“வாங்க சிஸ்ட்டர்… டீ குடிங்க!”
வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு டீயை விநியோகித்து விட்டு, சுப்பாத்தாளுக்கும் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே மாதங்கியிடமும் கேட்டான் நரேன்.
“இருக்கட்டுங்கண்ணா… இப்பதான் இளநீர் குடிச்சேன்!” என்று சொன்னவளைப் பார்த்து உதடு மடித்துச் சிரித்தான் மதன்.
‘நீ எங்க குடிச்ச… குளிச்ச’ என்றது அவனது கள்ளப்பார்வை.
அங்கு வேலை பார்த்தவர்கள் கண்கள் ஆர்வமாய் மொய்த்தது புதுமணத் தம்பதிகளை. அண்ணன் கட்டவேண்டிய பெண்ணை தம்பி கட்டியிருக்கிறானே? பார்வையில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமேது!
ஊரே தெரிந்த கதைதான் என்றாலும் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கண்களால் பேசிக் கொண்டனர். பெரியவீட்டு விவகாரம் ஆயிற்றே. சாடைமாடையாகத்தான் பேசிக்கொள்ள முடியும்.
“ஏனுங் தம்பி… மொதமொதன்னு அம்மணிய கூட்டியாந்திருக்கீங்க. பண்ணையாரம்மாவுக்கு தோப்பு, வயலெல்லாம் சுத்திக் காமிக்கலையா? எப்ப நம்ப வீட்டுக்கே வரப்போறீங்க?” வேலையாட்களில் ஒருவர் அபிமானியாகக் கேட்க,
“வருவோம் க்கா!” என்றான் வெறுமனே சிரித்துக் கொண்டு.
அவன் மட்டும் என்றால் எப்பொழுதே வந்திருப்பானே. ஊர் கூடித் தேரிழுக்க ஆசைப்படுகிறான். அதற்குதான் இன்னும் நேரம் காலம் கூடிவர மாட்டேன் என்கிறது.
அவள் வரும்பொழுது நரேனிடம் ஏதோ கோபமாகப் பேசியது போல் இருக்க, மாதங்கி அவன் முகத்தையேதான் இன்னும் பார்த்து நின்றாள். இப்பொழுது சாதாரணமாகத் தெரிந்தாலும் இன்னும் கொஞ்சம் இறுக்கம் மிச்சமிருந்தது அவனது தாடையிலும், புருவச்சுழிப்பிலும்.
தன்னைச் சீண்டி விளையாடிவிட்டு வெளியே வந்தவன் முகத்தில் இருந்த பரவசம் துளியும் இல்லை. கருத்துச் சிவந்திருந்தது.
“நாங்க கெளம்புறோம்டா. லோடு அனுப்பும் போது ஃபோன் பண்ணு. வர்றேன்” என்றவன் அவனிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டான்.
வண்டியில் இருந்த பேக்கை காரில் எடுத்தவைத்தான். இருந்தது ஒரு நாள்தான். அம்மா வீட்டில் இவளுக்கு உடை இருக்கும் என்பதால் இவள் மாற்று உடை எதுவும் எடுத்துச்செல்லவில்லை. ஒரு நாளுக்கா இத்தனை ட்ரெஸ் எடுத்துட்டு வந்தாங்க என அவளுக்குள் யோசனை. மறு வீடு போகும் போது, வண்டியில் மாங்காய், தேங்காய் என மூட்டைகளை ஏற்றியதில் கவனிக்கவில்லை.
கிளம்பும் பொழுது, “அக்கா உனக்குத் தேவையானதை மாமா பேக்ல வச்சுட்டேன்” என ராகினி சொல்லியனுப்பினாள். எதை என்று இவளும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.
முன்பக்கம் கதவைத் திறந்துவிட காரில் ஏறிக்கொண்டாள். கார் வட்டமடித்து தோப்பை விட்டு வெளியேறியது.
“ஏதாவது பிரச்சினையா?” என்றாள், கார் தோப்பை விட்டு வெளியேறி, சாலையைத் தொட்டதும்.
பக்கவாட்டில் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஏன் அப்படி கேக்குற?” என்றான்.
