முக்கனியும் சக்கரையும் 4

4

“ஹைய்யா… தண்டம் மாமாஆ!” காணொளி அழைப்பை ஏற்கும் முன்னமே, தொடு திரையில் தெரிந்த மாமன்‌ முகம் பார்த்து, முகமெல்லாம் பூத்தது அமிர்தாவிற்கு. 

பழனி, அண்ணனது அழைப்பை அவசரமாக மறுதலிக்கும் முன்னரே, அமிர்தா அழைப்பை ஏற்க, மருமகளின் பூ முகம் பார்த்த தாய்மாமனுக்கு கேட்கவே வேண்டாம். அவனது முகமும் பளிச்சிட்டது. “என் அம்முச் செல்லம் எப்படி இருக்கீங்க?” என்றான் முகமெல்லாம் பூரிக்க. 

“சூப்பரா இருக்கேன் மாமா!” என்றாள் முகத்திற்கு நேராக தொடுதிரையைத் தூக்கிப் பிடித்து. முகத்தை அண்ணனுக்குக் காட்டாமல், கட்டிலில் குப்புறடித்துப் படித்திருந்தாள் பழனி.

“அம்மா எப்படி இருக்காங்க?”

“அம்மா வரவர அழுமூஞ்சியா ஆகிட்டாங்க மாமா! நீங்களே பாருங்க! மாமனிடம் புகார்‌ வாசித்து கைபேசியை பழனி பக்கமாகத் திருப்பினாள். 

அம்மு‌ வேண்டாமென முகத்தைக் காட்டாமல் கை வைத்து கைபைசியை மறைத்தாள்.‌ 

“அம்மாவுக்கு மத்தவங்களை அழவச்சுதானே பழக்கம். அம்மா அழமாட்டாங்களே!”

“இப்பெல்லாம் சும்மா சும்மா அழறாங்க! பேட் கேர்ள் ஆகிட்டாங்க!”

“கழுதைப் பால் வாங்கிக் கொடுத்தா சிரிச்சுறுவாங்க!”

“ஏய்… தெண்டம். பிள்ளைகிட்ட என்ன சொல்ற? நீதான் உம்மானாம்மூஞ்சி. உனக்குத்தான் கழுதைப் பால் கொடுக்கணும்!” படக்கென முகத்தைத் திருப்பி, கோபம் மறந்து அண்ணனோடு சண்டைக்குத் தயாரானாள் பழனி. 

“பாத்தியா… அழுத பிள்ளை சிரிச்சுதாம், கழுதைப்பால குடிச்சுதாம்!”

“கழுதைன்னா?” விளக்கம் கேட்டாள் மருமகள்.

“டாங்க்கிடா செல்லம்!”

“அந்தப் பால் குடிச்சா சிரிப்பாங்களா மாமா?” 

“ஆமாடா குட்டீம்மா. எங்க ஊர்ப்பக்கம் அழுத பிள்ளைக்கி கழுதைப் பால்தான் ஊத்தச் சொல்லுவாங்க. அப்போதான் அது சிரிக்கும்‌. சின்ன வயசுலருந்து ஏதாவது காரியம் சாதிக்கணும்னா அழுதே மாமாவ ஏச்சுறுவாங்க உங்கம்மா!”

“அய்யோ… பேட் கேர்ள்!” என்ற மகளிடமிருந்து கைபேசியை வெடுக்கெனப் பறித்தவள்,

“தெண்டம்… வேண்டாம். அப்பறம் உன் வண்டவாளமெல்லாம் தண்டவாளம்‌ ஏறிடும்.” கைநீட்டி மிரட்ட, 

“பாத்தியா அம்மு! இப்பவே மாமாவ எப்படி மிரட்டுறாங்க உங்கம்மா. மாமா பாவம் தானே?” அப்பாவி போல் முகத்தை வைக்க, 

“ம்மா..‌. என்ன நீ! பெரியவங்கள கை நீட்டிப் பேசுற! நீதானே அப்படி பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்க!”

“எங்க அண்ணங்கிட்ட நான் எப்படி வேணும்னாலும் பேசுவேன். நீ போடீ!”

“ம்ஹும். அது எங்க மாமா!” 

“மொதல்ல எனக்கு அண்ணன்.‌ அப்பறம் தான்டீ உனக்கு மாமா!”

“ம்ஹும்… எனக்குதான் மொதல்ல மாமா! நெக்ஸ்ட் தான் உனக்கு அண்ணா!” 

