“நீங்க வந்த மாதிரி மாமாவும் வந்து கேப்பாங்களா அத்தே!” என்று கேட்டவளுக்கு பதில் ஆவுடையிடம் இல்லை.
சித்தன் அவசரமாக இரவோடு இரவாக ஊருக்கு கிளம்பி வந்தபிறகு ஆவுடைக்கு அங்கு நிலைகொள்ளவில்லை. அவசரமாகவும், அலைக்கழிப்பாகவும் மகன் கிளம்பிச் சென்றானே என மனம் அடித்துக் கொள்ள, விடியவிடிய பொட்டுத்தூக்கம் வராமல் தவித்தவர், விடிந்ததும் ஊருக்கு கிளம்பிவிட்டார்.
ஆவுடை தனியே கிளம்ப, தானும் உடன் வருவதாக புனிதாவும் குடும்பத்தோடு கிளம்பினாள். கணவனின் மீதி விடுப்பை கிராமத்தில் கழிக்கலாம் என்ற எண்ணத்தில். அவளுக்கும் வெகு வருடங்கள் கழித்து ஊரைப் பார்க்க வேண்டுமென உள்ளூர கொள்ளை ஆசை.
வேல்ச்சாமி காரில் போகச்சொன்னதற்கு கூட, “என் மகனுக்கில்லாதது எங்களுக்கும் வேண்டாம்” என்றவர், “மெட்ராஸ் வரும்போது ஒன்னும் கார்ல வரலியே? கையும், காலும் தானே சொத்துன்னு வந்தோம். எனக்கு இன்னும் பழசு மறக்கல! போக வழி தெரியும்!” என்றார் வீம்பை விட்டுக் கொடுக்காமல்.
யாருமில்லாதவன் போல் மகன் ஒத்தையில் சென்றதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தான் தன் மனதிற்கு நெருக்கமானவர்களைத் தேடி மகன் கிராமத்திற்கு சென்றான் போல என இப்பொழுது தோன்றியது.
நேற்று மகன் தன் பேச்சை மீறிப் போனான். இன்று மனைவியும் கிளம்பிவிட்டாள். இத்தனையும் சம்பாதித்து யாருக்காக என வேல்ச்சாமி மனம் கேள்வி கேட்டாலும், ‘போறவங்கெல்லாம் போங்க!’ என இறங்கி வர தன்மானம் இடம் கெடுக்கவில்லை. இறுமாப்போடு துண்டை உதறி தோளில் போட்டு வெளியேறிவிட்டார்.
இன்னும் கொஞ்ச நாள் அம்மா வீட்டில் சொகுசு பார்க்கலாம் என வந்தவளுக்கு, சூழ்நிலை சரியில்லாமல் போனதில் சரண்யாவிற்குதான் வறுத்தம். இவர்கள் கிளம்பவும், மனமேயில்லாமல் சரண்யா மாமியார் வீடு கிளம்ப வேண்டியதாயிற்று. இங்கு உட்கார்ந்த இடத்தில், எல்லாம் கைக்கு வரும். அம்மாவிடம் அதிகாரம் பண்ணலாம். அங்கு அது முடியாதே?
பெரிய மகள் குடும்பத்துடன் இரயில் ஏறிய ஆவுடை திண்டுக்கல் வந்திறங்கி, அங்கிருந்து பஸ் மாறி, ஆவாரம்பட்டி வந்து சேரவே இருட்டிவிட்டது. அந்நேரத்திற்கே ஊர் அடங்கிவிட்டது.
உழைத்து வந்த சனங்கள் உண்டு முடித்ததும் அடுத்து உறக்கம் தானே.
