4
“அம்மாச்சி!” குதிரை வண்டியில் இருந்தவாரே ஆர்ப்பரித்தாள் அமிர்தா.
இவர்களை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து வெளித் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார் கலையரசி. தண்டபாணி எழுந்து இரயில் நிலையம் கிளம்பும் பொழுதே திண்ணையில் வந்து அமர்ந்தவர் தான். பேத்தியை கண்ணில் காணும் வரை இடத்தைவிட்டு நகரவில்லை.
துள்ளிக் குதிக்காத குறையாக எழுந்து வந்து பேத்தியைத் தூக்கிக் கொண்டார்.
குதிரை வண்டிக்காரரிடம் தாம்புக்கயிற்றை கொடுத்துவிட்டு தண்டபாணியும் குதித்து இறங்கினான். பழனி குறுக்குக் கம்பியை எடுத்துவிட்டு அவளுக்கு வழக்கம் என்பதால் இயல்பாக இறங்க, இலக்கியாதான் சற்று தடுமாறினாள்.
அவளுக்குப் பின்னால் சுகந்தி இறங்க, அதற்குள் ராகவன் வேகமாக வந்து அம்மாவை கைபிடித்து இறக்கிவிட்டான். பரவாயில்லையே என்பது போல் பார்வையாலேயே ராகவனை மெச்சினான் தண்டபாணி.
பேத்தியை ஆரத்தழுவி முத்தம் வைத்தவர் கண்களில் கட்டுக்கடங்காத கண்ணீர். பேத்தி எத்தகைய கண்டத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறாள்.
இத்தனை வருடங்கள் கழித்து மகளும் தாய் வீடு வருகிறாளே. நான்கு வயது மகளுடன். வயிற்றுப் பிள்ளையோடு இங்கிருந்து சென்றவள். அதுவும் வயிற்றில் பிள்ளை இருப்பது கூடத்தெரியாமல் சென்றவளாயிற்றே. அம்மாச்சி தாத்தாவின் சதாபிஷேக விசேஷத்திற்கு வந்தவள் கூட அன்றொரு நாள் மட்டும் காலையில் வந்துவிட்டு, இரவோடு இரவாக சென்னை திரும்பிவிட்டாள்.
அப்பொழுதும் மகளிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை கலையரசி. மகளை தங்கிச் செல்லவும் சொல்லவில்லை. அதை நினைக்கையில் இன்று நெஞ்சை அறுத்தது.
இங்கு தவறு செய்யாதவர்தள் யார். தான் தவறு செய்யும் பொழுது வக்கீலாகவும் அடுத்தவர் தவறு செய்யும் பொழுது நீதிபதியாகவும் மாறிவிடும் நாலு பேருக்காகப் பார்த்து மகளை ஒதுக்கி வைத்தது எத்தகைய முட்டாள்தனம். இதிலும் அவள் தவறு எங்கிருக்கிறது. காதல் என்று ஒருத்தனை நம்பியா ஏமாந்து வந்து நின்றாள். எல்லாம் தாங்கள் பண்ணி வைத்தது தானே. இன்று வருந்தி என்ன பயன். போனது போனதுதான். ஒரு பெருமூச்சோடு பேத்தியை அணைத்துக் கொண்டவர், கண்ணீர் மல்க மகளையும் பார்த்தார்.
கிட்டத்தட்ட அவளுக்கும் அதே மனநிலை தான். எத்தனை பிரச்சினைகளுக்கு இடையில் பெரியம்மாவோடு நாடு விட்டு நாடு சென்றாள். ஏதோ வனவாசம் போல்.
பிறந்த வீட்டில் மகளோடு காலடி வைத்தவளுக்கும் மனதைப் பிழிந்தது. எத்தகைய உணர்வென்று உணர முடியாதொரு உணர்வுச் சிக்கலில் இருந்தாள். என்னதான் பெண்களுக்கு தாய் வீடு நிரந்தரமில்லை எனினும் தாய் மடிக்கிணையாக மனம் நாடுவது பிறந்து வளர்ந்த தாய் வீட்டைத்தானே.
