முக்கனியும் சக்கரையும் 22

22

“அவ இங்க வந்து எம்புட்டு நாளாச்சாம்?” 

யாரோ எவரையோ விசாரிப்பது போல் விசாரித்த காந்திமதி பேச்சில் இளக்காரம் எள்ளி நகையாடியது. கடை திறப்பு விழாவின் போது அமிர்தாவைப் பார்த்தவருக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லாமலே புரிந்து போயிற்று யார்‌ என்று. கூடவே அய்யம்மாவும், வேலாயுதமும். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

“பிள்ளைய மட்டும் அனுப்பிட்டு மகாராணி‌ வரலபோல. எந்த மூஞ்சிய வச்சுட்டு வரமுடியும்? யாருன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவா?” குதர்க்கமாகக் கேட்டவரிடம்,

“யாருன்னு பதில் சொல்லவேண்டியது அந்தப் பிள்ளை இல்ல. உம் மகன். ஒரு வேளை சில பேர் மூஞ்சில முழிக்க வேண்டாம்னு கூட, அந்தப்பிள்ளை வராம இருந்திருக்கலாம்!” அசட்டையாகவே பதில் கொடுத்தார் பொதிகாச்சலமும். என்றோ எதிர்பார்த்தது. இன்று விடிகிறது. 

“வராம எங்க போவா? எங்கிட்டுச் சுத்தினாலும் இங்கதானே வந்தாகணும்!” 

படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை விட்டு கண்ணெடுக்காமலே, அடுத்த பக்கம் திருப்பியவர், “கனவு கண்டிட்டிரு. உன் மகன் வேணா வலிய தேடிப் போவானே ஒழிய, அந்தப்பிள்ள உன் மகனத் தேடி வரும்ங்கற நம்பிக்கை எனக்கில்ல. சாதாரண பேச்சா பேசியிருக்க? கல்யாணத்தன்னைக்கி அசலூர்ல போயி, நம்ம மானத்தை வாங்கிட்டு, எவனோட போன உம்மகளும், நீயும் எந்த மூஞ்சிய வச்சுட்டு அங்க வந்தீங்க?” என்று‌ கேட்க ரஞ்சனி உள்ளம் ஆவேசத்தில் கொதித்தது. 

எல்லாம் முடிந்ததென இவளே முடித்துக் கொண்டு வந்தபிறகும், இதையே இன்னும் எத்தனை நாளைக்கு குத்திக்காட்டிப் பேசுவார். இவள் பேசினாலும் பொதிகாச்சலம் பதில் கொடுக்க வேண்டுமே. அவரைப் பொறுத்தவரை வீட்டில் கிடக்கும் டேபிள், சேர் போலத்தான் இவளும் ஒரு ஜடப்பொருள். அதுகளுக்காவது ஆயுத பூஜை அன்று பொட்டுவைத்து மரியாதை செய்வதுண்டு. இவளுக்கு அந்த மரியாதைகூட இல்லை பொதிகாச்சலத்திடம்‌. எதுவும் பேசமுடியாத ஆத்திரத்தில் அம்மாவைப் பார்த்தாள்.

“வெளிநாட்டுல போய் உக்காந்துக்கிட்டு, எந்தங்கச்சிக்கு குழந்தை பொறந்திருக்கு, உம்மகன் தான் அப்பான்னு அண்ணங்காரன் வந்து சொன்னா யாரு நம்புவா?” இத்தனை வருடங்கள் கழித்தும், அமிர்தாவை நேரில் பார்த்தும் அன்று போலவே இன்றும் பேச்சில் விஷம் தடவ, பல்லைக் கடித்தார் பொதிகாச்சலம். 

“அதுக்குதான் உம்மகன் அன்னைக்கி சரியான பதில் கொடுத்தானே? அவன் கேட்ட கேள்வியில இன்னும் என்னால அவன் முகத்தைப் பாக்கமுடியல. தலைக்கு மிஞ்சின பையன் இப்படிக் கேட்டுட்டானேன்னு எனக்குத்தான் மானக்கேடா இருக்கு. நாக்கப் புடுங்குற மாதிரி கேட்டும் நீ திருந்தல. உங்க சங்காத்தமே வேண்டாம்னுட்டு துண்டா போய்ட்டான். வேண்டாததெல்லாம் வீட்ல வந்து உக்காந்துட்டு நாட்டாமை பண்ணுது!” 

அவர் வேண்டாதது என்று சொன்னது ரஞ்சனியைத்தான். கணவனை விட்டுப் பிரிந்துவந்த மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் முடியவில்லை. பெற்ற பாசமெல்லாம் இல்லை. என்றைக்கு தங்களைப்‌‌பற்றி யோசிக்காமல் தன்‌னைப் பற்றி மட்டும் யோசித்து, வெளியூரில் வைத்து மானத்தை வாங்கினாளோ, அன்றே மகளே தனக்குப் பிறக்கவில்லை என தலைமுழுகிவிட்டார். 

பெற்ற கடனுக்காகவும், காந்திமதி கட்டாயத்தினாலும்தான் இப்பொழுது வீட்டில் அனுமதித்துள்ளார். சீனி தங்கையிடம் அறவே பேசுவதில்லை. 

கல்யாணத்தன்றுதான் தங்களை அசிங்கப்படுத்தினாள். காலப்போக்கில் போனால் போகிறதென்று மன்னிக்காவிட்டாலும், தங்கை செய்ததை மறக்கவாவது முயற்சி செய்தான் சீனி. 

