14
மதனுக்கு, மாமனார் வீட்டிலும், காலை வழக்கம் போல் நான்கு மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது. இருக்கும் இடம் நினைவிற்கு வர, இடது கையை அசைக்கக் கூட முடியவில்லை. கண்களை அகலவிரித்துப் பார்க்க, அவன் எதிர் பார்த்தது தான் நடந்திருந்தது
வேறென்ன… கண்ணா லட்டு திண்ண ஆசையா மொமண்ட் தான் நம்ம மதன்கைலாஷ்க்கு. மனது இனிமையாய் விசிலடித்தது. கிட்டத்தட்ட அவனது உடலில் சகத்தை முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பு செய்திருந்தாள் அவனது சகதர்மினி. குப்புறப் படுத்தவாக்கில், இடபாகம் முழுவதும் தனது பாதி உடலால் நிறைத்து, கழுத்தோடு கையை சுற்றிப்போட்டு, இடது முழங்கால் அவனது இடுப்பின் மீது.
அவள் அக்கறையாக காலுக்கு வைத்த தலையணையை அவளே உதைத்துத் தள்ளியிருந்தாள். இரவு கட்டிலின் நுனியில் தயங்கித் தயங்கி அமர்ந்தவள், இப்பொழுது இருக்கும் கோலம் நினைவிற்கு வர, மேனி முழுவதும் ஒருவித இனம்புரியா அவஸ்த்தையில்… கண்கள் சிரிக்க, மென்னகை பூத்தது இதழோரம். மங்கையவள் மூச்சுக் காற்று மார்பில் சூடாகப் பரவ, மிதமாக தகிக்க ஆரம்பித்தது மன்னவனுக்குள்.
சுகமான சுமையை இழக்க விரும்பாதவனாக அப்படியே கண்மூடிப் படுத்திருந்தான் சில கணங்கள். அவனையும் அறியாமல் அவளைத் தோளோடு சுற்றி வளைத்திருந்த கரத்தில் அழுத்தம் அதிகரிக்க, சுதாரித்தவன்… அசையாமல், தலைமாட்டில் இருந்த, தன் கைபேசியை எட்டி எடுத்தான். அதில் இருவரையும் சேர்த்து சுயமி கிளிக்கிக் கொண்டான்.
கை மரத்துப் போனதுபோல் இருக்க, மெதுவாக தனது கழுத்தில் இருந்து அவளது கையைப் பிரித்தெடுக்க முயற்சி செய்ய, மீண்டும் கழுத்தோடு இறுக்கிக் கொண்டாள். மார்பு முடிகள் கன்னத்தில் குறுகுறுப்பூட்ட, மூக்கை நெஞ்சோடு வைத்து தேய்த்தவள், காலை இன்னும் கொஞ்சம் மேலேற்றி, அடிவயிற்றில் தூக்கிப் போட்டாள்.
“அப்ப்ப்பாஆ…” என சத்தம் வராமல் முனங்கியவன், ’இவ வேற… காலங்காத்தால மனுஷனோட அவஸ்த்தை புரியாம… கொஞ்ச நாள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது போலயே?’ நொந்து கொண்டவனுக்கு அவளை எழுப்பவும் மனதில்லை. எழவும் மனதில்லை.
இந்நேரத்தில் எழுந்து அவனுக்குதான் பழக்கம்.
அவர்கள் வீட்டில் என்றால் பால் கரக்க, மாட்டைக் கவனிக்க, என அடுத்தடுத்து ஏதாவது வேலை இருக்கும். இங்கு இந்நேரத்திற்கு எழுந்து என்ன செய்வதென்று அவனுக்கே புரியவில்லை.
