ராட்டினத்தில் சுற்றி இறக்கிவிட்டதைப் போல் தலை தட்டாமலை சுற்றியது வீட்டை இல்லையில்லை அந்த பங்களாவை அண்ணார்ந்து பார்த்தவளுக்கு. வீட்டிற்குள் இண்டு இடுக்கெல்லாம் பணச்செழுமை.
இரயில் நிலையம் வந்திறங்கி வீடு வரும் வரை எல்லாமே பிரமிப்பு தான் வந்தவர்களுக்கும் அழகிக்கும். அதிகபட்சம் மாட்டுவண்டியும், சைக்கிளும் தான் அவ(ர்க)ள் கண்ட இருச்கர வாகனம்.
இங்கு வந்து இறங்கியதிலிருந்து அவள் கண்டது மனிதர்கள் தலைக்கிணையாக சாலை அடைத்துச் செல்லும் வாகன நெரிசலும், வாமனனாய் வானளந்த கட்டிடங்களும் தான். எங்கும் அவசரம். எதிலும் அவசரம்போல் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. இவ்வளவு காலையில இம்பூட்டு அவசரமா எல்லாரும் எங்க ஓடுறாங்க என்றுதான் தோன்றியது.
கிராமத்திலும் காலை எழுந்து வீட்டு வேலை முடித்து ஆணும் பெண்ணுமாக காட்டு வேலைக்குச் செல்வார்கள் தான். யாரும் சோம்பியிருப்பவர்கள் கிடையாது. கதிரவனுக்கு முன் எழுந்து பின் துயில் கொள்பவர்கள் தான். ஆனால் அதில் ஒரு ஆசுவாசமிருக்கும். அமைதியிருக்கும். நிம்மதியிருக்கும். ஆனால் இங்கு எல்லாமே அறக்கப்பறக்க அவசரகெதியாக இருந்தது. சாலையில் ஒருபுறமிருந்து மறுபுறம் கடப்பதற்கே ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ரயில்வண்டி ஓட்டினர் நடு ரோட்டில் அரைமணி நேரமாக.
வீட்டிற்கு வந்து பார்த்தாலே தெரிந்தது வசதி படைத்தவர்கள் இருக்கும் பகுதியென. எல்லாமே உனக்கும் எனக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை எனச்சொல்லிக் கொள்ளும் தனித்தனி பங்களா. வீட்டுக்கொரு மரம் இருக்கோ இல்லையோ, வீட்டுக்கு ஒரு கார் கட்டாயமாக்கப்பட்டு நின்றது. துணைக்கு ஒரு நாயும்கூட.
நெடிய நீண்ட வருடங்கள் கழித்து தன் சொந்த ஊர் மக்களைப் பார்த்த சந்தோஷமும், பூரிப்பும் ஆவுடை முகத்தில். முகம்கொள்ளா சிரிப்பும், சந்தோஷமுமாக வாய்நிறைய வரவேற்றார். பெரியவர்களை அடையாளம் தெரிந்தது. சித்தன் வயதொத்தவர்களை யார் வீட்டுப் பிள்ளைகளென கேட்டுத்தெரிந்து கொண்டனர். குசலவிசாரிப்புகள் சற்று நேரம் எடுத்துக் கொண்டது. தேங்காய், புளி, மாங்காய், மிளகாய் என அவரவர் தோட்டத்தில் விளைந்ததை எடுத்து வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் வேல்ச்சாமி. இவர்கள் வந்த பத்து நிமிடத்திற்கெல்லாம் பத்தாயிரம் முறை தற்பெருமையை தம்பட்டம் அடித்திருப்பார். எங்கெங்கு எவ்வளவு சொத்து என வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்பிப்பது போல் சொல்லிக்கொண்டிருந்தார். ஊரில் போய் பெருமையை பரப்புவார்களே.
பட்டும், நகையுமாக பணச்செழிப்பு தோற்றத்தில் தெரிந்தாலும் பேச்சு அதே வெள்ளந்திப் பேச்சுதான் ஆவுடையிடம். தங்கை கல்யாணத்திற்கு வந்திருந்த புனிதாவும்… எல்லாரையும் வரவேற்றவள் அழகியை ஓடிவந்து கட்டிக் கொண்டாள். அழகியைப் பார்த்தவுடன் கண்கள் கலங்கியது அவளுக்கு.
“அழகி… அப்படியே இருக்கடீ! அதே சிரிப்பு. கொஞ்சம் வளந்திருக்க… ஆள் மட்டும் மாறவேயில்ல. கொஞ்சம் கருத்திட்ட.” படபடவென பேசியவள் பிடித்த கையை விடவேயில்லை.
கிள்ளிப் பிடிக்க சதையில்லாத புனிதா இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி கொழுக் மொழுக் புனிதாவாக மாறியிருந்தாள்.
“எத்தனை பிள்ளைக அத்தாச்சி?” என்றாள் மலர்ந்த சிரிப்போடு.
“ரெண்டுடீ… பெரியவ வயசுக்கே வந்துட்டா. ரெண்டவதா பையன். ஸ்கூல் படிக்கிறான். இன்னும் எந்திரிக்கல” என்றவளுக்கு லேசாக வெட்கமும் கூட.
“நம்ம ஆளுகல்லாம் வந்த பின்னாடிதான் கல்யாண வீடு மாதிரி கலகலன்னு இருக்கு! எப்படியிருக்கா… பொன்னுத்தாயி?” என தனது தோழியை விசாரித்த ஆவுடையின் கண்களும் கலங்கியது.
