22
“நம்ம யாரை முழுசா நம்புவோம் மதி! பெத்தவங்களைத்தானே? ஒரு பிள்ளை நிம்மதியா, ராத்திரியில பயமில்லாமத் தூங்குதுன்னா பக்கத்துல அப்பாவும், அம்மாவும் இருக்காங்கங்கற தைரியத்துல தானே?” மடியில் தலை வைத்திருந்தவன் அண்ணார்ந்து முகம் பார்த்துக் கேட்க,
“ம்ம்ம்” என்று மட்டும் தலையசைத்தாள். அவன் முகத்தில் தெரிந்த மாற்றங்களைப் படிக்க முயற்சித்தாள். எந்த உணர்ச்சியுமற்று கடினப்பட்டிருந்தது.
“முன்னப்பின்னத் தெரியாதவங்க ஏதாவது கொடுத்தாத்தானே வாங்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா… அம்மா கொடுத்தாலும் வாங்கக் கூடாதுன்னு எனக்கு அன்னைக்கித் தெரியாது மதி!” என்றவன் குரல் கனத்து, முகம் கருத்தது.
மடியில் தலை வைத்திருந்தவன் பார்வை இப்பொழுது விட்டத்தை வெறித்திருக்க, தொண்டைக்குழி ஏறியிறங்கியது. எதையோ கடினப்பட்டு கடக்க விளைவது புரிந்தது. குரலில் இன்னதெனப் பிரித்தறிய முடியா உணர்வு. வலியா? விரக்தியா? இல்லை எதுவுமற்ற வெறுமையா?
கட்டுப்படுத்திய கண்ணீர், கட்டுப்பாட்டை மீறி கரையுடைத்து, கடைக்கண் கடந்து காதுமடல் தொட்டது. காதோடு உள்ளங்கையால் கண்ணீரைத் துடைத்துவிட்டவளது தளிர்க்கரங்கள் மென்மையாகத் தலையைக் கோதிக் கொடுத்தது. துடைத்த கையைப் பிடித்துக் கன்னத்தோடு சேர்த்து அழுத்திக் கொண்டான். அவளது உள்ளங்கை வெம்மை அவனுக்குத் தேவையாயிருக்க, எதுவும் பேசவில்லை. சற்று நேரம் கனத்த அமைதி அறையெங்கும் வியாபிக்க, அவனே பேசட்டும் என அமைதிகாத்தாள். எந்தப் பூதம் கிளம்புமோவென அவள் முகமும் தவிப்போடு அவன் முகத்தையே பார்த்திருந்தது. பேருந்து பயணத்தின்போது பின்னோக்கி செல்லும் மரங்களின் அணிவரிசையாய் அவன் நினைவுகளும் அவனைப் பின்னோக்கி இழுத்தன.
“கண்ணு… எந்திரி சாமி… கண்ணத் தொறந்து பாரப்பு. நீயும் எங்கள ஏமாத்திறாத ராசா!”
சாமியிடம் வரம் கேட்கும் பக்தையாய் இரு கரம் ஏந்தி பேரனிடம் பெரியநாயகி மன்றாடிக் கொண்டிருந்தார். அவரது வேண்டுதல், கண்களை மூடிப் படுத்திருந்தவன் செவிப்பறையைத் தீண்டாமலே சென்றது. மூன்று நாட்களாக உயிர் மூச்சை உபகரணங்கள் உதவியோடு பிடித்து வைத்திருப்பவனைப் பார்த்த பெரியநாயகியின் கண்களில் கண்ணீர் கூட வற்றிவிட்டது.
பெற்ற மகனையும், மருமகளையும் இழந்த துக்கத்தைக் கூட விழுங்கி ஏப்பம்விட்டது பேரனின் நிலமை. வெட்டி, வெயிலில் போடப்பட்ட குறுத்துவாழையாய் படுக்கையில் துவண்டு கிடந்தான் பத்துவயது மதன்கைலாஷ். இரண்டு நாட்களாக கண்ணில் கூட காட்டாமல், அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்தவனை இன்றுதான் பத்தி நிமிட அவகாசத்தில் பேரனை முதன் முதலாகக் கண்ணில் பார்க்கிறார்.
‘பாவிமகளுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? எங்குலசாமிய அழிக்கப்பாத்தாளே?’ நினைக்க, நினைக்க நெஞ்சாங்குலை அறுத்தது.
