20
“யார் இது?” கட்டுக்கடங்காத கோபத்தை அடக்கிக் கொண்டு, தன் கைபேசியை சீனி முன் காண்பித்துக் கேட்டான் தண்டபாணி.
திரையில் தெரிந்த முகத்தைப் பார்த்தவன், “என்ன தண்டபாணி… நேத்து நடந்ததுக்கு இப்ப கணக்குத் தீக்குறீங்களா?” என்றான் ஏளனக் குரலில்.
“உங்க அளவுக்கு என்னால சீப்பா இறங்க முடியாது!” அவன் முகம் பார்க்கக் கூட பிடிக்கவில்லை என்பது போல் பார்வை எங்கோ பதிந்திருந்தது.
“அது நாங்களே எதிர்பாக்காம, தவறுதலா நடந்தது தண்டபாணி!” தவறு இவன் பக்கம் எனும்பொழுது அவனும் தணிந்துதான் போகவேண்டியிருந்தது. செய்த காரியம் அப்படி.
“எவ்ளோ ஈஸியாச் சொல்லிட்டீங்க. அதோட அவமானத்தை அனுபவிச்சது எங்க குடும்பம்தானே? யாரும் வாய்விட்டு கேக்கலையே தவிர, பார்த்த பார்வை ஒன்னு பத்தாதா? முச்சந்தியில் நிக்கவச்சு செருப்பால அடிச்சமாதிரி இருந்துச்சு! இன்னும் எங்க அப்பாவை நேருக்கு நேர் பாக்குற தைரியம் எனக்கு வரல. பொம்பளப் பிள்ளைக கூட போயிட்டு என்ன வேலை பாத்திருக்கேனு நேரிடையாக் கேக்கல. அவ்வளவுதான்” என்றவன் குரலும், முகமும் கல்யாண மாப்பிள்ளைக்கான அடையாளத்தை முற்றிலுமாகத் தொலைத்திருந்தது. பட்ட அவமானம் அப்படி.
“அது ஏதோ மாமன், மச்சான் விளையாட்டு போல நெனச்சு பண்ணிட்டானுங்க. அதை அசிஸ்டன்ட்ஸ் வீடியோ எடுத்து வச்சுருப்பாங்கனு நானும், வினீத்துமே எதிர்பாக்கல. அதுக்குதான் நானும், அவனும் உங்ககிட்ட அத்தனை தடவை சாரி கேட்டேமோ!”
சீனி கூறிய சமாதானத்தைக் கேட்டவன் விரக்தி கலந்த சிரிப்போடு ஏறிட்டுப் பார்த்தான். எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டான். மன்னிப்பு கேட்டதாக. உறவினர்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்கமுடியாமல், நேற்றிரவு மேடையில் குறுகிப் போய் நின்றது அவனுக்குத்தானே தெரியும். யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லைதான். ஆனால் பார்த்த பார்வை. அது ஒன்று போதாதா?
“இந்தக் காலத்துல எந்தப் பயலுகளையும் நம்ப முடியலப்பா. படிக்க, வேலைபாக்கனு போற எடத்துல எல்லாத்தையும் கத்துக்குறானுங்க! நம்ம கைவிட்டு விலகிட்டாலே அவிங்க இஷ்ட்டம்தான்!” நேரிடையாக கேட்க முடியாதபாட்டிற்கு தங்களுக்குள் பேசிச் சென்றவர்கள் எத்தனை பேர்.
மதுவின் வாசமே அறியாதவனுக்குக் குடிகாரன் என்ற பட்டம். அதுவும் போதையில் நிதானமில்லாமல் ஆட்டம் போடும் அளவிற்கு. நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் காந்தியது தண்டபாணிக்கு. அந்த அவமானமெல்லாம் உனக்கு ஒன்றுமே இல்லை, அது வெறும் முன்னோட்டம் மட்டுமே என்றது, தற்சமயம் அவனுக்கு வந்த தகவல். உலைகளன் போல் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான்.
முன்தினம் மாலை உற்றார், உறவினர் முன்பு சீனியப்பன், பழனியம்மாள் நிச்சயதார்த்தம் மண்டபத்தில், நல்லபடியாக நடந்தேறியது. அதுவரை இருண்டிருந்த பழனி முகம் சற்றே தெளிச்சலைக் காட்டியது.
“என்ன கலை! பழனி, கல்யாண செழிம்பில்லாம இருக்கா?” திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்து, கணவரோடு வந்திறங்கிய வந்தனா கூட கலையரசியிடம் கேட்க,
“மாமியா வீட்ல, இங்க மாதிரி நெனச்ச நேரம் தூங்கி, நெனச்ச நேரம் எந்திரிக்க முடியாதில்ல. அந்தக் கவலையா இருக்கும்க்கா!” மகளை கேலி பேசினார் கலையரசி.
இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் அம்மாவின் கேள்விக்கு, “உங்க தங்கச்சி, மக தூங்கட்டும்னு தாலாட்டுப் பாடிட்டு னதான் மறுவேலை பாப்பாங்க பெரியம்மா!” பதிலுக்கு பதில் வாய் பேசியிருப்பாள் பழனி.
கொடைக்கானலிலிருந்து வந்தபொழுது, மகள் முகத்திலிருந்த தெளிச்சல், இந்த இரண்டு நாட்களாக இல்லை என்பதை பெற்ற மனம் எப்பொழுதோ கண்டுகொண்டது. திருமணத்தை நினைத்து, தங்களை விட்டுப் பிரியப்போவதை நினைத்து மகள் உள்ளுக்குள் மருகுவதாக எண்ணிக் கொண்டார்.
