பதினாலு வயதில் ஒரு பெண் வயதிற்கு வந்தால், ஒரு வருடத்திற்குள் கல்யாணம், பதினைந்து வயதிற்குள் குழந்தை, அது பெண் பிள்ளையாக இருந்தால் அடுத்த பதினைந்து வருடத்திற்குள் சம்பந்தம் பண்ணி முப்பது வயதில் பேரன், பேத்தியெடுத்து, இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில் என சடையை, கொண்டையாக அள்ளி முடிந்து, முப்பது வயதிற்குள் பெண்களின் அத்தனை ஆசாபாசங்களையும் அள்ளி மூட்டை கட்டி முடிந்து வைத்துவிடும் சமூக நியதி. (எழுபது, எண்பதுகளில்)
“என்னம்மா இது… எனக்கே மக வயசுக்கு வந்துட்டா. அவளையே பொண்ணு கேட்குறாங்க. ரெண்டு வருஷத்துல நானே சம்பந்தம் பண்ணப்போறேன். அக்காவுக்கும் ஆகவேண்டிய வயசுல ஆகியிருந்தா சம்பந்தம் பண்ணியிருக்கும். இந்த வயசுல இதெல்லாம் நல்லாவா இருக்கு?”
எப்பொழுதிலிருந்து இவர்கள் எல்லாம் பெரிய மனுஷி போல் பொறுப்பிற்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. இதே கேள்வியை, அக்கா இருக்கும் போது எங்களுக்கு எதுக்கும்மா முடிக்கணும். முதல்ல அக்காவுக்கு முடிப்போம் என்றிருந்தால் பரவாயில்லை, பாசக்கார தங்கைகள் என மெச்சியிருக்கலாம். அப்பொழுதெல்லாம் அக்கா சொன்னா சரித்தான் என சுயநலமாக தலையாட்டிவிட்டு, ஊருக்குள் ஒரு பேச்சு வந்ததும் குடும்ப மானம் போய்விட்டதாக வந்து தனது ஆதங்கத்தை கொட்டுபவர்களை என்ன செய்வது.
இத்தனை வருடங்களாக அக்கா மீது வராத பழிச்சொல் இப்பொழுது எதனால் வந்தது என ஆராயவில்லை. ஊரில் இருப்பவர்களின் பொறுக்காத தனம்தானே இத்தனைக்கும் காரணம். எங்கக்காவை எப்படி பேசலாமென அக்காவிற்கு ஆதரவாக கொடி பிடிக்க வேண்டாம். ஆனால் அதில் குளிர்காயாமலாவது இருக்கலாமே. ஒரு வேளை இது உண்மையாக இருந்து அவள் நிலை உயர்ந்துவிடுமோ என்ற உயர்ந்த எண்ணம் போலும்.
ஏற்கனவே வெந்து நொந்து போயிருந்த பொன்னுத்தாயி நெஞ்சில் மேலும் வெந்நீரை கொதிக்க கொதிக்க ஊற்றினாள் அலமேலு. அவளை அதட்ட முடியவில்லை. இவள் முகத்துக்கு நேராக கேட்கிறாள். ஊரு சனம் முதுக்குக்குப் பின் பேசுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். இருந்தும் அழகியிடம் ஒரு வார்த்தை இதுபற்றி கேட்கவில்லை. கேட்க என்ன அருகதையிருக்கு. பெத்தவளாயிருந்து அவளுக்கு என்ன செய்திருக்கிறோம் என்ற குற்ற உணர்வு ஊசியாய் குத்துகிறது. தன்னுடைய ஸ்தானத்தில் இருந்து அனைத்தும் செய்தவள். அவள் சொல்ல இவர்கள் கேட்டுதான் பழக்கம். அவளை கேள்வி கேட்டதுமில்லை. கேட்கும் நிலையில் அழகி என்றுமே தன்னை வைத்துக் கொண்டதுமில்லை.
“எங்க வீட்டாளுக பேசற பேச்சு காது கொடுத்து கேட்க முடியலம்மா. உங்கக்கா செஞ்ச சீரெல்லாம் இப்படித்தானான்னு நாக்கப் புடுங்கற மாதிரி கேக்குறா என் மாமியாக்காரி!” என அவர்கள் பேசிய ஒன்றிரண்டு வார்த்தைகளையும் பத்தாகத் திரித்து பேசிக்கொண்டிருந்தாள்.
