பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 19

ஒரு ஆண் மகனை எந்தளவிற்கு இன்பக் கடலில்‌ மூழ்கித் திளைக்க வைக்க முடியுமோ அதே அளவிற்கு கோபத்தின் உச்சியிலும் ஏற்றிவைக்க முடியும், பெண் எனும் ஒரு ஜீவனால் மட்டும். 

“வாசலத்தாண்டி காலெடுத்து ஒரு எட்டு எடுத்து வெளிய‌வச்ச… அடுத்த வெட்டு ஒனக்குதான்!” 

நிலைப்படி தாண்டும் முன் தன் காலடியில் வந்து விழுந்த அரிவாளை அதிர்ந்து பார்த்தவள், நிமிர்ந்து பார்க்க கண்களில் சடுதியில் கோடி மின்னல் வெட்டி மறைந்தது. இறுக்கிப் பிடித்த அழுத்தம் பட்டென அறுந்தது போல், நெஞ்சில் அப்படியொரு ஆசுவாசம் ஏனென்று தெரியாமலே. அவளையும் மீறி சந்தோஷத்தில் குப்பென நெஞ்சடைத்து விம்மியது.‌ உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தப் பிடியிலிருந்தவள் கண்களை இருட்டிக் கொண்டு படபடத்து வர, சட்டென கதவு நிலையைப் பிடித்து நிலை கொண்டாள். கண்ணீரை அடக்க மெனக்கெடுவது அழுந்தக் கடித்து துடித்த கீழுதடு காட்டிக் கொடுத்தது. அதே சமயம் அப்படியென்ன அவசரம் என அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் பயம் அடிவயிற்றை கவ்விப்பிடித்தது. அன்று பார்த்த அதே உக்கிரம் இன்றும் அவன் கண்களில். எத்தனை வருடங்கள் போனாலும் மறக்க முடியாத பார்வையது. 

மணப்பெண் அலங்காரத்தில் வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைக்க முற்பட்டவள் காலடியில் தான் அரிவாள் வந்து விழுந்தது. 

சிறப்பாக எந்த அலங்காரமும் இல்லை. உடனிருந்த பெற்றவள், பிறந்தவர்கள் முகத்திலும் அவ்வளவு செழிம்பில்லை. 

கல்யாணப்பெண் என்பதற்கு அடையாளமாக சடைபிண்ணி, தலை நிறைய பூ மட்டுமே போதும் என்றுவிட்டாள். மோசமில்லை எனும்படி பாலியெஸ்ட்டர் பட்டில் சிவப்புவண்ணப் புடவை. மெலிதாக பவுடர் பூச்சு, நெற்றியில் சாந்துப் பொட்டு, அதற்கு மேல் கீற்றாகத் திருநீறு. திருமணத்திற்கென அந்தளவுக்கு அவள் மெனக்கெட்டதே பெரிய விஷயமாக இருக்க, எளிமையான அலங்காரத்திலும் துலக்கிவைத்த குத்துவிளக்காய் அத்தனை அழகாக இருந்தவள் தோற்றம், அவனுள் கனன்ற கோபத்தை மேலும் விசிறிவிட்டது. இந்த அலங்காரம் அவனுக்கானது அல்ல, எவனுக்கோ ஒரு கிழவனுக்கு எனும் ஆத்திரம். 

அலமேலு தான், உடன் இரண்டு பெண்களுடன், மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அக்காவை பெண்ணழைத்துப் போக வந்திருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் கோவிலில் வைத்து கல்யாணம். 

எண்ணி… அங்கிட்டு பத்துப் பேர், இங்கிட்டு பத்துப்பேர் என முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு. அதில் முருகேசனும், சுமதியும் இடம்பெறவில்லை. ஏதாவது குட்டி கலாட்டா பண்ணுவான் என.

முன்தினமே நடைபெற வேண்டிய பெண்ணழைப்பிற்கு மறுத்துவிட்டாள். ஒரு நாள் முன் சென்று இரவில் வேறொருவர் வீட்டில் தங்குவது பிடிக்கவில்லை. இதுவரை தங்கியதுமில்லை. 

