18
படிப்பது உன் விருப்பம் என்று சொன்னதோடு விடாமல், மறு நாளே, வீட்டில் பெரியவர்களிடம் சொல்ல, “அதுக்கென்னப்பு, தாராளமா படிப்பை முடிக்கட்டும்” என்றுவிட, கல்லூரிக்கு ஒரு மருத்துவச் சான்றிதழோடு அவளை அழைத்துச் சென்றுவிட்டான். அவள் விடுப்பு எதுவும் எடுக்காததில் கல்லூரிக்குத் தேவையான வருகைப்பதிவு போதுமான அளவு இருக்க, அதை பெயருக்கு வாங்கி வைத்துக் கொண்டது கல்லூரி நிர்வாகம். கழுத்தில் மின்னிய தாலிக்கயிறே மேற்படி கேள்விகளுக்கு தடைவிதித்தது. ஏப்ரல் இறுதி என்பதால் இறுதி செமஸ்ட்டரும் நெருங்கிவிட்டது. அவளும் ரேங்க் ஹோல்டர் என்பதாலும், பல போட்டிகளில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பல கேடயங்களை வாங்கி கொடுத்திருப்பதாலும், அவளுக்கு சலுகை காட்டியது கல்லூரி நிர்வாகம்.
அதற்கு மறுநாளில் இருந்தே கல்லூரி செல்ல ஆரம்பித்துவிட்டாள்.
மதன் பைக்கில் கொண்டு போய் விடவா என்றதற்கும் அன்று ஒருநாள் பைக்கில் வந்த அனுபவத்தை நினைத்துப் பயந்தவள், தானாகவே போய்க்கொள்வதாகக் கூறிவிட்டாள். அதன் பிறகு மறுத்ததை நினைத்து, ‘வட போச்சே!’ ஃபீலிங்கில் நொந்து கொள்ளாத நாளில்லை.
வீட்டிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் நடக்கும் தூரம்தான். அவர்கள் கல்லூரிப் பேருந்தே அவ்வழியாக வரும் என்பதால் அதிகம் சிரமமில்லை. ஏற்கனவே கல்லூரிப் பேருந்தில் தான் சென்றுகொண்டிருந்தாள். இப்பொழுது ரூட் மட்டும் மாறியது. ஆனால், இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்க, ஒரு செமஸ்ட்டருக்கான பேருந்து கட்டணத்தையும் மொத்தமாகக் கட்டச் சொன்னது நிர்வாகம். அதுதான் ரூல்ஸ் என்றது.
“நான் சிட்டி பஸ்லயே போய்க்கிறேன். லேடீஸ்க்கெல்லாம் ஃப்ரீ தானே?” என்றாள். அவனைப் பற்றி ஜெகன் கஞ்சன் என கிண்டல் செய்வதை வைத்து, தண்டச் செலவு என நினைத்து விடுவானோ, நாமும் தேவையில்லாத செலவை அவனுக்கு இழுத்து விடுகிறோமோ என உள்ளூர ஒரு தயக்கம். பெற்றவரே பிள்ளை படிப்பிற்கு செலவு செய்ய யோசிக்கும் பொழுது, கட்டியவன் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லையே.
“நீ எக்ஸாமுக்குப் படிக்கிற வேலைய மட்டும் பாரு. காலேஜ் பஸ்தான் சேஃப். எதெதுல கணக்குப் பாக்கணுமோ அதுல தான் பாக்கணும். சிட்டி பஸ்னா ஒரே பஸ் இந்த ரூட்டுக்கு வராது. ரெண்டு பஸ் மாறிப் போகணும், வரணும்!” என்று முடித்துக் கொண்டான்.
வாசுகிதான் கொஞ்சம் பொடுபொடுத்தார். “இவ எந்திரிச்சு… சீவிச் சிங்காரிச்சு பேக்கை மாட்டிக்கிட்டு கிளம்பிறுவா. இவளுக்கு தொண்டூழியம் பாக்குறது யாரு?” என்பார்.
இதே வாசுகி தான் “கல்யாணத்திற்குப் பிறகு குறை படிப்பை முடித்துக் கொள்ளட்டும், ஊரு உலகத்தில நடக்காததா” என சலுகைகளை அள்ளி வீசி, இதே பெண்ணை தன் மகனுக்கு பேசி முடித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்டிஷன்ஸ் அப்ளை என்பது விளம்பரப் பொருட்களுக்கு மட்டுமல்ல. உறவுகளுக்குள்ளும் தான்.
மண்குடமாகத் தெரிந்தது, மருமகள் உடைத்ததும் பொன் குடமாகிவிட்டது.
மாதங்கி எதையும் கண்டு கொள்ளாமல் கல்லூரி செல்லத் தொடங்கிவிட்டாள். ஆனால் காலையில் எழுந்து தன்னாலான வேலைகளைப் பார்த்து விடுவாள். அதிலெல்லாம் சுணக்கமில்லை. அம்மாவிற்கு உதவி பழக்கம் தான். இங்குதான் மேல் வேலைக்கெல்லாம் ஆட்கள் இருக்க, நறுக்கித் தருவதை அடுப்பில் ஏற்றி இறக்கும் வேலை மட்டும்தான்.
அசைவம் என்றால் மட்டும் பெரியநாயகியும், சீதாலட்சுமியும் யாரையும் அடுப்படிக்குள் விடுவதில்லை. இன்னும் சிறியவர்களுக்கு அவர்கள் கைப்பக்குவம் வரவில்லை. கல்லூரி விட்டு வந்தபிறகு பவித்ரா இவளை அடுப்படிக்குள் விடமாட்டாள்.
“நீங்க படிங்க நங்கையாரே!” என்று விடுவாள். அவளுக்கும் விடுபட்ட பாடங்கள் எல்லாம் நோட்ஸ் எடுக்க வேண்டியிருந்தது.
