பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 23

மூன்றாம் பிறை. வானில் விண்மீன்களின் ஆதிக்கம் நிறைந்த முகமறியா மையிருட்டு. 

பேச்சற்ற அமைதி. அந்தகாரத்தை கிழிக்கும் இரவுப் பூச்சிகளின் ரீங்காரம். மச்செல்லாம் குளிரும் மார்கழிப்பனி கடந்து, தரையெல்லாம் குளிரும் தைமாதக் குளிர் ஊசியாய் இறங்கியது. விண்மீன்களெல்லாம் உதிரிப்பூக்களாய் மண்ணில் உதிர்ந்தது போல் விண்மீன்களின் ஒளிவாங்கி பனித்துளியால் மகுடம் தரித்த ‌புல்லின் நுனி. நெல் வயலில் நெற்கதிர் பால்பிடிக்கும் பச்சை வாசமும், சேற்றுவயலின் ஈரவாசமும் காற்றெங்கும் பரவி நுரையீரல் நிறைத்தது சில்லென. 

புறக்குளிரைவிட அகக்குளிர் தான் அனலாய் தகித்தது அழகியை. இதயம் இடம்மாறி நெஞ்சுக் குழிக்கு வந்துவிட்டதைப் போல் ஒரு தவிப்பு. முகிழ்க்கும் மகிழ்ச்சி மனமெங்கும் இதமாய்ப் பரவி பூத்துக்கிடந்தது. உலக சந்தோஷம் அத்தனையும் இந்த ஒரே நாளில் அனுபவித்துவிட்ட பரவசம் அவளது கண்களில். 

வரப்பில் நடப்பது இத்தனை கடினமாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. எத்தனையோ இரவுகள் கனவில் அவனோடு கைகோர்த்து நடந்த தூரம், இன்று நடக்க நடக்க தூரம் நீள்வதைப் போல் இருந்தது. இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் போலும் இருந்தது. இதே வரப்பில் விறகுக்கட்டோடும், தலையில் ஒரு குடம் இடுப்பில் ஒரு குடமென தண்ணீரோடு கை வீசி நடந்தவளுக்கு, நெஞ்சமெங்கும் நிரப்பித் தழும்பிய காதலின் சுமை தாளமாட்டாமல் நடை தள்ளாடியது. இன்று ஏனோ வெறுமனே‌ நடக்கவே‌ கால்கள் துவண்டு விழும் உணர்வு. பாதம் விரைக்கும் குளிரில், நெல் நாற்று மயிலிறகாய் பாதம் வருடி சிலிர்ப்பூட்டியது. பசுவைத் தொடரும் கன்று போல தன்னை‌ தொடர்ந்து வருபவனை நினைத்த மாத்திரத்தில் சட்டென முகம்‌ சிவந்து, கனிந்துவிட்டது. போதும் போதும் எனுமளவிற்கு நெஞ்சமெங்கும் பரவசமும், பூரிப்பும் தளும்பி வழிந்து மூச்சுமுட்டியது.

தலை கொள்ளா மல்லிச்சரத்தோடு சடையை முன்னே போட்டு, முந்தானையை இழுத்து இடுப்பில் இறுக்கிச் செருகி, சேலைக் கொசுவத்தை இடக்கையால் லேசாகத் தூக்கிப் பிடித்து, வரப்பில் நடந்து முன் செல்பவளை பின் தொடர்ந்தவன் முகமெங்கும் மந்தகாசமாய் புன்னகை. நுரைத்துப் பொங்கும் புதுப்புனலாய் மனமெங்கும் சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பு. 

தன்னை‌ மறந்தும் திரும்பிப் பாராமல், வரப்பின் மீதே கவனம் வைத்து நடந்து கொண்டிருப்பவளை நினைத்து உள்ளூர சிரித்துக் கொண்டான். சற்றுமுன் பெண்கள் சேர்ந்து அடித்த கொட்டமென்ன? அதை நினைக்கையில் கள்ளச்சிரிப்பு அவனுக்குள்ளும். கண்ணைக்கட்டிவிட்டால் கூட தடுமாற மாட்டாள். ஆனால் இன்று அவளின்‌ நடையில் தடுமாற்றம் அவனுக்கும் சுவாரஸ்யம்‌ கூட்டியது. அவனது பார்வை முதுகை துளைக்க, இவளுக்கு தான் அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.‌ இருவரையும் ஒருவித மயக்கம் கட்டியிழுத்துச் சென்றது.

காலையில் தான் உற்றாரும், ஊராரும் மெச்ச, படுவிமரிசையாக நடந்து முடிந்திருந்தது சித்தநாதன், அழகம்மை திருமண வைபவம். மனிதர்களுக்கே உரிய ஆரம்பகட்ட புகைச்சல் அடங்கி, ஊராரும் நம்ம சித்தன், அழகி கல்யாணம் என கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

நான்கு தங்கைகளுக்கும், அவர்களை கொண்டாங்கொடுத்தான் வகையறா என ஒருத்தரையும்‌ விடவில்லை. அனைவரையும் அழைக்கச் சொல்லியிருந்தான். எங்கிருந்துதான் பொன்னுத்தாயிக்கு இத்தனை தெம்பு வந்ததோ. அசராமல் அலைந்து திரிந்து அழைப்பு விடுத்தார் ஒவ்வொரு மகள்வழிச் சொந்தங்களுக்கும். 

தானே நேரிடையாக மெட்ராஸ் சென்று அக்கா, தங்கை வீட்டாரை முறைப்படி அழைப்பு விடுத்தான். வேல்ச்சாமியோடும், ஆவுடையோடும் சேர்ந்துதான். 

அடிமேல் அடியடித்தால் அம்மியே நகரும் பொழுது வேல்ச்சாமி எம்மாத்திரம். தண்ணீர்த்தொட்டி திறப்புவிழாவிற்கு தலைமையென வேல்ச்சாமி பெயரை, மூன்று தலைமுறைக்கும் சேர்த்துப்போட்டு பத்திரிக்கை அடித்து ஊர் முழுக்க கொடுத்துவிட்டானே! போகாமல் விட்டால் ஊருக்குள் மரியாதை என்னாவாது? மகன்‌ ஊருக்கு நல்லது செய்வது அப்பனுக்கு பிடிக்கவில்லை போல என பேச்சு வருமே.

