முக்கனியும் சக்கரையும் 24

24

“இந்தா கலை! நம்ம முருகன் கோவில் விபூதி. பிள்ளைக்கும், ஆயாவுக்கும் பூசி விடு!” 

தணிகைவேல் வெள்ளைகாகிதத்தில் மடித்து எடுத்துவந்த விபூதியை கலையரசியிடம் நீட்ட, வாங்கி மகளுக்கும், பேத்திக்கும் கந்தனை வேண்டி நெற்றியில் பூசிவிட்டு, கைவைத்து கண் மறைத்து ஊதிவிட்டார். அம்மாவையே கண்ணெடுக்காமல் பார்த்தாள் பழனி. எத்தனை காலமாகிவிட்டது தன்னோடு பேசி. மகள் தன் முகத்தையே‌ ஏக்கமாகப் பார்க்க, அந்தப் பார்வையில் எதைக் கண்டாரோ, அதற்குமேல் தாங்காதென மகளைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டார். பழனியும் அம்மாவை இறுக்கிக் கொண்டாள். அந்த அணைப்பு அவளுக்கும் தேவையாயிருந்தது. இத்தனை நேரம் தாயாக இருந்தவள், இப்பொழுது அன்னை மடி தேடும் கன்றாகிப் போனாள். கலையரசி மகளின் முதுகு வருடி ஆறுதல் படுத்த, இவர்களை இப்படிப் பார்க்க, தண்டபாணி, தணிகைவேல் கண்கள் கூட கலங்குவது போலிருக்க, 

“அம்மா… என்னதிது? அம்மு உங்களைப் பாத்து பயப்படுறா பாருங்க!” தண்டபாணி அம்மாவை அதட்டவும், கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவர்,

“நீ பட்டதெல்லாம் போதும்டீ. நம்ம ஊருக்கே போயிறலாம். எவ என்ன பேசினா எனக்கென்ன? எம் மகளைப் பத்தி எனக்குத் தெரியும். ரெண்டு பேரும் என் கண் முன்னாடி இருந்தாலே போதும். உனக்கு இந்த ஊரே வேண்டாம்!” என்றவருக்கு அதற்கு மேல் பேசமுடியாமல் குரல் தளுதளுத்து, தொண்டை அடைத்தது. முந்தானை எடுத்து கண்ணைத் துடைத்தவர், அதே முந்தானை கொண்டு மகள் முகத்தையும் அழுந்தத் துடைத்துவிட்டு, கலைந்து கிடந்த முடிகளை காதோரம் ஒதுக்கிவிட்டார். 

ஊர் வாய்க்குப்பயந்து தானே மகளோடு பேசாமல் தள்ளி வைத்தார். அவளாகவா தேடிப் போனாள். நாமாகத் தேடிக் கொடுத்தது தானே? இதுவே எந்தப்‌ பிரச்சினையுமில்லாமல் திருமணம் நடந்திருந்தால் கொண்டாடித் தீர்த்திருப்போமே. இதெல்லாம் தெரிந்துதானே அன்று சீனியும், வெளியே சொல்லமுடியாமல், பெண் எனக்குதான் என அத்தனை பிடிவாதமாக நின்றான். அவன்‌ கைவிடத் தயாராக இல்லை. நாம் தான் வரட்டுக் கௌரவம் பார்த்தோம். அவருக்கு கோபமெல்லாம், மகள் மறைத்துவிட்டாளே என்பதுதான். எப்படி சொல்லுவாள் என யோசிக்க மறந்தது அவருடைய தவறுதானே. 

“பிள்ளை வளத்தா, கலையரசி மாதிரி வளக்கணும். ஒரு சொல் எதுத்துப் பேசுதுகளா?” என மற்ற பிள்ளைகளுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டவள், எத்தனை சீரும் சிறப்புமாக வாழ்ந்த ஊரில் இப்படியொரு‌ காரியத்தை செய்து, தன்னை தலை நிமிர முடியாமல் செய்துவிட்டாளே என்ற ஆதங்கம். மகளுடனே பேசாமல் தள்ளி வைக்கச் சொன்னது. 

பெற்ற மனம் பித்துதானே? காலப்போக்கில் மகள் மீதிருந்த கோபத்தைக் குறைத்துக் கொண்டாலும், வீம்பு மட்டும் குறையவில்லை. பேத்தியிடம் ஃபோனில் பேசும் போது சாடைமாடையாக விசாரிப்பதோடு சரி. ஆனால் இன்று மகளும், பேத்தியும் இருந்த நிலை, அவரது வீம்பை அடித்து நொறுக்கியது. மகளைத் தன்னுடனே வைத்திருந்தால் இதெல்லாம் நேர்ந்திருக்காதே என்ற குற்ற உணர்வு. 

பிள்ளைக்கு பெற்றவர்கள்தானே ஆதரவு. அந்த நிலையில் தானும் அவளைத் தள்ளி வைத்ததில், நாதியற்றவள் போல் எத்தனை உடைந்து போயிருப்பாள் என்று நினைக்க நினைக்க, காலம் கடந்த ஞானத்தில் நெஞ்சை அடைத்தது கலையரசிக்கு. எத்தனை‌ அடக்கியும் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது‌. 

சீனி, ஓரமாக நின்று கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளைச் சுற்றி, அம்மா, அப்பா, அண்ணன் என அவளது குடும்பத்தார்‌ அரண் காத்தனர். அமிர்தா அவளது மடியில். பிள்ளை கண்விழித்ததிலிருந்து கையணைவிலேயே தான் வைத்திருக்கிறாள். ஒரு நிமிடம் கூட விட்டுப்பிரியவில்லை என்பதை இப்பொழுது தான் கவனித்தான். சிறகடியில் அடைகாப்பது போல் அணைத்தேதான் வைத்திருக்கிறாள். 

அய்யம்மா, “கலை, அவளை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாரு! மூனு நாளா ஆஸ்பத்திரிலயே இருந்தது. நல்லா சுடுதண்ணி வச்சு, ரெண்டு பேத்துக்கும் தலையோட ஊத்திவிடு. புடிச்சதெல்லாம் இதோட போகட்டும்!” என்றார். 

