“என்ன… வளவிக்காரறே! காத்து இந்தப்பக்கமா வீசுது?”
“ஊருக்குள்ளதான் ஒரு ஈ, காக்காயக்கூடக் காணோமேம்மா?”
“ஏன் வளவிக்காரரே! ஈ, காக்காய்க்கெல்லாமா வளவி போடுறீங்க?” அழகி வார்த்தையால் வம்பளக்க,
“கையிருந்தா அதுகளுக்கும் போட்டுவிட வேண்டியது தான் அழகு!” என்றார் அவரும் நக்கலாக.
“ஆனா கையிருந்தும் உங்களால வளவி போடமுடியாத ஒன்னு இருக்கு. அதென்ன சொல்லுங்க பாப்போம்.” கணுக்காலிற்கு மேல் சேற்றுவயலில் மூழ்க நின்று கொண்டு கால் மாற்றி தொழிமிதித்துக் கொண்டே கேட்க,
அதைக் கேட்ட சுமதி, “என்ன அத்தாச்சி அன்னைக்கி மாதிரியா?” என கண்ணடித்து சிரிக்க,
“ச்ச்சு… சும்மாயிரு சுமதி. நீவேற அதையே புடிச்சு தொங்குற?” என அதட்டினாள்.
“இல்ல… ஆளுவந்தா பாத்து சொல்லலாம்ல…” என கேலியாக நீட்டி முழக்க,
“உனக்கும் குசும்பு கூடிப் போச்சு. முருகேசங்கிட்ட சொல்லிவைக்கணும்!” செல்லமாய் கண்களை உருட்டி மிரட்டிவைத்தாள்.
அன்று அழகி போட்ட விடுகதைக்கு, சித்தன் சூசகமாகப் பதிலைச் சொல்லிச் செல்ல, சிரித்த முகமாக வந்தவளிடம், என்ன பதில் எனத்தெரியாமல் போனால் மண்டை வெடித்துவிடுமென நச்சரித்தனர். அவள் கையில் சித்தன் கொடுத்துச் சென்ற கோழி இறகை அவர்களிடம் நீட்ட, “ப்ப்பூ… இதுதானா. கோழி றெக்க.” சப்பென போயிற்று அவர்களுக்கு.
“நீ சொன்னதும் சரிதான்டீ அழகு. ரெண்டு உருவு உருவி” என மீண்டும் வீரம்மா ஆரம்பிக்க,
“அய்யோ சின்னம்மா! நீயும்மா! சித்தாண்ணே வர்ற மாதிரி தெரியுது!” சுமதி எச்சரிக்க,
“இதே மாதிரி எனக்கும் சொல்லியிருக்கலாம்ல சுமதி. மானமே போச்சு.” அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் நின்றதை நினைத்து தர்மசங்கடத்தில் நெழிய,
“எங்க… நான் தான் சித்தாண்ணேனு சொன்னேனே? நீதான் கவனிக்கல.”
“சொன்னவ கொஞ்சம் அடிச்சு சொல்லியிருக்கலாம்.” அலுத்துக் கொண்டாலும் இதழில் பூத்த புன்னகை மட்டும் உதிரவில்லை. கையில் வாங்கிய கோழி இறகில் காதுகுடைய, அந்த சுகத்தில் கண்கள் சொருகி மேலே போனது வீரம்மாவுக்கு.
“என்ன சின்னம்மா, ஒணக்கையா இருக்குபோல?” சுமதியும் அன்று அழகியோடு சேர்ந்துகொள்ள, காது குடையும் சுகத்தில் கண்மூடி லயித்திருந்த வீரம்மா கண்கள் கிறங்க இந்திரலோகமே சென்றுவிட்டார். அவரிடமிருந்து பதில் வராமல் போக, வெடிச்சிரிப்பு பெண்கள் மத்தியில்.
ஒருவாரம் சென்றது. வேலைக்கென ஊரிலிருந்த பெரும்பாலான பெண்கள் கரட்டடிவாரம் வந்துவிட, தீபாவளி வியாபாரத்திற்கு ஊருக்குள் வந்த வளையல்காரர், ஊருக்குள் தடி ஊன்றிய கிழடுகட்டைகளைத் தவிர யாருமில்லாமல் ஊரே வெறிச்சோடிப்போயிருக்க, கரட்டடிவாரமே வந்துவிட்டார் வளையல் பெட்டியை சுமந்துகொண்டு.
“எல்லாரும் இங்க வந்துட்டா… நான் யாருகிட்ட ஏவாரம் பண்ண? அதான் நானும் இங்கேயே வந்துட்டேன்.”
“அதானே! ஆதாயமில்லாம ஆத்தக்கட்டி அழமாட்டீங்களே!” அழகி சிரிக்க,
வளையல்காரர், “ஆமா… அதென்ன அழகு. கையிருந்தும் வளையல் போட முடியாத கை” என கேட்க,
“உலக்கை ண்ணே” என்றாள் சுமதி.
வளையல் வியாபாரியும் சிரிப்போடு மரநிழலில் துணி விரித்து பெட்டியை திறந்து வைத்து அமர்ந்து விட்டார். குழாய்வடிவ காகித அட்டையில் அடுக்கி வைக்கப்பட்ட கண்ணாடி வளையல்கள் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என வானவில்லாய் கண்ணைப் பறித்தன.
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தோட்டத்தை செம்மைபண்ண முடிந்தது. வருடக்கணக்கில் கலப்பையின் கொழுபதியாத நிலம், ஈவு இரக்கமற்றவர் நெஞ்சம் போல், கட்டாந்தரையாய் இறுகிப் போயிருந்தது. இருந்தாலும் ஐப்பசி மாத மழையை வீணாக்க விரும்பாமல், உழுதவரை, பாத்தி பிரித்து, மழையை உள்வாங்க தோது செய்யப்பட்டது. இந்த வருடம் வருண பகவானும் எந்த அவசரமுமின்றி நின்று நிதானமாக வரம் கொடுத்திருக்க, சித்தன் தோட்டம் வாங்கிய நேரமென ஊரே சிலாகித்துப் பேசிற்று. கிணறு, குளம், குட்டையெல்லாம் நீர் தளும்பி வழிந்தது. உழவுத் தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக நம்பியிருக்கும் ஊருக்கு மழை தானே ஆதாரம். வேலையும் தொடர்ந்து வருமே.