“ஊருக்குள்ள உங்க மரியாதைய எம்மகன் கோபுரத்துல ஏத்தி வச்சுருக்கான். அவன் மரியாதைய காப்பாத்த வேண்டியது உங்க பொறுப்பு! சின்னப்புள்ளத்தனமா வீம்பு புடிச்சு உங்க மரியாதைய நீங்களே கெடுத்துக்கப் போறீங்களா? பெரிய மனுஷனா முன்னுக்கு நின்னு‌ கல்யாணத்த முடிச்சு பெருமை தேடிக்கப்போறீங்களா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!” பட்டுத் தெறித்தாற்போல் பட்டென முடித்துக் கொண்டார் ஆவுடை.‌ 

வேற வழியே இல்லை. சம்பந்தி வீட்டார்க்கெல்லாம் மனைவியோடு சென்று அழைப்பு விடுத்து தன் மரியாதையை காப்பாற்றிக் கொண்டார்.‌

பஞ்சாயத்து தலைவர் கல்யாணமாச்சே. நாலூருச்சனமும் கூடிவிட்டது திருவிழா‌ போல. 

ஊரடைக்க பந்தல் போட்டு, ஊரழைச்சு, பந்திப்பாய் விரித்து விதவிதமான விருந்து நடந்து கொண்டிருந்தது காலையிலேயே. 

மணப்பெண்ணிற்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது அதே வெளித்திண்ணையில். அன்னக்கிளியும், சுமதியும் அழகியை அமரவைத்து அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்க,

வீரம்மா, “தள்ளுங்கடீ! அதுக்குள்ள என்னடீ அவசரம்? நான் அலங்காரம் பண்ணிவிட்டாதான், தலநாள்ல ஆம்பளப்பிள்ள பெத்தெடுப்பா!” (80sமக்களே!) என அனைவரையும் விலக்கிவிட்டு முன்னே வந்தார். 

“வா அத்தே! மக்களைப்பெற்ற மகராசி! இம்புட்டு நேரம் எங்க போன? சொல்லிவிட்டாதான் வருவியா?” அன்னக்கிளியும் உரிமையோடு சடைத்துக் கொள்ள,

“நான் வர்றதுக்குள்ள உங்களுக்கென்னடீ‌ அவசரம். நல்ல நேரம் வர வேண்டாமா?” என்றவர், அழகியை தாவாய் பிடித்து நிமிர்த்தி, “இவளுக்கு எதுக்குடீ அலங்காரம்?” என்றார். 

அன்னக்கிளியிடம் சீப்பை வாங்கியவர், “ஆத்தா மகமாயி!” என சாமியைக் கும்பிட்டு ஈரக்கூந்தலில் சிக்கெடுக்க ஆரம்பித்தார். இன்று மாதிரி அன்றெல்லாம் அலங்காரப் பெண்கள் கிடையாது. நன்கு வாழ்ந்த, அதிக பிள்ளைகளை அதுவும் ஆண்பிள்ளைகளை‌ப் பெற்றெடுத்த, பழுத்த சுமங்கலிகள் தான் மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்துவிடுவது.‌ ஆண் பிள்ளைகள் அதிகமாகப் பெற்றவர் என்பதில் வீரம்மாவிற்கு தான் கிராக்கி அதிகம். மக்களைப் பெற்ற மகராசியென பட்டப்பெயர் அவருக்கு.

அழகியின்‌ நீண்ட கூந்தலை சிக்கெடுத்து சீவி, இறுக்கப் பின்னி, உச்சியில் ராக்கடியை வைத்தவர், அதைச்சுற்றி ஒரு சரம் மல்லி, அதையடுத்து ஒரு அடுக்கு கனகாம்பரம், அடுத்து மல்லி, கனகாம்பரம்‌ என அடுக்கடுக்காக வட்டமாகச் சுற்றி, நெருக்க பட்டையாகக் கட்டிய கனகாம்பரச்சரத்தின் நடுவில் மல்லிச் சரத்தை வைத்து சடை‌முழுவதும் சுற்றியவர், நுனியில் கறுப்பு‌ குஞ்சம் வைத்துப் பின்னி‌முடிந்தார்.‌ 

“இவ முடிக்கு பூ சுத்தணும்னா சித்தன் பூந்தோட்டம் தான்டி போடணும்! விலைக்கு வாங்கி கட்டுபடியாகாது எம்மகனுக்கு!” என ஆனந்தச் சலிப்பு வேறு.‌ உச்சியில் சந்திர பிறை, சூர்யபிறை‌ சூட்டி,‌ நெற்றிச்சுட்டி‌ மாட்டி, மஞ்சள் பூசிய பொன்னிற முகத்தில் லேசாக புவடர்‌ பூசி, கண்ணிற்கு மையெழுதி, நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்து, இடது கன்னத்தில் நன்கு தெரியும்படி‌ திருஷ்டி‌ பொட்டு‌ம் வைத்து நிமிர்ந்தவர், கைவிரலால் நெட்டி முறித்து திருஷ்ட்டியும் கழித்தார். கண் நிரக்க பார்த்துக் கொண்டிருந்த பொன்னுத்தாய்க்கு கண்கள் நிரைந்து விட்டது. 

“பொன்னுத்தாயி நல்ல நாளும் பொழுதுமா கண்ணக்கசக்காம, சாமியக்கும்பிட்டு பிள்ளைக்கு விபூதி போட்டுவிடு!” வீரம்மா பேச்சைக் கேட்டு, கண்களை துடைத்துக் கொண்டு திருநீறு தட்டை எடுத்து வீரம்மாவிடமே கொடுத்தார். 

“பெத்தவ மொதல்ல பூசுத்தா! அப்புறம்‌ மத்தவங்க போடட்டும்!” பெரிய மனுஷியாய் கோளாறு சொல்ல, பொன்னுத்தாயே சாமியைக் கும்பிட்டு திருநீறு போட்டார்.‌ மற்ற தங்கைகள் கண்கலங்க சற்று நேரம் கணத்த அமைதி. 

“என்னாங்கடீ கல்யாண வீடு கலகலன்னு இல்லாம ஆளாளுக்கு கண்ணக்கசக்குறீங்க? அழுகாதீங்கடீ, வண்டுருட்டிப்பழம் வாங்கிக் தர்றே” கேலி பேசி சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்தார் வீரம்மா.

“அய்யே… ச்ச்சீ” என தங்கைகள் முகம் சுழிக்க அழகியும் தனை மறந்து சிரித்தாள். 

அதற்குள் புனிதாவும், சரண்யாவும்‌ ஆட்களோடு பெண்ணழைப்பிற்கு வந்துவிட்டனர்.‌ பெரியவளாக புனிதா தேங்காய், பழம், மஞ்சள் கிழங்கு, வெற்றிலை, பாக்கோடு, மணப்பெண்ணின் மடி‌ நிரப்பி முந்தானையை இடுப்பில் செறுகிவிட, சரண்யா மாலைபோட்டு கை பிடித்துச் சென்றாள். பிடிக்குதோ, பிடிக்கலையோ நாத்தனார் உரிமையை‌ விட்டுக்கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை. 

வீதியில் பெண்ணழைப்பு ஊர்வலம் நடந்தது. கோவிலில் வைத்து திருமணம். வீதியடைத்து பந்தல் போட்டு விதவிதமான தலைவாழை விருந்து. முருகேசன் தான் பந்திக்கு பொறுப்பு. 

