முக்கனியும் சக்கரையும் 18

18

“பழனி… ப்ளீஸ்!” செவியோரம் கரகரத்த மாயவனின் மந்திரக் குரல், மங்கையவள் மனதிற்குள் புகுந்து என்னென்னவோ மாயங்கள் பல புரிந்தன.

“…” 

“பழனிஈஈ!” மீண்டும் அழைக்க, உதடு மடித்து அமைதிகாத்தாள் மாது.

“ஏதாவது பேசு. தனியா பைத்தியம் மாதிரி நான் மட்டும் பேசிட்டிருக்கேன்!” இவளைப் பித்துப் பிடிக்க வைத்தவன், பிதற்றிக் கொண்டிருந்தான் கைபேசியில். 

“ம்கூம்… வாய்ப்பே‌ இல்ல! அண்ணனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!” மறுப்புத் தெரிவித்த வார்த்தைகளில் அத்தனை அழுத்தம் இல்லையோ. அதுவே அவள் மனதைப் படம்பிடித்துக் காட்டியது.

 “அப்போ உனக்கு இஷ்ட்டம் தானே? நான் நேத்தே மிஸ் பண்ணிட்டேன். சாரி… நீ எங்க கூட வரலைங்கற கோபம். அதுவுமில்லாம உன் நம்பர் கூட எங்கிட்ட இல்ல!”

“இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்!” சிறுபிள்ளை கோபம் துளிர்த்தது பேச்சில்.

“எல்லாம் உன் தேவதைகள் கொடுத்த வரம். உன் நம்பர் கொடுக்க எவ்ளோ டிமான்ட் பண்ணாங்க தெரியுமா? இந்தக் குளிர்லயும் ஐஸ்க்ரீம், சாக்லேட், கேக்குன்னு லஞ்சம் கொடுத்துதான் வாங்கினேன். பூசாரி வரம் கொடுத்தும் சாமி வரம் கொடுக்க மாட்டேங்கறியே. இதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ் பழனி. நம்ம வாழ்க்கையில மறுபடியும் நாமலே நெனச்சாலும் இப்படியொரு நாள் திரும்ப வராது!”

“ஏன்… விடிஞ்சவுடனே கொடைக்கானல எங்கேயாவது இடம் மாத்தப் போறாங்களா? இல்லை, இனிமே கொடைக்கானலுக்கே வரமுடியாதா?” 

“கல்யாணம் பண்ணிட்டு வர்றது வேற. இப்போ இருக்குற ஃபீல் வேற. அது சொன்னா புரியாது. வருணபகவானுக்கு இருந்த இரக்கம் கூட உனக்கில்லையே பழனி!” ஆயாசமாக வந்து விழுந்தன வார்த்தைகள். 

இன்று மாலை கிளம்புவதாக இருக்க, வானம் இருட்டிக்‌ கொண்டு நல்ல மழை பிடித்துக் கொண்டது. இரண்டு மணி நேரத்தில் இறங்கிவிடலாம்‌ தான். ஆனால் இருட்டில், மலைப்பிரதேசத்தில், பெண் பிள்ளைகளை வைத்துத் கொண்டு மலையிறங்க யோசனையாக இருந்தது. திடீர் நிலச்சரிவு ஏற்பட்டால் என்ன செய்வது‌. நான்கு மணிக்கு பிடித்த மழை, இரவு எட்டு மணியாகியும் விடுவேனா என்று அடம்பிடித்தது. சாப்பாட்டிற்குக் கூட வெளியே செல்ல முடியவில்லை. ஆண்கள் மட்டுமே‌ சென்று உணவுப் பார்சல் வாங்கி வந்தனர்.‌ வீட்டிற்கு அழைத்துச் சொல்ல, விடிந்த பிறகே வந்து சேருங்கள் என்று சொல்லிவிட்டனர். 

சாப்பிட்டு முடித்ததும் குளிருக்கு அவரவர் அறைக்குள், அடைக்கோழி போல அடைந்து கொண்டனர். 

அடிக்கும் குளிருக்கு, இழுத்துப் போர்த்திக்கொண்டு பிள்ளைகளும் கண்ணயர்ந்து விட, உறக்கம் வராமல் உழன்று கொண்டிருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது சிந்தையில் நிறைந்திருந்தவனின் கைபேசி அழைப்பு. 

அழைப்பை ஏற்கவே அத்தனை தயக்கம். கண்டிப்பாக வரவேண்டும் என உத்தரவு போல் சொல்லியும் இவளுக்குதான் அவனுடன் செல்ல அச்சம் தடைபோட்டது. 

கைபேசி ஒலித்ததில் தங்கை ஒருத்தி தூக்கத்தில் புரண்டு படுக்க, அவசரமாக அழைப்பை ஏற்றாள்.‌ 

“எனக்குப் பயமா இருக்கே!” வாயருகே கை வைத்து மறைத்தவாக்கில் அவள் கிசுகிசுத்ததே அவனைக் கிறங்க வைக்கப் போதுமானதாக இருக்க,  

“நான் இருக்கும் போது உனக்கென்ன பயம்? ஜஸ்ட் ஹாஃப் அன் ஹவர். உடனே திரும்பி வந்துறலாம்! ஃபர்ஸ்ட் விஷ்தான் மிஸ் பண்ணிட்டேன். இந்த டே முடியறதுக்குள்ள செலப்ரேட் பண்ணணும் பழனி. டைமாகுது!” என்று அவசரப்படுபவனிடம், 

என் பயமே நீதான் என்பதை எப்படிச் சொல்வது என்பது தெரியாமல்தானே தவித்துக் கொண்டிருக்கிறாள் பெண். ஊசி‌முனைத் தீண்டல் போதும், இப்போதைக்கு அவளை வெடிக்க வைக்க. அந்தளவிற்கு உணர்வுகளின் கொந்தளிப்பில் சிக்கியிருந்தாள்‌ பெண்.‌ அவன் விரல் தீண்டிய இடங்கள் எல்லாம் தீயின் காந்தல். காலையிலிருந்து அவனது நடவடிக்கைகளை மனக்கண் முன் ஓட்டிப் பார்க்க, அடிவயிறு குழைந்து, கால்கள் இறுகியது. அவளையும் மீறி உள்ளங்கை வியர்த்து, கீழுதடு கடிபட்டது.