“அம்மா நல்லாருக்குத்தை. சித்தா ஊருக்கு வந்ததுலருந்து அம்மாவுக்கு வாய் ஓயாம உங்க பேச்சுதான். நீங்களும் ஊருக்கு வந்திருக்கலாம்ல?”
“எங்க… நானும் வர்றேனுதான் சொன்னேன். எங்க போயி தங்கறதுன்னு அழச்சுட்டு போக மாட்டேனுட்டான். வீடுகட்டிட்டுதான் கூட்டிப்போவானாம்.” சலிப்பாக மகன் மீது சடைத்துக் கொண்டார்.
“ஏன்… ஊருக்குள்ள வீடே இல்லியா?” இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அதற்குள் புனிதா டீ, காஃபி என வந்தவர்களுக்கு எடுத்து வர, அழகியும் இயல்பாக எழுந்து சென்று அவளிடம் வாங்கி மற்றவர்களுக்கும் கொடுத்தாள். தோட்டக்காரனை அழைத்த ஆவுடை, ஆண்களை எல்லாம் பின்னால் இருந்த அவுட்ஹவுசிற்கு குளிக்க அழைத்துப் போகச் சொன்னார்.
பேச்சோடு பேச்சாக வந்ததிலிருந்து அழகியின் கண்கள் ஒருத்தனை மட்டும் தான் தேடிக்கொண்டிருந்தது. வந்ததிலிருந்து கண்ணில் தட்டுப்படவில்லை. இருக்கும் சுவடும் தெரியவில்லை. வீட்டில் இருந்திருந்தால் இவ்வளவு நேரம் வெளியே வராமல் இருந்திருக்க மாட்டானே? வீட்டை பிள்ளையார் மாதிரி இருந்த இடத்திலிருந்தே பார்வை சுற்றிவர,
அப்பொழுது மேலிருக்கும் ஒரு அறைக்கதவு திறக்கப்பட, ஆர்வமாக பார்வையை திருப்பினாள். பொசுக்கென போயிற்று.
இறங்கி வந்தவள், இரவு உடையில் இருக்க வேகமாக வந்த ஆவுடை, “சரண்யா… நம்ம ஊரு ஆளுகெல்லாம் வந்திருக்காங்க. இப்படியே வந்தா நல்லாருக்காது. சீக்கிரம் குளிச்சுட்டு சேலை மாத்திட்டுவா!” சத்தமில்லாமல் மகளை அதட்டினார்.
“போ… மம்மி. ஃபர்ஸ்ட் காஃபி. எதுனாலும் அப்பறம்தான். உன் பட்டிக்காட்டு கட்டுப்பெட்டியெல்லாம் மூட்டை கட்டிவைன்னு எத்தனை தடவை சொல்றது. நீதான் இன்னும் மாறவே மாட்டேங்குற. என்னையும் மாறச்சொல்லாத!” முகம் கூட கழுவாமல் இறங்கி கீழே வந்தவள், சோஃபாவைப் பார்க்க, அங்கே கிராமத்து ஆட்கள் ஆண்கள் மேலேயும், பெண்கள் ஜமுக்காளம் விரித்து கீழேயுமாக ஆக்கிரமித்திருக்க, அவர்களை மரியாதைக்காகவேணும் வரவேற்காமல் அலட்சியமாக சாப்பாடு மேஜை நோக்கி நகர்ந்துவிட்டாள். ஆண்கள் கண்டு கொள்ளவில்லை. பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இதுதான் கல்யாணப் பொண்ணா?” மெள்ள காது கடித்தாள் சுமதி.
“அப்படித்தான் போல” என்றாள் அழகி.
“ஏன், உனக்கு அடையாளம் தெரியாதா?”
“நானென்ன நேத்தா பாத்தேன். சின்னப் புள்ளையில பாத்தது. அப்ப அஞ்சு வயசு கூட இருக்காது.”
காஃபி குடித்துவிட்டு ஆண்கள் எல்லாம் பின்னால் அவுட் ஹவுசிற்கு குளிக்க சென்றுவிட்டனர். பெண்கள் மட்டும் இங்கே இருக்கட்டும் என ஆவுடை கூறிவிட்டார். அழகி, சுமதியோடு வந்திருந்த பெண்கள் மொத்தமாகவே ஐந்து பேர்தான்.
சரண்யா சாப்பாட்டு மேஜைக்கு சென்று அமர்ந்து கொண்டு “அம்மா… காஃபி” என குரல் கொடுக்க, அடுத்த இரண்டு நிமிடத்தில் காஃபி வந்தது.
சுமதி சிரிக்க, என்னவென அழகி திரும்பிப் பார்த்தாள்.
“நாளைக்கு கல்யாணத்த வச்சுக்கிட்டு கல்யாணப் பொண்ணு நம்ம ஊர்ல இப்படி எந்திருச்சு வந்தா எப்படியிருக்கும்னு நெனச்சுப் பாத்தேன். இருக்குற கெழடுகட்டையெல்லாம் என்ன புள்ள வளத்துருக்கேனு பெத்தவுகள ஆஞ்சுபுட மாட்டாங்க” என கேலி பேச, ஆண்கள் குடித்து வைத்துவிட்டுப்போன டம்ப்ளர்களை அடுக்களை எடுத்துச் சென்றாள் அழகி. வேலை பார்த்து பழகியவளுக்கு சும்மா இருக்க முடியவில்லை. கழுவி வைக்கப் போனவளை, ஆவுடை தடுக்க,
“விடுங்கத்தை… எல்லாம் நம்ம ஆளுங்க குடிச்சது தான” என கழுவி வைக்க,
“நான் போயி பொம்பளைங்க குளிக்க ரூமக்காமிச்சுட்டு வர்றேன் அழகு” என ஆவுடை சென்றுவிட, சரண்யாவும் உள்ளே வந்து டம்ப்ளரை போட்டுவிட்டு சென்றாள்.