தூக்கம் தொலைத்து ஒரு வாரமாகிறது. தூங்கா இரவுகளை சித்தனின் நீங்கா நினைவுகளோடு கடத்திக் கொண்டிருந்தாள். இது ஒத்துவராது என முடிவெடுத்து கல்யாணத்திற்கு துணிந்து விட்டாலும் நாள் நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு படபடப்பு நிரந்தரமாக சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது. எதையோ தன்னைவிட்டு வலுக்கட்டாயமாக பிடுங்கியெடுத்த உணர்வு. இறுதி நிமிடம் வரை மனம் எதையோ எதிர்பார்த்தது. 

ஆமாம்! அப்படித்தான் என உரக்க கத்திவிட்டு அமைதியாக இருந்திருக்க வேண்டுமோ? வேல்ச்சாமி மீதும், செவலையின் மீதும் உள்ள கோபத்தில் அவசரப்படடுவிட்டோமோ. ஊர் பேசினால் எனக்கென்ன என இருந்திருந்தால் இத்தனை தொல்லையில்லை. அவனுக்கு நல்லது நினைப்பதாக, அப்பொழுது அவசரப்பட்டு விட்டு இப்பொழுது நிலையில்லாமல் தவித்தது மனது. அப்படியென்ன வரட்டுப் பிடிவாதமென அவள் மீதே வெறுப்பு மேலிட்டது.

திண்ணையில படுத்திருந்தவனு(ளு)க்கு திடுக்குனு கல்யாணம்ங்கற மாதிரி ஒரு வாரத்தில் கல்யாணம். ஊர்ச்சனமே ஆத்துப் போயிற்று. இருந்திருந்து இப்படியா போயி கொடுக்கணும் என. எலும்பில்லா நாக்கு. அங்கிட்டும் பேசும். இங்கிட்டும் பேசும். போனவாரம் வரை அவளை தூற்றிய ஊர்சனம் இப்பெழுது உச்சுக் கொட்டியது. 

“இந்தா பாருங்க… நீங்க இருக்கப்பட்டவுகளா இருக்கலாம். அதுக்குன்னு பொண்ணழச்சுட்டு போகும்போது, ஆம்பளையில்லாத வீட்ல வந்து கலாட்டா பண்றது…” என்றவளை மீதியை‌ முடிக்க விடாமல் திரும்பி ஒரு அழுத்தப் பார்வை பார்க்க, சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது அலமேலுக்கு. நீயெல்லாம் என்ன ஜென்மம் என்பது போல் பொசுக்கும் பார்வை பார்த்தவன்,

“ஏன் ஆம்பளையில்லாத வீடுன்னு சொல்ற. கைத்தண்டி மீசை வச்சுக்கிட்டு நான் தான் ஆம்பளைனு இங்க ஒருத்தன் இருந்தானே? எங்க அவன்” என நக்கலாக கேட்க, அவன் தான் ஊர் எல்லையிலேயே இல்லையே. இரண்டு நாட்களாகிறது தலைமறைவாகி. கையிருப்பு கரைந்த பின்தானே ஊருக்குள் வருவான்.

“கோயில்ல எல்லாரும் காத்துட்டு இருப்பாங்க. எதுனாலும் அங்கவந்து பேசிக்கோங்க!” உள்ளிறங்கிய குரலில் பட்டும் படாமல் சொல்ல,

“எனக்கு கணக்கு வழக்கு முடிக்க வேண்டியிருக்கு. மொதல்ல என் கணக்க முடிச்சுட்டு அப்புறமா உங்கக்காவ எங்கவேணா அழச்சுட்டுப் போ!” என்றான் விட்டேத்தியாக.

சித்தனைக் கண்ட அதிர்ச்சியில், இவ்வளவு நேரமாக சிலையாக நின்றவள்,

அவனின் பேச்சில் உயிர் பெற்று, ‘உன் வேலைதானா எனும்படி’ அவனுடன் நின்றிருந்து முருகேசனை முறைத்துப் பார்க்க,‌ அவனோ நீ யாரே, நான் யாரோ எனும்படி மேலே பார்த்தான்.

“அங்க என்ன பார்வை. என் கணக்கு வழக்க முடிச்சுட்டு கிளம்பு. நல்ல நேரம் ஒன்னும் போயிறாது!” என அவள் மீது பாய்ந்தான். அவளை மணக்கோலத்தில் பார்க்கப் பார்க்க ஆத்திரத்தின் அளவு கூடிக்கொண்டே போனது. 

