7
“சார்… க்ரவுன்டல ஸ்டூடன்ட்ஸ் எப்படி நடந்துக்கணும்னு சொல்றது தான் உங்க வேலை. க்ளாஸ் ரூம்ல ஸ்டூடன்ஸ்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு நீங்க எனக்கு சொல்லித்தர வேண்டாம்!” சிறிதும் செய்த செயலின் வீரியம் புரியாமல், அலட்சியமாகப் பேச, இருக்கும் பணியின் பொறுப்புணர்ந்து இவன்தான் பல்லைக் கடித்து பொறுமையைக் கையாண்டான்.
மாலை பள்ளி நேரம் முடிய, பள்ளி வாகனத்தில் செல்லவேண்டிய மாணவர்களை அட்டென்டர் வந்து பொறுப்பாக அழைத்துச் சென்றார். மற்ற பிள்ளைகளை வரிசையில் நிறுத்தி கிரவுன்டிற்கு அழைத்து வந்தனர் வகுப்பு ஆசிரியைகள்.
சுதந்திரதின நிகழ்வுக்காக பெரிய வகுப்பு மாணவர்களுக்கான மார்ச் பாஸ்ட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் சீனியப்பன்.
அப்பொழுதுதான் வாட்சப்பில் தகவல் ஒலிக்க எடுத்துப் பார்த்தான். திரையிலேயே மேலோட்டமாக ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் கண்களில் மின்னல் வெட்ட, ஃப்ரூட்டி என ஒளிர்ந்ததில் இதழும் அனிச்சையாய் விரிய, ஒரே நாளில் மெசேஜ் அனுப்பும் அளவிற்கு தன் மீது கோபம் குறைந்து விட்டதா என யோசித்துக் கொண்டே, உள் பெட்டி திறக்கப்பட, ‘தாத்தாவை டிஸ்சார்ஜ் பண்ண லேட்டாகும் போல. வரும் போது அம்முவ அழச்சுட்டு வந்து விட்டுருங்க! அவ்வளவே.
இதுக்கு தானா என்று எதிர்பார்ப்பு புஷ்ஷானதில், ‘வேறென்ன எதிர்பார்த்த’ என்று உள்மனம் கேள்வியெழுப்ப, ‘நான் என்னென்னமோ எதிர்பாக்குறே. அதெல்லாம் வெளியே சொல்லவா முடியும்? அதெல்லாம் நடக்குமான்னே சந்தேகமா இருக்கு!’ அலுத்துக் கொண்டவனிடம்,
‘நீ ஆத்துனவரைக்கும் போதும். பிள்ளையைக் கூப்பிடற வேலையக் கொடுத்திருக்கா. அதையாவது உருப்படியா கவனி!’ எகத்தாளமாய் உத்தரவிட்டது உள்மனம்.
மூன்று மணிக்கு ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்துவிடும். பெரும்பாலும் அவர்களை பெற்றோர்களே நேரடியாக வந்து அழைத்துச் செல்வதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. அடுத்த அரைமணி நேர இடைவெளியில், பெரிய வகுப்புகளுக்கான பள்ளி நேரம் முடியும்.
எனவே, இவனுக்கு இன்னும் வகுப்பு நேரம் முடியாமல் இருக்க, கிரவுன்டில்தான் இருந்தான்.
கே.ஜி வகுப்பு மாணவர்கள் வரிசையில் மகளை கண்கள் தேட அமிர்தா இல்லை. இன்று, பழனி விடுப்பு எனத் தெரிந்து, அமிர்தாவை வெய்ட்டிங் ரூமில் விட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டான். பெற்றோர் வந்து அழைக்கத் தாமதமாகும் பிள்ளைகளை ஒரு அட்டென்டர் பொறுப்பில் விசிட்டர்ஸ் ரூமில் உட்கார வைப்பது வழக்கம். இவனும் அப்படியே எண்ணிக் கொண்டான்.
தனக்கு வகுப்பு முடியவும், சென்று அழைத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு, பள்ளி இறுதி மணி ஒலிக்க இன்னும் ஐந்து நிமிடமிருக்க, விசில் ஊதி, மாணவர்களை ஒழுங்கு படுத்தி, கிரவுண்டில் இருந்த மாணவர்களை வகுப்பறை போகச் சொன்னான்.