தங்களுக்குப் பிடிக்காவிட்டாலும், அவனுக்குப் பிடித்த வாழ்க்கையில் கண்காணா தூரதேசத்தில், மகன் மகிழ்ச்சியாக இருப்பான் என எண்ணிக் கொண்டிருக்க, கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி… செய்தித்தாளில் ஒரு மூலையில் வெளிவந்த செய்தி. தினமும் எத்தனையோ செய்திகளை இதுமாதிரி படித்துவிட்டு, மூன்றாம் நபராய் கடந்திருக்க, இரண்டு நாட்கள் கழித்து தான் பெற்றவர்கள் தலையில் நெருப்பை வாரிக் கொட்டியது அந்தச்செய்தி. மருமகள் பெயரும், பேரன் பெயரும் தெரிந்திருந்தால்தானே அந்தச் செய்தியை உற்றுக்கவனிக்க. ஏதோ ஒரு குணசேகரன் குடும்பம் என்றுதான் கடந்திருந்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் சென்னையில் குணசேகரைப் பார்த்துவந்த உறவினர் ஒருவர், “உங்க சின்ன மகன் கஷ்ட்டத்துல இருக்குறமாதிரி இருக்கு. நான் கூட ஊருக்கு வரச்சொன்னேன். நான் சொன்னா வருவாப்படியா. நீங்க போய் ஒருதரம் கூப்பிடுங்க சித்தப்பா!” பங்காளி ஒருவர் தகவல் சொல்லியிருந்தார்.
“அவனே வரட்டும். கஷ்ட்டப்பட்டா தான் அவனுக்குத் தெரியும். அவனுக்கே அவ்வளவு வீம்பிருந்தா, அவனப்பெத்தவன் எனக்கு எவ்வளவு இருக்கும்!”
இந்த வயதிலும் விக்கிரமாதித்தனாய் வரட்டுக் கௌரவமெனும் வேதாளத்தை தோளில் போட்டுத்திரிந்தார் சிவகைலாசம். பெரியநாயகியின் கண்ணீர்கூட அவரை அசைக்கவில்லை.
ஒரு வயது மகனைத் தூக்கிக் கொண்டு குலதெய்வம் கும்பிடவென ஒருமுறை ஊருக்கு வந்திருந்தார் குணசேகரன். சாதிவிட்டு சாதி திருமணம் செய்தவனுக்கு கோவிலுக்குள் இடமில்லையென உற்றாரும், உறவினரும் மறுப்புத் தெரிவிக்க, உங்க சாதியும் வேண்டாம். சாமியும் வேண்டாம் என சென்றுவிட்டான். அதுதான் குணசேகரன் குடும்பத்தோடு ஊருக்கு முதலும், கடைசியுமாக வந்து சென்றது.
அப்பொழுது கூட காரில்தான் வந்திருந்தார். கண் நிறைந்த காதல் மனைவி, கை நிறக்க ஆண் குழந்தை, நல்ல வேலை, நல்ல சம்பளமென தனி தேஜஸ் குணசேகரன் தோற்றத்தில். எட்டி நின்று மகனையும், பேரனையும் பார்த்த பெரியநாயகிக்கு மனமும், கையும் பரபரத்தது பேரனைத் தூக்கிக் கொஞ்ச. கணவருக்கும், சொந்தங்களுக்கும் பயந்து, குறிப்பாக வாசுகிக்கும், தன் தம்பிக்கும் பயந்துமே ஆசையை அடக்கிக் கொண்டார். குணசேகரன் வேற்று சாதிப் பெண்ணை காதல் திருமணம் முடித்து ஊரைவிட்டுச் செல்ல, “எம்மகள நம்பவச்சு ஏமாத்திட்டீங்ளே?” என தம்பியின் வாயில் அதிமாக அரைபட்டது பெரியநாயகிதான்.
அது தான் கடைசியாக மகனைப் பார்த்தது. அதன் பிறகு இதோ பேரனை குற்றுயிரும், குறை உயிருமாகப் பார்க்கிறார். ஆபத்துக் கட்டத்தைக் கடந்தும் இன்னும் கண் விழிக்கவில்லை.
அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக இரண்டு படுக்கையறை கொண்ட வீடு, கார் என தேவைக்கு மிஞ்சியில்லை எனினும் தேவைக்குத் தாராளமாகவே இருந்தது வருமானம். எல்லாம் தவணையில் வாங்கியது. நல்ல சம்பளத்தில் ஐ.டி. வேலை. கையில் சர்வதேச வங்கிகளின் கடன் அட்டை.(Credit card)
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மென்பொருள் நிறுவனங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டம். அரசாங்க உத்தியோகத்தர்கள் பத்தாயிரத்திற்கும், பதினைந்தாயிரத்திற்கும் துருப்பிடித்த ஃபேனுக்கடியில் குப்பைகொட்டிய காலகட்டங்களில், கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் வளாக நேர்காணல் மூலம், வேலையும் கொடுத்து, எடுத்தவுடன் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என சம்பளமும் அள்ளிக் கொடுத்தது. (பவுன் விலை நான்காயிரத்தி சொச்சம் காலகட்டம்). காளான் போல் இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆங்காங்கே திடீரென முளைத்தன. வீட்டிற்கு ஒரு இன்ஜினியர் கட்டாயமாக உருவாக்கப்பட்டார்கள்.
பேச்சிலரா… வாடகைக்கு வீடில்லை, என்றவர்கள் கூட ஐ.டி கம்பெனியில் வேலையா, வீடும் உனக்குத்தான். பெண்ணும் உனக்குத்தான் எனத் தேடித்தேடி வலிய பெண் கொடுத்த காலகட்டம். இன்று தங்கம் விலை நாளுக்கு நாள் எகிறுவது போல் அன்று, சென்னையில் வீட்டு வாடகையெல்லாம் ஜெட் வேகத்தில் எகிறியது ஐ.டி.நிறுவனங்கள் வாரிக் கொடுத்த வருமானத்தில். ஜாவா சுந்தரேசனாக கலக்கு கலக்கு என கலக்கினார்கள் ஐ.டி துறை ஊழியர்கள். (அறை எண் 305ல் கடவுள்)
இரட்டைக் கோபுரம் தகர்ப்பிற்குப் பிறகு பல ஐ.டி. நிறுவன ஊழியர்களும் பெரும் சரிவைச் சந்தித்தனர். 2005க்குப் பிறகு(2007-2012) அமெரிக்க பங்குச்சந்தை ஒரு மாபெரும் பொருளாதாரச் சரிவை எதிர் கொண்டது. அதன் எதிரொலி உலகெங்கும் ஒலித்தது. தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிக்கட்டுவதுதானே பங்குச்சந்தையின் நெறிமுறை. உலகளவில் நெறிக்கட்டத்தான் செய்தது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தடாலடியாக ஆட்குறைப்பென, ஊழியர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது கேள்வி கேட்பார் இன்றி.
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக, அதை நம்பி தவணை முறையில் வீடு, கார், கடன் அட்டையைத் தேய்த்தவர்கள் எல்லாம் தெருவுக்கு வந்தநிலை. திடீர் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளப் பயந்து சிலர் தற்கொலை கூட செய்து கொண்டனர்.
ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களில் குணசேகரனும் ஒருவர். கைநிறையச் சம்பளம், கார், வீடு, இன்டெர்நேஷனல் பள்ளியில் மகனுக்குப் படிப்பு என இருந்தவர்களால் இந்த திடீர்ச்சரிவில் நிலைகொள்ள முடியவில்லை. வெகுவாகக் தடுமாறித்தான் போயினர். சிறுவயதில் கஷ்ட்டப்பட்டு வளர்ந்தவர் என்றால் இந்தச் சரிவை சமாளித்திருக்க முடியுமோ என்னவோ. தனசேகரன் வீட்டிற்கு மூத்த பிள்ளையாக, அப்பாவிற்குத் தோள் கொடுக்க, ராஜாவீட்டுக் கன்றுக்குட்டியாக, எந்தத் தலையீடுமில்லாமல் துள்ளித் திரிந்தவர் குணசேகரன்.
தவணை கட்டமுடியாமல், வீடும், காரும் கைவிட்டுப் போனது. அடுத்த வருடம், சாதாரண பள்ளியில் மகனைச் சேர்க்க, பள்ளிக்குப் போகவே அழுது அடம்பிடித்தான் மதன்கைலாஷ். அவனுக்கு பள்ளியைவிட, கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு வளாகத்தையும், நண்பர்களைப் பிரிந்ததும் தான் அவனது அழுகைக்கான முக்கியக் காரணம். சிறுபிள்ளை மனது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவனது வாழ்வில் முதல் இடமாற்றம். புதிய இடம், புதிய பள்ளி, புது நண்பர்கள் என அவனால் எளிதில் கைகோர்க்க முடியவில்லை. பள்ளிப் பேருந்தில் சென்றவன், தினமும் நடந்து பள்ளிக்குச் செல்லவே அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். படிப்பிலும் கவனம் குறைந்தது.