“இல்ல… கோபமா பேசின மாதிரி இருந்துச்சு. இப்பவும் ஏதோ யோசனையில இருக்குற மாதிரியே இருக்கு!” என்றவளை, இறுக்கம் தளர்ந்து, விழியோரம் சுருங்கப் பார்த்தான். தன்னை உற்று நோக்குகிறாள் எனப்புரிந்தது. தன்னை அவள் கவனிக்கிறாள் என்பதே இதமான உணர்வைக் கொடுக்க, முகத்திலும் அதன் பிரதிபலிப்பு.
“அப்படியா தெரியுது?” என்றான் புன்னகை மாறாமல்.
“ம்ம்ம்” என்றாள்.
சொன்னால் ஆதியிலிருந்து, முன்தினம் சீதாலட்சுமியைப் பேசியது வரை சொல்ல வேண்டும் என யோசித்தான். அவனைப் பற்றி, அவன் பெற்றோர் பற்றி சொல்வதில் அவனுக்கு எவ்விதத்தயக்கமும் இல்லை.
சீதாலட்சுமி பற்றி சொல்வதானால், இவன் அப்பாவிற்கும், அவருக்கும் நடந்த கல்யாணப் பேச்சு வார்த்தையில் தொடங்கி, அப்பாவின் காதல், அதனால் இவர்கள் கல்யாணம் தடைபட்டது, அதன் பிறகான அவசரக்கல்யாணம், கணவரை இழந்து இங்கேயே வந்தது என நேற்று நடந்தது வரை மொத்தமாகச் சொல்ல வேண்டும். உங்க குடும்பமே இப்படித்தானா என நினைத்துவிட்டால்.
ஏற்கனவே அவளுக்கும் சரி, இவனுக்கும் சரி… ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கிடையில் தான் இந்த திருமணமே நடந்திருக்கிறது. ஆயிரத்தி ஒன்பதாவதாக இதையும் சேர்க்க விரும்பவில்லை. ஏனோ இப்பொழுது வேண்டாமே எனத் தோன்றியது.
“சின்ன பிரச்சினைதான். நீ கவலைப்படற அளவுக்கெல்லாம் ஒன்னுமில்ல?” மலுப்பலாகக் கூற,
‘அதுக்கா அவ்வளவு கோபம்’ என்பது போல் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
“நம்புங்க அம்மணி… உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். எனக்கும் மனம்விட்டு எல்லாம் பேசணும்னு ஆசைதான்.” சிரித்து மலுப்புவனிடம் அதற்கு மேல் என்னத்தைக் கேட்க என அவளும் விட்டுவிட்டாள்.
ஒரு பெண்ணின் மனதில் அனுதாப ஓட்டில், தடம் பதிப்பில் அவனுக்கு விருப்பமில்லை. ஏற்கனவே அவனைச் சுற்றி எப்பொழுதும் அனுதாப அலை அடிப்பதாகவே ஒரு உணர்வு. அப்பத்தா முதற்கொண்டு, அப்பாவின் துரோகத்தையும் மறந்து, சீதாலட்சுமி வரை, “அப்பனாத்தா இல்லாத பிள்ளை” என்றுதானே பரிவாகப் பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் வாசுகியை அவனுக்குப் பிடிக்கும். இவன் மேல் பரிதாபப் படாமல் அவன் அப்பாவின் மீதிருக்கும் வன்மத்தை இவன் மீது மடை திருப்புவார்.
ஏற்கனவே சுப்பாத்தாள் அவருக்குத் தெரிந்த வகையில் இவனைப்பற்றி மேலோட்டமாகக் கூறியிருப்பார். அதற்கே இவளது பார்வை மாறியிருக்திறது. தன்னை கனிவாக உற்றுப் பார்க்கிறாள். ஏனோ இவளது இந்தப் பார்வை பிடிக்கவில்லை. அன்று கோவிலிலும், மண்டபத்திலும் கோபமாக முறைத்துப் பார்த்தது தான் பிடித்திருக்கிறது அவனுக்கு.
