மதன மாளிகையில் 32

32

மதனின் மாளிகையில் இன்று…

பிள்ளைகளை தொட்டிலில் போட்டு‌ பெயர் சூட்டும் விழா.

அட ஆமாங்க… ஆமா! பிள்ளைகளேதான். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று! 

“எப்புர்றா? எல்லாத்துலயும் கஞ்சனா‌ இருக்கிறவன், இதுல மட்டும் தாராள பிரபுவா இருந்திருக்கான்?” 

“ஒரே கல்லுல மூனு தேங்கா!”

“மாங்கா தானேடா!”

“அது மாந்தோப்புக்காரனுக்கு. நம்ம பங்குதான்‌ தென்னந்தோப்புக்காரனாச்சே. ஆளுக்குத் தகுந்த மாதிரி பழமொழிய மாத்தணும்ல!” 

“ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட்ல பலமடங்கு லாபம் எடுக்கறது எப்படின்னு மாப்ளகிட்டத்தான்டா கத்துக்கணும்!” ஜெகனும் அவர்களோடு‌ சேர்ந்து கேலி பேசி மதனை சிவக்க வைத்தான்.

சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு, இனிமேல் இங்குதான் என்று மதன் சொன்ன பிறகு, பெரியநாயகியும் மறுத்துப் பேசவில்லை. இத்தனை நாட்களாக மகனைவிட்டு எப்படிப் பேரனோடு வந்திருப்பது என்று யோசித்தவர், கொள்ளுப்பேரன் வரும்‌ செய்தியறிந்து மகன் இரண்டாம் பட்சம் ஆகிவிட்டார்.‌ 

“நம்ம வீட்டு வாரிசு. இந்த வீட்லதான் ஓடியாடி விளையாடணும். எம்பேரன் அங்க வரமாட்டான். நானும் வரமாட்டேன். நீங்களும் இங்க வர்ற வழியைப் பாருங்க! ஏதோ போறாத காலம். வனவாசம் மாதிரி இத்தனை வருஷமா அங்க இருந்தாச்சு. எம் புருஷன் வீட்லதான் என்னோட தலைசாயணும்.‌ நான் உசுரோட இருக்குற வரைக்குமே இந்தவீடு அவனுக்குமில்ல, உங்களுக்குமில்ல பொதுவீடுதான். என் கண்ணடைஞ்ச பின்னாடி யாரு வேணா எங்கவேணா இருந்துக்கோங்க! நானென்ன முழிச்சா பாக்கப் போறேன்!” வீட்டிற்கு மூத்தவர் என்ற அதிகாரத்தை தடாலடியாக அமல்படுத்தினார்‌ பெரியநாயகி. எல்லாம் கொள்ளுப்பேரன் வரவு செய்யும் மாயாஜாலம். அப்பத்தா போட்ட போட்டிற்கு மனதிற்குள் சபாஷ் போட்டான் பேரன்.

தனசேகருக்கும் அம்மாவை மறுத்துப் பேசும் எண்ணமில்லை. மகன் இறந்தபிறகு, மனைவியின் மனமாற்றத்திற்காகத்தானே இடமாற்றமே. ஆனால் பெற்றபிள்ளை நினைவு எத்தனை‌ ஆண்டுகள் சென்றாலும் விட்டுப்‌ போகாதென்பதைத்தான் கண்கூடாகப் பார்த்தாயிற்றே. 

நடந்த சம்பவங்கள் வாசுகிக்கு ஒன்றை மட்டும் உணர்த்தியது. பெரியமகன்‌ ஆத்மா நிறைந்திருப்பது இங்குதான், அது தன்னைத் தேடுகிறதென்பது. 

மறுப்பேதும் சொல்லவில்லை. சிறிது நாட்களிலேயே தனசேகரனோடு‌ மீண்டும் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்தார்.‌

சீதாலட்சுமிக்கும், பவித்ராவிற்கும் மதனைப் பிரிவது வருத்தம்தான். ஆனால் நிதர்சனம் இதுதானே. 

ஜெகன், “ஹைய்… ஜாலி! இனிமே பொண்டாட்டி அடிச்சா, கோவிச்சுக்கிட்டு இங்க வந்துறலாம். ரெண்டு மாமியா‌ வீடிருக்கறது எம்பூட்டு சௌகர்யம்!” வெளிப்பார்வைக்கு கேலி பேசினாலும்‌ அவனுக்கும் இத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்துவிட்டு, இப்பொழுது பிரிவது வருத்தமாகத்தான் இருந்தது. 

ஜெகன் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து தங்கியது வேறு கதை. சீதாலட்சுமிக்கு பவித்ரா தவிர வேறு ஆண்வாரிசு இல்லை என்பதால்தான். ஒரு மச்சான் இருந்திருந்தால் அவனும் கௌரவம் பார்த்து, வீட்டோடு மாப்பிள்ளையாக வந்திருக்கமாட்டான்தானே. அவனுக்காவது பவிக்கும் பிறந்த வீடு என்ற உரிமையுண்டு.