இரண்டு ஜோடிகளும் மேடையில் நிற்க, கண் குளிரப் பார்த்து பெற்றவர்கள் மனம் பூரித்தது.
மண்டபம் வந்ததிலிருந்து அவளைத்தான் ஆவலாகத் தேடின சீனியின் கண்கள். உன்னைத் தனியே சந்திக்க வேண்டும் என பலமுறை வாட்சப் தகவல்களை அனுப்பிவிட்டான். மேலோட்டமாகப் பார்த்தவள் எந்த பதிலும் அனுப்பவில்லை.
மாலை இவர்கள் நிச்சயதார்த்தம் என்பதால், மண்டபத்தில் உறவுகள் அத்தனை பேரும் கூடியிருந்தனர்.
மணப்பெண் அலங்காரத்தோடு மேடையேறியவளை, கண்களில் ஆசை பொங்க பார்க்க, அவளோ அவன் பக்கம் திரும்பக் கூட இல்லை. எல்லார் முன்னிலும் தன்னைப் பார்க்க கூச்சம் என்பதுபோல் இவனே கற்பித்துக் கொண்டாலும், இரண்டு நாட்கள் முன்பு, கொடைக்கானல் விட்டு இறங்கும் பொழுது அவளது முகத்தில் காண்பித்த பரிமாணம் இதுவல்ல என்று உள்மனம் சொல்லியது.
“ஹாய் பொண்டாட்டி!” என்றழைத்தவனை,
“இன்னும் நிச்சயமே முடியல. அதுக்குள்ள பொண்டாட்டியா?” கைவளைவில் இருந்தவாக்கில் அண்ணாந்து பார்த்து கேட்க,
“நிச்சயம் முடியலைன்னா என்ன? அதான் கல்யாணமே முடிஞ்சுதே!” அர்த்தமாய் சிரிக்க,
“கல்யாணமா!”
“ம்ம்ம்… காந்தர்வ விவாகம். கேண்டில் நெருப்பு சாட்சியோட உங்கழுத்துல ஜெயின் போட்டு காந்தர்வ விவாகம் முடிச்சுருக்கேன் மேடம். இந்த நிமிஷத்திலிருந்தே நீங்க மிஸஸ் சீனியப்பன். கல்யாணம் முடிச்ச கையோட” என்றவனின் வாயை அவசரமாக கைவைத்து மூட, மலர்ந்து சிரித்தவன், உள்ளங்கையில் அழுத்தி முத்தமிட்டு, உரிமையோடு இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
மறுநாள் அதிகாலையே கொடைக்கானலிலிருந்து இறங்கியவர்கள், சீனி, ரஞ்சனியோடு அப்படியே சென்னை கிளம்பிவிட்டனர்.
முன்தினம் மாலைதான் இவர்கள் வழியில் முக்கிய சொந்தபந்தங்கள் எல்லாரும் ஒரு ஆம்னி பஸ்ஸிலும், இவர்கள் காரிலும் வந்திறங்கினர்.
இன்னும் ஒரு வாரத்தில் சென்னையில் முதல் நாள் மாலை, தண்டபாணி திருமண வரவேற்பும், மறுநாள் காலை, சீனி மற்றும் பழனி திருமணமும் என்பதால், இப்பொழுது பொதிகாச்சலம் பக்கம் சொற்ப சொந்தங்களே! மண்டபம் முழுதும் தணிகைவேல் சொந்தபந்தங்களே.
சென்னையில் மகன் திருமணத்திற்கென, அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்கள் முன்னனியில் வரவேற்பு முதற்கொண்டு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் பொதிகாச்சலம்.
அதற்கு விட்டதில்லை என்றிருந்தது தண்டபாணி மற்றும் ரஞ்சனி திருமணத்திற்கு தணிகைவேலின் ஏற்பாடு. மேலும், பழனியில் திரும்பிய திக்கெல்லாம் இவர்களது திருமண ஃப்ளக்ஸும், கட்அவுட்டும் என நண்பர்கள் வேறு அதிர விட்டிருந்தனர்.
நிச்சயம் முடித்து, திருமண ஜோடிகள் பந்திக்குச் சென்றனர். மண்டப வாசலில் இருந்து வரிசையாக வைத்திருந்த பெரிய திரை டிவிக்களில் கொடைக்கானலில் எடுத்த வீடியோ, பொருத்தமான திரைப்படப் பாடல்கள் பின்னனியோடு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
இறுதியில் கலாட்டா, கேலி, கிண்டல் என எடிட் செய்யப்பெற்ற ப்ளூப்பர் வீடியோ முதற்கொண்டு முற்றிலுமாக ஒருமுறை ஒளிபரப்பாகி முடிய, மீண்டும் முதலிலிருந்து அடுத்தடுத்து வீடியோக்களை ஆட்டோ ப்ளே கொடுத்துவிட்டு வினீத்தும், நண்பன் ஒருவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு உதவியாளர்களோடு பந்திக்குச் சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் பந்தி நடக்கும் இடத்திலேயே “தண்டபாணி அண்ணே! உங்க வீடியோதான் டாப் டக்கர். சும்மா கிழிச்சுட்டீங்க!” என்று ஒருவன் பாராட்டிச் செல்ல, சம்பிரதாயமாக நன்றி சொல்லி புன்னகைத்தான். இந்த புகழாரத்தில் வினீத்திற்கும் பெரிமையாகக் கூட இருந்தது.