கோவிலில் ரஞ்சனி முதற்கொண்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க, ஒரு வாழ்த்துச் செய்தி கூட உன்னிடமிருந்து வரவில்லை என்பதை அவள் பார்வையாலேயே சுட்டெரித்துக் கேட்க, இங்கிருந்தபடியே விழி சுருக்கி மன்னிப்பை யாசித்தன மன்னவன் விழிகள். முகத்தை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.

ஆயாசமாகப் பின் கழுத்தை நீவிக் கொண்டு திரும்ப, வினீத் அவனைப் பார்த்து சிரித்தான்.

 “நீ ஏன்டா இங்கேயே பாக்குற?”‌‌ அவன் மீது எரிந்து விழுந்தான்.‌ 

“பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு, என்னை ஏன்டா கோவிக்கிற? கேமராக்காரன்டா… நாலா பக்கமும் பார்வையிருக்கும். எப்ப எங்களுக்குத் தேவையானது கிடைக்குதோ கப்புனு புடுச்சுக்குவோம்!” 

“இப்ப… எனக்கொரு வழி சொல்லுடா?” அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கியவனைப் பார்த்தவன்,

“இதுல எல்லாம் வெ…மா…சூ…சு… நாலும் பாக்கக் கூடாதுடா மச்சி. தடால்னு கால்ல விழுந்துறணும்!” என்றான் நக்கல் கலந்த சிரிப்போடு. 

“போடாங்… உங்கிட்டப் போயி கேட்டேன் பாரு!” 

“அனுபவஸ்த்தன் சொல்றேன். கேட்டா கேளு. கேக்கலைனா போ. நஷ்ட்டம் உனக்கு தான்!” 

“எங்கடா… இத்தனை படைபலத்தோட இருக்கறவகூட தனியா பேசவே முடியல. இதுல கால்ல எங்க விழறது?” அலுத்துக் கொண்டவனைப் பார்க்கவும் பாவமாக இருந்தது வினீத்திற்கு. 

“இப்ப என்ன தனியா பேசணும்? அவ்வளவு தானே? முதல்ல அவங்களை வச்சு ஷுட் பண்ணிட்டு, அடுத்த ட்ரெஸ் சேஞ்ச் பண்ண ரூம்க்கு அனுப்பிறலாம்‌. பொடுசுகள சமாளிக்கறது உன் பாடு!” என்றவன் அதன்படி தண்டபாணி, ரஞ்சனியை வைத்து பட்டுப் புடவை, வேட்டியில் பல போட்டோக்களை எடுத்தவன், முன்தினமே இவர்களுக்கு எடுத்து முடிந்துவிட்டதால், இவர்களை வேறு லொகேஷனில் வைத்து எடுக்க வேண்டும் என வினீத் கூற, தண்டபாணியும் சாப்பிட்டு போகலாம் என்றான். 

இன்னும் காலை சாப்பாடு சாப்பிடவில்லை. எழுந்து தயாராகி கோவில் வந்தாயிற்று. பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு இரண்டு காரும் கிளம்பியது. பிள்ளைகளோடு இவளும், ரஞ்சனியும்‌ அமர்ந்து கொள்ள, ஆண்கள் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டனர். 

குளிருக்கு இதமாக சுடச்சுட பொங்கல், வடை, பூரி, நெய் ரோஸ்ட் என வெளுத்துக் கட்டினர். ரஞ்சனி மட்டும்‌ டயட்‌, எண்ணெய் அய்ட்டமெல்லாம் வேண்டாமென இட்லி மட்டும் வாங்கிக் கொண்டாள். சீக்கிரம் சாப்பிட்டு காருக்கு சென்றுவிட்டாள். 

சாப்பிட்டு முடித்து, பழனி கைகழுவ எழுந்து செல்ல, இன்னும்‌ சாப்பிட்டுக் கொண்டிருந்த பொடுசுகளிடம், “ஹாய் ப்யூட்டீஸ்!” என்று சிரித்த முகமாக வந்தமர்ந்தான். 

“என்ன மாமா! என்ன வேணும்? எனி‌ ஹெல்ப்?” பட்டெனக் கேட்டனர்.

“யப்பா! எப்படி இவ்ளோ ஷார்ப்பா இருக்கீங்க?”

“எப்பவுமே மவுசு பூசாரிகளுக்குதான் மாமா. சாமிக்கில்ல. நாங்கதான் வரம் கொடுக்கோணும்!”

“அடியேன் சித்தம். உங்க அக்கா ஃபோன் நம்பர் வேணுமே!” மேஜை மீது விரல்களால் தட்டியபடியே கேட்க, 

“அச்சச்சோ! நம்பர் கூட இல்லையா? இது மட்டும் அக்காவுக்குத் தெரிஞ்சது…”

“அம்மா… பரதேவதைகளா! இதையும் உங்க அக்காகிட்ட சொல்லிறாதீங்க!”

“மாமா… ரொம்ப பயப்படுறாங்க! அக்காகிட்ட கேக்காம எப்படி நம்பர் தர்றது?” கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முயன்றனர் பொடுசுகள். 

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். உங்க அக்கா வர்றதுக்குள்ள நம்பர் கொடுங்க!”

“நம்பர் கொடுத்தா எங்களுக்கென்ன தருவீங்க?” அவனைப் போலவே மேஜை மீது விரல்களால் தட்டியபடி கேட்க,

“என்ன வேணாலும் வாங்கித் தர்றேன். சீக்கிரம் கொடுங்க!” கைகழுவச் சென்றவள் எங்கே வந்து விடுவாளோ என்ற அவசரம் அவனிடம். 

“எங்களுக்கு ஐஸ்க்ரீம் வேணும்!”

“இந்தக் குளிர்லயா?” என்றான் புருவம் சுருக்கி. 

“ஆமா! சம்மர்ல ஐஸ்கிரீம் சாப்பிடறதுல என்ன இருக்கு. எல்லாரும் பண்றதையே நாமலும் பண்ணினா எப்படீ? இந்தக் குளிர்ல சாப்பிடறதுதான் கிக்கே!”