இன்று, பாத்திகட்டி நீர் தேக்கிவைத்த வயலில், ஏர் பூட்டி கட்டிகளை உடைத்து வயலை சமன்படுத்தி பரம்படிக்கும் வேலை ஆண்களுக்கு.
பெண்களுக்கு பரம்படித்த வயலில் தொழிமிதிக்கும் வேலை.
வேப்பமரம், நொச்சி, மஞ்சனத்தி, ஆவாரை என அனைத்து இலை, தழை வகைகளையும் நீர் தேக்கி வைத்த வயலில், அடி உரமாக வெட்டிப் போட்டு, காலாலேயே தொழி மிதித்து அமுக்கி, நிலத்திலேயே அழுகி, மக்கவிடப்படும். அதன் பிறகுதான் நெல் நாற்று நடப்படும்.
தொடிப்புழுதி கஃசா உழக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்!
இந்த மாதிரி தொழி உழவு உழுது, இலை தழைகளை அடியுரமாகப்போட்டு தொழிமிதித்தால், கையளவு எரு கூட போடத்தேவையில்லைனு நம்ம ஐயன் வள்ளுவரே சொல்லியிருக்காருங்க.
இது அத்தனையும் சித்தனின் மேற்பார்வையில், அவன் சொன்ன பக்குவத்தில் தான் நடந்தது. எதையும் அவன் மறக்கவில்லை. இதுதான் எனக்குத் தெரியும் என்பது போல் அத்தனையும் செய்ய வைத்தான்.
அவன் சொன்ன உழவுக்கு, நடவுக்கு, தொழி மிதிக்க என, என்றைக்கு என்ன வேலை என்பது மட்டும்தான் சித்தன் சொல்வது. எத்தனை ஆட்கள் தேவையென்பதை அழகி பார்த்துக் கொண்டாள். சுற்றுவட்டாரங்களில் இருந்தும் வேலைக்கு ஆள்பிடித்து வந்தாள். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நான்கு ஊர் ஆட்களுக்கும், ஆண், பெண் வேறுபாடின்றி ஏதாவதொரு வேலை இருந்து கொண்டுதான் இருந்தது சித்தன் தோட்டத்தில். சுணங்காமல் வேலை நடந்தது. வயலடித்து பக்குவம் செய்ய, ஒரு நல்ல நாள் பார்த்து நாற்று நடவுக்கு ஏற்பாடு செய்தான். நாளைதான் அந்த பொன்னாளும்.
மதியச் சாப்பாட்டு நேரத்திற்கு கைகால் கழுவி வந்த பெண்கள், வளையல்காரரை சூழ்ந்து கொண்டனர்.
அவர்களைக் கடந்து சென்றான் சித்தன். மராமத்து பார்க்கப்பட்ட வீடு இன்னும் பால் காய்ச்சப்படாமலிருக்க, வெளியே தாழ்வாரம் இறக்கி அடுப்படியாகப் பயன்படுத்தி, அவனே சமைத்துக் கொண்டான். முருகேசன் சில நேரங்களில் அவனுக்கு சாப்பாடு எடுத்து வருவதும் உண்டு. அவனோடு சேர்ந்து சமைப்பதும் உண்டு. மதியம் சாப்பிடச் சென்றவனை,
“மாமா…” என அழைத்து நிறுத்தினாள் முறைப்பெண் ஒருத்தி. நடை தேக்கி வரப்பில் நின்றான். வயதுப் பெண்களின் பார்வை முழுதும் ரசனையாக பட்டும் படாமல் அவன் மீதுதான். சன்னமாக பெருமூச்சு கூட வெளிப்பட்டது சிலரிடம்.
இளவட்டங்களின் வயிற்றில் புகைச்சலையும், பருவப்பெண்களின் பார்வையில் சாரலையும் ஒருசேர வரவைத்துக் கொண்டிருக்கிறான் இவன் ஊருக்குள் வந்த நாள் முதலாக.
சித்தாண்ணே மாதிரி பேன்ட், சித்தாண்ணே மாதிரி சட்டை, சித்தாண்ணே மாதிரி கிராப் வெட்டணும் என பல நேரங்களில் நடை, உடை, தோரணையில் இளவட்டங்கள் மத்தியில் கதாநாயகனாகத் தெரிபவன், பெண்கள் பார்வை வட்டத்தில் அவன் சிக்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கே வில்லனாகவும் தெரிந்தான்.
“அத்த பொண்ணு, மாமன் பொண்ணுக எல்லாம் வளையல் போட உக்காந்திருக்கோம். கண்டுக்காம போனா என்ன அர்த்தம்?” முறைப்பெண் ஒருத்தி அதிகாரமாகக் கேட்க,
தீபாவளி, பொங்கலுக்கு முறைப்பெண்கள் வளையல் போட மாமன்களிடம் காசு கேட்பது வழக்கம்தான் எனத்தெரியும்.
அங்கு இருப்பவர்களில் யார் யார் முறையென அவனுக்கே தெரியாது. ஒருத்தரைவிட்டு ஒருத்தரைச் சொல்ல முடியாது. எதற்கு பொல்லாப்பு என யோசித்தவன்,
“மொத்தமா நானே காசு தந்தர்றேண்ணே! எல்லாருக்கும் வளையல் போட்டுவிடுங்க. தீபாவளிக்குப் போட்டதா இருக்கட்டும்.” பொத்தாம் பொதுவாக எல்லாருக்கும் வளையல்காரரிடம் போட்டு விடச்சொல்ல,
“ஏன் தம்பி… நீ பாட்டுக்கு எல்லாருக்கும் போட்டுவிடச் சொல்லிட்ட. ஓசில போட்டுக்கச்சொன்னா இவளுக மொழங்கை வரைக்கும் நீட்டுவாளுகளே!” என்றாள் பெரியாத்தாள் முறையில் இருந்த ஒருத்தி.