அம்மாவிற்கு இணையாக பிள்ளையும் போர்க்கொடி பிடிக்க, இதில் யார் சிறுபிள்ளையென பார்த்துக் கொண்டிருந்தவனுக்கே சந்தேகம் வந்தது. அவனைப் பொறுத்தவரை இரண்டுமே குழந்தைகள்‌ தான். இவர்கள் செல்லச் சண்டையைப் பார்த்து சிரித்தவனுக்கு அவனையுமறியாமல் கண்கள் பனித்தது. 

“சரி… சரி… உங்கம்மாவுக்கு அண்ணன். உனக்கு மாமா!” இருவருக்குமிடையில் சாமாதானத் தூதுவராக, 

“ம்ஹும்… எனக்குதான் மொதல்ல!” என்று முகம் தூக்கிய மருமகளை அள்ளிக் கொஞ்ச கைகள் பரபரத்தது மாமனுக்கு. அம்மாவிற்கு அண்ணன் என்பதால் தான் தனக்கு மாமா என்பதெல்லாம் புரியுமா என்ன? 

“சரி… உனக்குத்தான் முதல்ல மாமா! ஓகேவா!” மருமகள் வழிக்கே வந்தான் மாமன்காரன். 

“இந்த மாமா சொன்னா கேப்பீங்களா?”

“நான் அம்மா மாதிரி பேட் கேர்ள் இல்ல. மாமா சொன்னா கேப்பேன்!”

“அப்போ கதவத் திறந்து, பாட்டிகிட்ட, அம்மாவுக்கு சாப்பாடு வாங்கிட்டுவந்து கொடுங்க!” மாமன்காரன் சொல்ல அடுத்த நொடி கதவைத்திறந்து சிட்டாய்ப் பறந்தது. 

மருமகள் வெளியே செல்ல தங்கை முகத்தை கூர்ந்து பார்த்தான். அழுததில் கண் இமையெல்லாம் தடித்து வீங்கிப் போயிருந்தது. 

“உனக்கெல்லாம் யார் டீச்சர் வேலை கொடுத்தது?” மாமன் மோடிலிருந்து அண்ணன் மோடிற்குத் தாவினான் தண்டபாணி. 

“தண்டமான உன்னைய வச்சே ஒரு கம்பெனி மேய்க்கும் போது எனக்கெல்லாம் டீச்சர் வேலை கொடுக்க மாட்டாங்களா?”

“நானென்ன ஆடா, மாடா… மேய்க்கறதுக்கு? இன்னும் நீ வளரவே இல்ல. இப்படித்தான் உன் பிள்ளைக்கு எக்சாம்பிளா இருப்பியா? இதென்ன கெட்ட பழக்கம்? பெரியவங்ககிட்ட கோவிச்சுக்கிட்டு கதவைச் சாத்திக்கறது. இதைத்தான் அவளுக்கும் நீ கத்துக் கொடுக்குற. வயசானவங்க எப்படி ஃபீல் பண்ணுவாங்கனு நெனச்சுப் பாத்தியா?” வார்த்தைகளில் அத்தனை கடினம் இல்லை என்றாலும் கண்டிப்பு இருந்தது. 

“நெனச்சேன்! இது அம்மாச்சி பாத்த வேலைதானே? ஃபோன் பண்ணாங்களா?’’ சரியாகக் கணித்து கேட்டாள். 

பழனி கோபமாக பிள்ளையை இழுத்து வந்து கதவைச் சாற்ற, சீனியப்பனிடம் ஃபோன் செய்து தனது ஆதங்கத்தைக் கொட்டினார் அய்யம்மா.

“உங்க பேத்திக்கு பழனினு பேர் வச்சாலும் வச்சீங்க. முருகனைவிட இவதான் அதிகமா மலையேறுறா. அவள மலையிறக்க சரியான ஆள் உங்க பேரன்தான். அவதான் அண்ணன் செல்லமாச்சே. உங்க பேரனுக்குப் ஃபோன் பண்ணி சொல்லுங்க!” என்று யோசனை‌ சொல்ல, அய்யம்மாவிற்கும் அதுவே சரியெனப்பட்டது. அடுத்த நொடி பெங்களூரில் இருக்கும் பேரனை அழைத்துவிட்டார் அய்யம்மா.

“கோபம் வந்தா சாப்பாட்டு மேல காட்டாதே! தெம்பா சாப்பிட்டு சண்டை போடு. வயசானவங்க பாவம். நீ சாப்பிடலைன்னு அம்மாச்சிக்கு ரொம்ப கவலை!”

