8
“சீனிப்பாஆஆ!” கதவை பட்டெனத் திறந்து கொண்டு கத்திக்கொண்டே ஓடி வந்த பிள்ளையின் வேகம்,
படுக்கை அறையிலிருந்து, கைவைத்த வெள்ளை பனியனை அரைவயிற்றுக்கு ஏற்றிவிட்டு, வேட்டியை இடுப்பில் இறுக்கிக் கட்டிக்கொண்டே, முகத்தில் முக்கால்வாசி மறைத்த மீசையோடு, ஆறடிக்கு மேல், எண்ணெய் பூசிய அய்யனார் சிலை கணக்காக வெளியே வந்தவரைப் பார்த்ததும் சட்டென ப்ரேக் பிடித்ததில் தடுமாறி விழப்போக, அமிர்தா குரல் கேட்டதும் புன்னகையோடு திரும்பிப் பார்த்தவன், விழப்போனவளை வேகமாக வந்து பிடித்துக் கொண்டான்.
“யார்ரா இந்த பாப்பா? பேரைச் சொல்லி கூப்பிடுது?” வேட்டியைக் கட்டி முடித்து பனியனை இறங்கிவிட்டவாரே கேட்டவருக்கு, திரும்பிப் பார்த்து சிரிப்பை மட்டுமே பதிலாக்கினான் சீனி. சும்மாவே அவரது குரல் சற்று கரகரத்து தடித்து ஒலிக்கும். இதில் மீசையும் பிள்ளையை பயமுறுத்த, மிரண்டு பார்த்த பிள்ளை அவன் காலோடு ஒண்டிக்கொண்டது.
“இப்படியா மீசை வச்சு பிள்ளைய பயமுறுத்துவீங்க. அரண்டுட்டா பாருங்க!” என்றவன் பிள்ளையை தூக்கிச் சென்று அடுப்பு மேடையில் அமரவைத்தான்.
“மீசை மொளச்ச காலத்துலருந்து இப்படித்தான் வச்சுருக்கேன். இப்ப மட்டும் என்ன புதுசா சொல்ற? சின்னப் பிள்ளைல நீயே இதைப்பாத்து கிட்டத்துல வரமாட்டே!” ஜம்பமாக மீசையை நீவிக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தார்.
“எதுக்கு அம்மு இவ்வளவு ஸ்பீடா ஓடிவந்த. தனியாவா வந்த?” எதிர்த்த ஃப்ளாக்கிலிருந்து, நடைபாதைத் தாண்டி இந்த ப்ளாக்கிற்கு வந்ததற்கே இந்தக் கேள்வி. தனிமை சுதந்திரம் எல்லாம் பிள்ளைகளுக்கு போயே போச்சு.
“தாத்தா, பாட்டி கூட வந்தேன். பார்க்ல வாக்கிங் போறாங்க!
“அவங்ககிட்ட சொல்லிட்டு வந்தியா?”
“ம்கூம்… சொன்னா அம்மாகிட்ட கேளுன்னு சொல்லுவாங்க!”
“இட்ஸ் நாட் குட் அம்மு. அம்மாகிட்டயும் கேக்கல. தாத்தாகிட்டயும் சொல்லல. சொல்லாம வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?”
“சொன்னா விடமாட்டாங்களே!” கழுத்தைச் சாய்த்து இறைஞ்சியது பிள்ளை.
“அதுக்குன்னு சொல்லாம வருவியா?” என்றவன் குரல் கண்டனமாக ஒலிக்க, பிள்ளை முகம் வாடிப்போயிற்று.
“என்னைச் சொல்லிட்டு நீ மட்டும் புள்ளைய மிரட்டுத!”
“மிரட்டலுக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லப்பா. என்னமோ உங்க மீசையப் பாத்துதான் அதிசயமா பயந்துட்டா!” பேசிக்கொண்டே, அடுக்களை பக்கமிருந்த பால்கனி வழியாக கீழே எட்டிப் பார்த்தான்.
மெதுவாக நடந்து கொண்டிருந்தார், வேலாயுதம். அங்கிருந்த கல் பென்ச்சில் அய்யம்மா உட்கார்ந்து, யாருடனோ வாய் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு முழங்கால் வலி. சும்மா துணைக்கு மட்டும் வருவார்.
அன்று மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து தினமும் மாலையானால் பார்க்கில் மெதுவாக நடக்கச் சொல்லியிருந்தான். உடல் அசதியே இரண்டு நாட்களாக வாட்டியிருக்க, இந்த நான்கு நாட்களாகத்தான் சும்மாவேணும் காலாற நடக்கிறார். அவர்களுடனே கீழே வருபவள், அவர்களை பார்க்கில் விட்டுவிட்டு, இவள் மேலே ஓடி வந்துவிடுவாள். அதற்கும் லிஃப்டில் தனியே வரக்கூடாது, ஒரு ஃப்ளோர் தானே, படி வழியாகத்தான் ஏறிவரவேண்டுமென கண்டித்திருந்தான்.
“தாத்தா!” என மேலிருந்தே சப்தமாக அழைக்க, வேலாயுதம் மேலே பார்த்தார்.
“அம்மு இங்க வந்துட்டா. தேடாதீங்க!” என்று கத்திச் சொல்ல, சரியெனத் தலையாட்டினார்.
“சொல்லாமக் கொள்ளாம ஓடி வந்துட்டாளா?” என்றார் அய்யம்மாவும் திரும்பிப் பார்த்து.
ஸ்டவ்வில் வைத்திருந்த டீ கொதித்து பொங்கியதில், வேகமாகத் திரும்பியவன், “உன்னால டீ பொங்கிருச்சு!” என்று ஸ்டவ்வை அணைத்தான்.
“இதையேதான் ஃப்ரூட்டியும் சொல்லும்!” காலாட்டிக் கொண்டே கூறிய மகளைப் பார்த்து சிரித்தவன், கிட்சன் டவல் கொண்டு அடுப்பு மேடையைத் துடைத்துவிட்டு, டீயை வடிகட்டி இரண்டு கப்புகளில் ஊற்றினான்.
“சுகர் பேபிக்கு பால் வேணுமா?”
“ம்கூம்… இப்பதான் அம்மா கொடுத்தாங்க!” என்ற பிள்ளையை கீழே இறக்கி விட்டு, இரண்டு டீ கோப்பைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
சோஃபாவில் இருந்தவரிடம் ஒன்றைக் கொடுத்தான்.
