(முக்கனியும் சக்கரையும் கதையின் தொடர்ச்சி என்பதால் அதில் வரும் சில காட்சிகள் இந்த கதையிலும் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மக்களே! சீனி, பழனி கலியாணத்திற்கு முன்…)
2
“இந்த இடமா இருக்காது இலக்கியா!” என்றார் சந்தேகமாக தன் கண் முன் உயர்ந்து நின்ற அடுக்கு மாடிக் குடியிருப்பை பார்த்து.
“எனக்கும் அதாம்மா சந்தேகமா இருக்கு. ஆனா, லொக்கேஷன் இங்கதாம்மா காமிக்குது. அதான் ஆட்டோக்காரர் இங்க இறக்கிவிட்டாங்க.”
“இது ஏதோ வசதியானவங்க குடியிருக்குற இடம் மாதிரி இருக்கே. இங்கேயா உன் தம்பி வாடகைக்கு இருக்கான்.”
“அதாம்மா எனக்கும் ஒன்னும் புரியல!” என்றவாறே சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள் இலக்கியா.
மகன் சென்னை வந்த பிறகு இவர்கள் இங்கு வருவது இதுதான் முதல் முறை. செங்கல்பட்டிற்கும் சென்னைக்கும் அதிக தூரமில்லை என்றாலும் வரவேண்டிய அவசியமுமில்லாமல் போனதில் இதுதான் இவர்களது முதல் சென்னை விஜயமும் கூட.
இப்பொழுது சென்னை வந்தது கூட அம்மாவிற்கு முழு உடல் பரிசோதனை செய்தே ஆக வேண்டுமென்ற ராகவனது கட்டாயத்தில் தான். அவர்களுக்கு என இருக்கும் ஒரே உறவு. திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதில் பிள்ளைகள் இருவருமே மிகவும் பயந்து விட்டனர். முழு உடல் பரிசோதனை செய்தே ஆகவேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுவிட்டான் ராகவன். எதுக்குடா தண்டச்செலவு என்று கூட கேட்டுப்பார்த்தார். பெண்களைப் பொறுத்தவரை தன் உடல் ஆரோக்கியத்திற்கு செலவு செய்வதெல்லாம் தண்டச்செலவே. இதுவே பிள்ளைகளுக்கு என்றால் கடன் வாங்கியாவது செலவு செய்வது.
அவருக்கு கொஞ்சூண்டு சாமி பக்தி அதிகம். பச்சத்தண்ணி பல்லில் படாமல் 24×7 நாட்களும் விரதம் இருக்கும் அளவிற்குதான். மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும். மகன் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல பதவியில் அமர வேண்டும்.
இரண்டு வேண்டுதலுக்காக விரதம் எனும் பெயரில், வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு கோவிலென முறைவைத்து வயிற்றைக் காயப்போட்டதால் வந்த தலைசுற்றலும் மயக்கமும்தான். கூடவே நாற்பதுகளின் மத்தியில் வரும் மெனோபாஸ் என்ட்ரி கார்ட் போட்டதில் வந்த இரத்த அழுத்த வேறுபாடும்.
மருத்துவர் மருந்துச் சீட்டில் எழுதி கொடுத்ததே மூன்று வேளையும் சத்தான சாப்பாடு என்பதுதான்.
இலக்கியா முதுகலை முடித்து அங்கேயே ஒரு சிறு நர்சரியில் ஆசிரியையாகப் பணிக்குச் சென்று கொண்டிருந்தாலும், அம்மா கைக்குள்ளேயே வளர்ந்தவள். ராகவனும் அப்படித்தான்.
பொம்பளை வளர்ப்பு என சொந்த பந்தங்கள் மத்தியில் ஊருக்குள் ஒரு சொல் வந்து விடக்கூடாது என்பதற்காக பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு தான்.
