மதன மாளிகையில் 17

17

“உண்மையிலேயே நீ லூசு தான்க்கா!”

“என்னடீ… ஓவராப் பேசுற?”

“பின்ன‌‌ என்னக்கா… உனக்குத் தேவையானது மாமா‌ பேக்ல இருக்குன்னு சொல்லித்தானே அனுப்பினேன்.”

“நான் வேற எதுவோன்னு நெனச்சேன் ராகி. நீ மொட்டையாச் சொன்னா எனக்கெப்படித் தெரியும்?”

“ஆமா… சடைப்பிண்ணி, பூவச்சு சொல்லாம விட்டுட்டேன். அதிகமாப் படிச்சா புத்தி மழுங்கிறும்ங்கறது சரியாத்தான்க்கா இருக்கு!”

“ஏய்… என்ன நீயும் அதையே சொல்ற?”

“நானும்னா… மாமாவும் இதையேதான் சொன்னாராக்கா? பாரேன்… இருபது வருஷம் கழிச்சு எங்களுக்குத் தெரிஞ்சது, மாமாவுக்கு மூனே நாள்ல தெரிஞ்சுருக்கு! இருந்தாலும் மாமா ரொம்ப ஷார்ப்.” 

மாமனுக்க பாராட்டுப் பத்திரம் வாசித்தவள் அங்கே வாய்விட்டு சிரிக்க, இங்கே இவளுக்கு தான் பொசுபொசுவென பொங்கிவந்தது தங்கையின் கிண்டலில். 

“எனக்கு மாதிரி உனக்கும் கல்யாணம் நடந்தா தெரியும். புத்தி எப்படி வேலை செய்யுதுன்னு! நானே எந்த சீன்லயும் ஒட்டாம ப்ளாங்க்கா சுத்திட்டு இருக்கேன். இதுல நீ உனக்குத் தேவையானதுன்னு சொன்னதும் நான் என்னத்த நினைப்பேன்.” என்றவளின் வார்த்தைகளில் ஆற்றாமையைக் கண்டவள், அக்கா முகம் அங்கே வாடி வதங்குவது இங்கே தங்கையின் மனக்கண்ணில் வந்து போனது.‌

அதைப் பொறுக்க மாட்டாமல் “சாரிக்கா!” என்றாள் உண்மையான வருத்தத்தோடு. 

நூத்துக்கு ஒரு சதவீதமாவது உண்மையில்லாமலா இருக்கும் என்று, மகளை நம்பாமல் நித்தமும் எத்தனை‌ ஏச்சுப்பேச்சு. அடி வேறு. அத்தனைக்கும் மேல் வேண்டாத திருமணம். யாராயிருந்தாலும் மூளை வேலை நிறுத்தம் செய்யத்தான் செய்யும். அவளாவது இந்தளவிற்கு தாக்குப்பிடித்தாள். தானாக இருந்திருந்தால் தன்னால் பைத்தியம் பிடித்திருக்கும் என யோசித்தாள். 

“என்னக்கா… இன்னும் மாமா வரலியா?” என்றாள் அக்காவின் மனநிலையை மாற்றும் விதமாக.

“ம்ஹூம்… லேட்டாகும் போல…”

“கால் பண்ணி கேட்டியா?”

“காலும் பண்ணல, கையும் பண்ணல… லோட் அனுப்பப் போகணும்னு பேசிக்கிட்டாங்க. அதை வச்சு சோல்றேன்!” 

“இத்தனைக்கும் நடுவுல உனக்கு லொள்ளு கொறையுதா பாரேன். அப்ப அதையும் உங்கிட்ட சொல்லிட்டுப் போகலையா?”

“ம்ஹும்… எல்லாரும் இருக்கும்போது பேசிக்கிட்டாங்க!”

“என்னக்கா நீ… ஃபோன் பண்ணி எப்ப வருவீங்கன்னு விசாரிக்க வேண்டாமா? டைம் என்னாச்சு பாத்தியா?”

“நானெதுக்கு விசாரிக்கணும். இத்தனை நாளா, நானா  விசாரிச்சேன்?”

“இத்தனை நாளா உனக்கும் அவருக்கும் கல்யாணம்‌‌ ஆகலியே. இப்பதானே ஆகியிருக்கு. இதெல்லாம் கேட்க வேண்டாமா? இப்ப எனக்கு மட்டும் ஃபோன்‌ பண்ணி அம்மாவை விசாரிக்கிறயில்ல. இப்படி ஒட்டாம இருந்தா எப்படி உங்கிட்ட வெளியே போறது, வர்றதெல்லாம் சொல்லுவாங்க?” 

“ஏய்…‌ என்ன நீ, நூத்துக் கெழவியாட்டம் பேசுற?”

தங்கையை அதட்டினாலும் அதிலிருந்த நியாயம் புரிபடத்தான் செய்தது. அதனால் தான், நாம் காலையில் என்ன பிரச்சினை எனக் கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் மலுப்பினானோ எனத் தோன்றியது. இன்னும் மனைவி கேரக்டரை உள்வாங்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள் மாதங்கி. மூன்று நாட்களில் நடக்கும் மாயாஜாலமா என்ன? நம் குடும்பம், நம் சொந்தம், நம் வீடு என ஒரு பெண்ணின் மனதில் பதியவே குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகுமாம். அதாவது இயல்பாக, பெண் பார்த்து, நிச்சயம் செய்து, நமக்கும் திருமணம், நமக்கென வாழ்க்கையில் ஒரு வாழ்க்கைத் துணை என ஓரளவிற்கு மனதளவில் திருமணத்திற்கு தயாராகிய பெண்களுக்கு. இங்குதான் எல்லாமே அதற்கு நேரெதிராக நடந்ததே. மாற்றம் மட்டும் உடனே நடக்கவேண்டும் என்றால் எப்படி? இதில் எங்க போறீங்க, எப்ப வருவீங்க என்றெல்லாம் எப்படி கேட்க. வேண்டுமானால் அவன் சொல்லிவிட்டுப் போகலாமே. சிந்தனை வலையில் சிக்கியவள் அமைதி காக்க,

“அக்காஆ…” என மூன்றாம் முறையாகக் கத்தினாள்.

