தெம்மாங்கு பூந்தமிழே 5

5

“சிக்ஸ்த் ‘ஏ’ க்ளாஸ்க்கு எப்படி போகணும்?” ஆஃபிஸ் ரூம் முன் இருந்த அட்டென்டரிடம் மனோகர் கேட்டுக் கொண்டு இருக்க, 

“என் க்ளாஸ் தான் அங்கிள். நான் கூட்டிப் போறேன் ” மனோகருக்குப் பின் இருந்து வெடிப்பாக ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்க்க, ருத்ரனோடு, தேன்மொழி நின்று கொண்டிருந்தாள்‌, முதுகில் ஸ்கூல் பேக்கை சுமந்த படி.

இவர்களைப் பார்த்ததும் நியூ அட்மிஷன் என அண்ணன், தங்கை இருவருக்கும் புரிந்தது. 

“நீயும் அந்த க்ளாஸா பாப்பா? உன் பேரென்ன?” என்று மனோகர் விசாரிக்க,

“என் பேரு தேன்மொழி. இது என்னோட அண்ணன் ருத்ரபாண்டியன்.” அருகில் நின்றவனையும் சேர்த்து அறிமுகப்படுத்தி வைத்தாள்.

பெயரைக் கேட்டு யோசனையாக புருவம் முடிச்சிட்டது. முகஜாடையை ஆராய்ந்து கொண்டே, 

“வெரிகுட். இது எம்பொண்ணு அமிர்தவல்லி. நியூ அட்மிஷன். அதான் க்ளாஸ் தெரியல. நீங்க ரெண்டு பேரும் சேந்து போறீங்களா ம்மா?” மனோகர் கேட்க, சரி என தேன்மொழி வேகமாகத் தலையாட்ட, பந்தாக காதோர குதிரைவால் இரண்டும் சேர்ந்தே ஆடியது.  

முதுகில் பேக்கையும், கையில் லன்ச் பேக்கையும் பிடித்துக் கொண்டு, உம்மென முகத்தைத் தூக்கி வைத்து இருந்தாள் அமிர்தவல்லி. படாதபாடு பட்டு தான் அவளை சமாதானம் செய்து பள்ளிக்கு அழைத்து வந்தார் மனோகர். அவளது தம்பி கௌதம் கூட சமத்தாக கிளம்பி விட்டான். இவளுக்க பழைய பள்ளியை விட்டுப் பிரிந்து வந்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை. புது இடம் என்கிற தயக்கம் வேறு. 

அவளையே ருத்ரன் பார்த்துக் கொண்டு இருந்தான். தேன்மொழியும் இவளும் ஒரே வகுப்பு என்றால் அவனால் நம்ப முடியவில்லை. தனது தங்கையைவிட உயரமாக கொழுக் மொழுக்கென இருப்பதாகப்பட்டது. தேன்மொழிக்கு கொஞ்சம் நோஞ்சான் உடம்பு. 

“அமிர்தா, அப்பா கெளம்பவாடா?” வாஞ்சையாகக் கேட்க,

“ப்பா… என்னைய பழைய ஸ்கூலுக்கே அனுப்புங்க ப்பா. எனக்கு இந்த ஸ்கூலே பிடிக்கல.” என்றவளது கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.‌ மூக்கின் நுனி சிவக்க கர்சீஃபால் கண்களை மாற்றி மாற்றி துடைத்துக் கொண்டு இருந்தாள். 

இந்தப் பள்ளியில் அட்மிஷன் வாங்க யார் யார் கையைப் பிடித்தார் என மனோகருக்குத் தான் தெரியும். எல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. அரசாங்க உத்தியோகஸ்த்தர் என்ற சலுகை இருந்தாலும், இங்கு அட்மிஷன் கிடைப்பது கொஞ்சம் சிரமமாகதத்தான் போய்விட்டது.

அமிர்தவல்லி ஒன்றும் பயந்த சுபாவம் எல்லாம் கிடையாது. வம்புச் சண்டையை விலை கொடுத்து வாங்கும் ரகம் தான். அவளுக்கு திருச்சி பள்ளியையும், அவளது நண்பர்களையும் விட்டு பிரிந்து வந்தது பிடிக்கவில்லை. பழகிய இடத்தை மறக்க முடியவில்லை. 

மாற்றலாகி இங்கு வந்ததில் இருந்து ஒரேடியாக அழுது  ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருக்கிறாள். சொல்லிப் புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லை. இன்னும் சிறுபிள்ளை.

“அமிர்தா இப்படி எல்லாம் அழக் கூடாது. அப்புறம் உன்னப்பாத்து தம்பியும் முரண்டு பிடிப்பான். நீதானே இங்க அவனையும் பாத்துக்கணும்.” அவளது பொறுப்பை எடுத்துக் கூற, மனது சற்றே மேவியது. இருந்தாலும் அவளுக்கு மனம் முழுதும் திருச்சி பள்ளியும் நண்பர்களுமே. 