ஆனால், மதனுக்கு அப்படி எந்த உரிமையும் இங்கு இல்லை. அப்பத்தாவிற்குப் பிறந்த வீடு என்பதைத்தவிர. 

மதனும்‌ பாசத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் இங்கிருந்தான்.  அடுத்த தலைமுறை உருவானபிறகு அது முடியாது. 

தோள் உரசும் நெருக்கத்தில் இருப்பதை விட, கை தொடும் இடைவெளியில் இருப்பதுதான் உறவுகளை இழுத்துப் பிடித்து வைக்கும். 

அடுத்த செக்கப் சென்றவர்கள், மூன்று கரு என்று ஸ்கேனிங்கில் தெரியவர, அனைவருக்குமே மகிழ்ச்சி மும்மடங்காகப்‌ பெருகியது.

“எப்படிங்க அம்மணி… நம்ம கணக்கு?” என்று தனிமையில் மனைவியை கைக்குள் அடக்கி மீசை முறுக்கினான்.

“ஆமாமா… ஒவ்வொன்னும் முப்பது முட்டைக்குச் சமம். ஆக மொத்தம் தொண்ணூறு முட்டை. தேப்புக்காரர் கணக்குத் தப்பல” மனைவியின் சீண்டலில் இப்பொழுதும் அவன் முகம்தான் சிவந்துவிட்டது. . 

அடுத்தடுத்து செக்கப், வளைகாப்பு, பிரசவம் என நேரமும்,‌ காலமும் றெக்கை கட்டிப்‌பறந்தன. மூன்று குழந்தைகள் எனத் தெரிந்து மிகவும் கவனம் செலுத்தப்பட்டது. 

ஜெகனின் செகன்ட ப்ராஜெக்ட்டிற்கான ரிசல்ட்டும் வந்தது. பவித்ராவிற்கும் அடுத்ததாக ஆண் குழந்தை. சீதாலட்சுமிக்கு ஒத்தாசை செய்ய பரிமளம்‌ வந்துவிட்டார். 

மாதங்கிக்கு வளைகாப்பு முடிந்து பேருக்குதான் பிறந்து வீடு அனுப்பி வைத்தனர். மூன்று குழந்தைகள் என்பதால் பிரசவம் சி செக்ஷன் என்று முன்பே சொல்லிவிட, வலி வரும்வரை எதிர்பார்க்கவில்லை. குறிப்பிட்ட தேதி வந்ததும் அறுவைசிகிச்சை மூலம் குழந்தைகளை எடுத்துவிட்டனர். எடை குறைவு என்பதைத்தவிர வேறு எந்த ஆரோக்கியக் குறைபாடும் இல்லை. 

இருந்தாலும் குழந்தைகள் சத்துப் பிடிக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என குடும்பக் கட்டுபாடு செய்யவில்லை.‌ பதினைந்து நாட்கள் வரை மருத்துவமனையிலேயே, குழந்தைகளை கண்காணிப்பில்  வைத்து, ஓரளவிற்கு எடை‌தேறிய பிறகே வீட்டிற்கு அழைத்து வந்தனர். 

பூங்கோதையால் தனித்துப் பார்க்கமுடியாதெனத் தெரியும். ஆனாலும் வேலைக்கு ஆள் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, அழைத்துச் சென்று முப்பது நாள் கணக்கிற்கு தான் அனுப்பி வைத்தார்.‌ 

இங்கு தோப்பு வீட்டில் ஆளுக்கொரு கை வைத்தியம், ஆளாளுக்கு ராஜ கவனிப்பு என இருந்தாலும், எப்பொழுதும் ஒரு நாயனம் ஊதிக்கொண்டே இது கைக்குழந்தை இருக்கும் வீடாக்கும் என சொல்லாமல் சொல்லியது. ஏதாவது ஒன்று அழுது, தூங்கும் மற்ற இரண்டையும் எழுப்பி விட்டுவிட, வீட்டினருக்குத் தூக்கம் என்பதே மறந்து போயிற்று. 

குழந்தைகள் சிறியதாக இருந்ததாலும், சி செக்ஷன்‌ என்பதால் மாதங்கியும் உடல் தேறவேண்டும் என்பதாலும் மூன்று மாதங்கள் கழிந்த பிறகே பெயர் சூட்டும் விழா. மதனின் மாளிகை விழாக்கோலம் பூண்டது. 

காலையிலேயே சுப்பாத்தாவைத் துணைக்கு வைத்துக் கொண்டு மூன்று குழந்தைகளையும் குளிக்க வைத்து தயார் செய்யும் வேலையில் பிஸியாகிவிட்டனர் பெரியநாயகியும், வாசுகியும்.  

“மேகி… ரெடியா?” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே‌ வர, கண்ணாடி‌ முன் நின்று புடவை‌ கட்டியவள் படக்கென முதுகு காட்டித் திரும்பிக் கொண்டாள். 

