முக்கனியும் சக்கரையும் 19

19

“டேய்‌! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?” அதிர்ந்து பார்த்தவன், அடக்கமுடியாத கோபத்தோடுதான் கேட்டான் சீனி. அவன் கோபத்தைப் பார்த்தவர்கள் தண்டபாணி செய்த கூத்தையெல்லாம் அவனிடம் சொல்லவில்லை. அதை வீடியோ எடுத்தது உட்பட. சொன்னால் அதற்கும் சேர்த்து வைத்து கத்துவானே. மச்சானின் நிலமை படுமோசமாக இருந்தது. 

“இல்ல ப்ரோ… சும்மா ஜாலிக்குதான் பண்ணோம். இந்தளவுக்கு போகும்னு நெனச்சுப்‌பாக்கல.” அவர்களுக்கே தங்கள் அதிகப்பிரசங்கித்தனம் புரிந்தது. 

“நாசமாப் போச்சு. இவங்க தங்கச்சிகளுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்! வேற வினையே வேண்டாம்! எப்படியாவது தூங்க வைங்கடா!” என்றான் ஆற்றமாட்டாமல். இவன் டென்ஷனில் கத்த தண்டபாணி அவனைப் பார்த்து சிரித்தான். அவன் சுத்தமாக நிதானத்தில்‌ இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. 

இடுப்பில் கைவைத்து நின்றவன், அவர்களை அனல் பறக்கப் பார்த்தான். “பித்த உடம்பு போல ப்ரோ… அதான் ஒரேடியாத் தூக்கிருச்சு!” என்றவர்களிடம்,

“இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம். முதல்ல கூட்டிப் போயி படுக்க வைங்க!” என்றான் அடிக்காத குறையாக. 

விளையாட்டுப் போல் இவர்கள் செய்த காரியம் எவ்வளவு பெரிய அனர்த்தத்தை இழுத்து விடப்போகிறதென்று‌ அப்பொழுது அவர்களுக்குத் தெரியவில்லை. தண்டபாணி பார்வையில், சீனி மிகவும் தரம் தாழ்ந்து போவதற்கும் இந்த ஒற்றைச் சம்பவம்‌ மட்டுமே முக்கிய காரணகர்த்தாவாகவும் அமையப் போகிறது. 

மழை‌ சற்று ஓய, முன்தினம் போலவே ஆண்கள்‌ தங்கள்‌ கச்சேரியை அறைக்குள்ளேயே ஆரம்பித்திருந்தனர். 

தண்டபாணி, ஒரு மிடறு‌ லெமன் சோடா பருகியவுடனே  லேசாக முகம்‌ சுழித்தான். அவனுக்கு வித்யாசமாகப்பட, “அது பழைய லெமன் ப்ரோ. அதனால லைட்டா கசக்குது” என்று‌ சொல்ல நம்பிவிட்டான். முழுதாக குடித்தும் விட்டான். சற்று நேரத்தில் எல்லாம் அவனிடம் மாற்றம் தெரியத் தொடங்கியது‌. மெலிதாக இதழ்கள் சிரிப்பில் விரிந்தது. 

இன்று பழனியும், பிள்ளைகளும் இருப்பதால் ஆண்கள் எல்லாம் ஒரு ரிசார்ட்டும், பெண்கள் எல்லாம் ஒரு ரிசார்ட்டும் எனத் தங்கிக் கொண்டனர். தொந்தரவு இருக்கக் கூடாதென்பதற்காக, ஒவ்வொரு ரிசார்ட்டுக்கும் இடையே தாராள இடைவெளிவிட்டு அமைத்திருந்தனர். எனக்குத் தனியறை‌ வேண்டுமென ரஞ்சனி மட்டும்‌ ஒரு அறையை எடுத்துக் கொண்டாள். இவர்கள்‌ ஆறு பேரும் ஒரு அறையில். 

பெரிய கட்டில் என்பதால் பிள்ளைகள் ஐவரும் தங்களுக்குள் அனுசரித்துப் படுத்துக் கொள்ள, பழனி நீள் சேஃபாவில் படுத்துக் கொண்டாள். மெல்லிய‌ சப்தத்தில் டிவியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. 

பெரிய கம்பளியை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, இவள் ஸ்வெட்டரோடு‌ படுத்துக் கொள்ள, உடம்பிற்கு பழக்கமில்லாத குளிர்‌ உழட்டி எடுத்தது. குளிர் மட்டுமல்ல, இதுவரை அறிமுகப்‌‌ படுத்தப்படாத உணர்வுகள் தன்னை அறிமுகம் செய்து கொண்டதிலும்தான்.

தூக்கம் வருவேனா என அழிச்சாட்டியம் பண்ணியது. புது இடம், விசிராந்தையாகப் படுக்க முடியாததால்தான் தூக்கம் வரவில்லை போல என்று தனக்குத்தானே காரணம் சொல்லிக் கொண்டாள். 

டிவியை அணைக்க ரிமோட் எடுத்தவள்‌ கவனம், ஒலித்த பாடலில் பதிய அப்படியே ரிமோட்டை‌ வைத்துவிட்டாள். 

இளமை ஊஞ்சாலாடுகிறது படத்தில் இடம்பெற்ற பாடல். கமலும், ஜெயசித்ராவும் தங்களை மறந்து, உலகம் மறந்து இழைந்து கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டிருந்தவள், மனக்கண்ணில், அவன் தன்னை நோக்கிக் குனிந்தது தோன்றிய மறைய, இறுக்கி வளைத்திருந்த கைகளின் திண்மையை இப்பொழுதும் இடை உணர, மெல்லிய சிலிர்ப்பு மேனியெங்கும் ஒடி மறைந்தது. அவன்‌ நினைவுகளே பெண்மைக்குள்‌ வெம்மை மூட்டியது. கால்கள் இறுகி, மேனி முறுக்கியெடுக்க, அப்பொழுதுதான் சீனி இவளை‌ கைபைசியில் அழைத்தான். 

