுக்கும் பொழுது இவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் மரியாதையும் என கேசவமூர்த்தியை ரியல் ஹீரோவாக மனதில் வருத்தி வைத்திருந்தான்.
ஆனால் அவருக்குப் பின், அந்த மரியாதை குடும்பத்தை விட்டு, விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் நான் இந்த குடும்பத்திற்குத் தேவைப்பட்டு இருக்கிறேன் என நினைக்கும் பொழுது, ஏதோ ஒரு வெறுமை மனதில் சூழும். ஒரு வேளை தேன்மொழி ஆண்பிள்ளையாகப் பிறந்து இருந்தால் இந்த அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
இன்றும் அதை முன்னிட்டே கோவில் செல்ல வேண்டும் என அவனை அழைக்க, அவனால் மறுக்கவும் முடியாது. இந்தக் குடும்பத்திற்கு தான் வந்த கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும் என எப்பொழுதோ முடிவு எடுத்துவிட்டான். ஆம்… கடமை மட்டும் தான். ஒரு ஆண்பிள்ளையாய் இந்தக் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமை. உரிமையை எப்பொழுதோ ஒதுக்கி வைத்து விட்டான்.
இவர்கள் கூறியதை எதைச் செய்ய மறுத்திருக்கிறான். இதை மறுக்க. இவர்களை மற்றவர்கள் முன்னிலையில் தலை குனிய வைக்கமுடியாதே.
“ஹோட்டலுக்குப் போயிட்டு, மதியம் வந்துர்றே ம்மா. கெளம்பி இருங்க. எல்லாரும் சேந்தே போகலாம்.” என கூறியவன் வார்த்தைகளில் எந்த உணர்ச்சியும் இல்லை.
பெருமூச்சோடு ஆயாசமாக வெளியே செல்லும் மகனையே பார்த்து நின்றவரை, “என்னம்மா, சாமி வரங்கொடுத்துருச்சு போல?” என அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி கேட்க, ஒரு விரக்தி சிரிப்பை மகளுக்குப் பதிலாக கொடுத்தவர்,
“கோவிலுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வை தேனு.” எனக் கூறியவர் சமையல்கட்டு சென்றுவிட்டார்.
மாலை வீடு திரும்பியவன், பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என கேசவமூர்த்தியை கம்பீரமாகக் கிளப்பினான். வழக்கம் போல தானும் வேட்டி சட்டையில் கிளம்பி வந்தான். கையில் தங்கக் காப்பு, கழுத்தில் புலிநகம் வைத்த சங்கிலி, புருவ மத்தியில் மெலிதாக குங்கும தீற்றல் என மகனின் கம்பீர தோற்றம் பார்த்து கைகள் பறபறத்தது நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க.
தன்னுடைய பட்டுச்சீலை வண்ணத்திலேயே அண்ணன் மகளுக்கும் குட்டிப் பட்டுப்பாவாடை தைத்து, அத்தையும், மருமகளும் ஒரே வண்ண உடையில் தயாராகி வெளியே வர… தன் ஆசையை பேத்தியிடம் தீர்த்துக் கொண்டார் மஞ்சுளாதேவி.
“ஏன் எங்களை எல்லாம் பாத்தா அழகாத் தெரியலியா ம்மா? பேத்தி மட்டும் தான் கண்ணுக்கு தெரியறாளா?” என அண்ணன் மகளிடம் தேன்மொழி போட்டிக்கு நிற்க,
“எம் பேத்தி தான் அழகு. நீ எல்லாம் இவ அழகுக்கு முன்னாடி கால் தூசிக்குப் பெறமாட்ட.” என மகளை மட்டம் தட்ட,
இதுவே ருத்ரன் சகஜமான மனநிலையில் இருந்திருந்தால், இந்நேரம் தங்கைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்திருப்பான்.