“சொல்லு ராகினி…”

“மாமா வந்ததும் தாங்க்ஸ்ஸாவது சொல்லுக்கா!” 

“ஹ்ம்ம்…” என்றதும் மேலும் சிறிது நேரம் தங்கையிடம் பேசிவிட்டு ஃபோனை அணைத்தாள்.  

தன் முன் பரப்பிக்கிடந்த புத்தகங்களைப் பார்த்தவள் இதழ்கள் தன்னால் விரிந்தது. இதற்கு காரணமானவனை கண்களும், மனமும் ஆர்வமாக எதிர்பார்த்தது. 

மதியம் உணவு வேளை முடிந்து, பெரியவர்கள் சற்று ஓய்வெடுக்கச் செல்ல, மதனும், ஜெகனும் மற்ற விஷயங்களைப் பேச, பவித்ரா மகளுக்கு உணவை ஊட்ட தனக்குத் தெரிந்த குறளி‌ வித்தையெல்லாம் செய்து காட்டினாள். நான்கு வாய் பருப்பு சாதம் ஊட்டுவதற்குள், நானூறு‌ முறை‌‌ வாசலைச் சுற்றி ஓடவைத்தது கால் முளைத்த பூஞ்சிட்டு. 

“இவ பின்னாடி‌ ஓடியே நான் ஒரு சுத்து இளச்சுருவேன் போல?” பவித்ரா அலுத்துக் கொண்டே மகள் பின் ஓட,

“அப்படி எதுவும் தெரியலையே. எம்மக பிறந்த பின்னாடி‌ XL, XXL ஆனமாதிரில இருக்கு!” ஜெகன் மனைவியை வார, 

“மாம்ஸ்…” என்றது மச்சானின் எச்சரிக்கையோடு ஒலித்த குரல். 

“கால்ல அடிபட்டிருக்கேன்னு பாக்குறேன்!” என்றாள் திரும்பி நின்று இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தவள். 

“அதில்ல பவி… இதுக்கு முன்ன ஊட்டி வருக்கி மாதிரி இருந்த. என் பொண்ணு பொறந்த பின்னாடி இப்ப ஊட்டி பன்னு மாதிரி கும்முன்னு இருக்கேன்னு சொல்ல வந்தேன்,” என‌ப்பேச்சில் சமாளித்தவன், 

“நமக்கு எப்பவும் நம்ப வாய்தான்‌ மாப்ள எதிரியே” என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.

“பேசறதையும் பேசிட்டு பாக்குறதைப் பாரு. இதுல இவங்க அம்மாவுக்கு மகன் வாயில்லாப் ‌பூச்சியாம்!”

“இதுல எங்கம்மா எங்கடீ வந்தாங்க?” அப்பாவியாய்க் கேட்க,

“எங்க ஊர்ல அத வேறமாதிரி சொல்லுவோம் மாம்ஸ். ஊமைக்குசும்பன்னு சொல்லுவோம்” மதன் வாய்விட்டு சிரிக்க,

“பாசமலர்கள் கூட்டணி சேந்தாச்சா. இனி நம்ம டெபாசிட் காலி” என்றான். 

அவர்கள் கூட்டணியில் ஒன்ற முடியாவிட்டாலும், மாதங்கியும் இதையெல்லாம் புன்னகையோடு பார்த்திருந்தாள். வீட்டிற்கு வந்ததிலிருந்து மதனைத்தான் கண்டும் காணாதது போல் கவனித்துக் கொண்டிருக்கிறாள். இவர்கள் உள்ளே வரும்பொழுதே அமைதியாக இருந்த வீடு சற்று நேரத்திற்கெல்லாம் கலகலக்க ஆரம்பித்துவிட்டது. 

மாமன், மச்சான் இருவரும் கேலி கிண்டல் என பேசிக் கொண்டாலும் அதில் துளியும் மரியாதைக் குறைவோ, நான் பெரியவன், நீ பெரியவன் என்று தொனியோ இம்மியும் இல்லை. 

எல்லாம் இரத்த சொந்தங்கள், சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பதால் இந்த ஒட்டு, உறவா என்று கூடத் தோன்றியது. 

இதற்கெல்லாம் விதிவிலக்காக ஒருத்தன் இருக்கிறான் என அவளுக்கு இப்போதைக்குத் தெரிய நியாயமில்லை. 

மகளுக்கு சாப்பாட்டை ஊட்டி அன்றைய சாதனையை‌ முடித்தவள், கடைசி வாய் சாதத்தை மகள் தலையைச் சுற்றி‌ப் போட்டுவிட்டு, முகம் கழுவி வாய்‌ துடைத்துவிட்டாள். 

சற்று நேரத்தில் மதனுக்கு ஃபோனில் அழைப்பு வர, லோட் அனுப்ப வேண்டும் என நரேன்தான் அழைத்திருந்தான். கல்யாணம், மறுவீடு என மூன்று‌ நாட்களாக கணக்கு வழக்கும் பார்க்காமல் இருந்தது. 

மதன் தோப்பிற்குக் கிளம்ப, தன்னால் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை என ஜெகனும் உடன் கிளம்பினான். ஜெகனும் கிளம்புவதைப் பார்த்துவிட்டு, காரை எடுத்தான். இல்லையெனில் தோப்பில் இருந்து வண்டியை கொண்டுவரச் சொல்லலாம் என எண்ணியிருந்தான். அவனுக்கு எங்கு செல்வதானாலும் காரைவிட வண்டிதான் சௌகர்யம். இப்பொழுதுதான் காரிலிருந்து அவன் பேக்கை எடுத்து அறையில் வைத்து வந்தான். 