மறுநாள் திருமணம் என்பது யாரும் சொல்லாமலே பழனிக்கு புரிந்தது. ஒரு நல்ல முடிவை தான் எடுக்கப் போவதாக அம்மாச்சியிடம் ஆறுதலாகச் சொல்லித்தானே முன்தினம் இரவு சீனி இரயில் ஏற்றிவிட்டான். என்ன முடிவாக இருக்கும் என்பதை பழனியால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. மறுத்துப் பேசுவதற்கு எதுவுமில்லை என்பதை விட சூழ்நிலை கைதி.
“அம்மா” தண்டபாணி மென்குரலில் அதட்ட, கண்களைத் துடைத்துக் கொண்டு வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் கலையரசி. ராகவனைத் தெரியும். அமிர்தா மருத்துவமனையில் இருந்த பொழுதே, அவனைப் பார்த்திருக்கிறார். சுகந்தியையும், இலக்கியாவையும் பழனி அறிமுகப்படுத்தினாள்.
உள்ளே வந்த இலக்கியாவிற்கு வீட்டின் உள்புற தோற்றம் பிரமிப்பூட்டியது. இந்த குறுகலான தெருவில் இப்படியொரு வீடா என்றுதான் வியந்து பார்த்தாள். இன்னும் பழமை மாறாத அதே சமயத்தில் பொழிவு மங்காத வீடு.
“பழனி… இவங்க தங்கறதுக்கு ரூம்பக் காட்டு. குளிச்சு தயாராகட்டும். ரயில்ல வந்த அசதி அப்ப தான் போகும்! பாவம் அந்தப் பிள்ளைக்கும் இறங்குனதும் சேரல!” என்று சொல்ல, பழனி இவர்களுக்கு ஒரு அறையைக் காட்டினாள்.
“பேக்க அங்க வச்சுட்டு வாங்க இலக்கியா. பாத்ரூம் பின்னால இருக்கு. நானும் மேல போய் பேக் வச்சுட்டு வர்றேன்” என்றுவிட்டு அவளும் மகளோடு மாடிக்கு தனதறைக்கு சென்றுவிட்டாள்.
அவர்களும் அவள் காட்டிய அறைக்குள் சென்றனர். அறைக்குள் ஒரு அறை எனப் பிரிந்தது. அது சற்று வித்யாசமாக இருக்க,
“வீடே வித்யாசமா இருக்குமா. ஒரு ரூம்தான்னு உள்ள வந்தா உள்ளுக்க இன்னொரு ரூம் இருக்கு. முன் வாசலுக்கும் பின் வாசலுக்குமே அரை கிலோமீட்டர் இருக்கும் போல.” வியந்த பாவனையில் இலக்கியா கூற,
“அந்தக்காலத்து வீடு இலக்கியா. வீடுங்கறது குடியிருக்க மட்டுமில்ல. நெல்லு, கம்பு, சோளம்னு தவசம் போட்டு வைக்கவும் தானே. இதப்பாத்தா ரூம் மாதிரி தெரியல. அந்தக்காலத்துல தானியம் போட்டு வைக்க கட்டின மாதிரி இருக்கு. இப்ப அதுக்கு வாசல் விட்டு ரூமா மாத்தி இந்த ரூமோட ஜாய்ன் பண்ணியிருக்காங்க போல.”
“ஆமாம்மா… தெரு கூட குறுகலத்தான் இருக்கு! வீட்டுக்கும் தெருவுக்கும் சம்மந்தமே இல்லாம!”
“அந்தக்காலத்துல தேர் சுத்திவர்ற ஊர்ல மட்டும் தான் தெரு அகலமா இருக்கும். அதுவும் தேர் சுத்திவர்ற மெய்ன் வீதிகள் மட்டும்தான். மற்ற தெருவெல்லாம் மாட்டு வண்டிப்பாதை அளவுதான். இந்த வீடு எப்படியும் நூறு வயசத் தொடும். ஆட்கள் புழங்கறதால சிதிலமடைய விடாம நல்லா பராமரிக்கறாங்க.” இருவரும் வீட்டைப் பார்த்து வியந்து பேசிக் கொண்டிருக்க,
“இந்த ரூம்ம அட்டாச்ட் பாத்ரூமா மாத்தி இருக்கலாம்!” ராகவன் அலுத்துக் கொள்ள,
“அந்தக் காலத்துல உள்ளார பாத்ரூம் வைக்க மாட்டாங்கடா. வீட்டுக்கு வெளியே துண்டா தான் இருக்கும்.”