அவனது தம்பி கௌதமையும் மூன்றாம் வகுப்பில் விட்டுவிட்டு தான் இவளது வகுப்பறையைத் தேடிக் கொண்டு வந்தனர் அப்பாவும் பொண்ணும்.  

இவளது அலும்பு பார்த்தே அடுத்து எந்த ஊருக்கு மாற்றல் வந்தாலும் மனோகரன் எப்படியாவது மேலிடத்து ஆட்களைப் பிடித்து மதுரையை தக்க வைத்துக் கொண்டார் எனச் சொல்லலாம். 

அதற்குள் ப்ரேயருக்கான மணி அடிக்க, 

“அங்கிள் நீங்க கெளம்புங்க. தேன்மொழி பாத்துக்கும்.” பெரியமனுஷனாய் கரகரத்த குரலில் ருத்ரன் கூறினான்.‌ அவன் பத்தாம் வகுப்பு மாணவன். குரல்கட்டு உடைய ஆரம்பித்ததில் இருந்து யாரிடமும் சகஜமாகப் பேசமுடியாமல் கூச்சத்தோடு தயங்கித் தயங்கி பேசுகிறான். 

அவரும் சரி எனக் கிளம்ப, கிளம்பும் முன் தந்தையின் பெயரை விசாரித்துவிட்டே சென்றார். அரைமனதாகவே தேன்மொழியோடு வகுப்பறை சென்றாள். இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு தான் அவனது வகுப்பிற்கு சென்றான். 

அவளது வளர்த்தி பார்த்து கடைசிப் பென்ச்சில் அமரவைத்தார் வகுப்பு ஆசிரியை. இல்லை எனினும் அவளே கடைசி பென்ச்சுக்கு தான் சென்றிருப்பாள். முதல் பென்ச்சில் அமர்ந்து கொண்டு தியேட்டரில் தலை மறைக்குது என்பது போல், போர்டு மறைக்குது தள்ளி உக்காரு என்பவர்களுக்காக அவள் ஒவ்வொரு முறையும் தலைவணங்க முடியாது.

முதல் நாள் தான் அழுதது. பிறகு தானே சமாதானம் செய்து கொண்டாள். தேன்மொழியைத் தவிர வேறு யாரிடமும் நெருங்கிப் பழகவில்லை. 

அடுத்த நாளில் இருந்தே ஸ்கூல் பஸ்ஸில் அனுப்பி வைத்தனர். ருத்ரனும், தேன்மொழியுமே பள்ளி பேருந்தில் தான் வருவது. ஆனால் வெவ்வேறு ரூட் என்பதால் ஒரே பஸ் கிடையாது. 

வகுப்பு முடிந்ததும் தம்பியின் வகுப்பிற்கு சென்று அழைத்து வருவாள். தம்பியின் பேக்கையும் இழுத்துக் கொண்டு வருபவளைப் பார்த்தவன், மறுநாளில் இருந்து தானே அவனை பஸ்ஸிற்கு அழைத்து வருவதாகக் கூறினான்.

பத்தாம் வகுப்பும், பனிரெண்டாம் வகுப்பும் எப்பொழுதும் பிரின்சிபலின் நேரடிக் கண்காணிப்பில் கீழ் தளத்திலேயே இருக்கும். 

கௌதமுக்கும் வகுப்பு கீழ் தளத்தில் என்பதால் பள்ளி முடியும் பொழுது வகுப்பிலிருந்து ருத்ரனே பஸ் வரை அழைத்து வந்துவிடுவான். அமிர்தவல்லியும், தேன்மொழியோடு சேர்ந்து வருவாள்.

ஒரு மாதம் கழித்தே அட்மிஷன் போட்டிருந்ததால், விடுபட்ட க்ளாஸ் வொர்க் எல்லாம் தேன்மொழியிடமே வாங்கிச் சென்று எழுதி வந்தாள்.‌ பள்ளி பழக்கம் ஆனதும் அவளது குறும்பும் மெள்ள தலை தூக்கியது. 

துருதுருவென காலில் சக்கரத்தைப் கட்டியது போல் ஓடிக் கொண்டே இருப்பாள். அவளுக்குத் தகுந்த மாதிரி தேன்மொழியும் கலகலப்பாக மாறத் தொடங்கினாள். முன்பெல்லாம் யாராவது தன்னிடம் வம்பிழுத்தாள் அண்ணனைத் தேடிச் செல்பவள், இப்பொழுது அமிர்தாவை தேடிச் செல்கிறாள். முதல் பென்ச்சில் அமர்ந்திருந்த தேன்மொழி இப்பொழுதெல்லாம் கடைசி பென்ச்சில் ஐக்கியமாகி விட்டாள். இவள் படிப்பில் படுசுட்டி என்பதால் ஆசிரியரும் கண்டு கொள்ளவில்லை.