ராகவனும் சென்னை வந்துதான் வெளி உலக அனுபவத்தையே பார்க்கிறான். அதுவும் அமிர்தா விவகாரம் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்தது எனச் சொல்லலாம்.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என ஒரே சம்பவம் அவனுக்கு இரண்டு விதமான மனிதர்களை அடையாளம் காட்டியது. பிறந்து வளர்ந்த ஊரில் கூட, ஒரு வேளை இவன் செய்திருப்பானோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். இலக்கியாவிற்கு நடக்க இருந்த பெண் பார்க்கும் படலம் கூட இதனால் தடைபட்டது.
ஆனால்… சீனி, மகளுக்கு ஆபத்தான நிலையிலும் தன்னை முழுதாக நம்பியதோடு நில்லாமல், சந்தேகத்தின் பெயரில் என்றாலும், பெண் பிள்ளை விவகாரத்தில் போலிசால் கைது செய்யப்பட்டவனை பள்ளியில் வைத்துக்கொள்ள முடியாதென பள்ளி நிர்வாகம் நாசுக்காக வேலையை விட்டு அனுப்பிய பிறகும், தன்னுடனே வைத்துக் கொண்டதில் சீனி மீது மரியாதையும் தாண்டி, ராகவனுக்குப் பக்தியே வந்தது எனச் சொல்லலாம். ராமனுக்கு லட்சுமணன் என்ற அளவிற்கு பாசம் வைத்தான்.
அம்மாவையும், அக்காவையும் சென்னை வரச்சொல்லி விட்டு, ராகவன் இவர்களுக்கு லொக்கேஷன் அனுப்பி வைத்திருக்க, ஆட்டோக்காரர் அபார்ட்மெண்ட் முன்னால் இறக்கிச் சென்றுவிட்டார்.
அவன் அனுப்பியது சூப்பர் மார்க்கெட்டிற்கான லொக்கேஷன். அபார்ட்மெண்ட்டும், சூப்பர் மார்க்கெட்டும் எதிரெதிரே தானே. லேன்ட் மார்க் *****அபார்ட்மெண்ட் எனப் போட்டிருக்க இடப்பக்கமாக இறக்க வேண்டியவர்களை வலப்பக்கமாக இறக்கிச் சென்றது ஆட்டோ.
இவர்களுக்கோ எங்கு, யாரை விசாரிப்பதென்று ஒன்றும் புரியவில்லை. திக்கு தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றனர் பெண்கள் இருவரும்.
அபார்ட்மெண்ட் வாயிலில் நின்றுகொண்டு உள்ளே போவோர், வருவோரை பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் காவலாளி சந்தேகமாகப் பார்த்தார்.
“உன் தம்பிக்கு ஃபோன் பண்ணு இலக்கியா! நாமதான் இடம்மாறி வந்துட்டோம் போல!” என்றவருக்கும் உள்ளுக்குள் படபடத்தது.
யாரும்மா நீங்க, இங்க எல்லாம் நிக்கக்கூடாதென காவலாளி வந்து விரட்டி விடுவாரோ என்ற பயம்.
இலக்கியா கைபேசியை எடுக்க, “யாரைப் பாக்கணும்!” கேட்டுக் கொண்டே காவலாளியும் அவர்களை நோக்கி வர,
“ராகவனைப் பாக்கணும்!” என்றார் பதட்டத்தை மறைத்துக் கொண்டு.
அமிர்தா சம்பவத்திற்குப் பிறகு ராகவன் அனைவருக்கும் நன்கு பரிட்சயமான முகமாயிற்று. பெரிய விளக்கமெல்லாம் தேவைப்படவில்லை.
“ராகவன் சாருக்கு நீங்க யாரும்மா!” அவர் மரியாதையாகக் கேட்டதிலேயே இருவருக்கும் சற்று தைரியம் பிறந்தது.
“நான் அம்மா… இவ அக்கா!” என்றார் இலக்கியாவை கைகாட்டி.
“உள்ளே போகணும்னா விசிட்டர் பாஸ் இருக்கணும். இல்லைனா ராகவன் சார் ஃபோன் பண்ணி சொல்லணும்மா” என்றவர், அவரே தனது கைபேசியில் ராகவனுக்கு அழைக்க, அழைப்பு எடுக்கப்படவில்லை.
