12
“என் அப்பன் முருகப்பெருமான் இருக்கானே…” குழந்தை மிழற்றலில் கணீரென ஒலிக்கும் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு ஒலிக்க, கந்தனுக்கு அரோகரா எனும் காவடி தூக்கிய பக்தர்களின் பக்தி கோஷத்தோடு, கடைவீதியில் கலவையான முருகன் பக்திப் பாடல்களும் சேர்ந்து ஒலிக்கும் பழனி மலை அடிவாரம்.
சொல்லச் சொல்ல இனிப்பது முருகனின் திருநாமம் மட்டுமல்ல. அறுபடை வீட்டின் அருமை பெருமைகளும்தான்.
அறுபடை வீடுகளுள் மூன்றாம்படை வீடு… ஆண்டியார் கோலம் கொண்டு, தண்டாயுதபாணியாய் வீற்றிருக்கும், பொதினிமலை என அழைக்கப்பெற்ற தென்பழனி மலை.
அபிஷேகப் பிரியரான அப்பனுக்கு உடல் முழுவதும் இடுகாட்டுச் சாம்பல் அலங்காரம் என்றால், அம்பிகை புத்திரனுக்கு உடல் முழுவதும் மணக்கும் சந்தனமே அலங்காரம்.
தென்பழனி சந்தனம் என்றாலே தனி வாசனைதாங்க. பசுஞ்சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வாழையிலையில் மடித்து தரும்பொழுது வரும் சுகந்தமே தனி. பத்தி மணம் கமழும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு என்பது போல அந்த சந்தன மணம் ஒன்று போதும், குறத்தி மணாளன், குறிஞ்சித் தலைவன், சேயோன் வீற்றிருக்கும் பழனிமலை பெருமை சொல்ல.
என்ன ஒன்னு… முனுக்குனா கோபம் மட்டும் வந்துறும். அப்படி கோபப்பட்டு வரலைனா பழனிமலை ஏது? பிரம்மன் மீது கோபம் வரலைன்னா அப்பனுக்கே பாடம் சொல்லும் சுப்பையன் ஏது? நெற்றிக்கண் நெருப்பில் உதித்தவனுக்கு அந்தளவுக்கு கூட உக்கிரம் இல்லைனா எப்படீங்க? பொறக்கும் போது கூடவே பொறந்தது. ஒன்னும் பண்ணமுடியாது. கோபமிருக்கும் இடத்தில் தானே குணமிருக்கும். நம்ம குகனும் இருப்பான்.
இத்தகைய பெருமை பெற்ற பழனி மலை அடிவாரத்தில் தான் தணிகைவிலாஸ் விபூதி, பஞ்சாமிர்த பிரசாதக்கடை. பல தலைமுறைகளாக பாரம்பர்யமாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்பவர்கள் தணிகைவேல் குடும்பத்தார். இன்றளவும் தொட்டுத் தொடர்கிறது பக்தர்களின் அமோக ஆதரவோடு.
“ஏன்டீ! நனஞ்சுக்கிட்டேதான் வரணுமா? ஓரமா நின்னுட்டு வந்தா என்ன? கார்த்திகை மழை நசநசன்ன பேயுது. பொண்ணு வீட்டுக்காறவங்க வர்ற நேரத்துல தும்மி வைக்கப்போற.”
“அதை, ஒரு சாமான் வாங்க நாலு தடவை கடைக்கு அலைய வைக்கும் போதே யோசிச்சிருக்கணும்! ஒரே விசையா சொல்லிவிடுறதில்லை! இந்தாங்க நீங்க கேட்டதெல்லாம் இருக்கானு பாருங்க. மறுபடியும்லா போக முடியாது! போகும் போதே இருட்டுறதுக்குள்ள வரணும்னு சொல்ல வேண்டியது. உங்க வாய்க்குப் பயந்து, நனஞ்சாலும் பரவாயில்லைனு வந்தா, ஓரமா நின்னுட்டு வரவேண்டியதுதானேன்னு சொல்ல வேண்டியது.” நொடிப்பாய் அலுத்துக் கொண்டு வாங்கிவந்த சாமான்களை கலையரசியிடம் கொடுத்தாள் பழனி.
