3
“கூச்சப்படாம உள்ள வாங்கம்மா!”
சீனி தன்னுடன் அழைத்து வந்தாலும், தயங்கி நின்றவர்களை கிராமத்து வாஞ்சையோடு உள்ளே அழைத்தார் அய்யம்மா.
உள்ளே வந்தவர்களை பழனியும் வரவேற்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.
ஒற்றை சோஃபா ஒன்றில் பார்த்தீபன் அமர்ந்திருக்க, நீள் சோஃபாவில் ராகவன் அம்மாவுடனும், அக்காவுடனும் அமர்ந்து கொண்டான்.
சீனிக்கு கைபேசியில் அழைப்பு வர, இவர்களை விட்டுவிட்டு, சீக்கிரம் வந்துவிடுவதாக சொல்லிக்கொண்டு, வெளியே கிளம்பி விட்டான்.
பழனியும், “அம்மாச்சி கூட பேசிட்டிருங்க… இதோ வந்துர்றேன்!” என்று சொல்லிவிட்டு அடுக்களை சென்று விட்டாள்.
அப்பொழுதே தண்டபாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இன்றிரவு இரயிலில் அவன் ஊருக்குக் கிளம்புகிறான். இன்னும் இரண்டு நாட்களில் அமிர்தாவிற்கு முடி காணிக்கை செலுத்தும் விசேஷமும், கூடவே பழனி, சீனி திருமணமும்.
அதற்கான ஏற்பாட்டைக் கவனிக்க இன்றே ஊருக்கு கிளம்புகிறான் தண்டபாணி. அவனுக்கு தான் தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள் பழனி. அவனை இரயில் நிலையம் அழைத்துப் போகத்தான் பார்த்தசாரதியும் வந்திருந்தான்.
“உம் பேரென்னம்மா!” அய்யம்மா நலம் விசாரிப்பை பெயரில் தொடங்க,
“இலக்கியா பாட்டி!” என்றாள்.
“ஆச்சின்னு கூப்பிடும்மா!” முறை சொல்லிக் கொடுத்தார்.
தண்டபாணி, சாப்பிட்டுக் கொண்டே, கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தான்.
கால்களை சேர்த்து வைத்து, ஒரு பாதத்தின் மீது மற்றொரு பாதத்தை வைத்து அழுத்தியவாறு, முதுகுத்தண்டு நேராக, தோள்களை குறுக்கி, விரல்களை இறுகக் கோர்த்திருந்த விதமே புது இடம், புது மனிதர்கள் மத்தியில் அசௌகர்யமாக அமர்ந்திருப்பது தெரிந்தது.
அய்யம்மா வந்தவர்களை சம்பிரதாயமாக இல்லாமல் முகம் மலர, வாய் நிறைய வரவேற்ற விதத்திலேயே இருவருக்கும் அவரைப் பிடித்துப் போயிற்று. முகம் திரிந்து நோக்கக் குழைவது விருந்தல்லவா. குசல விசாரிப்புகள் முடிந்தது.
ராகவன், பார்த்தியுடன் பேசிக்கொண்டிருக்க, அய்யம்மாவும் சுகந்தியும் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நெடுந்ந்ந்ந்……தொடரைப்பற்றி சுவாரஸ்யமாக விவாதிக்க, இவள் மட்டும் தனித்து மோட்டு வலையைப் பார்ப்பது போல் அமர்ந்திருந்தாள்.
தண்டபாணி, சாப்பாட்டு மேஜை மீது அமிர்தாவையும் அமரவைத்து அவளுக்கும் ஊட்டிக் கொண்டே சாப்பிட,
பழனி, “அண்ணா… உனக்கு டைம் ஆகுது பாரு. நீ சாப்பிட்டு கிளம்பு. அவளை நான் பாத்துக்கறேன்!” எடுத்து வந்த தோசையை தட்டில் வைத்துவிட்டு சொல்லிச் சென்றாள்.