அடுத்து பெரிய வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி நேரம் முடிந்ததற்கான மணியொலிக்க, கேட்கவே வேண்டாம். அவிழ்த்துவிட்ட நெல்லி மூட்டையாய் அனைவரும் வெளியேற, விசில் ஊதி அவர்களை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான். கிரவுண்ட் காலியாகும் வரை அவன் அங்குதான் இருந்தாகவேண்டும். அதற்குள் மீண்டும் பழனியிடமிருந்து மீண்டுமொரு மெசேஜ். பிள்ளை வந்துவிட்டாளா என்று கேட்டு.
‘இன்னும் இல்ல!’ என்று இவன் அனுப்பிய அடுத்த நொடி அழைப்பு வந்தது.
எத்தனையோ வருடங்கள் கழித்து அவளிடமிருந்து வரும் அழைப்பு. அதுவும் பிள்ளைக்காக. ஏதோ பதின் பருவத்தினன் மாதிரி மனம் பரபரப்பாகத்தான் இருந்தது. ஆழ்ந்து மூச்செடுத்தவன், அழைப்பை ஏற்க, எடுத்தவுடனே வேறெதுவும் பேசவில்லை.
“இன்னும் கூப்பிடாம என்ன பண்றீங்க?” என்றவள் கேள்வியில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. பள்ளி சேர்ந்த நாளில் இருந்து மகளை தனித்து விட்டதில்லை. இன்று தான் முதல் முறை. அதுவும் அவனை நம்பி அனுப்பி வைத்தாள்.
“எனக்கு க்ளாஸ் முடிய வேண்டாமா? ஸ்கூல்ல தானே இருக்கா? எதுக்கு இவ்வளவு டென்ஷன்?” என்றான் கூலாக.
“நான் இருந்தா, நேரா என் க்ளாஸ்க்கு வந்துருவா. அதே ஞாபகத்துல வந்திருந்தா என்ன பண்றது? என்னைக் காணாம்னு பிள்ளை பொக்குனு போயிறுவா. அவளை அழச்சு, வெய்ட்டிங் ரூம்ல விட்டுட்டு வேலையப் பாக்க வேண்டியதுதானே? உங்ககிட்ட சொன்னதுக்க அட்டென்டர் யாருக்காவது கால் பண்ணி சொல்லியிருக்கலாம்!” என்று பொறிந்து தள்ளிவிட்டு, ஃபோனை வைத்துவிட்டாள். பேசினா… வச்சுட்டா… பதிலைக் கூட கேக்கல!
கிட்டத்தட்ட ஓரளவிற்கு அனைவரும் வெளியேற, பள்ளி வளாகம் சற்றே வெறிச்சோட, வெய்ட்டிங் ரூம் சென்று மகளை கண்கள் துழாவியது. அமிர்தாவைத் தவிர சில பிள்ளைகள் மட்டும் அங்கிருந்தனர்.
பழனி சொன்னதும் நினைவிற்கு வர, அவளது வகுப்பிற்கும் சென்று பார்த்தான். அங்கும் மகள் இல்லை. ஒருவேளை அவள் விடுப்பு என்பதால் தனியாகவே வீட்டிற்குச் சென்றுவிட்டாளா? கே.ஜி பிள்ளைகளை அப்படி அனுப்ப மாட்டார்களே. நேரடியாக பெற்றோர் அடையாள அட்டையுடன் வருபவர்களோடுதானே அனுப்பி வைப்பார்கள். அதுவும் அவளது அம்மா இங்குதான் வேலை பார்க்கிறாள் எனத் தெரியுமே, என்ற யோசனையோடு, அமிர்தா வகுப்பாசிரியைத் தேடிச் சென்றான். அவர் அப்பொழுதுதான், கை ரேகை வைத்துவிட்டு ஆஃபிஸ் ரூம் விட்டு வெளியே வர, அவர் முன் நின்றவன்.
“அமிர்தா எங்க மேம். விசிட்டர்ஸ் ரூம்ல இல்ல?” என்றவனுக்குள்ளும் சிறு பதட்டம் வந்து உட்கார்ந்து கொண்டது.
“ஏன் சார், அமிர்தாவை நீங்க கேக்குறீங்க?”