காதல் மனைவி, ஆசை மகன், அமைதியான குடும்ப வாழ்க்கையென இனித்திருந்த காதல் வாழ்க்கையின் அஸ்த்திவாரம் மெள்ள ஆட்டம் காண ஆரம்பித்தது.
வருமானத்திற்கு ஏதோ ஒரு வேலை. கைக்குப் பத்தாத சம்பளம். வரிசை வீட்டில் வாடகைக் குடித்தனம் என வாழ்க்கையின் தரம் தடமாறிப்போக, கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்னதாய் ஆரம்பித்த வாய்ச் சண்டைகள், பரிணாம வளர்ச்சி பெற்று எல்லாம் இந்தப் பாழாய்ப்போன காதலால் தான் என ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குறைபடிக்க ஆரம்பிக்க, விரக்தியில் கணவன் மனைவிக்கிடையில் காதல் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒழிந்து கொண்டது. மனைவி, பிள்ளையுடன் சிரித்துப் பேசி எத்தனை நாட்களாயிற்று என்று எண்ணிப்பார்க்கக்கூட மறந்துவிட்டார். வாரக்கடைசி என இருந்த மிதமான சோஷியல் ட்ரிங்க் வாரம் முழுமைக்கும் என்றானது குணசேகருக்கு.
பெற்றவர்களைத் தேடிப் போகவும் வைராக்கியம் இடம் கொடுக்கவில்லை. திருமணம் முடித்து சென்றபொழுதே சொத்துமில்லை, உறவுமில்லையென விடுதலைப்பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டனர். மறுமுறை மகனோடு சென்ற பொழுது கோவிலுக்குள்கூட விடவில்லை. அந்த அவமானமே அவரை ஊர்ப்பக்கம் தலை வைத்துப்படுக்கக்கூட விடாமல் வீம்பாக இருக்கவைத்தது. நல்ல நிலையில் போவதென்பது வேறு. இந்த நிலையில் போனால் தன் வீட்டிலேயே தனக்கு மதிப்பிருக்காது. மனைவி, மகனை எப்படி மதிப்பார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என தன்னை வேண்டாமென ஒதுக்கியவர்கள் சொத்தும் தனக்கு வேண்டாமென ஒதுங்கிவிட்டார்.
காதல் திருமணம் என்பதால் மனைவி பக்கமும் மொத்தமாக கைகழுவி விட்டனர்.
சிறுவயதில் இருந்தே தாராளமாக செலவு செய்து பழக்கப்பட்டவரால் கையைக் கடிக்கும் சம்பளத்தில், பல்லைக் கடித்து சமாளிக்க முடியவில்லை. சொந்தமாகத் தொழில் தொடங்கலாமென முடிவெடுத்து, வங்கிக் கடன் வாங்கி தொழில் தொடங்க, தொட்டதெல்லாம் நட்டமென கடன் கழுத்தை நெறித்தது.
மனைவி, மகனை பழையபடி வசதியாக வாழவைத்துப் பார்க்கவேண்டும் என்பதில் ஒரே குறிக்கோளாக இருந்த குணசேகரன் மனைவியிடம் மனதளவில் தோன்றியிருந்த சிறுசிறு மாற்றங்களைக் கவனிக்கத் தவறியிருந்தார். பராமரிப்பில்லாத வீடு, ஆங்காங்கே கிடக்கும் அழுக்குத் துணிகள், எண்ணெய்ப்பிசுக்குப் படிந்த அடுப்படி, மகனின் படிப்பில் மனைவியின் கவனக்குறைவு, திடீரென உடல் எடை மாற்றம், தன்னைக் கூட சரியாக பராமரித்துக் கொள்ளாத ஏனோதானோவெனத் தோற்றம் எல்லாம் அவர் கண்ணில் பட்டும் கருத்தில் பதியவில்லை.