வெளியே பேச்சு சத்தம் கேட்டது. குழாய் தண்ணீரை நிறுத்திவிட்டு காது கொடுத்து கேட்டாள். அவன் குரல் தான். பட்டாம்பூச்சியாய் உள்ளம் பரபரத்தது. ‘நேத்து சமஞ்சு இன்னைக்கு குச்சு கட்டியிருக்காக்கும். வயசுக்குத்தக்கன இரு.’ மனம் இடித்துரைக்க, வயதென்பது உடம்பிற்கு தானே. மனம் அப்படியேதானே நிற்கிறது.
“வாங்க… வாங்க…“ என அனைவரையும் வரவேற்றவன் பார்வை யாரையோ தேடியது.
“என்ன சாப்டீங்க?” என்றான்.
அனைவருக்கும் பொதுவாக, “காஃபிண்ணே” என சுமதி பதில் கொடுத்தாள்.
“வந்தவுங்க எல்லாம் எங்க?” என விசாரித்தான்.
“ஆம்பளைங்க எல்லாம் பின்னாடி குளிக்கப் போயிருக்காங்கண்ணே.” என, அதற்குள் ஆவுடை வந்து அவர்களை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார்.
அடுப்படி வந்தவன், சாப்பாட்டு மேஜைக்கருகிலிருந்த நாற்காலியை இழுத்து, திருப்பிப் போட்டு, இருபக்கமும் கால் போட்டு அமர்ந்தவன்,
“அக்கா… காஃபி” என குரல் கேட்டு வேகமாகத் திரும்பினாள் அழகி. அவளது கண்களில் ஆயிரம் மின்மினிப் பூச்சி ஒரு சேர மின்னியது. வந்ததிலிருந்து தேடிய ஆசைமுகம்.
அவனும் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவன் கண்கள் விரிந்த பாவனையிலேயே தெரிந்தது. பளிச்சென சிரித்தாள் பார்த்தவுடன்.
“வீடு கண்டுபிடிக்க ஈஸியா இருந்துச்சா?”
“அதான் விலாசம் விலாவரியா கொடுத்திருந்தியே. பஸ்ஸ விட்டு எறங்கி வழிகேட்டே வந்துட்டோம்.”
“மார்க்கெட் போனது லேட்டாயிருச்சு. இல்லைனா ஸ்டேஷனுக்கே வந்திருப்பேன். இங்கேயும் பாக்க ஆளில்ல” என வருத்தம் தெரிவித்தான்.
கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய் வாங்கி மண்டபத்திற்கு அனுப்பிவிட்டு வருகின்றான். மாலை எல்லாரும் மண்டபம் செல்ல வேண்டும். இன்று மாலை வரவேற்பு. மறுநாள் அதிகாலை முகூர்த்தம். இரவு சாப்பாடு அங்குதான். மதியமே சமையல் வேலை ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும். எனவே காலையிலேயே காய்கறிகளை வாங்கி அனுப்பிவிட்டு வருகிறான்.
“அதனாலென்ன? நம்ம ஊரு ஆம்பளைங்க அத்தனபேரு வந்தாங்களே? அதெல்லாம் பத்திரமா கொண்டுவந்து சேத்துட்டாங்க!” என்றவள்.
“எனக்கு இந்த காஃபி போட வராது” என்றாள் திரும்பிப் பார்த்து.
ஏனோ தன் ஊரில் அழைத்தது போல் சட்டென பெயர் சொல்ல வரவில்லை அவளுக்கு. வந்ததிலிருந்து ஏதோ ஒன்று ஒட்டவிடாமல் இடறியது. பங்களாவா? வேல்ச்சாமியின் பகட்டா? சரண்யா இவர்களைப் பார்த்த அலட்சியப் பார்வையா? எதுவென்று தெரியவில்லை.
மொத்தத்தில் இங்கிருப்பது தனக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்த, முதன் முதலாக தன் பெண்மையை உணரவைத்து தாவணி போடச்சொன்ன, அதே கேள்வியை நான் கேட்டா எனக்கு என்ன பதில் சொல்லியிருப்ப என அறியாவயதில் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்டு நின்ற ஆவாரம்பட்டி சித்தனில்லை. கோடீஸ்வரன் வேல்ச்சாமி மகன் சித்தநாதன் என்பது உச்சியிலடித்து யாரோ சொல்வது போலிருந்தது.
“நானே போட்டுக்கறேன்” என்றவன் எழுந்து வந்தான். கழுவி வைத்த டம்ப்ளரை எடுத்து, அதில் சர்க்கரையும், இன்ஸ்டன்ட் காஃபி தூளையும் போட்டவன், ஸ்டவ்வை பற்ற வைத்து, பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி பாலை ஊற்றினான். பாலைக் காய்ச்சி எடுத்தவன், இன்னொரு டம்பளர் ஊற்றி, நுரைவர ஆற்றி எடுத்துக் கொண்டு சேரில் அமர்ந்தான். அவன் காஃபி பேடுவதையே பார்த்தவள், “பரவாயில்லையே… அடுப்படி வேல நல்லா வருதே. கட்டிக்கப்போறவ கொடுத்து வச்சவதான்” என்றாள்.