“இந்த வீட்டுல எனக்குனு பேச ஒரு நாதியில்லாமப் போச்சு.” என வராத கண்ணீரைத் துடைக்க,
“அப்படியே உங்க அத்தைவாடை அடிக்குது தேனு உம்பேச்சுல.” என மீண்டும் கேலி செய்ய,
“அடிக்கனும்ல… அப்ப தானே அந்த அகிலாண்டத்த சமாளிக்க முடியும்.” என பேசிக்கொண்டே அண்ணன் மகளைத் தூக்கிக் கொண்டு காருக்குப் போக,
சக்கரநாற்காலியை காரின் டிக்கியில் மடக்கி வைத்தவன், கேசவமூர்த்தியை அலேக்காகத் தூக்கிச் சென்று காரில் முன்சீட்டில் அமர வைத்தான். கைத்தாங்கலாக நடந்து வந்திருப்பார். ஏனோ மகன் தூக்கட்டும் என சிறுபிள்ளையாய் ஒரு ஏக்கம் அவருக்குள். ஒரு வயதிற்கு மேல் மனம் மீண்டும் குழந்தையாகி ஒவ்வொன்றையும் எதிர்பார்ப்பது இயல்பு தானே.
அட்டென்ஷன் சீக்கிங் என்பது குழந்தைகளிடம் மட்டும் இருப்பதில்லை. தனிமை மற்றும் சுயபட்சாதபம் கொள்ளும் முதியோர்களிடமும் காணப்படும் ஒன்று.
பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் என மண்டகப்படி முடித்துவிட்டு, பதில் மரியாதையாக மாலை வழங்கப்பட, மகனைக் கைகாட்டினார் கேசவமூர்த்தி. மறுக்காமல் பெற்றுக் கொண்டான் ருத்ரன். மாலையுடன் பரிவட்டம் என்பதெல்லாம் அந்தக்காலம். இன்றைய அவசரகால யுகத்திற்கும், கூட்ட நெரிசலுக்கும் தகுந்தவாறு மரியாதை மாலையோடு நின்றுவிட்டது.
அகிலாண்டம் குடும்பமும் பூஜைக்கு வந்திருந்தது. மாமன் மகளைப் பட்டுச்சேலையில் பதுமையாய் பார்த்தவனுக்கு, அவளை விட்டு கண் எடுக்க முடியவில்லை அழகருக்கு.
பூஜையின் போது பேத்தியை தேன்மொழியிடம் இருந்து வாங்கிய அகிலாண்டம்… மகள் காயத்ரியின் கையில் கொடுத்து ருத்ரனின் அருகே நிற்க வைத்தார். கோவிலில் வைத்து எதுவும் பேச முடியாத நிலையில் ரகுநாதனால் மனைவியை முறைக்க மட்டுமே முடிந்தது.
“ஹாய்… மாம்ஸ் எப்படி இருக்கீங்க?” என சிரித்தவாறே மாமனின் அருகே நின்று கொண்டாள்.
எதுவும் சொல்ல முடியாத நிலையில், ருத்ரன் அவளைத் திரும்பிப் பார்க்க, “செத்த நேரம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க மாம்ஸ். இல்லைனா வீட்ல போயி எனக்கு தான் வசவு ஒவட்டிப் போகும். இப்ப நீங்க மட்டும் என்ன ஆசப்பட்டா இங்க நிக்கிறீங்க.” எனக் கண்ணைச் சுருக்கிக் கொண்டு கேட்க, கொழுந்தியாளின் பேச்சில் முகம் மலர்ந்தான்.
சற்று தூரத்தில் இருந்து இதைப் பார்த்த அகிலாண்டத்திற்கு மனம் குளிர்ந்து போக, மகளை மெச்சிக் கொண்டார், அவள் பேசியது என்னவென்று தெரியாமலே.
பூஜை முடிந்ததும், கேசவமுர்ததியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பெரியவர்கள் வீட்டிற்கு கிளம்ப, சிறியவர்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பார்க்க அங்கேயே இருந்து கொண்டனர். அகிலாண்டமும், ரகுநாதரும் அவர்கள் வந்த காரில் கிளம்பினர்.
குழந்தையை வாங்கிக் கொண்டு மஞ்சுளாதேவியும், கேசவமூர்த்தியும் கிளம்ப, அழகர் பொறுப்பில் பெண்களை விட்டுவிட்டு, ருத்ரன் இவர்களை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டுவரக் கிளம்பினான்.
