9
“அப்போ நீங்க உண்மையாவே பாஸா பாஸ்!” என்றவன் கண்கள் ஆச்சர்யத்தில் எக்ஸ்ட்ரா லார்ஜ்க்கு விரிந்தது. அவனது கையில் பொதிகை சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆல்ஃபா ஜிம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் தங்கக் கலரில் மின்னியது.
“டேய்… இப்படி கொள்ளைக்கூட்டத் தலைவனக் கூப்பிட்ட மாதிரி சும்மா பாஸ் பாஸ்ங்கறது மொதல்ல நிறுத்து!”
“போங்க பாஸ்! எனக்கெல்லாம் இப்படியொரு பேக்ரவுன்ட் இருந்தா…” சேஃபாவில் இரண்டு பக்கமும் கைகளை விரித்து, கழுத்தைச் சாய்த்து மேலே பார்த்து, கனவில் மிதந்தவனின் பின்புறம் எட்டிப் பார்க்க,
“பாஸ்… நான் இந்த பேக்ரவுன்ட்ட சொல்லல… காமெடி பண்றதா நெனச்சுக்கிட்டு கடுப்படிக்காதீங்க! ஃபாமிலி பேக்ரவுன்ட் பத்தி சொல்றேன்! இப்படியொரு அப்பா இருந்தா கட்டில்ல படுத்திட்டு காலாட்டிக்கிட்டே சாப்புடுவேனாக்கும்!”
“இப்ப மட்டும் என்ன கொறஞ்சு போச்சு. உன்னோட கால். நீ ஆட்டிக்கிட்டே சாப்பிடப்போற. யார் கேக்கப்போறாங்க?”
“அதுக்குன்னு ஒரு தகுதி வேண்டாமா பாஸ்? நானெல்லாம் காலாட்டினா, நீ இருக்குற இருப்புக்கு காலாட்டு ஒன்னுதான் கொறச்சலாக்கும்னு கால்லயே எங்கம்மாவே ரெண்டு போடுவாங்க. கவிஞரே சொல்லியிருக்கார்ல, எதையும் இருக்குற எடத்துல இருந்து பண்ணாத்தான் மரியாதைன்னு!”
“இதெல்லாம் நல்லாத் தெரியுது. உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதேன்னும் இன்னொரு கவிஞர் சொல்லியிருக்காரே தெரியலையா!”
“போங்க பாஸ்… அப்பா சம்பாத்தியத்துல வாழ்றது எப்படி அடுத்தவங்க உழைப்பாகும். என்ன பெரிய உழைப்பு. மாங்கு மாங்குன்னு உழைச்சாலும் மாசக் கடைசியில ஒத்த பைசா கையில நிக்கமாட்டுங்குது! நானும் மூனு வருஷமா முட்டி மோதுறே! ஒரு எக்ஸாம் பாஸ் பண்ணமுடியல.” சலிப்பாக அலுத்துக் கொண்டான்.
“நீ பாஸ் பண்ணனும்னு படிக்கிற ராகவ்!” என்றவனை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தவன்,
“எல்லாரும் பாஸ் பண்ணனும்னு தானே பாஸ் படிப்பாங்க!” என்றான் நக்கலாக.
“நீ கஷ்ட்டப்பட்டு படிச்சா கஷ்ட்டத்துலருந்து வெளிவந்துறலாம்னு படிக்கிற. அப்போ உன் மைன்ட் ஃபுல்லா கஷ்ட்டத்தை மட்டும்தான் அசைபோடுது. பாஸ் பண்ணிட்டா, நம்ம லைஃப் எப்படியெல்லாம் சேஞ்ச் ஆகும்கற கனவோட படி. சீக்கிரம் பாஸ் பண்ணிருவே!”
“ஓ… கனவு காணச் சொல்றீங்க!”
“கஷ்ட்டப்பட்டு படிக்காம இஷ்ட்டப்பட்டு படின்னு சொல்றேன்!”
“பாத்தீங்களா… இதையே நான் சொன்னா, மொதல்ல பாஸ் பண்ணிக் காமி. அப்பறம் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்னு சொல்வாங்க. அதுக்குதான் பாம்பா இருந்தாலும் பரமசிவன் கழுத்துல பாம்பா இருக்கணும் பாஸ்!”