“ரொம்பத்தான் கண்ட. அவங்க எங்க போய்ட்டு வந்தாங்க தெரியுமா? இந்த வயசுலயும் நல்லா மூக்குப் புடிக்க வடை, கேசரின்னு மொக்கிட்டுதான் வந்திருக்காங்க! அவங்களப் பத்தி எங்கிட்டப் பேசாதே!”

“அவங்க எங்க போனா உனக்கென்ன பழனி?” என்று கேட்க, 

“அப்ப அவங்க எங்க போனாங்கன்னு உனக்கும் தெரியும்.  நீயும் அவங்கள மாதிரித்தான் யோசிக்கிற!” என்றவள் வார்த்தைகள் ஜீவனற்றுப் போக, தொண்டை அடைத்து, மீண்டும் கண்ணீர் ஊற்றெடுத்தது.

அவனுக்கும் தங்கையின் அழுகை மனதைப் பிசைய, இவளிடம் இனி கொஞ்சல் வேலைக்காகாது எனத் தெரிந்தது.

“பழனி!” என்றான் அழுத்தமாக.‌ அதில் அழாதே என்ற கண்டனம் தொக்கி நிற்க, இமை தாண்டி, கன்னம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். 

“பெரியவங்க அப்படித்தான் யோசிப்பாங்க பழனி. நான் இருக்கேன் உனக்கு. நீ என்ன முடிவெடுத்தாலும் உனக்குதான் இந்த அண்ணனோட சப்போர்ட்!”

“அப்போ நீ முதல்ல கல்யாணம் பண்ணு. நீ கல்யாணம் முடிச்சாலே எனக்கு விழற திட்டுல பாதி கொறஞ்சுறும். அதைச் சொல்லியும்தான் திட்டுறாங்க. என்னாலதான் நீயும் இப்படி இருக்கேன்னு. நானா உன்னை கல்யாணம் பண்ணவேண்டாம்னு சொன்னேன்?” என்ற தங்கையின் கேள்விக்கு எதிர்பக்கம் மௌனமே பதிலாக, 

“இந்த அமைதியே சொல்லுது. நீ இப்படியிருந்தா நானும் இப்படித்தான் இருப்பேன்னு. இவங்க நேரடியாக சொல்றாங்க. நீ மறைமுகமா சொல்ற! அவ்வளவுதான்!” என்றவள் முகம் வாடியது. 

இதற்கு அவன் என்ன பதில் சொல்லமுடியும். கல்யாண வயதில் தங்கையிருந்தால் எத்தனை வயது பெரியவனாக இருந்தாலுமே முதலில் தங்கைக்கு. அடுத்து தான் தனக்கு. காலங்காலமாக இதுதானே நமது சமுதாய வழமை. அப்படியிருக்க, குழந்தையோடு தனித்திருக்கும் தங்கையின் வாழ்க்கை சிறக்காமல் அவன் மட்டும் எப்படி தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்வது. 

“ஏன் ண்ணா… ஒரு தடவை கல்யாணம் நின்னுட்டா இப்படியே இருந்துருவியா? அடுத்து மூவ் பண்ணமாட்டியா?” என்ற தங்கையை உற்றுப் பார்த்தவன், 

“இதையே நானும் கேக்கலாம் பழனி! உனக்கொரு நியாயம். எனக்கொரு நியாயமா? நீ மட்டும் வீம்பு புடிக்கலாமா? நீ இப்படி இருக்கும் போது நான் மட்டும் கல்யாணம்‌ பண்ணி எப்படி சந்தோஷமா இருக்க முடியும் சொல்லு!”

“என் கதை வேறண்ணா!”

“என்ன உன் கதை வேற. பெரிய இந்தக்கதை. ரெண்டு பேர் கதைக்கும் ஒரே திரைக்கதைதான். எந்தக் காலத்துல இருக்க. நீ மட்டும் கடந்துவர மாட்டேங்குற!”

“என் வாழ்க்கைக்கு ஆதாரமா என் பொண்ணு இருக்குறா. அது போதும்! எனக்கு யாரும் வேண்டாம்!” முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு பதில் சொல்ல, 

“பழனி… சில்லியா பேசாதே! சீனி வேண்டாம்னு சொல்றியா? ஓகே! அது உன்னோட தன்மானப் பிரச்சினை. ஒத்துக்கறேன். அதுக்குன்னு யாருமே வேண்டாம்னா‌ எப்படி? இப்பக்கூட  நம்ம பார்த்தி தயாராத்தான் இருக்கான். நீ சம்மதிச்சா மட்டும் போதும்!” அடுத்துத் தொடங்கும்‌ முன், 

“ம்மா… பிரியாணி!” என அமிர்தா பார்சலை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடிவர, பேச்சு தடைபட்டது.

