மதன மாளிகையில் 28

28

“என்ன ராகினி சொல்ற… எப்போ… எந்த ஹாஸ்பிடல்?”

படபடப்பாய்‌ கேள்விகள் கேட்ட அக்காவிடம்‌ மருத்துவமனை பெயர் சொல்ல, தோப்பு வீட்டிலிருந்து அவசரமாகக் கிளம்பினர் மதனும், மாதங்கியும். 

அதிகாலையில்தான் கண்ணயர்ந்த இருவரையும் ராகினியின் அலைபேசி அழைப்புதான் எழுப்பியது. 

தொடுதிரையில் ராகினி பெயர் ஒளிர, முகத்தில் தண்ணீர் அடித்தது போல் சட்டெனத் தூக்கம்‌ கலைந்தது. இந்நேரத்திற்கு அழைப்பவள் அல்ல. அதுவுமில்லாமல் இரவுதான் தங்கையிடமும், தம்பியிடமும் பேசினாள். 

“ராகி…” என்றவள் மனம் என்னவோ, ஏதோவெனப் படபடத்தது. அவளது உள்ளுணர்வு பொய்க்கவில்லை. பூங்கோதையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தகவல் கூற, எந்த மருத்துவமனை‌ என்று விபரம் கேட்டு, உடனே‌ குளித்து, உடைமாற்றி இருவரும் பைக்கில் கிளம்பிவிட்டனர்.

தங்கையைப் பார்த்ததும், “என்னடீ ஆச்சு… நைட்டு நல்லாத்தானே பேசினாங்க!” மருத்துவமனை சென்றதும் படபடத்தாள்.‌

“விசேஷம் முடிஞ்சு வந்ததுலருந்தே ஒரு வாரமா ஓவர் ப்ளீடிங்க் க்கா.‌ உங்கிட்ட சொல்ல வேண்டாம்னுட்டாங்க. காலையில எந்திரிக்கும் போதே தலை சுத்தி விழுந்துட்டாங்க. இங்க வர்ற வரைக்கும் சுயநினைவே இல்லக்கா” சொல்லி முடிப்பதற்குள் சகோதரிகள் இருவருக்குமே தொண்டையடைத்து அழுகை வந்துவிட்டது.

“இங்க வந்தா டாக்டர் திட்டுறாங்க” என்றாள் கூடுதல் தகவலாக. தொடர்ந்து ட்ரீட்மென்ட் என இங்கே வருவதால் மருத்துவர் நன்கு பரிட்சயம். அவர் அறுவை சிகிச்சையைப் பரிந்துறைத்தே வருடத்திற்கும் மேலாகிறது. பூங்கோதைதான், தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். 

வாசுதேவனும், ஜெகதாம்பாளும் வராண்டாவில் போடப்பட்டிருந்த வரிசைச் சேரில் அமர்ந்திருந்தனர். மிதுன் அழுது கொண்டே இருந்தான். அக்காவைப் பார்த்ததும் ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டான். ஒன்றும் புரியவில்லை என்றாலும் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்றளவு புரிந்தது. 

மதன், “ராகினி… இவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தியா?” என்றான். 

“இல்ல… மாமா. வரும்போதுதான் கண்ணு முழிச்சான். அப்படியே கூட்டி வந்துட்டோம்!” 

“மதி… நீ பாரு. நான் இவனுக்கு பால் வாங்கிக் கொடுத்து கூட்டி வர்றேன்!” என்று அவனை கைபிடித்துக் கொண்டு கிளம்ப, 

“நானும் வர்றேன். எனக்கு காஃபி குடிக்கலைனா தலைவலி வந்துரும்” ஜெகதாம்பாளும் உடன் எழுந்து கொண்டார்.

“மாமா… நீங்களும் வாங்க!” என்று வாசுதேவனையும் அழைத்தான். வாசுதேவன் வேண்டாம் என மறுத்துவிட்டார்.  இருவரையும், கேண்டீன் எங்கே என்று விசாரித்து அழைத்துச் சென்றான். 

மிதுனுக்குப் பாலும், ஜெகதாம்பாளுக்கு காபியும் வாங்கிக் கொடுத்து அழைத்து வந்தான். 

அதற்குள் மருத்துவர் வந்திருந்தார். தனியறை என்பதால் எல்லோருமே அங்கிருந்தனர். 

“ஏற்கனவே சொன்னதுதான் வாசுதேவன்‌ சார். ஆரம்பத்துலயே எடுத்திருந்தா யூட்ரஸ் மட்டும் ரிமூவ் பண்ணிருக்கலாம். இப்ப ஓவரிஸ் கன்டிஷன் பாக்கணும். ஹிஸ்டிரெக்டமி(Hysterectomy) பண்றதா, பார்ஷியல் ஹிஸ்ட்ரோடோமியாங்கறது (partial hysterectomy) ஸ்கேன் பண்ணாதான் தெரியும். யூட்ரஸ் கீழிறங்கி ரொம்ப நாளா சிறுநீர்ப்பையை‌யும் அழுத்திட்டிருக்கு. அதனால யூரினரி ப்ளேடர் (urinary bladder) எந்தளவுக்கு டேமேஜ் ஆகியிருக்குனு தெரியல. லீக்கேஜ் கெபாசிட்டி டெஸ்ட்(Cystometry) எடுக்கவேண்டி வரும். தேவைப்பட்டா அதுக்கும் ப்ளேடர் மெஸ் (Bladder Mesh) வைக்கறதாயிருந்தா, இப்பவே வச்சுறலாம். ஒரே ஆப்ரேஷன்ல முடிஞ்சுறும். ஏற்கனவே இவங்களுக்கு த்ரீ, சி செக்ஷன் நடந்திருக்கு. அதனால் லேப்ரஸ்கோபிக்கு வாய்ப்பில்ல. ஓபன் சர்ஜரிதான் பண்ணனும். அப்சர்வேஷன்ல வச்சு, பிபி,‌ சுகர் லெவல் எல்லாம் கன்ட்ரோலுக்கு கொண்டு வரணும். ஒரு வாரமா ஓவர் ப்ளீடிங் ஆகியிருக்கு. எல்லாம் படிச்சவங்கதானே? இந்தக்காலத்துலயும் இவ்ளோ கேர்லெஸ்ஸாவா இருப்பீங்க? கண்டிப்பா ப்ளட் ஏத்தணும். உங்க ரிலேஷன்லயே கெடச்சா ‌இன்னும் சேஃப். ஈஸியா நடக்க வேண்டியதை ரொம்ப லேட் பண்ணி க்ரிட்டிக்கலாக்கிட்டீங்க.” வரிசையாக அனைத்து விபரங்களையும் சற்று கோபமாகவே கூறிச் சென்றார். 

