முக்கனியும் சக்கரையும் 27

27

“வாழ்த்துக்கள்!” 

தண்டாயுதபாணி தரிசனம் முடித்து, கோவில் வெளி பிரகாரத்தில் நின்றிருந்திருந்தவனிடம் வந்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தது என்னவோ நம்ம பார்த்தசாரதியேதான். திகைப்பை புன்னகையில் மறைத்து, சீனியும், நன்றி சொல்லி வாழ்த்தைப் பெற்றுக்கொண்டான். 

பக்கத்தில் நின்றிருந்த ராகவன்தான், “தண்டபாணியோட தங்கச்சி நிங்களுக்கு மனைவியாயிட்டு வரும். பட்சே அமிர்தாவோட அம்மா, நிங்களுக்கு மனைவியாக வாய்ப்பில்லை! அதானே பாஸ் உங்க மைன்ட வாய்ஸ்!  இருவரையும் சேர்த்துவைத்த கிண்டல் செய்ய, சீனியோடு சேர்ந்து பார்த்தசாரதியும் சிரித்தான்.

“கெஸ்ட் ரோலு…” என்று ராகவனை இழுவையாய் அழைத்தவன், 

“எனக்கு இந்தக் கதையில, வில்லன் கேரக்டர் இல்ல, அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை கேரக்டர் தான்கறது மொதல்லயே தெரியும்” என்றவனை, அவசரமாக இடைமறித்த ராகவன், “அழகா ஹேன்ட்சம்மா இருக்கும் போதே நெனச்சேன் ப்ரோ!” என்றவனை சீனி முறைத்துப் பார்க்க, 

“சில சமயம் உண்மை கசக்கும் பாஸ். ஒத்துக்கிட்டுதான் ஆகணும். இருந்தாலும் இப்படி ஆர்ம்ஸ் காட்டி நின்னாத்தானே பொண்ணுங்க மயங்குறாங்க. பட்டு வேட்டி, சட்டையில கல்யாணக் கோலத்துல நிக்கறீங்க. ஆனாலும் பாருங்க, பொண்ணுங்க உங்களத்தான் பாத்துட்டுப் போறாங்க‌. பக்கத்துல ஒருத்தன் நிக்கறதே தெரியல. அஞ்சு வயசுப் பொண்ணுக்க அப்பா மாதிரியா இருக்கீங்க?” அவனைப் பார்க்காத வயிற்றெரிச்சலைக் கொட்டியவன்,  

“நீங்க கண்டினியூ ப்ரோ!” என்றான் பரிதாபத் தோரணையில்.

“அதனாலதான் அடக்கி வாசிச்சேன். இல்லைனா கல்யாணம் நின்ன அன்னைக்கி, எங்க அப்பாவை கை நீட்டின இவரை ஒரு வழி பண்ணியிருக்கலாம். என்னயிருந்தாலும் ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு ஆனபின்னாடி எதுக்குன்னுதான் நான் என் கேரக்டரை டீசன்ட்டா மெய்ன்டெய்ன் பண்ணிக்கிட்டேன்!” 

அவன் பெருந்தன்மையாகச் சொன்னாலும், சீனிக்குதான் ஒருமாதிரி ஆகிவிட்டது. அன்று, பொதிகாச்சலம் நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவரை, யார் எவரென்று வயதைக்கூடப் பார்க்காமல் அறைந்திருந்தான் தானே? அன்று எதுவும் சிந்தித்து செயலாற்றும் நிலையில் யாருமே இல்லை. எல்லாமே கோபத்திலும், பதட்டத்திலும் அவசர கெதியில் நடந்தேறிவிட்டது. 

“சாரி… பார்த்தி! அன்னைக்கி நடந்ததுக்கு!” வறுத்தம் தோய்ந்த குரலில், இன்று மனதார அவனிடம் மன்னிப்பை கேட்டான். காலம் கடந்து சொல்லப்படும் நன்றிக்கும், கேட்கப்படும் மன்னிப்பிற்கும் மதிப்பில்லை என்று தெரியும்‌. இருந்தும் கேட்டான். 

