முக்கனியும் சக்கரையும் 11

11

“செக்யூரிட்டி! நமக்குத் தெரிஞ்சவங்க தான்.‌ அலோவ் பண்ணுங்க!”

“சார்… இவங்க ஏ ப்ளாக் பழனி‌ மேம் பேர் சொல்றாங்க!‌ அவங்களுக்கு இவரோட ஃபோட்டே அனுப்பியிருக்கேன். இன்னும் அவங்க பாக்கல!”

“தெரியும்ப்பா! வேணும்னா என்னோட விசிட்டர் லிஸ்ட்ல சேத்துக்கோ!”

“என்னான்னு சார் போடுறது. ஃப்ரென்ட்டுன்னு போட்டுக்கவா?”

“மச்சான்னு போடுங்க செக்யூரிட்டி!” என்று அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்ல, தண்டபானிக்கு கோபம் மூக்கு நுனியில் நின்றது. 

ஏற்கனவே இவனை இந்நேரத்திற்கு இங்கு பார்த்த கோபத்தில் இருக்கிறான். யாரைப் பார்க்கவே கூடாது என்று நினைத்து வந்தானோ அவனே கண்முன் பிரசன்னமானால், அதிலும் மச்சான் என முறை சொல்லி அழைத்து நக்கல் வேறு செய்தால் யாராயிருந்தாலும் கோபம் வருவது நியாயம் தானே மக்களே! 

“யாருக்கு யார்றா மச்சான்?” நாகரீகம் கருதி, அடக்கிய குரலில் கேட்டவன் பல்லைக் கடித்தான். 

“உள்ள‌ வாங்க மச்சான், பேசிக்கலாம்?” உதட்டில் ஒட்டவைத்த சிரிப்போடு உள்ளே அழைத்தான்.

“உன்‌ தங்கச்சிய நான் கட்டியிருக்கேனா. என் தங்கச்சிய நீ கட்டியிருக்கியாடா.‌ சும்மா‌ மச்சான், மச்சான்கற?” பேச்சில் ஊசியிறக்கினான் தண்டபாணி. 

“படிச்சவனாட்டாம் பேசுங்க மச்சான்! நான் எவ்வளவு மரியாதை கொடுத்து பேசறேன்?” 

“நீ பண்ணது படிச்சவன் பண்ண காரியமாடா? டீசன்சியப் பத்தி நீ பேசாதே!”

“இதெல்லாம் இப்படி ரோட்டுல வச்சுத்தான் பேசணுமா? இந்த விஷயத்துல படிச்சவன், படிக்காதவன் எல்லாம் ஒரேமாதிரி தான் மச்சான்! நான் எவ்வளவு டீசன்ட்டா, மரியாதை கொடுத்து, அமைதியா பேசுறேன். ஏன்னா ஃப்யூச்சர்ல உங்க மடியில வச்சுதான் எம் பிள்ளைகளுக்கு காது குத்தணும். நீங்கதானே தாய்மாமன் சீர் செய்யணும்!” எந்தவித அலட்டலுமில்லாமல் கூலாக அவன் பேசப் பேச தண்டபானிக்கு தான் இதயத்துடிப்பு எகிறியது. பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். அபார்ட்மெண்ட் வாயிலில் நின்று கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடிக்காத குறை. சண்டைக்குத் தயாராகும் ஆட்டுக்கிடாய்கள் போல முறைத்துக் கொண்டு நின்றனர். 

அப்பொழுது தண்டபானிக்கு கைபேசி அழைப்பு வர, எடுத்துப் பார்த்தான். பழனி தான் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்க,

“மேல வாண்ணா. நான் செக்யூரிட்டிக்கு மெசேஜ் போட்டேன்!” என்றாள். 

மீண்டும் ஒரு முறை இவனை முறைத்து விட்டு, காரில் ஏறி உள்ளே சென்றவன், பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தி இறங்கினான். 

பின்னாலே வண்டியில் வந்தவன், “காலையில பாக்கலாம் மச்சான். ரொம்ப சூடா இருக்கீங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க! காலையில சாவகாசமாப் பேசலாம்.” சீனி, போற போக்கில் மச்சானை ஒரண்டை இழுத்தே சென்றான். 