இது இவர்களுக்கு புதிது என்பதால், ஏதோ விசாரணை செய்வது போல் வாயிலில் நிற்கவைத்து விசாரிக்க, மாலை வேளை என்பதால் பள்ளி விட்டு, அலுவலகம் விட்டு உள்ளே வருவோர், போவோர் பார்வை ஏதேச்சையாக என்றாலும் கூட, இவர்களைத் திரும்பிப் பார்த்துச் செல்ல இரு பெண்களுக்கும் அசௌகரியமான உணர்வு.
அவர்கள் சாதாரணமாக பார்த்துச் சென்றால் கூட சந்தேகமாகப் பார்ப்பதுபோல் இருந்தது.
கவிஞர் வைரமுத்து சொல்வார்ல… காக்கா கூட உன்னைக் கவனிக்காது. ஆனால் உலகமே உன்னை உற்று நோக்குவது போல் இருக்கும்னு. அது காதலிப்பவனுக்கு மட்டுமல்ல. முன்ன பின்ன தெரியாத இடத்தில் எங்கு செல்வது, யாரைக் கேட்பது என்று புரியாமல் நிற்பவர்களுக்கும் பொருந்தும்.
மகனைப் பார்ப்பதற்கே, ஏதோ முக்கியஸ்த்தர்களைப் பார்க்க முன் பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் வரிசையில் நிற்பது போல் அவஸ்த்தையாக இருந்தது இருவருக்கும்.
“யார் செக்யூரிட்டி!”
ஏற்கனவே புது இடத்தில் ஒன்றும் புரியாமல் நின்றவளுக்கு, முதுகிற்குப் பின் கேட்ட கணீர் குரலில் விசுக்கெனத் திரும்பினாள் இலக்கியா. இதயம் கூட ஒரு நொடி நின்று துடித்தது. நல்லவேளையாக திரும்பிய பதட்டத்தில் விழுந்து வைக்கவில்லை. அந்தளவிற்கு சந்தோஷம் என நினைத்துக் கொண்டாள்.
இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி, பழனியின் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்தவனது தோற்றம், ஏதோ சிறு பிள்ளைகள் சைக்கிளில் அமர்ந்திருப்பது போலிருந்தது அவனது உயரத்திற்கு. அவனும் அரைக்கால் ட்ரவுசர், டீ சர்ட் எனத்தான் உடையணிந்திருந்தான்.
சிட்டியில இருக்கவங்களுக்கு வெளியே போகணும்னா கூட ட்ரவுசர், சட்டைதான் போல. இலக்கியா அவனது உடையைப் பார்தது எண்ணிக்கொண்டே,
‘ப்பா… இப்படியா பயமுறுத்தறது?’ என்று நினைத்தவளுக்கு அவனது தோரணையே அதுதான் என்று தெரியவில்லை.
“ராகவன் சார் பேர் சொல்றாங்க சார். அவருக்கு ஃபோன் பண்ணேன் எடுக்கல!” என்றார் செக்யூரிட்டி.
எதிர்புறம் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து தான் சாமான்களை வாங்கி கொண்டு வருகிறான் அவனும். மச்சான் தான் ஆகாது. மச்சானின் கடை ஆகும் போல. இருவரையும் தண்டபாணியின் கண்கள் ஒரு கணம் ஆராய்ந்தது. அவனது அக்கா, அம்மாவென கணித்தான்.
இலக்கியாவின் கண்களில் இன்னும் கூட மிரட்சி மிச்சமிருந்தது. இன்னும் கூட படபடப்பு அடங்கவில்லை அவளுக்கு. துப்பட்டாவால் மேலுதட்டை அடிக்கடி துடைத்துக் கொண்டாள்.
இருபதுகளின் இளமையில், வஞ்சகமில்லா வாளிப்பில், இன்னும் துப்பட்டாவிற்கு விடை கொடுக்காத நேர்த்தியான, புளியவிதை வண்ணத்தில் காட்டன் சுடிதாரில் சப்போட்டாபழ நிறத்தில் எம்பிராய்டரியும், அதே வண்ணத்தில் துப்பட்டாவும் போட்டிருந்தாள். தலைக்கு எண்ணெய் வைத்து படிய வாரியிருந்தாள். வாடிய மல்லிச்சரத்தோடு சடை தோளில் ஒருபுறம் தழுவிக் கிடந்தது.
