“அதெப்படிடா! உனக்கு மட்டும் எங்க போனாலும் அருவா கண்ணுக்குத் தெரியுது?”
முருகேசன் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்து சித்தன் சிரிக்க,
“ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன் சித்தா! நீ அருவா எடுத்த வேகத்துல, எங்க மறுபடியும் தப்பு நடந்துறுமோனு உசுரு போயி உசுரு வந்துச்சு.” அந்த நிமிடம் இப்பொழுதும் இருவர் மனக்கண்ணிலும் தோன்றி மறைய சித்தன் முகத்தில் சிரிப்பு மட்டுமே.
அழகி வீட்டு வாசலை மிதிக்கும் வரை அவன் கையில் அரிவாள் இல்லை. இன்னும் கோவிலுக்கு போகவில்லை எனத் தெரிந்து ஆசுவாசமாகத்தான் வந்தான். மணக்கோலத்தில் அவளைப் பார்த்தவனுக்கு எங்கிருந்துதான் வந்ததோ, அம்பூட்டு ஆவேசம்.
கல்யாணம் முடியும் முன் சென்று சேர வேண்டுமே என்ற பதட்டம், உண்மை தெரிந்தும் தன்னிடம் மறைத்து விட்டாரே என்ற அப்பாவின் மீதிருந்த ஆதங்கம், ஊருக்கு வந்தவுடன் முருகேசன் மூலமாக தெரிந்து கொண்டு விபரங்கள், அழகியின் அவசர முடிவும் அவளது மணக்கோலமும் என எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து அழகி மீது தான் திரும்பியது. வெட்டி அடைந்து வைத்திருந்த விறகுக்கட்டில் சொறுகி வைத்திருந்த அரிவாளை பார்த்தவுடன் எடுத்து அவள் காலடியில் வீசிவிட்டான்.
முருகேசனுக்கு அவன் அரிவாள் எடுத்த வேகத்தைப் பார்த்து வானத்தில் விட்டெறிந்த உச்சிக்கல்லு மாதிரி ஒரு கணம் உயிர் ஆகாயம் தொட்டு மீண்டது.
‘யாரோ எக்கேடோ கெட்டா நமக்கென்னானு அக்கடானு இருந்திருக்கணுமோ? தந்தி கொடுத்து அவசரப்பட்டு விட்டோமோ என்று கூட ஒரு கணம் யோசனை ஓடியது.
ஆனால்… அவனால் அப்படி இருக்க முடியவில்லையே. மெட்ராஸ் சென்றிருந்த பொழுது தங்களுக்காக சித்தன் எவ்வளவு மெனக்கெட்டான் எனத் தெரியும். குழந்தைக்காக சிகிச்சை எடுக்க மெட்ராஸ் வரை செல்வதில் முருகேசனுக்கும், சுமதிக்கும் அறவே விருப்பமில்லை. மருத்துவம் எவ்வளவோ முன்னேறிவிட்டதென வலுக்கட்டாயமாக சித்தன் தான் அழைத்துச் சென்றான்.
முன்ன பின்ன வந்து பழக்கமில்லாத ஊரில், மருத்துவரை பார்ப்பதிலிருந்து, ஒவ்வொரு சோதனைக்கும் உடனிருந்தான். புனிதாவையும் சுமதிக்கு துணையாக அழைத்துக் கொண்டான்.
முருகேசன் செய்யத் தயங்கிய சோதனைக்கும் சித்தன் தான், “தங்கச்சிக்கு மட்டும் டெஸ்ட் பண்ணினா பத்தாது மாப்ள. நீயும் பண்ணனும்! அந்தக்காலம் மாதிரி பொம்பளைங்க மேல மட்டும் குறை சொல்ல முடியாது. ட்ரீட்மென்ட்னு வந்துட்டா பக்காவா பண்ணனும். கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்டா!” என நம்பிக்கை கொடுத்தது சித்தன் தான். வாய் வார்த்தைகள்தானே எல்லாம். அப்படிப்பட்டவன் ஆசை நிராசையாக விட மனமில்லாமல்தான் தன்னாலான முயற்சியை எடுத்தான்.