ராட்டினங்களும், பஞ்சு மிட்டாய், ஐஸ் வண்டி, ஜிகர்தண்டா, வளையல், பாசி, பலூன் என புதிதாக முளைத்த திருவிழாக் கடைகளும், அன்னதான வரிசைகளும், கூட்டத்தை சமாளிக்க முடியாத காக்கிச் சட்டைகளும், கன்னியரை வட்டமிடும் காளைகளும், அவர்களுக்கு போக்குக்காட்டி, மூக்கணாங்கயிறு இல்லாமலே கண்ணால் கட்டியிழுத்துச் செல்லும் பூவையரும், இரவைப் பகலாக்கிய வண்ண வண்ண விளக்குகளும் என ஜெகஜ்ஜோதியாய் காட்சி அளிக்க கண்கள் நிறைத்து நின்றது திருவிழாக்கூட்டம்.
காயத்ரியின் கண்கள் அவ்வப்போது கூட்டத்துள் நோட்டம் விட்டுக் கொண்டு வர…
அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்ல, வளையல் கடை ஒன்றில் தேன்மொழி தேங்கி நிற்க, காயத்ரி ஓரிடத்தில் ஒதுங்கி கூட்டத்துள் கலந்து விட்டாள். அவளை ஒரு கரம் தனியே இழுத்துக் கொண்டது.
கூட்டத்தைவிட்டு தள்ளிச் சென்றவர்கள், சற்று மறைவான இடம் பார்த்து நின்று கொண்டனர்.
“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?” என அவன் அலுத்துக் கொள்ள,
“ஒரு நாளைக்கே இப்படி சலுச்சுக்கிட்டா எப்படி? என்னைய எப்படியெல்லாம் சுத்த விட்டீங்கனு மறந்து போச்சா?” எனக் கேட்க, அவன் அழகாக சிரித்து நின்றான். அந்த சிரிப்பில் மயங்கி மையல் கொண்டு நின்றாள் மான்விழியாள்.
“இந்த சிரிப்பு தான், எங்க அக்கா கல்யாணத்துல உங்கள மொத தடவ பாத்தப்பவே மனசுல பதிஞ்சு போச்சு. இல்லைனா உங்கள எல்லாம் யாரு திரும்பிப் பாக்கப் போறா?” என வம்பிழுக்க,
“அப்ப… சிரிச்சா மாதிரி ஃபோட்டோ எடுத்து ஃப்ரேம் போட்டுத் தர்றே. அதையே பாத்துட்டு இரு. நாங் கெளம்புறேன்.” என முறுக்கிக் கொண்டவனை,
“ஐயே… ரொம்பப் பண்ணாதீங்க விக்கி. காணாம்னு தேடுறதுக்குள்ள நான் போயாகணும். இல்ல... மைக்ல அனவுன்ஸ் பண்ண ஆரம்பிச்சுருவாங்க.”
“ஏன்டி… அம்பூட்டுத் தொலைவுல இருந்து உனக்காக வந்திருக்கே. உடனே போகனும்ங்கற?” என கன்னியைத் தன் கைச்சிறையில் கைது செய்து வைத்திருந்தவன் சிறு கோபம் காட்ட,
“என்னமோ நீங்களா வந்த மாதிரி சொல்றீங்க? என்னோட நச்சரிப்பு தாங்க முடியாம தானே வந்துருக்கீங்க.” என குறைபட்டுக் கொண்டவள்,
“எனக்கும் உங்க கூட ரொம்ப நேரம் இருக்கணும்னு ஆச தான் விக்கி. ஆனா தேட ஆரம்புச்சுருவாங்களே.” என்றாள் அவனது சட்டைப் பட்டணைத் திருகிக் கொண்டே ஏக்கமாக.
“சரி… சரி… பேசியே டைம் வேஸ்ட் பண்ணாத காயூ. வரச்சொன்னவ திருவிழாவுக்கா வரச்சொல்லுவ. ஒரு தியேட்டர், ஹோட்டல்னு தனியா வரச்சொல்லி இருந்தா நல்லா இருக்கும். நம்மலச் சுத்தி ஊரே இருக்கு காயூ.” என்றவன் அவளையே வைத்த கண் வாங்காமல் ஏக்கமாகப் பார்க்க,
“க்க்கும்ம்ம்…” என நொடித்துக் கொண்டாள்.