“அக்கா நீ போய் குளி. வந்தவுடனே உனக்கு செட்டாகல!”
“ஆமாடா… குளிச்சாலாவது ஃப்ரெஷ்ஷா இருக்கும்.” என்றவள் மாற்று துணி எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
வந்தவர்களுக்கு காஃபி போட கலையரசி அடுக்களை செல்ல, தண்டபாணி, “வேண்டாம்மா… இப்பதான் கடையில குடிச்சுட்டு வந்தோம். நீங்க டிஃபன் ரெடி பண்ணுங்க! அவங்க குளிச்சு ஃப்ரெஷ் ஆகட்டும்” என்றான்.
“ஏன்டா… மறுபடியும் காஃபி குடிச்சா ஆகாதா. அதென்ன காஃபியாட்டமா இருந்தது. கழனித்தண்ணியாட்டம் இருந்தது. பேப்பர் கப்ல ரெண்டு மொடக்கு கூட இல்ல. தொண்டை கூட நனையல!” லோட்டா நிரம்ப காஃபி குடிப்பவருக்கு அது எந்த மூலைக்கு. வாங்கிக் கொடுக்காமல் அழைத்து வந்திருந்தாலும் அதற்கும் ஒரு குறை சொல்லியிருப்பார்.
“என்னம்மாச்சி கழனி தண்ணி எல்லாம் குடிச்சு பாத்திருக்கீங்க போல!” தண்டபாணி அம்மாச்சியை கேலி பேச,
“நீயும் பேசக் கத்துக்கிட்டடா!”
“ஒரு வயசுலருந்து பேசறேன் அம்மாச்சி!”
“ஆமாமா… ஒரு வயசுலயே பேச ஆரம்பிச்சுட்ட. ஆனா பள்ளிக்கூடம் போறவரைக்கும் டவுசர் போடாம சுத்துன!” பேரனின் மானத்தை அய்யம்மா காற்றில் பறக்கவிட, காதில் கேக்காதது போல் இவர்களைக் கடந்து சென்றாலும் இலக்கியா சிரிப்பை உதட்டுக்குள் அடக்குவது தெரிந்தது.
“அம்மாச்சீஈஈ! உங்கள அப்பறம் பேசிக்கிறேன்” என்றான் அடிக்குரலில்.
“என்னம்மா குளிக்கவா?” அடுக்களை கடந்து பின்புறமாகச் சென்றவளிடம் கலையரசி கேட்க,
“ஆமாம்மா…”
“காஃபி போடப் போறேன். செத்த இரு… குடிச்சுட்டுப் போவியாம்!”
“அவங்களுக்கு காஃபி ஆகாதும்மா!”
“ஏம்மா… அப்ப பால்” என்று ஆரம்பிக்க,
“அதுவும் தான். பால் அய்ட்டம் எதுவும் பிடிக்காதாம்!”
“பிடிக்காதுன்னு இல்ல. ஒத்துக்காதும்மா” என்றவள் பின்னால் செல்ல,
“டேய்… அந்தப்பிள்ளைக்கு நம்ம வீட்டு பாத்ரூம் எதுன்னு காமிச்சுட்டு வாடா!” எதார்த்தமாக அய்யம்மா கூற, அவளுக்குதான் தர்மசங்கடமாக இருந்தது.
“இல்ல ஆச்சி நானே போய்க்கிறேன்.”
“இதுல என்னம்மா இருக்கு. சின்னபிள்ளையில தங்கச்சிகள பாத்ரூம் தூக்கிட்டுப் போயி விடுறதே இவன்தான்.”
விட்டால் பேசிக் கொண்டே இருப்பார் எனத் தெரிய, “அம்மாச்சி போதும். நீங்க வாங்க” என்று அழைக்க, அவள் தயங்கி நின்றாள்.
