“அழகம்ம!”
“என்ன முருகேசா?” குளத்து கரையோரமாக ஆடுகளை மேயவிட்டு, தொரட்டி கொண்டு நாட்டுக்கருவேல நெற்றுகளை அண்ணார்ந்து பார்த்து உலுப்பிவிட்டுக் கொண்டே கேட்டாள்.
மந்தையில் மூன்று சினை ஆடுகளும் இருந்தன. மற்ற ஆடுகள் வயிற்றில் முட்டிவிடாமலிருக்க, அந்த ஆடுகளை மட்டும் ஒதுக்கி ஓட்டினாள் ஒச்சாயி.
எனக்கு நீ துணை, உனக்கு நான் துணையென அழகம்மையை அண்டிக்கொண்டவள். வயது குத்து மதிப்பாக நாற்பதைத்தொடும். சற்று வளர்ச்சி பற்றாக்குறை. உடலளவிலும், மனதளவிலும். பார்த்தால் தெரியாது. பேச்சும் தொண்டையை இறுக்கிப்பிடித்தது போல. பாதி பேச்சு உள்ளே போகும். பாதி பேச்சு வெளியே வரும். ஆனால் கோபம் வந்தால் வண்ணம் வண்ணமாக பேசுறபேச்சுல கேக்குறவுங்க காது அவிஞ்சு போகும். அதற்கெனவே அவளை சீண்டிப் பார்க்கும் வம்புபுடுச்ச முறைமைக்கூட்டம். மூக்கும் முழியுமா இருக்கறதுகளையே கரையேத்த, கருமாயப்பட வேண்டிய காலத்துல, பெற்றவர்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் வேண்டாத சுமையாகிப்போனவளை, அழகம்மை ஒத்தாசைக்கு கைபிடித்து இழுத்துக் கொள்ள, அவர்கள் வீட்டிலும் விட்டது பீடையென கைகழுவிக் கொண்டனர். நால்வரோடு ஐவரானோம்னு ராமர் சொன்னமாதிரி, அஞ்சோடு ஆறுன்னு அழகம்மை அவளையும் சேர்த்துக் கொண்டாள். ஒட்டுத்திண்ணை போதும். ஒண்டிக் கொள்வாள் ஒச்சாயி. ஒச்சாயின்னு பேருவச்சதாலோ என்னவோ எல்லாமே ஒச்சம்தான் அவளுக்கு. பூப்படையாத பூ.
போனவாரம் தான் சந்தையில் ஆடுகளை விற்று, தங்கச்சி மகளுக்கு அண்டா, குண்டா, சேலை, தட்டுவரிசை, அதோடு காதுக்கு ஒரு ஜோடி தோடு என எடுத்து அவளால் முடிந்தளவிற்கு சபை நிறக்க சீர் செய்துவிட்டு வந்தாள். இதில் கழுத்துக்கு தங்கம் போடவில்லை என்ற அங்கலாய்ப்போடு, குச்சுக்கட்ட தாய்மாமன் இல்லையே என்ற கவலை வேறு அலமேலு மாமியார்க்கு. இவர்கள் பங்காளி வகையறாவில் ஒருத்தனை வைத்துதான் குச்சுகட்டினாள். கொள்ளிவைக்க மட்டுமில்லை ஆண் பிள்ளை கேட்பது. அக்கா. தங்கைகளுக்கென சீர்செய்யவும், தாய்மாமனாக சபையில் முன்னிற்கவும் இந்த மாதிரி நேரங்களில் ஆள்பிடிக்க வேண்டுமே என்றுதான் எப்பாடு பட்டாவது ஆண்பிள்ளை வேண்டுமென தாய்மார்கள் தலைகீழாக நிற்பது. அங்கே இங்கே என அலைந்ததில் உள்ளூர் விவகாரம் தெரியவில்லை அழகம்மைக்கு.