இவளை எழுப்பிவிட்டு என்ன செய்யப்போகிறாள் என நினைத்தவன், கழுத்தைச் சுற்றிக் கிடந்த கையை, வலுவில் பிரித்து எடுத்து நகர்ந்து கொண்டவன், தலையணையை எடுத்து வைக்க, அப்பவும் தூக்கம் கலையாமல் அதையும் இறுக்கி அணைத்துக் கொள்ள,
“டேய்… மதனா… கும்பகர்ணனுக்கு தங்கச்சியா இருப்பா போலடா. பொண்டாட்டி அணைச்சுக்கிட்டான்னு தலைகீழா நின்றாத! தலகாணி இருக்க வேண்டிய இடத்துலதான் நீ இருந்திருக்க… நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்… ம்ஹும்’ பெருமூச்சோடு அலுத்துக் கொண்டே எழுந்தவன் பாத்ரூம் சென்றுவிட்டான். தண்ணீர் திறக்கும் சப்தம் கேட்ட பிறகுதான் மெதுவாக ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். இதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை சடுதியில் விடுதலை செய்து ஆசவாசப்பட்டவள் இதயம் அமளிதுமளியாய்த் துடித்தது.
அவனது மார்பில் முகத்தை உரசியபோதே, அதன் திண்மையிலும், மார்பு முடியின் சொரசொரப்பிலும், தலையணை மாதிரி சாஃப்ட்டா இல்லையே. இதென்ன பாறாங்கல்லாட்டம்’ என யோசனை செல்லும் பொழுதே,
அவளுக்கும் முழிப்புத் தட்டிவிட்டது.
அறையிருட்டில் கண்ணைத் திறந்தவளுக்கு கண் முன் காட்சி தந்தது, அவனது மார்பில் துவண்டு கிடந்த சங்கிலியோடு, கை குலுக்கிக் கொண்டிருந்த சாதி மல்லிச்சரம் தான். இருக்கும் நிலையைக் மூளை கிரகிப்பதற்குள்ளே, சில கணங்கள் செலவாகியிருக்க, அதற்கடுத்து யோசிக்கக் கூட முடியவில்லை, கப்பென மூச்சு அடைத்துக் கொண்டது. இதயம் தொண்டைக்குழிக்கு ஏறிவிட்டது. ‘முருகா… முருகா… முருகா…’ என காலங்காத்தாலே வள்ளி மணாளனின் மந்திரம் ஓத ஆரம்பித்துவிட்டாள் மதனின் மணாட்டி.
அவன் நகர்ந்து கொண்டு தலையணை வைக்க, பதட்டத்தை மறைக்க தலையணையை இறுகக் கட்டிக்கொண்டவள், கண்களை பசை போட்டது போல் ஒட்டிக்கொண்டாள். கும்பகர்ணன் தங்கச்சி என்ற கிண்டல் அவளை சீண்டினாலும், ரோஷப்பட இது நேரமில்லை என மீண்டும், தூங்கும் பாவனைசெய்தாள். தூங்குறவங்களைத்தானே எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாதே. அப்படியே படுத்திருந்தவள், குளியலறை கதவு திறக்கும் சப்தம் கேட்க, மீண்டும் கண்களை சட்டென மூடிக்கொண்டாள்.
டீ சர்ட் எடுத்துப் போட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியேறி இருந்தான். எழுந்து அமர்ந்தவள், லஜ்ஜையாக கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள். இனியெங்கே தூங்குவது. அவளது தூக்கத்தையும் சேர்த்து களவாடிச் சென்றுவிட்டான்.
“உம்பக்கத்துல படுக்கணும்னா புண்ணிய ஆத்மாதான் பிறந்து வரணும். நானெல்லாம் அந்தளவுக்கு புண்ணியம் பண்ணலக்கா!” தனதருகில் படுக்க அச்சப்படும் தங்கையின் கிண்டலை நினைத்து இப்பொழுது சிரிப்பு வந்தது மாதங்கிக்கு, அந்த புண்ணிய ஆத்மாவை நினைத்து. அவளையும் மீறி கன்னம் சிவந்துவிட, தலையணையில் முகம் புதைத்து குப்புறப்படுத்துக் கொண்டாள்.
படுக்கை அறையைவிட்டு வெளியே வந்தான். இன்னும் யாரும் எழுந்திரிக்கவில்லை. அங்கிருந்து கீ ஹோல்டரில் இருந்த சாவிகளில், வீட்டு சாவி போல் தெரிந்ததை எடுத்தவன், கதவைத்திறந்து வெளியே வந்தான். வெளிக் கேட்டையும் திறந்து வாசலுக்கு வர, இன்னும் இரவுக் காதலனைப் பிரிய மனமில்லாமல் சிவந்து சிணுங்கிக் கொண்டிருந்தது அடிவானம்.