“இப்ப எதுக்கு இவ்ளோ ஹெவியா புடவை கட்டுற? வெய்ட்லெஸ்ஸா ஏதாவது சிம்ப்ளா கட்டலாம்ல?” என்றான்‌ அவள் கட்டும் புடவையைப் பார்த்துக் கொண்டே. இந்தப் புடவை சென்ற மாதம் வந்த, முதல் திருமண நாளிற்கு அவன் ஆசையாக எடுத்துக் கொடுத்ததுதான். அப்பொழுது வயிறு அழுத்த கட்டமுடியவில்லை. அதனால்தான் இன்று கட்டலாமென எடுத்தாள்.  

“நீங்க வெளில போங்க. நான் கட்டிட்டு வர்றேன்!” என்றாள்‌ திரும்பாமலே. 

“பார்றா‌ புதுசா எம்பொண்டாட்டி வெக்கமெல்லாம் படுறா! இந்தப்பக்கம் திரும்பு மதி.‌ மடிப்பு சரி பண்ணி விடுறேன்.‌ உன்னால குனிய முடியாது! பிடி இடை இப்ப பிடி(பெண்‌யானை) இடை‌ ஆயிருச்சுடீ!” காளமேகப் புலவர் என்ற நினைப்பில் சிலேடையாகப் பகடி செய்ய, ஏனோ கண்கள் அவளையும் மீறி சிவந்துவிட்டது. சட்டென கண்களைச் சிமிட்டி தன்னை சரிசெய்துகொண்டாள்.‌

“அதெல்லாம் நான் சரி பண்ணிக்கிறேன். நீங்க வெளியே போங்க!” சுள்ளென விழுந்தாள். அவனும் சிறிது நாட்களாக கவனித்துக் கொண்டுதானே இருக்கிறான். அவள் குரலில் இருந்த பேதம் துள்ளியமாகத் தெரிந்தது. 

“மதி… திரும்பு!” என்றான் அழுத்தமான குரலில். 

“இப்ப என்ன? இதைக் கட்டவா வேணாமா?” என்று‌  எரிச்சலோடு திரும்பினாள்.

“இப்ப என்ன சொல்லிட்டேன். தையல் போட்டது அழுத்தும். மெல்லிசா ஏதாவது கட்டலாம்லனு தானே சொன்னேன்!” 

“ஆமாமா… இனிமே ஆசைப்பட்டதெல்லாம் போடவா ‌முடியும்?” வாய்க்குள் முணங்கியவள், வேகமாக உருவி எரிந்துவிட்டு, அதிகம் உருத்தாத புடவை ஒன்றை எடுத்து ஏனோதானோவென சுற்றிக்கொண்டு வெளியேறிவிட்டாள். 

அதுவும் குளியலறைக்குள் சென்று. மூன்றாம்‌ மனிதர் இருப்பது போல் அவள்‌ குளியலறை சென்று மாற்றி வந்தது அவன்‌ முகத்தில் அறைந்தது போல் இருந்தது. அவன்‌ முன் எத்தனை‌‌ முறை‌ புடவை மாற்றியிருக்கிறாள். இவனும் அவளைச் சீண்டி சிவக்க வைத்திருக்கிறான். அவனுக்குத் தெரியாத ரகசியம் அவளிடம் ஏது.

அவளது உடை‌ அலங்காரம் அவனுக்கு நன்றாகத் தெரியும்.‌ அதிக மெனக்கெடல் இல்லையென்றாலும், சுடிதாரோ, புடவையோ அதில் ஒரு நாசுக்கு இருக்கும். உடைக்குத் தகுந்த அலங்காரம் இருக்கும். ஆனால், கடனே என அவள் உடை மாற்றிச் சென்றது அவனை யோசிக்க வைத்தது. அதுவும் எவ்வளவு சந்தோஷமான‌ நாள் இன்று. முத்து முத்தாக மூன்று குழந்தைகள். அவர்களுக்கு பெயர் சூட்டும் விழா. அதற்குரிய முகாந்திரம் அவளிடம் துளியும் இல்லை. 

மூன்று‌ குழந்தைகள்… சரியான தூக்கமின்மை, அறுவை சிகிச்சை செய்த உடம்பு என எப்பொழுதும் சிடுசிடுவென இருப்பதாகவே பட்டது. 

ஒரு நேரம் நன்றாக சிரித்துப் பேசுபவள், அடுத்த நிமிடம் ஏதோ சிந்தனையில் அமைதியாகி விடுவாள்.‌ பல நேரங்களில் அவளையும் மீறி கண் சிவந்து கூடப் பார்த்திருக்கிறான்.‌ என்னவாக இருக்கும் என மண்டைக்குள் வண்டாய் குடைந்தது.‌

இந்த முறை தடுப்பூசி போட குழந்தைகளை மருத்துவமனை அழைத்துச் சென்ற பொழுதுகூட, இவனை வெளியே அனுப்பிவிட்டுத் தனியாக மருத்துவரிடம் ஏதோ விசாரித்து வந்தாள். இவனும் என்னவென்று‌ கேட்டுக்கொள்ளவில்லை. ஏதாவது பிள்ளைகள் சம்பந்தமாகவோ, அவளுக்கே வேறு ஏதாவது சந்தேகம் வந்திருக்கலாம். நம்ம முன்னாடி எப்படிக் கேட்பதென்று ‌சங்கோஜமாகத் தனியே கேட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். 

