“இத பஞ்சாயத்துல பேசவேண்டாம் சித்தப்பா. சட்டப்படி பாத்துக்கட்டும். முறைப்படி கோர்ட்ல கேஸ் போட்டு விவாகரத்து வாங்கட்டும். அதுக்கு முன்ன பொம்பளப்பிள்ள பெத்ததால விவாகரத்து கேக்கறதாவும், பொண்டாட்டி உயிரோடு இருக்கும்போதே ரெண்டாங்கல்யாணம் பண்ணப்போறதாவும் இவன் மேல நாம ஒரு கம்ப்ளைன்ட் கொடுப்போம். கூடவே வரதட்சணை கேட்டு கொடுமைபண்றதாவும் சேத்துக்குவோம். ஒவ்வொன்னுக்கும் ஏழு வருஷம்னாக் கூட முவ்வேழா இருபத்தியொரு வருஷம்.” தாடையைத்தடவி மேலே பார்த்து யோசித்தபடி சித்தன் கணக்குப் போட்டுச் சொல்ல,
செவலைக்கு தலைக்கேறியிருந்த போதை விருட்டென இறங்கியது. அவனுக்கு ஜெயில் ஒன்றும் புதிதில்லை. அது ஏதோ சாராயம் காய்ச்சி பிடிபட்டால் ஒரு மாதமோ, ரெண்டு மாதமோ புது மாப்பிள்ளை மாதிரி கெத்தாக சென்றுவருவான். ஆனால் இவன் சொல்வதைப் பார்த்தால் கால்நூற்றாண்டு களி திங்கவேண்டிவரும் போலயே என பயம் வந்தது.
“யாரும்மா இது?” பக்கத்தில் நின்ற குஞ்சாம்மாவிடம் குணிந்து கிசுகிசுத்தான்.
“தெரியலடா… இவுக எல்லாம் தூக்கிவச்சு கொண்டாடறதப் பாத்தா… அப்ப ஒரு எட்டுல மாவுப்பஞ்சம் வந்ததுடா. ஊரெல்லாம் மழைதண்ணியில்லாம, எதுக்கும் வழியில்லாம அரசாங்கத்துலருந்து ரேசன்ல மக்காச்சோளமாவு கொடுத்தாங்க. (1970களில்) ஆக்கித் திங்கச்சொல்லி. நீங்க எல்லாம் அப்ப சின்னப்பிள்ளைக. அப்ப பஞ்சம்பொழைக்க ஊரவிட்டுப் போனவிங்க போல? அப்ப இந்த ஊர்லயும் ஒரு பெருங்கூத்தும் கொடுமையும் நடந்துபோச்சு. அதுலதான் இவளுக அப்பனும், தம்பியும் ஒரே நாள்ல செத்துப்போனாங்க.” ஆலத்தி எடுப்பவள் போல் கையை சுத்தி சுத்தி மகனிடம் கடந்தகால கதையளந்தாள் குஞ்சம்மா.
“பாத்தா பஞ்சம்பொழைக்க போன மாதிரி தெரியலியே?” அவன் பார்வை சித்தனின் தோரணையை நோட்டம்விட்டது.
“இப்ப அது எதுக்குடா? ஏன்டா பொசகெட்டவனே? நானே இவள அத்துவிடலாம்னு இருக்கே. நீ என்னடான்னா அக்காகாரிய பொண்ணு கேக்குற?” மகனை வசைபாட,
“என்னைய வேட்டிய உருவி வீதியில இழுத்து தள்ளுனாம்மா. அவள சும்மாவிடச் சொல்றியா? சும்மா சிரிச்சதுக்கே சபையில வச்சு சேலைய உருவுனானுக. பாஞ்சாலி கூத்துல பாக்கல. இவ கொட்டத்தையும் அடக்க வேண்டாமா?” கூத்தை முழுதாக பார்க்காமால் தூங்கிவிட்டான் போல. பாஞ்சாலியின் முந்தானையை தொட்டவன் கெதி என்ன ஆனதென்று தெரியவில்லை இவனுக்கு. யார் மனதில் எது பதியுமோ அதுதானே பதியும். அவளிடம் சிக்கினால் இவன் கெதிதான், கரையான் புத்துனு நெனச்சு பாம்பு புத்துக்குள்ள கைவிட்ட கதையாகிப்போகும் என்பது தெரியவில்லை பாவம் செவலைக்கு.