“ஏதுடீ?”

“நான் தான் ஆர்டர் பண்ணினேன். முதல்ல சாப்பிடு. அவளுக்கும் ஊட்டிவிடு! பொறுமையா இதைப்பத்தி இன்னொரு நாள் பேசலாம்” என்றான். பிரியாணி ஆர்டர் செய்து விட்டுத்தான் தங்கைக்கே அழைப்பு விடுத்தான்.  

“நானே சாப்பிட்டுக்குவேன் மாமா!”

“பார்றா! அவ்ளோ பெரிய பொண்ணாகிட்டாளா என் அம்முக்குட்டி. அப்போ மாமனுக்கு பொண்ணுத் தேடவேண்டிய அவசியமேயில்ல. இந்த மாமனைக் கட்டிக்கிறியா?”

“ஓ… கட்டிக்கிறேனே!” வேகமாகத் தலையை ஆட்ட,  

“கட்டிக்கோ… கட்டிக்கோ… எனக்கும் இப்படி ஒரு‌ அம்மாஞ்சி மருமகன் கிடைக்க மாட்டான். பொறந்த வீடு, சம்பந்தி வீடு, மக வீடுன்னு எல்லாம் ஒரே வீடாப்போகும்!” என்ற தங்கை சொன்ன வரிசையில் புகுந்த வீடு விட்டுப் போனது அண்ணன் மனதை வதைத்தது. 

பேசி, சிரித்து, மருமகளை கேலி பேசி, தங்கையை சிரிக்க வைத்தே அழைப்பைத் துண்டித்தான். 

வைத்த பின்னும் அவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. இத்தனை வருடமாக தேடி வராதவன் இப்பொழுது எதற்கு வந்தான் என்றிருந்தது அவனுக்கும். 

எப்படியாவது பேசி தங்கை மனதை மாற்றி, மாமன் மகன் பார்த்திக்கு முடித்து வைத்துவிடலாமென எண்ணிக் கொண்டிருந்தான். பார்த்தசாரதி இவர்களது ஒன்றுவிட்ட தாய்மாமன் மகன். 

முதலில் பழனியை பெண் கேட்டார்கள்தான். சாதகம் பொருந்தவில்லை. 

சமீபத்தில் நடந்த தாத்தாவின் சதாபிஷேகத்தில், கோவிலில் வைத்து பழனியைப் பார்த்தவன், மீண்டும் பெண் கேட்டான். வெளியில் கொடுப்பதைவிட, ஒன்றுக்குள் ஒன்று எனும் பொழுது நடந்தது எல்லாருக்கும் தெரியும் என்பதால், யோசிக்கலாம் என்று சொல்லி வைத்திருந்தான்.

இன்னும் இதைப் பற்றி, பெற்றவர்களிடம் கூட கலந்தாலோசிக்கவில்லை. முதலில் தங்கையை சம்மதிக்க வைப்போம். பிறகு பெரியவர்களிடம் பேசுவதொன்றும்  பெரிய விஷயமில்லை. மீண்டும் சாதகம் அது, இது என்று இழுத்தால், பத்துப் பொருத்தம்‌ பக்காவாகப் பார்த்த சம்பந்தம் என்னவாயிற்று என்று கேட்க வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டிருந்தான். 

அதற்குள் தொட்ட குறையும், தொட்டு விட்ட குறையும் தொடர்ந்து வர, அடுத்து என்ன என்ற யோசனைதான் உள்ளுக்குள். 

அமிர்தாவிற்கும் விபரம் தெரிய ஆரம்பித்து விட்டது. இன்னும் அப்பா எங்கே என்று ஆரம்பிக்கவில்லை. இப்பொழுதுதானே பள்ளி செல்ல ஆரம்பித்திருக்கிறாள். சக மாணவர்களோடு பேசிப்‌பழகிய பின்னர் அப்பாவைப் பற்றிய யோசனை அவளுக்குள்ளும் எழும். 

அதனால் தான் ஆரம்பத்திலேயே பழனியையும், குழந்தையையும் பிரித்து வைக்கும் முடிவில், பெரியம்மா மகனுக்கு தத்துக் கொடுப்பதென பெரியவர்கள் முடிவெடுத்தது. யாருக்கு திருமணம் செய்து கொடுத்தாலும் குழந்தை நமது பொறுப்பென ஏற்தனவே தணிகாசலம் சொல்லியிருந்தார்.

சுமக்கும் வரை, அமைதியாக இருந்தவள், பிறந்து கையில் ஏந்திய பிறகு மனம் மாறிவிட்டாள். 