“என்னங்க இது? பொண்ணழச்சுட்டுப் போகும் போது வந்து கணக்கு கேக்குறீங்க?” உடனிருந்த ஒரு‌ பெண் அவன் யாரெனத் தெரியாமல் கேள்வி கேட்க,

“நாளைக்கு இன்னொருத்தன் பொண்டாட்டிகிட்ட வந்து என் காசுக்கு கணக்கு சொல்லுனு கேக்க முடியாதே. ஒரு காசா, ரெண்டு காசா? ஆயிரக்கணக்குல. மொத கணக்கு ஒப்படைக்கட்டும்!” விடாப்பிடியாக நிற்க, அவன் பேச்சிலேயே தெரிந்தது வீம்புக்கு பேசுகிறான் என. 

ரோஷமாக முறைத்துப் பார்த்தவளை, “ரொம்ப அவசரமோ” என நக்கலாகக் கேட்க, நோட்டை எடுத்துவர விருட்டென உள்ளே திரும்பினாள். 

கல்யாண செய்தியறிந்து, இரவெல்லாம் உயிரை‌ கையில் பிடித்து காரோட்டி வந்திருக்கிறான். ஏற்கனவே வேல்ச்சாமியிடம் காட்டிய கோபம், இவளது முடிவு என கோபத்தின் உச்சத்தில் இருந்தவன், தலை கலைந்து, உடை நலுங்கி, கண்கள் சிவுசிவுத்து சிவந்திருந்தது. 

வேல்ச்சாமி நிச்சய தேதியை வீட்டாரிடம் தெரிவிக்க, ஏன் என்னை கேட்கவில்லை என அப்பாவிடம் கோபத்தை காட்டினான். 

“ஏற்கனவே பேசி வச்சதுதானேடா. சரண்யா கல்யாணத்தாலதானே தள்ளிப்போச்சு. அதான் புனிதா வீட்டுக்காரர் திரும்ப பட்டாளம் போகறதுக்குள்ள கல்யாணத்த முடிச்சறலாம். இன்னும் பதினஞ்சு நாள்ல அவர் கிளம்பிருவார்ல?” தான் எடுத்த முடிவிற்கு விளக்கம் கொடுக்க, இவ்வளவு தூரம் வந்தபிறகு தானும் பேசாமலிருப்பது முட்டாள்தனமாகப்‌ பட்டது.‌

“எனக்கு இந்த பொண்ணு வேண்டாம்ப்பா!” என்றான் முதன் முறையாக அப்பாவின்‌ முடிவை ஆட்சேபித்து. அவர் எதிர்பார்த்தது தான் என்பதால், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதற்காக மகன் முடிவிற்கு விடும் எண்ணமும் இல்லை. 

“ஏன் பிடிக்கலைனு சொல்லு! என்னால பொண்ணு வீட்ல பேச்சு மாத்திப் பேசமுடியாது. அது சரண்யாவுக்கு சின்ன மாமனார் பொண்ணுனு தெரியும்ல. வேணாம்னு சொன்னா தேவையில்லாம சரண்யா வாழ்க்கையில பிரச்சினை வரும். நம்ம தொழில்லயும் தான். நாம இங்க பொழைக்க வந்தவங்க. இவங்க தயவெல்லாம் நமக்கு வேணும்.” தங்கை வாழ்க்கையையும், தொழிலையும் முன்னிருத்தி மகனின் எண்ணத்திற்கு அணைபோட பார்த்தவரிடம்,

“அதுக்காக பிடிக்காம கல்யாணம் பண்ணி ரெண்டு பேர் வாழ்க்கையும் வீணாப்போனா பரவாயில்லையா?” என கேட்க,

“என்னமோ எல்லாம் பிடிச்சு கல்யாணம் பண்ற மாதிரி பேசுற. அந்தக் காலத்துல எங்களையெல்லாம் கேக்கக்கூட மாட்டாங்க. நீ யார மனசுல வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசுறேனு தெரியுது!” ஆத்திரத்தில் அவசரப்பட்டு வேல்ச்சாமி தாமாக வாய்விட, இப்பொழுதுதான் அடுப்படியிலிருந்த ஆவுடையின் கவனம் இருவர் பேச்சிலும் பதிந்தது. 

மகனுக்கு பெண் பிடிக்கவில்லை, அதனால் தான் திருமணத்தில் ஆர்வம் காட்டாமலிருக்கிறான் என இத்தனை நாட்களாக நினைத்திருக்க, இவர்கள் பேச்சு வேறொரு திசையில் செல்வது புரிந்தது. கை வேலையை விட்டுவிட்டு வேகமாக வெளியே வந்தார். 