“எம்மக வெதநெல்லு மாதிரிடீ. ஒருநாளும் சோட போகமாட்டா. அவளப் பேசுன வாயி புழுத்துப்போகும்.” பெற்றவயிறு பற்றியெரிய சாபம் விட,
“என்னம்மா இப்படி பேசுற?” என பதறியவள், உடனே கரிசனையாய்…
“உனக்கு மகன்னா, எனக்கு அக்காயில்லையா. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. அக்காவ சரி கொடுக்க வைம்மா. எங்க வீட்டாளுக கால்ல, கைல விழுந்தாவது எங்க சின்ன மாமனாருக்கு கட்டிக்கச் சொல்றே!” பெரும்போக்காக பெரிய மனசு பண்ணி அக்காவின் வாழ்க்கைக்கு ஆகச்சிறந்த வழியைக் காட்டினாள் அலமேலு.
பிள்ளையில்லாத சின்ன மாமனார் சொத்து, அக்காவை கட்டி வைத்தால் தங்களுக்கே வருமே. இறந்து போன முதல் மனைவிக்கு பிறக்காத குழந்தை, இத்தனை வயதிற்கு மேல் கல்யாணம் பண்ணி இனிமேலா பிறக்கப் போகிறதென்ற நல்ல எண்ணம் தான்.
இன்று தீபாவளி. ஊரே கொண்டாட்டத்தில் இருக்க, ஒருத்தி மட்டும் தனிமை தேடி வந்துவிட்டாள்.
காலையில் வெள்ளென எழுந்து, சாங்கியத்திற்கு எண்ணெய் வைத்து தலை முழுகி, மனம் வெறுமையாய் இருக்க, வயித்துக்கு வஞ்சனை பண்ணாமல் ரெண்டு இட்லியை பிய்த்துப் போட்டுவிட்டு, பொழுது விடிய ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்துவிட்டாள் ஆள் அரவமில்லாத அத்துவானக்காட்டிற்கு. ஆடுகளை மேயவிட்டு மரநிழலில் அமர்ந்திருந்தவள் கை விரல்கள் வளையலை நிரடிக்கொண்டிருக்க, பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. ஒத்தையில் உட்கார்ந்திருப்பவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டே சூரியனும் அந்தி சாய்ந்தது. முகத்தில் சுள்ளென அடித்த வெயில் கூட உரைக்கவில்லை. அதை விட வெக்கையாக மனம் வெதும்பி புலுங்கிக்கொண்டிருக்க, ஊரெல்லாம் சுத்தி எம்பேரு முக்தி என யோசனை ஒரு நிலையில்லாமல் எங்கெங்கோ சுற்றி வந்தது.
தீபாவளிக்கு ஊருக்குள் பட்டாசு வெடிக்கிறார்களோ இல்லையோ, கூலி கொடுக்கும் இடத்திற்கே வந்து செவலை கொளுத்திப் போட்டுப் போன வெடிதான் ஐப்பசி மாத அடைமழையிலும் நமத்துப் போகாத பட்டாசாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
ஒருத்தர் இரண்டு பேர் என்றால் காதும் காதும் வைத்த மாதிரி மெதுவாக கசிந்திருந்திருக்கும். நான்கு ஊர்ச்சனமும் மொத்தமாக கூடியிருக்க, செவலை வந்து மலை உச்சியிலிருந்து குப்பையை தூற்றியது போல் வார்த்தைகளை வாரிக் கொட்டியிருக்க, புயல் வேகத்தில் புரளி கிளம்பிவிட்டது.