இருவரும் கிளம்பிச் செல்ல, மாதங்கி சற்று நேரம் பிள்ளையோடு விளையாடினாள். இவள் புதியவள் என்பதால் முதலில் அருகே வர மறுத்து, பவித்ரா பின் ஒழிந்து நின்று தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தது. இவளும் பக்கத்தில் இருந்த தூணில் ஒழிந்து கொண்டு எட்டிப் பார்த்து, முகத்தை மூடி விளையாட்டுக் காண்பிக்க, பவித்ராவும் அத்தை என உறவு சொல்லிக் கொடுக்க, மெதுவாக வந்து மடியில் அமர்ந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடும் அளவிற்கு இவளோடு ஒட்டிக் கொண்டது.

மாதங்கிக்கும் தம்பிக்கு, விளையாட்டுக்காட்டி, சோறு ஊட்டி பழக்கம்தான். அவன் பிறந்ததிலிருந்தே பூங்கோதைக்கு உடம்பு சொல்போச்சு கேட்க மறுத்தது. அதனால் அக்காக்களே தம்பி பொறுப்பை தன்னால் எடுத்துக் கொண்டனர். 

“பரவாயில்லையே… ஒரே நாள்ல உங்கிட்ட ஒட்டிக்கிட்டா. கிரி அண்ணங்கிட்டக்கூட அவ்வளவா போகமாட்டா. மதன் அண்ணா தவிர வெளி ஆளுககிட்ட அவ்வளவு சீக்கிரம் ஒட்ட மாட்டா” என்று பவித்ரா மகள் புராணம் படிக்க, அது தான் அவளுக்கே தெரியுமே. 

“பேரனா?” எனக் கேட்பவர்களுக்கு பதில் சொல்ல சங்கோஜப்பட்டே மகனை வெளியே அழைத்து சென்றதில்லை வாசுதேவன். அதனாலேயே மிதுன், அக்காள்கள் தவிர, வெளியாட்களோடு அவ்வளவாக ஒட்டமாட்டான். 

எப்பொழுதும் அண்ணன், தங்கையாக வளரும் பொழுது, அண்ணனோடு எதெற்கெடுத்தாலும் போட்டி போட்டு வளரும் தங்கைகள் துடுக்காகவும், அக்காள், தம்பியென வளரும் பொழுது, பெரும்பாலும் அக்காக்கள் விட்டுக்கொடுத்து தம்பிகள் சற்று அம்பிகளாகவும் வளர்வதுதான் இயல்பு. அப்படிப்பட்டவனை வண்டியில் முன்னால் உட்கார வைத்து சவாரி சென்று வர, யாரிடமும் போகாத தம்பியையே ஒரே நாளில் மாமா என பின்னால் சுற்றவைத்துவிட்டானே. வீட்டைவிட்டுக் கிளம்பும் பொழுது கூட, வண்டியில் உட்காரவைத்து வெளியே அழைத்துப் போய், மாமனும், மச்சானும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுதான் வந்தார்கள். அக்காவுடன் நானும் வருவேன் என அழுகைவேறு. அப்பொழுது ஜெகதாம்பாள் முகத்தைப் பார்க்க வேண்டுமே. கரிச்சட்டி தோற்றுவிடும்.

“உங்க வீட்லயும் சின்னப்பையன்‌ இருக்கான்ல. ரொம்ப நாள் ‌கழிச்சு பொறந்தவனா… பொதுவாவே அக்கா, தம்பின்னாலே செல்லம் தான் இல்ல?” என்றவளிடம் ஆண் வாரிசு மோகத்தில் வலுக்கட்டாயமாகத் தருவிக்கப்பட்டவன் தான் தனது தம்பி என்பதை எப்படிச் சொல்வாள். 

“இங்க நாங்கதான் எல்லாரும் ஒத்தைப் பிள்ளைகளாப் போயிட்டோம். பெரியம்மாவுக்கு தான் ரெண்டு பையனுக. ஆனா, அதுவும் நிலைக்கல. தலைமுறை தலைமுறையாவே, எத்தனை குழந்தை பிறந்தாலும், தலைமுறைக்கு ஒரு ஆண்வாரிசு மட்டும்தான் தங்குது. அந்த வீட்டோட ராசின்னுதான் பெரியம்மா இங்க வந்துட்டாங்க” என்று அருணகிரி இறந்த பிறகு‌ இங்கு வந்ததற்கான காரணத்தை பவித்ரா‌‌ சொல்ல,

அங்கு வீட்டில் ஃபேட்டோக்களைப் பார்வையிட்ட பொழுது, மதனின் பெற்றொர் படத்தின் அருகில், பதின் பிராயத்து சிறுவனின் படமும் சந்தனமாலையோடு இருந்ததைப் பார்த்தாள். அதுவும் ஏதோ ஒரு குரூப் ஃபோட்டோவில் இருந்து பிரித்தெடுத்த புகைப்படம் போல. அவன் தோள்‌மீது ஒரு கரம் சுற்றி வளைத்திருந்தது. 

சுப்பாத்தாளும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “அன்னைக்கி எஞ்சாமிக்கு மறுபிழைப்பு. மூத்த பிள்ளைய வாரிக் கொடுத்துட்டு, இந்த வீட்ல இருக்க மாட்டேன்னு உன்ற பெரிய மாமியா பிடிவாதமா, அவங்க அம்மா வீட்டுக்கே போயிட்டாங்க. அதோட இந்த வீடும் கலையிழந்து போச்சு” என்று கண்கள் கலங்க கதை படித்தார். அரும்பு மீசை அரும்ப, சிரித்த முகமாக இருந்த அந்தப் படத்தைப் பார்த்தவளுக்கும் மனம் கனத்துவிட்டது. இவ்வளவு பெரிய மகனை இழந்துவிட்ட யாருக்காக இருந்தாலும், வாழ்க்கை மீது ஒரு வெறுப்பு வரத்தான் செய்யும். அதுவும் ஒருவன் பிழைக்க, மற்றொருவன் சாவதென்பது சின்ன காரியமல்லவே. 