உறவு என வந்தபிறகு மனதிற்குள் சிறு கசப்பையும் வளறவிடக்கூடாது என்ற எண்ணத்தில். இத்தோடு முடிந்து போவதில்லையே. நல்லது கெட்டது எதுவானாலும் இங்குதான் வந்தாக வேண்டும். அதுதானே சொந்தபந்தம் என்பதற்கான அடையாளம்.‌ எப்படி இவர்களை எதிர் கொள்வது என்ற சஞ்சலத்திலேயே உழன்று கொண்டிருந்தவனுக்கு, பார்த்தசாரதி வந்து இயல்பாக பேசியதிலேயே மனக்கிலேசம் எல்லாம் வெகுவாகக் குறைந்தது போலிருந்தது. 

“விடுங்க ப்ரோ… அதுக்கெல்லாம் ஒட்டுமொத்த பனிஷ்மென்ட்டாதான் பழனியக் கொடுத்திருக்கு. அவ, சாரி… மேடம் இனி உங்கள காலம்பூரா வச்ச்ச்சு செய்வாங்க!” கிண்டலாகவே சொல்ல, அத்தை மகள் என்றாலும், திருமணம் முடிந்ததும், சட்டென அவன் பேச்சு மரியாதைக்குத் தாவியதை உள்ளூர மெச்சினான்.

“அடியேன்‌ பாக்கியம்!” புன்னகை முகமாக, நெஞ்சில் கை வைத்து, தலை வணங்க,

“எங்க பாஸ், அதைக்கூட எப்படி தலைவணங்கி ஏத்துக்கறார் பாருங்க. மன்னிக்கறவன்‌ பெரிய மனுஷன்னா, மன்னிப்பு கேக்குறவன் அதைவிட பெரிய மனுஷன். இந்த மனசுதான்…” என்று, உணர்ச்சிவசப்பட்டவன் போல் மேலே பார்த்து கை காண்பிக்க,

“டேய்… போதும்டா!” என்று வாய்விட்டு மலர்ந்து சிரித்தவன்‌ முகத்தில் இருக்கம் வெகுவாக தளர்ந்திருந்தது. இவ்வளவு நேரமாக இயல்பாக இருக்கமுடியாமல் ஏதோவொரு சஞ்சலம் மனதில் குடிகொண்டிருந்தது.

“பாஸ்… உங்கள சிரிக்க வைக்க, அஞ்சு ரூபா வாங்கிட்டு அம்பது ரூபாய்க்கு நடிக்க வேண்டியிருக்கு! கெஸ்ட் ரோல்னுதானே சொன்னீங்க! சப்போர்ட்டிங் ஆக்டர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க!” அதற்கும் நையாண்டி பேச, மேலும் அந்த இடம் கலகலத்தது. 

தூங்கும் பிள்ளையை மடியில் போட்டு, பேப்பர் கொண்டு விசிறிக் கொண்டிருந்த பழனி கூட இவர்களைத் திரும்பிப் பார்த்தாள். பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தான். முதன் முறை அவனைப் பார்த்ததற்கும், இன்று பார்ப்பதற்கும் இத்தனை‌ வருடத்தில், முகத்தில் கம்பீரம் கூடித் தெரிந்ததே ஒழிய எந்த மாற்றமும் இல்லை. அன்று, குறிஞ்சி ஆண்டவர்‌ கோவிலில், வந்தவர்கள்‌ பார்வை அவனைத் தொட்டுச் சென்றது போலத்தான், இன்றும் கோவிலுக்கு வந்த பருவப் பெண்களின் பார்வை அவனை விழுங்கிச் சென்றது. 

கைகளைக் கட்டிக் கொண்டு, தூணில் சாய்ந்து நின்றவாறு, அடர்ந்த மீசைக்கடியில், வெண் பற்கள் பளிச்சிட, சிரித்துப்பேசிக் கொண்டிருக்க, முழங்கைக்கு சற்று கீழே மடித்துவிடப்பட்டிருந்த, முழுக்கை சட்டையை‌ மீறித் தெரிந்தது, முறுக்கேறிய அவனது புஜபலம்.

“இப்படி இருந்தாதானே பொண்ணுங்களும் திரும்பிப் பாக்குறீங்க!” அன்று‌ அவன்‌ சொன்ன அதே வார்த்தைகளை நீரூபித்துச் சென்றது, அவனைக் கடந்துசென்ற பருவப் பெண்களின் பார்வைச்சாரல். பார்த்தவளுக்கும் பொசுபொசுவென வந்தது. பேசாம பிள்ளைய எழுப்பி அவன் கையில் கொடுத்துவிடலாமா என்று‌ கூட ஒரு கணம் உள்ளுக்குள் யோசனை ஓடியது. 

