முக்கனியும் சக்கரையும் 5

5

“அம்மாச்சி…‌ இந்த காஃபியாவது குடிங்க!” காலையில் எழுந்தவுடன் ஒரு‌ பெரிய லோட்டா நிரம்ப காஃபி குடித்தால் தான் அன்றைய‌ பொழுதே விடியும் அய்யம்மாவிற்கு.

அப்படிப்பட்டவர், “அந்த மனுஷன் எந்திருக்காம, எம்பல்லுல பச்சத்தண்ணிகூட படாது!” படாதென வீம்பாக உட்கார்ந்திருந்தார். 

“அதான் தாத்தாவுக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே! அப்பறம் என்னம்மாச்சி! வெறும்‌ வயிறா இருந்து நீங்களும் ஏதாவது இழுத்துவிட்டுக்காதீங்க!” 

“எனக்கென்ன கேடு… கல்லுக்குண்டாட்டாம் நல்லாத்தான் இருக்கேன். ஒரு‌ நாள் ஒரு‌ பொழுது சாஞ்சு படுக்காத மனஷன். இப்படிப் புழிஞ்சு போட்ட சக்கையா கெடக்காறே பழனி!” முந்தானை எடுத்து கண்ணீரை‌ துடைத்துக் கொள்ள, இத்தனை வயதில் அவரது கண்ணீரைப் பார்த்தவளுக்கும் கண்கள் கலங்கியது. மிகவும் பயந்துவிட்டார் என்று தெரிகிறது. அவர் மட்டுமா… அவளும்தான் அரண்டுவிட்டாள். 

இரவு, அய்யம்மா விருப்பப்படியே குழைய சோறு வடித்து, பூண்டு ரசம் வைத்துக் கொடுத்தாள். 

வேலாயுதம் தனக்கு எதுவும் வேண்டாம் என்றுவிட்டார். எப்பொழுதாவது வயிறு சரியில்லை என்றால் வயிற்றை காயப் போட்டுவிடுவார். 

இவள்தான் மல்லுக்கட்டி ஒரு டம்ப்ளர் பால் கொடுத்துப் படுக்க வைத்தாள். அவர் பாட்டிற்கு விட்டிருந்தால் கூட ஒன்றும் ஆகியிருந்திருக்காதோ என்னவோ. வயசாகிவிட்டாலே சிலருக்கு லாக்டோஸ் செரிப்பதும் சற்று கடினம் தான். காலையும், மதியமும் வெளிச்சாப்பாடு வேறு.‌

மறுநாள் வழக்கம்போல் பள்ளி செல்ல, தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு இவளும் மகளை தூங்க வைக்க சென்றுவிட்டாள். சிறிது நேரம் மகளிடம் பேசி, கதைசொல்லி தூங்கவைத்து அவளும் கண் மூட, மாலையில் நிகழ்ந்த நினைவுகள் மீண்டும் மேலெழும்பியது. 

இப்பொழுதும் அவனது கைகளின் வெப்பத்தையும், அழுத்தத்தை, இடையில் உணர, ‘எவ்வளவு துணிச்சல்’ என உடலும், மனமும் கோபத்தில் இறுகியது. இது அவன் மீது வந்த கோபமா, அவனருகில் தன் உணர்வுகள் தன்னை வீழ்த்துவதால் வந்த கோபமா எனத் தெரியவில்லை. பள்ளியில் சேர்ந்ததும், இதே அபார்ட்மென்டிற்கு குடிவந்ததும் தற்செயலாக நடந்தது என்று நம்புமளவிற்கு சிறுபிள்ளை இல்லை. கூடவே அய்யம்மா, வேலாயுதம் இவர்களின் செய்கையும், பேச்சும்.

எப்பொழுது இவர்களைப் பார்த்து பேசினான். தன்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இருவரும், அவன் வீட்டிற்கு சென்றதோடில்லாமல், பிள்ளையையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உரிமை பற்றியெல்லாம் பேசுகிறான்.‌ பிள்ளையைப் பற்றி பேச, அவனுக்கு என்ன உரிமையிருக்கிறது என்று யோசனை செல்ல, அவனுக்கில்லாத உரிமையா… என்றது மனசாட்சி. 

உனக்கு மட்டும் என்ன உரிமையிருக்கிறது. பத்து மாதம் சுமந்ததைத் தவிர. வேண்டி, விரும்பியா பெற்றுக் கொண்டாய். ஒன்றும் பண்ணமுடியாத சூழலில்தானே பெற்றெடுத்தாய். சுயம்புவாக வந்தவள் அமிர்தா. வளற உன் வயிற்றில் பத்து மாதம் இடம் கொடுத்தாய் அவ்வளவே. சுமந்து, இடுப்பு வலியெடுத்துப் பெற்று, அள்ளியெடுத்து அரவணைத்த பிள்ளைப் பாசம் ஒட்டிக் கொண்டது. இது இயற்கையின் நியதி. 