பஸ்ஸை விட்டு இறங்கிய இடத்தில் ஒரேயொரு தெரு விளக்கு மட்டும்தான். வீடு இருப்பதோ கரட்டடியில். இங்கிருந்த பார்த்தாலே வீட்டின் மேல் குண்டு பல்பு எரிவது புள்ளியாகத் தெரிந்தது. ஆனால் அதுவரை இருளில் வரப்பில் நடந்து போகவேண்டும். இவர்களுக்கு பழக்கம் தான் என்றாலும் பிள்ளைகள் தான் சற்று தடுமாறினர்.
“இன்னும் ஊரு மாறவே இல்லம்மா. அப்படியேதானிருக்கு போல.” புனிதா சிலாகித்தாள். பரவசமும், பரபரப்பும் அவளுக்குள். சிறுவயது நினைவுகளோடு கூடவே தோழி வேணியின் நினைவும் வந்துபோனது. திரும்பி வராத நாட்கள் அவை.
எந்த ஊரில் எப்படி இருக்கிறாளோ? சிறு ஏக்கப்பெருமூச்சுகூட. இவர்கள் ஊரைவிட்டுப் போவதற்கு ஆரம்பப் புள்ளி என்று கூட வேணி, கண்ணையன் காதலைச் சொல்லலாம். அதைத் தொடர்ந்து வந்தது தானே ஒவ்வொன்றும்.
பிள்ளைகளை நடுவே விட்டு, புனிதாவின் கணவன் செல்வமணி முன்னே நடக்க பெண்கள் பின்னே நடந்தனர். நிலா வெளிச்சம் வழிகாட்ட, சற்று நேரத்தில் கண்களுக்கு இருள் பழகிவிட்டது. பச்சைவயலின் குளுமையும், வயலின் ஈர வாசமும், நிலா வெளிச்சத்தோடு அவர்களை வரவேற்றது.
அந்நேரத்திற்கு அவர்களை சித்தனும் எதிர்பார்க்கவில்லை. அங்கு தான் முருகேசனும் இருந்தான். வெளியே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். தண்ணீர் செழிப்பாக இருப்பதால் அடுத்து வாழையும், கரும்பும் பயிரிடுவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அக்கா குடும்பத்தை ஆர்ப்பாட்டமாக வரவேற்றவன், அப்பாவை ஏன் தனியே விட்டு வந்தீர்கள் என்று அம்மாவைத்தான் கடிந்தும் கொண்டான்.
பெரிதாக ஊருக்குள் கலாட்டா ஏதும் நடந்திருக்குமோ என ஒருவித பதட்டத்தோடே நிலைகொள்ளா மனதோடு வந்தவருக்கு, மகன் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் தான் மனம் அக்கடாவென ஆசுவாசப்பட்டது. எனினும் மகனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை ஆவுடை.
எனக்கு எதுவும் வேண்டாமென அத்தனையும் உதறிவிட்டு வரும் அளவிற்கு ஒருத்தி மீது மனதை வைத்தவன், தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டானே என்ற மனத்தாங்கல் ஒரு பக்கமும், தங்கள் கைக்குள் இல்லாததால் மகனின் மனம், பெற்றவளுக்கே புரியவில்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கமும் ஆவுடையை அலைக்கழித்தது. ஒருவேளை கூடவே இருந்து வளர்ந்திருந்தால் மகனின் மனது தெரிந்திருக்குமோ என்னவோ?
ஆண் பிள்ளைகளுக்கு பதின் பருவத்தில் வரும் சிறு ஒதுக்கம், ஒரு வயதிற்கு மேல் அது நிரந்தரமாகிவிடுகிறது. அந்த வயதில் தான் சித்தனும் சிறைப்பட்டிருக்க, அவன் விடுதலையாகி மீண்டும் குடும்பத்தோடு இணைந்த பிறகு, முப்பதின் தொடக்கத்தில் முதிர்ந்து வெளிவந்தவனுக்கு அந்த விலகல் நிரந்தரமாகிவிட்டது.