“பெரிய அண்ணே இறந்த பிறகு பெரியம்மாவும் அடுத்து ஒரு பிள்ளைக்கு ட்ரை பண்ணினாங்க!” என்றவளை புரியாமல் பார்க்க,

“அவங்க ஏற்கனவே ஃபேமிலி ப்ளானிங் பண்ணிட்டாங்க. மறுபடியும் ஆப்ரேஷன் பண்ணி குழந்தைக்கு முயற்சி பண்ணினாங்க. பெரியப்பா எவ்வளவோ சொல்லியும் கேக்கல. செத்துப்போனவன் மறுபடியும் வந்து பிறப்பான்னு ஒரே பிடிவாதம். குழந்தையும் நின்னுச்சு. ஆனா… அதுவும் எக்டோபிக் ப்ரெக்னென்சியாப் போச்சு. குழந்தை ட்யூப்லயே நின்னுருச்சு. பெரியம்மா பிழைச்சதே அதிசயம்தான். அதை ரிமூவ் பண்ணதுல தான் ஏதோ இன்ஃபெக்ஷன் ஆகி அவங்க உடம்பே வீணாப்போச்சு” என்று சொல்ல தன் வீட்டிற்கும், இந்த வீட்டிற்கும்தான் எவ்வளவு முரண் என ஒப்பீடு செய்தது மனம். 

இங்கு பெரியவர்களுக்கு கட்டுப்பட்டது போல் தெரிந்தாலும் அவரவர் தனித்தன்மையோடும் இருப்பது தெரிந்தது. அதுவும் மற்றவரை‌ பாதிக்காத வகையில். இங்கு யாரும் யாரையும் அதிகாரம் செய்வதில்லை. ஆனால் ஒருத்தொருக்கொருத்தர் கட்டுப்படுகின்றனர். கண்ணுக்குத் தெரியாத பாசம் எனும் மாயவலை அது. 

வயிறு நிறைந்து, ஓடியாடி விளையாண்டதில் பிள்ளைக்கு கண்கள் சொக்கிவிழ, பவித்ரா தூங்க வைக்க எழுந்து கொண்டாள். 

“நீயும் செத்த நேரம் படுத்து எந்திரி மதி… அவங்க வர நைட்டாயிரும். சும்மா எப்படி உக்காந்திருப்ப?” என சொல்லிச் சென்றாள். 

இவளுக்கு தான் மதியம் தூங்கிப் பழக்கமில்லையே. பொழுதும் போகவில்லை. இப்படியே எவ்வளவு நேரம் உட்கார முடியும் என அவளும் சென்று படுத்துவிட்டாள். 

“வெளக்கு வைக்கிற நேரமாச்சு. இன்னும் என்ன தூக்கம்?”  வாசுகியின் வெண்கலக் குரலில் தான் விழிப்புத்தட்டியது. 

அடித்துப் பிடித்து எழுந்தாள். ஏனோ அவர் பேச்சு இப்பொழுது அவளுக்கு எரிச்சலை உண்டாக்கவில்லை. எழுந்து முகம் கழுவி, தலை சீவி வெளியே வந்தாள். இல்லையென்றால் இதற்கும் திட்டுவிழும் எனத் தெரியும். எத்தனை‌முறை‌ ஜெகதாம்பாளிடம் வாங்கியிருக்கிறாள். ஜெகதாம்பாளை வெறுப்பேற்றவேணும் பொழுது போனபிறகும் தலையை விரித்துப் போட்டு வீட்டில் சுற்றியிருக்கிறாள்.‌ 

“விரிச்சுப் போட்டு சுத்தாதடீ. வீட்ல லெட்சுமி தங்காது!”

“அது யாரு லட்சுமி. உன் மகனோட செட்டப்பா. எங்கம்மா இந்த வீட்ல தங்கினாப் போதும்!” என நக்கல் பேச்சிலேயே அப்பத்தாளுக்கு பிபி ஏத்துவாள். 

முகம் கழுவி பளிச்சென வெளியே வந்தவள்,‌ நேரே பூஜையறை‌ சென்று‌ விளக்கேற்றிவிட்டே வெளியே வந்தாள். 

மாலை நேர தேநீர் நேரம் சஷ்ட்டிகா, பவித்ரா உடன் ஆனந்தமாகக் கழிய, அடுத்து இரவு உணவு வேலையை‌ நாத்திகளே கவனித்துக் கொண்டனர். 

மதியம் சாப்பாடும் கொஞ்சம் மிஞ்சியிருக்க, யார்‌ யாருக்கு என்ன என பவித்ராவிடம் இவள் கேட்க, “அப்படியெல்லாம் இங்க இல்ல. ஆளாளுக்கு ஒன்னுங்கறதெல்லாம் இந்த வீட்ல கிடையாது. இட்லி, தோசை, சப்பாத்தி எதுவாயிருந்தாலும் எல்லாருக்கும் அதேதான்” என்றாள். 

“மதியச் சாப்பாட்ல, தயிர் கலந்து வச்சிட்டா அண்ணனே காலையில சாப்பிட்டு தோப்புக்கு போயிருவாங்க” என்றாள் கூடுதல் தகவலாக. 

“தோசை, சப்பாத்தினா அண்ணனே கூட ஊத்திக்கும். மாவு பிசைஞ்சு வச்சுட்டாப் போதும். சீக்கிரம் கார்மென்ட்சிலருந்து வந்துட்டா உங்க அண்ணன் கூட எங்க எல்லாருக்கும் தோசை ஊத்திக் கொடுப்பாங்க” என்றவள், சற்றே குனிந்து, “ஏன்னா தோசை, சப்பாத்தினா, எத்தனை சாப்பிடுவாங்கனு அவங்களுக்கே கணக்குத் தெரியாது. நாம கண்ணு வச்சுருவோமாம்.‌ சாப்பாட்டு விஷயத்துல இவங்கள அடிச்சுக்க முடியாது” என்று ரகசியம் போல் சொல்ல இவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 

ஆனால் அவர்கள் வீட்டில் எது இருந்தாலும் இரவில் வாசுதேவனுக்கு எண்ணி மூன்று சப்பாத்தியும், அதற்கென வெஜிடபுள் குருமாவும் வேண்டும். ஜெகதாம்பாளுக்கு தோசை வேண்டும். ஒருநாள் கூடத் தவறியதில்லை. 