மெதுவாக நடக்க ஆரம்பித்தவன், கை வீசி வேகமாக நடையை துரிதப்படுத்தினான். அடுத்து மெல்லோட்டமாக ஓட ஆரம்பித்தான். அந்நேரத்திற்கும் சில இளவட்டங்கள் ஜாகிங் சென்று கொண்டிருந்தனர். நடைபயிற்சி செய்பவர்களுக்கென கற்றாழைச் சாறு, அருகம்புல் சாறு என அதிகாலையே கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
இளநீர் கடையும் இருக்க, ஓடி முடித்தவன் தன் வழமை போல் இரண்டு இளநீர் வாங்கி குடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்.
இவன் உள்ளே வர, அப்பொழுதுதான் எழுந்து காஃபி குடித்துக் கொண்டிருந்த, வாசுதேவன் இவனைப் பார்த்ததும் உள்ளே எழுந்து சென்றுவிட்டார். இவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அவரது குடும்பத்தார்க்கு அவர் சிம்ம சொப்பனமாக இருக்க, மருமகனோ அவரை சிரிப்பு போலீஸ் ரேன்ஞ்சுக்கு அல்லவா இறக்கிவிட்டான்.
மாதங்கி, அவனது கைபேசி எண்கூடத் தெரியாது என்றதில், ‘அவனுக்கு பெயர் கூடத் தெரியவில்லை, மகளுக்கு ஃபோன் நம்பர் கூடத் தெரியவில்லை… நாம்தான் மகளை தவறாகப் புரிந்து கொண்டோமோ’ என மனதின் ஓரம் சிறு யோசனை தோன்றினாலும், அதற்கு விளக்கம் கேட்க முனையவில்லை.
அவரே விளக்கமும் கேட்டு, ஏன் இந்த அவசரத் திருமணம் என கேள்வி எழுந்து, குதிருக்குள் இருக்கும் அப்பனை வெளியே கொண்டுவர விருப்பமில்லை.
கூட்டத்திற்குள் கட்டுச்சோற்றை பிரிக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம் என, அமைதியாகிவிட்டார்.
அதற்காக மகள் மீது கரிசணை எல்லாம் இல்லை. அதெப்படி என்னை கேட்காமல் கோவில் போகலாம் என்ற கோபம் அப்படியேதான் இருக்கிறது. அதனால் எத்தனை அவமானம். இவரைப் பார்த்தாலே நேருக்கு நேர் நின்று பேச யோசிப்பவன் கூட, யாரையும் இந்தக் காலத்துல நம்ப முடியல என முதுகுக்குப் பின்னால் சாடை பேசிச் சென்றான்.
சிலர் நேரிடையாகவே, “இந்தக் காலத்துல இதெல்லாம் சாதாரணம் வாசு சார். பையன் யாரு எவருன்னு விசாரிச்சு, நீங்களே வெளியே தெரியாம, கல்யாணத்தை முடிச்சு வச்சுருங்க. அதுதான் கௌரவம்” என ஆலோசனை சொல்லிச் சென்றனர்.
இப்பொழுது போய் என் மகள் அந்தமாதிரி திருட்டுக் கல்யாணம் எதுவும் செய்யவில்லை என ஒவ்வொருத்தரிடமும் சொல்லவா முடியும். அன்று போன மானம் போது தானே. ஆகவே கோபத்தை அப்படியே மனைவி மீதும், மகள் மீதும் நங்கூரம் போட்டு தூக்கிப்பிடித்திருக்கிறார்.
அன்றிரவு, மகளிடம் பேசியை கொடுக்கச் சொல்லி, பூங்கோதையிடம் எடுத்துக் கொடுக்க, அணைந்து கிடந்த கைபேசியை சார்ஜரில் போட்டுவைத்தார்.
அறைக்குள் கேட்ட சிரிப்பு சப்தத்தில், ஜெகதாம்பாள் முணுமுணுக்க, வாசுதேவன் கோபமாக எழுந்து உள்ளே வர, அப்பொழுதுதான் மதன் அனுப்பிய, வாட்சப் மெசேஜும் வந்தது மாதங்கி கைபேசிக்கு. சார்ஜரில் இருந்து எடுத்துப் பார்த்தார். அவன் அனுப்பிய பாடலும், அதற்குத் தோதாக முத்தம் வைக்கும் கார்ட்டூன் இமேஜ்களும் அனுப்பியவன், இறுதியாக, அதைத் தொடர்ந்து பறக்கும் முத்தம் கொடுக்கும் எமோஜிகளை வரிசையாகத் தட்டியிருந்தான்.