பழக்கமில்லாதவரைப் பார்த்தததாலோ என்னவோ அவனுடனே ஒட்டி உட்கார்ந்து கொண்டு, கோலிக்குண்டு கண்களை உருட்டி அவரைப் பார்த்தது பிள்ளை.
“பாப்பா பேரென்ன?” என்றார்.
“S.அமிர்தவர்ஷினி!” என்றாள் தலையை ஆட்டித் தெளிவாக.
“சாடை எங்கேயோ பாத்த மாதிரி இருக்குடா சீனி!” என்றார் டீயைக் குடித்துக் கொண்டே. அதைக் கேட்டவன் முகம் புன்னகை சிந்தியது.
“இந்த ஜம்போ தாத்தா யாரு சீனிப்பா?” என்றாள் அவன் பக்கமாகக் குனிந்து
ரகசியமாக. அவர் உயரம் அப்படி கேட்க வைத்தது.
“நீயே அவர்கிட்டக் கேளு!” என்று சொல்ல,
“ம்கூம்… பயமா இருக்கு!”
“அப்பா… உங்களப்பாத்தா பயமா இருக்காம்!” என்று சொல்ல, மாயாபஜார் ரெங்காராவ் போல் வெடித்துச் சிரிக்க, சீனியின் கையோடு சேர்த்துக் கட்டிக் கொண்டது பிள்ளை.
டீயைக் குடித்து முடித்தவர், கப்பை டீ பாய் மீது வைத்துவிட்டு, “நான் கெளம்புறேன்டா. திறப்பு விழாவுக்கான ஏற்பாடெல்லாம் பாக்கணும். குறை வேலைய சீக்கிரம் முடிக்கச் சொல்லு. ஆவணி பொறக்கப்போகுது. தேதி நெருக்கத்துல வந்துருச்சு.”
“அதெல்லாம் முடிஞ்சுறும் ப்பா. சில்லறை வேலைதான் பாக்கி!”
“அதுதான்டா இழுக்கும். பெரிய வேலையெல்லாம் சீக்கிரம் முடிஞ்சுறும். நம்ப மேஸ்த்திரி பயலுகளைப் பத்தி தெரியாதா? கடைசி நேரத்துலதான் எல்லாம் அரிபரியா பண்ணுவானுங்க. அப்ப தானே வேலை நடக்குற மாதிரி காட்டமுடியும். ”
“சரிப்பா… நீங்க கெளம்புங்க. நான் பாத்துக்கிறேன்!” என்று சொல்லி முடித்தான்.
“சீனி…” என்றவர் அழைப்பு தயக்கமாக ஒலிக்க,
இவ்வளவு நேரமாக மகனிடம் உரிமையாக, குரலை உயர்த்திப் பேசியவர் இப்பொழுது தயங்கி அழைக்க, அந்தத் தொனியே மகனுக்கு அப்பாவின் எண்ணத்தை பறைசாற்ற,
“நீங்க என்ன கேக்கப்போறீங்கன்னு தெரியுதுப்பா! வீட்டுக்கு மட்டும் கூப்பிடாதீங்க!” என்றான் பட்டென.
“வீட்டுக்கும் வரமாட்டேங்குற. அங்க உங்க அம்மா என்னைய பேச்சா பேசிக் கொல்லுதா!”
“பேசறதைத் தவிர வேறென்ன தெரியும் அவங்களுக்கு. மொதல்ல வாயைக் குறைக்கச்சொல்லுங்க!”
“கல்யாணமான நாள்லருந்து நானும் சொல்லிப் பாத்துட்டேன். இனிமேதானா குறைக்கப்போறா!” என்று ஆயாசமாக மூச்செடுத்தவர்,
“பிள்ளைய சீக்கிரம் அனுப்பிவிடு சீனி. அவங்க வீட்ல தேடப்போறாங்க! சொல்லாம வந்துட்டேன்னு வேற சொல்லுது.”
“அதெல்லாம் இங்க வந்துட்டா தேட மாட்டாங்கப்பா!” என்றவன், “அப்படித்தானே அம்மு” என்று, பிள்ளையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் வேறு கேட்க, ஆமாவென்று இரண்டு பக்க சிண்டு ஆட தலையை ஆட்டி ஆமோதித்தது. அதைப் பார்த்தவனுக்கும் முகத்தில் புன்னகை தாராளமாய் விரிந்தது. மகனின் இந்த சிரிப்பும், செய்கையும் வித்யாசமாகப்பட்டது பொதிகாசலத்திற்கு.
கடந்த சில மாதங்களாக சிரிப்பு என்றால் என்ன விலை, எங்கு கிடைக்கும் என்று கேட்குமளவிற்கு இறுகிப் போயிருந்தவனது நடவடிக்கை, இன்று… யார் வீட்டுப் பிள்ளையவோ உரிமையாக மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சுமளவிற்கு மாற்றம் பெற்றிருப்பதைப் பார்த்தவருக்கு புருவங்கள் இடுங்கியது.
“சீனிப்பா, நான் இங்க வந்தது அம்மாகிட்ட சொல்லணும். இல்லைனா திட்டுவாங்க. உங்க ஃபோன் கொடுங்க!” என்று கேட்க, லாக்கை எடுத்துவிட்டு ஃபோனைக் கொடுத்தான்.
வாங்கியவள், “கால் ஃப்ரூட்டி!” என கூகுள் அசிஸ்ட்டிடம் கூற, மகளது செய்கையைப் பார்த்தவன், அடுத்த நொடி கண்களை மட்டும் உயர்த்தி அப்பாவின் முகம் பார்த்தான். அவரது புருவம் சுருங்கி, பார்வை மகனை ஆராய்ந்தது.
அடுத்த சில வினாடிகளில் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ம்மா… நான் சீனிப்பா வீட்ல இருக்கேன். தேடாதே!” அவ்வளவுதான். அழைப்பை துண்டித்துவிட்டாள்.
எதுல எப்படியோ, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு, பதில் கூட கேட்காமல் அழைப்பை துண்டிப்பதில் அப்படியே அவ அம்மாதான். மகள் செய்கையைப் பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். இந்நேரம் அங்கே அவள் அர்ச்சனையை ஆரம்பித்திருப்பாள் என்றுதான் தெரியுமே. அதுதான் சாமர்த்தியமாக சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டது பிள்ளை.