“போட்டுக்கட்டும் பெரியம்மா. எல்லாம் நம்ம பிள்ளைகதானே?” என்றான் மெல்லிய சிரிப்போடு. அத்தனை ஆகர்ஷித்தது அத்தனைபேரையும் அவனின் புன்சிரிப்பு. ஒருத்தியைத் தவிர. பெண்கள் பார்வை முழுதும் ரசனையாக அவன் மீது விழ, ஏனோ பற்றிக்கொண்டு வந்தது அழகிக்கு மட்டும்.
“வளவிக்காரரே! இன்னைக்கு நீங்க நரிமொகத்துல தான் முழிச்சுருக்கீங்க போல” என கேலி செய்ய, பன்னீர் புகையிலை போட்ட வாயோடு மலர்ந்து சிரித்தார் வளையல்காரர்.
“அழகி நீயும் வா!” அப்பொழுதுதான் கைகால் கழுவி வந்தவளையும் அழைக்க,
“நீங்க போடுங்கத்தை. எனக்கு வளவியிருக்கு!” என கையை நீட்டிக் காட்டினாள்.
“எது… போன பொங்கலுக்குப் போட்ட, ரப்பர் வளவியா? கெழடு கட்டையாட்டாம் அதையே போடாம கைநிறைய கண்ணாடி வளையல் போட வாடீ. நாளைக்கு நாத்து நடவு கலகலக்கும்ல. நம்ம சித்தன் தம்பிதான் காசு கொடுக்குதாம்.”
“வேண்டாம்த்தை இதுவே போதும். குழை ஒடிக்கிற கைக்கு ரெண்டு நாள்கூட கண்ணாடி வளையல் தாங்காதுத்தே” என்றவளையே சித்தன் பார்வை ஆராய்ந்தது.
“அப்ப, ரப்பர் வளவியாவது புதுசா போடுடீ. நல்லநாளும் பெரிய நாளுமா பழசோடயே இருப்பியா? இதுல மிச்சம் பண்ணித்தான் மச்சு வீடு கட்டப் போறீயா?”
“அத்தாச்சி மிச்சம்பண்ணி அஞ்சாறு ஆச்சு. இது சேத்துவச்சா தங்கச்சிக்காரிக எவளாவது வந்து புடுங்கிட்டுப் போவாளுக சின்னம்மா.” சுமதி சந்தடி சாக்கில் இவளை அட்டையாய் உறிஞ்சியெடுக்கும் தங்கைகளை சாட,
“வேண்டாம் அத்தே! நீங்க போடுங்க” என்றவள், இவர்கள் விடமாட்டார்கள் எனத் தெரிந்து தூக்குச்சட்டியைத் திறந்து வைத்து உட்கார்ந்துவிட்டாள் சாப்பிடுவது போல். பக்கத்தில் இருந்த மரத்தில் கையைக்கட்டி சாய்ந்து நின்றவன், வளையல் போடுபவர்கள் மீது பார்வையை வைத்திருப்பது போல் தெரிந்தாலும், அவன் பார்ப்பது தன்னை மட்டும் தான் என்பதை பின் கழுத்து குறுகுறுத்து காட்டிக் கொடுத்தது அழகிக்கு. அவன் பார்வையின் குறுகுறுப்பில், தூக்குச்சட்டிக்குள்ளேயே கை துளாவி மீன் பிடித்துக் கொண்டிருக்க, ஒரு வாய் கஞ்சி கூட வாய்க்குள் சொல்லவில்லை.
வேலை நேரம் தவிர ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதில்லை. பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவர்களுக்குள் பூத்த நேசம் மட்டும், மலை உச்சியில் ஏற்றிய கோவில் தீபம் போல பட்டவர்த்தனமாகத் தெரிகிறது இருவருக்கும். நேற்றுப் பார்த்து இன்று பூத்த நேசம் அல்லவே. எண்ணிரண்டில் என்னவென்று அறியாமல் பூத்த காதல். ஐந்தாறைத் தொடும் தூரத்திலும் வாடாமல் மணம் பரப்பி நிற்கிறது. ஒரு வனவாச காலம், ஒருவரையொருவர் பாத்துக் கொள்ளாமல் தனித்தனியாக வாழ்ந்தும் நெல்முனையளவு கூட குறையாத அதே நேசமும், பரவசமும் இருவர் கண்களிலும் இன்றளவும். இவள் மறுக்கவுமில்லை. அவன் மறைக்கவுமில்லை. இருவரும் மறக்கவுமில்லை. ஆனால் இருவருக்குள்ளும் மூடுமந்திரமே.
“அவ வரமாட்டா சின்னம்மா. நீ வா! அவ என்னைக்கு நம்ம பேச்சக் கேட்டா. நீங்க எனக்கு அந்த பச்சை வளையல எடுங்கண்ணே! கணக்கா ஒரு டசன் போடாம ஒன்னு சேத்துப்போடுங்க!” என்றவள் விலையையும் கேட்டு, அவர் சொன்ன விலையைவிட, அடித்துப் பேரம் பேசிவிட, எல்லாரும் வளையல் போட்டுக்கொள்வதில் மும்முரமாயினர்.
வளையல் போடும் பெண்களின் முன்கையை, வாழைப் பூ மொக்காகப் சேர்த்துப் பிடித்து அளவு பார்த்தவர், கண்ணாடி வளையல்களை கொத்தாக எடுத்து, கட்டைவிரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவில் பிடித்து, சுண்டிப்பார்த்து உடைந்த வளையல்களை கழித்துத் கட்டினார். உழைத்து உரமேறிய கைகளை குவித்துப் பிடித்து, லாவகமாக வளையல் உடையாமல் போட ஆரம்பித்தார்.