அதன் பிறகாவது தண்டபாணி வந்து சென்றதையோ, எதற்காக வந்தான் என்பதையோ தன்னிடம் சொல்லியிருக்கலாம். தங்கள் குடும்பத்திற்கு இத்தனை அவமானம் நேர்ந்த பிறகும் தங்கைக்காக என்றுதானே, மானம் மரியாதை விட்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு வந்திருப்பான். முக்கியமாக என் குழந்தைக்காகவும் தானே? இந்த‌ வீட்டு வாரிசல்லவா? அம்மாவோடு சேர்ந்து கொண்டு அதையும் மறைத்துவிட்டாளே என்ற கோபம் ரஞ்சனி‌ மீது கழுத்தளவு இருக்கிறது. அவளைத் திட்டுவதற்காகக் கூட அவள் முகம் பார்த்து பேசுவது அசிங்கம் என முற்றிலுமாக ஒதுக்கிவிட்டான். 

“அதானே… அவள என்னைக்கி உங்க மகன்னு சொல்லியிருக்கீங்க?” 

“சொல்லிக்கற மாதிரி நடக்கலையே?”

“இப்ப என்னத்த ஊர் உலகத்துல நடக்காதத பண்ணிட்டா? கல்யாணத்துக்கு முன்னாடியே வயித்துலயா வாங்கிட்…” என்று சொல்லி முடிக்குமுன், 

கையிலிருந்த செய்தித்தாளை விசிறிவிட்டு ஆவேசமாக எழுந்தவர், கையை ஓங்கிக் கொண்டு, வந்ததில் ஒரு கணம் காந்திமதியே ஆடிப் போனார். இதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்துதான் பேசிக் கொண்டிருந்தார். பழனியைப்பற்றி பேச்சுவர, அதற்கு மேல் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொங்கிவிட்டார். 

“இன்னொரு வார்த்தை அந்தப்பிள்ளையப் பத்தி தப்பா பேசின நான் மனஷனாவே இருக்க மாட்டேன். அந்தப் பிள்ளைய மட்டும் குத்தம் சொன்னா‌ என்ன அர்த்தம். ஒரு வாரத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு அவங்கள தனியா அனுப்புனது நம்ம தப்பு. உன் மகனுக்கு எங்க போச்சு புத்தி. வயசுக்கு மீறி என்னைப் பேசவைக்காதே! நம்ம பிள்ளைக ரெண்டு பேரும் பண்ண காரியத்தால இன்னைக்கும் அந்தப்பிள்ளைக ரெண்டும் ஒத்தையில நிக்குதுங்க!”

“அத்தனை அசிங்கப் படுத்திட்டுப் போன உம்மக மட்டும் அவனோட வாழ்ந்துச்சா? ஒரு வருஷத்துல எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு வந்தாச்சு. குடும்ப மானமும் போயி, வாழ்க்கையும் போனதுதான்‌ மிச்சம்!”

அதுவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது ஆங்காரமாக வாய் திறந்தாள். “ம்மா… எதுக்கெடுத்தாலும் என்னையே குத்திப் பேசவேண்டாம்னு‌ சொல்லுங்க. நானாத்தான் அவன் மேல ஆசைப்பட்டுப் போனேன். அதுக்காக ஒன்னுக்கும் ஆகாதவனோட, கூழோ, கஞ்சியோ போதும்னு உங்க காலம் மாதிரி பினாத்திக்கிட்டு, வாழ்க்கை முழுசும் கஷ்ட்டப்படச் சொல்றீங்களா?” 

“அது அவன்கூட பழகும்போது தெரியலையா? உடம்பு வளையாத சோம்பேறி அவன். அடுத்தவன்‌ உழைப்புல நோகாம வாழ ஆசைப்பட்டான். அது தெரிஞ்சுதானே நாங்களே வேண்டாம்னு முடிவு பண்ணினோம். நீயே உன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கிட்ட!” என்றார் மகளைப் பார்த்து.

சீனியை விட்டுப் பிரிந்த பிறகு, தீனதாயளனும் கொஞ்சம் பெயர் மாற்றி கருப்பட்டி கஃபேதான் திறந்தான். ஆரம்பமெல்லாம் நல்லாதான் போனது. ஆரம்ப ஜரூர். இப்படியே நீடிக்கும் என்ற மெத்தனம். வேரூன்றும் முன், ஆடம்பரம். அடுத்து வந்த கொரானோ காலகட்டம் அதை நிலைக்க விடவில்லை. கடன் கழுத்தை தெரிந்தது. அவனது பெற்றோர்களும் உதவ முன்வரவில்லை. ரஞ்சனி வீட்டார் உதவட்டுமே என்ற எண்ணம் அவர்களுக்கு. காந்திமதி விடாக்கண்டனாக இருக்க, அவர்கள் கொடாக்கண்டன் என்பதை அவர்களும் நிரூபித்தனர். காதலனாக இனித்தவன், சம்பாத்தியமில்லாத கணவனாக கசந்து போனான். போதுமென்று போன வேகத்தில், உறவை முறித்துக் கொண்டு திரும்பிவிட்டாள். 

“அவ்ளோ பெரிய தப்பு பண்ணவளையே அந்தக் குடும்பம் உள்ளங்கையில வச்சுத் தாங்குது. அவசரப்பட்டு ஒரு முடிவெடுத்துட்டா. அதையே குத்திக்காட்டி இன்னும் பேசுனா எப்படீ? அடுத்தது‌ என்னன்னு‌ பெத்தவங்க நாமதானே பாக்கணும்!” என்றவரை உறுத்துப் பார்த்தார். 