தரிசா கெடக்குது பூமி

அட இதுக்கா படச்சான் சாமி

நான் தான் மேகம் 

உனக்கேன் தாகம்

கொல்லுதடி தாபம்

நான் கொஞ்சுவதா பாவம்

மிஞ்சுதடி மோகம்

ஏ அஞ்சுதடி தேகம்

வாலிப வயசிருக்கு.. நமக்கு

ஏய்.. கொத்து கொத்தா காச்சிருக்கும்

தென்னங்கொள்ள..

கொஞ்சி நின்னா குத்தமில்ல

வாடிப்புள்ளே…ஏ..

தண்ணி கருத்திருச்சு கண்ணு

தவள சத்தம் கேட்டிருச்சு…

பாடல் வரிகள் ஒலிக்க, அழைப்பை ஏற்றவள் பாடலில் லயித்திருந்தாள்‌. இருளின் அமைதியில் அவனுக்கும் பாடல் தெளிவாகவே கேட்டது. முகத்தில் புன்னகை தவழ்ந்தது. 

இவளுக்கு கண் முன் காட்சியானது, அவனுக்கு கற்பனையில் காட்சியாகியது. எப்பவுமே கற்பனைக்கு வீரியம் அதிகம்தானே. 

முகம் கனிய, தடித்த கீழுதடு‌ பல்லிடுக்கில் சிக்கியது. 

தொண்டையைச் செருமிக்கொண்டு, 

“பழனி!” என அழைத்தவன்‌ குரல் கரகரத்தது.

***** 

அவள் வர மறுத்ததில், “சரிதான் போடீ… கெஞ்சினா மிஞ்சுவீங்க. மிஞ்சினா கெஞ்சுவீங்க!” என்று அடங்காத சீற்றத்தோடுதான் அழைப்பை துண்டித்திருந்தான். 

எதிர்பார்ப்பு மறுக்கப்பட்டதன் எதிர்வினை. அது அவனுக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடு. அவனையறியாமலே சீற்றமாக வெளிப்பட்டது. பசி வந்தா, நீ நீயா இருக்கமாட்ட என்பது வயிற்றுப்‌ பசிக்கு மட்டுமல்ல. வாலிபப் பசிக்கும்தான். பாக்க கேலி போல்தான் தோன்றும். அது மெல்லிய உணர்வுகளின் தாக்கத்தினால் ஏற்படும் பெரியளவிலான மாற்றம். நான் நல்லவன், உத்தமன் என்று பிறப்பும், வளர்ப்பும் எத்தனைதான் கட்டிப்போட்டாலும், வேலி தாண்டிப் பார்க்கச் சொல்லும் தாபம். மன்மதலீலையை வென்றார் உண்டோ. 

அவளிடம் பேசிவிட்டு கோபமாக உள்ளே‌ வந்தவனிடம், உதவியாளன் ஒரு‌ பியர்‌ டின்னை எடுத்து நீட்ட மறுத்துவிட்டான்.

“ஏன் ப்ரோ… இன்னைக்குதான் குளிர் அதிகமா இருக்கே!” என்றான்.

“அவன் இன்னைக்கி வேற போதையில இருக்கான்டா. நீங்க நமக்கு மட்டும் மிக்ஸ் பண்ணுங்க!” வினீத் அவனை‌ கேலி பேச… சட்டென கோபம் வடிந்து முகம் இறுக்கம் தளர்ந்தது. வினீத் சொன்னவுடன் கையணைவில்  நின்றவளின்‌ வதனம் கண்முன் தோன்ற, ஒருவித மயக்கமும், கிறக்கமும் அவனது விழிகளில் தெரிய, மென்னகை பூத்தது இதழ்களில். 

ஆக மொத்தம் இருவரும் உணர்ச்சிப் பிடியில்தான் சிக்கியிருந்தனர். அவளைத் தனிமையில் பார்க்க வேண்டும். பேச வேண்டும். அவளுடனே இருக்க வேண்டும். அதற்கு அவளது பிறந்த நாள் ஒரு‌‌ சாக்கு. 

அவன் இங்கேயே இல்லை. தனி உலகத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவனாக எதையும்‌ திட்டமிடவில்லை. ஆனால் நடந்தவை எல்லாம் அவன் திட்டமிட்டு நடத்திக் கொண்டதாகவே விதி திரைக்கதை அமைத்துத் தந்தது. 

தண்டபாணி “சீனி மச்சான்!” என்று‌ இளிப்பாக அழைத்த பிறகே, நடப்பிற்கு வந்தான். தண்டபாணியைப் பார்த்தவன் அதிர்ந்து, அவனை உற்றுக் கவனித்தான். கண்கள் மிதக்க, இவனைப்‌ பார்த்து ஒரு‌ மார்க்கமாகச் சிரித்தான். 

தண்டபாணி உடைமாற்றி, பாத்ரூம் சென்று வருவதற்குள், இவர்கள் அவசரமாக லெமன் சோடா கலந்து வைத்ததில் இருந்த சூட்சமம் இப்பொழுது புரிந்து போயிற்று. தங்களுக்குள் கண்சிமிட்டிக் கொண்டனர்.