பந்திக்கு வந்த இளவட்ட சொந்தங்கள், தண்டபாணியைப் பார்த்து வாய் மூடி சிரித்துச் செல்ல, ப்ளூப்பர் வீடியோ பார்த்து சிரிப்பதாகவே எண்ணிக் கொண்டான்.
ஃபோட்டே எடுக்கும் பொழுது, இவன் சொதப்பியவற்றை எல்லாம் வடிவேல் காமெடி கலந்து ப்ளூப்பர் வீடியோவாக எடிட் செய்து போட்டிருந்தனர். அதை நினைக்கையில் அவனுக்கே வெட்கமாக இருந்தது. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். சாப்பிட்டு முடித்து வந்தவர்கள், திரையில் ஓடிய காட்சியைப் பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டனர்.
தண்டபாணி முகம் அவமானத்தில் கருத்து சிவந்துவிட்டது. ஆடைகளை உருவி நடுவீதியில் ஓட விட்டதைப் போல் கூனிக் குருகிப் போனான். தண்ணித்தொட்டி தேடிவந்த கண்ணுக்குட்டி நான் என்ற பின்னனிப் பாடலோடு தண்டபாணி முழு போதையில் நிதானமில்லாமல், சட்டை பட்டன் எல்லாம் கழன்று, அவன் ஆடிய ஆட்டம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
இறுதியில் மயங்கி விழ, போதையில் மயங்கிய நாய்க்குட்டியை மடியில் போட்டு, டாமி எந்திரி என்ற வடிவேல் காமெடி இணைப்போடு ஒளிபரப்பாகி முடிந்தது. இவர்கள் சாப்பிடும் பொழுது இதைத்தான் அவன் பாராட்டிச் சென்றிருக்கிறான்.
இதையும் ப்ளூப்பர் வீடியோ என நினைத்தே அனைவரும் ரசித்திருக்கின்றனர் எனப் புரிந்தது. வினீத் வந்தவன் அதிர்ந்து, பட்டென ஒளிபரப்பை நிறுத்தினான்.
அப்பொழுதுதான் பொதிகாச்சலம் முக்கிய விருந்தாளி ஒருவர் வர, அவரை வாசல் வரை சென்று வரவேற்று அழைத்துவந்தார். அவர் கண்முன் கண்டதும் மகனின் சாகசத்தத்தைத் தான். காந்திமதி தண்டபாணியைப் பார்த்த பார்வையில் கூட, ஒரு ஏளனம். அவர் வந்திறங்கியதிலிருந்தே, மண்டபத்தில் வசதி குறைவென குறைபடிக்க ஆரம்பித்துவிட்டார்.
பழனிமலை அடிவாரத்தில் அவர்கள் சமூகத்திற்கென தனியாக இருக்கும் மண்டபம் அது. எத்தனை வசதி படைத்தவர்களானாலும் அங்குதான் விசேஷம் வைப்பது. அது சங்கத்து முடிவு. பழனியிலேயே அதுதான் சகலவசதிகளோடு கூடிய பெரிய மண்டபமும் கூட. ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருந்தார் காந்திமதி.
“காந்தி… நீ மாப்பிள்ளை வீட்டுக்காரி மட்டும் இல்ல. இப்போதைக்கு பொண்ணு வீட்டுக்காரியும் கூட. கொஞ்சம் அடக்கி வாசி!” பொதிகாச்சலம் சொல்வதற்கு காந்திமதி செவி சாய்த்துவிட்டாள், பூமி குடை சாய்ந்துவிடாதா?
கலையரசி வந்தவர்களை கவனித்து அவர்கள் இரவு தங்க ஏற்பாடு செய்ய சென்றுவிட்டார். பொதிகாச்சலம் தங்கள் பக்க உறவுகளை அழைத்துக் கொண்டு பந்திக்கு சென்றுவிட்டார்.
முக்கியஸ்த்தரோடு உள்ளே வந்த தணிகைவேல் முகமும் கருத்துவிட்டது. “இந்தக்காலத்துப் பிள்ளைக. இதெல்லாம் நாம கண்டுக்கக் கூடாது தணிகைவேல். கல்யாணம்னா பேச்சுலர் பார்ட்டிங்கறது சாதாரணம்!” வெளிப்படையாகவே அவர் சொல்லிச் செல்ல, உன்கிட்ட நான் இதை எதிர்பாக்கல என்பது போல் தந்தை பார்த்த பார்வையில் கூனிக் குறுகிப் போனான் தண்டபாணி.
சீனியை எரிக்கும் பார்வை பார்த்தான். அவனுக்கும் எப்படி இதை எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அது எடுத்ததே அவனுக்குத் தெரியாதே.
ஆட்டோ ப்ளே செட் செய்ததில், விளையாட்டு போல் இவர்கள் எடிட் செய்த இந்த வீடியோவும் ஒளிபரப்பாகிவிட்டது.
இப்பொழுது பழனி, சீனியை அதிர்ந்து பார்த்தாள். சட்டென முகம் இரத்தப்பசையிழந்து வெளிறிப் போயிற்று. கை காலெல்லாம் வெளவெளத்துப் போயிற்று. கால்கள் நிற்க முடியாமல் துவண்டது. அவள் அரண்டு விழிப்பதைப் பார்த்தவன், அவள் எதை நினைத்துப் பயப்படுகிறாள் என்பதைப் புரிந்தவனுக்கு கோபத்தில் கண்கள் சிவந்துவிட்டது.