காந்திமதி எதையோ சுற்றி‌ வளைத்துப் பேச வருகிறார் என்று‌ மட்டும் நன்கு தெரிந்தது பொதிகாச்சலத்திற்கு. இல்லையென்றால் இத்தனை தணிந்து பேசுபவரல்ல. ஏதோ திட்டம் மனதில் ஓடுகிறது. பூனைக்குட்டி வெளியே வரட்டும் என்று பார்த்து நின்றார். 

அன்று ஒரே நாளில் எத்தனை அவமானம். மகள் ஓடிப்போனதோடல்லாமல் மகனின் திருமணமும் தடைபட்டு, அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தலை குனிந்து, திரும்பி வந்ததை நினைக்கும் பொழுது, இத்தனை வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் உள்ளுக்குள் கூனிக் குறுகிப்போவார்.

அதெல்லாம் காந்திமதிக்கும், ரஞ்சனிக்கும் ஒன்றுமே கிடையாது போல. கோழி குப்பையை உதறுவது போல் உதறிவிட்டனர். 

சென்னை திரும்பிய பிறகு கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. எத்தனை முக்கியஸ்தர்கள் தேதி வாங்கி, மகனின் கல்யாணத்திற்கு ஏற்பாடு‌ செய்திருந்தார். எல்லாம் ஒரு நொடியில் கொட்டி கவிழ்த்து விட்டாள்‌ மகள்.

சென்னை வந்த வேகத்திற்கு ரஞ்சனியைத் தேடிப் போக,  இவர்களைத் தேடிவருவது தெரிந்து ரஞ்சனி, தீனதயாளன்‌ ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்தது. ரஞ்சனிக்கு அப்பாவைப் பற்றியும், அண்ணனைப்‌ பற்றியும் நன்கு தெரியும். அவர்கள் சென்னையில் இருந்தால் இவர்களால் திருமணம் செய்து கொள்ளமுடியாது. அதனால் தான் அவர்கள் பழனியில் இருக்க, இவள்‌ சென்னை வந்துவிட்டாள். தீனதயாளனின் பெற்றோரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு குடும்பங்களையும் காவல்நிலையம் வரவழைத்தனர். 

வந்த வேகத்திற்கு, காவல் நிலையம் என்றும் பாராது, சீனி தீனாவை இழுத்துப் போட்டு ஆவேசமாக அடித்து‌, உதைத்திருக்க, குறுக்கே வந்து மறித்து நின்றதென்னவே ரஞ்சனிதான். அவளுக்கும் அடி விழ, 

போலிசார் கண் முன்பே இவர்களைப் போட்டு அடி வெளுக்க, இவர்களால் எந்த ஆபத்தும் இவர்களுக்கு நேராதென பொதிகாச்சலத்திடமே கையெழுத்து வாங்கிக் கொண்டது காவல்துறை. எனக்கும் மகளுக்கும் இனி‌ எந்த சம்பந்தமும் இல்லை என்று சேர்த்தே எழுதிக் கொடுத்துவிட்டார் பொதிகாச்சலமும். 

காவல் நிலையம் வந்த தீனதயாளனின் பெற்றோரும், அவர்களுடன் வந்த சொந்தங்களும், கல்யாண மேடையிலிருந்து ஓடி வந்தவள் எப்படிப்பட்டவளாக இருப்பாளென பெண் வளர்ப்பு பற்றி இவர்களையே கேவலமாகப் பேச, இங்கும் அவரால் பதில் பேசமுடியாமல் மகளால் தலைகுனிவே‌. 

முதலில் பெண் கேட்டதென்னமோ அவர்கள்தான். அப்பொழுது அவர்கள் எண்ணம் பெண் மட்டுமல்ல. மகனும் பங்குதாரராக இருந்த கஃபேயும்தான். ஆனால், பெற்றோர்‌ சம்பந்தமில்லாமல் நடந்த இந்தத் திருமணத்தால் பொதிகாச்சலத்திடமிருந்து நயாப்பைசா தேராதெனத் தெரிந்தது. மகனை மயக்கி, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக அவர்களும் பேசினர். 

தீனதயாளன் பெற்றோருக்கு விருப்பமில்லை எனினும், சீனியின் கோபம் பார்த்தவர்கள், மகனின் பாதுகாப்பு கருதி அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம். வேண்டா வெறுப்பாகவே ரஞ்சனியையும், தீனதயாளனையும் அழைத்துச் சென்றனர். 

ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. என்னால் அவனோடு வாழ முடியாதென, சுவற்றில் அடித்த பந்து போல். போனவேகத்தில் பிறந்த வீடு வந்து சேர்ந்திருந்தாள் ரஞ்சனி. காரணம் கேட்டதற்கு ஒத்துவராதென ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள். வருடம் திரும்பும் முன், முடிந்த வேகத்தில் திருமணம் ரத்தானதுதான்‌ மிச்சம். 

“அதுக்குன்னு அப்படியே விட்டுற முடியுமா?” தணிந்து வந்தார் காந்திமதி. 

ஒரு கணம் யோசனையாக புருவம் நெறித்துப் பார்த்தவர், 

“அதுக்கு?” என்றார்‌. 

“அவங்க வீட்டுப்புள்ளய வாழ வைக்கணும்னா, நம்ம புள்ளைய ஏத்துக்கட்டுமே!” கூசாமல் சொன்ன மனைவியின் முட்டாள் தனத்தில், அழுவதா சிரிப்பதா என்றிருந்தது பொதிகாச்சலத்திற்கு.  