இனி பெற்றவளையும், பிள்ளையையும்‌ பிரித்து வைப்பதென்பது ஆகாத காரியம். அதைப்பற்றி யோசிக்கக் கூட முடியாது. 

எப்படி சிக்கலை விடுவிப்பதென தலை வலிக்க யோசித்தவன், சிக்கலை உருவாக்கியவனே வந்துவிட்டானே. பார்க்கலாம்… என தற்காலிகமாகப் பிரச்சினையை தண்டபாணி‌ ஒத்திவைத்தான். 

*****

“கைய எடுங்க சார்” அடிக்குரலில் சொன்னவள் பற்கள் நறநறத்தது. பார்வையும், குரலும் ஒரு சேர அனலைக் கக்கின.

ஹேன்ட்‌ பாரைப் பிடித்திருந்தவன் இடக்கையை மட்டும்  எடுத்துக் கொள்ள, “நான் இந்தக் கையச் சொல்லல சார்!” என்றவள் மீண்டும் பல்லைக் கடித்தாள். 

அவனும் புரியாதவன்‌ போல் “அதான் கை விட்டுட்டேனே மேடம்” என்றான் கள்ளச் சிரிப்பை மீசைக்குள் ஒழித்து. 

“கை விடறதொன்னும்‌ உங்களுக்குப் புதுசு இல்லையே. பப்ளிக் ப்ளேஸ் ஆச்சேனு பாக்குறேன். பொறுக்கித் தனம் பண்ணாம கைய எடுங்க! இல்லைனா மரியாதை கெட்டுறும்!” உதடசையாமல் சிரிப்பை முகத்தில் படறவிட்டவாறே பல்லிடுக்கில் மிரட்டினாள்.

“எந்தக் கைய எடுக்க சொல்றீங்க மேடம்!” 

“இடுப்புலருந்து இப்ப கைய எடுக்கல நல்லாத் தெரியாது. அம்மு இருக்காளேன்னு பாக்குறேன்.” 

“நானும் அம்முக்காகத்தான் புடுச்சுருக்கேன் மேடம். விட்டா விழுந்துருவா!” என்றவனை பார்த்தவள் பார்வையில் தீப்பொறி பறந்தது. அவனது வலக்கை, இவளது இடுப்பை வளைத்திருக்க, கிட்டத்தட்ட அவளை ஒட்டி உரசி அணைத்தபடிதான் நின்றான். 

வெளியே செல்வதற்காக வண்டியை எடுத்து பார்க்கிங் ஏரியாவைத் தாண்டி வெளியே வந்தாள். வழக்கம்போல் கால்களுக்கிடையில் அமிர்தா. 

ஓரளவிற்கு அண்ணனிடம் பேசி, மனம் சமாதானமாகி பிரியாணி சாப்பிட்டு உடனடி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, அறையைவிட்டு வெளியே வந்தனர் இருவரும். 

அடுக்களையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தார் அய்யம்மா. 

“என்ன அம்மாச்சி வேணும்?” என்று கேட்க, இவளிடம் சொன்னால் மீண்டும்‌ வேதாளமாகிவிடுவாளோ என்றொரு பயம். 

“அதொன்னுமில்ல… கொஞ்சம் சுக்குத்தண்ணி வைக்கலாம்னு வந்தேன். பிரியாணி சாப்பிட்டது ஒருவடியா வருது. என்னத்துல செஞ்சாணுகன்னு தெரியல. எல்லாம் ஒரே எண்ணெய்.”

“அதுக்குதான் வயசுக்குத்தகுந்த மாதிரி சாப்பிடணும்கறது.”

தள்ளுங்க, நான் வச்சுத் தர்றேன்” என்றவள், சுடுதண்ணியை கொதிக்க வைத்து வர மல்லியும், சுக்கும் இடித்துப் போட்டாள்.

அய்யம்மா இன்னும் தயங்கி நிற்க, என்ன என்பது போல்‌ பார்த்தாள். 

“இல்ல… அதுல கருப்பட்டி தட்டிப் போட்டாத்தான் நல்லாருக்கும். உனக்கு கருப்பட்டி புடிக்காதுன்னு சீனியப் போட்டுறாதே. அதுவே நெஞ்சக் கரிக்கும்!” என்று சொல்ல,

 முறைத்துப் பார்த்தவளிடம், “உனக்கு சீனியும் தானே‌‌ புடிக்காது. தள்ளு நானே போட்டுக்கறேன்!” என்று வர அவளையும் மீறி‌ சிரித்துவிட்டாள். 