இருவரது செய்கையைப் பார்த்தவர், அதுவும் மகனது ஃபோனில் இருந்து ஃப்ரூட்டி எனும் பெயரில் யார் என்ற யோசனை முடிச்சுக்கள் பொதிகாசலத்திற்கு.
ஒரு வேளை அந்த மாதிரி ஏதாவது தப்பான உறவு என்று யொசனை செல்ல, ச்சே… என்ன நம்ம புத்தி இப்படியெல்லாம் யோசிக்குது. அப்படியிருந்தா பெத்த அப்பன் முன்னாடியே எந்த மகனாவது இப்படி நடந்து கொள்வானா? என்று தன்னையே நிந்தித்துக் கொண்டாலும், ஃப்ரூட்டி என செல்லப் பெயர் போட்டு பதிந்து வைக்குமளவிற்கு யார். ஒரு வேளை இந்தப் பிள்ளைக்கு தான், அவங்க வீட்டு நம்பரை ஃப்ரூட்டி எனப் போட்டு வைத்திருப்பானா இருக்கும்!’ மகனை சந்தேகப்படவும் முடியவில்லை. தன் வளர்ப்பு தப்பாகாது என்ற அசாத்திய நம்பிக்கை.
யோசனைகளோடு அமிர்தாவையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, அந்த சாடை யாரையோ நினைவூட்ட,
“யார்ரா இந்தப் பிள்ளை. உரிமையா ஃபோனெடுத்துப் பேசுது. பேரு சொல்லி வேற கூப்புடுது! சாடை வேற எங்கேயோ நல்லா பாத்த மாதிரி இருக்கே. நம்ப சொந்தக்காரவுக பிள்ளையா. இங்க குடியிருக்காகளா?” என்று மகனையே உறுத்துப் பார்த்தார்.
இந்தளவிற்கு சிறு பிள்ளைகளோடு இழைபவன் இல்லையே தன் மகன் என்ற யோசனை அவருக்குள்.
“இதை உங்க பொண்டாட்டி கேக்கணும்ப்பா. காந்திமதி சந்திரமுகியா மாறிறுவாங்க. பேர் சொல்லத்தானப்பா பிள்ளை” என்று சொல்லிச் சிரிக்க,
“அவ எதுக்குடா இதுக்குபோய் சந்திரமுகியா மாறப்போறா?”
“பொண்டாட்டி சாடை கூட மறந்துருச்சான்னுதான்!” என்று சொல்லி சிரிக்க, புரியாமல் ஒரு கணம் மகனைப் பார்த்தவர், அமிர்தாவையும் உற்றுப் பார்த்தார். இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவரது மூளைக்குள் மின்னல் வெட்ட,
“எலேய்… என்னடா சொல்லுத?” அதிர்ந்து கேட்டவரிடம்,
“ஒரு தடவை நல்லா உத்துப் பாருங்க. இன்னுமா தெரியல!” திருவிளையாடல் சிவாஜியாக, மாறாத சிரிப்போடு கேட்க,
“ஏலேய் சீனி!” என்று அதிர்ந்து எழுந்தேவிட்டார். வேகமாக ஒற்றை சோஃபாவில் இருந்து எழுந்து வந்து, நீள் சோஃபாவில் இவர்கள் பக்கத்தில் தடாலென அமர்ந்தவர், வந்த வேகத்தில், அவனது மடியிலிருந்து பிடிங்கி, பிள்ளையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு,
“எந்தாயாலே!” என்று கேட்டவர் குரலும், முகமும் மகிழ்ச்சியில் முக்குளித்தாலும் சட்டென கண்கள் கலங்கிவிட்டது. அவரது அதிரடி நடவடிக்கையில் பிள்ளைதான் மிரண்டு விட்டது.
“கண்ண உருட்டிப் பாக்கும் போதே நெனச்சேன்ல. எங்கேயோ பாத்த மாதிரி இருக்குன்னு!” என்றவர் குரல் கமற, இத்தனை ஆஜனுபாகுவான உருவம் சட்டென இளகியதைக் கண்டு மகன் மனமும் உருகியது.
அவரது வலிய கரங்களுக்குள் சிக்கியவள் குரல், “சீனிப்பா” என்று அழுகைக்குத் தயாராக,
“அப்பா… அவளை பயமுறுத்தாதீங்க. நம்ம தாத்தாடா அம்மு!” என்றான்.
“நான் அம்மாட்ட போறேன். இறக்கிவிடுங்க” என்று மடியைவிட்டு இறங்க எத்தனித்த பிள்ளையை, ஆர்வத்தில் மேலும் இறுக்கிப் பிடித்தார் பொதிகாச்சலம்.
“எந்தாய இப்பதான் பாக்கே. அப்படியே அவங்க ஆச்சிதான்ல!” என்றவர், கன்னத்தில் கட்டிப்பிடித்து முத்தம் வைக்க, மீசை முடியின் சொரசொரப்பில் பிள்ளை முகம் சுழித்தது.
“அப்பா… அவளை இறக்கிவிடுங்க. ஒரே நாள்ல பயமுறுத்தாதீங்க!” என்றவன் பிள்ளையை அவன் மடிக்கு மாற்றிக் கொள்ள முயல அந்த இடைவெளியில், தாவி இறங்கி வேகமாக வெளியே ஓடிப்போனாள்.
“வந்த பிள்ளைய விரட்டி விட்டுட்டீங்க. இனி வருவாளான்னு தெரியல?” என்றவன் எழுந்து சென்று பால்கனி வழியாகப் பார்த்தான். படிவழியாக இறங்கி ஓடியவள், பூங்காவில் இருந்த, வேலாயுதம், அய்யம்மாவிடம் செல்லாமல், நடைபாதை தாண்டி எதிர்த்த ப்ளாக்கிற்கு செல்லும் மாடிப்படி வழியே மேலே ஏறப் போனாள்.
அப்பொழுதுதான் கல்லூரி விட்டு வந்த, யஷ்வந்த், “பியூட்டி” என்றழைக்க, திரும்பிப் பார்த்தாள்.
“வா… அண்ணா கூட லிஃப்ட்ல போலாம்!” என்று அழைக்க, எதிர் ப்ளாக்கை திரும்பிப் பார்த்தாள். பிள்ளையின் பார்வை செல்லும் திக்கில் யஷ்வந்தும் பார்த்தவன், “அங்கிள் நான் லிஃப்ட்ல அழச்சுட்டுப் போறேன்!” என்று சொல்ல, ஓகே என கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.