பூங்கோதைக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. அனீமிக்காக இருப்பதால் வந்த தலைசுற்றல் என்பதால் கண் விழித்துவிட்டார். ஆனால் சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது.‌ ஒரு நாள் கூட ஓய்ந்து படுக்காதவர். ஓய்வெடுக்க வேண்டுமென்றால் மருத்துவமனை வந்து படுத்தால்தான் உண்டுபோல.‌

“வாசு… இவங்க சொல்றதப் பாத்தா,‌ இன்னும் ஒரு வாரத்துக்கு மேல இங்க இருக்கணும் போலிருக்கே. இவங்க அம்மா, இல்லைனா அண்ணன் பொண்டாட்டிங்க யாரையாவது கூட வந்து இருக்கச் சொல்லணும். அவங்களுக்கு தகவல் சொல்லிட்டியா?” அறையை விட்டு வெளியே வந்ததும் ஜெகதாம்பாள், மகனிடம் கேட்க, வாசுதேவன் ராகினியைப் பார்த்தார். இவர் யாருக்கும் தகவல் சொல்லவில்லை.‌ ராகினிதான் முதலில் அக்காவை அழைத்தது. 

“நான் அக்காவுக்கு மட்டும் தாம்ப்பா கால் பண்ணினேன்” என்றாள். 

“மொதல்ல அவங்கள வரச்சொல்லுப்பா. இங்க பாத்துக்க ஆள் வேணும்ல?” என்று கேட்க, 

அம்மா எதற்காக இத்தனை நாட்களாக ஆப்ரேஷனைத் தள்ளிப் போட்டார் என மாதங்கிக்கு இப்பொழுது புரிந்தது. உடன்‌ ஒத்தாசைக்கு ஆள்‌ வேண்டுமே. பூங்கோதை அம்மாவும் வயதானவர். அவராலும்‌ இவருடன் வந்து மருத்துவமனையில் தங்கவெல்லாம் முடியாது. மாமா மனைவிகள் இருவரிடமும்‌ கேட்கவே முடியாது. அவரவர்களுக்கு குடும்பம், பனிரெண்டு, பத்தாவதென பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் இருக்கிறார்கள். 

மதன், மாதங்கியைப் பார்த்தான். நீ பேசுகிறாயா‌ நான் பேசவா என்றது மாதங்கியைப் பார்த்த மதனின் பார்வை. அவனுக்கு ஜெகதாம்பாள்‌ பேசும் முறையே கோபத்தை வரவழைத்தது. 

“அப்பத்தா! இதென்ன பிரசவமா? பிறந்த வீட்லருந்து வந்து பாக்குறதுக்கு. ஏன், நாங்க இல்ல? எங்கம்மாவ நாங்க பாத்துக்கறோம். இல்லைனா… அத்தைய வரச்சொல்லுங்க. நீங்க இருக்கீங்கல்ல.”

“நானே வயசானவ. உங்க அத்தைக்கு குடும்பம் இல்லையா? இதெல்லாம் அவங்க வீட்டாளுகதான் பாத்துவிடணும்.”

“இன்னும் எத்தனை நாளைக்கி பாத்துவிடுவாங்க. எங்கம்மாவுக்கு எங்களுக்குப் பாக்கத் தெரியும்! யாரும் தேவையில்ல.” மருத்துவமனை‌ என்பதால் குரலை அடக்கியே பேசினாள். இப்பொழுதும் வாசுதேவன் அம்மாவையே பேசவிடுவதை எண்ணி அவ்வளவு கோபம் உள்ளுக்குள். 

“கட்டிக் கொடுத்தவ இங்கவந்து உக்கார முடியுமா? உங்க வீட்டாளுக விடுவாங்களா?” எல்லாரையும் தங்களைப் போலவே நினைத்துக் கொண்டு கேட்க, மதனைப் பார்த்தாள். அவன் பார்வை என்னை ஏன் பாக்குற என்றது.‌ வரும்பொழுதே பெரியநாயகிக்கு அழைத்து தகவல் சொல்லிவிட்டுத்தான் வந்தனர். 

“எங்கம்மாவுக்குப் பாக்க நான் யார்கிட்ட அப்பத்தா கேக்கணும்?” என்றாள் வெடுக்கென.‌

“பாரு வாசு. இவ வாய் அடங்கவே இல்ல. அங்கேயும் இப்படித்தான் பேசுவா போல!” மருத்துவமனை‌ என்றும் பாராமல் ஜெகதாம்பாள் குரலை உயர்த்தினார். 

மதன், “மதி… அவங்கள வீட்டுக்குக் கிளம்பச் சொல்லு. வயசானவங்களுக்கு ஹாஸ்பிடல் செட் ஆகாது!” என்றான் பட்டென.‌ அவரிடம் நேரிடையாக வெளியே போகச் சொல்லவில்லையே தவிர, அவன் சொன்ன தொனி அப்படித்தான் இருந்தது. மருத்துவமனையாக இல்லாமலிருந்தால் அவன் பேசும் விதமே வேறு. 

“எதுக்கு, இவளுக மாமன் வீட்டாளுக வந்து என்னைய பொல்லாப்பு சொல்லவா? அவங்க வரும்போது நான் இங்கதான் இருக்கணும்!” என்றவர், மதன் பார்த்த தீப்பார்வையில் ஃபோனை எடுத்துக் கொண்டு தள்ளிப் போனார். மகளுக்குத் தகவல் கொடுத்தார். 

“நீயும் வந்து ஒரு‌‌ எட்டு பாத்துட்டு போயிரு சுகந்தி.‌ அவங்க வீட்டாளுக வரும்போது நீ மட்டும் இல்லைனா பொல்லாப்பு. சீக்கிரம் வா!” என்று சம்பிரதாய குசல விசாரிப்பிற்கு மகளை அழைத்தார். 

என்ன ஜென்மம் என்பது போல் ஒரு‌ பார்வை பார்த்தான். வாசுதேவனுக்கும் யார்‌ உடனிருந்து கவனித்துக் கொள்வதென்ற கேள்விதான் உள்ளுக்குள். வெளிப்படையாகச் சொல்லவில்லை, அவ்வளவே. எப்படியும் பூங்கோதை பிறந்த வீட்டினர் வந்து பார்த்துக் கொள்வார்கள் என நம்பிக் கொண்டிருந்தார். 

சற்று நேரத்திற்கெல்லாம் பூங்கோதை அம்மாவும்,‌ அண்ணன்,‌ அண்ணிகளும் வந்துவிட்டனர். மகளைப் படுக்கையில் பார்த்த பூங்கோதையின் அம்மாவிற்கு மனம்‌ தாங்காமல், கண்ணீர் வடிக்க, இவ்வளவு நேரமாக தைரியமாக இருந்த பூங்கோதைக்கும், அம்மாவைப் பார்த்ததும்தான் சலுகையாகக் கண்கள் கலங்கியது. எத்தனை வயதானால் என்ன? தாயைக் கண்டதும் தலையெல்லாம் நோகும்தானே? பேரன் பேத்தியே எடுத்தாலும், இன்னும் ஒன்றும்‌ தெரியாத சிறு பிள்ளைகள்தானே மகள்கள், அம்மாக்களுக்கு. 