“இப்ப நீ என்னதான்டா சொல்ல வர்ற. மோட்டிவேட் பண்ணாலும் அலுத்துக்கறே. எதுக்கெடுத்தாலும் நொந்துக்கிட்டா லைஃப் என்ஜாய் பண்ணவே முடியாது ராகவ். யாருக்குதான்டா பிர்ச்சினை இல்ல?”
“இப்போ உங்களுக்கெல்லாம் என்ன பாஸ் பிரச்சினை இருக்கப்போகுது. மிஞ்சி மிஞ்சிப் போனா போனமாசத்தைவிட இந்த மாசம் சேல்ஸ் ரேட்டிங் எப்படி இன்கிரீஸ் பண்ணனும்ங்கறதைத் தவிர. என்னைக்காவது அம்மாகிட்ட காசு இருக்குமோ என்னவோ. இதை எப்படி கேக்குறதுன்னு, அஞ்சு பத்து கேக்குறதுக்கு கூட யோசிச்சிருக்கீங்களா? ஃப்ரன்ட்ஸ் கூட வெளியே போனா செவவாகும்னு வெளியே போகாம வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கீங்களா?” என்று கேட்பவனுக்கு சொல்லி புரியவைக்க முடியாதெனத் தெரிந்தது.
சிறுவயதில் இருந்தே பணக்கஷ்ட்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவனுக்கு பணம் மட்டுமே பிரதாணக் குறிக்கோள். நல்லா சம்பாதிச்சா சந்தோஷமா இருக்கலாம். ஆனால், பெரும்பாலான பணக்காரர்கள் நிலமை மெத்தைய வாங்கினேன். தூக்கத்தை வாங்கலைங்கற நிலமைதான். பழைய வாழ்க்கைக்கு மனம் ஏங்குமே தவிர, அதற்காக ஒரு போதும் தற்போதைய நிலைமை விட்டு கீழிறங்கவும் விரும்பாது. அது ஒருவகையான அந்தஸ்த்து போதை. அவனுக்கு பணக்கஷ்ட்டம். நமக்கு மனக்கஷ்ட்டம்.
இப்பொழுது ராகவன், சீனியப்பனின் ஹவுஸ் மேட். பெயருக்கு ஒரு தொகையை வாடகைப் பங்காகக் கொடுத்துவிட்டு அவனுடன் தங்கிக் கொள்கிறான். அப்பா இல்லை. செங்கல்பட்டு போஸ்ட் ஆஃபிசில் வேலை பார்க்கும் அம்மா, மற்றும் ஒரு அக்கா அவனுக்கு. தினமும் செங்கல்பட்டு வரை போய் வர சிரமமாக இருப்பதாக ஒரு நாள் புலம்ப,
“ஏன் இவ்வளவு தூரம் போய்வந்து சிரமப்படணும். இங்கேயே வீடு பாத்துக்கலாம்ல” என்று கேட்க,
“ஸ்கூல் ஏரியா பாஸ்! இங்கெல்லாம் வாடகை கொடுத்து கட்டுபடியாகாது. ஊர்ல சொந்த வீடு. அம்மாவுக்கும், அக்காவுக்கும் அங்கதான் வசதி. அம்மாவுக்கு வேலையும் அங்கதான். அக்காவும் ஒரு டிகிரி முடிச்சுட்டு, உள்ளூர்லயே ஒரு நர்சரிக்கு டீச்சராப் போறாங்க. மாப்பிள்ளை பாத்துட்டிருக்கோம். கோச்சிங் சென்டருக்காகத்தான் டெய்லி இங்க வந்துபோறேன். போகவரவே நேரம் பத்தல. இதுல எங்க படிக்கறது.” ஒருநாள் உணவு இடைவேளையில் புலம்பாய் புலம்பித்தள்ளியவனை, தன்னோடு வந்து தங்கிக் கொள்ளுமாறு சீனியப்பன் அழைக்க, முதலில் தயங்கினான்.