இன்று வளையல்காரர் மெய்யாகவே நரி முகத்தில் தான் முழித்தார் போல. பெரும்பாலும் பெட்டியும் காலியாகி, கயிற்றில் கோர்த்து தோளில் போட்டுவந்த வளையல்களும் காலியாகிவிட்டது. கேலியும், கிண்டலும் கும்மாளம்போட்டது பெண்கள் கூடியிருந்த இடத்தில். புதுப் பொருள் என்றாலே தனியொரு சந்தோஷம் தானே. அது சாதாரண கண்ணாடி வளையலாக இருந்தால் என்ன? போட்டுக் கொண்டவர்கள் சிரித்த முகத்தோடு சாப்பிட சென்றுவிட,
சித்தன் மொத்தமாக எவ்வளவு என கணக்குப் பார்க்கச் சொன்னான்.
அவர் வளையல் போட்ட கைகளை எண்ணிக் கொண்டிருக்க, பக்கத்திலிருந்த அழகி அவர் சொல்லும் முன், எத்தனை பேர், எத்தனை டசன் வளையல்கள் என கணக்கை கணக்காக எண்ணிச் சொன்னாள்.
“அழகு சொன்னா கணக்கு சரியாயிருக்கும். நீங்க அதையே கொடுங்க தம்பி!” என்றார்.
அவனும் காசை எண்ணிக் கொடுத்தவன், இரண்டு டஜன் கண்ணாடி வளையல்கள் கேட்டான். வளையல் பெட்டியைப் பார்த்தவர், “கல்யாண வளையல்தான் தம்பியிருக்கு. மத்ததெல்லாம் போட்டாச்சு!” என, அவனும் பெட்டியைப் பார்த்தான். தங்க கலரில் முகூர்த்த வளையல் மட்டும்தான் இருந்தது. திருமணம், நிச்சயதார்த்தம், சடங்கு என முகூர்த்தத்திற்கு மட்டும் போடும் வளையல். இந்த வளையல் மாமன் வீட்டு சார்பிலோ, மாப்பிள்ளை வீட்டார் சார்பிலோ சீராக மட்டுமே வாங்கிக் கொடுப்பர்.
“பரவாயில்ல… அதையே ரெண்டு டஜன் கொடுங்க!” என வாங்கிக் கொண்டவன் அதற்கும் சேர்த்து காசை எண்ணிக் கொடுத்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் யாருக்கென்றெல்லாம் கேட்கவில்லை.
வளையல்காரர் சந்தோஷமாக பெட்டியைக் கட்டினார்.
சாப்பிட்ட கையை கழுவ எழுந்து சென்றவளை,
“அழகி!” என அழைத்து நிறுத்தினான். திரும்பிப் பார்த்தாள்.
“உனக்கு கண்ணாடி வளையல் தானே பிடிக்கும். அப்புறம் ஏன் இந்த வளையல்?” என்றவன் பார்வை அவள் கைகளில் படிய, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். சிறுவயதில் தீபாவளி, பொங்கலுக்கு வளையல் போடவெனவே வேப்ப முத்து சேகரித்து காசு சேர்த்த நாட்கள் நினைவிற்கு வந்தது. இளம்கன்று பயம் மட்டுமில்லை வறுமையும் அறியாது. வெயில், மழை, பனி இவற்றோடு பசியும் பாராது துள்ளித்திரிந்த வசந்த காலங்கள் அவை. பெருமூச்சொன்று வெளிப்பட,
“இப்பவும் பிடிக்கலைனு சொல்லலியே?” என்றவள் பார்வை தூரத்தில் வெறிக்க, சில கணங்கள் அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,
“வளையல் பிடிக்குது. ஆனா சத்தம் தான் பிடிக்கல… இல்லையா?” என்றவனை வரண்ட புன்னகையோடு ஏறிட்டுப் பார்த்தாள் என் உணர்வுகளை நீ இத்தனை தூரம் உணர்கிறாயா எனும் படி. ஆம் எனும்படி அவனும் பார்த்து நிற்க,
“வளையல் சத்தம் தூக்கத்த கெடுக்குது. தூக்கத்த மட்டும் கெடுத்தா பரவாயில்ல“ என்று மீதியை சொல்லாமல் அவள் பார்வை எங்கோ வெறிக்க, அவள் சொல்லாமல் விட்டதில் ஆயிரம் அர்த்தங்கள் அனர்த்தங்களோடு.
“நாலு தங்கச்சிகளுக்கும் கல்யாணம் முடிஞ்சு, மறுவீடு, விருந்துனு இங்கதான வந்தாகணும். ஆம்பளப் பையனா இருந்திருந்தா துண்டை உதறி தோள்ல போட்டுட்டு, மந்தையில போயி படுத்துக்கலாம். பொட்டச்சியா போயிட்டேனே. கல்யாணமாகாதவ அடுத்த வீட்ல போயா படுக்கமுடியும். தேவையில்லாத பொல்லாப்பு வந்து சேரும். வேற வழியில்ல. ஒட்டுத் திண்ணையில தான் ஒண்டியாகணும். எட்டடுக்கு மாளிகையா என்ன? கண்ணைத்தான் இறுக்க மூடமுடியும். ஆனா காது…” உணர்ச்சி துடைத்த முகத்தில் கசந்த புன்னகையோடு, உலர்ந்து போன கையைக் கழுவ, தொட்டியை நோக்கிச் செல்ல, நெஞ்சு உலர்ந்து அவளையே பார்த்திருந்தவன் கண்களில் முள் குத்தியவலி. அவளையே வெறித்துப் பார்த்தவன் மனம் கணத்துப்போக, சட்டென கண்கள் செவ்வரியோடியது.
*****
மறுநாள் வெயிலுக்கு முன் நாற்று நடவிற்கு பெண்களை அழைத்து வந்துசேர்ந்துவிட்டாள் அழகி. அன்றே மராமத்துப் பார்த்து, வெள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கும் பால் காய்ச்சுவதென முடிவு செய்து மெட்ராசிலிருந்து அனைவரையும் வரச்சொல்லி கடிதம் போட்டிருந்தான் சித்தன்.
