பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 14

வேலை நேரம் முடிந்தது. ஐப்பசி மாதமானதால் இப்பவோ அப்பாவோ என இடுப்பு வலியெடுத்து பிரசவிக்கப்போகும் நிறைமாதக்காரி போல வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வரும் முன் வீடு போய்ச் சேரவேண்டுமென்ற அவசரம் அனைவருக்கும். விறகு வெட்டி வைத்தவர்கள், விறகுக்குக்கட்டுகளை மாற்றி மாற்றி தூக்கி விட்டுக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக வரப்பில் நடந்து செல்ல,

“அழகி… நீ எப்படி‌த் தூக்குவ?” ஒருத்தி தலைச்சுமையோடு நின்று கேட்க,

“நீ முன்ன நடக்கா. ஒச்சாயி இருக்கால்ல. அவ தூக்கிவிடுவா!” என கூற, அழகி ஆடுகளையும் ஓட்டிக் கொண்டு வர நேரமாகுமென அவளும் முன்னே நடந்துவிட்டாள். 

அழகியும் சேலை முந்தானையை இழுத்து சும்மாடு கூட்டி, தலையில் வைத்துவிட்டு ஒச்சாயியைத் தேடினாள், தனக்கு விறகுக்கட்டு தூக்கிவிட. எட்டத்தில் அவள் தலை தெரிந்தது. ஆடுகளை கம்பால் விரட்டி ஓட்டி ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தாள். கூப்பிடும் தூரத்தில் இல்லை. அப்படியே இவள் தொண்டை கிழியக் கத்தினாலும் அவளுக்கு அங்கே கேட்கப் போவதுமில்லை எனத் தெரிந்தவள்‌ விறகுக் கட்டை நிமிர்த்தி மரத்தில் சாத்தி வைத்தாள். மூன்று பிரி போட்டு கட்டப்பட்ட, ஆளுயர விறகுக்கட்டு.‌ தலையை முட்டுக் கொடுத்து நிமிர்த்தி தூக்கிவிடலாம் என நினைத்தவள், தான் எண்ணியதை செயல்படுத்த, பச்சை விறகின் கணம் முட்டுக்கொடுத்தவளால், தூக்கி நிமிர முடியாமல் சதி பண்ணியது. உதடு‌ மடித்து தம்கட்டி பலம்‌ கொண்டமட்டும்‌ நெம்பித் தூக்க, சட்டென எடை மொத்தமும்‌ குறைந்து காற்றாக விறகுக்கட்டு காற்றில் மிதந்து வர, விறகைத்தூக்கி நிமிர்ந்தவள் கண்கள் ஆச்சர்யத்தில் நிலைகுத்தி நின்றது. சித்தனின்‌ கை விறகுக்கட்டைத் தூக்க கை கொடுத்திருந்தது.

அவனை அங்கு எதிர்பாராதா அதிர்ச்சி கண்களில் அப்பட்டமாகத் தெரிய, தலையில் சுமையோடு தடுமாறியவளின் விறகுக்கட்டை விழும் முன் சட்டெனத் தாங்கிப்பிடித்தான். இத்தனை அருகில் அவனைக் கண்டவள் இதயம் தடதடக்க, காலை நிலத்தில் அழுந்த ஊன்றி தன்னை‌ நிலைப்படுத்திக் கொண்டாள்.‌ அன்று கண்ட அதே அதிர்ச்சி கண்களில் இன்றும் கண்டவன் மெலிதாக இதழ் விரித்து புன்னகைத்தான். இந்த முறை வேல்ச்சாமியிடம் அனுமதி கேட்கவில்லை.‌ எப்படியும் இந்த வாரம் கூலி கொடுக்க பணம் பத்தாதென தெரிந்தவன், கிளப்பிவிட்டு ஊருக்குப் போவதாக தகவல் மட்டுமே சொன்னான். முன்னமே சொன்னால் தானே அந்த வேலை இந்த வேலை என தாக்காட்டுகிறார். வேல்ச்சாமியால் மறுக்க முடியவில்லை. 

“சித்…” எனத்தொடங்கியவள், பாதிப்பெயரை முழுங்கி விட்டு, 

பரவசமும் படபடப்புமாக, “எப்ப வந்தீங்க! வீட்ல எல்லாரும் சௌக்யமா? புதுப் பொண்ணு நல்லாருக்காளா?” தலையில் சுமந்துபடியே முகம் பூரிக்க, கண்கள் பளிச்சிட, நலம் விசாரித்தவளிடம், 

“இப்பதான்! நேரா இங்கதான் வர்றேன். எல்லாரும் நல்லாருக்காங்க” என பதில் சொல்லியவன்,

“ஏன்… கொஞ்சமா வெட்டிக்கட்டினாத்தான் என்ன?” அக்கறையாக கடியவும் செய்தான். 