“அப்படியா?” என அவளையே பார்த்தான். அவன் பார்வை ஏதோ செய்ய, பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
இவர்களை அழைத்துவர சித்தனே போவதாகத்தான் இருந்தது.
வேல்ச்சாமி தான் அவனை மார்க்கெட்டிற்கு அனுப்பிவைத்தார். அதெல்லாம் விசாரித்து வந்துவிடுவார்கள் என்று மகனிடம் சொல்லிவிட்டார்.
அவருக்கு மகன் அங்கு தோட்டம் வாங்கியதிலோ, ஊரார்க்கு அழைப்பு விடுத்ததிலோ துளியும் விருப்பமில்லை. ஊர் ஆட்களையும், சொந்தங்களையும் தேடுவதாக இருந்தால் புனிதா திருமணத்தின் பொழுதே தேடியிருப்பாரே.
ஏனோ ஊரின் மீது பிடிப்பு சுத்தமாக அற்றுப்போயிற்று. அதற்காக வந்தவர்களிடம் முகம் திருப்பவுமில்லை. நன்றாகவே வரவேற்றார். ஊரில் தன்னைப் பற்றி பெருமையாக பேசுவார்களே?
அதே வரட்டுக் கௌரவம் பார்க்கும் வெள்ளை வேட்டி வேல்ச்சாமிதான். வசதியில்லாத பொழுதே தன் நிலையிலிருந்து சற்றும் தளராதவர். இப்பொழுது கேட்கவும் வேண்டுமா? பெருமைக்காகவேணும் ஊர் மக்களை நன்றாக கவனித்துதான் அனுப்புவார். எந்தக் குறையும் வைக்கமாட்டார் என்பது மட்டும் நிச்சயம். அவரின் மறுபதிப்புதான் சரண்யா. அவளுக்கு விபரம் தெரிய குடும்ப பொருளாதாரம் நல்ல வளர்ச்சியில் இருந்தது. அவள் கூடவே அந்த பணக்காரக் திமிரும் வளர்ந்துவிட்டது என்பதைவிட வேல்ச்சாமியைப் பார்த்து வளர்த்துக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வாக்கப்பட்டுப் போகுமிடமும் பெரிய இடம்தான். புனிதாமாதிரி இடைத்தட்டுக் குடும்பம் கிடையாது.
எங்கு செல்வதெனத் தெரியாமல் இரயில் ஏறியவர்கள் கடைசியாக வந்திறங்கிய இடம் மெட்ராஸ் இரயில் நிலையம். யாரையும் தெரியாது.
கண்ணைக் கட்டி நடுக்காட்டில் விட்ட கதையாகத்தான் திக்கு தெரியாமல் நின்றனர்.
முதலில் நடைபாதையில்தான் வாசம். தாலியிலிருந்த தங்கத்தை விற்றுதான் பிளாட்ஃபார்மில் இட்லி கடை ஆரம்பித்தார் ஆவுடை.
அவர்களைப் போலவே பிழைப்பு தேடி வந்தவர்கள், அங்கே குடிசை போட்டிருந்தனர். அவர்கள் கட்டிட வேலைக்குச் சென்றனர். மொத்தமாக ஒரு இடத்தில் கூடிவிடுவர். எங்கு வேலையிருக்கிறதோ மேஸ்த்திரி வந்து அழைத்துச் செல்வார்.
உள்ளூரில்தான் கூலிக்குச் செல்ல வேல்ச்சாமிக்கு கௌரவம் குறுக்கே நின்றது. யாரென்று முகமறியா ஊரில் கௌரவத்தை முந்திக் கொண்டு ஐந்து வயதில் ஒன்றும், கல்யாண வயதில் ஒன்றுமாக இரண்டும் பெண்பிள்ளைகள் கண்முன் நிற்க, கௌரவத்தை தற்காலிகமாக தூக்கிப் போட்டார் என்பதை விட, அப்போதைக்கு கக்கத்தில் இடுக்கிய குடையாக மடக்கி வைத்தார். தேவைப்படும் பொழுது விரித்துக் கொள்ள.
ஜமீன் முறை ஒழிக்கப்பட்டாலும், அந்த கௌரவத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் தலை சாயும் வரை தலைப்பாகையோடே வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர்.
ஒரு வேளை அந்த வெட்டி கௌரவம்தான் அவர் இந்தளவிற்கு முன்னேற காரணமோ என்னவோ? வயிற்றுப் பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையென இருந்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க முடியாதோ என்னவோ? யார் கண்டது?
கட்டிட வேலைக்குச் செல்ல உடம்பும், மனமும் வளையவில்லை. மேஸ்த்திரியாக வேலைக்கு ஆள்பிடித்து விட்டார். கட்டிடவேலையின் சூட்சமத்தை விட, அதை எப்படி விற்று காசாக்குவதென்ற சூட்சமம் பிடிபடத் தொடங்கியது. ஏற்கனவே ஊரில் மாட்டுத்தரகு பார்த்தவர் தானே. அந்த வாய் ஜாலமோ, பிறவி ஜம்பமோ ஏதோ ஒன்று இங்கும் அவருக்கு கைகொடுத்தது. மாட்டுத் தரகை, வீட்டுத்தரகாக மாற்றிக் கொண்டார்.