“சும்மா தங்கவேணாம். வாடகை ஷேர் பண்ணிக்கலாம். நாளைக்கி நீ பேங்க் ஆஃபிசர் ஆகிட்டா, உன்னோட வெற்றி சரித்திரத்தை எழுதறவுங்க என் பேரையும் சேத்து எழுதுவாங்கல்ல!” கிண்டலாகச் சொன்னாலும் அவனது நிலமை உணர்ந்து உதவலாமே என்ற ஒரு எண்ணத்தில்தான் வரச்சொன்னான்.
அவனது அப்பா சிறுவயதிலேயே தவறிவிட, அவரது வேலைதான் அவன் அம்மாவிற்கு வழங்கப்பட்டது. யாரிடமும் கையேந்தாத, ஆனால் மாதக்கடைசியில் கையைக் கடிக்கும் ஜீவனம் தான் இவர்கள் வளர்ந்து வேலைக்குப் போகும் வரை. அவரது வருமானத்தில் பிள்ளைகளுக்கு படிப்பை மட்டும் தான் கொடுக்க முடிந்தது. குடும்ப சூழ்நிலை அறிந்து, பொறுப்பாக நடந்து கொள்பவன் ராகவன்.
இவன் அழைத்ததும், வந்துவிட்டானே ஒழிய, வீட்டிற்கு வந்த பிறகுதான், “பாஸ் என்னால இந்த வீட்டுக்கெல்லாம் வாடகை ஷேர் பண்ணமுடியாது. அந்தளவுக்கு வசதி இல்ல” என்று மலைத்து பின் வாங்கினான். டபுள் பெட்ரூம் தான் என்றாலும் லக்ஷரி அபார்ட்மென்ட்.
“பாஸ் இங்கேயா?” என்று அபார்ட்மென்ட்டுக்குள் வரும்
போழுதே, பிரமித்துக் கேட்டான். ஸ்கூலுக்குப் பக்கம். இந்த அபார்ட்மெண்ட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறானே ஒழிய, இன்றுதான் இங்கு வருகிறான். இங்கு வருவதற்கான தேவையும் அவனுக்கு இருந்ததில்லை.
“பாஸ்… நான் ஒரு சாதாரண ஸ்கூல் அக்கவுன்டன்ட்! என்னைப் பத்தின உங்க ஜட்ஜ்மென்ட் தப்பு.” என்றான் அழாக்குறையாக.
“நானும் இங்க வாடகைக்குதான் ராகவன் இருக்கேன்! இதொன்னும் ஓன்(own)ப்ராபர்ட்டி இல்ல!”
“பாஸ்… நீங்க வேலைபாக்குற ஸ்கூல்ல நான் அக்கவுன்டன்ட். உங்க சம்பளம் எவ்வளவுன்னு எனக்குத் தெரியும். அதை மட்டுமே வச்சு இந்த வீட்டுக்கு வாடகையெல்லாம் சான்சே இல்ல” என்றவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.
“உன்னால கொடுக்க முடிஞ்சதைக் கொடு ராகவ். அதுவும்கூட நான் கேட்க மாட்டேன். ஆனா, சும்மா தங்கினா உன்னாலயும் இங்க உரிமையா இருக்க முடியாது. சும்மா கிடைச்சா எதுக்கும் மதிப்பும் இருக்காதுங்கறதாலதான். அதுக்கு மேல உன்னிஷ்ட்டம்!” என்றவன் அவனை வறுபுறுத்தவில்லை. அவனது சுயகௌரவத்திற்கு மதிப்பு கொடுத்து அவன் முடிவிற்கே விட்டுவிட்டான். வங்கித் தேர்வில் தேர்ச்சி பெறும் வரைக்குமாவது அலைச்சலைக் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்ற, அவனால் முடிந்த தொகையைக் கொடுக்கிறான். ஃப்ளாட்டை சுத்தம் செய்ய வருபவருக்கு சீனியப்பன் கொடுக்கும் மெய்ட் சம்பளமே அதைவிட அதிகம்.
ஒருமையில் அழைக்கும் அளவிற்கு இருவருக்குள்ளும் பரஸ்பர நட்பு உருவாகியுள்ளது.