“ஏய்! செவல! எங்க வந்து என்ன பேசுற! யாரப்பத்தி பேசறோம்னு தெரியாம பேசாத! அழகியப்பத்தி தப்பா பேசுனா புழுத்துதான் சாவ!” அவளைப் பற்றி அறிந்தவர்கள் அவளுக்கு வக்காலத்து வாங்கி செவலையை அடக்க,
“எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன். கண்ணால பாத்த ஆளே இருக்கு.” அவனை மதிக்காமல் அவன் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்து, அவனுக்கு ஆண் பிள்ளையில்லாமல் செய்துவிட்ட ஆதங்கம். அதற்கு பஞ்சாயத்தில் நிறுத்தியும், அவளைப் பெண் கேட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரம். அவளை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும். அதற்கு வலியவந்த சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்ள,
“வேலிக்கு ஓணான் சாட்சியாக்கும். உன்னப் பத்தி தெரியாது!” என சிலர் அழகிக்கு ஆதரவாக பேச, “உண்மையில்லாம பேச்சு வராதுல. இத்தன நாளா, இவளப் பத்தி வராத பேச்சு இப்ப வருதுன்னா என்ன அர்த்தம். நெருப்பில்லாம புகையாது. காசுக்காரனப்பாத்தா வளச்சுப் போடத்தான் தோணும். இவளும் எத்தன நாளைக்கு தான் ஆம்பளத் தொணையில்லாம ஆடுகளோட மல்லுக்கட்டுவா!”
கூடியிருந்தவர்கள் தன்னானே பாடாமலே ஆங்காங்கே கூடி கும்மியடிக்க,
முதலில் அதிர்ந்தவள், அத்தனை பேரும் தன்னை இத்தனை நேரமாகப் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிபட்டது. உடலும், உள்ளமும் கூசிப் போயிற்று செவலையின் பேச்சில். இத்தனை வருடத்தில் தன்னை விரல் நீட்டிப் பேச யாருக்கும் இடம் கொடுத்ததில்லை. இன்று இத்தனை பேர் முன்னால்,
“எங்களப்பாத்தா ஆம்பளையாத் தெரியலையா? இந்த காணிக்காரன் மட்டும் தான் ஆம்பளையாத் தெரிஞ்சானா?” மப்பேறிய போதையில் வாய்க்கு வந்ததை அனைவர் முன்னும் நா கூசாமல் கேட்க,
“ஆமா! அப்படித்தான்னா என்ன செய்வ? நாண்டுக்கிட்டு தொங்கிருவியா?” என ஓங்கி கத்த வேண்டும்போல் இருந்தது அழகிக்கு. வாய்வரை வந்த வார்த்தைகளை மெனக்கெட்டு விழுங்கிக் கொண்டாள்.
இது அவள் மட்டும் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால் யோசிக்கவே மாட்டாள். அப்படித்தான்… உன்னால் ஆனதை பாத்துக்கோ என நெஞ்சை நிமிர்த்தி சேலையை வரிந்து கட்டியிருப்பாள். எதிர்த்து ஒருத்தன் நிக்க முடியாது. ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. பஞ்சு பறத்தியிருப்பாள்.
இதில் சித்தன் பெயரும் சம்பந்தப்பட்டிருக்கிறது. நான்கு ஊர்ச்சனமும் கூடியிருக்க இது அவனுக்கு எத்தனை அசிங்கம் என மனம் எச்சரிக்க பல்லைக் கடித்து நின்றிருந்தாள்.
அவனது மானம் மரியாதை முக்கியமல்லவா. கொலைகாரன் என்ற அடையாளம் இருந்தாலும், ஊருக்குள் அவனுக்கென்று ஒரு தனி மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. தன்னால் அவனுக்கொரு தலைகுனிவோ, அவன் பெயருக்கு ஒரு கலங்கமோ வருவதை மனம் ஏற்கவில்லை.