அவர்கள்‌ வந்த சிறிது நேரத்தில் சுகந்தியும், கணவரோடு வந்துவிட்டார்.‌

“வாசு…‌ அக்காவும், மச்சானும் வந்திருக்காங்க பாரு. அவங்களுக்கு காபி,‌ பலகாரம் வாங்கி கொடுக்கணும்ப்பா” என்றார் ஏதோ மகள், தாய்வீட்டிற்கு விருந்தாட வந்திருப்பது போல்.‌

அங்கு வந்த செவிலி, “எதுக்கு இவ்வளவு பேர் கூட்டம்‌ போடுறீங்க.‌ யாராவது ரெண்டு‌பேர்மட்டும்‌ கூட இருங்க. மத்தவங்க வெளிய இருங்க. விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சதும் கிளம்பிருங்க. டாக்டர் ரவுன்ட்ஸ் வர்ற‌ நேரம். சத்தம் போடுவாங்க!” என்று‌ கத்திவிட்டுச் செல்ல, முடியாவிட்டாலும், படுக்கையில் கிடக்கும் மகளை விட்டுச்செல்ல பூங்கோதை அம்மாவிற்கு மனம் வரவில்லை. 

தான் உடன் தங்கிக் கொள்வதாக, மகன்களை‌ அனுப்பிவிட்டார். நம்மை தங்கச்சொல்லாத வரை சந்தோஷம் என அண்ணியரும் கிளம்பிவிட்டனர். 

எப்பொழுது ஆப்ரேஷன் எனக் கேட்டுக் கொண்டு வந்தவர்கள்‌ கிளம்ப, ஜெகதாம்பாளும் மகளோடு கிளம்பிவிட்டார்.‌ 

வீட்டிற்குப் போனால், போட்டது‌ போட்டபடி வந்திருக்கும் வீட்டு வேலையெல்லாம் யார் பார்ப்பது. வாசுதேவனுக்கும் எல்லாம் நேரத்திற்கு நடக்க வேண்டுமே. மருமகள் கையால் உட்கார்ந்த இடத்திற்கே வரவழைத்து சாப்பிட்டுப் பழகியாயிற்று. இனியும்‌ உடம்பு வளையாது‌. 

ராகினிக்கும் இன்னும் ஒரு‌ வாரத்தில் செமஸ்ட்டர். அவளாலும் தங்கமுடியாது.

வந்தவர்கள் அனைவரும் கிளம்பிவிட, “அக்கா! நான்‌ சமச்சுக் கொடுத்து விடுறேன். அம்மாகூட இருந்து நீ பாத்துக்குறியா?” தயங்கித்தான் கேட்டாள்.‌ அவள் கேட்ட விதமே மாதங்கிக்கு மனது விண்டுபோயிற்று.

“என்னடீ இப்படிக் கேக்குற?” என்றவளுக்கு தொண்டையடைத்தது. இதுவே இரண்டு மாதங்களுக்கு முன்பென்றால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. இரண்டு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தன் குடும்பத்திற்கு அந்நியமாகிவிட்டதுபோல் ஒரு உணர்வு. என்ன பெண்‌ ஜென்மம்!

“இல்ல… அப்பத்தா சொன்ன‌மாதிரி மாமா‌ வீட்ல கேக்க வேண்டாமா? ஒரு வாரத்துக்கு விடுவாங்களா?”

தங்கை தயங்கித்தயங்கி கேட்க, நீங்களே சொல்லுங்கள் எனும்படி இப்பொழுதும் மதனைத்தான் பார்த்தாள்.

“ராகினி! உங்கம்மாவுக்கு நீங்கதான் பாக்கணும். இதுக்கு யாரையும் கேக்கணும்னு‌ அவசியமில்ல. நீ எக்ஸாம்ல கவனம் வை. எவ்ளோ நாள் வேணும்னாலும் உங்க அக்கா இங்கதான் இருப்பா! போதுமா!” இதையே தான் சொன்னால் நம்பமாட்டாள் என்றுதான் மதனையே சொல்லவைத்தாள். 

“தாங்க்ஸ் மாமா!” என்றாள் கண்கள் கலங்க.

“அடி வாங்கப்போற!” என்றான் உரிமையோடு. 

நேரம் மதியத்தைத் தொட்டது. இன்னும் இவர்கள்‌ யாருமே‌ சாப்பிடவில்லை. வந்தவர்கள் அவர்கள் பாட்டிற்குக் கிளம்ப,  என்ன செய்வதென்று தெரியவில்லை வாசுதேவனுக்கும். மூன்று பிரசவத்தின் போதும் பூங்கோதை வீட்டினரே கவனித்துக் கொண்டனர். குழந்தைகள் பிறந்த பிறகு தகவல் சொல்லப்படும். மருத்துவமனை வந்து பார்த்துவிட்டுச் செல்வார். வீட்டிற்கு போனபிறகு ஒரு தடவை சென்று பார்த்து வருவார். இவர் எதற்கும் மெனக்கெட்டது கிடையாது‌. பக்கத்து பக்கத்து ஊர்தான் என்றாலும், ஒரு பொழுது கூட ஜெகதாம்பாள் மருத்துவமனைக்கு உணவு சமைத்துக் கொடுத்துவிட்டதுகூட கிடையாது. இது அவர்கள் கடமை என்பது போல் சட்டமாக வந்து பேரன், ‌பேத்திகளை பார்த்துச் சென்றதோடு சரி. பூங்கோதையையும், குழந்தையையும் மாதக்கணக்கில் சீராட்டி, அவர்களே வந்து விட்டுச் செல்வார்கள். 

இன்றும்‌ அப்படித்தான் எதிர் பார்த்திருப்பார் போல. ஆனால் வந்தவர்கள் நலம் மட்டும் விசாரித்துவிட்டு கிளம்பிவிட்டனர். பிள்ளைகளே யார் தங்குவதென தங்களுக்குள் முடிவெடுக்க, தனித்து விட்டதுபோல் உட்கார்ந்திருந்தார். 

ஜெகதாம்பாளும் மகனைப் பற்றியும், வீட்டில் ஒரு வயதுப் பெண், ஐந்து வயது தம்பியோடு தனித்து இருப்பாளே என்ற சிந்தனை கூட இல்லாமல் தன் சௌகர்யம்தான் முக்கியமென மகளோடு கிளம்பிவிட்டார். 

