17
கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோவில். மேகப் போர்வைக்குள் ஒழிந்துகொண்டு இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தான் கதிரவன். இன்று பரவாயில்லை எனுமளவிற்கு, முன்தினம் முற்றிலும் பனிமூட்டமே.
இரண்டு ஜோடிகளும். பட்டுச் சேலை, பட்டு வேட்டியில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக நின்றிருந்தனர்.
முதலில் கோவிலில் வைத்து, கடவுளை வணங்குவது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். இரண்டு ஆண்களின் பார்வையும் தத்தமது இணைகள் மீதுதான். தண்டபாணியாவது சற்று நாசுக்கு பார்த்தான்.
சீனி, பழனியிடமிருந்து பார்வையை அகற்றவே இல்லை.
காலையில் அவள் வந்திறங்கிய கோலத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு தன்னால் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. கண்களை மட்டும் விட்டுவிட்டு, ஸ்வெட்டர், குரங்கு குல்லாய் சகிதமாக, உடல் முழுவதும் இழுத்துப் போர்த்தியிருந்தாள். உடன் அவளது வாணரப்படைகளும். பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் என அவளுக்கு ஐவர் படை பாதுகாப்பு. பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. வந்திறங்கியதும் வாய்வழியாக பனியை புகையாக ஊதி விளையாட ஆரம்பித்துவிட்டனர். ஆரம்பித்து வைத்தது இவள்தான். வாயைக் குவித்து பனிப்புகையை ஊதியபடியே திரும்பியவள் இவனைப் பார்த்ததும் கப்பென நிறுத்திக் கொண்டாள். பழனிக்கு பற்கள் எல்லாம் கிட்டித்தது ஊசியாய் இறங்கிய குளிரில். இறுக்கிக் கட்டிய கையை எடுக்கவேயில்லை.
நேற்றிலிருந்து உள்ளுக்குள் கொந்தளித்த கோபமெல்லாம், அவளைப் பார்த்ததும் டீயில் நனைத்த பட்டர் பிஸ்கட் போல் நமத்துப் போனது சீனிக்கு.
பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டபடி அவளையே தான் பார்த்திருந்தான். அவளும் இவனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாலும், இவருக்கெல்லாம் குளிராதோ என்றுதான் நினைத்தாள். அவனும் முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தான் தான். அதை முழங்கை வரை ஏற்றிவிட்டிருந்தான். காதோடு மறைத்து குளிருக்கு போடும் இயர் மஃப் (ear muff)மட்டுமே போட்டிருந்தான். முகமூடி திருடன் மாதிரி போர்த்திக்கொண்டு நிற்கவில்லை.
முதல் ஃபோட்டோ ஷுட்டே குறிஞ்சியாண்டவர் கோவிலில் வைத்து என்று சொல்லியிருந்ததால் பட்டுச்சேலை, பட்டு வேட்டி உடுத்த வேண்டுமென வினீத் சொல்லிச் சென்றான்.
இவர்கள் தங்கியிருந்தது வீடு போன்ற அமைப்பிலான தனித்தனி ரிசார்ட். எந்த தொந்தரவும் இருக்கக் கூடாதென்பதற்காக தண்டபாணி அதையே இரண்டாக புக் செய்திருந்தான். அடுப்படி முதற்கொண்டு இருந்தது. நாமலே வேண்டுமானாலும் சமைத்துக் கொள்ளலாம்.
நேற்று இவர்கள் வந்து சேரவே மதியம் கடந்துவிட்டது.
வினீத் மற்றும் அவனது உதவியாளர்கள் இருவர், சீனி, ரஞ்சனியோடு ஒரு காரிலும், இவர்களுக்குப் பின்னால் தண்டபாணி ஒரு காரிலும் பழனி வழியாக கொடைக்கானலுக்கு மலையேறினர்.
எதிரில் வரும் வாகனம் கூடத் தெரியாதளவிற்கு சாலையெங்கும் பஞ்சுப்பொதியாய் பனிமூட்டம். மதிய நேரத்திலும் காரின் முகப்பு விளக்கை ஒளிறவிட்டவாறே, நிதானமாகத்தான் மலையேற முடிந்தது.