“குடிங்க மச்சான்!” என்றவன் நாக்கு குழறியது. அவனே பியர் டின்னை எடுத்த சீனியிடம் நீட்ட, முன்தினம் இவன் பியர் எடுத்துக் கொண்டபொழுது தண்டபாணி எதுவும் சொல்லவில்லை என்றாலும், அதில் பிடித்தமின்மையை முகம் தெளிவாகவே காட்டியது. இன்று என்னடாவென்றால் அவனே‌ எடுத்து நீட்டுகிறான். தன் முன்னால் அமர்ந்திருந்தவர்களை எரிக்கும் பார்வை பார்த்தான்.

“சாரி ப்ரோ” என்றனர் தணிந்த குரலில். 

“இதை இவரு தங்கச்சி மட்டும் பாத்தா, நம்ம பித்தத்தை எடுக்காம விடமாட்டா!” அவர்களிடம்‌ சொல்லிக் கொண்டிருக்க, அதே சமயத்தில் தண்டபாணி கைபேசி அழைக்க, யாராக இருந்தாலும், இவன்‌ எடுத்துப் பேசினால் எப்படியும் தெரிந்துவிடும் என்றெண்ணி, வேகமாக 

தண்டபாணி எடுக்கும் முன் இவன் எடுத்து யாரெனப் பார்க்க, பழனி எனத் தெரிந்தது.

 “அதுக்குள்ள டெலிபதி போயிருச்சு போல?” என்றவாறே இவனே அழைப்பை ஏற்றான்.  

“அண்ணா… தூங்கிட்டியா!” எடுத்தவுடன் கேள்விதான். 

ஒரு கணம் தாமதித்தவன், “பழனி!” என்றழைக்க, இவன் குரல் ஒலித்ததில், 

“அண்ணா ஃபோன் நீங்க ஏன்‌ அட்டென்ட் பண்றீங்க? அண்ணா எங்கே?” என்றாள்.‌

“உங்க அண்ணா தூங்கிட்டாரு. ஃபோன் சத்தத்துல எந்திரிச்சுவாரோன்னுதான் நான் அட்டென்ட் பண்ணேன்.” என்று‌ சொல்லிக் கொண்டிருக்க, “யாரு மச்சான்?” என்றவனுக்கு தலை கூடத் தூக்க முடியவில்லை. 

சட்டென ஃபோனை‌ கைவைத்து மறைத்து, வினீத்திடம் கண்ணால் அவனை‌ படுக்கவைக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டான். 

“அண்ணா, இவ்வளவு சீக்கிரம் தூங்குற ஆளில்லையே?” சந்தேகம் முளைத்தது அவளுக்குள்.

முன்தினம்‌ அவள்‌ இல்லையே. அதனால் இவர்கள்‌ சங்கதி இவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ரஞ்சனி நேற்றே பார்த்தும்‌, சகஜம்போல் கண்டுகொள்ளவில்லை. 

“இன்னும்‌ தூங்காம நீங்க என்ன பண்றீங்க?” அவளை அடுத்து யோசிக்கவிடாமல் இவன் கேள்வி கேட்க, 

“அவளுக எல்லாம் தூங்கிட்டாளுக. எனக்குதான் தூக்கம் வரல! பேசிட்டிருக்கும்போதே அவ்ளோ கோபமா கட் பண்றீங்க. எப்படித் தூக்கம் வரும். அதனாலதான் அண்ணாவுக்கு ஃபோன் பண்ணேன்!”

“நான் கோபமாக்‌ கட்பண்ணினா‌, அண்ணனுக்கு எதுக்கு ஃபோன்‌ பண்ணனும்?”

“ம்ம்ம்… எதுக்கு பண்ணுவாங்க? இப்படி உன்னோட மச்சான் என்னைத் தனியா கூப்பிடறாங்க. போகவான்னு கேக்கத்தான்!” என்றதில் இவனுக்கு சுள்ளென கோபம் உச்சிக்கு ஏறியது. 

“நீ சொல்ற தோரணையப் பாத்தா வேறெதுக்கோ கூப்பிட்ட மாதிரியில்ல இருக்கு. எங்கூட கொஞ்ச நேரம் வெளியே வர்றதுக்கு கூட உங்க அண்ணங்கிட்ட கேட்டுத்தான் வருவியா? அப்படியென்ன உன்னை பண்ணிறுவேனாம். அடுத்த வாரமும் இதையேதான் சொல்லுவியா? அப்படியொன்னும் மெனக்கெட்டு, நீ வரவே வேண்டாம்!” சீறிவிட்டு மீண்டும் அழைப்பைத் துண்டித்துவிட்டான். 

சிலநேரங்களில் உண்மை தன்னை கண்டு கொண்டதில், தன்னையும் அறியாமல் இப்படித்தான் வெடிக்கும்‌. நின்று நிதானிக்கப் பக்குவம் வேண்டும். அவள் வரவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே. எதற்கு கட்டாயப் படுத்த வேண்டும் என அவன் யோசித்திருந்தாலோ, கோபித்தால் கோபித்துக் கொள்ளட்டும், நாம் எதற்கு வலிய தன்னக்கட்ட வேண்டும் என இவள் ஒரு கணம் யோசித்திருந்தாலோ பின்னால் வரும் அத்தனை அனர்த்தங்களையும்‌ தவிர்த்திருக்கலாம். 

எதற்கு இந்தக் கோபம் என்று அவனுக்கே புரியவில்லை. இன்னும் நிச்சயம் கூட முடியவில்லை. ஒரு வாரத்தில் திருமணம் என்ற உறுதியில்தான் இங்கு வரை அவளை அனுப்பி வைத்ததே. அவள் தனக்கே என உள்ளம் உரிமை கொண்டாடியதில், அண்ணனிடம் கேட்க வேண்டும் என்றதும் அவனை‌ச் சீண்டிவிட்டது. 