“பழனி… நான் அவ்வளவு மட்டமானவன் இல்ல!” என்றான் பல்லைக் கடித்து யாருக்கும் கேட்காமல். இரவின் தனிமையில், ஆலிங்கனம் முடிய, நமக்கு மட்டுமென, சில போட்டோக்களை தனது கைபேசியில் எடுத்தான் சீனியப்பன். காருக்குள், மென்னிருட்டில், புதிய உணர்வு தந்த மயக்கத்தில், இருவர் மட்டும் மிக நெருக்கமாக சேர்ந்து எடுத்துக் கொண்டவை.
எங்கே அதையும் இதுபோல் ஒளிபரப்பிவிட்டால், யாருக்காக இருந்தாலும், ஒரு கணமேனும் இந்த பயம் தோன்றும்தானே.
அவள் பயம் உணர்ந்து அப்பொழுதே தனது கைபேசியை எடுத்தவன், அந்த படங்களையெல்லாம் அவள் கண்முன்னே அழித்துக் காண்பிக்க, அப்பொழுதுதான் அவளுக்கு போன உயிரே திரும்பிவந்தது. ஆழ்ந்து மூச்செடுத்தவளைப் பார்த்தவன்,
“என்னை நம்பலல்ல?” என்றவன் வார்த்தைகளில் வலி தெரிந்தாலும், பெண்மைக்கே உரிய இயல்பான பதட்டம்தானே அது.
“எப்படி நம்பச் சொல்றீங்க? எங்க அண்ணன் குடிக்க மாட்டாங்கனு எனக்குத் தெரியும். நான் ஃபோன் பண்ணப்ப இதனாலதான் நீங்க எடுத்துப் பேசுனீங்களா? இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? அண்ணனுக்கு ஊத்திக் கொடுத்துட்டு… என்னை நீங்க வெளியே கூட்டிப்…” என்று முடிக்கும் முன்பு,
“பழனீஈஈ” பல்லிடுக்கில் யாருக்கும் கேட்கா வண்ணம் இரைந்திருந்தான். கண்கள் சினத்தில் சிவந்து ஜிவுஜிவுத்தது. தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக எண்ணிவிட்டாள் என்ற கோபம். பார்ப்பவர்களுக்கு தண்டபாணி வீடியோவை வைத்து இருவரும் கோபமாகப் பேசிக் கொள்வது போல்தான் தோன்றியது.
“அவசரப்பட்டு வார்த்தையை விடாதே பழனி. உன்னை வெளியே அழச்சுட்டுப் போகணும்னு, உங்க அண்ணனை குடிக்க வச்சதா நெனச்சுட்டல்ல. நடந்தது எதுவுமே எனக்குத் தெரியாது. ஏதோ விளையாட்டுப் போல பண்ணிட்டாங்க. நீங்க கூட வந்த முதல் நாளே காஃபில விளையாடல. அதுமாதிரி தான். இப்ப நடந்ததும் கூட ஆட்டோப்ளேல அடுத்தடுத்து வீடியோ டெலிகாஸ்ட் ஆனதுல, இந்த வீடியோவும் வந்திருச்சு. அதுவும் முப்பது செகண்ட் கூட இல்ல!”
முப்பது செகன்டா இருந்தா என்ன? முப்பது நிமிஷமா இருந்தா என்ன? அவமானம் அவமானம் தானே?
எத்தனை தான் சமாதானம் செய்தாலும் நடந்ததை யாராலும் மாற்ற முடியாதே.
“நாங்க பண்ணதும், நீங்க பண்ணதும் ஒன்னா?” அவனிடம் பேசப் பிடிக்காதவள் போல், சுழித்த முகத்தோடு அங்கிருந்து அகன்றுவிட,
“மொதல்ல அதை டெலீட் பண்ணித் தொலைங்கடா!” உச்சபட்ச கோபத்தில் கத்தினான் சீனி.
*****
“சாரி, கேட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா? தணிகைவேல் குடும்பம்னா இங்க தனி மரியாதை இருக்கு. அதை நீங்க கெடுத்துட்டீங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் போயி, தனித்தனியா கூப்பிட்டு சொல்லமுடியுமா? நான் குடிக்கல. நீங்கதான் கலந்து கொடுத்துட்டீங்கனு. நீங்கதான் படம்போட்டுக் காமிச்சுட்டீங்களே! அதெல்லாம் விடுங்க. இது யார்னு தெரியுமா?” நேற்று நடந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் தோன்றியது தண்டபாணிக்கு.
இதை எப்படி தன் குடும்பம் எதிர்கொள்ளப் போகிறதோ என நினைத்தாலே ஆறடி ஆண்மகனுக்கும் அஸ்த்திவாரமே ஆட்டம் கண்டது. தன்னைப் பற்றிக்கூட அவன் யோசிக்கவில்லை. அடுத்து இதில் தங்கையின் வாழ்க்கையுமல்லவா சிக்கியுள்ளது என்ற நினைப்பு அவனைக் கொல்லாமல் கொன்றது. அம்மா சொன்னதை ஒரு கணம் யோசித்திருக்கலாமோ? பெண் கொடுத்து பெண் எடுப்பது எத்தகைய அனர்த்தத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. தன்னோடு முடிந்தது என்று இருக்க முடியாதே? அடுத்து தங்கையை நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் தீயாய்க் காந்தியது தண்டபாணிக்கு.