படியேறி‌ வரும்பொழுது அவன்தான் தோளில் வைத்து தூக்கிவந்தான். அவளால் முடியாமல் மூச்சு வாங்கியது‌. அமிர்தாவே விளையாட்டுப் போல் படியேறிவிடுவாள். ஐந்து வயதிற்கு கொழுக், மொழுக் பேபியெல்லாம் இல்லை. ஒடிசலான தேகம்தான். ஆனால், அவன்தான் பிள்ளையை‌ தரையிறக்கவே இல்லையே! 

“ஜிம் பாடி பாஸ். அதனாலதான் அசால்ட்டா ஏறிவர்றீங்க!” பிள்ளையை கழுத்தில் வைத்தவாறு படியேறியவனை, ராகவனும் மூச்சு வாங்க கேலி செய்தான். 

இங்கிருந்தவரைக்கும் வாராவாரம், தங்கைகளோடு சிரித்துப் பேசிக்கொண்டு, எப்படி ஓடி ஓடி ஏறிய மலை, இன்று கொஞ்ச தூரத்திற்கே மூச்சு வாங்கியதை நினைத்துப் பார்த்தாள்.  

மலைமீது வீசிய காற்று, முடியை கலைத்து விளையாட, காற்றின் திசைக்கு ஏற்ப திரும்பி நின்று முடியைக் கைவிரலால் கோதிவிட்டுத் திரும்ப, அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தது. சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள். மெலிதாக புன்னகை அரும்பியது அவளது செய்கையில். அன்று அவ்வளவு பேசிவிட்டு, இன்று இப்படி பார்த்தால் என்ன நினைப்பான் என்று இவளுக்குதான் ஒரு மாதிரியாகிவிட்டது. 

“பாஸ்! இங்க ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் கேரக்டர் இருந்தது. ஆளையே காணோம்?” தண்டபாணியைத்தான் அப்படி நக்கல் செய்தான் ராகவன். அதைக் கேட்டு மேலும் வாய்விட்டு சிரித்தான். பின்னே, சற்று‌முன்தானே அவனிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டான். அந்தக் காண்டு ராகவனுக்கு. 

“உங்க மச்சானுக்கு ஆயுசு நூறு பாஸ்!” கமுக்கமாக வாயில் கைவைத்து மறைத்து, குனிந்து சொல்ல, இவனை முறைத்துக் கொண்டே அவனும் அவர்களை கடந்து சென்றான். இவர்களிடம் சொல்லிக்கொண்டு, பார்த்தசாரதி அவனோடு  சென்றுவிட்டான். 

“இப்ப உங்களை விட்டுட்டாரு. நான் மாட்டிக்கிட்டேன்” என்றான் அழாத குறையாக. 

‘மாட்டினது நீயில்லடா ராகவா! அவர்தான்!’ என்றது சீனியின் மைன்ட் வாய்ஸ்.

ஏற்கனவே பல பிரச்சினைகளைக் கடந்து நடக்கும் திருமணம் என்பதால், பிரம்ம முகூர்த்தத்திலேயே திருப்பூட்டு முடிந்தது. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அடுத்து சரவணப் பொய்கை சென்றனர் முடி காணிக்கை செலுத்த. 

பட்டுப்பாவாடை சட்டை போட்டு, இரண்டு பக்கமும் குடுமியை இணைத்து பேத்திக்கு மல்லிகைப் பூவை, நிறைய வைத்து விட்டிருந்தார் கலையரசி. இதுவரை இப்படி தனக்கு அலங்காரம் பண்ணிப் பார்த்திராதவள்,

அம்மாவிடம் ஃபோனை வாங்கி, அவளையும் சேர்த்துக் கொண்டு சுயமிகளை சுட்டுத் தள்ளினாள். 