“கொஞ்சம் தான். பச்ச வெறகுங்கவும் கணக்குது.” கண்கள் முழுக்க அவன் தோற்றத்தை நிறைத்துக் கொண்டே வந்தது பதில்.

“பாத்தாலே தெரியுது கொஞ்சம்தாங்கறது” நக்கலாக விறகுக்கட்டைப் பார்த்தவனுக்கு தெரிந்தது, அது இரண்டாள்‌ சுமையிருக்கும்‌ என்று. 

“வீடு வரைக்கும் சுமந்துருவியா?” கரிசணையாக விசாரிக்க,

“இதைவிட பெரிய சுமையெல்லாம் சுமந்தாச்சு. இதென்ன பெரிய சுமை…” என்றவள் தலைச்சுமையைச் சொன்னாளா? மனச்சுமையைச் சொன்னாளா‌ என்பது அவளுக்கு மட்டும்தான் வெளிச்சம்.

“முடியலைனா பாதியாக்கட்டி எடுத்துட்டு போகலாம்ல.”

“தலைக்கேத்திட்டா எதுவும் பாரமில்ல.” என்றவளுக்கு சுமையோடு நின்று பேசவும் முடியவில்லை. எப்போ எப்போ என காத்து‌பூத்துக் கிடந்த மனம். அவனைப் பார்த்ததும் விட்டு விலகிச்செல்லவும் முடியாமல் மருகி நிற்கிறது. அவள் பாரத்தோடு நின்று பேசுவதைப் பார்த்தவன்,

“மழை வர்ற மாதிரியிருக்கு. சீக்கிரம் கெளம்பு!”

“நீங்க என்ன பண்ணப்போறீங்க. ஒத்தையில?” சட்டென கேட்டுவிட்டாள். கேட்டபின் தான் யோசித்தாள்.

“ஏன்… துணைக்கி நீயிருக்கப்போறீயா?” அடுத்த நொடி அவனும் கேட்க, அதிர்ந்து பதில் சொல்ல முடியாமல் நின்றவளைப் பார்த்தவன்‌ சிரித்துக் கொண்டான். அன்று‌ போல் மௌனம்‌ மட்டுமே பதில் இன்றும் அழகியிடம். 

அந்த வயதில் அவன்‌ கேட்ட கேள்விக்கு அன்று வேண்டுமானால் பயமோ, தயக்கமோ, சட்டென கேட்டதில் படபடப்போ ஏதோ ஒன்று‌ பதில் சொல்லத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று, காலம் முழுக்க துணையாக வரவும், அவனை‌ துணையாகக் கொள்ளவும் அவளுக்கும் கழுத்தளவு கொள்ளை ஆசைதான். 

ஆனால் மெட்ராஸ் சென்று வந்தபிறகு அது கொஞ்சம் அதிகப்படியோ என அவளுக்கே உறுத்த ஆரம்பித்துவிட்டது. தன் கனவு பகல் கனவோ, ஆகாயக் கோட்டையோ, நீர்க்கோலமோ, விரலுக்கு மீறிய வீக்கமோ என தத்துவ முத்துக்கள் உள்ளுக்குள் சரம் கோர்க்க, தன்னையே‌ நிந்தித்துக் கொண்டாள். இவள் வயதுக்காரிகளுக்கெல்லாம் வயதுக்கு வரும் அல்லது வயதிற்கு வந்த பிள்ளைகள்‌ இருக்க, தன் வயதிற்கும், தகுதிக்கும் சித்தன் அதிகப்படியென தன்னைப்போல் தோன்ற‌ ஆம்பித்துவிட்டது. ஏன்… அவளுக்குடுத்து பிறந்தவளே மகள் வயதிற்கு வந்து சீர் வாங்கி விட்டாளே?

ஆனால் தன்னை சித்தனோடு ஒப்பிட்டால் ஒன்றிரண்டு வருடங்கள் சிறியவள் தான் என்றாலும், அவனுக்கு கல்யாணம் பார்க்கும்‌ பொழுது இன்னும் சிறு வயது பெண்ணைத்தானே பார்ப்பார்கள். அங்கு வேல்ச்சாமி காண்பித்த பெண்ணுக்கும் இருபத்தியொரு வயது கூட இராது. போதாக்குறைக்கு வசதி வேறு. எட்டாக்கனி எனத் தெரிந்து கொட்டாவி விடுவானேன் என ஆயிரத்திற்கு இரண்டாயிரம் முறையாக சமாதானம் செய்தாலும்  பாழாய்ப் போன மனம் கேட்டுத்‌ தொலைவேனா‌ என்கிறது.  