பெண்பிள்ளைகள் மாதிரி அம்மாவோடு அவனால் இழைய முடியவில்லை. அப்பாவோடும் தோள் கொடுக்க முடியவில்லை. சரண்யா அவ்வளவாக இவனுடன் ஒட்டவில்லை. சிறைப்பறவையாய் தனிமையில் தவித்து வெளிவந்தவனுக்கு தன்னையறிந்த பழைய நட்புகளை மனம் வெகுவாகத் தேடியது.
அப்பாவை ஏன் விட்டு வந்தீர்கள் என கடிந்தவனை, “அவருக்கெல்லாம் பட்டாதான்டா புத்தி வரும்! காசு பணத்தைக் கட்டிட்டே அழட்டும்” என்று ஆவுடை சடைக்க,
“அம்மா!” என அடக்கிய குரலில் அதட்டினான். அக்கா வீட்டுக்காரர் முன் அப்பாவை குறைத்துப் பேசுவதை பொறுக்கமாட்டாமல்.
மது, மாது, சூது என இருக்கும் அப்பா இல்லையே. பிள்ளைகளுக்காகத்தானே ஓடி ஓடி சம்பாதித்ததெல்லாம். என்ன ஒன்று… அந்தக்கால மனிதருக்கு, வரட்டுக் கௌரவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. ஒரு காலத்தில் தன் வீட்டில் பண்ணைக்கிருந்த குடும்பத்தில் போய் சம்பந்தமா என இறங்கிவர தன்மானம் தடுக்கிறது.
“நீ உங்கப்பாவுக்காக யோசிக்கிற. ஆனா அந்த மனுஷ உன்ன நெனச்சுப் பாக்கலியே?” என்றவர் புலம்பிக் கொண்டே, அடுப்படி சென்றார்.
அடுப்பைப் பற்ற வைத்து, உலையைப் போட்டார். அரிசி கழுவிய கழனித்தண்ணீரில், புளியை ஊரப்போட்டு கரைத்தெடுத்தவர், கடுகு தாளித்து, பட்டமிளகாய் கிள்ளிப்போட்டு, சின்ன வெங்காயம் நீளவாக்கில் நறுக்கிப்போட்டு, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிட்டு, திடீர்க் குழம்பாக கழனிப் புளிச்சாறு தாளித்தெடுத்தார் ஆவுடை.
அதற்குள் புனிதா தேங்காயை உடைத்து துருவி, பச்சைமிளகாய், பொட்டுக்கடலையோடு அம்மியில் வைத்து துவையல் அரைத்துவிட்டாள் தொட்டுக்கொள்ள.
சுடச்சுட சோறு வடித்து, முருகேசனையும் சாப்பிடச் சொல்ல, அவன்தான் இன்று சித்தனுக்கும் சாப்பாடு எடுத்து வந்திருந்தான். இருவரும் சற்று முன் தான் சாப்பிட்டு முடித்து பேசிக் கெண்டிருந்தனர்.
வேலை பார்த்துக்கொண்டே ஊரில் நடந்ததை எல்லாம் முருகேசனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
“விடியட்டும்… வச்சுக்கறேன். நாளையிலிருந்து எவ எம்மருமகள நாக்கு மேல பல்லப்போட்டு பேசுறான்னு நானும் பாக்குறே!” சவடாலாய் சவால் விட,,
முருகேசன், “என்ன அத்தை பண்ணப்போற. எதுவாயிருந்தாலும் சொல்லிட்டு செய்த்தை!” என பதட்டமானான்.
“விடிஞ்சா உனக்கே தெரியும்டா!” என முடித்துக் கொண்டார்.
“நீ மொதல்லயே அத்தை காதுல விஷயத்தைப் போட்டிருக்கனும் மாப்ள. போட்டிருந்தா இந்நேரத்துக்கு இப்படி எங்கூட உக்காந்து வெட்டியா பேசிட்டு இருந்திருக்க மாட்ட!” என சிரிக்காமல் சித்தனை சீண்டினான்.