இன்று முதல் நாள் என்பதால், சூப்பர் மார்க்கெட்டில் சலுகைகளை அபரிமிதமாக அறிவித்திருக்க, கூட்டம் அலைமோதியது. பில்லிங் கவுன்டர் எத்தனை இருந்தும் போதவில்லை. தள்ளுபடி, அள்ளுபிடி சலுகைகள் எல்லாம், விற்காத பொருட்களையும், காலாவதி தேதி எட்டும் பொருட்களையும் தள்ளிவிடும் சாமர்த்தியம்தானே. ஒருகாலத்தில் வேண்டுமானால் இது தெரியாமல் போய் மக்கள் குவிந்திருக்கலாம். இப்பொழுது தெரிந்தே போய் விழுகிறார்கள். மக்களிடம் நுகர்வு மோகம் அதிகமாகிவிட்டது அவ்வளவே. 

தேவைக்கு வாங்கிய காலம் போய், ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு ஷாப்பிங் போலாமா என்று கேட்கும் காலமிது. இன்று ஷாப்பிங் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர். 

இன்று வீட்டை சுத்தம் செய்தால் ஏதொன்னுக்கும் இருக்கட்டும் என்று வாங்கி, வருடத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ மட்டுமே உபயோகப் படுத்தும் பொருட்கள்தான் அதிகம். (ஆயுத பூஜைக்கு வீட்டை ஒதுங்க வச்சுப்பாருங்க மக்களே! இதெல்லாம் எப்ப வாங்கினோம், எதுக்கு வாங்கினோம், அட… இப்படியொன்னு நம்ம வீட்ல இருக்கா, இது தெரியாம இதே மாதிரி இன்னொன்னு வாங்கியிருக்கோமே என்று நமக்கே தெரியாத பல அர்த்தமற்ற பொக்கிஷங்கள் கிடைக்கும்)

காலையில் நடிகை வந்துசென்ற பரபரப்பு அடங்கி, வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. காலை உணவும், மதிய உணவும் அங்கு வேலை பார்ப்பவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் கேட்டரிங் ஆர்டர் கொடுத்திருந்தான். 

பில்டிங் வேலை நடக்கும் பொழுதே, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து, ஆட்களை தேர்வு செய்துவிட்டான். 

அதனால் பில்லிங், பேக்கிங், செக்கிங் எல்லாம் எவ்வித தங்குதடையுமின்றி பக்காவாக நடந்தேறியது. 

சிறிது நேரம் மட்டுமே சம்பிரதாயமாக பில்லிங் செக்ஷனில் இருந்தவன், சேல்ஸ் மேனிடம் ஒப்படைத்துவிட்டு, இவர்களை சாப்பிட அழைத்து வந்துவிட்டான். இனி‌ சூப்பர்வைசர் பார்த்துக் கொள்வார்.

குடவுனுக்குப் பக்கத்தில், வேலை பார்ப்பவர்களுக்கு டைனிங் ஹால் ஒதுக்கிக் கொடுத்திருந்தான். அங்குதான் இவர்களையும் சாப்பிட அழைத்து வந்தான். 

காந்திமதி அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். 

ரஞ்சனிதான், “அவ எங்கம்மா?” என்று அண்ணன் காதில் விழுந்துவிடாமல் ரகசியமாகக் கேட்டாள். 

“நானும் அவளைத்தான்டீ தேடுறேன். அவ வரலை போல” என்றார் விளக்கெண்ணெய் குடித்த முகமாக.‌

“ஏம்மா… நான் சின்ன பிள்ளையில இப்படியா இருந்தேன்? எனக்கென்னமோ காந்திமதியோட மினியேச்சர் மாதிரி இருக்கும்மா! உனக்கு ஆதாரமே தேவையில்ல!” என்று சிரிக்க, 

“ரொம்ப முக்கியம்! பேசாம வாடீ!” மகளைக் கடிந்துவிட்டு இருவரும் சாப்பிடும் இடம் நோக்கிச் சென்றனர். 