“மொத்தமா ஒரு அம்பது ஆளுக வேலைக்கு வேணும். ஆம்பளையாளுக. அதுக்கு மேல வந்தாலும் பரவாயில்ல. அடுத்த வாரத்துலருந்து பொம்பளையாளுகளும் தேவைப்படும். பதிவா தொடர்ந்து வேலைக்குவர்ற மாதிரி பாத்துக்கோ அழகம்ம. இன்னும் தேவைப்படும்.”
“யாருக்கு முருகேசா இம்பூட்டு ஆளுக?” குரல் ஆச்சர்யம் காட்டினாலும் கை மட்டும் நெற்று உலுப்புவதில் கவனமாக இருந்தது.
“எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்கதான்” என்றவனை யோசனையாகப் திரும்பிப் பார்த்தவள்,
“எங்க வேல… என்ன வேலைன்னு சொல்லாம ஆளுக மட்டும் கேக்குற?”
“தெக்கால கரட்டடி தோட்டம் தெரியும்ல?”
“ஆமா!”
“அங்கதான்!”
“அதுவா! புதரு மண்டிக்கெடக்தறதையா? அது பங்காளிகளுக்குள்ள கோர்ட்டு கேஸூன்னுல்ல இழுபறியா வெள்ளாம பண்ணாம தரிசால்ல கெடந்துச்சு.”
“அதே தோட்டம் தான். இப்ப மொத்தமா வேறொருத்தர் கைமாறிருச்சு. இப்போதைக்கு எல்லாம் வெட்டிகழிச்சு தோட்டத்த செம்ம பண்ணனும். அதுக்குதான் ஆம்பளையாளுக வேணும்.”
“இது எப்போ? யாரோ வெல பேசுறாங்கனு கேள்விப்பட்டேன். அம்பூட்டு நெலத்தையும் வாங்குறளவுக்கு நம்மூர்ல யாரு முருகேசா அம்பூ…ட்டுப் பெரிய ஆளு?” என ஒரு இழு இழுத்தாள்.
வாங்கியிருப்பது ஒன்றும் சாதாரண தோட்டமில்லையே. ஒருகாலத்தில் சுற்றுவட்டார கிராம மக்களுக்கெல்லாம் பொழப்பு கொடுத்து, கூலி கொடுத்த பெரிய பண்ணையம். கல்லு போட்டாலும் நெல்லு வெளையுற பூமி. மூட்டையில் பணத்தைக் கட்டிப்போய் வாரக்கூலி கொடுத்த பண்ணையம். பஞ்சத்திலும் வற்றாத கேணி. ஊர் எல்லையிலிருந்து கரட்டடிவரைக்கும் மொத்தமாக நூற்றைம்பது ஏக்கர். என்ன இருந்து என்ன பண்ண? எடுத்து வச்சாலும் சிலருக்கு கொடுத்து வைக்காதுல்ல. பண்ணையத்தார்க்கு மூனு பொண்டாட்டி. மூனுபேருக்கும் வஞ்சகமில்லாமல் தலா ஐந்து என பதினைந்து பிள்ளைகுட்டிகள். அண்ணன் தம்பிகளுக்குள் தோட்டம் பலபங்குகளாக பாகம் பிரிக்கப்பட, சண்டைசச்சரவில்லாமல் பாகம் பிரித்துவிட்டால் எப்படி? அதில் எனக்குக் கொஞ்சம் கூட, உனக்கு கொஞ்சம் குறைய, எனக்கு ஊரடித்தோட்டம், உனக்கு கரட்டடித்தேட்டம் என வாக்குவாதம் முற்றியதில், அனுசரித்து விட்டுக்கொடுத்து பேசியிருந்தால் சுளுவா முடிஞ்சுருக்கும். நீ பெரியவனா, நான் பெரியவனா என வீம்பு பிடித்ததில், மந்தையில் முடியவேண்டிய பஞ்சாயத்து நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. விளக்குமாறை திருடிவிட்டு தலையாரிவீட்டில் ஒழிந்த கதையாக, மூன்றுதாரத்துப் பிள்ளைகள் எனும் பொழுது, கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு என வழக்கு முடியாமல் பத்து பதினைந்து வருடங்களாக சவ்வாக இழுத்துவிட்டது. வெள்ளாமை செய்யாத தோட்டம் புதர்மண்டிப் போயிற்று. நிலத்துக்கு வழக்கு தொடுத்து, வழக்குக்கு நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலை. இப்பொழுது யாரோ மொத்தமாக வாங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டாள்.