பின் வாசல் சென்று எட்டிப்பார்த்தான்.
“ஜானு இங்க வா!” சித்தப்பா மகளை அழைத்தான்.
துணி காயப்போட்டுக் கொண்டிருந்தவள், “என்னண்ணா” என்று கேட்டுக் கொண்டே வர,
“இவங்களுக்கு பாத்ரூம் காட்டு” என்றான்.
“வாங்கக்கா!” என்று அழைத்தவள் பின் செல்ல,
“ஃபர்ஸ்ட் இருக்கற பிங்க கலர்” என்றாள்.
பின்னால் சென்ற பிறகுதான் தெரிந்தது வரிசையாக மூன்று குளியலறைகள் இருந்தது. ஒவ்வொன்றும் ஒரு வண்ணம் பூசப்பட்டு இருந்தது. அண்ணன், தம்பி வீடுகளுக்கு அடையாளமாக தனித்தனியாக வண்ணம் பூசி வைத்திருந்தனர்.
வீடுதான் தனித்தனியாக இருந்ததே ஒழிய பின்கட்டு மூன்று வீடுகளுக்கும் பொதுவாக விஸ்தீரணமாக இருந்தது. செடி, கொடி என சிறு வீட்டுத் தோட்டமே இருந்தது.
“யாருண்ணா இவங்க?” இலக்கியா உள்ளே சென்று கதவை அடைக்கும் வரை பொறுமை காத்தவள், அண்ணனிடம் ரகசியம் போல் கேட்க,
“உங்க அக்காவுக்கு ஃப்ரென்ட்” என்றான். வேறு எப்படி அறிமுகப் படுத்துவது என்றும் தெரியவில்லை.
“ஓ…நாங்கூட வேற என்னமோன்னு நெனச்சேன்.” இழுவையாக இழுக்க,
“நீ என்ன நெனச்ச…”
“நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டண்ணா!” என்றாள் கையை மறுப்பாக ஆட்டி.
“நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்?”
“அதான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டேன்ல. சரிப்பட்டிருந்தா இந்நேரம் எங்களுக்கும் ஒரு அண்ணி வந்திருப்பாங்க! நானும் பெங்களூர்ல இருந்து ஒரு அண்ணிய செட் பண்ணி கூட்டியாந்துட்டியோன்னு நெனச்சேன்” என்றாள் சன்னக் குரலில்.
“வாலு… நான் ஊர் விட்டுப் போனதும் எல்லாருக்கும் குளிர் விட்டுப் போச்சு.”
“மிலிட்டரி ஆட்சியிலிருந்து இப்ப தான் எங்களுக்கு சுதந்திரம் கெடச்சுருக்கு. இப்ப தான் ஜனநாயக ஆட்சியில சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்! ஆனாலும் அந்த அக்கா பாக்க சூப்பரா இருக்காங்க. உனக்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா” என்றாள் விளையாட்டாய்.
“வாய்க்கொழுப்பு கூடிப்போச்சு” என்று காதைப் பிடித்து திருக,
“அண்ணா… ப்ளீஸ்… வலிக்குது… விடு…” என்று கத்தினாள். இவள் சத்தம் கேட்டு மற்ற வாண்டுகளும் கூடிவிட, அந்த இடமே கலகலத்தது.
கலையரசி இவர்கள் சத்தம் கேட்டு குண்டாவோடு காஃபியை பின்பக்கமே எடுத்து வந்துவிட்டார்.
எல்லாருக்கும் ஊற்றிக் கொடுக்க, தண்டபாணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொள்ள, அவனைச் சுற்றி மற்ற நண்டு சிண்டெல்லாம் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு அண்ணனை வம்பிழுத்து வளவளத்துக் கொண்டிருந்தனர். பருவக் குமரிகள் முதல் பால்வாடி செல்லும் வாண்டுகள் வரை வயது வித்யாசமில்லாமல் அங்கு குழுமியிருந்தனர். அத்தை, பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் முதற்கொண்டு பேரன் பேத்திகள் வரை அதில் அடக்கம். போதாக்குறைக்கு அய்யம்மாவும்.