பவித்ராவும் வீட்டில் சும்மா இல்லை. வீட்டில் இருந்தபடியே சிஸ்ட்டத்தில் அவர்கள் கார்மென்ட்ஸ் கணக்கு வழக்கு எல்லாம் பார்ப்பது அவள் தான். குழந்தை பிறக்கும் வரை கார்மென்ட்ஸ் சென்று கொண்டிதானிருந்தாள். அதன் பிறகுதான் வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகை கொடுத்துவிட்டான். அதற்கென தனியே சம்பளமும் அவளுக்கு உண்டு.
அன்றும் கல்லூரிப் பேருந்தில் ஏறி, ஜன்னலோரம் அமர்ந்தவள், கன்னத்திற்கு கையை அண்டக் கொடுத்து, வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றாள். ஒரு நிறுத்தத்தில் பஸ் நிற்க, பஸ்ஸை ஒட்டிவந்து நின்ற பைக்கில் ஒரு இளம் ஜோடி. கழுத்தில் மின்னிய தாலிக் கொடியும், அப்பெண்ணின் முகத்தில் தெரிந்த பூரிப்பும், பைக்கை செலுத்தியவன் கையில், பெரு விரல் தவிர அத்தனை விரல்களிலும் இடம்பிடித்திருந்த மோதிரமும் புதுமணத்தம்பதிகள் என்பதைக் கட்டியம் கூற, அவர்கள் நடவடிக்கை அதை சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதம் செய்தது. இதற்கு மேல் ஒட்ட முடியாது எனும்படி, பசை போட்டு ஒட்டாத குறையாக அவன் முதுகோடு இழைந்து, நாடியை அவன் தோளில் பதித்திருந்தாள் அப்பெண். சுற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை இருவருக்கும். இந்த உலகத்தில் அவர்கள் இருவர் மட்டுமே என்பது போல் ஏகாந்த நிலை.
பஸ்ஸில் அமர்ந்திருந்தவளும் தனை மறந்து அவர்களையே வேடிக்கை பார்க்க, தோளில் முகம் பதித்திருந்தவள் கன்னத்தில், சட்டென்று திரும்பி முத்தம் வைத்தான் வண்டியில் அமர்ந்திருந்தவன்.
விலுக்கென நிமிர்ந்தவள், கீழே விழுந்ததும் யாரும் பார்த்துவிட்டார்களா என அவசரமாக எழுந்து, அக்கம் பக்கம் பார்க்கும் சிறுபிள்ளை போல், இவள் பார்த்ததை யாரும் பார்த்தார்களா என்றுதான் முதலில் பார்த்தாள். இவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.
“அடப் பக்கிகளா! பப்ளிக்கா ஷோ காட்டுதுங்க” என்றவள் மனம், ‘’அதுங்க காட்டினா… நீ ஏன் பாத்தே?’ என்று இடித்துரைத்தது.
‘ரோட்லயே எல்லாம் பண்ணிட்டா வீட்ல போயி என்னடா பண்ணுவீங்க?’ மௌனம் பேசியதே பட டயலாக் தான் நினைவிற்கு வந்தது.
புன்சிரிப்போடு பார்வையை வேறுபுறம் திருப்ப, அடுத்த வண்டியில் இன்னொரு ஜோடி. அந்த ஜோடி சேலையில் இருந்ததால் ஒரு பக்கமாக அமர்ந்து இடுப்பை வளைத்துப் பிடித்திருந்தது பெண். தோள் வழியாக எட்டிப் பார்த்து ஏதோ சொல்ல இருவருக்கும் முகம் கொள்ளா சிரிப்பு. இன்னைக்கி எல்லாரும் ஒரு மார்க்கமாக இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. கம்பியில் கை மடக்கி வைத்து, தலையைக் கவிழ்த்து படுத்துவிட்டாள். வெளியே பாத்தாதானே கண்டதும் கண்ணில் படும்.
வீட்டிற்கு எதையோ எடுக்க வந்தவன், கல்லூரிப் பேருந்து நிற்பதைப் பார்த்துவிட்டு, பஸ் ஏதும் பழுதோ என நினைத்துக் கொண்டே பைக்கின் வேகத்தை குறைக்க, பேருந்தின் இடப்புறமாக ஒரு மாணவி ஓடி வருவது தெரிந்தது. அந்தப் பெண்ணிற்காக பஸ் நின்றிருப்பது புரிந்தது.
சன்னலோரம் அமர்ந்திருந்தவள் மீது பார்வையை ஓட்ட, ஐஸ்கிரீம் திண்பவர்களை வெறித்துப் பார்க்கும் சிறுபிள்ளை போல் எதையோ கண்ணெடுக்காமல் பார்ப்பது தெரிய, ‘இவ என்னத்தை அப்படிப் பாக்குறா’ என்று எண்ணியபடி அவள் பார்வை சென்ற திக்கை இவனும் பின்தொடர, அங்கே அரங்கேறிய முத்தக் காட்சியையும், அதைக் கண்டுவிட்டு இவள் ஏதோ தப்பு செய்ததைப் போல் திருதிருவென முழித்ததையும் பார்த்தவன் ரோட்டில் நிற்கிறோம் என்பதையும் மறந்து சிரித்துவிட்டான்.
அதன் பிறகு போகும் பொழுதும், வரும் பொழுதும், பைக்கில் தோளணைத்தோ, இடை அணைத்தோ செல்லும் ஜோடிகளைப் பார்த்தவளுக்கு, ‘வழக்கமா எல்லாரும் இப்படித்தானா? இல்ல…. நம்பல வெறுப்பேத்திப் பாக்கவே எல்லாரும் இப்படி போறாங்களா?’ என்று கூடத் தோன்றியது அவளுக்கு. பாவம் புள்ள, இப்பதான் கண்ணமுழிச்சு வெளி உலகத்தையே பாக்குது போல. எத்தனையோ முறை கண்ணில் பட்ட காட்சிதான், இப்பொழுதுதான் கருத்திலும் படுகிறது.