அதன் பிறகு நான்காவது தங்கைக்கு மூன்றாவது பிரசவம், குடும்பக்கட்டுப்பாடு, இரண்டாவது தங்கை வீட்டு விசேஷம், சீர் என அங்குமிங்கும் அலைந்ததில் யாரென அவளும் கண்டு கொள்ளவில்லை. அவ்வளவு சொத்துக்களை வாங்குவதென்றால் யாரோ வெளியூரைச் சேர்ந்த பெரியதலையாகத்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டாள்.
“சரி முருகேசா! ஆளுக கூப்புட்டுக்கலாம். ஆனா, கூலி ஒழுங்கா வந்துரணும். முன்ன பின்ன ஆச்சுனா வெளியூராளுகன்னு கூட பாக்கமாட்டேன்.” எப்பவும்போல் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டென கரறாய்ப் பேசியவளிடம்,
“நீ சொல்லவே வேண்டாம். அவுகளுக்கே எல்லாந்தெரியும். யாருன்னு நெனச்சு நீ பேசுற?” தெரிந்திருக்கும் என நினைத்து இவன் பேச,
“யாராயிருந்தா எனக்கென்ன முருகேசா? தாயா புள்ளையா இருந்தாலும் எங்கிட்ட கணக்குவழக்குனா எல்லாரும் ஒன்னுதான்.” தேங்காய் உடைத்தது போல் பட்டென பேசினாள். அவளைப் பற்றி தெரிந்ததால் முருகேசனும் எதுவும் பேசவில்லை. சுற்றுவட்டாரத்தில் தோட்டம், தோப்பு, வயல் என நல்ல வசதி வாய்ப்பாக இருக்கும் எல்லாரையும் தெரியும். ஆனால் அவ்வளவு நிலத்தையும் ஒட்டுமொத்தமாக வாங்குமளவிற்கு யாரும் இல்லை. யாரென்று தெரியாதவர்களிடம் ஆரம்பத்திலேயே கராறாய் பேசிவிட்டால் பின்னால் வம்பு வழக்கு வராது.
முருகேசன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ஒச்சாயி இவளை அறக்கப்பறக்க ஓடிவந்து அழைத்தாள். அவள் பேச்சு வாய்க்குள் தண்ணீரை வைத்து கொப்பளிப்பது போல தளபுளன்னுதான் இருக்கும். குத்துமதிப்பாகத்தான் புரிந்து கொள்ளவேண்டும். சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள். ஒச்சாயி பதட்டத்தில் பேச்சு வராமல் கையசைத்து சாடைகாட்ட, அவள் காட்டிய பக்கம் திரும்பிப்பார்க்க, வெள்ளாடு ஒன்று ஈத்துவலியோடு கத்தியது. அவசரமாக தொரட்டியைப் போட்டுவிட்டு ஓடினாள்.
“நல்ல சகுணம் முருகேசா! ஆளு கூப்புட்டுக்கலாம்.” அவனிடம் குறிசொல்வதுபோல் சொல்லிவிட்டு ஓடினாள்.
மார்புக்கூடு விரிய, பின்னங்காலை அகற்றி நின்ற ஆட்டுக்குட்டியின் கண்களில் வலி அப்பட்டமாகத் தெரிய, எத்தனை தடவை பார்த்திருந்தாலும் இவளுக்கும் கண்ணோரம் ஈரம் கசிந்துவிட்டது. வலியை உடம்பால் உணராமல், உணர்வால் மட்டும் உணர்வதாலோ என்னவோ, ஒவ்வொரு முறையும் இவளுக்குள்ளும் பிரசவ வலியெடுக்கும். அவளுக்கு பிள்ளைகள் அவள் வளர்க்கும் குட்டிகள் தானே. குட்டிகளை விற்றுவிட்டு வீடு வந்தால் அன்றுமுழுவதும் அன்னந்தண்ணி இறங்காது அழகம்மைககு. அதற்காக ஆடுகளை விற்காமல் இருக்க முடியுமா என்ன?