மருதாணிப் பச்சை வண்ண சுடிதார், ஆரஞ்சு வண்ண பேண்ட்டும் துப்பட்டாவுமாக ஈரத் தலையில் துண்டை சுற்றிக் கொண்டே குளியலறை விட்டு வெளியே வந்தாள் இலக்கியா. சிரிப்பு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் ஆச்சர்யம. இவனுக்கு சிரிக்க கூடத் தெரியுமா என.
சென்னையில் முதன் முதலாத இவனைப்பார்த்த நாளிலிருந்து இன்று காலை வந்து இறங்கிய பிறகும் முறைத்த வண்ணமாகவே தண்டபாணியைப் பார்த்தவள் இப்பொழுதுதான் முதன் முதலாக சிரித்த முகமாகப் பார்க்கிறாள்.
சின்ன வாண்டு ஒன்று அவன் மடியிலும், இன்னொன்று பின்னால் அவன் முதுகில் தொற்றிக் கொண்டு கழுத்தோடு கையைக் கட்டிக் கொண்டு ஊஞ்சலாடியது. இரண்டிற்கும் உடம்பில் வெறும் ஜட்டி மட்டுமே. பெரும்பாலும் அவனைச் சுற்றி பெண் பிள்ளைகளே. இப்பொழுதுதான் அய்யம்மா எதார்த்தமாக இவனிடம் குளியலறையைக் காட்டச் சொன்னது ஏன் என்று புரிந்தது.
அவனையே பார்த்துச் சென்றவள் நிலைப் படியில் இடிக்கப் போக, “அக்கா பாத்து. எங்க வேடிக்கை பாக்குற” அடுத்து குளிக்க பின் பக்கமாக வந்த ராகவன் குரல் கொடுத்ததில் சுதாரித்துக் கொண்டாள்.
“என்னக்கா ஒரு மினி நர்சரியே இங்க இருக்கும் போலயே” என்றான். அவளுக்கும் அதே எண்ணம் தான்.
தம்பி, தங்கைகளோடு பேசிக் கொண்டிருந்தாலும் தண்டபாணி பார்வை மட்டும் பெண்ணவளைத் தான் பின் தொடர்ந்தது. வாசல் கடந்து உள்ளே வந்த பிறகும் பெண்ணவளுக்கும் பின் கழுத்தோரம் குறுகுறுத்தது.
பாக்காத பாக்காத… அய்யய்யோ பாக்காத…
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்
*****
“ஏன் ஆச்சி? என்னைக்காவது எந்த விசேஷத்தையாவது என்ஜாய் பண்ணியிருக்கீங்களா. ஒரு தீபாவளி, பொங்கல் இப்படி… ஏன் உங்க பிள்ளைங்க கல்யாணத்தையாவது கண்குளிறப் பாத்திருக்கீங்களா?”
“அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு. வந்தவுங்கள கவனிக்கவும், அவங்களுக்கு ஆக்கிப் போடறதுக்கும் தானே சரியா இருக்கும். இப்ப மாதிரியா… பத்து பேருக்கு கூட ஹோட்டல்ல சொல்லி வாங்கிக்கறீங்க! நாங்க எல்லாம் ஊருக்கேன்னாலும் வீட்லதான் சமையல் பண்ணுவோம். அடுக்களையே கதி மோட்சம் எங்களுக்கு!”
“இப்பவும் அப்படியே இருக்கச் சொல்றீங்களா ஆச்சி? அன்னைக்கு எல்லாமே வீட்ல இருந்தது. சொந்த தோட்டத்துல விளஞ்சது. ஆனா இன்னைக்கு தண்ணி கூட காசு கொடுத்துதானே வாங்கறோம். அப்படி பாத்தா நமக்கு இது லாபம் தான் ஆச்சி. வேலையும் மிச்சம். அடுப்படியிலேயே இருக்க வேண்டாம். வியர்க்க விருவிருக்க இல்லாம நாமலும் அலங்காரம் பண்ணிக்கிட்டு விசேஷத்தை என்ஜாய் பண்ணலாம்ல.”