“நானும் குளிச்சிட்டு வர்றேன் ஆச்சி” என்று கிளம்ப, அப்பொழுதுதான் அவனை‌ கண்ணெடுத்துப் பார்த்தாள். நான்கு நாள் தாடியோடு ஓய்ந்து போயிருந்தான். அன்று அவனை கட்டிக் கொண்டு அழுததை நினைத்துப் பார்த்தவளுக்கு, குடும்பத்தார் அத்தனை பேரிருக்க அவனை ஏன் ஆறுதலுக்குத் தேடினோம் எனத்தான் புரியவில்லை அவளுக்கு. இப்பொழுதும் தன்னைச் சுற்றி இத்தனை பேரிருக்க, அவன் மட்டும் தனித்து நிற்பது போலிருக்க, மனதை என்னவோ செய்தது. அவனுக்கும் அதே தவிப்பும், பதட்டமும் இருந்திருக்கும் தானே. 

“போய்ட்டு வாப்பா! உம்மக… அவ ஆத்தா வயித்துக்குள்ள இருக்கும்போதே, எல்லாரையாம் ஏச்சுட்டு, கண்கட்டு வித்தைகாட்டி வந்தவ. அவளுக்கு ஒன்னும் ஆகாது! குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்!” என்று‌ அய்யம்மா சொல்ல, பழனியை புரியாமல் பார்த்தான். (அந்த ஃப்ளாஷ் பேக் இப்போதைக்கில்லை மக்களே!)

அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தது. மெதுவாக தலையசைத்து உத்தரவு கேட்க, அவளையும் அறியாமல் தலையாட்டி உத்தரவு கொடுத்தாள்.

“சீனிப்பா… சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க!” அவள் வாய்விட்டு சொல்ல முடியாமல் மருகியதை,  பிள்ளை சொல்லி அனுப்பியது. 

மூன்று நாட்கள் மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு இன்றுதான் வீடு திரும்பினர். அங்கிருந்தபடியே மகளையும், பேத்தியையும் ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் கலையரசியின் எண்ணம். மறுபடியும் அந்த ஃப்ளாட்டிற்கு வேண்டாமே என்று பிடிவாதமாக நின்றார். தணிகைவேலுக்கும் அதுதான் சரியெனப்பட்டது.

பொதிகாச்சலம், அங்கே வேண்டாமென்றால், நம் வீட்டிற்குப் போகலாம் என்றார். அதற்கு சீனி மறுத்துவிட்டான். அவள் அங்கு வருவதானால் முறைப்படி வரவேண்டும் என்ற எண்ணம். அதுவுமில்லாமல் இப்பொழுது அவளுக்கும், தன் மகளுக்கும் தேவை ஆதரவான ஒரு சூழல். அது காந்திமதியிடம் கிடைக்காது. 

பிள்ளையைக் காணவில்லை என்றதும் காந்திமதிக்கும், ரஞ்சனிக்கும் பதறத்தான் செய்தது‌. விடிந்ததிலிருந்து செய்திகளிலும், தனியார் சேனல்களிலும் குழந்தைகள் வன்முறைகள் பற்றி இன்று எத்தனை கேள்விப்படுகிறோம். எங்கோ யாருக்கோ என்றாலே மனம் பதறித்துடிக்கும். நம் வீட்டுப் பிள்ளை என்று தெரிந்த பிறகு துடிக்காமல் எப்படியிருக்கும். அவர்களுமே அபார்ட்மென்ட் வந்துவிட்டனர். மருத்துவமனையிலும் கூடவேதான் இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு கிளம்பலாம் என்றதும் தான் அவர்களும் சென்றனர். 

இன்னும் காவல் நிலையத்தில் சில சம்பிரதாயங்கள் முடிக்க வேண்டியிருப்பதால் இப்போதைக்கு ஊருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்றவனை சந்தேகமாகப் பார்த்தான் தண்டபாணி. அதுதான் எல்லாம் முடித்தாயிற்றே! அதுவுமில்லாமல் குழந்தை சம்பந்தப்பட்ட வழக்கு எனும் பொழுது இவர்களுக்கு இனி காவல் நிலையத்தில் வேலை இல்லை என்று தெரியும். ஏன், இதுவரைக்குமே ஆண்கள் மட்டுமே இந்த வழக்கு சம்பந்தமாக காவல்நிலையம் சென்று வந்தனர். அப்படியிருக்க இவர்கள் இங்கிருக்க வேண்டிய அவசியமில்லைதான்‌.‌ அவனது எண்ணம் புரிந்தது தண்டபாணிக்கும்.

தகவலறிந்து கலையரசியும், தணிகைவேலும் வந்துசேரவே, நடு இரவாகிவிட்டது. அவர்கள் வரும் பொழுது பழனி, அமிர்தா இருவருக்குமே சுயநினைவில்லை.

பழனிக்கு அதிர்ச்சி, காய்ச்சல், இன்று‌ முழுவதும் சாப்பிடாதது என புயலடித்து ஓய்ந்தது போல் நினைவின்றி படுக்கையில் துவண்டு கிடந்தாள். 

அமிர்தாவிற்கு போதை மருந்தின் வீரியம். கண் திறக்கவே குறைந்தது எட்டு மணி நேரமெடுக்கும் என்று கூறிவிட்டார் மருத்துவர். உபயோகித்திருப்பது க்ளப் ட்ரக். இது நிறம், வாசனை எதுவுமில்லாதது. பெரும்பாலும் டேட்டிங் ரேப் ட்ரக்காகப் பயன்படுத்தப்படுவது. என்ன நடந்ததென பாதிக்கப்பட்டவர்களுக்கு துளியும் நினைவிருக்காது. எட்டு மணி நேரத்திற்குப் பிறகு உடலில் செலுத்தப்பட்டிருப்பதை, மருத்துவ ஆய்வுகளால் கூட கண்டுபிடிக்க முடியாது. அதற்குள் அமிர்தா கண்டுபிடிக்கப் பட்டதால்தான் அவளுக்கு போதை மருந்து கொடுத்திருப்பதே தெரிய வந்தது.(இதை விவரித்து கூற இயலாது மக்களே! பொதுவாக ஒரு விழிப்புணர்வு அவ்வளவே. இதுக்குள்ள போனா, வீட்டைவிட்டு வெளியே காலெடுத்து வைக்கவே மாட்டோம். பெண் பிள்ளைகளையும் யாரையும் நம்பி வெளியே விடமாட்டோம்.)