“வச்சு அழகுபாக்கவா வளக்குறோம். கசாப்புக் கடைக்காரன் பாவம் பாத்தா அவன் தட்டுக்கு சோறு வருமா?” என பொன்னுத்தாயிதான் அதட்டி உருட்டி சாப்பிடவைப்பார்.
ஈத்து வலியெடுத்த ஆட்டை தலையை தடவிக் கொடுத்தவள், மெதுவாக மரத்தடி நிழல் தேடி நகர்த்திக் கொண்டுபோய் நிறுத்தினாள்.
அடித்தொண்டையில் கத்தி அடிவயிற்றுக்கு வலியைக்கடத்தியது குட்டி. சிறிது நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து குட்டிகளை ஈன்றது. அவள் வளர்க்கும் ஆடுகள் என்றுமே அவளுக்கு வஞ்சகம் செய்ததில்லை. ஒரே ஒரு கிடா குட்டி. மற்றதெல்லாம் கிடறி தான்.
“நம்ம வீட்டுக்கு எப்பவும் பொம்பள ராசிதான் போல.” தனக்குதானே சொல்லி சிரித்துக் கொண்டாள். மனுஷனுக்கு தான் பெண் பிள்ளைகள் செலவு. ஆடு மாடுகளுக்கு வரவுதானே.
ஒச்சாயி திரும்பிப் பார்த்தாள். இவள் இப்படித்தான் தனியாக பேசிக்கொள்வாள் என அவளும் கண்டுகொள்வதில்லை. எப்பொழுதாவது தான் அழகம்மை இந்த மாதிரி அசந்து மறந்து சிரிப்பதுண்டு. கோபம் எனும் முள்கொண்டு தனக்குத்தானே வேலி போட்டுக்கொண்ட கற்றாழைச் செடி அழகம்மை. இல்லையென்றால் ஊருக்குள் இருக்கும் விடலைகள் முதல் பல்லுப்போன கிழம் வரை விலாவில் குத்தி வேடிக்கை பார்த்துவிடும்.
புதிதாக பிறந்த குட்டிகளுக்கு இடுப்பில் சொருகியிருந்த ஆக்கறுவா எடுத்து, தொப்புள்கொடி அறுத்து முடிந்துவிட்டாள். இருவரும் வாயிலிருந்த கோழையை சுத்தம் செய்து, கடைசியாக விழுந்த மாசுப்பையை எடுத்து ஓரமாக குழிதோண்டி புதைத்தாள். மண்ணை அள்ளி கையைத் தேய்த்து, தேங்கியிருந்து குளத்துத் தண்ணீரில் கழுவி வர, அதற்குள் ஒச்சாயி மற்ற குட்டிகளையும் ஓட்டிவந்து குளத்தில் தண்ணீர் குடிக்கவிட்டாள். தட்டுக்கூடையில் குட்டிகளை அள்ளிப்போட்டு, ஆடுகளை ஓட்டிக் கொண்டு, தலைச்சுமையாக கூடையைத் தூக்கிக் கொண்டு வீடுவந்து சேர்ந்தாள்.
குட்டிபோட்ட ஆட்டை கொட்டத்தில் விடாமல், கண் பார்வையில் வாசல் முன் கட்டி வைத்தாள். குட்டிகளை பஞ்சாரம் போட்டு மூடிவைத்தாள் நாய்களிடமிருந்து பாதுகாக்க. மற்ற ஆடுகளை கொட்டத்தில் அடைத்து வந்தாள் ஒச்சாயி. மகளைப் பார்த்ததும் சுடுதண்ணீர் போட்டுவைத்தார் பொன்னுத்தாயி.