எப்படியும் தெரிந்து கொள்ளத்தானே போகிறாள், மெதுவாகத் தெரிந்து கொள்ளட்டுமே, வந்த மூன்றாம் நாளே மொத்தக் கதையும் சொல்ல வேண்டாமே என அவன் நினைத்திருக்க,
‘நம்மவீடு, நம்ம குடும்பம் என்பதெல்லாம் சும்மா வாய் வார்த்தை தான். அவங்க குடும்ப விவகாரத்தை நம்மிடம் சொல்ல விருப்பமில்லை போல?’ என நினைத்தவள் அதற்கு மேல் கிளறவில்லை. அப்படி எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளும் அளவிற்கு இன்னும் அவள் நெருக்கம் காட்டவில்லை என்பதை அவள் உணரவில்லை.
அதற்குள் வீடும் வந்துவிட, அவளை இறக்கிவிட்டு காரை ஷெட்டில் நிறுத்தி வந்தான்.
பெரியநாயகி தனித்து சோஃபாவில் அமர்ந்திருந்தார். வாசுகியும் அங்குதானிருந்தார். இந்நேரம் மாத்திரை போட்டு சற்று நேரம் படுத்திருப்பார். இன்று படுக்கவில்லை.
பார்த்தாலே தெரிந்தது, நேற்று நடந்த சண்டையைப் பற்றிதான் இருவருக்குள்ளும் சிந்தனை ஓடுகிறதென.
சீதாலட்சுமி அங்கு இல்லை. இத்தனை வயதிற்கு மேல், மருமகன், பேத்தி என எடுத்த பிறகு அவர்கள் முன்னிலையில், தன் மீது விழுந்த அவச்சொல்லில், கூனி குறுகிப் போனவராக, யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் அறைக்குள்ளேயே முடங்கிவிட்டார். வீடே அமைதியாக இருந்தது. சஷ்ட்டிகா சத்தம் கூட கேட்கவில்லை.
அமைதியை கலைப்பது போல், “என்ன… பெரியநாயகி… நானில்லாம ரொம்ப சந்தோஷமா இருக்க போல?” தாத்தனைப் போலவே கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்த பேரனைக் கண்டதும் சற்றே முகம் மலர்ந்தது பெரியநாயகிக்கு. இப்பொழுதுதான் வீட்டிற்கே உயிர் வந்தது போல் அவனது கணீர் குரல் மணியடித்தாற்போல் வீடு நிறைத்தது.
“வாங்கப்பு!” பொதுவாக இருவரையும் அழைத்தார்.
அவளிடம் குடும்பத்தார் சௌக்கியத்தை விசாரித்தார். அவருக்கு பதில் சொல்லிவிட்டு, மாதங்கி அறைக்குள் செல்ல, வந்தவுடன் சோஃபாவில் அமர்ந்திருந்த பெரியநாயகி மடியில் தலை சாய்த்துவிட்டான். காலைத் தூக்கி சோஃபா கைப்பிடியில் வைத்தவன் நீட்டி நிமிர்ந்துவிட்டான். அவரது கையை எடுத்து தன் தலை மீது வைத்து கண்களை மூடிக்கொண்டான். தலை வலிக்கிறது என்று அர்த்தமாம்.
தலை வலிக்கிறதோ இல்லையோ அவர் மடியில் படுத்து அவர் சிறிது நேரமானாலும் தலையைப் பிடித்துவிட வேண்டும். இப்பொழுது உண்மையிலேயே தலை வலித்தது. பவித்ராவின் சகோதரர்கள் மீதிருந்த கோபம், பெற்றவர்கள் நினைவு என மனதை அழுத்திய பாரம் தலைக்கு ஏறத்தான் செய்தது. வீட்டின் அமைதியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அதை கலைப்பதற்கே, உடை மாற்றக்கூட செல்லாமல் அப்பத்தா மடியில் படுத்து, அவரது கவனத்தையும் திசை திருப்பும் வகையில் தலையைப் பிடித்துவிடச் சொன்னான்.
அவனது நெற்றியில் விபூதிக்கீற்றைப் பார்த்தவர், “எந்த கோயில் அப்பு” என்றார்.
“நம்ப வீட்டுக்குப் போயிட்டு வர்றோம் அப்பத்தா!” என்றான் கண்களை மூடிக்கொண்டே.