“ஏன்னா, பழனி மேம் இன்னைக்கு லீவ். நான் தானே காலையில அழச்சுட்டு வந்தேன். இப்பவும் நான் தான் அழச்சுட்டுப் போகணும்!” என்றவனை ஒரு பார்வை பார்த்தவர்,
“அவங்க லீவா? எனக்குத் தெரியாதே?” பதில் அசட்டையாக வந்தது.
“அப்போ அமிர்தா எங்க?” சற்று குரல் அழுத்திக் கேட்க,
“அவ க்ளாஸ் ரூம்ல தூங்குறா?” என்றவர் பதில் ஏனோதானோவென்றிருக்க,
“தூங்குறாளா? தனியாவா?” என்றவன் கண்களில் கோபம் கனன்றது.
ஏனெனில் சிறிய வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிவிட்டு கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஆகப்போகிறது. ஒரு மணி நேரமாக யாருமில்லாத வகுப்பறையில் நான்கு வயதுப் பிள்ளை தனியாகவா?
அவரை முறைத்து விட்டு, வேகமாக வெளியே வந்தவன் அவசரமாகப் படியேறினான். முதல் தளம் முழுவதும் வெறிச்சோடியிருந்தது. யாரும் இல்லை. அங்கு வகுப்பறையில் அவன் கண்ட காட்சியில், மனம் விண்டு போயிற்று.
தூக்கம் கலைந்து எழுந்தவளுக்கு, தூக்கக் கலக்கத்தில் சுற்றும் முற்றும் பார்க்க, யாருமில்லாத வகுப்பறை பயமுறுத்தியதோ என்னவோ, கண்கள் கலங்கி, உதடு பிதுங்கி அழுகைக்குத் தயாராகியது பிள்ளை. இரவு மருத்துவமனை சென்றதில் அரைகுறை தூக்கம். காரில் வரும்பொழுது கூட தூங்கிக் கொண்டுதானே வந்தாள். மதியம் சாப்பிட்டு வந்ததும் கண்கள் சொக்கிவிட்டது.
இல்லையெனினும் பசி வந்த நேரத்தில் சாப்பிட்டு, தூக்கம் வரும் நேரத்தில் தூங்கி தெருவில் விளையாடும் வயதில் ஒரே இடத்தில் உட்கார வைத்தால் தூங்காமல் என்ன செய்யும் பிள்ளைகள். இதுவே விடுமுறை நாட்களில் தூங்கச் சொல்லி அடித்தாலும் தூங்க மாட்டார்கள்.
முதன் முதலாக பள்ளியில் பழனி அவளை விட்டுச்சென்ற பொழுது கூட அழவில்லை. சிரித்துக் கொண்டே கையாட்டினாள். ஆனால், இன்று உணவு இடைவேளையிலும் பழனி இல்லாததும், இந்தத் தனிமையும் அவளைப் பயமுறுத்த, கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது பிள்ளைக்கு.
மதியமும் சீனியப்பன் தான், தனக்கும் மகளுக்கும் கேண்டீன் உணவு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தான்.
ராகவன் கூட, “எப்படி பாஸ். பிள்ளைய உங்கள நம்பி அனுப்பினாங்க!’ என்று சந்தேகமாகக் கேட்டான்.
“ஏன் என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? புள்ள புடிக்கிறவன் மாதிரியா இருக்கு?’
“புள்ள புடிக்கிறவன் என்ன, ப்ளாக் அன்ட் ஒய்ட் படத்துல வர்ற மாதிரி முகத்துல பெரிய மச்சம், கெடா மீசைன்னா இருப்பான். அவங்களுக்கெல்லாம காஸ்ட்யூம் மாத்தி பல வருஷமாச்சு. இப்ப ஐடி கம்பெனில வேலை பாக்குற மாதிரி டிப்டாப்பா தான் இருக்காங்க!’ என்றவனை முறைத்துப் பார்க்க,
“இல்ல… சும்மா பாத்ததுக்கே மொறச்சுப் பார்த்தாங்க!” என்று இழுக்க,
“சிலரோட முகராசி அப்படி. ஒன்னும் பண்ணமுடியாது!” என்றவன், பழனியின் தாத்தாவிற்கு இரவு உடல்நிலை சரியில்லாமல் போனது, தான் உதவிக்கு சென்றது என அனைத்தும் கூற, அதன் பின் ராகவனும் அதிகமாக கேட்டுக் கொள்ளவில்லை.