அன்றொரு நாள்…

இந்த ஆண்டின் ஸ்போர்ட்ஸ் டே க்கான பயிற்சி க்ரவுன்டில் போய்க்கொண்டு இருந்தது. வாலிபால், பாஸ்கட்பால், கோ கோ, மற்றும் கபடி என ஆங்காங்கே எல்லாதரப்பு வகுப்பினருக்கும் பயிற்சிகள் நடந்து கொண்டு இருந்தது. 

இவளது வகுப்பு மாணவர்கள் ரன்னிங் பிராக்டிஸில் இருந்தனர். பிராக்டிஸ் என்பதால் ஆண், பெண் இருபாலரும் ஒன்றாகவே ஓடினர். உடற்பயிற்சி ஆசிரியர் விசில் ஊத, வரிசையில் தயாராக நின்ற மாணவமாணவிகள் ஓட ஆரம்பித்தனர். பிராக்டிஸ் என்பதால் வகுப்பு லீடரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆசிரியரும் அடுத்த அணியை கவனிக்க சென்றுவிட்டார். 

அமிர்தவல்லி முதலாவதாக ஓடுவதைப் பார்த்து பின்னால் வந்தவன், அவளைத் தள்ளிவிட்டு ஓட, அவள் கீழே விழுந்து முழங்காலில் நல்ல காயம். இது வெறும் பிராக்டிஸ் மட்டும் தான். அப்படியிருக்க அவன் தள்ளிவிட்டு ஓடியதில அவளுக்கு அப்படி ஒரு கோபம். வேகமாக எழுந்தவள், அவளது முழங்கால் வலியைக்கூட பொருட்படுத்தாமல், ஓடிச் சென்று அவனது சட்டையை எட்டிப் பிடித்து இருந்தாள். அவனை குப்புறத்தள்ளி அவனது மேலே ஏறி தலைமுடியை இழுத்துப் பிடித்து, அவனை கும்மியதில் அவன் அழ ஆரம்பிக்க, இதையெல்லாம், அருகில் கபடி பிராக்டிசில் இருந்தவன் பார்த்து விட்டு வேகமாக ஓடி வந்தான். 

“ஏய்! அமிர்தா அவனை விடு?” அதட்டி இருவரையும் பிரித்து விட, இன்னும் கோபம் அடங்கவில்லை அவளுக்கு.

“ண்ணா… இவன் ச்சீட் பண்ணிட்டான்.” என்றாள் மூச்சு வாங்க.

“இது வெறும் ப்ராக்டிஸ் தான. எதுனாலும் மிஸ் கிட்ட சொல்ல வேண்டியது தான.‌ அவனுக்கு ஏதாவது காயம் ஆச்சுன்னா, பேரன்ட்ஸ கூட்டிவரச் சொல்லுவாங்க. அதுவுமில்லாம நீ எல்லாம் ஓங்கி அடிச்சா அவன் தாங்குவானா? ஒன்றை டன் வெயிட்டாச்சே.” சிரிப்போடு கிண்டல் செய்ய,

“போங்கண்ணா… எனக்கும் தான் அவன் தள்ளிவிட்டதுல காயம் ஆகியிருக்கு.” முழங்காலைக் காமிக்க, சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது.

“இந்த வலியோடவா அவன தொரத்தின” என்றான் ஆச்சர்யமாக. கால் முட்டியில் மேல்தோல் சிராய்ந்து வெள்ளையாகத் தெரிந்தது. அதோடு ஓடி அவனை துரத்திப் பிடித்தது பெரிய விஷயம் தான். 

“ச்சீட் பண்றவன சும்மா விடச் சொல்றீங்களா?” என சட்டமாகக் கேட்க,

“நீ உண்மையிலேயே அல்லிராணி தான்” என்றான். அதன் பிறகு அவளை சிக் ரூம் அழைத்துச் சென்று மருந்து போட்டுவிட்டு அனுப்பியவன், 

“எதனாலும் க்ளாஸ் டீச்சர் கிட்ட சொல்லு. அவங்க அவனுக்கு பனிஷ்மென்ட் கொடுப்பாங்க.” என அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தான். ஸ்போர்ட்ஸூக்கும் தேன்மொழிக்கும் வெகு தூரம் என்பதால் அவள் டான்ஸ் பிராக்டிஸில் இருந்தாள்.