“அதுசரி… எல்லாம் சினிமா பாத்து கெட்டுப் போயிட்டீங்க. மொதல்ல நம்பர்” என்றவன் தனது கைபைசியை எடுத்து அவர்கள் சொல்லச் சொல்ல, நம்பரை பதிந்து கொண்டான். 

“எங்கே… காமிங்க! என்ன பேர் போட்டு சேவ் பண்றீங்கனு‌ பாப்போம்!” என்று ஒரு‌பொடுசு‌ ஆர்வமிகுதியால் எட்டிப்‌பார்க்க, 

“சின்னப் பிள்ளைக, சின்னப் பிள்ளைகளாட்டம் இருங்க. வாங்க உங்களுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் மாமா வாங்கிக் தாரேன்!” தனது காரியம் முடிந்ததென  எழுந்து கொள்ள,

“தோடா… மாமா வெவரம்தான். இன்னும் நாள் முடியல. என்ன ஹெல்ப்னாலும் எங்ககிட்டதான் வந்தாகணும்.‌ மேலிடம் அதை நல்லா ஞாபகம் வச்சுட்டு செயல்பட்டா நல்லாருக்கும்!” ஆளுங்கட்சிக்கு மிரட்டல் விடும் கூட்டணிக் கட்சிகள் போல மறைமுக மிரட்டல் விட்டன பொடுசுகள். 

கையேடுத்துக் கும்பிட்டுவிட்டு, “வாங்க தெய்வங்களா!” என சைகை செய்தவன், 

“ஐஸ் க்ரீம் இருக்கா?” என்றான் சந்தேகமாக பில் கவுன்ட்டரில் இருந்தவரிடம். 

“இருக்கு சார். அங்க இருக்கு பாருங்க! இந்தக் காலத்துப் பிள்ளைக எப்ப எதை சாப்பிடுவாங்கனே தெரியல. அதனால எல்லா சீசன்லயும் எல்லாத்தையும் வாங்கி வச்சர்றது” என்றவர் ஓரமாக இருந்த ஃப்ரீசர் பாக்ஸைக் காண்பித்தார். அவர்கள் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். 

“அக்காவுக்கும்!” என்று கேட்க,

“இந்தக் குளிர்லயா?”

“இதை எங்களுக்குப் பழக்கிவிட்டதே அக்காதான். இன்னொன்னும் எடுங்க!” என்றனர் மிதப்பமாக.‌ 

அதற்குள் அவளும் புடவையாலேயே கைகளைத் துடைத்துக்கொண்டு வந்தாள். 

“அக்கா… இந்தா!” என அவளிடமும் நீட்ட, 

“இந்தக் குளிர்ல யாரு உங்கள ஐஸ் கிரீம் வாங்கச்சொன்னது. காய்ச்சல் வந்தா என்ன பண்றது?” கோபமாகவே கேட்க.

“அக்கா! இந்தக் குளிர்ல வேண்டாம்னு சொல்லச் சொல்ல மாமாதான் வாங்கிக் கொடுத்தாங்க. உனக்கும் வாங்கியிருக்காங்க பாரு! உன் கோபத்தை மாமா ஐஸ் வச்சு கூல் பண்றாரோ என்னமோ?” என்று அவனை கடைக்கண்ணால் வில்லங்கமாய்ப் பார்த்தபடி, ஐஸ்க்ரீமை அவளிடம் நீட்ட, அடிப்பாவிங்களா என அப்பாவியாய் அதிர்ந்து நின்றான். 

“எதுக்கு… இதைத் திண்ணுட்டு குளிர்ல கைகால் விரைக்கிறதுக்கா? யாராவது இந்தக் குளிர்ல ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்களா?”

“நாங்களே சின்னப்பிள்ளைங்க. எங்களுக்கு என்னக்கா தெரியும்? மாமா வாங்கிக் கொடுக்கும் போது வேண்டாம்னு சொல்லத் தோணல! மாமாவுக்கு மரியாதை!” என்றனர் அப்பாவியாய். 

“அவங்கதான் சின்னப்பிள்ளைங்க. அவங்களாக் கேட்டாக்கூட,‌ வேண்டாம்னு சொல்றதை விட்டுட்டு, நீங்களே வாங்கிக் கொடுத்திருக்கீங்க!” அவன் முகம் பார்த்து படபடவென பொறிந்து தள்ள, வாய்மூடி சிரித்தன வானரப்படை. 

‘இதுகளா சின்னப் பிள்ளைக. எல்லாம் வெளஞ்சதுக. சின்னப்பிள்ளைகன்னு சொன்னதுக்காக வச்சு செஞ்சுறுச்சுங்க. அக்காவுக்கும்னு கேக்கும் போதே உஷார் ஆகியிருக்கணும்!’ என்று நொந்து கொண்டவன், 

“தெய்வங்களே! உங்கள லேசுல நெனச்சுட்டேன். இனிமே உஷார் ஆகிக்கிறேன்!” என்றான் அசட்டுச் சிரிப்போடு. 

“பண்றதெல்லாம் பண்ணிட்டு சிரிப்பு வேற” வாய்க்குள் முணங்கியபடியே பழனி,‌ அவனை முறைத்துவிட்டு கோபமாக ஹோட்டலை விட்டு அவனுக்கு முன்னே செல்ல, ஒரு பொடுசு அவன் சட்டையைப் பிடித்து இழுத்தது. திரும்பிப்‌ பார்த்தான்.

“நீங்களும் வந்ததுலருந்து ட்ரை பண்றீங்க. ஒரு வார்த்தை பேசவைக்க முடியல. ஆனா, நாங்க அக்காவ உங்ககிட்ட பேச வச்சுருக்கோம். இதுக்கே நீங்க எங்கள ஸ்பெஷலா கவனிக்கோணும்!” என்று சொல்ல, கேபமாகவேணும் முகத்தைப் பார்த்து இப்பொழுதுதான் பேசினாள் என்பது நினைவிற்கு வந்தது. என்ன இருந்தாலும் இவர்களை மெச்சாமல் இருக்க முடியவில்லை. 