மிகவும் ஆடம்பரமாக வேண்டாமென தங்கக்கலரில் மிதமான சரிகை வேலைப்பாடு கொண்ட பட்டுச்சேலையில், தலை நிறைய மல்லிச்சரம் தோள் வழிய, சற்றுமுன் உச்சி வகிட்டில் தான் வைத்துவிட்ட குங்குமமும், கழுத்தில் புது தாலிக்கொடியும் மின்ன, மகள் சொன்னபடியெல்லாம் முகத்தைக் கோணி, இருவரும் சுயமிகளை சுட்டுத்தள்ளினர். பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மகள் செய்யும் அலும்பைப் பார்க்க இரு கண்கள் போதவில்லை. மனைவியின் அழகைக் காணவும்தான். தான் பார்ப்பு தெரிந்தால் முறுக்கிக் கொள்வாள் என கண்டும் காணாமல், இதழ்களில் புன்னகை தவழ, கண்களில் கனிவு தளும்பப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“போதும் வாடீ!” மகளை அதட்டி அழைத்துச் சென்றவளுக்கு அவனது பார்வை குறுகுறுத்ததோ என்னவோ? சட்டென மகளைத் தூக்கிக் கொண்டு நகர்ந்துவிட்டாள். உதட்டுக்குள் சிரிப்பை ஒழித்தான். 

சரவணப் பொய்கை சென்று, மாமன் மடியில் அவளை அமர வைத்ததும், சமத்தாக அமர்ந்தவள், தலையில் தண்ணீர் தெளித்து, தலையைக்குனிய வைத்ததது ஏன் என்று புரியவில்லை. அவளது மடியிலேயே, பூவோடு சேர்ந்து அம்மாச்சி போட்டுவிட்ட குடுமி விழ, அப்பொழுது பிடித்த அழுகைதான், மண்டபத்தில் வைத்து காது குத்தும் வரை நீடித்தது. 

முடி எடுத்தால்தான் நீளமாக முடி வளரும், நீளமா‌ சடை பின்னலாம். அழகழகா அம்மா மாதிரி தோடு போட்டுக்கலாம் என, பழனி எத்தனையோ சமாதானம் செய்தும் அடங்கவில்லை. கை அடிக்கடி தலையை தடவிப் பார்த்து அழுதது‌. இதில் காது குத்திய வலி வேறு. பொதிகாச்சலமும் முடி காணிக்கை செலுத்தியிருக்க, “தாத்தாவும் தான் மொட்டை போட்டிருக்காங்க பாரு!” தாத்தாவைக் காட்டி சமாதானம் செய்தான்‌ சீனி. 

தலையில் முடியும், முகத்தில் மீசையுமில்லாமல் அவரைப்‌ பார்த்தவள், அவரது தோரணைக்கு மேலும் பயந்து அழுதாள். 

“அப்பா, மீசை இல்லைனாலும் உங்களைப் பாத்து, உங்க பேத்தி பயப்படுறா!” என்று சிரித்தான். 

இனிதான் மலையேற வேண்டும். சிறப்பு தரிசனத்திற்கான எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

ஒருவழியாக அழுகையை அமர்த்தி, காலை‌ உணவை முடித்துக் கொண்டு எல்லாரும் மலையேறினர். பெண்களோடு சேர்ந்துதான் ராகவனது அக்காவும், அம்மாவும் படியேறினர். இவன் ஆண்களோடு சேர்ந்து பேசி சிரித்துக் கொண்டே படியேறினான். அவர்களை கவனிக்கவில்லை. 

சற்று தூரம் சென்றதும், தண்டபாணிதான், ராகவனிடம் அக்காவும், அம்மாவும் எங்கே எனக் கேட்டான். அவர்கள் பெண்களோடு சேர்ந்து வருவதாகச் சொல்ல,

“அவங்களோட இல்லைனுட்டுத்தானே உங்கிட்ட கேக்குறேன்!” சுள்ளெனக் கடித்தான். ராகவனும் சுற்றிமுற்றிப் பார்க்க அக்காவும், அம்மாவும் மிஸ்ஸிங்‌. கண்களில் பதட்டம் தொற்றிக் கொண்டது. 

“கூட வர்ற பொண்ணுங்க வர்றாங்களா‌ இல்லையான்னு திரும்பிக் கூடப் பாக்கமாட்டியா?” என்று கேட்க ராகவன் முகம் தொங்கிப் போயிற்று. 

எல்லாம் ஒன்று சேர்ந்து கும்பலாகத்தான் மவையேறினார்கள். ராகவன் அம்மா மெதுவாகப் படியேற, அம்மாவிற்காக மெதுவாக ஏறிய இலக்கியாவும் பின்தங்கிவிட்டாள். 