நாலூரு சனத்தோட ஆதரவு இப்ப நமக்கு தேவை என்றதில் ஏதோ காரணம் இருக்கிறது. மனதிற்குள் ஏதோ திட்டம் வைத்திருக்கிறான். தண்ணி டேங்க் கட்ட, பள்ளிக்கூடம் கூரை மாற்ற, ஐந்தாவது வரை இருக்கும் ஆரம்பப் பள்ளியை எட்டாவது வரை நடுநிலைப்பள்ளியாக உயர்த்த என அவன் மெனக்கெட்ட பொழுதெல்லாம், “ஊருக்கு ஒரு நல்லது நடக்கணும்னா பணம் காசிருந்தா மட்டும் பத்தாது. அதிகாரமும் நம்ம கையில இருக்கணும் முருகேசா. நம்ம கைக்காசு போட்டாலும், பொது எடத்துல டேங்க் கட்ட அப்ரூவல் வாங்க அலையவிடுறானுங்க” என அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறாள். அடுத்து வரும் பஞ்சாயத்து தேர்தலை நோக்கி அவன் செயல்பாடுகள் இருப்பது புரிந்தது. இந்த நேரத்தில் இப்படி ஒரு புரளி அவன் பெயருக்கு கலங்கத்தை உண்டு பண்ணி விடும் என நினைத்தவள் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அடக்கிய கோபம் படபடப்பாக வர, கால்கள் துவண்டது. மீதி கணக்கு வழக்கை எப்படி முடித்தாள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். ஏதோ ஒரு வேகத்தில் முடித்து வீட்டிற்கு வர, அவளுக்கு முன் செய்தி பொன்னுத்தாயி காதுக்கு வந்துவிட்டது. எதுவும் மகளிடம் கேட்டுக் கொள்ளவில்லை. வழக்கம் போல் பின் பக்கமாக சென்றவள், தொட்டி தண்ணீரை மனதின் வெக்கை தணியும் வரை மொண்டு தலையில் ஊற்றினாள். வெக்கைதான் தணிந்தபாடில்லை. உடை மாற்றி வந்து ஒட்டுத்திண்ணையில் அமர்ந்தாள்.
அன்னக்கிளியும் அக்கா முகத்தையே பார்த்தாள். எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்பவும் போல் கல் போல் இறுகிப்போயிருக்க, எப்படி கேட்பதென்ற தயக்கம் வேறு. அதேதான் பொன்னுத்தாய்க்கும்.
ஆண் துணையில்லாமல், நான்கு பெண் பிள்ளைகளை ஒரு பேச்சு கேளாமல் கரையேற்றியாகிவிட்டது. அன்னக்கிளி சோடை போனாலும் வெளியே தெரியவிடாமல் காதும் காதும் வைத்த மாதிரி கல்யாணத்தை கச்சிதமாக முடித்து வைத்தது அழகிதான்.
மானம் மரியாதை மட்டும்தானே ஆகப் பெரிய சொத்து மண்ணோடு மல்லுக்கட்டும் சனங்களுக்கு. காசு பணமிருந்தால் எதை வேண்டுமானாலும் பூசி மொழுகிவிடலாம். இவளை பேசும் ஊர் சனம் சித்தனை பேசுமா என்பது கேள்வி தான்.
அப்படியே இரண்டு நாட்கள் கழிய, தீபாவளியும் வந்தது.
இன்று ஆடு மேய்க்க வந்தவள் முகத்தில், தீவிர சிந்தனைக் கோடுகள்.
‘சித்தன் வருவான் என்றோ, தன்னை கை பிடிப்பான் என்றோ என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை. இத்தனை வருடங்களில் எங்கிருக்கிறார்கள் என்று கூடத் தெரியாது, இந்த தோட்டத்தை வாங்கி இங்கு வரும்வரை. அவன் விடுதலையாகி வந்துவிட்டானா? கல்யாணமாகிவிட்டதா? பிள்ளை குட்டி இருக்கிறதா என எதுவும் தெரியாது. அவன் என் சித்தன். அது மட்டும் தான் அவள் நினைவில். அந்த நினைவிலேயே காலத்தை கடத்தி விடலாம் என்றுதான் எண்ணியிருந்தாள்.
அவள் தனிமைக்கு அவன் நினைவு மட்டுமே துணை. சண்டையோ, சமாதானமோ, காதலோ, ஊடலோ எல்லாம் கனவிலும், கற்பனையிலும் மட்டுமே. அவள் விருப்பத்திற்கு அவனை வளைத்துக் கொள்வாள். அதில் ஒரு தனி சுகம் அவளுக்கு. அவன் இந்த ஊருக்கு திரும்பி வந்ததே அவளுக்கு கனவு போலத்தான். அந்தக் கனவை கலையவிடாமல் பார்த்துக் கொண்டாள். அவனின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பொக்கிஷமாக சேகரித்தவள், அவனுடன் இருந்த ஒவ்வொரு கணத்தையும் ரசித்திருக்கிறாள். அவனோடு கைகோர்க்கும் ஆசையில்லை. பழைய சித்தனாக வந்திருந்தால் வேண்டுமானல் ஒரு வேளை கனவு பலித்திருக்க நூற்றில் ஒரு வாய்ப்பாவது இருந்திருக்கும். இப்பொழுதென்றால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.