பிள்ளைகளுக்கு பள்ளி, விடுப்பெடுக்க முடியாது, தீபாவளி விடுமுறைக்கு வருவதாக புனிதாவும், அங்கெல்லாம் எங்களுக்கு சரிப்படாதென சரண்யாவும் மறுத்துவிட, வேல்ச்சாமியும், ஆவுடை மட்டுமே கிளம்பி வந்தனர்.
என்னதான், என்ன இருக்கிறது இந்த ஊரில் என நினைத்து வேல்ச்சாமி வேண்டா வெறுப்பாக வந்தாலும், கால் வைத்தவுடன் என்னவோ செய்தது அவரையும் பிறந்த மண். இரவோடு இரவாக உதறிவிட்டுச்சென்ற ஊர். ஏனோ ஊருக்குள் செல்ல மனம் வரவில்லை. போனால் காலம் காலமாக வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டிவரும். அதோடு சேர்ந்து பழைய நினைவுகளும் கிளர்ந்தெழும். மீண்டும் அதை அசைபோடும் தெம்பு அவர்களிடம் இப்போதைக்கு இல்லை. ஊர் எல்லையில் இருந்த குலசாமி கோவிலில் கால் வைக்க, ஆவுடைக்கு மேனி சிலிர்த்து, கண்கள் கலங்கிப்போயிற்று. அடிவயிற்றிலிருந்து ஆதங்கம் பீறிட்டு எழ, கைகளை விரித்து
“இத்தன வருஷமாயிருக்கு. உன் எல்கைக்கு எங்களக் கூப்பிட.” பெருங்குரலெடுத்து அரற்றியவர் கண்களில் தாரைதாரையாய்க் கண்ணீர்.
முதன் முதலாக நாற்று நடவு என்பதால் அந்நேரத்திற்கு சித்தனும் கோவிலுக்கு வந்தான். கண்ணீரோடு கையேந்தி நின்ற அம்மாவைப் பார்க்க அவனுக்கும், பழைய நினைவுகள் நெஞ்சை அறுக்க, உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவரை, ஓடி வந்து தோளோடு அணைத்துக் கொண்டான். மகனை அணைத்து கண்ணீர்விட்டு அழுதார். சற்று நேரம் அங்கேயே உட்கார வைத்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான். விழுந்து கும்பிட்டு மண்ணெடுத்து மகனின் நெற்றியில் பூசி விட்டார். ஆசுவாசப்படவிட்டு, நேரே கரட்டடிவாரத்திற்கே அழைத்து வந்தான்.
வேண்டாமென்று சொல்லச் சொல்ல கேட்காமல் மகன் வீம்பில் வாங்கிய தோட்டம். ஊர் எல்லையில், இடுப்பில் கையூன்றி நின்று கரட்டடிவாரம் வரை பார்த்தவருக்கு நெஞ்சம் விம்மி பூரித்துப் போனது. என்னதான் வெளியூரில் கோடிகோடியாகச் சொத்து சேர்த்தாலும், பிறந்த மண்ணில் இருக்கும் கையகல நிலம் தரும் பூரிப்பே தனிதான். மொத்தமாக நூற்றைம்பது ஏக்கர் சொச்சம். சுற்று வட்டாரத்திலேயே பெரும் நில மிராசுதாரர் இப்போதைக்கு இவர்தான். வேல்ச்சாமிக்கு சொல்லவும் வேண்டுமா? பெருமிதம் தாங்கவில்லை.
நாற்றுவிட்டு நடவு செய்ய, நாளில்லை என்பதால் பக்கத்து ஊர்களில் நெல் நாற்றுக்கு சொல்லி வைத்திருந்தாள். வண்டியில் வந்திறங்கிய நாற்றுகளை ஆங்காங்கே வரப்புகளில் இறக்கி வைத்தனர். நாற்றுக்கட்டுகளைப் பிரித்து, பிடியளவு இருந்த சிறுசிறு கட்டுகளை ஆங்காங்கே நடவுக்கு தோதாக வயல்களுக்கு மத்தியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர் அழகியோடு சேர்ந்து சிலர். நாற்றை தூக்கிப் போட்டு நிமிர்ந்தவள் கண்கள், வரப்பில் நடந்து வந்தவனைப் பார்த்து நிலை குத்திப் போயிற்று. கண்ணெடுக்காமல் உறைந்து நின்றவள் கண்களில் அவளே அறியாமல் சடுதியில் கார்காலம்.
வேட்டி, சட்டையில், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு என இத்தனை காலமாக அவளது கற்பனையில் வரித்து வைத்திருந்த சித்தனின் தோற்றத்தைப் பார்த்தவளுக்கு பரவசம் பொங்க உள்ளம் படபடத்து வந்தது. இத்தனை நாட்களாக முழங்கால் வரை மடித்துவிடப்பட்ட பேன்ட்டோடுதான் வயலில் சுற்றுவான். கோவிலுக்கென வேட்டி சட்டையில் சென்று வந்தவனை, வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்து நிற்க, கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து தலையில் உருமா கட்டிக்கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் அவளைப் பார்த்து புருவம் உயர்த்த, யாரும் பார்க்கும் முன் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டாள். இதழோரம் குறுஞ்சிரிப்போடு கடந்த சென்றான்.
“உன் மகனோட கோலத்தப் பாத்தியா? அவன ராசாவாட்டம் இருக்கச் சொன்ன, இந்க வந்து தோட்டங்காட்டுல வெயில்ல எப்படி திரியுறான் பாரு!”
மகனின் தோற்றம் பார்த்து வேல்ச்சாமியின் அங்கலாய்ப்பு ஆவுடையிடம். மகன் பேன்ட் சட்டையில் நவநாகரீகமாக வலம்வர வேண்டுமென்பதே வேல்ச்சாமியின் ஆசை. அவரது எதிர்பார்ப்பிற்கு தகுந்தவாறுதான் மகனை மாற்றி வைத்திருந்தார்.