இவன் கோபமாக வைத்ததில் அவளுக்கும் ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அவள் அண்ணனிடம் பேசத்தான் அழைத்தாள். இவன்‌ எடுப்பான்‌ என்றா‌ தெரியும். கேட்டதும் எதார்த்தமாக அண்ணனிடம் அனுமதி கேட்க என்று‌ சொல்லிவிட்டாள். அது இவனுக்கு சினத்தை மூட்டிவிட்டது. இவனை எப்படி சமாளிப்பது என்று நினைத்தவளுக்கு, ‘அய்யோவென’ ஆயாசமாக வந்தது.‌ 

இப்ப என்ன? பிறந்த நாளைத்தானே கொண்டாட வேண்டும் என்று சொல்கிறான். ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிடம் இந்தளவிற்கு கூட எதிர்பார்ப்பதில் தப்பில்லையே. அவனவன் ஃபோன் போட்டு மணிக்கணக்கில், கண்டவாக்கில் பேசுக்கொள்கிறார்கள். இன்று தன் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, எவ்வளவு நாசுக்காக நடந்து கொண்டான். ஃபோட்டே ஷுட் கூட அவன் நினைத்த மாதிரி எல்லாம் எடுக்க முடியவில்லை. அரைமணி நேரத்தில் திரும்பி விடலாம் என்றுதானே சொல்கிறான்.‌ நம்மை மீறி அப்படியென்ன நடந்துவிடப் ‌போகிறது. இதுவே அடுத்த வாரம் எனில் இந்த யோசனைக்கே வேலையில்லை, எங்கு கூப்பிட்டாலும்‌ நம்பி போவோம்தானே. அவன் சொன்னமாதிரி தாலி என்பது ஊருக்காக! அவள் என்னவள் என்பதற்கான அடையாளம்‌ மட்டுமே என்று நினைத்தவள், அவன்‌ கோபமாக இருப்பது தெரிந்து, சமாதானம் பண்ணவேண்டி  இவளே மீண்டும் அழைக்க வேண்டியதாய்ப் போயிற்று. 

ஹைய்யோ…‌ ஹைய்யோ என விதியும் வடிவேல் பாணியில் கைகொட்டி ஆர்ப்பரித்தது‌. 

பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்குப் போவதாக இருந்தால் கூட, அண்ணன், தம்பி, அப்பா‌ என‌ படை பலத்தோடு அனுப்பி வைப்பவர்கள் தான், தாலி கட்டிய அடுத்த கணமே ஊருவிட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு, முன்னப்பின்ன தெரியாத ஒருத்தனை‌ நம்பி, பெண்ணை அனுப்பிவைக்கத் தயங்குவதில்லை. என்னே சமூகக் கோட்பாடோ?

இவளே மீண்டும் அழைக்க, முதல் முறை‌ அடித்து ஓய்ந்தது. கோபத்தில் எடுக்கவில்லை. மறுமுறை வெகு நேரம் அடித்தபிறகே, அழைப்பை ஏற்றவன், “என்ன?” என்றான்‌ உறுமலாய்.‌ முகம்‌ சுண்டிவிட்டது பழனிக்கு. 

“இப்ப எதுக்கு இவ்வளவு கோபம். இப்ப நான் என்ன பண்ணட்டும்?” அவனது கோபத்தைக் தணிக்கும் விதமாகக் கேட்டாலும் குரலில் பழைய சுரத்தை இல்லை. ஜீவனற்று ஒலித்தது. 

“வெளியே வா! நேத்து மிஸ் பண்ணதை இன்னைக்கு செலப்ரேட்‌ பண்ணலாம்!” 

“அதை இப்படி கோபமாத்தான்‌ சொல்லுவீங்களா?” அவளது குரல் உடைவது போலிருந்தது. ஏனோ அவனது முகத்திருப்பல் அவளை‌ பாதித்தது. 

அவனுக்கும் கொஞ்சம்‌ அதிகமாகத்தான் நடந்து கொள்கிறோமோ எனத் தோன்ற, “சாரி… வெளியே வா! நான் வெய்ட் பண்றேன்!” வெகுவாக குரலைத் தணித்து கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“மூக்கு மேல கோபம் வருது! எல்லாம் இந்த மழையால.” பழி‌ மழை மேல் விழுந்தது. 

*****

திரும்பி கட்டிலைப் பார்த்தாள். கால் யாருடையது, தலை யாருடையது என்று தெரியாதளவிற்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் கால், கைகளைத் தூக்கிப்போட்டு அசந்து தூங்கிவிட்டனர். 

கால் கொலுசு ஓசையெழுப்பாமல் எழுந்து வெளியே வந்தவள், சத்தமில்லாமல் கதவை இழுத்து மூடினாள். எதற்கு இந்தக் கள்ளத்தனம். அவளுக்கே தெரியாது. வெளியே வந்ததும் குளிர் இன்னும் அதிகமாக முகத்தில் அறைந்தது. பற்கள் கிட்டித்தது. காலையில் வைத்த மல்லிகூட, இலேசாக வதங்கியிருந்ததே ஒழிய, குளிரில் முற்றிலுமாக வாடக்கூட இல்லை. மணி பதினொன்றைக் கடந்து கொண்டிருந்தது. 

பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு,‌ புன்னகைத்தபடி, அவளையே பார்த்திருந்தான். 