அய்யம்மாவிற்கு சாப்பிடவே மனதில்லை. பேத்தியிடம் ஏதோ மாய்மாலம் பேசி வந்துவிட்டாரே ஒழிய, தனித்து விட்டுவந்த பேத்தியை நினைத்து மனம் தவதாயப்பட்டது. 

பேத்தி வாழ்நாள் முழுக்க இப்படியே தனித்து நின்று விடுவாளோ என்ற பயத்தில் தான் இத்தனையும் செய்வது. ஆனால், அதுவே அவர் மனதை அலைக்கழித்தது.

ஏதோ சிந்தனைவயப்பட்டவராக உணவை அலைந்து கொண்டிருக்க, “பாட்டி சாப்பிடுங்க. ஏன் அப்படியே வச்சிருக்கீங்க!” என்றவனை கண்களில் வேதனை தாங்கிப் பார்த்தார்.

“அங்க அவ சாப்பிட்டாளோ இல்லையோ தெரியல சீனி. எனக்கு தொண்டையவிட்டு எறங்க மாட்டேங்குதுப்பா.” என்றவருக்கு குரல் கம்மியது.‌

“இதே பார்சல் அங்கேயும் அனுப்பியிருக்கேன் பாட்டி. இந்நேரம் கொடுத்திருப்பாங்க. அவளுக்கு சாப்பாட்டை வேஸ்ட் பண்ணா புடிக்காது தானே. கண்டிப்பா சாப்பிட்டிருப்பா!”

“அவளப்பத்தி உனக்குத் தெரியாதுப்பா. வீம்பு புடிச்சவ. ஒரு சொல்லு பொறுக்கமாட்டா. அவ அம்மா ஏதாவது சொல்லிட்டாலே நாள் முழுக்க தண்ணியக் குடிச்சுட்டே இருந்துறுவா! அவ அப்பா வந்துதான் மகளை சமாதானம் பண்ணனும். இப்ப‌ நீ கொடுத்து விட்டதைக்கூட வாட்ச்மேன்கிட்ட கொடுத்துருப்பா!” என்ற அய்யம்மாவிற்கு அதற்கு மேல் சாப்பாடு இறங்கவில்லை. 

அவளைப் பற்றி எனக்கு என்னதான் தெரியும். இருவருக்கு ஒருவரைப் பற்றி ஒருவர் தெரியாது. ஆனால் பிள்ளைக்கு நான்கு வயது. இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல. உள்ளுக்குள் நொந்து கொண்டவன்,

“அதுக்கு தான் பாட்டி, பிள்ளையாருக்குப் படைச்ச பொங்கலும், சுண்டலும் கோவில் பிரசாதம்னு சொல்லி, செக்யூரிட்டிகிட்ட கொடுக்க சொல்லியிருக்கேன். அதுல வெண்பொங்கலும் இருக்கு. கண்டிப்பா சாப்பிட்டிருப்பா. நீங்க வேணா கால் பண்ணி கேளுங்க!” என்று‌ சொல்ல, அதே போல் அய்யாம்மாவும் பேத்திக்கு அழைப்பு விடுத்தார்.‌

“என்ன அம்மாச்சி! விருந்து பலமோ? அன்னைக்கி மாதிரி வாயக்கட்டாம ஏதாவது சாப்பிட்டு வந்து வெனைய இழுத்துக்காதீங்க ரெண்டு பேரும்! எதுவா இருந்தாலும் அளவா சாப்பிட்டு வாங்க!” எடுத்ததும் பசியில் கடித்துக் காநறுவாள் என்று எண்ணியிருக்க, அவளோ நக்கல் செய்தாள்.

“எங்களுக்கென்னடீ… இலை நிறைய விதவிதமா இருக்கு. நீ தான் யார் மேலயோ இருக்குற வீம்புல அங்க வீங்கிப் போயி கெடக்கணும்!” ஆயக்குடி அய்யம்மாவா கொக்கா என்று நிரூபித்தார்.

“எனக்கென்ன கெழவி… திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.‌ அசோஷியேஷன்லருந்து கோவில் பிரசாதம் வீடு தேடி வந்துச்சு. நல்லா நெய் மிதக்க சர்க்கரைப் பொங்கல், சுண்டல்னு சாப்பிட்டு தெம்பாதான் பேசுறேன்” என்று சொல்ல, சீனியப்பனை மெச்சுதலாகப் பார்த்தார். 