மழையில் நனைந்த பன்னீர் பூ போல்தான் இருந்தாள் பூவை. ஒடிசலாக இல்லாமல், ஆனால் இன்னும் கழுத்தெலும்பு மேவாத இளங்குறுத்து தேகம். சந்தனக்கல்லில், சந்தனக்கட்டையை உரைத்து வழித்த புது சந்தனத்தின் நிறம். அதுவே ஒரு தனி சோபையைக் கொடுத்தது அவளது கலையான முகத்திற்கு. மஞ்சக்கலர்ல மாத்திரை மாதிரி கடைகள்ல கிடைக்குமே, அதில்லைங்க அசல் சந்தன நிறம். கலையரசியின் பராமரிப்பில், கத்தரிக்கோல் சகவாசமறியாத இடைதாண்டிய கருங்கூந்தல். கலையரசியின் கண்டிப்பால் இன்னும் பார்லர் கைவண்ணம் பதியாமலே வில்லென வளைந்த அடர்ந்த புருவம். அதன் கீழ் பளிச்சிடும் கரிய பெரிய விழிகள். எடுப்பான நாசியில் மின்னும் ஒற்றைக்கல் மூக்குத்திக்கு. குவிந்த அதரம்.
மழையில் நனைந்துவந்த மகளை ஒருதரம் ஊன்றிப் பார்த்தார் கலையரசி. மகளுக்கும் கல்யாண வயது வந்துவிட்டதே. ஒவ்வொரு முறையும் மகளின் தோற்றத்தை ரசிக்கத்தான் செய்தது பெற்ற மனம்.
மகளின் அழகில் மனம் லயித்தாலும், “என்ன பண்றது? எல்லாம் என் நேரம். ஆம்பளப் பையல வெளியூருக்கு அனுப்பிட்டு, ஒரு கடைகண்ணிக்கிப் போறதுன்னாலும் உன்னையப் புடிச்சுத் தொங்க வேண்டியதாயிருக்கு!” அங்கலாய்த்தார் கலையரசி.
“இங்கேயும் எல்லாம் அப்படித்தானே நடக்குது. இதெல்லாம் எந்த வீட்லயாவது நடக்குமா? அடுக்குமா? வயசுப் பிள்ளை வீட்ல இருக்கும் போது யாராவது பையனுக்கு மொதல்ல கல்யாணம் பேசுவாங்களா? மூத்த பிள்ளைதான் செல்லப்பிள்ளை, இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டீர்கள் தாயே!” திருவிளையாடல் வசனத்தைப் பேசியவாறே, வாங்கி வந்த சாமான்களை கலையரசியிடம் கொடுத்துவிட்டு, ஈரக்காலை மிதியடியில் துடைத்துக் கொண்டே, அம்மாவை வம்பிழுத்தாள் பழனி.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டு ஆம்பளை வருவாங்க. அவங்ககிட்ட இதை அப்படியே கேளு! நீயாக் கேட்டாலாவது உரைக்குதான்னு பாப்போம்! மொதல்ல தலையைத் துவட்டு!” சாமானை வாங்கிக் கொண்டு கலையரசி உள்ளே சென்றுவிட, ஈரத்தலையை துண்டெடுத்து துவட்ட ஆரம்பித்தாள் பழனி.
நாளை மாப்பிள்ளை வீடு பார்க்க பெண் வீட்டார் வருகிறார்கள். தேவையான சாமான்களை மொத்தமாகச் சொல்லிவிட்டு கடைக்காரர் வீட்டுக்கே வந்து கொடுத்துச் சென்றுவிட்டார். விடுபட்ட பொருட்களை வாங்க, மூன்று தடவைக்கு மேல் கடைக்கு அனுப்பிவிட்டார் கலையரசி. எல்லாம் வயதுக் கோளாறு. பதின் பருவத்தில் வரும் வயதுக்கோளாறு அல்ல. முதிரும் பருவத்தில் வரும் மறதிக்கோளாறு கலையரசிக்கு. ஏதாவதோரு சாமானை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் கடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் மகளை.