“சரிங்கண்ணா.” என்றவள், மெதுவாக காலைத் தாங்கி நடக்க ஆரம்பித்தாள். கோபத்தில் மறந்திருந்த வலி இப்பொழுது தான் தெரிய ஆரம்பித்தது. ஒரு விஷயத்தில் வீம்பு பிடித்து இறங்கி விட்டால் அவளுக்கு உடல் வலி எல்லாம் பறந்து போகும்.

“இரு… இப்படியே போயிருவியா? மாடிக்குப் போகணுமே.” என அருகில் வந்தவன், தங்கை வயது தான் என்பதால் கைத்தாங்கலாகக் கூட்டிச் சென்று வகுப்பில் விட்டு வந்தான். 

அந்த வருட ஸ்போர்ட்ஸ் டே வில் ரன்னிங்கில் அவள் தான் முதல் பரிசு வாங்கினாள். 

கபடி போட்டியின் போது, கைதட்டி ஆர்ப்பாட்டம் செய்து அவனை உற்சாகப்படுத்தியது அமிர்தவல்லி அன்ட் தேன்மொழி கேங்க். 

கபடியில் ருத்ரனின் அணியே வெற்றி வாகை சூடியது. 

தேன்மொழிக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான், அண்ணனையும், தோழியையும் நினைத்து. 

பரிசளிப்பு விழாவில் தேன்மொழி ஆடும்பொழுது மெய்மறந்து பார்த்து நின்றாள் அமிர்தா. அந்த நளினமெல்லாம் இவளுக்கு சுட்டுப் போட்டாலும் வராது. 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்கள் நட்பு மட்டுமல்ல, பிள்ளைகளின் வளர்ச்சியும் வாளிப்பும், வனப்பு காட்டியது. 

இப்பொழுது ருத்ரன் பனிரெண்டாம் வகுப்பு மாணவன். பள்ளி மாணவர்கள் தலைவன். தேன்மொழியும், அமிர்தாவும் எட்டாம் வகுப்பு. ருத்ரன் பள்ளி மாணவர்கள் தலைவனாக போட்டியிட்ட பொழுது, ஒவ்வொரு வகுப்பாகச் சென்று அமிர்தாவும், தேன்மொழியுமே நண்பர்களுடன் சென்று, அவன் சார்பாக ஓட்டு சேகரித்தனர். அதிலும் அமிர்தா மிகவும் தைரியமாகப் பேசி ருத்ரனுக்காக ஓட்டு சேகரித்தாள். அவன் வெற்றியடைந்த பொழுது இவர்கள் இருவரையும் கையில் பிடிக்க முடியவில்லை. ஒரே அலப்பரைதான் வகுப்பிலேயே, அன்று முழுவதும்.

நாட்கள் செல்ல… காலாண்டு விடுப்பு முடிந்து அன்று தான் பள்ளி திறந்திருந்தது.

அன்று அமிர்தாவைப் பார்க்க வித்யாசமாகத் தெரிந்தாள். முகம் முழுக்க மஞ்சளும், கைநிறைய கண்ணாடி பொன்வளையலும், இரட்டை சடையில் பூ, கழுத்தில் கோல்டு செயின், கால் நிறைய கொலுசுமாகப் பள்ளி வந்தவளையே ருத்ரனின் பார்வை சுற்றிக் கொண்டு இருந்தது.‌ முகம் தனிப் பொலிவு காட்டியது.

அசெம்பிளியில் அவன் மேடையில் நிற்க, கீழே வரிசையில் நின்றவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ‘ஸ்கூலுக்கு சில்வர், கோல்டெல்லாம் போட்டு வரக்கூடாதே. பி.டி. சார் பாத்தா பனிஷ்மென்ட் கொடுப்பாறே.’ என்ற சிந்தனை தான் ஓடிக் கொண்டு இருந்தது அவனுக்குள். 

ப்ரேயர் முடிந்து அசெம்ப்ளி கலைந்து அவரவர் வகுப்பிற்கு வரிசையில் செல்ல, வேகமாக அவளிடம் வந்தான்.

“அமிர்தா…” என அழைக்க, வரிசையில் சென்ற தேன்மொழியும் அவளோடு சேர்ந்து நின்றாள்.

“ஸ்கூலுக்கு கோல்டெல்லாம் போட்டு வரக்கூடாதுனு தெரியாதா? போனவுடனே கழட்டி மிஸ்கிட்ட கொடுத்து வச்சுறு. வீட்டுக்கு போகும்போது வாங்கிக்க.” எனக் கண்டிப்புடன் கூற, 

“நானும் அம்மாகிட்ட சொன்னேன் ண்ணா. வெள்ளிக்கிழமையும் பொழுதுமா கழட்ட வேண்டாம் இன்னைக்கி ஒரு நாள் மட்டும் போட்டு போ. ஒன்னும் சொல்லமாட்டாங்கனு சொல்லிட்டாங்க.” என தயக்கத்தோடே கூறினாள். 