அவனை மட்டும் குறை சொல்ல உனக்கு என்ன தகுதியிருக்கிறது. மனசாட்சி ரகரகமாய் கிழித்துத் தோரணம் கட்ட, இத்தனை‌ வருடங்களாக வராமல் வந்தவன் சிந்தனைகளோடும், விடிவெள்ளி வந்தும் வராத தூக்கத்தோடும், போராடிக் கொண்டிருக்க, 

“பழனி!” என, அய்யம்மா வேகமாக இவளது அறைக் கதவைத் திறக்க,

படக்கென அவருக்கு தான் ஏதோ உடல் தொந்தரவு போல என்று எண்ணிக் கொண்டே தான் எழுந்தாள். வயதானவர்கள் வீட்டில் இருப்பதால் தாழ்ப்பாள் போடவில்லை.‌ 

“பழனி!” என்றவர் குரலில் அத்தனை பதட்டம்.‌ கைகால் கூட உதறியது. 

“உடம்புக்கு என்னம்மாச்சி பண்ணுது.” அவரது பதட்டம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள, அவசரமாக தலையை தொட்டுப் பார்த்தாள். 

“எனக்கு ஒன்னுமில்ல… உங்க தாத்தாதான்…” என்று சொல்ல முடியாமல் திணற,‌ பதறிப்போய் ஓடிவந்து பார்த்தாள். கண்கள் கிறங்கி, கட்டிலில் மிகவும் சோர்ந்து கிடந்தார். 

“ரெண்டு மூனுவாட்டி, காலோட கையோட போயிருச்சுடீ. எனக்குப் பயமா இருக்கு!” என்றவர் குரல் தளுதளுத்தது. 

“என்னைய கூப்பிட வேண்டியதுதானே அம்மாச்சி. இப்படியா ஒத்தையில அல்லாடுவே. உங்கள அம்மா வைய்யறதுலயும் தப்பேயில்ல!” என்று அதட்டிக் கொண்டே தாத்தாவிடம் சென்றாள். 

அவரே முடிந்தளவிற்கு சுத்தப்படுத்தி படுக்க வைத்திருந்தார். கண்கள் அரை மயக்க நிலையில் இருக்க, பார்த்தவளுக்கும் பயந்து வந்தது. வயதானவராயிற்றே. எண்பதைக் கடந்த பிறகு வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ்தான். இது வேலாயுதம்தான் அடிக்கடி சொல்வார். அவரின் கிடந்த நிலை பார்த்து ஆயிரத்தெட்டு எண்ணங்கள் ஒரு நொடியில் மண்டைக்குள் ஓடியது. ச்சே என்னயிது தேவையில்லாத கற்பனையென தலையை உலுக்கிக் கொண்டாள். 

அய்யம்மா,‌ வேலாயுதத்திற்கு இரண்டே பெண் பிள்ளைகள்தான். இந்த வயதிலும், யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாதென, ஆயக்குடியில் தனியாகத்தான் இருக்கின்றனர் இருவரும். கலையரசி எத்தனையோ முறை தங்களோடு வந்திருக்கும்படி வற்புறுத்தி பார்த்துவிட்டார். மகள் வீடென்று‌ போனால் ஒரு வாரம் இருப்பதே அதிகம். மருமகன் வீட்ல வந்து இப்பவே தங்கமுடியாது. யாரோ ஒருத்தர் முந்தின பின்னாடி பார்க்கலாம் என்று மகள்கள் வாயை அடைத்துவிடுவார். 

வீட்டோட மாப்பிள்ளையாப் போறது ஆண்களுக்கு எந்தளவிற்கு கௌரவக் குறைச்சலோ, அதே அளவிற்கு பெண் கொடுத்த வீட்டில் போய் மாமியார், மாமனார் தங்குவதும் கௌரவக் குறைச்சல் தான் மூன்றாம் தலைமுறையினர்க்கு. ஆண் வாரிசு இல்லாததாலேயோ என்னவோ, யார் கையையும் எதிர் பார்க்கக் கூடாதென, கடைசி காலத்திற்கு உனக்கு நான், எனக்கு நீ என வாழ்ந்த ஆதர்ச தம்பதிகள்.