விக்னேஷ்…
ருத்ரன், அமராவதி திருமணத்தின் போது தான் அவனை சந்தித்தாள் காயத்ரி. கண்டதும் காதல் எனும்படி அவனைப் பார்த்ததும் பிடித்துப் போயிற்று. அவன் யாரென்று விசாரிக்க, மஞ்சுளாதேவியின் சொந்தம் எனத் தெரிந்தது.
‘போச்சுடா!’ என அப்பொழுதே மனதிற்குள் அலுத்துக் கொண்டாள். அகிலாண்டத்திற்கு தான் மஞ்சுளாதேவியின் சொந்தபந்தங்களே ஆகாதே. அதுவும் இல்லாமல் இவன் மஞ்சுளாதேவியின் தங்கை மகன் வேறு. அப்பொழுதுதான் முதன் முதலாகப் பார்த்துக் கொள்கின்றனர். அகிலாண்டத்திற்கு தெரிந்தால் அவ்வளவு தான். தேரை இழுத்து தெருவில் விட்டுவிடுவார்.
இவர்களைப் பற்றி தெரியும் என்பதால் சகஜமாகப் பேசாமல் அளவோடு பேசி, எல்லைக் கோட்டோடு நின்று கொண்டனர் திருமணத்திற்கு வந்திருந்த மஞ்சுளாதேவியின் பிறந்தவீட்டு சொந்தங்கள்.
பந்தியின் போதும், வரவேற்பின் போதும், காயத்ரி அவனிடம் பேச்சு கொடுக்க, கல்யாணப் பெண்ணின் தங்கை என விக்னேஷும் மரியாதையாகப் பேச ஆரம்பிக்க, எப்படியோ பேசி அவனிடம், எதற்கும் இருக்கட்டும் என ஃபோன் நம்பர் வாங்கிக் கொண்டாள்.
இந்தத் திருமணத்தில் தான் மஞ்சுளாதேவியின் பிறந்து வீட்டு சொந்தங்களையே அடுத்த தலைமுறையினர் பார்த்துக் கொள்கின்றனர். ருத்ரனும், தேன்மொழியும் உட்பட.
இன்றைய காலகட்டம் அப்படித்தானே இருக்கிறது. பிள்ளைகள் படிப்பு, வேலை என ஆளுக்கொரு பக்கமாகச் சிதறிப் போகும் சொந்தங்கள் இந்த மாதிரி விசேஷங்களில் யாரென்று தெரியாமலே அளவளாவிக் கொள்கின்றனர்.
வாட்சப்பில் அவனது ஸ்டேட்டஸ்களுக்கு மெதுவாக தயங்கித் தயங்கி லைக் போட ஆரம்பித்தாள். படிப்படியாக அவனது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஃபாலோ செய்ய ஆரம்பித்தவள், ஒரு நாள் தன் மனதில் உள்ளதை ஃபோனில் தைரியமாக வெளிப்படுத்த, எதிர் முனையில் அவன் அரண்டு விழிப்பது இங்கே அகக்கண்ணில் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
இது சரிப்படாது என அவன் ஒதுங்க ஆரம்பிக்க, விடாக்கண்டியாக அவனைத் துரத்திச் சென்று சம்மதம் பெற்றாள். இவ்வளவும் ஃபோனிலேயே. ஒன்றிரண்டு முறைதான் நேரில் பார்த்திருப்பர்.
இன்றைக்கும் கூட இவளது நச்சரிப்பில் தான் வந்திருக்கிறான். பயம் என்பதைவிட, தன்னால் இந்தக் குடும்பத்தில் பிரச்சினை வேண்டாமே என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது.
இருந்தாலும் தன்னை விரும்பி ஒரு பெண் தானாக வலிய வரும் பொழுது, ஆணாக கர்வம் தலைதூக்கத்தானே செய்யும். அந்தக் கர்வமும் காதலின் முன் அடிபணியத்தானே செய்யும். காயத்ரியின் விடாப்பிடியான காதலில் விக்னேஷும் அடி பணிந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் இந்த பத்து நிமிட சந்திப்பிற்காக, நெய்வேலியில் இருந்து வந்திருப்பானா? நிலக்கரி சுரங்கத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறான். குடும்பம் இருப்பது கோவில்பட்டியில்.
“பட்டுச் சேலையில கல்யாணப் பொண்ணு மாதிரி இருக்க காயூ.” என்றான் அவளையே உற்றுப் பார்த்தவன்.