இதெல்லாம் அசை போட்ட மனம், எது எப்படியிருந்தால் எனக்கென்ன, எப்பவும் போல் என் சித்தன் என்னோடு தான். மானசீகமாக வாழ்வதென்ற முடிவிற்கு எப்பொழுதோ வந்து விட்டாள்.‌ அதற்கு‌ தகுதியோ, வசதியோ எதுவும் குறுக்கே நிற்கப் போவதில்லை. அதில் ஒரு தனி சுகம் அவளுக்கு. 

அது கண்முன் சித்தன் காட்சிதரும் வரைக்கும் தான். அவனைப் பார்க்காமல் இருக்கும் வரைக்கும் தான். அவனைப் பார்த்துவிட்டால் மீண்டும் இதோ மனம் தடுமாறுகிறது. தலைச்சுமையை விஞ்சி மனச்சுமையும் ஏறிப்போனது. 

“தோட்டத்தையும், வீட்டையும் ஒரு பார்வை பாத்திட்டு வீட்டுக்கு வர்றேன்” என அவளை சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொன்னான் தலைச்சுமையோடு‌ நிற்பவளிடம். 

அவன் ‌தொட்டுத் தூக்கி விட்டதாலோ என்னவோ விறகுக் கட்டு கூட, தலையில் வைத்த பூவாய் கணக்கவில்லை. 

கை வீசி வேகமாய் நடை போட்டவள், காற்றாய் வீடுவந்து சேர்ந்தாள். விறகுக்கட்டை கீழே போடும்‌ முன் கேட்டது,

“அம்மா… இன்னைக்கி என்ன கொழம்பு?” என்பது தான். மாறாத அக்காவின் கேள்வியில் அன்னக்கொடி சிரிக்க, 

“போடீ” என்றவள், இன்று கேட்டது அவளுக்காக இல்லை. 

பொன்னுத்தாயி, “வரகரிசி இடிச்சு போட்டேன் அழகு!”‌ என‌ மகளுக்கு பதில் சொல்ல,

“என்னம்மா நீ. இன்னைக்குனு இத ஆக்கி வச்சுருக்க. அரிசிச்சோறு ஆக்கிருக்கலாம்ல” சிறுபிள்ளை போல் கேட்ட மகளை ஆச்சர்யமாகப் பார்த்தாள் பொன்னுத்தாயி. ஒரு நாளும் ஆசைப்பட்டு இதுதான் வேணும் என்று கேட்டதில்லை. வயிற்றுப் பசிக்கு சாப்பிட்டவள். நாக்கு ருசிக்கு என்றுமே சாப்பிட்டதில்லை. மகள் ஆசையாக அரிசிச் சோறு கேட்க ஆற்றுப் போனது பொன்னுத்தாயிக்கு. இன்னைக்குனு பாத்து வரகு சோறும், புளி ரசமும் என்ற வெசனம் பெத்தவளுக்கு.

ஒரு வேளை வீட்டிற்கு‌ சித்தன்‌ வந்தால் சாப்பிடச் சொல்ல வேண்டுமே.‌ அரிசிச்சோறில்லையே என்ற தவிப்பு மகளுக்கு. வரகு, தினை, கம்பு, சோளமெல்லாம் ஏழைகள் சாப்பாடாயிற்றே.

“இப்ப என்ன அழகு? நாளைக்கி ஆக்கி வைக்கிறேன்டீ! வரகு இடிச்சு எடுக்கங்குள்ள நாக்கு தள்ளிப்போச்சுடீ.” பொன்னுத்தாயி அலுத்துக் கொள்ள, அம்மாவின் சிரமம் கண்முன் வந்தது. இந்த வயதில் இடித்து, புடைத்து எடுப்பதென்பது சாதாரணமா? அதுவும் வரகரிசியை.‌

“ஏம்மா! அதெல்லாம் நான் வீட்ல இருக்குற அன்னைக்கி ஆக்க வேண்டியதுதான. வரகு இடிச்சவ குதிச்சுறுவா, புடைச்சவ வெறச்சுக்குவான்னு சும்மாவா சொல்லி வச்சாங்க.” என அம்மாவை கடிந்து கொண்டாள். 