இவர்கள் பேசிக் கொண்டே வேலை பார்க்க, பெரியவர்கள் மூவரும் டீவி முன் அமர்ந்து சீரியலில் மூழ்கிவிட்டனர். 

நேரம் ஒன்பதைத் தொட்டது. கார்மென்ட்சிலிருந்து தனசேகரனும் வந்துவிட்டார். இன்னும் மச்சான்கள் இருவரும் வரவில்லை. 

தனசேகரன் கேட்டதற்கு, “இன்னைக்கு லோட் அனுப்புறாங்க போல பெரியப்பா. அவங்க வர லேட்டாகும்னு இப்ப தான் ஃபேன் பண்ணினாங்க” என்றாள். ஜெகன் மனைவிக்கு அழைத்து சொல்லியிருந்தான்.‌

“கால் எப்படீம்மா இருக்கு” என மருமகனின் கால் வீக்கம் பற்றி விசாரிக்க,

“வீக்கம் கொறஞ்சிருச்சு பெரியப்பா!” என்றாள்.

“தேவையில்லாம வம்பிக்கிழுக்குறானுக. ஒதுங்கிப் போனாலும் விடமாட்டேன்றானுக” என அலுத்துக் கொள்ள, இதில் மதன் வேறு பேத்திக்கு, விசேஷம் வைத்து, கிரியை வேறு அழைக்கவேண்டும் என்கிறானே. இதை எப்படி மகனிடம் பேசுவதென பெரியநாயகிக்கு கிலி பிடித்தது. 

‘இப்போதைக்கு இதை மகன் காதில் போடவேண்டாம். எதுவாக இருந்தாலும் அவனே வந்து பேசிக் கொள்ளட்டும். யாரிடம் எப்படி சொன்னால் காரியம் நடக்கும் என்பது மதனுக்கு தான் தெரியும்’ என பேரன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு எல்லாம் அவன் செயல் என, மேலே பார்த்து கும்பிட்டுவிட்டு அமைதியாகிவிட்டார்.‌

இதே விவாதம் தான் தோப்பிலும் நடந்து கொண்டிருந்தது மச்சானுகளுக்குள். 

“மாமாகிட்ட எப்படிடா இதைப் பத்தி பேசறது. அப்படியே விசேஷம் வச்சாலும் அவனைக் கூப்பிட ஒத்துக்குவாராடா?”

“நாம ஏன் இதப்பத்தி பெரியப்பாகிட்டப் பேசப் போறோம். அவர்கிட்ட அடி வாங்குறது யாரு? பொண்டாட்டி வந்த பின்னால அடி வாங்குனா நல்லாவா இருக்கும்!”

“வேற யாருடா அவர் கிட்டப் பேசறது?”

“சின்னப் பசங்க இதெல்லாம் பேசக் கூடாது மாம்ஸ். வீட்ல பெரியவங்க எதுக்கு இருக்காங்க?”

“அம்மத்தாவா?”

“நல்லா கேட்டீங்க போங்க. சும்மா வெட்டி வீராப்பு தான் அப்பத்தா எல்லாம். இந்நேரம் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு முடிவுகட்டியிருப்பாங்க. பெரியப்பாகிட்ட தைரியமா பேசுற ஒரே ஆள் அவரோட பாசமலர் தான்!”

“அடேய்! அம்மாவ ஏன்டா இதுக்குள்ள இழுக்குற?” என ஜெகன் அதிர, 

“ஷாக்க கொறைங்க மாம்ஸ். இன்னும் பங்கு சொல்றதெல்லாம் கேட்டா நெஞ்சுவலி வந்துறும் போலயே!” சங்கர் அவனை நையாண்டி பேச, 

“பேத்திக்கு விசேஷம். அப்போ அவங்கதானே பேசணும் மாம்ஸ். நம்ம வீட்டு நியாயத்தராசே அத்தை தான். அவங்களவிட்டா பெரியப்பாகிட்ட தைரியமாப் பேச வேற யாரு இருக்கா?” 

“அதுசரி… அவங்களும் நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட?” 

“நம்ம பங்கு ஒருத்தர சிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டா அந்த ஆண்டவனே சொன்னாலும் கேக்க மாட்டான்!” சங்கர் நண்பன் தோளில் கை போட்டுச் சொல்ல,

“நான் எப்படா அதெல்லாம் சொன்னேன்?” மதன் பொய்யாக அலற, 

“நீ ஏன் பங்கு அலர்ற. நமக்கு மத்தவிங்கள அலறவிட்டுத்தனே பழக்கம்” நரேனும் சேர்ந்து கொள்ள, 

“டேய்! நம்ப ஸ்கிரிப்ட்ல இல்லாத டயலாக் எல்லாம் நீங்களா எடுத்து விடுவீங்களாடா?” 

“நீ மட்டும் அப்பாவி மாம்ஸ எப்படியெல்லாம் கதிகலங்க வைக்கிற?”

“யாரு! இவரு அப்பாவியாடா!. பச்சப்புள்ள மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு இல்லாத சேட்டையெல்லாம் பண்றவருடா. இவரைப் பத்தி உங்களுக்குத் தெரியல!”

“நீங்க கவலைப் படாதீங்க மாம்ஸ். விசேஷத்தன்னைக்கி நாங்க பாத்துக்கறோம்!”

“எதைடா பாப்பீங்க. யாரு வந்து மண்டையைப் பொளக்குறான்னா?”

“நாங்க இருக்கும் போது இன்னொருத்தன் வந்து உங்க மண்டையைப் பொழந்துருவானா… நாங்கதான் விட்ருவோமா?”

“ஏன்… நீங்களே பொழந்திருவீங்களா?” 

“பொண்ணு கொடுத்தவிங்களுக்கு அந்து உரிமை கூட இல்லையா மாம்ஸ்!”

“டேய்… பேச்சுக்கூட அப்படியெல்லாம் இல்லை மாமான்னு சொல்றீங்களா பாருங்க. ரைட்ரா. தரமான சம்பவம் பண்ண காத்திருக்கீங்கணு தெரியுது. அதுக்கு நான் ஊறுகாய். நடத்துங்கடா!” என்ற ஜெகனின் தலையாட்டலில் தோப்பு கலகலத்தது அந்த அர்த்தராத்திரியில். 