அழகியும் சரி, சித்தனும் சரி சூழ்நிலை கைதிகள். ஏக்கங்களை சுமந்துகொண்டு இறுமாப்பாக வாழ்பவர்கள். இருவரும் ஒன்று சேரவேண்டுமென உள்ளூர கொள்ளை ஆசை அவனுக்கு.
அவன் ஒன்று நினைத்து நல்லது செய்யப் போக, இவன் ஆத்திரத்தில் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டால் பெற்றவர்களுக்கு யார் பதில் சொல்வது? எல்லாம் உன்னாலதான்னு இவன் தலையிலல்லவா விடியும்? அவன் அரிவாள் எடுத்த வேகத்திற்கு செவலை மட்டும் அங்கிருந்திருந்தால் கண்டிப்பாக வகுந்து கூறுபோட்டிருப்பான். அவன் இல்லாதது தனக்கு நல்ல நேரம் என நினைத்துக் கொண்டவன் பிறக்காத குழந்தைக்கும் சேர்த்து மொட்டையடிப்பதாக உடனடி வேண்டுதலை வைத்தான் முருகேசன்.
முருகேசனின் புலம்பலைக் கேட்டவன் வாய்விட்டு சிரித்தான். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமாக புலம்பித் தள்ளிக்கொண்டிருக்கிறான். வயலுக்கு மத்தியில் இருந்த பம்ப்செட்டின் திட்டில் அமர்ந்து முருகேசன் புலம்பிக் கொண்டிருக்க, சீறிப்பாய்ந்த மோட்டார் தண்ணீரில் சுகமாகத் தலையைக் கொடுத்து சித்தன் குளித்துக் கொண்டிருந்தான்.
“என்னோட புலம்பல் ஒனக்கு சிரிப்பா இருக்குல்ல.” பாவமாய் கேட்டவனைப் பார்த்து, குளித்த முடித்து வெளியேறி வந்தவன், ஈரத்தை துவட்டியவாரே,
“அதுக்கில்லடா மாப்ள! ஒரு தடவ ஜெயிலுக்குப் போயிட்டு வந்துட்டா மனுஷனுக்கு நிதானம் தன்னால வந்துரும் முருகேசா.”
“எங்க… வந்தமாதிரி தெரியலையே? இன்னும் அதே வெடலப்பையன் கோபம் தானே தெரியுது!” அலுத்துக் கொண்டவனிடம்,
நிதானமாக அவனை நின்று பார்த்தவன், “கோயிலுக்கு போறானோ இல்லையோ எல்லாரையும் ஜெயிலுக்கு ஒரு தடவை அனுப்பிவச்சா வாழ்க்கையோட நிதர்சனம் புரிஞ்சிறும் முருகேசா. என்ன இந்த வாழ்க்கைனு சலிச்சுக்கறவன் ஒரு நாள் முழுக்க தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) போய் உக்காந்து பாத்தான்னா நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வச்சுருக்கோம்னு புரியும்ல, அதே மாதிரி தான் ஜெயிலும். இளமையில் வறுமை எவ்வளவு கொடுமையோ அதே அளவுக்கு தனிமையும் ரொம்பக் கொடுமை முருகேசா.” ஆழ்ந்த குரலில் உள்ளார்ந்து சொன்னவன் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு மனம் கணத்துவிட்டது. கேயில்காளை மாதிரி மூக்கணாங்கயிறில்லாமல் துள்ளித் திரியும் வயதில் சிறையனுபவம் என்பது எத்தனை கொடுமை என நினைத்துப் பார்த்தவனுக்கும் நெஞ்சு அறுத்தது.