“என்னங்க சொல்றீங்க. இவன் யார‌ மனசுல வச்சுருக்கான்?” இத்தனை நாட்களாக மகனின் மனம் புரியவில்லையே என்ற ஆதங்கம் பெற்றவளுக்கு. 

தலை தீபாவளிக்கு வந்த சின்ன மகளும், விடுப்பில் வந்த பெரிய மகள் குடும்பம் என அனைவரும் ஹாலில் தான் குழுமி இருந்தனர். 

பெரியவர்கள் பேச்சை ஆரம்பிக்க புனிதா மகளையும், மகனையும் உள்ளே போகச் சொன்னாள்.

“அத உன் மகன் கிட்டயே கேளு. நான் கோபுரத்தில் ஏத்தி வைக்க ஆசப்பட்டா, உன் மகன் குப்பமேட்டத் தேடிப்போறான்” என்றார் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு.

“அப்படிப் பாத்தா, நீங்க பாத்த பொண்ணப் பொருத்தவரை நானும் குப்பமேடு தாம்ப்பா!” என்றவனிடம்,

“உன்னைய யார்றா அப்படி சொல்லுவா. நீ கோடீஸ்வரன் மகன்” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல,

“அதைத் தவிர என்கிட்ட வேறென்ன தகுதியிருக்கு. இந்த நிமிஷம் நீங்க வெளிய போகச்சொன்னா என்ன பண்ணமுடியும் என்னால. படிப்பிருக்கா. வேலையிருக்கா. போதாக்குறைக்கு கொலைகாரன்கற கூடுதல் தகுதி வேற” என மனம் வெறுமையில் பேச,

அதைக்கேட்ட ஆவுடை, “டேய்… சித்தா…” என அதட்டினார். பெற்றவள் மனம் பதறியது கொலைகாரன் என்றதில். 

“இதெல்லாம் உங்க சம்பாத்யம்ப்பா. அந்தப் பொண்ணு எப்படி என்னை மதிக்கும்.”

“அவளும் காசப்பாத்து தான்டா உன்னை மயக்கிருப்பா! இருந்திருந்து நல்லா வளைக்கப்பாக்குறா.” வேல்ச்சாமி பேச்சு வரம்பு மீறியதில்,

“அப்பாஆ!” என ஓங்கி குரல் உயர்த்தினான். “பெத்தவங்கிட்டயே மரியாதையில்லாம குரல் ஒசத்துறியா? அந்தளவுக்கு உன்ன…” என மீதியை சொல்ல வந்தவரை, 

“போதும்ப்பா!” என அவசரமாக இடைமறித்தான். 

வீட்டிற்கு வந்த மருமகன்கள் அங்கிருக்க, அப்பா தேவையில்லாமல் வார்த்தையை விட்டு தன் மரியாதையை கெடுத்துக் கொள்வாரோ என மனம் பதறியது.  

“வேண்டாம்ப்பா… தேவையில்லாம வார்த்தைய விட்டு உங்க மரியாதையிலருந்து கீழ எறங்கிறாதீங்க! நீங்க சொன்ன தகுதின்னு பாத்தா என்னைவிட அவளுக்கு அதிகம். இன்னையவரைக்கும் பெத்தவங்க தயவுல ஒரு வேளை சோறு சாப்பிடல. நாலு தங்கச்சிகள கட்டிக்கொடுத்து சீர் செஞ்சிருக்கா. இன்னைக்கும் சொந்தக்கால்ல நிக்கிறா.”

“இப்ப பொண்ணு தர்றேனு சொல்றவங்களும் என்னப்பாத்து பொண்ணுத் தரல. நீங்க சம்பாதிச்சு வச்சுருக்குற இந்த ஆஸ்த்தியைப் பாத்துதான் தர்றாங்க. நீங்க இங்க வராம, பழைய மாதிரியே ஊர்ல இருந்திருந்தா, விடுதலையாகி வந்த பின்னால, ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்னு யாரு எனக்கு பொண்ணு கொடுத்திருப்பா? அதே ஊர்ல இருந்திருந்தா நீங்களும் தான் தகுதி, தராதரம் பார்த்திருப்பீங்களா? மகனுக்கு பொண்ணு‌கெடச்சா போதும்னு தேடியிருக்க மாட்டீங்க?” 