மறைமுகமாகவும், நேரடியாகவும் அவன் மனதை பலமுறை உணர்த்திவிட்டான். சிரித்தே மலுப்பியிருக்கிறாள் இவளும். அதற்கு வாய்ப்பேயில்லை என்று கட்டியம் கூறியது வேல்ச்சாமியின் ஒவ்வொரு நடவடிக்கையும். தன்னால் அவன் அப்பாவை எதிர்க்க வேண்டி வரலாம். இத்தனை வருடம் கழித்து வந்த பிள்ளையிடம் தன்னால் மனக்கசப்பு பெற்றவர்களுக்கும்.
‘ஆசையிருக்கு காணியாள. ஆனா அதிர்ஷ்டம் என்னவோ ஆடு மேய்க்க தானே?’ என்ற சிந்தனையோட விரக்தியாய் கசந்த புன்னகை முகத்தில். இழுத்து ஏக்கப்பெருமூச்சு வாங்கியவள் ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்து நின்றாள். எடுத்த முடிவு பாறாங்கல்லாய் நெஞ்சையழுத்த, காலையில் பேருக்கு சாப்பிட்ட இரண்டு இட்லியும் வயிற்றில் எந்த மூலைக்கு எனக் கேட்டு கரைந்திருக்க, கண்கள் இருட்டிக் கொண்டுவர, கால்கள் எட்டு வைக்க முடியாமல் தள்ளாடியது. தொரட்டிக் கம்பை அழுந்த ஊன்றி நின்றவள், முயன்று தன்னை மீட்டுக் கொண்டு, இது தான் விதியென, விதி போடும் பாதையில் நடக்கத் தீர்மானித்தாள்.
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை. முளைப்பதெல்லாம் பூப்பதில்லை. பூப்பதெல்லாம் மாலையாவதில்லை. மாலையாவதெல்லாம் மன்னவன் தோள் சேர்வதில்லையே. பாதகத்தி கருவறைப்பூவா? கல்லறைப் பூவா?
****
“சின்னாயி… என்ன காரியம் பண்ணி வச்சுருக்க?” ஆத்திரமாக முருகேசன் வாசல் தட்டியை தள்ளிவிட்டு உள்ளே வந்தான்.
“என்னைய என்னய்யா பண்ணச் சொன்ன. இது அவ எடுத்த முடிவு!”
“அதுக்குன்னு, எல்லாத்தையும் அழகு முடிவுக்கே விடுவியா? அந்தாளுக்கு உன்னவிட வயசு அதிகம். கடமை முடிஞ்சா போதும்னு கை கழுவப் பாக்குற. உங்களுக்கெல்லாம் போயி ஒழச்சு கொட்டுச்சே. மனசாட்சியே இல்லையா?” அவ்வளவு ஆதங்கம் அவனுக்குள். எல்லாம் சுயநலவாதிகள். எல்லாம் கடவுள் விட்ட வழியென தன் கையாலாகாத் தனத்திற்கு கடவுளை பழி சொல்லுவது போல், அவள் எடுத்த முடிவென கடமையிலிருந்து கழன்று கொள்ளும் சாமர்த்தியம்.
“என்ன முருகேசா, இங்க வந்து துள்ற. நீதான் இவங்களுக்கு கையாளா? எவ்வளவு கொடுத்தான் அந்த புதுப் பணக்காரன்.” பின் கையைக் கட்டிக் கொண்டு இளக்காரமாய் செவலை அவனைப்பார்த்து கேட்க,
“டேய்… கொலவெறில இருக்கேன். பேசாம போயிரு. தலையாரியில்லாத ஊர்ல தலைக்குத் தலை நாட்டாமைங்கற மாதிரி நீயெல்லாம் அழகி குடும்பத்துல வந்து நாட்டாமை பண்ற?” கோபமாக விரல் நீட்டி எச்சரித்தான்.