புது நிறத்தில், மாசு மருவற்ற, பொலிவான, கலையான முகம். அந்திசாயும் ஆதவனின் செவ்வொளி பட்டு ஆயில் பெயிண்டிங் போல, நுனி மூக்கோடு சேர்த்து ஒற்றைக்கல் மூக்குத்தியும் மின்னியது.
இந்த இடத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் போல, புது இடத்திற்கான பதட்டம் அவள் மார்போடு கைப்பையை அணைத்து இறுக்கிப் பிடித்திருந்ததிலேயே தெரிந்தது. ராகவன் முகத்தில் தெரியும் அதே வெள்ளந்தித்தனம் அவள் முகத்திலும்.
அவள் அருகே நின்றிருந்தவர் முகத்தில் பஸ், இரயில் என மாறி மாறி வந்ததில் பயணக்களைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அப்போதுதான் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தது தண்டபாணிக்கு நினைவிற்கு வந்தது.
அந்த அவசரத்தில்தானே, அமிர்தா காணாமல் போன அன்று அம்மாவைப் பார்க்க ராகவன் சொல்லாமல் கூட ஊருக்குச் சென்றதும்.
தண்டபாணி, “உள்ளே அலோவ் பண்ணுங்க செக்யூரிட்டி!” என்றான்.
சற்றுத் தயங்கிய காவலாளி, “சார், நம்ம பாப்பா சம்பவத்திற்குப் பின்னாடி ரூல்ஸெல்லாம் ஸ்ட்ரிக்டா ஃபாலோவ் பண்ணச் சொல்லியிருக்காங்க சார்!” என்றார் தலையைச் சொறிந்தபடி.
தண்டபாணியுமே இங்கே, பழனி வீட்டிற்கு வந்த விசிட்டர்தான். அந்தத் தயக்கம் அவருக்கு. அமிர்தா தொலைந்து போன சம்பவத்திற்குப் பிறகு காவலாளிக்கும் கெடுபிடிகள் அதிகம். யார் சொன்னாலும் ரூல்சை மீறக்கூடாது என்பது அசோசியேஷன் எடுத்த முடிவு. தண்டபாணிக்கும் புரிந்தது.
உடனே ராகவனுக்கு அழைத்தான். இவனது அழைப்பை உடனே ஏற்க,
எடுத்தவுடனே, “உனக்கு அறிவிருக்கா!” என உச்சஸ்துதியில் ஆரம்பிக்க, அங்கே அவன் இருக்கையிலிருந்து சட்டென எழுந்து அட்டென்ஷனில் நின்றவன், “சார்!” என்றான் சல்யூட் வைக்காத குறையாக.
“அம்மாவையும் அக்காவையும் வரச்சொன்னா, அழச்சுட்டு வந்து வீட்ல விட்டுப் போக மாட்டியா?” என்று ஏகத்திற்கும் எகிற, இலக்கியா அதிர்ந்து பார்த்தாள்.
இவரென்ன நம்ம தம்பிய இவ்ளோ அதிகாரம் பண்றாங்க என்ற சிறு கோபம் கூட துளிர்த்தது அவளது முகத்தில். புருவம் சுழித்து அவள் பார்த்த பார்வையிலும் அது தெரிந்தது. என் தம்பியை நீ எப்படி அதட்டலாம் என்ற கோபம். அவனோடு பேசிக்கொண்டே அவளது கோபத்தையும் குறித்துக் கொண்டான்.
“இதோ வர்றேன் சார்! நான் இங்கதான் வரச்சொன்னேன். அங்க வந்துட்டாங்களா?” என்று அழைப்பைத் துண்டித்தவன், எதிர் பக்கமிருந்த சூப்பர் மார்க்கெட்டிலிருந்து அவசரமாக சாலை கடந்து ஓடிவந்தான்.
இங்குதானே வருவார்கள். வந்ததும் அபார்ட்மெண்ட் அழைத்துச் செல்லலாம் என எண்ணியிருந்தான்.