“அதெல்லாம் டைம் இருக்கு!” என்றவாறே ஊட்ட,
இதுதான் சாக்கென, “மாமா… போதும்! உங்களை ட்ரெய்ன் விட்டுட்டுப் போயிறும்!” என்று மாமனிடமிருந்து தப்பிக்கப் பார்க்க, வாயில் தோசையை வைத்துக் கொண்டே பேசியதில் அமிர்தாவிற்கு புரையேறியது.
“பழனி… தண்ணி!” அவசரமாகக் குரல் கொடுத்தான்.
பழனி, தோசை ஊற்றிக் கொண்டே, “வர்றேண்ணா” என்று உள்ளிருந்து குரல் கொடுக்க,
சட்டென எழுந்த இலக்கியா, தன் காலுக்கடியில் பழனி கொடுத்துச் சென்ற தண்ணீர் செம்பு இருக்க, எடுத்துச் சென்றாள். அமிர்தாவிற்கு குடிக்கக் கொடுத்து கூடவே தலையையும் தட்டி, முதுகையும் நீவிவிட்டாள்.
இப்பொழுது இன்னும் அவளை நெருக்கத்தில் பார்த்தான். அப்பொழுதுதான் சோப்பு போட்டு கழுவி வந்த முகம் சோர்வு நீங்கி பளிச்சென இருந்தது. கலைந்த தலை முடியை மேலாக ஒதுக்கி வந்திருப்பாள் போல. வாடிய மல்லிச்சரம் இன்னும் தலையில் இருக்க, அருகில் நின்று அமிர்தாவிற்கு தலையைத் தட்டிக் கொடுத்ததில் ஒன்றிரண்டு உதிர்ந்து அவன் தட்டிலேயே விழுந்தது.
“மாமா போதும்… பாத்ரூம் போணும். ஆன்ட்டி இறக்கிவிடுங்க!” சாப்பாட்டிலிருந்து தப்பிக்க அடுத்த காரணத்தை சொல்லிவிட்டு, அமிர்தா டேபிளில் இருந்து எழுந்தவள், சேரில் கால் வைத்து இறங்க முயற்சிக்க, இலக்கியா கை கொடுத்து தூக்கி கீழே இறக்கிவிட்டாள்.
இலக்கியா இறக்கி விட்டது தான் தாமதம். விட்டால் போதுமென ஓடிவிட்டாள். அவளது செய்கையில் சிரித்தபடியே திரும்ப, அதே தெற்றுப்பல் வரிசை இப்பொழுதும் அவனை வசீகரித்தது. தன்னை மறந்து ஒரு கணம் அவளையே பார்த்திருந்தான்.
என்ன பார்வை இது என்பது போல் புருவம் சுருக்கிப் பார்த்தவளுக்குள் படபடத்தது. சட்டென பார்வையை விலக்கிக் கொண்டான். ஒரு நொடி என்றாலும் அந்தப் பார்வை பெண்ணவளை ஏதோ செய்ய, அவளால் தான் அவனது பார்வையின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுக்குமே தான்.
துப்பட்டாவை எடுத்து மேலுதட்டைத் துடைத்துக் கொண்டாள்.
அடுத்த நிமிடம், “ம்மா… ட்ரெஸ் ஈரமாயிருச்சு. மாத்திவிடுங்க!” ஈரம் சொட்டச் சொட்ட வந்து நின்றாள் அமிர்தா.
“எத்தனை தடவை சொன்னாலும் ஹேன்ட் ஷவர்ல நனச்சுட்டு வந்து தான் நிப்பியா? மாமாவுக்கு டைமாயிருச்சுடீ. அப்படியே இரு!”
தண்டபாணி, “பழனி… அவளுக்கு ட்ரெஸ் மாத்திட்டு வந்து ஊத்து. ஒன்னும் அவசரமில்ல!” என்றான்.
“இவளை…” என்று பழனி பல்லைக் கடிக்க,
“நீங்க போங்கக்கா… நான் தோசை ஊத்தறேன்!” என்று உதவிக்கு வந்தாள் இலக்கியா.