“வயசு அதிகம் டா!” 

“என்னைவிட ஒரு வருஷம் ரெண்டு வருஷம் சின்னவதாம்ப்பா. எனக்கும் அதே வயசுதானே?”

“ஆம்பள அறுபது வயசுலயும் புது‌ மாப்பிள்ளடா. ஆனா பொம்பளைங்க அப்படியில்ல.”

இப்பொழுதுதான் யாரைப் பற்றி பேசுகிறார்கள் என ஆவுடைக்கே புரிந்தது. புனிதாவிற்கும், சரண்யாவிற்கும் இது பழைய சேதி என்பதால் அதிர்ச்சி அடையவில்லை. 

“நான் அன்னைக்கே சொன்னேன். அக்காதான் நம்பல. யாரையும் தகுதி, தராதரம் பாத்து இருக்க எடத்துல வச்சுருக்கணும். அக்கா பெட்ரூம் வரைக்கு போகவிட்டுச்சு! அண்ணே…” என ஒரு மார்க்கமாக இழுக்க,

“சரண்யா! அன்னைக்கே உன் வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுன்னு சொன்னேன். நாளைக்கு உனக்கு அண்ணியா வரப்போறவ. அம்மாவுக்கு அடுத்த ஸ்தானம் இந்த வீட்ல அவளுக்குதான். நாளைக்கி நீயும், அக்காவும் இங்க வரப்போக இருக்கணும். உங்க மரியாதை எந்தளவுக்கு முக்கியமோ, அவ மரியாதையும் எனக்கு முக்கியம். என்னைய மதிக்கிற அளவுக்கு அவளையும் மதிக்கணும். என்ன தெரியும் அவளப்பத்தி?” எனக் கேட்டு அழகிக்கு அவன் மனதில் எந்த இடமென வேல்ச்சாமி உட்பட அனைவருக்கும் நேரிடையாகவே உணர்த்தினான். 

“நான் ஏன் தெரிஞ்சுக்கணும். இப்ப சின்ன மாமானார் வீட்ல என்னத்தானே பேசுவாங்க. என்ன பதில் சொல்றது?” என முகத்தை தூக்க,

“உன் நாத்தனார்க்கு நான் பொருத்தமில்லாதவன்னு சொல்லிறு!” என்றான்.

“இதுதான் உன் முடிவா?” என வேல்ச்சாமி கேட்க,

“ஆமாப்பா” என்றான் உறுதியாகவும் , இறுதியாகவும். 

அவன் இவ்வளவு நேரப் பேச்சிலேயே அவளுக்கு விடிந்தால் கல்யாணம் என்பது இன்னும் இவனுக்கு தெரியவில்லை எனத் தெரிந்தது. தெரிந்திருந்தால் நின்று சாவகாசமாக விவாதம் நடத்திக் கொண்டிருக்க மாட்டான். 

விடிந்தால் கல்யாணம். தெரியாமலே போகட்டும். அதன் பிறகு இவனை சரிக்கட்டுவது பெரிய விஷயமில்லை எனப்பட்டது வேல்ச்சாமிக்கு. 

ஆவுடைக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால் மறுபக்கம் சந்தோஷம் தான். எனினும், இதனால் அப்பா, மகனுக்கிடையில் விரிசல் விழுந்துவிடுமே என்ற பயம் உள்ளுக்குள். அவருக்கு மகன் சந்தோஷம் மட்டுமே‌ முக்கியம். வேல்ச்சாமிக்கு கௌரவமும் முக்கியம். 

ஆவுடையைப் பொறுத்தவரை தோழியின்‌ மகள். பிறந்ததிலிருந்து பார்த்திருக்கிறார். மகனுக்குப் பொருத்தமானவளும்‌ கூட. பொறுப்பானவளும் கூட. நான்கு தங்கைகளோடு பிறந்தவள். கஷ்ட்ட நஷ்ட்டம் தெரிய வளர்ந்தவள். தங்கள் வீட்டிற்கு வந்தால் தங்கள் பெண் பிள்ளைகளை அனுசரித்து கொண்டு செலுத்துவாள். என்றைக்கும் தன் பிள்ளைகளுக்கு பிறந்த வீட்டு சீராட்டு இருக்கும். இதையெல்லாம்விட மகனுக்குப் பிடித்தவள். வேல்ச்சாமி பார்த்திருக்கும் பெண்ணிடம் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியாதென யோசனை ஆவுடை மனதிற்குள் ஓட, புனிதாவிற்கும் அதே எண்ணம் தான். 