“விளக்கேத்தினாளா பேத்தி?” ஆர்வமாகக் கேட்க,
“ம்ம்ம்…” கொட்டினான்.
“யாரு, எங்க மொதமொதன்னு வெளக்கேத்தனுமோ அங்கதானே ஏத்த முடியும்?” நொடிப்பும், பூரிப்புமாக பெரியநாயகி முகம் ஒளிவீசியது. பேரன் தன் மனைவியோடு பூர்வீக வீட்டிற்குச் சென்று விளக்கேற்றி வந்ததில், இனிமேல் அந்த வீடு இருண்டு கிடக்காது என்பதில் அவருக்கு அப்படியொரு ஆசுவாசம். இது பெரியநாயகிக்கும் பிறந்த வீடுதான் என்றாலும், மாமன்மச்சான் வீடுதானே என்பது அவரது எண்ணம்.
“பெரியநாயகி… மைன்ட் வாய்ஸ் வெளியே கேக்குது!” என்றான், வாசுகியும் அங்கிருப்பதை அறிந்து.
“எனக்கென்னடா பயம். கேட்டா கேட்டுப் போகட்டும்” என்றார் சட்டமாக. மருமகளுக்குப் பயந்த மாமியாரும் இல்லை. மாமியாருக்குப் பயந்த மருமகளும் இல்லை. இருவருமே நினைத்ததை நினைத்த இடத்தில் பேசக் கூடியவர்கள்.
மற்ற நாட்களாக இருந்தால் அவரும் ஏதாவது சொல்லியிருப்பார். வாசுகியும் பதில் கொடுக்கும் மனநிலையில் இல்லை.
“பெரியநாயகி, இன்னைக்கி மழை வரப்போகுது” என்றான் வாசுகியின் அமைதியைப் பார்த்துவிட்டு, யாருக்கும் கேட்காத குரலில். அவன் சொன்ன தொனியில் பெரியநாயகிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“பெரியநாயகி… சிரிச்சு மாட்டிவிட்றாதே!” பயந்தது போல் நடிக்க,
“போடா… படவா” என செல்லமாக பேரனை தோளில் தட்ட,
‘அப்படியே பயந்துட்டாலும்’ வாசுகி மைன்ட் வாய்ஸ்.
இளநீர் சிந்தியதால் பிசுபிசுத்த உடையை மாற்றிக்கொண்டு, சிறு குளியல் போட்டு வெளியே வந்தவள் இவனைத்தான் பார்த்துக்கொண்டே வந்தாள்.
அங்கு தோப்பில், கோபம் தாங்கிய முகத்தோடு விரைப்பாக நின்றதென்ன? இங்கு சிறுபிள்ளை போல் அப்பத்தா மடியில் படுத்து செல்லம் கொஞ்சுவதென்ன?
அப்பொழுதுதான் சட்டென அவளுக்கு நினைவிற்கு வந்தது.
முன்தினம் இரவு, “நான் தலை பிடித்துவிடவா” எனக் கேட்டதற்கு ஏன் அப்படி கள்ளச்சிரிப்பு சிரித்தான் என இப்போழுது புரிந்தது.
அப்பத்தா மடியில் தலையை வைத்தல்லவா ஒய்யாரமாக நீட்டி நிமிர்ந்திருக்கிறான். அவரும் ஒரு கையை தலையோடு சுற்றி அணைத்துப் பிடித்தவாறே தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்.
அப்பத்தா இடத்தில் இவளை நினைத்துப் பார்க்க, ‘’அம்மாடியோவ்… இடத்தைக் கொடுத்திருந்தா மடத்தையே பிடித்திருப்பானே’ என்றது அவளது மருண்ட பார்வை.
கொலுசு சப்தத்தில் கண்களைத் திறந்தவன், கண் எதிரே அவளது அரண்டு விழிப்பது தெரிய, கண்கள் சுருங்க, நமட்டுச் சிரிப்போடு புருவம் உயர்த்தினான். முறைத்துவிட்டு அடுப்படி சென்றுவிட்டாள் தண்ணீர் குடிப்பது போல். இதுதான் நம்ம வீட்டம்மணிக்கு அழகு என மெச்சிக் கொண்டான் அவளது கோபப் பார்வையை.
