13
“என்னங்க இப்படிக் கேக்குறாங்க?”
“அதான் கலை, எனக்கும் ஒன்னும் புரியல! எடுத்தவுடனே தட்டிக் கழிக்கவும் முடியல!”
“இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. முடியாதுன்னு சொல்லிருங்க!” பட்டுத் தெறித்தாற்போல் பட்டென தன் முடிவைச் சொன்னார் கலையரசி.
“எதைக் காரணமாச் சொல்றது கலை? நாமலும் பழனிக்கு அடுத்துப் பாக்கணும்தானே? வலிய தேடிவரும்போது ஏன் வேண்டாங்கணும்!”
“எனக்கும் ஆசைதான். ஒத்தப்பிள்ளைய கண்ணுக்குத் தெரியாத எடத்துல கொடுக்கறதைவிட, அண்ணன்காரன் கண் முன்னாடியே இருப்பா. நம்ம காலத்துக்குப் பின்னால ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர், ஒன்னுக்குள்ள ஒன்னா இருப்பாங்கதான். ஆனா… பொண்ணு கொடுத்து பொண்ணெடுக்கறதுங்கறது, நம்ம தலைய நாமலே கொள்ளிக்கட்டையால சொறிஞ்சுக்குற மாதிரி. அங்க புகைஞ்சா இங்க தீப்பிடிக்கும். இங்க இடி இடிச்சா அங்க மழை பெய்யும். வேற பக்கம் கொடுத்தாலாவது, நல்லது கெட்டதுல பாத்துக்கிட்டாலும், அண்ணன் தங்கச்சி உறவாவது நாளைக்கும் நீடிக்கும்!” எதார்த்த நடைமுறையை கலையரசி எடுத்துக் கூற, தணிகைவேல் நெற்றியிலும் சிந்தனைக் கோடுகள். அவருக்கும் வேண்டும், வேண்டாமென இருமனதாகத்தான் இருந்தது. சட்டென தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. பொதிகாச்சலம் இப்படிக் கேட்பார் என எதிர்பார்க்கவுமில்லை.
எந்தளவிற்கு நம் குடும்பத்தைப் பிடித்துப் போயிருந்தால், மகளுக்கு சம்பந்தம் பார்க்கவந்த இடத்தில், மகனுக்கும் சேர்த்து பெண் கேட்டிருப்பார். அதை எண்ணிப் பார்க்கையில் தணிகைவேலுக்கு அதீதப் பெருமையாகவும் இருந்தது. பிள்ளைகளை நினைத்து புலங்காகிதம் அடைந்தது பெற்ற மனது.
மகளுக்கு ஏற்ற, நல்ல சம்பந்தம் தான். நல்ல மாப்பிள்ளை தான். நாமாகத் தேடிப்போகாமல், நம்மைத்தேடி வலிய வருகிறது. பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுப்பது என்ற ஒன்றுதான் சற்றே உதைக்கிறது. பொதிகாச்சலமும் யோசித்து சொல்லுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டார்.
“இவர் கேட்டதும், அந்தம்மா மூஞ்சி போன போக்கே சரியில்லைங்க. வந்ததுலருந்தே வேப்பங்காயக் கடிச்ச மாதிரியே தான் உக்காந்திருக்கு! பொண்ணு எடுக்கறோம்னா, அது வேற கதை. நம்ம பையன் அங்க போயி வாழப்போறதில்ல. ஆனா, பொண்ணு கொடுக்கும் போது வீட்டாளுகளையும் பாக்கணும். இது ஒத்துவராது. சொல்லிறுங்க! அதுக்கு மேல பொண்ணு கொடுக்கறதும், கொடுக்காததும் அவங்க இஷ்ட்டம்!” தன் முடிவை உறுதியாகவும், இறுதியாகவும் பட்டெனக் கூறிவிட்டார் கலையரசி.