“சாப்பிட்டாலாம்!” அதன் பிறகே அவரால் நிம்மதியாகச் சாப்பிட முடிந்தது. 

தங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த காந்திமதி, ரஞ்சனியை துளி கூட கண்டுகொள்ளவில்லை பெரியவர்கள் இருவரும். அவர்கள் ஏதாவது பேசினால் பார்த்துக் கொள்ளலாம் என அய்யம்மா அடக்கி வாசித்தார். உள்ளுக்குள் நெருப்பு கனன்று கொண்டுதான் இருந்தது ரஞ்சனியைப் பார்க்கும் பொழுதெல்லாம். இவளால் தானே இன்று தனது பேரன், பேத்தி இருவரது வாழ்க்கையும் திரிசங்கு சொர்க்கம் போல் அந்தரத்தில் ஊசலாடுகிறுது என்று நினைத்தவருக்கு ரஞ்சனி மீது ஆத்திரம்‌ அளவு கடந்து பொங்கியது. 

அய்யம்மாவிற்கு எதிர்ப்பதமாத இருந்தது இன்று காந்திமதியின் நடவடிக்கை. மனைவியின் அமைதி பொதிகாசலத்திற்கு தான் சந்தேகத்தை விளைவித்தது. பெயருக்கேத்த மாதிரி திடீர்னு அஹிம்சாவாதி ஆகிட்டாளா? இது இவ குணமே இல்லையே. என்ன ஓடுது இவ மனசுக்குள்ள என்ற ஆராய்ச்சி அவருக்குள்ளும். 

இது எதையுமே கண்டு கொள்ளாமல் மகளுக்கு உணவு ஊட்டுவதையே தலையாயக் கடமை போல் செய்து கொண்டிருந்தான் சீனியப்பன். இது எத்தனை நாள் ஏக்கம். மகளை பக்கத்தில் அமர வைத்து சாப்பிட வைக்க வேண்டும் என்பது. பள்ளியில் பழனி‌ மகளுக்கு அதட்டி, உருட்டி ஊட்டி விடுவதை கண்களில் வாஞ்சையோடு பார்த்திருப்பான். சில நேரங்களில், நேரமின்மையால் பழனி அறைகுறையாக சாப்பிட்டு, மூடிவைத்து எழுந்து கொள்ளும் பொழுது அமிர்தா மிரட்டியும் பார்த்திருக்கிறான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என ஆராய்ந்து இக்கணத்தின் இனிமையை இழக்க விருப்பமில்லை. 

பூரியை, உருளைக்கிழங்கு மசாலாவோடு சேர்த்து மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான். 

காந்திமதி, ரஞ்சனியின் கண்கள் அமிர்தாவையே ஆராய, மகனிடம் எப்படிக் கேட்பதென்று பயம் அவருக்கு. நான்கு வருடத்திற்கு முன் மகனிடமும், கணவரிடமும் மறைத்த உண்மை, உருவம் பெற்று உயிரோடு‌ கண்முன் அமர்ந்திருப்பது போன்றொரு பிரமை. மகனைத்தான் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார். 

நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எதுவும் புரியாமல் காந்திமதி, ரஞ்சனியின் கண்கள் அடிக்கடி கேள்வியாய்‌ மோதிக் கொண்டன. இவை மூன்றையும் நடத்திக் கொண்டிருப்பவன் மகனல்லவா?

மகனிடம் கேட்டாலும் பதில் வராது. பொதிகாசலத்திடம் கேட்கவே வேண்டாம். நடப்பது எதுவும் தெரியாமல் தலையே வெடித்துவிடும் போலானது இருவருக்கும். 

“சீனிப்பா, அந்த ஆன்ட்டி என்னைய முறைச்சுப் பாக்குறாங்க!” பக்கத்தில் குனிந்து சன்னக்குரலில் கூற,

“அவங்க ஆன்ட்டி இல்ல‌ அம்மு. உனக்கு ஆச்சி! அப்படித்தான் கூப்பிடணும்!” என்றதும், சாப்பாடு தொண்டையில் விக்கியது காந்திமதிக்கு.