ஆனால், இன்று இவளின் நடவடிக்கை அவனுக்கு சந்தேகத்தை விளைவித்தது. அதற்குள் சொந்த பந்தங்கள் வந்துவிட விசேஷத்தின் பக்கம் கவனம் சென்றது. 

“என்னக்கா, ஸாரி இப்படிக் கட்டியிருக்க. ஒரே பிரசவத்துல கெழவி மாதிரி ஆயிட்ட போ!” வந்ததும் வராததுமாக தங்கையின் கேலியில் முகம் சுண்டிப்போயிற்று மாதங்கிக்கு. 

“இப்ப என்னடீ! நீ மட்டும் குமரியாவே இருக்கப் போறீயா? நாளைக்கி நீயும் இப்படித்தான்!” தங்கை மீது வள்ளென விழுந்தாள். ராகினி முகம் வாடிப்போயிற்று. 

எப்படிக் கேலி செய்தாலும் அலட்டிக் கொள்பவளில்லை மாதங்கி. என்னைப் பற்றி எனக்குத் தெரியும் என்று அசராமல் திருப்பிக் கொடுப்பாள். அக்காவிற்கு என்னாயிற்று என்று சந்தேகமாகப் பார்க்க, மதன் பார்வையும் அதைத்தான் யோசித்தது. 

சட்டென அடுத்த நிமிடம், “சாரி ராகி” என்றாள். சகஜமாக வந்தவர்களை வரவேற்றாள். அவளது செய்கை விந்தையாகத் தோன்றியது. 

குழந்தைகளைத் தொட்டிலில் போட்டு, பெயர்கள் எழுதிய லிஸ்ட்டை மதன் வாசுகியிடமே கொடுத்தான். 

முதல் குழந்தையின் பெயர் அருண் கைலாஷ். குனிந்து குழந்தையின் காதில் சொல்லும் பொழுதே கண்கள் கலங்கிவிட்டது அவருக்கு. குழந்தையை அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். 

அடுத்து பெரியநாயகியிடம் கொடுக்க, இரண்டாவது பெயர்‌ புவனகைலாஷ் என காதில் சொன்னார். 

மூன்றாவதாக பூங்கோதை குழந்தையின்‌ காதருகே பத்ரி கைலாஷ் என மும்முறை சொல்லி விழாவை நிறைவு செய்தார். 

இவனுக்கு வரிசையா பொம்பளப் புள்ளதான்டா பொறக்கணும் என்ற நண்பர்கள் வேண்டுதல் பழிக்கவில்லை. மூன்றும் ஆண் குழந்தைகள். 

“என்ன நங்கையாரே! என் மகனுக்கு ஒரு‌ பொண்ணு பெத்துக்கொடுப்பீங்கணு பாத்தா மூனும் பையனா போச்சே” பவித்ராவும் சந்தோஷமாக அலுத்துக் கொண்டாள். 

விருந்தோடு விழா நிறைவடைய, வந்தவர்கள் கிளம்ப, வீட்டார் மட்டுமே.‌ கிளம்பும் முன் ராகினி மாமனைப்‌ பார்த்து தனியாகப் பேசிச் சென்றாள். “நான் பாத்துக்கிறேன் ராகினி. நீ கவலைப்படாதே!” என்று அனுப்பி வைத்தான்.

பெரியநாயகி, “இனி நிம்மதியா கண்ணை மூடுவேன்டா” என்றார் ஆசுவாசமாக சோஃபாவில் அமர்ந்து கொண்டு. 

வழக்கம் போல் வந்து ஒய்யாரமாக மடியில் படுத்தவன், “ஏன் பெரியநாயகி… அதுக்குள்ள என்ன அவசரம். இன்னும்‌ எம்புட்டோ நீ பாக்க வேண்டியிருக்கு. நான் இன்னும் கொஞ்ச நாள் ரம்பா, ஊர்வசி, மேனகையோட சாலியா டூயட் பாடிக்கிறேனே.‌ நீ மெதுவா வா!” தாத்தன்‌ குரலில் பேசி அப்பத்தாவை கேலி செய்ய, அந்த இடமே கலகலத்தது. 

“போடா படவா!” என்று வழக்கம்போல் தோளில் அடித்தார்.  

அடுத்த முறை குழந்தைகளை தடுப்பூசி போட அழைத்துச் சென்ற பொழுது இவன்‌ தனியாக மருத்துவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான்.‌ வெளியே வரும் பொழுதே முகம் ஜிவுஜிவுத்திருந்தது. 