இவர்கள் பேச்சு வாசல்வரை கேட்டதில், “என்னத்தைக் கேக்கச் சொல்ற?” கேட்டுக் கொண்டே தணிகைவேலும் உள்ளே வந்தார்.
“அதொன்னுமில்லப்பா! நாளைக்கு பொண்ணு வீட்டாக்காரவங்க எத்தனை மணிக்கு வர்றாங்கனு கேட்டேன். அதை உங்ககிட்டயே கேக்கச் சொல்றாங்க!” தணிகைவேலிற்கு பதில் சொல்லிக் கொண்டே துவட்டிய துண்டை, அப்பாவிடம் நீட்டினாள். அவரும் நனைந்துதான் வந்திருந்தார்.
“அடிப்பாவி… எப்படிப் பேச்சை மாத்திட்ட? இதெல்லாம் எங்கேடீ கத்துக்கிட்ட?” என்ற அம்மாவைப் பார்த்து சில்மிஷமாய் கண் சிமிட்டினாள்.
“மொதல்ல அவளோட சீமந்த புத்திரன் எப்ப வர்றான்னு கேட்டு சொல்லச் சொல்லும்மா!” என்றார் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக.
“அவனெல்லாம் வரவேண்டிய நேரத்துக்கு டான்னு வந்துருவான்! இன்னைக்கு ராத்திரி ட்ரெய்ன் ஏறுறானாம்! பொழுதுபறிய வெள்ளனா வந்து எறங்கிருவான்!”
“வந்தா சரி! ஆயா, இதை வச்சுட்டு தண்ணி கொண்டா! ஏன் இப்படி ஈரத்தோட இருக்க?” கையில் கொண்டுவந்த பையை மகளிடம் கொடுக்க, அதை வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சொன்றாள்.
“ஏன், இதை எங்கிட்டயே நேரிடையாக் கொடுத்தா ஆகாதா? இன்னும் எத்தனை நாளைக்கி உங்க மகளோடு ராஜ்ஜியம்னு நானும் பாக்குறேன். நாளைக்கி இன்னொரு வீட்டுக்குப் போன பின்னாடி எங்கிட்டதானே கொடுத்தாகணும்!” கல்யாணம் முடித்து வந்த நாளிலிருந்து அவரது கைக்கு வந்த பணப்பை, மகள் பிறந்து ஆளானதும் அவளது கைக்கு மாறிய செல்லச் சிணுங்கல் கலையரசி பேச்சில்.
“ஆயி எதுக்கு இன்னொரு வீட்டுக்குப் போகணும்?”
“ஏன், உங்க மகள வீட்டோடையே வச்சுக்கப் போறீங்களா?”
“வீட்டோட மாப்பிள்ளை பாத்துட்டாப் போச்சு!”
“அப்படி சொல்லுங்கப்பா. உங்க மகனை வேணா அனுப்பி வைங்க. நீங்க என்ன அனுப்பறது? அவன் சென்னையிலயேதான் செட்டிலாகப் போறான். கடைசி காலத்துக்கு நான்தான் உங்களைப் பாக்கணும். அதனால நான் இங்கேயேதான் இருப்பேன்!” மழையில் நனைந்து வந்ததால், சுடுதண்ணீர் கை வெதும்பலாக வைத்து, அப்பாவிற்கு எடுத்து வந்தவள், சட்டமாகச் சொல்ல,
“ஆமாமா, உனக்கும் உங்க அப்பாவுக்கும் கூஜா தூக்க எவனாவது குதிரை வண்டில வந்து எறங்குவான்!” நொடித்துவிட்டு பணப்பையை உள்ளே வைக்கச் சென்றார் கலையரசி.