இரவு உணவை முடித்து அவரவர் படுகைக்குச் செல்ல, நங்கைகள் இருவரும் பாத்திரங்களை ஒதுங்க வைத்தனர். இன்று தோசை என்பதால், இருவரும் வந்து ஊற்றிக் கொள்வார்கள் என பவித்ராவும் மகளோடு படுக்கச் செல்ல, இதையெல்லாம் பார்த்தவளுக்கு தான், இது வேற்று கிரகம்‌ போல் தோன்றியது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் எந்நேரம் வந்தாலும் பூங்கோதைதான், கணவருக்குப் பரிமாற வேண்டும். 

படுக்கையறை சென்றவள் தனசேகரன் அறையைக் கடந்த பொழுது, அப்படியே நின்றுவிட்டாள். 

‘ஒரே நாள்ல எத்தனை அதிர்ச்சிடா. சின்னப்பிள்ளை தாங்கமாட்டேன்.’ அவளது மைன்ட் வாய்ஸ். 

அவர்கள் அறைக்கதவு லேசாகத் திறந்திருக்க, தனசேகரன் மடிமீது மனைவியின் காலைத் தூக்கிவைத்து, எண்ணெய் தடவி நீவி விட்டுக் கொண்டிருந்தார். தினமும் நடப்பது தான். இவளுக்கு தான் புதிதாக இருந்தது. இங்கிருந்த இரண்டு நாட்களும், அவன் வருவதற்குள் படுத்துவிட வேண்டுமென, சீக்கிரம் சாப்பிட்டு அறைக்குள் முடங்கி விடுவதால், இதெல்லாம் அவள் கண்ணில் படவில்லை. இன்றுதான் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து, பேசி என பொழுது போக்கியதால் இதெல்லாம் கண்ணில் படுகிறது. 

தண்ணீர் எடுக்க வந்தவள், “இவ, எதைப்பார்த்து இப்படி முழிக்கிறா” என அருகே வர, பெரியப்பா, பெரியம்மா காலை நீவி விடுவதைத்தான் இப்படிப் பார்க்கிறாளா என தோளைத்தொட, 

“நான் எதுவும் பாக்கல!” என அதிர்ச்சியில் திரும்பி உழற,

“என்ன… நங்கையாரே… முனி கினி அடிச்சுருச்சா?” என சிரித்தாள். 

“நீங்க எல்லாம் எந்த கிரகத்துலருந்து வந்துருக்கீங்க. ஏலியன்ஸ் தானே நீங்க எல்லாம்!” ‌எனக் கேட்க, பவித்ராவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. 

படுக்கையில் வந்து விழுந்தவளுக்கு, மதியம் தூங்கியதால் தூக்கம் வருவேனா என ஆட்டம் காட்டியது. புரண்டு, புரண்டு படுத்தவளுக்கு, அவன் எடுத்து வைத்துவிட்டுச் சென்ற பேக் கண்ணில் பட, அப்பொழுதுதான் உனக்குத் தேவையானது மாமா பேக்கில் இருக்கு என தங்கை சொல்லியனுப்பியதும் நினைவிற்கு வந்தது. 

‘இவளுக்கு அறிவே இல்ல. எதைக் கொண்டு போய் அவங்க பேக்ல வச்சுருக்கா?’ தனது மாதாந்திரத் தேவையைத்தான் பேக்கில் வைத்துவிட்டதாக எண்ணியவள், தங்கையை‌ மனதிற்குள் அர்ச்சித்துக் கொண்டே எழுந்து, பேக்கைத் தூக்க முயல அத்தனை கணம். நாப்கினா இத்தனை கணக்குது என்றுதான் எண்ணிக்கொண்டே பேக் ஜிப்பைத் திறந்தாள். கண்கள் இரண்டும் அநியாயத்திற்கு ஆச்சர்யத்தில் விரிந்து கொண்டன. 

எல்லாம் அவளுடைய இந்த வருடக் கல்லூரி புத்தகங்களும், நோட்ஸ்களும். ஆர்வமாக அள்ளி வெளியே போட்டாள். அவன் உடை இரண்டு தான் உள்ளே‌ இருந்தது. உடன் அவளுடைய கை பேசியும். வேகமாக எடுத்து ஆன் செய்தாள். 

உடனே வாட்சப்பைத் திறந்து அன்று அவன் அனுப்பிய மெசேஜைப் பார்த்தாள். அதைப் பார்த்து அப்பாவின் முகம் போன போக்கை கற்பனை செய்து பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. 

உடனே தங்கைக்கு அழைத்து விட்டாள். அது எங்கேஜ் டோன் ஒலித்தது. இந்நேரத்துக்கு யார் கூடப் பேசறா என சிந்தனை செய்தவள், அடுத்து அழைக்கும் முன், அக்காவின் அழைப்பை காத்திருப்பில் கண்டவள், அத்தை மகனின் தொடர்பை உடனே துண்டித்து விட்டு, அவசரமாக அவளே அழைத்து விட்டாள். 

“யார்கிட்டடீ இந்நேரத்துக்கு பேசிட்டிருந்த?”

“ஃப்ரெண்ட்ஸ் தாங்க்கா… டவுட் கேட்டாங்க!”

“அதைக் கேக்குற நேரமாடீ!”

“எப்ப டவுட் வருமோ அப்பதானே கேட்க முடியும்? ஆமா‌ நீ எதுக்கு ஃபோன் பண்ணின. புதுப் பொண்ணு, இந்நேரத்துக்கு கால் பண்ணா, இப்ப எனக்குத்தான் உம்மேல டவுட் வருது.” உடனே அக்காவின் கவனத்தை திசைதிருப்ப பேச்சை திருப்பி போட்டாள். 