கடை திறப்புவிழா முடிந்த ஒரு வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. அன்றே காந்திமதி பழனியைப் பற்றியும், அமிர்தாவைப்‌ பற்றியும் ஏதாவது ஆரம்பிப்பார் என பொதிகாச்சலம் எதிர்பார்க்க, ஆர அமற விஷயத்தை ஆறப்போட்டு ஆரம்பித்தார் காந்திமதி. 

அதற்கான காரணம் இப்பொழுது விளங்கியது பொதிகாச்சலத்திற்கு. அவர் காரணமில்லாமல் அமைதியாக இருக்கவில்லை. பிள்ளையோடு வந்திருக்கிறாள். இனி எப்படியும் மகன் அவளை விடப்போவதில்லை. தன் பேச்சு மகனிடம் எடுபடாது. அவர்கள் பிள்ளை வாழ வேண்டுமென்றால், நம் பிள்ளையை ஏற்றுக் கொள்ளட்டுமே என்ற எண்ணம் துளிர்விட, அதை செயல்படுத்த துணிந்துவிட்டார்.

இவரது எண்ணம் ஈடேரப்பேவதில்லை என்பது நன்கு தெரியும். இருந்தாலும், “நீ ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்கோ காந்திமதி! இப்பவும் எனக்கு வாழ்க்கை கொடுன்னு அந்தப் பிள்ளை ஒன்னும், உன் மகன் கால்ல வந்து விழல. தானுண்டு தன் வேலையுண்டுன்னு சிவனேன்னு‌ இருக்கு. உம் மகன்தான் அவன் பிள்ளைக்காக, அந்தப் பிள்ளை பின்னால போறான். நீயும், உம்மகளும்தான் நாங்க எல்லாம் பெண்ணியவாதின்னு, புரட்சி பண்றதா நெனச்சுட்டிருக்கீங்க. பிடிக்கலைன்னா உடனே அத்துவிட்டு, அடுத்து கல்யாணத்துக்கு தயாராகுறதா புரட்சி? எல்லார்கிட்டயும் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்யும். இப்படியே செட்டாகலை, செட்டாகலைன்னு போனா உம்மகளுக்கு எத்தனை‌ கல்யாணம்‌ பண்ணி வைப்ப? பிள்ளை இருக்குங்கறதுக்காக ஒரு நாளும் உன்னைத் தேடி வரமாட்டேன்னு இறுமாப்பா, உம் மகனைத் தேடி வராமா இத்தனை வருஷமா அந்தப் பிள்ளை இருந்துச்சு பாரு, அதுதான் உண்மையான பெண்ணியவாதி!” என்றவர் காந்திமதியையும், மகளையும் அற்பமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டார். 

*****

“இன்னைக்கும் போகணுமா? புள்ளகூடவே இருக்கணும்னுதானே இந்த வேலைக்குப் போன?”

“என்னம்மாச்சி பண்றது? ஹாஃப் டே தான். மதியம் வந்துருவேன். கொஞ்சம் பாத்துக்கோங்க!”

“நானென்ன மாட்டேன்னா சொன்னேன். நல்லா இருந்தா உன்னைத் தேடவே மாட்டா. ஆனா, இப்படி இருக்கும் போது விட்டுப்போனா, நீ எப்ப வருவேன்னு கேட்டே என் உசுர எடுத்துறுவா! உனக்கும் தான் பேச்சு ஙொனஙொனங்குது!” என்றார். 

பழனி குரலும் ஙஞணநமன வாசித்தது தான். 

அவளுக்கும் தெரியும். விடிய விடிய பிள்ளையும் தூங்கவில்லை. அவளையும் தூங்க விடவில்லை. 

இரண்டு நாட்களாக சளி தொந்தரவு. கைவசம் எப்பொழுதும் இருக்கும் சளி மருந்தை கொடுத்தும் குறைந்தபாடில்லை. மருத்துவருக்கு மொய் வைக்காமல் விடாது. இதே மருந்தை அவர் கைப்பட எழுதி வாங்கிக் கொடுத்தால்தான் தீரும்‌. அதுதான் மருத்துவர் கைராசிங்கறது போல. இரண்டு நாட்கள் முன்பு, பள்ளி விட்டு வந்ததும், மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்பினாள். 

எப்பொழுதும் போல் முன்னால், கால்களுக்கிடையில் நிற்கவைக்க, காய்ச்சல் என்பதால் முன்பக்கம் பார்த்து நிற்காமல், வயிற்றைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ள, மிகவும் துவண்டுவிட்டாள் எனத் தெரிந்தது. 

அப்பொழுதுதான் ஜிம்மிற்கு செல்ல கீழே‌ இறங்கி வந்தான் சீனி. இவள் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வெளிவருவதை பார்த்துக் கொண்டும்தான். கார் சாவியோடு வந்தான். மகளின் உடல்நிலை தெரியும். கிளினிக் செல்கிறாள் எனக் கணித்தே கார் சாவியோடு வந்தான்.

வண்டியருகே வந்தவன், “அம்மு!” என்றழைக்க நிமிர்ந்து பார்த்தது பிள்ளை. மூக்கு சிவந்து, கண்ணெல்லாம் சிறுத்து, கதகதவென நீர் கசிந்து நின்ற பிள்ளையைப் பார்க்க மனம் கசிந்தது. அந்தளவிற்கு காய்ச்சல்.

“சீனிப்பா… ஃபீவர்!” என்று மட்டும், பலவீனமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தலையை அவள் வயிற்றில் புதைத்துக் கொண்டது. தலையைத் தொட்டுப் பார்க்க வந்தவனை சட்டென நிமிர்ந்து பார்க்க, பெண்ணவள் பார்வை அனலடித்தது. இருந்தும் கையை‌‌ பின்னெடுக்கவில்லை. இனியும் பின்வாங்கும் எண்ணம் அவனுக்கில்லை. முதுகை மட்டும் வருடிவிட்டு கையை எடுத்துக் கொண்டான். அவள் இடை தீண்டாமல் பிள்ளையின் நெற்றியில் கை வைத்துப் பார்க்கமுடியாது. 