“நான் குத்தியெடுக்க, தங்கச்சி பொடச்சு தந்தாடீ.” அன்னக்கொடியும் ஒத்தாசை செய்தாள் என்று சொல்ல,

“அது மட்டும் லேசுப்பட்ட வேலையா? பிள்ளக்காரிய வேலை வாங்கியிருக்க?” என கேட்டுக் கொண்டிருக்க, அதற்குள் இவள் பின்னே ஆடுகளை‌ ஓட்டிக்கொண்டு ஒச்சாயியும் வந்து சேர்ந்தாள். இருவரும்‌ சேர்ந்து ஆடுகளை‌ பட்டியில் அடைத்துவிட்டு, அழகி குளிக்கப் போனாள்.

கடுகளவு இருக்கும் வரகுக்கு, நெல்லு மாதிரி ஒரு அடுக்கு தோல் கிடையாது. ஏழு அடுக்குத் தோல். அவ்வளவு சீக்கிரம் உமி பிரிந்து வராது. உரலில் குத்தி, முறத்தில் புடைத்து அரிசி தனியாக, தவிடு தனியாக எடுக்கங்குள்ள, ஈண்டுக்கும் குத்துறவங்களுக்கும், புடைக்கறவங்களுக்கும். பச்ச உடம்புக்காரி என்பதால் பொன்னுத்தாயி இடித்துத்தர, அன்னக்கொடி புடைத்து மட்டும்  கொடுத்தாள்.

குளித்து வந்தவளுக்கு தட்டில் சோற்றைப் போட்டு, ரசத்தை ஊற்றிவைக்க, சித்தன் வந்துவிட்டால் என்ன செய்வதென்ற யோசனையோடு‌ இருந்தவள், ஒச்சாயியை சாப்பிடச் சொன்னாள். 

“நீ சாப்பிடு அழகு! அவளுக்கும்‌ போடுறேன்!” மகளின் பசியறிந்து இன்னொரு தட்டை எடுக்க,

“பசிக்கலம்மா, கொஞ்ச நேரம் போகட்டும்மா” என்றவள் மனம்‌ வெகுவாக எதிர்‌பார்த்தது‌ சித்தனை. வாசல் ஏறும்முன் என்ன குழம்பென கேட்ட அக்கா, பசியில்லை என்றதும் ஆச்சர்யமாகப் பார்த்தாள் அன்னக்கொடி. உழைத்து வருபவள் பசி அவளுக்குத் தெரியாதா‌ என்ன? ஒச்சாயி சாப்பிட்டு கிளம்பிவிட்டாள்.

வழக்கம் போல் திண்ணையில் ஓரம் ஒரு காலை தொங்கப் போட்டு, ஒரு காலை குத்துக்காலிட்டு… முழங்காலைக்கட்டி விரல்களை கோர்த்துப்பிடித்து அமர்ந்தவள் கண்கள் வாசலையே எதிர்நோக்கியிருக்க, இடி இடித்து மின்னல் வெட்ட, இனி எங்கே வரப்போகிறான் என்ற நிராசை கண்களில் கண்ணீராய் நிறைந்தது. இதென்ன புதிதாக என நினைத்தவளுக்கு சட்டென முகம் வாடிவிட்டது. 

ஊசியாக தூறல் விழ ஆரம்பிக்க, வெறுமையோடு எழப்போனவளை ஏமாற்றாமல், சொன்னசொல் மாறாமல் சித்தனும்‌ அவசரமாக மழையை முந்திக் கொண்டு வாசல் மிதிக்க, துணைக்கு வந்தது போல் மழை அவனோடு பின்னாலே வந்துவிட்டது.‌

சட்டென எழுந்தவள், பரபரப்பாக பாயெடுத்து திண்ணையில் இரண்டாக மடித்துப் போட்டாள் உட்கார. 

பொன்னுத்தாயி வயதுக்கும் மீறி ஓடிவந்து வரவேற்று‌ நலம் விசாரித்தார். 

அவன் அன்னகொடியையும், பிள்ளைகளையும் நலம் விசாரித்தான். பிள்ளைகளுக்கு பாக்கெட்டிலிருந்து சாக்லேட் எடுத்துக் கொடுத்தான். அதுவே சொன்னது அவன் வீட்டிற்கு வரும் எண்ணத்தில் தான் வந்திருக்கிறான் என்பதை. ஏனெனில் இந்த சாக்லேட் உள்ளூர் பெட்டிக்கடையில் கிடைக்காது. 

அந்தியும் மயங்கிவிட்டது. ஊசித்தூறலாய் ஆரம்பித்த மழை பெருமழையாய் பிடித்துக் கொண்டது. அவன் நனையாமல் உட்கார‌ இடம் தேடுவதே பெரும்பாடாகிப் போனது‌ அழகிக்கு. 

அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. செருப்பைப் கழட்டியவன் திண்ணையில் அமர்ந்து கொண்டான். செருப்பை ஈரம் படாமல் ஓரமாக எடுத்து வைத்தாள்.