அந்தக் குளிரையும் மீறி மனம் வெம்பிக்கிடந்தது சீனியப்பனுக்கு. இவர்களுக்காக மெனக்கெட்டு தான் இவ்வளவு தூரத்தில் ஃபோட்டோ ஷுட் ஏற்பாடு பண்ணியதே. இல்லையென்றால் தண்டபாணியும் சென்னையில் இருக்க, தங்கையோடு அங்கேயே கடற்கரை பின்னணியில், சூரிய உதயத்தில் அழகாக ஃபோட்டோ ஷுட் வைத்திருக்க முடியாதா? எப்படியும் அவர்கள் இவ்வளவு தூரத்திற்கு பெண்ணை அனுப்ப மாட்டார்கள் எனத் தெரியும். ஒப்புத் தாம்பூலத்திற்கே அவளை அழைத்துவரவில்லை. எனவேதான் இத்தனை குளிரில், இவர்கள் இங்கே வருவதென முடிவு செய்தான். தங்கை மட்டும் கல்யாணப் பெண் இல்லையா? என்னமோ இவர்கள் தான் ஓவியமாக பெண்பிள்ளைகளை வளர்க்கிறார்களா? அர்த்தமற்ற கோபம் அவனுக்குள் கனன்று கொண்டிருந்தது.
ஒப்புத்தாம்பூலத்திற்கே தங்கள் வீட்டிற்கு எத்தனைபேர் வந்திருந்தனர். இங்கே பந்தக்காலுக்கு எத்தனை பேர் வந்திருந்தனர் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே அவனது கோபம் அர்த்தமற்றது எனத் தெரிந்திருக்கும். பெண் பிள்ளை விவகாரம். அத்தனை சொந்த பந்தங்கள் முன் எதை ஒன்றையும் யோசித்து தான் செய்ய வேண்டியிருக்கும்.
அவனின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதின் ஆதங்கம் அவனுக்கு. அவளுடனான இன்றைய இரவை அவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்து வந்தான். இன்று ஒரு நாள் மட்டும்தான், இருட்டுவதற்குள் திரும்பிவிட வேண்டுமென அனுமதி கொடுத்தும், அதை எப்படியாவது மறுநாள் வரை நீட்டிக்கும் எண்ணத்தோடுதான் வந்திருந்தான். அதனால் தான் இங்கேயே நேரம் கடத்தியும் இதுவும் நன்மைக்கே என எண்ணியிருந்தான்.
அவளை அதிகாலையில், பனியில் குளித்த ரோஜாவாகப் பார்த்ததிலிருந்து, எப்பொழுது அவளை அள்ளிக் கொண்டு கொடைக்கானல் போவோம் என்று ஆர்வமாக இருந்தவனை, நாளைதான் வருவாள் என்றதன் எதிர்வினை, சிறுபிள்ளை கோபமாக அவனுக்குள் கனன்று கொண்டிருந்தது.
அவளைப் பார்த்த தினமே அவள் மீது வந்த ஈர்ப்பு, ஆசையாக மாறி காதல் என்றளவிற்கு முன்னேறும் முன்னமே அது கல்யாணத்தில் கைகூடி வந்தது அவனே எதிர்பாரா இன்ப அதிர்வு. யாருக்கும் இப்படி நிகழ வாய்ப்பே இல்லை. அடுத்தடுத்து முகூர்த்தம் வேறு. அதனால் ஃபோனில் கூட பேசிக் கொண்டதில்லை.
இன்று அவளைப் பார்க்கப் போகிறோம் என கனவுகளை கண்களில் தேக்கி வந்தவனை, அதற்கேற்றாற்போல் அவனை ஏமாற்றாமல் அவளே வாசலில் வைத்தே தரிசனம் தந்தாள். அவளுடனான தனிமையை ஆவலோடு எதிர்பார்க்க, அது இங்கு இருக்கும் வரை கிடைக்காதெனத் தெரிந்தது. வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருந்தனர். எப்படித்தான் ஒவ்வொரு சின்ன விசேஷத்தையும், இத்தனை சொந்த பந்தங்களோடு சமாளிக்கிறார்களோ என அவனுக்கே ஆச்சர்யமாகத் தோன்றியது. அம்மாவிற்குத் துணையாக அங்கும் இங்கும் ஓடி வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய, இவன் பக்கம் ஓரப்பார்வை கூட வீசவில்லை. இவளுக்கு தன் மீது எந்த ஒரு உணர்வும் இல்லையோ என்றுகூட சந்தேகம் வந்தது. காலையில் தன்னைப் பார்த்ததும் அவள் கண்களில் தெரிந்த தடுமாற்றம் அப்படியில்லையே என்றது.
பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் போல்தானே ஏற்பாடு ஆனது. இவனுக்குதான் அவளைப் பார்த்ததும் இளையராஜா பின்னனியில் சிம்பொனி வாசித்தார். அவளுக்குள் அட்லீஸ்ட் ஐஸ் வண்டி மணியாவது அடித்ததா எனத் தெரியவில்லையே?
காலைச் சாப்பாடு முடித்துக் கிளம்பவே அந்தா இந்தா என மணி பத்தைக் கடந்துவிட்டது. அதன் பிறகும் தண்டபாணி மட்டுமே கிளம்பி வர, இவனுக்கு சொல்லவா வேண்டும். இவ்வளவு நேரமிருந்தும், இவனிடமும் ஒரு வார்த்தை முன்கூட்டியே இதைப் பற்றி ஒருவரும் சொல்லவில்லை. இறுகிப் போன முகத்தோடு காரை செலுத்திக் கொண்டிருந்தவனை ரஞ்சனியின் சிரிப்பு எரிச்சல் மூட்டியது.
“யார்கிட்ட இவ்வளவு நேரமா பேசுற?” காரை ஓட்டிக் கொண்டே சுள்ளென விழுந்தான் பின் சீட்டில் இருந்த தங்கையிடம். காரில் ஏறியதிலிருந்தே இயர் ஃபோன் மைக்கை உதட்டருகே வைத்து சன்னக்குரலில் கிளுக்கிச் சிரித்துப் பேசிக் கொண்டே வந்தாள்.
“எல்லாம் உன் வருங்கால மச்சானிடம் தான். கால் கட்பண்றேன்னாலும் விடமாட்டேங்குறாங்க!” என்றதில் இன்னும் கொஞ்சம் கோபம் சுள்ளென தலைக்கேறியது.
அது ஏழுபேர் அமரக்கூடிய இனோவா கார். இவன் காரை ஓட்ட, வினீத் பக்கத்தில். நடு இருக்கையில் இவள் மட்டும். பின்னிருக்கையில் உதவியாளர்கள் இருவரும். இவர்களுக்குப் பின் தண்டபாணியின் எட்டிகா வந்து கொண்டிருந்தது.
இன்னும் ஒரு தடவை கூட பழனியிடம் ஃபோனில் இவன் பேசியதில்லை. சொல்லப்போனால் அவளது கைபேசி எண் கூட இவனிடம் இல்லை. அவன் என்னவென்றால் மணிக்கணக்கில் தங்கையிடம் கடலை போடுகிறான்.
“எப்ப இருந்து இதெல்லாம்?” கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்க,
“பொண்ணு பாத்தப்பவே இருந்து தான். இதெல்லாம் ஒரு கேள்வியா?” என்று கேட்க, வரட்டும் என்று கருவினான் உள்ளுக்குள். இவளுக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த உதவியாளர்கள் பார்வை, பின்னால் வந்த தண்டபாணியைத் திரும்பிப் பார்த்துவிட்டு கேள்வியாகப் பார்த்துக் கொண்டது.
“முதல்ல கால் கட்பண்ணு!” என்றான் கோபமாக.
என் வீட்டிற்கு அவன் மாப்பிள்ளை என்றால், அவர்கள் வீட்டிற்கு நானும் மாப்பிள்ளை தானே! மனம் சிறுபிள்ளையின் வீம்பு காட்டியது.
ரஞ்சனி ஃபோனை அணைக்க, அடுத்த நொடியே காந்திமதி மகளுக்கு அழைத்திருந்தார்.
காந்திமதியிடம் ஃபோனில் சரியான பட்டிக்காடும்மா என்று கேலி பேசிச்சிரித்ததின் உபயமாக, கோபத்தில் வண்டி வேகமெடுத்தது.
“டேய்… சீனி. இது சென்னையில்லடா!” அதட்டினான் வினீத்.
“எல்லாம் உங்கப்பா தேடிக் கொண்டுவந்த சம்பந்தம். அவரை மாதிரியே உங்களுக்கும் புடிச்சிருக்காரு!” என்று தூபம் போட, அது இன்னும் கொஞ்சம் அவனை உசுப்பேற்றியது.