வீடு வரும்வரை அவளிடம் எதுவும் பேசவில்லை. வீடு வந்தும் குழந்தைகளை பெரியநாயகியிடமும், வாசுகியிடமும் கொடுத்துவிட்டு, “அப்பத்தா… அவ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்களே பாத்துக்கோங்க!” என்று சொல்லிச் சென்றவனை சந்தேகமாகப் பார்த்தாள். 

எப்பொழுதும் அவர்கள்தான் பார்த்துக் கொள்வது. தாய்ப்பால் கூட அவ்வப்பொழுதுதான். மூன்று குழந்தைகள் என்பதால் மாட்டுப் பால் பழக்கியாயிற்று. ஒரு மாட்டுப்பால்தான் நல்லதென்று பட்டம்மா வாரிசு ஒன்று,‌ குழந்தைகள் பிறந்ததும் இங்கே வந்துவிட்டது. 

அன்று இரவு,‌ தூங்கும் முன் குழந்தைகளை வாங்கி வரச் சென்றவளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்றான். வாசுகி, பெரியநாயகி மற்றும் இவர்கள் அறையென மூன்று அறைகளிலும் தொட்டில் கட்டியிருக்கும். 

“பகல்ல வேணா அவங்ககிட்ட இருக்கட்டும். நைட்டு நம்மகூடத்தான் இருக்கணும்!” என்றவளை ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தம் புரியாமல் பார்க்க,

“ஏன், குழந்தைகள் இல்லைனா உம்மேல பாஞ்சுருவேனா” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்க, 

“என்னங்க!” என்றவள் குரல் பதறியது. 

“நீ நடந்துக்கறது அப்படித்தானே இருக்கு. என் முன்னாடி சேலை கட்டக்கூட யோசிக்கறியே!” என்றவுடன் அதிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் கடகடவென கண்ணீரை சொறிந்தன. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள். 

“அப்படியெல்லாம் இல்லீங்க!” என்றவள் குரல் விம்மியது அழுகையில். 

“அப்போ என்னைப் பார்த்தும் திரும்பிக்கறதுக்கு என்ன அர்த்தம்” எனக் கேட்க அமைதியாக தரையைப் பார்த்தாள். 

“எனக்குப் பயமா இருக்கு மதி. உனக்கிருக்கிற அழுத்தத்துல, எங்கே பிள்ளைகளை ஏதாவது பண்ணிருவியோன்னு பயந்து வருதுடீ!” என்றவன் தொண்டை அடைத்தது.

“என்னங்க, இப்படியெல்லாம் பேசுறீங்க‌? பெத்த அம்மாவே பிள்ளைகள ஏதாவது பண்ணுவாங்…” என்றவள் வாக்கியம், அவன் வலிதாங்கிய முகத்தைப் பார்த்ததும், விக்கித்து அப்படியே நின்றுவிட்டது. 

‘ஏன்… எங்க அம்மா இல்லை!’ என்று கேட்காமல் கேட்டது அவனது அடிபட்ட பார்வை. 

“ஏன் மதி! என்னை அவ்வளவு மட்டமா நெனச்சுட்டயில்ல? அழகு குறஞ்சுட்டா உன்னை விட்டுருவேன்னு நெனச்சுட்டல்ல!”

“அப்படியெல்லாம் இல்லீங்க?” என்றவள் குரல் நடுங்கியது.‌ அவன் சரியாக தன்னை கணித்துவிட்டதை உணர்ந்தாள். எத்தனை நாள் அழுத்தம் இது. அவன் கேட்டவுடன் வெடித்து விட்டது.

“எனக்கே என்னைப் பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு‌ங்க. இனி வாழ்நாள் முழுக்க அது மாறாது. நீங்க எப்படி சகிச்சுக்கிட்டு…” என்றவள் அழுகை அந்த அறையை நிறைத்தது.‌ கைகளைக் கட்டிக் கொண்டு இறுக்கமாகவே நின்றான்.‌ 

“போதும் மதி! இதுக்கு மேல இதப்பத்திப் பேசாதே! எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. அப்போ… எம்மேல நீ வச்சிருக்குற நம்பிக்கை இவ்வளவுதானா? வயித்துல ஒரு தழும்பு விழுந்துட்டா உம்மேல இருக்குற ஆசை போயிறுமா. எனக்கும்தான் கத்தி கிழிச்ச தழும்பு அசிங்கமா நீளமா இருக்கு. அப்ப நீயும் என்னைவிட்டுப் போயிருவியா?” என்றவன் வார்த்தைகளில் அத்தனை ஆற்றாமை. ஓடி வந்து அவனை இறுக்கக் கட்டிக் கொண்டவள்‌ வெடித்து அழுதாள். அழுகை போல் ஒரு விஷயம் மனக்கசடுகளைக் கழுவ முடியாது. அழட்டும் என விட்டு விட்டான்.