ஏற்தனவே காய்ச்சல் மருந்து உட்கொண்டிருந்ததோடு, போதை வஸ்த்துவின் வீரியமும் சேர்ந்து கொண்டதில்,  அமிர்தாவிற்கு மூச்சுத் திணறல் இருந்ததால் அவசரசிகிச்சைப் பிரிவில் இரண்டு நாட்களாக இருக்க வேண்டியதாயிற்று. அவள் வயதிற்கு அது ஓவர் டோஸ். பாதிப்பும் அதிகமாகத்தான் இருந்தது. மூச்சு விடவே சிரமப்பட்ட நிலையில் தான் மருத்துவமனை கொண்டுவந்ததே. இரண்டாம் நாள் இரவுதான் நார்மல் வாடிற்கே மாற்றப்பட்டாள்.

அவள் கண் விழிக்கும்வரை எந்த முடிவிற்கும் வரவில்லை காவல் துறை. உடனே வெளியூர் சென்ற ராகவனா? படுக்கையறையில் பிள்ளை இருந்தது தெரியாமல், அல்லது மறைத்து, வெளியே தேடிய பழனியா என சந்தேகத்தில்தான் இருந்தது. பிள்ளை கண்விழித்து ஏதாவது சொன்னால்தான் ஒரு முடிவிற்கு வரமுடியும்! 

சந்தேகத்தின் பெயரில் செங்கல்பட்டு மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட ராகவனும் சென்னை‌ கொண்டுவரப்பட்டான். அவனுக்கும் அமிர்தா காணவில்லை என்பது பேரதிர்ச்சியே. ஊருக்கு வரும் பொழுது அவன்தானே இறுதியாக அவளைப் பார்த்தது. 

கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு, இவன் பாத்ரூமிற்குள் செல்ல, பூனைபாதம் வைத்து மெல்ல நடந்து வந்தவள், சத்தமில்லாமல் ஃப்ரிட்ஜைத் திறந்தாள். உள்ளிருந்த சாக்லேட்டை எடுத்துத் திரும்பியவள், தன் முன் நிற்பவனைப் பார்த்து விலுக்கெனப் பயந்தவள், சட்டென கையை பின்னால் ஒழித்தாள்.

“ஏய்… திருட்டுப் பூனை. தெரியாம சாக்லேட் எடுக்குறியா?” என்றான் மிரட்டும் தொனியில். 

“இல்லையே!” என்றாள், ஒரு கையைப் பின்னால் ஒழித்து, ஒரு கையை மட்டும் முன்னால் ஆட்டிக்காட்டி. 

மகள் வரும்பொழுது கொடுக்கவென சாக்லேட், பிஸ்கட், ஜிப்ஸ் என கடையிலிருந்து எடுத்துவந்து வைத்திருப்பான். அதே வழமையில் இன்றும் வந்ததும் ஃப்ரிட்ஜைத் திறந்து சாக்லேட் எடுத்தாள். ஃபீவர் சரியாகும் வரைக்கும் நோ சாக்லேட் என பழனி சொல்லியிருந்ததால் இந்தத் திருட்டுத்தனம்.

“கேடீ… பொய் வேற சொல்றியா? அம்மாட்ட சொல்லவா?” என்று கேட்க,  

“அய்யோ… அங்கிள் வேணாம்! அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. நான் வச்சுர்றேன்! எனக்கு சாக்லேட் வேண்டாம். உள்ளே இருக்க டாய் தான் வேணும்!” என்று முகத்தை தொங்கப்‌ போட்டுக் கொண்டு மீண்டும் ஃப்ரிட்ஜைத்‌ திறந்து வைக்கப்போக, சட்டென வாடிய பிள்ளை முகம் இவனை என்னவோ செய்தது. 

“அம்முவுக்கு, ஃபீவர் சரியாயிருச்சா?” என்றான். 

“ஐ’அம் ஓகே அங்கிள். சீனிப்பாதான் டானிக் கொடுத்தாங்களே!”

“அப்போ கையில வச்சுக்கோ, இப்ப சாப்பிடக்கூடாது!” என்றதும், சந்தோஷமாக தலையாட்டியவள்,

“சீனிப்பா எங்கே?”  எனக் கேட்டுக்கொண்டே பார்வையைச் சுழற்றினாள். 

“உங்க சீனிப்பா ‌இங்க இல்லையே!” என்றவனை நம்பவில்லை.

இவள் இங்கு வரும் பொழுதெல்லாம் ராகவன், உங்க சீனிப்பா இங்கில்லை என்று விளையாட்டாகச் சொல்லி ஏமாற்றுவது வழக்கம்தான். அதே போல் இன்றும் சொல்ல, 

“வண்டியில வந்ததைப் பாத்தேன். சீட் பண்ணாதீங்க!” என்றவாறே படுக்கை அறை திறந்து பார்த்தாள்.

“வண்டியில நான்தான் அம்மு வந்தேன்” என்றவனை நம்பாமல், பாத்ரூம், கிட்சன், மற்றும் பால்கனி என ஒவ்வொரு இடமாக தேடிப் பார்க்க, சிரித்தவாறே கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தான். 

அன்று, அமிர்தா என்னுடைய மகள் என்று மட்டும்தான் சீனி சொன்னான். கல்யாணப் பத்திரிகை காட்டியவன் திருமணம் நின்றுவிட்டதாகக் கூற, அதற்கு மேல் இவனும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவனும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பது அநாகரீகம் என ராகவனும் தன் எல்லையறிந்து நின்று கொண்டான். 

இன்று சீனி விடுப்பு எடுத்ததால், அவனது வண்டியை ராகவன் எடுத்துச் சென்றிருந்தான். ஹெல்மெட் போட்டிருந்ததால் வந்தது யாரெனத் தெரியவில்லை. சீனி வந்துவிட்டதாக எண்ணித்தான் ஓடிவந்தாள். 

“அம்மு, ஜிப்ஸ் எடுத்துக்கோ. ஃபீவர் சரியானதும் சாக்லேட் எடுத்துக்கலாம்!” என்றவன் அவனே ஜிப்ஸ் பாக்கெட் எடுத்து, சிறிய‌ கிண்ணத்தில் போட்டுக் கொடுத்தான். 

அப்பொழுது அவன் கைபேசி அழைக்க, “உங்கூட பேசிக்கிட்டே சார்ஜ்ல போட மறந்துட்டேன் பாரு!” என்றவாறே அழைப்பை ஏற்க, எதிர்முனையில் சொல்லப்பட்ட தகவலில்,

“எப்போக்கா!” எனக் கேட்டவன் குரலில் பதட்டம். 