அன்னக்கிளி பிள்ளைகள் இரண்டும் குட்டிகளைவிட்டு நகரவில்லை. பஞ்சாரத்து ஓட்டைவழி குட்டிகளையே பார்த்துக் கொண்டிருந்தன.
அழகம்மைக்கு, ஆவி பறக்க கொதிக்க, கொதிக்க இருக்கவேண்டும் சுடுதண்ணீர். அப்பொழுதுதான் குட்டிபோட்ட ஆட்டுக்கவிச்சி உடம்பிலிருந்து போகும் அவளுக்கு. மற்ற நேரங்களில் குளிர்ந்த தொட்டி தண்ணீர்தான். உள்ளும் புறமும் தணலாய் தகிக்கும் வெக்கைக்கு அதுதான் தோதுப்படும்.
தண்ணீரை மகளுக்கு விளாவி வைத்தார். பின்வாசலில் ஆட்டுக்கொட்டத்தையொட்டி, தென்னை ஓலை கொண்டு நான்கு பக்கமும் மறைக்கப்பட்ட கொல்லை. அதுதான் குளியலறை. சாக்குதான் மறைப்பு.
பாவாடையை நெஞ்சோடு ஏற்றிக் கட்டிக்கொண்டு சுடச்சுட அலுப்பு தீர குளித்து வந்தாள். அதற்குள் பசி வயிற்றுக்குள் சடுகுடு ஆடியது.
“என்னம்மா கொழம்பு?” சேலை கொசுவத்தை, வயிற்றை எக்கி இடுப்பில் சொருகிக் கொண்டே கேட்ட மகளை திரும்பிப் பார்த்தார். பதினாறு காய்ப்பருவமென்றால், முப்பது கனிந்த பருவம். மஞ்சள் குளித்துவந்த மகளைப்பார்த்த பொன்னுத்தாயிக்கு இழுத்து பெருமூச்செரிவது தவிர வேறு வழி தெரியவில்லை. மற்ற பிள்ளைகள் கிளைவிட்டு படர்ந்து நிற்க, பெரிய மகள் தனிமரமாய் நிற்பது பொறுக்கமாட்டாமல் நெஞ்சறுத்தது. தானும் சுயநலமாக இருந்துவிட்டது இப்பொழுதுதான் உரைக்க ஆரம்பித்திருக்கிறது பொன்னுத்தாயிக்கு.
“என்னம்மா! கேட்டது காதுல விழுகலையா?” முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டே வெளிதிண்ணையில் வந்து அமர்ந்தாள். பிள்ளைக்கு பால் கொடுத்துக் கொண்டே அன்னக்கிளி சிரிக்க,
“என்னடீ?”
“நீ மாறவே இல்லக்கா. இதுவரைக்கும் என்ன கொழம்புனு கேக்காம நீ சாப்பிட்டதேயில்ல.” என தங்கையின் கேலியில், அழகம்மைக்கும் சிரிப்பு வந்தது.
“யக்கோவ்! காலையில சூரியன் மேக்கால உதிக்குதானு பாக்கணும். நீ கூட சிரிக்கிற.”
சின்னத்தின் நையாண்டிக்கு சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை பொன்னுத்தாயிக்கு.
“தட்டுல சோத்தப் போட்டு, கொழம்பு ஊத்துனா தெரியப்போகுது. இல்ல சின்னாயி?” ஒச்சாயி திக்கிக் திணறி இவளுக்கு பதிலும், பொன்னுத்தாயிடம் கேள்வியும் கேட்டாள்.
இரண்டு பேருக்கும் தட்டில் சோற்றைப்போட்டு எடுத்து வந்தார். மொச்சைக்கொட்டை, கத்திரிக்காய், கருவாடு போட்டுவைத்த புளிக்குழம்பு.
மகள் வாழ்க்கையைத் தான் ருசிக்க வைக்க முடியவில்லை என சமையல் எப்பொழுதும் அழகம்மைக்கு பிடித்ததுதான். இருந்த பசிக்கு, ஆவலாக அள்ளித்திண்பவளையே பார்த்தவருக்கு அவளின் பசி புரிந்தது.