“நாங்கூட மாப்பிள்ள கெளம்பிவந்த வேகத்துக்கு பொண்ணத் தூக்கிருப்பாரு. ஊரே கலவர பூமியாயிருக்கும். மிலிட்டரிய எறக்கவேண்டியிருக்குமோனு பயந்தேன் முருகேசா” என செல்வமணியும் சேர்ந்து கொள்ள,
“அட, நீங்க வேறண்ணே! புரூஸ்லீ படம் பாக்க தியேட்டர் போயிட்டு, கார் சேஸிங் மட்டுமிருக்குற ஜேம்ஸ்பாண்ட் படம் பாத்தமாதிரி ஆகிப்போச்சு.” அப்பராணியாய் முகத்தை வைத்து முருகேசன் சலித்துக் கொள்ள சற்று நேரம் கலகலத்தது அவ்விடம்.
“ஏன்டா… முருகேசா இவன் கூடவே குடும்பம் நடத்தினா எப்படிடா? காலாகாலத்துல வீட்டுக்குப் போடா!” என ஆவுடை, முருகேசனை விரட்ட, மாமனும் மச்சானும் அவனைப் பார்த்து சிரிக்க,
“அத்தைக்கு குசும்பப் பாத்தியா மாப்பி?” என சித்தனின் காது கடித்தான்.
வாசலில் பாய்விரித்து அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க, புனிதா பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் படுக்கை விரித்துவிட்டு வந்தாள்.
முருகேசன் கிளம்ப, “நாளைக்கி காலையில சுமதிய கூட்டிக்கிட்டு பொன்னுத்தாயி வீட்டுக்கு வந்துர்றா” என சொல்லியனுப்ப,
“அப்ப… நாளைக்கி தரமான சம்பவம் இருக்கு!” என கூறிச் சென்றான்.
புனிதா மகன், மாமானோடு வெளியே கட்டிலில் படுப்பதாக அடம்பிடிக்க, “விடுக்கா… நான் தூங்க வச்சுக்கறேன்” என தன்னோடு வைத்துக் கொண்டான்.
“பனி சேராது சித்தா!”
“ஒரு நாள் தானேக்கா. தூங்கினதும் அம்மாகிட்ட படுக்க வச்சர்றேன். நீ போ!” என்று அனுப்பிவிட்டான். ஆவுடையும், பேத்தியோடு படுக்கச் சென்றுவிட,
உள்ளே வந்து மகனுக்கு போர்வையை எடுத்துச் சென்ற மனைவியிடம், “பேசிட்டே இருக்காம சீக்கிரம் வா” என்றான்.
“எல்லாரும் இன்னும் வெளியதான் இருக்காங்க. வயசுக்கு வந்த பிள்ளையிருக்குங்கற நெனப்பிருக்கா?” என பொய்க்கேபம் காட்ட,
“ஆமாடீ… இருக்கிறதே முப்பது நாளு. அதுல அந்த மூன்று நாட்கள், தீபாவளி, அப்படி இப்படின்னு பாதி நாள் ஓடிருச்சு. இன்னும் பத்து நாள்கூட முழுசா இல்ல” என அலுத்துக் கொண்டவனைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது.
பட்டாளத்தான் வாழ்க்கை இப்படித்தான் எனத் தெரிந்தது தானே. பிள்ளைகள் படிப்பை முன்னிட்டு தன்னாலும் அவனோடு செல்ல முடியவில்லை. பாதி வாழ்க்கை கடிதப்போக்குவரத்திலேயே முடிந்துவிட்டது. வீம்பு பிடித்து கணவனை வெறுப்பேற்றாமல் சொன்ன சொல் தட்டாமல் உடனே திரும்பிவந்து தாழ் போட்ட அடுத்த நொடி விளக்கையும் சேர்த்தணைத்தான் பட்டாளத்தான்.