சரண்யா மனது அதிலும் குதர்க்கமாக யோசித்தது. மூன்று சம்பந்தத்திலும் தான் மட்டுமே வசதியான வீட்டிற்கு வாக்குப்பட்டு போயிருப்பதாக. பிறந்த வீட்டிலும் தன் கௌரவம் உயர்ந்து தான் இருக்கும் என திருப்தி பட்டுக்கொண்டது. அப்பா பார்த்திருக்கும் சின்ன மாமானார் பெண்ணிற்கு கொஞ்சம் மண்டைக்கனம் அதிகம். அங்கேயே அவளை மதிக்க மாட்டாள். இவளும் அவளுக்கு சளைத்தவளிவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவள் மருமகளாக வந்தால் பிறந்த வீட்டில் அவள் அதிகாரம் தான் ஓங்கியிருக்கும். இவள் வந்தால் இங்குமே நம்ம ராஜ்யம்தான் என கணக்குப் போட்டது சரண்யாவின் பரந்த  மனது. பிறந்த வீடோ, புகுந்த வீடோ நாம கொடுக்கறது தான் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது தெரியவில்லை. 

அப்பொழுதுதான் வந்தது அந்த அவசரத் தந்தி‌. தொலைபேசி செய்து அலுத்துப் போன முருகேசன், இறுதி முயற்சியாக தந்தி கொடுத்திருந்தான். 

தந்தி என்றவுடன் அனைவருக்கும் பதட்டம். 

சித்தன் தான் வாங்கினான். தந்தியைப் படித்தவன், உடனே நாட்டாமை வீட்டிற்கு அழைக்க, தொலைபேசியை எடுத்தான். அதன் உயிர் பறிக்கப்பட்டிருந்தது. 

அப்பாதானே முக்கிய அழைப்பு வரவேண்டியிருப்பதாக இடத்தைவிட்டு அசையாமல் உட்கார்ந்திருந்தார் என்ற நினைப்பு வர, சந்தேகமாக வேல்ச்சாமியை திரும்பிப் பார்த்தான். 

இந்த ஒரு வாரமாக அவரது நடவடிக்கையும், ஏதோ ஒரு காரணம் சொல்லி தன்னை ஊருக்கு செல்லவிடாமல் தடுத்ததும், அவசரமாக நிச்சயதேதி குறித்து வந்ததும், எங்கோ உதைக்க,

“உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்றான்‌ ஆராய்ச்சிப் பார்வையோடு. ஏனெனில் தொலைபேசி அழைத்த பொழுதெல்லாம் ஓடிவந்து அவர்தான் எடுத்தார். வீட்டிலில்லாத பொழுது முருகேசன் அழைத்துவிட்டால் என்ன செய்வதென்று இணைப்பை துண்டித்து விட்டிருந்தார். 

“உங்ககிட்ட இத எதிர்பாக்கலப்பா” என்றான் ஆதங்கத்துடன்.

கோபத்தில் அவசரமாக வெளியேற முற்பட, 

“இப்ப வெளிய போனா அப்படியே போக வேண்டியது தான்” என்றவரை, நின்று நிதானமாகப் பார்த்தான். 

“என்ன, மிஞ்சி மிஞ்சிப்‌ போனா சொத்துல நையாப் பைசா தரமாட்டேன்னு சொல்லுவீங்க. அவ்வளவுதானேப்பா. நானொன்னும் நீங்க இவ்ளோ சொத்து சம்பாதிச்சு வச்சுருப்பீங்கனு ஜெயில்லருந்து வரலப்பா. கை, கால நம்பித்தான் வந்தேன். மாடு மேய்ச்சாவது பொழச்சுக்குவேன்.” 

மகனின் பேச்சில் மனம் விட்டுப் போயிற்று ஆவுடைக்கு. அவன் மாடு மேய்த்து கஷ்ட்டப்படவா இவ்வளவு சொத்து சுகம்.