“இதுதான் பேசறதாம்மா? இன்னும் கொஞ்சம்ல அவளை உசுப்பேத்தி விட்டுருக்கீங்க!” சிரித்த முகமாகக் கேட்டவனிடம்,

“எங்களால முடிஞ்சது அவ்வளவுதான் மாமா. இனி நீங்கதான் பாத்துக்கணும்!” என்று‌ சொல்லிவிட்டு, ஓடிப்போய் அவளோடு சேர்ந்து கொண்டனர். 

சில நொடி தாமதத்தில் அவளது வாட்சப் ஒலியெழுப்ப எடுத்துப் பார்த்தாள். அதில்‌ வந்திருந்த லிங்கை திறந்து பார்க்க,

தேவி… ஸ்ரீதேவி… 

உன் திருவாய் மலர்ந்ததொரு

வார்த்தை சொல்லி விடம்மா…

பாவி அப்பாவி உன் தரிசனம்

தினசரி கிடைத்திட வரம் கொடம்மா… 

என்ற பாடல் ஒலிக்க, வெறும்‌ நம்பர் மட்டுமிருக்க, யாரிது என ப்ரொஃபைல் பார்த்தாள். கருப்பட்டி காஃபிக்கடை முகப்புதான் இருந்தது. 

திரும்பி முறைத்துப் பார்த்தாள். புருவம் உயர்த்தி கண் சிமிட்ட, படக்கென திரும்பிக் கொண்டாள். ஏனோ அவனது செய்கையில் உள்ளம் படபடத்தது. தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டாள். 

அதன் பிறகு அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காரில் ஏறி‌ சன்னலோரம் அமர்ந்தவள்‌ மீண்டும் ஒரு‌முறை‌ அவனை ஏறிட்டுப் பார்க்க, அதை எதிர் பார்த்தவன் போல், சட்டென நொடிப்பொழுதில் உதடு குவித்து அவசர முத்தம் ஒன்றை அனுப்ப, பதறிப்போய் அக்கம் பக்கம் பார்த்தவள் முகம் சட்டென செம்மை பூத்துவிட்டது. கோபம் மறைந்து இதழோரம் முறுவல் அரும்ப, விரல் கொண்டு யாருமறியாமல் மறைத்துக் கொள்ள, அதைக் கண்டு கொண்டவன் கண்கள்‌ சிரிப்பால் மின்னியது. உதட்டை மடித்து சிரிப்பை அடக்கியவள் மறுபுறம்‌ திரும்பிக் கொண்டாள்.‌  

ரிசார்ட் வந்தவர்கள், இவர்களையும் புடவை மாற்றிக்‌ கொள்ளச் சொல்ல, பழனி தாவணி, பாவாடையில் தயாராகி வந்தாள். ஒற்றைச் சடையை‌ இடப்பக்கமாக வழியவிட்டு, மல்லிச்சரம் தோள்வழிய, நடந்து வந்தவளைப் பார்த்தவன் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்குத் தோதாக, இவனும், பட்டு வேட்டி, சட்டையை மாற்றிவிட்டு, மேட்சிங் வேட்டி, சட்டை, இடக்கையில் வாட்ச் என வந்தவனிடம்,‌ 

“சீனி… ரைட் ஹேன்ட்ல பிரேஸ்லெட்டும், கழுத்துல செயினும் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்!” வினீத் கூற, 

“எனக்கது பழக்கமில்லையேடா. அதுவுமில்லாம இப்ப எங்க போறது. வா, இதுவே போதும்!”‌என்றவனிடம், 

“இருங்க!” என்று‌‌ சொல்லிக் கொண்டு தண்டபாணி வந்தான். தன் கையில், கழுத்தில் கிடந்ததைக் கழட்டி அவனுக்குப் போட்டுவிட்டான். 

சீனி மறுக்க, “எப்படியும் ரெண்டு நாள்ல நிச்சயத்துக்கு போடறதுதான். அட்வான்சா போட்டதா நெனச்சுக்கோங்க!” ‌என்று சொல்ல மாமன்‌, மச்சானுகளுக்குள் நடந்த முதல் நீண்ட உரையாடல் இதுதான். அதன் பிறகு சீனியும் மறுக்கவில்லை. சிரித்தபடியே கையை நீட்ட, தண்டபாணியே‌ மாட்டிவிட, அதையும் படம்‌‌ பிடித்துக் கொண்டான் வினீத். 

இவர்களை மட்டும் பிள்ளைகளோடு அழைத்துக் கொண்டு கார் கிளம்பியது. இவர்களுக்கான ஃபேட்டோ ஷுட் ஆரம்பித்தது.  

விரல் கோர்த்து, கை கோர்த்து என எடுக்கும் பொழுதெல்லாம் இயல்பாக இருந்தவள், அவன் இவளது இடையணைத்து,  அவனது மார்பில் கை வைத்து அவன் முகம் பார்க்கச் சொல்ல மிகவும் தடுமாறினாள். அவனது பார்வை அவளை‌ ஊடுறுவ, மெல்லிய சிலிர்ப்பு அவள் மேனியெங்கும் வியாபிக்க, இடையணைத்திருந்த மன்னவனது கைகள் அவளது நடுக்கத்தை உணர்ந்தது. இவ்வளவு நேரமாக முறைத்துக் கொண்டிருந்தவளது தடுமாற்றம் அவனைச் சீண்டிப் பார்க்கச் சொன்னது. மெல்ல விரல்கள் இடையில் அழுத்தம்‌ கொடுக்க, சட்டென விழிகள் விரித்துப் பார்த்தவளை, விழிகளில் கல்மிஷம் கொஞ்சப் பார்த்தான் சீனி. கள்ளச்சிரிப்பு மீசைக்கடியில். சட்டென உதறமுடியாமல் கட்டுண்டு நின்றாள் கள்ளனவன் விழி வீச்சில். குளிரையும்‌ மீறி, மேலுதட்டில் வியர்வை பூக்க, ஒற்றியெடுக்க விளைந்த மனதை அடக்கப் பிரயத்தனப் படுவது இப்பொழுது இவன் முறையாயிற்று.‌ பாவாடை தாவணியில், பூச்சரம் தோள் வழிய, மையிட்ட விழிகளில் மையல் தெரிய, தையலவள் வதனம் கட்டியிழுத்தது காளையவன் மனதை. 