ஆத்தாளும் மகனும் வந்தவனைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்க,
“ஸ்டேசன் போயி பழக்கமில்லைல்ல சித்தா. எதுனாலும் உள்ளூர் பஞ்சாயத்துதான?”
“ஆடுறமாட்ட ஆடிக்கறக்கணும். பாடுறமாட்ட பாடிக்கறக்கணும்னு சொல்லுவாங்கல்ல. இவன் ஒன்னுக்கும் உதவாத அடிமாடு சித்தப்பா. கசாப்புக்கடைக்கு தான் அனுப்பனும். அங்கவச்சு தோலுரிச்சா தன்னால வழிக்கு வருவான்.” செவலையை மேலிருந்து கீழாகப் பார்த்து சொல்ல,
அவன் தோரணையிலேயே சற்று மிரண்டிருந்த செவலை, சித்தன் பேசியதைக் கேட்டு உள்ளுக்குள் கொஞ்சம் நடுங்கித்தான் போனான். தன்னை கேட்காமல் குடும்பக்கட்டுப்பாடு பண்ணியதை பெரிதாக்கி, இரண்டாவது கல்யாணத்திற்கு பஞ்சாயத்தார் முன் சம்மதம் வாங்கிவிடலாம் என நினைத்தான். அப்படியே அழகம்மையை கேட்டுப் பார்ப்போம் என்ற சபலமும்தான். வீதியில் இழுத்துவிட்டவளை வஞ்சம் தீர்த்த மாதிரியும் ஆச்சு.
விஷயம் கேள்விப்பட்டு பக்கத்தூரிலிருந்த அலமேலுவும் அவதியாக வந்து சேர்ந்தாள் புருஷனோடு.
“என்னக்கா… இப்படினு ஒரு வார்த்தை சொல்லிவிட்டிருக்கக் கூடாது. நாங்களும் வந்துருப்போம்ல. இப்படி பஞ்சாயத்துல நிக்கவச்சுட்டானே படுபாவி.” அலமேலு உரிமையாக அக்காவை அதட்ட,
“மூனாம் மனுஷனாடி. உங்க தங்கச்சி புருஷன்தானனு அசால்ட்டா இருந்துட்டே. கடைசியில என் குலசாமிய காவு கேக்குறான்டீ. என் வயித்துல பிறந்த பாவத்துக்கு இவ இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ தெரியல?” பெற்றவயிறு பதற, வாய்விட்டு பொன்னுத்தாயி புலம்ப,
“இதுக்குதான் என் சின்ன மாமனாருக்கு கேட்டேன். அப்பவே கொடுத்திருந்தா இந்தப் பேச்செல்லாம் வந்திருக்குமா? இப்படி மந்தையிலவச்சு வாழ்க்கை கொடுக்குறேன்னு சொல்லிக் காட்டுவானா?” என கேட்க, நாட்டாமையோடு பேசிக்கொண்டிருந்தவன் சட்டென கோபமாகக் திரும்பிப் பார்த்தான். ஆக மொத்தம் இவளது அக்கறையும் ஓநாயின் அக்கறைதான். ஏதோ அக்காவுக்கு ஆதரவாக பேச வந்திருக்கிறாள் என்ற பொன்னுத்தாயி நினைப்பில் மண்ணள்ளிப்போட்டாள்.
அசையாமல் அப்படியே நின்றிருந்தாள் அழகி. தங்கச்சி பேச்சு காதில் விழுந்தும் பார்வை தரையை வெறித்து நின்றது. பட்டென மனம்விட்டுப் போனது அழகிக்கு. ஏனோ இன்று மனம் அவள் பேச்சு கேட்க மறுக்கிறது. எதற்கும் அசையாத ஆலமரமாக நிற்பவள். இன்று வேரறுந்த கொடியாக மனம் துவண்டு நிற்கிறாள். இத்தனை வருடத்தில் அவள் பார்க்காததா? பஞ்சாயத்திற்கு வரும்முன் இருந்த தைரியமும், துணிச்சலும், தெனாவெட்டும் எங்கே போனதென்று அவளுக்கே தெரியவில்லை.