“நீ சொல்றதும் சரிதான். இப்ப எவளுக்கு உடம்பு வளையுது?”
“அப்படி இல்ல ஆச்சி. தினமுமா வாங்குறோம். இந்த மாதிரி விசேஷத்தப்பவும் அடுப்படியே கதின்னு இருக்காம சொந்த பந்தங்களோட சிரிச்சுப் பேசி ஜாலியா இருக்கலாம்ல.”
கலையரசியிடம் மற்ற வேலைகளைக் கவனிக்கச் சொன்னவன் மதிய உணவிற்கு ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து விட்டான். எப்படியும் மதிய சாப்பாட்டிற்கு அக்கம் பக்கம் சித்தப்பா, பெரியப்பா, அத்தைகள் வீட்டினர் என எப்படியும் ஐம்பது பேர்க்கு மேல் சேர்ந்து விடும். அதுவும் வெளி ஆட்கள் யாரும் இல்லாமலே. மதியம் ஹோட்டலில் இருந்து வரவைத்திருந்த உணவை வந்தவர்களுக்குப் பரிமாறி, தாங்களும் உண்டு சற்றே அசந்து உட்கார்ந்திருந்தனர் வீட்டுப் பெண்கள்.
ஹோட்டலில் இருந்து உணவை வரவைத்ததற்கு தான் அய்யம்மா பிலாக்கணம் படித்தார்.
“எங்க காலத்துல கிளப்பு கடையில வாங்கி சாப்பிட்டா அது ஊதாரிக் குடும்பம். இப்ப அப்படியா இருக்கு” என்றவருக்கு தான் இலக்கியா விளக்கம் கொடுத்தாள்.
அன்று ஆனபண்டம் அத்தனையும் சொந்த தோட்டத்தில் விளைந்தது. இல்லாததை அக்கம்பக்கம் சொந்ந பந்தங்கள் கொடுத்து உதவுவார்கள். இன்று தண்ணீர் முதற் கொண்டு காசு கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கிறது எனும் பொழுது, உணவை ஆர்டர் செய்து தருவிப்பதில் நட்டம் ஏதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் விசேஷம் என்றாலே பெண்கள் அடுப்படியே கதியென இருக்க வேண்டும் என்பதும் இல்லை. கேட்டரிங் என்று சிறுதொழில் முனைவோர்க்கும் இது ஒரு உதவியாகவும் இருக்கும்.
காலையில் இவர்களை வீடு கொண்டு வந்து சேர்த்தோடு சரி. தண்டபாணிக்கு விசேஷ வேலைகள் இழுத்துக் கொண்டது. கோவிலில் திருமணத்திற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்யச் செல்லியிருந்தான் சீனி.
கலையரசிக்குதான் மனமே மேவவில்லை. எப்படியெல்லாமோ கற்பனை செய்து வைத்திருந்த மகளின் திருமணம். எப்படியோ நடக்கிறதே என குமைந்து போனார்.
மறுநாள் விசேஷத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க, ராகவனை உடன் அழைத்துக் கொண்டான். அவனும் எவ்வளவு நேரம் தான் தனியாக சும்மாவே இருப்பது.
கோவிலில் வைத்து எளிதாக பண்ணும் திருமணத்திற்கே இத்தனை வாங்க வேண்டுமா என்று நினைத்தவனுக்கு இப்பொழுதே அக்காவின் திருமணத்தை நினைத்து கண்ணைக் கட்டியது. இத்தனைக்கும் வெளியாட்கள் அழைப்பு இல்லாமல் வீட்டு ஆட்கள் மட்டுமே.
இதுவரை எந்த விசேஷமும் செய்து பார்த்ததில்லை. முதல் பெரிய விசேஷமே இலக்கியா திருமணம்தான். இவன் தான் எடுத்து செய்ய வேண்டும். நினைக்கும் பொழுதே ராகவனுக்கு மலைப்புத் தட்டியது.
தண்டபாணி அழைத்த குதிரை வண்டி வர, வாங்கி வைத்த மாலைகள், பூ மற்ற பூஜை சாமானெல்லாம் வண்டியில் ஏற்றினர்.