காதல் கணவனின் பாராமுகம் மௌனப்புயலாக மனதளவில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது சஞ்சனாவிற்கு. எல்லாம் நம்மால் தானோ. அவரது சொந்தத்தில் திருமணம் செய்திருந்தால் ராஜா மாதிரி வாழ்ந்திருப்பாரோ என்ற குற்ற உணர்ச்சி அவரை உள்ளுக்குள் துளித்துளியாக அறிக்கத் தொடங்கியது.
அது அவ்வப்போது மதன் மீது கோபமாகக் திரும்பியது. அவன் பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த பொழுதும், படிக்க முரண்டு பண்ணிய போதும் அடி வெளுத்து விடுவார் சஞ்சனா. அது குணசேகருக்கு பிள்ளையின் படிப்பின் மீதான கண்டிப்பாகவே பட்டது. சற்று ஊன்றிக்கவனித்திருந்தால், பிறந்ததிலிருந்து செல்லமாகக் கூட மகன் மீது கைவைக்காத மனைவியின் தற்போதைய மாற்றம் பிடிபட்டிருக்கும்.
அப்பொழுதுதான் தனது பங்காளி ஒருவரை சந்திக்க நேரிட்டது குணசேகரனுக்கு. அவர் மூலம் தனது குடும்ப நிலவரம் அறிந்தவர், சீதாலட்சுமி கணவர் இறந்து, ஒரு பெண்பிள்ளையோடு பிறந்த வீட்டோடு வந்துவிட்டதைக் கேள்விப்பட்டவர் இடிந்து போனார்.
தனது மாமாவின் மகள் என்பதையும் தாண்டி தன் மீது ஆசை வைத்திருந்தவள்.
சீதாலட்சுமி வாழ்க்கை வீணாணனதற்கும் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வு மேலோங்க, முழு போதையில் வீடு வந்தவர், “அவளைக் கட்டியிருந்தாலாவது, அவள் வாழ்க்கையாவது நன்றாக இருந்திருக்கும். உன்னைக்கட்டி வீணானதுதான் மிச்சம். என்ன பெரிய காதல், கருமாந்திரம்.” போதையில் வாய்க்கு வந்ததை உழற, சஞ்சனாவிற்கு மனதளவில் விரிசல் விட்டிருந்த கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கிப்போயிற்று.
உன்னைக்கட்டி உன் வாழ்க்கையும் வீணானதுதான் மிச்சம்… என்று கூட சொல்ல விழைந்திருக்கலாம். போதையில் வார்த்தை தடுமாறியிருக்கலாம். தடுமாறிய வார்த்தை வாழ்க்கையைத் தடமாற்றிப் போட்டது.
இத்தனை நாட்களாக வாழ்ந்த வாழ்க்கை என்னவென்ற கேள்வி எழுந்தது சஞ்சனாவிற்குள். காதலின் ஆணிவேரே ஆட்டம் கண்டபிறகு, செடி மீண்டும் துளிர்ப்பது எங்கனம்.
சைலன்ட் கில்லர் போல் கொஞ்சம் கொஞ்சமாக மனதை அறித்துக்கொண்டிருந்த மனப்பிறழ்ச்சி காதல் கணவனின் வார்த்தைகளில் விஸ்வரூபம் எடுத்தது.
பிறந்தவீட்டாரின் ஆதரவின்மை, புகுந்த வீட்டாரின உதாசீனம், காதல் கணவனின் கசந்த வார்த்தைகள் எல்லாம் கூட்டு சேர்ந்து வெறுமையின் உச்சத்தில் ஏற்றிவைக்க, அதன் விளைவு தற்கொலை எண்ணம்.
மனப்பிறழ்ச்சி கொண்டவர்களுக்கு அந்த நேரத்தில் என்ன கண்ணில் படுகிறதோ அதுதான், நினைவில் நீங்கா இடம்பிடிக்கும். அந்த நேரத்தில் சஞ்சனாவின் கண்ணில் பட்டதும் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை எனும் செய்திதான்.
‘பெத்த பிள்ளைக்கி விஷம் கொடுக்க எப்படித்தான் மனசு வந்துச்சோ!” உச்சுக் கொட்டிவிட்டு சாதாரணமாக நாம் கடந்து செல்லும் ஒரு நிகழ்வு. ஆனால் சஞ்சனாவின் மனது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
“சஞ்சு… சஞ்சு… எந்திரிடீ…”
“மதன்… டேய்… அப்பாவைப் பாருடா! எந்திரிங்கடா!”