இங்கு வந்து செல்லும் பொழுதெல்லாம் படியில் செல்கிறாளா, லிஃப்ட்டில் செல்கிறாளா, உடன் யாரெல்லாம் செல்கிறார்கள், என்பதை வீட்டினுள் அவளது நடமாட்டம் தெரியும் வரை பால்கனியில் நின்று கவனிப்பான்.
இன்றும் அதுபோல் பார்க்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் வீட்டிற்குள் நடமாடுவது தெரிய, மீண்டும் வந்து அப்பாவின் அருகே அமர்ந்து கொண்டான்.
பேத்தியை முதன் முதலாக இன்றுதான் பார்க்கிறார் பொதிகாச்சலம். முகத்தில் பூரிப்பு இன்னும் மறையவில்லை. ஒருவித பரவச நிலையில் இருந்தார்.
“உங்க அம்மா பேசின பேச்சுக்கெல்லாம், அப்படியே அவளையே உரிச்சு வச்சு பொறந்திருக்குடா சீனி. இன்னும் என்னடா யோசனை. பெரியவங்க பேசுறோம்டா!” என்றவர் பேச்சில் பரபரப்பு அதீதமாகத் தெரிந்தது. இப்பொழுதே பேத்தியை அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவா அவரது பேச்சில். அங்கு பேத்தி மட்டுமல்ல, அவளைப் பெற்றவளும் இருக்கிறாள் என்பதை மறந்துவிட்டார் போலும். அவர் மறக்கலாம். மகனும் மறந்ததுதானே இந்த இடைவெளிக்குக் காரணம். கண்பார்வையில், கையெட்டும் தூரத்தில் மகள் இருந்தும், அப்பா என் சொல்லிக் கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை.
“நீங்க எல்லாரும் பேசினவரைக்கும் போதும்ப்பா. இதை நானே சரிபண்ணிக்கிறேன்!”
“உங்கம்மா கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசியிருக்கா. அதுவும் கூடப் பொறந்தவன்கிட்டயே அவன் தங்கச்சியப் பத்திப் பேசினா யாருக்குதான் ஆத்திரம் வராது. கொரானா காலகட்டமாப் போச்சு. இல்லைனா தண்டபானி வீடு தேடிவந்து வெட்டியிருப்பான். அதுக்குதான் அவ பெத்ததை வீட்லயே வச்சு அழகு பாக்குறா!” என்றவர் பேச்சை மேலும் தொடரவிடாமல்,
“அப்பாஆ!” என்று குரலை உயர்த்தினான். அவர் இறுதியாகச் சொன்னது எவ்வளவு அச்சாணியமான வாக்கியம்.
“என்னடா… எங்கிட்ட எகிர்ற. உன் தங்கச்சிய சும்மா ஒரு வார்த்தை சொன்னதுக்கே இவ்வளவு கோபம் வருதே. அவனுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும். தப்பெல்லாம் நம்ப பக்கம் வச்சுக்கிட்டு அவங்களப் பேசினா எப்படிடா. பொம்பளப் பிள்ளை பாவம்டா. சும்மா விடாது” என்று தனது ஆதங்கத்தை மகனிடம் கொட்டினார். அவருக்கு கண் முன் பேத்தியைப் பார்த்தும் அள்ளிக் கொஞ்ச முடியவில்லையே என்ற ஆத்திரம்.
“அதுக்குன்னு வீட்ல வச்சு அழகுபாக்குறா, அது இதுன்னு நீங்களே பேசினா எப்படீப்பா? அப்போ ரஞ்சனி இப்படி இருக்கறது உங்களுக்கு மட்டும் சந்தோஷமாப்பா?”
“ஏன்டா… எனக்கு மட்டும் ஆத்திரமில்லையா? எம்பிள்ளைக ரெண்டுபேத்தோட வாழ்க்கையும் இப்படி அந்தரத்துல தொங்குறது எனக்கு மட்டும் சந்தோஷமாவாடா இருக்கு. பொம்பளப்பிள்ளைய வளக்குற விதத்துல வளத்திருக்கணும். மாடர்ன் சொசைட்டினு வளத்தா இப்படித்தான் இருக்கும். நான் எது சொன்னாலும் படிக்காதவன்னு ஒரு எளக்காரம். நம்ம வீட்டுப் பிள்ளை குணமறிஞ்சுதான் நான் அப்படியொரு ஏற்பாட்டைப் பண்ணே. இப்பவும் உங்கம்மா மகளுக்குதான் சப்போர்ட் பண்றா” என்று பொங்கிய அப்பாவைப் பார்த்தவனுக்கும், அவரது கோபத்திலிருக்கும் நியாயம் புரியாமலில்லை.
“உங்க அம்மா பேசினது சரியாயிருந்தா, நீ ஏன்டா அவ மூஞ்சியில முழிக்க மாட்டேன்னு, இப்படித் தனியா வந்து கஷ்ட்டப்படுற. நம்ப வீட்லயே இருக்க வேண்டியது தானே?” என்றவரது கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. அவரது பேச்சையும், செய்கையையும் மன்னிக்க முடியாமல் தானே வீட்டைவிட்டு வெளியே வந்து தனியே இருக்கிறான்.
“பிள்ளை இங்கேயே இருக்குன்னு தெரிஞ்சு எப்படிடா விடச்சொல்ற. நம்ம குலசாமிடா. தாத்தனைப் பாத்து மிரளுது. என்னத்தைச் சொல்ல?” என்று மனது பொறுக்க மாட்டாமல் ஆத்துப்போனவரை, ஆற்றாமையோடு பார்த்தான்.
கைக்கு எட்டும் தூரத்தில் பிள்ளையையும், பெற்றவளையும் வைத்துக் கொண்டு தள்ளி நின்று பார்க்கும் தன் நிலையை எண்ணிப் பார்த்தான்.
அன்று டிஸ்சார்ஜ் பண்ண தாமதமாகும் எனத் தெரிந்து, ஸ்கூலில் தனித்துவிட்ட ஆசிரியையிடம் சண்டை போட்டு, வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவனோடே வைத்துக் கொண்டான். அதுவும் பழனி ஃபோன் செய்து அவரோடு, அவர் வீட்டில் போய் இரு என மகளுக்கு உத்தரவு கொடுத்த பிறகே இவனோடு வர பிள்ளை சம்மதித்தது. பெற்ற அப்பாவை நம்பி வருவதற்கு பிள்ளைக்கு சிபாரிசு தேவையாயிருக்கிறது. தன் நிலமையை எண்ணி நூறாவது முறையாக நொந்து கொண்டான்.