எல்லாரையும் ஒற்றைப் பார்வையால் ஓரங்கட்டுபவளால் இந்த நிலையில் சித்தனின் பரிதாபப் பார்வையை மட்டும் எதிர்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. நெருப்பின் மீது நிற்பது போலிருக்க, அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் நத்தையாய் சுருண்டு போனவள், தனக்குள்ளேயே உக்கி உலர்ந்து போனாள். அதற்கு அவன் தோற்றமும் ஒரு முக்கிய காரணம். பக்கத்தில் என்ன, நிழலைக்கூட நெருங்க முடியாது. அவனது பணச்செழுமை அப்பட்டமாகத் தெரிந்தது.
“என்னங்க இது? யார்யாரையோ பேசவிட்டு வேடிக்கை பாக்குறீங்க. இதுதான் உங்க ஊரு பஞ்சாயத்தா? நான் இத எங்க ஊருப் பஞ்சாயத்துல பேசிக்கிறேன்.” சித்தன் சொல்லிய தண்டனை கணக்கிலேயே பாதி போதை சட்டென இறங்கியதில் இப்பொழுது கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருந்தான்.
“நானும் இந்த ஊருதான். நீ எங்க வேணா பஞ்சாயத்த கூட்டிக்க. நாங்க நாளைக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறோம். மாமியா வீடு போக ரெடியா இரு!” என சொல்ல,
அப்பொழுதுதான் அவனை கவனித்தாள் அலமேலு.
“யாரும்மா இது?” கண்களில் கேள்விக்குறி.
“நம்ம சித்தன்தான்டீ! ஆவுடை அத்தை மகன்!” நீண்ட வருடங்களுக்குப் பிறகு தோழியின் மகனைப்பார்த்த பூரிப்பும், பெருமிதமும் அந்த நிலையிலும் கண்கள் மின்னியது பொன்னுத்தாயிக்கு. சட்டென புருவம் மேலுயர்ந்து வியப்புக்குறியிட்டது அலமேலு பார்வை.
“இத்தன வருஷமா எங்க இருந்தாகலாம்?” ஆராய்ச்சியாய் அவனை மேலும் கீழும் அளவெடுக்க, அளவெடுக்க வேண்டியவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சீக்கிரம் பஞ்சாயத்தை முடித்துவிட்டால் தேவலாம் என்றிருந்தது. ஏனோ மனம் நிலை கொள்ளவில்லை. யாரையோ மனம் ஆதரவாய் தேடியது. இறுகிப் போய் நின்றிருந்தாள்.
“யாருக்குடீ தெரியும்?”
“நல்லாஆ…த்தான் இருக்காப்ல!” ஒரு இழு இழுத்தாள் பக்கவாட்டில் மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே.
“நல்ல செழிம்புதான் போலடீ? அந்தா நிக்கிதே அவிக காருதான்.” பொன்னுத்தாயி கண்ணால் காட்ட, “ம்ஹும்ம்ம்” என ஒரு வெப்ப பெருமூச்சு அலமேலுவிடம்.
“எப்ப வந்தாப்டியாம்?” என்றாள் மெதுவாக.
“இப்பதான், நீ வர்றதுக்கு செத்த முன்ன?” என்றார் மகள் கேட்கவருவது புரியாமல்.
“நான் இங்க வந்ததக் கேக்கலம்மா!” என ரகசியம் போல் குனிந்து கேட்க, அதற்குள் பஞ்சாயத்தார்,
“செவல, நீ சொல்றதுக்காக எல்லாம் அத்துவிட முடியாது. மூனுபிள்ளைக போதும்னு சொன்ன அரசாங்கமே, ரெண்டுபிள்ளைக போதும்னு சொல்ல ஆரம்பிச்சுருச்சு. ஒழுங்கா வச்சு பொழைக்கிற வழியப்பாரு! இல்ல, நான் ரெண்டாங் கல்யாணம் பண்ணியே தீருவேன்னா, சட்டப்படி அத்துவிட்டுட்டு நீ உன் வழியப் பாத்துப் போ! அது ஆம்பளையில்லாத வீடுதான். ஆனா, ஊர்லயும் ஆம்பளைக இல்லைனு நெனச்சுறாத!” துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு பஞ்சாயத்து முடிந்ததென்று எழுந்து விட, வேடிக்கை பார்த்த சனங்களும் களைய ஆரம்பித்தனர். அவனுக்கு தெரியும் இது சட்டத்தின் முன் செல்லாதென்று. அதனால் தான் ஊரில் பஞ்சாயத்து கூட்டினான். அங்கேயும் அவன் நினைப்பில் மண் விழுந்தது.
