முக்கனியும் சக்கரையும் 30

30

“அம்மாச்சி… நீங்களும் வரலாம்ல!”

“இன்னும் நாங்க எதுக்கு அங்கே. அதான் புருஷன், பிள்ளைன்னு ஆயாச்சுல்ல. அவ அவ குடும்பத்தைப் பாருங்க. அந்த ஊருத்தண்ணி நமக்கெல்லாம் ஒத்துவராது. எங்க கட்டை கடைசியா ஆயக்குடியிலதான் சாயணும்!”

“ஆமா…. ஆயக்குடியவே கட்டிட்டு அழுங்க” முகத்தை மூன்று முழத்திற்கு தூக்கியவள்தான், அம்மாச்சியும், தாத்தாவும் தங்களுடன் வரவில்லை என்றதும் மூக்கால் அழுதாள். இறுதிக் காலத்தில் மகள் வீட்டில் வந்து தங்குவதற்கே கௌரவம் பார்ப்பவர். பேத்தி வீட்டிலா வந்து தங்கப்போகிறார். 

“அடுத்தடுத்து இன்னும் விசேஷம் இருக்குல்ல. அப்போ வந்து, அம்மாச்சி, தாத்தாவப் பாத்துக்கோ பழனி. வயசாச்சால்ல. ஒரு எடத்துலதான் இருக்கணும்!” தன்மையாகச் சொல்ல, அதைமீறி அவளாலும் ஒன்றும் பேசமுடியவில்லை. கிராமத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களுக்கு, பட்டணத்தில் நான்கு சுவற்றுக்குள் அடைந்த கிளிக் கூண்டு வாழ்க்கை பிடிப்பதில்லை. மகளை வழியனுப்ப வேண்டிய ஆயத்தப்பணிகளை‌ மேற்கொண்டார்‌ கலையரசி.

இரவுப் பயணம் வேண்டாமென காலை உணவை முடித்ததும் மூவரும் கிளம்பினர். முதன் முதலாக மகளை புகுந்த வீடு அனுப்பி வைக்க, முறைப்படி உடன் சென்றுதான் விட்டுவர வேண்டும். 

எது முறையாக நடந்திருக்கிறது. இதில் மட்டும் முறை‌ பார்க்க. ஏதோ விருந்திற்கு வந்து செல்பவள் போல்தான், புருஷன், பிள்ளையோடு கிளம்பினாள் பழனி. தணிகைவேல், “தண்டபாணி, குதிரை வண்டிய வரச்சொல்லுப்பா!” என்றார் மகனிடம், கார் வரை அழைத்துச் செல்ல. 

முதன்‌ முதலாக சீனி, குதிரை வண்டியில் வந்திறங்கிய தோற்றம் நினைவில் வந்து போனது அவளுக்கு. அதே நினைவோடு அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனுக்கும் அதே எண்ணம்தான் போலும்‌. அவனும் இவளைத்தான் கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தான். சட்டெனப் புருவம் உயர்த்த, உதட்டைச் சுழித்தாள்.‌ 

குதிரை வண்டி என்றதும் அமிர்தா துள்ளிக்குதித்தாள். இங்கிருந்த இரண்டு நாட்களும் சும்மா வேணும் குதிரை வண்டி சவாரிதான் அவளுக்கு. 

வீட்டுப் பெரியவர்கள் விபூதி பூசி வழியனுப்பி வைத்தனர்.

“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நான் எதுவும் சொல்லணும்னு இல்ல. சொன்னாலும் பிடிக்காது. ஒருத்தொருக்கொருத்தர் அனுசரிச்சு, கருத்தாப் பொழச்சுக்கோங்கோ.” பொத்தாம் பொதுவாக இருவருக்கும் சேர்த்தே, அய்யம்மா ஃபினிஷிங் டச் கொடுத்து அனுப்ப,  

சாமியறைவிட்டு வெளியே வந்தவள், கலையரசி எடுத்து வைத்ததெல்லாம் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

“ம்மா… என்னம்மா இதெல்லாம். எப்படி எடுத்துட்டுப் போறது?” கட்டி எடுத்துவைத்த மூட்டை முடிச்சுகளைப் பார்த்து கேட்க, 

“என்னமோ நீயா சுமந்துட்டு போகப் போற? காருதானே சுமக்கப் போகுது.” கடுகு, உப்பு‌ மற்றும் எண்ணெய் தவிர ஆன பண்டம் அத்தனையும், மகள் குடித்தனம் நடத்த மூட்டை கட்டியிருந்தார் கலையரசி. 