“அடுத்து முட்டை தோசை ஊத்தணும்!” என்று சொல்ல,
“பரவாயில்லக்கா நான் ஊத்தறேன். நீங்க போய் பாப்பாக்கு ட்ரெஸ் மாத்திவிடுங்க!”
“தாங்க்ஸ் இலக்கியா! இவளோட…” என்று அலுத்துக் கொண்டே சென்றாள்.
அறிமுகமில்லாத இடத்தில் அறிமுகமில்லா நபர்களுடன் என்ன பேசுவதென்று தெரியாமல் சங்கோஜமாக அமர்ந்திருந்தவளுக்கு, தோசை ஊற்றுவது தேவலாம் எனப்பட்டது. சட்டென அந்தச் சூழலோடு பொருந்திவிட்டாள்.
தோசை வார்த்து எடுத்து வந்து தட்டில் வைத்துவிட்டுப் போனாள். அடுத்து ஒரு தோசையோடு எழுந்து விடலாம் என்று நினைத்தவன், சேர்த்து இரண்டு தோசை சாப்பிட்டு விட்டே எழுந்து கொண்டான்.
*****
“நீங்களும் வாங்கம்மா. பழனி முருகனை தரிசனம் பண்ண மாதிரியும் இருக்கும்!”
அய்யம்மா சுகந்தியையும், இலக்கியாவையும் தங்களுடன் வருமாறு அழைக்க, அவருக்கும் ஆசையாகத்தான் இருந்தது. கோவில் என்றால் தான் சுகந்திக்கு போதுமே. ஏனோ கணவன் இறந்த பிறகு கடவுளே கதிமோட்சம் என்று இருந்துவிட்டார்.
உள்ளூர் கோவில்களையே எத்தனை தரம் சுற்றுவது. பிள்ளைகள் வளரும் வரைதான் நீண்ட பயணம் என்று எங்கும் சென்றதில்லை. உள்ளூரிலேயே காலத்தை ஓட்டியாகிவிட்டது.
அய்யம்மா அழைக்கவும் சுகந்திக்கும் உள்ளூர ஆசைதான் என்றாலும் முன்ன பின்ன அறிமுகமில்லாதவர்கள் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக எப்படிச் செல்வது என்ற தயக்கம். அய்யம்மா அழைக்கிறார்தான். அது ஏதோ பேச்சுவாக்கில் வாங்கம்மா போகலாம் போன்றதொரு சம்பிரதாய அழைப்புதானே.
சுகந்திக்கு மருத்துவமனை சென்று வந்ததிலேயே இரண்டு நாள் பொழுதும் சட்டென கடந்துவிட்டது. இலக்கியாவையும், சுகந்தியையும் இரண்டு நாட்களாக இங்கேயே சாப்பிட்டு கொள்ள சொல்லிவிட்டார் அய்யம்மா. அவர்களை தனியாக சமைக்க விடவில்லை. பெரிய மனுஷி சொல்லைத் தட்ட முடியாமல் போக, இலக்கியாவும் பழனியோடு சேர்ந்து சமையலில் ஊடமாட ஒத்தாசை செய்தாள்.
பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை என மருத்துவ ரிப்போர்ட்டும் வாங்கி வந்துவிட்டான் ராகவன்.
“நானும் இதைத்தாம்மா இவன்கிட்ட சொன்னேன். இவன் தான் கேக்கல. அவரும் சின்ன வயசுலயே எங்களை விட்டுப் போயிட்டதால, பிள்ளைக ரொம்ப பயந்துருச்சுங்க!” கீரையை ஆய்ந்து கொண்டே சுகந்தியும், அய்யம்மாவும் பேசிக்கொண்டிருக்க,
“நம்ம பிள்ளைகளுக்கு நாமதான் ஆதரவு சுகந்தி. சாப்பிடாம பட்டினி கிடந்து தான் சாமி பக்தியைக் காமிக்கணும்னு இல்ல!”