அவன் வண்டியில் கொண்டு விடுகிறேன் என்ற பொழுதே மறுத்திருக்கக் கூடாதோ என இப்பொழுதெல்லாம் அவளே ஏங்க ஆரம்பித்துவிட்டாள். அவனை நினைக்கும் பொழுதெல்லாம், குளிர்ந்த நீரோடையில் பாதம் நனைக்கும் சில்லிப்பு மனதிற்குள். அது பிடித்தும் இருக்கிறது. அது அவன் மீது வந்த பிடித்தமா என்பதைத்தான் பேதைமனம் பிரித்தறிய மறுக்கிறது.
அன்று ஞாயிற்றுக்கிழமை…
வாரம் ஒருமுறை பேத்தியைப் பார்க்க வருபவர்கள், இன்றும் வழமைபோல் இடும்பனும், பரிமளமும் காலையிலேயே வந்துவிட்டனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கார்மென்ட்ஸ் விடுமுறை. தனசேகரும், ஜெகனும் வீட்டில் இருந்தனர். காலை சாப்பாட்டை முடிக்க, இன்று அனைவரையும் தோப்பிற்கு வரச் சொல்லிவிட்டு மதன் கிளம்பிவிட்டான். மாதமொருமுறை சாப்பாட்டை ஆக்கி எடுத்துக் கொண்டு, தோப்பிற்கு செல்வது வழக்கம் தான். அவர்களது பிக்னிக் ஸ்பாட் அதுதான். மதன் பாஷையில் சொல்வதானால் பாக்கெட்டைப் பதம் பார்க்காத பிக்னிக் பாய்ன்ட். நீர் விளையாட்டிற்கு பம்ப் செட். வயிற்றைப் பதம் பார்க்காத இயற்கை குளிர்பானமாக இளநீர். சலசலத்த வாய்க்கால் தண்ணீர். ஓய்வெடுக்க மாளிகை மாதிரி வீடு. இயற்கையான தென்னைமரக் காற்று. ஆரோக்கியமான சுற்றுப்புறம். இதை விட என்ன வேண்டும். (ஆரோக்யா பால் மட்டும் மிஸ்ஸிங்.)
அவன் புல்லட்டில் முன்னால் சென்றுவிட்டான்.
மாதங்கிக்கு ஏனோ அன்று போல் இன்றும் புல்லட்டில் அழைத்துச் செல்லமாட்டானா என ஒரு கணம் மனம் எதிர்பார்த்தது. ஏங்கியது என்று கூடச் சொல்லலாம்.
அவன் சென்றுவிட, மதியச்சமையலை முடித்து எடுத்துக் கொண்டு அனைவரும் தோப்பிற்கு கிளம்பிவிட்டனர். சீதாலட்சுமிக்கும் அவர்களோடு செல்ல ஆசைதான். அக்கா வரமாட்டார் எனத் தெரியும். ஒத்தையில் விட்டுச் செல்ல மனமில்லாமல், இன்னொரு நாள் வருவதாக கூறிவிட்டார். தனசேகரன் சாப்பிட்டு முடிய அசதியாக இருந்ததால் படுத்துவிட்டார். சிறிது நாட்களாகவே சாப்பாடு செல்லவில்லை அவருக்கு. மகன் செய்த காரியத்தால் கவலையில் சரியாக சாப்பிடாமல் இருப்பதாக எண்ணிக் கொண்டனர் வீட்டார். பெண்கள் நாம் அழுது, கத்தி சண்டையிட்டு கோபத்தை ஆற்றிக் கொள்வோம். ஆண்கள் அப்படியில்லையே. எதுவாக இருந்தாலும் வீராப்பை விட்டுக் கொடுக்காமல் மனதிற்குள் வைத்தே புழுங்குவதுதானே வழக்கம்.
தனசேகரன் படுக்கச் சென்றுவிட, மற்ற அனைவரும் தோப்பிற்கு கிளம்பினர்
காரை விட்டு இறங்கியதும், வீட்டைப் பார்வையிட சென்றுவிட்டார் பெரியநாயகி. ஒரு காலத்தில் அவர் கட்டியாண்ட மாளிகை அல்லவா?
சஷ்ட்டிகாவை இறக்கி விட, தோப்பையே ஒரே நாளில் சுற்றிவிடும் ஆர்வம் அந்த கால் முளைத்த சிறு பூஞ்சிட்டிற்கு. எதை எடுப்பது, எதை வைப்பது, எங்கு ஓடுவது என ஒன்றும் புரியவில்லை அதற்கு. அவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டியாக சுற்றி வந்தது. தண்ணீர் ஓடும் வாய்க்காலை பார்த்ததும் ஆர்வமாக இறங்கி விட்டது. பாதம் மூழ்கும் அளவுதான் என்பதால் விளையாடட்டும் என விட்டுவிட்டனர்.
பிள்ளை மீது பார்வையை மட்டும் பதித்துக் கொண்டு சாவாகாசமாக கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டனர் பெரியவர்கள். நாத்திகள் இருவரும் தோப்பை பார்வையிட சென்று விட்டனர்.
அன்றுதான் மாதங்கிக்கே தெரியும்… தோப்பும், வீடும், அதைச் சுற்றியிருந்த வயலும் மதனுக்குச் சொந்தம் என்பதே. இதுவரை பொதுச்சொத்து என்றே எண்ணியிருந்தாள். பவித்ரா தான் பெரியப்பா பங்கு எதுவரை, மதன் பங்கு எதுவரை என சொல்லிக்கொண்டே வந்தாள். எல்லாவற்றையும் சுற்றிவரவே ஒரு நாள் போதாது எனத் தோன்றியது. நடந்ததில் பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது.
மதியம் சாப்பாட்டு வேளை நெருங்க, நரேன், சங்கர், வினய் மூவரையும் சாப்பிட அழைத்தான் மதன்.
“நீ கூப்பிடவே வேண்டாம் பங்கு. சோத்துச் சட்டியத் திறந்தாலே எங்கிருந்தாலும் மோப்பம் புடிச்சு வந்துருவோம்!” என்றான் சங்கர். இவர்களுக்கும் சேர்த்தே தான் சாப்பாடு எடுத்து வருவார்கள் என்பது தெரியும்.