இன்றுதான் சீனியப்பனின் உண்மையான உயரம் என்னவென்று தெரிந்தது ராகவனுக்கு. நான் சொல்வது உடலளவில் அல்ல. அது இருக்குது ஆறடிக்கு மிஞ்சி நல்லா காமராஜர் கணக்கா, சாட்டை சாட்டையாய்க் கையும், காலுமாக நல்ல வளர்த்தியில், கரலாக்கட்டையைத் தேய்த்து பாலிஷ் போட்ட மாதிரியான திடகாத்திரமான உடம்புதான். (காமராஜர் யார்னு கேட்காதீங்க மக்கா. இலவச கல்வியும், சோறு போட்டாலாவது படிக்க வருவாங்கனு, பிள்ளைக வயிற்றையும் வாடவிடாமப் பார்த்த கல்வித் தந்தை. அதன் பிறகு வந்து முதலமைச்சர்களால் மதிய உணவுத் திட்டம் விரிவாக்கம் பெற்றாலும், அதற்கான விதை கர்மவீரர் போட்டது. நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்.)
“எதுக்கு பாஸ் உங்களுக்கு இந்த பி.டி சார் வேலை!”
“அது கெஸ்ட் ரோல் ராகவ். படங்கள்ல எல்லாம், பழக்கதோஷத்துக்காக சின்னதா நடிச்சுக் கொடுப்பாங்கல்ல அது மாதிரி தான். ஸ்கூல் கரெஸ்பான்டன்ட்டும், எங்க அப்பாவும், ஸ்கூல் இடம் முடிச்சுக் கொடுத்த வகையில நல்ல பழக்கம். பி.டி சார் திடீர்னு இடையில வேலைவிட்டு போயிட்டதால, அடுத்து அப்பாய்ன்மென்ட் பண்ற வரைக்கும்தான். இல்லைனா பேரன்ட்ஸ் கேள்வி கேப்பாங்கல்ல. நான் இந்த ஸ்கூலோட ஓல்ட் ஸ்டூடன்ட். அப்படி சொல்றதைவிட, ஸ்கூலும் நாங்களும் ஒன்னாவேதான் வளந்தோம். எல்.கே.ஜியில ஃபர்ஸ்ட் பேட்ஜ் நாங்கதான். அப்ப ஸ்கூலே இல்ல. வெறும் வேலிமட்டும் போட்டு, ஸ்கூல் நேம் போர்டு வச்சுட்டு கேஜி அட்மிஷன் போட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பறம் தான் பில்டிங்கே எழும்புச்சு. ஃபர்ஸ்ட் ஃபிஃப்த் வரைக்கும் தான் ஆரம்பிச்சாங்க. படிப்படியா ஒவ்வொரு க்ளாஸா எக்ஸ்டன்ட் பண்ணாங்க. பிளஸ்டூ வரைக்குமே நாங்கதான் ஃபர்ஸ்ட் பேட்ஜ். அத்லெட் ஸ்டூடன்ட் நான். அதனாலதான் இந்த கெஸ்ட் ரோல்.”
ஒரு ஏரியா குடியிருப்பு பகுதியாக விரிவாக்கம் பெறவேண்டுமெனில் அங்கு தண்ணீர் வசதியோ, சாலை வசதியோ, மின்சார வசதியோ ஏற்படுத்தத் தேவையில்லை. பள்ளி ஒன்று எழும்பினால் போதும். சுற்று வட்டாரம் முழுவதும் டெவலப் ஆகிவிடும். வெறும் சீமைக்கருவேலம் புதர் மண்டிய பகுதியாக இருந்தது தான் கலாஷேத்ரா பள்ளியிருக்கும் பகுதி. கழுத்தை அறுத்து புதருக்குள் போட்டால் கூட வெளியே தெரிய ரெண்டு நாட்களாகும். அப்படிப்பட்ட ஏரியாவில் கலாஷேத்ரா பள்ளியின் அடிக்கல் நாட்டப்பட, சுற்றுவட்டாரம் முழுவதும் மளமளவென ப்ளாட்டுகளும், ஃப்ளாட்டுகளுமென அசுர வளர்ச்சிதான். அடுத்த பத்து வருடத்தில் எங்கு பார்த்தாலும் அபார்ட்மென்ட்கள். இப்பொழுது கொளப்பாக்கம் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் பிரபலமான அனைத்து மத்தியதர பள்ளிகளும் அடக்கம்.