வேல்ச்சாமியும், ஆவுடையும் ஒன்பது இழை போட்ட மஞ்சள் நூலில் கோர்க்கப்பெற்ற சொக்கனும், மீனாட்சியும் வீற்றிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, ஊராரை சாட்சியாகக் கொண்டு,  மணிக்கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மங்கையவள் முகம் பார்க்க, பாவையவள் கண்களில் கரகரவென கண்ணீர் கோடுகள் கண்ணிமைக்கும் நேரத்தில். 

எத்தனை வருடக் கனவு, ஏக்கம், எதிர்பார்ப்பு, தவிப்பு. பாதகத்தியின் கையளவு நெஞ்சம் தாளாமாட்டாமல் வெடித்து விம்ம, யாருமறியாமல் கைகளை ஆதரவாகப் பற்றியவன், இறுக்கமாக அழுத்திக் கொடுத்தான் அழுதது போதும் என்பது போல். 

திருப்பூட்டு முடிய, அடுத்த நிகழ்ச்சி தண்ணீர்த்தொட்டி திறப்புவிழா. 

மணமக்களோடு, ஊராரும் சேர்ந்து மந்தையில் இருந்த தண்ணீர்‌த் தொட்டியருகே கூடினர். வேல்ச்சாமி அதில் பதித்திருந்த கல்வெட்டை படித்தவர் பூரிப்பில் ஒரு கணம் அப்படியே தனை மறந்து நின்றுவிட்டார்.‌ அதில் மகன் பெயரோ, பஞ்சாயத்துத் தலைவராக மருமகள் பெயரோ இருக்கும் என எதிர்‌பார்க்க, மாறாக உபயம்‌ என‌ இன்னார் மகன் எனப்போட்டு‌ வேல்ச்சாமி பெயர்தான்‌ செதுக்கப்பட்டிருந்தது. 

எத்தனையோ கட்டிடங்களை அவர்‌ கட்டியிருக்கலாம். ஆனால் ஊர் மத்தியில் நிமிர்ந்து நின்ற தண்ணீர்‌த்தொட்டி மட்டும்‌ தான் அவர் பெயர் தாங்கிநின்றது. அதில் மட்டுமில்லை… பள்ளிக்கூடம், கோவில் கேட் உபயம்‌ என எல்லா இடங்களிலும் வேல்ச்சாமி‌ பெயர்தான்.‌ அவர் சம்பாதித்த சம்பாத்யங்களில் இதுதான் ஆகப்பெரிய சொத்து. 

பெயர் சொல்ல பிள்ளைகளைத் தான் பெறவேண்டும் என்பதில்லை. ராஜராஜ சோழனுக்குப்பிறகோ, கரிகாலச்சோழனுக்குப் பிறகோ அவர்களுக்கு வாரிசுகள் யாருமே இல்லையா என்ன? ஆனால், அவர்கள் யாராவது நம் நினைவில் இருக்கிறார்களா? நம் நினைவில் நிற்பது ராஜராஜ சோழனும், கரிகாலச்சோழனும்‌ தானே. அப்படி அவர்கள் பெயரை கல்வெட்டு போல் காலத்திற்கும் அழியாமல் மனதில் பதிய வைத்தது அவர்கள் கட்டிய பெரியகோயிலும், கல்லணையும் தானே காலத்திற்கும் நின்று பெயர் சொல்கிறது.

தந்தைதான் மகனை‌ அவையத்துள் முன்னிறுத்த வேண்டுமென்பதில்லை. மகனும் அதைச் செய்யலாமென எங்கும் தந்தையின் பெயரை முன்னிறுத்தி இருந்தான் தனயன். ஒரு‌ காலத்தில் ஊருக்குள் பெயரளவில் மட்டுமே இருந்த பெருமையை மீண்டும் மகன் மீட்டுத் தந்திருந்தான் அப்பாவிற்காக. 

முகத்தில் பெருமிதம் பொங்க, மாமனார் குழாயைத் திறந்துவிட, புது‌மருமகள்‌ தான் புதுக்குடத்தில் தண்ணீர் பிடித்தாள்‌ முதன் முதலாக. அதே நிறைகுடத்துடன் தான் மறுவீடு வந்தனர் மாப்பிள்ளை வீட்டிற்கு. பால் பழம் சம்பிரதாயம் முடிந்தது. தெருவெங்கும் மணமக்கள் ஊர்வலம் வந்தனர். எல்லார் வீட்டு வாசலிலும் ஆலத்தியெடுத்தனர். 

(அப்ப எல்லாம் அப்படித்தாங்க. கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணு மாப்பிள்ளைய அழச்சுட்டு வீதியெங்கும் ஊர்வலம் வரணும். எல்லார் வீட்லயும் ஆலத்தி எடுப்பாங்க. எல்லார் தட்டுலயும் காசு போடணும்.‌ எல்லார் வீட்லயும் பால், பழம் கொடுப்பாங்க. கலர் சோடா வாங்கி கொடுப்பாங்க. இன்னைக்கி மாதிரி கார்ல வந்திறங்கி நேரா வீட்டுக்குள்ள போக முடியாது.) 

பெண் வீட்டிற்கும் மறுவீடு வந்தனர். உள்ளே புதுப் பாயை விரித்து அமரவைத்து, பால் பழம் சம்பிரதாயம், கொளுந்தியாள்கள் கேலிப்பேச்சென கலகலத்தது. 

அலமேலு எதிலும் பட்டுக் கொள்ளவில்லை. அவளுக்கு மாமியார் வீட்டில் நடந்த மண்டகப்படி அப்படி. அவளுக்குத் துணையாக சரண்யாவும் பட்டும் படாமல் வெளியே நின்றுகொண்டாள். 

“தொரட்டிக் கம்பும், நாலு வெள்ளாடும் தான் சீரா வரும்போல!” காது படவே சாடை பேச, அவள் கணவன் முறைத்துப் பார்த்தான். அத்தோடு அடங்கிவிட்டாள்.

இங்கு வந்து தோட்டத்தைப் பார்த்தவளுக்கு, இது மொத்தத்திற்கும் அழகியும் உரிமைக்காரியா என்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆவுடை முதலிலேயே மெட்ராஸில் இருப்பதில் மட்டும்தான் பெண்களுக்கு பங்கு. தோட்டம் மொத்தமும் சித்தனுக்கு தான் சொந்தம் என முடிவாகச் சொல்லிவிட்டார். 