‘ச்சே… பிள்ள திங்கறதையே பாக்குறேனே. அவளுக்கு ஏதாவது வந்துறப்போகுது’ என தன்னையே சடைத்துக் கொண்டார்.
“அம்மா! கரட்டடி தோட்டத்த யாரோ வாங்கியிருக்காங்கலாமே. தெரியுமா?” ஊர்ச்செய்தி வாசித்தாள் அம்மாவிடம். வீட்டிற்கு வந்தால் சுற்றுவட்டார செய்தியெல்லாம் பொன்னுத்தாயிடம் வாசிப்பாள்தான்.
“அம்பூட்டு தாட்டியமான ஆளுக யாருடீ?”
“தெரியல… முருகேசன் ஆளு சொல்ல சொன்னாப்ல.”
“அக்கா! நானும் வர்றேனே. அதான் முப்பது சென்டுருச்சுல்ல?”
“என்ன வெளையாடுறியா? ஆப்ரேஷன் பண்ணுன ஒடம்பு. வெயில் தாங்கதுடீ!”
“அதெல்லாம் பாக்குற நெலமையிலயா நானிருக்கேன். எப்படியும் இதுக அப்பங்காரன் வந்ததும் வெட்டுவேன் குத்துவேன்னு நிப்பான். அனுப்பும்போதே மூனாவது பொம்பளப்பிள்ளைனா அங்கேயே இருந்துக்கோனு சொல்லித்தான் என் மாமியா அனுப்பி வச்சா. பிள்ள பொறந்த தகவல் சொல்லிவிட்டும் இன்னும் எட்டிக்கூட பாக்கலபாரு. ஒரு மாசமாச்சு!”
“நீயே உன் தலையில மண்ணவாரிப் போட்டுக்கிட்ட. ஈசன் எழுதுனத அழிச்சா எழுத முடியும்?”
வயதுக்கோளாறில் அவசரப்பட்டு வயிற்றில் வாங்கிவந்த மகளை இப்பொழுதும் இடித்துரைத்தார் பொன்னுத்தாயி.
பருவம் பதினாறில், பறக்கும் பருவச்சிட்டாய் இருந்த அன்னக்கிளியை, கன்னிவைத்து மடக்கிப் பிடித்தான் இளந்தாரி செவலக்காளை. இளங்கன்றுகள் பயமறியாமல், சோளக்காட்டில் துள்ளி விளையாண்டதில், பதியம் போட்டுவிட, வெளியே தெரிந்து மானம் மந்தையேறுவதற்குள், அவனை மிரட்டி கல்யாணத்தைப் பேசி முடித்துவிட்டாள் அழகம்மை. விடலை வயதென்பதால் அவனும் பயந்துவிட்டான்.
அவனைப்பற்றி தெரிந்தவர்கள், சாராயம் காய்ச்சுபவன், கொலைப்பழிக்கு அஞ்சாதவன் என எச்சரிக்க, உரலுக்குள்ள தலைய விட்டாச்சு, உலக்கைக்குப் பயந்தா ஆகுமா என கல்யாணத்தை முடித்துவிட்டாள்.
“மூத்தவ இருக்கும்போது உனக்கென்னடி அவசரம்?” பொன்னுத்தாயி வெளக்குமாறால் வெளுத்து வாங்கியது நான்காவது மகளை. இதற்கு முன் இரண்டை சீர் செய்து கட்டிக்கொடுக்கும் போது மூத்தவள் இருப்பது தெரியவில்லை போல. அதற்கடுத்து வந்தவர்களும் வீட்டில் இளசு இருக்கும்பொழுது, முற்றல் விலை போகாமல் போக, அஞ்சாவதும் அழகம்மை தயவில் கரையேறிவிட்டது. ஓடம் என்றைக்கு கரைகடந்திருக்கிறது. கரையோடு ஒதுங்கி நின்றுவிட்டது.