அந்த அசுர வளர்ச்சியோடு கைகோர்த்து வளர்ந்தவர்தான் பொதிகாச்சலம்.
சென்னையில் வசிக்கும் முக்கால்வாசி பேர்கள் மாதிரி, இவருக்கும் பிறப்புக்கு ஒரு ஊர். பொழைப்புக்கு ஒரு ஊர். திருநேல்வேலி பக்கம் கடையநல்லூர் தான் அவருக்கு பிறந்த ஊர்.
சீனியப்பனின் தாய்வழி தாத்தாதான், அதாவது பொதிகாசலத்தின் மாமனார்தான் தனது டீக்கடைக்கு எடுபிடியாக, பொதிகாசலத்தை ட்ரவுசர் போட்டிருந்த வயதிலேயே வேலைக்கு அழைத்து வந்துவிட்டார். தூரத்து உறவுமுறை. ஒரு பாட்டி தவிர சொந்த பந்தமென்று பெரிதாக யாருமில்லை. அவரது வீட்டில்தான் தங்க வைத்துக் கொண்டார்.
வீடு மற்றும் கடையென எல்லா எடுபிடி வேலைகளுக்கும் பொதிகாசலம்தான்.
டீக்கடைக்குப் பக்கத்திலேயே, அவரது ஊர்க்காரர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். டீக்கடையின் காலை பரபரப்பு முடிந்த நேரம், அடுத்து பொதிகாச்சலம் மளிகைக் கடையில்தான் இருப்பார். பத்துக்கு பத்து எனுமளவில் சிறிய கடைதான். அதிகாலையில் அவருடன் கோயம்பேடு சென்று காய்கறி வாங்கிவருவது, அவர் வீட்டிற்கு சாப்பிட போகும் நேரம் கடையை பார்த்துக் கொள்வதென ஒத்தாசையாக இருப்பார்.
வளர்ந்து வாலிப பிராயத்தை எட்டிய தருணம், மளிகைக் கடையை நடத்தியவர் ஊரோடு போவதாகச் சொல்ல, தான் எடுத்து நடத்தினால் என்ன என்ற எண்ணம் உதித்தது பொதிகாசலத்திற்கு. டீக்கடை முதலாளியிடமும் இதைச் சொல்ல, இவனும் எத்தனை நாட்களுக்கு கூலி வேலை செய்வான். தனக்குப் போட்டியாக எதிர்த்தாப்ல டீக்கடை போடாதளவிற்கு சந்தோஷமென அவரே பேசி முடித்தும் கொடுத்தார். அப்படி ஆரம்பித்ததுதான் பொதிகை மளிகை கடை. அப்பொழுதே மீசையை முறுக்கி விட்டு ஓங்காதாங்காக இருப்பார். கூடிய விரைவில் பொதிகைக்கடை அண்ணாச்சியென அப்பகுதியில் பிரபலமானார்.
இன்று போல் அன்றைய காலகட்டத்தில் கண்ணாடி வச்ச கதவு, ஏசி ரூம் என்றெல்லாம் ரியல் எஸ்டேட் பிசினஸ் இல்லை. பெரும்பாலான ரியல் எஸ்டேட் வியாபாரம் நடந்தது மளிகைக்கடையிலும், டீக்கடையிலும் தான். வாடகைக்கு வீடு, வீட்டுமனை வாங்க அணுகவும். தனது கடை பப்ளிக் தொலைபேசி எண்ணோடு சிலேட்டில் எழுதி கடைமுன் தொங்கவிட்டார். (ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் மஞ்சள் கலர் தொலைபேசி.) ரியல் எஸ்டேட்டில் ஓரளவிற்கு நல்ல வருமானமும் பார்த்தார்
பக்கத்தில் இருந்தே இவரது தொழில் சாமர்த்தியத்தையும், வாய் சாதுர்யத்தையும் தெரிந்து கொண்டவர், தனது பெண்ணைக் கொடுக்க, தாமாகவே முன் வந்தார் காந்திமதியின் தந்தை. பெரிதாக சொந்த பந்தமென்று யாரும் பொதிகாசலத்திற்கு கிடையாது. ஒன்டிக்கட்டை. நல்ல திறமைசாலி. சம்பாத்யம் புருஷலட்சணமென மற்ற எதையும் யோசிக்கவில்லை அவர்.