அவனுக்கும் திருமண நாள் நெருங்கியதிலிருந்து ஆயிரம் கனவுகள் நெஞ்சுக்குள். இவனே தயக்கம் நீங்கி ரஞ்சனியிடம் ஏதாவது பேச முற்பட்டாலும், கேட்ட கேள்விக்கு மட்டுமே பட்டும் படாமல் பதில் சொன்னாள்.
அக்கா, தங்கைகள் என பெண் பிள்ளைகளோடு கலாட்டாவாகப் பேசிச் சிரித்து விளையாண்டவனுக்கு, அவளது ஒதுக்கம் புதுப் பெண் நாணமாகவே பட்டது. அதற்கு மேல் யோசிக்கத் தோன்றவில்லை. ஆனால் யோசிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று காலம் கடந்து புரிந்தது.
சீனி, “இவன் ஃபேட்டோ உங்களுக்கு எப்படிக் கெடச்சுது?” என்று இறுகிய குரலில் கேட்டதிலேயே,
தண்டபாணி, “அப்போ, உங்களுக்கு இவனைத் தெரியும்னு தெரியுது!” என்றான் அவமானம் சுமந்த குரலில்.
“என்னோட ஃப்ரெண்ட் தான்!” என்றான் விட்டேத்தியாக.
“ஃப்ரெண்ட் மட்டும்தானா?” என்று ஒரு மாதிரி ஏளனமாகக் கேட்க, சீனி புரியாமல் பார்த்தான்.
“மொதல்ல ரஞ்சனிக்கு இவனோடதான் கல்யாணம் பேசினோம்!” மேலோட்டமாகக் கூற,
“கல்யாணம் மட்டும்தான் பேசுனீங்களா? அப்போ… உங்க தங்கச்சி இவனை விரும்பல?” என்றவனின் பார்வை அவனை உற்றுப்பார்க்க,
“இந்தக் காலத்துல இதெல்லாம் சாதாரணம். எல்லாருக்கும் ஒரு பாஸ்ட் இருக்கும் தண்டபாணி. ஏன் உங்களுக்கெல்லாம் இல்லையா?”
இவன் நேற்று நடந்ததை மனதில் வைத்துக் கொண்டு, எப்பவோ நடந்ததை, யார் மூலமாகவோ அறிந்து கொண்டு பழிக்குப் பழியாக தங்கை மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாகப்பட்டது சீனிக்கு.
நேரம் அதிகாலை நான்கு மணி. கார்த்திகை மழை… நசநசத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒருவரும் எழும்பவில்லை. மண்டபத்தில் சமையல் நடக்கும் வாசனை காற்றில் கலந்து வந்தது. முகூர்த்தம் ஆறு முதல் ஏழரை மணிக்குள்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சென்று கோவிலில் வைத்து திருப்பூட்டிவிட்டு, மண்டபம் திரும்ப ஏற்பாடு. அதனால் உறவுகள் அரக்கப்பறக்க எழவேண்டிய அவசியமின்றி, ஆசுவாசமாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுதுதான் எழுந்து வெளியே வந்தாள் பழனி. மண்டப வாயிலில் தண்டபாணியும், சீனியப்பனும் எதிரும் புதிருமாக முறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தவள், வேகமாக இவர்களை நோக்கி வர, தங்கையைப் பார்த்த தண்டபாணி முகம் அருள் இழந்து போயிற்று.
“என்னண்ணா?” என்றாள் பதட்டமாக. இரவு நடந்ததற்கு இன்னும் முட்டிக் கொள்கிறார்களோ என்ற பதட்டத்தில்.
“ஒன்னுமில்ல பழனி. நீ போ!” என்று தங்கையைக் கிளப்பவதில் கவனமானான்.
அவளுக்கு உள்ளூர பயம். எதுவோ சரியில்லை என மனதிற்குப்பட்டது. ஏற்கனவே இரண்டு நாட்களாக சஞ்சலத்தில் உழன்றவள் மனம். கண்டதையும் கற்பனை செய்தது. அண்ணனுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ. அதனால்தான் இருவரும் முறைத்துக் கொண்டு நிற்கிறார்களோ? அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்தானே? அண்ணனுக்குத் தெரிந்துவிட்டதோ என உள்ளூர கலக்கம் அவளைக் கொல்லாமல் கொன்றது.
கொடைக்கானல் விட்டு வீடு திரும்பும் வரை, கேலியும் சிரிப்புமாக தங்கைகளோடு வந்திறங்கியவளுக்கு, எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் எழவில்லை, அம்மாவைப் பார்க்கும் வரை. வீடு திரும்பிய மகளின் முகப்பொலிவில் கலையரசி ஒரு கணம் மகளை உற்றுப் பார்த்ததில், அடிவயிறு குபீர் என தீப்பிடித்தது பழனிக்கு. இதுவரை தோன்றாத பயம், அம்மாவைப் பார்த்ததும் குப்பென வியர்த்துவிட்டது. இதுநாள் வரை அம்மாவைப் பார்த்து பயந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை, என்பது போல், பயம் என்றால் என்ன என்பதை முற்றிலுமாக உணர்ந்த தருணம் அது.