“கலை அம்மாச்சி மாதிரியா?” கப்பென பிடித்துக் கொண்டது பிள்ளை.

“அதேதான் அம்மு. உங்க கலை அம்மாச்சி மாதிரியேதான் இவங்களும்!” என்றவன் மனக்கண்முன் கலையரசி தோற்றம் காளி அவதாரத்தில் வந்து மறைந்தது. யாரையெல்லாம் நெனச்சா பயம் அல்லுவிடுதோ அவங்கெல்லாம் இன்னைக்கு ஞாபகத்துக்கு வர்றாங்க! மாமியாவ நெனச்சுப் பயந்த ஒரே மருமகன் நான் ஒருவனாத்தான் இருக்கும். 

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே,‌ மகளுக்கு சாப்பாட்டை ஊட்டிவிட, ஃப்ரூட் கேசரியில் இருந்த டூட்டி டூட்டியை ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே,

“அப்போ இவங்களும் ஃப்ரூட்டி கூடப் பேசமாட்டாங்களா?” என்று கேட்க, சட்டென அதிர்ந்து பார்த்தான். பழனியிடம் அவளது அம்மா‌ பேசுவதில்லை என்பது அவன் எதிர்பார்க்காதது. 

“ஏன் கலை அம்மாச்சி, ஃப்ரூட்டி கூடப் பேச மாட்டாங்க!” அவனையும் அறியாமல் குரலில் குற்ற உணர்ச்சி. 

“நான் தப்பு பண்ணாலும் அம்மா பனிஷ் பண்ணுவாங்கதானே. அது மாதிரி ஃப்ரூட்டியும் ஏதோ பெருசா தப்பு பண்ணிடுச்சாம். அதனால பேச மாட்டாங்கலாம். அம்மா பேச்சைக் கேக்காம ஃப்ரூட்டி யாரையாவது, கிஸ் பண்ண விட்டுருக்கும். என்னை மாதிரி லிப்ஸ்டிக் மார்க்க க்ளீன் பண்ணத்தெரியல!” சொல்லிவிட்டு வாயைப் பொத்தி கிளுக்கிச்சிரித்த மகளின், கலங்கமற்ற சிரிப்பில் இவன் தான் கலங்கிப்போய் நின்றான். யாரோ பழுக்கக் காய்ச்சிய கம்பியை முதுகில் இழுத்தது போல் சுரீரென்றது அமிர்தாவின் வார்த்தைகள். புரிந்தோ புரியாமலோ குழந்தைகளின் வார்த்தைகள் சில நேரங்களில் நம்மை சாட்டையாய் விளாசிவிடுவது உண்டு.‌

மகளுக்கு சாப்பாட்டை ஊட்ட வந்த கை அப்படியே நின்றுவிட்டது. 

இந்த நான்கு வருடங்களில் பழனி எத்தனை அனுபவித்திருப்பாள் என்பதை மகளின் ஒற்றை வாக்கியம் விலாவரியாக விவரித்தது. இது எதுவும் தெரியாமல் எங்கோ ஒரு இடத்தில் தான் மட்டும் இயல்பாக இருந்ததை நினைத்து மனம் வெட்கியது. 

முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்துதானே ஆகும். இது அவனுக்கு அறுவடை காலம் போல. அவன் மட்டும் காண்டானா என்ன? தங்களின் அவசரம் இத்தகைய விபரீதத்தை உண்டாக்கி வைத்திருக்குமென. 

நடந்த பிரச்சினையில் பழனி குடும்பம், தாங்கள் இருக்கும் திசையில் தலை வைத்துக்கூட படுத்திருக்க மாட்டார்கள்… எல்லாம் இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்திருக்க, தான் தொட்டு விட்ட குறை, அவளை மட்டும் விடாமல் துறத்தியிருக்கிறது. தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே எல்லாத்தையும் சரிசெய்திருக்கலாம். இதையெல்லாம் எப்படி சரிசெய்வதென்று நினைத்தாலே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. 