“ஆட்டோ மாதிரி நீங்க குதிரை வண்டி கூப்புடுறிங்க சார்!”
“சின்ன வயசுலருந்து பழக்கமானவங்க. அதுவுமில்லாம நம்ம தெருவுக்குள்ள இதுதான் வசதி” என்றவன், சாமான்களை ஏற்றிவிட்டு இவர்களும் ஏறிக் கொண்டனர்.
“சார் இவ்வளவு பண்ணனுமா? எனக்கெல்லாம் ஒன்னுமே தெரியாது. எப்படித்தான் அக்கா மேரேஜ மேனேஜ் பண்ணப் போறேனோ தெரியல!” வாய்விட்டே புலம்பியவன்,
“எப்படி சார் உங்களுக்கு எல்லாமே தெரியுது?” என்றான்.
“சின்ன வயசுல அத்தைங்க, சித்தப்பாக்கள் கலியாணத்திலருந்து பாக்குறோம்ல. அதுக்கப்பறமும் அக்கா, தங்கச்சிங்க கல்யாணம். எப்படியும் பெரியப்பா, சித்தப்பா, அத்தைக குடும்பம்னு வருஷத்துக்கு ரெண்டு மேரேஜ் வந்துரும் எங்க குடும்பத்துல. அப்பா எதொன்னுக்கும் என்னை கூடவேதான் கூட்டிப் போவாரு. அதனால எல்லாமே அத்துப்படி.”
“எனக்கும் எங்க அப்பா இருந்திருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்குமோ என்னவோ. அவர் போய்ட்டதால அப்பா சொந்தங்கள் பெருசா எங்க கூட யாரும் டச் வச்சுக்கல. விசேஷம்னா வந்து பத்திரிகை வச்சு கூப்புடுவாங்க. முக்கியமானவங்களுக்கு அம்மா மட்டும் போய்ட்டு வருவாங்க. நாங்க எந்த விசேஷத்துக்கும் போனதில்ல! இங்க வந்து உங்க சொந்த பந்தங்களப் பாக்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு சார்.”
மனதில் பட்டதை மறைக்காமல் சொன்னவன் கண்களில் அப்பாவிற்கான ஏக்கம் அப்பட்டமாகத் தெரிய தண்டபாணி மனம் கனிந்தது. என்னதான் சிறுபிள்ளைபோல் விளையாட்டாக நடந்து கொண்டாலும் அக்காவின் கல்யாணப் பொறுப்பை நினைத்து பயப்படுவதும் புரிந்தது.
“தாலின்னா என்னனாவது தெரியுமா ராகவா?” என்றவனைப் புரியமால் பார்க்க,
“இல்ல… சின்னத்தம்பி படத்துல இப்படித்தான் அவங்க அம்மா எங்கேயும் கூட்டிப் போக மாட்டாங்க. அதனால தாலின்னா என்னான்னு தெரியாமலே சின்னத்தம்பி வளந்திருப்பாரு. அது மாதிரி நீயும்…” என்று இழுக்க,
“சார்… அதெல்லாம் நல்லாவேத் தெரியும். மூனு முடிச்சு போடணும்னு கூடத் தெரியும்” என அவசரமாக இடைவெட்டினான்.
அவன் சொன்ன வேகத்தில் தண்டபாணி சிரித்துவிட, ராகவனுக்கும் வெட்கமாகப் போயிற்று.
*****
“இப்ப இந்த ட்ரெஸ்ஸுக்கு என்னம்மா?”
“இப்படின்னு தெரிஞ்சிருந்தா சேலை எடுத்துட்டு வந்திருக்கலாம் இலக்கியா! நானும் கோயிலுக்கு தானேன்னு நெனச்சேன். வந்த பின்னாடிதான் கல்யாணம்கறதே தெரியுது!”
“இப்பவும் ஒன்னும் கொறஞ்சு போகலை. நம்மகிட்ட இருக்கறதுதான் போட முடியும். நாம என்ன விசேஷத்துக்குன்னா கிளம்பி சென்னை வந்தோம்.”