முன்பே அவரை அய்யம்மா, வேலாயுதத்தோடு, வின்ச்சில் (மின் இழுவை ரயில்) தான் வரச்சொன்னான்‌ தண்டபாணி. அவர்தான் முதன் முதலாக பழனி‌ வந்திருப்பதால், படியேறி வருகிறேன், இறங்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார். 

மகளின் திருமண ஏற்பாடு, ராகவன் பிர்ச்சினையால் பெண் பார்க்கும் வைபவம் கூட நடக்காமல், ஆரம்பமே தடைபட்டதில் மனதிற்குள் ஒரு சஞ்சலம். வேண்டுதல் போல் மலையேற ஆசைப்பட்டார். அம்மாவின் மனமறிந்து, சரியென ராகவனும் விட்டுவிட்டான். 

வள்ளி சுனையருகே வந்த பிறகுதான் அனைவரும் வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்தவனுக்கு இவர்கள் கும்பலில், அவர்கள் மட்டும் இல்லை என்பதே தண்டபாணிக்குத் தெரிந்தது. 

ராகவனும் பதட்டத்தில் அங்குமிங்கும் தேட, இடுப்பில் கைவைத்து அவனை‌ முறைத்துப் பார்த்தவன், “கையில ஃபோன் இருக்குல்ல… கால் பண்ணு” என்று‌ இரைந்தான். 

பதட்டத்தில் அது கூடத் தோன்றவில்லை ராகவனுக்கு. அவனைப் பார்க்கவும் பாவமாய் போயிற்று.‌ புது இடம், அவனுக்கும் என்ன தெரியும்? பெரிதாக எங்கும் இப்படிக் கிளம்பி வந்ததில்லை. இவ்வளவு நீண்டதூரப் பயணம் என்பது இதுவே முதன் முறை மூவருக்கும். அதில் அம்மாவும், அக்காவும் காணவில்லை என்றதும் அவனுக்குமே கண்கள் கலங்குவது போல் ஆயிற்று. கோவிலில் கனிசமான கூட்டம் வேறு.‌

“பயப்படாம கால் பண்றா. பெருசா‌ எங்கேயும் போயிருக்க மாட்டாங்க. அம்மாவுக்கு முடியாததால மெதுவா ஏறி வருவாங்களா இருக்கும்.” ஆறுதலாக தோள் தொட்டான் சீனி. 

இவர்கள் வந்து சேரட்டுமென‌ அங்கேயே அனைவரும் அமர்ந்துவிட்டனர். சீனியின் கண்கள் தண்டபாணியைத்தான் ஆராய்ந்தது. அவ்வப்பொழுது அவனது பார்வை இலக்கியா பக்கம் தொட்டுத் திரும்புவதை, காலையில் கோவிலுக்கு வந்ததிலிருந்தே கண்ணுற்றான். இல்லையென்றால் அவர்கள் மட்டும் இங்கில்லை என்பது இவனுக்கு மட்டும் எப்படித் தெரியும்? 

அழைப்பை ஏற்றவுடன், “எங்கக்கா இருக்கீங்க?” என்றான் படபடப்பாக.

“…”

“எங்க கூட இல்லையே? நீங்க எங்க இருக்கீங்க? நாங்க வள்ளி சுனைகிட்ட இருக்கோம்” என்ற‌ பதிலில் என்ன சொல்லப்பட்டதோ, சில கணங்கள் தாமதத்திற்குப் பிறகு, 

“அவங்க மெயின் படிவழி வர்றாங்களாம்” என்றான்.

“அறிவிருக்கா உனக்கு. கூட வர்றவங்கள நின்னு‌ கூட்டி வரத்தெரியாதா? உடம்பு‌ சரியில்லாதவங்க. அதுல எப்படி ஏறி‌ வருவாங்கன்னு வேணாம்!” அதற்கும் கண்டமேனிக்குக் கத்தினான். பெண்களோடு சேர்ந்து வருவார்கள் என்றுதான் இவனும் ஆண்களோடு சேர்ந்து ஏறிவந்துவிட்டான். 

மலையேற ஆரம்பித்ததும், சற்று தூரத்தில்… இடப்பக்கம் யானைத்தடம் ஒரு பக்கமும்,‌ பிரதானப் படிவழி ஒரு பக்கமும் என பாதை இரண்டாகப் பிரியும். 