இதையெல்லாம் பார்த்த அய்யம்மா, “பாதி நேரம் கடையிலதான் வாங்கித் திங்கிறா. அதுக்கெதுக்கு இவ்வளவு மூட்டை கட்டியிருக்க. அதுவும் மளிகைக்கடைக்காரன் வீட்டுக்கு!” என்று நொடிக்க, அம்மாச்சியை முறைத்துப் பார்த்தாள். 

“உண்மையச் சொன்னா கோபம் வருதாக்கும்?” ஆயக்குடி அய்யம்மா கழுத்தை வெட்டி நொடிக்க,

“அதை நீங்க சொல்லாதீங்க அம்மாச்சி. இன்னும் மக வீட்டுக்கு வந்தா நாலு தேங்கா, மாங்கானு எதையாவது வாங்கிட்டுத்தானே வர்றீங்க. எங்க அப்பா என்ன உங்க மகளுக்கு தேங்கா வாங்கிக் கொடுக்க மாட்டேன்னா சொன்னாங்க!” ‌அம்மாச்சியிடம் மல்லுக்கு நிற்க, 

“மக வீட்டுக்கு வரும் போது, வெறுங்கையும் வீசுன கையுமா எப்படி வர்றது?” என்றார். இத்தனை வயதிலும் மகளைப் பார்க்க வரும் பொழுது சும்மா வந்ததில்லை அய்யம்மா.‌

“இப்போ அதைத்தானே எங்கம்மாவும் எனக்குச் செய்றாங்க.”

“அப்புறமென்ன… எல்லாத்தையும் எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே?” 

“எடுத்துட்டுதான் போகப்போறேன். இதெல்லாம் நாளைக்கி ஒரு மகராசி இந்த வீட்டுக்கு வர்ற வரைக்கும்தானே? அப்பறமெல்லாம் பிறந்த வீட்டு சலுகை கிடைக்குமா?” அண்ணனை ஓரப்பார்வை‌ பார்த்துக் கொண்டே அவனை‌ வம்பிழுக்க வேண்டி சொன்னாலும், தொண்டை அடைத்து, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. என்னதான் ஐந்து வயது மகளோடு புகுந்த வீடு கிளம்பினாலும் அவளுக்கும் பிறந்த வீட்டை விட்டுப்போகும் உணர்வு உள்ளூரத் தாக்க உடைந்துதான் போனது பாழாய்ப்போன பொம்பளை மனது. 

“அதுவும் உண்மைதான். இப்படியே மூட்டை கட்டினா நானெப்படி, குடும்பம், குட்டின்னு பொழைக்கிறது?” தண்டபாணியும் விட்டுக் கொடுக்காமல் அவன் பங்கிற்கு தங்கையை வம்பிழுத்து நையாண்டி பேச, 

“அடப்பாவி தண்டம்! பேச்சுக்குனாலும் அப்படியெல்லாம் இல்லைனு சொல்றியா?”

“நம்மகிட்ட மெப்பனை‌ப் பேச்செல்லாம் இல்ல ஞானம். இருக்குன்னா இருக்கு. இல்லைனா இல்லைதான். ஆனா, நம்ம அம்மு குட்டிக்கு மட்டும் மாமன்கிட்ட என்ன‌‌ கேட்டாலும்‌ கிடைக்கும். இல்லடாம்மா!” தங்கை மகளைத் தூக்கிக்கொண்டு செல்லம் கொஞ்ச, தன்னுடைய இடத்தை மகள் பிடித்ததில் முகத்தைத் தூக்கினாள் பழனி. மகள்தான் என்றாலும் மனம் முரண்டியது. அதற்குள் குதிரை வண்டி வாசல் வந்த சப்தம் கேட்டது.  