“நல்லா சொல்லுங்க ஆச்சி! நானும் தம்பியும் எத்தனைதரம் சொன்னாலும் கேக்குறதில்ல!” இலக்கியா அடுக்களையில் இருந்தவாக்கிலேயே அம்மா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாள்.
“நமக்கெல்லாம் வாயைக் கட்ட முடியாது!” இது அய்யம்மா.
“ஆமாமா… காலைக்குள்ள இது ரெண்டாவது காஃபி! ஆனா, எங்க தாத்தாவை மட்டும் ஒன்னும் சாப்பிட விடறதில்ல! சுகந்திக்கும், அய்யம்மாவுக்கும் காஃபியைக் கொண்டு வந்து கொடுத்தவாக்கில் பழனி சொல்லிச் சென்றாள்.
“உங்க தாத்தாதான் உப்பு, புளி, காரம், சக்கரைன்னு மளிகைக்கடையே உடம்புல வச்சிருக்காரே. தனியா எதுக்கு சாப்பிட்டுக்கிட்டு!” பேத்திக்கு நொடிப்பாய் பதிலை கொடுத்துவிட்டு, காபியை குடித்து முடித்தார்.
இவர்கள் வந்த இரண்டு நாட்களும் அய்யம்மாவிற்கு பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தது போல் ஆயிற்று.
மதியம் சாப்பிட வந்த சீனியும் இவர்களை விசேஷத்திற்கு அழைத்தான். இவர்களைப் பொறுத்த வரையில் அது அமிர்தாவிற்கு முடி காணிக்கை செலுத்தி காது குத்தும் விசேஷம். அவள் காணாமல் போய், எவ்வித ஆபத்துமில்லாமல் திரும்பக் கிடைத்ததற்கான வேண்டுதல். அப்படித்தான் நினைத்துக் கொண்டனர்.
ஆனால் பழனி, சீனி இருவரும் ஏன் தனித்தனி வீட்டில் என்ற சந்தேகம் சுகந்திக்கு எழாமல் இல்லை. தனிமையில் மகனிடம் தன் சந்தேகத்தை கேட்டார். ராகவனும் தனக்குத் தெரிந்த வகையில் மேலோட்டமாகக் கூறினான். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கும் வகையில் இரண்டு குடும்பங்களுக்கும் ஏதோ பிரச்சினை என்று மட்டுமே சொல்லி வைத்தான்.
அடுத்தவர் அந்தரங்கம். இதற்கு மேல் அவனும் விலாவரியாகக் கூறவில்லை. அடுத்தவர் குடும்ப விவகாரங்களை தோண்டித் துருவும் பழக்கமில்லாததால் சுகந்தியும் கண்டுகொள்ளவில்லை.
சுகந்தி தயங்க, “வாங்கம்மா… என் பக்கம் யாரையும் அழைக்கல. ராகவன் மட்டும் தான். நீங்களும் வந்தா நல்லாருக்கும்!” என்று சொல்ல சுகந்தி மகளைப் பார்த்தார்.
இலக்கியா சம்மதமாகத் தலையை ஆட்ட, சுகந்தியும் சம்மதம் சொல்ல, அன்றிரவே தட்கலில் டிக்கெட் புக் செய்து அவர்களோடு இருவரையும் இரயில் ஏற்றிவிட்டான்.
மறுநாள் காலை… பழனி இரயில் நிலையம்.
இவர்களை அழைத்துச் செல்ல முன்பே வந்து காத்திருந்தான் தண்டபாணி.
“தண்டம் மாமா!”
மாமனைக்கண்டு ஆர்ப்பரித்த மருமகளை இரயிலை விட்டு இறங்கும் முன் அள்ளிக் கொண்டான் மாமன்.
பழனி இறங்கிக் கொண்டு மகளை வாங்கிக் கொள்ள, தாத்தா, அம்மாச்சியை கை பிடித்து மெதுவாக இறக்கி விட்டான். அடுத்து ராகவன் இறங்க, அவனைத் தொடர்ந்து சுகந்தி நின்றதைப் பார்த்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
ராகவன் வருவது முன்பே தெரியும். அவனது அம்மாவை எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் தானே அவர்கள் வருவது முடிவானது. அவனது பார்வை அவசரமாக அவருக்குப் பின்னால் அலைபாய்ந்தது.