இன்றும் அப்படித்தான். வேலாயுதம், வயிறு‌ சரியில்லாமல், மூன்று முறைக்கு மேல் பாத்ரூம் சென்று வந்தும்… அய்யம்மா, பேத்தியை தொந்தரவு செய்ய வேண்டாமென எழுப்பவில்லை. இரண்டு முறை வாயில் எடுத்து, நடை தள்ளாட்டம் கண்டு, கண்கள் செருகி, தலை துவண்ட பிறகுதான் பயம் பீடித்து பேத்தியை அழைத்தார்.‌ 

வேகமாக செக்யூரிட்டியை ஃபோனில் அழைத்து மேலே வரச் சொன்னாள். கீழே அழைத்துப் போக வேண்டுமே. இவள் ஃப்ளாட்டில் விளக்குகள் போடப்பட, எதிர் ப்ளாக்கில் இருந்த அவனது ஃப்ளாட்டிலும் விளக்கு போடப்பட்டது. 

அவனும் தூங்காமல் தான் இருந்தான். இன்று காலை, வீடு பால் காய்ச்சும் பொழுது, அமிர்தாவோடும் எடுத்துக் கொண்ட சுயமிகளைப் பார்த்து, அதில் மகளை ரசித்துக் கொண்டிருந்தான். சுயமி என்றதும் நுனி நாக்கை துருத்தி, கண்ணைச் சுருக்கி, உதட்டை சுழித்து என அத்தனை ஜாலத்தையும் முகத்தில் காட்டினாள் மகள். இரண்டு பக்கமும் பஞ்சுமிட்டாயாய் கன்னம், திறந்த சிப்பியாய் கண்கள், செப்பு வாய், மல்லி மொட்டாய் மூக்கு, என பார்க்க பார்க்க நெஞ்சம் விம்மியது. கைகள் தன்னால் தொடுதிரையை வருட, மகளின் பூமுகம் மேலும் கண்முன் விரிந்தது. அவனையுமறியாமல் விழிநீர் பூத்தது. 

தன்‌ பிள்ளையை இங்கு அழைத்துவரவே அத்தனை‌ யோசித்தனர். 

“பழனிக்குத் தெரிஞ்சா பேயோட்டிருவாப்பா!” என்று‌ சொல்ல அவன் முகம் உயிர்ப்பற்று‌ போயிற்று. என்‌ பிள்ளை. என் வீட்டிற்கு அழைத்துவர இன்னொருவர் உதவியை நாட வேண்டியிருக்கும் தன் பச்சாதாப நிலையை எண்ணி உள்ளுக்குள் நொந்து கொண்டான். 

“அவகிட்ட சொல்ல வேண்டாம் பாட்டி!” என்று ஏதேதோ சொல்லித்தான் அவர்களையே வரவழைத்தான். 

அவர்களோடு வந்த பிள்ளைக்கு எத்தனை கேள்வி.

இது யார் வீடு. நீங்க யார்? ஏன் தனியா இருக்கீங்க. அது என்ன? இது என்ன? தருமி மாதிரி எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும் என்பது போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள். பதில் சொல்லக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. கால்கள் ஒரு இடத்தில் நிற்கவில்லை. எப்படித்தான் வைத்து சமாளிக்கிறாளோ? அவபாடு திண்டாட்டம் தான். ஆனந்தமாக அலுத்துக் கொண்டாலும், தன்னுடைய இழப்பின்‌ வலி நெஞ்சை அழுத்தியது.  

பிள்ளையோடு, பெற்றவள் நினைவும் வர, மன்னவன் முகத்தில் சிறுகீற்றாய்ப்‌ புன்னகை. இடையைத் தாங்கிப் பிடித்தவன் கைகளில் இடையின் மென்மையின் உணர்வு இன்னும். 

அவளது கோபமும், கண்ணீரும் நினைவிற்கு வர, இப்பொழுதும் மனதை அறுத்தது. தனது அருகாமையில்,  தன்னை ஏறெடுத்துப் பார்க்கவே பயந்து, தயங்கி, படபடத்து, சிலிர்த்து, நொடிக்கொரு வர்ணஜாலம் காட்டி, தன் கைகளுக்குள் மேகப் பொதியாய் அடங்கியவள் முகத்தில் இன்று வெறுமையும், வெறுப்பும் மட்டுமே. அவனை மயக்கிய சிறுபிள்ளைத்தனம் முற்றிலும் மறைந்து, ஒரு கம்பீரமும், தேஜஸும் குடி கொண்டிருந்தது. அதுவும் அவன் கண்களுக்கு அழகாய்த் தெரிந்து தொலைத்து, சில கணமே என்றாலும் அவளது அருகாமை அன்று போலவே இன்றும் தடுமாற‌வைத்தது. அவனது அணைப்பில் குழைந்து உருகிய பெண்மை, இன்று உடல் விரைத்து இறுகியதை, அவன் கைகள்‌ உணர, எங்கோ அவனது ஆண்மை அடிவாங்கியது. பின்னோக்கி இழுத்த நினைவுகள் நெஞ்சை அழுத்த, மூச்சை இழுத்துவிட்டு ஆசுவாசப்பட்டவன் தண்ணீர் குடிக்கலாமென எழுந்து வந்தான்.