உள்ளே அழைக்கவும் முடியவில்லை. உள்ளே‌ பிள்ளைக்கு தொட்டிலும், பிள்ளைக்காரியும்‌ இருக்க, வலப்பக்க வெளித் திண்ணையில், மழை காலம் என்பதால் நனையாமலிருக்க, காய்ந்த விறகு வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இடப்பக்க திண்ணையில் சற்றே உள்ளே தள்ளி சாரலடிக்காமல், விரித்த பாயில் சித்தன் உட்கார்ந்திருக்க, வேறு வழியில்லாமல் அவனுக்கு வலப்பக்கமாக இடைவெளிவிட்டு திண்ணை ஓரத்தில் அழகியும் மனம் ஒட்டியும் உடல் விலகியும் அமர்ந்திருந்தனர்.‌ மழை‌பெய்ய மின்சாரமும் தடைபட்டு ஒரு ஒளி விளக்கும் மூர்ச்சையானது. பொன்னுத்தாயி அடுப்பை பற்ற வைத்தார்‌ சுக்கு காபி போட. 

உள்ளிருந்து வந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான். பாதி வெளிச்சமாகவும், பாதி இருளாகவும் ஓவியமாய் அவள் அமர்ந்திருந்த தோற்றம், வயதிற்கு வந்த அன்று அவள் உட்கார்ந்திருந்ததை நினைவூட்ட, சித்தனை எப்பவும் போல் சித்தம் கலங்கச் செய்தது அழகியின் பக்கவாட்டுத் தோற்றம். சற்றுமுன் குளித்து வந்தவள்‌ மீதிருந்து வந்த பசுமஞ்சள் வாசம்வேறு மூளைக்குள்‌ குறுகுறுத்தது. பழைய மாதிரியே வலக்காலை தொங்கவிட்டு, இடக்காலை மடக்கிவைத்து முழங்காலை கை கோர்த்துப்பிடித்து அமர்ந்திருந்தாள். ஆனால் இப்பொழுது விரல்களின் பிடி இறுகியிருந்தது. இனம்புரிய படபடப்பு‌ உள்ளுக்குள். அவன் பார்வை‌ தன்னை வருடுவது தெரிய முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது‌. 

சட்டென காற்று சுழற்றியடிக்க, சுழற்றியடித்த காற்று இருவர் மீதும் சாரலை அள்ளி வீசிச்செல்ல, வீசிச்சென்ற சாரலில் குளிரெடுப்பதற்குப் பதிலாக அனல் மூட்டிச் சென்றது இருவருக்குள்ளும். மார்கழி மாதத்தில் அதிகாலைப்பனியில், நெருப்பு மூட்டி கூதக்காய்வது போல் இதமான சூடு பரவ, கூரையில் சரம் கோர்த்து விழுந்த மழையை இருவரும் ஒரு சேர உள்ளங்கை நீட்டி ஏந்திப் பிடிக்க, அதுவும் தோற்றுப் போனது அவர்களை குளிர்விக்க எடுத்த முயற்சியில். 

‘மழை நிற்கவே கூடாது சாமி‌!’ என்ற வேண்டுதல் தான் இருவருக்குள்ளும் ஒன்று போல். 

இதே திண்ணையில் அவனோடு‌ கனவோடு‌ம், கற்பனையோடும், கண்ணீரோடும் வாழ்ந்த காலங்கள் இப்பொழுது நிஜத்தில் கண்முன். இந்த கணம் மட்டும் போதுமென்று‌ ஒரு மனமும், இப்படியே‌ காலம் முழுமைக்கும் வேண்டுமே‌ என மற்றொரு மனமும்‌ முரண்கவிதை படித்தது பாதகத்தி நெஞ்சுக்குள். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தாம். ஆனால் காதல் கொண்ட மனதிற்கு போதுமென்பது எதுவரை?

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

அட எண்ணம் மீறுது 

வண்ணம் மாறுது கண்ணோரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே

மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே

மழை செய்யும் கோளாறு 

கொதிக்குதே பாலாறு

இது காதல் ஆசைக்கும் 

காமன் பூஜைக்கும் நேரமா

இந்த ஜோடி வண்டுகள் 

கோடு தாண்டிடுமா

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…

மழைக்கு சூடாக அவள் கையால் வாங்கிய சுக்கு காபியை, பருகியவன் பார்வை காபியை மட்டும் பருகவில்லை என்பது சர்வ நிச்சயம். 