காந்திமதி கண்கள் வந்ததிலிருந்து வீட்டைச் சுற்றிவருவதும், இதுமட்டும் தான் ஆஸ்த்தியா, வேறு இன்னும் என்னென்ன இருக்கு என்கிற ஆராயும் தோரணையில், மற்றவர்களிடம் பேச்சுக் கொடுப்பதுமாக இருந்தது கலையரசிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
நாம் பெண்தானே எடுக்கப் போகிறோம். மகனுக்குப் பெண் பிடித்திருக்கிறது என்பது, மகன் வந்ததிலிருந்து ஃபோனும் கையுமாக இருப்பதிலேயே தெரிந்துவிட்டது. குற்றம் குறை இல்லாத மனிதர் யாரிருக்கா? மகள் வாழப்போகும் வீட்டைப் பற்றி விசாரிப்பது சகஜம்தானே? இந்தம்மா எப்படியிருந்தா நமக்கென்ன என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்.
ஆனால், பெண் கேட்டதும் காந்திமதி முகம்தான், கலையரசி கண்முன் வந்து நின்றது. மனம் ஏனோ ஒப்பவில்லை.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அய்யம்மா, “எடுத்தவுடனே இப்படி படக்குணு பேசாதே கலை. நல்ல பயலாத்தான் தெரியுது. நம்ம புள்ளைகளையும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்.” பெரிய மனுஷியாக மகளுக்கு எடுத்துச் சொல்ல,
“அவள என்னத்தம்மா கேக்குறது? இன்னும் அவ சின்னப்பிள்ள. நாம பாத்து என்ன சொல்றோமோ அதான்!” என்றார் அவரிடமும்.
“கல்யாண வயசு வந்துருச்சுல்ல. அப்பறமென்ன சின்னப்பிள்ள? பெத்தவுக கண்ணுக்கு, பிள்ளைகளுக்கு எத்தனை வயசானாலும் சின்னப்பிள்ளைகளாத்தான் தெரியும். பழனிகிட்டயும் ஒரு வார்த்தை கேளு!” இவர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க,
சொந்த பந்தங்கள் வேறு ஆளுக்கொரு பக்கம் புகைய ஆரம்பித்துவிட்டனர்.
பெண்தான் வெளியே எடுக்கிறார்கள். மகளுக்காவது சொந்தத்தில் பார்ப்பார்கள் என எண்ணிக் கொண்டிருந்தனர். மாப்பிள்ளை வீடு பார்க்கவந்த இடத்தில், பெண்ணையும் சேர்த்துக் கேட்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண்ணும் தங்கள் கைவிட்டுப் போய்விடுமோ என்ற ஆதங்கம். உங்களுக்கும் இல்லாமல், எங்களுக்கும் இல்லாமல் போகப் போகுது. கலையரசி மற்றும் தணிகைவேல் உடன் பிறப்புகள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர்.
பழனிமலை அடிவாரத்தில் தான் மாப்பிள்ளை வீடு எனத்தெரியும். சீனியப்பன் சற்று தொலைவிலேயே காரை நிறுத்தி, இறங்கி வந்தான். அங்கு வரிசையில் நின்றிருந்த குதிரை வண்டிக்காரரிடம் வீட்டை விசாரித்தான்.
“பஞ்சாமிர்தக்காரவுக வீடா. ரெண்டு வீதி தள்ளிதான் இருக்கு, அங்குன போய்க் கேளுங்க. யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க!” என்று கைகாட்டியவர், இவன் மறுபடியும் காரை நோக்கி நடந்து செல்வதைப் பார்த்தார்.
“தம்பி! பொண்ணு வீட்டுக்காரவுகளா?” முதலில் யாரோ என்று நினைத்தவர், காரைப் பார்த்துவிட்டு கேட்க, நின்று திரும்பிப் பார்த்தான்.
“நேத்தே பாப்பா சொல்லுச்சு. மாப்பிள்ளை வீடு பாக்கவர்றதா. அது குறுகலான தெரு தம்பி. இவ்வளவு பெரிய காரெல்லாம் உள்ளாற போகாது. அப்படியே போனாலும் திருப்பறது கஷ்ட்டம். அந்தக் காலத்து வீதி!” என்றார்.
பழைய ஊர்களில் குறுக்கு வீதிகளெல்லாம் மாட்டு வண்டி செல்லும் அகலம்தான் இருக்கும். கார் போய் திரும்பும் அளவிற்கெல்லாம் இருக்காது.