‘கிழவி நம்மகிட்டயே வார்த்தையிலேயே விளையாடுதாம்மா!’ என்று நொடித்தவள், 

“உலகமகா நடிப்புடா சாமி! எனக்கெல்லாம் பயந்த ஆளா நீங்க! போங்க, நீங்க கேட்ட மாதிரியே வச்சுக் கொண்டு வர்றேன்!” என்று‌ அனுப்பி விட்டு, அவர் கேட்ட மாதிரியே கருப்பட்டி தட்டிப் போட்டு எடுத்து வந்து கொடுத்தாள். 

“குடிச்சுட்டு தூங்கி எந்திரிங்க! செரிக்கும். முடியலைன்னா சொல்லுங்க ஹாஸ்பிடல் போலாம். காலையிலேயே வடை, கேசரின்னு எண்ணெய்ப் பலகாரம். இப்ப கடை பிரியாணி. வயசுக்குத் தகுந்த மாதிரி வாயைக் கட்டணும் அம்மாச்சி!” என்றாள்.

அய்யம்மாவிற்கு அந்தப் பழக்கமெல்லாம் எப்பொழுதும் இருந்ததில்லை. ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு அவதிப்படும் ரகம். 

மதியம் பெரியவர்கள் தூங்கச் செல்ல, மறுநாள் திங்கள் கிழமை என்பதால், மகளிடம் ஹோம் வொர்க்கை முடிக்கச் சொல்லிவிட்டு, அடுத்த வாரத்திற்கான துணிகளை‌ எடுத்து அயர்ன் பண்ண ஆரம்பித்தாள். 

அமிர்தா வீட்டுப்பாடம் செய்ய சுணங்க, “இப்பவே முடிச்சுட்டா ஈவ்னிங் ஷாப்பிங் போலாம்” என்றாள். 

இது வழமை‌ தான். ஞாயிறு‌ மாலை கடைகளுக்கு சென்று அடுத்த வாரத்திற்குத் தேவையானவற்றை வாங்கிவந்து வைத்துக் கொள்வது. 

பக்கத்திலேயே அமர்ந்து வீட்டுப்பாடம் எழுத வைக்க, “ம்மா… புது வீட்டுக்கு நீ ஏம்மா வரல?” மீண்டும் துவக்கி வைத்தாள் மகள்.

“புதுவீடா… எங்கேடீ?” 

“அந்த பி ப்ளாக் பி.டி அங்கிள் வீட்டுக்கும்மா. இன்னைக்கு அங்கதானே பாட்டி கூட்டிப் போனாங்க!” 

“அம்மாச்சீஈஈஈ” என்று பல்லைக் கடித்தவள், 

“அவங்க அங்கிள் எல்லாம் இல்ல!” என்றாள் வெடுக்கென.

“அவங்களும் அதான் சொன்னாங்க. எப்படிக் கூப்புர்றது?” ‘அப்படிக் கூப்பிட வேண்டாம் என்று சொன்னவன் எப்படி கூப்பிட வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டியதுதானே!’ உள்ளுக்குள் புகைய, 

அவன் சொன்னா‌‌ மட்டும் நீ விட்டுவிடுவாயா‌ என மனசாட்சி இடித்துரைத்தது. 

“நீ எப்படியும் கூப்பிட வேண்டாம். இப்ப பேசாம எழுது. இல்லைனா, இன்னைக்கி ஷாப்பிங் கட். இனிமே அங்கெல்லாம் போகாதே!” விட்டால் இவள் மேலும் மேலும் கேள்வி கேட்டே தன்னை சோர்வாக்கி விடுவாள் என மகள் கேள்விகளுக்கு அத்தோடு முற்றுப் புள்ளி வைத்தாள்.

இவள் முற்றுப்புள்ளி வைத்து முடிக்க நினைத்தாலும், காற்புள்ளியிட்டு, தொடர் வாக்கியமாக்காத்தான் அவன் வந்துவிட்டானே. இடையில் எத்தனையோ வினாக்குறிகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. 

பெரியவர்கள் தூங்கி எழுந்து வர, இப்பொழுது எப்படி இருக்கிறதென அம்மாச்சியை‌ விசாரித்தாள். 

“பரவாயில்ல பழனி!” என்றார். 

“மெடிக்கல்ல மாத்திரை எதுவும் வாங்கிவரவா? இல்லேனா ஹாஸ்பிடல் போலாமா?” அவளுக்கு‌ பயம். வயதான காலத்தில் சேராததைத் தின்று ஏடாகூடமாக இழுத்து வைத்துக் கொண்டால் என்ன செய்வது. 