பழனிக்குதான் மாப்பிள்ளை பார்க்க முதலில் சாதகக் கட்டை கையில் எடுத்தார் தணிகைவேல். இந்த வருடம்தான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாள். கையோடு மகன் சாதகத்தையும் பார்த்துவிடலாம் என்று பார்க்க, ஒரு வருடத்திற்குள் தண்டபாணிக்கு முடிக்கவில்லை என்றால் அடுத்து மூன்று வருடத்திற்கு கல்யாண யோகம் இல்லை என்று சொல்லி கலையரசி வயிற்றில் புளியைக் கரைத்தார் ஜோசியர்.
பழனிக்கு இப்பெழுததுதான் இருபத்தியொன்று. தண்டபணிக்கு இருபத்தியாறு. இன்னும் மூன்று வருடமெனில் இருபத்தியொன்பது அப்படி ஒன்றும் பெரிய வயதில்லை தான். ஆனால், அதன் பிறகு பார்க்க ஆரம்பித்து பெண் தகைந்து வரத்தாமதமானால், முப்பதைத் தாண்டிவிடுமே. இருவருக்கும் சேர்த்தே பார்ப்போம். யாருக்கு முதலில் அமைகிறதோ, முடித்துவிடலாம் என்று பார்க்க ஆரம்பிக்க தண்டபாணிக்கே முதலில் பெண் அமைந்தது.
அதுவும் சென்னையில். வந்தனா(கலையரசி அக்கா) கணவன் வரதராஜனுக்குத் தெரிந்தவர் மூலமாக வந்த சம்பந்தம். பொதிகாச்சலம் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க, அந்த வகையில் கூடிவந்த சம்பந்தம்.
முதலில் சென்னையிலிருந்து பெண்ணா? சென்னை பெண்ணிற்கு பழனி ஒத்துவருமா என யோசித்தாலும், தண்டபாணி வேலை பார்ப்பதும் சென்னையில் ஐடி கம்பெனியில் தான். இந்தப் பெண்ணும் ஐ.டியில் வேலை பார்ப்பவள்தான் என்பதால், பொறுத்தமிருந்தால் பார்க்கலாமே என சாதகம் பார்க்க பொருத்தம் கூடிவந்தது. சாதகம் பொருந்திவர, ஃபோட்டோ பார்த்து இருவீட்டிலும் பிடித்து, சம்மதம் சொல்லி, தண்டபாணி சென்னையிலேயே இருக்க, பெரியவர்கள் மட்டும் சென்று அவனோடு சம்பிரதாயமாகப் பெண் பார்த்துவிட்டு வந்தனர்.
இதோ, நாளை மாப்பிள்ளை வீடு பார்க்க பெண் வீட்டார் வருகின்றனர்.
இவர்கள் பக்கம் சொந்தத்திற்கெல்லாம் அழைப்பு விடுத்தாயிற்று. வெளி சொந்தத்திற்கெல்லாம் சொல்லவில்லை. தணிகைவேல் உடன் பிறப்பு குடும்பத்தார். கலையரசி வழியில் ஆண் வாரிசு இல்லாததால், வந்தனா வெளிநாட்டில் மகன்களோடு இருக்க, அவரது பெரியப்பா, சித்தப்பா வழி சொந்தங்கள் மட்டுமே. அவர்கள் வழியிலும் பெண்ணும், மாப்பிள்ளையும் இருக்க, வெளியில் பெண் எடுப்பது சிலருக்கு பொசுபொசுவெனத்தான் இருந்தது.
நல்ல பாரம்பரியமான, வளமையான குடும்பம். படித்த கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாப்பிள்ளை. யாருக்குத்தான் விட்டுவிட மனசு வரும்.