சுகந்திக்குப் பின் இன்னும் சிலபேர் இறங்குவதற்காக நிற்க, அவன் தேடிய முகம் தென்படவில்லை என்றதும் சட்டென முகம் தொய்ந்தது.
ஒரு வேளை வயதுப் பெண் என்பதால் வெளியூருக்கு அவளை அழைத்து வரவில்லை போல என நினைத்துக் கொண்டவன், அவளை மட்டுமா தனியாக செங்கல்பட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் என்றும் ஒருபுறம் கோபம் வந்தது.
அன்று அவள் அபார்ட்மெண்ட் வாயிலில் மலங்க மலங்க முழித்துக்கொண்டு நின்றதைத்தான் பார்த்தானே. தனியே எப்படி சென்றிருப்பாள் என்ற எண்ணம்.
சென்னைதான் அவர்களுக்கு புது இடம். அதனால் தான் அன்று தயக்கமும், தடுமாற்றமும். அங்கு சென்றுவிட்டால் பழகிய இடத்தில், சொந்த ஊரில் எதற்கு பயப்படப் போகிறாள் என அவனே காரணமும் சொல்லிக் கொண்டான்.
உனக்கேன் இவ்வளவு அக்கறை! மனசாட்சி தட்டி எழுப்பி கேள்வி கேட்க, அதெல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறந்தவிங்களுக்கு வர்ற சாதாரண கவலைதான். தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டான்.
சுகந்தி இறங்கி நிற்க, “வாங்க!” என்று மட்டுமே அழைத்தான்.
எந்த உறவு முறை சொல்லியும் அழைக்கவில்லை. அவரது தோற்றத்திற்கு சட்டென வாங்கம்மா என்றும் அழைக்க வரவில்லை. ஒரு வேளை அந்த அழைப்பு அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ. இலக்கியாவிற்கு பெரிய அக்கா போலத்தான் இருந்தது சுகந்தியின் தோற்றம். அவனது உறவு வகைகளிலும் சுகந்தி வயதில் அவனுக்கு அக்காக்காள் ஏராளம்.
இறங்கியவர்கள் முன்னே நடக்க எத்தனிக்க, சுகந்தியும், ராகவனும் அங்கேயே நின்றனர். யோசனையாக திரும்பிப் பார்த்தான். அவர்கள் பார்வை இன்னும் வாயிற்படியையே நோக்க, அவனும் நோக்கினான்.
இரண்டு பேருக்குப் பின் அவன் தேடிய முகம் தென்பட பார்வை ஆவலாய்ப் பளிச்சிட்டது. கடைசி நேரத்தில் தட்கலில் டிக்கெட் புக் செய்ததால் ஒரே கம்பார்ட்மென்டில் கிடைக்கவில்லை. வெவ்வேறு கம்பார்ட்மென்ட். அதனால் தான் முன்ன பின்ன இறங்கினர்.
ஒரு கையில் பேக்கைப் பிடித்துக் கொண்டு மறு கையில் கம்பியைப் பிடிக்க, கீழே நின்றிருந்தவன் கையை நீட்டினான். தண்டபாணி கை நீட்டவும் எதற்கு என்று புரியவில்லை அவளுக்கு. புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
கைபிடித்து இறக்கிவிட நானென்ன சின்னபிள்ளையா, இல்லை வயதானவளா என்ற எண்ணம்தான் தோன்றியது அவளுக்கு.
உள்ளிருந்தபடியே அமிர்தாவையும், தாத்தா பாட்டியையும் கை பிடித்து இறக்கியதைத்தான் பார்த்தாளே. அது போல் எண்ணிக் கொண்டு அவள் புரியாத பார்வை பார்க்க, இப்படியே பாத்து மனுஷனை ஒரு வழியாக்கிறுவா போலயே. தண்டபாணி வந்தவங்க முன்னாடி கெத்த விட்டுறாதடா! மனசாட்சி எச்சரிக்க,
“பேக்க கொடு!” என்றான் அதிகாரமாக.