“வாப்பா சித்தா! நம்ம வீட்டுக்கு போகலாம்!” நாட்டமை அழைக்க,
“நீங்க போங்க சித்தப்பா! நான் வர்றேன்” என்றான்.
“ரொம்ப வருஷங்கழிச்சு வந்துருக்க. சோட்டாளிகள பாக்கவேண்டியிருக்கும். சீக்கிரம் பாத்துட்டு வா! ரவைக்கு சாப்பாடு நம்ம வீட்லதான்!”
“காலையில வர்றேன் சித்தப்பா. இப்ப முருகேசன் வீட்டுக்கு போறேன்.” வெவ்வேறு இனமென்றாலும் உறவுமுறை சொல்லியே பழக்கம்.
“அப்ப சரி… உங்க சின்னாயிகிட்ட கோழிய கமுத்திப் போடச்சொல்ற. வெள்ளன வந்துரு!” உரிமையோடு சொல்லிச் சென்றார்.
தனக்கு முன்னால் சென்ற செவலையை தோள் தட்டி அழைத்தான். நின்று என்னவென்று பார்க்க, “அழகியவா பொண்ணு கேட்ட? தனியா அவகிட்ட சிக்கிறாத. ஆம்பளப்பிள்ள என்ன அணில்பிள்ளைக்கு கூட வழியில்லாமப் பண்ணிருவா. அவளப்பத்தி உனக்கு சரியாத் தெரியல” என சொல்லி சிரிக்க, முருகேசனும் சேர்ந்து சிரித்தான்.
“உங்களுக்கு ரொம்பத் தெரியுமோ?” என்றான் நக்கலாக.
“தெரிஞ்சதாலதான் சொல்றேன்! பாத்து இருந்துக்கோ. தங்கச்சி புருஷன்னு கூட பாக்கமாட்டா!” என வாய்விட்டு சிரிக்க, முறைத்துவிட்டு, விரைப்பாக நடையைக் கட்டினான் செவலை.
இனி ஒரு வாரத்திற்காவது ஊருக்குள் இந்தப் பேச்சுதான் அம்மியோடு அரைபடும். கூடவே சித்தன் வருகையும். எத்தனை வருடங்கள் கழித்து ஊருக்குள் வந்திருக்கிறான். எல்லாவற்றையும் இழந்து, மனம் நொந்து, செய்வதறியாமல், பிழைப்பு தேடி, தன் உறவுகளை விட்டு, ஊரைவிட்டு, தன் அடையாளம் தொலைத்து, முன்னபின்ன தெரியாத ஊருக்கு, இந்நாட்டின் குடிமகன்களே அகதிகள் போல் குடிபெயர்தல் என்பது கொடுமையிலும் கொடுமை. வழிவழியாக பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு செல்வதென்பது அத்தனை எளிதல்லவே. உயிரோடு இதயத்தை பிழிந்தெடுக்கும் வலி அது. இதுவரை எங்கிருக்கிறார்கள் என்று கூட தெரியாமலிருந்த குடும்பம் மீண்டும் தன் வேரைத்தேடி வந்திருக்கிறது.
இவனது வருகை மீண்டும் பதினைந்து வருடங்கள் அனைவரையும் பின்னோக்கி இழுத்திச் சென்றிருக்கும். அந்த நாளை மீண்டும் கசப்போடு அசை போடும். அது ஒரு கருப்புதினம் இந்த ஊருக்கே. யார் யாரை துக்கம் விசாரிக்க எனத்தெரியாமல் ஊரே துக்கமயமான கொடிய நாள் அது.