“உடனே‌ கிளம்பி வர்றேன். நீ பயப்படாதே!” என அக்காவுக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு அவசரமாக ஊருக்குக் கிளம்பத் தயாரானான். 

“அம்மு… பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம். நான் ஊருக்குப் போகணும். நீ உங்க வீட்டுக்குப் போறியா?” என்று‌ கேட்க,‌

“அவங்களுக்கும் ஃபீவரா?” என்றாள்.

“ஆமா… நீ போறியா? நான் ‌வந்து விடவா?” என்றான் மீண்டும்.‌

“நானே போயிடுவேன். நீங்க போய், பாட்டிக்கு டேப்லட் கொடுங்க!” என்று சொல்ல, 

“இரு… பேக் எடுத்துட்டு வர்றேன்” என்றவன், பள்ளியிலிருந்து வந்தவாக்கிலேயே உடை மாற்றாமலிருக்க, அவசரமாக பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டிவிட்டு, அவளையும் அழைத்துக் கொண்டுதான்  கீழிறங்கினான். 

“பாத்து போ அம்மு!” என்று அனுப்ப,

“பை‌ அங்கிள்!” என்றவள் கை காட்ட, அவனும் பை சொல்லிவிட்டு, கேட்டை நோக்கிச் சென்றான்.

அம்மா மயக்கம் போட்டு விழுந்ததாகவும், மருத்துவமனையில் சேர்த்திருப்பதாவும் அக்காவிடமிருந்து வந்த தகவல். ஃபோனை சார்ஜ் போட நேரமில்லை. அப்பொழுதே கைபேசி மூர்ச்சையாகும் கண்டிஷனில்தான் இருந்தது. அம்மாவைப் பார்க்கப் போகும் பதட்டம். அங்கு போய் கால் பண்ணி, சீனியிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டான். 

*****

“என்ன‌ சார்… இப்படி சொல்றீங்க!”

“வேற எப்படிச் சொல்லணும்?”

“நடந்தது என்னானு எல்லாருக்கும் தெரியும். நீங்க வெறும் நகை திருட்டு கேஸ் மட்டும் போடச் சொல்றீங்க. சைல்ட் அப்யூஸ் கேஸ் சார். போதை மருந்து கேஸ் வேற.” உதவி ஆய்வாளர் சொன்னதைக் கேட்ட பொதிகாச்சலம்,

“இதுக்குன்னு எங்க வீட்டுப் பிள்ளைகள கோர்ட்டு, கேஸ்னு அலைக்கழிக்க முடியாது சார்!” என்றார்.

“இப்படியே எல்லாரும் சொன்னா எப்படி சார்? பொம்பளப்பிள்ள விவகாரம் வெளியே தெரியக்கூடாதுனே மூடி மறைச்சா, தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவிக்க வேண்டாமா?”

“அதான் தப்பே நடக்கலையே?”

“கடவுள்‌ புண்ணியத்துல தப்பு நடக்கல. ஆனா, தண்டனை வாங்கிக் கொடுத்தா அடுத்து இது மாதிரி பண்றவங்களுக்கு பயம் வரும்ல?”

“இதுவரை இந்த மாதிரி தப்பு பண்ணவங்க யாருக்குமே‌ நீங்க தண்டனை வாங்கிக் கொடுத்ததில்லையா?” என்றான் சீனி. தண்டபாணி, சீனி, பொதிகாச்சலம் மற்றும் பார்த்தசாரதியோடு நால்வரும்தான் காவல்‌ நிலையம் வந்திருந்தனர்.‌

“ஏன் சார் இல்ல? எத்தனையோ பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கோமே!”

“அப்போ நீங்க சொல்றதை வச்சுப்பாத்தா, இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்கவே கூடாதே? இன்னும் அதிகமாகிட்டேதானே இருக்கு?” என்று‌ சீனி‌ கேட்ட கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. 

“ஆனா, இந்த மாதிரி கேஸ் எங்கேயும் பதிவாகல. இது வெறும் டொமஸ்ட்டிக் வயலன்ஸ்ல மட்டும்தான் வரும். இதுவே குற்றவாளி ஒரு ஆணா இருந்தா வேற மாதிரி கேஸ் போகும்‌. அதுலயும் ஆயிரத்தெட்டு ஓட்டை!” சலிப்பாகச் சொன்னான்‌ மீண்டும். 

நிர்பயா கொலை வழக்கில் (டில்லி. டிச-16) ஆறு குற்றவாளிகளில் ஒருவனுக்கு, பதினேழு வயது ஆறு மாதம் என்பதற்காகவே மைனர் எனப் பதியப்பெற்று வெறும் மூன்று‌ ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. அதன்‌ பிறகு அவன் விடுதலை செய்யப்பட்டான். அதற்கு எழுந்த எதிர்ப்பில்‌தான் தண்டனைக்குரிய வயதாக பதினாறு என குறைக்கப்பட்டு சட்ட திருத்தம் கொண்டுவந்தது இந்திய அரசாங்கம். 

“சார், நகைக்காக பிள்ளையைக் கடத்தினதா மட்டும் கேஸ் ஃபைல் பண்ணுங்க!” என்றார் பொதிகாச்சலம். 

“திருட்டுக் கேஸுன்னா அந்த லேடீ வெளியே வர்றது ரொம்ப ஈஸி. காசுள்ள பார்ட்டி. ஈஸியா பெயில் வாங்கிருவாங்க!” 

“நீங்களே சொல்றீங்க. வெளியே வர்றது ஈஸின்னு. அப்யூஸ் கேஸ் போட்டா மட்டும் வெளியே வர மாட்டாங்களா?” என்று சீனி கேட்க, காவலதிகாரி மௌனம் காத்தார். 

இவர்கள்‌ சொல்வதும் உண்மைதான். சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகளை வைத்துக் கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும் என வசனம் பேசி என்ன பிரயோஜனம். தேவையில்லாமல் சிறு‌ பிள்ளைக்குதான் மன‌ உளைச்சல். அவரும் வெறும்‌‌ நகை திருட்டு வழக்கு என்று மட்டுமே பதிந்தார். அதனால் இவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்குமே இனி அங்கு வேலையில்லை. 