அப்பொழுதே காந்திமதி கல்லூரி சென்று கொண்டிருந்தார்.
படிப்பு முடிய திருமணம் செய்து வைத்துவிட்டார். சிறுவயதில் இருந்தே இருவருக்கு ஒருத்தரை ஒருத்தர் நன்றாகத் தெரியும். காந்திமதியை முதலாளி மகளாக பொதிகாசலத்திற்கும், தங்கள் கடையில் வேலை பார்த்த தொழிலாளியாக காந்திமதிக்கும்.
பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணம். விருப்பு, வெறுப்பென்று பெரிதாக எதுவும் இல்லை. சராசரி கணவன், மனைவி வாழ்க்கைதான். ஆனால் காந்திமதி பேச்சில், படிக்காதவர், தங்கள் கடையில் வேலைக்கிருந்தவர் என்ற எண்ணம் அவ்வப்பொழுது வெளிப்படத்தான் செய்யும். படித்த தனக்கு, படிக்காத வரை கட்டிவைத்து தன் பெற்றோர் அநீதி இழைத்துவிட்டதாக எண்ணம்.
இது மகள் வளர்ப்பிலும் எதிரொலித்தது. எதுவாக இருந்தாலும் அவள் விருப்பம்தான் என்று மகளுக்கு தான் முழு ஆதரவும். அது நல்லதா, கெட்டதா என ஒரு போதும் ஆராய்ந்ததில்லை. இவர் எது சொன்னாலும் பிள்ளைகள் முன்பே படிக்காதவர், இந்தக் காலத்துப் பிள்ளைகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கென்று வாயை அடைத்துவிடுவார். பிள்ளைகள் முன் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டினாலும், அமைதியாகப் போய்விடுவார் பொதிகாசலம். ஆரம்பத்திலேயே கண்டித்து வைத்திருக்க வேண்டும் என்ற யோசனை, எல்லாம் கைமீறிப் போன பிறகுதான் உதித்தது.
திருமணத்திற்குப் பிறகு அவருக்கு மளிகைக்கடையைவிட ரியல் எஸ்ட்டேட்தான் நன்கு கை கொடுத்தது. அதில் வந்ததைக் கொண்டு மளிக்கைக்கடையைத்தான் பொதிகை சூப்பர் மார்க்கெட் என விரிவாக்கம் செய்தார். இன்று சென்னையில் பொதிகை சூப்பர் மார்க்கெட் இல்லாத ஏரியாவே இல்லை என சொல்லுமளவிற்கு பல கிளைகளாக விரிந்து ஆலமரமாக வேரூன்றி உள்ளது. இதில் மகன் தலையெடுத்த பிறகு, ஒவ்வொரு சூப்பர் மார்க்கெட் முன்னும் கருப்பட்டி காஃபி கடை திறந்தான். இது அவனது தனிப்பட்ட முயற்சி.
தனக்கு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்து, பெரிதாக சொந்தபந்தம், சொத்துபத்தில்லாத தன்னை நம்பி பொண்ணும் கொடுத்த மாமனார் பெயரைத்தான் மகனுக்கு வைத்து அழகுபார்த்தார். (பெயர்க்காரணம் சொல்லியாச்சு)
“பாஸ்… மளிகைக் கடை, கருப்பட்டி காஃபி ஓகே. அதென்ன சம்பந்தமேயில்லாம ஜிம்.”
“அது என்னோட பேஷன்! சின்ன வயசிலருந்தே பாடி டெவலப்பிங்க்ல இன்ட்ரஸ்ட். டிகிரி முடிச்சு, மேனேஜ்மென்ட் கோர்ஸ்(MBA) போறதுக்கு முன்னாடி இடையில ஒரு வருஷம் கேப் விழுந்துச்சு. அதுல சும்மா இருப்பானேன்னு INFS(INFS – Institute of Nutrition & Fitness Sciences (India))கோர்ஸ் போனேன். இன்டர்வியூவ இத்தோட முடிச்சுக்கலாமா. பசிக்குது ராகவ்” என்று எழுந்து கொள்ள,
“பாஸ்… நானும் ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். இந்த மாதிரி சின்னதா வியாபாரம் தொடங்கி பெருசா வளந்தவங்களப் பத்தி பேட்டியெடுத்துப் போடலாம்ல!”