“அம்மு, உங்கம்மா மலையேறிட்டாங்க! நம்ம பாட்டுப்பாடி மலையிறக்குவோமா?” என்று‌ கேட்க,‌ அமிர்தாவும் வேகமாக மொட்டைத் தலையை ஆட்ட, 

பழனி, “தண்டம், வேண்டாம்!” விரல் நீட்டி எச்சரித்தாள்.‌ 

அதற்குள், “பழனியம்மா…‌ ஞானப் பழனியம்மா… தமிழ் ஞானப்பழனியம்மா!” எப்பொழுதும் இந்தப் பாடலைப் பாடி தங்கையை வம்பிழுப்பவன்,‌ அமிர்தாவிற்கும் அதை சொல்லிக்கொடுத்திருக்க, இருவரும் ஒத்திசைந்து பாட, சீனி சிரிப்பை அடக்க மாட்டாமல், கண்கள் மின்ன அவளைப் பார்த்தான். அவனது அடக்கிய சிரிப்பு இன்னும் அவளைச் சீண்டிவிட, 

“எங்க அண்ணனை விட்டு இறங்குடீ மொதல்ல. நண்டு சிண்டெல்லாம் நம்மலக் கேலி பண்ணுது! மகளை அதட்டியவள், 

“என்ன சிரிப்பு… எல்லாத்தையும் எடுத்து வெளியே வைங்க!” அங்கே காட்டமுடியாத கோபத்தை சீனியிடம் காட்டினாள்‌. அவனும் ஒரு பையை கையில் எடுக்க, இயல்பு போல் தண்டபாணி வந்து வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் அவனே வண்டியில் ஏற்றிவிட்டு, அமிர்தாவையும் தூக்கி உள்ளே உட்கார வைத்தான். அதற்கே வண்டி போதவில்லை. 

எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு, தொண்டையடைக்க, கண்கள் பனிக்க, பழனியும் ஏறிக் கொள்ள, சீனியும் ஏறியவன் காலைத் தொங்கப் போட்டு, வெளியே பார்த்தபடி அமர்ந்தான். 

“நானும்” என்றபடி பழனியைத் தாண்டிக்கொண்டு முன்னே வந்தவள், அப்பனோடு சேர்ந்துகொண்டு, காலைத் தொங்கப் போட்டு ஆட்டிக் கொண்டே வந்தாள். 

தெருமுனை தாண்டும் வரை, கண்கள் கலங்க, உள்ளம் பூரிக்கப் பார்த்து நின்றனர் அய்யம்மாவும், கலையரசியும்.

கார் வரை வந்ததும், குறுக்குக் கம்பியை எடுத்துவிட்டு இறங்கியவன், மகளைத் தூக்கி இறக்கிவிட்டுத் திரும்பினான். பழனி இரண்டு பக்கமும் பிடித்து இறங்க முற்பட, கண்ணிமைக்கும் நேரத்தில் அவளையும் இடுப்பைப் பிடித்து சட்டெனத் தூக்கி, கீழே நிற்க வைத்தான். அவள்தான் இவனது அதிரடி தாக்குதலில் தடுமாறி விழப்போனவள், அவள் தோளைப்பற்றி நிலைகொண்டாள். சட்டென பார்வை அக்கம் பக்கம் பார்த்தது. 

“யாரும் பாக்கல! அப்படியே பாத்தாலும் என் பொண்டாட்டியத்தான் இறக்கிவிட்டேன். ஒரு பய கேட்கமுடியாது!” தெனாவெட்டாய் பேசியவன், “ஆனாலும் கொஞ்சம் வெய்ட்தான்!” பேச்சோடு பேச்சாக அவளையும் சீண்டினான் அடுத்து பைகளையும் இறக்கிக் கொண்டே.‌ 

இவள் தான் மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க முறைத்து நின்றாள். 

தண்டபாணி, குதிரை வண்டி பின்னாலே தனது வண்டியில் வந்தவன், அவனும் சேர்ந்து பொருட்களை எல்லாம் இறக்கியவன், கார் டிக்கியைத் திறந்துவிடச் சொன்னான். எல்லாவற்றையும் பக்குவமாக காரில் ஏற்றியவன், மச்சான் கடமையை சரிவரச் செய்தான். 