யானை தடத்தில் மலையேறுவது எளிது. படி மற்றும் சமதளமென மாறி மாறி வரும். இன்னொரு பாதை முற்றிலும் படியாகவே இருக்கும். வயதானவர்களுக்கு சற்று கடினம். பின்தங்கி வந்தவர்கள், இடப்பக்கமாகத் திரும்பாமல், ஆட்களோடு சேர்ந்து நேரே மேலே ஏறிவிட்டனர்.‌ 

இனி திரும்பி வருவதற்கு, அதிலேயே ஏறி வந்துவிடலாம். 

அவர்கள் இருக்கும் இடம் தெரிந்ததும், ஆசுவாசப் பட்டவர்கள், மீண்டும் மலையேறினர். தண்டபாணி பார்த்த பார்வையில் ராகவன் பஸ்பமாகாததுதான் பாக்கி. 

பத்து படிகளுக்கு ஒரு தடவை, எங்கிருக்கிறார்கள் என்று கேட்டு கால் பண்ணச் சொன்னான். அடுத்து தண்டபாணி, இவனைப் பார்த்தாலே,‌ ராகவன் கை தன்னால் ஃபோனை எடுத்தது. அந்தளவிற்கு அவனைப் பார்த்தாலே மிரண்டு போனான். 

சீனி, இவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவன் பாவமாய்ப் பார்த்தான். 

மேலே சென்று சற்று நேரம் காத்திருக்க அவர்களும்‌ வந்து சேர்ந்தனர். 

மிகவும் களைத்திருந்தார் ராகவனின் அம்மா. இருந்தாலும் மலையேறிவந்த திருப்தி முகத்தில். மேல் படியிலேயே நின்று இவர்கள் வருகிறார்களா என்று கவனித்தவன், இவர்களைப் பார்த்ததும், இலக்கியாவை முறைத்துப் பார்க்க, அவளுக்கும் காரணம் புரியவில்லை. சேர்ந்து வரத்தெரியாதா என்ற கேள்வி தொக்கி நின்ற பார்வை. 

மற்றவர்கள் பார்வைக்கு தாண்டபாணி செயல் வித்யாசமாகத் தெரியவில்லை. அக்கா, தங்கைகளை வெளியே எங்கு அழைத்துச் சென்றாலும் இப்படித்தான் அக்கறையாக கவனித்துக் கொள்வான். ஆனால், அவன்‌ பார்வையின் வித்தியாசத்தை சீனி கண்டுகொண்டான். ‘வாடீ மாப்ளே!’ எக்களிப்பு செய்தது சீனியின் மனம். 

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வேலாயுதத்தில் இருந்து, தணிகைவேல், தண்டபாணி வரை, கோவிலில் இருப்பவர்களுக்கு இவர்கள் குடும்பம் நன்கு பரிச்சயம். தரிசனம் சிறப்பாக, சீக்கிரமே முடிந்தது. 

மதியம்தான் மண்டபத்தில் வைத்து, கிடாவிருந்து.

அதற்கு இன்னும் நேரமிருக்க, கோவில் பிரகாரத்திலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பேசி சிரித்துக் கொண்டிருந்தவர்களை கடந்து சென்றவன்,

இப்பொழுதும் ராகவனைப் பார்த்து முறைத்து செல்ல, 

“பாஸ் இதெல்லாம் நல்லா இல்ல. நான் மட்டுமென்ன பழனிக்கு பத்தாயிரம் தடவையா பாதயாத்திரை வந்திருக்கேன். நானும் ஊருக்கு புதுசுதான். உங்க மச்சான் என் மேலயே கண்ணா இருக்காரு. சொல்லி வைங்க. ஏதோ ஒரு‌ தடவை வழி மாறிப் போயிட்டாங்க. என்னோட அம்மாவையும், அக்காவையும் எனக்கு பாத்துக்கத் தெரியாதா?” 

‘அவருக்கு கண்ணு உம்மேல இல்லடா ராகவா!’ என நினைத்தவன், 

“இப்ப என்ன, அவரு உன்கிட்ட மொறைக்காம இருக்கணும். அவ்வளவுதானே?”

“ஆமா… பாஸ்?”