“இப்ப எதுக்கு பூனை‌ மாதிரி பம்மிக்கிட்டு வர்ற!” சிரித்தபடியே கேட்க,

“யாராவது பாத்துட்டாங்கன்னா?” என்றாள்‌ அப்பொழுதும் பார்வையைச் சுழற்றி.

“பாத்தா என்ன? நீ பண்றதெல்லாம்‌ பாத்தா, எனக்கே ஏதாவது ஐடியா தோணிறும் போலயே!” என்றான் கல்மிஷச் சிரிப்போடு கண்சிமிட்டி. 

“தோணும்… தோணும்!” என்றாள் எச்சரிக்கும் தொணியில். அவன் முன்னே நடக்க, இவளும்‌ பின் சென்றாள்.‌

மெலிதாக தூரல் ஆரம்பித்தது. பத்தடி தூரம் கடந்து, ஓடிப்போய் கார் கதவைத் திறப்பதற்குள், சடசடவென ஆரம்பித்த மழை ஆடையை நனைத்துவிட்டது. 

அவசரமாகக் காரின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட, காரில் போகும் அளவிற்குத் தொலைவா என்பது போல் ஏறாமல் தயங்கி நின்றவள், திரும்பிப்பார்த்தாள். அவளது பார்வை புரிந்து, முறைத்துப் பார்த்தான். 

“உடனே முறைக்காதீங்க. எங்கேனு தெரிஞ்சுக்கதான் பாத்தேன்” என்றாள் மூக்கைச் சுழித்து‌. அதற்கே பற்களெல்லாம் தந்தியடித்தது. 

அதைப் பார்த்து சிரித்தவன், “கண்காணாத தேசத்துக்கு கடத்திட்டெல்லாம் போகல. சீக்கிரம் ஏறு!” என்று அவசரப்படுத்தியவன், கதவைத் திறந்து விட்டு, சுற்றிவந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான். 

“ரூம் வரைக்கும் போய்ட்டு வரவா?” தயங்கி கேட்க,

“விளையாடாதே பழனி. ஏற்கனவே மழை ஆரம்பிச்சிறுச்சு. இப்ப எதுக்கு மறுபடியும் ரூம்க்கு போற? டைமாகுது. இன்னைக்கு நாளே முடியப்பேகுது” அவனும் அவசரப்படுத்த வெளியே சொல்ல முடியாமல் ஏறி அமர்ந்தவள், இறுக்கிக் கட்டிய கைகளை பிரிக்கவே இல்லை. அவ்வப்போது, கைகளைக் குவித்து சூடாக ஊதிக்கொண்டாள். ஸ்வெட்டர் ஈரம் இறங்கவில்லை என்றாலும் நனைந்து குளிர் ஆட்டியது. 

காரில் இளையராஜாவை இசைக்கவிட்டான். கால்மணி நேர பயண இடைவெளியில், கார் சற்று தள்ளி ஆள்‌ அரவமற்ற பகுதிக்கு வந்தது.‌ பசும் புல்வெளி. கண்ணுக்குப் புலப்படாத இருளில், கார் நிற்பது கூடத் தெரியாதளவிற்கு பனிப்போர்வை போர்த்தியிருந்தது. காரைவிட்டு இறங்கியவன், அவளை உள்ளிருந்த படியே, நடு இருக்கைக்கு வரச்சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு சிரித்தாள். 

புரியாமல் அவள் முகம் பார்க்க, “இல்ல… குரங்குக்கு வாக்கப்பட்டாதான் மரத்துக்கு மரம் தாவணும்னு சொல்லுவாங்க. இப்ப சீட்டுக்கு சீட்டுகூடத் தாவணும் போலயே!” சிரிக்காமல் நக்கல் செய்தவளை பொய்யாய் முறைத்து நின்றான். 

“வானரப் படைக்குத் தலைவியா இருக்கற நீயெல்லாம் பேசுற பாத்தியா? எல்லாம் என் நேரம்” கேலிச் சிரிப்போடே, 

கார் டிக்கியைத் திறந்து ஒரு கவரை எடுத்துவந்தான்.

சிறயளவிலான சதுர வடிவமே கேக் இருப்பதை உறுதி செய்ய, “கேக்கா?” என்றாள் உள்ளிருந்தபடியே சென்டர் சீட்டுக்கு மாறியவள். 

“நீ சர்ப்பரைஸ் ஆகலைனாலும் பரவாயில்ல. சர்ப்ரைஸான ஃபீலாவது கொடுக்கலாம்ல!” அவன் அப்பாவியாய் சொன்னதைக் கேட்டு மலர்ந்து சிரித்தாள். 

“எனக்கு நடிக்க வராதே!” ஒரு கண்ணைச் சுருக்கி தலைசாய்த்துச் சொல்ல, மனதை அள்ளிக் கொண்டது அவளின் சிறுபிள்ளை தோரணை. 

வெளியே சென்று வந்ததில் இவனது ஸ்வெட்டர் நன்றாகவே நனைந்துவிட, காருக்குள்‌ ஏறியதும் ஸ்வெட்டரைக் கழற்றிவிட்டான். இறுக்கிப் பிடித்த டீசர்ட்டும். ட்ராக் பேன்ட்டுமாக, 

இருக்கையில் எதிரெதிர் அமர்ந்து கொள்ள, நடுவில் கேக்கைப் பிரித்து வைத்தவன் மெழுகுவர்த்தியைக் குத்திவைத்தான். 

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ… மெல்லிய ஒலியில் எஸ்.பி.பி. கரைந்து கொண்டிருந்தார்.

“எப்போ வாங்குனீங்க?”