கல்யாணக்கலையில் மகள் முகம் பூரித்தாக எண்ணிக் கொண்டு, “சுற்றிப் போடவேண்டும்” கலையரசி தனக்குள் சொல்லிக்கொள்ள, இன்னும் அது அவளை குறுகச் செய்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் அம்மா முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்துப் போனாள். முன்பைவிட அதிகமாக திருமண நாளை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டாள். அதற்கு இன்னும் ஒருவாரம் இருக்கிறதே? ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது. அதற்கு முன் அண்ணன் திருமணம் நடந்தேற வேண்டுமே? இப்பொழுது இவர்கள் முறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் எதுவோ சரியில்லை என்பது மட்டும் நிச்சயம். இரவிலிருந்து ஏதோ ஒரு அசரீரி அப்படித்தான் அவளுக்குள் ஒலித்தது.
“என்ன அண்ணா… நேத்து நடந்ததா?” என்று அவளும் கேட்க, தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அண்ணனிடம் விபரம் கேட்பவளைப் பார்த்து சட்டென கோபம் துளிர்த்தது சீனிக்கு.
அதென்ன என்னிடம் கேட்காமல், அண்ணனிடம் கேட்பது என்ற வரட்டு கௌரவம். இரண்டு நாட்களாக ஃபோன் எடுக்காதது, ‘ஹாய் பொண்டாட்டி!’ என அழைத்த தனது வாட்சப் மெசேஜ் எதற்கும் பதில் அனுப்பாதது, நிச்சய மேடையில் கூட இவன் அத்தனை ஆசையாக அவள் முகம் பார்க்க, இவள் கண்டும் காணாமல் இருந்தது, நேற்று போட்டோக்களை அழித்தும் தன்னை நம்பாத பார்வை பார்த்தது எல்லாம் சேர்ந்து அவனது கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.
“உங்க அண்ணனுக்கு என் தங்கச்சியோட பாஸ்ட் தெரியணுமாம். இந்தக் காலத்துப் பொண்ணுங்க எள்ளுங்கறதுக்கு முன்னாடி எண்ணெயா நிக்கிறது தெரியல!” தன் தங்கை மீது தண்டபாணி ஏதோ அபாண்டமாக பழி சுமத்துவதாக எண்ணிக் கொண்டு ஏளனமாகப் பேச, நெருப்பை மிதித்தவள் போல் அரண்டு பார்த்தாள் பழனி.
நீ சொல்ல வருவதன் அர்த்தம் என்ன என்பது போல் அடிபட்ட பார்வை பார்த்தவள் கண்கள் சட்டென சிவந்து கண்ணீர் கரை கட்டியது. ஏற்கனவே அம்மாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் குற்ற உணர்வில், இரண்டு நாட்களாக மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தவள் நெஞ்சில் இவனது வார்த்தைகள் குத்தீட்டியாய் இறங்கியது. இது காலத்திற்கும் தொடரும் பழியல்லவா? கோபத்தில் நிதானமிழந்து இப்பொழுது வார்த்தையை விட்டவன், பின்னொரு நாளில் இவனே ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சொல்லிக் காட்டமாட்டான் என்பது என்ன நிச்சயம். நிலைகுலைந்து போனாள் பெண்.
அப்பொழுதுதான் தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் புரிய, மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவன், “பழனி…” என்றான் தவித்த குரலில். அவள் இவனைப் பார்த்த வெற்றுப்பார்வையில் உள்ளுக்குள் சுக்கு நூறாக உடைந்துபோனான்.
சூழ்நிலை மேலும் மேலும் சிக்கலாவதை உணர்ந்து, “இப்ப என்ன, உங்களுக்கு அவன் யார்னுதானே தெரியணும் தண்டபாணி!” நிலமையை சமாளிக்கும் விதமாகக் கேட்க, அவன் தண்டபாணியிடம் கேட்டதெல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை. அவன் கூறிய வார்த்தைகள் மட்டுமே, கூரிய அம்பாய் தைத்துக் கொண்டிருந்தது.
“என்னோட ஃப்ரெண்ட்தான். ஃபேமிலி ஃப்ரென்டும் கூட. ரஞ்சனிக்கும் அவனுக்கும் முதல்ல திருமணம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனா பேச்சுவார்த்தையோட நின்னுருச்சு.”
“ஏன் இதை முன்னமே சொல்லல?”
“இதெல்லாம் ஒரு குத்தமா? பொண்ணுனா நாலு எடத்துல கேப்பாங்கதானே? அப்படித்தான் இதுவும்!”
“அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?” என்று கைபேசியில் அடுத்த ஃபேட்டோவைக் காண்பிக்க, அதில் ரஞ்சனியும், அவனும் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.
இது சீனிக்கே புதிய தகவல் என்பது அவன் அதிர்ந்து பார்த்ததிலேயே தெரிந்தது.
‘துரோகி!’ என்றது சீனியின் உள்மனம்.
“நான் இவனை கொடைக்கானல்லயும் பாத்தேன்!” தண்டபாணி கூற, மானக்கேடாகப் போயிற்று சீனிக்கு.
“எங்கே..” என்றவன் குரலில் மிதமிஞ்சிய அவமானம்.