பள்ளி கிளம்பும் பொழுதே அன்னையிடம் இதெல்லாம் போட்டு போகக்கூடாதும்மா… என எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். “இன்னைக்கி வெள்ளிக்கிழமை டி. வயசுக்கு வந்த பிள்ளைக்கி சீரா போட்டத நல்ல நாளும் பொழுதுமா கழட்டக்கூடாது. நாளைக்கி கழட்டிக்கலாம். ஸ்கூல்ல இதுக்கெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கே தெரியும்” என அனுப்பி வைத்தனர். அவரது காலத்துப் பள்ளி போலவே அவர் நினைத்துக் கொண்டார். இன்றைக்கு இதெல்லாம் அனுமதிப்பது இல்லை என்பது அவருக்கு தெரியவில்லை.

“அப்படி என்ன இன்னைக்கி ஸ்பெஷல் டே. பெர்த் டே கூட இல்லியே.” என்றான். இத்தனை வருடப் பழக்கத்தில் அவளது பிறந்த நாள் நன்றாக நினைவு இருந்தது. அவள் பதில் கூறாமல் தயங்கி நிற்க, அங்கே இருந்த தேன்மொழி,

“ஹைய்யோ அண்ணா… இதெல்லாமா கேப்பாங்க. என்னோட விசேஷத்தப்பவும் இப்படித் தான போட்டாங்க.” எனக் கூற, அவனுக்கு அப்பொழுதுதான் விபரம் புரிந்தது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் பதின் பருவத்தினனும் சங்கோஜமாக அவ்விடத்தைவிட்டு சென்று விட்டான். 

வகுப்பிற்கு சென்ற சிறிது நேரத்தில் அமிர்தாவை சிக் ரூம் அழைத்து வந்தாள் தேன்மொழி. அவனுக்கு பி.டி.பீரியட் என்பதால் கிரவுண்டில் இருந்தவன், என்னவென்று வந்து விசாரிக்க, கண்ணாடி வளையல் குத்தி மணிக்கட்டில் இரத்தம் வந்து கொண்டிருந்தது. 

“நீ சொல்லவும் தான் பயந்துட்டு கழட்டி வச்சா. கழட்டும் போது வளையல் உடைஞ்சு கிழிச்சு விட்டுருச்சு.” என்று தேன்மொழி அண்ணனை குற்றம் சாட்டினாள். நீளவாக்கில் ஆழமாக கிழித்திருந்தது.

“இப்படி ஏதாவது ஆகும்னு தான் போட்டு வரவேண்டாம்னு சொல்றது.” என்றவன் அவனும் அவர்களுடன் செல்ல, மணிக்கட்டு என்பதால் இரத்தக் கசிவு நிற்கவில்லை. 

ஒரு டி.டி. இன்ஜெக்ஷன் போட்டா தான் நல்லது எனத் தோன்றியது. தேன்மொழியை வகுப்பிற்கு போகச் சொன்னான். அவர்கள் பள்ளிக்கருகிலேயே ஒரு கிளினிக் இருப்பதால் அங்கு அவளை பி.டி. டீச்சர் கூட்டிச் செல்ல, மாணவர் தலைவனாக அவனும் உடன் சென்றான். 

ஊசியைப் பார்த்ததும், பயத்தில் முகம் வெளுத்து, கண்களை மூடிக் கொண்டவளை, ஆதரவாக கையைப் பிடித்துக் கொண்டான். 

“அல்லிராணிக்கி ஊசின்னா மட்டும் பயம் போல?” என கேலி செய்ய, அவள் பதிலேதும் சொல்லவில்லை. 

‘என்னடா இவ, படபட பட்டாசா பொறிஞ்சு தள்ளுவா. இப்ப எது கெட்டாலும் பதில் பேச கூலி கேக்குறா.’ என நினைத்துக் கொண்டான். தனக்கு குரல்கட்டு உடைய ஆரம்பித்த புதிதில் யாரிடமும் சகஜமாகப் பேசாமல் எப்படி தயங்கி நின்றோம் என்பதை மறந்து விட்டான். 

ஊசி போட்டுவிட்டு வரும் வழியில் அவள் உம்மென்று வர, ‘வலிக்கும் போல.’ என எண்ணிக்கொண்டான். அதை அவளிடமே கேட்க இல்லை என மறுத்தவள்,

“இது எங்க மாமா விசேஷத்துக்குப் போட்டு விட்டது. உடஞ்சிருச்சுனு சொன்னா அம்மா திட்டுவாங்க.” எனக் கூற, சற்று யோசனையோடு அவன் பின்தங்கிக் கொண்டான். 

பள்ளிக்குள் வந்தவள் அவள் வகுப்பு சென்று விட்டாள். உணவு இடைவேளையின் போது அவள் இருக்கும் இடம் தேடி வந்தான். 