அசைவத்தில் அத்தனை வகையும் இருந்தது. காட்டுக்குப் போனா காடிக்கஞ்சியும் காணாதாம். கறியும் சோறும் எந்த மூலைக்கு எனக்கேட்டது.
“அதென்ன அண்ணி எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்ட மாதிரியே இல்ல!” என்றாள் இன்று தான் முதன் முறையாக இந்த மாதிரி சூழலில் சாப்பிடுவதால்.
“அது அப்படித்தான். அப்படியே ஒரு சுத்து நடந்துட்டு வந்தா மறுபடியும் பசிக்கும்” என்றாள்.
“இப்படியே சாப்பிட்டா அவ்வளவுதான்… வாசலை இடிச்சு தான் கட்டணும்” என்று சிரித்தாள். இதமான சூழ்நிலையில் இலகுவாகப் பேசினாள்.
சாப்பிட்டு முடித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, தூங்கி வழிந்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் பவித்ரா.
பரிமளமும், இடும்பனும் ஒரு கட்டிலிலும், பெரியநாயகியும், மாதங்கியும் ஒரு கட்டிலிலும் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு எதிரில் ஓடும் வாய்க்காலில் காலை நனைத்தவாரு, கரையில் அமர்ந்த மதன்,
அத்தையிடம் தனது எண்ணத்தை முன் வைக்க,
“அடேய்… என்னாங்கடா இது? என மகனிடமும், மதனிடமும் கேட்டவர்,
“என்னம்மா இவனுங்க என்னைப் பேசச் சொல்றானுங்க. அண்ணங்கிட்ட இப்ப இதப்பத்திப் பேசமுடியுமா?” என்றார் பெரியநாயகியிடமும்.
“எனக்கு இதப்பத்தி எதுவும் தெரியாது. உங்க பேத்திக்கு நீங்க விசேஷம் வைக்கப்போறீங்க. யாரைக் கூப்பிடணும், விடணும்னு நீங்கதான் முடிவு பண்ணனும்! பிள்ளைக்கி தாய்மாமனுக சபை நிறக்க நிக்கணும்னா உங்க அண்ணன் மகனைக் கூப்பிடு!” பெரிய இக்கணாவாக வைத்து பெரியநாயகி பெரும்போக்காகக் கழன்று கொள்ள,
‘நாஞ்சொல்லல? அப்பத்தா வீரமெல்லாம் செல்லுபடியாகாதுன்னு’ எனும்படி அடக்கிய சிரிப்போடு மச்சானைத் திரும்பிப் பார்த்தான் மதன்.
“என்னங்கம்மா… இப்படி யாரோ எவரோங்குற மாதிரிப் பேசறீங்க?”
“பொறவு… சின்னவன் பண்ணிவச்சுருக்குற காரியத்துக்கு உங்க அண்ணங்கிட்ட தலை கொடுக்க நம்மால ஆவாது!”
“பாத்தீங்களாடா… உங்க ஆத்தாவே மகன் கிட்டப் பேசப் பயப்படுறத. நாள் சென்டாக்கூடப் பரவாயில்லடா. இல்ல, ஒரு புள்ளகுட்டி வந்தாக்கூட அதைக் காரணங்காட்டி, இனி என்ன பண்ணமுடியும்னு கூப்பிடலாம். உடனேன்னா எப்புடீடா” என்றார் பரிமளமும்.
பத்து பதினைந்து நாட்களில் அவனைக் கூப்பிட வேண்டுமென்று சொன்னால் இவருக்கே மனம் ஒப்பவில்லை. நன்றாகச் சீவி சிங்காரித்து, சபையில் வைத்து மூக்கறுத்த கதையாக குடும்பத்தையே தலை குனிய வைத்தவனை, எப்படி அழைக்க. அத்தையின் பிடித்தமின்மை மதனுக்குத் தெரியாமல் இல்லை. இருந்தும் அப்படியே கிரிதரனை விட்டுவிட மனதில்லை. இது அவனுக்காகவும் இல்லை. வாசுகிக்காகத்தான். அவர் உடல் நிலையை எண்ணித்தான். பெரியப்பாவும் கூட சற்று ஓய்ந்தாற் போல் தெரிந்தது அவன் பார்வைக்கு. வெளியே வீராப்பாகக் காட்டிக் கொண்டாலும், கோபம், வீம்பு எல்லாவற்றையும் விஞ்சியதல்லவா புத்திரபாசம். உடலும் சற்று மெலிந்தது போல் இருக்க, இந்தக் கல்யாணம் தந்த அழுத்தம் தானோ என்று எண்ணியே இந்த அவசர முடிவு. என்ன ஒன்று… வந்தால் ஆளாளுக்கு கோபமாகத் திட்டுவார்கள். அடிக்கவும் செய்யலாம். பெற்று வளர்த்தவர்களுக்கு அந்த உரிமை கூட இல்லையா? ஆனால், அதன் பிறகு. அடக்கி வைத்த கோபம், ஆத்திரம் எல்லாம் வடிந்துவிடும் அல்லவா? வெளியே காட்ட முடியாத கோபம் தானே ஒருவரை நோயாளி ஆக்குகிறது.