“இருந்தாலும் அவங்க வீட்டுப்பிள்ளைக எல்லாம் எப்படி ட்ரெஸ் பண்ணிட்டு வருவாங்க. நீயும் வயசுப்புள்ள தானே. சாதாரண சுடிதார்லயா இருப்ப!”
“இப்ப என்னதாம்மா உங்க பிரச்சினை?”
“இல்ல இலக்கியா… இந்த மாதிரி விசேஷத்துல பாத்து பொண்ணு புடிச்சிருந்தா யாராவது விசாரிப்பாங்கல்ல.”
“அம்மாஆஆஆ…” அடித்தொண்டையில் கத்தினாள்.
சுகந்தி என்ன நினைக்கிறார் எனப் புரிந்தது. விசேஷ வீடுகளில் பார்த்து பெண் பிடித்திருந்தால் யார் எவரென விசாரிப்பது வழக்கம் தானே. எங்கே அது மாதிரி மகளையும் பார்த்து விசாரித்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடியது. அவள் அழகுக்கொன்றும் குறையில்லை. சென்னைக்கு மருத்துவ சோதனை என வந்ததால் சேலை எதுவும் எடுத்து வரவில்லை. எப்பொழுதும் வழக்கம் போல் உடுத்தும் காட்டன் சுடிதாரே எடுத்து வந்திருந்தாள். அய்யம்மா அழைக்கவும் உடை பற்றி எல்லாம் எந்த யோசனையும் வரவில்லை.
இங்கு வந்து பிறகு தான், அதுவும் தண்டபாணி அக்கா தங்கைகள் எல்லாம் கலையரசியிடம் நாளை உடுத்த வேண்டிய உடைகளை பிடித்து தரச்சொல்லியோ, லூஸ் பண்ணித் தரச் சொல்லியோ மெஷினில் அடித்து வாங்கிச் செல்லும் பொழுதுதான் சுகந்திக்கும் தோன்றியது. இலக்கியாவிற்கும் இவர்கள் வயதுதானே. நாளை சாதாரண சுடிதாரிலா இருப்பது என.
“உனக்கென்ன…முதமுதன்னு வந்த சம்பந்தமே பொண்ணு கூட பாக்காம தட்டிப் போச்சேன்னு எவ்வளவு மனச உழட்டுதுன்னு எனக்கு தான் தெரியும். மொத தடவை தட்டிப்போனா வரிசையா தட்டிப் போகும்னு சொல்லுவாங்க! ஆம்பள இல்லாத வீடு. உனக்கு எங்கே என் கவலை புரியப்போகுது” சுகந்தி அங்கலாய்க்க,
“அதுக்குன்னு போற இடம், வர்ற இடமெல்லாம் என்னை ஷோ கேஸ் மொம்மை மாதிரி நிக்க சொல்றீங்களா? ராகவனைப் பாத்தா ஆம்பளையா தெரியலையா?” என்று அவள் கோபத்தில் கேட்டது அப்பொழுதுதான் சாமான்களை இறக்கிக் கொண்டு உள்ளே வந்த தண்டபாணிக்கு நன்றாகவே கேட்டது. ராகவனும் உடனிருந்தான்.
“அக்கா மேரேஜ் அலையன்ஸ் தட்டிப் போச்சேனு அம்மாவுக்கு வருத்தம்.” ராகவன் சங்கடமாகச் சொல்ல,
“உங்க அக்காவுக்கு என்ன வயசா ஆயிடுச்சு. இப்ப என்ன அவசரம்!” என்றான் வெடுக்கென. முகம் கடுகடுத்திருந்தது.
‘இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தாரு. திடீர்னு எதுக்கு கோபம்னு தெரிலையே? இவருக்கும் அடிக்கடி மூட் ஸ்விங் ஆகுதே!’ புரியாமல் குழம்பி நின்றான் ராகவன்.
இந்தக் குழப்பம் உனக்கு மட்டுமில்ல ராகவா… எங்களுக்கும் தான்.

சைட்டு இரண்டு பக்கமுமிருக்கே. அம்மாக்களுக்கு அவங்க கவலை.
Amma is always amma 🥰
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
தண்டபாணி mood swings super
🫣🫣😂😂
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Super super super
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