இடையில் ஒரு இடத்தில் காஃபிக்காக காரை நிறுத்தியதோடு சரி.
வந்திறங்கியவுடன் தண்டபாணி, ரஞ்சனியைத் தயாராக சொல்லிவிட்டான் வினீத். ஏற்கனவே அவன் இங்கே ஃபேட்டோ ஷுட்டிற்கு வந்திருக்கிறான் என்பதால் அவனுக்கு கொடைக்கானல் நன்கு பரிச்சயமே. அதனால் தாமதிக்காமல் கிளம்பி, அழகான இடங்களின் பிண்ணனியில் ஃபோட்டேக்களை எடுத்தான். ரஞ்சனி லெஹங்காவிலும், தண்டபாணிக்கு ஷெர்வானியிலும் சில ஃபோட்டோக்களை இருவரையும் ஜோடியாக நிற்கவைத்து பல கோணங்களில் கேமராவில் அடைத்தான். வினீத் சொல்லிக் கொடுத்த போஸில்(posture) நிற்க ஆரம்பத்தில் தண்டபாணிக்கே சற்று சங்கோஜமாக இருந்தது. ரஞ்சனி இயல்பாகவே இருந்தாள். வினீத் சொன்னபடி அவள் தோளில் கை போட்டு, அவள் முகம் பார்க்கவே அவனுக்குள் அத்தனை தடுமாற்றம். கல்யாணத்திற்கென சிறப்பாகச் செய்திருந்த ப்ரைடு ஃபேஷியலில், ரஞ்சனி முகம் தங்கமென ஜொலித்ததில், தண்டபாணி மனம் தானாகத் தடம்புரண்டது. அடுத்து இடையில் கை போடச் சொல்ல, ஒரு முறை சீனியைக் கூடத் திரும்பிப் பார்த்தான் தண்டபாணி. அண்ணன்காரன் முன் தங்கையின் இடையில் கைபோட சற்றுத் துடுமாறினான். அவளின் உடையும் அதற்கு இடையூறு செய்தது. லெஹங்கா என்பதால் வெற்றிடையில் கைபோட மிகவும் யோசித்தான். அவளுக்கு அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை போல. ஏதோ ப்ரொஃபஷனல் நடிகை போல, ஆக்ஷன் சொன்னதும் கை போட்டு, கேமராவிற்கு சிரித்து, கட் சொன்னதும் சிரிப்பைத் துடைத்தெடுத்த முகம் போல அடுத்த நொடியே இயல்பாக இருந்தாள்.
தண்டபாணி தடுமாற்றம் பார்த்து ஒத்த ரோசாதான் நினைவிற்கு வந்தது சீனிக்குள். சிரிப்போடு இவன்தான் தள்ளிச் செல்ல வேண்டியதாய்ப் போயிற்று. வெறும் பேச்சு மட்டும்தான் போல என எண்ணிக் கொண்டவனுக்கு, தண்டபாணியின் சங்கோஜத்தில் ஏதோ நெருடியது உள்ளுக்குள். ஃபோனில் அத்தனை சகஜமாகப் பேசுபவனால், சாதாரண ஃபோட்டேவிற்கு ஏன் இயல்பாக நெருங்க முடியவில்லை.
அதை அதற்கு மேல் யோசிக்கவிடாமல் பழனியின் நினைப்பு அவனை ஆக்கிரமித்தது. அப்பொழுதே சீனிக்கும் இதே மாதிரி தானும், பழனியும் எடுக்கும் கோணங்கள் கண்ணுக்குள் விரிந்தது. இவனே இப்படியென்றால் நாளை பழனியை நினைத்துப் பார்க்கையில் இப்பொழுதே அவனுக்குள் குறுகுறுப்பு மூண்டது. சீண்டிப்பார்க்கும் ஆசையும் எழுந்தது. அதில் அகப்படப்போவது தான்தான் எனத் தெரியாமல். உரசிப் பார்க்கப் போவது நெருப்பை. பற்றிக் கொள்ளாமல் இருந்தால்தானே ஆச்சர்யம்.
அடுத்து ரஞ்சனி டிசைனர் சேலையிலும், தண்டபாணி பேன்ட், சர்ட்டிலும் என சில போட்டோக்கள் அவர்களை வைத்து எடுத்தவன், அதில் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து தண்டபாணி மூலமாகவே பேனர் அடிப்பவர்களுக்கு அனுப்பி வைத்தான். இன்றிரவிற்கு பேனர் தயாராகி இரண்டு நாட்களுக்குள் ஊர் முழுவதும் கட்டிவிட ஏற்பாடு.