ஒரு வேளை அருணகிரி உயிரோடிருந்திருந்தால் இவனும் இதைக் கண்டு கொள்ள மாட்டானோ என்னவோ. பெரியம்மா சொன்ன மாதிரி ஒருத்தன் போனால் இன்னொருத்தன் என மனதை ஆற்றிக் கொண்டிருக்கலாமோ. ஆனால் பெற்ற மனம் எப்படி பிள்ளைகளுக்குள் ஓரவஞ்சனை பார்க்கும். இதையெல்லாம் யோசித்தவன் தான்,
“எதையும் சூட்டோட சூடாப் பண்ணனும் அத்தை! ஆறப்போட்டா வேலைக்காகாது. பெரியம்மாவையே லெஃப்ட் அன்ட் ரைட் வாங்குற ஆள் நீங்க. இதுக்குப் போயி பயப்படலாமா? வீராதி வீரி, சூராதி சூரின்னெல்லாம் சொல்லி உங்களுக்குன்னு ஒரு இமேஜை உருவாக்கி வச்சுருக்கேன்” என உசுப்பேற்ற,
“நானாடா? நானெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்டா! வாசுகிகிட்ட எகிறுவேன்டா. சின்ன பிள்ளையிலருந்தே எங்களுக்குள்ள பழகிப் போச்சு… ஆனா, அண்ணேன்னா ஒரு அடித் தள்ளித்தான்டா நிப்பேன்! பெரியண்ணே அமைதியா இருக்குற மாதிரித்தான் தெரியும். கோபம் வந்தா சாது மிரண்டால் காடு கொள்ளாதுங்கற கதைதான்.” பரிமளம் பயந்து ஜெகா வாங்க,
“பரவாயில்லத்தை, இந்த தடவை அந்தக் கோட்டை அழிங்க! உங்களை நம்பி வந்த எங்களை ஏமாத்திப்புடாதீங்கோ அத்தை!” அப்பிராணி போல் முகத்தை வைத்துக் கொண்டு நாடக பாணியில் மதன் கேட்க,
“அம்மா… அவன் நடிக்கிறான். ஏமாந்துறாதீங்க!” ஜெகன் எடுத்துக் கொடுக்க,
“இதுக்கு மேல அத்தைய ஏமாத்தி பொண்ணா மாம்ஸ் கட்டப்போறேன்?” என்றவனை, கண்கள் சுருக்கிப் பார்த்தவள் கண்களில் மெலிதாக கோபத்தின் சாயல். பொண்ணு கேப்பீகளோ எனும்படி.
“பொண்ணு மட்டும் இருந்திருந்தா உன்னைய வெளியே பொண்ணெடுக்க விட்டுறுப்பேனாக்கும்? குறுக்கால விழுந்தாவது மறிச்சிருக்க மாட்டே?” பரிமளம் உரிமைக்கு கொடி பிடிக்க,
“இப்புவும் ஒன்னும் நட்டமாப் போகலத்தை… வெளிநாட்டுல எல்லாம் ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம். வேணும்னா மாம்ஸ ரெண்டாந்தாரமா நம்ம பங்கு கட்டிக்கட்டும்.” சொல்லிக்கொண்டே இளநீர்க் குலையோடு நரேன் அங்கே வர,
“பாப்பாத்தி மகனுக்கு எகத்தாளம் கூடிப் போச்சுடா! இரு, உங்க ஆத்தாளப் பாத்தா சொல்லி வைக்கிறேன். கவனமா இரு பாப்பாத்தி. உனக்கு மருமகளுக்குப் பதிலா மருமகன் வந்திரப்போறான்னு!”
நரேன் அசராமல், “அப்பவும் என்னோட முதல் சாய்ஸ் ஜெகன் மாம்ஸ்தான் அத்தை! ஒரே சாமி கும்பிடறதால, இவன் தான் பங்காளி முறையாப் போயிட்டானே?” என்று மதனை கை காட்டிவிட்டு, அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெகன் கன்னத்தைக்கிள்ளி, “என் செல்லம்” என முத்தம் வைக்க,
“ச்சை… கருமம் புடிச்சவனுங்களா… தள்ளிப் போங்கடா அங்கிட்டு” பரிமளம் அடிக்காத குறையாக விரட்ட, பார்த்துக் கொண்டிருந்த பெரியநாயகியும், மாதங்கியும் கன்னம் வலிக்கச் சிரித்தனர்.
“எதுக்கும் இவங்கிட்ட தள்ளியே இருங்கடா. பய பேச்சு ஒன்னும் சரியில்ல!” என்றார் நரேனை மேலும் கீழும் பார்த்த இடும்பன்.
“பாப்பாத்தி மகனே! என்னைய வேணா கட்டிக்கிறியா… நாங்க வேற சாமி கும்பிடறவங்க தான்!” அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த அறுபது வயது மயிலாத்தா நரேனைக் வம்பிழுக்க,
நரேன், மதன் பக்கமாகக் குனிந்து, “கெழவிக்கு குசும்பப் பாத்தியாடா” என முணுமுணுக்க,
“நானும் உங்களுக்கு முறைமைதான் ஆத்தா. தாத்தாகிட்ட கேட்டுச் சொல்லுங்க. நான் வேணா உங்களைக் கட்டிக்கறேன் ஆத்தோவ். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றான் மதன் சிரிக்காமல்.
“அவரென்ன கண்ணு ஒத்துக்கறது… அந்த மனுஷன இப்பவே ரிவோஸ்(டிவோர்ஸ்) பண்ணிட்டேன்! நம்ப கண்ணாலங்கட்டி… அதப் படம்படிச்சுப் போட்டா என்னமோ(வியூவ்ஸ்) எகிறுமாம்ல. இப்ப எல்லாம் அது தான் டென்ட்டாமா?(ட்ரென்ட்). எம்பேரான்டி கூட என்னைய ஆடச்சொல்லி ரெண்டு பேரும் படம் படிச்சு போட்டோம்!” மயிலாத்தாள் ட்ரென்டில் அப்டேட்டடாக இருக்க,
“ஒனக்கேத்த ஜோடிதான்டா!” ஜெகன் கேலி பேச,
கைகளில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டு எழுந்தவன், மயிலாத்தாளை காலுக்கடியில் கைகொடுத்து தூக்கி சிறுபிள்ளை போல் ஏந்திக்கொண்டு “ஏஞ்சோடி மஞ்சக்குருவி…. சாஞ்சாடு நெஞ்சைத் தழுவி” எனப் பாடியவாரு தூக்கித் தட்டாமலை சுற்ற,
“அய்யோ… இறக்கி விடு கண்ணு… என்ற வூட்டுக்காரருக்கு நானொருத்தி தாம்ப்பா! தலை சுத்துது… பெரியநாயகி… உன்ற பேரன் பண்றதப் பாரு!” என கூப்பாடு போட,
“நீதானே அவனக் கட்டணும்னு ஆசைப்பட்ட? அனுபவி!” தனது பழைய தோழியை கேலி பேசியவாறே எழுந்து கொண்டார்.