எதிர் ஃப்ளாட்டில் விளக்கு எரிவதும், ஆள் நடமாடுவதும் தெரிய, சற்று நேரத்தில் செக்யூரிட்டி அங்கு போவது தெரிந்து, டீ சர்ட்டை எடுத்து தலையோடு மாட்டிக் கொண்டே அவசரமாக கீழே இறங்கி வந்தான். இடைப்பட்ட நடைபாதை தாண்டி எதிர் ப்ளாக்கிற்கு வந்தான். 

அதற்குள் செக்யூரிட்டி கீழே அவசரமாக இறங்கி வர, அவரிடம்‌ என்னவென்று விசாரித்தான். 

“பெரியவருக்கு உடம்பு சரியில்லை சார். நிக்கக்கூட முடியல. ஓலா புக் பண்ணியிருக்காங்க. அதான் கேட் திறந்துவிடப் போறேன்” என்றவர் வேகமாக, கேட்டை நோக்கிச் செல்ல, அவனும் லிஃப்ட்டில் வேகமாக மேலே வந்தான். 

காலிங் பெல்லை அழுத்த, இப்ப தானே செக்யூரிட்டி கீழே சென்றார், இது யார் என்ற யோசனையில் முற்றிலும் திறக்காமல், கதவை லேசாகத் திறந்து‌ பார்த்தாள். 

“டோர் லாட்ச் ஓபன் பண்ணு!” என்றான்‌ அதிகாரமாக.

மறுக்கும் சூழல் இல்லாமல் போனதில், மறுபேச்சின்றி கதவோடு இணைத்திருந்த சங்கிலியை எடுத்துவிட, கதவைத் தள்ளிக் கொண்டு வேகமாக உள்ளே வந்தான்.

“என்னாச்சு பாட்டி!” இவளிடம்‌ எதுவும் கேட்காமல், அய்யம்மாவிடம் கேட்க, பேத்தியைப் பயமுறுத்த வேண்டாமென தைரியமாக இருந்தவர், 

“வாப்பா சீனி. ஆம்பள தொணையில்லாம ஒத்தையில,  பொட்டச்சிக மட்டும் இருக்கோமே, என்னான்னு கொண்டுபோய் ஆஸ்பத்திரி சேக்கப்போறோம்னு நெனச்சேன். சாமியாட்டம் வந்திருக்க!” என்று இவனைப் பார்த்ததும் உடைந்துவிட்டார். பெரியவர்‌ அழுகை, அவனுக்கும் மனதை உருக்கியது.

“நம்மலே பாத்துக்கலாம் அம்மாச்சி! தாத்தாவுக்கு ஒன்னுமில்…” என்றவள் வாக்கியத்தை முடிக்கும் முன், திரும்பி முறைத்துப் பார்த்தவன் பார்வை, உன் வீம்பைக் காட்டுவதற்கு இதுவா நேரம் என்றது. 

அதற்குள் டாக்சி ட்ரைவரிடமிருந்து அழைப்பு வர, செக்யூரிட்டியை மேலே வரச்சொன்னாள்.

“இப்ப செக்யூரிட்டி எதுக்கு?” என்றான் சீற்றமாய். 

“தாத்தாவ எப்படி டாக்சிக்கு அழச்சுட்டு போறது? ஹெல்ப்க்கு ஆள் வேண்டாமா?” என்று‌ கேட்க,

“இவ்ளோ யோசிக்கிறவ, ஆம்புலன்ஸ்க்கு தானே கால் பண்ணியிருக்கணும்!” என்றவன், இரு கைகளில் வேலாயுதத்தை சிறு பிள்ளை போல் அள்ளிக் கொண்டு, வேகமாக லிஃப்டிற்கு சென்றான். 

அமிர்தா வேறு தூங்கிக் கொண்டிருந்தாள். பாட்டியை வீட்டில் இருக்கச் சொன்னால் நிச்சயமாக இருக்கமாட்டார். 

என்ன செய்வதென்று தெரியாமல் யோசனையில் நிற்க, “என் கூட வா!” என்று இரைந்தான் திரும்பிப் பார்த்து. 