“ஹலோ… ஃபர்ஸ்ட் டைம் நம்ம மீட் பண்ணப்போ, எங்க அக்கா கல்யாணத்துலயும் பட்டுச் சேலதான் கட்டி இருந்தேன்.”
“அன்னைக்கி இவ்வளவு உத்துக் கவனிக்கல காயூ. கல்யாணப் பொண்ணோட தங்கச்சினு தான் பாத்தேன். அதுவுமில்லாம அன்னைக்கு குச்சிக்கு சேலை கட்டின மாதிரி இருந்த.” என்றவனது பார்வை… அவளது தோள்பிடித்து, சற்று தள்ளி நிறுத்தி, தலைமுதல் கால்வரை வருடிச் சென்றது.
இடைப்பட்ட காலத்தில் இளைமையின் வாளிப்பை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருந்தாள் பெண்.
“இப்ப எப்படி பாக்குறீங்க விக்கி?” என நாணச்செம்மை படர கேட்டவளை,
“என் பொண்டாட்டியா பாக்குறேன்.” எனக் கூறி சிரித்து மயக்கியவனை,
“இப்படியே வாய்ல வடசுடாம அதுக்கான ஏற்பாட்டையும் பாத்தா நல்ல இருக்கும்.” என்றாள்.
“வேணும்னா இப்படியே வந்து உங்க அம்மாகிட்ட பொண்ணு கேக்கவா?”
“அந்தக் கதையே வேண்டாம். இந்த ஜென்மத்துல அது நடக்காது. நான் சொன்ன மாதிரி சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.”
“கொஞ்சம் யோசிக்கலாமே காயத்ரி. உங்க அப்பாகிட்ட வேணா பேசிப் பாக்கவா?”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எங்க அம்மாவப் பத்தி உங்களுக்கு சரியாத் தெரியாது விக்கி. உங்களுக்குப் பயமா இருந்தா சொல்லிருங்க. நான் இப்படியே விலகிக்கிறேன். விஷயம் வெளிய தெரிஞ்சா போதும். அடுத்த நிமிஷமே, எங்க அம்மா எப்படியாவது ருத்ரா மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் பாப்பாங்க.” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரையாகக் கொட்ட ஆரம்பிக்க,
அவள் பயப்படுவதாகக் கூறியதும் அவனைச் சீண்டி விட்டது.
“காயத்ரி… அழுகாத. சீக்கிரம் ஏற்பாடு பண்ணிட்டு உனக்கு தகவல் அனுப்புறேன்… போதுமா? முதல்ல கண்ணத் தொட.” எனக் கடிய,
“ஏன், நீங்க தொடச்சுவிட மாட்டீங்களோ?” என சிலுப்ப, சிரித்துக் கொண்டே கண்களைத் துடைத்துவிட்டான்.
“சரி… நீ கெளம்பு. அங்க பாரு உங்க அண்ணே தேடிட்டு வர்றாப்ல.” என கூட்டத்துக்குள் அழகர் தங்கையைத் தேடுவதைப் பார்த்துவிட்டு விக்னேஷ் அவசரப்படுத்த, அவளுக்கோ விட்டு விலக மனமே இல்லை. இருந்தாலும் போக வேண்டுமே.
“லவ்வரப் பாக்க வீசுன கையும் வெறுங்கையுமா வந்திருக்குது பாரு முண்டம். இதெல்லாம் என்னத்தப் படிச்சு இன்ஜினியர் ஆச்சோ” என வாய்க்குள் முனங்கியவாறே திரும்பி நடக்க ஆரம்பிக்க…
சிரித்துக் கொண்டே அவளது கைபிடித்து நிறுத்தினான். கேள்வியாய் அவள் திரும்பிப் பார்க்க, விரல் பிடித்து மோதிரம் போட்டுவிட்டான் காயத்ரியின் விக்கி.
அரிதாக சந்தித்துக் கொண்ட காதலிக்கு அவன் கொடுக்கும் முதல் காதல் பரிசு. ஆசையாகப் பார்த்து நின்றவளை, அவள் விரும்பும் மலர்ந்த சிரிப்போடு, “போ…” என தலையசைத்து விடை கொடுக்க மானின் துள்ளலோடு மீண்டும் கூட்டத்துள் கலந்தாள் மாது.