*****

“போங்கடீ பொசகெட்ட கழுதைங்களா! இதுக்கு தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிட்டுப் போகணும்கறது. வெக்கங்கெட்ட பேச்சு பேசிட்டு திரியறாளுக.” வீரம்மா வாய்க்கு வந்ததை மானவாரியாக அள்ளிவீச, சுழட்டிப்போட்ட சோழியாய் கலகலத்து கண்களில் நீர்வர சிரித்த அழகியை கண்ணெடுக்காமல் பார்த்து வைத்தாள் சுமதி.

“அத்தாச்சி, சிரிக்கறப்ப நீ ரொம்ப அழகா இருக்க!” மனதில் பட்டதை பாசாங்கில்லாமல் சிலாகித்து சொல்ல, சற்றே வெட்கப்பட்டு இதழ் விரிந்த புன்னகையில், அழகுக்கு அழகு சேர்த்தது அழகியின் சிவந்த வதனம்.

இத்தனை குறும்பு, விளையாட்டுப்பேச்சு, சிரிப்பென சிறிது நாட்களாக சுமதி பார்க்கும் அழகி‌ முற்றிலும்‌ புதிது. தன் கூட்டைவிட்டு அவளே அறியாமல் வெளி‌வந்திருந்தாள் அழகி. அவளோடு சேர்ந்து சுற்றியிருந்தவர்களும் சிரிக்க,

“அத்தே! விடுகதைக்கு விடை தெரியலைனா தெரியலைனு சொல்லு. அதவிட்டுட்டு தேவையில்லாம பேசாதே!” சிரித்துக் கொண்டே விரல் நீட்டிப்பேச,

“போடீ பொசகெட்டவளே! நீ சொன்ன கதையெலல்லாம் விடுவிக்க முடியாது. எந்திரிச்சுப் போங்கடீ அங்கிட்டு!” என அடிக்காத குறையாக விரட்ட மீண்டும் உண்டியல் குலுக்கலாய் கலகலத்தது இடம்.

மோட்டார் அறையின் முன் புறம், தண்ணீர்‌த்தொட்டிக்கு இந்தப்பக்கமாக மர நிழலில் அமர்ந்து பெண்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். இன்று வேலை எதுவும் இல்லை. உழுது, பாத்தி பிரித்த வயலுக்கு மட்டும் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. நாளைதான் நாற்று‌நடவு.‌ வேலையில்லை என்றதும் விறகுகளை வெட்டி எடுத்துச் செல்ல சில பெண்கள் மட்டும் வந்திருந்தனர். விறகுகளை வெட்டி, கட்டி வைத்துவிட்டு, பம்ப் செட்டில் மோட்டார் ஓட, கைகால் கழுவிவிட்டு, வேப்ப மரநிழலில் ஓய்ந்து உட்கார்ந்திருந்தனர். சிலுசிலுவென வேப்ப மர காற்றுக்கு கண்கள் சுழற்றிவர, சிலர் தலைக்கு கைமடக்கி வைத்து தலை சாய்த்து, கண்ணசந்திருந்தனர். 

அழகி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்திருந்தாள். 

பெண்களின் பேச்சு கேலி, கிண்டல், ஊர் புறணி‌ என பலவாக்கில் சுற்றி விடுகதை போடுவதில் வந்து நின்றது.

“அத்தே! எப்படி கதை போட்டாலும் விடுவிப்பேனு சொன்னியா இல்லியா? பேச்ச மாத்தாதே! கதைக்கு விளக்கம் சொல்லாம இங்கிருந்து நகரக்கூடாது சொல்லிட்டே!” ஜம்பமாய் இவளும் பதிலுக்கு மிரட்ட,

“என்னக்கா… எதுக்கு இப்ப அவகிட்ட கத்துற?” என கேட்டுக் கொண்டே இன்னொருத்தியும் வந்து இவர்களோடு‌ சேர்ந்து கொண்டாள்.

“அத்தே! நீயே நியாயத்தச் சொல்லு! விடுகதை போட்டா விடுவிக்கணுமா இல்லியா?” வந்தவளை திடீர் நாட்டாமையாக்கி மத்தியஸ்த்தம் பண்ண அழைத்தாள் அழகி.

“ஆமா… அப்படியென்னாங்கடீ வீரம்மா அக்காவாலேயே விடுவிக்க முடியாத கதை‌யப்போட்டீங்க!“ இருகைசேர்த்து குவித்து, பம்ப் செட்டில் ஊற்றிய தண்ணீரை வாய்வைத்து குடித்துவிட்டு கேட்க, மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் அழகி.

சுமதியின் பார்வை தூரத்தில் பதிய, பதறிப்போய், “அத்தாச்சி!” என அடித்தொண்டையில் அழைத்து, தொடையில் சுரண்டினாள். 