“மறுநாள் நீங்க மட்டும் ஃபோட்டோ ஷுட் போன பின்னாடி, நானும் ரஞ்சனியும் மட்டும் ட்ரெஸ் மாத்த ரிசார்ட் வந்தப்போ. நான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு, வெளியே வந்தேன். நீங்க தங்கியிருந்த ரிசார்ட்லருந்து இவன் வெளியே வந்ததைப் பாத்தேன். யாருன்னு கேட்டதுக்கு, ஏதோ ரிசார்ட் பேர் சொல்லி, எங்க இருக்குனு விசாரிக்க வந்ததா சொன்னான். அட்ரஸ் விசாரிக்க வந்தவனுக்கு, உள்ளே வரைக்கும் போகவேண்டிய அவசியம் ஏன் வந்ததுன்னு அப்பவே யோசிச்சேன். ஆனா, உங்க தங்கச்சிய சந்தேதப்படணும்னு தோனல!”
தனிமையில் ஒருவனோடு தன் தங்கையைப் பார்த்தபொழுது கூட சந்தேகப்படாதவன், இப்பொழுது இதைப்பற்றி விசாரிக்கிறான் என்றால் நிலமை ஏதோ விபரீதம் என்று உள்மனம் எச்சரித்தது.
தண்டபாணி சொல்லியதை வைத்துப் பார்க்கும் பொழுது
ஏதோ திட்டம்போட்டு ஏமாற்றியிருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. கண்டிப்பாக இதற்கு ரஞ்சனியும் உடந்தை என்பது வெட்டவெளிச்சமாகியது.
அவன் இவனது நண்பன் தீனாதயாளன். இரண்டு குடும்பத்திற்குமே நல்ல பழக்கம். சீனியப்பன் ஆரம்பித்த கருப்பட்டி காஃபே இருவரும் சேர்ந்து ஆரம்பித்ததுதான். எடுத்தவுடனே இடத்தில் பணத்தை முடக்க வேண்டாமென, தங்கள் பொதிகை சூப்பர் மார்க்கெட் கிளைகளின் வாயிலின் முன்பே, போதியளவு இடம் ஒதுக்கி, சிறிய அளவில், மிக குறைந்தளவு இருக்கைகளோடுதான் கஃபே துவக்கினர் இருவரும்.
குறுகிய காலத்தில் நல்ல முன்னேற்றமே. ரஞ்சனிக்கு திருமணப் பேச்சை எடுக்க, தீனா வீட்டிலிருந்து, அவர்களேதான் வலியவந்து பெண் கேட்டனர். நல்ல குடும்பம். இவனுக்கும் அவனைப் பற்றித் தெரியும். மறுப்பதற்கு எந்தக்காரணமும் இல்லை.
இரு வீட்டார் ஒப்புதலோடு நிச்சயம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். அதன் பிறகுதான் சீர் வரிசை பற்றி பேச்செழ, தங்களுக்கு சீர் எதுவும் வேண்டாமென பெருந்தன்மையாக மறுத்தவர்கள், கருப்பட்டி கஃபே பொறுப்பிலிருந்து சீனியப்பனை விலகிக்கொள்ளச் சொன்னார்கள்.
அப்பொழுதுதான் கருப்பட்டி கஃபேக்கென தனியாக இடம் தேடி, பெரியளவிலான கிளை ஒன்றினை, வங்கியில் கடன் வாங்கித் துவக்கியிருந்தான் சீனி. அதிலும் தீனாவை பங்குதாரராகச் சேர்த்திருந்தான்.
மூலதனம் மட்டும்தான் தீனாவுடையது. அதிலும் பாதிதான். கஃபேயைத் திட்டமிட்டு வளர்த்துக் கொண்டிருப்பது சீனியப்பன்.
“உங்களுக்குதான் பொதிகை சூப்பர் மார்க்கெட் இருக்கிறதே. உங்க மகளுக்கு கஃபேயைக் கொடுக்கலாமே?” எவ்விதக் கூச்சமும் இல்லாமல் கேட்டனர் தீனாவின் பெற்றோர்.
நிச்சயப் பேச்சு வரும்வரை இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல், இப்பொழுது பேசுவதிலேயே இவர்கள் எண்ணம் புரிந்துபோனது. பொதிகை சூப்பர் மார்க்கெட்டைவிட சீனியப்பனுக்கு கருப்பட்டி கஃபேதான் உயிர்நாடி. பள்ளி விடுமுறை நாட்களில், அவன் அப்பாவோடு மளிகைக் கடையில் நின்றதைவிட, தாத்தாவோடு டீக்கடையில் நின்றதுதான் அதிகம். தாத்தா கையை உயர்த்தி டீ ஆற்றுவதையே நாள் முழுக்க வேடிக்கையாகப் பார்த்து வளர்ந்தவன். அவருக்கு பின் அவனது தாய்மாமனுக்கும், கடையை எடுத்து நடத்தும் எண்ணமெல்லாம் இல்லை. கடையைக் கைமாற்றிவிட்டார்.
சீனி படிப்பை முடித்து, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க ஆசைப்பட்ட பொழுது, உதித்த எண்ணம்தான் கருப்பட்டி கஃபே. தீனாதான் வலியவந்து தானும் பங்குதாரராக சேர்ந்து கொள்வதாகச் சொன்னான்.
மூன்று வருடங்களாக சீனி போட்ட உழைப்பு. இப்பொழுதுதான் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது. அதை, இப்பொழுது கல்யாணத்திற்கு சீராகக் கேட்க, சற்றும் யோசிக்கவில்லை. தீனாவை பார்ட்னர்ஷிப்பிலிருந்து நீக்கிவிட்டான். முதலீடு மட்டும்தானே அவன் கொடுத்தது. இடம் முதற்கொண்டு சீனிக்கு சொந்தம்.