வீட்டிற்கு அழைத்து வந்தவன் கை, கால், முகம் கழுவிவிட்டு ப்ரெட் ஆம்லெட் போட்டுக் கொடுத்து, அவனுக்கு டீயும், பிள்ளைக்கு பாலும் ஆற்றிக் கொடுத்தான். மாற்றுடை இல்லாமல், பள்ளி சீருடையில் தான் இருந்தாள்.
அவன் வீட்டில் டீவி இல்லை. இன்னும் வாங்கவில்லை என்பதோடு, எல்லாமே ஃபோன், லாப்டாப்பில் பார்த்துக் கொள்வதால் அவனுக்கு டீவி தேவைப்படவில்லை.
“உங்க வீட்ல டீவி இல்லையா கார்ட்டூன் பாக்க!” என்று கேட்க, பிள்ளை எவ்வளவு நேரம் சும்மாவே உட்கார்ந்திருக்கும் என்று எண்ணியவன்,
“அம்மு… பார்க் போலாமா?” என்று கேட்டான்.
“ம்கூம்… ஹோம் வொர்க் பண்ணனும். இல்லைனா ஃப்ரூட்டி திட்டும்” என்று சொல்ல,
“கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு வந்து ஹோம் வொர்க் பண்ணலாம்! நான் ஹெல்ப் பண்றேன்” என்று கீழே அழைத்து வந்தான்.
ஐந்து மணி என்பதால் மாலை வாக்கிங் செல்பவர்கள் நடந்து கொண்டிருக்க,
அபார்ட்மென்ட் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் வலைகட்டி ஷட்டில் ஆடிக் கொண்டிருந்தனர். தெரிந்த முகங்கள் சம்பிரதாயப் புன்னகை செய்தன. சிலர் பழனியின் தாத்தாவைப் பற்றி விசாரித்தனர்.
“சார்… வர்றீங்களா?” இவனைப் பார்த்ததும், அந்த அபார்ட்மெண்டில் இருந்த இவனது பள்ளி மாணவர்கள் அழைத்தனர்.
பிள்ளையை அங்கிருந்த சறுக்குபலகையில் விளையாடச் சொல்லியவன், சிறிது நேரம் அவர்களோடு ஷட்டில் ஆடினான்.
“சார், இந்த மாதிரி பாடி பில்டப் பண்ண என்ன பண்ணனும்?” ஷார்ட்ஸ், ஸ்லீவ்வெஸ் பனியனோடு இருந்தவனின் உடற்கட்டைப் பார்த்து, பதின் பருவத்தினர் ஆர்வமாகக் கேட்க,
“ஹெல்த்தி டயட் அன்ட் ரெகுலர் எக்சர்சைஸ்” என்றான் சிரித்தபடி.
“ஜிம் போறீங்களா?”
“இல்ல…” என்றான் ஷட்டில் காக்கைத் தட்டியபடி.
“அப்பறம்… வீட்லயே எக்யூப்மென்ட்ஸ் வச்சுருக்கீங்களா? டம்ப்ள்ஸ், ட்ரெட் மில் இந்த மாதிரியா சார்!”
“ம்கூம்… ஜிம் வச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன்” என்றான்.
“வாவ்… சூப்பர் சார். எங்க இருக்கு உங்க ஜிம்? நாங்களும் ஜாய்ன் பண்றோம்?”
“ஆல்ஃபா ஜிம்!” பெயரைச் சொன்னவன், “ஓப்பனிங் சூன். ஆப்போசிட் பில்டிங்.” என்றான்.
“அதுவா! அது ஏதோ சூப்பர் மார்க்கெட், காஃபி ஷாப்னு சொன்னாங்களே?”
“அது கீழே… ஜிம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல!” என்றான்.
“வாவ்… சூப்பர் சார்! நாங்க எல்லாம் ஜாய்ன் பண்ணிக்கிறோம்! எங்களுக்கு ஆஃபர் கொடுங்க சார்” என்று கேட்க,
“கண்டிப்பா!” என்று சிரித்தான்.
பதின் பருவத்தினரின் ஆர்வம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தோற்றத்தை மேம்படுத்த ஆர்வம் காட்டும் வயதல்லவா?
அதற்குள் கார் ஒன்று உள்ளே வந்தது. ஏ ப்ளாக் முன் நிற்க, பார்த்தசாரதி இறங்குவதைப் பார்த்தான். பின் கதவைத் திறந்துவிட்டான். அதிலிருந்து அய்யம்மாவும், வேலாயுதமும் மெதுவாக இறங்கினர். கார் பின்னாலேயே பழனி தனது வண்டியில் வந்திறங்கினாள். காலையில் தாத்தாவிற்கு கஞ்சி வைத்து எடுத்துச் சென்றவள் தனது வண்டியில்தான் சென்றிருந்தாள்.
பழனியைப் பார்த்ததும், அமிர்தா விளையாட்டை விட்டுவிட்டு ஓடிவந்தாள். அவளும் வாரி தூக்கிக் கொண்டாள். ஒரு நாள் பாக்காததற்கே ஏங்கிப் போயினர் இருவரும். மாற்றி மாற்றி முத்தம் வைத்துக் கொண்டனர். பார்த்தவனுக்குள் பொறாமை துளிர்க்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். இருவரையும் அப்படியே சேர்த்து கட்டிக் கொள்ள எழுந்த ஆசையை முயன்று அடக்கினான்.
பார்க்கில் இருந்த பல இளவட்டங்களின் பார்வை ஆண், பெண் வித்யாசமின்றி அவன் மீதுதான் மொய்த்தது. விளையாடியதில் தோள்களிலும், முகத்திலும் வியர்வை பூக்க, நடந்து வந்தவனை அவளையுமறியாமல் பார்த்து வைக்க, நெருங்கி வந்தவன், புருவத்தை உயர்த்த, சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டாள். ஒரு கணமே என்றாலும் அவளது பார்வையின் ரசனை, அவனது கண்களிலிருந்து தப்பவில்லை. ரகசியமாய் புன்னகைத்தது மனது.