மதன்தான் அனைவரையும்‌ கேன்டீன்‌ அழைத்துச் சென்றான். வாசுதேவனையும் சேர்த்துதான். அவருக்குதான் வெளிச்சாப்பாடு பிடிக்காதே. வேறு வழியில்லாமல் எழுந்து உடன் சென்றார். அனைவருக்கும் சாப்பிட வாங்கிக் கொடுத்து அழைத்து வந்தான். 

சாப்பிட்டு வர, பில் கட்டச் சொன்னதாக, பூங்கோதை அம்மா சொல்ல, வாசுதேவன் பில்கட்டச் சென்றார். 

அலுவலகம் சென்றிருந்த விகாஸும், தகவலறிந்து மதியத்திற்கு மேல் விடுப்பெடுத்துக் கொண்டு வந்துவிட்டான். 

“அக்கா… நான் போய் அம்மாவுக்குத் தேவையானதெல்லாம்‌ எடுத்துட்டு வர்றேன்க்கா. அவசரத்துல எதுவும் எடுத்துட்டு வரல” என்றாள். விகாஸ், வீட்டிற்கு தான்  அழைத்துப் ‌போவதாக முன்வந்தான். 

“நீ விகாஸ் மாமாகிட்ட கொடுத்துவிடு ராகி. நீ வரவேண்டாம். தம்பியும் கூட்டிப் போயிறு. நானும் ஆத்தாவும் இருக்கோம்ல. பாத்துக்கறோம்.‌ உனக்கு எக்சாம்‌ வருதுல்ல‌” என்று‌ தம்பி, தங்கையை விகாஸோடு வீட்டிற்கு அனுப்பிவிட்டாள். 

பெரியநாயகியும், சீதாலட்சுமியும், ஜெகனோடு வந்து பார்த்துச் சென்றனர். அலைச்சல் வேண்டாமென பவித்ரா வரவில்லை. 

இரவுவரை அங்கிருந்த வாசுதேவன், வீட்டிற்கு கிளம்பினார். அறைக்குள் வந்து பூங்கோதையிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.‌ 

மதன் அங்கேயே வராண்டாவில் தங்கிக் கொள்வதாகச் சொல்ல, ஒரேடியாக மறுத்துவிட்டாள். “நானும் தனிச்சு எல்லாம்‌ பழகிக்கணும்ல. நீங்க தானே சொன்னீங்க! ஆத்தா இருக்காங்க. அவசியம் ஏற்பட்டா முதல்ல உங்களைத்தான் கூப்பிடுவேன்.” என்று‌ சொல்ல, சிறிது நேரம் இருந்துவிட்டு மதனும் கிளம்பினான்.

“மதி, நீயும் தம்பிகூடக் கிளம்பு. அதான் ஆத்தா இருக்காங்கல்ல. எப்படியும் ஆப்ரேஷன் பண்ண ரெண்டு, மூனு நாளாகும். அப்ப வந்தா போதும். நான் ‌சமாளிச்சுப்பேன்!” என்றார் நலிந்த குரலில்.

“எப்படி, இத்தனை நாளா சமாளிச்ச மாதிரியா? இனிமே நீங்க சொல்றதைக் கேக்குறதா இல்லம்மா. நாங்க சொல்றதை நீங்க கேளுங்க. பேசாம சாப்பிட்டுத் தூங்குங்க” என்று ஒரு அதட்டல் போட்டாள். 

“கல்யாணமானதும், எம்பேத்தியா பெரிய மனுஷியாட்டம் பேசுறா!” ஆத்தா, பேத்தியின் பேச்சில் சிலாகிக்க, 

“மதி! நான் கெளம்பறேன்” என்றவனோடு வெளியே வந்தாள்.

“என்னம்மா நீங்க… சின்னஞ்சிறுசுகள பிரிச்சு வைக்கலாமா? நீங்க இருக்கீங்கல்ல. பத்தாதா?” பூங்கோதை அம்மாவைக் கடிந்துகொண்டது இருவர்‌ காதிலும் விழுந்தது‌. 

தன்னோடு வெளியே வந்தவளை கேன்டீன்‌ அழைத்து வந்தான். அவளுக்கும் சூடாக எதையாவது வயிற்றுக்குள் ஊற்றினால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. அவள் முகம் பார்த்தே அழைத்து வந்தான். மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமென்ட் பென்ச்சில் உட்காரவைத்துவிட்டு, டீ வாங்கி வந்தான். 

“தோப்பு வீட்டுக்கா?” என்றவள் அவன் முகத்தையே பார்க்க,

“இல்ல மதி… இனிமே இந்த மோகினி துணையில்லாம தோப்பு வீட்ல தனியா தங்கமுடியாதுடீ!” காலையிலிருந்து இருந்த இறுக்கத்தைக் கலைக்கும் விதமாக அவளை கேலி செய்ய… அவளுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. தனக்காகப் பார்த்து இத்தனை நாட்களாக காத்திருந்தவன்.‌ அவனது வேகமும், தாபமும் உணர்ந்தவள். பசித்திருந்தவனுக்கு, பந்தி பரிமாறிவிட்டு, பாதியில் பிடுங்கிக் கொண்டால் எப்படியிருக்கும்? அம்மா பேசியதில் அவளுக்கும் உள்ளுக்குள் உறுத்த, 

அவன் முகத்தையே பார்த்தவள், “தாங்க்ஸ் அன்ட்‌ சாரி” என்றாள்.

“உன் தங்கச்சிய அடிப்பேன்னு மட்டும்தான் சொன்னேன். நீ கண்டிப்பா அடிவாங்குவ போலயே? ஆமா… தாங்க்ஸ் ஓகே, சாரி எதுக்கு?” என்று புருவம் தூக்கிக் கேட்க, அவள் அமைதியாக தலையைக் குனிந்து கொண்டாள். பார்வை கைவிரல் நகத்தையே ஆராய்ந்தது. அவளது மௌனம்‌ புரிந்தது.

“இப்பெல்லாம் நகம் கடிக்கிறதில்ல போல” என்றான் கேலிபோல். அதற்கும் நிமிரவில்லை.

“மேகி… என்னைப் பாரு!” என்றான்‌ கண்டிக்கும் தொனியில். நிமிர்ந்து முகம்‌ பார்த்தவளிடம், “முதல்ல அத்தையைக் கவனி. அப்பறம்‌ இந்த மாமனைக் கவனிக்கலாம். அதுவுமில்லாம, என்னோட கெஸ்ஸிங் கரெக்டாயிருந்தா, இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ணாம இருக்கிறதுதான் பெட்டர்” என்று‌ கண்சிமிட்டிச் சொல்ல, இறுக்கம் தளர்ந்து மெலிதாகப் புன்னகைத்தாள். 

“இப்படியே சிரிச்ச முகமா உங்கம்மாகிட்டப்போ! அவங்களும் இதே யோசனையிலதான் இருப்பாங்க. புதுசா‌ கல்யாணமானவங்களப் பிரிச்சு வச்சுட்டோமேன்னு. அவங்களுக்கும் ஆப்ரேஷனை நெனச்சு உள்ளுக்குள்ள பயமிருக்கும்ல.” 