“சீனிப்பா… ஆ” என வாயைத் திறந்து காண்பிக்க, ஒரு கணம் கண்களை மூடி,‌ மூச்சை இழுத்து தன்னை மீட்டுக் கொண்டவன், மகளுக்கு மட்டும் சாப்பாட்டை ஊட்டிவிட்டு எழுந்து கொண்டான். 

“சீனிப்பா… நீங்க சாப்பிடல?” மகள் கேட்டதே அத்தனை ஆறுதலாக இருந்தது அவனுக்கு. 

“பசிக்கல அம்மு!” மனம் கனத்து வயிற்றை‌ நிறைத்துவிட்டது. 

“ப்ரூட்டியும் இப்படித் தான் அடிக்கடி சொல்லும். நான் உடனே கலை அம்மாச்சிக்கு கால் பண்ணி சொல்லுவேன். உடனே தண்டபாணி மாமா கால் பண்ணுவாங்க!” மகள் பேசப் பேச அவனது இதயத்துள் கடப்பாறை இறக்கிய வலி. 

என்ன செய்து வைத்திருக்கிறேன். பட்டாம்பூச்சியாய் இருந்தவளை மீண்டும் கூட்டுப் புழுவாய் மாற்றியிருக்கிறேன். 

அன்று அவள் பேசிய பேச்சிற்கு அழகான சங்கமம், அதை அசிங்கப்படுத்தாதே எனக் கோபப்பட்டது எத்தனை அபத்தம் என்று இப்பொழுது தோன்றியது. வயதின் தேவையோ என அவன் மீதே அவனுக்கு வெறுப்பு மண்டியது. 

தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டவன், நிதானிக்க வேண்டி அலுவலக அறைக்குள்‌ சென்றவன் வெகு நேரம் கழித்தே வெளியே வந்தான். 

அய்யம்மாவும், வேலாயுதமும் கிளம்ப, பேத்தியிடம் ஐஸ்க்ரீம் பாக்ஸ் ஒன்றை எடுத்து பொதிகாசலம் கொடுக்க, இப்பொழுது சீனியப்பனை திரும்பிப் பார்த்தது. 

தனது ஒப்புதலுக்காக மகள் தன்னை பார்ப்பது அத்தனை சந்தோஷமாக இருந்தது. இது தன்மீது மகளுக்கு நம்பிக்கை வந்துவிட்டதை சொல்லாமல் சொல்லியது. மனம்‌ ஒரு‌ பக்கம் குதூகலித்தாலும், ஐஸ்க்ரீம் கொடுத்துவிட்டா அவ அங்கே ருத்ரதாண்டவம் ஆடுவாளே என்று உள்ளுக்குள் பயமாகவும் இருந்தது. 

என்னமோ போடா, மச்சான் பயம், மாமியா பயம், மாமியா‌ பெற்ற மகளை நினைத்து பயம், நீ பெற்ற மகளுக்கு ஐஸ் க்ரீம் கொடுத்துவிட்டாலும் பயம்னு தெனாலியவிட அதிகமா பயப்படுறது நீயாத்தான் இருக்கும். 

“சின்ன கப் கொடுங்கப்பா. இங்கேயே சாப்பிட்டு போகட்டும்” என்று சொல்ல, 

“ஃப்ரூட்டிக்குத் தெரியாமலா?” என்று குனிந்து கேட்க, 

“அப்படியெல்லாம் பண்ணக்கூடாது. வீட்டுக்குப் போனதும், ஐஸ் க்ரீம் சாப்பிட்டேன்னு அம்மாட்ட உண்மையைச் சொல்லிட்டு சுடுதண்ணி வாங்கி குடிச்சுக்கோ! அப்ப, அம்மா திட்டமாட்டாங்க!” என்று சொல்லிக்கொடுத்தவன், பொதிகாசலத்திடம் சிறிய கப்பை எடுத்துத் தரச்சொன்னான். அவரும் பேத்திக்கு எடுத்துக் கொடுக்க, அங்கேயே சாப்பிடவிட்டு அழைத்துச் சென்றான் அப்பா ஆசைக்காக.  

குறுக்கே இருந்த சாலை கடந்து, லிஃப்ட் வரை வந்து விட்டுச் சென்றான். 