“நான் செத்த குறுக்கச் சாய்க்கிறே. உக்காந்தே இருந்து குறுக்கு வலிக்குது. பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்றவர் ஓய்வெடுக்க வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
மயிலாத்தாள் போட்ட கூச்சலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் விலாக்கடை வலிக்க சிரிப்பு பொங்கி வந்தது. அவரை கீழே இறக்கி விட்டவன், தடுமாறாமல் இருக்க கைத்தாங்கலாகப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்து தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு, கன்னம் தடவி முத்தம் வைத்தான்.
“போ கண்ணு… என்ன இப்படிப் பண்ணிட்ட?” முகச்சுருக்கத்தையும் மீறி நாணத்தின் மினுமினுப்பு அவர் முகத்தில்.
வயது வித்யாசம் கூட இல்லாமல் அவர் மீது பொறாமை அபரிமிதமாகப் பொங்கி வழிந்தது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு.
அத்தையிடம் பொண்ணா கேட்கப் போகிறேன் என்றபொழுதே அவள் கண்களில் தெறித்த கோபத்தைப் பார்த்தவனுக்கு அவளை சீண்டிப் பார்க்கும் ஆசை உள்ளூர எழுந்தது. அதன் பிறகுதான் மயிலாத்தாளைக் கொஞ்சிப்பேசி தூக்கிச் சுற்றவே ஆரம்பித்தான். அதன் எதிர்வினை அவளது கண்களில் அப்பட்டமாகத் தெரிய, ஆர்ப்பாட்டச் சிரிப்பு இவன் முகத்தில்.
விழியோரம் சுருங்க, கண்களில் நீர்கசிய சிரித்தவனின் சிரிப்பை களவாடிக் கொண்டிருந்தவளும், வாய் அசையாமல், “ஆள்மயக்கி” என முணுமுணுக்க…
சட்டென இவளைத் திரும்பிப் பார்த்தவன், என்ன என்பது போல் புருவம் உயர்த்திக் கேட்க,
“ம்கூம்ம்…” என அவசரமாகத் தலையசைத்தாள்.
நம்பாமல் “ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு!” என்றவன் பார்வையில் கள்ளத்தனம் கொட்டிக்கிடந்தது.
“இருக்கும்… இருக்கும்…” என்றான் நரேன்.
“இதுக்குப் பேருதான் க்ராஸ் டாக்காடா? உனக்கு நரேன்னு பேரு வச்சுதுக்குப் பதிலா நந்தின்னு வச்சிருக்கனும்டா, சம்மனில்லாம எங்க வேணாலும் ஆஜராகுற!”
“பத்து நாளைக்கு முன்னவரைக்கும் சிங்கிளா எங்ககூட சுத்திட்டு, தடுக்கி விழுந்தவனாட்டம் மிங்கிள் ஆகிட்டு, நீ கண்ணால வறுக்கும் போது எங்களுக்குப் புகையுதா இல்லையா?” சிங்கிள்ஸ் மனக்குமுறலை நரேன் கொட்ட,
“சம்சாரி வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம்டா” என தோளோடு அவனை இறுக்கிப் பிடித்தான்.
“மயிலாத்தா பொழச்சது மறு பொழப்புதான்டா… கையாடா இது… உலக்கை… எடுடா!” என்றான் தோளை உதறிக்குலுக்கி.
அவளுக்கும் அதே நினைவுதான், தினமும் கண் விழிக்கும் பொழுதெல்லாம்… ஒன்று அவன் அவளது ஆக்கிரமிப்பில் இருப்பான். அல்லது அவள் அவனது இரும்புப் பிடியில் கட்டுண்டு இருப்பாள். படுக்கும் முன் இருவருக்கும் இடையில் வைக்கும் தலையணை விடியும் முன் கேட்பாரற்று கீழே நாதியற்றுக்கிடக்கும். எழும் பொழுது இருவரும் நல்ல குடி நாயகமாக எதுவும் தெரியாதது போல் எழுந்து கொள்வது. “இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையணும்?” தலையணைக்கு வாயிருந்தால் இந்தக் கேள்வி தான் கேட்கும் இருவரையும்.
“அம்மணிக்கு கெழவி கூட என்ன எசலி?” மெதுவாக அவள் காதோரம் குனிந்து ரகசியமாய்க் கேட்க,
‘அடப்பாவி!’ எனும்படி அதிர்ந்து பார்த்து வைத்தாள்.
இவ்வளவு நேரமும் அத்தையோடுதானே தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது. இவள் தானே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி இப்படி கூட அவன் பார்வை தன்னைப் பார்த்து திரும்பவில்லையே. தன்னைச் சீண்டி வேறப் பார்த்திருக்கிறான், என்ற நினைப்பு வர, அவளுக்கும் அவனிடம் விளையாடிப் பார்க்கலாமா என்ற சிறு யோசனை தோன்றியது. அவளுக்கே அது சொந்தச் செலவில் வைத்துக்கொண்ட சூன்யம் என்பது பிறகுதான் புரிந்தது.
“சின்ன மருமகன் வரணுமா வேண்டாமா?” விளையாட்டுத்தனத்தை விடுத்து, மறுபடியும் அத்தையிடம் கேட்க,
“அவன் பண்ணின காரியத்துக்கு என் கண்முன்னால வந்தா நானே அடிப்பேன். அண்ணே சும்மா விடுவாரா? அவன் கொஞ்ச நாள் அண்ணே கண்ல படாம இருக்கிறதுதான்டா அவனுக்கு நல்லது!” என்றார் அடங்காத கோபத்தோடு.
“என்னைக்கினாலும் அடிவாங்கத்தானே போறான். அதை இப்பவே வந்து வாங்கட்டும். பெரியம்மாவை நெனச்சுப் பாருங்கத்தை! எங்க அப்பாவை விட்டமாதிரி இவனையும் விடப்போறீங்களா?”