அண்ணனிடம் சொல்லிக் கொண்டு காரில் ஏறப் போனவள் அப்பொழுதுதான் காரை கவனித்தாள். கண்கள் திகைத்து அவனை ஏறிட்டது. பெண்ணவள் முகம் சட்டென இறுகிவிட்டது. உணர்வுப் பேரலை ஒன்று எழுந்து அடங்கியது அவளுக்குள். மழையும், குளிருமாக அவளுக்குள் அனல் மூட்டியது. ஓரக்கண்ணால் அவளை பார்வையிட்டவன், ஏதும் அறியாதவன் போல் முன் பக்கக்கதவைத் திறந்து விட்டான். 

அவள் அசையாமல் நிற்க, “அம்மு… முதல்ல ஏறுவீங்களாம்!” மகளைத் தூக்கி முன் சீட்டில் உட்கார வைத்தான். சுதாரித்தவள், பின் கதவைத் திறந்து ஏற முற்பட, “முன்னுக்கு வா பழனி! அம்மு கொஞ்ச நேரத்துல தூங்கிறுவா! பின் சீட்டேதான் வேணும்னாலும் எனக்கெந்த ஆட்சேபனையுமில்லை!” அதிராத குரலில், அவளைச் சீண்ட, பல்லைக் கடித்தவள், அண்ணன் முன் எதுவும் பேசமுடியாமல் காரில் ஏறினாள். மகளைத் தூக்கி மடியில் இறுத்திக் கொண்டாள். முன் பக்கமாகச் சென்று கதவைத் திறந்து ஏறிக்கொண்டான். 

இரண்டு நாட்களாக கோவில் சென்று வந்ததெல்லாம் தண்டபாணி ஏற்பாடு‌ செய்த வேனில்தான். அதனால் இவன் வந்த காரை கவனிக்கவில்லை. 

“பை தண்டம் மாமா!” அமிர்தா கையசைக்க, பதிலுக்கு அவனும் கையசைக்க, “வர்றேண்ணா!” என்றவளுக்கும் அவளே அறியாமல் தொண்டை அடைத்தது. இமை மீறிய கண்ணீரை, கண்களை சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டாள். 

தங்கையின் தலையில் கைவைத்து செல்லமாக ஆட்டியவன் கண்களும் பனித்துவிட்டது. 

“வர்றோம் மச்சான்!” ஓட்டுனர் இருக்கையிலிருந்தவாறே, குனிந்து பார்த்து, சிரிப்போடு சொன்னவன் குரலில், சற்று மச்சான் குறும்பும் கலந்து இருந்ததுவோ? பதிலுக்கு தண்டபாணியிடம் சிறு‌ புன்னகை மட்டுமே. இன்னும் மச்சானிடம் சகஜமாக, முகம் கொடுத்து உரையாட முடியவில்லை அவனுக்கு. நடந்த சம்பவங்கள் அப்படி. இப்படி ஒருத்தொருக்கொருத்தர் முகம் கொடுத்து இயல்பாகப் பேசமுடியாது என்பதற்காகத்தானே, ஆரம்பத்தில் இந்த சம்பந்தம் வேண்டாமென முறித்துக்கொண்டது. ஆனால், விதி வேறொரு விளையாட்டல்லவா ஆடிப் பார்த்தது‌. 

காரைக் கிளப்பியவன், “இப்படி உர்ருனு இருந்தா எந்தப் பொண்ணுதான் சம்மதிக்கும்?” ஸ்டீரியங்கை லாவகமாகத் திருப்பிக் கொண்டே தனக்குள் முணங்க, அவன் கூறிய எந்தப் பொண்ணுதான் என்றதில் ரஞ்சனியும்தானே அடக்கம். அவள்தானே முதலில், இவளது அண்ணனை வேண்டாமென ஓடிப்போனது. சீனி, இலக்கியாவை மனதில் வைத்துச் சொல்ல, பழனிக்கு இப்படித்தான் தோன்றியது. 