அவரை வெறுப்பேற்ற அவன் அனுப்பிய பாடல், “போட்டுவைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…” என கமல்ஹாசன் குஷ்பூவோடு காதலோடு கட்டிப் புறளும் பாடல். அதைப் பார்த்ததில் இருந்து தான், எது உண்மை எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார். மகள்சொல்லியது உண்மையா, இவன் அனுப்பிய குறுஞ்செய்தி உண்மையா என குழப்பத்தில் இருக்கிறார். அவன் வெளியே இருந்தால் அவர் உள்ளே செல்வதும், அவன் உள்ளே இருந்தால் மட்டும் இவர் வெளியே வருவதும் என மாமனும், மருமகனும் உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருக்கின்றனர். அவன் குளித்து வெளிவர, சோஃபாவில் அமர்ந்திருந்தவர் உள்ளே எழுந்து செல்ல, அதைப் பார்த்து சிரிப்பு தான் மருமகனுக்கு.
அடுப்படியில் அம்மாவோடு மாதங்கி மல்லுக்கட்டும் சப்தம் கேட்டது. “ம்மா… நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. நானும் ராகினியும் பாத்துக்கறோம். இப்பவே தலை சுத்திருச்சு. சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணனும்மா. உங்களுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது.” கண்டிப்பு குரலில் அதட்டிக் கொண்டிருந்தாள்.
“இப்ப தானே மதி கல்யாணம் முடிஞ்சது. மறு வீட்டு விருந்து எல்லாம் முடியட்டும் பாக்கலாம்!”
“அப்பவும் பாக்கலாம் தானா. எங்க பேச்ச எப்போ கேட்டீங்க. தள்ளுங்க… அவருக்கு நம்ம வீட்டுக் காரம் ஒத்துக்கல. நானே டிஃபனுக்கு பாக்குறேன். நீங்க உக்காருங்க!” அங்கே கிடந்த சேரை இழுத்துப் போட்டவள், அம்மாவையும் வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்து அமரவைத்தாள்.
“பார்றா… அக்கா ஒரே நாள்ல குடும்ப ஸ்த்திரி ஆகிட்ட?” ராகினி கேலி செய்ய,
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை… நேத்து நீயே உங்க மாமா ஃபேஸ் பாத்த தான? அவங்க வீட்லயும் காரம் கம்மி தான் ராகி!” என்று சொல்ல…
“ரைட்… ரைட்… குடும்ப ஸ்த்திரி ப்ரொமோஷன் கிராண்டட்” என்ற தங்கையை அருகில் இருந்த தோசைக் கரண்டி எடுத்து பொய்யாக அடிக்க ஓங்க,
“பாத்தியா… அம்மா மாதிரி தோசைக்கரண்டி கையில எடுத்துட்ட… குடும்பத் தலைவிக்கான பத்துப் பொருத்தமும் பக்காவா பொருந்துதுக்கா” தங்கையின் கேலி, அம்மா மாதிரி என்றதில், இவ்வளவு நேரமாக இருந்த மனநிலை சட்டென மாறி முகம் சுருங்கியது.
அம்மா மாதிரி சுயம் தொலைத்து, எல்லாவற்றிற்கும், வாழ் நாள் முழுதும் வளைந்து கொடுப்பதா? நிமிரவே முடியாதா? இப்பொழுதும் அவனுக்கெனத்தானே மனம் யோசிக்கிறது.
வீடு எனும் நான்கு சுவற்றுக்குள்ளே எனது வாழ்க்கையும் அடங்கி ஒடுங்கி விடுமா? படிப்பும் அரைகுறை. வேலைக்கும் செல்ல முடியாது. வாழ்நாள் முழுவதும் ஒருவரைச் சார்ந்தே இருப்பதா? அதுதான் எனக்கும் விதிக்கப்பட்டிருக்கிறதா?