அன்றும் முழு போதையில் வந்து தான் மகனையும், மனைவியையும் எழுப்பிக் கொண்டிருந்தார் குணசேகரன். தூக்கம் என்றால்தானே விழிப்பதற்கு. இருவரும் மீளாத் தூக்கத்தில் இருக்க, மனைவியின் கன்னத்தில் அடித்து எழுப்பியும் எழாமல் போக பயப்பந்து வந்து கவ்வியது மனைவி படுத்திருந்த கோலத்தைப் பார்த்த குணசேகரனுக்கு. குப்பென முகம் வியர்த்து, சட்டென போதை வடிந்துவிட்டது. படபடத்த நெஞ்சோடு கன்னம் கன்னமாக அடிக்க, இருவரும் எழுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒரு சதவீதம் கூட இல்லை. அப்பொழுதுதான் அவர் கண்ணில் பட்டது தூக்க மாத்திரை காலிபாட்டில். எப்படி வாங்கினாள் என்றெல்லாம் தெரியாது. பாலில் கலந்து மகனுக்கும் கொடுத்து, தானும் குடித்திருந்தாள்.
“என்னம்மா, மில்க் ஓவர் ஸ்வீட்டா இருக்கு” என்றவாறு மகன் குடிக்கையில் என்ன நினைத்தாளோ, கண்கள் உடைப்பெடுக்க பாதி குடிக்கையில் போதுமென வாங்கிக் கொண்டவள், மகனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
பள்ளி செல்ல முரண்டுபண்ணிய பொழுதெல்லாம், அடி வெளுத்துவிட்டு, கண்கள் கலங்க கட்டியணைத்துக் கொள்ளும் வழக்கத்தில், இன்றும் கண்ணீரோடு அணைத்துக் கொள்ள, “அழாத மம்மி… இனிமேல் ஒழுங்கா ஹோம் வொர்க் பண்றேன். ஒழுங்கா ஸ்கூல் போறேன்” என்றான் அவனும் அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு.
“இனிமேல் நீ படிக்கலைனு அம்மா அடிக்கவே மாட்டேன்டா!” தலை கோதி, முகம் முழுக்க முத்தம் பதித்தார் கண்ணீர் உடைப்பெடுக்க. மகனை மடியில் போட்டு தலை கோதிக் கொடுக்க, சற்று நேரத்திற்கெல்லாம் மதனின் கண்கள் தூக்கத்தில் செருகியது. இனி எப்பொழுது பார்ப்பதென கண்ணீர் வடிய, வாஞ்சையாகப் பார்த்திருந்தாள் மகனின் பூ முகத்தை கண்ணெடுக்காமல்.
“இனிமேலாவது உங்க சொந்த பந்தங்களோட போய் சந்தோஷமா இருங்க!” கணவனுக்கு கடைசியாக குறுந்தகவல் அனுப்பியவள் கை தன்னால் துவண்டு விழுந்தது.
குறுந்தகவலைப் படிக்காமலேதான் வீடு வந்திருந்தார் குணசேகரன். மனைவியும், மகனும் கண்விழிக்காமல் போக, ஆம்புலன்சிற்கு அழைக்க அவசரமாக ஃபோனை எடுத்தவர், மனைவி அனுப்பிய குறுந்தகவலைப் படிக்க, அதன் பிறகு நொடியும் தாமதிக்கவில்லை.
பெற்றவர்களுக்கும் நல்ல மகனாய் இல்லை. நம்பியிருந்தவளுக்கும், நம்பி வந்தவளுக்கும் நியாயம் செய்யவில்லை. மனைவி, மகனை இழந்து, என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் என நினைப்பு வர, உடனே போதையின் பிடியில் சிக்கியிருந்தவன் மூளை, புத்தி பேதலிக்க, அவசரமாக மனைவியின் சேலையை எடுத்துப் போட்டு, ஃபேனில் தூக்குப் போட்டுக் கொண்டார், மகன் ஆழ்ந்த உரக்கத்தில் உயிரோடிருப்பது தெரியாமல்.
மறுநாள் அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி வந்த சண்டை, கடன் கொடுத்தோர் வந்து சென்றது என அவர்களாகவே கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி என்ற முடிவுக்கு வந்திருந்தனர். அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்திருந்தால் கணவன் மனைவி சண்டை நான்கு சுவற்றுக்குள் அடங்கியிருக்கும். இங்கு அதற்கும் வாய்ப்பில்லை. அடிக்கடி நடக்கும் கணவன் மனைவி, வாக்குவாதமும், கடன்தொகை வசூலிப்பவர்கள் வந்து சென்றதும் அந்த குடியிருப்பில் அனைவருக்கும் தெரிந்திருக்க, கடன் தொல்லை என்றே முடிவு கட்டியது காவல்துறையும்.