பூங்கோதையின் மருத்துவம், அதைத்தொடர்ந்து மதனுக்கு நேர்ந்த விபத்து, அதையடுத்து மசக்கை, மூன்று‌ குழந்தைகள் எனத் தெரிந்து பயந்து விலகியே இருந்தது, அடுத்து பிரசவம் என ஆக மொத்தம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இருவரும் கூடிக்கழித்த நாட்கள் என்பது மிகவும் சொற்ப நாட்களே. தேனிலவு காலகட்டத்தில் இருவருக்குமான புரிதல், உடல் தேவைகளைத் தாண்டி எந்தளவிற்கு இருந்திருக்கும். 

இப்பொழுது தன் உடம்பைப் பார்க்க, வாழையிலை போல் இருந்த தட்டை வயிற்றில், பிரசவத் தழும்புகள், சுருங்கிப்போன தோல், குறுக்காகப் பிரித்த ஆழமான தையல், உப்பிப் போன அடிதொப்பையென அவளுக்கே பார்க்க, ஒரு‌ மாதிரியாக இருந்தது. 

தன்னில் மயங்கி, முயங்கிய தருணங்களில், அவன் ஆசையாக ரசித்து வர்ணித்த எதுவும் இப்பொழுது தன்னிடம் இல்லை. இனி வாழ்நாள் முழுமைக்கும் இப்படித்தானே. தன் தோற்றம் முன்பு போல் இல்லை எனும் போஸ்ட்பார்டம் பாடி டிஸ்ஸாடிஃபாக்ஷன் (Postpartum Body Dissatisfaction) எனும், பிரசவத்திற்கு பிறகு தன் தோற்றம் குறித்து வரும் மன அழுத்தத் தாக்குதலுக்குள்ளாகியிருந்தாள்‌ மாதங்கி. ஆரம்பத்தில் இருந்தது போல் தன் மீது விருப்பம் இப்பொழுதும் இருக்குமா என்ற‌ எண்ணம் ஆழமாக வேரூன்றி‌ அவளை வெகுவாக அலைக்கழித்தது. 

பிரசவ காலத்திற்கு முன், பின் மன அழுத்தம் என்பது பொதுவான ஒன்றுதான். ஆனால் அழுத்தத்திற்கான அளவீடுகள் மாறும் பொழுது விளைவுகளும் விபரீதமாக இருக்கும். எத்தனை செய்திகள் கேள்விப்படுகிறோம். இதற்கெல்லாம் காரணம் குழந்தைகள் தானே என்ற வன்மம் குழந்தைகள் மீது படிந்துவிட்டால். 

அழுது முடிக்கட்டும் எனக் காத்திருந்தவன், அவளிடமிருந்து மெலிதாக விம்மல் மட்டும் வர, முகத்தை நிமிர்த்தி கண்களைத் துடைத்துவிட்டான். 

“எனக்கு உன்னை இப்படிப் பாக்கயிலதான்டீ ரொம்பப் புடிச்சிருக்கு. என்னோட மேகியா தலை சீவி, பூவச்சுக் காத்திட்டிருந்ததைவிட, நம்ம பிள்ளைகளுக்கு அம்மாவா தலைசீவி, பொட்டுவைக்கக்கூட நேரமில்லாம, மடியில பிள்ளையைப் போட்டு, பால் குடுத்திட்டிருக்கப்பதான்டீ இன்னும் நீ ரொம்ப அழகா இருக்க. அந்தப் பால் வாசம், நீ எந்தப் பூ வச்சாலும் அதுக்கிணையாகாது. அந்தத் தழும்பெல்லாம், நம்ம பிள்ளைகள உயிரோட, இந்த உலகத்துக்குக் கொண்டுவர நீ உன் உயிரையே பணயம் வச்சதை நினைவுப் படுத்துற தழும்புகள் மதி. அது எப்படி எனக்கு அருவருப்பா தெரியும் சொல்லு!” என்று கேட்க மீண்டும் விம்மல் வெடித்தது அவளிடம். 

அவளும் பிரசவகாலத்தை மிகவும் ஆர்வமும், ஆசையாகவும்‌தான் அனுபவித்தாள். அதுவும் மூன்று குழந்தைகள் எனத் தெரிந்தபிறகு அவளைத் தரையில் கூட விடவில்லை குடும்பத்தார். தங்கத்தட்டில் வைத்து தாங்காத குறை என்று வார்த்தைக்கு சொல்வதுண்டு. ஆனால், அப்படித்தான் நடத்தினர் தோப்பிற்கு வேலைக்கு வருவோர் முதற்கொண்டு. வாராவாரம் ஏதாவது செய்து எடுத்து வந்துவிடுவார் பூங்கோதையும். 