அப்பொழுதுதான் அவளுக்கு அவன் கை நீட்டியது பேக்கை கேட்டு எனப் புரிய, கொடுக்க தயங்கினாள். தம்பியே வாங்காமல் நிற்கும் பொழுது இவனிடம் எப்படி கொடுப்பது.
சென்னையில் அவனை முதன் முதலாக பார்த்தது போல் இல்லாமல் இன்று கைலி, டீசர்ட் என வெகு இயல்பாக வந்திருந்தான்.
“அதென்னடா… பொம்பளப்புள்ளைக இருக்குற வீட்ல, வளந்த ஆம்பள ட்ரவுசர், சட்டையோட இருக்கறது. பொம்பளப்புள்ளைகளுக்கு சொல்றதுதான், ஆம்பளப் பயலுகளுக்கும். கைலி இல்லைனா வேஷ்ட்டி கட்டு” என ஒரே போடாக போட்டு விடுவார் தணிகைவேல். ட்ராக்பேன்ட், முக்கால் ட்ரவுசருக்கெல்லாம் நாட் அலவ்ட்.
“உனக்கு லேடீஸ முன்னாடி விட்டு இறங்கணும்னு தெரியாதா? பேக்கையாவது வாங்கணும்கற யோசனையில்லாம நிக்கிற!”
திரும்பிப் பார்த்து சுள்ளென விழுந்தான் ராகவன் மீது. ஒரே எட்டில் தாவி வந்து இலக்கியா கையிலிருந்த பேக்கை பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டான் தம்பி.
‘ஆரம்பமே அமர்க்களம்தான் போ!’ என்ற எண்ணம்தான் ராகவனுக்குள்.
‘பழனிமலை முருகா இவர்கிட்டருந்து எப்படியாவது என்னை காப்பாத்தி விட்டுறு!’ பழனியில் காலடி வைத்தவுடன் இந்த தண்டபாணியிடமிருந்து காப்பாற்ற அந்த தண்டாயுதபாணியிடம் வேண்டுதல் வைத்து விட்டான். காலம் முழுக்க அவனோடு இவனை கோர்த்துவிடப் போவது தெரியாமல்.
“ஏன்டா எப்ப பாத்தாலும் உன்னையே முறைக்கிறாரு?” மெதுவாக யாருக்கும் கேட்காமல்தான் கேட்டாள். இருந்தாலும் அந்த அதிகாலை வேளையில், இவர்களை முன்னேவிட்டு பின்னால் வந்த தண்டபாணி காதிலும் விழுந்தது.
அவளைப் பார்க்கும் பொழுது தன் பார்வையும், எண்ணவோட்டமும் மாறுகிறது என்பது தெரிந்துதானே அதை கோபமாக ராகவன் மீது திருப்புகிறான். பொறுப்பான அண்ணனாகவே இருந்து பழகியதாலோ என்னவோ ஒரு பெண்ணின் பால் தன் மனம் ஈர்க்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதுவுமில்லாமல் மேடை வரை வந்த திருமணமே நின்று போனதில், அதன் பிறகு சாதாரணமாகக் கூட எந்த பெண்ணின் மீதும் பார்வை பதியவில்லை.
ஒன்றுக்கு இரண்டு திருமணம் தடைபட்டது, அத்தோடு நில்லாமல் பழனியின் வாழ்க்கையில் ஏற்பட்ட குழறுபடிகள் குடும்பத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது, கையில் குழந்தையோடு தங்கை வாழ்க்கை ஒரு முடிவில்லாமல் தத்தளிப்பது என இதுநாள் வரைக்கும் அவனுக்குள் வேறெந்த சிந்தனைக்கும் வழியில்லாமல் போயிற்று. காதலுக்கும் அவனுக்கும் காத தூரம் என்று அவனே கற்பித்துக் கொண்டது.