வெளியே இவனது பேச்சுக்குரல் கேட்க, பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் ஜெகன். சற்று காலைத் தாங்கி நடந்துவந்தான். நேற்று நடந்த சண்டையில் இவனுக்கும் கெண்டைக்காலில் அடிபட்டு இரத்தம் கட்டியிருந்தது. சிறு வீக்கம்தான். அதற்கே இன்று கார்மென்ட்ஸ் வரவேண்டாமென தனசேகர் மட்டும் சென்றுவிட்டார்.
“டேய்… உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இன்னும் என்னடா சின்னப்பிள்ளையாட்டம் அப்பத்தா மடியில படுத்து கொஞ்சிட்டிருக்க?” என்று கேட்டுக் கொண்டே வர,
“உனக்கேன் மாம்ஸ் பொறாமை? வேணும்னா நீங்களும் உங்க அம்மத்தா மடியில படுங்க! யார் வேண்டாம்னா?” என்றவன்,
“குட்டீம்மா… வாங்க!” என இரு கை விரித்து அழைக்க, கீழே இறக்கி விடப்பட்ட, சஷ்ட்டிகா மாமனிடம் வந்தாள். அவளையும் தூக்கி வயிற்றின் மீது உட்கார வைத்துக் கொண்டான்.
“அடுத்த வருஷம் உனக்கே பிள்ளை வந்துரும். இன்னும் உனக்கு அப்பத்தா மடி கேக்குதா? சோஃபாவைத் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருந்த காலில் ஒரு அடியைப் போட்டான்.
“மாம்ஸ்…” என்றான் சஷ்ட்டிகா வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டு. மாமனின் செய்கையில் அதுவும் கெக்களிப்பு போட்டு சிரித்தது.
“என்னடா?” என்றவாறே எதிரில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்தான்.
“மச்சானுககிட்ட சீர் வாங்குற ஐடியா ஏதும் இல்லயா மாம்ஸ்!” என்றான்.
“என்னடா திடீர்னு? சீர் கொடுத்தா வேண்டாம்னா சொல்லப் போறேன். ஆனா… உங்கிட்ட சீர் வாங்குறதுக்கு சும்மா இருந்திறலாம்டா? சீர் வாங்குறளவுக்கு விசேஷம் ஏதும் இல்லையேடா?” என்றான் யோசனையாக.
“என்ன மாம்ஸ் நீங்க? அவனவன் சீர்வாங்கவே இல்லாத விசேஷம் எல்லாம் தேடிப் புடிச்சு வச்சுட்டிருக்கான். நீங்க என்னடான்னா வைக்கவேண்டிய விசேஷத்தையே மறந்துட்டீங்க! விசேஷம் வச்சு மச்சானுககிட்ட சீர் கேளுங்க மாம்ஸ்!”
“அப்படி என்ன விசேஷம்டா?”
இவன் சப்தம் கேட்டு சீதாலட்சுமியும், பவித்ராவுமே வெளியே வந்தனர். ‘இவன் வந்ததும் எல்லாரும் வெளியே வர்றாளுங்க. அப்படி என்னதான் சொக்குப் பொடி போட்டானோ தெரியல. இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த வீடும் இவன் வந்த பிறகுதான் கலகலக்குது!’ வாசுகிக்குப் பொறுக்கவில்லை.
தண்ணீர் குடித்துவிட்டு வெளியே வந்தவளை, பவித்ரா, “வாங்க நங்கையாரே! வீட்ல எல்லாரும் சௌக்யமா?” என்றாள்.
“எல்லாரும் நல்லாருக்காங்க அண்ணி.”
“டீ, காஃபி ஏதும் வேணுமா?” என விசாரிக்க,
“வேண்டாம் அண்ணி… இப்பதான்…” என சொல்ல வந்தவள் அவனைப் பார்த்துவிட்டு, அதோடு நிறுத்திக் கொண்டாள்.
“அதென்னெங்கண்ணி… அண்ணா கால்ல?” என பேச்சை மாற்றினாள்.