பிரசவம் முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகுதான் அவளுக்குள் இத்தனை உளப்போராட்டம். மூன்று பிள்ளைகளின் மும்முனைத் தாக்குதலில் தன்னைப் பற்றிய சிந்தனை துளியும் இன்றி இருந்தவளை,

“இவளும் ஆத்தாளை மாதிரியே வயித்தக் கிழிச்சு எடுத்திருக்கா. இந்த வயசுலயே ஊதி ஒலச்சுப் போகப்போறா. சுகப்பிரசவமா இருந்தாக்கூட வயித்துக்கு தண்ணியடிக்கலாம். இல்லைனா இறுக்கித் துணியைக் கட்டலாம். தையல் போட்ட வயித்துல ஒன்னும் பண்ண முடியாது” என்று ஜெகதாம்பாள் அங்கலாய்க்க, அப்பொழுது ஆரம்பித்தது அவளுக்குள் தன் தோற்றம் பற்றிய மனப்போராட்டம். 

தூக்கமின்மையும், பிரசவத்திற்கு பின் ஏற்படும் சத்துக் குறைபாட்டால் கண்களைச் சுற்றி கருவளையம், பொலிவிழந்த முகம் என அவளையே உற்று உற்று‌ கவனிக்க இன்னும் அழுத்தம் அதிகமானது. மூன்றாம் மாதத்திலிருந்து முடியும் வேரோடு கொட்ட ஆரம்பிக்க, கண்ணாடி பார்ப்பதையே கூடத் தவிர்த்துவிட்டாள்.‌

“எங்கம்மாவ நான் ஸ்லிம்மா கல்யாண ஃபேட்டோலதான் பாத்திருக்கேன். அப்பாவை விட ரொம்ப அழகா எங்கம்மாதான் இருப்பாங்க. ஆனா, எனக்கு விபரம் தெரிஞ்சு எங்கம்மாவை நான் அப்படிப் பாக்கல. நான் பிறந்ததே ஆப்ரேஷன்றதால அப்பவே வெயிட் போட்டாங்க. அடுத்தடுத்து மூனும் ஆப்ரேஷன். போதாக்குறைக்கு இப்ப நடந்த யூட்ரஸ் ரிமூவ் பண்ணதுவேற. இதுக்கு மேல இடமில்லைங்தற மாதிரி அத்தனை தழும்பு எங்கம்மா வயித்துல. எங்கம்மாவை எனக்கு விபரம் தெரிஞ்சு எங்கப்பா எங்கேயும்  வெளில அழச்சுட்டுப் போக மாட்டாரு. அவரு நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணி கிளம்பினா அம்மா அவரு பக்கத்துல அக்கா மாதிரி இருப்பாங்க. அதனாலேயே எங்கம்மாவும் அவருகூட கிளம்பமாட்டாங்க. எங்க அப்பத்தாவும் இதையே சொல்லி சொல்லி காட்டுவாங்க. எனக்கும் அந்தப் பயம் வந்திருச்சு!” என்றவள் அவன் முகம் பார்க்க, இறுகிப் போய் அமர்ந்திருந்தான். அவன் முகம் பார்க்க அவளுக்குள் பயப்பந்து சுழன்றது. 

“என்னங்க… ஏதாவது பேசுங்க. நீங்க அமைதியா இருக்குறதைப் பாத்தா எனக்குப் பயமா இருக்கு!” என்றவள் குரல் கமறியது. 

அவனுக்கு அவன் அம்மாவின் நினைவு வந்துவிட்டது. அவருக்கும் வெளியிட முடியாத ஏதோ ஒரு‌ அழுத்தம் தானே கொலை மற்றும் தற்கொலை முயற்சி வரை கொண்டு சென்றது.

“ஏன் மதி! அப்படி இருக்குறதால உங்க அம்மாவை உனக்கு புடிக்காமப் போயிருச்சா?”

“அதெப்படிங்க! அம்மா எப்படியிருந்தாலும் எல்லாருக்கும் பிடிக்கும் தானே? இதுக்கு ஒரு கதை கூட சொல்வாங்க. திருவிழாவுல தொலைஞ்சு போயி அழுதிட்டிருந்த குழந்தைகிட்ட, உங்கம்மா எப்படியிருப்பாங்கணு அடையாளம்‌ சொல்லுணு கேட்டாங்கலாம். அதுக்கு அந்தக் குழந்தை எங்கம்மா எல்லாரையும் விட ரொம்ப அழகா இருப்பாங்கனு சொல்லுச்சாம். ஆனா, குழந்தையைத் தேடிவந்த அம்மாவைப் பாத்த எல்லாருக்கும் ஷாக். அவங்க முகம் பூரா அம்மைத் தழும்போட விகாரமா இருந்தாங்கலாம். இங்க அழகுங்கறது அம்மாவோட பாசம் மட்டும்தானங்க.” 

‘கதையெல்லாம் நல்லாதான்டீ சொல்ற’ என்று நினைத்தவன்,

“எந்த விதத்துல தாய் பாசத்தை விட என் பாசம் குறஞ்சு போச்சு மதி. நமக்குள்ள இருக்குற நேசமெல்லாம் உடம்பு சம்பந்தப்பட்டதுன்னு மட்டும் நீ நெனச்சதாலதானே?”

“அய்யோ! அப்படியில்லைங்க!” என்று‌ அவசரமாக மறுத்தவளை, உன் பயத்திற்கு வேறென்ன காரணம் எனக் கேட்டது அவனது பார்வை. 