“பார்வைக்கொன்னும் கொறச்சலில்ல!” வாய் விட்டே முணங்கியவன், 

“இவ்ளோ தூரம் ஃபீவர் அதிகமாகுற வரைக்கும் என்ன பண்ணே?” உக்கிரமாகக் கேட்டவனை, ஃபோனை விட்டு கண்ணை மட்டுமே நிமிர்த்திப் பார்த்தாள். பார்வை துளைத்தது. பதில் கொடுக்கவில்லை. இத்தனை வருஷம் வளத்த எங்களுக்குத் தெரியாதா என்ற கேள்வி தொக்கி நின்றது தெரிந்தது அந்தப் பார்வையில். கண்டுகொள்ளாமல் வண்டியை முடுக்கினாள்.

“கொஞ்சம் பொறு. கார்ல போலாம். இப்படியே எப்படி வண்டி ஓட்டுவ. மழை வேற வரும்போலருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்க, காதிலேயே வாங்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள். 

அவளும்‌ மழை வரும்போலிருக்க, கால் டாக்சி புக் பண்ணலாம் என்றுதான் ஃபோனை கையில் எடுத்தாள். இவன் காரில் அழைக்க, உன் அக்கறை தேவையில்லை என, வண்டியை முறுக்கிக் கொண்டு முறுக்காக கிளம்பிவிட்டாள். இவனுக்கு தான் ஆத்திரம் தலைக்கேறியது. 

எப்பவும் போல் ‘சரித்தான் போடீ!’ என சொல்லவும் முடியவில்லை. முன் பக்கம் இருப்பது இவன்‌ பிள்ளையல்லவா? தசை ஆடத்தான் செய்தது. மனம் கலங்கத்தான் செய்தது. கையாலாகாத்தனத்தை எண்ணி. 

கிளினிக் அதிக தூரமில்லை. பக்கம்தான். 

அங்கு சென்றால் வரிசை நீண்டிருந்தது. சீதோஷ்ண நிலை மாற்றம். பிள்ளைகள் உடல்நிலையில் எதிரொலித்தது. பெரியவர்கள் என்றால் கூட அனுமதி கேட்டு முன் சென்று பார்க்கலாம். எல்லாம் சிறு‌ பிள்ளைகள். வரிசை‌ பிரகாரம்தான் பார்த்தாக வேண்டும். பெயர் பதிந்துவிட்டு, டோக்கன் வாங்கிக் கொண்டு, மடியில் அணைத்தவாறே வரிசை இருக்கையில் அமர்ந்தாள்.

மழை அப்பொழுதே இலேசாகத் தூர ஆரம்பித்தது. மழையின் குளுமை, மனதின் ஆழத்தில் புதைந்துபோன  பழைய வெம்மையைக் கிளப்பிவிட்டது. மழை வரும்பொழுது கிளப்பி விடும் மண்வாசனை போல, பழைய நினைவுகளையும் சுமந்து கொண்டுதான் வருகிறது இவளுக்கு மட்டும். மேகம் சுமந்த பாரத்தை மழையாகக் கொட்டிக் தீர்க்க, இவளுக்கு மட்டும் மனதின் பாரம் கூடிக்கொண்டேதான் போனது நீங்காத நினைவுகளால். ஆயாசமாக வெளிப்பட்டது பெருமூச்சு. மகளின்‌ தலையைக் கோதிவிட்டாள். 

“ம்மா… வீட்டுக்குப் போலாம்!” அரைமணி நேர தாக்காட்டிற்குப் பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள் அமிர்தா. அவளுக்கும் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை. 

அமிர்தா மிகவும் சோர்ந்திருப்தைப் பார்த்துவிட்டு, இவளுக்கு முன் செல்ல வேண்டியவரே, இவளை முன்னே போகச் சொல்ல, நன்றி சொல்லிவிட்டு உள்ளே‌ சென்றாள். அதே மருந்து, மாத்திரைகள்தான். வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். 

நன்கு இருள் கவிழ்ந்துவிட்டது. அய்யம்மா கைபேசியில் அழைத்தார்.‌ எடுத்தவள், சாப்பிட என்ன வாங்கிவர எனக் கேட்டாள். இனிமேல் வீட்டிற்கு சென்று சமைப்பதென்றால், இவளை வைத்துக் கொண்டு முடியாதெனத் தெரிந்தது. 

“எதுவும் வாங்க வேண்டாம். ரசம் வச்சு சோறு வடிச்சாச்சு. நனையாம வந்து சேருங்க!” என்று‌ மட்டும் சொல்லி வைத்துவிட்டார். 

மழை விட்டிருந்தாலும், குளுமை இன்னும் இருந்தது. வந்த மாதிரியே மகளை முன்னால் காலிடுக்கில் நிற்கவைத்து, வயிற்றுச்‌ சூட்டில் அணைத்தவாறு, முகத்தில் ஈரக்காற்று மோதாமல் வீடுவந்து சேர்ந்துவிட்டாள். அவள் வண்டி‌‌ உள்ளே‌ நுழைவதை ஜிம்‌மிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். 