“அதெல்லாமிருக்காது… அவங்களுக்கு ஆப்ரேஷன் ஒன்னும் புதுசில்ல. ஏற்கனவே மூனு ஆப்ரேஷன்” என்றாள் ஆயாசமாக. 

“அதெல்லாம் சின்ன வயசுல. அப்ப உடம்பும், மனசும் தெம்பா இருந்திருக்கும். ப்ரீமெனோபாஸ் டைம்ல ரெண்டும்‌ உழண்டு போயிருக்கும். மூட் ஸ்விங் தாறுமாறா இருக்கும். இப்பெல்லாம் யூட்ரஸ் ரிமூவ் பண்றது, நகம் வெட்ற மாதிரி ஆயிருச்சு. தைரியமா இருங்க!”

அவளை சிரிக்க வைத்து, தைரியம் சொல்லி, இரவு உணவும் வாங்கிக் கொடுத்து, விட்டுவந்தான். 

ஏதோ ஒரு மன அழுத்தம் கொடுத்த, மனப்பிறழ்ச்சியால் அம்மா இறந்ததாலோ என்னவோ பெண்கள் மனநிலை எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என, கூகுள் தேடித்தேடி அறிந்து வைத்திருந்தான். 

வழக்கமான சோதனைகள் எல்லாம் முடித்து, மூன்று நாட்களில், அறுவைசிகிச்சை என நேரம் குறிக்கப்பட்டது. யூரினரி மெஸ்ஸிற்கு அவசியமில்லாமல் போயிற்று. அதுவே பெரிய ஆசுவாசம் பூங்கோதைக்கு. ஆனால் நாள்‌ கடத்தியதில், கருப்பையோடு சேர்த்து, ஓவரியும் எடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. 

“ஏன்டீ… பயல அடிக்கிற?”

“பெரியவங்கள அடிக்க முடியாதுல்ல. அதான் அவனை அடிக்கிறேன். இப்பவே என்ன இவ்ளோ திமிரு? பிடிக்கலைனா வேண்டாம்னு சொல்லணும். அதென்ன சாப்பாட்டைத் தூக்கியடிக்கிறது?”

“அவன் அப்படியே உங்க அப்பனாட்டாம்!” பேரன் செய்கையில் பெருமை வேறு ஜெகதாம்பாளுக்கு. 

“அதான் இப்பவே ரெண்டு போட்டேன். நாளைக்கி எங்கம்மாவ மாதிரி இன்னொருத்தியும்‌ வந்து கஷ்ட்டப்படக்கூடாதுல்ல.”

“உங்கம்மா எங்க கஷ்ட்டப்படுறா? அதான், நல்லா ராணி மாதிரி ரெஸ்ட் எடுக்கறாளே? ஆப்ரேஷன் பண்ணி பத்து நாளாச்சு. இன்னும் படுக்கையவிட்டு நகரல. எம்பிள்ளைதான் சரியா சாப்பாடில்லாம கஷ்ட்டப்படுறான்.” 

“ஏன், உங்களுக்கு உடம்பு நல்லாத்தானே இருக்கு? நீங்க உங்க மகனுக்குப் பாத்துப் பாத்து செய்ய வேண்டியதுதானே?” 

“நாம் பாக்குறதுக்கு இவள எதுக்கு கட்டிட்டு வந்திருக்கு? சொகுசா உக்காரவா?”

“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லைல. நீங்க எல்லாம் மனுஷங்கதானா? கசாப்புக் கடையில ஆட்டை அறுத்தமாதிரி, நாலாவது தடவையா அறுத்துப் போட்டிருக்கு. இப்பக்கூட உங்களால ஒரு ஒத்தாசை செய்ய முடியல. ஸ்கூல் விட்டு வந்து, அழற‌ பையலுக்கு பால் ஆத்திக்‌ கொடுக்கணும்னு கூடத் தோணல. ஆனா, எப்படி மனசு உறுத்தாம வேலை மட்டும் வாங்கமுடியுது?” என்றவள் வார்த்தைகளில் அத்தனை கோபமும், ஆற்றாமையும்.

வீட்டிற்கு வந்து ஒரு வாரமாகிறது. ராகினிக்கும் செமஸ்ட்டர் ஆரம்பித்துவிட்டது. வீட்டிற்கு வந்தவளுக்கு, வீடிருந்த நிலமையைப் பார்த்து தலையே சுற்றிவிட்டது. துணிகளும், காஃபி கப், டம்ப்ளர், கிண்ணமென சோஃபா, டைனிங் டேபிள் என நீக்கமற நிறைந்திருந்தன. 

தேர்வுக்கும் படித்துக் கொண்டு, தம்பி, அப்பாவென சமையலையும் கவனித்ததில்‌ வீட்டைக் கவனிக்க முடியவில்லை ராகினிக்கு. காளி அவதாரம் போல் பத்துக் கையிருந்தாலும் ‌பத்தாதெனத் தோன்றியது. துடைச்சு துடைச்சு வச்ச அம்மாவுக்கு மட்டுமென்ன,‌ அவார்டா கொடுத்துட்டாங்க? கிடக்கட்டும் என விட்டுவிட்டாள்.

வாசுதேவனுக்கு எல்லாம் அதது, அதது இடத்தில் இருக்க வேண்டும். ஆனால், ஒரு செம்பைக் கூட நகர்த்தி வைத்தது கிடையாது. உங்கப்பாவுக்கு இப்படியிருந்தால் பிடிக்காதென சொல்லியே பூங்கோதைதான் எல்லாம் செய்வார். மகள்களையும் செய்ய‌ வைப்பார். இல்லையென்றால்தான் எல்லாம் கோபத்தில் பறக்குமே. அதே போல் தம்பியும் கோபத்தில் சாப்பாட்டை விட்டெறிய பொறுக்க மாட்டாமல் அடித்துவிட்டாள். 

டிஸ்சார்ஜ் ஆகிவந்த அன்றே, ஜெகதாம்பாளும் வீட்டிற்கு வந்துவிட்டார். மகளோடு ஒரு வாரம் கூட அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 

மிதுனிற்கு, அம்மா படுக்கையிலேயே இருப்பது பிடிக்கவில்லை. அக்காள்கள் கவனித்தாலும் ஐந்து வயது சிறுவன் எதொன்றுக்கும் அம்மாவைத்தான் தேடினான். அம்மா பழையபடி எழுந்து நடமாட வேண்டும் என்று பிஞ்சு மனம் அம்மாவிற்காக ஏங்கியது. எதற்கெடுத்தாலும் பிடிவாதம் செய்தான். பிடிக்கவில்லை எனில் தூக்கி எறிந்து கோபத்தைக் காட்டினான். 

ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை ஒதுங்க வைத்தவள், சோர்வாக இருக்க, அறைக்குள் சென்று, சற்று நேரம் கண்ணயர்ந்துவிட்டாள். அதற்குள் பள்ளிவிட்டு வந்த மிதுன் பால் ஆற்றித் தரச்சொல்லி படுத்திருந்த அம்மாவை நச்சரித்தான். அவனுக்கு அம்மா எழவேண்டும். பால் இரண்டாம்‌‌பட்சம் தான். மாதங்கி இருந்தால் அம்மாவிடம் விடமாட்டாள். தையல் போட்ட வயிறு என்பது சிறுவனுக்கு புரியாதென்பதால் அம்மாவிடம் விடுவதில்லை. 

மிதுன் நச்சரிக்க, பெற்ற‌‌ மனம் தாளாமல், இழுத்துப் பிடித்த வயிற்றோடு, மெதுவாக குனிந்தவாக்கில் எழுந்து அடுக்களை வந்தார். 

மகனுக்கு பால் சூடு பண்ண, “அம்மா தோசை!” என அடுத்த கோரிக்கை வைத்தான். அம்மா எழுந்த சந்தோஷம் அவனுக்கு. 

மகன் கேட்டதும், தோசை மாவிருக்க, தோசை ஊற்றி பொடி வைத்துக் கொடுத்தார். 

“எனக்கும் அப்படியே காஃபி போட்டுறு” என்றார் டிவி பார்த்துக் கொண்டே ஜெகதாம்பாள் சட்டமாக. அவர் கேட்பதற்கும் மாதங்கி, தம்பி வந்திருப்பானே என எழுந்து வருவதற்கும் சரியாக இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அடுக்களை சென்றவள், மிதுனும் பொடி வேண்டாம், சட்னி வேண்டுமென தட்டைத்தூக்கி எறிய, ஓங்கி முதுகில் வைத்துவிட்டாள்.

“அம்மா!” என‌‌ முதுகை நெழித்தான் சிறுவன். 

“மதி! ஏன் தம்பிய அடிக்கிற?” பதறிப்போய் மகளை அதட்டிவிட்டு, பூங்கோதையும் அழுத மகனை அணைத்துக் கொள்ள,

“நீங்களும் இன்னொரு வாசுதேவனை உருவாக்காதீங்கம்மா!” என்றவளுக்கு ஆத்திரம் கண்ணைக்கட்டியது. ஜெகதாம்பாள் மீது காட்டமுடியாத கோபம். 

“மதி! என்ன சத்தம் வெளியே வர கேக்குது. பெரியவங்க முன்னாடி குரல உசத்திப் பேசுற?” அப்பொழுதுதான் உள்ளே வந்த வாசுதேவன் மகளை அதட்ட, 

“எங்கம்மா ஆரம்பத்துலயே குரல உசத்தியிருந்தா, நான் இப்ப குரல் உசத்தவேண்டி வந்திருக்காதுப்பா!” என்றாள். 

“பாரு வாசு… உங்கிட்டயே எப்படிப் பேசுறான்னு. இத்தனை வயசுக்கு மேல, நான் அடுப்படி‌யில போயி‌ சட்டி முட்டி கழுவணும்ங்கறா.” மகனைப் பார்த்ததும் கண்ணைக் கசக்கினார் ஜெகதாம்பாள். 

“ஏன், செஞ்சா என்ன? ஒரு காஃபி கூட போட்டுக் குடிக்க முடியாத நிலைமையிலயா இருக்கீங்க?” என்று‌ வெடித்தாள். 

“இப்ப நான் காஃபி கேட்டதுலதான் பட்டுக்கிச்சா. இப்ப என்ன, உங்க ஆத்தாளுக்கு இழுத்துட்டா கெடக்குது. அதான் எம்மகனுக்கு லட்சக்கணக்குல செலவு இழுத்துவிட்டாளே? இந்த வயசுலயே கர்ப்பப்பைய எடுத்தாச்சு. எம்மகன் என்ன சாமியாராப் போறதா?” என்று கேட்க, ச்சீயென ஆனது மாதங்கிக்கு. பூங்கோதைக்கு மகள் முன் உடல் கூசிப்போயிற்று.

“அம்மாஆ!” என முதன் முறையாக அம்மாவை எதிர்த்து குரலை உயர்த்தினார் வாசுதேவன். 

“என்னடா… நான் உனக்காகத்தான் பேசுறேன். இவளைக் கட்டிவச்சு உன் வாழ்க்கையே வீணானதுதான் மிச்சம். எப்பப்பாரு உடம்புல ஏதாவதொரு கோளாறு. இன்னும் நீ எப்படியிருக்க? ஒரு பிள்ளை பெத்ததுமே இவ ஊதி உளச்சுப் போயிட்டா. என்னத்தப் பெருசா வாழ்ந்துட்ட?”

பேத்தியை வைத்துக் கொண்டு, ஒரு பெரிய மனுஷி மகனிடம் ‌பேசும் பேச்சா இது. 

வாசுதேவனுக்கும் மகள் முன், அம்மா பேசுவது அதிகப்பிரசங்கித் தனமாகப்பட்டது. திருமணத்தின்‌ போது பூங்கோதை எப்படி இருந்தார்‌ எனத் தெரியாதா? மூன்று முறை‌ கத்தி வைத்ததில் தான், அவர் உடம்பே‌ உழண்டு போனது. 

“ம்மா… தேவையில்லாமப் பேசாதீங்க. வேலைக்கு ஆள் சொல்லியிருக்கேன். உங்களுக்கு என்ன வேணுமோ இனிமே நீங்களே செஞ்சுக்கோங்க. எதுனாலும் அவங்ககிட்ட கேட்டுக்கோங்க!” என்று கராறாகக் கூற, அப்பாதானா என்று ஒரு முறை கிள்ளிப் பார்க்கத் தோன்றியது மாதங்கிக்கு. 

எந்த போதி மரத்தடியில் நின்று வந்தார் என கேட்கத் தோன்றியது.

“மதி… நீ உள்ள‌ போ!” இப்பொழுதும் மகளைத்தான்‌ உள்ளே போகச் சொன்னார் பூங்கோதை.

“இல்லம்மா, நான் இன்னைக்கி பேசியே ஆகணும். இன்னும் எத்தனை நாளைக்கி வாயை‌ மூடிக்கிட்டே இருப்பீங்க‌? நீங்களும் பேசமாட்டீங்க. மிதுன் இன்னைக்குப் பண்ணதுல அடுத்த தலைமுறையையும் இப்படியே உருவாக்குறீங்களோன்னு பயம் வந்திருச்சும்மா. இது அவனுக்குத்தான் கஷ்ட்டம். அப்பா மாறுறாங்களோ இல்லையோ இவன் மாறியே ஆகணும். இல்லைனா எதிர் காலத்துல இவன்தான் கஷ்ட்டப்படுவான். ஏன்னா, இந்தக் காலத்து பொண்ணுங்க யாரும் பூங்கோதையா இருக்க மாட்டாங்கம்மா!”