“ஆரம்பத்துலருந்தே நீ உங்கப்பா அம்மாவோடயே நம்மல கம்பேர் பண்ணி பாத்திருக்க. அதனால்தான் உங்க அப்பா, உங்கம்மாகிட்ட நடந்த மாதிரியே நானும் உங்கிட்ட நடந்துப்பேனோன்னு பயம். அப்படித்தானே?” என்று கேட்க, அவள் அமைதியே அதை ஆமாம் என்று ஆமோதிக்க அவனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே. 

“அதனால்தான் இந்த தழும்பெல்லாம் போக ஏதாவது ட்ரீட்மென்ட் இருக்கான்னு டாக்டர்கிட்ட கேட்டியா?” என்று கேட்க சிறுபிள்ளை போல் தலையை‌ மட்டும் மேலும், கீழும் ஆட்டினாள். கல்லூரி கூட முடிக்காமல் திருமண பந்தத்தில் காலடி வைத்த, இருபது வயது பெண்ணிற்கு, எந்தளவிற்கு முதிர்ச்சி இருக்கும் என அவனால் யோசித்துப் பார்க்க முடிந்தது. இப்பொழுதே மூன்று குழந்தைகளுக்கு அம்மா.

இவனுக்கும் இருபத்தி நான்கு வயதென்றாலும் இவனது வயதிற்கு மீறிய அனுபவம், தேவையான பக்குவத்தை வழங்கியிருந்தது. அதனால் தான் அவளிடம் தோன்றிய மாற்றத்தை அவனால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. ராகிணியும் அக்காவிடம் ஏதோ வித்யாசமாக இருப்பதாக கூறிச் செல்ல, இவன் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. 

“மேகி! இது போஸ்ட்பார்டம் டிப்ரெஷன் தான். ஏதாவது ட்ரீட்மென்ட் போலாமா?” அவனுக்குள் ஒரு பயம். அவன் அம்மாவை நினைத்து. 

“என்னங்க எனக்கு மூளைக்கோளாறுன்னு நினைக்கறீங்களா?” என்றவள் கண்கள் மீண்டும் அழுகைக்குத் தயாராக,

“ச்சே… ச்சே… அப்படியெல்லாம் இல்லடீ. இது குழந்தை பெத்த எல்லாருக்கும் வரும்தான். ஒரு குழந்தைனாலே ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும். நமக்கு மூனு. அப்ப எதுனாலும் மூனு மடங்காதானே இருக்கும்” என்று சொல்ல,

“அதெல்லாம் வேண்டாம். அதான் நான் இப்படி இருக்கறது தானே பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க. முதல்லயே இதைப் பத்தி உங்க கிட்டப் பேசியிருக்கணும்!” என்றவளை மெதுவாக அணைத்து விடுவித்தான். 

“இப்பயாவது போய்‌ பிள்ளைகள வாங்கிட்டு வாங்க. பகலெல்லாம் தான் அவங்க வச்சுருக்காங்களே. இப்படியே போனா குழந்தை பெத்ததே எனக்கு மறந்துரும்.”

“வேணும்னா மறுபடியும் ஞாபகப் படுத்த, அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாமா?” என்று‌ கேட்டு கண் சிமிட்ட,

“ஐயா சாமி… இதுக்கு மேல தாங்காது. முதல்ல குழந்தைகள  வாங்கிட்டு வாங்க‌! தலயணைக்குப் பதில் குறுக்க குழந்தைகள் தான் இனிமேல்!” மனம் விட்டுப் பேசியதில் மனபாரம்‌ குறைய பேச்சு பழையபடி சகஜமாகியது இருவருக்கும். 

“எதுக்குடீ… தலகாணிக்குப் பதிலா எம்பிள்ளைக ஃபுட்பால் மாதிரி பறக்கவா?” என்று கேட்டு அலற, அவனை முறைத்து நின்றாள் அவன் மாதங்கி. 

இருந்தாலும் அடுத்த முறை மருத்துவரிடம் சென்று வரும் பொழுது இதுபற்றி இருவருமே சேர்ந்து ஆலோசனை பெற்று வந்தனர். தேவைப்பட்டால் சைக்ரியாட்டிஸ்ட்டைப் பார்க்கச் சொல்லி, தனக்குத் தெரிந்த மனநல ஆலோசகரை பரிந்துரைத்தார். 

ஆனால், அது அவசியமில்லாமல் மதனின் அன்பும், அனுசரணையும், அரவணைப்பும் அவளை சிறகில் வைத்து காபந்துப்படுத்தியது.

மூன்று குழந்தைகளும் அம்மாவின் முகம் பார்த்து சிரித்து, அவள் குரல் கேட்கும் திசையெல்லாம் தலைதூக்கிப் பார்க்க ஆரம்பிக்க அதைவிட வேறு வைத்தியம் ஏது. தாய்மை மேலும் மெறுகேற்றியது மதனின் மாதங்கியை. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top