தென்பழநி சந்தனம்தான்…

இங்கு ஒரு பெண்ணாச்சா…

என்னென்னவோ எண்ணம்தான்…

என்னக் கண்டு உண்டாச்சா…

ஒம் முந்தானைய இழுகட்டுமா…

சும்மா இரு…

ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா…

கொஞ்சம் பொறு…

அவளைப் பார்க்க வைக்க வேண்டும் என இவன் செய்த செயல் இவனுக்கே வினையாகப்‌‌ போயிற்று.  

அவளிடம் விளையாடிப் பார்க்க நினைத்தவன் இவன்தான் அவளிடம் மெல்ல  தன்னை இழந்து கொண்டிருந்தான். அவன் விளையாட நினைத்தது நெருப்புடன் என்பது அப்பொழுதுதான் அவனுக்கு உரைத்தது. உரசிப் பார்க்க நினைத்தவனையும் வாரிச் சுருட்டிக் கொண்டது. ஏதடா வம்பா போயிற்று எனத் தன்னேத்தானே நொந்து கொண்டான். 

ஊசியாய் உடலை ஊடுருவும் குளிருக்கு, கனகனப்பை மூட்டியது இருவரின் நெருக்கம். மூச்சுக்காற்று உரசும் தூரத்தில் பாவையவள் பளிங்கு முகம். விழிகளின் மிரட்சி இன்னும் அணைப்பை இருக்கத்தான் தோன்றியது. மனம் விட்டு விலகு என்றது.  வாலிபம் விலகாதே என சண்டித்தனம் செய்தது. விரல்கள் அவனையும் மீறி‌ கன்னம் வருட, விரல் தீண்டிய பஞ்சின் மென்மையில் தன் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தவன், அவளை நோக்கிக் குனிந்தான்.

“சீனி, ஓகே!” கட்டை விரலை உயரத்தி, வினீத் ஓங்கிக் கத்திய பிறகே, சட்டென விட்டு விலகி நின்றான். வேகமாக எதிலிருந்தோ தப்பிப்பது போல் திரும்பி பார்க்காமல் ஓடியவள், தங்கைகளுக்கு மத்தியில் சென்று அமர்ந்து கொண்டாள். கை, காலெல்லாம் வெடவெடத்தது. இதயம் தொண்டைக் குழிக்கு வந்துவிட்டது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிக்குண்டவள் விழியோரம் நீர்க்கசிவு. 

வினீத் யாரும் அறியாவண்ணம், அவனைத் தனியே தள்ளிக் கொண்டு சென்றான். “என்னடா பண்ற?” என்று பல்லிடுக்கில் வினவினான். 

“ஏதோ சாதாரணமா சாரி கேப்பேன்னு அவங்க அண்ணனை கட்பண்ணிட்டு‌ வந்தா, நீ பண்றது சரியில்லடா! அவங்க அண்ணன் எவ்வளவு டீசன்ட்டா நடந்துக்கிட்டாங்க. நீ என்னடான்னா எம்பொழப்புல மண்ணள்ளிப் போட்டிருவ போலயே!” கேமரா வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, சற்று நேரம் கழித்தே நண்பனின்‌ செய்கை உரைத்தது. பொறுப்பான நண்பனாக அவனை‌ கண்டித்தான். ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் அவனது பிழைப்பும் அல்லவா கெட்டுப் போகும். அதனால் எப்பொழுதும் மிகவும் கவனமாகவேதான் நடந்து கொள்வான். 

“சாரிடா… லைட்டா கண்ட்ரோல் லாஸ் ஆகிடுச்சு!” தன் தவறை‌ உணர்ந்து சொல்ல,

“என்னாது… லைட்டாவா? சினி ஃபீல்டுல இருக்கறவன்டா. ரியலுக்கும், ரீலுக்கும் வித்யாசம் தெரியும். புது மாப்பிள்ளைனா இதெல்லாம் சகஜம்தான். ஆசை வெட்கம் அறியாதுதான். ஆனா, நீ பண்ண காரியத்தால, அந்தப் பொண்ணப் பாத்தியா? மிரண்டு போய் உக்காந்திருக்கு!” என்று சொல்ல, அவனும் அவளை திரும்பிப் பார்த்தான். 

முகமெல்லாம் வெளிறிப்போய் அமர்ந்திருந்தவள், கண்களில் அவளையும் மீறி பரிதவிப்பும், படபடப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது. விரல்களை இறுகக் கோர்த்து  அமர்ந்திருந்தவளைப் பார்க்க தான் செய்யத் துணிந்த காரியத்தின் வீரியம் நன்கு புரிந்தது. ஆழ்ந்து மூச்செடுத்தவன், சற்று நேரம் இடைவெளிவிட்டு, ஆசுவாசப்பட்டு வந்தான். 

வினீத் உதவியாளனிடம், எல்லாருக்கும் டீ எடுத்து வரச் சொன்னான். சிறிது நேரம் டீ குடித்து சகஜநிலைக்குத் திரும்ப,

அடுத்தடுத்து வினீத் சொன்ன சில போஸ்களை அவனே தவிர்த்துவிட்டான். அவளது அருகாமை தன்னை தடுமாறச் செய்வது நன்கு புரிந்தது. மீண்டும் பரீட்சித்துப் பார்க்க அவன் விரும்பவில்லை. 

போதும் என்று கிளம்பினர். கிளும்பும் முன் அவளிடம், மன்னிப்பு கேட்க நினைத்தவன், பின் தங்கி நிற்க, அவளும் தயங்கி நிற்பது தெரிந்தது. எப்படி ஆரம்பிப்பதென்ற தயக்கம்.

“சாரி… உன்ன அவ்ளோ க்ளோசா பாத்ததுல கண்ட்ரோல் மிஸ் ஆகிருச்சு!” என்று‌‌ சொல்ல சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்தது.