இதில் காந்திமதிக்கு முற்றிலும் வருத்தமே. அதான் மகனுக்கு சூப்பர் மார்க்கெட் இருக்கிறதே? மகளுக்கு கஃபேயைக் கொடுத்தால் என்ன என்பதுதான் அவரது எண்ணமும்.
“சூப்பர் மார்க்கெட்டைக் கேட்டாக் கூட நான் கொடுப்பேன். ஏன்னா, அது என்னோட முழு உழைப்பு. அதுல என் ரெண்டு பிள்ளைகளுக்கும்தான் பங்கு. ஆனா, காபிக்கடை அவனோட தனிப்பட்ட உழைப்பு. அதுல சீனி எடுக்கறதுதான் முடிவு!” பொதிகாச்சலமும் உறுதியாக கூறிவிட்டார்.
அத்தோடு கல்யாணப் பேச்சு வார்த்தை முறிந்துபோயிற்று.
ஆனால் இந்த ஃபேட்டோவைப் பார்க்கும் பொழுது, இது ஏதோ தீனாவின் எண்ணமாக மட்டுமே இருந்திருக்க முடியாதெனத் தோன்றியது. ரஞ்சனிக்கும் அதில் விருப்பம்தான் போல.
“இதை யாரு உங்களுக்கு அனுப்பினது?” என்றான் கன்றிய குரலில்.
“இப்ப உங்க தங்கச்சி எங்கேன்னு தெரியுமா?” கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்க, இதென்ன கேள்வி என்பது போல் அண்ணனைப் பார்த்தாள் பழனி.
“ப்ரைட் ரூம்ல இருப்பா!” என்றான் சீனியப்பன் புரியாமல்.
“அங்க இல்ல! இவனோட கார்ல போனதைப் பாத்திருக்காங்க!” என்று சொல்ல இருவர் முகத்திலும் உச்சபட்ச அதிர்ச்சி.
“அதெப்படி?” என்றான் உள்ளிறங்கிய குரலில். அது தங்கையாக இருக்கக் கூடாது என்ற வேண்டுதலோடும். இது மட்டும் உண்மையாக இருந்தால் அடுத்து நடப்பது எதற்கும் அவன் பொறுப்பல்ல. விதி விட்ட வழி.
“அதான் ஊர் முழுக்க பேனர் வச்சிருக்கோமே? இங்க என்னை, எல்லாருக்குமே நல்லா தெரியும் சீனி. குதிரை வண்டிக்காரர்தான், உங்க தங்கச்சி இவனோட கார்ல போனதைப் பாத்துட்டு ஃபோன் பண்ணினார்” என்று சொல்ல, அப்படி எதுவும் இருக்கக் கூடாதென்று தவிப்போடு அப்பாவிற்கு அழைத்தான் சீனி.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதே கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. கண் முன் பெரிய சூன்யம் தெரிய, அண்ணனை வலியோடு பார்த்தாள் பழனி. இனி அண்ணனின் வாழ்வு. தன் குடும்ப மானம். அதைவிட தான் செய்து வைத்திருக்கும் காரியம். நினைக்க நினைக்க பூமி தட்டாமலை சுற்றியது.
அதற்குள் ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தனர்.
“தண்டபாணி! என்னப்பா இங்க நிக்கிற? குளிச்சிட்டு கெளம்பலையா? நேரமாச்சு பாரு!” கேட்டுக் கொண்டே தணிகைவேல் இவர்களை நோக்கி வர, இவர்களின் முகமே ஏதோ சரியில்லை என அவருக்கு உணர்த்தியது. ஒரு வேளை நேற்று நடந்த சம்பவம்தான் காரணமோ. அப்படித்தான் தோன்றியது அவருக்கும்.
தந்தையைப் பார்த்த தனயனுக்கு தன் துயரமெல்லாம் தூரம் போய்விட்டது. இனி அப்பாவின் கௌரவம் என்னவாகுமோ என்ற பயம் மட்டுமே. எப்படி இதை தங்கள் குடும்பம் எதிர் கொள்ளப்போகிறது என்று நினைக்கையில் நெஞ்சை அடைத்தது. அதைவிட பெரிதாக அச்சுறுத்தியது தங்கையின் எதிர்காலம்.
இப்படியொரு சம்பவம் நடந்தபிறகு மீண்டும் அதே வீட்டில் எப்படி தங்கையைக் கொடுக்கமுடியும்? எப்படி அவர்களோடு உறவு கொண்டாட முடியும்? நல்லது கெட்டதுக்கு எந்த முகத்தோடு வந்து போகமுடியாம்? எல்லாம் அவனுக்குள் ஓடியது என்றாள், பழனிக்கு உலகமே இத்தோடு ஸ்தம்பித்துவிட்ட உணர்வில் சிலையென நின்றுவிட்டாள்.
எழுந்துவந்த ஒரு சிலரும் இவர்களை நோக்கி வர, இங்கு வைத்து எதுவும் கேட்க வேண்டாமென நினைத்தார் தணிகைவேல்.
“ஆயா, அம்மா என்ன பண்றா பாரு!” மகளை அனுப்ப முயல, அவள் தான் இந்த உலகத்திலேயே இல்லையே?
“தண்டபாணி, வந்து குளிச்சு ரெடியாகுப்பா! கோவிலுக்கு போக வேண்டாமா?” அப்பா உள்ளே வரச் சொல்கிறார் எனப் புரிந்தது மகனுக்கு. சீனியப்பனைப் பார்த்தான்.