“நாலு அக்கா தங்கச்சிகூட வளந்திருந்தா தெரிஞ்சிறுக்கும்?” என்றாள் வெடுக்கென. பிறந்தவீட்டைப் பிரிந்து வரும் பெண்ணின் மனநிலை, இந்த கார் கிளறிவிட்ட பழைய நினைவுகளின் தாக்கமென கலவையான உணர்வுப் பிடியில் சிக்கியிருந்தவளுக்கு அண்ணனைக் கேலி பேசியதும் சட்டென கோபம் மூண்டது. 

“ஆமா… உலகத்துலயே உங்க அண்ணன் மட்டும்தான் அக்கா தங்கச்சிகளோட வளந்திருக்காப்ல. வேற யாரும் பிறக்கல. அப்படியே பிறந்திருந்தாலும் சிரிச்சுப் பேசக் கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?” என்றான் இப்பொழுது வெளிப்படையாகவே. 

“என்ன பண்றது? ஒரே‌நாள்ல சிரிச்சுப் பேசி அவனுக்கு கரெக்ட் பண்ணத்தெரியல! அந்தளவுக்கு தத்தியா இருக்கான்!” என்றாள் வெடுக்கென. 

அதன் பிறகு இவனெங்கே வாயைத் திறப்பது? பெரிய திண்டுக்கல் பூட்டாக வாய்க்குப் போட்டுக் கொண்டான். இவன் எங்கே தொட்டாலும், அவள் அங்கு வந்துதான் முடிப்பாள் எனத்தெரிய, தனது வேகத்தை காரிடம் காட்டினான். இங்கேயே ஆரம்பித்துவிட்டது இவர்கள் கச்சேரி. 

அவள் எத்தனை பேசினால் என்ன? அவள் கேட்காத ஏளனப் பேச்சுக்களா? குத்தல் பேச்சுக்களா? இத்தனை வருடங்களாக யாரிடமும் கொட்ட முடியாமல் அடக்கிவைத்த ஆதங்கம். உரிமை‌ இருக்கும் இடத்தில்தானே தனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். குடும்பஸ்த்தனென வந்தபிறகு எதையும் தாங்கும் மனநிலைக்கு எப்பொழுதோ வந்துவிட்டார் மகாகணம் பொருந்திய நம்ம சீனி மகாராசா. 

இவர்கள்தான் மௌனம் காத்தார்களே ஒழிய, இவர்களுக்கும் சேர்த்துவைத்து, அமிர்தா வளவளத்துக் கொண்டேதான் வந்தாள். அதற்கு மேல் அவர்களாலும் மௌனத்தைக் கடைபிடிக்க முடியவில்லை. அவளுக்கு ஈடுகொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. சற்று நேரத்தில் அமிர்தாவின்‌ பேச்சு குறைந்து, காரின் மிதவேகத்தில், தூக்கத்திற்கு கண்கள் செருக, காரின் வேகத்தைக் குறைத்தவன், சாலையோரமாக ஓரம் கட்டினான். காரின் இருக்கையை நன்றாகப் பின்னால் சாய்த்து, இருவரும் சாய்ந்து கொள்ள வசதி பண்ணிக் கொடுத்துவிட்டு, மகளின் தலையை வாஞ்சையாய் வருடிவிட்டு, காரை சாலையில் ஏற்றினான். மகளின்‌ முன் அவர்கள் கோபத்தை சிறிது நேரம் கூட இழுத்துப்‌ பிடிக்க முடியவில்லை. அதனால்தான் கல்யாணம் முடிந்தவுடன், ஆரம்பகட்ட ஈர்ப்பு கடந்து, இருவருக்குள்ளும் அடுத்து என்னவென சலிப்புத்தட்டும் முன் குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்கிறார்களோ என்னவோ? காரின் ஏசி குளுமையில் மகளை நெஞ்சில் சாய்த்துப் படுத்தவளும், அவளையறியாமல் கண்ணயர்ந்து விட்டாள். இருவரையும் திரும்பிப் பார்த்தவன்‌ கண்களில் அத்தனை நிறைவு. முகத்தில் தேங்கிய புன்னகையோடு காரில் இசையை இசைக்கவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தவனுக்கு, மனைவி, மகளெனத் தொடர்ந்த நீண்ட பயணம், மனதிற்கு அவ்வளவு இதமாக அமைந்தது. 