“வாங்க தம்பி! வண்டியில போயிறலாம்! நம்ம பஞ்சாமிர்தக்காரவுக வீடுதானே?” என்று அழைக்க, அவனும் அப்பாவைப் பார்த்தான்.
அவரும் சரியென, அனைவரும் இறங்கிக் கொள்ள, காரை நிறுத்த இடம் தேடினான். குதிரை வண்டிக்காரரே இடம் பார்த்துக் கொடுத்தார்.
அவன் யோசிப்பதைப் பார்த்தவர், “பயப்படாம நிப்பாட்டுங்க தம்பி. நம்ம தண்டபாணி தம்பி வீட்டுக்கு வந்தவுக காருன்னு சொன்னா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க!” என்று சொல்ல காரை ஓரமாக நிறுத்தி இறங்கி வந்தான்.
இவரது பேச்சிலேயே அவர்கள் குடும்பத்தில், பிள்ளைகள் முதற்கொண்டு இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயம் என்பது தெரிந்தது.
தணிகைவேல் குடும்பம், இங்கு எந்தளவிற்கு பிரசித்தம் என்பது குதிரை வண்டிக்காரரின் ஒற்றை செயல் நிரூபித்தது. அந்தக் கணமே மாப்பிள்ளையை முடிவு செய்துவிட்டார் பொதிகாச்சலம்.
“கார் கூடப் போகமுடியாத தெருவுல எம்பொண்ணு எப்படித்தான் வந்து இருப்பாளோ? எம்பேச்சை யார் கேக்குறா?” காந்திமதி அங்கேயே முணங்க ஆரம்பித்துவிட்டார்.
ஆனால், சென்னையில் பெரியவர்களோடு பெண்பார்க்க வந்ததே, தண்டபாணி தன் சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருந்த காரில்தான் என்பதை மறந்துவிட்டார். அவன் ஒருத்தன் பயன்பாட்டிற்கே அவ்வளவு விலை ஒசத்தியான கார் வைத்திருந்தான்.
மாப்பிள்ளைக்கு ஊர் பழனி என்றதில் காந்திமதிக்கு ஆரம்பத்திலேயே கொஞ்சம் சுணக்கம் தான். இருந்தாலும் மாப்பிள்ளை வேலை பார்ப்பதும், தங்கியிருப்பதும் சென்னைதானே என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே சம்மதித்தார்.
இங்கு வந்தபிறகு, ‘கார் கூட போகமுடியாத தெருவில் வீடா. அப்போ, வசதி வாய்ப்புகள் எப்படியென்று தெரியவில்லையே என்று சந்தேகம் வேறு. தண்டபாணி சம்பளம் தெரியும். இருந்தாலும் நம் வசதிக்கு இணையாக குடும்பம் இருக்குமா? இப்ப என்ன நிச்சயமா பண்ணிட்டோம். பாக்கத்தானே வந்திருக்கோம். வசதி ஒத்து வரலைன்னா, பாத்துக்கலாம்னு சொல்லிட்டுக் கிளம்பிற வேண்டியதுதான்’ என்ற முடிவில் வந்தவருக்கு, இங்கு வந்து பார்த்தபிறகு பொதிகாச்சலம், மகனுக்கும் சேர்த்து பெண்ணைப் பேசினால் எப்படி இருக்கும். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் காந்திமதி.
குதிரை வண்டியில் இவர்கள் வந்திறங்கியதும், மரியாதையாக வாசல்வரை வந்து வரவேற்றார் தணிகைவேல். பின்னால், இன்னொரு வண்டியில் பொதிகாச்சலமும், அவரது மைத்துனனும் வந்திறங்கினர்.
குதிரை வண்டிக்காரருக்கு பணம் எடுத்துக் கொடுக்க, “ஐயா வீட்டுக்கு வந்தவுங்ககிட்ட காசு வாங்குவாங்களா? நம்ம வீடு தம்பி. நல்லபடியா கல்யாணம் முடியட்டும். ஐயாகிட்டயே மொத்தமா வாங்கிக்கறேன்!” என்று வாங்க மறுத்துவிட்டார்.