மெட்ராசைச் சுற்றியிருந்த விளைநிலங்கள் எல்லாம் பிறந்த நாள் கேக் போல துண்டுபோட ஆரம்பித்த காலகட்டம். இவருக்கும் சுக்கிரன் உச்சிக்கு வந்த நேரம்.
அன்றைக்கு நில உரிமையாளர்களிடம் சிறு தொகை முன்பணம் கொடுத்து, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கி வைத்துக் கொண்டு, அப்படியே பலமடங்கு லாபம் வைத்து இடத்தை மாற்றிவிடுவார். (இன்று அது முடியாது. அதற்கே பல சட்டதிட்டங்கள் வந்துவிட்டது.) மளமளவென கையில் காசு சேர்ந்தது.
சேர்ந்த காசை இறுக்கிப்பிடித்ததோடில்லாமல், அதை பெருக்கும் வழியும் தெரிந்திருந்தது. காசைப் போட்டு காசெடுக்கும் வித்தை கற்றார்.
அப்பொழுது அவர்கள் குடியிருந்தது வடபழனி ஏரியா. அங்கேயே தனக்கும் ஒரு இடத்தை மலிவாக வாங்கினார். புறாக்கூண்டு போல மேலும் கீழுமென பத்து வரிசை வீடுகளைக்கட்டி வாடகைக்கு விட்டார். இவர்களும் அதில்தான் குடியிருந்தனர்.
அடுத்து பில்டிங் கான்ட்ராக்ட் எடுத்தார். வேலன் ரியல் எஸ்டேட் என அலுவலகம் போட்டு உட்கார்ந்து கொண்டார். இப்பொழுது அவரின் கீழ் பல தரகர்கள் அவரது கன்ஸ்ட்ரக்ஷன் வீடுகளை விற்றுத்தர.
வசதி பெருகப்பெருக இப்பொழுது இருக்கும் வளசரவாக்கம் பகுதியில் இடம் வாங்கி பெரியபங்களா கட்டிக் கொண்டு குடிபெயர்ந்தனர். அவருக்கு தெரியும். பின்னொரு நாளில் இங்கு இடம் கிடைப்பதே அரிதென்று.
சித்தன் ஊரில் தோட்டம் வாங்கியதில் அவருக்கு விருப்பமில்லை. அவரைப் பொறுத்தவரை மெட்ராஸ்தான் அவரை வாழவைத்த ஊர்.
அந்த ஊரில் என்ன இருக்கிறது. அங்கிருந்தவரை கஷ்ட்டமும், நஷ்ட்டமும் தான். இறுதியில் உயிரிழப்பும், மானம் போனதும்தான் மிச்சம். ஒரே மகனின் வாழ்க்கையும் போயிற்று. அதனாலே அவருக்கு ஊரின் மீதிருந்த பிடிப்பும் அற்றுப் போயிற்று.
சம்பாதித்ததை பொட்டல் காட்டில் போடவேண்டுமா என்ற எண்ணம். அதையே இங்கு போட்டால் பலமடங்கு லாபம் பார்க்கலாமே என எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். எனக்கு விவசாயம்தான் தெரியும். அதைத்தவிர வேறு தெரியாதென பிடிவாதமாக தோட்டத்தை வாங்கினான்.
மகனின் ஆசைக்கு அவரால் குறுக்கே நிற்கவும் முடியவில்லை.
ஏனோ சித்தனுக்கு இங்கு மனம் ஒட்டவில்லை. தன்னுடைய ஊர் என்றாலே ஆவாரம்பட்டிதான் நினைவு வந்தது. வேல்ச்சாமியோடு சேர்ந்து தொழிலை கவனிக்க ஆரம்பித்தான் தான். அதன் சூட்சமம் அவரளவிற்கு இவனுக்கு எட்டவில்லை. அதற்கு வாய் சாமர்த்தியம் வேண்டும். நரியை பரியாக்கும் சூட்சமம் தெரிய வேண்டும். மொத்தத்தில் வெள்ளை சிரிப்பு சிரிக்கவரவில்லை சித்தனுக்கு.
புதிய இடம். புதிய சூழல். ஏனோ வெளியுலகம் முதலில் அவனை கொஞ்சம் மிரள வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆழம் தெரியாத சமுத்திரம் வேண்டாம், நெட்டையோ குட்டையோ எனக்கு நீந்தத் தெரிந்த குளமே போதும். அதுதான் எனக்கு சௌகர்யமென அப்பாவின் எதிர்ப்பையும் மீறி தோட்டம் வாங்கினான். வேல்ச்சாமி ஆரம்பத்தில் எதிப்பு தெரிவித்தார் தான். மகனின் உறுதியைப் பார்த்தவர் மண்ணுல போட்டதும், பொன்னுல போட்டதும் என்றைக்கும் வீணாப்போகாதென மகன் விருப்பத்திற்கே விட்டுவிட்டார். என்றைக்கிருந்தாலும் முதலுக்கு மோசமாகாது. ஒரே மகனின் ஆசை. அதுவும் வனவாசம் போல் சிறைவாசம் முடித்து வந்திருக்கும் மகனின் ஆசைக்கு மறுப்புத் தெரிவிக்க மனம் வரவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமென
அவன் இஷ்ட்டத்திற்கே விட்டுவிட்டார். அதே மாதிரி கல்யாண விஷயத்திலும் மகனின் விருப்பத்திற்கே விட்டுவிடுவாரா, இல்லை, அந்தஸ்த்துக்கு கொடிபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெண்கள் குளித்து வருவதற்குள் சமையல் வேலையை ஆவுடையும், புனிதாவும் ஆரம்பித்திருக்க, முதலில் குளித்துவந்த அழகியும் அவர்களோடு சேர்ந்துகொண்டாள்.