அமிர்தாவும், தேன்மொழியும் சாப்பிட்டு கொண்டிருக்க, அவள் முன்‌ ஒரு கவரை நீட்டினான். 

அமிர்தா கேள்வியாகப் பார்க்க,

“என்ன ண்ணா?” என தேன்மொழி வாய்விட்டு கேட்க,

“பிரிச்சுப் போட்டுக்க. உங்க அம்மா திட்டமாட்டாங்க.” என அமிர்தாவிடம் கொடுத்தான். கவரைப் பிரித்துப் பார்க்க ஒரு‌ டஜன் பொன்வளையல் உள்ளே இருந்தது. 

“அண்ணா… ஒடஞ்சது ரெண்டே வளையல். ஆனா நீ ஒரு டஜன் வாங்கிட்டு வந்துருக்க.” என தேன்மொழி தான் கூறியது. 

“பரவாயில்ல தேனு… நான் இதையே போட்டுக்கறேன். இது கொஞ்சம் சைஸ் பெருசா இருக்குற மாதிரி தெரியுது. அது கொஞ்சம் சின்னதா இருந்ததால தான் உடைஞ்சது.” என லன்ச் பாக்ஸில் கைகழுவியவள், போட முற்பட, வலியில் முகம் சுழித்தாள்.‌ 

“கொண்டா.” என வாங்கியவன், அவளது கையை மிருதுவாக சுருக்கிப் பிடித்து, மென்மையாகப் போட்டுவிட, அவளது மணிக்கட்டில் இருந்த காயம், வடுவாகப் படிந்தது அவன் மனதிற்குள். 

அப்பொழுது அவன் அறியமாட்டான் அவனும் அவளுக்கு முறை செய்யும் உரிமைப்பட்டவன் தான் என்று. 

தங்கையோடே அவளைப் பார்த்து பழகிவிட்டதால் அவளுக்கும் தங்கைக்கும் எந்த பேதமும் தெரியவில்லை ருத்ரனுக்கு. இயல்பாக கைபிடித்து வளையல் போட்டுவிட்டான். 

ஆனால் புதிதாக மொட்டவிழ்ந்த பூவைக்கு தான் அவன் கைபிடித்து வளையல் போட்டதில் என்னவென்று சொல்லத் தெரியாத உணர்வால் கட்டுண்டு இருந்தாள். ஏதோ ஒரு குறுகுறுப்பு அடிவயிற்றில். அறியா வயதில் ஆழ்மனதில் விதை ஒன்று விழுந்தது. விதை விருட்சமாகி மலர்ந்து மணம் பரப்பும் நேரத்தில் மலர் பறிக்க வருவானா எனத் தெரியாமலே.

அவனையே பார்வை அளந்தது. 

கொஞ்சம் நீளமாக முடி நெற்றிக்கு வந்தாலும் பி.டி. சாரின் அலும்பு தாங்கமுடியாது என்பதால் ஒட்ட வெட்டப்பட்ட முடி. அவருக்கு வழுக்கை. அதனால் மாணவர்களின் முடி மீதே அவருக்கு எப்பொழுதும் ஒரு கண் மட்டுமல்ல,  இரண்டு கண்ணும் இருக்கும்.

அறும்பு மீசையும், அறுவடை செய்த வயக்காடு மாதிரி, இன்னும் முழுமையாக முகத்தில் ஆக்கிரமிப்பு செய்யாத தாடியும் ஆங்காங்கே விரவி நின்றது. மெலிதாக எண்ணெய்ப் படலம் பூசிய முகத்தில் ஆங்காங்கே பருக்களின் முகிழ்ப்பு தெரிந்தது. சிறுபையன் தோற்றமும் இல்லாமல் வாலிபனாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாகத் தெரிந்தான். 

அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் வலிக்குதா எனக் கேட்க, மறுப்பாகத் தலையாட்டி வைத்தாள் பேதை.

மாலை பள்ளிமுடிந்து பஸ்ஸிற்கு வந்தவனது முகம் ஃப்யுஸ் போயிருந்தது.

அருகில் இருந்த தேன்மொழியிடம் விசாரிக்க, 

“இன்னைக்கி குவார்ட்டர்லி எக்ஸாம் பேப்பர்ஸ் கொடுத்துருப்பாங்களா இருக்கும். அதுதான் அண்ணா ஃபேஸ் இப்படி டல்லடிக்குது.” 

அவனது படிப்பின் லட்சணம் தெரியும் என்பதால் அவளும் எதுவும் அதற்கு மேல் கேட்கவில்லை. 