*****
மறுநாள் காலை…
ஊரே வீதியில் நின்று தாவாயில் கைவைத்து வேடிக்கை பார்த்தது. எல்லாரும் காடு கழனி என வேலைக்குச் செல்லும் முன் போகவேண்டுமென கிளம்பிவிட்டார் ஆவுடை.
“எப்ப வந்த ஆவுடை… நல்லாருக்கியா?” என நலம் விசாரித்தவர்களுக்கும் வீதி நெடுக நின்று பதில் சொல்லிவிட்டுத்தான் வந்தார்.
தோளில் மண்வெட்டியோடு தோட்டத்திற்கு கிளம்பிய நடேசனைப் பார்த்த ஆவுடை, “நடேசா! நீயும் ஒரு வகையில பங்காளிதான். பங்காளி மொறைக்கு நீயும் வாடா” என அழைக்க,
“எங்க பெரியம்மா?” கேள்வி கேட்டவனிடம்,
“வந்து பாத்தா ஒனக்கே தெரியப்போகுது!” என போற போக்கில் அழைப்பு விடுத்துச் சென்றவர், பழைய ஆவுடையாக தெருவெங்கும் அலப்பறையை கூட்டிச் சென்றார். முக்கியமானவர்களுக்கெல்லாம் காலையிலேயே அழைப்பு சொல்லிவிட்டார். அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டார்.
“என்ன புனிதா? உங்கம்மா இப்படி மாறிட்டாங்க!” பதவிசான மாமியாரைப் பார்த்துப் பழக்கப்பட்டவனுக்கு ஆவுடை அவதாரம் ஆச்சர்யமூட்டியது.
“இதுதான் எங்கம்மா!” என புனிதா சிரித்தாள்.
அவள் கையில் வெற்றிலை, பாக்கு, சேலை, மற்றும் தேங்காய், பழத்தோடு தாம்பூலத்தட்டு.
கொஞ்சம் நேரம்போனாலும் ஊருக்குள் ஒரு சனமிருக்காது. வேலைக்கு கிளம்பி விடுவார்கள் என, மகள் குடும்பத்தோடும், நாட்டாமையையும் உடன் அழைத்துக் கொண்டு பொழுது புலர, அழகி வீட்டு வாசல் வந்து நின்றுவிட்டார்.
கூரை மீது புகை கசிந்து கொண்டிருந்தது. திண்ணையில் அன்னக்கிளி அமர்ந்து அழுத பிள்ளையை அமர்த்திக் கொண்டிருந்தாள். திடீரென வந்து நின்றவர்களைப் பார்த்தவள், சட்டென சேலையை ஒதுக்கி, பிள்ளையை தோளில் போட்டு, அவசரமாக எழுந்து வரவேற்றாள்.
வீட்டு வாசலில் சலசலத்ததில் என்னமோ ஏதோ என பதறி வெளியே வந்த பொன்னுத்தாயி, கையில் தேங்காய் பழத்தட்டோடு ஆவுடையைப் பார்த்து கண்கள் நிலைகுத்திப் போக, சட்டென வரவேற்க நா எழவில்லை.
முன் தினம் நடந்த சம்பவத்தின் சுவடே இன்னும் மறையவில்லை. இருந்திருந்து நடக்கவிருந்த மகள் திருமணம் நின்றதற்காக வருத்தப்படவும் முடியவில்லை. இப்படியொரு திருமணம் மகளுக்கு நடக்காமல் போனதே மேல் என நிம்மதியடையவும் முடியவில்லை. பாழாய்ப்போன மனது இரண்டு பக்கமும் சேர முடியாமல் துவண்டு போனது.
ஆவுடை, “என்னடீ… உள்ள கூப்பிடமாட்டியா?” என உசுப்பேற்றவும்தான் உயிர் வந்தது பொன்னுத்தாய்க்கு.
அரிபறியாக வரவேற்றவர், பாயை எடுத்து திண்ணையில் விரித்தார்.