“அதெல்லாம் வேண்டாம். ரவைக்கி குழைய‌ சோறு‌ வடிச்சு, பூண்டு ரசம் வச்சுறு போதும்” என்றுவிட, சரியென மகளை அழைத்துக் கொண்டு கடைக்குக் கிளம்பினாள். 

பார்க்கிங் வந்தவள், மகளை முன்னால் ஏற்றிக் கொண்டு வண்டியைத் திருப்ப, வண்டி ஸ்டான்ட் எடுக்காமல் செல்வதைப் பார்த்து,

“அமிர்தாம்மா… ஸ்டான்ட்” என, சக குடியிருப்புவாசி, அவசரமாக அழைத்ததில் பின்னால் திரும்பியவள், சட்டென வண்டி தடுமாறி விழப்போனாள். 

வேகமாக வந்து வண்டியோடு தாங்கிப் பிடித்திருந்தான்‌ சீனியப்பன். 

குடியிருப்பு வளாகம் என்பதால் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டி வந்தாள். மாலை நேரம் என்பதால் பிள்ளைகள் வேறு‌ விளையாடிக் கொண்டிருந்தனர். வண்டி தடுமாறி விழப்போனவளை, வண்டியின் ஹேன்ட் பார்‌ ஒரு‌ கையும், இடுப்பை ஒரு கையுமாக வளைத்துப் பிடித்திருந்தான் சீனியப்பன். 

பிடித்த வேகத்தில், “அறிவிருக்கா!” என்று கடிந்தான். 

“அதுதான் இல்லைன்னு ப்ரூஃப் ஆகி அஞ்சு வருஷமாச்சே சார்! இப்ப வந்து கேக்குறீங்க. ஸ்டாக் இல்ல!” எகத்தாளமாக வந்தது பதில். 

“வண்டிய எடுத்தா ஸ்டான்ட் எடுக்க மாட்டியா? இந்த லட்சணத்துல பிள்ளைய வேற முன்னால ஏத்திக்திற?”

“அவளைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் சார்!”

“நான் கவலைப்படாம வேற யார் கவவைப்படுவா?” 

“அவளுக்கும் உங்களுக்கும் என்ன சார் சம்பந்தம்?” என்று கேட்க, அவளை சில கணங்கள் அமைதியாகப் பார்த்து நின்றான். 

முகம் கோபத்தில்‌ ஜிவுஜிவுத்திருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன் இடை தாண்டி வழிந்த கூந்தல், இப்பொழுது முதுகு வரைதான் படந்திருந்தது. கேட்ச் கிளிப்பில் அடக்கியிருந்தாள். வெகு வருடங்கள் கழித்து மிக அருகில் பார்க்கிறான். எவ்வளவு மாற்றங்கள். அன்று போல் இன்றும் இம்சித்தது அவளது அழகியவதனம்.‌ அலட்டலில்லாத,‌ ஆர்ப்பரிக்கும் அழகு. பள்ளி தவிர மற்ற நேரங்களில் சுடிதார்‌தான். நெற்றியில் சிறு பொட்டு. பாட்டிக்காக. வெறும் நெற்றியாகப் பார்த்தால் அதற்கொரு திட்டு விழும். மெலிதாக இதழ்களில் லிப் கிளாஸ். கழுத்தில் மெலிதாக ஒரு ஜெயின். அதைப் பார்த்தவன்‌ மனதில் இனம்புரிய உணர்வுகளின் கொந்தளிப்பு. அவன் பார்வை செல்லும் திசை உணர்ந்தவள் படக்கென துப்பட்டாவை கழுத்துவரை இழுத்துவிட்டாள். காதில் சின்னதாக முத்தாலான ஸ்டட். பாதாதி கேசம் அவனது பார்வை தன்னை அளப்பதை அறிந்து பல்லைக் கடித்தாள். அவனது முகமும் மிக நெருக்கத்தில். 

பள்ளியில் வேலை பார்ப்பதால் க்ளீன்‌ ஷேவ் செய்த தாடை. அவள் மார்பு மீது பட்டும் படாமல் சாய்ந்திருந்தாலும் அதன் திண்மை அவளை இப்பொழுதும் தடுமாறச் செய்ய தனக்குள்ளே கூனி குறுகிப் போனாள். இவனிடம் மட்டும் தன் உணர்வுகள் பலவீனமாக, தன்னையே நொந்து கொண்டாள். 

இப்பொழுது பிள்ளையைப் பார்த்து, “அம்முக்குட்டி… உங்க பேரென்ன?” என்றான். 