அம்மாவும் என்றாவது அவர்களுக்கென்று ஏதாவது தனியாக செய்திருக்கிறார்களா? ஒன்று கணவருக்காக. இல்லையென்றால் பிள்ளைகளுக்காக. குடும்பத்தார் விருப்பமே அவரது விருப்பமாக இருந்திருக்கிறது வாழ்நாள் முழுக்க. இதற்கு மேலும் அவர்களுக்காக யோசிப்பார்களா என்றால், இல்லை என அடித்துச் சொல்லலாம். உடம்பை பேணக்கூட கடமை முடியட்டும் என நாள்கடத்த வேண்டியிருக்கிறது.
சுயமரியாதை, தன்மானம், சுய சம்பாத்யம் என சித்தாந்தம் படித்தவளுக்கு, தன் மனம் ஒருவன்பால் சாய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அன்பு ஒருவரை அடிமைப்படுத்தாது. தன்னுள் சகமாகத்தான் பாவிக்கும். தான் என்ற அகந்தை தான் அதிகாரம் செய்யும் என்பதை உணரும் பக்குவம் வரவில்லை.
“என்னக்கா… சட்டுனு சைலன்டாயிட்ட… ” என்ற தங்கைக்கு,
“ம்ம்கூம்… ஒன்னுமில்லை” என்றவளுக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுவோமோ என்ற பயம் உள்ளுக்குள்.
*****
“சீக்கிரம் வாங்கத்தா… ஏஞ்சாமி வாசல்லயே காத்து நிக்குது!”
“வந்துட்டோம் ஆத்தோவ்… பறக்காத!” உள்ளிருந்து குரல் வர, அதைத் தொடர்ந்து ஐந்து சுமங்கலிப் பெண்கள், ஆரத்தித் தட்டோடு சிரிப்பும், பூரிப்புமாக வெளியே வந்தனர். தோப்பில் வேலைக்கு வந்தவர்கள் அவர்கள்.
மதன், மறு வீட்டு விருந்து முடித்து நேரே தோப்பு வீட்டிற்கு அழைத்து வந்தான் மாதங்கியை. தனசேகரனிடம் கார் வேண்டாம், பைக் இருப்பதாக ஃபோனில் அழைப்பு விடுத்து சொல்லிவிட்டான். பைக்கில் அவள் அமர்ந்த பிறகுதான் தெரிந்தது அவளுக்கு வண்டியில் அமர்ந்து பழக்கமில்லை என்பது. சேலை வேறு. ஒருபக்கமாகத்தான் அமர முடிந்தது. அதுவும் வழுக்கும் ஷிபான் புடவை. ஈரோடு வரை அவளால் உட்கார்ந்து வர முடியாது எனத் தோன்ற, நரேனை அழைத்து காரை தோப்பிற்கு எடுத்துவரச் சொல்லிவிட்டு, தோப்பிற்கு அழைத்து வந்தான்.
விளக்குமாற்றுக்கு தென்ன ஈர்க்கு கிழித்துக் கொண்டிருந்த சுப்பாத்தா, வண்டியில் இருவரும் வருவதைப் பார்த்துவிட்டு வயதையும் மீறி துள்ளி எழுந்துவந்தார். வண்டியை நிறுத்துமுன் வழுக்கிக்கொண்டு இறங்கி இருந்தாள். ஸ்டான்ட் போடும் முன் இறங்கி, காலூன்றும் முன் தடுமாறியவளை கைபிடித்து நிறுத்தினான்.
“என்ன அவசரம்?” என்றான் கண்டிக்கும் குரலில். வண்டி வேகத்தடையில், ஏறியிறங்கும் பொழுதெல்லாம் தோளையாவது பிடிப்பாள் என மனம் சிறியதாய் நப்பாசை கொள்ள, அவளோ சைடு கம்பியை இறுக்கிப் பிடித்தவள்தான் இறங்கும் வரை விடவேயில்லை.