வந்தவுடனே அவனும், “உங்கள சூப்பர் மார்க்கெட் தானேக்கா வரச்சொன்னேன். இங்க வந்து நிக்கறீங்க?” இலக்கியாவிடம் அவன் கேள்வி கேட்க,
நம்ம தான் தவறு செய்துவிட்டமோ என்பது போல் அவளும் முழிக்க, ஏனோ அது தண்டபாணிக்குப் பிடிக்கவில்லை.
ஏற்கனவே திருவிழாவில் தொலைந்த பிள்ளைகள் போல் திருதிருவென முழித்துக் கொண்டு நின்றனர் இரு பெண்களும். இதில் இவன் வேறு வந்து அவர்களையே கேள்வி கேட்க,
“நீ ஒழுங்கா விபரம் சொல்லாம அவங்களைத் திட்டுறியா? லேடீஸ்ஸ தனியா வரச்சொன்னா, பத்திரமா வந்துட்டாங்களான்னு பாக்குறதை விட்டுட்டு அப்படி என்னத்த அங்க வெட்டி முறிக்கிற. வீட்ல விட்டுட்டுப் போய் வேலையைப் பாரு. அவன் கூட வந்து சேர்றவிங்களும் அவனை மாதிரித்தான் இருக்கானுங்க. இர்ரெஸ்பான்சிபல் இடியட்ஸ்!” இலவச இணைப்பாக சீனியையையும் திட்டிக்கொண்டே வண்டியை உள்ளே செலுத்த,
“என்னவாம் அவருக்கு!” கேட்டுக்கொண்டே பின்னால் வண்டியில் வந்து நின்றான் சீனி.
திரும்பிப் பார்த்தவன், “பாஸ்! உங்களத் திட்டறதுன்னா நேரிடையாத் திட்ட வேண்டியது தானே? அதென்ன, சாடையா என்னைத் திட்டுற மாதிரி திட்டுறது? நீங்க இர்ரெஸ்பான்சிபில் இடியட்சாம் பாஸ்!” என்று அப்பாவி போல் சொல்ல, சீனி, வாய்விட்டு சிரித்தான்.
“வாங்கம்மா! வாம்மா! உடம்பு பரவாயில்லையா” இருவரையும் வரவேற்று நலம் விசாரித்தான்.
“நல்லாருக்குப்பா. பாப்பா நல்லாருக்காளா?” பதிலுக்கு சுகந்தியும், அமிர்தாவை நலம் விசாரிக்க,
“நல்லாருக்கும்மா!” என்றவன், ராகவனிடம் அழைத்து வரச் சொல்லிவிட்டு வண்டியில் பார்க்கிங் ஏரியா சென்றான்.
நடந்து கொண்டே, “யாரு ராகவா அது?” என்றார் ராகவனின் அம்மா இவனுக்கு முன்னால் திட்டிச்சென்றவனைப் பார்த்து.
“நம்ம சீனி சாரோட மச்சான்மா! ரெண்டு பேரும் இப்படித்தான் அடிக்கடி கொஞ்சிப்பாங்க! உங்க புண்ணியத்துல இன்னைக்கு என்னையும் சேத்துக் கொஞ்சிட்டுப் போறாரு!” என்று சொல்ல, அவன் சொன்ன விதத்தில் தண்டபாணி மீதிருந்த கோபம் மறந்து சட்டென இலக்கியா சிரித்துவிட்டாள்.
விழியோரம் சுருங்க, இதழோரம் ஒற்றை தெற்றுப்பல் தெரிய அவள் சிரித்ததை பார்த்துக் கொண்டே நடந்து வந்தவன் விழியோரம் சிறு ரசனை துளிர் விட்டதுவோ.
சற்றுமுன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவளது பயந்த மருண்ட பார்வையும், இப்பொழுது தம்பி ஏதோ சொல்ல அதைக் கேட்டவள் மலர்ந்து சிரிப்பதையும் பார்த்தவனது முகம் இறுக்கம் தளர்ந்து கனிந்துவிட்டது நொடிப்பொழுதில்.
பிணையோர் மடநீக்கும் நாணம் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து.