அந்தக் காலம் மாதிரி யாரு இப்ப சொந்தத்துல சம்பந்தம் பண்றா. குழந்தை ஆரோக்கியமா பொறக்காது அது இதுன்னு சப்பைக்கட்டு கட்டுறாங்க. ஏன்… அந்தக் காலத்துல நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு சம்பந்தம் பண்ணல. கெட்டா போய்ட்டோம். இல்ல நொண்டி, மொடமா கொழந்தை பொறந்துச்சா? எனக்கென்னமோ அந்தப் பைய, வேலைக்குப் போன எடத்துல லவ் ஏதும் பண்ணிட்டானோ என்னமோன்னு தோணுது. அது வெளியே தெரியாம இவுகளா பேசி முடிக்கிற மாதிரி முடிப்பாங்களா இருக்கும். இல்லைனா அம்பூட்டு தூரத்துல எதுக்கு பொண்ணெடுக்கணும். நம்ம சொந்தத்துல இல்லாத பொண்ணா, சுத்துப்பட்டுல இல்லாத பொண்ணா?’ அரசல் புரசலாக இப்படியும் பேச்சு அடிபட, இவர்கள் காதுக்கும் அது எட்டியது.
இதைக் கேள்விப்பட்டு வாய்விட்டு கலகலத்து சிரித்தவள், “ம்மோவ்… உங்க மகன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்னு நம்ம சொந்த பந்தங்களுக்குத் தெரியல!” என்று சொல்லி அம்மாவிடம் கேலி செய்தாள் பழனி.
“அதென்னமோ நெசந்தான்டீ. உன்னையச் சொன்னாலும் ஒரு நியாயமிருக்கு. ஆம்பளப் பயலாட்டம் நீதான் படிக்கும்போதே ஊர் ஊராச் சுத்தின. எம்பிள்ளை வாயில்லாப் பூச்சி. அவனைப் போயி சொல்றாங்களே!” ஆத்துப் போனார் கலையரசி.
பள்ளியில் படிக்கும் பொழுதே பழனி, கேரம் போர்ட் ஜுனியர் ஸ்டேட் லெவல் ப்ளேயர். எங்கு போட்டி நடந்தாலும் பள்ளி சார்பில் சென்று கோப்பை வென்று வருவாள். அதைத்தான் அப்படிப் புகழ்ந்தார் கலையரசி.
“நல்லா வருவீங்கம்மா நீங்க. என்னைப் பத்தி எவ்வளவு நல்ல அபிப்ராயம் வச்சுருக்கீங்க? இதுக்குனே என்னைக்காவது ஒரு நாள் எவனையாவது இழுத்துட்டு ஓடப்போறேன் பாருங்க!” உன்னை நம்ப முடியாது என்பது போல் கலையரசி பேசி வைக்க, விளையாட்டாய் அவளும் வார்த்தைகளை விட,
“அடி செருப்பால… ஒரு பேச்சுக்கு சொன்னா இழுத்துட்டு ஓடுவாளாம்ல. கால ஒடிச்சு மூலையோட போட்டுறுவேன் பாத்துக்கோ!” சட்டென கோபம் மூண்டுவிட்டது கலையரசிக்கு.
“நானும் ஒரு பேச்சுக்குதான் சொன்னேன். நீங்க மட்டும் பேச்சுக்கு சொல்லுவீங்க. நான் சொன்னா அடிப்பீங்களா. அதுவும் செருப்பால?” இத்தனை நேரமாக கேலி பேசி சிரித்தவளுக்கு இந்த வார்த்தை சுருக்கெனத் தைக்க கண்கள் கலங்கிவிட்டது.