அன்று கோவிலிலாவது முன்னப்பின்ன தெரியாத நிலையிலும், கூட்ட நெரிசலில் தடுமாற, ஏதேச்சையாக இவனது சட்டையைத் தான் கொத்தாகப் பற்றியிருந்தாள். ஆனால் இன்று வண்டியில் பின்னால் அமர்ந்தும், அவளால் ஸ்த்திரமாக அமரமுடியவில்லை என்பது புரிந்தும், மறந்தும் அவனைப் பற்றிக் கொள்ள கை எழவில்லை. விழுந்து விடுவாளோ என இவன் தான் வண்டி வேகத்தைக் குறைத்து, ஆமைபோல் ஊர்ந்து வரவேண்டியதாயிற்று. இப்படியே போனால் வீடுபோய் சேர்வதற்குள் விடிந்துவிடும் என்றுதான் காரை எடுத்துவரச் சொல்லிவிட்டு தோப்பிற்கு அழைத்து வந்தான்.
இரவு படுக்கும் பொழுதெல்லாம் இருவரின் பரஸ்பர பேச்சுவார்த்தை, இருவரையும் இயல்பாக்கி இருந்தது. காலையில் கூட அடுக்களையில் அம்மாவுடனும், தங்கையுடனும் வளவளத்தது நன்றாகவே கேட்டது.
ஆனால் அதன் பிறகுதான் இவளது மூளைக்குள் எது அரித்து திண்கிறதென கண்டுகொள்ள முடியவில்லை.
ஒரு வேளை அம்மா வீட்டை விட்டுப் பிரிந்து வரும் வருத்தமோ என அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“அடியேய்… ஒரு நாலஞ்சு பேரு இங்க வாங்கத்தா… எஞ்சாமி மொத மொதன்னு வூட்டுக்காரம்மாவ கூட்டியாந்திருக்கு. வீட்டுக்குள்ள போகையில ஆரத்தி எடுக்கோணும்!” அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை ஆர்வமாக கூவி அழைத்தார் சுப்பாத்தாள். பெண்கள் வர, தன் சுருக்குப் பையில் இருந்து வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு எடுத்து கொடுத்தவர், ஆரத்தி கரைத்து எடுத்து வரச் சொன்னார். அவர்கள் உள்ளே செல்ல,
மதன், “வீட்டுக்குள்ள போகல ஆத்தா. இன்னொரு நாள் பாத்துக்கலாம்!” என சொல்லிக் கொண்டிருக்க நரேனும் காரோடு வந்துவிட்டான்.
“இம்பூட்டு தூரம் கூட்டியாந்துட்டு உள்ளாற போகாமா எப்படி கண்ணு. நல்லா கூட்டிப் பெருக்கி, சுத்தபத்தமாத்தான் வச்சிருக்கு. வம்சம் தழைஞ்ச வீடு. பெரியவங்க ஆசீர்வாதம் வேணும் சாமி. உன்ர வூட்டுக்காரம்மாவ உள்ளாற அழச்சுட்டுப் போய் வீட்டக்காமி கண்ணு.” சுப்பாத்தாள் சொல்ல, மூத்தவர் வாக்காக அதை அவனால் மறுக்க முடியவில்லை.
மொத்தமாக சுத்தம் செய்யமுடியவில்லை என்றாலும் தோப்பிற்கு வரும் பெண்களை வைத்துக் கொண்டு, கீழ் மட்டிற்காவது சுத்தமாக தூசிதட்டி சுத்தம் செய்து வைத்துவிடுவார்.
தலைமுறை தலைமுறையாக வம்சம் பெருகிய வீடு. தங்கள் தலைமுறையில் அடைத்துக் கிடப்பதை பார்க்கும் பொழுது அவனுக்கும் மனம் கணக்கும் தான். மதனை முதன் முதலாக இங்கு தான் அவனது தாத்தா சிவகைலாசம் அழைத்து வந்தார். அவரது கைபிடித்து நின்றவன் அண்ணார்ந்து வீட்டைப் பார்க்க, அவன் கண்முன் தோன்றிய பிரமாண்டம் பத்து வயது சிறுவனை வாய்பிளக்க வைத்தது. அவன் பார்த்த மாயாஜாலப் படங்களில் வருவது போல் வீடு தோற்றமளித்தது.