“என் புக்செல்லாம் இப்பத்தான் பாத்தேன் ராகி. எதுக்குடி மாமா பேக்ல வச்சுவிட்ட. அதுவும் எங்கிட்டக்கூட கேக்கல. இவங்க படிக்க விடுவாங்களா?” கவலையாகத் தன்‌ கருத்தை முன்வைக்க,

“அய்யோ… அக்கா! புக்செல்லாம் எடுத்து வைக்கச் சொன்னதே மாமாதான்.‌ உங்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாருக்கா. சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நெனச்சுருப்பார். நீயே எடுத்துப் பாத்துட்ட போல.” 

“நிஜமாவா!” அத்தனை ஆச்சர்யம் அவள்‌ குரலில். இந்த செமஸ்ட்டர் மட்டும் முடித்துக் கொள்வதாக எத்தனை கெஞ்சியிருப்பாள் அவள் அப்பாவிடம். இத்தனை வருடம் படிப்பும் வீணாகிவிட்டதே என அவள் அழாத நாளில்லை. அதை நினைக்கையில் இப்பொழுதும் கண்கள் உடைப்பெடுத்தது. 

“அக்காஆ…”

“என்னடீஈஈ”

“அடிக்கடி சைலன்டு மோடுக்குப் போயிர்ற?” என்ற கிண்டலில் அவளுக்கும் சிரிப்பு வந்தது. அவளை மயக்கத்தில் ஆழ்த்துவது மன்னவன் நினைப்பாயிற்றே. 

“தாங்க்ஸ் சொல்லிருக்கா!” என்ற தங்கையிடம் பேசிவிட்டு வைத்தவள், அவன் வரவை எதிர்பார்த்து கொட்டக்கொட்ட முழித்திருந்தாள். நடுநிசி தாண்டித்தான் தேங்காய் லோட் ஏற்றிய லாரியை அனுப்பிவிட்டு இருவரும் வீடு வந்தனர். 

கட்டிலில் புத்தகங்களை பரப்பி வைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவன் எதுவும் பேசவில்லை. உடை மாற்றும் வரை அவனையே பார்த்திருந்தாள்‌. குளிக்க செல்ல, 

“தாங்க்ஸ்” என்றாள் ஒற்றைச் சொல்லாய். முகம் பூரித்திருந்தாலும், குரல் பிசிறடித்தது.‌ வேறெதுவும் பேசத் தோன்றவில்லை. 

“எதுக்கு?” என்றான்.

“நானே இன்னைக்கு உங்ககிட்ட இதைப் பத்தி பேசலாம்னு நெனச்சேன். ஆனா, வந்தவுடனே சண்டை, கலாட்டான்னு பேச ஆரம்பிக்கவும் அப்பறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். நீங்க சம்மதிச்சாலும் வீட்ல பெரியவங்க சம்மதிப்பாங்களா?” அவளுக்கு இன்னும் உள்ளுக்குள் சந்தேகம் தான். இது கூட்டுக் குடும்பம். கல்யாணத்திற்குப் பிறகு என்ன படிப்பு வேண்டியிருக்குன்னு பெரியவங்க சொன்னா என்ன பண்ணமுடியும். அவளது தயக்கத்தை அறிந்தவன்,

“இதுல நானே உனக்குத் தடை போடமுடியாது. பெரியவங்க சொல்ல என்ன இருக்கு. உன் படிப்பு. நீ படிக்கப் போற.” என்றவனை வித்யாசமாகப் பார்த்தாள். 

“ஆனா… எனக்கு ஒன்னு புரியல. நீ அவ்ளோ நல்லா படிச்சிருக்க. மார்க்கும் கண்டிப்பா அதிகமாத்தான் வாங்கியிருப்ப. அப்புறமும் ஏன் ஆர்ட்ஸ் க்ரூப் எடுத்திருக்க? மெடிக்கல், இன்ஜினியரிங் இந்த மாதிரி ட்ரை பண்ணல?”  எனக் கேட்டவனை விரக்தியாகப் பார்த்தாள். 

“படிக்க வைக்கிறது கடமைக்கு தான். அதிகமா செலவு பண்ணி படிக்க வச்சா, நாளைக்கி நமக்கா சம்பாதிச்சு கொடுக்கப்போறா. கட்டினவனுக்கு தானே சம்பாதிச்சு கொடுப்பா. பேருக்கு ஒரு டிகிரி போதும். அதுவும் கல்யாணம் பேசையில பொண்ணு என்ன படிச்சிருக்குன்னு கேட்டா சொல்லணுமே. இதுதான் எங்கவீட்டு வேதாந்தம்” என்று சொன்னவளை கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாகப் பார்த்து நின்றான். 

“என்ன… இதப் படிச்சு என்ன பண்ணப்போறே? இதுக்கா இவ்வளவு மெனக்கெட்டன்னு தோணுதா?” எனக் கேட்டவளிடம், 

“படிப்புல சிறுசு பெருசுன்னு எதுவும் இல்ல. அதுவுமில்லாம படிப்பு மட்டுமே நம்பல முன்னேத்தாது. தைரியம் கொடுக்காது. நாலு விஷயம் கத்துக்கதான் படிப்புனு இருந்தது ஒரு காலம். அதை இன்னைக்கி கையகல ஃபோன்லயே கத்துக்கலாம். நம்ம வீட்லயே அந்தக் காலத்துலேயே அதிகம் படிச்சது சீதாலட்சுமி சித்திதான். ஆனா… பெரியம்மாவுக்கும், அப்பத்தாவுக்கும் இருக்குற, தெளிவும், தைரியமும், துணிச்சலும் அவங்களுக்கு இல்ல. ஏன்…‌ உங்கம்மா மட்டும் படிக்கலையா என்ன?” 

“அவங்க டபுள் கிராஜுவேட்! காலேஜ் டைம்ல பட்டிமன்ற பேச்சாளராக்கும்!” என்றாள் பெருமையாக.