காவல் நிலையம் விட்டு வெளியே வர, “அந்த லேடிய அப்படியே விட்டது நல்லா இல்ல தண்டபாணி! சீக்கிரம் அந்தம்மா புருஷன், ஜாமீன் வாங்கிக் கொடுத்துருவார்!” இவர்களிடம் நேரிடையாகச் சொல்ல முடியாமல் தண்டபாணியிடம் சொல்லி அலுத்துக்கொள்ள,

“அதுதான் தம்பி எனக்கும் வேணும்! வெளியே வந்தா ரோட்டுல ஒரு கார், வண்டி கூடவா போகாது? என் குலசாமியத் தொட்ட பொம்பளைய, அந்த சாமியே பாத்துக்கும். நீங்க வாங்க!” என்று பொதிகாச்சலம் முன்னால் நடக்க,

“இவரு எந்தக் காலத்துலடா‌ இருக்காரு? சாமி பாத்துக்குமாம்!” தண்டனை வாங்கிக் கொடுக்காத ஆத்திரம் அவனுக்கு.

“பார்த்தி! அவர் சாமின்னு சொன்னதே ஆசாமியத்தான். வா, போகலாம்! இந்த மாதிரி பொம்பளையெல்லாம் இருக்கிறதே வேஸ்ட்தான். அந்தம்மா புருஷனுக்கு, இவர் புண்ணியத்துல மூனாவது கல்யாண யோகம் இருக்கு போல!” என்று தண்டபாணி சொல்லியதைக் கேட்டு சீனி புன்னகைக்க, பார்த்தசாரதிக்கு புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. 

24.2

“எல்லாம் கலிகாலம்டீ ம்மா. ஆம்பளப் பயலுகளத்தான் நம்ப முடியலைன்னா, பொம்பளைகளையும் நம்ப முடியாது போலயே!” 

கலையரசி பேத்திக்கும், மகளுக்கும் தலைக்கு ஊத்திவிட்டு சாம்பிராணி போட்டுத் தலையை உலர்த்திக் கொண்டிருக்க, அய்யம்மா அலுத்துக் கொண்டார். 

கலையரசி, “இனிமே அதைப்பத்தி பேசாதம்மா!” என்றார்‌ மகளின் முகத்தில் கலவரத்தைப் பார்த்து. 

இப்பொழுதும் அந்தக் காட்சி கண் முன் நிழலாடியது பழனிக்கு. 

பிள்ளையைக் காணாமல் ஆளுக்கொரு பக்கமாகத் தேட, அவனா? இவனா? என பார்த்தவர்கள் மீதெல்லாம் சந்தேகப் பார்வை விழ,‌ காவலாளி பெற்றவளையே சந்தேகக் கண் கொண்டு பார்க்க,‌ ராகவனை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வந்துவிட்டதாக தகவல் வந்தது. 

அதற்குள் பார்த்தசாரதியும் வந்துவிட்டான். அய்யம்மா, வேலாயுதத்தை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு மூவரும்‌ காவல் நிலையம் கிளம்பினர். கைபேசி எடுக்க தனதறைக்கு வந்தாள்‌ பழனி. 

கட்டிலில் கிடந்த தன் கைபேசியை எடுத்துக் கொண்டு திரும்பியவளுக்கு ஏதோ விரும்பத்தாகாதொரு வாடை, மூக்கை நெருட நின்று கவனித்தாள். பாத்ரூம் கதவு, சரியாகச் சாற்றவில்லையோ, அமிர்தா உபயோகித்துவிட்டு ஃப்ளஷ் பண்ணாமல் வந்துவிட்டாளோ என யோசித்தாள். அப்படி வருபவள் இல்லையே… கதவு சாற்றியிருக்க வாடை வரவும் வாய்ப்பில்லை. 

ஒருவேளை காய்ச்சல் மருந்தின் வீரியத்தில், தூக்கத்தில் படுக்கையை நனைத்திருக்கிறாளோ என்ற எண்ணத்தில் படுக்கையை ஆராய்ந்தாள். அங்கும் எந்த ஈரமும் இல்லை. அறையைச் சுற்றி வந்தவள் பார்வை ஓரிடத்தில் நிலைத்தது. மஞ்சள் கலரில், ஈரம் தரையில் பரவியிருந்தது. பார்வையை உயர்த்த மூடிய கபோர்டில் இருந்துதான் ஈரம் வழிந்து பரவியிருந்தது. பார்த்தவளுக்குள் கலவரம் மூண்டது. மனம் படபடத்து, கால்கள் துவண்டது. காய்ச்சல் மருந்து கொடுப்பதால் அமிர்தா, சீறுநீர் மஞ்சளாகப் போவது தெரியும். 

“அம்மாச்சீ!” என்று ஓங்கி அழைத்தவள்‌ குரலில் மிதமிஞ்சிய பதட்டம். 

இவள் வரட்டும் என வெளியே காத்திருந்தவன், குரலில் தெரிந்த பேதத்தில் அவசரமாக உள்ளே வந்தான். அவள் பார்வை வெறித்து நின்ற திசைக்கு சீனியின் பார்வையும் சென்றது. முதலில் புரியவில்லை என்றாலும், மறுகணமே என்னவென்று மூளைக்கு உரைக்க, பதட்டத்தை மறைத்துக் கொண்டு வேகமாக கபோர்டைத் திறக்க, கதவோடு சேர்ந்து மயங்கிய நிலையில் சாய்ந்து விழுந்தாள் அமிர்தா.

அவசரமாக பிள்ளையை வெளியே தூக்க, சுத்தமாக நினைவில்லாமல் தலை தொங்கிப்போயிற்று. சிறு குழந்தையாய் இருந்த பொழுது கூட படுக்கையில் ஈரம் செய்யாதவள், நிதானமில்லாமல் போயிருக்கிறாள் என்றால், என்னவோ ஏதோ என மனம் கற்பனை‌‌ செய்ய, மயங்கி தொய்ந்து விழுந்தவளையும் மறுகையில் தாங்கிப் பிடித்தான் சீனி. 

காவலாளியை அழைத்துவிட்டான் பார்த்தசாரதி. அவர் வந்து ஆராய்ந்து பார்த்ததில், கபோர்டிற்குள் முட்டை வடிவ சாக்லேட் கவர், காலியாகக் கிடந்தது‌. 