ஊரே திரண்டு வந்தது. வேடிக்கை பார்க்கத்தான். முருகேசன், தன் வீட்டிலிருந்த நீள பெஞ்சை தூக்கி வந்து போட்டான். அதில் நாட்டாமையும், செல்வமணியும் உட்கார்ந்து கொள்ள, பிள்ளைகளோடு புனிதா திண்ணையில் இருந்தாள்.
அப்பொழுதுதான் ஆடு ஒன்று குட்டி போட்டிருக்க, அதை பக்குவம் பார்த்துவிட்டு அள்ளிமுடிந்த கொண்டையும், தூக்கிச் சொருகிய சேலையும், ஆட்டுக்கொட்டத்தை சுத்தம் செய்த சாணிக்கையுமாக ஒச்சாயும், அழகியும் பின்னாலிருந்து முன் வாசல் வந்தனர். வந்தவர்களைப் பார்த்து அழகி ஒரு கணம் திகைத்து நிற்க,
“அம்மா… இந்த அத்தையும் தானே சித்தி கல்யாணத்துக்கு மெட்ராஸ் வந்திருந்தாங்க!” என புனிதா மகள் நினைவு வைத்துக் கேட்டாள். சட்டென சேலையை இறக்கியவள், அவசரமாக கைகழுவி வந்தாள்.
வந்தவர்களை வரவேற்றவள், என்னவென்று அம்மாவைப் பார்த்தாள்.
“அங்க என்ன பாக்குற? எதுனாலும் எங்கிட்ட கேளு. உங்க ஆத்தா என்னைக்கி வாயத் தொறந்து கலார்னு பேசியிருக்கா?” என்றவர்,
“எம்மகன் சித்தனுக்கு அழகிய பொண்ணு கேட்டு வந்திருக்கே.” ஊரார்முன் சத்தமாக குரலெழுப்பி சொல்லியவர், இனிமேல் தேவையில்லாத பேச்செழுவதற்கு வாய்ப்பில்லாமல் ஊரார் வாயடைத்தார். அதில் சிலருக்கு சந்தோஷமும், பலருக்கு வருத்தமும், வயிற்றில் புகைச்சலும் கூட.
ஆவுடையின் அடாவடியிலேயே இதுதான் என ஓரளவிற்கு ஊகித்தவள், “இதே மாதிரி மாமவும் வந்து கேப்பாங்களாத்தை” என்றவளுக்கு, பதிலில்லை ஆவுடையிடம். அவர் அமைதியே வேல்ச்சாமி வரமாட்டார் என சொல்லாமல் சொல்லியது.
“இதுக்குதான் அத்தை பயந்தேன். இத்தனை வருஷம் கழிச்சு வந்த மகனை, அப்பாவ விட்டு பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாமத்தை. எங்களுக்குத்தான் அப்பாவோட வாழ கொடுத்து வைக்கல. உயிரோட இருந்தும் அவர ஏன் தள்ளி வைக்கிறீங்க? சொந்த பந்தம் ஒன்னு சேரத்தான் நல்லதும் கெட்டதும். பெத்தவரப் பிரிச்சு வச்சு என்ன சந்தோஷம் கிடைக்கப்போகுது?” என கேட்க, சட்டென கலங்கிவிட்டது ஆவுடைக்கு.
அவர் கூட மகன் தான் முக்கியமென கணவரை உதறிவிட்டு வந்துவிட்டார். ஆனால் மகனும், அழகியும் அவருக்காகத்தான் ஒன்று போல யோசிக்கிறார்கள். காசு பணம் முக்கியம்னு நெனச்ச மனுஷனுக்கு பிள்ளைக மனசு புரியலியே என மனம் ஆற்றுப்போயிற்று. மகள் சொல்வதும் சரிதானே எனப்பட்டது பொன்னுத்தாய்க்கும்.