மதியத்திற்கு மேல் என்பதால் குளிர் சமாளிக்கும் அளவில்தான் இருந்தது. எனினும் சீக்கிரமே இருள் கவிழ, மீதியை மறுநாள் இருவருக்கும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் என மூட்டை கட்டிவிட்டு, ரிசார்ட் திரும்பினர்.
மணி இன்னும் இரவு ஏழு கூட ஆகவில்லை. அப்பொழுதே நன்றாக இருட்டிவிட்டது. குளிர் வேறு கடுமையாக இருக்க, ரஞ்சனி சாப்பிட்டு, உடைமாற்றி அறைக்குள் அடைந்து கொண்டாள்.
ஆண்கள் மட்டும் வெளியே கிடந்த கூடைச் சேர்களில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
வினீத் தன் உதவியாளர் ஒருவனிடம் சைகை செய்ய, அவன் ஒரு பேக்கை எடுத்து வந்து கொடுத்தான். அதிலிருந்த மதுபாட்டில்கள் எடுத்து முன்னாலிருந்த மேஜை மீது வைத்தான். தண்டபாணி தனக்குப் பழக்கமில்லை என நாசுக்காக மறுத்துவிட்டான்.
“சும்மா பியர் தான் ப்ரோ. இந்தக் குளிருக்கு இது கூட இல்லைனா எப்படி. கொடைக்கானல் வந்ததுக்கே அர்த்தமில்லாமப் போகும்!” என்று வினீத் கட்டாயப்படுத்த தண்டபாணி மறுத்துவிட்டான்.
“இதுவரைக்கும் நீங்க ட்ரிங் பண்ணதே இல்லையா?” என்றான் ஆச்சர்யமாக.
“ஒரே ஒரு தடவை ஃப்ரென்ட்ஸ் கட்டாயத்துல ட்ரிங்க் பண்ணியிருக்கேன். வாமிட் பண்ணி, என்ன பண்ணேன்னு எனக்கே நிதானமில்லாமப் போனதால, இனிமே இந்தக் கருமத்தை தொடவே கூடாதுன்னு முடிவு கட்டிட்டேன். அதுதான் முதலும் கடைசியும்!” என்றான் சிரித்தவாக்கில்.
சீனியைப் பார்த்தான் தண்டபாணி. அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தது. எப்பொழுதாவது நண்பர்களுடன் சேர்ந்து பியர் சாப்பிடுவது பழக்கம்தான் என்றான் சீனி. இந்தக் காலத்தில் இது சாதாரணமாகிவிட்டது. குடித்தால் குடும்ப கௌரவமே போய்விட்டதாக அரற்றியது ஒரு காலம். கௌரவத்திற்காகவேணும் குடிப்பதுதான் இந்தக்காலம்.
தண்டபாணியும் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு மட்டும் மரியாதைக்காக லெமன் சோடா கலக்கிக் கொண்டான்.
சீனி, பியர் டின்னை எடுத்துக் கொள்ள, வினீத்தும் அவனது உதவியாளர்களும் விஸ்க்கி எடுத்துக் கொண்டனர்.
இளவட்டங்களுக்கு கேட்கவா வேண்டும். அதன் பிறகு குளிராவது ஒன்றாவது. அளவான போதையில் ஆர்ப்பாட்டமாகப் போனது அன்றிரவு.
மறுநாள் காலை ஆறு மணிக்கே பரிவாரங்களுடன் பழனியம்மா வந்து இறங்கிவிட்டாள். இவர்களை இறக்கிவிட்டு கார் திரும்பிவிட்டது.
இப்பொழுதும் வினீத், நண்பனைப் பார்த்து சிரித்தான். உனக்கு வாய்ப்பில்லை ராஜா என்றது அந்தச் சிரிப்பு.
சீனி, “எப்பவும் வொய்ட் ட்ரெஸ் தேவதைகள் சுத்தியே இருப்பாங்க போலடா!” என்றான் நண்பனின் கேலி புரிந்ததில்.
இதோ பட்டுச்சேலையில் தயாராகி இரண்டு ஜோடிகளும் குறிஞ்சி ஆண்டவர் கோவில் முன்.