“மூனு மாசமாவது முழுசா முடியட்டும் அன்னம். ஒடம்பு தேறட்டும். பதிவா ஆள் வேணும்னு முருகேசன் சொன்னாப்ல. தோட்டம் எல்லாம் செம்ம பண்ண கொஞ்சம் நாளாகும். அதுக்கு பின்னால போவியாம்.” சாப்பிட்டுக் கொண்டே தங்கைக்கும் கோளாறு சொன்னாள்.
பட்டியடைத்து வந்து படுத்தவளுக்கு ஏனோ இன்று மனம் இலேசானது போலிருக்க காரணம் மட்டும் புரியவில்லை. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.
‘என்ன ஒரே யோசனையா இருக்க போல?’
“என்னான்னு தெரியல. மனசு காத்தா இருக்கு.”
‘ஆடு அஞ்சுகுட்டி போட்ட சந்தோஷமோ?’
“இன்னைக்கு தான் புதுசா ஆடு குட்டி போடுதாக்கும்?”
‘அப்பறம் என்னதான்டி மனசுக்குள்ள ஓடுது?’
“தெரியல.”
‘நான் சொல்லவா?’
“ம்ம்ம். ஒனக்கு தெரியுமா?”
‘கரட்டடி தோட்டம்!’
ஜிவ்வென மேனியெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது. மழை வரும் அறிகுறி தெரிய, மறைப்புக்கட்டிய சாக்கை எடுத்து கூரையில் சொருகிவிட்டு படுத்துக் கொண்டாள். சில்லென காற்று முகத்தில் அறைந்து, மேனி தழுவியது. கையை கழுத்துக்கடியில் வைத்துக் கொண்டாள் கதகதப்பாக.
‘கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டிருக்கோம். நீ சைக்கிள் பழகி, விழுந்து புதையல் வாரினதெல்லாம் அங்கதானே? அப்பறம் அந்த ரெட்டப்புளியமரம்!’
“அத ஏன் இப்ப ஞாபகப்படுத்துற? இன்னும் ஒனக்கு அது ஞாபகமிருக்கா?”
‘ஏன் நீ மறந்துட்டியா?’
“…”
‘என்னடீ பேச்சையே காணோம்?’
“…”
‘ஏய்ய்ய்… தூங்கிட்டியா என்ன?’
“…”
‘ஏய்… வெக்கப்படுறியா! என்னமோ நம்ம பண்ணின மாதிரி வெக்கப்படுற?’
“ச்ச்சீ போ! பாவம் அவுங்க. புதுசா கல்யாணமானவங்க. அக்கம்பக்கம் பாக்காம ஒதுங்கப்போக, அதப்போயி பாத்து, இப்ப அந்த அக்காவப் பாத்தாகூட சிரிப்பு வந்துரும்.” விரிந்த சிரிப்போடு அணைத்துக் கொண்ட கரங்களுக்குள் பாந்தமாய்ப் பொருந்திக் கொண்டாள் அழகி.
*****
“அழகு!” தெருவில் கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடிவந்தாள் ஒச்சாயி.
“ஏய்! விழுந்து கிழுந்து தொலச்சுறாத. சேலைக்குள்ள பூரான் புகுந்துருச்சா என்ன?”
“இ…இ…இவ புருஷன் ஜெயில்லருந்து வ…வ…ந்துட்டியான். உம்மேல பஞ்சாயத்துல பிராது கொடுத்துருக்கான்” என தத்தித்தத்தி சொல்லி முடிக்கவில்லை,
“எவடீ வீட்ல… வெளிய வாங்கடீ. கேக்க ஆம்பளையில்லைனு பொம்பளைகளா சேந்து நாட்டாம பண்றீகளா?”
விடிந்தும் விடியும் முன் சாராய போதையில் வந்து தள்ளாடி நின்றான் செவலக்காளை.

Super super super
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Kanavuleye vazhnthuduva pola azhagu
Welcome dear. Thank youuuuuu so ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