சற்று குரலைத் தீவிரமாக மாற்ற, பரிமளாவும் தன் விளையாட்டுப் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர், “என்னடா இப்படியெல்லாம் பேசுற?” எனப் பதறினார். சின்ன அண்ணன் நினைவில் முகம் சோகம் அப்பிக் கொள்ள மதனை வாஞ்சையுடன் தழுவிக் கொண்டன கண்கள்.
கலங்கிய கண்களோடு கணவனைத் திரும்பி பார்க்க, “நீ ஏன் மாப்ள அந்தளவுக்கு யோசிக்கிற? இதைப்பத்தி மச்சான்கிட்ட நானே பேசுறேன். நீ எதப்பத்தியும் யோசிக்காத!” பெரிய மனிதராய் இடும்பன் சிறுவர்களுக்கு கை கொடுக்க,
“அப்புறமென்ன மாம்ஸ்… விசேஷத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க! ஜமாய்ச்சரலாம்” ஜெகனிடம் சொல்லிவிட்டு எழுந்து கொண்டான்.
பெரியவர்கள் அப்படியே கட்டிலில் சாய, தூக்கம் இழுத்துக் கொண்டது அவர்களை. கண்களை மூடினாலும் சின்ன அண்ணன் நினைவுதான் பரிமளத்திற்கு.
பிரச்சினைகளை எதிர் கொள்ளத் தெரியாமல், பெரியவர்களின் ஆலோசனையும், அணுசரனையும், ஒத்துழைப்பும் இல்லாமல் அவர் இறுதியாக எடுத்த முடிவு நெஞ்சடைக்க வைத்தது. அதே யோசனையில் கண்ணயர்ந்தார்.
நேரமும் மாலை ஐந்தாக வேலை நேரம் முடிந்து அனைவரும் கிளம்பி விட்டனர்.
மகளோடு சற்று நேரம் தூங்கி எழுந்துவந்தாள் பவித்ரா. பம்ப் செட்டில் முகம் கழுவிக் கொண்டே, இளநீர் கேட்க, அனைவருக்குமே இளநீர் சீவிக் கொடுத்தான் நரேன்.
மாதங்கியும், மதனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே இளநீரை வாங்கினாள். அவன் பார்வையும் அவள் மீதுதான். கண்கள் சிரிக்க, அவளையே பார்க்க, அன்று போல் அப்படியே அண்ணார்ந்து வாயில் சாய்க்க, பாதி கழுத்து வழிதான் வழிந்தது. பார்த்தவனுக்கும் உச்சபட்ச தாகத்தில் தொண்டைக்குழி வரண்டு விட்டது. விழியோரம் செவ்வரியோடியது உஷ்ணத்தில்.
“நங்கையாரே… இளநீ இப்படியா குடிப்பாங்க? முதல்ல குனிஞ்சு வாய் வச்சு, சீவின இடத்த இப்படி மூடிக்கிட்டு அப்புறம் தான் அண்ணார்ந்து இளநிய சாச்சு குடிக்கணும். அப்பதான் சிந்தாது.” இளநீர் குடிக்க பாடம் எடுத்தவள், செய்முறை விளக்கமும் செய்து காட்ட, ஒரு துளி சிந்தவில்லை பவித்ரா குடித்தபொழுது.
அதே போல்தான் இவளும் குடிக்க முயற்சி செய்தாள். இருந்தாலும் மீண்டும் வழிந்தது. நாக்கைச் சுழற்றி உதட்டைத் தடவ, அவள் தன்னை சீண்டிப் பார்ப்பது இப்பொழுதுதான் புரிந்தது. அவன் பார்வையில் மின்னல் வெட்ட சுவாரஸ்யம் கூடியது. மீசைக்கடியில் சிரிப்பை ஒழித்தான்.
பவித்ரா ஏதோ சொல்ல வாயெடுக்க, “உனக்கு ட்ரெய்னிங் கொடுக்கத் தெரியல. நீ வா! உனக்கு நான் சொல்லித் தர்றேன்!” என்று பவித்ராவை அவ்விடத்தை விட்டு நகர்த்த முயல,
“எது… எனக்குத் தெரியலையா?” எகிறிக் கொண்டு வர,
“நீ வாடீ! உனக்கு ரொம்பத் தெரியும்கறது எனக்குத் தெரியும்!” தோளில் கைவைத்துத் தள்ளாத குறையாக அவளை அழைத்துச் சென்றான்.
அவன் தான் மச்சானின் பார்வை மாற்றத்தை கண்டு கொண்டானே. மரியாதையாக ஒதுங்கிக் கொள்வது தானே நல்ல பிள்ளைக்கு அழகு.
இது எதையும் கண்டு கொள்ளாமல் நரேன் இளநீரை சீவிக்கொண்டு, “பங்கு, உனக்கு இளநீர்?” என்று கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்தவன் பார்வை, “இன்னும் நீ போகலியா?” என்றது.
“என்ன பங்கு வேணுமா… வேண்டாமா?” மீண்டும் கேட்டான் பார்வையின் அர்த்தம் புரியாமல்.
“போயேன்டான்னு சொன்னாத்தான் போவியாடா?” இப்பொழுது வாய்விட்டே கேட்க, இருவர் மட்டும் நிற்பதைக் கண்டவனுக்கு லேட்டாக பல்பு எறிய,
வெட்டிய இளநீரை தொட்டி மீது வைத்தவன், “சிங்கிள்ஸ் வயித்தெரிச்சல்டா… நல்லாருங்கடா. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராமலா போகும்!” அழுகாத குறையாக புலம்பிக் கொண்டே சென்றான்.
இவ்வளவு நேரமாக இருந்த தைரியம் தனிமையில் சட்டென வடிந்து போயிற்று அவளுக்கு. இரவும் பகலும் கைகோர்க்கும் அந்திப் பொழுது. அவனை சீண்டிவிட நினைத்து உசுப்பேற்றி விட்டது புரிய,
‘ஏதடா வம்ப விலை கொடுத்து வாங்கிட்டோம் போலயே?’ தடதடத்த நெஞ்சோடு வேகமாக நகர முயன்றவள் முன் ஒரே எட்டில் தாவி குறுக்கே வந்து நின்றான்.