அவள் அம்மா பேசியதிற்குதான் இவளும் பதிலுக்கு கேலி பேசினாள். ஆனால், அதை வினயமாக எடுத்து கலையரசி செருப்பால் அடிப்பேன் என்று அவரும் அவசரத்தில் வாய்விட்டு விட, சொல் பொறுக்க முடியவில்லை பழனிக்கு. உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
“பிள்ள நல்லா கலகலன்னு சிரிச்சுப் பேசிட்டிருந்தா. உடனே அழவச்சுட்ட!” அய்யம்மா மகளைக் கடிந்து பேச,
“அதென்னம்மா சும்மா வாய் விடறது. பொம்பளப்பிள்ளைக்கு நடத்தையில மட்டுமில்ல. பேச்சிலயும் கவனமிருக்கணும். விளையாட்டுன்னு எதையும் பேசுவாளாமா? இதெல்லாம் அவங்க அப்பா கொடுக்குற எடம். எதைவேணா பேசச்சொல்லுது. எல்லாம் அவங்க வர்ற வரைக்கும்தான். அவங்கப்பா வந்து என்னைய ரெண்டு பேசணும். அப்பதான் உங்க பேத்தி மலையிறங்குவா. எல்லாம் பேர் ராசி. என்னத்தைச் சொல்ல. இப்படியே போறவங்கிட்டயும் முணுக்குனா மூஞ்சியத் தூக்கட்டும். வர்றவன் உங்க பேத்திக்கு நல்லா சாம்பிராணி போடுவான்!” அவருக்கு இது வழமைதான் என்பதால் மகளைக் கண்டுகொள்ளவில்லை. வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
இது நடந்தது இரண்டு நாட்களுக்கு முன்பு. அன்று தான் அய்யம்மாவும், வேலாயுதமும் மாப்பிள்ளை வீடு பார்க்க வருவதை முன்னிட்டு ஆயக்குடியிலிருந்து மகள் வீட்டிற்கு வந்திருந்தனர். பழனிக்கும், ஆயக்குடிக்கும் ஒரு இருபது பர்லாங்குதான் (தோராயமாக நான்கு கிலோமீட்டர்) இருக்கும்.
கலையரசி சொன்னது போல்தான், தணிகைவேல் வந்து, மனைவியை தாளித்துக் கொட்டி, “ஆயா…” என மகளை அழைத்த பிறகே, அண்டகா கசமென அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் பழனி.
நல்லகாரியம் பண்ணும் போது நாலு விதமாக பேச்சு வரத்தான் செய்யும். அதுல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் என்று எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, பொல்லாப்பில்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் தணிகைவேல். அண்ணன் தம்பிகள் எல்லாரும் அக்கம் பக்கம் வீடுகள். அக்கா, தங்கையெல்லாம் அக்கம் பக்கத்து ஊர்கள். யாரையும் தள்ளமுடியாது.
“ப்பா… இதுக்கு கல்யாணமே முடிச்சறலாம். எல்லாரும் வர்றாங்கதானே?” அழைப்பு சொல்வதைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் கேட்க,
“என்ன ஆயா பண்றது? சொந்தம்னா அப்படித்தான். வீட்ல முதல் விசேஷம். ஒருத்தரை விட்டு ஒருத்தரைக் கூப்பிட முடியாதுல்ல” என்றார்.
“அப்போ வீடு நாளைக்கி களைகட்டும்னு சொல்லுங்க!” என்ற மகளைப் பார்த்து முறுவலித்தார்.
வீடு களைகட்டியதோ இல்லையோ தெரியாது! ஆனால், சொந்த பந்தங்களைப் பார்த்து, கலகலத்து நின்றது என்னவோ பொதிகாச்சலம் குடும்பம்தான்.
அவர்கள் பக்கமிருந்து வந்ததோ எண்ணி ஐந்தே பேர்.
பொதிகாச்சலம் பக்கம் சொந்தபந்தம் பெரிதாக இல்லை.
காந்திமதி பக்கமும் தாய்மாமன் வர வேண்டுமே என்பதற்காக அவரது தம்பியும், தம்பி மனைவி மட்டுமே.
அவர்கள் இருப்பது சென்னையில். சொந்தபந்தமிருப்பது திருநெல்வேலி வட்டாரத்தில். மாப்பிள்ளை வீடோ பழனியில். எனவே நெருங்கிய சொந்தங்களுக்குக் கூட, கல்யாணத்திற்கு அழைப்பு விடுத்துக் கொள்ளலாம் என அவர்கள் வீட்டளவிற்கு வந்திருந்தனர்.