“சாப்பாடு வாங்க போனப்ப. அவனுக சரக்கு வாங்கப் போனானுங்க. நான் கேக் வாங்கப் போனேன்!” அவனையும்‌ மீறி உளறிவிட, அதிர்ந்து பார்த்தாள். 

“நீங்க குடிப்பீங்களா?” 

‘சொதப்பறதே வேலையாப் போச்சுடா சீனி உனக்கு. இப்ப சரக்கு வாங்கின கதைய அவ கேட்டாளா?’ மானசீகமாகக் குட்டிக் கொண்டான். அவளைப் போலவே ஒரு கண்ணைச் சுருக்கி பார்த்தவன், “எப்பவாவது… ஃப்ரெண்ட்ஸ் கூட சேந்தா பியர் மட்டும்!” மறைக்காமல் ஒத்துக் கொண்டான்.

“அப்போ இன்னைக்கி…” சந்தேகமாகக் கேட்டவளிடம்,

“பாத்தா எப்படித் தெரியுது?”

“எனக்கெப்படித் தெரியும்? எங்க வீட்ல யாரும் குடிச்சுப் பாத்ததில்ல!” என்றாள் வெடுக்கென.

அவனுக்கு தண்டபாணி நினைவு வர, இப்ப… இவ, அவங்க அண்ணனைப் பார்க்கணும். கேக் வெட்டறதுக்குப் பதிலா உன்னைத்தான் வெட்டுவா!’ மனசாட்சி பங்கமாய் பயமுறுத்தியது. 

“குடிச்சிருந்தா உன்னை இப்படி வெளியே கூட்டி வந்திருக்க மாட்டேன் பழனி. அதுவுமில்லாம மொடாக்குடிகாரனெல்லாம் இல்ல. ஜஸ்ட் பியர். அவ்வளவுதான்! இப்ப கேக் கட் பண்ணலாமா?” 

“ம்ம்ம்… ம்ம்ம்…” மெல்லிய உறுமல் அவளிடம்.‌

மெழுகுதிரியைப் பற்றவைத்தான். காரினுள் மெல்லிய வெளிச்சம் பரவி இசையோடு சேர்த்து ரம்மியம் கூட்டியது.

அவளிடம் கத்தியை நீட்ட, எட்டி வாங்கக்கூட முடியவில்லை. குளிரில் கை விரைத்துப் போன உணர்வு. அதிகக் குளிரில், அவளுக்கு தசைகள் பிடித்துக் கொண்டதை உணர்ந்தவன், அவசரமாக அவள் உள்ளைங்கையை இழுத்துத் தேய்க்க முற்பட, நாசுக்காக கைகளை உருவிக் கொண்டவள், இரண்டு கைகளையும் பரபரவென தேய்த்துவிட்டு, அவனிடம் பிடுங்காத குறையாக கத்தியை வாங்கி, வேகமாக மெழுகு திரியை ஊதிவிட்டு அவன் முகம் பார்க்க, ‘ரொம்பத்தான் பண்றா’ என அவளையே முறைத்தபடி பார்த்திருந்தான்.

“ஹலோ பாஸ்! கேன்டில் ஊதியாச்சு. பெர்த் டே சாங்க்!” கித்தாய்ப்பாய்க் கேட்க,‌

மெலிதகாக் கைதட்டி, “ஹேப்பி பெர்த் டே டூ‌ யூ!” சுரத்தையின்றி பாடினான்.

அவனிடமிருந்த கையை உருவிக்கொண்ட கோபம்.  

“இதுக்கு நீங்க பாடாமலே இருந்திருக்கலாம்! இதுதான் உங்க சர்ப்ரைசா” என்றவள், கேக்கை வெட்டினாள். சிறு துண்டை எடுத்து அவன்‌ முகம் பார்க்க, என்ன செய்யப் போகிறாய் என்பதுபோல், இதழோரம் கள்ளச் சிரிப்போடு, விழியகற்றாமல் அவளையே பார்க்க, அவனிடம் தயங்கியே நீட்ட, கையில் வாங்காமல், குறும்பாகச் சிரித்தபடியே வாய் திறக்க, மறுக்க முடியாமல், பட்டும் படாமல் ஊட்டிவிட, அவள் கையிலிருந்த மீதித்துண்டையே வாங்கி, அவளுக்கு ஊட்டிவிட்டான். தயங்கி பின் வாய் திறந்தாள். 

“சம்பிரதாயத்துக்கு ஊதியாச்சு, மறுபடியும் கேன்டில் பத்த வைங்க. ரொம்ப இருட்டா இருக்கு!” என்றாள் காருக்குள் கண்களைச் சுழற்றியவாறு. டேஷ் போர்டில் இருந்து வந்த, இசைகக்கு ஏற்றாற்போல் கண்சிமிட்டும் மெல்லிய வெளிச்சம் மட்டுமே. 

மெழுகு திரியை ஏற்றியவன் அப்படியே கேக்கைத் தூக்கி, முன் பக்க ஓட்டுனர் இருக்கையில் வைத்தான்‌. 

அவளை நெருங்கி அமர்ந்து தோளில் கை போட, அவள் அதிர்ந்து பார்த்தாள். 

“செல்ஃபி மா… செல்ஃபி‌… செல்ஃபி!” என்றான் கைபேசியை ஆட்டிக் காண்பித்து.

“பெர்த் டே கொண்டாடிட்டு, பெர்த் டே பேபிகூட செல்ஃபி  எடுக்கலைனான் சாமி குத்தமாப் போயிறும். 

“ஹோஓ…” என்றவள் வார்த்தை தொண்டைக்குழியிலேயே நின்றது தோளைச் சுற்றி வளைத்திருந்த அவனது நீண்ட கையின் திண்மையில். 