பரம்பரை சொத்துமில்லை மல்லுக்கு நிற்க. அதனாலேயே அழகியைப் பார்க்கும் பொழுதெல்லாம் இன்னும் கொஞ்சம் பற்றிக்கொண்டு வந்தது.‌ மாமியாருக்கு ஆகாத மருமகள் என்றால் கூட ஏதாவது செய்யலாம். இங்கு தான் மருமகள் மெச்சிய மாமியார், மாமியார் மெச்சிய மருமகளாயிற்றே! 

வழக்கமான சம்பிரதாயங்கள்‌ முடிந்து, பொன்னுத்தாயும் அவரால் இயன்ற‌ சீர்வரிசைகளோடு மகளை புகுந்த வீடு அனுப்பிவைத்தார். முருகேசன் தான் அழகிக்கு சகோதர முறைக்கு பலகாரக்குடம் சுமந்துவந்தான். மகள் இருக்கப்போவது உள்ளூர்தான் என்றாலும், தனக்கும் தாயாக இருந்தவளாயிற்றே அழகம்மை.‌ மகளை கட்டிப்பிடித்து ஒரு மூச்சு அழுது ஓய்ந்தார். மகளின் பிரிவை நினைத்தல்ல. நீ பட்ட பாட்டிற்கெல்லாம் விடிவுகாலம் வந்ததடி ஆத்தா என.

உள்ளூரிலேயே இருந்த குலதெய்வக் கோவில் சென்றுவிட்டு மீண்டும் மாப்பிள்ளை வீடுவர பொழுதாகிவிட்டது. வந்தவர்கள் யாரும் கிளம்பும் வழியைக் காணோம். அப்பொழுதே இரவு விருந்திற்கான ஏற்பாடு ஆரம்பமாயிற்று. எப்படிக் கிளம்புவார்கள். இன்று இரவு‌தான் இவர்கள் கல்யாணத்தை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் போடுவதாக ஏற்கனவே மைக் செட்டில் அறிவிப்பு செய்தாயிற்றே.‌

முருகேசன் தான் டவுனுக்குச் சென்றிருக்கின்றான். கலர் டீவியும், டெக்கும், கேசட்டும் வாடகைக்கு எடுத்துவர. 

இரவுச் சாப்பாட்டை முடித்ததும், அனைவரும் பாய், போர்வையோடு கிளம்பிவிட்டனர் மந்தைக்கு.‌ 

“இந்த மாதிரிப் படம் பாத்து எத்தனை வருஷமாச்சு” என ஆவுடையும்‌, அந்த நாள்‌ ஞாபகம் வந்ததே எனக்கிளம்ப, சரண்யா கணவனும், எனக்கு இதெல்லாம் புதிது என உற்சாகமாக் கிளம்ப, வேறு வழியில்லாமல் சரண்யாவும் கிளம்ப வேண்டியதாயிற்று. 

புனிதா பிள்ளைகளை நினைத்துத் தயங்க, தூங்கினால், நாட்டாமை வீட்டில் படுக்க வைத்துக் கொள்ளலாமென்றார் ஆவுடை. 

“மாப்ள… உன்ன மாதிரி ப்ளான் போட யாராலும் முடியாதுடா! எல்லாரும் கல்யாணத்துக்கு முதல் நாள்தான் படம் போடுவாங்க. நீ ஏன் இன்னைக்கு போடுறேன்னு இப்பதான் தெரியுது!” என்றவனுக்கு சிரிப்பே பதில் சித்தனிடம்.‌ 

அவனை உற்றுப் பார்த்து, “ஆமா… என்னடா‌ பண்ணின உன்‌ சகலைய?” எனக் கேட்டவனிடம்,

“கட்டிவச்சுத் தோல உரிக்கணும்னுதான்டா நெனச்சேன். மூனு பொட்டபுள்ளைகள நெனச்சுதான் வாய்‌ மிரட்டலோடு விட்டுட்டேன்” என்றான் அதே சிரிப்போடு.

“வாய்‌ மிரட்டலா விட்டதுக்காடா, உன் கொளுந்தியா‌ அந்தப் பயலுக்கு அம்மி அம்மியா… நெல்லும், மஞ்சளும் அரச்சு பத்துப்போடுது” என கேட்க, அதற்கும் அதே சிரிப்புதான் சித்தனிடம். 

பணத்தை திருடிவிட்டு ஊரைவிட்டு ஓடியபிறகு, இரண்டு மாதங்களாக ஊருக்குள் வரவில்லை செவலை. அவனைப் பார்த்தவர்கள் அங்கும், இங்கும் பார்த்ததாகச் சொல்ல, கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமிருக்க, கல்யாணக் கனவுகளோடு ஒரு நாளிரவு, கடலைக் காட்டிற்கு நடுவிலிருந்த பரணில், தனிமையில் இனிமையைத் தேடி, அமர்ந்திருந்தான் சித்தன். கரட்டடியில் நெருப்பு எரியும் வெளிச்சம் தெரிந்தது. யாரோ சாராயம் ஊரல் போட்டிருக்கிறார்கள்‌ என்பது புரிந்தது. 

வேகமாக இறங்கி வந்தவன், கரட்டடிவாரம் வர, அவன்‌ சந்தேகப்பட்டு வந்தத போலவே அது செவலையே தான். உடன் இன்னும் இரண்டு பேர் ஊரல் பானைக்கு அடுப்பெரித்துக் கொண்டிருந்தனர். 

இவனைக் கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடிக்க, இவன் மட்டும் தெனாவெட்டாக நின்றான். 

“வாங்க சகலை! நம்ம கல்யாணத்துக்கு புதுச்சரக்கா எறக்குவோமா?” என நக்கல் வேறு. 

“எறக்கிட்டாப் போச்சு! ஊருக்குள்ள சாராயம் காய்ச்சவோ, விக்கவோ கூடாதுன்னு பஞ்சாயத்துல முடிவு பண்ணியிருக்கு, தெரியுமா?”

“ஊருக்குள்ள தானே காய்ச்சக் கூடாது. நானொன்னும் உங்க ஊரு இல்லையே?”

“நம்ம பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்ட எல்லா ஊருக்கும்தான் சொல்லியிருக்கு! மீறினா‌ ஊர்க்காரவங்களே போலீசுக்கு புடிச்சுக் கொடுப்போம்!” 

“அழகுதானே பஞ்சாயத்துத் தலைவரு. அதெல்லாம் சொல்லிக்கலாம். இந்த மாதிரி தலைவராகுறதே மத்தவிங்கள காய்ச்சவிடாம, நாம காய்ச்சி விக்கத்தானே?” என எகத்தாளமாகப் பெயர் சொல்ல, சுர்ரென கோபம் உச்சிக்கு ஏறியது சித்தனுக்கு. ஏற்கனவே அவளை பஞ்சாயத்து வரை‌ இழுத்ததும்‌, மந்தையில் வைத்து பெண் கேட்டதும், கூலி கொடுக்கும் இடத்திற்கே வந்து, அதுவும் தன் தோட்டத்திலேயே வைத்து எல்லார் முன்னிலையிலும் அவளைத் தப்பாகப் பேசிய கோபமும் கழுத்தளவு இருக்கிறது. ஏதோ… போனால் போகிறது, சகலை‌யாகிவிட்டானே என அன்னக்கிளிக்காக கொஞ்சமே கொஞ்சம் பாவம் பார்த்தான். ஆனால் செவலையின் போறாத காலம். தேவையில்லாமல் வாய் விட்டான்.