அவனோடு சென்று லிஃப்ட்டை இயக்கி, கீழிறங்கி வர… டாக்சி இவர்கள் ப்ளாக் முன்னே நின்றது. செக்யூரிட்டி உதவியோடு காரில் பின்பக்கம் படுக்க வைத்தவன், 

“நீ முன்னால போ! பாட்டியையும், அம்முவையும் பின்னாலயே என் கார்ல அழச்சுட்டு வர்றேன்” என்று மருத்துவமனை பெயர் சொல்லி டாக்சியைக் கிளப்பிவிட்டவன், அதே வேகத்தில் தனது ஃப்ளாட்டிற்கு சென்று, கார் சாவி எடுத்து கீழிறங்கினான். 

தூங்கும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு, பாட்டியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தான். இரவு நேரமென்பதால் போக்குவரத்து‌ நெரிசல் இல்லாமலிருக்க டாக்சி பின்னாலேயே சீக்கிரம் வந்து சேர்ந்துவிட்டான். இதுவே‌ பகல் நேரமாக இருந்திருந்தால் கொளப்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி சாலை திரும்பவே மணிக்கணக்கில் ஆகியிருக்கும். 

அதன் பிறகு பிள்ளையையும், பாட்டியையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டு, மற்ற‌ பொறுப்புகளை அவன் எடுத்துக் கொண்டான். 

முழு பரிசோதனை முடித்து, ஃபுட் பாய்சன்‌, டீ ஹைட்ரேட் என‌ சொல்லி ட்ரிப்ஸ் ஏற்றினர்.‌ ஒரு பாட்டில் ஏற்றி‌‌ முடிய அவரும் கண்விழித்துப் பார்த்தார். அதற்குள் பொழுதும் புலர்ந்துவிட்டது. அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லியும் தண்ணீர் கூட குடிக்கவில்லை அய்யம்மா. 

“கல்லத்திண்டாலும் செரிக்கிற மனுஷனுக்கு செமியாக் கோளாறுன்னா நம்புற மாதிரியா இருக்கு. ஒரு கோழிய ஒருமிக்கத் திம்பாரு. இந்த ஊருத்தண்ணிதான் உங்க தாத்தனுக்கு சேரல. எம்பதாங்கல்யாணம் வேண்டாம்னு சொன்னே. உங்க ஆத்தாளும், பெரியாத்தாளும் எம்பேச்ச எங்க கேட்டாளுக. ஊர் கண்ணுதான் உங்க தாத்தன படுக்க வச்சுருச்சு!” என்று தன்னைப்போல் புலம்ப, எண்பது வயது கல்லைத் தின்றாலும் செரிக்கும் வயதா என்ற யோசனை ஓட, நாகரீகம் கருதி, வந்த சிரிப்பை வாய்க்குள் அதக்கினான். அய்யம்மா பேசப் பேச, தாடை நீவுவது போல் வாயை கைவைத்து மறைக்க, அவனது எண்ணவோட்டமறிந்து முறைத்துப் பார்த்தாள். 

ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் ஆயக்குடி அய்யம்மா, மீண்டெழுந்தார். இந்த வயதிலும் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்த சென்று, படுக்கையில் இருந்தவரை பார்த்து வர, அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. 

சீனியப்பன், “பாட்டீ… இப்பவாவது இந்த காஃபியக் குடிங்க! ஆறப்போகுது!” என்று நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டார்.

“அப்போ இவ்வளோ நேரம் சொன்ன நானெல்லாம் கேணச்சி மாதிரி இருக்கேனா?” பேத்தி செல்லக் கோபம் காண்பித்தாள்.‌

“தம்பி மரியாதைக்கு வேண்டினாலும் குடிக்கணும்ல. நமக்காக விடிய விடிய எவ்ளோ பண்ணிருக்கு. என்ன இருந்தாலும் நம்ப ஊரு மாதிரி வராது பழனி. ஒத்த சனம், என்னானு எட்டிப் பாக்கலயே. இதுவே நம்ப ஊராயிருந்தா இந்நேரம் ஊர்ச்சனம் அம்புட்டும் ஆஸ்ப்பத்திரில கூடியிருக்கும். மனுஷனுக்கு மொதல்ல நல்லாகட்டும். சாதிசனத்தோட ஊரோட போய்ச்சேந்துரணும். இங்க ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா ஒத்தையில அல்லாடணும்.” பேசிக் கொண்டே காஃபியை ஊதிக் குடிக்க ஆரம்பித்துவிட்டார். 