“உள்ள வாங்க தம்பி! நீங்க கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க. தண்டபாணி பாத்துக்குவான். இந்தத் தெருவுக்குள்ள கார் வர்றது கொஞ்சம் கஷ்ட்டம்தான். இது பூர்வீக வீடு. காரை எங்க நிப்பாட்டியிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா மற்றும் அவர்கள் பிள்ளைகள் என வீடே நிறைந்திருந்தது. அதைப் பார்த்தவுடன் பொதிகாச்சலத்திற்கு மனம் நிறைந்துவிட்டது.
அவருக்கும் சொந்த பந்தமென்று பெரிதாக இல்லை. காந்திமதி குடும்பமும், இரண்டு தலைமுறைக்கு முன்னரே சென்னையில் செட்டிலாகிவிட, கோவில் கொடை என்று ஊர்ப்பக்கம் தலை காட்டினால்தான் உண்டு. இல்லையென்றால் நெருங்கிய சொந்தங்கள் வீட்டு விசேஷத்திற்கு, யாரோ ஒருத்தர் செல்வதோடு சரி. பெரும்பாலும் பிள்ளைகளுக்கு ஊர் வாசமே அற்றுப் போயிற்று. காந்திமதி, தம்பி குடும்பமும் சென்னையில்தான்.
இங்கு வந்து இத்தனை சொந்த பந்தங்களைப் பார்த்தவருக்கு, தேவைக்கும் மிஞ்சி சொத்து சேர்த்தாயிற்று. இனி சொந்த பந்தங்களை சேர்ப்போம் என ஆசை வந்துவிட்டது.
உள்ளே வந்து கூட்டத்தைப் பார்த்த சந்திராவோ, “என்ன மதினி! நாமலே அஞ்சு பேர்தான் வந்திருக்கோம். இங்க இவ்ளோ கும்பல் சேத்து வச்சுருக்காங்க. நம்ம பிள்ள குணத்துக்கு இந்தக் கூட்டம் ஆகுமா?” என்று யாருமறியாமல் காந்திமதி காதைக் கடித்தார். அவருக்குதான் நாத்தனாரைப் பற்றியும் தெரியும். நாத்தனார் பெற்று வளர்த்த மகளைப் பற்றியும் தெரியுமே! இவர்களுக்கு சொந்தபந்தமெல்லாம் பிக்கல் பிடுங்கலாயிற்றே. ஒரேயொரு நாத்தனாரான தன்னிடமே எப்படி பழகுவார் எனத் தெரியுமே!
சம்பிரதாய வரவேற்பு முடிந்தது. “வாங்க!” என பல குரல்கள் ஒலித்தன. யாருக்கு தலையாட்டினோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை.
வந்தவர்களுக்கு பழனிதான் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். சோஃபாவெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு மொத்தமாகத் தரை முழுவதும் ஜமுக்காளம் விரித்திருந்தனர். சந்திரா மற்றும் காந்திமதிக்கும் ஒரு பாயை எடுத்து வந்து விரித்துவிட்டாள் பழனி.
பாயில் அமர்ந்தவர்களது கண்கள் வீட்டை வட்டமிட்டன. தெருதான் ஒடுக்கமாக இருந்தது. வெளியே இருந்து பார்க்க, வீடும் நீளமாக குறுகலாகத்தான் தெரிந்தது. உள்ளே வந்த பிறகுதான் வீட்டின் விஸ்த்தீரணம் புரிபட்டது.