“உனக்கில்லாத உரிமையா ஃப்ரூட்டி? தாராளமா ரசிக்கலாம்” யாருமறியாமல் தனிந்த குரலில் சொல்ல,
மனதிற்குள், ‘அதான் ஊரே பாத்து ரசிக்குதே!’ என்று பற்களைக் கடித்தவள், முறைத்துவிட்டு பிள்ளையோடு லிஃப்ட்டை நோக்கிச் சென்றாள்.
இவர்களை இறக்கிவிட்ட பார்த்தி, காரை ஓரம்கட்டி நிறுத்தச் செல்ல, இவன்தான் தாத்தாவை கைத்தாங்கலாக லிஃப்டிற்குள் அழைத்துச் சென்றான்.
மேலே சென்று, வீட்டினுள் சோஃபாவில் உட்கார வைத்தவன், அப்படியே திரும்ப, “இருப்பா… பழனிய டீ போடச் சொல்றேன்!” என்றார் அய்யம்மா.
“நீங்க பாருங்க பாட்டி. நானும் அம்முவும் இப்பதான் டீ குடிச்சோம். நான் குளிச்சுட்டு, அமிர்தா ஸ்கூல் பேக் அங்க இருக்கு. எடுத்துட்டு வர்றேன்!” என்று கிளம்ப எத்தனிக்க,
“பழனி… பார்த்தி மொத மொதன்னு நம்ம வீட்டுக்கு வந்திருக்கான். அவனுக்கு ஏதாவது நல்லதா சமச்சுக் கொடுங்க” என்ற வேலாயுதம் படுக்க உள்ளே எழுந்து சென்றார்.
“இருந்து சாப்பிட்டுப் போக அவனுக்கு நேரமிருக்குமோ என்னவோ?” என்று அய்யம்மா மறைமுகமாக ஏதோ சொல்ல வர,
“பரவாயில்ல அப்பத்தா…இருந்து சாப்பிட்டே போறேன். இங்க தாம்பரம் பக்கம்தானே. நான் வேணா போயி சிக்கன் எடுத்துட்டு வர்றேன். பழனி… சப்பாத்தி போட்டு, சிக்கன் கிரேவி பண்ணிரு!” ஏதோ கட்டியவன் போல் உரிமையோடு சொல்ல, பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
இப்பொழுதே மணி ஏழு. இரவிலிருந்தே அவளுக்கும் சரியாகத் தூக்கமில்லை. இன்று முழுவதும் மருத்துவமனையில் தான் இருந்திருக்கிறாள். வந்தவள் இன்னும் குளிக்கக் கூட இல்லை. முகத்தைப் பார்த்தாலே சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது. நாளை பள்ளிக்கும் கிளம்ப வேண்டும். சீக்கிரம் வேலையை முடித்து படுத்தால் தானே, சீக்கிரம் எழ. இதில் சப்பாத்தி, சிக்கன் கிரேவி என்றவன் பற்கள் நறநறத்தது.
“சரிங்க மாமா!” என்றாள் மறுப்பு சொல்ல முடியாமல்.
மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்தவைகளை அவரது அறைக்கு எடுத்து வந்த அய்யம்மா, “கூறு கெட்ட மனுஷா… நானே அவனை கிளப்பி விடுறேன். நீங்க என்னடான்னா இருந்து சாப்பிட்டு போகச் சொல்றீங்க. விருந்துக்கா வந்திருக்கான். அண்ணன் பேரனைப் பாத்ததும் பாசம் பொங்குதோ?” குமட்டில் இடிக்காத குறையாக அய்யம்மா, இடித்துரைக்க,
“போடீ போக்கத்தவளே! இப்ப என்ன நடக்குதுன்னு வெளியே போய்ப்பாரு!” என்றவர் கட்டிலில் படுத்துக் கொண்டார்.
“வயசாக ஆக, கூறுவாறு கெட்டுப்போச்சு இந்த மனுஷனுக்கு” புலம்பிக் கொண்டே வெளியே வந்தவர்,
வீட்டிற்கு கிளம்புவதாகச் சொன்னவன், அங்கேயே அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.
அய்யம்மா வெளியே வர, “பாட்டி… உங்க பேத்திய தாத்தாவுக்கு மட்டும் கஞ்சி வைக்கச் சொல்லுங்க. நமக்கு ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம். உங்க பேத்தியும் டயர்டா இருக்காங்க!” என்று சொல்ல,
“எனக்கு எதுவும் வேண்டாம் சீனி. எனக்கும் கஞ்சியே போதும். நானும் இங்கிருக்க வரைக்கும் வாயக்கட்டலாம்னு இருக்கேன். உங்களுக்கு மட்டும் வாங்கிக்கோங்க!” என்றார்.
“சப்பாத்தி, சிக்கன் கிரேவியே ஆர்டர் போடலாம்” என்றவன் யாரையும் கேட்காமல் ஸ்விக்கி பண்ணிவிட்டான்.
“ஹோட்டல்ல வாங்குறதா இருந்தா நானும் வெளியவே சாப்பிட்டுக்கறேன் அப்பத்தா. நான் கெளம்புறேன்!” என்று பார்த்தி எழுந்து கொண்டான்.
அவளும் அப்பாடா என ஆசுவாசப்பட்டது அவளது முகத்திலேயே தெரிந்தது.
பார்த்தி உள்ளே சென்று தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, “பை சித்தப்பா!” என்றாள் அமிர்தா.
“பைட செல்லம்!” என்று கன்னத்தில் முத்தம் வைத்துக் கிளம்ப, இவனது பெருமூச்சு அனலடித்தது.
அவன் சென்றதும், “முடியலைன்னா டயர்டா இருக்குன்னு சொல்ல வேண்டியதுதானே. அவன் என்னமோ ஹோட்டல்ல ஆர்டர் கொடுக்கறவனாட்டம் மெனு சொல்றான். நீயும் சரிங்க எசமான்ங்கற மாதிரி சரிங்க மாமாங்கற!” என்று வார்த்தைகளை கடித்துக் குதற,
“வந்தவங்களுக்கு சாப்பாடு போடாம சும்மாவா போகச் சொல்ல முடியும்?” என்று இவளும் பதிலுக்கு எகிற.
“அவன் என்ன விருந்துக்கா வந்தான். தாத்தாவைப் பாக்கதானே வந்தான். என்னமோ கட்டினவளக் கேக்குறதாட்டம் உரிமையா கேக்குறான்!”