இப்பொழுது சீனி, பழனியைத் தேடி வந்ததில் ஓரளவிற்கு தங்கையின் வாழ்க்கையில் ஒளி பிறக்க, இவனது கவனமும் ஒரு பெண்ணின் மீது விழுகிறதோ என்னவோ.
இரயில் நிலையம் விட்டு வெளியே வந்தனர். தண்டபாணி அழைத்து வந்திருந்த குதிரை வண்டிக்காரர் இருவர் வேகமாக வந்து பைகளை வாங்கி வண்டியில் வைத்துவிட்டு, பழனியை நலம் விசாரித்தனர்.
அருகில் இருந்த டீக்கடைக்கு இவர்களை அழைத்து சென்றான். அய்யம்மாவிற்கு காலை எழுந்தவுடன் காஃபியோ, டீயோ சூடாக வயிற்றுக்குள் வார்த்துவிட வேண்டும். எதுவும் வாங்கிக் கொடுக்காமல் அழைத்துச் சென்றால் ஒரு சுடு தண்ணீ கூட வாங்கிக் கொடுக்கல என்று வீட்டிற்குப் போனதும் மானத்தை வாங்கிவிடுவார். எல்லோருக்கும் காஃபி சொல்லிவிட்டு அமர்தாவிற்கு பால் வாங்கினான். சூடாக இருக்க இவனே இன்னொரு டம்பளர் வாங்கி ஆற்றிக் கொடுத்தான்.
இலக்கியா, மறுக்க முடியாமல் வாங்கியவள், டீயை குடித்து முடிக்க அடுத்த நிமிடம் அவசரமாக ஒதுக்குப்புறம் தேடி ஓடினாள். குடித்த காஃபி முழுவதும் வாயிலெடுத்தாள். சுகந்தியும் மகள் பின்னாலே சென்றுவிட,
“ஆரம்பிச்சாச்சா!” என்றான் ராகவன்.
கேள்வியாக அவனைப் பார்க்க, “அக்காவுக்கு டீ, காஃபி ஒத்துக்காது சார்!” என்றான்.
“முதல்லயே சொல்லி இருக்கலாம்ல. பாலாவது வாங்கியிருக்கலாமே!” என்றான்.
“பால் வாடையே ஆகாது. இவ்வளவு தூரம் ட்ராவல் இதுதான் முதல் தடவை. சரியா தூங்கலைனா அக்காவுக்கு எதுவுமே வயித்துல தங்காது” என்றவனை முறைத்துப் பார்த்தான்.
“உங்க அக்காவுக்கு டீ, காஃபி ஒத்துக்காதுன்னு உனக்கு தெரியும் தானே. வாங்கும் போதே வேண்டாம்னு சொல்லக்கூடாதா?” அவள் தான் மறுத்துப் பேச முடியாமல் வாங்கினாள் என்றால் இவனாவது சொல்ல வேண்டியதுதானே. அதற்கும் ராகவனிடமே எகிற, கந்தா என கதறாத குறைதான் அவனுக்கு.
“ஏன் பாத்துட்டே நிக்கிற. தண்ணி வாங்கிட்டுப் போ!” என்று அதட்டல் போட்டான். ராகவனும் தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கிக் கொண்டு சில்லறை தேட,
“முதல்ல தண்ணியக் கொண்டு போய் கொடு. அதெல்லாம் அப்பறம் பாக்கலாம!” அவசரத்திற்கு தண்ணீர் வாங்கச் சொன்னால் இவன் வேறு சில்லறை தேடிக்கொண்டு இருக்கிறானே என கடிக்காத குறைதான்.
தம்பியிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கியவள், வாய் கொப்பளித்து, முகம் கழுவி துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டே வந்தாள். கண்கள் கலங்கி, மூக்கின் நுனி சிவந்து, முகம் கசங்கி, சோர்வாக வந்தவளைப் பார்க்க ஒரு மாதிரி ஆயிற்று.