“ஹேய்… நான் தான் சாரி கேட்டேனே!” அவளது கண்ணீர் பார்த்து தவித்துப் போனான். 

“நீங்க மட்டுமில்ல. நானும் தான். நானாவது உங்கள தள்ளி விட்டிருக்கலாம்ல?” என்றவள் குரல் தவறு செய்துவிட்ட தொணியில் கரகரத்தது. 

“நல்ல வேளை! அண்ணா இல்ல. அவங்க முன்னாடி அசிங்கமாப் போயிருக்கும்!” என்றவள் கண்ணீர் கரை கடந்தது.

சற்று முன் நானாவது தள்ளிவிட்டிருக்கலாம் என்ற பொழுது, அவளும் தன்னிடம் மயங்கி நின்றிருக்கிறாள் என்று‌ ஆண் மனது கர்வம் கொண்டது. இப்பொழுது அதை ஏதோ தகாத குற்றம் போல் உள்ளுக்குள் குமைவது அவனைச் சீண்டிவிட்டது. என்னவள் என்னிடம் மயங்கி நின்றது எப்படி குற்றமாகும்.  

“அப்போ, என்னை நீ பிடிச்சு ஒத்துக்கல. பெரியவங்க சொன்னாங்கனு சம்மதிச்சுருக்க. அப்படித்தானே?” வார்த்தைகள் கடினமாக வந்து விழ, அவனை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தவள், 

“எனக்கு விருப்பமில்லைனா எதையும் அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க மாட்டேன். எனக்கு விருப்பமில்லாததை என்கிட்ட யாரும் திணிக்கவும் முடியாது. பிடிக்கலைன்னா பிடிக்கலை தான்! பெரியவங்க சொல்றதை எந்தளவுக்கு மதிக்கிறோமோ, அதே அளவுக்கு அவங்களும் எங்க விருப்பு, வெறுப்புக்குதான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. எதையும் கட்டாயப்படுத்த மாட்டாங்க!” என்றவள் பேச்சில் பெற்றவர்களைப் பற்றிய பெருமிதம் பொங்கி வழிந்தது. எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது என்று மறைமுகமாக உணர்த்தியதில் முகம் புன்னகையில் மலர்ந்தது. அதை இன்னும் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டி, 

“அப்போ என்னை உனக்குப் புடிச்சுருக்குன்றதை சுத்தி வளைக்காம நேரிடையா எதிர்பாக்குறேன்” என்றவன், அவள் முகம் பார்த்து விடாப்பிடியாக நிற்க, 

“பிடிக்காமதான் பெர்த் டேக்கு நீங்க விஷ் பண்ணனும்னு விடிய விடிய எதிர்பார்த்தேனா?” வெடுக்கென கேட்டதில், உள்ளுக்குள் சந்தோஷம் ஊற்றெடுக்க கண்கள் மின்ன சிரித்தான். உள்ளம் முழுதும் மத்தாப்புச் சிதறல்.

“அப்ப எங்கிட்ட மயங்கி நின்னது எப்படி உனக்கு உறுத்தும். தாலி கட்டினாத்தான் உம்மேல எனக்கு உரிமை இருக்கா. மனசு கலந்த பின்னாடி தாலி வெறும் சம்பிரதாயம் மட்டும்தானே பழனி. அதுவும் நீ என் மனைவிங்கற அடையாளத்திற்காக, ஊருக்காக மட்டும்தானே?” 

அவள் அமைதியாகவே இருந்தாள். இதற்குமேல் இதைப் பற்றி பேசவேண்டாம் என நினைத்தவன்,

“சரி வா. உன்னோட பாடிகார்ட்ஸ் காருக்குப் போயிட்டாங்க. இந்த ஐவர் படை பாதுகாப்பு உங்க அம்மா ஐடியா தானே?” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள். 

“பரவாயில்லையே! மாமியாரப் பத்தி நல்லா தெரிஞ்ச வச்சுருக்கீங்களே?”

“தெரியாதா பின்ன! மருமகன் எந்திரிச்சு கோலம் போட்டு, மகளுக்கு காஃபி கொடுத்து எழுப்பணும்னு ஆசைப்படுற மாமியாராச்சே” என்று சொல்ல கலகலத்து சிரித்தாள். 

“நேத்து பேசினதை கேட்டுருக்கீங்க?”

“எனக்கு மட்டுமா கேட்டுச்சு. தெருவுக்கே கேட்டிருக்கும்.”

“எங்கம்மா அப்படித்தான். ஒழிச்சு மறச்சு பேசமாட்டாங்க! மனசுல பட்டதை அப்படியே பேசுவாங்க!’’

“அப்போ… முதல்ல கோலம் போட்டு பழகுங்குற!”

“ஏன், போட்டா என்ன தப்பு?” என்றவளைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவன், “நான் இந்த ஆட்டைக்கே வரல. நான் ஏதாவது சொல்லப்போக… பெண்கள் மட்டும்தான் இதெல்லாம் செய்யணுமான்னு நீங்க கொடிபிடிக்க, எதுக்கு இந்த வம்பு. இருக்கவே இருக்கு ஸ்டிக்கர். வாங்கி வாசல் பூரா ஒட்டிட்டுப் போறேன்!” என்று சொல்ல வாய்விட்டு சிரித்தாள். குளிருக்கு கைகளைக் காட்டியவாறு பேசிக் கொண்டே இருவரும் நடந்து வர, நடந்தவாக்கில் பக்கவாட்டாகத் திரும்பி அவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தாள். 

மேட்சிங் வேட்டி சட்டையில் ஆளுமையாக இருந்தவன் கண்கள் நிறைத்தான். என்னவென்று‌ புருவம் உயர்த்த,

“வேட்டி சட்டையில அம்சமா இருக்கீங்க!” என்றாள் அவனை ரசித்தபடி. 

“அப்போ காலையில பட்டு வேட்டி, சட்டையில நல்லா இல்லையா?” 

“அதுல இன்னும் சூப்பரா இருந்தீங்க. இப்பவே கல்யாண மாப்பிள்ளை மாதிரி!” என்றவள் கன்னமும் லேசாக செம்மை பூசியது. 