சட்டென சுதாரித்தவன், “க்க்கும்… செவலையும் தான் மாமியா வீடு மாதிரி அடிக்கடி போயிட்டு வர்றான். போதி மரத்துக்கடியில உக்கார்ற எல்லாருமே புத்தனாகிடறது இல்ல சித்தா!”
“பார்றா… தத்துவமெல்லாம் தன்னால வருது.”
“நீ அரிவா தூக்கின வேகத்துல தத்துவம் என்ன, போன ஜென்ம ஞாபகம் கூட வந்துருச்சு.” அவன் பேச்சில் சித்தனுமே மனம் விட்டு முகம் மலர சிரித்தான் நேற்று இரவிலிருந்து இருந்த பதட்டம் துளியும் இல்லாமல்.
“அவன குத்தம் சொல்லாத முருகேசா. கெட்டதுலயும் நமக்கு ஒரு நல்லது பண்ணிருக்கான்” என்றவன் மனமோ கையில சிக்கும் போது அவனுக்கும் ஒருநாள் இருக்கு என்று கருவியது.
இரண்டு நாட்களுக்கு முன் அழகி முருகேசனைப் பார்க்க வந்தாள். அவள் வந்து நின்றதே ஏதோ அவசரம் எனப் புரிந்தது. இல்லையென்றால் இந்நேரத்திற்கு தேடி வந்திருக்கமாட்டாள். அத்தியாவசியமெனில் மட்டுமே தேடிச் செல்லும் ஒரே வீடு முருகேசன் வீடுதான்.
இருந்தாலும் அவளைப் பார்த்த சுமதி, “ஏங்க… உங்களப் பாக்க யாரோ வந்திருக்காங்க” என வெளியில் இருந்து நொடிப்பாக குரல் கொடுக்க,
‘இந்நேரத்துக்கு அப்படி யாரு? அதுவும் சுமதிக்கு தெரியாத ஆள் இந்த ஊருக்குள்ள யாரு’ என்ற யோசனையோடே,
”அது யாரு உனக்குத் தெரியாதவங்க” உள்ளிருந்தே குரல் கொடுக்க,
“அது நீங்களே வந்து பாருங்க!” என நீட்டி முழக்க, வெளியே வந்தான் முருகேசன். திருமணத்திற்கு அழைக்காத கோபம் சுமதிக்கு. அதனால் வீட்டுக்கு வந்தவளிடம் முகம் கொடுத்துப் பேசாமல் முகம் தூக்கினாள்.
அழகியைப் பார்த்தவன், “இவங்க யாருன்னு தெரியல. முன்னப்பின்ன தெரியாதவங்க கிட்ட பேசிப் பழக்கமில்ல. நீயே பேசி அனுப்பி வை” என உள்ளே செல்ல முற்பட, மனம் விட்டுப் போனது அழகிக்கு. அவளது நன்மையை விரும்பும் இரண்டு ஜீவன்களும் முகத்தை திருப்பியதில் உள்ளுக்குள் குமைந்துதான் போனாள். இருந்தாலும் வீராப்பை விட்டுக்கொடுக்காமல்,
“உங்க கோவத்த அப்பறம் காட்டுங்க. எனக்கு இப்ப அவசரமா ஒரு உதவி வேணும் முருகேசா!” என படபடத்தாள்.
“உங்களுக்கு உதவ நாங்கெல்லாம் யாருங்க?” என்றான் விட்டத்தைப் பார்த்தவாறு. கல்யாணத்திற்கு அழைக்காத கோபம் சுமதிக்கு என்றால், இந்த கல்யாணத்திற்கே ஏன் சம்மதித்தாய் என்ற கோபம் முருகேசனுக்கு. போயும் போயி அந்தக் கிழவனுக்கா என்ற ஆத்திரம்.
இருந்தாலும் இந்நேரத்திற்கு தேடிவந்திருக்கிறாளே என்னவாக இருக்கும் என்று யோசனை இருவருக்கும்.