*****

அமிர்தா கண் விழித்ததும், குடும்பத்தார் மொத்தமும் தன்னைச் சுற்றி நின்றிருப்தைப் பார்த்ததில், இருந்த மருத்துவமனை சூழலும் பிள்ளையை‌  மிரட்டியது. 

கையில் ட்ரிப்ஸ் ஏறுவதைப் பார்த்து இன்னும் கண்களில் மிரட்சி அதிகரிக்க, “ஒன்னுமில்ல அம்மு. உனக்கு ஃபீவர் அதிகமாயிருச்சு. அதனாலதான் ஹாஸ்பிடல் வந்திருக்கோம்!” என்றாள் பழனி‌ பிள்ளையை ஆதரவாக அணைத்து. 

“சாக்லேட் சாப்பிட்டதால ஃபீவர் அதிகமாயிருச்சா? இனிமே சாப்பிட மாட்டேன்மா, ப்ராமிஸ்!” என்றவளை கட்டிக் கொண்டு கண்கலங்கினாள் பழனி. 

அம்மாவின் அழுகை பார்த்து, “டோன்ட் க்ரை மம்மி. ஐ’அம்‌ ஆல்ரைட்” என்று ஆறுதல் சொன்ன மகளை இன்னுமே இறுக்கிக் கட்டிக் கொண்டு வாய்விட்டு அழுதாள். இரண்டு நாட்களாக மகளின் பேச்சைக் கேட்காத தவிப்பு அழுகையாக வெளிப்பட்டது பழனிக்கு‌.

“கலை அம்மாச்சி உன்னைத் திட்டினாங்களா? தண்டம் மாமாகிட்ட சொல்லிறலாம்!” அம்மாவின் காதோரம் ரகசியமாய்‌ச் சொன்னதில், கலையரசியும் ஒரு பக்கம் அழ, காவலாளி கண் காட்டியதில் அனைவரையும் வெளியேற்றினர். பழனியும், சீனியும் மட்டுமே அவளுடன்.‌ தண்டபாணி ஒரு பக்கம் நின்றான். 

இன்னுமே வார்த்தைகள்‌ குழறியது அமிர்தாவிற்கு. மணியடித்தாற் போல்‌ கணீரெனப் பேசும் மகளின்‌ பேச்சு குழறியதில், தொண்டையடைத்தது அருகில் நின்று பார்த்தவனுக்கு. கண்கள் ஈரம் கட்டியது. 

தொண்டையைச் செறுமி தன்னைச் சரிசெய்து கொண்டவன், “அம்மு! உனக்கு யார் சாக்லேட்‌ கொடுத்தாங்க?” என்றான் மெதுவாக.

“ராகவன் அங்கிள்தான் கொடுத்தாங்க!” என்றவள், 

“இல்ல… இல்ல… நானாத்தான் ஃப்ரிட்ஜ்லருந்து எடுத்தேன் சீனிப்பா. அங்கிள், கையில வச்சுக்கோ. ஃபீவர் சரியானதும் சாப்பிடச் சொன்னாங்க!” என்றாள். 

“அங்கிள் வேற என்ன அம்மு சொன்னாங்க?” என்று கேட்க அவனுக்கே தர்மசங்கடமாக இருந்தது. 

உடம்பு சரியில்லாத அம்மாவைப் பார்க்கப்  போனவனை‌, கைது செய்து வைத்திருப்பதில் அவனுக்கும் சங்கடம்தான். ஆனால், நடந்தது என்னவெனத் தெரியாத பட்சத்தில் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. காவலாளிதான் பழனியையும், சீனியையுமே பிள்ளையிடம்‌ பேச்சுக் கொடுத்து கேள்விகளை கேட்கச் சொன்னார். அவரும் சாதாரண உடையில் அங்குதான் நின்றிருந்தார். 

“அங்கிளோட அம்மாவுக்கு ஃபீவர்னு ஊருக்கு போறதா சொன்னாங்க. என்னை வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க!” 

“ம்ம்ம்… அப்பறம் என்ன நடந்தது?” மகளிடம் கதை கேட்கும்‌ பாவனையில் அவனும் கேட்க, அமிர்தாவும் சுவாரஸ்யமாக கதை சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் அதைக் கேட்டவர்களுக்குதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 

ராகவன் இவளை போகச் சொல்லிவிட்டு அவசரமாக வெளியே செல்ல, 

எதிர் பிளாக்கிற்கு வந்தவளும், படியில் ஏறப்‌போக, “அம்மு வா! லிஃப்ட்டுல போலாம்!” என அழைத்தது ஒரு குரல். 

“நோ ஆன்ட்டி! அம்மா தனியா லிஃப்ட்ல வரக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க!” என்றாள்.

“அப்போ வா! நானும் உன்கூட வர்றேன்” என்றவள் அமிர்தாவுடன் படியேறினாள். 

“என்ன அம்மு கையில?” பிள்ளையிடம் பேச்சுக் கொடுத்தாள். 

“சாக்லேட் ஆன்ட்டி. உள்ளே‌ குட்டியா டாய் இருக்கும்!” என்றாள்‌ கண்களில் ஆவல் மின்ன.

“அப்படியா எனக்கும் காமிக்கிறியா? நான் பாத்ததே இல்ல!” பேசிக்கொண்டு வீட்டின் முன் வந்துவிட்டனர் இருவரும். 

“ஓகே… ஆன்ட்டி!” என்றவள் சாக்லேட்டைப்‌ பிரிக்க, அது கொஞ்சம் அவளுக்கு கடினமாக இருக்க, “ஆன்ட்டி‌ ஹெல்ப் பண்ணவா?” என்றாள்.‌ 

“ம்ம்ம்…” என்று‌ அவளிடம் நீட்ட, கதவைத் திறந்து கொண்டே,

“உள்ளே வா அம்மு! என்ன டாய் உள்ள‌ இருக்குன்னு பாக்கலாம்” என்றழைக்க, அமிர்தாவும்‌ உள்ளே‌ சென்றுவிட்டாள். பிரிப்பது போல் பாவ்லா செய்தவள், “இரு அம்மு… சிசர் எடுத்து கட் பண்ணலாம். பிரிக்க கஷ்ட்டமா இருக்கு!” என்றபடி, கிட்சன்‌ சென்று பிரித்து எடுத்து வந்தவள் அதில் எதையோ கலந்து, அதிலிருந்த குட்டி ஸ்பூனால் கலக்கிய படியே வந்து அவளிடம் நீட்டினாள். 