இருவரையும் சேர்த்து மெல்லிய வெளிச்சத்தில், தோளணைத்து எடுத்தவன், அப்பொழுதுதான் அவளது மேனி நடுக்கத்தை உணர்ந்தான். ஸ்வெட்டரின் ஈரம் புரிந்தது. 

“லூசா நீ!” என்றான்‌ அதிரடியாக. அதிர்ந்து அவள் விழிக்க,

“மொதல்ல ஸ்வெட்டரக் கழட்டு.” இரைந்தான் காரினுள். 

“அதெல்லாம் வேண்டாம். நான் சமாளிச்சுப்பேன். அதான் கேக் கட் பண்ணியாச்சுல்ல. மொதல்ல ரிசார்ட் போலாம்!” அவள் அவசரப்‌படுத்த, 

“இப்படியே இருந்தா ஜன்னிதான் வரும் பழனி! புரியாமப் பேசாதே!”

“உங்களுக்குதான் புரியல!” என்றவள், 

‘எப்படி இவருக்கு புரியவைக்கிறதுன்னு தெரியலையே’ உள்ளுக்குள் மறுகினாள். 

அந்தி மழை பொழிகிறது… 

ஒவ்வொரு துளியிலும் 

உன் முகம் தெரிகிறது… அடுத்த பாடல் ஆரம்பித்தது.

அவளின் நிலை உணர்ந்து, ஆத்திரத்துடன்,

“இப்ப நீ கழட்டுறியா? இல்ல நானே கழட்டவா?” அவளை நோக்கிக் திரும்ப,

“ஐயோ!” எனப் பதறியவள் கைகளை மார்புக்கு குறுக்கே வைத்து மறைத்துக் கொண்டாள். 

“ஏன் பழனி புரியாமப் பண்ற? இப்படியே இருந்தா தசை, நரம்பெல்லாம் இழுத்துப் பிடிச்சுக்கும்‌! அசைக்கக் கூட முடியாது! அப்பறம் கட்டிப்பிடி வைத்தியம் தான் பண்ணவேண்டியிருக்கும். பரவாயில்லையா?” கோபமும், கேலியும் கலந்தே வந்தது. 

உடலை ஊடுருவும் குளிரில், மழையில் நனைந்த ஸ்வெட்டரோடு‌ இருப்பவள், சொல்வதை புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்று ஆத்திரமாக வந்தது. 

“உங்களுக்குதான் புரியல!” என்றவள் அவன்‌ முகம் பார்க்கத் தயங்கினாள். 

“இதுல எனக்கென்ன புரியணும்!” என்றவன்‌ புருவம் சுருக்கினான். 

“நீங்க கூப்பிட்டதும், ஒரு சாக்லேட் பாரும், ரோஸும் கொடுத்து அனுப்பிருவீங்கன்னு நெனச்சு வெளியே வந்துட்டேன். இங்கவரை கூட்டி வருவீங்கன்னு தெரியாது.” என்றவள் குரல் வெகுவாகக் தழைந்து ஒலித்தது. 

“அதனால என்ன?” என்றான் மீண்டும் புரியாமல்.

“அது வந்து…” ஒரு கணம் தயங்கி அவன் முகத்தை தயக்கமாக ஏறிட்டுப் பார்க்க, அவள் எதையோ சொல்லத்  தயங்கி, தவிப்பது புரிந்தது. 

“இங்கே நைட்டுத் தங்குற ஐடியா இல்லாததால, நைட் ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரல. படுக்கத்தானே போறோம்னு, அங்கங்க பின்னு குத்தியிருந்த தாவணியைக் கழட்டிட்டு…” என்றவள் முடிக்காமல் பாதியில் நிறுத்த,

“கழட்டிட்டு?” என்றவனும் புரியாமல் கேட்க, ‘அய்யோவென’ 

மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள். 

‘எப்படி‌ சொல்றது? சொன்ன பிறகு இவனது ரியாக்ஷன் என்னவாக இருக்கும்’ என நினைத்துப் பார்க்கையில் வெட்கம் அவளைப் பிடிங்கித் திண்றது. 

சொல்லாமல் விடமாட்டான் எனப்புரிய, “வெறும் பாவாடை, ஜாக்கெட்டுக்கு மேலேயே ஸ்வெட்டர் மட்டும் போட்டுட்டு…” என்றவள் காரின் வெளியே கண்ணுக்குப் புலப்படாத இருட்டில் பார்வையைப் பதித்தாள். 

“இதுல என்ன இருக்…” என்றவன் கற்பனையில் காட்சிகள் விரிய,

‘அய்யடா!’ என்றது மனம்‌. அவள் ஏன்‌ காரில் ஏறத் தயங்கினாள்‌ என இப்பொழுது புரிந்தது. அவளது சங்கடமும் புரிந்தது. 

அச்சோ எனத் தோன்றியவனுக்குள் அடுத்த கணமே, கண்களில் குறும்பு கொப்பளித்தது. இதழ்களில் குறுநகை பூக்க, அவளைப் பார்த்தவன்,

“ஓமனக் குட்டியானும்!” என்றவனை முறைக்கக் கூட முடியவில்லை அவளால். குளிருக்கு உடம்பெல்லாம் ஒருவித வலி பரவியது. 

இவனுக்கும் அவளை எப்படி எதிர் கொள்வது எனத் தெரியவில்லை. மேலும் மேலும் குளிர் அதிகரித்ததே ஒழிய, குளிர் குறையும் வழியைக் காணோம்.

சட்டென தனது டீ சர்ட்டை தலை வழி கழட்டினான். 