நடந்து கொண்டே பாழடைந்து கிடந்து வீட்டை ஒருதரம் திரும்பிப் பார்த்தான். செடி கொடிகள் படர்ந்து சுவர்கள் இடிந்து கிடந்தன. இடிந்து பள்ளம் விழுந்து கிடந்த திண்ணையில் நாய் படுத்துக் கிடந்தது மங்கிய தெருவிளக்கின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. கால்கள் தன்னால் நின்றுவிட, அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்தவன் போல் தோள்மீது கைபோட்டான் முருகேசன். திரும்பி தோழனின் முகம் பார்த்தவனை வாவென தலையசைத்து அழைத்துச் சென்றான்.
முருகேசன் வீடு நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
“எல்லாம் அழகுவா இழுத்துக்கிட்டது தான் சித்தா. நல்ல மாப்பிள்ள வந்துச்சு. வாத்தியார் மாப்பிள்ளை. பொண்ணு மட்டும் போதும், எதுவும் போட வேண்டாம்னாங்க. அழகுதான் ஒத்துக்கல. எப்படியோ பேசி மொதத் தங்கச்சிக்கு முடுச்சு வச்சுருச்சு. அந்தப்பிள்ளையும், இந்தா போறானே இவன் பொண்டாட்டி மட்டும்தான்டா அழகுக்கு தொல்லை கொடுக்கறதில்ல. அதுக்கு பதிலாத்தான் இவன் வாச்சிருக்கான். மூனாவதப் பாத்தயில? சின்னமாமனார்க்கு ரெண்டாந்தாரமா கேக்குது. ஏன்னா. சின்னமாமனாருக்கு யாருமில்ல. அது வீட்லதான் கஞ்சி குடிக்கிறாரு. இதக் கட்டிவச்சுட்டா தொல்லை ஒழிஞ்சது பாரு. இந்தக் கொடுமைய எங்கபோயிச் சொல்ல? அஞ்சாவது ஒன்னு இருக்குடா அஞ்சுகம். அது இதுகளுக்கெல்லாம் மேல” என தலையில் அடித்துக் கொண்டான் முருகேசன்.
“கஞ்சிக்கில்லாம இருந்தப்ப கூட காடுமேடுன்னு சுத்திட்டு சந்தோஷமா இருந்தோம்டா.” முருகேசன் ஆதங்கத்தோடு இழுத்து மூச்சு விட, அதை ஆமோதிப்பவன் போல் சித்தன் கண்கள் அழகி சென்ற திசையையே கண்சிவக்க பார்த்து நின்றது. அந்த இருளில் அவன் கண்களில் தெரிந்த வலி முருகேசனுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.
அவன் கண்முன் தாவணியில் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்த அழகி ஒரு கணம் மின்னலாய் வந்து போனாள். இளமையின் வாளிப்பு ஏகபோகமாக ஆட்சி செய்தது அவளது பட்டு மேனியில். பளிச்சென பச்சரிசி பல் தெரிய, இதழ் விரித்த சிரிப்பிற்கே ஊரையே பட்டா போட்டுக்கொடுக்கலாம் வசதியும், வாய்ப்புமிருந்தால். கோடைகாலத்தில் வற்றிய குளமாய் இன்று உழைப்பின் மிச்சங்கள் மட்டுமே அவளிடம். சிரிக்க மறந்தவளாக அவள் நிலம்பார்த்து நின்ற கோலம் பார்த்தவன் நெஞ்சைப் பிசைய, இழுத்து மூச்சுவிட்டு தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டான்.
இடக்கையில் சேலைக் கொசுவத்தை தூக்கிப்பிடித்து, காற்றில் வலக்கை வீசி, விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். அவளோடு நடைக்கு ஈடு கொடுக்கமுடியாமல் செவலையை வாய்க்கு வந்தபடி வசைபாடிக்கொண்டே பின்னால் வெக்கு வெக்கென ஓடி வந்தாள் சொக்காயி. புரியாவிட்டாலும் கண்டிப்பாக காது கொடுத்து கேட்கும் வார்த்தைகள் இல்லை என்பது மட்டும் நிச்சயம். அவளுக்கிருக்கும் கரிசணம் கூட உடன் பிறந்தவளுக்கு இல்லை.