“என்னைக்காவது உங்கள அப்பா தனியா விட்ருக்காரா? ஊருக்குப் போன அன்னைக்கே திரும்பவரணும். இல்லைனா அவரும் கூடவே வருவாரு. நல்லது கெட்டதுக்குப் பிறந்த வீடு போனாலும், கூடப் பொறந்தவங்க, பெத்தவங்கனு என்னைக்காவது ஒன்னா  ‌உக்காந்து சிரிச்சு பேசியிருக்கீங்களா? அங்கேயும் போயி இவரைக் கவனிக்கத்தான் உங்களுக்கு சரியா இருக்கும்.”

“அத்தை சின்ன வயசுல லீவுக்கெல்லாம் வந்து எத்தனை நாள் இருந்திருக்காங்க. சின்னதா தும்மினாக்கூட ரெஸ்ட் எடுக்கன்னு அத்தை இங்கதானே வருவாங்க. மாமா கூட சின்னதா சண்டைனா‌கூட அடுத்த நிமிஷம் விகாஸ் மாமாவைக் கூட்டிக்கிட்டு இங்க வந்துறுவாங்க!”

“எம்மக இங்க வராம எங்க போவா? அப்பறம் எதுக்குப் பெத்தவன்னு நான் உசுரோட இருக்கேன்? நான் இருக்க வரைக்கும் எம்மக இங்கதான் வருவா!”

“யாரு வேண்டாம்னா? அதே மாதிரி எங்கம்மாவுக்கும் ஆசை இருக்கும்ல? ஏன், அதே மாதிரி உங்க மக வீட்ல சேந்தாப்ல ரெண்டு நாள் இருந்துட்டு வாங்களேன் பாக்கலாம்!”

“நான் ஏன்டீ மலை மாதிரி மகனிருக்கும் போது மருமகன் வீட்ல போய் தங்கணும். எம்மகன்‌ கௌரவம் என்னாகுறது?”

“கௌரவம்லாம் ஒன்னுமில்ல. ஒரு நாள் உங்கள வச்சுப் பாக்கமுடியாது! இப்ப கூடப் போனீங்களே. ஏன் உடனே‌ திரும்பி வந்தீங்க? உக்காந்த எடுத்துலயே எல்லாம் வரணும்‌ உங்களுக்கு. யார் செய்வா?” என்றவள், வாசுதேவனைப்‌ பார்த்து,

“அப்பா! உங்களுக்கு உங்க பேங்க் புக் முதல்கொண்டு, பான்‌ கார்ட், ஆதார் கார்ட்னு, ஏதாவது இதுநாள் வரைக்கும் எங்க இருக்குனாவது தெரியுமா? எப்ப எங்களுக்கு ஃபீஸ் கட்டணும், கரண்ட் பில் எப்பக் கட்டணும், கேஸ் எப்ப புக் பண்ணி, எப்ப வருது ஏதாவது வீட்டுல நடக்குறது தெரியுமா? இப்பதானேப்பா எல்லாமே ஆன்லைன். நீங்க கோதைன்னு ஒரு சவுன்டு மட்டும்தான் கொடுப்பீங்க.‌ என்னன்னு‌ கூட சொல்ல வேண்டாம்‌. அடுத்த நிமிஷம் நீங்க கேட்க நெனச்சது, சாட் ஜிபிடி மாதிரி உங்க கையில இருக்கும்.”

“சாப்பிட உக்காந்தா கூட, ஸ்டார் ஹோட்டல் சர்வீஸ் மாதிரி, சாப்பிடறதுக்கு முன்னாடியும், பின்னாடியும் கைகழுவ கிண்ணத்துல தண்ணி. எந்திரிச்சுப் போயி, வாஷ் பேசின்லகூட கை கழுவனதில்ல. உங்களைச் சொல்லி குத்தமில்ல. நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்த இவங்களைச்‌ சொல்லணும்.‌”

“ஏன்டீ, வீட்லயே உக்காந்து திங்கிறவளுகளுக்கு இது செய்யக்கூட வலிக்குதா?”

“வீட்லயே சும்மா படுத்திருந்தா வீடு எப்படி இருக்கும்னு உங்களுக்கு இந்தப் பதினஞ்சு நாளாப் பாத்துமா புரியல. இங்க போட்ட உழைப்ப, எங்கம்மாவும் வேலைக்குப் போயி, ஒரு ஆஃபிஸ்ல போட்டிருந்தா இவரைவிட, அதிகமா சம்பாதிச்சுருப்பாங்க!” 

“அப்பறம் நீங்கம்மா, பர்ஃபக்ட் வுமனா இருக்கணும்னு நீங்க நாலு சுவத்துக்குள்ள ஓடி ஓடி உழச்சாலும், யாரும் உங்களுக்கு இங்க சிலை வைக்கப் போறதில்ல. குடும்பம் முக்கியம்தான். அதைவிட நம்ம உடம்பும் முக்கியம்மா!”

“உங்களுக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் ப்பா. நாளைக்கு நீங்க படுத்துக்கிட்டாலும் பாக்கப் போறது அம்மா‌ தான்ப்பா.‌ உங்களைப் பெத்தவங்களோ, நீங்க பெத்தவங்களோ, கூடப் பிறந்தவங்களோ வருவாங்கனு எதிர்பாக்க முடியாது. வீட்ல ஒரு வயசுப் பொண்ணும், அஞ்சுவயசுப் பையனும் தனியா இருப்பாங்களேங்குற நெனப்பு கூட இல்லாம, மருமகள ஹாஸ்பிடல்ல சேத்த கையோட மகவீட்டுக்குப் போய்ட்டாங்க. நாங்களும் அம்மா மாதிரி எங்க குடும்பம்,‌ எங்க குழந்தைதள்தான் முக்கியம்னு போயிருவோம். சில விஷயங்கள பெத்த அம்மா கூடப் பாக்க மாட்டாங்க‌. பொண்டாட்டிதான் பாப்பாங்க. இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்லப்பா. நானும் நாளைக்கு கிளம்பிருவேன். எனக்கும் என் குடும்பம்தான் முக்கியம்!”

“ஆனா‌, ஒன்னுப்பா. நாரதர் கலகம் நன்மையில்னு சொல்வாங்க‌. எங்கள கோயில்ல பாத்துட்டு வந்து சொன்ன புண்ணியவான் யாரோ தெரியல. நல்லா இருக்கணும். அதனால்தானே அவசர அவசரமா எனக்கு இப்படியொரு‌ கல்யாணம் நடந்துச்சு. எனக்கும் ஒரு நல்ல குடும்பம் கிடச்சது‌. எனக்கும் அம்மா மாதிரி ஒரு குடும்பம் கிடச்சிருந்தா, இத்தனை நாளா இங்க வந்து தங்க முடியுமா?” என்று சொல்லிவிட்டுத் ‌திரும்ப, மதன் கைகளைக் கட்டிக் கொண்டு, புன் சிரிப்புடன், கண்களில் மெச்சுதலாக அவளையே பார்த்து நின்றான். 