உனக்கென்ன வேணும் சொல்லு

உலகத்தை காட்டச் சொல்லு

புது இடம் புது மேகம் தேடி போவோமே

பிடித்ததை வாங்கச் சொல்லு

வெறுப்பதை நீங்கச் சொல்லு

புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே… 

இசை மனதை இனிமையாய் மீட்டியது.

வழியில்‌ சாப்பிடத் தோதுவான இடம் பார்த்து காரை நிறுத்தியவன், பழனி தோளில் கை வைத்து மென்மையாக உலுக்கினான். விலுக்கென எழுந்தாள்.

“ஹேய்ய்.. ரிலாக்ஸ்!” என்றான். அப்பொழுதுதான் அவளும் தூங்கியதே தெரிந்தது.

“எந்திரிங்க மேடம்! சாப்பிட்டுத் தூங்கலாம்!” என்றான்‌ சிரித்துக் கொண்டே. அவளுக்குதான் ஒரு மாதிரியாகிவிட்டது. ஏதாவது அவனிடம் பேசிக்கொண்டே வந்திருக்கலாம். கார் ஓட்டுபவன் பக்கத்தில் படுத்து தூங்கி வந்திருக்கிறாள். எங்கே… பேசினால் சண்டையில்தான் வந்து முடிகிறது. அதற்கு தூங்கியதே மேல் என்று நினைத்துக் கொண்டாள். 

அமிர்தாவும் எழுந்துகொள்ள, கலையரசி கட்டிக்கொடுத்த தயிர்சாதம், புளியோதரைக்கு, தொட்டுக்கொள்ள ஒரு சுளை புளி, வரமல்லி, வரமிளகாய், ஒரு பல்லு பூண்டு, உப்பு வைத்து அரைத்த தேங்காய் துவையல், கூடவே கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போட்டு சுண்ட வைத்த கூட்டு என ஒரு பிடி பிடித்துவிட்டு, இனிதாய் தொடர்ந்தது பழனியின்‌ புகுந்த வீட்டுப்பயணம். 

*****

“குடும்பம்னா‌ நாலும் இருக்கும். புகுந்த வீட்டு மனுஷங்கள அனுசரிச்சு, கட்டினவங்க மனசு கோணாம நடந்துக்கணும். மச்சான் ஏதாவது சொன்னா இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுறணும். புருஷன், பொண்டாட்டி பிரச்சினை எதுனாலும் நாலு சுவத்துக்குள்ளதான் வச்சுக்கணும்‌. நாலு பேரு பேசுற மாதிரி வச்சுக்கக்கூடாது!”

பழனியையும், அமிர்தாவையும் அவர்கள் ஃப்ளாட்டில் விட்டுவிட்டு, தனது உடமைகளை எடுக்க வந்தவனிடம், ராகவன், புதுப்பெண்ணிற்கு சொல்வது போல் கோளாறு சொல்ல, 

“ஊமைக்குசும்புங்கறது இதுதான்டா! ஒன்னுமே தெரியாதவனாட்டம் இருந்துட்டு என்னையே கலாய்க்கறியா… தேறிட்டடா?” என்றான் முகம் கொள்ளாச் சிரிப்போடு. 

“செவ்வாய்தோஷம், நாகதோஷம் மாதிரி இது பழக்கதோஷம் பாஸ். சேர்ந்த சேர்க்கை அப்படி” என்று சொல்ல வெடிச் சிரிப்பு சீனியிடம். 

சற்று நேரம் பொதுவாக பேசிவிட்டு, “பாஸ்… எனக்கு இதுக்கு வாடகை கொடுத்து கட்டுபடியாகாது. நீங்களும் புகுந்தவீடு போய்ட்டீங்க. நான் பழையபடி செங்கல்பட்டில் இருந்தே வந்துக்கறேன் பாஸ்!” என்றான். 

சீனிக்கு இந்த வருடம் முடியும்வரை, வேறு வீடு செல்லும் யோசனை இல்லை. பள்ளிக்கு இதுதான் பக்கம். மனைவி, மகளென அவர்களுடன்தான் இவன் தங்கவேண்டியிருக்கும். இந்த ஃப்ளாட், ராகவன் ஒருவனுக்கு அதிகப்படியென்பதால் அப்படிச் சொன்னான்.