கண்ணைக்கட்டிய கோபத்தோடு, “அவ உன்னைவிடப் பெரியவ. அண்ணி முறை. பேரு சொல்ற?” என்றவனிடம், 

“எங்க அண்ணனுக்கா கட்டியிருக்கு. இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா நானே ஆம்பளப் புள்ளைக்காக அழகுக்கு வாழ்க்கை கொடுத்துருப்பே. இடையில நீ வந்து கெடுத்துட்ட. காசுபணத்தோட வரவும் உன்னப்பாத்து மயங்கிருச்சா, இல்ல… காணாததக் கண்டு நீ மயங்கிட்டியான்னு தெரியல” என உள்குத்து வைத்துச் சொல்லி முடிக்கவில்லை.

உக்கிரமாய் எறிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையை உறுவியவன், “யாரு… யாருக்குடா வாழ்க்கை கொடுக்கறது. நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாள்ல. அவளச் சொல்லணும்.” 

இருந்த ஆத்திரத்தையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்துவைத்து விலாசித்தள்ளிவிட்டான். எல்லாம் வெளியே தெரியாத ஊமைக்காயம்.

“ஒழுங்கா புள்ள குட்டிகளோடு இருக்கறதுனா இரு! முடியாதுன்னா, அன்னக்கிளிக்கு புருஷனே இல்லைனாலும் பரவாயில்லைனு மாறுகால் மாறு கை வாங்கி, மூலையோட படுக்கப்போட்டு, நாய்க்கி கஞ்சி ஊத்துற மாதிரி ஊத்த வச்சுறுவேன். அந்தப் பிள்ளைக்கி ஏற்கனவே பள்ளிக்கூடத்துல சோறாக்குற வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டே. உன் தயவு தேவையில்ல!” என்றவன் கொஞ்சநஞ்சமிருந்த ஆத்திரத்தையும் ஊரல் பானைகளை அடித்து நொறுக்கி தீர்த்துக் கொண்டான். 

நடந்ததை முருகேசனிடம் கூற, “அதான் அந்த நாயி வாலச்சுருட்டிட்டு இருக்கா?” என்றவன், 

“சரிடா மாப்ள! நான் கெளம்புறேன். இந்தப் பயலுக இன்னும் படம் போடாம என்ன பண்றாய்கனு தெரியல. இன்னும் மைக்செட்ல சத்தத்தை காணோம். ஊருக்குள்ள ஒருத்தனும் தூங்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட!” என்றான் சிரித்துக் கொண்டே. 

டீவியில் படம் போட்டுவிட்ட, மைக்கை ஸ்பீக்கரில் வைத்துவிட்டால், படம் பார்க்க வரமுடியாத கெழடுகட்டைகள் கூட படுத்துக் கொண்டே கதை வசனம் கேட்டுக் கொள்ளும்.

வேல்ச்சாமி சின்ன மருமகனை நாட்டாமைக்கு அறிமுகப்படுத்த அழைத்துச்செல்ல, அவர்களோடே சரண்யாவும், பிள்ளைகளும் கிளம்பிவிட்டனர்.‌ 

*****

சுமதி, புனிதா, அன்னக்கிளியோடு, வீரம்மாவும் வந்திருந்தார் அழகியை அலங்கரிக்க. 

தலை நிறைய பூவை வைத்துவிட்டவர் கை, ஏதேச்சையாக அழகியின் கழுத்தில் பட, “என்னடீ உடம்பு இப்படிக் கொதிக்குது! இப்பவே கண்ணெல்லாம் சிவந்திருக்கு. காய்ச்சலடிக்குதா? காலையில ஈரத்தலையோடு சடை பின்னும்போதே நெனச்சேன்” என கவலைப் பட்டார். 

வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்த காட்டுமல்லிக்கா அந்த சிறு ஈரம் ஒத்துக்கொள்ளாமல் போகப் போகிறது. 

கழுத்தில் கை வைத்துப்பார்த்த சுமதியும், ‘நான் முதல்லயே சொன்னேன்! கேட்டியா?’ எனும்படி அழகியை முறைத்துப் பார்த்தாள்.

கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு! தேவையில்லாத வேலை பார்க்காதே என எச்சரித்திருந்தாள்.

‘சொல்லாதே!’ என கண்களைச் சுருக்கிக் கெஞ்சினாள்‌ அழகி. 

சுமதியும் போனால் பொகுதென்று, 

“அத்தாச்சி! அன்னைக்கி மாதிரி விடுகதை போட்டு இன்னைக்கும் பெரியம்மாவ அலற விடுறது!” எனப் பேச்சை திசை திருப்பினாள். 

“போ சுமதி! அன்னைக்கே என் மானம் போச்சு!” என்றவள் முகத்தில் நாணத்தின் சாயல். 

வீரம்மா, “இன்னைக்கி நம்மகிட்ட எப்படிடீ சொல்லுவா? ஒரு வேள சித்தன்கிட்ட தனியாச் சொல்லலாம்னு இருக்காளோ என்னவோ?” என‌ நக்கலாக இழுக்க,

“அத்தே!” என கண்களை உருட்டி மிரட்டினாலும், அதையும் மீறி முகத்தில் வெட்கம் படர்வதை தடுக்க முடியவில்லை. சிணுங்கியவள் முகம் அடிவானமாய் சிவந்து விட்டது.

புனிதா, “அது என்ன விடுகதை சுமதி?” எனக் கேட்க, 

வீரம்மா விடுகதையைச் சொல்ல, 

“இது மாதிரி கதையா? நான் கேக்கவா?” என அன்னக்கிளி கேட்க, 

“கேளு அன்னம்!” என்றாள் சுமதி. 

“ஒனக்கும்‌ தெரியுமாடீ?”

“நானும் இந்த ஊர்லதானே அத்தே பிறந்து வளந்தேன்?” 

“அப்ப கேளுடீ!”

அன்னக்கிளி, “கறுத்த கம்பளி விரிச்சு” என ஆரம்பிக்க,

“அன்னம்! ஒரு நிமிஷம் பொறு. அன்னைக்கி மாதிரி மானம் போயிறக்கூடாது. அக்கம் பக்கம் பாத்துக்கலாம்!” என்ற சுமதி வெளியே சென்று தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள். வெளியே யாரும் இல்லை. எல்லாரும் ஊருக்குள் படம் பார்க்கச் சென்றுவிட்டனர்.‌ ஆவுடை மட்டும் அடுப்படியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். 