சூடான‌ சோற்றில் ரசத்தை ஊற்றிக் குழையப் பிசைந்து, நான்கு வாய் மல்லுக்கட்டி ஊட்டிவிட்டு, மருந்தைக் கொடுத்துப் படுக்கவைத்தாள். விட்டுவிட்டு காய்ச்சல் அடிக்க, டெம்ப்ரேச்சர் அளந்து, நான்கு மணிக்கொரு தடவை மருந்து கொடுத்துக்கொண்டே‌தான் இருந்தாள். இப்போதைக்கு காய்ச்சல் மட்டுப்பட்டு விட்டுது. சளி தொந்தரவு செய்தது. அம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்தவள், விட்டுப் பிரியவில்லை. மறுநாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டனர் இருவரும். அடிக்கடி அமிர்தாவே தெர்மா மீட்டரை எடுத்து வைத்துப் பார்த்து, “ம்மா… அம்முவுக்கு ஹை ஃபீவர்!” என்று‌ கழுத்தில் கைவைத்துக் காட்டினாள்.  

“இன்னும் டூ டேஸ் உனக்கு லீவுதான்டீ. சும்மா சீன் போடாதே!” என்று மகளை கேலி செய்தாள். 

“அப்போ சீனிப்பா வீட்டுக்குப் போகவா?” எனக் கேட்ட மகளை முறைத்துப் பார்க்க, “ஐஸ் கிரீம் கேக்க மாட்டேன். ப்ராமிஸ்!” என்ற மகளிடம், “ஃபீவர் விடட்டும் போலாம்!” என்று‌ சொல்ல சமத்தாகக் கேட்டுக் கொண்டது. 

இந்த வாரம் பார்த்து பெரிய வகுப்புகளுக்கு மட்டும் சனிக்கிழமை அரை நாள் சிறப்பு வகுப்பு நடக்கிறது. அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் வருவதால் தொடர்ச்சியாக வரும் விடுமுறை நாட்களை ஈடுகட்டவேண்டிய கட்டாயம். அம்மாவிற்கும் காய்ச்சலை  ஒட்ட வைத்திருந்தாள்‌ மகள். பாராசிட்டமல் ஒன்றை போட்டுக் கொண்டுதான் கிளம்பினாள்.

உடல்நலம் சரியாக இருந்தால் கூடவே அழைத்துச் சென்று விடுவாள். கணித ஆசிரியை என்பதால் இவளாலும் விடுப்பு எடுக்க முடியாது. சிறப்பு வகுப்பே கணிதத்திற்கும், அறிவியலுக்கும்தான். 

நேரமாகிவிட்ட பரபரப்பில், கைப்பையில் அவசரமாக எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டே, “நல்லாருந்தா நானே அவள கூட்டிப் போயிடுவேன் அம்மாச்சி. இப்பதான் அவளுக்கு காய்ச்சல் விட்டுருக்கு! எல்லாம் அவரால‌. அவரையே வந்து பாத்துக்கச் சொல்லுங்க!” அவளையும் மறந்து தன்போக்கில் சொல்லிவிட, 

“அந்தத் தம்பியென்ன மாட்டேன்னா சொல்லுச்சு‌. நீதான் அனுப்ப மாட்டேங்குற! ஆஸ்பத்திரிக்கு கூட கார்ல கூப்பிட்டப்ப போகலையாம்ல. மழையோட போய்ட்டு வந்துதான் நீயும் இழுத்துவிட்டுக்கிட்ட. உனக்குதான் மழை ஆகாதுன்னு‌ தெரியும்ல. அப்படியென்ன வீம்பு?” அய்யம்மா நொடித்தபிறகுதான், என்ன பேசினோம் என நிதானித்தாள். விடிய விடிய, அவளும் தூங்காமல், தன்னையும் தூங்கவிடாமல் மகள் படும் அவஸ்த்தை பார்த்து ஆத்திரம் அவன் பக்கம் திரும்பியிருந்தது. 

கடை திறப்பு விழாவோடு சேர்த்துதானே ஆல்ஃபா உடற்பயிற்சி மையமும் தொடங்கினான். அதிகாலையே ஜிம் திறந்துவிடுவான். காலையில் வருபவர்களுக்கு ஜிம் ‌பயிற்சிக்கெல்லாம் அவன் அங்குதான் இருப்பான். பள்ளி சென்றபிறகு அதை கவனித்துக் கொள்ள, பயிற்சி பெற்ற ஆட்கள் இருவரைப் போட்டுள்ளான். பள்ளி விட்டு வந்ததும், குளித்து, உடைமாற்றி ஜிம் வந்துவிடுவான். 

கூடவே அமிர்தாவும். பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டே நிற்பாள். இவன் எப்பொழுது கிளம்புவான் என்று. அபார்மென்டிற்கு எதிர்ப்புறம்தானே சூப்பர் மார்க்கெட்டும், ஜிம்மும் என்பதால் நடந்துதான் செல்வது. 

அவன் தலை தெரிந்ததும், “சீனிப்பா, வெய்ட்!” என்று‌ கத்துவாள். அவனும் சிரித்தபடி காத்து நிற்பான். 

ஆரம்பத்தில் அம்மாவிடம் அனுமதி கேட்டு நச்சரித்தவள், இப்பொழுதெல்லாம் அவன் தலை தெரிந்தாலே போதும். இவளிடம் சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பாராமால், கையில் செருப்பை எடுத்துக் கொண்டு, சிட்டெனப் பறந்து கீழே ஓடிவிடுவாள்.‌ காலில் போடுவதற்குள் வந்து வேண்டாமென சொல்லிவிட்டால். 

“மெதுவாடீ…” பழனி கத்துவது காற்றில்தான் கலந்து போகும். 