இதுவரை எதுவும் ஆகிவிடுமோ என வாளாதிருந்தவர் பேச்சு, எதுவும் ஆகாது எனத் தெரிந்தவுடன், எங்கே வந்து பார் என மிஸ்ட்டர் காளனுக்கே அழைப்புவிடும் அளவிற்கு, பேச்சும், தோரணையும் மாறிவிட்டது. 

அய்யம்மா பேச்சில் அவளுக்கும் புன்னகை எட்டிப் பார்த்தது. 

மடியில் படுத்திருந்த மகள் தூக்கம் கலைந்து எழ, அவளை பாத்ரூம் அழைத்து சென்றாள். 

அவரது அருகில் அமர்ந்தவன், “பாட்டிக்கு தாத்தா மேல ரொம்ப லவ் போல” கேலி போல் கேட்க, காஃபியை ஊதிக்கொண்டே,

“லவ்வா, அதெல்லாம் யார் கண்டா? உங்க காலம் மாதிரி இல்ல சீனி எங்க காலத்துல. பெத்தவங்க பாத்து சொல்றதுதான். மச்சான், கொழுந்தன், நாத்தனார்னு பெரிய கூட்டுக் குடும்பம். உங்க தாத்தா முகத்த கருப்பா, செவப்பானு ஏறிட்டுப் பாக்கங்குள்ள, பழனியோட அம்மா பொறந்துட்டா. சின்னஞ்சிறுசுக இருக்குற வீடுன்னு, நின்னு பாத்தாக்கூட, எம்மாமியாவுக்கு குத்தமாப் போகும். ஆக்க, அறிக்க, திங்க, தூங்க அப்படியே காலம் ஓடிருச்சு. அததுகளா வளந்து ஆளும்பேருமா ஆச்சுக. உங்க தாத்தாவுக்கு பழனி கோவில் தர்மஸ்தலத்துல தான் வேலை. அந்தப் பழக்கத்துல தான், அடிவாரத்துல பஞ்சாமிர்த கடை வச்சுருந்த பழனியோட அப்பா குடும்பம், உங்க அத்தை கலையரசிய பொண்ணு கேட்டாங்க. அதுவும் மச்சான், கொழுந்தன், நாத்தானான்னு பெரிய குடும்பம் தான். அப்பவே நல்ல வசதி. இன்னைக்கு மாதிரி ஒத்தப் பையனா இருக்கணும்னு எல்லாம் தேடல. ஆலமரம் மாதிரி விருட்சமான குடும்பமான்னு தான் பாத்தோம். அப்போ தானே‌ நம்ம வம்ச வித்து பல்கிப் பெருகும்‌. இன்னைக்கி அதது ஒத்தைப் புள்ளைய வச்சுக்கிட்டு, அதைக் கவனிக்க முடியாம அல்லாடுதுக. உம்மகள எடுத்துக்கோ. அவ ஒருத்திய சமாளிக்க முடியுதா?” எனக்கேட்டதில் கடைசி வாக்கியம் மட்டும் சீனியப்பன் காதில் தேன் வார்த்தது. 

‘நீங்களாவது உம்மகன்னு சொல்றீங்களே!’ ஆயாசம் கொண்டது உள்மனம். 

“உங்களுக்குள்ள சண்டையே வராதா பாட்டி!” விளையாட்டுப் போல் கேட்டான். 

“குடும்பத்த கவனிக்கவே நேரம் பத்தாதே. அதுவுமில்லாம சண்டை போடவும், பொறணி பேசவும்தான், மாமியா, நாத்தனார், மச்சான் பொண்டாட்டி, கொழுந்தன் பொண்டாட்டினு வீட்ல அத்தனை பேர் இருந்தாங்களே? இதுல உங்க தாத்தனோட சண்டை‌ போட ஏது நேரம். அதான் இப்ப நாள்‌ பூரா நானும் உங்க தாத்தனும் சண்டை போடுறோமே. ஒரு‌ வேள நாங்களும் இந்தக் காலம் மாதிரி தனிக்குடித்தனம் போயிருந்தா, உங்கிட்ட என்ன குறை, எங்கிட்ட என்ன குறைன்னு கண்டு புடிச்சு சண்டை போட நேரமிருந்திருக்குமோ என்னவோ? எம்மாமியா‌ பொம்பளைங்க சும்மா இருக்கக் கூடாது, வேலை எதுவுமில்லைன்னா, அரிசியும், பருப்பையும் ஒன்னா கலந்து மறுபடியும் பிரிச்சு எடுக்கணும்னு சொல்லும். சும்மா இருந்தா மனசு கண்டதையும் யோசிக்குமாம்” எனக்கேட்டு மலர்ந்து சிரித்தவர் முகத்தை ஆதுரமாய்ப் பார்த்திருந்தான். எல்லாம் தெரிந்து கொள்வதைவிட எதுவுமே தெரியாமல் இருப்பதும் கூட ஒரு வரம் தான். 