“கட்டலைனாலும் அத்தை மகளைக் கேக்குற உரிமை அவருக்கு இருக்கு. ஆனா, உங்களுக்கு என்ன உரிமையிருக்குன்னு, இப்படி நடுவீட்ல நின்னு, என்னை கேள்வி கேக்குறீங்கனுதான் தெரியல!” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அறைக்குள் குளிக்கச் சென்றுவிட்டாள்.
அவள் கேட்டதும் நூற்றுக்கு நூறு உண்மைதானே. அவனாவது அத்தை மகன். நீ எந்த உரிமையில் அதிகாரம் செய்கிறாய் என்று மனசாட்சி இடித்துரைக்க, அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் வெளியேறிவிட்டான்.
*****
“நீ எதுக்குடீ ஸ்கூல்ல தூங்கின?” பிள்ளையைத் தான் கண்டித்தாள்.
அதே நேரத்திற்கு இவனும் பேக்கை எடுத்துக் கொண்டு உள்ளே வர, “அங்கிள்… இதுக்கு தான் அம்மாட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன். இப்ப திட்டுறாங்க பாருங்க!” என்று சொல்ல,
“ஓ… இதைச் சொல்ல வேண்டாம்னு வேற சொன்னியா? ஒரே நாள்ல சகவாச தோஷம், எங்கிட்ட மறைக்குறளவுக்கு வந்துருச்சு!”
“எதையும் சொல்லாம மறைக்கறது உன்னோட பழக்கம். என்னோடதில்ல! இப்ப எதுக்கு பிள்ளைய மிரட்டுற. இப்படி மிரட்டுனா மறைக்கவும், பொய் சொல்லணும்னு தான் தோணும்!”
“அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. இந்த வருஷம் பூரா அந்த மிஸ்கிட்டதான் படிக்கணும். ஏற்கனவே அவங்களுக்கு எம்மேல காண்டு. இப்ப இது வேற!” என்று அலுத்துக் கொண்டாள்.
“அதுக்குன்னு அப்படியே விடச் சொல்றியா. பிள்ளைக்கு எதுனா ஒன்னுனா கேக்கக் கூடாதா?”
“எங்கிட்ட சொன்னா, நாளைக்கு நான் கேட்டுப்பேன்ல. உங்களை யாரு கேக்க சொன்னது? ஒரே நாள்ல ரெண்டு பேரும் இத்தனைய இழுத்து வச்சுருக்கீங்க!”
“நான் கேக்காம வேற யாரு கேப்பாங்க?”
விளம்பர இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இருவரும் வாக்குவாதத்தைத் தொடர,
“பழனி, இப்ப நீங்க எதுக்கு புருஷன் பொண்டாட்டி மாதிரி சண்டை போட்டுக்கறீங்க!” என்று அய்யம்மா கேட்ட பிறகே சூழ்நிலை உறைத்தது இருவருக்கும்.
“ம்மா… அந்த மேம்ம அங்கிள் நல்லா திட்டினாங்க!” என்றாள் போதாக் குறைக்கு மகளும். உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை என்பது போல் அவள் அந்நியப் பார்வை பார்க்க, ஸ்கூல் பேக்கை கொடுத்துவிட்டு வேகமாகத் திரும்பினான்.
“பாட்டி… ஆர்டர் டெலிவரி வந்தருச்சு. இருந்து சாப்பிட்டு போகச் சொல்லுங்க. நிறைய இருக்கு. சாப்பாட்டை வீணாக்க கூடாது!”
“ஏன்டீ… அதை இப்படியா சொல்லுவா?” அய்யம்மா பேத்தியை கண்டிக்க,
“உங்க பேத்தி பேசினதுல வயிறும், மனசும் நெறஞ்சுருச்சு பாட்டீ. அவங்களையே சாப்பிட சொல்லுங்க!” என்றவன் பட்டென வெளியேறி விட்டான்.
“ஏன்டீ இப்படி வெடுக்கு வெடுக்குனு பேசுற. அந்தத் தம்பி மனசு என்ன பாடுபடும்னு நெனச்சுப் பாத்தியா?”
“அப்போ நான் பட்டதெல்லாம் உங்களுக்கு மறந்துருச்சுல்ல” என்றவள் குரல் கம்மி, கண்கள் குளம் கட்ட,
“தப்பு யாருதான்டீ செய்யல. நீ பண்ணதுமட்டும் தப்பில்லையா?”
“இப்ப என்ன? நீயும் தானே இடம் கொடுத்தேன்னு சொல்ல வர்றீங்களா? இதையே எத்தனைவாட்டி சொல்லுவீங்க?”
“பெத்தவன்கிட்ட பிள்ளையவே மறச்சிருக்க. அது தப்பில்லையா?”
“வேண்டாம்னு முடிவு கட்டினப்பின்னாடி எதுக்கு சொல்லணும்?”
“பழனி, தப்பை சரி பண்ண பாக்கணுமே ஒழிய, திரும்பத் திரும்ப குத்தி காமிக்கறதுல யாருக்கு நல்லது சொல்லு. பார்த்திய சித்தப்பான்னு கூப்புடற புள்ள, அந்தத் தம்பிய அங்குள்னு கூப்பிடும் போது மூஞ்சி போற போக்கப் பாக்கணுமே. பெத்தவ சொல்லட்டும்னு அந்தத் தம்பியும் எதிர்பாக்குது போல. இல்லைனா, இவ்வளவு தூரம் வர்ற பயலுக்கு, பிள்ளைகிட்ட அப்பான்னு கூப்பிடுன்னு சொல்லத் தெரியாதா? சாப்பாட்ட வீணாக்கக் கூடாதுன்னு மட்டும் தெரியுது. வாழ்க்கையே வீணாகறது தெரியல. இள ரெத்தம் பேசச் சொல்லுது. எங்கள மாதிரி ரெத்தம் சுண்டினப் பின்னாடி எதையும் யோசிச்சு பிரயோஜனமில்ல. என்னமோ போடீ. எங்க காலத்துல எல்லாம் இப்படி வீம்பு புடிச்சுருந்தா குடும்பம் எங்க நடத்துறது. நீ ஒரு தேசம். நானொரு தேசம்னு போகவேண்டியதுதான்! ஒரு நேரம் அடிச்சுக்க வேண்டியதுதான். ஒரு நேரம் கூடிக்க வேண்டியதுதான்” என்று எழுந்து கொண்டவர்,
இறுதியாக, “ஒன்னு ஒத்து வாழணும். இல்லையா அத்து வாழணும் பழனி. அந்தப் பய வேண்டாம்னு ஒரேயடியா முடிவு கட்டிட்டா, உங்க அண்ணன் பார்த்திக்கு உன்னைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடு பண்றான். சீக்கிரம் நல்ல முடிவாச் சொல்லி, போற காலத்துல எங்களுக்கு நிம்மதியக் கொடு!” என்றவர் படுக்கச் சென்றுவிட்டார்.