அண்ணார்ந்து மிரண்டு பார்த்தவளை, “சிவனேன்னு இருந்தவனை நீதானே உசுப்பிவிட்ட.”
“சும்மா… விளையாட்டுக்கு… நீங்க பண்ணீங்களேன்னுதான்… பதிலுக்கு பண்ணலாமேன்னு…” வார்த்தைகள் சிக்னல் கிடைக்காத செல்ஃபோன் உரையாடல் போல் துண்டு துண்டாக வந்து விழ, பதட்டத்தில் கைவிரல் தன்னால் வாய்க்கு சென்றது நகம் கடிக்க.
“அப்ப… நான் எது பண்ணினாலும் நீயும் பதிலுக்குப் பண்ணுவ… அப்படித்தானே?”
“இல்ல… இல்ல…” வேகமாகத் தலையாட்டினாள். கால்கள் தள்ளாடுவது போல் இருக்க, விட்டால் போதுமென ஓடும் நிலையில் இருந்தாள். வாய்க்கு சென்ற கையை தடுத்துப் பிடித்து தளிர் விரலில் ஒவ்வொன்றாக முத்தம் வைக்க வேர் வரை சிலிர்த்து, சிவந்து நின்றாள் பெண்.
“இப்ப நான் பண்றத பதிலுக்கு நீயும் பண்ற” என்றவன் குரலில் இருந்த மாற்றம் அவளை என்னவோ செய்ய, அவனது பார்வை வசிய மை இல்லாமலே வசியம் செய்தது. அவளை ஒட்டி, உரசி நிற்க, ஓரடி பின்னால் சென்றவளை நெருங்கி அவனும் ஒரு எட்டு முன்னேற, அவள் பின் நகர, அவனும் முன்னேற, இதற்கு மேல் முடியாது எனும்படி நீர்த்தொட்டி சுவற்றில் மோதி நின்றவளை, இரு பக்கமும் கை ஊன்றி அணை போட்டான். அவள் மீது கிட்டத்தட்ட சரிந்த நிலையில்.
குனிந்து கன்னத்தில் மெதுவாக தடம் பதிக்க, தடதடத்தது நெஞ்சுக்குழி அவளுக்கு. அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள். விழியகற்றாமல் தன்னவனையே விழி உயர்த்திப் பார்க்க, அவன் கண்களில் தெரிந்த மயக்கத்தை கண்டவளுக்கு ஆழிப்பேரலையின் பேரிரைச்சல் உள்ளுக்குள். இளநீரின் தித்திப்பைத் தேடி பயணம் இதழ்களுக்கு இறங்க, பெண்ணவள் விழிகள் தன்னால் மூடிக்கொள்ள, இப்பொழுது இளநீரின் சுவை அவன் இதழ்களுக்குள்.
தங்கத் தாமரை மகளே! வா அருகே!
தத்தித் தாவுது மனமே! வா அழகே!
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள்
விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க…
அவனது கைகள் வெற்றிடையில் கொடுத்த அழுத்தத்தில், அதன் தகிக்கும் வெம்மையில், பெண்மை விழித்துக் கொள்ள, கண்களைத் திறந்தவள் கண்டது, தன்னில் மயங்கிக் கிறங்கி நின்றவனைத்தான். மோனத்தை கலைக்க மனமின்றி லயித்துப் பார்த்திருக்க, கரடியாய் ஃபோன் ஒலிக்க, சுயம் பெற்றவன், அழுந்த நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தான். அவன் பார்வை கீழிறங்க, இன்னும் சட்டையை இறுக்கிய பிடியைத் தளர்த்தவில்லை பெண். அவன் பார்வையைப் புரிந்தவள் சட்டென கைகளை விடுவிக்க, மன்னவன் முகத்தில் பூத்த முறுவலில், பெண்ணவள் செம்பருத்தியாய் சிவந்து நின்றாள்.
ஃபோனை எடுத்துப் பார்த்தான். ஜெகன் தான் அழைத்திருந்தான்.
“மாம்ஸ்” என்றான் அழைப்பை ஏற்று.
“கிளம்பிட்டோம்டா… வர்ற ஐடியா இருக்கா?” அத்தனை குறும்பு அவன் கேள்வியில்.
“வந்துட்டோம் மாம்ஸ்!” என்றவன் அவளோடு வீட்டின் முன் வர, அனைவரும் காரில் ஏறிக் கொண்டிருந்தனர்.
பவித்ரா இவளை அழைக்க, இவள் தயங்கி நிற்பது தெரிந்தது. மதனைத் திரும்பிப் பார்த்தாள்.
“நீங்க போங்க! நாங்க பைக்ல வரறோம்!” என்றான்.
“கார்ல இடமிருக்கு மதி!” என்றாள்.
“இவ ஒருத்தி… நீ வாடீ! இவ எல்லாம் என்னத்த லவ் பண்ணாளோ?” அவளுக்கு மட்டும் கேட்கும்படி முணங்க,
“உங்களுக்கு ட்ரெய்னிங் பத்தல மாம்ஸ்!” என்றான் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“இதுதான்டா பத்துப்பிள்ளை பெத்தவனுக்கு, ஒத்தப்பிள்ளை பெத்தவன் கோளாறு சொல்றதுங்கறது. எல்லாம் எங்கெரகம்” என்றபடி காரை எடுக்க முன் செல்ல, வெடித்த சிரிப்பு அவன் முகத்தில்.
பைக்கை முடுக்க, பின்னால் ஏறுவதற்குள் அவளுக்கு அத்தனை தடுமாற்றம். எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயத்திலேயே அவன் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.
மதன் இதழ் குவித்து விசிலடித்தபடியே வண்டியை முறுக்க, காரை முந்திக் கொண்டு சாலையில் வேகமெடுத்தது ராயல் என்ஃபீல்ட். சற்று தூரம் கடந்ததும் பயம் அகல தன்னால் மன்னவன் இடையை சுற்றி வளைத்தது பெண்ணவள் தளிர்க்கரம் யாருமற்ற சாலையில்.