உண்பவர்களைப் பார்த்துக் கொண்டு கூட இருந்துவிடலாம். உழைப்பவர்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. ஆவுடையும், புனிதாவும் வேலை செய்ய, அழகியால் சும்மா இருக்க முடியவில்லை.
கேஸ் அடுப்பு அவளுக்கு மிரட்சியூட்ட, கை வேலை மட்டும் பார்த்துக் கொடுத்தாள்.
இட்லி அவித்து, சட்னி, சாம்பாருடன் மிளகு பொங்கலும் செய்திருந்தனர்.
காஃபி குடித்துவிட்டு மேலே சென்ற புதுப்பெண் இன்னும் கீழிறங்கவில்லை.
“இன்னைக்குனு பாத்து வேலைக்காரம்மா சதி பண்ணிருச்சு அழகி. அது மகளுக்கு பிரசவம்னு திடுதிப்புனு ஊருக்குப் போயிருச்சு.”
“இதெல்லாம் ஒரு வேலையா அத்தாச்சி. இதுவே நம்ம ஊரா இருந்தா ஊரே சேந்து ஆளுக்கொரு வேலபாக்கும்.”
“நீ சொல்றதும் சரிதான். இங்க எல்லாத்துக்கும் நாமதான் ஓடவேண்டியிருக்கு. சித்தாதான் ஒருத்தனா பாக்குறான். எங்கல்யாணத்துக்கு அவனும் இல்ல. அப்பாதான் பாத்தாரு. அப்ப இவ்வளவு விமர்சையா பண்ணல. வடபழனி கோவில்லதான் எங்க கல்யாணம் சிம்ப்ளா நடந்தது. எங்க வீட்டுக்காரரும் மிலிட்டரில இருக்காரு. அவருக்கு இப்ப வர தோதுப்படல.” இருவரும் பேசிக்கொண்டு காலை சமையலை முடித்து எடுத்துவைத்தனர்.
புனிதாவின் பிள்ளைகள் எழுந்து குளித்துவிட்டு அம்மாவை அழைக்க, “நீ பிள்ளைகளப் பாரு அத்தாச்சி” என அனுப்பி வைத்தாள்.
ஆவுடை ஒரு தட்டில் இட்லி, சட்னி என எடுத்து வைக்க, சித்தன் அடுக்களை வந்தான்.
செலவிற்கு பணம் எடுத்துத் தரச்சொல்லி அம்மாவை அழைத்தான்.
“அழகி… மேலதான் சரண்யா ரூம். டிஃபன அவ ரூமுக்கே கொண்டு வரச்சொல்லிட்டாம்மா. அவகிட்ட கொடுத்துர்றியா? பசி வந்தா கத்துவா. அவ அப்படியே உங்க மாமா மாதிரி” என்று சொல்ல சரியென வாங்கிச் சென்றாள்.
சற்றுமுன் அவள் வெளிவந்ததை பார்த்ததால் மாடியேறியவள், அறைக்கதவை தள்ளி திறக்க, திறந்து கொண்டது. உள்ளே அவளில்லை. குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டது.
கட்டிலில் மாற்று உடையும், போடவேண்டிய நகைகளையும் எடுத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றிருந்தாள். கபோர்ட் திறந்தே கிடந்தது. கையில் கொண்டுவந்து சாப்பாட்டுத் தட்டை மேஜையில் வைத்து விட்டுத் திரும்ப, திறந்திருந்த கபோர்டிலிருந்து ஒரு துணி நழுவி விழ, அழகி அதையெடுத்து உள்ளே வைக்க, குளியலறை திறக்கும் சப்தம் கேட்டது.
“ஏய்ய்… யார் நீ… இங்க என்ன பண்ற? எதை எடுத்துப்போக வந்த?” என்றவள் வேகமாக வந்து கட்டிலில் இருந்த நகைகளை ஆராய ஆரம்பித்தாள். அவளின் செய்கையில் அப்படியே அதிர்ந்து வாயடைத்து நின்றுவிட்டாள் அழகி.
“மேனர்ஸ் இல்ல… இப்படித்தான் தட்டாம வந்து
கதவைத் திறப்பாங்களா? சரியான பட்டிக்காடு. எல்லாம் இந்த அம்மாவையும், அண்ணனையும் சொல்லணும். சந்தைக்கடை மாதிரி கூட்டம் சேத்துக்கிட்டு” என முகத்தில் அடித்தாற்போல் சொல்ல அவமானத்தில் முகம் நிறமிழந்துவிட்டது. அவளை இப்படி யாரும் பேசியதில்லை.