“தாத்தா கொடுத்து வச்சவர் பாட்டி” என்று‌ சொல்லி சிரித்தான். 

அதற்குள் மகளுக்கு முகம் கழுவி அழைத்து வந்தாள். 

சீனி, “அம்மு… பால் குடிக்க கேண்டீன் போலாமா?” என்று கேட்க, அம்மாவை திரும்பிப் பார்த்தாள் அமிர்தா. சட்டென‌ முகம் கருத்துவிட்டது சீனியப்பனுக்கு. மனதில் சுருக்கென ஊசி இறங்கியது‌. அவனோடு செல்வதற்கு பெற்றவளின் சம்மதம் கேட்டு நின்றது பிள்ளை. இவன் முகம் வாடுவதைப் பார்த்தவர், 

“அப்படியே நீயும் போயி, காபி குடிச்சுட்டு வா பழனி” என்று‌ அய்யம்மா, பழனியையும் உடன் போகச் சொல்ல, “எனக்கு எதுவும் வேண்டாம் அம்மாச்சி. ப்ரஷ் பண்ணல!” என்றாள்.

பாட்டிக்கு காஃபி வாங்கி வந்தவன், மகளை பால் குடிக்க அழைப்பவன், பேச்சுக்கு கூட உனக்கு எதுவும் வேண்டுமா என்று ஒரு வார்த்தை கேட்காத கோபமோ,‌ என்னவோ? 

“நீ போ அம்மு! பால் குடிச்சுட்டு வா!” என்று மகளை அனுப்ப, நீ வந்தால் தான் நான் போவேன் என அடமாக நின்றாள் மகள். 

அங்கெல்லாம் போகக் கூடாது என நேற்றுதானே சொன்னாள். இன்று‌ போகச் சொன்னால், யாரும்‌ இல்லாத பொழுது திட்டுவாளோ என்ற பயம் பிள்ளைக்கு. 

மகளுக்காக எழுந்து உடன் சென்றாள். கேண்டீனில் அமரவைத்து விட்டு, மகளுக்கு பாலும், அவளுக்கு ப்ரஷ்ஷும், சிறு பேஸ்ட்டும் வாங்கி வந்தான். 

“ப்ரஷ் பண்ணிட்டு வா! காஃபி சொல்லிக்கலாம்!” என்று‌ கையில் கொடுக்க, எழுந்து சென்று, ப்ரஷ் செய்து வர, காஃபி சொன்னான். பிள்ளையின் அருகில் அமர்ந்து கொண்டாள். 

“நான் வேணும்னா அம்முவ அழச்சுட்டு போறேன். ஸ்கூல்ல சேந்து ஒரு வாரம் தான் ஆகுது. வீக் ஃபர்ஸ்ட்‌ டே. லீவு போட முடியாது. எப்படியும் தாத்தாவ ஃபுல் டே அப்சர்வேஷன்லதான் வச்சிருப்பாங்க. நாளைக்கு தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க. அம்மு இங்க இருக்க வேண்டாம்!” என்றவன்,

“அம்மு… என்கூட வர்றியா? நம்ம வீட்டுக்குப் போகலாம்? நான் ஸ்கூலுக்கு அழச்சுட்டுப் போறேன்” என்று கேட்க, பெற்றவள் முகம் பார்த்தது பிள்ளை. 

“பிள்ளைய ரொம்ப மிரட்டியிருப்ப போல?” என்றா‌ன் அறிந்தவன் போல். 

“பெத்து வளத்தவளுக்கு தானே பிள்ளையோட அருமை தெரியும். முன்னபின்ன தெரியாதவங்க கூட எப்படி அனுப்ப முடியும்?” 

இரண்டு நாட்களாக பிள்ளைக்கு நீ யார்‌ என்பது போலவே அவள் பேச்சிருக்க, சுள்ளென கோபம் உச்சிக்கு ஏறியது. 

“நான் முன்னபின்ன தெரியாதவனா?” வார்த்தைகள் கடித்து துப்பப்பட்டது. 

“இல்லையா பின்ன?” 