“டாய் எங்கே?” என்றாள்‌ ஆர்வமாக. 

“அச்சோ… ஆன்ட்டி‌ மறந்து கிட்சன்லயே வச்சுட்டு வந்துட்டேன் பாரு. நீ சாக்லேட் சாப்பிடு. நான் எடுத்துட்டு வர்றேன்!” என்று‌ சொல்ல, 

“ம்கூம்… எனக்கு ஃபீவர். ஃப்ருட்டி திட்டும். உங்களுக்கு டாய் காமிக்கதான் ஓபன் பண்ணச் சொன்னேன். எனக்கு டாய் வேணும்!” என அடமாகக் கேட்க,‌ எடுக்க உள்ளே‌ சென்றாள். 

அதற்குள் அவளுக்கு பழனி, அம்மாச்சியைத் திட்டிக் கொண்டே, பிள்ளையைத் தேடிச் செல்வது கேட்டது. அம்மாவிடம் சொல்லாமல் சீனி வீட்டிற்குப் போனது நினைவிற்கு வர, பயம் பிடித்துக் கொண்டது அமிர்தாவிற்கு. 

அவள் கிட்சனிலிருந்து வெளியே வரும் முன், வெளியே ஓடிவந்து, இவர்கள் வீட்டிற்குள்‌ நுழைந்தவள், அம்மாவிற்குப் பயந்து கபோர்டிற்குள் ஏறி‌, அடித்தட்டில் கால் மடக்கி, அமர்ந்து கொண்டாள். சாக்லேட் பார்த்தால் திட்டுவாளே என மொத்தத்தையும் காலி செய்துவிட்டாள். பழனி‌ எதிர்‌ ப்ளாக்கிற்கு சென்று அங்கு தேடிவிட்டு, மீண்டும் இங்கு வருவதற்குள் போதையில் முற்றிலுமாக மயங்கிவிட்டது பிள்ளை. 

அவள் கோர்வையாகக் கதை போல் சொல்லிக் கொண்டே வர, கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும், ஒவ்வொரு நொடியும் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டே போனது. மகளை இறுக்கி அணைத்துக் கொண்டாள். எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தெய்வாதீனமாக மகள் தப்பியிருக்கிறாள் என்று‌ நினைத்துப்‌ பார்க்கவே மனம் அஞ்சி நடுங்கியது.

அதனால்தான் அங்கு குடி வந்து புதிதில், பிள்ளை உள்ளே சென்றால் கூட,‌ அவரது மகன் சாக்லேட் கொடுத்து இவளை‌ வெளியே போகச் சொல்லிவிடுவான். அதற்கே அவள் மகனை‌ முறைத்துப் பார்ப்பாள். 

*****

பிள்ளையின் வாக்கு மூலத்தை வைத்து, எதிர் வீட்டுப் பெண்ணை கைது செய்து விசாரித்தது. அவள் ஒரு‌ ஹோமோசெக்ஷுவல் மற்றும் பெடோஃபைல் (Pedophile–“child sexual abuser”) என்பதும், உடனிருந்தது அவளது மகன் இல்லை, அவனது அப்பாவிற்கு இவள்‌ இரண்டாம் தாரமென்பதும் தெரிய வந்தது. பெடோஃபைல் என்றதும் அது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 

இது வெளியே தெரிந்தால் அசிங்கமென கணவரும் இவள்‌ எது செய்தாலும் கண்டு கொள்வதில்லை.‌ போதைப் பழக்கம் வேறு. ஏற்கனவே இதே மாதிரி முன்பு இருந்த குடியிருப்பில் பிரச்சினை ஆனதில்தான் வீட்டை மாற்றி இங்கு குடிவந்தனர். விபரம்‌ தெரிந்த பிறகு மகனுக்கும் இது சாடைமாடையாகத் தெரிய வந்தது. அதனாலே அவளிருந்தால் பெரும்பாலும் இவன் வீட்டில் இருக்கமாட்டான்.

பிள்ளையைக் காணவில்லை, அதுவும் பெண் பிள்ளை என்றதும், சந்தேகம் வேறு விதமாகத்தான் திரும்பியது அனைவருக்கும்.‌ ஆனால் இது யாருமே எதிர்பாராதது. 

ஆண்களால் மட்டுமே குழந்தைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி பாதிப்புக்குள்ளாவதாக நாமாக எண்ணிக் கொள்கிறோம். பெண்களாலும் பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும்‌ பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அது வெளியே தெரிவதில்லை. தெரிந்தாலும் அது மூடி மறைக்கப்படுகிறதே ஒழிய, ஆண் குற்றவாளிகள் அளவிற்கு பகிரங்கமாக வழக்குப் பதிந்து தண்டனை வழங்கப்படுவதில்லை. 

நாமும் பாதிக்கப்படுவது பெண் குழந்தையாக இருந்து, குற்றவாளி ஆணாக இருந்தாலும் மட்டுமே பெரிதாகப் பார்க்கிறோம். பெண் குழந்தைகள் அளவிற்கு ஆண் குழந்தைதளும் உடலாலும், மனதாலும் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள். (எத்தனை பேர் அமிர்தாவை தவறாக அணுக முற்பட்டது பெண் எனத் தெரிந்ததும்‌ அவ்ளோதானா என ஆசுவாசப்பட்டது.) 

ஏனெனில் பாதிப்பு எனில் அது ஆணால் நிகழ்த்தப்பட்டால் மட்டுமே அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் நமக்குள்ளே வளர்ந்துவிட்டது.  குற்றவாளி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பாதிப்புக்குள்ளாவது ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாத இருந்தாலும் மனதளவில் பாதிப்பு என்பது‌ சரிசமமாகத்தான் இருக்கும். பெண் குழந்தை வெளியே சொல்லாது. ஆண் குழந்தை குத்துங்க எசமான் குத்துங்கன்னு சமூகத்துக்கு எதிராகத் திரும்ப வாய்ப்புகள் அதிகம். எனவே குழந்தைகளுக்கு பேட் டச், குட் டச் என்பதை ஆண்களை‌ முன்னிருத்தியே சொல்லிக்கொடுக்காமல் யாராக இருந்தாலும் என்று பொதுவில் சொல்லிக் கொடுப்பது அவசியம். 