நல்லவேளை… வந்தவர்கள் காதில் விழுந்திருக்காது. கேட்டிருந்தால் இப்பொழுதே கிளம்பிவிடுவார்கள். பணம் காசு இருந்தா அது உன்னோட. அதுக்காக மரியாதையை அதுவும் சிறுபிள்ளையிடம் விட்டுக் கொடுக்க முடியுமா? அதுவும் அவள் நகைகளை ஆராய்ந்தது அவளை யாரோ தொடக்கூடாது இடத்தில் தொட்டது போல அவமானமானத்தில் உடல் கூசிப் போயிற்று.
யாராயிருந்தாலும் முகத்திற்கு நேராக பேசித்தான் பழக்கம். பொய், புறட்டு, திருட்டு சுட்டுப் போட்டாலும் வராது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். ஆனால் அப்படி பசியில் தண்ணீரைக் குடித்துப் படுத்த காலத்தில் கூட திருட்டுத்தனம் செய்யவேண்டும் என்ற எண்ணம் துளியும் வந்ததில்லை. ஆனால் ஒரு சிறு பெண் இப்படி நினைத்துவிட்டாளே என குருகிப் போனாள்.
அம்மாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பக்கத்து அறையிலிருந்து வந்தவன் காதில், பாதி திறந்திருந்த கதவு வழியே சரண்யா பேசியது காதில் விழ, கதைவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
முகம் கருத்து நிறமிழந்து நின்றவளைப் பார்த்தவன், “நீ கீழ போ!” என்றான்.
“ஏதொன்னுக்கும் செக் பண்ணனும். பீரோ திறந்திருந்துச்சு” என சரண்யா விடாப்பிடியாக நிற்க,
“உனக்கு மேரன்ஸ் இருந்தா கதவ தாழ் வச்சுட்டுதான போயிருக்கணும்.” அவளை கேள்வி கேட்க,
“திறந்து போட்டா எல்லாம் உள்ள வரும்னு கனவா கண்டேன்” என,
“ஏய்ய்…” என பல்லைக்கடித்து, கையை ஓங்கி விட்டான் சித்தன். “கல்யாணப் பொண்ணாச்சேனு பாக்குறேன். அழகி நீ போ!” உத்தரவாகச் சொல்ல, சட்டென கண்கள் கரித்துக் கொண்டு வந்தது அழகிக்கு.
இவன் முன் எப்பொழுதும் அவமானப் படுத்தப்பட்டே நிற்கிறாள். அன்று பஞ்சாயத்தில் செவலை. இன்று சரண்யா. அதுவும் திருடி என சொல்லாமல் சொல்லி.
“நான் சொன்னதுல என்ன தப்பு. எல்லாம் உன்னாலதான். வேணும்னா உன் கல்யாணத்துக்கு இவங்கள எல்லாம் அழச்சுக்க வேண்டியதுதான. என் கல்யாணத்துக்கு யார் இவங்களையெல்லாம் கூப்பிடச் சொன்னது. கல்யாண வீட்ல இவங்க எல்லாம் எங்க சொந்தக்காரவுங்கனு எப்படி சொல்றது. இவங்களும் இவங்க ட்ரெஸ்ஸும்.” அலட்சியமாக பார்த்தவளை,
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் இவங்க இல்லாம என் கல்யாணம் நடக்காது. நீயும் அந்த ஊர்ல இருந்திருந்தா இதைவிட மோசமா இருந்திருப்ப. எப்பவும் பழச மறக்கக்கூடாது.” என்றவன்,
“மன்னிச்சுரு அழகி. சின்னப்பிள்ள… ஏதோ வெவரம் புரியாம… எதையும் மனசுல வச்சுக்காத” என தயங்க, அவனின் தயக்கம் அவளை மெள்ள அசைத்தது. தன்னை மீட்டுக் கொண்டவள், சித்தனின் முகம் வேதனை சுமந்து இவளைப் பார்க்க,
“நானும் நாலு தங்கச்சிகளோட பொறந்தவதான். நாலும் நாலுவிதம். எனக்கு இதெல்லாம் சாதாரணம். நீ… நீங்க… மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்ல. கவலப்படாதீங்க!” என வெளியேற முற்பட்டவள், ஒரு கணம் நின்று, “ஆனா… யாரும் திருட்டுப் பட்டம் கட்டினதில்ல” என்றவள் விறுவிறுவென நிற்காமல் கீழிறங்கிவிட்டாள்.
இது எதையும் கண்டுகொள்ளாமல் மீண்டும் நகைகளை சரி பார்க்க ஆரம்பித்தாள் சரண்யா.
சட்டென அவளின் மரியாதை சித்தனை என்னவோ செய்தது. சிறையிலிருந்து வெளிவந்த இந்த மூன்று வருடங்களில் அவன் ஊரிலிருந்து அந்த மூன்று நாட்கள் மட்டும்தான் அவன் அவனாகவே இருந்தான். தன்னை அடையாளம் தெரிந்த ஊர், உறவுகள் முன், தன்னை அந்தஸ்த்து பேதம் பார்க்காமல் பழைய தோழமையோடு அனுகிய சகாக்கள் முன் பழைய சித்தனாக மீண்டிருந்தான்.
என்னதான் இங்கு வசதி, அந்தஸ்த்தென இருந்தாலும் ஜெயிலில் இருந்தவன் என்ற பிம்பம் தன் மேல் படிவதை அவனால் தடுக்க முடியவில்லை. உள்ளே போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லைதான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தானே குற்றவாளி ஆக்குகிறது.