மூச்சுவாங்க வந்து திண்ணையில் பொத்தென அமர்ந்தவளுக்கு ஆயாசமாக வந்தது. தளும்பிய கண்மாய் கரை உடைத்தது போல, கரகரவென அணைகட்டிவைத்து கண்ணீர் மடை திறக்க, நெஞ்சு விம்மி வெடித்தது. அந்தகார அமைதியில் சுவர்க்கோழிகள் சத்தம் மட்டும் ரீங்காரமிட்டது. கண்களை துடைக்கக் கூட சுரணையின்றி, வெறித்து அமர்ந்திருக்க,
‘அரசனப் பாத்த கண்ணுக்குப் புருஷனப்பாக்க புடிக்கலையாக்கும்?’
“…”
‘என்ன… பேச்சையே காணோம்?’ எப்பொழுதும் அவளுக்கென ஒலிக்கும் குரல்.
அவள் சந்தோஷமாக இருந்தால் கேலியும் கிண்டலுமாக, கோபமாக இருந்தால் கோபமா, கவலையாக இருந்தால் கவலையாக, காதலாக இருந்தால் சரசமாக ஒலிக்கும் குரல் இப்பொழுது அவளைப் போலவே எந்த உணர்ச்சியுமின்றி வெறுமையாக காதோரம் ஒலித்தது. அவளுக்கு மட்டுமே உரிமையான, உரித்தான இன்னும் குரல்கட்டு சரியாக சுதி சேராத கரகரத்த அவளது சித்தனின் ஆதர்ஷ குரல்.
சட்டென சுருண்டு படுத்தவள் ஆங்காரமாக நெஞ்சு வெடித்து அழுதாள், இவ்வளவு நேரமாக தேக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டியவளாக. எப்பொழுதும் போல் மடிதாங்கி மானசீகமாய் தலை கோதிக் கொடுத்தது ஒருகரம். அவளுக்கான கரம். ஏனோ நிஜம் கண்முன் வந்தும் அவளால் ஒட்டமுடியவில்லை. அவளது நிழலுக்கும், வந்து நிற்கும் நிஜத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். ஏதோ ஒன்று தன்னைவிட்டு தூரமாக கண்காணாமல் எட்டிப்போன உணர்வு.
‘இவன் வந்தது பிரச்சினையா? வசதியாக வந்தது பிரச்சினையா?’ மனசாட்சி கேள்வி கேட்க,
இந்த கேள்வி எழ, சட்டென உதறி எழுந்தாள். அவள் ஒன்றும் இவன் வருவானென எதிர்பார்த்து காத்துக் கிடக்கவில்லையே. அவளுக்கான சித்தன் எப்பொழுதும் அவளுடனே. பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டு, அதட்டிக்கொண்டு, சீண்டிக்கொண்டு. அவன் நினைப்பு மட்டுமே போதுமென்று வாழ்ந்தவள் தானே? இப்பொழுது மட்டும் எதற்கிந்த ஊசலாட்டாமும். தள்ளாட்டமும், இத்தனை அலைக்கழிப்பும். பழைய நிமிர்வு தலைதூக்க முந்தானை கொண்டு முகத்தை அழுந்தத் துடைக்க, கண்கள் மட்டும் சொல்பேச்சு கேட்பேனா என்றது. சரி, போ என அடக்கமுடியாமல் விட்டுவிட்டாள். அவளுக்கே உரித்தான கற்பனை உலகிற்குள் யாரையும் புதிதாக சேர்க்க விருப்பமில்லை.
அவளது சித்தன் எளிமையானவன். சலவைகள் பல கண்டு மங்கிப்போன உடை. வறண்ட கேசம். வெயிலில் கருத்த தேகம். உழைத்து உரமேறிய உடம்பு.
வெயிலுக்கு காய்ந்து, மழைக்கு நனைந்து, தலைமுடி செம்பட்டை பாய்ந்து, ஒட்டி உலர்ந்த தனக்கேற்ற சித்தனாக அவனை அவள் உருவகப்படுத்தியிருந்தாள். எல்லாரும் கனவிலாவது ராஜகுமாரனை எதிர்பார்க்க, இவளோ கற்பனையிலும் அவனுக்கு தலை கொள்ளா முடியும், நல்லநாள், திருநாள் மட்டுமே கத்தி பார்க்கும் முகமும், ஒரு கைலியும், பனியனும், தோளில் துண்டும் தந்து உலாவ விட்டிருந்தாள். அவளது கற்பனைக்கும் நிஜத்திற்கும் ஒன்றல்ல, இரண்டல்ல நூறு வித்யாசம்.