கைலியை மடித்துக் கட்டியிருந்ததால், கெண்டைக்காலில் இரத்தக்கட்டிற்கு சுண்ணாம்பும், சீனியும் கலந்து பற்று போட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இவள் கேட்டதில் மதனும் எழுந்தமர்ந்து பார்த்தான்.
“ஒன்னுமில்லம்மா… சின்ன அடிதான்.”
“அடியா… எப்படி ஆச்சு?” அவள் விசாரிக்க, ஜெகன், மதன் முகத்தைப் பார்த்தான்.
“அடிதடின்னா ரெண்டு பக்கமும் சேதாரம் ஆகத்தானே செய்யும்!” என்றான் மதன்.
“அடிதடியா?” என்றாள் மிரண்டு போய். ஒருவேளை இதைப் பற்றித்தான் தோப்பில் கோபமாகப் பேசிக்கொண்டு இருந்தானோ எனத் தோன்றியது.
“மாம்ஸ்… உடனடியா நம்ம சஷ்டி குட்டிக்கு, கெடாவெட்டி காது குத்துறோம்!” என்றான் மதன்.
“எதுக்குடா… அவனுககிட்ட அடிவாங்குனதை கொண்டாடவா?”
“ஆமா… மாம்ஸ். மாமன் மச்சானுகளுக்கு கறிவிருந்து போட வேண்டாமா?”
“இப்ப எதுக்குடா திடீர்னு விசேஷம் வைக்கணும்கற இப்பதானே உன் கல்யாணம் முடிஞ்சது?” பெரியநாயகி கேட்க,
“அடுத்தடுத்து வீட்ல விசேஷம் நடக்கிறது நல்லதுதானே. அதுவுமில்லாம இது நம்ம வீட்டு விசேஷமில்லை அப்பத்தா. மாம்ஸ் வீட்டு விசேஷம்” என்றவன் சற்றே பெரியநாயகி பக்கமாகத் குனிந்து, “உங்க பெரிய பேரனை அழைக்க வேண்டாமா? பெரியப்பா எப்படியும் கோபத்துல அவனை கூப்பிடப் போறதில்ல… விசேஷம்னு ஒன்னுவச்சா, அதைச் சாக்காவச்சு, உங்க பேரனையும், அவன் வீட்டுக்காரம்மாவையும் வீட்டுக்கு அழைக்கலாம்ல?” எனக் கேட்க வாசுகியும் கேட்டுக் கொண்டுதானிருந்தார்.
மகனை அழைக்க வேண்டும் என வாசுகி சொன்னால் கண்டிப்பாக தனசேகரன் ஒத்துக் கொள்ளமாட்டார். “எனக்குனு இருக்கறது அவன் ஒருத்தன் தான்” என ஏற்கனவே சாடைமாடையாக சொல்லிப் பார்த்துவிட்டார்.
அவர் காதில் வாங்கியது போல் கூடத் தெரியவில்லை. மீறிப் பேசினால், “உன் மகனைத் தேடி நீயும் போயிறு!” என்று சொல்லக்கூடத் தயங்கமாட்டார்.
ஆனால், ஒரு விசேஷம் என்றால் வீட்டில் ஒருத்தனை விலக்கி வைத்துவிட்டு செய்ய மனம் வராது. அதுவுமில்லாமல் ஜெகன் பிள்ளைக்கு விசேஷம். அவன் கண்டிப்பாக மச்சான் முறைக்கு அழைத்தே ஆகவேண்டும். அழைப்பும் அவன் வழியாகத்தான் செல்லும். நேரடியாக இவர்கள் அழைக்க வேண்டியதில்லை. இதுவும் நல்ல யோசனைதான் என மெச்சிக் கொண்டார் வாசுகி.
“மதனு… ஒரு வாரம் கூட ஆகல. உன் பெரியப்பாவுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்” என்றார் பெரியநாயகி மகனை நினைத்து.