முருகேசன் சுமதியைப் பார்க்க, “என்னானு கேளுங்க!” என வாயசைத்தாள்.
“அதான் உன் மகாராணி உத்தரவு கொடுத்துட்டாளே. என்னானு கேக்குறது?” என்றாள்.
“என்ன?” என்றான் மொட்டையாக.
“ஆட்டுக்குட்டியெல்லாம் அவசரமா விக்கணும் முருகேசா. நாளைக்கு பக்கத்தூரு சந்தைக்கு கொண்டு போகணும். வண்டி ஏற்பாடு பண்ணித்தர்றியா?”
“ஏன்… கல்யாணச் செலவுக்கு காசில்லையா? அந்த கெழட்டுப்பயலுக்கு வரதட்சணை வேணுமாமா?” என கேட்க அழகி முகம் சுருங்கிக் போயிற்று. இருக்கும் பதட்டத்தில் அவளுக்கு கல்யாணம் என்பதே மறந்து போயிருந்தாள். சுத்தமாக மனதில் பதியவே இல்லை. கல்யாணத்திற்கான எந்த தடயமும் வீட்டிலும் இல்லை. ஒரு பந்தலோ, ரெண்டு வாழைமரமோ, நாலு சொந்த பந்தமோ என இருந்தால் தானே அது கல்யாண வீடு. எப்பவும் போல பொங்க, திங்க என இருக்க முருகேசன் கேட்டதில் தான் தனக்கு கல்யாணம் என்பதே நினைவில் வந்தது. இப்போதைக்கு அந்த யோசனையை ஒத்தி வைத்தவள்,
“அதெல்லாம் இல்ல முருகேசா! இது வேறொரு அவசரம். இந்த வாரம் கூலி கொடுக்கணும்.” என்றவள் முகம் கவலை சுமந்திருந்தது.
“காசு இல்லையா? சித்தன் வந்து கொடுக்கட்டும்.”
“அதில்ல… எச்சா ரெண்டு வாரக்காசு கொடுத்துட்டு தான் போனாங்க.” என்றாள் தயங்கியவள் முழுதாக முடிக்கும் முன்,
“அப்பறமென்ன? ஆளுக அதிகமா வந்தாங்களா? அதுக்கெதுக்கு ஆடெல்லாம் விக்கணும்? அதெல்லாம் வேண்டாம்!” என அவசரப்பட,
“அய்யோ முருகேசா! என்ன முழுசா சொல்லவிடு! காசு மொத்தமா காணோம்” என்றாள் அக்கம் பக்கம் கேளாமல் உள்ளிறங்கிய குரலில்.
“காணோமா? திருடு போயிருச்சா? அப்படி யாரு வீடு புகுந்து தூக்குன தெகிரியசாலி” என வெகுண்டவன்,
“பஞ்சாயத்துல சொல்லுவோம். இல்லைனா போலீஸ் ஸ்டேஷன் போலாம்” என சட்டையை எடுக்க உள்ளே திரும்ப,
“திருடன் வெளிய இருந்தெல்லாம் வரல” என்றவள் முகம் இப்பொழுது எரிச்சலைக்காட்டியது.
“அப்பறம்.”
“அன்னம் புருஷனையும் காணோம்.”
“அது சரி… அந்த மொடா முழுங்கி பாத்த வேலை தானா?” என்றான் ஆசுவாசமாக. அவன் கையில் சிக்கிய பணமும் ஆனை வாயில் அகப்பட்ட கரும்பும் ஒன்னு. சல்லிப்பைசா மிஞ்சாது.
“ஆமா… குடத்தோட முழுங்கிட்டான்” என்றாள். பழைய ஈயப்பாத்திரத்தை பாத்தாலே ஒழிச்சு எடுத்துட்டுப் போயி பேரிச்சம்பழத்துக்குப் போட்டுத் திங்கிற பய கண்ணுல பித்தளக்குடம் ஆப்புட்டா சும்மா விடுவானா?