“கேக்க ஆம்பளை இல்லைனுதானே தண்ணி தெளிச்சுவிட்ட மாதிரி கண்டமேனிக்கு ஆடுச்சு!”
“ஆடுனத நீ பாத்தியா?” வேட்டியை மடித்துக் கட்டி எகிறிக்கொண்டு வர,
“ஏன்… உன்ன மாதிரி என்னையும் விளக்குப் புடிக்கச் சொல்றியா?” என்றவனை எட்டி சட்டையைப் பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைய,
‘நல்லா வாங்கட்டும்’ என அன்னக்கிளி கண்டுகொள்ளாமல் திண்ணையில் அமர்ந்திருந்தால்.
அன்று அழகியைப் பேசியவன், இனிமேல் நான் தான் வீட்டிற்கு ஆம்பளை என இங்கேயே சட்டமாக வந்து உட்கார்ந்துவிட்டான்.
“எனக்குதானே பேரு காலம், நீயுமா புள்ள பெத்துருக்க? உனக்கென்ன இங்க வேலை?” என மானங்கெட அன்னக்கிளி பேசியும் அசையவில்லை. குடும்பக்கட்டுப்பாடு பண்ணி மூனு மாசம் கூட முழுசா முடியவில்லையே, பச்ச உடம்பாச்சே என்ற பயம் பொன்னுத்தாயிக்கு. இருக்கறது பத்தாதுனு இது வேறயா? நொந்து போனார்.
சென்னை சென்றிருந்த முருகேசனும், சுமதியும் மருத்துவ பரிசோதனைகளை முடித்து, தீபாவளிக்கு முதல் நாளே வந்துவிட்டனர். ஊரில் நடந்தது அரசல் புரசலாக இவர்கள் காதிற்கும் வந்தது.
சித்தன் வந்து பார்த்துக் கொள்வான் என முருகேசனும், அசால்ட்டாக விட்டுவிட, அழகி எடுத்த முடிவு, அவனை கொதித்தெழச் செய்தது. நேரே வீட்டிற்கே வந்துவிட்டான். அவனாலேயே அதை ஜீரணிக்க முடியவில்லை. சித்தனுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான்.
அழகியை கோபமாக முறைத்துப் பார்க்க,
“எப்ப முருகேசா வந்த?” என்றாள் எதுவும் நடவாதது போல்.
“ஒனக்கே இது நல்லாருக்கா. அவனுக்குத் தெரிஞ்சது இன்னொரு தடவ ஜெயிலுக்கு போகவும் தயங்க மாட்டான்.”
உக்கிரமாக முருகேசன் உரைத்த வார்த்தைகள் சம்மட்டியாய் பதம் பார்த்தது பாதகத்தி நெஞ்சை.
“உன் வாயால அப்படி சொல்லாத முருகேசா!” என்றாள் உள்ளம் பதறிப்போய். அத்தனை வலித்தது முருகேசனின் வார்த்தைகள்.
“எந்த நெனப்புல இதெல்லாம் நீ பண்ற? உன்னப் பத்தியும் தெரியும். அவனப்பத்தியும் தெரியும்.”
“தெரிஞ்சும் கேக்குற பாத்தியா? குருடன் ராசாமுழி முழிக்க ஆசப்படலாமா முருகேசா?” என்றவள் தொண்டை கமறியது. இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதென மறைமுகமாக உணர்த்த,
அதைக்கேட்ட பொன்னுத்தாயி மனது உக்கிப் போனது. நெஞ்சில் கைவைத்து அமர்ந்து விட்டார். பாவி மக மனசுல இப்படியொரு நெனப்பிருக்கா. ஆசப்பட்டது தான் பட்டா. ஒரு ஏப்ப சாப்பையப் பாத்து ஆசப்படக்கூடாதா? விக்காதத வித்தாவது ஆசைய நிறைவேத்தியிருப்பேனே!” உள்ளுக்குள் குமைய மட்டும்தான் முடிந்தது.