“பிள்ளைக்கு வேணா நான், முன்ன பின்ன தெரியாதவனா‌ இருக்கலாம். ஆனா, உனக்கு முழுசாத் தெரிஞ்சவன் தானே” என்றவன் வார்த்தைகள் விஷம் தோய்த்து வர, 

“ச்சே… புள்ள முன்னாடி பேசுற‌ பேச்சா இது!” என்று முகம் சுழிக்க,

“நீதான் பேச வைக்கிற. எதுக்கெடுத்தாலும் புள்ளைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்கற மாதிரியே பேசுற? நீயென்ன குந்தியா? நானென்ன சூர்யபகவானா? பார்வையாலேயே கர்ப்பமாக்குறதுக்கு!” வார்த்தைகள் அனலடிக்க, அவள் தான் உள்ளுக்குள் அவமானத்தில் பொசுங்கிப் போனாள். 

“அன்னைக்கி மாதிரியே இப்பவும் வரம்பு மீறிப் பேசுறீங்க!” என்றவள் கண்களில் கோபம் கொப்பளித்தது.

“நீதான் வரம்பு மீற வைக்குற! சாதாரணமா சொன்ன வார்த்தை. நீ தான் அதை பெருசு பண்ற!”

“இதே வார்த்தைதான் அன்னைக்கும் வேறமாதிரி வந்தது. பேசுற எடத்தைப் பொறுத்துதான் சாதாரணம் அசாதாரணம்கறதெல்லாம். அன்னைக்கிருந்த சூழல்ல, நீங்க கேட்டது உங்களுக்கு வேணா சாதாரணமா இருக்கலாம். ஆனா, என்னோட உணர்வுகளை கொச்சைப் படுத்தி பேசுனீங்க. உன்னோட புருஷன் யாருன்னு கேக்கறதுக்கும், உன் பிள்ளையோட அப்பா யாருன்னு கேக்கறதுக்கும் வித்யாசம் இருக்குல்ல. என்னமோ யார் தொட்டாலும் உருகிறுவேங்கற மாதிரி பேசுனீங்…” என்றவள் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, 

வார்த்தைகளை விழுங்க, அவனுக்குமே அது மரணவலிதான். இருவருக்கு மட்டுமேயான தனிப்பட்ட உணர்வுகள். இதை வார்த்தை கொண்டு கீறிப் பார்ப்பதே அசிங்கம். கொல்லாமல் கொல்வது வார்த்தைகள் தானே. அதற்காக சிதறவிட்ட வார்த்தைகளை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது. ஆனால் சிதைந்த வாழ்க்கையை சரி பண்ண முயற்சிக்கலாமே‌ என்ற எண்ணம்தான் அவனை மேலும் பேசவைத்தது. காரியமா, வீரியமா என்றதில், காரியம் என்றது உள்மனம். 

“இப்பக்கூட பிள்ளை என்னோடதுன்னு ஃப்ரூஃப் பண்ணி என்னோட அழச்சுட்டுப் போக முடியும்? ஆனா பெத்தவகிட்டயிருந்து பிள்ளையைப் பிரிச்ச பாவம் வேண்டாம்னு பாக்குறேன்.” கோபத்தில் அவனுக்கும் கண்கள் சிவந்துவிட்டது.

“ப்ரூஃப் பண்ணினா மட்டும்… பிள்ளை உங்களுக்கு சொந்தமாகிடுமா? எத்தனையோ பேர் இன்னைக்கு ஸ்பெர்ம் டொனேட் பண்றாங்க. அவங்க எல்லாம் பிள்ளைக்கு சொந்தம் கொண்டாட முடியுமா? என்னைப் பொறுத்தவரை நீங்களும் அப்படியொரு டோனர் தான். என்ன ஒன்னு, நீங்க அதை ஃபிசிக்கலா பண்ணதா எடுத்துக்கலாம்” என்றவள் வார்த்தைகள் அவனது மனதை வெட்டி கூறுபோட்டது.

“ஒரு அழகான சங்கமத்தை அசிங்கப் படுத்துற பழனி!” என்றவன் வார்த்தைகளில் உணர்ச்சி ஒட்டு மொத்தமாய் வடிந்து போனது. 

“உங்களுக்கு மட்டுமேயான என்னோட உணர்வுகளை, அன்னைக்கி அசிங்கப் படுத்தினது நீங்கதான். என்னைப் பொறுத்தவரை பிள்ளைக்கி, நீங்க பயாலஜிக்கல் ஃபாதர். அவ்வளவுதான்!” குடித்த காஃபி கப்பை கசக்கி குப்பைக் கூடையில் எரிந்து விட்டு, மகளின் கைபிடித்து இழுக்காத குறையாக, விறுவிறுவென நடந்துவிட்டாள் திரும்பியும் பார்க்காது. 

அவளது வார்த்தைகள் சம்மட்டியாய் உள்ளத்தை அடித்து நொறுக்க, சுக்கு நூறாய் உள்ளுக்குள் உடைந்து போனான். 

4 thoughts on “முக்கனியும் சக்கரையும் 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top