கிராமங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு காலைக்கடன் என்பதெல்லாம் இல்லை. பெண்கள் கொள்ளைப் புறம் ஒதுங்குவது பெரும்பாலும் இரவுதான். அன்னமும், அவளுக்குத் துணையாக பொன்னுத்தாயும் சென்றுவிட, ஆடுகளுக்கு தண்ணிவைத்து, குழை போட அழகியும் பின் வாசல் வந்துவிட, வீட்டிற்கு வந்ததிலிருந்து செவலையின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த பித்தளைக்குடத்தோடு கண்மூடித் திறக்கும் முன் கம்பி நீட்டிவிட்டான்.
அடகு வைக்கலாம் என்றுதான் எடுத்தான். அடுக்குப் பானையில் புதையல் இருக்குமென்று கெனாவா கண்டான். கலாக்காய்க்கு ஆசைப்பட்டு எடுத்தவன் கையில் பலாக்காயே கிடைத்திருக்க, எடுத்த வேகத்தில் சிட்டாகப் பறந்துவிட்டான். குறைந்தது ஒரு மாதமேனும் ஆகும் இனி அவன் தலை ஊருக்குள் தென்பட.
அழகியின் பேச்சைக் கேட்டவன், “ஒரு வாரம் கழிச்சு கூலி தரலாம். அதெல்லாம் சொன்னா கேட்டுக்குவாங்க. சித்தனுக்கு தகவல் சொல்லலாம்” என ஆலோசனை கூற,
“அதெல்லாம் வேண்டாம் முருகேசா! கூலிக்காசு ஏற்பாடு பண்ணனும். இல்லைனா அசிங்கமாப் போயிரும். நாலூரு சனமும் மந்தையில நின்னு பேசிப்புடும்.” அவளுக்கு பணம் போனதை விட, இன்னாரு தோட்டத்துக்குப் போனோம். இன்னும் கூலி தரலைனு சித்தன் பெயர் அடிபடுமே என்ற கவலைதான் பெரிதாகப்பட்டது.
அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து பிழைப்போட்டும் சனங்கள். ஒரு வாரம் தாமதமானால் என்ன செய்வார்கள்.
“அதுக்குன்னு கஞ்சி ஊத்துற ஆடுகள விப்பியா அத்தாச்சி!” இவ்வளவு நேரமும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சுமதி மனம் பொறுக்கமாட்டாமல் கடிந்து கொண்டாள்.
“என்ன பண்றது. கடன் வாங்கிப் பழக்கமில்லயே!”
“அதெல்லாம் வேண்டாம். ஒரு வாரம் தானே? ஆடுகள வித்தா மட்டும் எம்புட்டு தேறும். அதுவும் பத்தாது தானே? சித்தன் வந்து பாத்துக்குவான்.” மீண்டும் சொன்னதையே சொல்ல,
“இல்ல முருகேசா. சொன்னா சொன்னபடி நடக்கணும். இல்லைனா நல்லா இருக்காது” என்றவள் முகமும், குரலும் இறுகியிருந்தது. அவனிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்த பிறகு, அவளிடம் கொடுத்த பொறுப்பை கச்சிதமாக முடித்துக் கொடுக்க எண்ணினாள்.
“எனக்கு வித்து தரமுடியுமா? முடியாதா?” என்றாள் கறாராக.
“சரி… நாளைக்கு பாத்துக்கலாம். நாளைக்கி சந்தைக்கு கொண்டு போகலாம்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
கிளம்பும் பொழுது, “உன் புருஷன் எனக்கு நல்லது பண்றதா நெனச்சு தந்திகிந்தி கொடுத்துர போறாப்ல. சொல்லி வை!” என சுமதியிடம் போறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்ல,
“எங்களுக்கு வேற வேலையில்ல பாரு!” என அலுத்துக் கொண்டே உள்ளே வந்தவளிடம் என்னவென்று முருகேசன் கேட்டான்.