“என்னங்க… அவன கஷ்ட்டப்பட விட்டுட்டு அப்படி சொத்து சேத்து போகையில் தலையில தூக்கிட்டா போகப் போறீங்க. அவனுக்கில்லாத இடம் இந்த வீட்ல எனக்கு மட்டும் எதுக்கு. இத்தன வருஷமா உங்க கூட இருந்துட்டேன். இனிமேலாவது என் புள்ளகூட இருக்கப்போறேன். நீங்க காசு பணத்தையே கட்டிக்கிட்டு அழுங்க! அவன் என்ன சாத்திவிட்டு சாதியா ஆசப்பட்டான்” என ஆவுடையும் மகனோடு வெளியேற‌ முற்பட,‌ இந்த இரவு வேளையில் உடன் அழைத்துச் செல்வது சரியாகப் படவில்லை சித்தனுக்கு. அம்மாவை சமாதானப்படுத்தியவன் மனதிற்குள், இப்பொழுது அவசரமாக எப்படிச் செல்வதென்ற யோசனை பலமாக ஓடியது. இனிமேல் ரயிலோ, பஸ்ஸோ சாத்தியமில்லை. விடிவதற்குள் போகவேண்டுமே என மனம் பரபரத்தது.

அவன் மருகி நிற்பதைப் பார்த்த சரண்யா கணவன்தான் வேகமாக தங்கள் கார் சாவியை எடுத்துக் கொடுத்தான். 

அதைப் பார்த்த ஆவுடை மனம், ‘தன் வீட்டில் கார் இருக்க, மருமகன் கொடுத்ததில், இத்தனை சம்பாதித்து என்னத்துக்கு எனும்படி வேல்ச்சாமியை திரும்பி அற்பமாக ஒரு பார்வை பார்த்தார். மருமகன் தான் என்றாலும், மனம் சமாதானமாகவில்லை.  இல்லை என்றால் பரவாயில்லை. இருக்கும் பொழுது என் பிள்ளைக்கு உதவாதது இருந்து என்ன பிரயோஜனம்‌ என்ற ஆதங்கம் பெற்றவளுக்கு.

சித்தன் ஆச்சர்யத்தோடு அவனைப் பார்க்க,

“எங்க வீட்டாளுக கிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க கெளம்புங்க!” என்றவனை நன்றியோடு பார்த்தான்.

*****

கணக்கு வழக்கு நோட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்ட, வாங்கியவன் சாவகாசமாக திண்ணையில் உட்கார்ந்தான். அவசரப்படாமல் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பியவன், 

“எனக்கு நோட்டுக் கணக்குத் தேவையில்ல. அதெல்லாம் கரெக்டாதானிருக்கும்னு தெரியும். ஒரு வாரக்கூலி, தீபாவளிக் காசு கொடுத்தது போக மீதிப் பணத்தை மட்டும் எடுத்து வை!” என சட்டமாகக் கூற, கண்களில் கலவரம் மூண்டது அன்னக்கிளிக்கும், பொன்னுத்தாய்க்கும். 

பதில் சொல்ல முடியாமல் நட்டாத்தில் நிற்பவள் போல் தவித்து நின்ற அக்காவைப் பார்க்க கண்கள் நிறைந்து விட்டது. தன்னால் அவளுக்கு என்றுமே தலைகுனிவு தான் என மனம் அடித்துக் கொண்டது. 

வர முன்ன பின்ன ஆகுமென சேர்த்து இரண்டு வார கூலியோடு, கிணற்றிற்கு வெடி வைக்க ஆகும் செலவுக்காசு என மொத்தமாக கொடுத்துச் சென்றிருந்தான். 

அழகி, முருகேசனை திரும்பிப் பார்த்து முறைக்க, “என்னைய ஏன்‌ முறைக்கிற. கொடுத்தது அவன். வாங்குனது நீ. கணக்கு கேட்டா ஒப்படச்சுட்டு கணக்க முடிக்க வேண்டியதுதானே.” விட்டேத்தியாகச் சொன்னவனுக்குத் தெரியுமே அவளிடம் நையாப்பைசா‌ இல்லையென்பது. 

பதில் சொல்ல முடியாமல் அழகி இறுகிப் போய் நின்றிருக்க, அவளைவிட இறுக்கமாக அமர்ந்திருந்தான் அவள் ஒதுங்க நினைத்ததை நினைத்து மனம் வெறுத்துப்போய். 

அதற்குள் மணப்பெண் ஏன் இன்னும் கோவில் வரவில்லை எனக்கேட்டு சிலர் தேடி வந்துவிட்டனர். 

2 thoughts on “பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 19”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top