வாசல் படியேறி வீட்டிற்குள் நுழைந்ததும் வலப்பக்கம் இரண்டு, இடப்பக்கம் இரண்டு என நான்கு அறைகள். மத்தியில் பெரிய பட்டாசாலை(ஹால்). அதையடுத்து முன்பக்கம் இருந்தது போலவே இடது, வலதென நான்கு அறைகள். அதில் அடுக்களை ஒன்றும், பண்டக அறை ஒன்றும் அடக்கம். அதையடுத்து பின்வாசல். எந்தவொரு அறைக்குள் சென்றாலும், அந்த அறைக்கு இடப்புறம் ஒன்று, வலப்புறம் ஒன்று என இரண்டு அறைகள் பிரியும். தரை முழுக்க செட்டிநாட்டு பூ கல் என சொல்லப்படும் ஆதங்குடி டைல்ஸ். உள்ளிருந்தே இடப்புறமாக மாடிக்குச் செல்லும் மாடிப்படி. மாடிமுழுவதும் கம்பி கிரில் போடப்பட்டிருந்தது.
“மதினி! வீடு, வெளியே இருந்து பாக்கத்தான் சின்னதா இருக்கு. உள்ள வந்து பாத்தா, ஏதோ மாயாஜாலம் மாதிரி ஒன்னுக்குள்ள ஒன்னு போகுது!” என்ற சந்திரா வீட்டை ஆச்சர்யமாகப் பார்த்தார்.
தண்டபாணியும் இறங்கி வந்து, கைகுலுக்கி மச்சானையும், பெரியவர்களையும் வரவேற்றான். இருவருக்கும் சகவயதுதான் என்றாலும், இருவருக்குள்ளும் இன்னும் பேச்சு சகஜமாகவில்லை. ஒரே முறை, பெண் பார்க்க சென்ற பொழுது, இருவரும் சந்தித்துக் கொண்டதோடு சரி. அப்பொழுது தண்டபாணி மச்சானையா பார்த்திருப்பான். ஆனால், ரஞ்சனி மட்டும் எப்பொழுதோ ரஞ்சு ஆகிவிட்டாள்.
பெரியவர்கள், “எப்போ கிளம்புனீங்க, பிரயாணம் சௌகர்யமா இருந்ததா?” எனப் பொதுவான விபரங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
சீனியிடமும், “தம்பி, என்ன பண்றாப்ல?” என்று ஒரு பெரியவர் விசாரணை நடத்தினார்.
கருப்பட்டி காஃபிக்கடை வைத்திருப்பதாகக் கூற… “காபிக்கடையா… அப்பா மளிகைக்கடை, மகன் காபிக் கடையா?” பெரிய காமெடி என்பது போல் அவரே கேட்டு, அவரே சிரித்துக் கொண்டார்.
அவருக்கு சூப்பர் மார்க்கெட் என்பதையோ, கஃபே என்பதையோ எப்படி விளக்கிச் சொல்வது என்று இவனுக்குப் புரியவில்லை.
“டேய் சீனி! இந்த வீட்டுல பொண்ணு மட்டும் எடுத்தோம் செத்தோம்டா! பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணுன்னா, சொந்தபந்தமெல்லாம் சேந்து தொலச்சுக் கட்டிறுவாங்கடா!” என்றார் சீனியின் தாய்மாமா.
“எனக்கென்னமோ மொக்கசாமி பொண்ணுப் பாக்கவந்த சீன் மாதிரியே இருக்கு மாமா. சொந்தபந்தமெல்லாம் வந்துருக்காக… வாம்மா மின்னல்! டயலாக் தான் மண்டைக்குள்ள ஓடுது!” சீனி ஹாஸ்யமாய்ச் சொல்ல, தாய்மாமா வாய்விட்டு சிரித்தார். அப்பொழுதுதான் சீனிக்கும், தண்டபாணிக்கு ஒரு தங்கை இருப்பதாகச் சொன்னதே நினைவிற்கு வந்தது.
தண்ணீர் கொடுக்கும் பொழுதோ, பெண்களுக்கு பாய் எடுத்துவந்து விரிக்கும் பொழுதோ கவனிக்கவில்லை. மொத்தமாத ஆட்கள் இருந்ததால் கவனித்திருந்தாலும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
ஆனால், மாமா பெண் என நினைவூட்டியதும் தண்டபாணிக்குத் தங்கை இருப்பதாகச் சொன்னது நினைவு வந்து, எப்படியிருப்பாள் என்ற வயதிற்கே உரிய சுவாரஸ்யம் இயல்பாய் எட்டிப்பார்த்தது.