“தந்தி கொடுத்துருவீங்கனு பயந்துக்கிட்டு, அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுறாதீங்கனு சொல்லிட்டுப் போகுது.”
தொலைபேசி செய்து அலுத்துப்போய், சித்தனை தொடர்புகொள்ள முடியாமல், என்ன செய்வதென்று தவித்தவனுக்கு, அழகியே வழி காட்டிச் செல்ல,
“நெஞ்சழுத்தக்காரி” என்றான் பல்லைக் கடித்து.
சுமதி, “என்னங்க?” என,
“தந்தி கொடுத்திறாதேன்னு சொன்னா என்ன அர்த்தம். மறைமுகமா கொடுன்னு சொல்லிட்டு போகுது!”
“அப்படியா சொல்லிட்டுப் போகுது?” என ஆச்சர்யம் காட்ட,
“ஆமா… ஏதோ அவசரத்துல முடிவு பண்ணிட்டு, இப்ப ஆர அமர தவிக்கிறது நல்லாத் தெரியுது. முதல் வேலையா போய் தந்தி கொடுத்திட்டு வர்றே!”
“அப்ப ஆடு விக்க?”
“அதெல்லாம் தேவைப்படாது. அது வீம்புக்கு நம்ம புளியங்கா திங்க முடியுமா?” என்றவன் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான் தந்தியடிக்க.
மறுநாள் ஆடுகளை விற்க ஏற்பாடு பண்ணவில்லை. எப்படியும் சித்தன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை முருகேசனுக்கு. விடிந்தால் கல்யாணம் என்பதால் அவளாலும் வெளியே செல்ல முடியவில்லை. பணமும் ஏற்பாடு பண்ண முடியவில்லை.
கணக்குக் கேட்டு திண்ணையில் சித்தன் அமர்ந்திருக்க, மணப்பெண் ஏன் இன்னும் வரவில்லை என தேடிவந்தவர்களைப் பார்த்தவன் மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான்.
“சீக்கிரம் அழச்சுட்டுப் போங்க. நல்ல நேரம் முடியப்போகுது. கல்யாணம் முடிச்சுட்டு அப்படியே போலீஸ் ஸ்டேஷன் வந்துருங்க!”
நோட்டை பார்த்துக் கொண்டே அலுங்காமல் கூறியவனை, அதிராமல் ஏறிட்டாள் அழகி. முருகேசன் உள்பட.
திண்ணையில் உட்கார்ந்து பேன் பார்க்கும் சாக்கில் அழகியையும், சித்தனையும் சேர்த்து வைத்துக் கிண்டிய ஊர்ச்சனமும் கூடிவிட்டது வேடிக்கை பார்க்க. சுவாரஸ்யம் எதிர்பார்த்து வந்த சனங்களுக்கு, இவன் கணக்கு வழக்கு மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க, கூழுக்கு கருவாடு எதிர்பார்த்து சோத்துச்சட்டி முன் உட்கார்ந்தவனுக்கு வெங்கயம் வைத்தது போல் சப்பென ஆனது.
‘கல்யாணத்த நிறுத்துவான்னு பாத்தா இவனென்னடான்னா அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ணுவான் போலயே? முடிச்சுட்டு போலீஸ் ஸ்டேஷன் வேற கூப்பிடுறான்.’ முருகேசன் உள்ளுக்குள் அங்கலாய்க்க,
“நாங்க எதுக்கு தம்பி அங்கெல்லாம் வரணும். பொண்ணு சம்மதத்தோடதான் கல்யாணம் நடக்குது!” புல்லுக்கட்டு மீசை வைத்திருந்த பெருசு ஒன்னு மீசையை நீவியது.