“குழாய மாட்டிக்கிட்டு சேத்துல எறங்க முடியுமா? இப்பதான் ராசாவாட்டாம் இருக்கான்.”
“அவன யாருடீ சேத்துல எறங்கச் சொன்னது? ஜம்முனு சட்டை கசங்காம நம்ம ஆஃபிஸ் ரூம்ல உக்கார வேண்டியதுதான?”
“அவனுக்குப் புடிச்சமாதிரி அவன் இருக்கட்டும் விடுங்களேன். அவனா இங்க வெட்டி முறிக்கிறான். அங்க பாக்குற பண்ணாட்ட, இங்க பாக்குறான். அவ்வளவுதான். இத்தனை வருஷம் கழிச்சு வந்த பைய நம்ம கூட இல்லையேனு நானே வயித்தெரிச்சல்ல இருக்கேன். உங்களுக்கு அவன் போடுற ட்ரெஸ் தான் குறையாப் போச்சு. பேசாம வாங்க!” பெற்றவளாய் மகனைப் பிரிந்த ஏக்கம் ஆவுடைக்கு. அவன் சிறையில் இருந்த காலம் வரைக்குமே, ஒரு வேளைச் சோறு கூட, மகனை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர்விடாமல் இறங்கியதில்லை ஆவுடைக்கு. என்ன சாப்பிட்டானோ? எப்படி தூங்குறானோ? என்ன செய்தானோ? என்ற கவலைதான் இடைவிடாமல் எப்பொழுதும். அதுவும் ஒரு நல்ல நாள் திருநாள் என்றால் கேட்கவே வேண்டாம். மகனை நினைத்து அழுதே கரைவார்.
அவன் வெளிவந்த இந்த மூன்றுவருடத்தில் தான் ஆவுடை முகத்தில் சிரிப்பையே பார்க்க முடிந்தது. அப்படியிருக்க அந்த மகனும் இங்கு வந்துவிட்டானே என்ற ஆதங்கம் பெற்றவளுக்கு. ஒரேயொரு ஆறுதல், பிறந்த மண்ணில் அவனுக்குப் பிடித்த மாதிரி இருக்கிறான் என்பது மட்டும்தான். ஏனெனில் அங்கிருந்த வரை மகனின் முகத்தில் இத்தனை பூரிப்பை அவர் கண்டதில்லை. சுரத்தையின்றி வேல்ச்சாமியோடு போவான். வருவான் அவ்வளவே! இங்கு வந்த பிறகுதான் மகன் முகத்தில் பழைய தெளிச்சலை காணமுடிந்தது.
“அவனுக்கு புடிச்சதுன்னு இதுல விட்டுக் கொடுத்த மாதிரி எல்லாத்துலயும் விட்டுக் கொடுப்பேன்னு நினைக்காத?”
“இப்ப நீங்க விட்டுக் கொடுத்ததால என்ன கொறஞ்சு போச்சு. நீங்க சம்பாதிச்சத ஆத்துலயா அள்ளி வீசிட்டான். சொந்த ஊர்ல நெலம்தானே வாங்கிப் போட்டிருக்கான். ரெண்டு போகம் நல்லா வெளஞ்சா போதும். நீங்க போட்ட காச எடுத்து கொடுத்துருவான்.”
“மெட்ராஸ்ல இருக்குற பொண்ணு, இங்க வந்து எப்படி காலம் தள்ளும்னு நெனச்சுப் பாத்தியா?” பூடகமாக தன் மனதில் பட்டதைச்சொல்லி ஆவுடையிடம் எச்சரித்தார்.
“கஷ்ட்டப்பட்டு காலத்த தள்ற பொண்ணு வேண்டாம். என் மகனோட இஷ்ட்டப்பட்டு வாழ்ற பொண்ணா பாருங்க!”
“அப்போ இங்க களையெடுக்குற, நாத்து நாடுற பொண்ணத்தான் பாக்கனும்!”
“பாத்தா என்ன? நாமலும் இங்கதான் இருந்தோம். அத மறந்துறாதீங்க. எம் மகன் மனசுக்கு புடுச்சா மட்டும் சரி! அந்த பில்டர் மகள எனக்கே பிடிக்கல. அவளும் அவ அல்ட்டாப்பும். படிச்சவ வந்தா எம்மகன எப்படி மதிப்பா?” என வேல்ச்சாமி வயிற்றில் புளியை கிலோ கணக்கில் கரைத்துவிட்டு முன்னே நடந்தார் ஆவுடை.
‘இந்தப் பொண்ணுதான் உன் மகனுக்கு புடிச்சிருக்குன்னு சொன்னா இப்பவே கல்யாணத்த முடிச்சிறுவா போலயே. இவளே எப்ப எப்போனு இருக்கா மகனுக்கு கல்யாணம் முடிக்க. சரண்யா கல்யாணத்தால தான் தள்ளிப்போச்சு. இவளுக்கு மட்டும் மகனோட ஆசை தெரிஞ்சுது வேற வினையே வேண்டாம். புடிடா தாலிய, கட்டுடா கழுத்துலனு கொடுத்துருவா. சரண்யா கல்யாணத்துக்கு முன்ன இவன் கல்யாணத்த முடிச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்’’ என உருப்போட்ட வேல்ச்சாமி மனது உள்ளுக்குள் வேறொரு கணக்குப் போட்டது.
இவர்கள் வருவதைப் பார்த்து வயலில் நின்றவள், ஓடி வந்து வரவேற்றாள். மற்றவர்களும் சூழ்ந்து கொள்ள, இத்தனை வருடம் கழித்து பார்த்த சொந்த பந்தங்கள், இத்தனை வருஷமா வரலியே என உரிமையோடு சடைத்துக் கொள்ள, சந்தோஷம், துக்கம் என கலவையான உணர்ச்சிப் போராட்டம் அங்கு சற்று நேரம் அரங்கேறியது.