“இதுல யாரு மாமா, மாப்பிள்ளையோட தங்கச்சியா இருக்கும்?” அவனது கண்முன் அமர்ந்திருந்த, நடமாடிக் கொண்டிருந்த பெண்களை கண்கள் துலாவியது. அவர்களெல்லாம் சிறு பெண்களாக இருக்க, யாராக இருக்கும் என்று யோசனையில் இருந்தான்.
அவன் முன் காஃபி டம்ளர்கள் அடங்கிய தட்டு நீட்டப்பட்டது.
அவன் காஃபியை எடுத்துக் கொள்ள, “இதுதான்டா சீனி, மாப்பிள்ளையோட தங்கச்சி! நாம வந்ததும் தண்ணி கொண்டுவந்து கொடுத்துச்சே” என்று அவள் அகன்றதும் மாமன், அவன் பக்கமாகக் குனிந்து, மெல்லமாகச் சொன்னார். நடமாடிய பெண்களில் தேடிக் கொண்டிருந்தவன், தன் முன் குனிந்து காஃபி கொடுத்தவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.
மாமன் சொன்னதும் ஏறிட்டுப் பார்த்தவனது கண்கள் கண்டது, நீண்ட சடையில் மல்லிச்சரத்தோடு கூடிய அவளது முதுகைத் தான். ஆரஞ்சு வண்ணத்தில், மெல்லிய பச்சை பார்டர் கொண்ட மென்பட்டு உடுத்தியிருந்தாள். அதே பச்சை வண்ணத்தில் ஜாக்கெட்.
சுடிதார் போட்டுக் கொள்கிறேன் என்ற மகளை கலையரசிதான் நாலுபேர் வர்ற நேரத்துல புடவையைக் கட்டு எனச் சொல்லியிருந்தார்.
“பொண்ணா பாக்க வர்றாங்க? இதைக் கட்டிட்டு வேலை பாக்க முடியாதும்மா! அப்பறம் அதைச் செய்யல, இதைச் செய்யலைன்னு என்னை குறை சொல்லக் கூடாது!” ஆரம்பத்திலேயே கலையரசியிடம் பேசி முடிவுகட்டித்தான் சேலையே கட்டினாள். அப்படியிருந்தும் அத்தனை பேர் வந்திருக்கும் இடத்தில் சும்மா இருக்க முடியவில்லை. வந்தவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க, காஃபி கொடுக்கவென வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சீனி, “பாக்கல மாமா!” என்றான் ஏமாற்றம் போல்.
“டேய், பொண்ணா பாக்க வந்திருக்கோம்? மொதல்ல காப்பியக் குடி!” என்றார்.
ஒரு மிடறு குடித்தவன், “என்ன மாமா? காஃபி இவ்ளோ வெள்ளையா இருக்கு. டிகாக்ஷனே ஊத்தல!” என்றான்.
“இல்லடா… எனக்கெல்லாம் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கே!” குடித்துப் பார்த்தவர் அவரது காஃபியைக் காண்பித்தார்.
“இங்க பாருங்க! ஏதோ சின்ன பிள்ளைக்கு கலந்த பால் மாதிரி இருக்கு மாமா? மாத்தி கொடுத்துட்டாங்க போல?” அவனது டம்ப்ளரை காண்பிக்க, அது வெள்ளையாக பாலுக்கும் காஃபிக்கும் இடைப்பட்டு இருந்தது.
“பேசாமக் குடிடா! வந்த எடத்துல வேற கொடுங்கனா கேக்க முடியும்?”
“மாமா… கருப்பட்டி காஃபி ஸ்ட்ராங்கா குடிச்சே பழகிறுச்சு மாமா. இது பால் வாடையடிக்குது. எப்படி குடிக்க?” என்று முகம் சுழித்தான்.
“குடிச்ச மாதிரி பாவ்லா பண்ணிட்டு ஓரமா வச்சுறு!”
“காஃபிக் கடைக்காரனுக்கு வந்த சோதனையா மாமா?” என்றவன் அவர் சொன்ன மாதிரியே, குடிப்பது போல் குடித்துவிட்டு, கீழே வைத்துவிட்டான்.