“ஆனா…‌ உங்க அப்பாவை எதிர்த்துப் பேசமுடியல. நானும் அதைத்தான் சொல்றேன் மதி! மனப்பாடம்‌பண்ணி மேடையில பேசறது பெருசில்ல‌. இன்னும் படிச்சு, வேலைக்குப் போயி, கைநிறைய சம்பாதிச்சாலும், வீட்ல புருஷன் கிட்ட செலவுக்கு கையேந்துற நிலையிலதான் எத்தனையோ பெண்கள் இருக்காங்க. ஆனா, நம்ம தோப்புல வேலை பாக்குறவங்க அவங்க சம்பாத்தியத்தை என்ன பண்ணனும்னு அவங்களே முடிவு பண்றதைப் பாத்திருக்கேன். இங்க படிப்பும், வேலையும் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது.”

“சமீபத்துல பரபரப்பா பேசப்படுற ரிதன்யா தற்கொலை, (வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாக திருமணமான எழுபத்தியேட்டே‌ நாளில் தற்கொலை) இதைத்தானே உணர்த்தது. என்ன படிச்சு, வசதியிருந்து என்‌ன பிரயோஜனம். இந்தக் காலத்து படிச்ச பொண்ணுதானே. துணிச்சல் எங்கே போச்சு. அதனால, படிப்பு அந்த துறைசார்ந்த அறிவை மட்டும் தான் நமக்கு கொடுக்கும். தைரியமும், துணிச்சலும் நாமதான் வளத்துக்கணும்.” 

“எந்தக் காலத்துலயும் துணிச்சலா தன் முடிவைத் தானே எடுத்தவங்களும் இருக்காங்க. இன்னும் சமுதாயம், குடும்பம், கௌரவம்னு தன்னைத்தானே சுருக்கிக்கிறவங்களும் இருக்காங்க.”

“இப்பவும் நீ கூடப் பாரு. நீ படிக்க நானோ, வீட்ல இருக்கிறவங்களோ அனுமதிப்பாங்களான்னு அனுமதி எதிர் பாக்குற. நான் படிக்கணும்னு ஊன்றி நிக்கமாட்டேங்கிற. பெண்கள் எப்பவுமே உங்களுக்காக சேலையை எடுத்துக்கிட்டு கண்ணனோ, முண்டாசு கட்டிக்கிட்டு ஒரு கவிஞனோ வரணும்னு எதிர் பாக்குறீங்க. உங்களுக்கு என்ன தேவைங்கறதுல, நீங்களே உறுதியா இல்லாதப்போ மத்தவங்க எப்படி சப்போர்ட் பண்ணுவாங்க.”

“நீங்க ஈஸியா‌ சொல்லிட்டீங்க. ஒரு குடும்பத்துக்குள்ளன்னு வந்துட்ட பிறகு இதெல்லாம் யோசிக்க வேண்டாமா?” அவள் எதார்த்தம் பேச,

“கண்டிப்பா யோசிக்கணும். குடும்ப கௌரவத்திற்கு பங்கம் வர்ற மாதிரி எதுவும் செய்யப்போறதில்லையே? படிக்கத்தானே ஆசைப்படுற? நீ தாராளமா‌ படிக்கலாம். ரெகுலரா போய் கூட படிக்கலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. படிப்போட அருமை அதை இழந்த எனக்கு தான் தெரியும். கொஞ்ச நாள் போகட்டும் படிச்சுக்கலாம்னா, அந்த எண்ணத்தோடு வீரியம் நீர்த்துப் போகும்‌. எதையும் சூட்டோடு‌ சூடா முடிக்கணும்.” 

இவனையும் ‌அப்படித்தான் அடுத்த வருஷம், அடுத்த வருஷம் என பெரியநாயகி பேரனை வெளியே அனுப்பப் பயந்து கொண்டு, படிப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போக, நாளடைவில் இவனுக்கே படிப்பில் நாட்டம் குறைந்துவிட்டது. அதை எண்ணித்தான் உடனே அவள் குறை படிப்பை முடிக்க வேண்டும் என முடிவு செய்தான். 

அதுவுமில்லாமல் அவள் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதற்கும், அவசரத் திருமணத்திற்கும் ஏதோ ஒரு வகையில் தானும் காரணம் என்பது அவனுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. அதை இந்த வழியில் சரிக்கட்ட எண்ணினான். 

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, அதில் தெரிந்த மயக்கத்தில், தொண்டையைச் செருமியவன், “இன்னைக்கி நீ அடிக்கடி என்னைப் பாக்குற. இப்படியே பாத்தா படிப்பை முடிக்க முடியாது. சும்மாவே இன்னைக்கி இளநீர் குடிக்கறப்ப எல்லாம் தாகம் அடங்கவே மாட்டேங்குது. தேவையில்லாம இப்படி முழிச்சு முழிச்சுப் பாக்காத. நல்லவனா நடிக்கறது ரொம்ப கஷ்ட்டம்!” என்றவன்  குளிக்கச் செல்ல, அப்போ மதியமும்‌ அவனைப் பார்த்ததை பார்த்திருக்கிறான். ஆனால், அவன் பார்வைதான் நம்ப பக்கம் திரும்பின மாதிரியே தெரியவில்லையே… என யோசித்தவள்,

“நல்லவனா யாரு நடிக்கச் சொன்னது?” நொடிப்பாய் தன்னால் முணுமுணுத்துவிட்டு திரும்பியவள், இதழ்கள் “அம்மா…” என அலறிவிட்டு கண்களும், இதழ்களும் ஒரு சேர விரிந்து கொண்டன. இதயம் தொண்டைக்குழி வந்து நின்றது. துண்டை எடுக்க வந்தவன் அவள் பின்னால் நின்றிருக்க, திரும்பியவள் அவன் மீது மோதியும், மோதாமல் நின்றாள். 

சுட்டு விரல் கொண்டு நாடியில் கைவைத்து வாயை மூடியவன், “எனக்கு எதுவும் கேக்கல!” என்று கண்சிமிட்டி சொல்லிச் செல்ல, 

“மக்கு… மக்கு… ராகினி சொன்ன மாதிரி நீ லுசேதான் மாதங்கி” என முன்னந்தலையில் அடித்துக் கொண்டவள் முகம், முதன் முறையாக செம்மை பூசியிருந்தது அவளையுமறியாமல். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top