‘அவர் எப்ப ஒத்து வர்றது, மகனுக்கு எப்ப கல்யாணம் முடிக்கிறது, வயசு போகுதே’ என யோசித்தது ஆவுடை மனது.
“அப்பாவ எப்படி வரவைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்!” வாசலில் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தாள். பூ மட்டும் இல்லாமலிருக்க வாங்கிவர பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தவன் கையில் பூவோடு நின்றிருந்தான். அதை வாங்கித் தட்டில் வைத்தாள் புனிதா.
அவனும் பெஞ்சில் வந்து அவர்களுடன் அமர, “அவங்க பொண்ணு கேக்குறாங்க. நீ என்னம்மா சொல்ற?” என்றார் பொது மனிதராய் நாட்டாமை பொன்னுத்தாயைப் பார்த்து.
மகளின் மனதிற்குள் என்ன இருக்கிறது எனத்தெரியும். மனம் ஒரு பக்கம் பூரித்தாலும் வசதியை நினைத்து ஒரு பக்கம் சுணங்கத்தான் செய்தது. விரலுக்குத் தக்கன தானே வீக்கம் வேண்டும். இதில் பெற்றவருக்கும் விருப்பமில்லை. அவர் தயங்கி நிற்க,
“என்ன சின்னாயி? பதில் சொல்லு!” என முருகேசன் அதட்ட, மகளை ஏறிட்டார் பொன்னுத்தாயி. சுர்ரென கோபம் தலைக்கேறியது முருகேசனுக்கு.
“இது சரிப்படாது. அழகுக்கு கூடப் பொறந்தவனா இருந்து நான் சரி கொடுக்கறேன் மாமா!” பட்டென சொன்னான் முருகேசன்.
“ஆமா மாமா! எங்கக்காவக் கேட்டா கிறுக்குத்தனமா ஏதாவது சொல்லும். எங்களுக்கு முழு சம்மதம்!” என அன்னக்கிளியும் சேர்ந்து கொண்டாள். தன்னை கிறுக்கு என்றதில் தங்கையை முறைத்துப் பார்த்தவளைப் பார்க்க, அதிவ் தெரிந்த குழந்தைத்தனத்தைப் பார்த்த சித்தனுக்கு சிரிப்பு வந்தது.
“அப்புறமென்ன தட்டை எடுத்து பிள்ள கையில கொடுங்க!” நாட்டாமை தீர்ப்பு சொல்ல,
“இன்னும் குளிக்கல. இப்பதான் ஆடு குட்டி போட்டுச்சு. கவுச்ச நாத்தம்” என குரல் உயர்த்தாமல் சொல்ல,
முருகேசன், “அழகுக்கு இவ்வளவு மெதுவா பேசத் தெரியும்கறதே இன்னைக்குதான் எனக்குத் தெரியும்!” என்றான் எள்ளலோடு.
ஆவுடை, “நல்ல சகுணம்தானே அழகி. பட்டி பெருகியிருக்கு. வாங்கிக்க. குளிச்சுட்டு கட்டிட்டு வா!” என சொல்ல, புனிதா எடுத்துக் கொடுக்க, சித்தனை ஏறிட்டது கன்னியின் பார்வை. காளையன் கண்களை மூடித்திறக்க, வாங்கிக்கொண்டாள். சொடுக்கும் நேரம் கூட இருக்காது இருவரது பார்வை பரிமாற்றங்களும், அதன் பரிபாஷைகளும்.
அதையும் கண்டு கொண்டு தொண்டையைச் செருமியவன், “சின்னாயி… தூக்குவாளிய எடு! காபி வாங்கிட்டு வர்றே!”