விடுகதை போடும் சுவாரஸ்யத்தில் இருந்தவளோ அதை கண்டுகொள்ளாமல், “சும்மா இரு சுமதி! இந்த அத்தையாவது விடுவிக்குதானு பாப்போம்” என மீண்டும் தொடங்க,

“சித்தாண்ணே…” என வாய்க்குள்ளேயே எச்சரிக்க,

முருகேசனும், சுமதியும் அடிக்கடி தன்னை இப்படி ஏமாற்றுவது தெரிந்து அசால்ட்டாக விட்டுவிட்டாள். 

“அது வந்து அத்தேஏஏஏ!” என ராகம் போட்டு ஆரம்பிக்க,

“அத்தாச்சி… வேண்டாம்!” என சுமதி மீண்டும், வாய்க்குள் முணங்க, அழகி சட்டை செய்யாமல் மும்முரமாக சொல்ல ஆரம்பித்துவிட்டாள். 

“ரெண்டு உருவி உருவி…”

“அய்யோ அத்தாச்சி!”

“ரெண்டு சூப்பு சூப்பி” (சபை நாகரீகம் கருதி வார்த்தையின் பச்சை வண்ணம் மாற்றப்பட்டுள்ளது)

“நான் இந்த ஆட்டைக்கு வரல” என எழுந்து ஓடப்பார்த்தவளை, கையை இழுத்துப் பிடித்துக் கொண்டே, “உள்ளவிட்டா ஒணக்கையா இருக்கும். அதென்ன?” என கேட்டு முடித்து வாயைக்கூட மூடவில்லை அழகி.

“எழவெடுத்த சிரிக்கிகளா? பேங்கடீ அங்கிட்டு!‌ எதையாவது எடுத்து சாத்திறப்போறே. கதை போடுறாளுகளாம் கதை. கொஞ்சங்கூட கூச்ச நாச்சமில்லாம. வெக்கங்கெட்ட சிரிக்கிக. அடக்க ஆளில்லாம தெனவெடுத்துப் போச்சுடீ உங்களுக்கெல்லாம்” என வந்தவளும், வாய்க்கு வந்ததை திட்டினாலும் துளியும் கோபமில்லை. முகம்‌பூரா சிரிப்பே படர்ந்திருந்தது. 

“இந்தா பாருத்தே! நீ நெனைக்கிற மாதிரி எதுவுமில்ல. நல்லா யோசிச்சு விடையச் சொல்லு!” கை நீட்டிப் பேச,

“நான் என்னத்த நெனச்சேன்னு ஒனக்கு எப்புர்றீ தெரியும்? குச்சி ஐஸாடீ!” என்றாள் வந்தவளும்.‌ மீண்டும் கொல்லென சிரிப்பு பெண்கள் மத்தியில். 

“அதுக்கு அவ கேட்ட விடுகதையே தேவலடீ” என வீரம்மா நொடிக்க, கலகலவென வாய்விட்டு சிரித்தாள் அழகி. 

இடுக்கியில் மாட்டிய எலி போல் முழித்த சுமதி, எழுந்து செல்ல முயல, “எங்க போற சுமதி? விடைய சொல்லிட்டு போ!” என கையைப் பிடித்து இழுத்தாள்.

“எனக்கு தெரியாது அத்தாச்சி. நீயே சொல்லிக்கோ!” என கையைப் பிடிங்கிக் கொண்டு ஓடியே போனாள். 

“இவ எதுக்கு பேயக்கண்டதாட்டம் இந்த ஓட்டம் ஓடுறா? அழகி நீயே சொல்லுடீ! எங்களுக்கும் தெரியல!” மற்றவர்களும் கைவிரிக்க,

“நல்லா யோசிச்சு நாளைக்கு வந்து சொல்லுங்க. யாருகிட்ட வேணும்னாலும் கேட்டுக்கோங்க. தெரியலைனா நான் சொல்றேன்” 

“ஆமாடீ… இதப்போயி என்னான்னு யாருகிட்ட கேக்க…” என அலுத்துக் கொண்டவள், 

“கெளம்பணும்டீ. போயி‌தான் கஞ்சி காச்சணும்” என எழுந்தவர்கள், பின்புறம் தட்டிக் கொண்டனர்.  

அழகியும் அவர்களோடு எழுந்து நிற்க, கருவிழி இரண்டும் தெரித்து விழுமளவிற்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்து கொண்டது.

“ஆத்தாடீ!” என அலறிய மனம், முகத்தை புதைத்துக் கொள்ள எங்காவது இடம் கிடைக்குமா என மானசீகமாய் இடம் தேடியது. அவள் நேரத்திற்கு முட்டிக்கொள்ள பக்கத்தில் ஒரு வேப்பமரம் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒன்றும் சிக்கவில்லை. இப்படியே‌ கிணற்றுக்குள் குதித்துவிடலாமா என்று கூட யோசனை ஓடியது. 