ஒரே அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள். ஒருத்தொருக்கொருத்தர் செய்து கொள்ளும் ஒத்தாசையென எண்ணிக் கொண்டான்.
உணவு வேளை முடிந்து மகளை வகுப்பில் விட்டுச் செல்லும் பொழுதும் கூட, இவனோடு ஒட்டாமல், விரைப்பாகத்தான் பார்த்தாள். அம்மாவுக்கு மேல என்று சின்னவளின் செல்லக் கோபத்தை ரசித்தது அப்பனின் மனது.
ஆனால் இப்பொழுது, “அம்மு…” என அழைத்துக் கொண்டே, வகுப்பறைக்குள் நுழைய, இவனைக் கண்டதும் கோபம் மறந்து ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்டாள்.
“அங்கிள், என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டாங்க!” என்று பயத்திலும், அழுகையிலும் பிஞ்சு உதடு துடிக்க, அதைப் பார்த்தவனின் பெற்ற மனம் பதைபதைத்தது.
சிறு பிள்ளை. இன்று என்னவெல்லாமோ நடக்கிறது. தனியே வகுப்பில் விட்டுச் சென்ற ஆசிரியை மீது கோபம் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. மனம் பதற வாரி அணைத்துக் கொண்டான்.
கண்களைத் துடைத்து விட, “அம்மாட்ட போணும்!” என்றாள் தேம்பியபடி. இன்று முழுவதும் அம்மாவைப் பார்க்காத ஏக்கம் நன்கு தெரிந்தது. பிஞ்சு பெற்றவளைத் தேடியது.
பிள்ளையைத் தூக்கிக் கொண்டு, பேக்கையும் எடுத்துக் கொண்டவனுக்கு பொறுமை பறந்தது.
ஸ்கூல் வாட்சப் குரூப்பில் ஆசிரியை எண்ணை எடுத்து, “ஆஃபீஸ் ரூம்க்கு வாங்க!” என கோபமாக அழைப்பு விடுத்தான்.
“எதுக்கு சார்…எனக்கு லேட்டாகுது. நான் கெளம்பிட்டேன்” என்று பதில் சொல்ல,
“இப்ப நீங்க வரலைன்னா கரஸ்பான்டன்ட் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணவேண்டி வரும்!” என்றான் அதிகாரத் தொனியில்.
“எதுக்கு சார் கம்ப்ளைன்ட் பண்ணுவீங்க. நான் என்ன தப்பு பண்ணினேன்?” என்றவரிடம்,
நடந்து கொண்டே, “வாங்க சொல்றேன்!” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
அவன் இறங்கி வருவதற்குள், அவரும் ஆஃபிஸ் ரூம் வந்திருந்தார்.
பிள்ளையை அங்கிருந்த இருக்கையில் அமர வைக்க, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டது.
“ஃபைவ் மினிட்ஸ்டாம்மா! பேசிட்டு வந்துர்றேன்!”
“நீங்களும் தனியா விட்டுப் போயிறமாட்டீங்களே!” என்றவளிடம்,
‘இதுவரை விட்டது போதும். இனிமே விடமாட்டேன்’ என மனதிற்குள் நினைத்தவன், மகள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“விடமாட்டேன்!” என்றான் கண்கள் சிவக்க.
“ப்ராமிஸ்!” என்றாள் சுண்டுவிரல் நீட்டி. நன்றாகப் பயந்திருக்கிறாள் எனத் தெரிந்தது.
“ப்ராமிஸ்!” என்றவன் கைகளை சேர்த்துப் பிடித்து முத்தம் வைத்தான். கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் வைக்கத்தான் உள்ளம் கள்வெறி கொண்டது. மகளைப் பொறுத்தவரை இன்னும் தான் மூன்றாம் மனிதன்தான். கால இடைவெளி மட்டுமல்ல, இருவருக்கும் இடையேயான இடைவெளியும் அதிகம் என மனம் உணர்த்த, தொண்டைக்குழி இறுக்கிப் பிடித்தது. விரைவில் அதை நிரப்ப வேண்டுமென மனம் சங்கல்பம் செய்தது.