சிறிது நேரம் பிள்ளை ஆசைக்கு பாவாடை சட்டையோடு விட்டவள், உடையை மாற்றி விட்டு, நகைகளைக் கழட்ட,

“நல்ல நாளும் பொழுதுமா போட்டதை ஏன் பழனி‌ கழட்டுற. நாளைக்கி பள்ளிக்கூடம் போகையில கழட்டி வச்சுட்டுப் போ! வீட்டுக்குள்ளதானே இருக்கப் போறா!” என்று சொல்ல உடையை மட்டும்‌ மாற்றிவிட்டாள்.‌

*****

“என்னதான் கெஸ்ட் ரோல்னாலும், ஒரு நியாயாம் வேண்டாமா பாஸ்!”

“இப்ப உனக்கென்னடா‌ நியாயம் கெட்டுப் போச்சு?”

“கெஸ்ட் ரோலுக்கு ஸ்கிரிப்ட் புரியணும்னு அவசியமில்லைதான். அதுக்குனு சீன் கூட புரியவேண்டாமா பாஸ்!”

இப்பொழுது தண்டபானியிடம் பேசிவிட்டு வந்ததை வைத்து ராகவன் நன்றாக குழம்பியிருக்கிறான் எனத் தெரிந்தது சீனியப்பனுக்கு. யாருக்காக இருந்தாலும் நடப்பதெல்லாம் பார்த்து குழப்பம் வரத்தானே செய்யும். இவனுக்கு வந்ததிலும் ஆச்சர்யப்படுழதற்கு இல்லை.‌

“சொல்லுங்க பாஸ்… நீங்க யாரு? உங்களுக்கும் பழனி மேம் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம். சொல்லுங்க… சொல்லுங்க… சொல்லுங்க” என எக்கோ எஃபெக்ட் கொடுத்தவனைப் பார்த்து சிரிப்பு வந்தது. 

“சம்பந்தம் தான் சம்பந்தம் ராகவன்!” 

“பாஸ், எவ்ளோ பெரிய அக்கவுன்ட்ஸ்னாலும் டேலி பண்ணிருவேன். ஆனா, நீங்க சொன்னது சுத்தமா புரியல!”

என்றவன் அடுத்து அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து எழுந்தே நின்றுவிட்டான்.‌

“என்ன பாஸ் சொல்றீங்க. உண்மையாவா?” உச்சபட்ச அதிர்ச்சியில் கேட்டான்‌ ராகவன். 

“ஏன் தமிழ்ல தானே சொன்னேன்!”

“அமிர்தா உங்க பொண்ணா? அப்போ‌ பழனி‌ மேம்‌ உங்க வொய்ஃபா. அப்பறம் ஏன் தனித்தனியா இருக்கீங்க? டிவோர்ஸ் ஆகிறுச்சா?”

“டிவோர்ஸ் பண்ணனும்னா அதுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனுமே ராகவன்!”

“அப்பறம் எப்படி குழந்தை?” புரியாமல் அவன் கேட்ட விதத்தில் வாய் விட்டு சிரித்தவன்,

“அதுக்கு கல்யாணம் பண்ணனும்னு அவசியமில்லை ராகவ்!”

“என்ன பாஸ் நீங்க? சட்டை என்னோடதுதான். ஆனா மாப்பிள்ளை நான் இல்லைங்கறீங்க! கல்யாணம்‌ பண்ணாம குழந்தை எப்படி?”

“டேய்… நைன்டீஸ் கிட்டாடா நீ. கல்யாணம் பண்ணாத்தான் குழந்தை பிறக்கும்னு‌ நம்புறதுக்கு?” என்றவன் வெடித்துச் சிரிக்க, 

சிறிது நேரம் யோசித்தவன்… அதிர்ந்து,‌ “பாஸ்… அப்போ கேடீ வேலை பாத்திருக்கீங்க. உங்களை ரொம்ப நல்லவன்னு நெனச்சேனே பாஸ்! அதான் கீழ உங்க மச்சான் அவ்ளோ கோபப்பட்டாரா?” என்றவனிடம், 

“அவன் அருவா எடுத்து வெட்ட வந்தாக்கூட ஆச்சர்யப்படுறதுக்கில்ல!” என்றவனை, ‘பழனி‌ கால்ல கூட விழறேங்குற, மாமியார நெனச்சுப் பயப்படுற. மாச்சான்‌ அருவா‌ எடுத்து வெட்டினாலும் வாங்கிக்கறேன்னு சொல்ற. உன்னையும் ஹீரோவா வச்சு கதை எழுதுறாங்க பாரு!’ அவனது மனசாட்சி அவனோடு சேர்த்து ஆத்தரையும் கழுவி ஊற்றியது. 