*****

“அங்கிள்! பாட்டிக்கு ஃபீவர் சரியாகிடுச்சா?” என்று நலம் விசாரித்த பிள்ளையை வாஞ்சையாகப் பார்த்தான் ராகவன். வர மறுத்தவனை சீனிதான் வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தான். 

இரண்டு நாட்களாக அவனுக்கும் எத்தனை அவமானம். நொந்து நூலாகிப் போனான். உடம்பு சிரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த அம்மாவைக் கூட கவனிக்க முடியவில்லை என்பதைக் காட்டிலும், அக்கா முன்னும், அம்மா முன்னும் கைது செய்ததே பெருத்த அவமானமாகப் போயிற்று. பெரிதாக எந்த விபரமும் தெரியாதவர்கள்.‌ இந்நேரம் ஊர் முழுக்க செய்தி பரவியிருக்கும். அக்காவை பெண் பார்க்க வருவதாக இருந்தவர்களும், தகவல் கேள்விப்பட்டு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். 

சீனிதான் அவர்களுக்கு ஃபோன்‌ செய்து, ராகவனை தான்‌ பார்த்துக் கொள்வதாக நம்பிக்கை கொடுத்தான். அது போலவே ராகவன் மீது, சந்தேகத்தின் பெயரில் கூட எந்த வழக்கும் பதியவிடாமல் பார்த்துக் கொண்டான். 

பள்ளி நிர்வாகம்தான் அவனை வேலை விட்டு நீக்கியது. உண்மையோ பொய்யோ, சந்தேகம் என வந்த பிறகு பள்ளியில் வைத்துக் கொள்ள முடியாதென சொல்விவிட்டது. அந்த மடம் இல்லைனா சந்த மடம்! அங்க போட்ட கணக்கு வழக்க, இங்க போடு என, பார்ட் டைமாக வேலை பார்த்தவனை நிரந்தரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் சீனி. 

*****

“அப்படியெல்லாம் உள்ளே விடமுடியாதும்மா!” என்று‌ சொல்ல இரண்டு பெண்களும் கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.

“செக்யூரிட்டி, யாரது?” என்றான் இவர்கள்‌ முழித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு பின்னால் வந்தவன். நடுத்தர வயதில் ஒருவரும், இளம்‌பெண் ஒருத்தியும் நின்றிருந்தனர். 

“ராகவனைப்‌ பாக்க வந்ததா சொல்றாங்க சார். ஐடி‌ கார்ட் இல்ல. நம்ம பாப்பா விவகாரத்துக்கு பின்னாடி ரொம்ப ஸ்டிரிக்டா இருக்கச் சொல்லியிருக்காங்க சார்!” என்றார். செக்யூரிட்டி சொல்லியதை வைத்தே, அவனது அம்மாவும், அக்காவும் எனக் கணித்தவன், 

உடனே‌ ஃபோனை எடுத்து ராகவனுக்கு அழைத்தான். அவன் அழைப்பை‌ ஏற்க, “உனக்கு அறிவிருக்கா! அம்மாவையும் அக்காவையும் வரச் சொன்னா, அழச்சுட்டு வந்து விட்டுப் போகமாட்டியா?” என்று‌ ஏகத்திற்கும் எகிற, 

“இதோ வர்றேன் சார்! நான் இங்கதான் வரச் சொன்னேன். அங்க வந்துட்டாங்களா?” என்று அழைப்பைத் துண்டித்தவன், எதிர் பக்கமிருந்த சூப்பர்‌ மார்க்கெட்டில் இருந்து அவசரமாக வந்தான் ராகவன். 

அவன்‌‌ வந்ததும் இருவரையும் உள்ளே‌ அழைத்து வந்தான். 

“வீட்ல விட்டுட்டுப் போயி வேலையைப் பாரு. அவன் கூட வந்து சேர்றவிங்களும் அவனை மாதிரித்தான் இருக்கானுங்க. இர்ரெஸ்பான்சிபல் இடியட்ஸ்” என்று‌ திட்டிக் கொண்டே செல்ல,‌

“என்னவாம் அவருக்கு!” என்று கேட்டுக் கொண்டே பின்னால் வண்டியில் வந்து நின்றான் சீனி.

திரும்பிப் பார்த்தவன், “பாஸ்! உங்களத் திட்டறதுன்னா நேரிடையாத் திட்ட வேண்டியதுதானே? அதென்ன, சாடையா என்னைத் திட்டுற மாதிரி திட்டுறது? இர்ரெஸ்பான்சிபில் இடியட்சாம் பாஸ்!” என்று அப்பாவி போல் சொல்ல, சீனி, வாய்விட்டு சிரித்தான். 

“வாங்கம்மா! வாம்மா! உடம்பு பரவாயில்லையா” இருவரையும் வரவேற்று நலம் விசாரித்தான்.

“நல்லாருக்குப்பா. பாப்பா நல்லாருக்காளா?” பதிலுக்கு அவரும் விசாரிக்க, 

“நல்லாருக்கும்மா!” என்றவன், ராகவனிடம் அழைத்து வரச் சொல்லிவிட்டு வண்டியில் பார்க்கிங் ஏரியா சென்றான். 

“யாரு ராகவா அது?” என்றார்‌ ராகவனின் அம்மா இவனுக்கு முன்னால் திட்டிச் சென்றவனைப் பார்தது.

“நம்ம சீனி சாரோட மச்சான்‌மா‌! ரெண்டு பேரும் இப்படித்தான் அடிக்கடி கொஞ்சிப்பாங்க!” என்று சொல்ல, இரு பெண்கள் முகத்திலும் புன்னகை.‌ 

*****

(இங்கு எதிர் வீட்டுப் பெண் பற்றிய விரிவான விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை மக்களே! சீன் பை சீன் அதை விவரிக்கும் அளவிற்கு நமக்கு நெஞ்சுரம் கிடையாது. மேலோட்டமாக இப்படியும் நடக்குது. ஆனால் நம் நாட்டில் அது வெளியே தெரிவதில்லை. வெளிநாடுகளில் வழக்கு பதியப்படுகிறது. குடும்ப வன்முறைச் சட்டங்கள் கூட பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறதே ஒழிய, ஆண்கள் எனும் பொழுது சட்டம் தளர்ந்து விடுகிறது.)

1 thought on “முக்கனியும் சக்கரையும் 24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top