ஆழ்ந்த மூச்செடுத்து ஆசுவாசப்பட்டவன், உள்ளே சென்றான். பிரின்சிபல் முன் ஆசிரியை செய்த தவறை எடுத்துரைத்தான்.
“இங்க படிக்க வர்றாங்களா? தூங்க வர்றாங்களா மேடம்? தாலாட்டி தூங்க வைக்கணும்னா எதுக்கு ஸ்கூலுக்கு அனுப்பணும்? வீட்ல வச்சே தூங்க வைக்க வேண்டியதுதானே?” என்றார் அப்பவும் அசராமல்.
“ஸ்கூல் ஓபன் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆகுது. இன்னும் அவங்க ஸ்கூலோடு ஃபார்ம்க்கே வந்திருக்க மாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழகுவாங்க!”
“ரெண்டு மாசமாச்சு. இன்னுமா பழகுறாங்க? உங்களுக்கு ஏன் சார் இவ்வளவு அக்கறை. பழனி மேம் கேட்டா நான் பேசிக்கிறேன்!”
“ஸ்கூல் காம்பவுன்டுக்குள்ள இருக்கிற வரை எல்லா ஸ்டூடன்ஸுகும் எல்லா டீச்சர்ஸும்தான் பொறுப்பு. இன்னைக்கி அவங்க வரலைன்னு தெரியாதா?”
“யார் யார் ஸ்கூலுக்கு வரலைன்னு பாக்கறதா சார் என்னோட வேலை. அதுக்கா சம்பளம் கொடுக்கறாங்க?” என்று விவாதம் காரசாரமாக,
“பிள்ளைக்கு ஏதாவது நடந்துச்சுன்னா நீங்களா பொறுப்பேத்துப்பீங்க?” என்றான் அவனும் கோபமாக.
“ஸ்கூல்ல அப்படியென்ன சார் பெருசா நடந்துறப்போகுது!”
“ஏன் ஸ்கூல்ல என்னவெல்லாம் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியாதா? டெய்லி எத்தனை நியூஸ் பாக்குறோம்!”
“அதான் மூலை மூலைக்கு கேமரா இருக்கே!”
“நடந்தபின்னாடி என்ன நடந்துச்சுன்னு பாக்குறதுக்கு தான் கேமரா. நடக்குறதுக்கு முன்னாடி தடுக்குறதுக்கில்ல. சப்போஸ், பிள்ள உள்ள இருக்கறது தெரியாம டோர் லாக் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”
“அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க. செக் பண்ணிட்டுதான் லாக் பண்ணுவாங்க!”
“அப்போ பிள்ளைய தனியா விட்டு வந்தது சரின்னு சொல்றீங்க? அப்படித்தானே?” என்றவன் குரல் இப்பொழுது மேலும் உயர்ந்தது.
“அதுக்குன்னு பனிஷ்மென்ட் கொடுக்கக் கூடாதுங்கறீங்களா?” என்று அவரும் எகிறினார்.
நீ வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. நீயும் என்னைப்போல ஒரு ஸ்டாஃப் தான். என்னை அதிகாரம் செய்ய நீ யார்? எனும் தொனி அவரது பேச்சில்.
“எது… நீங்க கொடுத்ததுக்குப் பேரு பனிஷ்மென்ட்டா? ஹரஸ்மென்ட்.”
“எதுக்கு சார் பெரிய வார்த்தையெல்லாம் யூஸ் பண்றீங்க. க்ளாஸ்ல தூங்குற பிள்ளைக்கு வேற எப்படி சார் பனிஷ்மென்ட் கொடுக்க முடியும்? திட்டக்கூடாது… அடிக்கக் கூடாது. அதான் அப்படியே விட்டுட்டு வந்தேன். இனிமே க்ளாஸ் ரூம்ல தூங்கினா தனியா விட்டுட்டுப் போயிறுவாங்கங்குற பயம் இருக்கும்ல?”
“மேம்… சின்னப் பிள்ளை மேம் அவ. தனியா விட்டுவந்தா பயந்துக்க மாட்டாளா?” என்றவன் குரல் தவிப்பாக வந்தது.