“ஆரம்பி… ஆரம்பி… என்னை மட்டும் பெல் ஐகானை தட்டச் சொல்லாதே!” என்று எழுந்து செல்ல,
“பெறாமை பாஸ், உங்களுக்கு! எங்கே இவனெல்லாம் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சு கார் வாங்கிருவானோங்குற பொறாமை.”
“டேய்… மொதல்ல பாஸாகுற வழியப் பார்றா. இந்த கொசுத்தொல்லை தாங்கல!”
“பாஸ்… அப்பறம்… இன்னொரு சந்தேகம்” என்று மீண்டும் ஆரம்பிக்க,
“எனக்கு நாளைக்கி நிறைய வேலையிருக்கு ராகவ். முக்கியமானவங்களை எல்லாம் நேர்ல இன்வைட் பண்ணனும். இங்கதானே இருக்கப் போற. ஒவ்வொரு நாளா ஒவ்வொன்னா கேப்பியாம்?” என்று சாப்பிட சென்றுவிட்டான்.
அவன் கேட்க நினைத்ததும் அதைப் பற்றித்தான். பழனி மேம் வீட்டுக்கு மட்டும் உங்க அப்பாவே நேரடியா போய் அழைப்பிதழ் கொடுத்தாரே! அவங்களுக்கும், உங்களுக்கும் என்ன சமபந்தம் என்றுதான்.
*****
“இப்ப என்ன பழனி? பிள்ளைய அனுப்பப் போறீயா இல்லையா?”
“உங்களையே போக வேண்டாம்னு சொல்றே. எம்பிள்ளைய வேற கூப்புடுறீங்க?”
“ஏன்டீ! அவ்ளோ பெரிய மனுஷ, வீடு தேடிவந்து பத்திரிகை கொடுத்துட்டுப் போயிருக்காரு. ஒரு மரியாதைக்காகவேணும் தலையக் காட்ட வேண்டாமா? அவரென்ன எங்களுக்காகவா வந்தாரு. பேத்தி வரணும்னு தானே அந்தப்பாடு பட்டாரு. பட்டுப் பாவாடை சட்டை மொதக்கொண்டு பேத்திக்கு தச்சு எடுத்துட்டு வந்தாரு!”
“அவரு மட்டும் பேத்தின்னு சொன்னா போதுமா?”
“வேற யாருடீ செல்லணும்?”
“அவரு பொண்டாட்டி சொல்லுவாங்களா? எம்மகனுக்குதான் பொறந்துச்சான்னு எப்படி நம்பறதுன்னு கேட்டாங்களே? இவங்களும் ரெண்டு புள்ளையப் பெத்திருக்காங்களே? சாட்சி வச்சுத்தான் பெத்துக்கிட்டாங்களான்னு பதிலுக்கு கேட்டா என்ன பண்ணுவாங்களாம்!” ஆத்திரத்தில் வரம்பு மீறிப் பேசிய பேத்தியின் வார்த்தைகளைக் கேட்டவருக்கு உள்ளம் பதறியது.
எப்படியெல்லாம் மாறிப்போனாள். பெரியவர்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் மரியாதை கொடுப்பவள் தன் பேத்தி. அப்படிப்பட்டவள் மாமியார் ஸ்தானத்தில் இருப்பவளைப் பார்த்து இப்படியொரு வார்த்தை கேட்கிறாள் என்றால் எந்தளவிற்கு அவள் மனம் வெந்து, புண்ணாகிப் போயிருக்கும்.