உள்ளே வந்தவள், “ம்ம்ம்… இப்ப சொல்லு அன்னம்!” என உத்தரவு கொடுக்க,

“கறுத்த கம்பளி விரிச்சு, 

அவனும், அவளும் இருக்க,

அவ காட்ட,

அவன் நீட்ட,

அவ நோவுது நோவுதுங்கறா,

அவன் போவுது போவுதுங்கறான்…” என சொல்லி முடிக்க, 

வீரம்மா, “எல்லாச் சிரிக்கியும் ஒரே மாதிரித்தான் கதை போடுறாளுக!” என காது தண்டட்டி கன்னம் தட்ட முகத்தை வெட்ட, கலீரென அறையெங்கும் சிரிப்புச் சத்தம்.

புனிதா, “நான் விடுவிக்கவா?” எனக்கேட்க,

அவளைப் பார்த்து, “உங்களுக்குத் தெரியுமாக்கா?” என சுமதி விழிவிரிக்க, 

“அவளும் பிறந்து வளந்தது இந்த ஊருதானடீ?” என்றார் வீரம்மா.

சுமதி, “ஆவாரம்பட்டிக்காரவுக எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கீஈஈஈக!”‌என இழுக்க, 

வீரம்மா, “இருடீ… அவ கதைய விடுவிக்கட்டும்!” என அதட்ட, 

“வளைவிக்காரன் பெரியம்மா! வளையல் போடுறது!” என்றாள்.‌ கைவளை போல கலகலத்தது சிரிப்புச் சத்தம்.

“நானும் ஒன்னு கேக்கவா?” விடை சொன்ன  புனிதாவே மீண்டும் ஆரம்பிக்க,

“நீங்களுமாக்கா?” என்றாள் சுமதி.

“பேசாம இருடீ! அவ கேட்கட்டும்! நீ கேளுடீ” என வீரம்மா அவசரப்படுத்த,

பாலைக்காய்ச்சி எடுத்துவந்த ஆவுடை, “அக்கா… வயசுக்குத்தக்கன அவசரப்படு! கொஞ்சும் குமரியாட்டம் துள்ளுற” என கேலி பேசிக்கொண்டே, கட்டிலின் அருகே இருந்த மேஜை மீது பாலை வைத்துவிட்டு, இவர்கள் பேச்சு காதில் கேட்டாலும், கேட்காதது போல் நாசுக்காக வெளியேறிவிட்டார். சிற்றோடை நீராய் சலசலத்தது சிரிப்புச் சத்தம்.

வீரம்மா, “நீ சொல்லுடீ!” என்றார்‌ அசராமல். 

“கப்ப விரிச்சுவச்சு,

கருங்கோல உள்ள விட்டு,

மேலும் கீழும் ஆட்டுனா,

பொலக்குன்னு தண்ணி ஊத்தும்! அது‌ என்ன?” 

“ஆத்தீ! அக்கா, இவுக கேட்டதே தேவலாம் போலயே!” என்று கன்னத்தில் கைவைக்க,

“விடை தெரிஞ்சா சொல்லு சுமதி!” என்றாள் புனிதா. 

“நான் இந்த ஊரு இல்லக்கா!” என கைவிரித்தாள் சுமதி. 

கன்னத்தில் நாணம் பூ பூக்க, “ஏற்றம்‌ இறைக்கிறது” என்றாள் அழகி. 

மீண்டும் அறையெங்கும் பெண்களின் கொல்லென சிரிப்புச் சத்தம். 

முருகேசன், “என்னடா மாப்ளே! பொம்பளைக ஒன்னு கூடிப்பேசினா, காது கொடுத்துக் கேக்க முடியாது போலயே! ஒரே கவிச்சியால்ல இருக்கு!” சித்தன் காதருகே மெதுவாகக் கிசுகிசுத்து நெஞ்சில் கைவைத்தான். 

இருவரும் பேசிக்கொண்டே, சுமதியை அழைத்துச் செல்ல வீட்டிற்குள் நுழைய, விடுகதை எனப் பேச்சு அடிபட்டதும், சித்தன், முருகேசனின் கைபிடித்து அவசரமாக நிறுத்தியவன், வாயில் விரல் வைத்து சாடை காட்டி, சுவரோரம் ஒதுங்கி நின்று கொண்டான். சுமதி எட்டிப் பார்க்கும் போது, இவர்கள் நின்றது தெரியவில்லை. 

“இதெல்லாம் சாடைமாடையா‌ சில விஷயங்கள சொல்லிக் கொடுக்கறது முருகேசா!” என்றான் அவனும் ரகசியக் குரலில். 

“நல்லா சொல்லிக் கொடுத்தாங்க போ!” என முருகேசன் அலுத்துக் கொள்ள,

“நாத்து நடறதுக்கு முன்னால, வயலப் பக்குவம் பண்றது இல்லையா? அப்ப தானே…” என முடிக்கும் முன்,

“நாத்த நல்லா ஊனமுடியும்கற!” என முடிக்க,

“அடேய்!” என உல்லாசமாய் சிரித்தவன், முருகேசன் முதுகில் கமுக்கமாக ஒன்று போட்டான்.

“இவங்களே இம்பூட்டு பேசுறாங்களே! இந்த வயசுலயும் எதுவும் தெரியாத மாதிரி கேக்குதே… வீரம்மா பெரியம்மாவுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்கிறியா? சும்மா இவங்கள பேசவிட்டு வேடிக்கை பாக்குது முருகேசா!” என்றவனிடம்,

“அப்ப… எம்பொண்டாட்டி!” என கண்களை அகல விரிக்க,

“அதை நீயே கேட்டுக்க… இந்த விஷயத்துல எல்லா பொம்பளைகளும் கேடி‌தான்.” 

“சரி சித்தா… நான் கெளம்புறே!” உடனே கழட்டிய செருப்பை வேகமாக காலில் மாட்டினான். 

“படம் பாக்கத்தானே?”

“இனியெங்க படம் பாக்குறது. நீ முதல்ல உள்ள போ! அப்பதான் எம்பொண்டாட்டி சீக்கிரம் வீட்டுக்கு வருவா! அவகிட்ட சந்தேகம் கேக்கணும்” என அவசரப்படுத்த,

“டேய்… மாப்ள!” என மலர்ந்து சிரித்தவன் முகத்தில் மிதமாய் வெட்கத்தின் பூரிப்பு. 

அன்றைய காலகட்டத்தில் பேச்சு மட்டுமே பொழுதுபோக்கு. காடு கரைகளில், திண்ணையில், சாவடியில் என எங்கும் பேச்சு, எதிலும் பேச்சுதான். 