“நான் போனப்ப, அரைத் தூக்கத்துல எந்திரிச்சு, ஒன்னுமே புரியாம எப்படி முழிச்சுட்டு நின்னா தெரியுமா? நாலு வயசுப்பிள்ள. என்ன தெரியும் அவளுக்கு. நமக்கே சில நேரங்கள்ல தூங்கி எந்திரிச்சதும் எங்க இருக்குறோம்னு நிதானம் இருக்காது. (யாரெல்லாம் மதியம் தூங்கி எழுந்து பல் துலக்கியிருக்கீங்க?) ஒரு சின்னப்பிள்ளைய தனியா விட்டுட்டு வந்துட்டு, பனிஷ்மென்ட் கொடுத்தேன்னு அசால்ட்டா சொல்றீங்க. கே.ஜி பசங்க தூங்கினா சிக் ரூம் அனுப்பி தூங்க வைக்கணும்னு ரூல்ஸ் இருக்கா இல்லையா?” என்றவன் கண்கள் அதீத கோபத்தில் சிவந்துவிட்டது.
“சீனியப்பன், பொறுமையா பேசுங்க. கவிதா மேம் நீங்க பண்ணது பெரிய தப்பு. இதுவே மத்த பேரன்ட்டா இருந்தா ஸ்கூல்ல பெரிய கலாட்டா ஆகியிருக்கும்” என்ற பிரின்சிபலிடம் திரும்பியவன்,
“மேம்… இதுவே ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்திருந்தா என்னோட நடவடிக்கை வேறமாதிரி இருந்திருக்கும். இப்ப நானும் ஒரு ஸ்டாஃப். இந்த ஸ்கூலோட ஓல்ட் ஸ்டூடன்ட்கறதாலதான் இவ்வளவு பொறுமையாப் பேசிட்டிருக்கேன்!” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.
“சீனியப்பன்… இது வெளியே தெரிஞ்சா பெரிய இஷ்யூ ஆகும். பேசிக்கலாம். இந்த ஒரு தடவை விட்டுருங்க. வார்ன் பண்ணலாம்!” அவருக்கு எங்கே இது பள்ளி தாளாளார் வரை சென்று விடுமோ என்று பயம்.
இப்படி ஒரு விஷயம் இந்த பள்ளியில் நடந்தது எனத் தெரிந்தால், ஒன்றுமேயில்லாத விஷயத்தை மீடியாக்கள் ஊதிப் பெரிதாக்கி விடும். ஒரு முறை யாருமில்லாத வகுப்பறையில், மேற்கூரை காரை சிறிது பெயர்ந்து விழுந்ததற்கே, பிள்ளைகள் தலையில் விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் என பெற்றோர்கள் எல்லாம் சேர்ந்து பெரிய கலாட்டாவாகிவிட்டது. அன்றைக்கு இந்தளவிற்கு மீடியா பவர் இல்லை.
இன்று ஆளாளுக்கு ஒரு சேனல். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி, கையில் ஃபோன் வைத்திருப்பவனெல்லாம் செய்தி நிரூபர்.
‘பள்ளியறையில் சிறுமி தனித்து விடப்பட்டார்!’ இருபொருள்பட விதவிதமான மாடுலேஷனில் பேசி, கொட்டெழுத்தில் போட்டு பெல் ஐகானைத் தட்டச் சொல்லும்.
அதற்காக இது சின்னவிஷயமும் கிடையாது. எங்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனும் பொழுது இது கண்டிக்கத்தக்க விஷயமாகப் பட, முடிந்தளவிற்கு, சீனியப்பனை சமாதானப் படுத்தி, தனது பதவிக்கு கரும்புள்ளி வராமலிருக்க மெனக்கெட்டார்.
சீனியப்பனின் தந்தையும், பள்ளி தாளாளரும் நெருங்கிய பழக்கம். ஒரே ஊர்க்காரர்கள். இந்த ஸ்கூலுக்கான மொத்த இடத்தையும், துண்டு துண்டாக வைத்திருந்தவர்களிடம் பேசி, கிரயம் பண்ணிக் கொடுத்ததே அப்பொழுது ரியல் எஸ்டேட் செய்து கொண்டிருந்த இவனது அப்பாதான்.
“கவிதா மேம்! இதுவே ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்டா இருக்கட்டும். இனிமே இந்த மாதிரி கம்ப்ளைன்ட் வராமப் பாத்துக்கோங்க!” அமிர்தா வகுப்பு ஆசிரியையை கண்டித்து, இவனையும் முடிந்தளவு சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தார.