ஓடி வந்த மகளின் தளிர்க்கரம், தன் கைவிரல் பற்றிக் கொண்டதும் உலகமே கைக்குள் அடங்கிய உணர்வு அப்பனுக்கு. செருப்பை வாங்கி காலில் மாட்டிவிட்டுக் கொண்டே மேலே பார்ப்பான். 

“சீனிப்பா… பாக்காதீங்க. மேல வரச்சொல்லிருவாங்க!” வாண்டு ரகசியமாகக் கள்ளத்தனம் கற்றுக் கொடுக்கும் அப்பனுக்கு. பிள்ளையின் குறும்பில் சிரிப்பு வரும். முயன்று அடக்கிக் கொண்டு, “அம்மாகிட்ட சொல்லிட்டு வரலியா?” பொய்யாக மிரட்டுவான். 

“சொல்லிட்டேனே!” ஜம்பமாக பதில் கொடுக்கும் மகளின் கைபிடித்து மேலே பார்ப்பான். அழைத்துப் போகிறேன் என்ற தகவல் அது‌. 

ஆரம்பத்தில் வாரத்தில் ஒன்றிரண்டு நாள் என்றிருந்தது இப்பொழுது தினமும் என வாடிக்கையாகிவிட்டது. எதுவும் சொல்லமுடியால் பல்லைக் கடித்து நிற்பாள். ஒரு மணி நேரம்தான். மீண்டும் கொண்டுவந்து விட்டுச் சென்றுவிடுவான். இல்லையெனில் ஜிம்மிற்கு வரும் அபார்ட்மெண்ட் வாசிகள் யாருடனாவது அனுப்பிவைப்பான். அவளே அதற்கு மேல் அங்கு தாக்குப்பிடிக்க மாட்டாள். 

“சீனிப்பா… ஹோம் வொர்க் பண்ணனும்! ஃப்ரூட்டி திட்டும்!” என்று‌ நச்செடுக்க ஆரம்பித்துவிடுவாள். 

மேலே ஜிம்மிற்குப் படியேறும்‌ முன், கீழே சூப்பர் மார்க்கெட்டில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டுதான் மேலே ஏறுவதே. அவள் வருவதே அதற்காகத்தானே? மினி கப் ஒன்றே ஒன்று என்றுதான் கட்டிப்பேசி அழைத்து வருவான். மினி கப் எத்தனை என்று அவள்தான்‌ முடிவு செய்வது. ஒவ்வொரு ஃப்ளேவருக்கும் ஒரு கப். மேலே ஏறும்‌பொழுது ஒன்று. இடையில் ஒன்று. வீட்டிற்கு வரும்பொழுது ஒன்று என மொத்தம் மூன்று. 

“சீனிப்பா… ப்ளீஸ்!” மகள் கண்களைச் சுருக்கி, கழுத்தைச் சாய்த்துக் கெஞ்சினாள் போதும். அப்பன்காரன் பட்டர் ஸ்காட்ச்சாய் உருகிவிடுவான். 

“எல்லாம் அவரால. ஐஸ்க்ரீமா கொடுத்து சளிப்புடிக்க வச்சுட்டு, இப்ப யாரு அவஸ்தைப் படுறது?” பொருமிக் கொண்டிருந்தாள் பள்ளி செல்லும் அவசரத்தில். 

“புள்ளைகன்னா சளியும், காய்ச்சலும் வரத்தான் செய்யும். உனக்கெல்லாம் எதுவும் வராமத்தான் வளந்துட்டியா? ஏன், போனவாரம் வந்த உன் அண்ணங்காரனும்தான் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தான். அதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதே!” குத்திக் காட்டிய அம்மாச்சியை முடிந்தளவு முறைத்து விட்டு, இப்போதைக்கி வாக்குவாதத்திற்கு நேரமின்மை காரணமாக அவசரமாக நடையைக்கட்டினாள்‌. அமிர்தா எழுந்துவிட்டால் அவளை சமாளித்துச் செல்வதே பெரும்பாடாகப் போகும். 

இப்பொழுதெல்லாம் வாரக் கடைசியானால் தண்டபாணியும் பெங்களூரிலிருந்து வந்துவிடுவான். தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து இது தொடர்கிறது. மாமன்காரன் வந்துவிட்டால் பிள்ளைக்கு ஒரே குஷிதான். சீனிப்பாவை டீலில் விட்டுவிடுவாள். பார்க்கும் பொழுதெல்லாம் மச்சான்களில் பார்வை தீப்பிடிக்கும். அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி பார்வையாலேயே உரசிக் கொள்வார்கள். இவன் வந்துவிட்டால் பார்த்தசாரதியும் வந்து சேர்ந்து கொள்வான். சீனியின் புகைச்சலுக்கு கேட்கவா வேண்டும். குமுட்டி அடுப்பு போல உள்ளுக்குள் புகையும். 

வீட்டை மாற்றலாமா என்றுகூட கேட்டுப் பார்த்தான் தண்டபாணி. பள்ளிக்கு இதுதான் பக்கம். கேட்டட்‌ கம்யூனிட்டி. இதுதான் பாதுகாப்பு என்று பழனி சொல்லிவிட விட்டுவிட்டான். அதுவுமில்லாமல் ஏன் பயந்த மாதிரி ஓடி ஒழிய வேண்டும். ஏற்கனவே ஊர்‌ வாய்க்குப் பயந்து ஐந்து வருடங்கள் அஞ்ஞானவனம் சென்றது போதும் என்ற எண்ணம். 

காய்ச்சலில் படுத்த பிள்ளை தூங்கியெழ, கண்முன் அப்பன்காரன் உட்காந்திருந்தான் புன்னகையோடு. 