தனக்கு பெற்றோர் தவிர, உற்றார், உறவினர் யாருமில்லை என்று எண்ணியிருக்க, வீடு முழுக்க சொந்த பந்தங்கள், வேலை ஆட்கள், கூடவே அண்ணன் முறையில் இருவர், அவ்வப்பொழுது வந்து செல்லும் அத்தை மகன் என தன்னை ஒரு ராஜாங்கத்தின் அங்கமாக உணரவைத்த வீடு.
அதுவரை அவன் சென்னையில் பெற்றோர்களோடிருந்தது ஒற்றைப் படுக்கை அறையோடு கூடிய வரிசை வீடுகள். இரண்டு வீட்டிற்கு ஒன்று என பொது குளியலறையும், கழிப்பறையும். காலையில் அவசரத்திற்கு கூட நினைத்த நேரத்தில் போக முடியாது. அப்பொழுதே அலுப்பும், சலிப்புமாக சண்டை தொடங்கிவிடும் இவனைப் பெற்றவர்களுக்குள்.
தன் குடும்ப வளமை கண்முன் வந்து போகும் குணசேகரனுக்கு. தன் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்குக் கூட இதைவிடப் பெரிய வீடு கட்டிக் கொடுத்திருப்பது நினைவில் தோன்றும். அதன் ஆற்றாமை இந்த மாதிரி நேரங்களில் கோபமாக வெளிப்படும். வார்த்தைகள் தடித்து விழும். எல்லாம் இந்த பாழாய்ப்போன காதலால் என இயலாமை வெடித்துக் கிளம்பும். அந்த சூழ் நிலைக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளமுடியாமல் மூச்சுமுட்டும் வெக்கையில் நேசம் விட்டு வளர்த்த காதல் பயிர் கருக ஆரம்பித்தது.
எண்ணி எண்ணி சம்பளம் கொடுத்த கையால், எண்ணி எண்ணி காசை செலவு செய்ய முடியவில்லை. மீண்டும் பெற்றவர்களை நாடிச் செல்ல தன்மானம் தடுக்கும். அவர்களுக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டு எந்த முகத்தோடு போவாய் என மனசாட்சி குத்தி கிழிக்கும்.
காதலின் வெற்றி கல்யாணத்தில் என்று யார் சொன்னது. கடைசிவரை அதன் சாராம்சம் குறையாமல் சம்சாரம் செய்வதில் தானே காதலின் வெற்றி இருக்கிறது. இங்கு பல காதல்கள் கல்யாணத்திற்கு பிறகுதான் தோல்வியைத் தழுவுகின்றன.
பழைய நினைவுகளில் மூழ்கியவனை, பெண்களின் பேச்சுக்குரல் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. சட்டெனெ முகபாவத்தை மாற்றிக் கொண்டான்.
அதற்குள் நண்பர்களும் சூழ்ந்து கொள்ள அந்த இடமே கலகலத்தது.
“சேந்து நில்லுங்க தம்பி!” அவனைவிட மூத்தவர் சொல்ல, மனைவியைத் திரும்பிப் பார்க்க, எட்டி நின்றவள் அவனோடு ஒட்டி நின்றாள்.
பெண்கள் நலுங்குபாடி ஆரத்தி எடுக்க, அப்பொழுதுதான் கண்முன் நிமிர்ந்து நின்ற வீட்டை தலை உயர்த்திப் பார்த்தாள். அவளது கண்களும் விரிந்தது ஆச்சர்யத்தில். இந்த தோப்பிற்குள் இப்படியோரு பிரமாண்ட பங்களாவா? பங்களா கூட இல்லை. மாளிகை என்று சொல்லலாம். தூசி படிந்த கண்ணாடி மாதிரி பொலிவிழந்து காணப்பட்டது.
ஆரத்தி எடுத்து முடிக்க, அவன் முன்னே செல்ல, இவளும் பின் தொடர்ந்தாள்.
உள்ளே கால் வைக்கும் முன் இவளைத் திரும்பிப் பார்த்தான். இருவரும் ஒரு சேர காலடி வைப்போமா என்ற கேள்வி தொக்கி நின்றது அவனது பார்வையில். அவளையே பார்த்து நிற்க, மெதுவாக தலையசைத்தாள். இருவரும் வலது காலை சேர்ந்தாற்போல் எடுத்து வைத்து உள்ளே சென்றனர் மதனின் மாளிகையில்.