அழகி அவள் முடிவைச் சொன்ன அன்று, “அதுக்கு நீ எனக்கு மகளா வீட்டோடையே இருந்துரு அழகு” என கையெடுக்காத குறையாக மன்றாடிப் பார்த்தார். இதுதான் என் முடிவென விடாப்பிடியாக நின்றவள், கையோடு அலமேலுவிற்கும் தகவல் சொல்லிவிட, அடுத்த நாளே தட்டோடு வந்துவிட்டாள் அக்காவை சின்ன மாமனார்க்குப் பரிசம் போட. ஒரு வாரத்திற்குள் கல்யாணம்.
இவளிடம் கத்தி பிரயோஜனமில்லை எனத்தெரிந்தது. வீம்பு பிடித்தவள். சித்தனுக்கு எப்படி தெரிவிப்பது என்ற யோசனை முருகேசனுக்குள் ஓட, அவன் வீட்டு தொலைபேசி எண் நினைவிற்கு வந்தது. நாட்டாமை வீட்டில் தொலைபேசியிருக்கிறது. சமீபத்தில் தான் இணைப்பு வாங்கப்பட்டது. அங்கு வைத்துப் பேசினால் எப்படியும் எல்லார்க்கும் கேட்கும். என்ன செய்வதென யோசித்தவன், உடனே பக்கத்து டவுனிற்கு பஸ் ஏறிவிட்டன். அங்கிருந்த பொது தொலைபேசியிலிருந்து சித்தனுக்கு அழைத்தான். அவனது நேரம் வேல்ச்சாமி தான் எடுத்தார்.
“மாமா… நான் முருகேசன் பேசறேன். ஒரு அவசர வேலை. சித்தனை உடனே ஊருக்கு வரச்சொல்லுங்க!” என தலையுமில்லாமல், வாலுமில்லாமல் பதட்டமாகக் கூற,
“என்ன முருகேசா… அப்படியென்ன அவசரம்” என்றார் விசிராந்தையாக.
“மோட்டார் கரண்ட்டுக்கு டெபாசிட் கட்டி வச்சிருந்தோம்ல மாமா. அப்ரூவலாயிருச்சு. சித்தன் வந்துதான் கையெழுத்து போடணும். அப்பதான் அடுத்து வேலை நடக்கும்” என அவனுக்கு தோன்றியதை உடனடி உபாயமாகக் கூற, சரியென வைத்துவிட்டார். அவனது பேச்சில் இருந்த பதட்டமும், யோசித்து யோசித்து பேசியதும் அவருக்குள் சந்தேகத்தை விதைக்க,
அடுத்து உடனே நாட்டாமை வீட்டிற்கு அழைத்துவிட்டார். நலம் விசாரிப்பது போல் விசாரித்து, ஊருக்குள் என்ன விசேஷமென கேட்டுத் தெரிந்து கொண்டவர், அடுத்து ஒரு மாதத்திற்கு சித்தன் ஊர்ப்பக்கமே போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென யோசிக்க ஆரம்பித்தார்.
அடுத்து முருகேசன் அழைத்த பொழுதெல்லாம் சொல்லி வைத்தாற் போல் வேல்ச்சாமியே எடுத்தார். அவர் தான் அந்த இடத்தை விட்டு நதரவேயில்லையே. சித்தன் சந்தேகமாக கேட்டதற்கு கூட, முக்கியமான கால் வரவேண்டியிருக்கு என காரணம் சொல்லியவர், மகனை வீடு தங்கவிடவில்லை. ஏதாவதொரு வேலை வைத்திருந்தார்.
அங்கு பார்த்துக் கொள்ள முருகேசனும், அழகியும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் சித்தனும் வேல்ச்சாமி சொல்லிய வேலையில் கவனம் வைத்தான்.
தீபாவளிக்கென ஒரு மாத விடுப்பில், பெரிய மருமகன் பட்டாளத்திலிருந்து வந்திருக்க, அவன் திரும்பிச் செல்வதற்குள் கல்யாணத்தை முடிக்க வேண்டுமென முடிவெடுத்திருப்பதாக வீட்டினரிடம் கூறியவர், ஒரு வாரத்தில் வீட்டோடு நிச்சயம், அடுத்த வாரத்தில் கல்யாணமென தேதி குறித்து வாங்கிவந்திருந்தார்.
சோலை புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது

Very sad
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