சின்ன மகன், வீட்டைவிட்டு பிரிந்து சென்ற பிறகு, இது மாதிரி எத்தனை கெஞ்சி அழுதிருப்பார் தன் கணவரிடம். ஆனால் கௌரவம் தான் பெரிதென இறுதிவரை வீம்பாக இருந்துவிட்டார் சிவகைலாசம். அதை நினைக்கையில் இப்பொழுதும் பெற்ற மனம் பரிதவித்தது. அதே போல் பேரனை விட்டுவிடு மனம் வரவில்லை.
பேரன் சொல்வது ஒரு வழிக்கு நல்ல யோசனையாக இருந்தாலும் தனசேகர் ஒத்துக் கொள்ளவேண்டுமே.
“உங்க பெரியப்பா ஒத்துப்பானாடா?”
தனது எண்ணத்தை வெளிப்படுத்த, “நம்ப கூப்பிடப் போறதில்லைல அப்பத்தா… மாம்ஸ் தானே அவர் பிள்ளை விசேஷத்துக்கு மச்சானை கூப்பிடப்போறார்.”
“டேய்… என்னைய ஏன்டா இதுல இழுத்து விடுற.” ஜெகன் ஜெகா வாங்க,
“மாமன் மச்சான்னு இருக்கறது என்னத்துக்கு? என்ன பவி நான் சொல்றது சரிதானே?” பவித்ராவையும் கூட்டு சேர்க்க,
“அண்ணன் சொல்றதும் சரித்தான்!” என்றாள் அவளும்.
“நீ என்னைக்கி உன் பாசமலர விட்டுக் கொடுத்த? ஆக மொத்தம் பெரிய மாமாகிட்டயும் எனக்கு அடிவாங்கிக் கொடுக்க முடிவு பண்ணிட்டீங்க! நல்ல குடும்பம்டா சாமி!” ஜெகன் அலுத்துக் கொள்ள,
“என்ன சொன்னீங்க?” பவித்ரா பல்லைக் கடிக்க,
“நல்ல குடும்பம்னு தானடீ சொன்னேன். எதுக்கு இப்ப நெற்றிக் கண்ணத் திறக்குற?” அப்பாவி போல் கேட்க,
“அது… அந்தப்பயம் இருக்கட்டும்!” பவித்ரா பொய்யாக மிரட்ட,
“எங்கெரகம் நல்லா வந்து…” ஜெகன் முடிக்கும் முன்,
“வாக்கப்பட்டீங்க… அதானே” அவனது வழமையான டயலாக்கை முடித்து வைக்க,
இவர்கள் கேலி கிண்டலைப் பார்த்தவள் வாய்விட்டு சிரித்துவிட்டாள்.
எல்லாரிடமும் இவ்வளவு நேரமாக இருந்த இறுக்கம் தளர்ந்து சகஜநிலை திரும்பியது.
“சித்தி… என்ன சமையல்… பசிக்குது” என்றான்.
“இதோ அஞ்சே நிமிஷத்துல ரெடியாகிறும் கண்ணு. நீ ட்ரெஸ் மாத்திட்டு வா!”
பிள்ளைகள் பசி என்று சொன்னால் போதும். சீதாலட்சுமிக்கு சகலமும் மறந்து விடும் எனத் தெரியும். அவரது பலவீனம் தெரிந்தே இல்லாத பசியை இருப்பதாகக் கூற, அவர் அடுப்படி விரைந்தார்.
சென்றவரையே மதனின் கண்கள் பின் தொடர்ந்தது. ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல், கிடைத்த வாழ்க்கையும் நிலைக்காமல் வீடே உலகமென அடங்கிவிட்டவர். இவரைப் பேச எப்படி அவனுகளுக்கு மனசு வந்துச்சு என்று நினைக்க, நினைக்க மனம் எரிமலையாய்க் கொதித்தது. முயன்று தம் கட்டினான்.
கூடிய சீக்கிரம் எப்படியும் மகன் வந்துவிடுவான் என்ற சந்தோஷம் வாசுகி முகத்தில். அதே சந்தோஷத்தோடு எழுந்து உள்ளே சென்றார். பெரியநாயகியும், சீதாலட்சுமிக்கு ஒத்தாசை செய்ய அடுக்களை எழுந்து செல்ல, நால்வர் மட்டும் அங்கிருந்தனர்.