சாவடி, டீக்கடை என்றால் அரசியல், திண்ணை, ஊரணி என்றால் புரணி. (ஏன்… பேசிப்பேசியே தானே கழகங்கள் கூட ஆட்சியைப் பிடித்தன.)

நாட்டுப்புறத்தான் மாதிரி பேசாதே! படிச்சவனாட்டம் நாகரீகமாப் பேசு, என்று என்றைக்கு வார்த்தைகளுக்கு நாகரீக முலாம் பூச ஆரம்பித்தோமோ அன்று கெட்டது மனித நாகரீகம். 

முருகேசனை‌ அனுப்பிவிட்டு, சித்தன் வீட்டிற்குள் வருவதைப் பார்த்த பெண்கள் அழகியைத் தனியேவிட்டு வெளியேறிவிட்டனர்.‌ அவர்களோடு‌ சேர்ந்து ஆவுடையும்‌ கிளம்பிவிட்டார் படம் பார்க்க. 

முகத்தில் படர்ந்த புன்சிரிப்போடு உள்ளே வந்தவனைப்‌ பார்த்தவளுக்கு, இவ்வளவு நேரமாக இருந்த இளக்கம் மறைந்து, சட்டென காய்ச்சல் அதிகமாகியது போல் ஒரு உணர்வு. 

சாங்கியமென கல்யாணப் பட்டு வேட்டிதான் கட்டியிருந்தான். அவளுக்கும் அதே கூரப்‌புடவைதான். அரக்கு சிவப்பில் பொடிக்கட்டம்‌ போட்ட நூல் புடவை. 

அவன் அருகே நெருங்கி வர, காய்ச்சலோடு குளிரும் சேர்ந்து கொண்டது. 

இவ்வளவு நேரமாக இவர்கள் அடித்த வாய்ச்சவடலை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே,

“வா!” என்றான்‌ ஒற்றைச் சொல்லாய்.

“எங்க?” எனும்படி ஏறிட்டுப் பார்த்தாள். அவளை ஒரு கணம், ஆழ்ந்து பார்த்தவன்,

“சொன்னாதான் வருவியா?” என கேட்க, பேசாமல் பின் தொடர்ந்தாள்.‌ 

வீட்டைவிட்டு வெளியே வந்து, வயல் பக்கமாக அழைத்து வர, நின்று திரும்பிப் பார்த்தாள். ‘முன்னால் நட!’ என்பது போல் தலையசைத்துக் காட்டினான். அவளை முன்னேவிட்டு‌ பின்தொடர்ந்தான். 

வயல்களைக் கடந்து கரட்டிவாரம் அழைத்துவந்தான். எங்கே எனக் கேட்டு ஏகாந்தத்தின் அமைதியைக் குலைக்க விரும்பவில்லை. 

பரண் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்ததும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்த இடத்தில் நின்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தான். அந்த இருட்டிலும் அவள் ‌கண்கள் தளும்பி மின்னியது நன்றாகத் தெரிந்தது. மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிந்து. 

“எந்த இடம்னு தெரியுதா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“ம்ம்ம்…” எனும்‌ பதில் மட்டும். தொண்டையில் சிறைப்பட்டு நின்றன வார்த்தைகள். பாதகத்தி நெஞ்சம் படாதபாடுபட்டுத் தவித்தது.

“எந்த இடம்?” என்றான் மீண்டும்.

“நீங்க சம்மதம் கேட்டு நின்ற இடம்!” என்றவள் ‌நெஞ்சமும், கண்களும் ஒரு சேரத் தளும்பி நின்றன. பலவருடங்கள் கழித்து மீண்டும் தனக்குள் பூத்துக் கொண்டிருந்தாள் பாதகத்தி. அங்கு அவன் பரண் அமைத்த பொழுதே அவள் புரிந்து கொண்டாள்.‌ 

இந்தக் கரட்டடிவாரத்தில் இருவரது காலடியும்‌ பதியாத இடமில்லை. இங்கு தான் ஆடு‌மாடுகளோடு ஓடி விளையாடியது. ஒழிந்து விளையாடியது. சைக்கிள் பழகி கீழே விழுந்து வாரியது‌ எல்லாம். 

இறுதியாக விடலைப் பருவத்தில் அவளிடம் சம்மதம் கேட்டு நின்றதும் இதே இடம்தான். ஆழ்ந்த அமைதி இருவருக்குள்ளும். அந்த நாளை மனம் தொட்டு மீண்டது மீள முடியாமல். ஆழ்ந்து மூச்செடுத்தவன், மீண்டுவந்தான் நிகழ்காலத்திற்கு.‌ ஏனோ‌ பேச்சற்ற அமைதியாக இருவருக்கும் சற்று நேரம் கழிய,

அவனை ஓடித் தழுவிக்கொள்ளத் துடித்தது பாதகத்தி நெஞ்சம். 

****

“இன்னும் எனக்கு நீ சம்மதம் சொல்லல!” என்றான் பரணின்  மூலையோரக்கம்பில் சாய்ந்து கைகட்டி நின்றுகொண்டு. இருவரும் மூங்கில் தப்பையாலான ஏணியில் பரணில் ஏறியிருந்தனர். மேலே ஏறிவந்தவள் ஆச்சர்யத்தில் விழிவிரித்து நின்றாள். 

வைக்கோல் படுக்கை மீது போர்வை விரித்து, படுக்கை முழுவதும் மஞ்சள் நிற செவ்வந்தி பரப்பிக் கிடந்தது. விண்மீன்களின் கண்சிமிட்டலில், கருநீல நிறத்து இரவில், பொன்னிற செவ்வந்திப்பூ‌ படுக்கை வேறொரு‌ உலகிற்கு இட்டுச் சென்றது இருவரையும்.‌ 

இன்றும் தன்னிடம் சம்மதம்‌ கேட்டு நின்றவனை ஏறிட்டுப் பார்த்தாள்.‌ இதழில் தவழ்ந்த குறுஞ்சிரிப்போடு, இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து இடப்பக்கமாகக் கொண்டு வந்து அவனை நோக்கி நீட்டியவள் கண்களில் கட்டுக்கடங்காத காதலும், மோகமும். 

மந்தகாசப் பார்வையோடு எட்டிப் பிடித்தவன், முந்தானையைச் சுருட்டி, சுண்டி இழுக்கத் தாவி வந்து விழுந்தாள் மன்னவன் நெஞ்சமெனும் மஞ்சத்தில். சிறுபிள்ளை போல் கழுத்தோடு இறுக்கிக் கட்டிக் கொண்டவள் உள்ளுக்குள் விம்மி வெடித்து,‌ நெஞ்சில் முகம் புதைக்க சூடாகக் கண்ணீர் அவன் மார்பு நனைக்க, ஆரத்தழுவிக் கட்டிக்கொண்டான் கனவல்ல நிஜம் என்பது போல்.‌

கொதித்து நின்றவர்களை‌ தணியவைக்க எடுத்த முயற்சியில் தோல்வியைத் தழுவி நின்றது தைமாதக் குளிர். மீசையின் குறுகுறுப்பில் தீ மூட்டி குளிர்காய்ந்தான் அவளுக்குள்.