சற்று நேரத்திற்கெல்லாம் தங்கையைக் காணாமல் தேடிக்கொண்டு வந்த அழகர் இவளைப் பார்த்துவிட்டு, “கூட்டத்துக்குள்ள எங்க போன. சேந்து வரமாட்டியா?” என பதட்டத்தில் கடிய,
“இங்க பக்கத்து கடையிலதான் ண்ணா பாத்துட்டு இருந்தேன்.” என சமாளித்தாள்.
கேசவமுர்த்தியையும், மஞ்சுளாதேவியையும் இறக்கி விட்டு, மீண்டும் காரை எடுத்துக் கொண்டு இவர்களை அழைத்துச் செல்ல ருத்ரன் வந்தான்.
இவன் காரை நிறுத்திவிட்டு இறங்க, அங்கே காரை எடுக்க விக்னேஷ் வந்தான். இவனைப் பார்த்து ஒருகணம் அதிர்ந்தவன், சமாளித்துக் கொண்டு,
“எப்படி ண்ணா இருக்கீங்க?” என விசாரிக்க, ருத்ரனுக்கும் இன்ப அதிர்ச்சியே இவனைப் பார்த்துவிட்டு.
“என்ன விக்னேஷ்… இவ்ளோ தூரம்.” என விசாரிக்க,
“ஏன் ண்ணா… நாங்க எல்லாம் அழகரைப் பாக்க வரக்கூடாதா?” எனக் கேட்டு மலுப்பலாக சிரிக்க,
“தாராளமா வரலாமே. அழகரப் பாக்க வந்தவன் அண்ணனையும் பாக்க வீட்டுக்கு வந்திருக்கலாமே? அப்பா, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?” என நலம் விசாரித்தான்.
“இன்னும் சித்தி, சித்தப்பானு உரிமையா கேட்க மாட்டேங்குறீங்க. ஆனா நான் மட்டும் அண்ணன் வீடுன்னு உரிமையா வரணும்னு எதிர்பாக்குறீங்களே?”
“நல்லா சமாளிக்கிற டா. சரி வா… ஏதாவது சாப்பிட்டு போலாம்.”
“இல்ல ண்ணா. அன் டைம்ல சாப்பிட முடியாது. இப்ப கெளம்பினா தான் விடியறதுக்குள்ள ஊரு போய்ச்சேர முடியும்.” என்றவன் கிளம்ப எத்தனிக்க, சரி என அவனை வழியனுப்பி வைத்தவன் முகத்தில் யோசனை கீற்றுகள்.
தங்கைக்குப் பிடித்த ஜிகர்தண்டாவையும், காயத்ரிக்குப் பிடித்த ஐஸ்க்ரீமும் வாங்கிக் கொண்டு, இவர்களைத் தேடி வர, அழகரும் ஒரு ஜிகர்தண்டா டம்ளருடனும், ஐஸ்க்ரீமோடும் அங்கே நின்றான்.
அண்ணன்களைப் பார்த்த காயத்ரியும், தேன்மொழியும் வாய்விட்டு சிரித்ததோடு நில்லாமல்,
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்காரகுயிலே
இசை பாடும்
ஒரு காவியம் இது
ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்
…………..
அன்பு என்னும்
கூண்டிலே ஆடி பாடும்
பூங்குயில் ஆசை தீபம்
ஏற்றுதே அண்ணன்
உன்னை போற்றுதே…
என வாய்விட்டுப் பாட, சகோதரர்கள் முகத்திலும் சிரிப்பின் ரேகை தீர்க்கமாக ஓடியது.
வைகறை துயில் கொள்ளாத வைகைக் கரையைத் துயில் எழுப்ப, ஒவ்வொரு மண்டகப்படியாக முடித்துக் கொண்டு கள்ளழகர் வர, பக்தர்கள் தோப்பறையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மதுரையையே குளிர்விக்க முயற்சி செய்ய, (ஆகுற காரியமா இது.) பக்தகோடிகளின் கோவிந்தா… எனும் கோஷத்தைக் கேட்டு பாற்கடலில் பள்ளிகொண்டவரும் தலை தூக்கிப் பார்க்க, ஆனந்தமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தேறியது.