அவர்களது முழு விபரம் அக்கம் பக்கத்தினர் யாருக்கும் தெரியவில்லை. ஆம்புலன்சில் ஏற்றும் பொழுதுதான் சிறுவன் உயிரோடிருப்பதே தெரிந்தது. அதுவும் பால் குடித்து வெகுநேரமானதால், பிழைப்பது அரிதென்றுதான் அவசரப்பிரிவில் சேர்த்தனர்.
போலீசார் விசாரித்து இவர்களுக்குத் தகவல் வந்து சேரவே இரண்டு நாட்களாயிற்று.
சிவகைலாசமும், தனசேகரும், இடும்பனோடு அரக்கப்பறக்க சென்னை வந்து சேர்ந்தனர். விபரம் தெரிந்து, பெரியநாயகியை மட்டும் மகளோடு சென்னை வரவழைத்தார் சிவகைலாசம். மகன் தற்கொலை என்பதை மறைத்து விபத்து என ஊராருக்குச் சொல்லி, இருவரது இறுதிக் காரியத்தையும் சென்னையிலேயே முடித்துவிட்டனர். அதுவரை கண் விழிக்கவில்லை மதன்கைலாஷ்.
வயிறு புண்ணாகி நீர்க் கோர்த்து வீங்கிவிட்டது. மூன்றாம் நாள் கண் விழித்தவனுக்கு எதுவும் புரியவில்லை.
“கடைசியா அம்மா பால் கொடுத்தது தான் நினைவுக்கு வந்துச்சு மதி. அப்பறம் எதுவும் எனக்கு ஞாபகமில்ல. அம்மா எங்க, அப்பா எங்க போனாங்க… இவங்க எல்லாம் யாருன்னு கூட எனக்குத் தெரியல. அம்மாவைக் கேட்டு அழுதேன். அம்மாவும், அப்பாவும் வெளியூருக்குப் போயிருக்கறதாச் சொன்னாங்க. எனக்குத் தெரிஞ்சு எந்த ஊருக்கும் நாங்க போனதில்ல. அம்மாவும், அப்பாவும் இருக்குற ஊருக்குப் போலாம்னு இங்க கூப்பிட்டு வந்தாங்க. தாத்தா, அப்பத்தாகூட இங்க வரவே எனக்குப் பயம். புள்ள புடிக்கிறவங்களோனு பயந்தேன். அப்பத்தா தான் அழுது கூட்டிவந்தாங்க. இங்க வந்து போட்டோ எல்லாம் பாத்த பிறகுதான் நம்ம சொந்தக்காரவங்கனு கொஞ்சூண்டு நம்பிக்கை வந்தது. அப்பவும் யாரும் இங்க எனக்குப் பிடிக்கல. அம்மா, அப்பா ஞாபகம்தான். என்னைய மட்டும் எதுக்கு விட்டுப் போனாங்கனு கேட்டு அழுவேன். சாப்பிட முடியாது. முழுங்கும் போது தொண்டை வலிக்கும். வயிறெல்லாம் எரியும். வெறும் ஜுஸ் மட்டும்தான். வீட்டுக்கு வர்றவங்க பேசிக்கறதைவச்சு, அம்மாவும், அப்பாவும் உயிரோடு இல்லைங்கறது புரியவே எனக்கு ரொம்ப நாளாச்சு.”
முகத்தில் விழுந்த ஈரத்தில் பேச்சை நிறுத்தி விட்டு, மடியில் தலை வைத்திருந்தவன் அண்ணார்ந்து மனைவியின் முகம் பார்க்க அவள் கண்களில் இருந்து, நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது, தெரிந்துகொண்ட விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் தொண்டை அடைத்தது. பத்து வயதில் அவனுக்கு நடந்தது, ஏதோ இப்பொழுதுதான் நடந்தது போல் மனம் பதைபதைத்தது. பார்வை வெறிக்க, தலை கோதிய கை அப்படியே உறைந்து நின்றுவிட்டிருந்தது.
அதைக் கடந்துவிட்டவன் முகமோ வெறுமையைச் சுமந்திருந்தது.