இதுதான் பிழைப்புத் தேடி வெளியூரில் வேரூன்றியவர்களுக்கும், சொந்த ஊரில் இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம். சின்ன விசேஷமென்றாலும் யாரையும் தள்ளமுடியாது.
காலையிலேயே தண்டபாணி வந்து இறங்கிவிட்டான். அண்ணனைக் கேலி பேசி வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் பழனி. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் அவளோடு சேர்ந்து கொண்டனர்.
தண்டபாணி வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஃபோனில் அழைப்பு வந்துவிட்டது. ஃபோனை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றவன் தான் ஒரு மணி நேரம் ஆகியும் கீழிறங்கி வரவில்லை.
“எங்கேடீ உங்க அண்ணன். வந்தவனை ஆளையே காணோம்? இன்னும் குளிக்கல, சாப்பிடல.” மகனைத் தேடியது பெற்றவள் கண்கள்.
“உங்க வாயில்லாப் பூச்சி யார்கிட்டயோ ஒருமணி நேரமா ஃபோன் பேசிட்டிருக்கு!”
“அப்படி யார்கிட்டடி பேசுறான்? ஆஃபிஸ்லருந்து ஃபோனா?”
“அதை உங்க வாயில்லா பூச்சிகிட்டயே கேளுங்க. யாரோ ரஞ்சுவாம்! உங்க வாயில்லா பூச்சி ஃபோன்ல கொஞ்சுது!” பழனி உதட்டைச் சுழித்து சொல்லிச் செல்ல, ‘ங்ஙே’ வென மகளைப் பார்த்து நின்றார் கலையரசி.
பெண் பார்த்து முடிவானதும், தட்டு மாற்றி நிச்சயம் பண்ணும் முன் கைபேசி எண் மாற்றிக் கொள்வதுதானே நடைமுறை வழக்கம்.
*****
“யாருடீ அது… குதிரை வண்டியில வந்து எறங்குறது?” வாசலில் குதிரை வண்டிச் சத்தம் கேட்டு, கலையரசி எட்டிப் பார்த்தார்.
“எனக்கும் எங்க அப்பாவுக்கும் கூஜா தூக்க, நீங்க சொன்ன குதிரை வண்டியேறிவந்த மாப்பிள்ளையோ என்னவோம்மா?” என்று கேலி பேசியபடி வெளியே எட்டிப் பார்த்தாள் பழனியும். அது அந்தக்காலத்து வீடு. வீதியில் நின்று பார்த்தால் நூல் பிடித்த மாதிரி நேர் கோடாக உள்ளே அடுக்களை வரை தெரியும். அதன் பிறகு பின் வாசல். இரண்டு பக்கமும் எதிரெதிர் பக்கவாட்டு அறைகள்.
அடுக்களையில் இருந்து எட்டிப் பார்த்தவளுக்கு வண்டியிலிருந்து இறங்குபவன் தெரிய, “யாரும்மா இந்த பீம்பாய்?” கண்களை அகல விரித்துக் கேட்டாள் பழனி.
சீனியப்பன் தான் குதிரை வண்டியின் குறுக்குக் கம்பியை எடுத்துவிட்டு இறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் பின்னாலே அவனது அம்மா காந்திமதியும், தாய்மாமன் மனைவி சந்திராவும் இறங்க, அவர்களுக்கு கை கொடுத்து இறக்கிவிட்டான்.
“அடியேய்… பொண்ணு வீட்டுக்காரங்கடீ! அது பொண்ணோட அண்ணன்!”
“யூரியா போட்டு வளத்தாங்கலாம்மா!” என்றவள் கண்முன், ஒரு கணம் கையில் கூஜாவோடு வந்து சென்றான் சீனியப்பன்.