தண்டபாணி தங்கை பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லி அர்ச்சனைக்குக் கொடுத்தான். அப்பொழுதுதான் இன்று அவளுக்குப் பிறந்த நாள் என்பது மற்றவர்களுக்கே தெரியும்.
சீனி முகம் சத்திழந்தது. இன்றைய முதல் வாழ்த்தும், முதல் பரிசும் தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முன்தினம், அவளை தன்னோடு கொடைக்கானல் அழைத்துவர அத்தனை பாடுபட்டான் சீனி.
அண்ணனாக அது தண்டபாணிக்கே வாய்த்தது. அடுத்த வருடம் தங்கை இன்னொருவன் மனைவி! திருநீறை தங்கை நெற்றியில் பூசிவிடும் பொழுது இருவருக்கும் இதே எண்ணம்தான் போலும். அவளது கண்கள் கரித்துக் கொண்டுவர, தண்டபாணிக்கும் தொண்டை அடைத்தது.
“ஞானம்…” என்றழைத்து சீண்டிவிட்டு, அவளிடம் பெரிய சைஸ் கேட்பரீஸை நீட்டினான் எப்பவும்போல்.
தங்கையிடம் பதிலுக்கு தண்டம் என்ற வார்த்தையை எதிர்பார்க்க, “தாங்க்ஸ் ண்ணா” என்றவள் தொண்டை கமறியது. அண்ணா என்ற சொல் அவள் வாயிலிருந்து அத்தனை சீக்கிரம் வராது. அவளும் உணர்ச்சி வசப்பட்டிருப்பது தெரிந்து, மென் சிரிப்போடு தங்கையின் உச்சியில் கைவைத்து செல்லமாக ஆட்டினான். இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த வினீத் இந்தக் காட்சியையும் தனது கேமராவில் ஒரே கிளிக்கில் அடைத்தான்.
எட்டி நின்று இவர்களைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “மாமா, நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. அக்கா நைட்டெல்லாம் உங்க ஃபோன் காலுக்காக வெயிட்டிங். சொதப்பிட்டீங்க!” என்றது ஒரு பொடுசு. அதிர்ந்து திரும்பிப் பார்த்தான். வந்ததிலிருந்து ஏன் அவள் தன்னை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை என இப்பொழுதுதான் அவனுக்கே புரிந்தது. அவனும் அவளிடம் பேசுவதற்கு எத்தனையோ முயற்சித்தும், விலகியே சென்றாள்.
இந்த நாளுக்காக அவன் எத்தனை ஏற்பாடுகளோடு வந்தான் என்பது அவனுக்குத் தானே தெரியும். இவளை அனுப்பாத கோபத்தில் இருந்தவனுக்கு, ஃபோனிலாவது முதல் வாழ்த்தை சொல்லியிருக்கலாம் என்பதே இப்பொழுதுதான் உரைத்தது.
“அக்கா நைட்டெல்லாம் உங்க ஃபோன் கால் எதிர்பாத்தாங்க. நீங்க ஃபோன் பண்ணாததுல, நாங்க வேற அவங்கள அதிகமா ஓட்டி, பெர்த் டே அதுவுமா அழவச்சுட்டோம். காலையிலேயே உங்க ஆள் அப்செட்.” அவளும் இரவு முழுவதும் நொடிக்கொரு தடவை எடுத்து வாட்சப்பை திறந்து பார்த்தாள். இவளிடமும் அவனது கைபேசி எண் இல்லைதான். ஆனால், இவன் எப்படியாவது நிச்சயமாக வாழ்த்து தெரிவிப்பான் என்ற எதிர்பார்ப்பு மனம் முழுவதும் மலையளவு இருந்தது.
‘சொதப்பிட்டியேடா சீனி! பிறந்த நாளும் அதுவுமா ஏமாற்றத்தோட வந்திருக்கா. ஆரம்பமே அமர்க்களமா இருக்கேடா’ ஆயாசத்தோடு அவளைத் திரும்பிப் பார்க்க, அத்தனை குளிரிலும் அவளது பார்வை, அங்கிருந்து அனல் வீசியது.
‘சோனமுத்தா… போச்சா!’
கால்ல விழுற பரிகாரம் இங்கேருந்தே அவனுக்கு ஸ்டார்ட் ஆயிருச்சு போல.