வீடடிற்கு வந்தவன் மஞ்சுளா பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தான். அவனுக்கு பேப்பரில் அப்பாவின் கையெழுத்து வாங்க வேண்டுமே. பேப்பரை அவர்முன் நீட்டினாலே போதும். அவர் பார்க்கும் பார்வையிலேயே இவனுக்கு பயந்து ***வரும். 

“கொஞ்சம் கவனம் வச்சு படிக்கக் கூடாதாடா?” என மஞ்சுளா ஆதங்கப்பட,

“நான் என்னமோ வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ற மாதிரி சொல்றீங்க? வந்தா படிக்க மாட்டேனாம்மா. ப்ளீஸ் மா. எப்படியாவது ஸைன் வாங்கித் தாங்கம்மா. நெக்ஸ்ட் டைம் நல்ல மார்க் வாங்குறே ம்மா.”

“இதையே கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சுடா. உங்க அப்பாகிட்ட ஒவ்வொரு தடவையும் உனக்கு சப்போர்ட்டா பேசி என் மூக்கு தான் உடையுது.” என சலித்துக் கொண்டார்.

“ப்ளீஸ் மா. இந்த ஒரு தடவை மட்டும்மா. அதான்‌ ஸ்போர்ட்ஸ் சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் இருக்குல்ல ம்மா. அதவச்சு காலேஜ் சீட் வாங்கிக்கலாம்னு எங்க பி.டி.சார் சொன்னாரும்மா. இந்த சன்டேல நானே பிரியாணி பண்ணித் தர்றேம்மா. கிட்சன் பக்கமே நீங்க வரவேண்டாம் ம்மா.” என அம்மாவின் பின்னாடியே தோளைப் பிடித்து கெஞ்சிக் கொண்டு  விதவிதமாக ஐஸ் வைத்தான் தோளிற்கு மேல் வளர்ந்து நின்ற மகன். 

படிப்பு எந்த அளவிற்கு மக்கர் பண்ணியதோ அந்த‌ அளவிற்கு, கபடியும், கரண்டியும் அவனுக்கு கால்வந்த, கைவந்த கலையாயிற்று. 

விடுமுறை நாட்களில் அம்மாவோடே அடுப்படியில் சுற்றிக் கொண்டு சமையலின் அடிப்படை எல்லாம் கற்றுக்கொண்டான். 

“உனக்கெதுக்குடா இந்த வேண்டாத வேலை. அவளைப் பாரு ஆம்பளப்புள்ளயாட்டம் சட்டமா உக்காந்திருக்கா. நீ என்னடான்னா அடுப்படியில வந்து உப்பு, உரப்பு பாத்துட்டு இருக்க.” என மஞ்சுளா கண்டித்த பொழுதெல்லாம்,

“பிடிச்சுருக்கும்மா. உங்களுக்கு ஒன்னு தெரியுமா. நளபாகம், பீம பாகம்னு தான சொல்றாங்க. இவங்க ரெண்டு பேரும் தான் சமைல்ல பெஸ்ட். அதனால சமையல் எப்பவும் ஆண்கள் கைமணம் தான். பெரிய பெரிய விசேஷங்கள்ல எல்லாம் ஆம்பளைங்க தான சமைக்கிறாங்க.” என வசனம் பேசும் மகனையே வைத்த காண் வாங்காமல்  வாஞ்சையாகப் பார்த்து நிற்பார்.

“என்ன ம்மா?” எனக் கேட்கும் மகனை மறுப்பாகத் தலையாட்டி ஒன்றும் இல்லை என்பார். 

“ண்ணா… பீமன் சாப்புடறதுலயும் தான் பெஸ்ட். நீ உப்பு, உரப்பு பாக்குறதே அதவச்சு ஒரு ரவுண்டு ஓட்டத்தானே. அப்படி சாப்பிட்டும் ஒட்டகச்சிவிங்கியாட்டம் தான் இருக்க.”‌என தங்கை கேலி பேசுவாள். அந்த வயதிற்கே உரிய வளர்த்தியில் வெடவெடவென ஒல்லியாக இருந்தான். 

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே கார் சத்தம் கேட்டது.

“ப்ளீஸ் மா.” என தாவாய் பிடித்து கண்கள் அன்னையிடம் கெஞ்சியதில், கொஞ்சும் மகனைப் பார்க்க அன்னையின் மனம் பாகாய் உருகியது.

“சரிடா! வந்தவுடனே ஆரம்பிக்க வேண்டாம். நேரம் பாத்து வாங்கி வைக்கிறே. அவர் முன்னாடி கொஞ்ச நேரமாவது புக்க எடுத்து படிக்கிற மாதிரி உக்காரு.” என ஆலோசனை சொல்ல, தேன்மொழி வாயை மூடிக் கொண்டு சிரித்தாள். 