அவள் வீடு தாண்டித்தான் முருகேசன் வீட்டிற்கு செல்ல வேண்டும். வீடு கடக்கையில் சித்தனின் கால்கள் தன்னால் நிற்க,
“காலையில வந்து பாத்துக்கலாம் சித்தா. இப்ப நம்மல பாக்க சங்கட்டப்படும். வீம்பு புடிச்சது. லேசுப்பட்டதில்ல” என சொல்லிக்கொண்டே,
“தோட்ட வேலைய எப்ப ஆரம்பிக்கப்போற? அழகுகிட்ட தான் ஆள் சொல்ல சொல்லியிருக்கேன். ஒரு வாரத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு இப்ப அழைப்பு சொல்ல வந்திருக்க?” என கேட்க,
“கல்யாணம் முடிஞ்சதும் தோட்டத்த செம்ம பண்ண ஆரம்பிக்கணும் முருகேசா. அங்கிட்டும் இங்கிட்டும் அலைய முடியாது பாரு?”
“நீ சொல்றதும் சரிதான்.” தெருவோடு இருவரும் பேசிச்சென்றது காற்றோடு வந்து அழகியின் காது தீண்டியது. இனம் காண முடியதொரு வலி இதயக்கூட்டுக்குள்.
‘அந்த புதுப்பணக்காரன் இவன்தானா? புதுப் பணக்காரன் மட்டுமில்லை. புது மாப்பிள்ளையும் கூட!’ இடித்துரைத்தது மனசாட்சி. இன்னும் கூட்டுப்புழுவாய் சுருண்டு போனாள் தனக்குள்.
அதிகாலையிலேயே பத்திரிக்கையும், கையுமாக முருகேசனோடு வாசல் வந்து நின்றான் சித்தநாதன்.
இடுப்பில் தூக்கிச் செருகிய கொசுவமும், திண்ணையை மொழுகிக் கொண்டிருந்த சாணிக்கையுமாக வாசலில் அரவம் கேட்டு திரும்பியவள், உதடு பிரிய, முல்லைப் பல்வரிசை தெரிய, எதிர் வெயில் பட்டு சிவப்புக்கல் மூக்குத்தி மின்ன பளிச்சென சிரித்தாள் சித்தநாதனைப் பார்த்து.
பார்த்த பொன்னுத்தாயிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பரபரத்தார்.
“எய்யா… வாய்யா… வாங்க… வாப்பா!” மாற்றி மாற்றி எப்படி அழைப்பதெனத் தடுமாறினார் அவனது தோற்றம் பார்த்து. உள்ளே அழைத்து உட்கார வைக்கக் கூட இடமில்லை. வெளித்திண்ணை இரண்டு பக்கமும் இப்பொழுதுதான் மொழுகியிருக்க, உள்ளே அடுப்பெரிய புகைமண்டியிருந்தது.
கைப்பிள்ளைக்காரியே பின்னால் கொட்டத்தில் ஆடுகளோடு பிள்ளைகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். வந்தவர்களை வாசலிலும் உட்காரவைக்க முடியாது.
“ஆவுடை எப்படியிருக்கா? வீட்ல எல்லாரும் சௌக்யமா? அம்மா எப்ப இங்க வருவா? நல்லது கெட்டதுக்கு கூட தலகாட்டாம போயிட்டீகளே?” படபடவென நலம் விசாரித்து கண்கலங்க ஆதங்கப்பட்டார்.
“நிக்கிறீங்களே… இருந்திருந்து புள்ள வந்திருக்கு. உக்கார வைக்கக்கூட முடியலியே?” பொன்னுத்தாயி புலம்பிய புலம்பலில் கொஞ்ச நஞ்சம் ஊசலாடிய மனதும் இப்பொழுது ஒரு நிலைக்கு வந்து திடமாக நின்றது அழகம்மைக்கு.

Wow, super twist
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