பதினைந்து நாட்களில் பூங்கோதையில்லாத வீடு, தலைகீழாக மாறியதில் வாசுதேவனுக்குள்ளும் சிறு மாற்றம். இத்தனை நாட்களாக இந்த வீட்டையே தான் தான் தூக்கிப் பிடித்திருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார். தன்‌ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுத்தான் எல்லாம் நடப்பதாக எண்ணிக் கொண்டிருக்க, அப்படியில்லை என முகத்தில் அறைந்து சொல்லியது பூங்கோதையில்லாத வீடு. முழுவதுமாக மாறிவிட்டாரா என்று சொல்ல முடியாது. சென்ற தலைமுறை, மாறிய வரைக்கும் லாபம் என எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் வயோதிகம் எப்படிப்பட்டவர்களையும் ஒருநாள்‌ மாற்றும். 

“அம்மாஆஆ! சீக்கிரம் வாம்மா!” எங்கிருந்தோ அழைத்த குரலில்,

“டேய்… அருணு!” என்று‌ அலறி‌ எழுந்த வாசுகி உள்ளம்‌ படபடவென அடித்துக் கொண்டது. உடம்பெல்லாம் நடுங்கியது. வியர்த்துக் ‌கொட்டியது. உள்ளுணர்வு ஏதோ உணர்த்தியது. 

தனசேகரும், வாசுகி அலறியடித்து எழுந்ததில் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார். மணி பனிரெண்டை நெருங்கியது. வாசுகி உடம்பிற்கு ஏதோ என‌‌ப் பயந்துவிட்டார். என்ன செய்கிறது என்று‌ கேட்டுப் பதறினார். பக்கத்திலிருந்த தண்ணீரை எடுத்து குடிக்கக் கொடுத்தார். நெஞ்சை நீவி விட்டார்.

“சின்னவனுக்கு ஃபோன் போடுங்க!” என்றார் பதட்டமும், படபடப்புமாக.

“இந்நேரத்துக்கு எதுக்கு வாசுகி. விடியட்டும் போடலாம். இந்நேரம் ஆஃபிஸ்ல இருப்பான்!” என்றார், கிரியிடம் பேச விருப்பமின்றி.

“இல்லீங்க, எனக்கென்னமோ மனசு அடிச்சுக்குதுங்க. கெட்ட கனவுங்க. அருணு நம்மல விட்டுப் போனப்பவும் இப்படித்தான் இருந்துச்சு‌. நாடு விட்டு நாடு போயிருக்கான். அவனுக்கும் ஒன்னுன்னா என்னால தாங்க முடியாதுங்க. உங்க கோபத்தை விட்டுட்டு நீங்க உடனே ஃபோனப் போடுங்க!” என்றவர் கண்கள் கண்ணீரை உகுத்தது. தன்னால் கரங்கள் குவிந்து, வாய்க்கு வந்த சாமி‌ பெயரையெல்லாம் கும்பிட்டது. 

அதே நேரம்!

“டேய்… மதன்! கால உந்துடா! கைய வீசித் தண்ணியத் தள்ளுடா! தண்ணிய மட்டும் குடிச்சுறாதே மதன்! உன்னால முடியும்டா… பயப்படாதே! அண்ணே உன் கூடவே இருக்கேன். பயந்தா நீச்சல் பழகமுடியாது. அப்படித்தான்! கைய வீசிப் போடு! கால உதை! தண்ணிய மட்டும் குடிக்காதே… மேல‌ வா! அண்ணே இருக்கேன்!” விடாமல் காதுக்குள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க, தண்ணீர் பாசி படிந்து,‌ பாழடைந்த கிணற்றுக்குள், அரை மயக்கத்தில் இருந்த மதன் மெதுவாக, மூழ்கிக் கொண்டிருந்தான். மூச்சு அடைத்தது. கழுத்து நரம்புகள் புடைத்தன. இரத்தமெல்லாம் தலைக்கு ஏற,‌ தலை விண்ணெனத் தெறித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவு அவனை விட்டுத் தூரம் ‌போய்க்கொண்டிருந்தது.

“டேய்… மதன்!” கிணறே அதிரும்படியாக ஒரு அதட்டல் குரல், கிணற்றுச்சுவரெங்கும் எதிரொலித்தது. ஒரு கணம், மதனின் இதயம் நின்று துடித்தது செவியறைந்த குரலில். 

“காலை உந்துடா! கைய வீசி தண்ணியத் தள்ளுடா!” என்று மீண்டும்‌, மீண்டும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. முற்றிலுமாக நினைவை இழக்கும் முன், யாரோ தன் உச்சி முடியைப் பிடித்திழுப்பது போலிருந்தது. நம்பிக்கை துளிர் விட, கால்களை உந்தி, கைகளை தண்ணீருக்குள் அலைந்தான். மெல்ல மேலெழும்புவது போலிருக்க, கையும், காலும் சற்றே வேகமெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் மேல் மட்டத்திற்கு வந்தவன், தலையைத் தூக்கி, வேகமாக இழுத்து மூச்சுவிட்டான். கண்ணுக்கு எதுவும் புலப்படாத கும்மிருட்டு. கண்களை நன்றாக விரித்து, நினைவுகளை ஒன்றுதிரட்ட முயற்சித்தான். முயற்சி மட்டுமே‌ செய்ய முடிந்தது.

“அவ்ளோதான்டா நீச்சல். இதுக்குப் போயி இவ்ளோ பயந்துட்ட! இனி யாரும்‌ உன்னை‌ அசைக்க முடியாதுடா!” அருண் கலகலத்து சிரிப்பது காதோரம் கேட்டது. ஜிம்மென உடல் புல்லரித்துவிட்டது மதனுக்கு. 

தட்டுத் தடுமாறி கிணற்றுத் திட்டைப் பிடித்தவன், தண்ணீரை விட்டு, முயன்று ஏறி திட்டில் புரண்டு விழுந்தான். 

வாய் தன்னால், “அருண் அண்ணா!” என்று முணுமுணுத்து விட்டு, கண்கள் சொறுகியது. நினைவு மயக்க நிலைக்குச் சென்றது. வயிற்றில் கத்தி கிழித்த காயத்திலிருந்து இரத்தம் வடிந்து, செடி, கொடிகள் பிண்ணிக்கிடந்த பாழடைந்த கிணற்று நீரில் கலந்தது. 

சட்டெனத் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள்‌ மாதங்கி. ஏசி அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top