இருவரும் வெளியே வர, “என்னமோ பெத்தவனாட்டம் ஓவரா பொங்குறான். இன்னைக்கி யாரையும் நம்ப முடியல. வந்த ஒரு வாரத்துலயே பிள்ளைய அனுப்பி வைக்கிறளவுக்கு பழக்கம் வந்துருச்சு!” யாருமில்லாத ஸ்கூல் காரிடரில் அவர் தனியே பேசிச் சென்றது அவன் காதில் தெளிவாகவே விழ, அவரது பேச்சில் எரிச்சல் மண்டியது.
அங்கே வந்த ராகவன் தான் இவனை சமாதானப் படுத்தினான். பிள்ளையை அழைத்துக் கொண்டு வண்டி நிறுத்துமிடம் வந்தான். உடன் ராகவனும்.
“சார்… அவங்களுக்கு பழனிமேம் மேல ஏற்கனவே கோபம். அதை இப்படிக் காட்டுறாங்க?” என்று சொல்ல, இவன் புரியாமல் பார்த்தான்.
“இவங்க பொண்ணு இங்கதான் சார் படிக்குது. டென்த் க்ளாஸ். போன மாசம் ஒருநாள் சாட்டர்டே சிக்ஸ்த் க்ளாஸ்க்கு மேல ஸ்கூல் இருந்தது. ஃபிஃப்த் வரைக்கும் லீவுங்கறதால கவிதா மேம் வரல. ஸ்கூலுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்த இவங்க பொண்ணு, ஸ்கூல் வரைக்கும் வந்துட்டு, சைக்கிள நிப்பாட்டிட்டு வெளியே போயிருச்சு. பகலெல்லாம் ஏதோ பையனோட வண்டில சுத்திட்டு, கரெக்டா ஸ்கூல் விடுற நேரத்துல, உள்ள வந்து சைக்கிள எடுத்ததைப் பாத்துட்டு, பழனி மேம் சந்தேகப்பட்டு விசாரிச்சாங்க. மாட்டிக்கிச்சு. நேரே ஆஃபீஸ் ரூம் அழச்சுட்டு வந்துட்டு, இவங்களுக்கு ஃபோன் பண்ணி வரச்சொல்லிட்டாங்க. டீசி கொடுக்கறளவுக்குப் போயிறுச்சு. அப்பறம் ஏதேதோ பேசி, கெஞ்சி… டென்த் அது இதுன்னு சொல்லி, இவங்க தான் அழுது, வார்ன பண்ணி விட்டாங்க. அந்தக் கோபம் அவங்களுக்கு!”
“பழனி மேம் கரெக்டா தானே பண்ணியிருக்காங்க. அந்தப் பிள்ளைக்கி வெளியே ஏதாவது தப்பா நடந்திருந்தா, ஸ்கூலுக்கு தானே வந்துச்சுன்னு ஸ்கூலைத்தானே கேள்வி கேப்பாங்க.
“அது உங்களுக்குத் தெரியுது. எங்கிட்ட தனியா சொல்ல வேண்டியதுதானே. ஏன் பிரின்சிபல் வரைக்கும் கொண்டு போனீங்கன்னு கோபம்! அதுவும் பழனி மேம்க்கும் டென்த் க்ளாஸ்க்கும் சம்பந்தமில்ல. அவங்க எய்த் ஸ்டாண்டர்ட் வரைக்கும் தான் எடுக்குறாங்க. அந்தப் பையன், கரெக்டா ஸ்கூல் விடுற நேரத்துக்கு வண்டில கொண்டுவந்து காம்பவுன்ட் ஓரமா விட்டத, செகன்ட் ஃப்ளோர்லருந்து இவங்க பாத்துட்டாங்க.”
“அதுக்குன்னு சின்னப் பிள்ளைய எப்படி தனியா விட்டு வரலாம்?’’ இன்னும் அவனுக்கு மனம் ஆறவில்லை.
“விடுங்க சார். நீங்க என்ன பிள்ளைக்கு அப்பாவாட்டம் இவ்ளோ பொங்குறீங்க. பழனி மேம் வந்து பேசிப்பாங்க?” என்றவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
இனி அவளை வேற சமாளிக்கணுமே. உன்னைய நம்பி ஒரு நாள் பிள்ளைய விட்டா இதுதான் நீ பாத்துக்கற லட்சணமான்னு கழுவிக் கழுவி ஊத்துவாளே!