நாற்று நடவிற்கு நேரமாக, வயலில் இறங்கினர். தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து, சூடம் காட்டி, பெண்கள் வயலில் இறங்கி நிற்க, அம்மாவிடம் நாற்றை எடுத்து கொடுக்கச் சொன்னான். ஆவுடை நெல்நாற்றை எடுத்து அழகி கையிலேயே கொடுத்தார். சாமியைக் கும்பிட்டு ஈசான்ய மூலையில் அழகி நடவைத் தொடங்கி வைக்க, மற்றவர்களும் குலவையிட்டு ஆர்ப்பரித்து நடவை தொடங்கினர்.
வெற்றிலை, பூ, பழத்தோடு வாங்கிய வளையலையும் சேர்த்து வைத்து அம்மா கையில் கொடுத்தான். வாங்கிய ஆவுடை அழகியிடம் நீட்ட, அழகி அவனையே பார்க்க, யாருமறியாமல் கண்களை மூடித்திறந்து வாங்கச் சொல்லி சாடை செய்ய, மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டாள்.
“நேத்து வளையல் போடச் சொன்னதுக்கு மாட்டேன்னியே. இப்ப பாரு அண்ணே கையாலயே சாமர்த்தியமா கல்யாண வளையல் வாங்க வச்சுட்டாருல்ல. இனியாவது உனக்கு கல்யாண யோகம் கூடிவருதான்னு பாப்போம் அத்தாச்சி.” சுமதி கேலி செய்ததோடு நில்லாமல், மடியில் கட்டப்போனவளிடம், அவளே வாங்கி பழைய வளையலை கழற்றிவிட்டு, கண்ணாடி வளையலை கை நிறைய இரண்டு கைக்கும் போட்டுவிட்டாள். இரண்டிரண்டாக எடுத்துப்போட, ஒரு வளையல் கூட உடையாமல் போட வேண்டுமே என்ற பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது அழகியின் கண்களில்.
சற்றே இறுக்கமாக, “ஷ்ஷ்ஷ்… பாத்து சுமதி! உடஞ்சுறாம!” உடைந்துவிடுமோ என்ற பயத்தில், அவளையும் மீறி வாய் வார்த்தையாகவும் வந்துவிட, சுமதி அவளை முறைத்துப் பார்க்க, அசடு வழிந்தாள்.
வாங்கிய பூ, பழம், தேங்காயை சேலை முந்தானையில் முடிந்து இடுப்பில் செருகிக் கொள்ள, “அத்தாச்சி, வளையலும் போட்டாச்சு. மடியும் ரொப்பியாச்சு. கூடிய சீக்கிரம் கெட்டி மேளம் தான்.” விடாமல் கேலி பேசி அவளை சிவக்க வைத்தாள் சுமதி. பரிசம் போட்டு முடித்ததும் வெற்றிலை பாக்கோடு, தேங்காய், பழம் வைத்து மடி நிரப்புவது சாங்கியம் தானே. அதை மனதில் வைத்து கேலி செய்தாள் சுமதி.
கண்களில் செவ்வரியோட ஏறிட்டு சித்தனை பார்க்க, அவனும் அவளையே பார்த்திருக்க, யாரும் கவனிக்கும் முன் சட்டென பார்வையை தழைத்துக் கொண்டாள்.
பெண்கள் நடவைத் தொடங்க, வீட்டிற்கு கிளம்பினான். அவனோடு சேர்ந்து வந்த முருகேசன், “ப்ளான் எல்லாம் பக்காவா இருக்கு போல?” காற்றோடு பேசுவது போல் எங்கோ பார்த்துக் கொண்டு கேட்க, வெறும் சிரிப்பு மட்டுமே சித்தனிடம்.
இவன் கையால் நாற்றை எடுத்து அவளிடம் கொடுத்தால் தேவையில்லாத பொல்லாப்பு வந்து சேரும். பெரியவங்க வேற யாரும் இல்லையா என்ற கேள்வி வரும். இதுவே அம்மாவிடம் சொன்னால் ஆவுடை அழகியிடம் தான் கொடுப்பார் என்பது அவனது கணிப்பு. பூ, பழம் கொடுக்க சொன்னதும் அந்த கணக்கில் தான். அவன் கணக்கு தப்பவில்லை.
“யார வேணாலும் நம்பலாம். சிரிச்சே மலுப்புறவிங்கள நம்பவே கூடாதுடா மாப்ள.” சலிப்பாக கூறினாலும் முருகேசனுக்கும் சந்தோஷமே.
“என்னடா புதுசா மொறையெல்லாம் வைக்கிற?”
“ஆமா… அழகு எனக்கு சின்னாயி மகன்னா, நீ எனக்கு மாப்பிள்ளை தானே?” எனக் கேட்க, அதற்கும் சிரிப்பே பதில்.
“சிரிச்சே மலுப்புற. என்னைக்கி வெடிக்கப்போகுதோ தெரியல. ரொம்ப நாளைக்கு வெள்ளரிப் பழத்துக்கு பூண் போட முடியாதுடா மாப்ள!”
“அதான் மச்சான் நீயிருக்கியே?”
“மச்சான் பதவியேத்து அஞ்சு நிமிஷம் கூட ஆகலியேடா மாப்பு. அதுக்குள்ள ஆப்பு வைக்கிற?” என்றவனை வாய்விட்டு சிரித்துக் கொண்டே, “மச்சான் தயவிருந்தா மலையேறலாம்னு சொல்லியிருக்காங்கடா!” தோளில் கை போட்டு அணைத்துக் கொள்ள,
“நீ மலையேற என்னை கெணத்துல தள்ளாம இருந்தா சரி.” என பொய்யாக அலுத்துக் கொண்டான்.
நாற்று நட்டுக் கொண்டிருந்தவளை, “மத்தவங்க நாத்து நடட்டும். நீ எங்கூட ஒத்தாசைக்கு வா அழகி. நல்ல நேரம் போறதுக்குள்ள வீட்ல பாலக் காச்சுவோம்” என அழைத்து வேல்ச்சாமிக்கு இரத்த அழுத்தத்தை எகிறவைத்தார் ஆவுடை.