டைனிங் டேபிளில் கேட்பாரற்றுக் கிடந்தது. சப்பாத்தியும், சிக்கன் கிரேவியும்.
மறுநாள், பள்ளி செல்ல கிளம்பி வந்தான். இவளும் அந்நேரத்திற்கு கீழே பிள்ளையோடு வந்தவள், பிள்ளையிடம் ஏதோ சொல்ல, “உங்க பேரென்ன?” எனக் கேட்டது பிள்ளை.
எதுக்கு இந்தக் கேள்வி என புரியாமல் பழனியைப் பார்த்தவன், பிள்ளையிடம் தன் பெயரைச் சொல்ல, “சீனிப்பா… இனிமே இப்படித்தான் உங்களை கூப்பிடனுமாம். அம்மா சொன்னாங்க!” என்று சொல்ல, ஒரு கணம் அதிர்ந்து, மறுகணமே இருவரையும் ஆதுரமாகத் தழுவியது கண்கள்.
அவன் எதிர்பார்த்ததும் இதைத்தான். பெற்றவள் தானே பிள்ளைக்கு அப்பாவை அறிமுகப்படுத்த வேண்டும்.
“தாங்க்ஸ் ஃப்ரூட்டி!” என்றவன் குரல் அதிகமாக உணர்ச்சிவசப் பட்டிருப்பது தெரிந்தது.
இவள் வண்டியை முறுக்க, “பை… சீனிப்பா!” என்று பிள்ளை கையசைக்க, இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே மொமன்ட்டம்தான் நம்ம சுகர் பேபி அப்பனுக்கு. அதாவது சுகரப்பனுக்கு.
“டேய் சீனி… நான் கெளம்புறேன்டா!” அன்றைய நிகழ்வுகளிலிருந்து மகனை மீட்டது பொதிகாச்சலத்தின் அழுத்தமான குரல். அவருடனே அவனும் இறங்கி வந்தான்.
“எங்கப்பா போறீங்க!” எதிர் ப்ளாக்கிற்கு அவர் செல்ல அதிர்ந்து கேட்டான்.
“பேசாம வாடா எங்கூட!” என்றவர்,
“எந்த ஃப்ளாட்டுடா” எனக் கேட்டுக் கொண்டே லிஃப்ட்டில் நுழைய,
“ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ப்பா!” என்றான்.
“வீட்டைக் காமிடா!”
“அப்பா… பிள்ளை முன்னாடி எதுவும் காமிச்சுக்காதீங்க. நானே அவளை சரிக்கட்ட முயற்சி பண்ணிட்டிருக்கேன். கெடுத்துறாதீங்க!”
“தெரியும் வாடா! நீ சரிக்கட்டி அஞ்சாறு ஆச்சு!” என்றவர் காலிங் பெல்லை அழுத்த, சில வினாடிகளில் கதவு திறக்கப்பட்டது.
கதவைத் திறந்தவள் முதலில் அதிர்ந்தாலும், இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டாள். அமிர்தா வந்தவுடன் அங்கு நடந்ததை ஒப்பித்து விட்டாள் எனத் தெரிந்தது. மீசை தாத்தா என்ற பொழுதே இவளுக்கு யாரென புரிந்துவிட்டது. பின்னாலே வந்த அய்யம்மா, “வாங்க!” என்றழைக்க வழி விட்டு ஒதுங்கிக் கொண்டாளே ஒழிய, அழைக்கவில்லை.
அவரே உள்ளே சென்று அமர்ந்து கொண்டார். இப்பொழுதும் அவரைப் பார்த்ததும் பயந்து அம்மாவிடம் ஒண்டினாள் அமிர்தா.
அய்யம்மா, “பழனி… காஃபி போடு!” என்று சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம்மா. அய்யாவுக்கு எப்படி இருக்கு!”
“நல்லாருக்காரு. இப்பதான் நடந்துட்டு வந்து அசதியா இருக்குன்னு படுத்தாரு. எழுப்பறேன்!” என்று திரும்ப,
“வேண்டாம்மா! அய்யா ரெஸ்ட் எடுக்கட்டும். பிள்ள பயந்து ஓடி வந்துருச்சு. அதுதான் ஒரு தடவை பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்!” என்றவர்,
“இங்க வா தாயி!” என்றார் ஆசையாக. அவள் பழனியை நிமிர்ந்து பார்க்க,
“வரச்சொல்லும்மா!” என்று பழனியிடமும் சொல்ல,
“போ அம்மு!” என்று தனக்குப் பின்னால் நின்ற பிள்ளையை முன்னே இழுத்துவிட்டாள்.
சீனியும், “தாத்தாகிட்ட வா அம்மு!” எனத் தலையை ஆட்ட, மெதுவாக, இவனிடம் வந்தது.
தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து காசை எடுத்த பொதிகாச்சலம், பேத்தியிடம் கொடுக்க, திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.
“வாங்கிக்க சொல்லும்மா! ஊரான் வீட்டுப் புள்ளையத் தூக்குனாலே வெறுங்கையா விடமாட்டோம். எங்குல சாமிய மொதமொதன்னு தூக்கிட்டு வெறுங்கையா எப்படி விடச்சொல்லுத. வாங்கச் சொல்லு தாயி!” என்பவரை எப்படி மறுத்துப் பேசுவதென்று தெரியாமல் மகளைப் பார்த்தவள், தலையை மட்டும் வாங்கிக்கோ என்பது போல் அசைக்க, கையை நீட்டினாள் அமிர்தா.
“ஏஞ்சாமி எப்பவும் கை நீட்டக் கூடாது. தாத்தன் கையிலருந்து நீயே எடுத்துக்கோ தாயி!” என்று உள்ளங்கையில் வைத்து நீட்ட, பணத்தை எடுத்துக் கொண்டாள் அமிர்தா.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம். பார்க்கலாம், இந்த பழம் கரை(னி)யுமா என்று.

Super super super