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்டா. ஒரு வருஷம் அக்ரீமென்ட் முடியறதுக்குள்ள காலி பண்ணாலும், நஷ்ட்ட ஈடு கேப்பாங்க. இந்த வருஷத்துக்குள்ள எக்ஸாம் பாஸ் பண்ற வழியப்பாரு. பேங்க் ஆஃபிசராகிட்டா இங்கேயே தங்கிக்கலாம்ல‌.”

“உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் பாஸ்! நீங்க மட்டும் புகுந்த வீட்ல கோவிச்சுக்கிட்டு, ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு பேக்கத் தூக்கிட்டு, பக்கமா இருக்கேன்னு, இங்க வராம இருந்தா சரி!” கேலியும், கிண்டலுமாக அவனை புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைத்தான் ராகவன். 

இவன் வீட்டிற்கு வர, ஹாலில் பரப்பிக்கிடந்த, கட்டைப் பைகளை எல்லாம், ஓரமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பழனி. அரைத்தூக்கத்தில் தூக்கி வந்த பிள்ளையை சோஃபாவில் படுக்க வைத்திருந்தான். குளியலறை சென்றவன் பயணக்களைப்பு தீர குளித்து வந்தான். 

“பழனி, ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம். ஏற்கனவே‌ லேட்டாயிருச்சு. இனிமே எங்கே சமைக்கிறது? என்ன வேண்டும்?” எனக் கேட்டுக் கொண்டே கைபேசியை எடுக்க, சரியாக அந்நேரம் பார்த்து அய்யம்மா அழைத்தார். பத்திரமாக சென்றுவிட்டார்களா என்று விசாரிக்க.

“ஆயக்குடி அய்யம்மாவுக்கு மூக்கு வேர்த்துருச்சு. நீங்க ஆர்டரே பண்ணவேண்டாம். உப்புமாவாவது கிண்டறேன்!” கடுப்பாகச் சொல்லிவிட்டு அடுக்களை செல்ல, சீனிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரிடம் பேசிவிட்டு 

மலர்ந்த முகத்தோடு அவளைப் பின்தொடர்ந்தான். 

அவளது தோள் பற்றி இயல்பாக நகர்த்தி விட்டு, பட்டும் படாமல் உரசிச் செல்ல, சட்டென இறுகிப் போனாள். 

ஒரு வெங்காயத்தை எடுத்து தூக்கிப்போட்டு பிடித்தவாக்கில், “நானும் ஹெல்ப் பண்றேன்!” என்றான். அப்பொழுதுதான் குளித்துவந்தவன் மீதிருந்த வந்த சோப்பின் நறுமணம் நாசி நிறைத்தது. பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். எப்பொழுதும் போல் அவனது தோற்றம் அவளை வசியம் செய்தது. 

“கிண்டப்போறது உப்புமா. அதுல என்ன ஹெல்ப பண்ணப்போறீங்க.” அலுப்பும் சலிப்புமாகவே வந்து விழுந்தன வார்த்தைகள். சலிப்பிற்கான காரணம்தான் புரியவில்லை. 

“பத்த வைக்கவா?” என்றவனை திரும்பிப் பார்த்தாள். வெங்காயத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, “நான் வேணா ஸ்டவ் பத்தவைக்கவா?” விளையாட்டாகக் கேட்க,

“பத்தவச்சு குளிர் காயறதுலதான் நீங்க எக்ஸ்பர்ட் ஆச்சே!” வெடுக்கெனக் கேட்டவள், பதில் ஏதும் வராமலிருக்க அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

இவ்வளவு நேரமாக அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து, தாடை இறுக நின்றிருந்தான். இவள் பார்த்ததும், கையிலிருந்த லைட்டரை, ஓங்கி ஸ்டவ்வின் மீது வைத்துவிட்டுச் சென்றவிதமே அவனது கோபத்தின் அளவை எடுத்துரைத்தது. 

8 thoughts on “ முக்கனியும் சக்கரையும் 30”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top