சலசலத்த பேச்சுக்கள் ஊடே, பழனி என்ற பெயர் அடிக்கடி அடிபட்டது.
“என்ன மாமா பழனி, திருத்தணின்னு எல்லாமா பேரு வைப்பாங்க?” என்றவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவர்,
“ஏன். நீங்க மட்டும் சீனி, கருப்பட்டின்னு வைக்கும் போது பழனி, திருத்தணின்னு வைக்கக் கூடாதா?” என்று கேட்க, சரண்டர் என்பது போல் இருபக்கமும் கையைத் தூக்கிக் காண்பித்தான்.
சும்மாவே உட்கார்ந்திருப்பது, அவனுக்கும் சள்ளையாக இருக்க, “இப்ப எதுக்கு மாமா வந்திருக்கோம்? ஏற்கனவே நம்ம வீட்ல வச்சுப் பாத்த மாப்பிள்ளைய எத்தனை தடவை பாக்கறது?”
“டேய்… இது நம்ம பிள்ளை வாழப்போற வீட்டைப் பாக்குற சம்பிரதாயம்டா.
“அதை சென்னையிலயே பாத்திருக்கலாமே? நம்ம ரஞ்சனி இங்கேயா வந்து வாழப்போறா? இதுக்குன்னு காலையில அஞ்சு மணிக்கே காரெடுத்து, ஏழெட்டு மணிநேரம் முதுகு ஒடிய காரோட்டிட்டு வந்திருக்கோம் மாமா!”
“இதெல்லாம் சம்பிரதாயம்டா. நாளைக்கி உனக்கு பொண்ணு பாத்தாலும் அப்படித்தான்டா வருவாங்க!” மாமன் கடுப்பாகி விட்டார் என்பது அவரது பேச்சில் புரிய, அத்தோடு பேச்சை நிறுத்திவிட்டு பார்வையைச் சுழற்றினான்.
எவ்வளவு நேரம் தான் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது. ஏற்கனவே தொடர்ந்து ஏழு மணி நேரம் கார் ஓட்டி வந்தது இடுப்பு வேறு வலித்தது. இதில் கால் மடக்கியே அமர்ந்திருக்க கால் வேறு மறத்தது போல் இருக்க, எழுந்த சற்று காலார நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
“பெரியவங்க பேசட்டும் மாமா? நாம அப்படியே வெளியே போய்ட்டு வருவோம்!” என்று மாமனை அழைக்க,
“அப்போ நான் யாருடா? முக்கியமா தாய்மாமன் நான்தான்டா இங்க இருந்தாகணும்!” என்று சொல்ல, அவனுக்கும் தனியாக எங்கே செல்வதென்று அமர்ந்து கொண்டான்.
ஏற்கனவே இருவீட்டாருக்கும் சம்மதம் தானே? அடுத்து என்ன என்ற பேச்சு ஆரம்பமாயிற்று. நிச்சயம் எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என பேச ஆரம்பித்தனர்.
இது கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் நிச்சயம் முடித்து, மார்கழி அடுத்து, தை மாதத்தில் திருமணம் என முடிவானது. நிச்சயம் பெண் வீட்டில், சென்னையில், திருமணம் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் பழனி கோவிலில் வைத்து எனப்பேசி முடித்தனர்.
இவர்கள் வந்ததே மதியத்திற்கு மேல்தான். எல்லாம் பேசி முடிக்க, பொழுதும் கவிழ்ந்துவிட்டது. கார்த்திகைமாத வானமும் இருட்டிக் கொண்டு வந்தது. நொடியில் சடசடவென மழை பிடித்துக் கொண்டது.
பொழுதுசாய வந்த மழையும், விருந்தாளியும் ஒன்று என்பது ஊர் வழக்கு. அவ்வளவு சீக்கிரம் கிளம்ப மாட்டார்களாம். இங்கேயும் இரண்டும் நடந்திருக்கிறது. மழைக்குள், சொந்தபந்தங்கள் கிளம்புவது என்பது இயலாத காரியம் எனப்பட்டது.