“நானொன்னும் இல்லைனு சொல்லலியே. பொண்ணு சீவி சிங்காரிச்சு, கெளம்பி நிக்கிறதப் பார்த்தாலே முழு சம்மதத்தோடதான் நடக்குதுன்னு தெரியுதே?” என்றான் அழகியை மேலும் கீழுமாக நோட்டமிட்டவாறே. நெருப்பில் நிற்பது போல் நின்று கொண்டிருந்தால் அவன் முன்.
“அப்பறம் பொண்ண அனுப்பறதுக்கென்ன?”
“தாராளமா கூட்டிப்போங்க. ஆனா நான் சொல்ற தொகைய எடுத்து வச்சுட்டு கூட்டிப்போங்க!” என அவன் சொன்ன தொகையைக் கேட்டு,
“நா… நாங்கெதுக்கு தம்பி கொடுக்கணும்?” எனப் பதறியது புல்லுக்கட்டு மீசை.
“நான் கொடுத்துட்டுப் போன காசுக்கு இவதான் பொறுப்பு. இவளக் கல்யாணம் பண்ணுனா இவளுக்கு நீங்கதானே பொறுப்பு. அப்ப காசும் நீங்கதானே தரணும்? கணக்குல காசு கொறையுது. இவ வீட்ல திருடு போயிருக்கு. ஒன்னு பஞ்சாயத்தக் கூட்டணும். அப்படி பஞ்சாயத்து வச்சாலும் போன பணம் கைக்கு வரும்னு நம்பிக்கையில்ல. அதனால போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு இருக்கேன். நீங்க சீக்கிரம் கல்யாணத்த முடிச்சுட்டு வாங்க. பொண்ணும் வந்துதான் புகார் கொடுக்கணும்” என சின்னப்பிள்ளைக்கு பாடம் எடுப்பது போல், நிறுத்தி நிதானமாக, அலட்டாமல் சொல்ல வந்த சனம் சற்று மிரண்டது. அவர்களைப் பொறுத்தவரை காவல் நிலையம் என்பதெல்லாம் தீட்டு வீடு மாதிரி. கால் வைக்க கூடாத இடம். கல்யாணம் முடிஞ்சதும் அங்கதான் போகவேண்டும் என்றதும் முகம் சுழித்தது.
“ஏதோ… பொண்ணப்பத்தி அரசல் புரசலா கேள்விப்பட்டாலும், போனாப்போகுது காலம் போன கடைசியில கஞ்சி காச்சி ஊத்தவும், துணிமணி தொவச்சுப் போடவும், படுத்துக்கிட்டா அள்ளிப்போடவும் ஆகும்னு பாத்தா, நீங்க என்ன தெண்டங் கட்டச் சொல்றீங்க.” நீட்டி முழக்கியது ஒரு கண்டாங்கிச் சேலை.
அவர்கள் பேச்சைக் கேட்டு உதடு கடித்து நின்றவளை, ஏறிட்டுப் பார்த்தவன் கண்களில் மெய்யாலுமே இப்பொழுது கொலைவெறி. பேசியவரை யாரு யாருக்கு வந்து ஊழியம் பண்ணனும் எனக் கேட்டு அடித்து துவைக்கும் ஆத்திரம் மூண்டது சித்தனுக்கு. அவன் மனதில் எந்த இடத்தில் அவளை வைத்திருக்க, அடக்கிய கோபம் கண்களில் தெரிய, உன்னோட இருப்பு இம்புட்டுதானா எனும்படி அவளை ஒரு பார்வை பார்க்க, அந்த ஒத்தப் பார்வையே அவளுக்குள் குளிர் மூட்டியது.