என்னமோ போடா சீனி! உனக்கு மட்டும் நேரம் சுத்தி சுத்தி அடிக்குது! என்று தனக்குள் புலம்பியவாறே, பிள்ளையைத் தூக்கி வண்டியில் உட்கார வைத்தவனை,
“அங்கிள்” என்று அழைக்க, நாராசமாய் ஒலித்தது அந்த அழைப்பு. வேறு வழியின்றி என்னவென்று பார்க்க,
“நான் க்ளாஸ் ரூம்ல தூங்கினதை, ஃப்ரூட்டிகிட்ட சொல்லாதீங்க. ப்ளீஸ்…” கண்களைச் சுருக்கி கெஞ்சி கொஞ்சியதைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் அச்சோவென்றும் வந்தது.
அம்மாவிற்கு தான் க்ளாஸ் ரூமில் தூங்கியது தெரிந்தால் திட்டுவாளே என்ற பயம் பிள்ளைக்கு. தனிமை பயம் போய், தாயிடம் பயம் வந்தது.
“நீயும் ஃப்ரூட்டின்னுதான் கூப்புடுவியா?” கேட்டவன் குரலில் அத்தனை பரவசம்.
“அப்படிக் கூப்பிட்டா அம்மாவுக்குப் புடிக்காது. இன்னைக்கு எங்கூட ஸ்கூலுக்கு வரலைல்ல. அதனால அப்படித்தான் கூப்பிடுவேன்!” வீம்பாக முகத்தைத் தூக்க, பார்த்தவனுக்கும் சிரிப்பு பொங்கியது. இத்தனை நேரமிருந்த அப்பனின் இறுக்கத்தை ஒரு நொடியில் தளர்த்தியது பிள்ளை.
“அம்மாட்ட சொல்லலைன்னா அம்முக்குட்டி எனக்கென்ன கொடுப்பீங்க?” கையைக் கட்டிக்கொண்டு வண்டி மீது சாய்ந்து நின்று மகளிடம் பேரம் பேசினான்.
“உங்களுக்கு சாக்லேட் வாங்கிக் தரவா! ஆனா… எனக்கே சாக்லேட் வாங்கித்தரமாட்டாங்களே!” பாவமாய் முகத்தை வைத்துச் சொன்னதும் பலமாகச் சிரித்துவிட்டான்.
“எனக்கு சாக்லேட்டெல்லாம் வேண்டாம்.”
“வேறென்ன வேணும்!”
“ஒன் ஹக் அன்ட் ஒன் கிஸ்.” ஆட்காட்டி விரலால் கன்னத்தைத் தட்டிச் சொன்னவன் மனம் பிள்ளையின் அணைப்பிற்கு ஏங்கியது.
“அம்மா யாரையும் ஹக் பண்ணக்கூடாது, கிஸ் பண்ணவிடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே!” என்று சொல்ல யாரோ லிஸ்ட்டில் தான் இருப்பதை நினைத்தவனின், இத்தனை நேர சந்தோஷமும் சட்டென வடிய, வெறுமையை மட்டுமே கனமாகச் சுமந்தது மனம்.
ஆழ்ந்த மூச்செடுத்து, தன்னை மீட்டுக் கொண்டவன்,
“அப்போ பொய் மட்டும் சொல்லலாமா? தப்பில்லையா? அம்மா திட்டினாலும் பரவாயில்லைனு எதையும் அம்மாகிட்ட மறைக்கக் கூடாது!” அப்பனின் குரல் கண்டிப்பு காட்டியது.
“ஓகே!” என்ற பிள்ளையின் குரல் சுதி இறங்கி வந்தது. அம்மாவிற்குப் பயந்து தனக்கு சாக்லேட் லஞ்சமாகக் கொடுக்க பேரம் பேசிய மகளை நினைத்து முகம் புன்னகை பூசியது.
கெட்டதுலயும் ஒரு நல்லதுடா சீனி! உன் பிள்ளைக்கி உம்மேல இருந்த கோபம் போயிருச்சு. தன்னைத்தானே தோள்தட்டி தேற்றிக் கொண்டது மனது.

Super super super