கடகடவென இடிஇடித்து, பளீரென மின்னல் வெட்டியதில், பட்டென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிள்ளைகள் ஓவென கூச்சலிட,
“ஏய்! சத்தமில்லாம எல்லாரும் அமைதியா உக்காருங்க. இருட்டுக்குள்ள கைக்குள்ளயும், கால்குள்ளயும் ஓடக்கூடாது! எல்லாரும் மாடிக்கு போங்க!” என்று ஒரு குரல் அதட்டல் போட்டது.
“இதொன்னு… மழை புடிச்சா, கரண்ட்ட கட் பண்ணிறுவானுக. ஆயா, விளக்க எடுத்துட்டு வாம்மா!” என்றார் தணிகைவேல்.
அதற்குள், செல் கையில் வைத்திருந்தவர்கள், டார்ச்சை ஒளிறவிட்டனர்.
“இவ்ளோ பெரிய வீட்ல ஒரு இன்வெர்ட்டர் கனெக்ஷன் கூட இல்லையா?” என்றார் காந்திமதி.
“இதுவரை தேவைப்படலம்மா! கரண்ட் போய்ட்டா மாடிக்கு போயிறுவோம். எங்க பிள்ளைகளுக்கும் அதுதான் புடிக்கும்” என்றார் தணிகைவேல். மேலே மொட்டை மாடி அண்ணன், தம்பி வீட்டிற்கெல்லாம் சேர்த்து பொதுவாக, களம்போல் பெரிதாக இருக்கும்.
“இதோ, ஆயா விளக்கெடுத்துட்டு வந்துருச்சு” என்று சொல்ல, கையில் விளக்கோடு வந்து கொண்டிருந்தாள் பழனி.
ஆயா என்றதும், ஏதோ வயதான பாட்டி வருவார் என்று சீனி, நினைத்திருக்க, திரும்பிப் பார்த்தவன் கண்கள் இமைக்க மறந்தன. செல் டார்ச்சின், நட்சத்திர வெளிச்சங்களுக்கு மத்தியில், கையில் விளக்கோடு நிலவென பவனி வந்தாள் பழனி. மின்னல் வெட்டி, பூ முகத்தில் ஒரு கணம் ஒளி பாய்ச்சிச் சென்றதில், இவனுக்குள் மின்சாரம் தாக்கிய உணர்வு.
“குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இம்மா நிலத்தே”
பேக்ரவுன்டில் பாடல் ஒலிக்காதது ஒன்றுதான் பாக்கி.
அங்கிருந்த மாடக் குழியில் பழனி, விளக்கை வைக்க, மின்சாரம் வந்துவிட்டது.
“ஹேய்ய்ய்…” எனும் பிள்ளைகள் கூச்சலில்தான், மின்சாரம் வந்தது கூடத் தெரியாமல் அவளையே பார்த்திருந்தவன் சட்டென சுயம் பெற்றான்.
மின்சாரம் வந்த குஷியில், அங்குமிங்கும் பிள்ளைகள் ஓட, இவன் குடித்தும், குடிக்காமலும் ஓரமாக வைத்த, காஃபி டம்ப்ளரை யாரோ தட்டிவிட்டனர்.
குனிந்து சீனி எடுக்கப்போக, “நீங்க வச்சுருங்க தம்பி. ஆயா பாத்துக்கும்!” என்றவர், தண்டபாணியை அழைத்து, இவர்களை மேலே மாடிக்கு அழைத்துப் போகச் சொன்னார்.
கீழே மற்ற சொந்தங்கள் இருக்க, இவர்களை மேலே அழைத்துச் சென்றான்.
“பழனி!” என்று அழைத்த குரலுக்கு,
“இதோ வர்றேம்மா!” என்ற பதிலில்,
மாடிப்படி வளைவு திரும்பியவன் கீழே குனிந்து பார்த்தான். இவள் தான் சுத்தம் செய்தபடியே அம்மாவுக்குக் குரல் கொடுத்தாள்.
கண்கள் மிளிற, இதழோரம் புன்னகை பூக்க, “ஃப்ரூட்டி!” என்றது மனம் தித்திப்பாய்.