பொன்மானைப் போன்ற மருண்ட பார்வையும் நாணமும் அணிகலணாய் இருக்க பொன்னாலான வேறு ஆபரணங்கள் எதற்கு. (சினிமா பாட்டு போட்டா காபி ரைட்ஸ் இஷ்யூ வருது முருகேசா. எதுக்கு வம்பு. இருக்கவே இருக்கார் நம்ம வள்ளுவர் தாத்தா. இரண்டு வரியில அவர் சொல்லாததா?)
“அம்மாவா ராகவா!”
இவர்கள் அபார்ட்மெண்ட் வாயிலில் நின்றிருந்ததைப் பார்த்த ஒருவர் இவர்களை நிறுத்தி வைத்து விசாரிக்க, அவருக்கு அக்காவையும், அம்மாவையும் அறிமுகப்படுத்தி வைத்து பேசிக் கொண்டிருந்தான்.
இவர்களைக் கடந்து சென்ற, சக அபார்மென்ட்வாசி ஒருவனது பார்வை இலக்கியா மீது அழுத்தமாகப் பதிய, அதைப் பார்த்த தண்டபாணியின் முகம் காரணமின்றி சூடேறியது.
சிரித்தவாறே இலக்கியா இவனைத் திரும்பிப் பார்க்க, வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, சாமான்களை இரண்டு கைகளிலும் கனக்க தூக்கி வந்தவன் நடையின் தோரணை விரைப்பாய், இவளை முறைத்துப் பார்க்க காரணம் புரியாமல் புருவம் சுழித்தாள்.
எதுக்கு இந்த முறைப்பு என்றபடி பார்க்க, அவனும் பார்வையை மாற்றாமல் அடமாக முறைத்தபடி வந்தவனுக்கும், யாரோ ஒருவன் இவளைப் பார்த்தால் தனக்கு எதற்கு இந்த கோபமென்று புரியவில்லை.
சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது யாராவது அவர்களைப் பார்த்தால் இப்படித்தான் கோபம் வரும். இங்க என்ன பார்வையென இழுத்து நாலு அப்பு அப்பலாம் என்று தோன்றும். மிலிட்டரி என்று கூட இவனுக்கு பட்டப்பெயர் உண்டு.
அது போலா என்று நினைக்க, இலக்கியா சகோதரி முறையா என்ற கேள்வி எழ, அந்த நினைப்பே ஒவ்வாமையாக இருந்தது அவனுக்கு.
“உடம்பு சரியில்லாதவங்கள இங்கேயே நிக்கவச்சு என்ன பேச்சு. மேலே கூட்டிப்போ!” ராகவனிடம் அதட்டலாகச் சொல்லிச் செல்ல,
‘இவருக்கு என்னதான் ஆச்சு!’ மைன்ட் வாய்ஸ்தான் ராகவனுக்குள்.
அவனுமே தண்டபாணியையே யோசனையாகப் பார்க்க, திரும்பி நின்று இன்னும் போகலையா எனும்படி முறைத்துப் பார்த்தான்.
அதற்குள் இலக்கியாவைப் பார்த்தவன் இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக சைக்கிளிங் என்ற பெயரில் இவர்களை கடந்து சென்றான்.
“சின்ன பிள்ளைக விளையாடிட்டு இருக்காங்கல்ல. சைக்ளிங் போற இடமா இது. ஹைவேஸ்ல போகவேண்டியதுதானே?” அறிமுகமற்றவனிடமும் எகிற, அவனோ வித்தியாசமாகப் பார்த்தான்.
இதற்கு மேலும் இங்கு இவர்களை நிறுத்தி வைத்தால் வந்து அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. என்னமோ ஆயிருச்சு இவருக்கு!’ என்று எண்ணியபடியே இருவரையும் மேலே அழைத்துச் சென்றான் ராகவன்.
லிஃப்ட்டில் ஏறி, வீட்டிற்குள் வந்ததும் சுகந்தி மலைத்துப் போனார். இலக்கியாவும்தான், ஆனால் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
சினிமாவில்தான் இந்த மாதிரி லக்ஷரி ஃப்ளாட் எல்லாம் பார்த்திருக்கிறாள். அது ஏதோ செட் போட்டு எடுப்பார்கள் என்று கூட நினைத்திருக்கிறாள்.