சித்தன் தன் சித்து வேலையை முத்தத்தில் தொடங்கி மொத்தமாகக் காட்டத்துவங்க, சித்தம் மயங்கி கிறங்க ஆரம்பித்தவளின் நாணம் களையவே படாதபாடு பட்டுப் போனான். முத்தமெனும் மாயவித்தையில் அழகாய் மலர்ந்தாள் செம்பருத்திப் பூவாய்.‌ எத்தனை வருடத் தாபம். ஒரு நாளில் தீர்ந்துவிடுமா என்ன? 

சேலை இடைவெளியில் முகம் பதித்து, நாபிப் பள்ளமெனும் அபாயக்கட்டத்தைக் கடந்த முத்த ஊர்வலம்… வேகத்தடையில் சற்றே இளைப்பாற, இடை வளைத்த கரம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லைக்கோடு தாண்ட, கழுத்தில் முகம் புதைத்து கீழிறங்கிய இதழ்கள் சட்டென ஓரிடத்தில் வேலை நிறுத்தம் செய்தன. 

“அழகி!” என்றவன்‌ குரல் ஆழ்ந்து ஒலித்தது.

“ம்ம்ம்…” வஞ்சியின் குரல் கொஞ்சியது.

“இதுதான் காய்ச்சலுக்குக் காரணமா?” எனப்பதற, கணத்த அமைதி காரிகையிடம். 

“சொல்லுடீ!” என அதட்டியவன் சட்டென அவளை விட்டு விலகி, முந்தானை விலக்க, பதறிப் படுக்கையை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டாள். 

“எடு!” என்றான் கோபமாக.‌ 

“ம்ஹும்…” என்றாள் ஹீனமான குரலில். 

“இப்ப எடுக்கப் போறீயா இல்லையா? மீண்டும் அதட்ட, மெதுவாக போர்வையை விலக்கினாள்.‌ கண்களுக்குப் புலப்படாத காரிருளில், விரல்கொண்டு மார்பு மீது மயிலிறகாய் வருடிப் பார்க்க, அணு அணுவாய் சிலிர்த்து அடங்கினாள் பெண். லேசாகத் தடித்து வீங்கியிருந்தது ஒரு விரல்‌ நீளத்திற்கு. 

“எப்பக் குத்தின?”

“ரெண்டு நாளாச்சு!”

“பச்சை குத்தினா காய்ச்சல் வரும்னு தெரியாதா? அதுவும் முழுப்பேரும் குத்தியிருக்க!” என்றவன் குரல் இப்பொழுது வெகுவாக இளகியிருந்து.

“இனிமே உங்கள பேர் சொல்லிக் கூப்பிட முடியாதில்ல. அதனாலதான் நெஞ்சுல பச்சையாக்‌ குத்திக்…” என முடிக்கும் முன் அழுத்தமாக இதழ்‌ பதித்திருந்தான் பாதகத்தி நெஞ்சில் அரியாசனம் போட்டிருந்த தன் பெயர் மீது.‌ சூடாக முத்த ஒத்தடம் காய்ச்சலுக்கும், அப்படியே தன் பெயருக்கும். தலையோடு சேர்த்து மார்போடு அணைத்துக் கொள்ள, பரண் மெதுவாக அசைந்து சுகமாய்த் தாலாட்டியது இருவரையும். 

ஆகாயத்திற்கும், பூமிக்குமிடையில்… காற்று‌ வெளியிடையில் காதலோடு ஒரு கலவித்தவம். 

கைவிட்டுப் போன பொக்கிஷத்தைத் தேடும் அவசரம் அவனிடம். தொலைத்த பொருள்‌ கைவந்து சேர்ந்த நிம்மதி அவளிடம். 

இளமையெனும் பூங்காற்று… பாடியது ஓர் பாட்டு…

ஒரு பொழுது ஓர் ஆசை… சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்…

ஒரே வீணை ஒரே ராகம்…

தன்னை மறந்து… மண்ணில் விழுந்து…

இளமை மலரின் மீது… தன்னை இழந்த வண்டு…

தேக சுகத்தில் கவனம்… காட்டு வழியில் பயணம்…

கங்கை நதிக்கு மண்ணில் அணையா…

இளமையெனும் பூங்காற்று…

அங்கம் முழுதும்… பொங்கும் இளமை…

இதம் பதமாய் தோன்ற… அள்ளி அணைத்த கைகள்…

கேட்க நினைத்தாள் மறந்தாள்… 

கேள்வி எழும் முன் விழுந்தாள்…

எந்த உடலோ… எந்த உறவோ…

இளமையெனும் பூங்காற்று…

மங்கை இனமும்… மன்னன் இனமும்…

குலம் குணமும் என்ன…

தேகம் துடித்தால் கண்ணேது…

கூந்தல் கலைந்த கனியே… கொஞ்சி சுவைத்த கிளியே…

இந்த நிலைதான் என்ன விதியோ…

ஒரு படம் முடிந்து அடுத்த படம் போடும் இடைவெளியில், மைக் செட்டில் ஒலித்த பாடல் காற்றுவழியே கரட்டடி வந்து சேர்ந்தது இருவருக்காகவும். 

அறியாப்‌ பருவத்தில் விதைத்ததை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர் இருவரும். அறுவடை முடிய வருஷங்களாகும். ஆயிரங்காலத்துப் பயிராயிற்றே! 

*****

ஊர்ப்பக்கம் பொதுவா ஒன்னு சொல்லுவாங்கங்க. பாவத்தை தாங்குற மனுஷனுக்கு புண்ணியத்தை தாங்க முடியாதாம்.‌ நீங்க வேணா பாருங்க, எவ்வளவு வெயிலடிச்சாலும் தாங்குவோம். அதுவே தொடர்ந்து ஒரு வாரம்‌ மழை‌ பெய்யட்டும். ஒரு நாள், ரெண்டு நாள் ரசிப்போம். மூனாம் நாள்… என்னடாயிது‌ கருமம் நசநசனுட்டு திட்டுவோமா இல்லையா? அது மாதிரி தாங்க வாழ்க்கையும். கசந்த நெல்லிக்காய் தண்ணி குடிச்சா இனிக்கிறதில்லையா? 

கதை முடியும் போதுகூட தத்துவம் சொல்லலைனா எப்படி?

4 thoughts on “ பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 23”

    1. 😂😂😂🙈🙈🙈
      வத்தலக்குண்டு பக்கம்‌மா … இப்ப சென்னைவாசி…
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top