காலணா இருந்தாலே கோவணத்துல இறுக்கி முடியற ஆளுககிட்டப்போய் என் காசுக்கு வழி பண்ணிட்டு, பொண்ணழச்சுட்டு போங்கணு சொன்னா நீயும் வேண்டாம், உன் பொண்ணும் வேண்டாம்னு நடையக்கட்ட மாட்டாங்க. போதாக்குறைக்கு திருட்டு வழக்கு, போலீஸ் ஸ்டேஷன் என பயமுறுத்தவும், எங்க வம்சத்துலயே போலீஸ்டேஷன் வாசப்படிய மிதிச்சதில்ல, எங்க சாதிக்காகாதுன்னுட்டு கும்பிடு போட்டு கிளப்பிவிட்டது வந்த நாலு சனமும்.
அலமேலுவால் எதுவும் பேசமுடியவில்லை. இதற்கான மண்டகப்படி மாமியார் வீட்டில் கிடைப்பது உறுதி. ஏற்கனவே அவள் புருஷனின் பேச்சை மீறித்தான் அனைத்து ஏற்பாடுகளும் செய்தாள்.
வந்தவர்களோடு அலமேலுவும் கிளம்ப, “நில்லு!” என்றான் அதிகாரமாக.
தயங்கி பார்த்தவளை, “உங்களுக்கெல்லாம் இவ இப்படித்தான் மாப்பிள்ளை பாத்து, போனாப் போகுதுனு கட்டிக் கொடுத்தாளா? நாளைக்கி உன் மகளுக்கும் இப்படித்தான் பாப்பியா” என கேட்க, பதில் பேசமுடியாமல் தலை குனிந்து நின்றாள்.
“உன் மனசாட்சியத் தொட்டு சொல்லு. வந்த மாப்பிள்ளைக எல்லாம், உங்கள கேட்டு வந்தவங்களா? அவளப்பாக்க வந்தவங்க தானே? நம்ம தங்கச்சிக நல்லா இருந்தா போதும்னு நெனச்சவளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பாத்து கூட்டியாந்திருக்க. இவ உங்களுக்கு செஞ்சவரைக்கும் போதும். நீங்க அவளுக்கு செஞ்சதும் போதும். அவங்கவங்க பொழப்பப் பாருங்க. நல்லது கெட்டதுனா மட்டும் வந்துட்டு போங்க!” என உத்தரவாகச் சொல்ல, அதைச் சொல்ல நீ யார் என வாய் வரை வந்த வார்த்தை அவன் பார்த்த பார்வையிலேயே தொண்டைக்குழியிலேயே செத்துப்போயிற்று.
இப்பொழுது தான் பொன்னுத்தாயிக்கு கொதித்த மனது சற்றே அடங்கியது. ஆனால் அவன் திரும்பி அழகியைப் பார்த்த பார்வையில் அவளுக்கு சர்வமும் அடங்கியது.
“பொம்மை கல்யாணத்துலயே என் பக்கத்துல இன்னொருத்திய நீ உக்கார விடலையே? உம் பக்கத்துல எப்படி இன்னொருத்தன நிக்க விடுவேன்னு நெனச்ச? எவ்வளவு நெஞ்சழுத்தமிருந்தா, எவனோ… ஏதோ… சொன்னாங்கறதுக்காக முந்தானைய இன்னொருத்தன் கைல கொடுக்கத் துணிஞ்சிருப்ப? ஆமா… அப்படித்தான்னு சொல்லவேண்டியதுதானே?”
புருவம் நெறித்து, கண்களில் கோபம் தெறிக்க கேட்டதில், இத்தனை நாட்களாக தவித்த தவிப்பு அடங்கி, நடுநாக்கில் வைத்த பஞ்சுமிட்டாயாய் கரைந்து பாதகத்தி நெஞ்சின் அடி ஆழம் வரை தித்தித்தது சித்தனின் வார்த்தைகள்.
ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை
இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா
தண்ணீரில் எழுத்தா
பழசை மறக்கலையே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு
ஊரு சனம் கும்மி அடிக்குது

Situationku yetra songs yeppadi thaan ungalukku gyabakam varutho, lovely Writerji
😘😘😘😘😘
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