“விடு, மூக்கணாங்கயிறு போட்டுறுவோம்! உங்க அக்காவுக்கு நான் மாப்பிள்ளை பாத்தா உனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லையே?”

“என்ன பாஸ் இப்படி கேக்குறீங்க‌? ஆனா, எங்க வசதியையும் மனசுல வச்சுக்கிட்டு ஏழைக்கேத்த எள்ளுருண்டையா பாருங்க பாஸ்!”

“ஏன், இந்த பொறி உருண்டையெல்லாம் வேண்டாமா? எள்ளுருண்டையே தான் வேணுமா? அதெல்லாம் பாத்திறலாம் விடு. உன்னையும், என்னையும் மிரட்டுற மச்சானுக்கு ஒரே தீர்வு. பழனியை விட்டுப் போறதுக்குள்ள, என் மச்சானுக்கு, இல்ல.. இல்ல… நம்ம மச்சானுக்கு மூக்கணாங்கயிறுக்கு ஏற்பாடு பண்ணிட்டுதான் போறோம்.”

“அண்ணன் கேரக்டரை ரொம்ப உள்வாங்கி பண்றாரு பாஸ். சிவாஜிகணேசன் தோத்தாரு போங்க!” என்றான் அலுக்காத குறையாக.

“அவரை ஜெமினிகணேசன் கேரக்டருக்கு ட்யூன் பண்ணனும் அவ்வளவு தானே!”

“முடியுமா பாஸ்!”

“அவர் ஆல்ரெடி‌ ட்யூன் ஆகிட்டாரு. இருந்தாலும் விறைப்ப, விட்டுக் கொடுக்காம மெய்ன்டெய்ன் பண்றாரு!”

“பாவம் பாஸ் அவரைக் கட்டிக்கப் போற பொண்ணு.” 

“பாவம் அந்த பொண்ணில்லடா. அந்தப் பொண்ணு கூடப் பிறந்தவன்.”

“யார் சார் அந்த அபாக்கியசாலி?”

“நீதான்!” என்றவனை அதிர்ந்து பார்த்தான்.

அவன் மறைமுகமாக உறைத்தது புரியாமலில்லை. இங்கு வந்து பார்த்தபிறகு தண்டபாணி குடும்ப வசதி என்னவென்று அவனுக்கும் கண்கூடாகத் தெரிந்தது. எதற்கு வீண் மனக்கோட்டை கட்டுவானேன்.

“எதுக்கு பாஸ், தேவையில்லாத பேச்சு‌!” என்றான் உள்ளிறங்கிய குரலில். 

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். உங்க அக்கா சம்மதம் மட்டும் போதும்!”

“அவங்க குடும்பம் ஒத்துக்கணுமே!” 

இப்படியொரு இடம் கனவிலும் கிடைக்காதுதான். நேற்று வந்ததிலிருந்து பார்க்கிறானே. ஏற்கனவே அய்யம்மாவையும், வேலாயுதத்தையும் சென்னையிலேயே தெரியும். அம்மாவிடமும், அக்காவிடமும் எப்படிப் பழகினார்கள் என்று. 

“நல்ல குடும்பமா இருக்குடா ராகவா. பகட்டே இல்லாம பழகுறாங்க” என்று முதலில் இங்கு வரத் தயங்கிய இவன் அம்மா கூட சிலாகித்து சொன்னார். தண்டபாணியை நினைத்தால்தான், அவனுக்குக் கொஞ்சம் கருக்கென்றது. 

*****

“எங்க அண்ணன் ஒன்னும் அந்த மாதிரி கிடையாது.”

“அந்த மாதிரி கிடையாதுன்னா வேறெந்த மாதிரி? ராகவனை முறைச்சுக்கிட்டே திரியுறாரே, ஒரு வேளை அந்த மாதிரியோ?” என்று அவள் புறமாக இலேசாக தலையைச் சாய்த்து ரகசியமாய் கண் சிமிட்டிக் கேட்க, அவன் சில்மிஷ சிமிட்டலில் ஒரு கணம்‌ சிக்கித் தவித்தது மனது. 

மறுகணம் அவன் கேட்டதின் அர்த்தம் புரிய, “உங்கள” என்று பல்லைக் கடித்தாள். 

2 thoughts on “ முக்கனியும் சக்கரையும் 27”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top