தனித்து இருந்த மதனிடம், “என்னடா உன் ப்ளான். இதைப் பாத்தா… கிரிய வீட்டுக்கு கூப்பிட வைக்கிற விசேஷம் மாதிரித் தெரியல. வேற என்னமோ திட்டம் போட்டிருக்க.” சரியாக மச்சானின் நாடி பிடித்தான் ஜெகன்.
“அதுவும் ஒரு காரணம் தான். பெரியம்மாவுக்கு பயம். ஒரேடியா தாத்தா எங்க அப்பாவை ஒதுக்கின மாதிரி, பெரியப்பாவும் மகனை தள்ளி வச்சுருவாரோன்னு. இதைவிட்டா அவனை எப்போ கூப்பிடறது. மச்சான்னா உங்களுக்கு நாங்க மட்டும்தானா? பவித்ரா அப்பா வழியில இன்னும் ரெண்டு பேர் இருக்கானுங்கல்ல மாம்ஸ். அவிங்களுக்கும் நாம யாருன்னு காட்டவேண்டாமா?”
“டேய்… சொத்துக்காக ரிஸ்க் எடுக்கவேண்டாம் மாப்ள. அவிங்க கொடுக்கறதை வச்சுத்தான் நாம பொழைக்கப்போறோமா? போய்த் தொலையறானுகடா!” விட்டேத்தியாக ஜெகன் பேச,
“ஆமாண்ணா… இவங்க சொல்றதுதான் சரி. துஷ்ட்டனைக் கண்டா தூர விலகுன்னு சொல்லியிருக்காங்க. இத்தனை வருஷமா கண்டுக்காம விட்டாச்சு. இப்ப வாங்கி என்ன பண்ணப்போறோம். அதைவிட பலமடங்கு சொத்தை அம்மா இழந்திருக்காங்க.” கணவன் கூற்றை வழிமொழிந்தாள் பவித்ராவும்.
“அப்படி விடமுடியாது பவி! இங்க சொத்து பெரிய விஷயமே இல்ல. நீ அந்த வீட்டு வாரிசுங்கறதுதான் முக்கியம். நீ ஒருத்தி இருக்கிறதையே மறச்சுட்டானுக. அதைத்தான் போஸ்ட்டர் அடிச்சு ஊர்ப்பூரா ஒட்டப்போறோம். அவிங்களுக்கு கடன் கொடுத்தவுங்க எல்லாம் அவனுகள துண்டக்காணோம், துணியைக் காணோம்னு ஓடவிடப் போறானுக பாருங்க!”
“அதுல இன்னும் காண்டாவானுகடா!”
“ஆகட்டும் மாம்ஸ்! நமக்கும் அதுதானே வேணும்!” எழுந்து நின்று கைவிரல் கோர்த்து, நெட்டி முறித்தவன், உடைமாற்ற எழுந்து சென்றான். ஜெகன் பவித்ரா முகம் பார்க்க, அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
இவர்கள் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ சொத்துத் தகராறு என்றளவில் மட்டும் புரிந்தது. அதுவும் பவித்ரா பிறந்த வீட்டு வழியில். அதில்தான் அடிதடி வரை சென்றிருக்கிறது.
இதில் தன்னைப் பற்றி, தன் படிப்பு பற்றி இவனிடம் இன்று பேசலாம் என்று நினைத்தவளுக்கு இந்தப் பிரச்சினை முடியட்டும். பிறகு பேசிக் கொள்ளலாம் என்று தோன்றியது.
****
சுண்ணாம்பு+சீனி
ஈரச்சுண்ணாம்பும், இரண்டு சிட்டிகை சீனி இரண்டு உள்ளங்கையில் வைத்து குழைக்க, சீனி கரைந்து களிம்பு பதம் வரும். அடிபட்ட வீக்கம், கருத்துச் சிவந்த இரத்தக்கட்டு, தொண்டைக்கட்டு இதற்கெல்லாம் உடனடி நிவாரணம் தரும். குழைத்தவுடன் தடவ வேண்டும். நொடி தாமதித்தாலும் சட்டென இறுகி விடும். வீக்கத்தின் மீது இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். மறுநாள் சுடுதண்ணீர் வைத்து கழுவலாம்.