தங்கையை தலையில் நங்கென கொட்டிவிட்டு, காரை நிறுத்திவிட்டு கேசவமுர்த்தி வீட்டிற்குள் வருவதற்குள் புக்கை எடுத்து வைத்து அவரது கண்ணில் படுமாறு உட்கார்ந்து கொண்டான். 

அதிசயமாக புக்கை எடுத்து வைத்திருக்கும் மகனைப் பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றார்.

“இப்பவே அப்பாட்ட சொல்லவா. கொட்டுன இல்ல.” என அண்ணனை சுட்டுவிரல் காட்டி மிரட்டிப் பார்க்க,

“ப்ளீஸ் தேனு… அம்மா சொல்ற‌ வரைக்கும் நீ வாயத்திறக்காத. நாளைக்கி நீ என்ன கேக்குறியோ, அதெல்லாம் ஸ்கூல் கேன்டீன்ல வாங்கித் தர்றே.” என தங்கையையும் தாஜா பண்ணிக் கொண்டு இருந்தான்.‌ 

கேசவமூர்த்தி வெளிவர, புத்தகத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

உடைமாற்றி ஃப்ரெஸ்ஸாகி வெளியே வந்தார். 

அவருக்கு காஃபியை கையில் கொடுக்க, மகன் கையில் இருக்கும் புத்தகமும், வந்து உட்காரும் முன் காஃபி வந்த வேகமும், மகளின் கள்ளச்சிரிப்பும் பார்த்தே, அவருக்கு எல்லாம் புரிந்தது. 

இரவில் பேப்பரைக் கொடுத்து கையெழுத்து வாங்கி வைத்தார் மஞ்சுளாதேவி. 

“படிப்பத் தவிர, அவனுக்கு என்ன வருமோ அது மட்டும் நல்லா வருது. மொதல்ல இந்த கபடிய ஒழிச்சுக்கட்டச் சொல்லு. அப்ப தான் படிப்பு மண்டையில ஏறும்.” என்றவரது பேச்சு கண்டிப்போடு ஒலித்தது. 

‘அதிலென்னு தப்பு இருக்கு?’ என மனதிற்குள் தான் கேட்க முடிந்தது மஞ்சுளாவால்.

                     ***************

“ஏன் இப்ப எல்லாம் உங்க அண்ணன க்ரவுன்ட்ல பாக்க முடியல.” என தேன்மொழியிடம் கேட்க, 

“இந்த வருஷம் அண்ணன் ப்ளஸ்டூ இல்ல. அதனால தான்.” என்றாள். 

“அதுக்காக கபடிய விடுவாங்களா?” என்றவளது மனமும் சுணங்கியது. 

கபடி விளையாடுபவனிடம் ஒரு ஹீரோயிஸம் இருப்பதாகப் பட்டது பதின் பருவத்தின் முதல் படியில் அடியெடுத்து வைத்திருந்தவளுக்கு. 

ருத்ரன் இப்பொழுது எல்லாம் கபடி விளையாடுவது இல்லை.‌ பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மார்க் வாங்க வேண்டும் என கபடியைத் தவிர்த்து விட்டான்.‌ இத்தனைக்கும் சென்ற வருடம் அவனது பள்ளி சார்பாக மாவட்ட அளவில் கோப்பையைக் கைப்பற்றி வந்தது இவனது அணி. 

“ருத்ரா… நீ நல்ல மார்க் வாங்கினா தானே, அடுத்து நல்ல காலேஜ் போகமுடியும். அதனால இப்ப படிப்புல மட்டும் கவனம் வை. காலேஜ் போனபின்னாடி இதெல்லாம் பாத்துக்கலாம்.” என மஞ்சுளா கூற, தனக்கு விருப்பமான கபடியை விருப்பமே இல்லாமல் விலக்கி வைத்தான். 

நல்ல காலேஜில் அட்மிஷன் வாங்குவதென்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை. 

இது மஞ்சுளாவின் ஆலோசனையும் இல்லை. கேசவமூர்த்திக்கு அவன் கபடி விளையாடுவதில் விருப்பம் இல்லை என்பதை அவரது பேச்சை வைத்து கண்டு கொண்ட மஞ்சுளாதேவி தான் இந்த முடிவை எடுத்தது. 

கபடியை மட்டுமா தள்ளி வைத்தான். தனக்கு விருப்பமான காரிகையையும் தான். 

வளறாமலே சிறுபிள்ளையாகவே இருந்திருக்கலாம். எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எல்லார் மனதிலும் ஒரு கணமேனும் தோன்றுவது. 

பழைய நினைவுகள் ஆக்கிரமிக்க தூக்கம் தொலைத்து படுத்திருந்தவனுக்கும் அதே எண்ணம் தான் மேலோங்கி நின்றது. 

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க

ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா

உறங்க நான் உறங்க வழியில்லையே மானே

இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top