“பாஸ் என்ன இப்படி பயமுறுத்துறீங்க!” என்று பயத்தில் முகம் வெளிறியவனிடம், உள்ளே சென்று, ஒரு பத்திரிக்கையை எடுத்துவந்து நீட்டினான். 

“இதென்ன பாஸ். இன்னொரு பிராஞ்ச் ஓபனா?” என்று வாங்கிப் பார்த்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. 

“பாஸ்! அதிர்ச்சி மேல அதிர்ச்சியா கொடுக்கறீங்க. இது எப்போ பாஸ். சீனியப்பன் வெட்ஸ் பழனியம்மாள்” என்று வாசித்தவன், அதிலிருந்த தேதியைப் பார்த்துவிட்டு, 

“அதான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிஞ்சுதே!”

“இல்ல… முடியல!”

“பாஸ்! இருக்கு ஆனா இல்லைங்குற ரேஞ்சுக்கு ரொம்ப குழப்புறீங்க. பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற வைத்தியருக்கு பைத்தியம் புடிச்சாங்குற விசு பட டயலாக்கெல்லாம் மண்டைக்குள்ள விஷுவலா ஓடுது. மீ பாவம். அழுதுறுவேன்!” அப்பாவியாய் அவனை‌ புலம்பவிட்டவன் வாய்விட்டுச் சிரித்தான். 

படுக்கைக்கு சென்றவனுக்கு தூக்கம் வராமல் ஆட்டம்‌ காட்டியது. எழுந்து படுக்கையறை பக்கமிருந்த பால்கனிக்கு வந்தான். நேரம் நடுநிசியை துரத்திக் கொண்டிருந்தது. முக்கால்வாசி ஃப்ளாட்டுகளில் ஃபோன் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. ஆன்ட்ராய்டு ஃபோனும், அன்லிமிட்டெட் நெட்டும் வந்த பிறகு சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா தான் அனைவருக்கும். எதிர் ஃப்ளாட்டில் பழனியும் தூங்காமல் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு, பால்கனியில் நடை பழகிக் கொண்டிருந்தாள். 

சீனி, மச்சான் என அழைத்து வெறுப்பேற்றியிருக்க, அதை மொத்தமும் வீட்டிற்குள் வந்து இறக்கியிருந்தான் தண்டபானி. 

அவளுக்குள்ளும் பழைய எண்ணங்கள் கிளர்ந்தெழுந்திருக்கும். அவளைச் சீண்டிப் பார்க்கத்தானே இன்று காலையில் அதே பட்டு வேட்டி சட்டையில், கழுத்தில் மச்சான் போட்ட நிச்சயதார்த்த சங்கிலியோடு அவள் முன் போய் நின்றான். 

முகமறியா இருளில், ஒருவர் முகத்தை ஒருவர் எதிர்‌நோக்கி நின்றிருக்க, இருளில் தாங்கள் தொலைத்த கடந்த காலத்தை நோக்கிப் பின்னோக்கிய நினைவுகள் இருவருக்குள்ளும். எதைப்பற்றியும் சிந்திக்காமல் எதையும் துணிந்து செய்ய தைரியம் கொடுப்பது இருளுக்கு இணை இருள்தான் இல்லையா.  

*****

இங்க கட் பண்ணி ஓபன் பண்ணினா, அப்படியே‌ ஃப்ளாஷ் பேக் போறோம். வாங்க மக்களே! 

பழனி தண்டாயுதபாணியைத் தரிசிக்க குதிரை வண்டியில் ஒரு‌ பயணம்.

1 thought on “முக்கனியும் சக்கரையும் 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top