“எஸ்.அமிர்தவர்ஷினி.” பள்ளியில் சொல்லுவது போல் பிள்ளை இழுத்துச் சொல்ல, 

“தமிழ்ல சொல்லுங்க!” என்றான். 

“சீ.அமிர்தவர்ஷினி!” என்றாள் தெள்ளத்தெளிவாக.‌

அவளைப் பார்த்து, “இந்த ‘சீ’ ங்கறது யாருங்க மேடம்?” என்று குதர்க்கமாக கேட்டவனை கொலைக்காண்டாகப் பார்த்தாள்.

“உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னே வச்சுக்குவோம். ஆனா…” என அடுத்து தொடங்கும்‌ முன், குறுக்கிட்டவள்,

“வச்சுக்கறதென்ன? அதுதான் உண்மையும் கூட !” என்றாள்‌ வெடுக்கென. 

“ஆனா, அமிர்தவர்ஷினிக்கு முன்னால் இருக்குற சீ க்கும், எனக்கும் சம்பந்தம் இருக்குல்ல!”

“அதைச் சொல்லவேண்டியது நான்! நீங்க இல்ல!” பதில் சீறியபடி வர, அதைக் கேட்டவன் முகம் கருத்துச் சிவந்தது கோபத்தில். 

“எம்மேல இருக்குற ஆத்திரத்துல உன்னையே அசிங்கப் படுத்திக்கிற‌ பழனி!”

“இதைவிட அதிகமா அசிங்கப் பட்டாச்சு சார்!”

என்று சொன்னவள் முகம் கருத்து தாடை இறுகியது.

“அதெப்படி பிள்ளைக்கு பேர்கூட பக்காவா, செலக்ட் பண்ணியிருக்க. பழமும், சக்கரையும் கலந்த பஞ்சாமிர்தம் மாதிரி. நான் கூட இந்தளவுக்கு யோசிச்சுருக்க மாட்டேன் ஃப்ரூட்டி!” என்றவன் பிடி இன்னுமே இடையில் தான் பதிந்திருந்தது. தனது பிரம்மையோ என நினைக்கும்படி பிடியின் அழுத்தம் கூட கூடியிருந்தது. அவனது உள்ளங்கையின் வெப்பம் அவளுக்குள் தீயாய்த் தகித்தது‌. உடம்பெல்லாம் எரிவது போலிருக்க, 

“பொறுக்கி… பொறுக்கி…” வாய் தன்னால் முனுமுனுக்க, அதைக் கேட்டவன் இன்னுமே இடையில் அழுத்தத்தை அதிகரிக்க, எதுவும் செய்ய இயலாத நிலையில் கண்கள் கரித்துக் கொண்டுவந்தது. 

“ப்ளீஸ்… கைய எடுங்க சார். அப்பறம் நீங்க எள்ளுங்கறதுக்கு முன்னாடி, நான் எண்ணெயா உருக வேண்டியிருக்கும்! உங்களுக்கு தான், கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்ட்டமாப் போயிரும்!” என்றவள் கண்கள் கலங்கிச் சிவந்து, குரல் தளுதளுக்க, அவள் இடையைச் சுற்றி வளைந்திருந்தவன் வலக்கை, தீயைத் தீண்டியது போல் பட்டென விலகியது. 

அவமானத்தில் முகம் கருத்து சிவந்துவிட்டது அவனுக்கும். “ஃப்ரூட்டி!” தவிப்போடு ஒலித்தவன் குரல், சத்தை இழந்திருந்தது. கலங்கிய கண்களைப் பார்த்தவன் முகமும் கசங்கியது. 

“ப்ளீஸ் சார்! எந்த உரிமையில அப்படிக் கூப்பிடறீங்கன்னு தெரியல. இனிமே அப்படிக் கூப்பிடாதீங்க!” என்றவள் வார்த்தைகள் தன் உயிர்ப்பைத் தொலைத்திருக்க, அவன் தன்னால் விலகி நின்றான். 

வண்டியை முறுக்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு வேகமாகக் கடந்துவிட்டாள். 

இடத்தை மட்டுமே அவளால் கடக்க முடிந்தது. கொந்தளித்து மேலெழும் உணர்வுகளை அல்ல. 

போகாதே போகாதே…

நீ இருந்தால் நான் இருப்பேன்…

போகாதே போகாதே…

நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும்…

கனவாய் என்னை மூடுதடி…

யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது…

உயிரே உயிர் போகுதடி…

1 thought on “முக்கனியும் சக்கரையும் 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top