“நீங்க பாத்து செஞ்சா சரிப்பா! ஏதொன்னுக்கும் அண்ணங்கிட்ட நல்லா கேட்டுக்கோங்க. கல்யாணத்துக்கு பிறகும் தண்டத்துக்கு என் தொல்லை தீராது. எதுனாலும் உங்க மகன் வாழ்க்கையையும் யோசிச்சுப் பண்ணுங்க!” என்று விளையாட்டுப் போல் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியவள். எத்தனை கேலி, கிண்டலென, துள்ளலோடு வளைய வந்தவள். யாரையும் முகத்திலடித்தாற்போல் எடுத்தெறிந்து பேச, சுட்டுப் போட்டாலும் வராது. அப்படிப்பட்டவள் இன்று வாயைத் திறந்தாலே வயது வித்யாசமின்றி தேளாய் கொட்டுகிறாள். பேத்தியின் மாற்றத்தை நினைத்துப் பார்த்தவருக்கு மனம் கொதித்தது.
“பழனி, இப்படியெல்லாம் பேச எங்கேடி கத்துக்கிட்ட!” மனம் பொறுக்கமாட்டாமல் ஆத்துப்போனார் அய்யம்மா.
“கூடப் பொறந்தவன்கிட்டயே, என் மகனுக்குப் பிறந்த பிள்ளைதான்னு எப்படி நம்பறது. ஆதாரம் இருக்கான்னு கேட்டாங்களே அம்மாச்சி. அப்போ அண்ணன் மனசு என்ன பாடுபட்டிருக்கும். எப்படி கூனிக் குறுகிப் போயிருப்பான். இந்த வார்த்தையை அப்பாகிட்ட சொல்ல எந்தளவுக்கு கூசியிருப்பான். அவனுக்கு இந்த அவமானம் என்னால தானே அம்மாச்சி!” என்றவள் நெஞ்சு வெடிக்க, கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க திரும்பியவள் பார்வை, முகம் கன்றிச் சிவந்து, சிலையென வாசலில் நின்றவன் மீது நிலைகுத்தி நின்றது. கண்களில் சிவந்து, உடல் விரைத்து, தாடை இறுகியதே அவன் கோபத்தின் அளவை பறைசாற்றியது.
“அய்யா… சீனி! அவ ஏதோ ஆத்திரத்துல அப்படி பேசிட்டாய்யா! மனசுல வச்சுக்காதே!” பழனி அவன் அம்மாவைப் பற்றி பேசியதைக் கேட்டு, எங்கே கோபப்பட்டு விடுவானோ என்று அய்யம்மா பதறினார்.
இதே கேள்வியை மகனிடமும் காந்திமதி கேட்டதற்கு தான் அம்மாவின் பேச்சை வெறுத்து, தனித்து வந்துவிட்டான் என்பது இவருக்குத் தெரியாதே.
அய்யம்மா பதட்டம் பார்த்து உடல் தளர்ந்தவன், “பாட்டீ! இன்னைக்கு யார் வர்றாங்களோ, இல்லையோ என் பிள்ளை வந்தே ஆகணும். அவளை ரெடி பண்ணி விடுங்க. பிள்ளைக்கு அப்பாவை அடையாளம் காட்டவேண்டியது மட்டும் தான் பெத்தவ கடமை. ஊருக்கு என் பிள்ளைன்னு காட்டவேண்டியது பெத்தவன் கடமை. அதை எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்!” என்றுவிட்டு பழனியை ஒரு அழுத்தப் பார்வை பார்த்தவன் வேகமாக வெளியேறிவிட்டான்.
முன் தினமே பார்க்கில் பெரியவர்களைப்பார்த்து, காலையில் சீக்கிரம் கிளம்பி இருங்கள். தான்வந்து அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தான். இவர்களை அழைத்துச் செல்ல வந்தவன் தான் இருவர் பேச்சையும் கேட்டிருந்தான்.
அவர் வந்தது பேத்திக்காக. இவன் வந்தது பிள்ளைக்காக என்றால் இங்கு தான் யார் என்ற கேள்வி மனதைக் கவ்விப் பிடித்தது.
இவள் ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் உனக்கென்ன உரிமையிருக்கு என்று கேட்க, அவனோ ஒவ்வொரு முறையும் உனக்கில்லாத உரிமையா என்றுதான் கேட்கிறான். எந்த வகையில் நான் அவனுக்கு உரிமைப்பட்டவள் என்ற கேள்விதான் மனதை வண்டாய்க் குடைகிறது.

Super super super