“என்னடா இது. மொழி படத்துல பிரகாஷ்ராஜும், பிரித்திவிராஜும் இருக்க ஃப்ளாட் மாதிரி இருக்கு!” இலக்கியா ரசித்துப் பார்த்து கேட்க,
“வாடகை ரொம்பவாடா?” கவலையாகக் கேட்டார் சுகந்தி. மகனின் மாதச்சம்பளம் முழுவதும் இதற்கே சரியாப் போகுமே என்ற கவலை அவருக்கு.
“நான் கொஞ்சம் தாம்மா கொடுக்கறேன். சீனி சார்தான் முழுசா கொடுக்கறாரு. இதுக்கெல்லாம் கொடுத்து நமக்குக் கட்டுபடியாகுமா? ஏதோ புண்ணியத்துக்கு தங்க வச்சிருக்காங்க!”
உடை மாற்றிவிட்டு அறையை விட்டு வெளியே வந்த சீனி, “டேய்… இப்படியே பஞ்சப்பாட்டு பாடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். மொதல்ல எக்ஸாம் பாஸ்பண்ணு. வட்டியும் முதலுமா வசூல் பண்ணாம விடமாட்டேன். தர்மத்துக்கு எல்லாம் யாரும் உன்னைத் தங்கவைக்கல!” கேலி போல் சொன்னவன், “நாளைக்கு ஹாஸ்பிடல் போக அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டியா?” என்று அக்கறையாக விசாரித்தான்.
“அதெல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வாங்கிட்டேன் பாஸ்” என்றான்.
“நம்ம கார் எடுத்துக்கோடா! ஆட்டோ எல்லாம் வேண்டாம்!” என்றான்.
மகன் நல்லவர்களுடன் தான் சகவாசம் வைத்திருக்கிறான் என சந்தோஷப்பட்டது பெற்ற மனம். தண்டபாணி கூட இவனை அதட்டினானே ஒழிய, அதில் ராகவனின் கவனமின்மையைத்தானே கடிந்தான்.
வந்தவர்கள் அப்படியே நிற்க, “ஃப்ரெஷ்ஷாகிட்டு வாங்கம்மா… ஆச்சி, உங்களை அங்கே கூட்டி வரச்சொன்னாங்க” என்றான்.
தண்டபாணி சென்று ராகவன் அக்காவும், அம்மாவும் வந்திருப்பதாகச் சொல்ல, அய்யம்மா சீனிக்கு ஃபோன் செய்து, இரவு சாப்பாட்டிற்கு அவர்களையும் அழைத்து வரச்சொன்னார் .
“எதுக்குப்பா சிரமம். ஏதாவது நாங்களே ரெடி பண்ணிக்கறோம்!” சுகந்தி சங்கோஜமாக மறுக்க,
“நாளைக்கு பாத்துக்கலாம்மா. இப்போதான் வந்திருக்கீங்க. டயர்டா இருக்கும். இன்னைக்கி அங்க வாங்க!” சீனியும் அழைக்க, மறுக்கமுடியாமல் சரி என்றனர்.

சரி தான். பாத்ததும் கவுந்துட்டாரு தண்டபானி .
😂😂😂 அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
இலக்கியா தண்டபாணி அறிமுகம்
அட்டகாசம்.
😲😲😲😲😲
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
வள்ளுவன் மிஞ்சிய கவியா. இலக்கியா அழகு.
அதானே… அவர் சொல்லாததையா மத்தவங்க பாட்டுல சொல்லிறப்போறாங்க
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Super super super
♥️♥️♥️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
பார்றா இப்போவே பொஸசிவ் வந்திடுச்சு 🤩🤩🤩
இனி சீனியை விட உன்னை தான் அதிகமா கொஞ்சுவாராம் நம்ம தண்டபாணி உன் மேல தான் அதிக லவ்ஸாம் ராகவா 🤣🤣🤣
😂😂😂 thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