பழனி, “அய்யோ!” எனப் பதற,

“இந்தா பிடி! ஈர ஸ்வெட்டரைக் கழட்டிட்டு இதைப்‌போடு!” என்றவனை நிமிர்ந்து பார்க்கவே அத்தனை தயக்கம். அகன்று விரிந்த மதர்த்த மார்பு, திமிறிய புஜமெனத் தன்னருகே மிக நெருக்கத்தில், ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்குள் பதட்டத்தையும் தாண்டி ஒருவித படபடப்பு தொற்றிக் கொண்டது. குளிர் கூட சற்று மட்டுப்பட்டது போல் உள்ளுக்குள் சட்டென ஒரு கதகதப்பு பரவுவது போல் இருக்க, விக்கித்து அவனையே பார்த்திருக்க, இருவரது பார்வைகளும் கவ்விக் கொள்ள, இருவருக்குள்ளும் சிலபல இரசவாதங்கள். உணர்வுகள் உள்ளுக்குள் வெடிக்கத் தொடங்க,

தேகம் யாவும் தீயின் தாகம்

தாகம் தீர நீ தான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது

தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சுபொறு கொஞ்சமிரு

தாவணி விசிறிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனை பூசுகிறேன்…

ஜானகியின் தேன் குரல் உருகிக் குழைந்தது. 

ஏகாந்த வேளை. பனிவிழும் இரவு. மழையில் நனைந்த பருவ நிலா. இரவு கொடுத்த துணிவு. இளமையின்‌ ஆர்ப்பரிப்பு.  உணர்ச்சியின் கோரப் பிடியில் சிக்கியவர்கள் சிந்தையை கட்டிப்போட்ட மெல்லிசை. 

முதலில் சுதாரித்தவன் சீனியே. ‘சீக்கிரம் இங்கிருந்து கிளம்புடா சீனி!’ உள்மனம் எச்சரிக்க, 

“பழனி!” என்றவன் குரல் குழைந்து ஒலித்ததில் பெண்ணவள் தவித்துப் போனாள். அவளையும் மீறி இனம்புரியா அச்சம் பரவுவதை தடுக்க முடியவில்லை. 

பேன்ட் பாக்கெட்டில் இருந்து சிறு பெட்டியை எடுத்துத் திறந்தவன் ஜெயின் ஒன்றை எடுத்தான். இரண்டு இதயங்கள் சேர்ந்தாற் போல், பொடி வைரக் கற்கள் பதித்த பென்டன்ட் கொண்ட, ரோஸ் கோல்டில் மெல்லிய செயின்.

கொக்கியை விலக்கி, அவள் கழுத்தருகே கொண்டு சென்றவன் கண்களில் தெரிந்த கட்டுக்கடங்காத மயக்கமும், தாபமும் அவளைக் கட்டியிழுத்தது. அவனையே பார்த்தபடி, தலையைக் குனிந்து கொடுத்தாள். மெல்லிய வெளிச்சத்தில் கொக்கியை மாட்டமுடியாமல் தடுமாற, அவன் விரல் நுனி தீண்டிய இடமெல்லாம் தீயின் தகிப்பு. தடுமாற்றம் புரிந்து, முதுகு காட்டித் திரும்பியவள்  சடையை முன்னெடுத்துப் போட்டுக் கொண்டாள். 

கொக்கியை மாட்டியவன், அவனையும் மீறி‌ பின் கழுத்தில் இதழ் பதிக்க, கட்டுப்பாடு கரை உடைத்தது. இனி அவனே நினைத்தாலும் கட்டுக்கடங்காத காட்டு வெள்ளமாய்‌ மோகம் பெருக்கெடுக்க, மீசை நுனி பட்டுமேனி தீண்டியதில், மூங்கில் காடாய் வெடித்துச் சிதறும் நெருப்பு பூக்கள் பெண்மைக்குள்ளும்.

பின்பக்கமாக வெற்று மார்பில் மயங்கிச் சாய்ந்து‌ கண் மயங்கினாள் மாது. ஸ்வெட்டரின் ஈரம் அவனுக்குள் அனல் மூட்டியது. அணைக்காமல் அணையாது எனத் தெரிந்தது. உணர்ச்சிப் பிரவாகம் அவனுக்குள் ஊற்றெடுக்க, யுத்த பிரளயம் பெண்மைக்குள். இறுக்கி வளைத்துக் கொண்டது ராஜாளியாய் நீண்டு விரிந்த தாபக்கரங்கள். மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல், மார்பில் ஒன்றியவளின் ரகசியப் பெட்டகத்தைத் திறக்கும் கடவுச் சொல்லாய் எண்ணிலடங்கா முத்தங்கள். 

பனி விழும் இரவு 

நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு 

இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது

பூங்காற்றும் தூங்காது

வா! வா! வா!

அவன் கழட்டிக் கொடுத்த டீசர்ட் மட்டுமே, மன்னவனோடு சேர்த்து மங்கையவள் மேனி தழுவியிருந்தது‌. 

“ஃப்ரூட்டி!” செவியோரம் மீசை நுனி தீண்ட, சிலிர்ப்பூட்டியது கரகரத்த குரல்.

“பட்டுச் சேலை, தாவணி, பாவாடையில பாத்ததைவிட, பெர்த் டே ட்ரெஸ்லதான் ரொம்ப சூப்பரா இருக்க!” என்றவனின் மார்பினுள் முகத்தைப் புதைத்துக் கொள்ள, மந்தகாசமாய் மலர்ந்து சிரித்தான். 

அணைத்து அணைந்தது பருவத்தீ. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top