இரவு சரியாக தூங்காதது, முதன் முறை நெடுந்தூரப் பயணம், ஒத்துக்கொள்ளாத பால் காஃபி என ஒட்டுமொத்தமாக எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி பண்ணியது. அவளுக்கு பால் சம்பந்தப்பட்ட பொருள் எதுவும் ஆகாது.
“லெமன் டீ சொல்லவா?” அவளது சோர்ந்த முகம் பார்த்து கேட்க, மறுப்பாக தலையசைத்தாள். இப்ப ஆட்டின தலைய அப்பவே ஆட்டியிருக்கலாம் என நினைத்துக் கொண்டான்.
“வேண்டாம் தம்பி. எதுனாலும் வீட்டுக்கு போய் பாத்துக்கலாம். வழியில மறுபடியும் ஒமட்டிட்டு வந்தா சிரமம்!” என்றார். அவர் சொல்வதும் சரியெனப்பட, டீ கடை விட்டு வெளியே வந்தனர்.
இரண்டு குதிரை வண்டிகளில் பெண்கள் ஒரு வண்டியிலும் ஆண்கள் ஒரு வண்டியிலுமாக ஏறிக்கொண்டனர். சுகந்திக்கும், இலக்கியாவிற்கும் முதல் முறை குதிரை வண்டிப் பயணம் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்தது. பழைய சினிமாக்களில் பார்த்தது.
தண்டபாணி குதிரை வண்டிக்காரர் பக்கத்தில் முன் பக்கமாக ஏறிக்கொண்டு அவனே தாம்புக் கயிறையும், சாட்டையையும் கையில் வாங்கிக் கொள்ள, “மாமா நானும்” என்று அமிர்தா கை நீட்ட, மருமகளைத் தூக்கி இவன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.
சிறுவயதில் இருந்தே இது அவனுக்கு வழக்கம்தான் என்பதால் வண்டிக்காரரும் கொடுத்துவிட்டு, சற்று உள்ளே தள்ளி அமர்ந்து கொண்டார்.
இவர்கள் வண்டிக்கு முன் பெண்கள் வண்டி செல்ல, இலக்கியாவும், பழனியும் காலைத் தொங்கப்போட்டு சாலையைப் பார்த்து அமர்ந்திருந்தனர்.
இலக்கியாவிற்கு இது புதிய அனுபவம் என்பதால் அவள் முகத்தில் லஜ்ஜை கலந்த சந்தோஷம். ஆனாலும் முகமெல்லாம் களைப்பு நீங்கி பூரித்திருந்தது. பழனியும், இலக்கியாவும் சிரித்தபடி ஏதோ பேசிக்கொண்டே வந்தனர். அதே தெற்றுப்பல் சிரிப்பு இவனை வசீகரிக்க, அவனாலும் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
குதிரை வண்டி மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் பாவையவள் பின்னோடுதான் சென்றது.
வண்டியில மாமன் பொண்ணு
ஓட்டுறவன் செல்லகண்ணு
எங்க வீட்டு ராணி வர்றா
எல்லாம் வந்து பாத்துக்குங்க

Nice
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰🍫🍫🍫🍫🍫
Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰🍫
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Super super super
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
ஏன் தண்டபானி சைட்டடிக்கறது நீ. ஆனா உன்னை திட்டிக்காம ராகவனை திட்டுறது எதுக்காம்? ராகவா லைப் லாங்க் விமோசனம் இல்லை போ
😂😂😂😂😂
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫 🍫🍫🍫🍫
Attagasam
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
யப்பா தண்டா..!! நிஐமா நீயாப்பா இது 😀
தெத்திப்பல் சிரிப்பில் விழுந்து ரொம்ப நாளாச்சு.
அப்புறம் உன்தப்பை மறைக்க ராகவன் மேலல் பாயுறதை குறைத்துக்கொள் ராசா, அப்புறம் அவன் உனக்கு பொண்ணு தரமாட்டான்.
அவன் ஒரு அப்பாவி, பாவம் அவன்.
அதென்னமோ அவனுக்கு மச்சான்களே ஆக மாட்டேங்குது மா 😂😂
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