“அப்ப… காலையிலயும் பாத்திருக்க?” மெல்லிய கேலிப்புன்னகை அவனது இதழ்களில். கோபத்தில் தன் பக்கம் பார்க்கவே இல்லை என நினைத்திருக்க, பட்டு வேட்டி சட்டையிலும் தன்னை ரசித்திருக்கிறாள் என்று தெரிய மகிழ்ச்சி குமிழ்விட்டது‌. 

“நான் மட்டுமா பாத்தேன். கோவிலுக்கு வந்த எல்லாரும் தான் பாத்தாங்க. இப்படி உரம் போட்டு உடம்ப ஏத்தி வச்சிருந்தா யாருதான் திரும்பிப்‌ பாக்க மாட்டாங்க?” என்றவள் பேச்சில் பொறாமை எட்டிப்‌ பார்த்தது. வாய்விட்டு ஆர்ப்பாட்டமாகச் சிரித்தான்.

“அதுவா… இப்ப நான் பல்கிங் டயட்ல (bulking diet) இருக்கேன். அதனால அப்படித் தெரிவேனா இருக்கும். அடுத்து டோனிங் டயட்ல(toning diet) உடம்பக் கொறச்சு பாடி ஷேப் கொண்டு வரணும்?”

“இப்படி எதுக்கு உடம்ப வருத்திக்கணும். நார்மல் ஃபிட்னஸ்ல இருந்தா போதாதா?”

“எனக்கு இது புடிச்சிருக்கே. அதுவுமில்லாம இப்படி‌ இருந்தா தானே பொண்ணுங்களும் திரும்பிப் பாக்குறீங்க?”

“யார் சொன்னா. நீங்களே கற்பனை‌ பண்ணிக்க வேண்டியது. அப்படி எத்தனை பேரை திரும்பிப் பார்க்க வச்சீங்கலாம்‌!” மெல்லிய கோபம் இழையோடியது அவளது பேச்சில். அவளது கோபம் இவனுக்குள் சிரிப்பை வரவழைக்க,

“எங்கே… காலையிலிருந்து நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பாக்குறேன். ஒருத்திய மட்டும் என்பக்கம் திருப்பவே முடியலயே? சிக்ஸ் பேக்கெல்லாம்‌ அவகிட்ட வேலைக்காகது போல” என்றான் சலித்துக் கொண்டவன் போல். 

வாய்விட்டு சிரித்தவள், 

“உங்களப் பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு‌. போனாப் போகுதுன்னு மன்னிச்சு விடுறேன். நீங்க மட்டும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி‌ கேக்கும் போது, நாங்க மட்டும் தொந்தியும் தொப்பையுமா பாக்கணுமா? உங்களுக்கு மட்டும் குஷ்பூல ஆரம்பிச்சு நயன்தாரா, திரிஷா, சமந்தா, ஆலியானு சௌத் டூ நார்த் வரைக்கும் போவீங்க. நாங்க மட்டும்‌ இன்னும் சிக்ஸ்ட்டீ ப்ளஸ், செவன்ட்டி ப்ளஸ் ஹீரோஸ் பாக்கணும்?” 

“பாத்தியா எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போகுது. முதல்ல நம்ம கதைக்கு வா!” என்றவன் அவளை முன்னே போகச் சொல்ல, 

“வான்னு சொல்லிட்டுப் போகச் சொல்றீங்க?” என்றாள்‌ உதட்டை கன்னத்துள் சுழற்றி.‌

“அம்மா தாயே! ஏதாவது பண்ணு!” என்றான் முகம் பூரிக்க. 

ஒரு கணம் அவனை‌ ஆழ்ந்து பார்த்தவள், “தாங்க்ஸ்!” என்றாள் ஆழ்ந்த குரலில். எதற்கு எனப் புரியாமல் நின்று பார்த்தான். 

“இல்ல… அவங்க சொன்ன சில போஸ் எல்லாம் வேண்டாம்னு சொன்னீங்கல்ல. அதுக்கு!” 

“ஏன் உனக்கு இதெல்லாம் பிடிக்காதா?” இப்பொழுது தான் சகஜமாகவே பேச ஆரம்பித்ததில் பேச்சும், சிரிப்பும் என இயல்பாக வளர்ந்து கொண்டே போனது இருவருக்குமிடையில். 

“ம்கூம்… எனக்கு இந்த மாதிரி ஃபோட்டோ எடுத்து, ஃப்ளெக்ஸ் பேனர் வைக்கிறதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது. ரோட்டுல எத்தனையோ கல்யாண ஃப்ளெக்ஸ் பாத்து எப்படி இப்படியெல்லாம் ஃபோட்டோ எடுத்து பப்ளிக்கா வைக்கிறாங்கனு நெனச்சுருக்கேன்.” 

அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“வெறும் ஃபேட்டோ தானே. ஏன், கல்யாண ஆல்பமெல்லாம் பாத்தது இல்ல?”

“பாத்திருக்கேன். அதுல எல்லாம் இவ்வளவு நெருக்கமா இருக்க மாட்டாங்க‌. சித்தப்பா, பெரியப்பா, எங்க அப்பா அம்மா ஆல்பமெல்லாம், மிஞ்சி மிஞ்சிப் போனா மாத்தி மாத்தி ஊட்டி ஃபேட்டோ எடுத்திருப்பாங்க. அதுக்கே அவங்க முகம் தெரியாதளவுக்கு குனிஞ்சிருப்பாங்க. அதுவுமில்லாம அதை யாரும் போஸ்டர் அடிச்சு ஒட்டறதில்ல!”

“ஏய்… நீயென்ன பூமர் மாதிரி பேசுற. ஏன் சினிமா போஸ்ட்டரெல்லாம் பாத்ததில்ல?”