வந்தவர்களுக்கு காபி வாங்க முருகேசன் தூக்கு வாளியை வாங்கிக் கொண்டு டீக்கடை சென்றான். சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, அதற்குள் குளித்து முடித்து பின் வாசல் வழியாக வீட்டிற்குள் வந்தவளிடம், சேலையை எடுத்து அன்னக்கிளி கொடுக்க, வாங்கியவள் கைகள் மெதுவாக நடுங்கியது. கண்களில் பரவசமும், பரிதவிப்பும். தக்காளிச் சிவப்புக்கலர் புடவையில், மைக்கலரில் கோபுர பார்டர் போட்ட சேலை. தனை மறந்து சேலையை விரல்கள் வருடிக்கொடுக்க,
அக்காவைப் பற்றி அறிந்தவள், தொண்டையடைக்க, “கட்டிட்டு வாக்கா. உன்ன இப்படி பாக்கணும்னு எத்தனை நாள் ஆசை தெரியுமா?” அன்னக்கிளி கண்கலங்க,
அழகிக்கும் கனவாய்ப் போன தருணங்கள் கண்முன்னே. இதழ்களில் கீற்றாய் புன்னகை. கண்களில் ஈரப்பசை. இன்னும் கனவா, நினைவா எனப் பிரித்தறியா மோனநிலை. நேற்று இந்நேரம் திருமணம் நின்று, இன்று அதே நேரம் பரிசம். அதுவும் மூச்சோடு மூச்சாக கலந்தவனோடு. இன்னும் நம்பமுடியாமல் கனவாகிவிடுமோ என மனம் பரிதவித்தது. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவள் வெகுவாக இளகியிருந்தாள். பால் போல் பொங்கிய பரவசம் விளிம்பு தொட்டு வழியும் முன், அன்னக்கிளி தோள் தொட,
“கட்டுக்கா… பாத்துட்டே இருக்கப் போறீயா?” என, மெலிதாக சிரித்தாள்.
இப்படியே வெளியே போனால் சித்தனைப் பார்த்ததும் சட்டென உடைந்து விடுவாள் என்பது உறுதி. முயன்று தம்கட்டி தன் உணர்ச்சிகளை அடக்கியவள், சேலையைக் கட்டி முடித்து, கதவைத் திறந்துவிட, புனிதா உள்ளே வந்து, ஈரக்கூந்தலில் பூவை வைத்துவிட்டாள். மல்லிச் சரத்தோடு, மஞ்சள் நிற செவ்வந்தியும் பொன்னிறத்தில் அவளைப் பார்த்து சிரித்தது.
பூவை வைத்து விட்டு வெளியே அழைத்து வந்தாள். சேலைச் சோலையில் அழகியைப் பார்த்தவன் இமைக்க மறந்து அமர்ந்திருக்க, அவன் பக்கம் பார்வையைத் திருப்பாமலிருக்க வெகுபாடு பட்டாள் பெண்.
“எப்ப கல்யாணம்?” நாட்டாமை கேள்வி கேட்க,
“அடுத்த முகூர்த்தத்துல!” என ஆவுடை பதில் கூற,
அவரை முந்திக்கொண்டு சித்தன், “பஞ்சாயத்து தேர்தல் முடிஞ்சும்மா!” என்றான்.
“தேர்தல்ல நிக்கப்போறீயா? அதுக்கு இன்னும் நாளிருக்கேடா?”
“நிக்கப்போறீயா இல்லம்மா. நிக்கப்போறா! உங்க மருமகதான் பஞ்சாயத்து எலெக்ஷன்ல நிக்கப் போறா!”
“வார்டு மெம்பராவா?”
“இல்லம்மா… பஞ்சாயத்து பிரசிடென்ட்டா!” என்றவனை,
அழகி, ‘நானா?’ எனும்படி அதிர்ந்து பார்க்க,
‘ஆமாம்… நீதான்!’ என்றது சித்தனின் அழுத்தப் பார்வை.
அது அவளுக்கு மட்டுமல்ல, ஊராருக்குமான அறிவிப்பு.

மீண்டும் படிக்க தூண்டும் எழுத்து
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Wow,
♥️♥️♥️♥️♥️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