“சீனிப்பா…” என்றழைத்தவாறே‌ சோர்ந்த முகம் மலர எழுந்தமர்ந்தது. சற்றே முகத்தில் தெளிச்சல் வந்திருந்தது. முகத்தில் விழுந்துகிடந்த முடியை ஒதுக்கியவன், சுடுதண்ணீர் கொண்டு முகம் துடைத்து, வெளியே தூக்கி வந்தான்.

“பால் கொடுக்க வேண்டாம்ப்பா. காய்ச்சலுக்கு மந்தாரம். இட்லி கொடுத்து மருந்து கொடுத்துக்கலாம்!” என்று அய்யம்மா சொல்ல, 

“சீனிப்பா நோ டேப்லட். உவ்வே… கசக்கும்!” அழும் தோரணையில் சொன்னாள் மகள். 

“மருந்து குடிச்சாதான் ஃபீவர் சரியாகும். அப்போதானே அடுத்து ஐஸ்கிரீம் சாப்பிட முடியும்!” மகளுக்கு ஆசைவார்த்தை காட்டி, சாப்பாடு கொடுத்து மருந்தும் கொடுத்தான். இன்று தனக்கு வகுப்புகள் இருக்காதெனத் தெரியும். அதனால் அவன் விடுப்பெடுத்துக் கொண்டான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் காய்ச்சல் மருந்தின் மயக்கத்தில், கண்கள் செருக, தூங்க வைத்துவிட்டே சென்றான். 

இப்படியே‌ எத்தனை‌ நாளைக்கு என்ற கேள்வியை முன் வைத்தார் வேலாயுதம். அது அவனுக்கும்‌ தெரியவில்லை. காலம் வரட்டும்‌ என காத்திருக்கிறான். 

மதியம் வந்தவள் பிள்ளையைக் கேட்க, சீனியைப் பார்க்க சென்றதாகக் கூறினார் அய்யம்மா. அம்மாச்சியை முறைத்து விட்டு, உடையைக் கூட மாற்றவில்லை. அசந்து போய் படுத்துவிட்டாள். சாப்பிடக்கூட இல்லை. அவளுக்கும் சுத்தமாக முடியவில்லை. சற்று நேரம் தூங்கி எழட்டுமென அய்யம்மாவும் எழுப்பவில்லை. 

*****

கண்விழித்துப் பார்த்தவள் மருத்துவமனையில் படுக்கையிலிருந்தாள். நிதானம் பிடபடவே சில கணங்கள் பிடித்தது. மூளையை சுருக்கி, நினைவுகளை ஒன்று திரட்ட, மகளின்‌ நினைவு வர, அவளை இறுதியாகப் பார்த்த கோலம் நெஞ்சை உலுக்க, “எம்பிள்ளை எங்கே!” என்று அரற்றியபடி அவசரமாக எழுந்து தள்ளாடியவளை, சீனிதான் தாங்கிப் பிடித்து உட்கார வைத்தான்.

அவனது சட்டையைப் பற்றியவள், “அம்மு‌ எங்க?” என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு எழும்பவில்லை. 

“அம்மு நல்லாருக்கா. அவளுக்கு எதுவும் இல்ல!” சொல்லும் முன் அத்தனை கடினப்பட்டுப் போனான் சீனி. 

“இப்போ எங்க? வெளியே இருக்காளா? அம்மாச்சிகிட்டயா?” அவளது யூகம் ஒன்று சொன்னாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கேள்விகளை மாற்றினாள். உண்மையை எதிர்கொள்ள உள்ளம்‌ மறுதலித்தது. 

கண்ணில் பார்க்காமல் சமாதானமாகமாட்டாள் எனத் தெரிந்தது. 

“வா!” என கைபிடித்து எழுப்பினான். தடுமாறியவளை தாங்கிப் பிடித்தான். வெளியே அழைத்து வர, மொத்த குடும்பமும் மருத்துவமனையில்தான் முகாமிட்டிருந்தனர். பார்த்தவள் மூளைக்குள் ஆயிரம் கற்பனைகள் அவளை சூறாவளியாய் சுழற்றியடிக்க, மீண்டும் தலை கிறுகிறுத்தது.

அவனது கரத்தை அழுத்திப் பிடித்து நிறுத்தினாள். திரும்பிப் பார்த்தான். கலங்கிய கண்களோடு அவன் முகத்தையே பார்க்க, அவள் கண்களின் தவிப்பு புரிந்தது. அதை வாய்விட்டுக் கேட்கக் கூடத் தைரியம் இல்லை அவளுக்கு. 

பிடித்த கரத்தின் மீது தனது இடக்கையை வைத்து ஆதரவாக அழுத்திக் கொடுத்தவன், “நம்ம அம்முவுக்கு நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் ஆகல. தைரியமா வா!” என்று சொல்வதற்குள் இவன்தான் மொத்த பலத்தையும் இழந்தது போல் உணர்ந்தான்.  

அவசர சிகிச்சை பிரிவில் உபகரணங்கள் உதவியோடு, பிடிங்கிப் போட்ட குறுத்து வாழையாய், துவண்டு கிடந்த  பிள்ளையை கண்ணாடிக் கதவு வழியாகப் பார்த்தவள், அடக்கமாட்டாமல் சீனியைக் கட்டிக்கொண்டு வெடித்து அழுதாள். ஆதரவாக அணைத்துப் பிடித்தவனுக்கும் கண்களில் கண்ணீர் கரையுடைத்தது. 

1 thought on “முக்கனியும் சக்கரையும் 22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top