அழகியோடு வீட்டிற்கு வந்த ஆவுடை, அடுப்பை பற்ற வைத்து, புதுப் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்துவிட்டு, அழகியை பார்த்துக் கொள்ளச் சொல்லியவர், வெளியே போய்விட்டார். அடுப்பின் முன் நின்றவள் விரல்கள், கண்களில் ரசனையோடும், சிறு மயக்கத்தோடும் வளையலையே வருடிக் கொண்டிருந்தது. முகம் முழுக்க பூரிப்போடு, புன்னகை அப்பிக்கிடந்தது. பால் பொங்கிவர, அவசரமாக ஆவுடையைத் தேட, அவர் அங்கில்லை. கை வளையல் குலுங்க, முந்தானையைப் பிடித்து பொங்கிய பாலை இறக்கி வைக்க,
“பிடிச்சிருக்கா?” என தனக்குப் பின்னால் கேட்ட குரலில் இனிமையாக அதிர்ந்து திரும்பியவள், பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். இருவர் மட்டுமே அங்கு. யாராவது வந்துவிட்டால் வேற வினையே வேண்டாம். அவள் மனதில் குடி கொண்டிருப்பது மாடு மேய்த்துக் கொண்டிருந்த சித்தன் என்பது யாருக்கும் தெரியாது. நிலமிராசுதாரர் சித்தநாதனை வளைத்துப் போட்டு விட்டதாகக்தான் ஊர் பேசும். இது நடக்குமா, சாத்தியமா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். இதுவரை ஒரு சொல் கேளாமல் ஊருக்குள் தலை நிமிர்ந்து வாழ்ந்தாயிற்று. இனிமேலும் பேசு பொருளாக அவளுக்கு விருப்பமில்லை.
அவனின் பார்வை தன்னை துளைத்தெடுக்க, விறகடுப்பின் அனல்முன் நின்றும் உள்ளுக்குள் குளிரெடுத்தது. இத்தனை வருட காத்திருப்பிற்கும் இந்த ஒற்றை பார்வை போதும் என தோன்றியது. பதட்டமோ, பயமோ ஏதோ ஒன்று, மேலுதட்டில் வியர்வைப் பூக்கள்.
உதட்டில் நெழிந்த புன்னகையோடு லஜ்ஜையின்றி அவளையே பார்த்து நிற்க, நாற்று நடும்பொழுது கன்னத்தில் தெறித்து காய்ந்து போன சேற்றை துடைத்தெடுக்க கை பரபரத்தது. அழகியின் கண்கள் நாலு சுவரையே நானூறு தடவை அங்குமிங்கும் நிலையில்லாமல் சுற்றி வந்துவிட்டது நாலு நிமிடத்தில். அவனுக்கு கொஞ்சம் கூட அந்தமாதிரி பயம் எதுவும் இல்லை போல். இவளுக்கு தான் அமளிதுமளியாய் இதயம் துடித்தது. பார்வையால் தின்று கொண்டிருந்தவனிடம், இப்படி பார்க்காதே என மனம் கூப்பாடு போட்டது.
ஆவுடை பூஜையறையில் சாமிகளுக்கு பூ போட்டுக் கொண்டிருந்தார். வழக்கம்போல் வேல்ச்சாமி வாசலில் நின்று, தன்னை பார்க்க வந்தவர்களோடு தற்பெருமையை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.
“இதுவரை நான் கேட்ட எந்த கேள்விக்குமே நீ பதிலே சொன்னதில்லை. பிடிச்சிருக்கான்னு கேட்டேன்?” என அழுத்தம் திருத்தமாக அடிக்கோடிட்டு கேட்க, மயக்கம் தெளிந்து முதன் முறையாக வாய்திறந்தாள்.
“பிடிச்சிருக்கு!” என்றாள் சிறு புன்னகையோடு வளையலை நிரடியபடி.
“அப்ப சம்மதம் தானே?” என கேட்க,
“எதுக்கு?” என புருவம் சுருக்கி நிமிர்ந்து பார்த்தவளிடம்,
“உன் முந்தானையை என் கையில கொடுக்க?” கேலியாக உதட்டோரம் சிரிப்பு நெழிய கேட்க,
சட்டென புரியாமல் புருவம் சுருக்கி பார்த்தவள், அவசரமாக, “நான் வளையலத்தான் பிடிச்சுருக்குன்னு சொன்னேன்” பதட்டத்தோடு சிறுபிள்ளைபோல் பரிதாபமாக கண்கள் விரிய மறுதலித்தவளை அள்ளிக் கொள்ள மனம் பரபரத்தது சித்தனுக்கு. நான்கு தங்கைகளுக்கு பொறுப்பெடுத்து முன் நின்று திருமணம் முடித்து வைத்தவள் இவளா எனும் சந்தேகம் அவனுக்கே தோன்றியது. அவளது பதட்டமும், தடுமாற்றமும் சுவாரஸ்யம் கூட்ட,
“ஆனா, நான் வளையல பிடிச்சிருக்கான்னு கேக்கலியே. அது உனக்கு புடிக்கும்னு எனக்கு தெரியும்” நமட்டுச் சிரிப்போடு வேண்டுமென்றே சித்தனின் கேள்வி வெள்ளோட்டம் பார்க்க, கூச்சமும், அச்சமும், பதட்டமும், பரவசமும் என அத்தனை உணர்வுகளும் ஒருசேர போட்டி போட்டது பாதகத்தி நெஞ்சுக்குள்.
பிணையோர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து.
பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையும் கூச்சமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.
இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
அடி போட்டுக்கடி
பொன் வளவி பூட்டிக்கடி
நா போட்டபின்ன பாரு
நீ பொன்னு மணிதேரு
நா போட்டபின்னே பாரு
நீ பொன்னு மணிதேரு
இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்

Padikum pothu naaney nerla antha idathil irukkura mathiri feel kodukuthu Writerji, awesome
Wow 😲😲😲😲😲
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