“அவங்க யாராவது சொந்த வாழ்க்கை ஃபோட்டவ போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்களா? அவங்க கூட ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன்னு மெய்ன்டெய்ன் பண்ணுறாங்க. நாமதான் அவங்களக் காபி பண்றதா நெனச்சுட்டு, கண்டதையும் பண்றோம். அதுவுமில்லாம நாம ரெண்டு பேர் மட்டுமே இந்த மாதிரி நிக்கிறது, கட்டிப்பிடிக்கிறது, முத்தம் கொடுக்குறது எல்லாமே நமக்கு மட்டுமேயான தனிப்பட்ட விஷயம். அதையும் போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிட்டா, இதை எங்க அப்பாவால சங்கோஜமில்லாம பாக்க முடியுமா? இல்ல… என்னால எப்படி அப்பா முகத்தை நேருக்கு நேராப் பாக்கமுடியும் சொல்லுங்க. ரூம்க்குள்ள நடக்கிறதை போஸ்ட்டர் போட்டா, அப்ப நமக்குன்னு தனிப்பட்ட விஷயம் என்ன இருக்கு. பாக்குறவன் பார்வையெல்லாம் நல்ல கண்ணோட்டத்துல இருக்கும்னு யார் கண்டது. இப்ப ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு, கிஸ் பண்ணிட்டு நிக்கிறோம். பாக்குறவன் அதை அடுத்த லெவலுக்கு கற்பனை பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம்‌. இப்போ, சினிமால கூட லைட் ஆஃப் பண்ணதும், விபரம் தெரிஞ்ச எல்லாருக்கும், அடுத்த என்னன்னு ஒரு‌ செகன்டாவது கற்பனையில ஓடும்தானே? இல்ல… சில வக்கிரம்‌ புடிச்சவங்க, உங்க எடத்துல அவனை வச்சுப் பாக்கமாட்டான்னு என்ன நிச்சயம்‌. எங்க அம்மாவும், அப்பாவும் சொந்த பந்தங்கள் முன்னாடி சேந்து உக்காந்துகூட நாங்க பாத்ததில்ல. அதுக்காக அவங்ககிட்ட அன்னியோன்யம் இல்லைன்னு சொல்ல முடியுமா? அது நாலு சுவத்துக்குள்ள அவங்களுக்கு மட்டுமே ஆனது. அதையேன் படம்பிடிச்சுக் காட்டணும்.” 

“அப்போ எதுக்கு இந்த ஃபோட்டோ ஷுட்?”

“நீங்க கேட்டீங்கன்னு தான். நேத்து என்னை உங்ககூட அனுப்பலைங்கவும் எனக்கு எவ்வளவு நிம்மதியா இருந்தது தெரியுமா?” என்று சொல்ல, அவளது மனம் புரிந்தது. 

அவளையே உற்றுப் பார்க்க, என்னவென புருவம் சுருக்கிக் கேட்டாள். 

“நீ எதை ஒன்னையும் ரொம்ப டீப்பா யோசிக்கிறியோன்னு இருக்கு‌. உன்னை மாதிரியே எல்லாரும் யோசிச்சா‌ ஃப்ளெக்ஸ் அடிக்கிறவன்‌ பொழப்பு என்னாகுறது?” சிரித்தபடி கேட்டான்.

“நான் அப்படித்தான். என்னோட பெர்சனல் எனக்கு மட்டும்‌தான். எனக்குதான் பிடிக்காதுன்னு சொன்னேன்.  மத்தவங்க பண்ணக்கூடாதுன்னு சொல்லலையே. அவங்கவங்க விருப்பம். அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்கும். நாம ஊர் திரும்பங்குள்ள, அண்ணனோட ஃப்ரெண்ட்ஸ் ஃப்ளெக்ஸ் அடிச்சு, ஊர் பூரா கட்அவுட் வச்சு எப்படி அலப்பறையைக் கூட்டியிருப்பாங்கனு மட்டும் பாருங்க. சும்மா அதிருதுல்ல லெவலுக்கு இருக்கும்!” சொல்லிவிட்டு அவளும் கலகலத்தாள். இவர்கள் பேசிக் கொண்டே மெதுவாக நடந்துவர,

“அக்கா… சீக்கிரம் வாங்க. கொஞ்சம் விட்டா போதுமே!” தனிமை கொடுத்து விலகி நின்ற பொடுசுகள் அழைக்க, 

“ஆரம்பிச்சுட்டாங்க… இவங்க அலப்பறையக் கூட்ட!” என்றவன்‌ முகத்தில் புன்னகை மட்டுமே. 

“உங்களுக்கு எதுவும் வருத்தமில்லையே. என்னடா இது இவ்வளவு தூரம் வந்தும் ஃபோட்டோஸ் நெனச்ச மாதிரி எடுக்க முடியலையேன்னு!”

“நானும் உனக்குப் பிடிக்காத விஷயத்தை திணிக்க மாட்டேன்னு நம்பலாம்!” என்றவனை நின்று ஆழ்ந்து பார்த்தாள். 

“நானும் மனசுக்குப் பிடிக்காத விஷயத்தை ஏத்துக்க மாட்டேன்!” என்றாள்.

இருவரது வாக்குறுதியிலும். எந்தளவிற்கு உறுதித்தன்மை இருக்கிறது என்பதை இன்றிரவே சோதித்துப் பார்க்க முடிவு செய்தது விதி.

*****

மக்களே நானும் சீக்கிரம் ஃப்ளாஷ் பேக் முடிக்கக் தான் முயற்சி பண்றேன். அது முயற்சியா மட்டும்தான் போகுது. அனுமார் வாலாட்டம் நீண்டு கிட்டே போகுதே ஒழிய முடிவேனாங்குது.🫣😌

Bulking → build the muscle

Toning → show the muscle

இது என்னான்னா நல்லா ஹெல்த்திய சாப்பிட்டு உடம்ப ஏத்திட்டு, அப்பறமா கொஞ்சம் கொஞ்சமா உடற்பயிற்சி செஞ்சு சிக்ஸ் பேக், செவன்‌ பேக்னு கொண்டு வர்றது. 

அதாவது சுவத்துல கலவையை அள்ளி அப்பிட்டு அப்பறமா தேச்சு எடுப்பாங்கல்ல அதே மாதிரி தான் இந்தக் பல்கிங்கும், டோனிங்கும். இதெல்லாம் பாடி பில்டர்ஸ் பண்றது. நம்ம மாதிரி சிக்கிள் பேக் ஆட்களுக்கு இல்ல. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top