ஊரில் யாரும் அவனை பேதம் பிரித்துப் பார்க்கவில்லை. எந்த சூழ்நிலையில் அவன் சிறை சென்றான் என்பது எல்லாருக்கும் தெரியுமென்பதால், ஊர் மக்கள் அதை பெரிதுபடுத்தவில்லை. அதனாலேயே அவனால் அங்கு இயல்பாக இருக்க முடிந்தது.
ஆனால் அழகியின் இந்த மரியாதை அவனை தள்ளி நிறுத்தியது போல் உணர, மீண்டும் சிறைப்பட்ட உணர்வு. அவள் அம்மா திட்டிய பிறகும் கூட சித்தா என்றுதான் அழைத்தாள். ஆனால் ஒரே நிமிடத்தில் ஒதுங்கி நின்றுவிட்டாள்.
அழகி இறங்கி கீழே வர, அதற்குள் ஆண்களும் குளித்து வந்திருந்தனர். எல்லாருக்கும் கீழேயே இலைபோட்டு, ஆவுடையும், புனிதாவும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
“நீயும் வா அழகி!” புனிதா அழைக்க,
“அப்பறமா உங்களோட சாப்பிட்டுக்கறேன்” என்றவள் புனிதா கையிலிருந்த சாம்பார் வாளியை வாங்கி பரிமாற ஆரம்பித்துவிட்டாள். ஏனோ அவளுக்கு சரண்யா பேசியதில் வயிறும், மனமும் நிறைந்தது போல் இருந்தது.
கீழே இறங்கி வந்தவன் அவளையே தான் பார்த்துக் கொண்டே வந்தான். தன்னை மீட்டுக் கொள்ள வெகுபாடு படுவது தெரிந்தது ஒரு நிலையில் நில்லாமல் ஏதாவதொரு வேலை பார்த்ததில்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க,
“முருகேசா… வேன் ஏற்பாடு பண்றேன். எல்லாரையும் வெளியே கூட்டிப் போயிட்டு நேரா மண்டபம் வந்திருங்க. பக்கம்தான் வடபழனி முருகன் கோவில். நான் டிரைவர்கிட்ட எங்கெங்க கூட்டிப்போகணும்னு சொல்றே. சாயந்தரமா பீச்சுக்குப்போயிட்டு, மண்டபம் வந்திருங்க!” என்றான். வீட்டில் இருந்தால் மீண்டும் சரண்யா அவளையும் மீறி ஏதாவது சொல்லிவிடக்கூடும். அவளுக்கு இவர்கள் வந்ததே பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. வந்தவர்களுக்கும் ஏதாவது இடத்தை சுற்றிப் பார்த்தது போலிருக்கும் என ஃபோன் செய்து ட்ராவல்சிலிருந்து வண்டிவர ஏற்பாடு செய்தான்.
சாப்பிட்டு முடித்தவர்கள் வண்டி வரும் வரை பேசிக்கொண்டிருந்தனர். புனிதாவும், ஆவுடையும் மண்டபம் கிளம்பத் தேவையானவற்றை எடுத்து வைக்க அறைக்குள் சென்றுவிட்டனர்.
அழகி அடுப்படியில் நின்றிருந்தாள். அவள் சாப்பிடவில்லை எனத் தெரியும். மேலே நடந்ததை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வந்தபொழுது இருந்த சந்தோஷம் இப்பொழுது அவளிடம் துளியும் இல்லை. ஏன் வந்தோமென்றிருந்தது அவளுக்கும்.
“சாப்டலையா?” என்றான். பின்னால் குரல் கேட்டு வேகமாகத் திரும்பினாள்.
“சாப்பிட்டேனே” என்றாள் பொய்யாக.
“திருடமட்டுமில்ல, உனக்கு பொய் சொல்லவும் தெரியாது” என்றவனை வெற்றுச் சிரிப்போடு பார்த்தாள்.
“சேச்சே… நான் அதை அப்பவே மறந்துட்டேன்.”
“அப்ப சாப்பிடு” என அவனே தட்டை எடுத்து இட்லியை வைத்து சட்னி ஊத்திக் கொடுத்தான். மறுக்கமுடியாமல் வாங்கிக் கொண்டாள். அடுப்படியிலேயே அமர்ந்தவள், அவனுக்காக சாப்பிட ஆரம்பிக்க, தொண்டையை விட்டு இறங்க மறுத்தது.
தண்ணீர் குடிக்க உள்ளே வந்தால் ஊர்க்காரி ஒருத்தி, அவனுக்கு அத்தை முறையும் கூட. வேல்ச்சாமி வகையில் சொந்தம். தன் பிள்ளைகளுக்கு சித்தனை கேட்க முடியாத ஆற்றாமை. இத்தனை வசதி வாய்ப்புகளைப் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் எரிந்தது புகைச்சலாக வெளிவந்தது.
“என்ன அழகி! இப்பதான் சாப்பிடறியா? சித்தன் வீட்டு இட்லிங்கவும் நாங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சு, எங்களுக்கு ஒன்னும் ஆகலைங்கவும் சாப்பிடறபோல. தெளிவுதான்?” கேலி போல் ஊசியிறக்கினாள் வார்த்தைகளில். பேச்சுவாக்கில் காய்ச்ச மரத்தில் கல்லெறிந்தாள். கல்லடி பட்டது என்னவோ சித்தனுக்குதான்.
வேகமாக அழகி நிமிர்ந்து சித்தனைப் பார்க்க, சட்டென முகம் கன்றிப் போனது அவனுக்கு.

Awesome Writerji
Thank you so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