அவள் எதிரே கைகளைக் கட்டிக் கொண்டு இதழில் நெழிந்த குறுஞ்சிரிப்போடு தொட்டிக்கு அந்தப்பக்கம் சித்தன் நின்று கொண்டிருந்தான். கண்களில் மிதமிஞ்சிய குறும்புத்தனம். இன்னொரு முறை சொல்லேன் என்பதுபோல்.

“அச்சச்சோ… சித்தா தம்பி! எல்லாம் இவளால” ஆறஅமர பேசிக்கொண்டிருந்த பெண்கள் எல்லாம் அரக்கப்பறக்க எழுந்து தலைதெறிக்க ஓடிப்போக, நகர முடியாமல் சித்தனின் எதிரே நின்றவள், அவன் புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க, வெட்கம் பிடிங்கித் தின்றது.

‘ஒனக்கு பகல்ல பக்கம் பாத்துப் பேசணும்கற கூறுவாறே இல்லடீ அழகி. கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாம கேட்டு வச்சுருக்க. மானமே போச்சே’ என உள் மனம் குடம் குடமாக கழுவி ஊற்றியது. 

‘அடிச்சாவது சொல்லியிருக்கக் கூடாதா சுமதி.’ சாடை காட்டியவளை திட்டிக்கொண்டாள்‌ மனதிற்குள். 

வேகமாகத் திரும்பியவளை, “அழகி!” என்றவன் அழைப்பு அப்படியே ஆணியடித்தாற்போல் நிறுத்த, அவன் முகத்தை திரும்பிப் பார்க்க முடியாமல், அசடு வழிய அப்படியே  நின்றாள்.

“திரும்பு!” என்றான். அவளால் முடிந்தால் தானே? எப்படி அவன் முகத்தில் முழிப்பது. பேசியவற்றை மனம் மீண்டும் ஒருமுறை ஓட்டிப்பார்க்க அய்யோ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டது.

‘சரி… ஆனது ஆச்சு. முழுக்க நனஞ்சாச்சு. எதுக்கு முக்காடு’ என, முடிந்தளவிற்கு முகத்தை சாதாரணமாக வைக்க முயற்சி‌ செய்து கொண்டே திரும்பி நின்றாள். அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவன் தன்னைப் பார்த்து, உதடுமடித்து சிரிப்பை அடக்குவது நன்றாகத் தெரிந்தது. அவன் பார்வை‌யில் உள்ளம்‌ குறுகுறுத்தது.

அவனது கை தன்னை நோக்கிவருவது தெரிய, சட்டென உடல் விரைக்க நிமிர்ந்து பார்த்தாள். அவளது காதோரமாக கையைக் கொண்டு போக, விரல்கள் மட்டும் பட்டும்படாமல் காதின் நுனி தீண்டி விட, இதயம் தடதடக்க சட்டென தலையை பின்னால் இழுத்தாள். உடனடி‌ காய்ச்சல் கண்டவள் போல் உடல் கணகணத்துவிட்டது ஒரு நொடியில்.

“அசையாம நில்லு!” என்ற கட்டளைக்கு தன்னையும் மீறி‌ அடிபணிந்து நிற்க, அழகி காதோரம் சொருகி இருந்ததை எடுத்து கையில் கொடுத்துவிட்டு, அவளை விலகி வரப்பில் ஏறி‌ நடந்து சென்றுவிட்டான். வேர் பிடித்தவள் போல் அசையாமல் நின்றவள், மோட்டார் தண்ணீர் திவலைகள் தெறித்து முகத்தில் விழ, சட்டென சுயம்பெற்று தலையை உலுக்கிக் கொண்டாள்.

அவன் கையில் கொடுத்ததைப் பார்த்தவள், இழுத்துப்பிடித்து வைத்திருந்த பெருமூச்சை, காற்றைப்பிடிங்கி விட்ட சைக்கிள் ட்யூப் போல் “புஷ்ஷென” வெளியேற்றினாள்.‌ தன் கையிலிருந்ததைப் பார்த்தவள், சித்தன் விடுகதைக்கான விடையை சொல்லாமல் சொல்லிச்செல்ல, தலையில் தட்டி தன்னால்  சிரித்துக் கொண்டவள் திரும்பிப் பார்த்தாள்.

வரப்பில் நடந்து சென்றவன் முகத்திலும் புன்னகை மந்தகாசமாய் அப்பிக் கிடந்தது.

2 thoughts on “பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top